Showing posts with label ஆதியோகி. Show all posts
Showing posts with label ஆதியோகி. Show all posts

Saturday, January 3, 2026

ஆங்கிலத்தில் ஆதியோகி புத்தகம் - Adhiyogi in English

For most of us, Lord Siva is the supreme cosmic force, eternal, formless, and divine. But Tamil literature, southern folklore, and ancient oral traditions present a different picture. He once lived among our ancestors as a real man, a healer, a teacher, and a com-passionate guide who showed people how to live, understand nature, and ease suffering.

Even the Harappan civilization leaves behind traces such as symbols, early scripts, and the first form of the linga, which is often misunder-stood or mocked, yet holds a profound and ancient meaning.

This book, the first in a powerful trilogy, brings these fragments together. It reimagines the life of the first yogi, a human who became legend, and a legend who became a god. Drawing from history, Siddha and Ayurveda traditions, archaeology, folklore, and philoso-phy, the narrative follows his life, his leachings, and the timeless wisdom he shared.

I’m happy to share that my book Adhiyogi has been published in English. The purchase link is given below. I would be grateful if you could read it and share your review. It brings me great joy to see Tamil pride reach readers across the world through this work. I kindly request you to share the link as widely as possible.



Link: https://amzn.in/d/86LvgPv



Friday, November 21, 2025

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்களைத் தொட்டபோது, அவை உயிர் பெற்று அசைந்தது போலத்  தோன்றியது.  இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்த  அந்தக்  காலை ஒளி, போர்க்களத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த படைகள் மீது பட்டு, நீண்டு விரியும் நிழல்களை தரையில் படறவிட்டது. காற்று மிகவும் கனமாகவும் அசைவற்றும் இருந்தது. அது அந்த  சூழ்நிலையின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. அன்றைய தினத்தில்  பீம்பேட்கா சமவெளி இன்னொரு காவியத்தின் பிறப்பை காணத் தயாராகி கொண்டிருந்தது.

 அந்தப் பிரதேசத்தில்  வீரர்கள் எழுப்பும் காலடித்தடத்தின் ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் எழவில்லை. பறவைகள் கூட எந்த ஓசையையும் எழுப்பவில்லை. இயற்கை முழுவதுமே நிம்மதியின்றி, நடக்கவிருக்கும் நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இரு பக்கத்து படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரே,  ஒரு மயான அமைதியில்  நின்றனர். 

ஒரு பக்கம் பீரப்பாவின் படைகள் நின்றன. அவர்கள் குறிஞ்சியின் மலைகளிலும், முல்லையின்  அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  மலைகளின் பாறைகளைப் போல  உறுதியானவர்கள், மேய்ச்சல் நிலங்களின் நெடிய புயல்களைப் போன்ற வலுவை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பழங்குடிகளிலிருந்தும் வந்திருந்தாலும், இன்று அவர்கள் அனைவரும் பீரப்பாவின் கீழ் ஒன்றாகத் திரண்டு  தங்கள் ஒற்றுமையையும் பலத்தையும்  நிரூபிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆயுதங்கள் இதுவரையிலும் இந்த உலகம் கண்ட எந்த உலோகத்தையும் ஒத்திருக்கவில்லை. அவை இதுவரை அந்த மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அல்ல.  அந்த ஆயுதங்கள் செம்பினாலோ வெண்கலத்தினாலோ செய்யப்பட்டபவை  அல்ல. அவை புனித நெருப்பில் வார்க்கப்பட்டவை.  விஞ்ஞானத்திற்கும் தெய்வீகத்திற்கும்  இடையே பிறந்த ஆயுதங்கள் அவை . 

அந்த ஆயுதங்களைத் தாங்கி நின்ற மக்கள் எவ்வித அசைவையும் காட்டாமல் கல்லைப் போல சமைந்து நின்றனர். மலைப்பாறைகளுக் கூட அஞ்சாத ஒரு அமைதி அவர்கள் முகங்களில் வேரூன்றி இருந்தது. பீரப்பா அவர்கள் முன் நின்றார், அவரது கண்கள் எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு அருகில் அக்கா மகாகாளி நின்று கொண்டிருந்தார். அவர் பீரப்பாவின் சகோதரி மட்டுமல்ல, அவர்களின் குலத்தின் இதயம், பெண்களின் உயிர், வீரர்களின் துணிவு. அவர் பார்வை, எதிரே நின்ற  படையின் மீது நிலைத்து நின்றது. அவரது பார்வையில் பயமோ கோபமோ தென்படவில்லை. மிகவும் ஆழமான தீர்மானத்தை மட்டுமே அவரது  கண்கள் வெளிப்படுத்தியது. சூரிய ஒளியில் அவரது கருமையான முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவரது ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் அரிவாளும் இருந்தது. 

அவர் தனது மக்களுக்கு அன்னையின் அன்பையும் பரிவையும் வற்றாது வழங்குபவர்.அவர் காண்பதற்கு கருங்கல்லில் செதுக்கிய  கொற்றவை போலவே இருந்தார்.  காட்டின் நடுவே  நச்சுப் பாம்புகள் தனது மக்களை தீண்ட வந்தால், முதலில் தன் காலால் அதை மிதித்தவர். கொல்லும் விலங்குகள் வந்தால் அதன் நெஞ்சில் முதல் ஈட்டியை பாய்ச்சியவர்.எதிரிகள் வந்தால், முதலில் எதிர்த்து நின்றவர். 

 அவர் இரக்கத்தின் மறு உருவம். ஆனால் தன் மக்களை , காப்பதில் கடுமையானவர், போரில் இரக்கமற்றவர்.   கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டையோடுகளை பெருமிதத்தோடு ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின்  நாகர் பழங்குடியினரை போலவே, அவரும் மண்டையோடுகளை அணிந்தபடி காட்சியளித்தார்.

 அவர் இப்பொழுது தனது சகோதரனுக்குத் துணையாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.

 அவர்களுக்கு எதிரே நிற்கும் படை அளவில் பெரியது. அந்தப் படை   தங்களது ரத்தத்தை வேண்டுவதை அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனால் அவர்கள்  நெஞ்சில் ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே இருந்தது. இந்தப் போரில் அவர்கள் நிச்சயம் வென்றாக வேண்டும். ஏனெனில் இன்று அவர்கள் தங்கள் நிலத்திற்காக மட்டுமல்ல; தங்கள் மரபுக்காகவும், தங்கள் நிலத்தின் உயிரின் மூச்சாகிய எதிர்காலத்திற்காகவும் போராடுகின்றனர்.

அவர்களுக்கு எதிரே பசவண்ணா தலைமையில் நின்றது விவசாயப் படை. ஒரு காலத்தில் பரிவையும் பாசத்தையும் மட்டுமே கொண்டிருந்த  தலைவராக இருந்தவர் அவர். இப்போது தனது மகனின் மரணத்திற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.  அவரது கண்கள் காளியை வெறுப்புடன் பார்த்தது.

“நான் அவனைக் கொல்ல வேண்டும்,” என்று பசவண்ணா உரக்க கூறினார்.

“நாங்கள் இரத்தம் சிந்த விரும்பவில்லை, ஆனால் பகைக்கு பயந்தவர்கள் அல்ல  நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம்.” என்று பீரப்பா கூறினார்.

"நானும் தயாராக இருக்கிறேன்,” என்று பசவண்ணா கூறி ஒரு படி முன்னேறினார்.

காளியின் குரல் கூர்மையாக எழுந்தது, “என் சகோதரன் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உங்களைக் கண்டு  பயம் இல்லை.

நான் உயிர்களை மதிப்பவள். ஆனால் எங்களில் ஒருவரைத் தொட்டால், உங்கள் ஒருவரையும் நான் விட்டு வைக்க மாட்டேன் ” என உரக்கக் கூறினாள்.

மலையின் மேலிருந்து தக்ஷனின் சேனாதிபதி இரு படைகள் கூடியிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். 

அவனது முகம் பாறையில் செதுக்கப்பட்டது போல, உணர்ச்சியற்று இருந்தது.“அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்,” என்று அவன் கூறினான். 

அவனது வீரர்கள் அவன் வார்த்தைகளை பதற்றத்துடன் கவனித்தனர். 

திடீரென்று அவனது முகம் அதிர்ச்சியின் ரேகைகளை வெளிப்படுத்தியது.

“அவர்களின் கத்திகள்… அவை வெண்கலம் இல்லை. இவை என்ன ஆயுதங்கள்? 
இந்தக் வனவாசிகள் இப்படிப்பட்ட ஆயுதங்களை எங்கிருந்து பெற்றார்கள்?” என்று அவன் வியப்போடு கேட்டான்.

“ ராட்சசர்களிடையே ஒரு புதிய கடவுள் உருவாகி இருப்பதாக ஒற்றர்கள் தெரிவித்துள்ளனர், ஒருவேளை அவரது வேலையாக இருக்கக்கூடும்" என்று அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வீரன் கூறினான்.

பின்னர் அது தொடங்கியது...  வரலாறுகளில் பதிவாகாத ஒரு யுத்தம், ஆனால் பீம்பேட்காவின் உயிர்ப்புள்ள சுவர்களில் பொறிக்கப்பட உள்ள ஒரு பெரும் போர். 

விவசாயப் படை, மெருகேற்றப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட ஆயுதங்களுடனும், செப்பு முனையுடன் கூடிய அம்புகளுடனும் முன்னேறியது.

 ஆனால் அவர்களின் வெண்கலம் பழங்குடியினரின் கத்திகளைத் தாக்கியபோது, வெண்கலம் உடைந்தது. புனித ஆயுதங்கள் உறுதியாக நின்றன.

காளி, தீப்பிழம்பின் உருவாக, போர்க்களத்தின் நடுவில் புயல் போல இருந்தார்.

 அவர் ஒரு தேர்ந்த வேட்டையாடி. இப்பொழுது அவர் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார். 

அவர் தளைகளில் இருந்து  விடுவிக்கப்பட்ட ஒரு போர்க்கடவுள் போலக் காட்சியளித்தார் .
 
ஒரு விவசாய குல பெருவீரன்,  அவர் மீது வெண்கலக் கோடரியை உயர்த்தினான். அவர் குனிந்து, புழுதியில் சறுக்கி, பாய்ந்து வரும் புலியைக் கூட நிறுத்த வல்ல ஒரு கூச்சலுடன்,  வாளை  அவன் வயிற்றில் குத்தி மேலே இழுத்தார். அவன் நைந்து போன துணியைப் போல போர்க்களத்தில் வீழ்ந்தான்.

 அவரது கோபம் காட்டுமிராண்டித்தனமாக இல்லை. அது ஒழுங்கானது... பழமையானது...

சாம்பலின் கீழ் உள்ள நெருப்பைப் போல அவரது கோபம் கனன்று கொண்டிருந்தது. 

அவர் தனது கோபத்தையும் வீரத்தையும் நேர்த்தியாக வாள் வீச்சின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

 காளியின் வாள்வீச்சு அழகான ஒரு அப்சரசினுடைய அசைவுகளின் நளினத்தைக் கொண்டிருந்தது.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பழங்குடி வீரர்கள் விவசாயப் படையை அடி மேல் அடி எதிர்கொண்டனர். போர் சமநிலையில் இருந்தது. 

 இதுவரை மழையை மட்டுமே அருந்திக் கொண்டிருந்த  அந்த நிலத்தில் ரத்தம் வழிந்தோடியது. பீரப்பாவும் காளியும் எதிரிப்படைகளை சாய்த்துக் கொண்டிருந்தனர்.

 இதை கண்ணுற்ற சேனாதிபதி கடும் ஆவேசம் கொண்டான். அவனது பார்வை காளியின் மீது நிலை குத்தி இருந்தது  

 “ கரிய நிறத்தில் இருக்கும் அந்தப் பெண் யார் ?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்.

 சேனாதிபதியின் அருகில் இருந்த ஒரு படை வீரன், " அவர்தான் அக்கா மகாகாளி. அவர் உஜ்ஜைனியின் பழங்குடி மக்கள் தலைவி, பீரப்பாவின் சகோதரி " என்று கூறினான்.

“நாம் இந்த ராட்சசர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்… அவர்கள் பூதகணங்களைப் போல போரிடுகிறார்கள்.” என்று கூறிவிட்டு கோபத்தில் சேனாதிபதி தனது வாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான்.

 “ இதற்கு மேலும் நாம் அமைதி காத்தால் பசவண்ணாவின் படை வீழ்ந்துவிடும். 

 இந்த மண் இதுவரை குதிரைப்படைகளை பார்த்ததில்லை. குதிரைப் படையின் வேகத்தையும் வாள் வீச்சையும், நிலத்தில் நின்று போராடும் இந்த மக்களுக்குக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .” என்று கூறிவிட்டு  அவன் கையை உயர்த்தினான்.

 “தேர்களையும் குதிரை வீரர்களையும் விடுவியுங்கள். போரின் தாளத்தை, குதிரைகளின் வேகத்தை ,  அவர்கள் உணரட்டும்.”

பின்னர் அவன் ஒரு தளபதியிடம் நெருங்கி, “ அங்கே காமரதியோடு பீம்பெட்கா குகைகளில் காத்துக் கொண்டிருக்கும் நமது வீரர்களுக்கு செய்தி அனுப்பு. காமரதியின் தலையை எனக்கு விரைவில் கொண்டு வா. அது குழப்பத்தை உருவாக்கும். பீரப்பா மற்றும் பசவண்ணா இருவரும்  கட்டுப்பாட்டை இழப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஆவேசத்தோடு தாக்கிக் கொள்வார்கள் . பசவண்ணாவின் படையும் இதில் வீழ்ந்தால், இன்னும் சிறப்பு. நம் அரசனுக்கு இரட்டை வெற்றி. அவர்களின் நிலம் எளிதில் நம் வசப்படும்” என்று கூறினான்.

------------------------------------------

பீம்பெட்காவின் பழமையான குகைகளுக்குள், பல்லாயிரமாண்டுகள் பழமையான ஓவியங்களின் பார்வையில், காமரதி தக்ஷனின் ஐம்பதற்கும் மேற்பட்ட  வீரர்களால் சூழப்பட்டு நின்றாள். அவர்கள் தங்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.

“ஒரு பெண்ணை ஐம்பது கத்திகளால் சூழ்கிறீர்கள், இதுதான் உங்கள் வீரமா?” என்று காமரதி கேட்டாள்.

ஒரு ஆணும் அசையவில்லை.

“நீங்கள் கோழைகள். பீரப்பாவின் நிழலுக்குக் கூட நீங்கள் சமமாக மாட்டீர்கள்” என்று அவள் வெறுப்புடன் கூறினாள்.

 அவளின் பேச்சை அங்கு இருக்கும் யாரும் மதித்ததாகத் தெரியவில்லை ஒருவன் அவளை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையை வீசிவிட்டு, கூர்தீட்டப்பட்ட வாளை அவள் கழுத்தை நோக்கி உயர்த்தினான்.

 அப்போது... தூரத்தில் உடுக்கையின் ஒலி சன்னமாகக்  கேட்டது...

 காற்று நடுங்கியது...

 அந்தக் காற்றின் ஊடே  ஒரு மிருகத்தின் குளம்பொலி எதிரொலித்தபடி இருந்தது. ஆனால் அது குதிரையின் குளம்பொலி இல்லை. அதைவிட வலுவான ஏதோ ஒன்றின் குளம்பொலி.

 வீரர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

 காற்று  வேகமாக சுழன்று, அந்த பிரதேசம் முழுவதும் புழுதி மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் கண்களுக்கு வருவது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

 பின்னர் காற்றைக் கிழித்துக்கொண்டு  புழுதிக்கு  மத்தியில் வெண்ணிறக் காளை ஒன்று புயல் போல் வந்தது. அதன் மேல் மனித வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

 அவர் மின்னலின் வடிவில்  இருந்தார்.  அவரது முடிக் கற்றைகள்   கரிய பாம்புகள் போல சுருண்டிருந்தது, அவரது உடல் சாம்பல் மற்றும் காட்டு மூலிகைகளின் மணத்தால் சூழப்பட்டிருந்தது. அவரது கண்கள்  எரியும் இரு சூரியன்கள் போல இருந்தது. புலித்தோல் அவர் பின்னால் பறந்தது. அவரது ஒரு கையில் மழுவும் மற்றொரு கையில் திரிசூலமும் இருந்தது.

 நிலைமையை புரிந்து கொண்ட ஒரு வீரன் வேகமாக செயல்பட்டான்... அவன் காமரதியின் கரழுத்தை நோக்கி கத்தியை உயர்த்தினான். ஆனால் அதை அவன் வீசுவதற்குள்...

 பறந்து வந்த திரிசூலம் அவனது நெஞ்சில் பாய்ந்தது . புயலின் சிக்கிய மரம் போல் அவன் தூக்கி வீசப்பட்டான்.

காமரதி தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். அவளது மூச்சு தடைபட்டது. வார்த்தைகள் விம்மியபடி வெளிவந்தது.

 “மகாதேவா... நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்பதை நான் அறிவேன் " என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

 சிவன் வீரர்களை சிதறடித்தார். அவர் இடி போலத் தாக்கினார், கத்திகள் உடைந்தன.  வீரர்கள்  சிதறினர். 

சாதுமிரண்டால் என்னவாகும் என்பதை உலகம் அன்று கண்ணுற்றது. 


காமரதியை அவர் நந்தனின் மீது ஏற்றிக்கொண்டார். பின்னர் அவர் குகையை விட்டு நீங்கினார். குகை, அவர் பின்னால்  பயத்தில் எரிந்தது.

இதற்கிடையில், பழங்குடிப் படைகள் ஆற்றை எதிர்க்கும் அணையைப் போல போராடின. வெண்கல கத்திகள் இரும்புக்கு எதிராக உடைந்தன. அம்புகள் சீறிப்பாய்ந்தன. கூச்சல்கள் எழுந்தன.

ஆனால் நிலம் நடுங்கத் தொடங்கியது. சேனாதிபதியின் குதிரைப்படை சமவெளியில் இடியோசையுடன்  இறங்கி வந்தது.

பழங்குடி வீரர்கள் அச்சத்துடனும் வியப்புடனும் இந்தக் காட்சியை பார்த்தனர்.  இந்த நிலத்தில் இருக்கும் யாரும் அதுவரை குதிரைகளை பார்த்ததில்லை. தரையின் மீது  நின்று கொண்டு போர் புரியும் வழக்கம் கொண்ட அந்த மக்களுக்கு, குதிரைகளின் மீது வந்து கொண்டிருக்கும் வீரர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யாரும் இதற்கு முன் இப்படி ஒரு படையை  எதிர்கொண்டதுமில்லை.

இப்போது இரு பக்கங்களிலிருந்து, காளியும் பீரப்பாவும் சூழப்பட்டனர். முன்னால் பசவண்ணாவின் படை, பின்னால் தக்ஷனின் குதிரைப்படை.

“இறக்கத் தயாரா, பீரப்பா?” சேனாதிபதி  ஆவேசமாக கத்தினான், அவரது வாள் உயர்ந்து.

ஆனால் வானம் வேறு பதிலை வைத்திருந்தது.அப்போது,  எருதுகளால் இழுக்கப்பட்ட தேர்கள் காட்சிக்கு வந்தன.

 வேளிர் குலங்கள் வந்துவிட்டன.முன்னணி தேரில் வேள், வேளிர் குலத்தின் அரசன், மேருவைப் போல் நின்று கொண்டிருந்தான்.


:“இது எங்கள் நிலம்! இது எங்களுக்கு இடையேயான பிரச்சனை. எந்த அந்நிய வாளும் எங்கள் மண்ணை உரிமை கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன். இங்கு, நான் துரோகத்தின் வாசனையை உணர்கிறேன்.”அவர் குதிரைப்படையை நோக்கி கண்களைச் சுருக்கினார். “ஒரு அடி முன்னேறினால், வேளிர்களின் கோபத்தை எதிர்கொள்வீர்கள்” என்று அவர் சேனாதிபதியை நோக்கி எச்சரித்தார்.

சேனாதிபதி முன்னேறினான், பின்னர் அவன் தனது குரலை உயர்த்தினான், பசவண்ணாவின் வீரர்கள், வேளிர்கள், பழங்குடி வரிசைகள் அனைவரும் கேட்கும் வண்ணம் பேச ஆரம்பித்தான் :“ வேளிர்களின் அரசே... என்னை உண்மையைப் பேச அனுமதியுங்கள்,”  அவரது குரல் அளவாக இருந்தது, ஆனால் வார்த்தைகள் விஷத்துடன் கலந்து இருந்தது. “நாங்கள் இந்த மண்ணை  அழிக்க வரவில்லை... பாதுகாக்க வந்துள்ளோம்.”

“இந்த மனிதன்... பீரப்பா,” அவர் பழங்குடித் தலைவரை கூர்மையாக சுட்டிக்காட்டி, “நீதியின் பெயரில் மறைந்து நிற்கிறான். ஆனால் அவன் உண்மையில் விரும்புவது… பசவண்ணாவின் நிலம்.”

சேனாதிபதி தனது புதிய திட்டத்தை விரிவாக்கத் தொடங்கினான்,

 வேளிர்களையும் மற்றவர்களையும் தாங்கள் பசவண்ணாவுக்கு உதவ வந்ததாக நினைக்க வைக்க, அவன் பீரப்பாவை பசவண்ணாவின் நிலத்தை ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டதாகவும், அதன் காரணமாகவே  அவரது மகனைக் கொன்றதாகவும், இப்போது காமரதியை கொன்றுவிட முயல்வதாகவும் குற்றம் சாட்டினான். 

 காமராதியை பீரப்பா பீம்பெட்கா  குகைகளில் கடத்தி வைத்திருப்பதாகவும், தக்ஷனின் வீரர்கள் அவளைக் காப்பாற்ற சென்றிருப்பதாகவும், அவர்கள் திரும்பும்போது உண்மை வெளிப்படும் என்றும் கூறினார். 

குழப்பம் பரவியது.காளியின் கண்கள் சுருங்கின. வேளிர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வேள் அமைதியாக நின்றார், அவரது மனம் சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் இடையில் சலனமாடியது.

பசவண்ணா, பெரும் வேதனையுடன் பீரப்பாவைப் பார்த்தார். அவரது குரல் துக்கத்தில் நடுங்கியது.“நீ என் மகனைக் கொன்றாய். இப்போது என் மகளையும் பறிக்க நினைக்கிறாய்!” அவர் பெரும் கோபத்துடன் தன் வாளை உருவினார்.

“நான் சொல்வதை சற்றே செவி மடுத்துக் கேளுங்கள்” என்று பீரப்பா பசவண்ணாவிடம் மன்றாடினார். 

ஆனால் பசவண்ணா ஆவேசத்துடன் முன்னேறினார். அவர் வெறிகொண்டு பீரப்பாவை தாக்கினார். பீரப்பா பசவண்ணாவை தாக்கவில்லை. அவர் 
தயக்கத்தோடும் எச்சரிக்கையோடும் அவரது வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தார், காளி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தார்.

சேனாதிபதி நடப்பதனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பொறி வேலை செய்தது. எதிரிகளின் ஒற்றுமை உடைந்து கொண்டிருந்தது.

 ஆனால் சேனாதிபதியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...

அதுவரை இந்தக் குழப்பங்களை பிரதிபலிப்பது போல் மங்கலாகவும் மேகமூட்டத்துடனும்
 காணப்பட்டிருந்த வானம், தெளிவடையத் தொடங்கியது ... 

உலகின் மூச்சு நின்றது போல, காற்று அடங்கியது...

கதிரவனின் ஒளிக்கீற்று மேகங்களுக்கிடையே ஊடுருவி,  ஒரு ஒற்றைக் கீற்றை வெளிப்படுத்தியது...

அந்த ஒளிக்கீற்றின்  வெளிச்சத்தின் வழியே, மின்னும் கொம்புகளைக் கொண்ட  காளை ஒன்றின் மீது அவர் வந்தார். 

அவரது நெற்றியிலும் உடலிலும் புனித விபூதி பூசப்பட்டிருந்தது, அவரது தசைகள் புயல்களின் வலிமையுடன் அசைந்தன. அவரது நெற்றியில்,  மிளிரும் கண்களுக்கு மேலே, மூன்றாவது கண் ஒன்று  உலகை அமைதியாக உற்று நோக்கியது. மறுபிறவி எடுத்த கடவுளைப் போல அவர் காட்சியளித்தார்.  

 சிறிது நேரத்திற்கு முன்பு வரை கூச்சல்களாலும் மரண ஓலங்களாலும் நிரம்பி இருந்த போர்க்களம், விசித்திரமான அமைதியில் ஆழ்ந்தது. போர் கூட அவரது முன்னிலையில் மூச்சுவிடத் துணியவில்லை.

காமரதி அவருடன், எவ்வித சேதாரமும் இன்றி அமர்ந்திருந்தார். 

இதைக் கண்ட  பீரப்பாவின் முகம் ஆனந்தத்தால் பிரகாசமாகியது.

பசவண்ணாவின் கைகளில் இருந்து வாள் நழுவியது.

 சேனாதிபதியின்  கண்கள்  வியப்பினால்  விரிந்தன. அவனது முகத்தில் அச்சத்தின் ரேகைகள் படரத் துவங்கின. அவன் பொய்களால் கட்டி எழுப்பிய கோபுரம் சரிந்து கொண்டிருந்தது.

 வேளிர் வீரர்களின் முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தது . 

அனைவரின் பார்வையும் சிவனின் மேல் பதிந்தது.

அந்த கணத்தில் தங்களின் காப்பாளர் வந்துவிட்டார் என்பதை  உலகம் அறிந்தது. போர்க்களம் முழுவதும் அமைதியாக அவரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒருவன் மட்டும் அந்தப் புனித அமைதியை பயன்படுத்திக் கொண்டு விரைவாக செயல்பட்டான். 

தான் தோல்வியடைந்ததை சேனாதிபதி அறிந்து கொண்டான். அவனது முகம் பயத்தின் ரேகைகளை வெளிக்காட்டியது. கதை அவன் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருந்ததை அவன் அறிந்தான்.

 ஆயினும் அந்தக் கதையின் இறுதி வரிகளை அவன் எழுதி விட எண்ணம் கொண்டான்.

 அவன் யாரும் அறியா வண்ணம் ஒரு சிறிய குறுவாளை உரையிலிருந்து வெளியே எடுத்தான். அந்தக் குருவாள் ஒரு கொடிய நெஞ்சினை தாங்கியிருந்தது.

 தேர்ந்த வீரனான அவன், அதை நேராக பீரப்பாவின் முதுகை நோக்கி வீசினான். அது பறக்கும் ஒரு நாகத்தை போல்  சீறிப்பாய்ந்து பீரப்பாவின்  முதுகில் பதிந்தது.

 கத்தியை முதுகில் தாங்கியதும் கோபமடைந்த பீரப்பா கத்தி வந்த  திசையை நோக்கி திரும்பினார். 

 " முன் நின்று தாக்காமல், பின் நின்று தாக்கும் நீ வீரனா? கோழையே... உனது கதையை முடிக்கிறேன்" என்று ஆவேசத்துடன் சேனாதிபதியை நோக்கி பீரப்பா முன்னேறினார். 

 இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் கால்கள் தளர்ந்து பூமியில் விழுந்தார் பீரப்பா. அவரது உடலில் நீலம் பாயத் துவங்கியது.

 சேனாதிபதி ஒரு ஏளனப் பார்வையை பீரப்பாவை நோக்கி வீசினான். 

 இதைக் கண்ட காளி கடும் கோபம் கொண்டார்.  

அவர் கோபத்தில் கொற்றவையைப் போலப் பாய்ந்து, சேனாதிபதியின் நெஞ்சில் உதைத்தார். அவன் பின்னால் பறந்து, புழுதியில் மோதி விழுந்தான். காளி அவனது கூந்தலைப் பற்றி, வாள் கொண்டு ஒரே  வீச்சில்  அவனது தலையை வெட்டினார்.

தக்ஷனின் வீரர்கள் பயத்தில் பின்வாங்க ஆரம்பித்தனர். பின்னர் அவனது   படை வடக்கு நோக்கி ஓடியது, 

காளி பதட்டத்துடன் பீரப்பாவின் பக்கம் ஓடினார். பீரப்பாவின்  உடல் ஜில்லிட ஆரம்பித்தது, தோல் அசாதாரணமாக நீல நிறத்தில்  இருந்தது. 

பீரப்பாவின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது.  .“பசவண்ணா… இறுதியாக… உங்களது  சந்தேகங்களுக்கு… விடை கிடைத்துவிட்டது.... இனி நான் நிம்மதியாக மரணிப்பேன்...” என்று வலியோடும் வேதனையோடும் கூறினார்.

பசவண்ணாவின் வாள் நழுவியது. அவர் மண்டியிட்டார், அவரால் பேச முடியவில்லை.

பீரப்பா சிவனையும் காளியையும் பார்த்து பேசத் துவங்கினார் "என் சகோதரி… காளி… என் சகோதரர்… மல்லப்பா… உங்கள் முன் இறப்பது… எனக்குப் பெருமை .”

 பின்னர்  அவர் பலவீனமாக காமரதியை நோக்கித் திரும்பினார். “நாம் இந்த முறை… ஒன்று சேர முடியவில்லை… என்னை மன்னித்து விடு காமரதி... " அவரது கண்கள் மூடத் துவங்கியது.

சிவன் பீரப்பாவிற்கு அருகில்  மண்டியிட்டார். அவர் மணிக்கட்டில் விரல்களை வைத்து  பீரப்பாவின்
நாடியைப் பரிசோதித்தார். அவர் சில மூலிகைகளை நசுக்கி,  பாஷாணங்களின் கலவையை கரைத்து  பீரப்பாவின் நாக்கின் கீழ் வைத்தார்.

பீரப்பாவின் உடல் தெளிவடைந்தது... அவர் மூச்சு விடத் துவங்கினார்.

 இதைக் கண்ட  வேளிர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது...

" மரணிப்பவர்களை எழுப்புபவர் வந்துவிட்டார்"

“அவர் மனிதர் இல்லை” 

“அவர் மாயோனின்… மறுபிறவி"

வேளிர்கள் பிரமிப்பில் தங்களுக்கு இடையே பேசிக்கொண்டனர். 

"அந்த நீல நிறக்கழுத்து...அவர்... மிடற்றண்ணல்!!!"

" நமது பழைய ஓலைச் சுவடிகள் முன்னறிவித்தவர்."

"கடற்கோளால் அழியவருக்கும் நமது குலத்தை காக்க வந்த அளவில்லாப் பெம்மான் அவர் "வேளிர்களின் தலைவன் வேள் உரக்கக் கூறினான்.

 பின்பு அவன் சிவனின் முன்பு  மண்டியிட்டான். அவனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிவனின் முன்பு மண்டியிட்டனர்.
-------

 இவ்வாறு பீம்பேட்காவின் போர் முடிவுக்கு வந்தது. நிலம் தூக்கத்தில் இருந்து மீண்டது. நிலத்திற்கான சண்டை முடிவடைந்தது.

 வளத்திற்கான சண்டையே இந்த பூமியில் பல கோடி ஆண்டுகளாக உயிர்களிடையே  இதுவரையிலும் நிகழ்ந்து வந்திருந்தது. அப்படி நிலத்திற்கான போட்டியாக ஆரம்பித்த இந்தப் பெரும் போர், இணக்கத்திற்கான அச்சாரமாக அமைந்தது இந்த நாளில்தான். 

அந்த நாள் வெறும் போரின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவின் கற்றல் காலத்தின் தொடக்கம். ஆறறிவு உயிரினங்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தின் ஆரம்பம். 

அது, கடவுள்கள் மண்ணில் அவதரித்து, கற்காலத்தைய மனிதர்களை நாகரிகத்திற்கு உயர்த்திய காலம்!

 நமது முன்னோர்களின் அறிவு விழித்தெழத் தொடங்கிய காலம்!

கடவுள்கள் மனிதர்களுடன் கைகோர்த்து நடந்த காலம்!

அது இந்தியாவின் பொற்காலம்.

---------


The Rock Art of the Bhimbetka Area in India - Meenakshi Dubey-Pathak

Saturday, November 8, 2025

கண்டோபா (ஆதியோகி: அத்தியாயம் 18)

 வெப்பமிகு  உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென  எரிந்து கொண்டிருந்தது.  சிவனால் முன்பு எரிக்கப்பட்ட  சாம்பல் குவியல்கள், இப்போது தங்கள் வெப்பத்தை மெல்லிதாக  வெளியிட்டன.  சிவனது தோல், வெப்ப மிகுதியால் வாடிக் கொண்டிருந்தது. அவரது தோல் காய்ச்சலால் எரிந்தது. ஒரு காலத்தில் பல்வேறு முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அவரின்  அழலானது இப்போது ஆவேசம் கொண்டு  திரும்பியது. பித்தத்தின் பற்றெரிவால் உந்தப்பட்ட அவரது உடல், கபத்தின் குளிர்ந்த தீண்டலுக்காக ஏங்கியது.

 மனிதர்களை விட்டு விலகி இருக்க நினைத்த அவர்; திரும்பவும் மனிதர்களோடு உறவாட வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதை தடை செய்யும் விதமாக, வில்சனின் நோய்  அவரது மனநிலையை ஆட்டம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. தவறும் மனநிலையோடு அவர் மனிதர்கள் மத்தியில் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவரது நரம்புப் பிரச்சனைகளை தணிப்பதற்காக மருந்தினை உட்கொள்ள எண்ணம் கொண்டார். ஆனால் அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படும்  வலிமிகு  உயிர்நாடி எழுச்சியையும் அவரது மனம் வேதனையோடு நினைவு கூறத் தவறவில்லை.

 அவர்  பெல்லாரியில் இரும்பு ஆயுதங்களை செய்த பொழுது தாரம்,கௌரி பாசாணம் மற்றும் வீரம் முதலிய பாஷாணங்களையும் எடுத்தார். இந்த பாஷாணங்களையும் வேறு சில மூலிகைகளையும் பயன்படுத்தி தனது நரம்பு சம்பந்தமான அறிகுறிகளையும் தோல் சம்பந்தமான அறிகுறிகளையும் மட்டுப்படுத்த முயன்று  கொண்டிருந்தார். தாரம் எனப்படும் அரிதாரம் அவருக்கு மிகவும் சாந்தத்தை அளித்தது. அது ஹரிதாளம், ஹரி பீஜம் என்று வடமொழியில்  அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளை பற்றி சிவன் அறிந்தே இருந்தார்.  ஹரி பீஜம் சிவனின் பாலுணர்வு சம்பந்தப்பட்டது என்று பண்டைய ஆயுர்வேத ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த அரிதாரம்  அவர் கண்டறிந்த எண்ணற்ற மருந்துகளில் முக்கியமான ஒன்று.

இந்த ஹரி தாளத்தைக் கொண்டு தான் அவர் பரதத்தை உயிர்த்தெழ வைத்தார். 

பரதம் (Pārada, சமஸ்கிருதத்தில்: पारदः) = "பர" (அப்பால்) + "தா" ( தருவது). பரதம் என்றால் விடுதலை தருவது, மோட்சத்தை அளிப்பது எனும் பொருள் தரும். 

 பரதம் எனும் சொல் ஒரு உலோகத்தைக் குறிக்கும். அந்த சொல் முக்தியையும் குறிக்கும். அந்த உலோகம் சிவ வீர்யம், சிவ ரேதஸ், சிவ தேஜஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

 சிவன் தரும் பரதம் ( பாதரச வகை உலோகம்) உடலைத் தாண்டி ஆன்மாவை மோட்சத்திற்கு ஏற்றும் என்பது நம்பிக்கை.  அதனால்தான் சிவனை ரசேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தமட்டில் பரதமே அமிர்தம் ஆகும். அதுவே அமரத்துவத்தை அளிக்க வல்லது என்று ரச சாஸ்திர வரிகள் கூறுகின்றன.

पारदः परदो ज्ञेयो यतः संसारपारदः

ஆனால் சிவன் இன்னும் பரதத்தை கண்டெடுக்கவில்லை. அது இமயத்தின் ஆழத்தில்  சிவனின் கரங்களால் தீண்டப்படுவதற்காக  காத்துக் கிடக்கின்றது.

 அதனை கண்டெடுப்பதற்கு முன் அவர் பல சோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சோதனைக் களத்தில் தான் அவர் நின்று கொண்டிருக்கிறார். 

 இந்த சோதனைக்களம் கடும்  வெயிலினால் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிலம் வறண்ட புழுதிக்  காற்றால் மூடப்பட்டிருந்தது.  அங்கிருந்த செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. வறண்ட காற்று குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்தது.

குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த வறண்ட காற்று மெல்ல மெல்ல திசை மாறத் துவங்கியது. பின்னர் மெல்லிய தென்றல் காற்று  அவரது மேனியை தொட்டது. சட்டென்று மேனியில் ஒரு சிலிர்ப்பு... அவரது அழல் தணியத் தொடங்கியது.

 அந்தக் காற்றை பின் தொடர்ந்து  தட்டான்கள் கூட்டம் கூட்டமாக தரையை ஒட்டி பறக்க ஆரம்பித்தன. மாயோனின்  நிறத்தைக் கொண்ட கொண்டல் மேகங்கள் திரண்டு  எழுந்து வானத்தை வியாபித்தன. அமுர் வல்லூறுகள் அங்கே வட்டமிட ஆரம்பித்தன. 

விசிறித்தொண்டை ஓணான் ஒன்று வேட்டையாடிகளைப் பற்றிய பயம் ஏதும் இன்றி  தைரியமாக சமவெளிக்கு வந்தது. அது வல்லூறுகளை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அது தனது நீல நிறத் தொண்டையை விசிறி போல விரிக்க ஆரம்பித்தது. அதன் ஒளிரும் நீலத் தொண்டை சிவனின் நீல மிடற்றைப் போல்  மின்னியது .   

 அந்த விசிறியால் மழையையும் தனது துணையையும்  அது அழைக்க ஆரம்பித்தது.

தொலைவில், பனங்காடைகள்  காற்றில் சுழன்றன, அவற்றின் நீலமணி இறக்கைகள் கருமேகம் சூழ் வானத்திற்கு நடுவே அழகாக மின்னின.

 நீலக்கழுத்தை கொண்டிருந்த மயில்கள் மழையின் வரவை அறிவிக்கும் வண்ணம் அகவின.

 இவ்வுயிரினங்களின் அழைப்பை ஏற்று, மலடாகி இருந்த மண்ணை உயிர்ப்பிக்கும் விதமாக, மேகத்தின் ஸ்கலிதமென, மழைநீர் விண்ணிலிருந்து இறங்கி நிலத்தை ஆலிங்கனம் செய்தது.

 மழைத்துளிகள் நிலத்தைத் தொட்ட  மாத்திரத்தில் பூமியின் வெப்பத்தால் ஆவியாகியது. பின்னர் மெல்ல மெல்ல வெப்பம் தணியத் தொடங்கியது. மயக்கும் மண்வாசனை காற்றை அடர்த்தியாக்கியது. 

 வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த சிவனின் மணிபூரகம் சாந்தமடைந்தது. சிவனது அழல் தணியத் தொடங்கியது. இந்த மோனநிலையால் உந்தப்பட்ட சிவன், தனது இடது காலை சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடத் துவங்கினார். அந்த ஆனந்த நடனத்தில் காற்றும் மழையும் இணைந்து கொண்டன. 
 இது சிவன் தோற்றுவித்த 108 சிவதாண்டவ  கரணங்களில் ஒருவகை. 

 இதைக் கண்ட வரகுக் கோழி  ஒன்று   கூக்குரலிட்டுக் குதித்து, அதுவும் களியாட்டம் புரிய ஆரம்பித்தது.

Source: https://roundglasssustain.com
மழையானது  வேகமெடுக்கத் தொடங்கியது. மழைத்துளிகள் சிவனின் மேனியில் பட்டுச் சிதறின.
நிலம் என்னும் இயக்கமற்றிருந்த சிவம், இயக்க சக்தியான பொழுதினால் அரவணைக்கப்பட்டது .

 நிலம் அந்த நீரை உள்வாங்கியது.

 நிலம் உயிர் பெற்றது. புற்கள் முளைத்தன, மரங்கள் மலர்ந்தன, காட்டுத் தினைகள் உயிர்பெற்றன.  

புற்றில் இருந்து ஈசல்கள் கிளம்பின. அவை வதந்திகளை விட வேகமாக வனம் முழுவதும் பரவின. அவற்றை பின் தொடர்ந்து நீல நிறத் தொண்டை ஓணான்கள் படை எடுத்தன. ஓணான்களை நாகங்களும் பனங்காடைகளும் வேட்டையாடத் துவங்கின.  

மழை என்பது ஜனனத்திற்கான நேரம், புதிய உலகம் பிறக்கும் சமயம். ஆனால் பழையன கழிதலும் இங்கே நடந்து கொண்டிருந்தது. ஆற்றலில் குறைவான பழைய இரை விலங்குகளும் சரி, வயதான பழைய வேட்டையாடிகளும் சரி... இந்த போட்டி மிகு வனத்தில் உயிர்பிழைத்தல் கடினம். 
புதியவர்களுக்கு வழி விடுதலே வலுமிகு சந்ததிகள் வாழ வழிவகுக்கும். 

 இந்த கோட்பாட்டை உரக்க அறிவிக்கும் வண்ணம் கானமயில் இறக்கைகளை விரித்து நடனமாடியது. கருநெஞ்சுக்காடை மழையில் பாடல் இசைத்தது. வனம் உயிர் கொண்டது. மரங்கள் புதிய பசும் இலைகளை துளிர்க்கச் செய்தன.

 மான்கள் அந்த வனத்திற்கு திரும்பின. அவைகள் தங்கள் முன்னங்கால்களை மேலே உயர்த்தியபடி  இலைகளை உண்ணத் தொடங்கின. புதியதாக  முளைத்த பசுமையான இளம் இலைகள் மேலே இருக்க, கிளைகளின் கீழே தொங்கிக் கொண்டிருந்த  வயதான பழைய இலைகளை மான்கள் உண்டன.

சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு ஆடம்பரமான செயல். அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த, உயிரினங்கள் தங்கள் உடல் ஆற்றலை நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். என்னதான்  ஆடம்பரமாயினும் அது ஒரு அத்தியாவசியமான செயல். வனம் வளம் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஆடம்பரத்தை உயிரினங்கள் நிகழ்த்தத் துணியும்.  

 இந்த வனத்தைப் பொருத்தமட்டில் இந்த சமயம் தான் அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த சரியான தருணம் என்பதை அனைத்து விலங்குகளும் அறியும். எனவே இணை சேர்வதற்கு அவை ஆயத்தமாயின.

 ஆனால் இணை கூடுவதற்கான வாய்ப்பு எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை. இணை சேருவதற்கு முன் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது. 

 தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி, இரண்டு இரலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதத் தொடங்கின. இது பெண்ணுக்கான போட்டி. 
 வனத்தைப் பொறுத்த மட்டில், பிரச்சனைகளுக்கு வன்முறையால் மட்டுமே தீர்வு காணப்படும். வன விலங்குகளுக்கு பிரச்சனைகளை பேசித் தீர்க்கவோ, மாற்று வழிகளை யோசிக்கவோ  சிந்தனை ஆற்றல் என்பது இல்லை.

 இவை அனைத்தையும் கண்ணுற்ற  சிவன் தனது நடனத்தை நிறுத்திவிட்டு  பெய்யும் மழையில் தியானத்தில் ஆழ்ந்தார்.  மழைத்துளிகள் சிவனின் சிரசைத் தீண்டின. சிவனின் நெற்றிக்கண் அதிர்வுகளை  வெளிப்படுத்த துவங்கியது. வன உயிர்கள் அனைத்தும்  சிவனைச் சூழ்ந்தன.

 அந்த அமைதியை குலைப்பது போல் சாம்பல் நிற ஓநாய் கூட்டம் ஒன்று அங்கே வந்தது. 
picture by Himansu gupta

 அதைக் கண்ட  மான்கள் அனைத்தும் சிதறி ஓடின. மரணத் தருவாயில் இருக்கும் ஓடவியலா  ஒரு வயதான மானை அவைகள் குறி வைத்தன .
 அதிவேகமாக ஓடிய அந்த மான், இப்போது அதிக வயதினால் மந்தமாகிவிட்டது. அது கூட்டத்திலிருந்து சற்றே பிரிந்து நின்றது . 

வேட்டை புத்திசாலித்தனமாகத் தொடங்கியது. இரண்டு ஓநாய்கள் வயதான அந்த மானுக்கு  தென்படாதவாறு பிரிந்து சென்றன.  அந்த பரந்த வெளியில் மானை காணாதது போல் அதன் பார்வைக்கு எட்டும் தூரத்தில் ஒரே ஒரு ஓநாய் தனித்து  நடக்கத் தொடங்கியது 

 வயதான மான் அந்த ஓநாயை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஓநாயானது சற்று அசைந்தாலும் இது ஓடுவதற்கு தயாராக  தனது வலுவை திரட்டி கொண்டு நின்றது. இதற்கிடையில் மற்றொரு ஓநாய் புல்வெளியின் மறைவில் மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வயதான மானை நெருங்கிக் கொண்டிருந்தது 

இப்போது இரண்டாவது ஓநாய் சரியான இடத்துக்கு வந்தவுடன், மானின் முன் நின்ற ஓநாய்  சிறிது முன்னேறியது. மான் அபாயத்தை உணர்ந்து ஓட முயன்றது, ஆனால்  நிலைமை கை மீறிப் போய் இருந்தது. இரண்டாவது ஓநாய் பாய்ந்து வந்து, சில வினாடிகளில் மானை அடைந்தது . அது மானின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, வயதான அந்தமான்  ஒரு அறிதுயில் நிலைக்குச் சென்றது. 

 பின்பு ஒரு இறுதிப் பாய்ச்சல்... ஓநாய் மானை நெருங்கியது... அதன் கழுத்தை ஆழமாக கவ்வியது. அறிதுயில் நிலையிலிருந்து மானானது  வலிக்கான எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல்  உயிர் நீத்தது.

இது இயற்கையின் விதி. ஓநாய்கள் முதியதும் பலவீனமுமான மான்களை வேட்டையாடுவதால், கூட்டத்தில் வலிமையான மான்கள் மட்டுமே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கூட்டம் ஆரோக்கியமாகவும், புல்வெளி சமநிலையுடனும் இருக்க வைக்கப்படுகிறது.

சூரியன் மறைந்து, வானம் மங்கும் போது, ஓநாய்கள் அமைதியாக தங்கள் வேட்டையை உண்டன. வளங்கள் பெருகும் இந்த மழை பொழுதே அவைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான சமயம். இவ்வண்ணம் ஐவகை நிலப்பரப்பிலும் அந்த நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற வகையில் உயிரினங்கள் நிலத்தோடும் பொழுதோடும் பொருந்தி, சந்ததி சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றன.

சிவனுக்கு இந்த இயற்கையின் பரிபாஷைகள் புரியத் துவங்கின.

 வறண்ட நிலம், மேகங்கள், குளம்புகள், வேட்டையாடிகள் போன்றவற்றின்  ஒத்திசைவில் அவர் ஒரு புனித தாளத்தைக் கண்டார்.

 இந்த ஒத்திசைவில் தக்காண பீடபூமியின் ஆயர்களும் விவசாயிகளும் இணைந்து கொள்ள இடம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிய வந்தது.

 மழைக்கால மாதங்களில் தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்யும் ஆயர்கள்,  மழைக்கு முன் மேற்கு நோக்கி கர்நாடகாவின் மழை பெய்யும் பள்ளத்தாக்குகளுக்கு அல்லது மழைக்கு பின் கிழக்கு நோக்கி நல்லமலை காடுகளுக்கு தங்கள் மந்தைகளை வழிநடத்தலாம்.  

அவர்களின் பாதையில், அவர்கள் தங்கள் மந்தையின் வளமான எருவை விட்டுச் செல்வார்கள். மந்தைகளும், பயிரிடப்படாத நிலத்தில் முளைத்திருக்கும் களைகளை உண்ணலாம். அவர்களின் விலங்குகள் திறந்த நிலங்களில் மேய்ந்து, பயிரிடப்படாத வயல்களில் தங்கும் போது, மழையால் கரைந்த மேல் மண்ணை இந்த புனித எரு பலப்படுத்தும் .  
விவசாயிகள், பதிலுக்கு, தானியங்களையும் தங்குமிடத்தையும் வழங்குவார்கள்.

பெல்லாரி நிலம் மழையில் பசுமையாக மாறும்போது, மந்தைகள் வடக்கு நோக்கி மஹாராஷ்டிராவின் திறந்த சமவெளிகளுக்கு அல்லது கிழக்கு நோக்கி மராத்வாடாவில் உள்ள லத்தூர் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு திரும்பலாம்.  இந்த இடம்பெயர்வு, இந்த புனித பாதை ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கத்தை  உருவாக்கும் .

 இந்த இணக்கத்தில் அனைத்து உயிர்களும்  பங்கு பெறும், பலனும் பெறும், 

 மண், மழை, பசி, விலங்கு ஆகியவை தனித்தனி சக்திகள் இல்லை, ஒரு பரந்த துணியில் நெய்யப்பட்ட நூல்கள் என்பதை சிவன் கண்டுகொண்டார்.

சாம்பல் நிற ஓநாய் கூட, மந்தைகளைப் பின்தொடர்ந்து, அதன் தெய்வீக பங்கை வகிக்கும்.  அது எதிரி இல்லை, ஆனால் சமநிலையின் காவலன்.

 இந்த மழையால் அவரது உடல் மட்டுமல்ல, அலை மோதிக் கொண்டிருந்த உள்ளமும் அமைதி கொண்டது 

அவர் இந்தக் கருத்தை கடவுளாக அல்லாமல், இயற்கையுடன் உரையாடிய ஒருவனாக முன்னெடுப்பார். ஆனால் அவரை பின்பற்றியவர்களால்... அவரால் பயனடைந்தவர்களால்... அவர் கடவுளாக தொழப்படுவார்.

தங்கர், குருமா, கொல்லா, குருபா போன்ற பாரம்பரிய மேய்ப்பர் சமூகங்கள், சிவன் காட்டிய வழியினை பின்பற்றி,  ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கினாலும், அவை மந்தையைப் பாதுகாக்க உதவுவதாகவும், இழந்த ஆட்டுக்குட்டிகள் கடவுளுக்கு பலியாகக் கருதப்படுவதாகவும் மேய்ப்பர்கள் நம்புவார்கள். அந்த இறைவனே மண்ணில் இறங்கி வந்து மல்லப்பாவாகவும் கண்டோபாவாகவும் தங்களுடனே வாழ்ந்து, தங்களுக்கு இந்தப் பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதாக நம்புவார்கள். சந்ததி சந்ததியாக தங்கள் மக்களுக்கு கண்டோபாவின் இந்த புனிதக் கதையை கூறுவார்கள்.

 ஆனாலும் இந்த இணக்கத்திற்கு  பசவண்ணா உடன்படவில்லை.

 ஆயர்கள் இணக்கத்தை வேண்டினாலும் பசவண்ணாவின் மனதில் வஞ்சம் எரிந்து கொண்டிருந்தது  

விவசாயக் குலத்தின் தலைவன், தன் கொல்லப்பட்ட மகனுக்காக துக்கத்தில் குருடாகி இருந்தான், அவன் இணக்கத்தைப் பற்றி செவிகொடுத்து கேட்கத் தயாராக இருக்கவில்லை.
அவன் இரத்தத்தை வேண்டினான்... பழிவாங்கலை வேண்டினான், 

சிவன் மட்டும் போரைத் தடுக்க விரும்பியவராக இல்லை.
மற்றொரு ஆன்மாவும் போரைத் தவிர்த்து விட முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த ஆன்மாவின் பெயர் காமரதி.  விவசாயத் தலைவனின் மகள் .

 அவள் பீரப்பாவின் மீது காதல் கொண்டிருந்தாள்.

பீரப்பாவின் மீதான காமரதியின் காதல் கிளர்ச்சியால் பிறக்கவில்லை, அங்கீகாரத்தால் பிறந்தது. அவனிடம் அவள் தன் சகோதரனுக்கு ஒரு காலத்தில் இருந்த அதே நெருப்பைக் கண்டாள். பீரப்பாவும் அவளிடம் தனது தாயின் வாஞ்சையைக் கண்டான்.

 ஏற்கனவே அவள் தன் சகோதரனை இழந்திருந்தாள். இப்போது, போர் அவளது தந்தையையோ… அல்லது அவள் நேசித்த பீரப்பாவையோ,
அல்லது இருவரையுமோ பறிக்கக் காத்திருந்தது.

போரை நோக்கிய ஒவ்வொரு அடியும் நிலத்தின் அழிவை மட்டுமல்ல, தனது காதலின் அழிவையும் நோக்கிய பாதை என்பதை அவள் அறிவாள்.  

வன்முறை என்பது சிந்திக்கவியலா உயிரினங்களால், தமக்குள் எழும் பிணக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. 

 ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ பிரச்சனைகளுக்கு தீர்வாக வன்முறையை கையில் எடுப்பது என்பது, 
 மனிதன் எனும்  சிந்திக்கும் விலங்கு  சிந்தனையை மேற்கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி. 

 போர் என்பது ஆறாம் அறிவு கொண்ட உயிரினங்களுக்கு தேவையற்ற ஒன்று.

 போர் என்னும் கொடுஞ்செயல், வளத்தை வழங்கும்  நிலத்தை சாம்பலாக்கும். அது வாழ்வாதாரங்களை வேரறுக்கும்.

கோபத்தில் விதைக்கப்பட்ட  விதைகள், துக்கம் எனும் விளைச்சலை மட்டுமே வழங்கும்.

----








Reference: NITYA SAMBAMURTHY GHOTGE and SAGARI R. RAMDAS. Black sheep and gray wolves. 

Friday, October 17, 2025

வீரபத்திரன் (ஆதியோகி: அத்தியாயம் 15)

சிவன் நந்தனுடன் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி சென்றார். அங்கு மலைகள்  கடலாக விரிந்தன. ஈரமான மரப்பட்டையின் மணமும், காட்டு இஞ்சியின் நறுமணமும் காற்றில் நிரம்பியிருந்தன. மண்ணில், அகலமான யானைத் தடங்கள் அமைதியான வழிகாட்டிகளாக வடமேற்கு மலைகளை  நோக்கிச் சென்றன. நந்தனின் குளம்புகள் அந்தப் பாதையின் வழியாக மெதுவாகச் சென்றது. பாதையைத் தேர்ந்தெடுத்தது சிவன் இல்லை, நந்தன்தான் யானைகளைப் பின்தொடர்ந்து மெதுவாக சென்று கொண்டிருந்தான். சிவன் வெறுமனே நந்தனின் மீது  அமர்ந்திருந்தார், அவரது மனம் அலை பாய்ந்தபடி இருந்தது. அவரது நரம்புகள் நிலையாக இருக்கவில்லை. மாய உருவங்களும் மனப்பிரம்மைகளும் அவரை ஆக்கிரமித்தபடி இருந்தன. தற்போது சிவனின் பிறவி சாபமாகிய  வில்சனின் வியாதி அடுத்த கட்டத்தை எட்டி இருந்தது. வியாதியைத் தணிக்க வெண்பாஷாணம் எடுக்கும் பொழுதெல்லாம் வலிமிகு உயிர் நாடி எழுச்சி அவருக்கு தோன்ற ஆரம்பித்தது. அர்சனிக் ஒரு பாலுணர்வூக்கி. செம்பு மிகுந்த அவரது உடலில் அர்சனிக்கும் இணைந்து இந்த அரிதான அறிகுறியை அவருக்கு தோற்றுவித்தன.

 ஒரு காலத்தில் மருந்தாக இருந்த வெண்பாஷாணம் அவரது ரத்தத்தில் ஒரு சாபமென நெளிந்து ஓடியது. ஆனால் ஆர்சனிக்கை நிறுத்தியபோது, தெளிவு திரும்பவில்லை. மாறாக, உலகம் உடைந்தது. புலப்படாத புலன்களின் தோற்றங்கள் மலர்ந்தன. நெருப்பில் உருக்குலைந்த அவரது தாயின் உருவம், ரத்தம் தோய்ந்த அவரது தந்தையின் உருவம், சேற்றை வீசி எரியும் சிறுவர்களின் தோற்றம் போன்ற மாய உருவங்கள் பூதாகரமாக அவரின் மணக்கண்ணில்  நிழலாடியபடி இருந்தன. அவரது உடல் இயற்கைக்கு மாறாகத் துடித்தது. ஆனால் அவர் தனியாக இல்லை. அவரது உற்ற தோழனான   நந்தன் அவர் மயக்கமடையும் பொழுதும், மனப்பிரம்மையால் பிதற்றும்  பொழுதும், கல்லிச்சி மரங்களின் கீழ் அவரை இளைப்பாற வைத்து நாவால் வருடிக் கொடுத்தபடி இருந்தான். 

 இவ்வாறான வலிகளோடு அவர் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.அவரது பயணங்கள் நீண்டு கொண்டே இருந்தது. தாமிரபரணி ஆறு மேல்நோக்கி செல்லச் செல்ல மெலிந்தது. பெரிய பாலக்காடு இடைவெளி வழியாக, காற்று கட்டவிழ்ந்த மிருகம்போல் உறுமியது. அது காட்டின் பச்சை வாசனையையும், தொலைவில் யானைகளின்  பிளிரல் ஓசைகளையும்  கொண்டு வந்தது. அந்தி நேரத்தில்,மரங்களிடையே சாம்பல் நிற நிழல்களாக யானைகள் தோன்றின. நந்தன் அவற்றை உன்னிப்பாகப் பார்த்தான். சிவன் எதையும் பார்க்கவில்லை. அவர் நோயின் பிடியில் சிக்கி இருந்தார். அவரது பார்வை உள்நோக்கி இருந்தது. அவர்கள் முன்னோக்கி செல்லச் செல்ல வனம் விரிந்தது. பெரும்  சமவெளிகள் அவர்கள் முன் திறந்தன, அவை வெயிலில் எரிந்து பொன்னிறமாக மின்னின. அங்கே மான்கள் துள்ளின. மேலே பருந்துகள் வட்டமிட்டன. நொய்யல் ஆற்றின் வளைவில், அவர்கள் நீர் அருந்தினர். சிவன் ஓய்வெடுக்க முயன்றார், ஆனால் தூக்கமும் அவரை ஏமாற்றியது. கல் இச்சி மரங்களின் கீழ், அவர் துடிதுடித்தபடி புரண்டு கிடந்தார் . 

வாரங்கள்  கழிந்தன. அவர்கள் மைசூர் பீடபூமியைக் கடந்தனர். பாதைகள் பிலிகிரி ரங்கன மலைகள் வழியாக வளைந்து நெளிந்து சென்றது. அங்கு, சிவனின் அறிகுறிகள் மோசமடைந்தன. காய்ச்சலின் வேகம் அதிகரித்தது. நந்தன் சோர்வடையவில்லை சிவனை தாங்கியபடி ஒரு மந்திர சொல்லுக்கு கட்டுண்டது போல அவன் முன்னேறி சென்று கொண்டே இருந்தான். அவர்கள் பெல்லாரியை நெருங்கினர்.

 தக்காண பீடபூமி   சிவப்புக் கடலென அவர்கள் முன்  விரிந்தது. தக்காண  பீடபூமியின்  பாறைகள் கூர்மையாக இருந்தன, காற்று உலர்ந்து  இருந்தது. தொலைவில் துங்கபத்திரை ஆறு  முணுமுணுத்தது. ஆனால் சிவனது சிந்தையை கவர்ந்தது அந்த ஆறு அல்ல. அங்கிருந்த பூமியே அவரது சிந்தனையை கவர்ந்தது. அந்த பூமியின் மேற்பரப்புக்கு கீழே, மாக்னடைட் மற்றும் குவார்ட்சைட் தாதுக்கள் நரம்புகள் போல நெளிந்து ஓடியது. அது சிவனது நாடியை படபடக்க வைத்தது.  இந்தப் பாறைகளின் கீழே இருக்கும் கனிமங்கள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன. வேறு ஏதேனும் பாஷாணம் இங்கு இருக்கக் கூடும் என அவர் நம்பினார். அந்த தாதுக்கள் அவரது நோயினை தணிக்கக்கூடும் என்று அவருக்கு தோன்றியது. இந்த நிலத்தில் எங்கோ, அவரது நோய்க்கு மருந்து இருப்பதாக அவர் நம்பினார். 

 அந்த நிலத்தின் பெயர் குப்கல்.  அது ஒரு வறண்ட பிரதேசம்  அங்கு நிலம் வேறுபட்டிருந்தது . காற்றில் உள்ள மொழி மாறியிருந்தது. அங்கிருந்த மக்களின் வார்த்தைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன. அந்த வார்த்தைகள் திராவிட வார்த்தைகளாக இருந்தாலும் மிக  நுட்பமான மாற்றத்தினை அது கொண்டிருந்தது.  

 அந்த மொழி மலைகளாலும் காலத்தாலும் பிரிக்கப்பட்ட தமிழின் உடன்பிறந்த மொழி. அங்கே மொழி பிரிந்து இரு கிளைகளாக வளர்ந்திருந்தது. அது முழுமையாக இப்போதைய கன்னடம் போல் இருக்கவில்லை. அது இப்பொழுது தான் குழந்தை பருவத்தை அடைந்திருக்கும் கன்னட மொழி. அது தமிழின் சாயலையே அதிகம் கொண்டிருந்தது.

அங்கு தமிழின் உடன்பிறப்பான கன்னட மொழி மட்டும் செழிக்கவில்லை. சிவனின் ரத்த பந்தம் ஒன்றும் அங்கே உலாவிக்கொண்டிருந்ததை சிவன் அறிய மாட்டார். அந்த ரத்த பந்தத்தின் பெயர் பத்ரன்... வீரபத்திரன்.

பத்ரன், சிவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவன். ஆனால் சிவனின் தந்தையைப் போல  கருமையான தோலுடையவன். பத்ரன் அவனது தந்தையைப் போலவே புலிகளோடு சமர் செய்தவன். அதனால் வீரப்பன், வீரையன் போன்ற காரணப் பெயர்களால் அவன் அழைக்கப்படலானான். அங்கே மக்கள் வழக்கில் இருந்த ஆதி கன்னட மொழியின் உச்சரிப்புகள் சற்று வித்தியாசமானது. அதனால் அங்கே அவன் பீரப்பா, பீரய்யா என அழைக்கப்பட்டான். 

சங்கனகல்லு எனப்படும் குப்கலில் தன் மக்களுடன் அவன் மிகப்பெரும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.   பீரப்பா குலத்தினர் மலைவாழ் மக்கள், அவர்கள் ஒரு காலத்தில் வேட்டையாடிகள், இப்போது ஆயர்கள். அவர்கள் போராட்டம் மிகுந்த வாழ்க்கை முறையினைக் கொண்ட  வேட்டையாடி சமூகமாய் இருப்பதைக் காட்டிலும், உணவையும் அமைதியையும் நிரந்தரமாக வழங்கும் மேய்ச்சல் வாழ்வுமுறையைத் தேர்ந்தெடுத்தனர். டெக்கானின் கொளுத்தும் வெயிலைத் தாங்கும் ஒரு வலிமையான ஆட்டு இனத்தை அவர்கள் வளர்த்து வந்தனர்.

 அவர்களின் தலைவன், பீரப்பா, புலியை கைகளால் வேட்டையாடிய புராண நாயகன். அவனது புலித்தோல் உடையும், செம்புக் காப்பை அணிந்திருந்த உறுதியான கைகளும் அவனது கடந்த காலத்து வேட்டையாடி வாழ்வையும் , அசைக்க முடியாத வலிமையையும் பறைசாற்றின.


அமைதியை வேண்டிய அவர்களது வாழ்வில் அமைதி நிலைக்கவில்லை. கிழக்குத் தாழ்நில விவசாயக் குடியிருப்புகளிலிருந்து பிரச்சினை வந்தது. அந்த இடத்தின் பெயர் கல்யாணப்பட்டணம். 

 மேய்ப்பர்கள் வாழ்ந்து வந்த  இடத்தில் கடந்த இரு ஆண்டுகளாக துளியும்  மழை பெய்யவில்லை. அதனால்  சற்றே பசுமை மிச்சம் இருந்த கல்யாணபட்டிணத்து நிலத்தை நோக்கி  மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றனர். மேய்ப்பர்களின்  அலைந்து திரியும் ஆடுகள் தங்கள் வறண்ட வயல்களை சேதப்படுத்தி விடுமோ  என கவலைப்பட்ட கல்யாணப்பட்டணக் குடியிருப்பாளர்கள்  மேய்ப்பர்களைத் தாக்கினர்.

 இந்தத் தாக்குதல் வஞ்சத்தால் விளைந்தது அல்ல. இது தோல்வியடைந்த பருவம், குறைந்து வந்த உணவின் இருப்பு, மற்றும் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட   வன்முறையால் பிறந்தது. தற்பொழுது மேய்ப்பர்களாகக்  காட்சியளிக்கும் அவர்கள் முன்பு புலிகளையும் வேங்கைகளையும் வலுவோடு எதிர்த்த மலைவாழ் மக்கள். அவர்களுக்கு தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. ஆடுகளைக் காக்க அவர்கள் திருப்பித் தாக்கினர். 

 இப்பொழுது ஆடுகள் மீது இருந்த வெறுப்பு மெல்ல மெல்ல குரோதமாக உருமாறியது. கல்யாணப்பட்டணத்து வீரர்கள் ஒன்று கூடி  ஆயர்களின் ஆடுகளை சிறைபிடித்தனர்.சிறைபிடிக்க வரும்போது அவர்களின் கழுத்தில்  வெட்சிப்பூவினால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்தனர். இது போருக்கு அழைப்பு விடும் ஒரு சடங்கு.

பதிலுக்கு, பீரப்பாவின் குலம் பழிவாங்கத் தயாரானது. அங்கிருந்த  ஹிரேகுட்ட மலையின் பாறைகள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. அந்த மலையானது  பெரும் கிரானைட் பாறைகளால் ஆனது. கிரானைட் பாறைகளுக்கு  இடையே, டோலரைட் கற்கள் பாறையை பிளக்கும் ஒரு கத்தியை போல்  மலைக்கு இடையில் ஓடியது. அந்த கற்களே அங்கிருந்த பழங்குடியினரது ஆயுதம்.
 அந்த ஆயுதங்களின் செயல்முறை கற்களை உடைப்பதில் இருந்து தொடங்கியது. டோலரைட் கற்களை உடைத்து தடிமனைக் குறைத்து அளவான கோடரிகளை செய்வதற்கு  அங்கிருந்த மெல்லிய பாறைகள் பயன்பட்டன. சிறிய குழிகளில் உரசி உரசி அவை கூர் தீட்டப்பட்டன.

  படம்  : பாறைகள் எப்படி கோடரிகளாக உருமாற்றம் அடைகின்றன என்பதைப் பற்றி விளக்கும் படம். source: Roberto Risch எழுதிய The Prehistoric Axe Factory at Sanganakallu-Kupgal (Bellary District), Southern India. எனும் ஆய்வுக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 


 ஒரு  தொழிற்சாலையைப் போல்  அங்கே கற்போடரிகளும் கல்லாயுதங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது . ஆண்களும் பெண்களும் வட்ட வடிவில் அமர்ந்து பெரும் போருக்கான ஆயுதங்களை அங்கே அந்தத் தொழிற்சாலையில் செய்து கொண்டிருந்தனர்.


 ஆயுதங்களை செய்த பின்னர் அவர்கள் கரந்தைப் பூ மலர்களால் ஆன மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அவர்கள் அந்த பீடபூமியின் பாறைகளால் ஆன இளைப்பாரும் இடத்தில் ஒன்று கூடினர்.

படம்: Birappa Rock Shelter, Kappagallu. source: Journeys across Karnataka blog.

 பயணத்திற்கு முன், அவர்கள் ஒரு  வீரக்கல்லைச் சுற்றி கூடினர். போரில் வீழ்ந்த வீரனின் புதைக்கப்பட்ட நினைவுக் கல் அது. அவனது இரத்தம் இன்னும் அவர்களில் ஓடுவதாக, அவனது தைரியம் அவர்களின் இதயங்களில் எதிரொலிப்பதாக அந்த மக்கள் நம்பினர்.  அவர்கள் ஒரு ஆடு மற்றும் காட்டுப்பன்றியை அந்த வீர கல்லின் முன்  பலியிட்டு அவனது ஆசியை  வேண்டி நின்றனர். அங்கே ஒரு மூப்பரின்  மீது அந்த வீரனின் ஆவி இறங்கி அங்கிருப்பவர்களுக்கு ஆசி வழங்கியது.
 அதன் பின்பு அவர்கள் வெற்றிக் கூச்சலிட்டனர். பறைகள் இசைக்கப்பட்டன. அது போரின் அறைகூவல். அங்கே அனைவருக்கும் முன்பு பீரப்பா கவர்ந்து செல்லப்பட்ட ஆடுகளை மீட்பேன் என உறுதிமொழி எடுத்தான். பின்னர் கவர்ந்து செல்லப்பட்ட தங்கள் ஆடுகளை நோக்கி அவர்கள் ஆயுதம் ஏந்திச் சென்றனர்.

 ஒரு மலைமுகட்டிற்கு மிக அருகில் இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். போர்முரசு கொட்டப்பட்டது. சண்டை துவங்கியது.
அவர்களின் கண்களுக்குத் தென்படாத உயரமான ஒரு குன்றின் மீது சிவன் நடப்பதை பார்த்தவாறு நின்றிருந்தார். சிவன் அங்கே உள்ள பாறை முகட்டின் கீழ் சுருண்டு கிடந்தார். தக்கான பீடபூமியின் எரியும் வெப்பம் அவரது அறிகுறிகளை தீவிரப்படுத்தியது. அவர் ஒரு அரை மயக்க நிலையில் நடப்பதை கவனித்து வந்தார். அவரது உற்ற நண்பன் நந்தன், அருகில் மேய்ந்து கொண்டிருந்தான்.

போர் மிருகத்தனமாக இருந்தது. கற்களால் செய்யப்பட்ட ஈட்டிகளும் கோடரிகளும் எலும்புகளை நொறுக்கின, சதைகளைக்  கிழித்தன, அங்கிருந்த செம்மண் மேலும் குருதியால் சிவக்க வைக்கப்பட்டது.  அந்த இடம் முழுவதும் புழுதி சூழ்ந்தது. மரண ஓலமும் ஆவேசக் கூச்சல்களும்  காற்றில் எதிரொலித்தது.

 இப்போரில் வஞ்சகர் என்றும் யாரும் இல்லை. இரு பக்கத்தினருக்கும் தங்களுக்கான ஒரு நியாயத்தை கொண்டிருந்தனர். கல்யாணப்பட்டிண வீரர்கள் வளமான நிலங்களைப் பாதுகாக்க போராடினர். பீரப்பாவின் குலம் தங்கள் ஆடுகளைப் பாதுகாக்க போராடியது. தக்காண பீடபூமியின் வறண்ட நிலங்கள் ஆண்டில் சில மாதங்களே மேய்ச்சல் அல்லது விதைப்புக்கு உகந்தவை. அந்த நிலம் இரண்டு வகையான குலத்தவருக்கும் தேவையாய் இருந்தது. பற்றாக்குறை வன்மத்தையும் வெறுப்பையும் போட்டியையும்  உருவாக்கியது. இங்கு யாரின் மீதும் குற்றமில்லை.

 ஆனால் எண்ணிக்கையைப் பொருத்தவரை இந்த சண்டை சமமானதாக இல்லை. பீரப்பாவின் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் கல்யாணபட்டிண வீரர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதனால் பீரப்பாவின் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்கினர். இருப்பினும் பீரப்பாவை எவராலும் தொட முடியவில்லை. அவன் ஒரு புயல். அந்தப் புயல் செல்லும் இடமெல்லாம் எதிரணி வீரர்கள் வெட்டப்பட்ட வாழைமரம் போல் வீழத் தொடங்கினர்.

தொலைவில், நந்தன் எதிரிகளால் சூழப்பட்ட  அந்த கருமையான தோல் கொண்ட  வீரனை உற்றுப் பார்த்தான். அவனது தோள்களின் வளைவு, அவனது கண்களில் உள்ள நெருப்பு, அவனது புஜங்கள், அவனது ஆற்றல் அனைத்தும் சிவனைப் போலவே இருந்தது. சிவனின் மறுபிறப்பு  போல் அவன் தோன்றினான். நந்தன் ஆச்சரியம் மேலிட சிவனையும் பீரப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். பீரப்பா கருமை நிறைந்த சிவனின் பிரதி போல நந்தனுக்குத் தோன்றினான். நந்தன்  சண்டை நடக்கும் அந்த இடத்தை நோக்கி முன்னேறினான்.

 அவன் முன்னேறிய அதே சமயம் கல்யாணபட்டிணத்து விவசாய குலத் தலைவன் பசவண்ணாவின் மகனால் வீசப்பட்ட ஒரு ஈட்டி பீரப்பாவை நோக்கி காற்றில் பறந்து வந்தது. அந்த தாக்குதலை பீரப்பா அறியவில்லை.  ஆனால் நந்தன் அதை பார்த்துவிட்டான்.  உள்ளுணர்வு  உந்துதலால், நந்தன் நாலு கால் பாய்ச்சலில்  முன்னோக்கி ஓடினான். நந்தனின் கொம்புகள் பாய்ந்து வந்த  ஈட்டியைச் சந்தித்தது. செம்பு முனை கொண்ட மரத்தாலான அந்த கூரான ஈட்டி சிதறி விழுந்தது. பீரப்பா ஆச்சரியமும் அதிர்ச்சியும் மேலிட நந்தனின் கண்களை சந்தித்தான்.

பீரப்பாவை தன் மீது ஏற்றிக்கொள்ளத் தயாராக நந்தன் மண்டியிட்டு பீரப்பாவின் முன் நின்றான்,  நந்தனின் குளம்புகள் பாய்வதற்குத் தயாராக காத்திருந்தது.

பீரப்பா, கண நேரத்தில், அந்த அழைப்பை புரிந்து கொண்டான். அவன் நந்தனின் மேலேறினான். 

பின்னர் நடந்தது புராணமானது.  வீரன் புயலைப் போல் எதிரி வரிசைகளைத் தகர்த்தான். பயம் பரவியது. கல்யாணபட்டிணத்து வீரர்கள் சிதறி ஓடினர். ஆனால் பசவண்ணாவின் மகன் வீரத்தில் சளைத்தவன் இல்லை. அவன் பீரப்பாவை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாரானான். பீரப்பா  பசவண்ணாவின் மகனின் தாக்குதல்களை தனது கணிச்சியால் தடுத்தபடி இருந்தான். ஆயினும் அவன் பீரப்பாவை தனது பாதுகாவலர்களுடன் சூழ்ந்து தாக்கினான். அவர்களை நந்தன் தனது கொம்புகளால் தூக்கி வீசினான்.பசவண்ணாவின் மகன் மீண்டும் ஒரு கூர்மையான  ஈட்டியை பீரப்பாவை நோக்கி வீசினான். அதன் தாக்குதலில் இருந்து பீரப்பா எளிதில் தப்பி, அந்த வீரனின் நெஞ்சில் கணிச்சியை இறக்கினான். போரின் முடிவில் பசவண்ணாவின் மகன் புழுதியில் உயிரற்றுக் கிடந்தான்.

அருகில் உள்ள முகட்டில் இருந்து, சிவன் இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு நடப்பவை அனைத்தும் ஒரு பனிமூட்டம் போல தோன்றியது. அது நிகழ்காலத்தில் நடக்கிறதா அல்லது கடந்த காலத்தின் தோற்ற மயக்கங்களா என்பது அவருக்கு தெளிவில்லாமல் இருந்தது. அவர் பீரப்பாவின் முகத்தில் தனது தந்தையின் சாயலைக் கண்டார். அவருக்கு தனது கடந்த கால நினைவுகள் மனதில் மின்னலின் ஒளியை போல  அவ்வப்போது மின்னியபடி காட்சியளித்தது.

 போர்க்களத்தில் நந்தனின் மீது சுழன்றாடியபடி பீரப்பா  நடத்திய வெறியாட்டம் முடிவுக்கு வந்தது. மெல்ல மெல்ல போர்க்களத்தை சூழ்ந்திருந்த  தூசி அடங்கியது.  துணைவன் போல தனக்கு உதவிய நந்தனை தடவிக் கொடுத்தபடி பீரப்பா நின்றிருந்தான். நந்தனுக்கு அந்தத் தொடுதல் சிவனை நினைவூட்டியது.

நந்தன்  சட்டென்று சிவனின் இருப்பிடம் நோக்கி விரைந்தான். பீரப்பாவினால் அன்று காளைவடிவில் வந்த உதவி எத்தகையது என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தக்காளை எதற்காக அங்கு வந்தது, எங்கு சென்று அது மறைந்தது என்பது எதுவுமே அவனுக்கு விளங்கவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்கும் அவனுக்கு தற்போது நேரம் இல்லை. ஏனெனில்   அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் சில மிச்சமிருந்தன.

 பீரப்பாவும் அவனது மக்களும் போர்க்களத்தில் வீழ்ந்த தங்களது வீரர்களை மண்ணில் புதைத்து அவர்கள் நினைவாக நடுக்கற்களை எழுப்பினர் . அவர்களது வீரம் அவர்களது குலத்தவர்களால் தலைமுறைகள் பல கடந்து நினைவு கூறப்படும்.

 போரின் இறுதியில் ஆடுகள் மீட்கப்பட்டன. இந்த வெற்றி தற்காலிகமானது என்பதை பீரப்பா அறிவான். எதிர் வரப்போகும் பெரும் புயல்களின் அச்சாரம் இந்த வெற்றி. கல்யாணபட்டிணத்தில் விவசாயக் குடி தலைவன் பசவண்ணா, தனது மகனின் இறப்பிற்கு பழி வாங்குவதாக சூளுரைத்தான்.  

கல்யாணப்பட்டணத்தின் தலைவன் தங்களைப் போலவே விவசாய குடியாக இருக்கும்  விதர்பாவுக்கு உதவி கோரி செய்தி அனுப்பியிருந்தான். பீரப்பாவின் ஆட்கள் இந்த செய்தியினை பீரப்பாவிற்கு தெரிவித்தனர். இதை அறிந்த அவன், தனித்து இந்த எதிர்ப்பினை சமாளிக்க முடியாது என்பதை அறிந்து, வடக்கே உஜ்ஜெயினில் இருக்கும்  அவனது அக்கா மஹாகாளியிடம் உதவி  வேண்டி ஒரு மலைமுகட்டின் உச்சியில் நின்று பறையின் மூலம் செய்தியை அறிவித்தான். அந்தப் அந்தப் பறை  அறிவித்த செய்தியினை  தூரத்திலிருந்த ஒவ்வொரு மலைவாழ் கூட்டத்தினரும் உஜ்ஜினிக்கு தங்களின் பறை ஓசையின் மூலம் கடத்திச் சென்றனர். அச் செய்தியை மகாகாளி பெற்றுக் கொண்டாள்.

அன்று இரவு பீரப்பாவும் அவனது மக்களும் ஒரு குழப்ப மன நிலையில்   இருந்தனர். 

 ஆழ்ந்த இரவிலும் தக்காண பீடபூமியின் வெப்பம் குறைந்த பாடில்லை.  அழலால் தூண்டப்பட்ட சிவனோ பித்தம்  தலைக்கேறி ஒரு மயக்க நிலையில் நகரத் தொடங்கினார்.  அங்கே நட்சத்திரங்களின் ஒளியின் கீழ் யாராலும் எளிதாக ஏற முடியாத குன்று ஒன்றின் உச்சியை அவர் அடைந்தார். தன்னிலை மறந்து ஒரு மோன நிலையில் சிவன் உக்கிரமாக ஆடத் துவங்கினார். உடுக்கை ஒலியும் அவர் பாறையில் அறைந்ததால் அந்தப் பாறை ஏற்படுத்திய வித்தியாசமான ரீங்கார ஒலியும் அந்த பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன.

உடுக்கை ஒலியும் டோலரைட் கற்களை தட்டும்பொழுது எழும் ரீங்கார ஒலிகளும் சீரிய இடைவெளியில் ஒலித்துக் கொண்டிருந்ததை பீரப்பாவும் அவனது மக்களும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். 

அந்த உடுக்கை ஒலியில் பிறந்த வார்த்தைகள் பீரப்பாவிற்கு பரிச்சயமான வார்த்தைகள். ஆனால் இந்தப் பறையின் இசை அவர்களது குலத்தின் பறையின் அதிர்வினை ஒத்தது அல்ல. இது ஏதோ ஒரு வகையில் மாறுபட்டிருந்தது.

 இது எதிரிகளின் தந்திரமா? உதவிக்கு வரும் யாரோ ஒருவரின் செய்தியா? அல்லது கடவுள்களின் குரலா?

 பீரப்பாவிற்கு எதுவுமே விளங்கவில்லை.

 இதற்கான விடைகளை நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்திருந்தன.



Saturday, October 11, 2025

பரம் பாண்டியனார் (ஆதியோகி: அத்தியாயம் 14)


வேந்தன் தனது நாட்டிற்கு அவசரமாகத் திரும்பினான் , ஆனால் அவனது மணக்கண்ணில், கல் இச்சி மரத்தின் கீழ் வீற்றிருந்த அழல் தாங்கிய உடலையும் கருணை மிகு கண்களையும் கொண்டிருந்த அந்த அந்த மனிதனின் உருவம் நிழலாடியபடி இருந்தது.

 வேந்தனின் நாடு முழுவதும்   பயங்கரத்தின் பாரத்தால் நடுங்கியது. குழந்தைகள் சுவாசிக்கத் திணறினர் . முதியவர்களின் இருமல் ஒளி சீரிய தாளகதியில் நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. வயது பேதமின்றி அனைவரும் அந்தக் கோர நோயின் பிடிக்கு மடிந்து கொண்டிருந்தனர். உயிருடன் இருப்பவர்களோ  தங்களை அந்த நோய் எப்பொழுது பீடிக்குமோ என்ற பயத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

 இந்த காட்சியை கண்டபடி வேந்தன் தனது மாளிகைக்கு திரும்பினான். அங்கே வேந்தனின் மகன் மெல்லிய மூச்சு விட்டபடி  அரை மயக்க நிலையில் கிடந்தான். மூப்பர்கள் அவன் இன்றைய நாளை தாண்ட மாட்டான் என கை விரித்து விட்டனர்.  வேந்தனுக்கு அன்றைய பொழுது சூனியமாக கழிந்தது. அவனால் செய்யக்கூடியது எதுவும் இல்லை. இறப்பினை அறிவிக்கும் பறையின் ஒலி அந்த நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. 
 அந்தப் பறை இசையினூடாக மெல்லிய உடுக்கை ஒலி ஒன்று கேட்டது. வேந்தன் இதயம் படபடக்க ஓசை வந்த திசையை நோக்கிப் பார்த்தான். 

பிரகாசமான நிலவு ஒளியின் கீழ், காளையின் மீது அமர்ந்தபடி அந்த மனிதர் நகரத்தை நோக்கி  வந்தார். அவரது இடுப்பில் மூலிகைச் செடிகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன, மலை ஊற்று நீர் நிரம்பிய கொம்புக் குடுவையையும், பின் நாட்களில் விஷம் என அறியப்படும் விசித்திர உப்பு படிகங்களையும் அவர் கொண்டு வந்திருந்தார் .

 அவர் நேராக வேந்தனின் மாளிகைக்குள் நுழைந்தார் அவர் எதுவும் பேசவில்லை. கையை நீட்டி, பையனின் மணிக்கட்டில் விரல்களை வைத்து நாடியின் துடிப்பைப் படித்தார். பின்னர் அவர் தன் வேலையைத் தொடங்கினார்.

 அவர் இலைகளை உள்ளங்கைகளில் நசுக்கி, பசும்பால் மற்றும் சாம்பலுடன் கலந்து, அதோடு சில படிக உப்புக்களையும் கலந்தார். அந்தக் கலவையை ஐந்து உலோகங்களின் கலவையால் ஆன வெண்கலப் பாத்திரத்தில் ஊற்றி அதை மெதுவாக எரியும் நெருப்பில்  சிறிது நேரம் காட்டினார்.  

 பின்னர் அவர் அந்தக் கலவையை சூடான நீருடன் கலந்து சிறுவனுக்கு புகட்டினார்.  விடியற்காலையில் சிறுவனை ஆக்கிரமித்திருந்த  காய்ச்சல் விலகியது.

 இவ்வனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் சிவனை நோக்கி “ நீங்கள் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்து விட்டீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

"நான் நெருப்பை அணைக்க வில்லை" என்றார் சிவன்.

"பின்னர் அது எப்படி தணிந்தது?" என வேந்தன் ஆச்சரியத்துடன் வினவினான். 

“நான் அதற்கு வேறு ஒன்றை எரிக்கக் கொடுத்தேன்” என்றார் சிவன்.

“பையன்… அவன் உயிர் பிழைப்பானா?” வெந்தன் தன் மகனருகில் மண்டியிட்டு கேட்டான்.

சிவன் அமைதியாகத் தூங்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தார் . “அவன் உயிர் பிழைப்பது மட்டுமல்ல,” என்று மென்மையாகக் கூறினார்...“  இந்தக் காளையைப் போல் வீரமிக்கவனாக...  பாண்டியனாக இருப்பான்” என்று நந்தனை வருடியபடி கூறினார் 

“பாண்டியன் ” என்ற வார்த்தை காற்றில் தங்கியது. தமிழில் பாண்டி என்றால் காளை,வலிமை, அசைக்க முடியாத உறுதியின் அடையாளம்.

அன்று முதல், அந்தக் குழந்தை பாண்டியன் எனப் பெயரிடப்பட்டான். பின்நாட்களில் அவன் தன் இரு சகோதரர்களுடன்,  தமிழகத்தை ஒரு வலிமையான காலகட்டத்திற்கு வழிநடத்தினான். 

பின்னர் வந்த வாரங்களில், சிவனின் மருந்து கிராமத்தை குணப்படுத்தியது. இறப்புகள் நின்றன. மாசடைந்த நீரே காரணம் என சிவன் வேந்தனை எச்சரித்தார். மண்ணில் கோடுகள் வரைந்து, வடிகால் கால்வாய்கள் தோண்டவும், மண்  படுக்கைகள் அமைக்கவும் அவர்களுக்கு சிவன் கற்றுக் கொடுத்தார். அவையே பின்னாட்களில் கீழடி மற்றும் ஹரப்பாவில் எதிரொலித்த சுகாதார முறைகளில் முன்னோடி வடிவமாகும். 

 வேந்தன் சிவனிடம்  இரும்பு மற்றும் வெண்கலத்தைப் பற்றியும்  மூலிகைகளைப் பற்றியும் கேட்டான். சிவன் அவனுக்கு தாதுக்களைப் படிக்கவும், உலைகள் கட்டவும், உலோகங்களை உருக்கவும்  கற்றுக்கொடுத்தார்.

 வேந்தனின் கனிவும் வீரமும் மெச்சத்தக்க வகையில் இருந்ததை சிவன் கண்டு கொண்டார். தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும் ஒருங்கே அமைந்த மருத நிலத்தின் வேந்தன் இறைவனுக்கு சமமானவன் என்பதை சிவன் உணர்ந்து கொண்டார். 
 எனவே சிவன் வேந்தனுக்கு வீரத்தையும் அன்பையும் ஒரு அரசன் கைவிடலாகாது என்று போதித்தபடி இருந்தார்.

இந்த வார்த்தைகளை கேட்டுகொண்டிருந்த இளம் பாண்டியன் தனக்கும் அரசாட்சியைப் பற்றி கற்பிக்குமாறு சிவனிடம் அடிபணிந்து நின்றான். பாண்டியனிடம் சிவன் “எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதே வேந்தர்களின் முதல் கடன்,” என்று கூறி, மென்மையாக பையனின் தோளில் கை வைத்தார்.

அந்த வார்த்தைகள் பாண்டியனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன, அவனது வழித்தோன்றல்கள் பல தலைமுறைகளாக அந்த வார்த்தைகளை எப்போதும் அணையாத ஒரு தீபமென இதயத்தின் அருகில் வைத்துப் பாதுகாத்தனர்.

 அந்தப் பாண்டிய குல வழித்தோன்றல்களில் ஒருவர்  மலையத்வஜன். குருக்ஷேத்திரப் போரில் உண்மையின் பக்கம் நின்றவர் அவர். பாண்டவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்தவர். அவர் ஒரு மன்னராக மட்டுமல்ல, நீதியின் அடையாளமாகவும் நின்றார், உண்மையை நிலைநாட்ட பெருவீரர்களை எதிர்த்து அவர் போரிட்டார். 

 அவர் மறைந்தாலும் அந்த மஹாஅதிரதனின் மரபு அவரது மகள் மூலம் தொடர்ந்தது. அவள் மீன்  போன்ற ஒளிரும் கண்களுடைய  அழகிய இளவரசி.  இன்றுவரை, அவளது இருப்பு மதுரையில்  ஒவ்வொரு வீதியிலும் உணரப்படுகிறது. ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் அவள் தான் என்றும் மதுரையின் நிரந்தர அரசி. அந்தப் பாண்டிய  குல மன்னர்கள் தான் உலகின் நீண்ட நாட்கள் அரசாட்சி செய்த மன்னர் குழுவினர். அவர்கள் அனைவரும் ஆதி வேந்தனின் வழித்தோன்றல்கள்.  அவர்களை வழிநடத்தியது ஆதி சிவன்.

 சிவனின் இருப்பால் வேந்தனின் நகரம் செழிக்க தொடங்கியது.
சிவனைப் பின்தொடர்ந்த கால்நடைகள் வேந்தனது நாட்டில் தங்கியிருந்தன. அவை தங்கள் பாலை மக்களுக்கு வாரி வழங்கின, அவற்றின் எரு சிவப்பு மண்ணை உரமாக்கி, அவை மேய்ந்த இடங்களில் உயிரைக் கொண்டுவந்தன. ஒரு புதிய ஒத்திசைவு தொடங்கியது. ஒரு நாகரிகம் எழுந்தது.

  நகரத்தில் மகிழ்ச்சி பெருக ஆரம்பித்தது. ஆனால் சிவனின் உடல் நோயின் தாக்கத்தால் சீற்றம் கொள்ள  ஆரம்பித்தது. நோயின் தாக்கத்தை சிவன் வெண்பாஷாணத்தால் கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஆனால் வெண்பாஷாணம் வேறு ஒரு பக்க விளைவை கொண்டு வந்தது. அது மிகவும் வலி மிகுந்த ஒரு பக்க விளைவு.

 பிரையாபிசம் எனப்படும் வலி மிகுந்த உயிர் நாடி எழுச்சி அவ்வப்போது சிவனுக்கு நேர ஆரம்பித்தது. சிவன் அவ்வலியை அமைதியாகத் தாங்கினார்.  அவரால் மக்களோடு இயல்பாக இருக்க முடியவில்லை.
 இம் மக்களோடு அவருக்கான தொடர்பு முடிவதை அவர் அறிந்து கொண்டார். அவர் இவ்விடத்தை விட்டு புறப்படுவதற்கு தயாரானார். 

 அவருக்கும் தமிழர்களுக்கும் இடையேயான நேரடித் தொடர்பு முடிவடையும் நேரம் நெருங்கி விட்டது. அவர் தமிழர்களுக்கு போதித்த  உலோகவியல், வாழ்வு முறைகள், மருத்துவ முறைகள் அனைத்துமே அவர்களை வழிநடத்தும். பிற்காலத்தைய மனிதர்கள் சிவகளையில் இரும்புகளின் எச்சங்களை கண்டெடுக்கும் பொழுது ஆதித்தமிழனது  பெருமையை இந்த உலகம் உணரும். ஆனால் இவை அனைத்திற்கும்  அடித்தளம் வித்திட்ட சிவன் தற்பொழுது வடக்கு நோக்கி புறப்பட தயாரானார்.

ஒரு அமைதியான இரவில், அவர் நந்தனின் மீது ஏறி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மறைந்தார். அவர் செல்வதை யாரும் பார்க்கவில்லை. மண்ணில் குளம்புத் தடங்கள் மட்டுமே இருந்தன.

 அவர் விட்டுச் சென்ற போதனைகள் தமிழகத்தை வழி நடத்தியது. அவர் விட்டுச் சென்ற கால்நடைகள் நிலங்களை வளப்படுத்தியது. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் அகத்தியர் வரும் வரையிலும் நிரப்பப்படாமலேயே இருந்தது. உலகம் அவரை பல்வேறு வழிபாட்டு முறையில் தொழுதாலும் அவரது போதனை நீர்த்து போக வைக்கப்படடாலும் அகத்தியர் வழி வந்த சித்தர் சமூகம் அப்போதனைகளை... அவர் காட்டிய இறைவனை அடையும் வழிமுறைகளை... இறைவனாகவே ஆகும் பயிற்சிகள் அனைத்தையும் நீர்த்துப் போகாமல் காத்து வந்தனர்.  நட்ட கல்லில் அவரை செதுக்கி கருவறைக்குள்  அடைத்து தமிழர்களிடம் இருந்து அவரை பிரிக்க முயற்சிகள் பல நடந்தன. ஆனால் சித்தர் சமூகம் தமிழர்களுக்கு இறை எனப்படுவது என்ன என்பதை அடையாளம் காட்டிடத் தவறவில்லை.
--------

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

சிவவாக்கியர்

Sunday, September 21, 2025

வைத்தீஸ்வரன்(ஆதியோகி: அத்தியாயம் 12)


நிலங்கள் உழப்படுவதற்கு முன்பு, நகரங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, மனிதர்கள் நிலையாக ஒரு இடத்தில் இருந்திருக்கவில்லை. அவர்கள் உணவுக்காகவும் இருப்பிடத்திற்காகவும் அலைந்து திரிந்தனர்.

 பழங்காலத்தில், காடுகளிலும் மலைகளிலும், வாழ்ந்து வந்த மனிதர்களின் வாழ்க்கையானது இடைவிடாத வேட்டையிலும் அலைச்சலிலும் நிரம்பியிருந்தது. மனிதனின் அடிப்படை தேவையான உணவு மற்றும் உறைவிடம் இரண்டிற்கும் அவர்கள் இயற்கையை நம்பி இருந்தனர்.  வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழைய வாழ்க்கை முறையில் அடுத்த பொழுதின் உணவு என்பது கேள்விக்குறியாக இருந்தது. 

 அங்கிருந்த மக்களுக்கு  உணவு என்பது வேட்டையின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருந்தது. உறைவிடம் என்பது  பருவநிலையின் அதிர்ஷ்டத்தை பொறுத்திருந்தது. மேலும் இயற்கையின் இடர்களான வெள்ளம் வறட்சி காட்டு தீ போன்றவை அங்கிருந்த மக்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வைத்தன.

 அந்த மக்கள் சிறு சிறு குழுக்களாக மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயற்கையின் தாக்குதல்களுக்கு எளிதில் பலியாகக் கூடியவர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட அப்போது இருந்த மக்களில்   43% பேர் பருவ வயதை அடைவதற்கு முன்னமே இறப்பை எய்தினர். 

வேட்டையின் காயங்கள் விலங்குகளின் தாக்குதல்கள் பிரசவ சிக்கல்கள் போன்றவற்றால் அவர்களில் பெரும்பான்மை சதவீத மக்கள்   உயிரிழந்தனர். 

அவர்களுக்கு நிரந்தரமான தங்குமிடம் என்று எதுவும் இல்லை, புதுமைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அவர்களிடம் நேரம் இல்லை. அவர்களின் அனைத்து ஆற்றலும் உயிர்வாழ்தலுக்காகவே செலவிடப்பட்டது. 

அவர்கள் வாழ்வு நிச்சயமற்றது. ஒவ்வொரு விடியலிலும் அவர்களுக்கு புதுப்புது சவால்கள் காத்திருந்தன. அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். ஆனால் அவர்களால் வெல்ல முடியாதவற்றின் எண்ணிக்கை பல. எனவே அவர்கள் தங்களால் வெல்ல முடியாதவற்றைக் கண்டு பயந்தனர். பாம்பு, மின்னல், நெருப்பு என அவர்கள் பயந்தவற்றின்  எண்ணிக்கை அதிகம். எனவே, அவர்கள் அவற்றை வணங்கினர்.

ஆனால், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக  மாற்றங்கள் தொடங்கின. மக்கள் நிரந்தர உணவினைத் தேடி பயணப்பட்டனர். தங்களுக்கான உணவை தாங்களே பயிரிட ஆரம்பித்தனர். நிலையான உணவு கிடைத்த பிறகு ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கத் துவங்கினர். 
அதற்கு நதிக்கரைகள் அச்சாரமாக அமைந்தன. நதிக்கரைகள் நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின.
 என்றுமே வற்றாத ஜீவ நதியான  தாமிரபரணிக் கரையில் அப்படி ஒரு நாகரிகம் உருவாகத் தொடங்கியது.

தற்போதைய தெற்குத் தமிழ்நாட்டின் வளமான எல்லைகளில், தாமிரபரணி ஆற்றின் சமவெளிகளுக்கு அருகில் இருந்த நிலமானது  நிரந்தரத்தை வழங்கியது. இது முதல் மருதம். தமிழ் வேளாண் நிலப்பரப்பின் முன்னோடி.

மலை மற்றும் காட்டின் கரடு முரடான  நிலப்பரப்பைப் போலல்லாமல், மருதம் மென்மையானதாகவும் ஈரமானதாகவும் இருந்தது. ஆற்று நீரால் வளப்படுத்தப்பட்ட அதன் வளமான மண், ஆதி சமூகங்களை தங்கவைத்து, பயிர்களை வளர்க்கவும், உபரி உணவை சேமிக்கவும் அனுமதித்தது. இனி அவர்கள் அலைந்து திரிந்து வேட்டையாடும் வேட்டையாடிகளாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக கவிவசாயிகளாக மாறினர்.

இந்த முயற்சி அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வந்தது.

நிலையான உணவின் இருப்பு, திட்டமிடலையும் உபரியையும் அனுமதித்தது.மக்கள் தொகை வளர்ந்தது, குடியிருப்புகள் கிராமங்களாகவும் பட்டணங்களாகவும் மாறின. நிரந்தர வீடுகள் பருவகால முகாம்களை மாற்றின. தொழில் பிரிவு தோன்றியது. சிலர் விவசாயம் செய்தனர், மற்றவர்கள் கருவிகளை உருவாக்கினர், சிலர்  நோய்களை குணப்படுத்தினர்,  சிலர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர், சிலர் காவல் காத்தனர். இதனால் மக்களுக்கு ஓய்வும் உபரி நேரமும் கிடைத்தது. உபரி நேரத்தில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர் அதனால்  தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. நீர்ப்பாசனம், உழவுக் கருவிகள், சேமிப்பு கலன்கள், மற்றும் உலோகவியல் போன்றவை முயற்சித்துப் பார்க்கப்பட தொடங்கின .

ஆனால் இந்தப் பரிசுகள் ஒரு விலையுடன் வந்தன.

நிலத்துடன் உரிமை வந்தது, உரிமையுடன் ஏற்றத்தாழ்வு வந்தது. பலரால் உற்பத்தி செய்யப்பட்ட உபரி, சிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள்,  ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். சமூக படிநிலைகள் உருவாகின. 

மக்கள் இப்பொழுது பிறவிலங்குகளுடன் பூசல் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் நாகரீக கட்டமைப்பின் ஒழுங்கு குலைந்தது.

 நாகரிகம் திறமாக இயங்குவதற்கு ஒரு ஒழுங்கு தேவைப்பட்டது, ஒழுங்கிற்கு அதிகாரம் தேவைப்பட்டது. அதிகாரத்தை நிலை நிறுத்த வேந்தன் என்று ஒருவன் தேவைப்பட்டான்.

இவ்வாறு வேந்தன் உருவானான், ஒரு தலைவனாக மட்டுமல்ல, சட்டமியற்றுபவனாகவும் அவன் இருந்தான். அவன் நீதியை அமல்படுத்தினான், எல்லைகளைப் பாதுகாத்தான், அறுவடையை ஒழுங்குபடுத்தினான், தகராறுகளைத் தீர்த்தான். அவனது வார்த்தை சட்டமானது. வேந்தன் மருத நிலத்தின் ஒட்டுமொத்த  அதிபதியாகக் காட்சியளித்தான்.

 கடவுளுக்கு இணையான அதிகாரத்தை கொண்டவன் வேந்தன். ஆனால் வேந்தனும் ஒரு மனிதன் தான்.

 வேந்தனின் மனித இயல்பை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. பிறந்தநாள் அவன் இயற்றிய சட்டங்கள் எளிதில் மீறப்பட்டன. எனவே மக்கள் ஒரு புதிய ஒரு உருவகத்தை  உருவாக்கினர். வேந்தனை விட உயர்ந்த ஒரு சக்தி, கையூட்டப்பட முடியாத, கொல்லப்பட முடியாத, வேந்தனையும் கண்காணிக்கும் ஒரு இருப்பு உருவாக்கப்பட்டது.

 அதன் பெயர் கடவுள்!

 கடவுள் எனும் உருவகம் வேந்தன் உள்ளிட்ட அனைத்து மனிதர்கள் மனதிலும் தர்மத்தை மீறினால் தண்டிக்கப்படுவோம் எனும் பயத்தை உருவாக்கி நாகரிக கட்டமைப்பின் ஒழுங்கை நிலை நிறுத்த உதவியது.

 உருவகமாக உருவாக்கப்பட்ட கடவுள்களால் மனித மனத்தின் ஒழுங்கை பரிபாலிக்க முடிந்தது. ஆனால் அந்த உருவகத்தால் கொள்ளை நோய்களை தடுக்க இயலவில்லை.
 
மக்கள் தொகை அடர்த்தி இந்த ஆரம்பக் குடியிருப்புகளில் அதிகரித்தபோது, நோய்களும் அதிகரித்தன. வீட்டு விலங்குகளோடு மக்கள் நெருங்கி பழகிய போது அவற்றின் கிருமிகளை அவர்கள் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர். 


 மக்கள் பெருக்கம் கழிவுகளை அனுமதித்தது. கழிவுகள் ஈக்களையும் கொசுக்களையும் வளர்த்தெடுத்தது.மேலும் தானியங்கள் காட்டில் இருந்த எலிகளை வீட்டிற்குள் அழைத்து வந்தன. இவை அனைத்தும் மக்களுக்கு கொள்ளை வியாதிகளை பரப்ப ஆரம்பித்தன. 

கடவுள்களால் குற்றங்களை தடுக்க முடிந்தது. ஆனால் பெருகிவரும் கொள்ளை நோய்களை கடவுள் என்னும் உருவகத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை. கொள்ளை நோய்கள் கடவுள்களின் கோபத்தின் விளைவாக பார்க்கப்பட்டன. கடவுள்களின் சாபமாகக் கருதப்பட்டன.

ஆனால் தமிழ் மருத நிலங்களில், ஒரு வேறுபட்ட கடவுள் தோன்றினான்.

அவன் அழிக்கவில்லை; அவன் ஆறுதல் அளித்தான். 
அவன் பலியைக் கோரவில்லை; அவன் அறிவியலை கற்பித்தான்.

இந்த பசுமையான, நீர் நிறைந்த மருத நிலத்தில், சிவன்  மக்களை குணப்படுத்தும் வைத்தீஸ்வரனாக மாறத் துவங்கிய காலகட்டம் அது. மக்களை குணப்படுத்தும் ஆற்றலை அவன் வெறுமனே அதிர்ஷ்டத்தால் மட்டும் பெறவில்லை. அதை பெறுவதற்காக அவன் நெருப்பாற்றில் நீந்தினான் 

அவன் பிறந்தபோது பளீரென வெண்மையாக இருந்தான். அவன் காட்டில் வாழ்ந்த வேட்டுவ இன மக்களின் அசாதாரண வெளிறிய குழந்தை. மூப்பர்கள் இதை சாபம் என்றனர், ஆனால் அவனது தாய் அவனது பார்வையில் தெய்வீகத்தை கண்டாள். அவன் வளர்ந்தபோது, உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளும் வளர்ந்தான். ஒரு செம்பு அணிகலன் அவனது நோயை மோசமாக்கியபோது, அவனுக்கு ஆறுதலாக அவனது பெற்றோர் இருந்தனர்.பின்னர் அவர்களையும் அவன் இழந்தான்.

 அதன் பின்னர் அவன் சுயம்புவாக   வளர்ந்தான். அவன் தனக்குத்தானே கற்பித்துக் கொண்டான்.  பிறருக்கு கற்பிக்கவும் பிறரை பாதுகாக்கவும் அவன் முடிவெடுத்தான். இப்போது  மருத நிலம் அவனது அருளைக் கோறியது.

 மருத நிலம் என்பது புராணக் கதைகளில் நாம் காணும் கடவுளர்கள் வாழ்ந்த சொர்க்க நிலம் அல்ல. அது ஒரு உயிர்ப்பு மிக்க ஈரநிலம்:அது, எருமைகள் தண்ணீரில் மெதுவாக நகரும் சதுப்புநிலம். தாமரைகளுடன் ஆம்பல்கள் மலர்ந்து, தும்பிகளால் சூழப்பட்ட இடம். அங்கே  நீர்நாய்கள் விளையாடின, மீன்கள், நெல் வயல்களுக்கு ஊடாக நீந்தின. அங்கே அன்றில் பறவைகள் இணை பிரியாமல்  வாழ்ந்து வந்தன.  உணவும் உயிரும் பழகிப் பெருக வகை செய்யும்  ஒரு சரியான சூழலியல் அது.

காடு, வேட்டை விலங்குகளின் பற்களாலும் மற்றும் நாகங்களின் விஷத்தாலும் அங்கு வாழ்ந்து வந்த மக்களை கொன்றது.

ஈரநிலம், எவ்வளவு தாராளமாக இருந்தாலும், அது வேறுவிதமான விலையைக் கோரியது: 

 இப்பொழுது தமிழகத்தின் முன்னோடி மருத நிலத்தில் கொள்ளை நோய் ஒன்று கோரத்தாண்டவம் ஆடியது. 

அந்த மாலையில், சிவன் உயர்ந்த நிலத்திலிருந்து இறங்கினான், காட்டிலிருந்து கிராமத்தின் விளிம்பு வரை இடுகாட்டை நோக்கி பயணித்தான்.

 ஒவ்வொரு முறையும் அவன் அந்த மருத நிலத்தின் வெளிப்புற எல்லையைக் கடந்து தேரிக்காட்டினை நோக்கி செல்லும்போதும், ஒரு மாற்றத்தை அங்கு அவன்  கவனித்தான்.

முதலில், ஓரிரு  முதுமக்கள் தாழி இருந்த இடத்தில் தற்போது மூன்று நான்கு என தாழிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது . 
மருதத்தின் நெரிசலான சமவெளிகளில், கொள்ளை நோய்கள் ஈரமான தானியத்தில் பூஞ்சை படர்வது போல் படர்ந்தது.

 அதிகரிக்கும் மரணங்களின் பாரத்தால்  இந்த இடுகாடு நெருக்கடி மிகுந்ததாக மாறியது .

பல முதுமக்கள் தாழிகள் இந்த மண்ணில் வரிசையாக நின்றன, 

 முன்பு அவற்றிற்குள் அடக்கமாகி இருந்தவர்களுக்கு, விரிவான விடை கூறல் பாடல்கள் பாடப்பட்டன.

 ஆனால் இந்த முறை, விடைகள் விரைவாக இருந்தன. சடங்குகள், கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டன . பல தாழிகள் அவசர கதியில்  மூடப்படாமல் இருந்தன.

சில தாழிகள் இன்னும் மூச்சு விடுவது போலிருந்தன. அவை மிகவும் மென்மையான மூச்சுகள். இறப்பின் வாசலில் இருந்தவர்களது மூச்சுகள் அவை.

 மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தாழிகள் புதைப்பதற்குக் கூட முயற்சிக்கப்படவில்லை.

 அப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த சமயத்தில், அந்த இடுகாட்டில் நோய் முற்றி இறந்த ஒருவனது சடலம் தாழியில் எடுத்துச் செல்லப்பட்டது.

 அந்தத் தாழியின் பாரம் மிகவும் கனமாக இருந்தது. அதை எடுத்துச் சென்றவர்களது  கைகள் நடுங்கின. அதை தூக்கிச் சென்ற ஒருவன் பாரம் தாங்காமல்  தடுமாறினான். தாழி  மூங்கில் கம்புகளிலிருந்து வழுக்கியது. ஒரு சரிவில் உருண்டோடி பாறையில் மோதி  உடைந்து சிதறியது.

வெளியே வந்த உடல் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் இருந்தது. அந்த உடலின் துளைகளிலிருந்து சீழ் வழிந்தது, மூச்சை அடைக்கும் துர்நாற்றம் அந்த இடத்தை சூழ்ந்தது. யாரும் அந்த சடலத்தின் அருகில் செல்லத் துணியவில்லை.அந்தத் தாழியை சுமந்து வந்தவர்கள்  அருவருப்பு மேலிட  அந்த உடலை கைவிட்டுவிட்டு ஓடினர். 

 இறந்துபட்ட அந்த மனிதனின் கால்கள் வீங்கி இருந்தன , சீழ் மற்றும்  கோழையுடன் தோலானது பளபளத்தது. மூக்கில் இருந்து கோழை திரவமாக வடிந்தது.

 சிறிது நேரத்தில் அங்கு மனித நடமாட்டம் அற்றுப்போனது. அந்த இடுகாட்டை இருள் சூழத் துவங்கியது. மெல்ல மெல்ல நிலவின் குளிர் அங்கே பரவத் தொடங்கியது.

 இத்தனை நாட்களாக அங்கு நடந்து கொண்டிருந்ததை கவனித்து வந்த சிவன், நிலமை மோசமாவதை உணர்ந்தான்.

 அதுவும் சிதறிக் கிடந்த அந்த உடலை காணும் பொழுது சிவனுக்கு கலவையான எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. இறுதியாக சிவன் ஒரு முடிவோடு அந்த இடுகாட்டிற்குள் நுழைந்தான். கைவிடப்பட்ட அந்த உடலை நோக்கி முன்னேறினான்.

உடலைச் சுற்றி காற்று அடர்த்தியாக இருந்தது, கிட்டத்தட்ட கண்களுக்கு புலப்படுவது போன்று  அது தோன்றியது, 

சதுப்பு நிலம் ஈரத்தை வெளியேற்றுவது போல அவ்வுடலில் இருந்து திரவங்கள் வெளியேறியது . 

 திரவங்கள் வழியும் அந்த உடல் வெள்ளம் நிறைந்த நிலத்தைப் போல சிவனுக்கு தோன்றியது .

" அதிகப்படியான நிலத்தின் ஈரத்தை சூரியனின் வெப்பமே நீக்க வல்லது." 

 "அதிகப்படியான கபம் உடலை அழுகச் செய்கிறது. இதை அழலை கொண்டு தான் தணிக்க வேண்டும்,"  சிவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

உலர்ந்த சாணம், காய்ந்த சருகுகள் , 
 மரக்கட்டைகள் போன்றவற்றை அவன் சேகரித்தான். அந்த உடலை சுற்றி, அவன் ஒரு சிதையைக் கட்டினான். அதில் நெருப்பை பற்றவைத்தான். தீப்பிழம்புகள் உயிர்த்து  எழுந்தன. உடலின் தோல் பிளந்து வெடித்தது. சீழ் சீறி ஆவியாக மறைந்தது. அந்தக் காட்சி அருவருக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் சிவன்  அசையவில்லை.

 ஜ்வாலை  கொழுந்து விட்டு எறிந்தது. அது அந்த உடலை கபளீகரம் செய்தது 

எஞ்சியது சாம்பல் மட்டுமே.

 இந்த சாம்பல் ஒரு காலத்தில் உயிர் கொண்ட உடலின் ஒரு பாகமாக  இருந்தது. 

இப்பொழுது அது உயிரற்று  இருந்தாலும் மீண்டும் ஒரு உடலாக  உருக்கொள்ள வல்லது.

  சிவன் அந்த சாம்பலைத் தொட்டான். அதைத் தீண்டிய பொழுது  அவனது மூன்றாம் கண்ணில் ஒரு சிலிர்ப்பை சிவன்  உணர்ந்தான். 

"இது மரணமல்ல... இது மாற்றம்.

 இது வெறும் சாம்பல் அல்ல...  உயிருக்கு உடல் கொடுத்த துகள்கள் இவை.  உணவுச் சங்கிலிக்குள்  மீண்டும் நுழையத் தயாராக காத்திருக்கும் விதைகள் இவை ."

“இது தீண்டத் தண்டாதது அல்ல,” 

“இது புனிதம்.”

அவன் சாம்பலை தன் நெற்றியில், கழுத்தில், கைகளில்  பூசிக்கொண்டான். அதை பூசியபொழுது அவனது உடலின் அழல் தணியத் தொடங்கியதை உணர்ந்தான். 

இனி சேற்று மண்  அவனது நெற்றியை அலங்கரிக்கப் போவதில்லை. வழக்கமான செந்நிற மண்ணை இனி அவன் பூசிக்கொள்ளப் போவதில்லை , அதற்கு பதிலாக  சுடலையில் வெந்து தணிந்த இந்த சாம்பலையே அவன் பூசிக்கொள்ளப் போகிறான்.

 ஒவ்வொரு நாளும் கைவிடப்பட்ட உடல்களை அவன் சேகரித்து எரிக்க ஆரம்பித்தான்.

 இதுவரை தமிழர்களால் புதைக்கப்பட்டு இயற்கையை எய்த காத்திருந்த உடல்கள் அவனால் எரிக்கப்பட்டு விடுதலை அளிக்கப்பட்டன.

 உடல் மட்டும்தான் விடுதலை அடைந்தது...   

ஆனால் உயிரை அவன் தளைகளில் இருந்து விடுவிக்க வில்லை. அதற்கான காலம் இன்னும் அவனுக்கு வரவில்லை. அந்தக் காலம் வரும் பொழுது இந்த உலகம் அவனை கடவுளாகத் தொழும்.

 உயிர்களை முக்தி அடையச் செய்யும் கடவுளாக அவன் இன்னும் மாறவில்லை. ஆனால் அந்த மாற்றத்திற்கான முதல் காட்சி இந்த தகன மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

 அவன் மூட்டிய சிதைகளில் இருந்து நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது.

 எரியும் உடலை ஒரு மௌன நிலையில் இருந்து அவன் அவதானித்துக்   கொண்டிருந்தான். நாகம் போல படம் எடுத்து ஆடும் தழல் அவனது கண்ணில் பிரதிபலித்தது. அவனது புருவ மத்தியிலும் ஒரு தழல் எறியத் துவங்கியது.

 உடல் என்பது ஒரு மாயை என்னும் இரகசியம் அவனுக்கு இந்த தகன மேடைக்கு அருகில் அறிவிக்கப்பட்டது .

 கீழே கிடந்த கபாலம் ஒன்றை அவன் கையில் ஏந்தினான்.

 அவனுக்குள் எல்லையற்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது.

 அவனது கைகளில் இருந்த உடுக்கை உயிர் பெறத் தொடங்கியது.

ஆனந்தத்தில், அவன் நட்சத்திரங்களின் கீழ்  தனித்து  ஆடினான்.  காற்று அவனைச் சுற்றி வந்தது. சிதையிலிருந்து எழுந்த நெருப்புப் பொறிகள் வானத்திற்கு தூதுவர்களாக எழுந்தன. அவனது தாளங்கள் எட்டுத்திக்கும் எதிரொலித்தன.
ஒரு விசித்திரமான துடிப்பறை  தாளம் இரவு முழுவதும் அந்த மயானத்தில் எதிரொலித்தது. 

 அடர்ந்த மரங்களுக்கு பின்னால் இருந்து இதை கிராமத்து மக்கள் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். 

 காலையில் கதிரவன் உதித்த பிறகு அந்த இடுகாட்டிற்கு அவர்கள் வந்தனர்.  இடுகாடு முற்றிலும் மாறியிருப்பதைக் கண்டனர்.

ஒரு காலத்தில் துர்நாற்றமடித்த தாழிகள் நிரம்பி இருந்த  இடத்தில், இப்போது சாம்பல் மட்டுமே நேர்த்தியாக குவிக்கப்பட்டு இருந்தது. 

என்ன நடக்கிறது?  

அவன் யார்?  

அவர்களுக்குத் தெரியவில்லை!

ஆனால் அவர்களின் இறந்தவர்கள் இனி நோயைப் பரப்பவில்லை. அவர்களின் துயர் இனி சிதைவுடன் வரவில்லை.

ஆனால் அவர்கள் காண வேண்டிய அதிசயம் இன்னும் இருந்தது.

 அந்த நிலத்தில் முன்னை விட  நோயின் வேகம் அதிகமாக இருந்தது. அதனால் மக்கள் இறந்தவர்களோடு இறக்கப் போகிறவர்களையும் கைவிட ஆரம்பித்தனர். நோய் முற்றியவர்களையும் இறப்பதற்கு முன்னமே  இடுகாட்டில் தூக்கி வந்து போட ஆரம்பித்தனர். 

 அந்த இடுகாட்டின் நிழல்களுக்கு அருகில், பிணங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட இறந்துவிட்ட ஒரு மனிதன் கைவிடப்பட்டு கிடந்தான். அவனது மூச்சு மிகவும் மெலிதாக  இருந்தது, அவனுள் கபம் ஆவேசமாக இருந்தது. அவன் நோயை பரப்பி விடுவான் என்று அவன் இறக்கும் முன்னரே இங்கே கைவிடப்பட்ட கிடந்தான். மரண தேவன் மெல்ல மெல்ல அவன் அருகில் வந்தான். 

 ஆனால் காலனுக்கு முன்னர் காவலன் ஒருவன் அவனை நெருங்கி விட்டிருந்தான்.

 நீறு பூசிய நெற்றியுடன்   அங்கே உலாவிக் கொண்டிருந்த சிவனின் கண்களுக்கு இந்த மனிதன் தட்டுப்பட்டான் 
 
 சிவன் அவனுக்கு அருகில் வந்தான்.

சிவன் அந்த மனிதனின் நாடியை பரிசோதித்தான். அது கோடைகால ஓடையைப் போல மெலிதாக ஊர்ந்து கொண்டிருந்தது . சற்று நேரத்தில் அது நிற்கப் போகிறது.

ஒரு பையிலிருந்து, அவன்  மூலிகைகளை, கனிம உப்புகளுடன் அரைத்து, புனித சாம்பலுடன் கலந்து அந்த மனிதனின் நாக்கில் வைத்தான்.

 அவனது காதுக்கு அருகில் சென்று“சுவாசி,” என்று அவன் கருணை மிகுந்த  குரலில் மெல்லிதாகக் கூறினான்.

 மெல்ல அவன் சுவாசிக்க ஆரம்பித்தான். 

காலை வந்தது.

கிராமவாசிகள் நடுக்கமான  முகங்களுடனும் பயத்துடனும் இடுகாட்டை நோக்கி வந்தனர். ஆனால் அவர்கள் கண்டது பயத்தை ஆச்சரியமாக மாற்றியது.

மரணத்தின் வாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மனிதன்...
 இன்று இறந்திருப்பான் என கருதப்பட்டு புதைக்கப்படவிருந்த ஒரு மனிதன்... அவர்களுக்கு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான்.

 அவன் மட்டுமல்ல... நாட்கள் செல்ல செல்ல இடுகாட்டில் கைவிடப்பட்ட பலர் மெல்ல மெல்ல உயிர் பெறத் தொடங்கினர்.

 வதந்திகள் பறவைகளை விட வேகமாக பறந்தன:  
“நீலக் கழுத்து கொண்ட ஒரு மனிதன்…”  
“…கண்களுக்கு இடையில் மூன்றாம் கண்ணுடன் இருக்கும் ஒரு மனிதன்…”  
“…காளை மீது பயணிக்கிறான்…”  
“…இறந்தவர்களை எழுப்புகிறான்…”
" நெருப்பில் நடனமாடுகிறான்... "

யாருக்கும் அவனது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அவனை பற்பல பெயர்களால் அழைக்கத் தொடங்கினர்.

 சிவந்தவன்!
  பூடபாலன்!
 நீலகண்டன்!
சடையன்!
அனலாடி!
எரியாடி!
அரவஞ்சூடி!
காவாலி!
நீற்றன்!
கண்ணுதல்!
சுடலையாடி!

 அவனைப் பற்றிய கதைகள்  ஆச்சரியத்தாலும் பயத்தாலும் எடுத்துச் செல்லப்பட்டு தூரம் பயணித்தன. அவை அந்த நிலத்தை ஆளும்  மனிதனான வேந்தனை அடைந்தன.

 இச்செய்திகளைப் பற்றியும் கொள்ளை நோயைப் பற்றியும் கலந்துரையாடுவதற்காக அவன் தனது நம்பிக்கையானவர்களை அழைத்து ஒரு கூட்டத்தை கூட்டினான். 

ஒவ்வொருவரும் அவனுக்கு ஒவ்வொரு விதமான தகவல்களை அளித்தனர்.

 அவர்களின் பதில் எதுவும் அவனுக்கு திருப்தியை அளிக்கவில்லை. அவன் மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி இருந்தது.  

“ நம் மக்களை ஏன் மரணம் சூழ்ந்தது?

 காட்டிலிருந்து வந்த இந்த மனிதன் யார்? 

 மரணம் ஏன் அவனுக்குக் கீழ்ப்படிகிறது?”

-----------

உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே

Monday, September 15, 2025

அயிற்சூலன்(ஆதியோகி: அத்தியாயம் 11)



சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன், நமது முன்னோர்களான ஹோமோ சேபியன்ஸ் முதன்முதலில் பூமியில் நடந்தனர். அவர்களது வாழ்வியல்   மற்றும் பண்பாடு முதலியவை வரலாற்றில்  எங்கும் பெரிதாக பதிவு செய்யப்படவில்லை. 

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் நமது முன்னோர்கள் தங்களின் வாழ்வியலை கற்களில் செதுக்க ஆரம்பித்தனர், பானையில் கீற, ஆரம்பித்தனர், குகைகளில் வரைய ஆரம்பித்தனர். அதற்கு முந்தைய காலத்தில் இருந்த நமது  முன்னோர்களின் காதல், வீரம், பாசம் போன்றவை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட நமது முன்னோர்களின் 97 சதவீத வாழ்வியல் வரலாறானது  காலத்தின் மணலில் புதைந்து கிடக்கின்றது . அவர்களின் கதைகள், பாடல்கள், துயரங்கள், ரகசியங்கள் அனைத்தும் காலத்தால் மறைந்து, மறந்துபோயின.அந்தக் கதைகள் இப்பொழுது எந்த ஒரு மனிதனாலும் நினைவு கூறப்படவில்லை.

ஆனால், எல்லா கதைகளும் மறக்கப்படவில்லை...

வங்காள விரிகுடாவின் பண்டைய கரையோரத்தில், இன்றைய தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில்,  இந்தக் கதையின் ஆரம்பகட்ட அத்தியாயத்தினை உயிர்பிக்க ஹோலோசீன் காலத்து சூரியன், வெளிச்சத்தை பரப்பியபடி  உதயமானது. இதே காலகட்டத்தில் பூமியின் வடக்குப் பகுதி பெரு வெள்ளத்தால் சூழப்பட்டது . அந்த நிகழ்வினை பற்றி; வடக்கே இருந்த மேற்கத்திய மக்கள்,  மனு என்பவர் தங்கள் வாழ்வினை எப்படி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார் என்பதைப் பற்றியும், அழியவிருந்த உயிர்களைக் காக்க நோவா எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும்  கதைகளாகவும் புராணங்களாகவும் பேசி வந்தனர். ஆனால் இந்தியாவின் தெற்கே கதை வேறுவிதமாக இருந்தது.

அது பெரிதாக பேசப்படாத கதை... காலத்தால் மறக்கப்பட்ட கதை...

சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன், பிளைஸ்டோசீன் காலத்தின் கடைசி பனியுகம் ஹோலோசீன் காலத்திற்கு மாறியபோது, உலகைப் போர்த்தி இருந்த பனி உருகி, வெள்ளம் பெருக்கெடுத்தது. பல மக்களும் உயிரினங்களும் வெள்ளத்தால் அழிந்து போயின. இந்த உலகளாவிய நிகழ்வு ஆரம்பகால மனிதர்களை இடம்பெயரச் செய்தது. உலகெங்கிலும் வெள்ளத்திற்கு தப்பிய மக்களால் இந்த நிகழ்வு செவி வழிக் கதைகளாக சொல்லப்பட்டுள்ளது . பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் பேழை மற்றும் இந்துக்களுடைய மத்ஸ்ய புராணத்தின் மனுவின் படகு ஆகியவை இந்த பேரழிவு நிகழ்வுகளின் பொதுவான நினைவுகளைப் பிரதிபலிக்கும் கதைகளே ஆகும்.

தமிழ்நாட்டில், இதே காலகட்டத்தில் இந்த மண்ணில் வெள்ளம் ஏதும் நிகழவில்லை. மாறாக கடல் உள்வாங்கியது. நீருக்குள்ளே புதைந்து கிடந்த வளம் மிக்க நிலமானது வெளிப்பட்டது.  

கொற்கை மற்றும் தேரிக்காடு போன்ற இடங்கள், ஒரு காலத்தில் நீரில் மூழ்கியிருந்தவை, அவை தற்போது வளமான சமவெளிகளாக உருவாகின, அவற்றின் மண் இரும்பு ஆக்சைடுகளால் செந்நிறமாக காணப்பட்டது.

தேரிக்காட்டின் நிலப்பரப்பு ஒரு புவியியல் அதிசயமாக இருந்தது. ஆரம்ப ஹோலோசீன் காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து ஆரல்வாய்மொழி மற்றும் மகேந்திரகிரி பள்ளத்தாக்குகள் வழியாக, தென்மேற்கு பருவமழையால் பெருக்கெடுத்த ஆற்று வெள்ளமும் சுழன்றடிக்கும் காற்றும், மலைகளின் கனிமங்களை கரைத்துக் கொண்டு வந்து இந்த நிலப்பரப்பில் சேர்த்தன.  இவை ப்ரீகேம்ப்ரியன் உருமாற்ற பாறைகளிலிருந்து பெறப்பட்டவை. இல்மனைட், ரூட்டைல், கார்னெட் ஜிர்கான், சிலிமனைட், மோனசைட் மற்றும் மாக்னடைட் போன்ற கனமான கனிமங்களால் நிறைந்திருந்தன அந்த மணல் துகள்கள். கரையோர நீரோட்டங்கள் இந்த கனமான துகள்களை வரிசைப்படுத்தி, கடற்கரை நிலங்களையும் தேரிக்காடு மணல் மேடுகளையும் செறிவாக்கின. தேரிக்காட்டின் செந்நிறம் ஹெமாடைட் துகள்களால் உருவானது. இப்போது பாலை நிலத்தை போல வறண்ட மணல்களால் காட்சியளிக்கும் தேரிக்காடானது முன்பு அப்படி இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 
பண்டைய தேரிக்காடு செந்நிற மலைகள், முள் காடுகள் மற்றும் வளமான மண் மேடுகளாக காட்சியளித்தது. மேலும் அது  பல்லுயிர்ப் பெருக்கத்துடன் கூடிய ஒரு பசுமையான இடமாக இருந்தது.

செவ்வாய் கிரகத்தின் செந்நிறத்திற்கான காரணம் அங்கே இருக்கும் ,இரும்பு ஆக்சைடு. இந்த சிவப்பு வண்ணத்தின் காரணமாக இரவு வானில் அது சிவப்பாக காட்சியளித்தது. சிகப்பு  நிறமானது ;  நெருப்பு, இரத்தம் போன்றவற்றை குறிப்பதாக அக்காலத்தைய மக்கள் கருதினர். இதனால் செவ்வாய் கிரகமானது;  உலகெங்கிலும் உள்ள நாகரிகங்களில் போர், நெருப்பு மற்றும் அழிவு தொடர்புடைய கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது. இதே போல சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தேரிக்காடும், நெருப்பு மற்றும் ஆயுதம் தொடர்புடைய ஒரு கடவுளை வளர்த்தெடுத்தது. ஆயினும், அந்தக் கடவுள் வெறும் நெருப்பு மற்றும் ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவன் உலகம் அனைத்திற்கும் தேவையான ஒன்றை போதித்தான். 
 அந்த நிகழ்விற்கான அச்சாரம் இந்த நிலப்பரப்பில் தான் இடப்பட்டது .
இந்த மாறிவரும் தேரிக்காட்டின் நிலப்பரப்பிற்கு மத்தியில், நிலவின் மங்கிய ஒளியில், அந்த மனிதன் தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் அலைந்து திரிந்தான்.

 அவன் இன்னும் கோயில்களில் தெய்வமாக வழிபடத் தொடங்கப்படவில்லை. அதற்கு முன் அவனுக்கு முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி இருந்தது.

அவன் தேரிக்காட்டின் செந்நிற மண்ணில் மறைந்திருந்த இரும்பை நோக்கி ஈர்க்கப்பட்டான். ஆனால், ஆக்சைடுகளில் பிணைக்கப்பட்ட இரும்பு, வெப்பத்தாலும் புத்திக் கூர்மையாலும் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது.

அவனும் அவனது பிரியமான தோழனுமான ஆற்றல் பொருந்திய காளையும் ஒவ்வொரு இரவும் இந்த மணற்பரப்பில் சுற்றி வந்தனர். ஒவ்வொரு இரவும், மக்கள் உறங்கிய பிறகு, காளையின் குளம்போசை அந்த நிலத்தில் இடியென இருளைத்  துளைத்தது.  

 அங்கே சுற்றிக் கொண்டிருந்த  சிவனின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அந்த மணலுக்குள் கட்டுண்டு கிடக்கும் இரும்பினை எப்படியேனும் வெளிக்கொணர்ந்து ஒரு ஆற்றல்மிக்க ஆயுதமாக செய்வது மட்டுமே அவனது நோக்கம்.

 ஹெமாடைட் (Fe₂O₃) மற்றும் மாக்னடைட் (Fe₃O₄) போன்றவை , இயற்கையாகக் கிடைக்கும் தாதுக்கள், இந்த தாதுக்களில் இரும்பானது ஆக்சிஜனுடன் இணைந்து, சிவப்பு வண்ண மணற்சிறையில் அடைக்கப்பட்டிருந்தது . அதை விடுவிப்பதற்கான முதல் முயற்சியை சிவன் எளிதாகத் தொடங்கினான். மரத்தை அடுக்கி, செந்நிற மணலை குழியில் குவித்து, அதைப் பற்றவைத்தான். ஆனால் இந்த முயற்சியில் பெறப்பட்ட வெப்பம் இரும்பை வெளிக்கொணர போதப்படவில்லை. 

 சிவனது ஆரம்பகட்ட  முயற்சிகள் தோல்வியடைந்தன. தீப்பிழம்புகள் பலவீனமாக இருந்தன, தாது செயலற்று இருந்தது.  காற்று வெப்பத்தை சிதறடித்தது, திறந்த வெளியில் அலையாடிய நெருப்பானது ஆக்சிஜனை மீண்டும் ஆக்சிஜனேற்றம் செய்ய அனுமதித்தது. 

 அதனால் மணலுடன் கிடந்த இரும்பு வெளிப்பட மறுத்தது. அதை வெளிக்கொணர அவனுக்கு  கட்டுப்பாடுடன் கூடிய  காற்றோட்டம் தேவைப்பட்டது. 

நெருப்புக்கு மூன்று கூறுகள் தேவை: எரிபொருள், ஆக்சிஜனேற்றி (காற்று), மற்றும் வெப்பம். இந்த அடிப்படை அறிவியலை   அவன் கொஞ்சம் கொஞ்சமாக  புரிந்து கொள்ளத் தொடங்கினான்.

ஒரு நாள் இரவு, காட்டில் கடுமையான ஓட்டத்திற்கு பிறகு, நந்தன் மூச்சு வாங்கிய படி நின்று கொண்டிருந்தான் . அவனது மார்பு  உயர்ந்து தாழ்ந்தது. நுரையீரல்கள் காற்றை இழுத்து உடலுக்குள் அனுப்பியபடி இருந்தன. அவனது உடல் வெப்பமாக காணப்பட்டது.

 உடலின் வெப்பத்தை சுவாசம்  தூண்டுகிறது!

கட்டுப்பாடான வகையில் செயல்படும் இந்த மூச்சின் தாளத்தை பின்பற்றினால் அதிக வெப்பத்தை பெறலாம் என்று சிவனுக்கு தோன்றியது. 

 இந்த இயற்கையின் வடிவமைப்பைப் பின்பற்றி, சிவன் ஒரு நெருப்புத் துருத்தியை உருவாக்கினான். அவன் இறந்த ஒரு விலங்குத் தோலை மரச் சட்டத்தில் பொருத்தி, நுரையீரல் போன்ற ஒரு நெகிழ்வான துருத்தியை உருவாக்கினான். துருக்கியை இயக்கும் பொழுது நந்தனின் ஆவேசம் மிகுந்த மூச்சு வெளியேறுவதைப் போல துருத்தியானது  ஆக்ஸிஜனை வெளியேற்றி அனலைக்
கூட்டியது.

ஒவ்வொரு முறை சிவன் துருத்தியை அழுத்தி விடுவிக்கும் பொழுதும் ஆக்சிஜன் நிறைந்த காற்றை அந்த துருத்தி  உலையில் செலுத்தியது. இந்த அடிப்படை துருத்தி வெப்பத்தை பெருக்கி, ஆக்சிஜன் வழங்கலை அதிகரித்து, வெப்பநிலையை பெருமளவு உயர்த்தியது. 

 நந்தனின் உயிரியல் அமைப்பு இங்கு ஒரு துருத்தியை  உருவாக்குவதற்கு சிவனுக்கு உறுதுணையாக இருந்தது. இது இயற்கையை பாவித்து சிவன் உருவாக்கிய ஒரு அமைப்பு. இயற்கையின் புதிர்களுக்கு இயற்கையிலேயே விடைகள் கிடைக்கும் என்பதை சிவன் இதன் மூலம்  அறிந்து கொண்டான்.

இந்தக் கருவியுடன், சிவன் தனது அமைப்பைச் செம்மைப்படுத்தினான். களிமண்ணால் உலையைக் கட்டி, வெப்ப இழப்பை குறைத்தான். காட்டுத்தீயில் எரிந்து கிடந்த  மரங்களின்  கரித்துண்டுகளை சிவன் கவனமாக சேகரித்தான். அவற்றில் சாம்பல் குறைந்தும் கார்பன் அதிகமாகவும் காணப்பட்டது. கரி மற்றும் தாதுவை அடுக்கி, பற்றவைத்து, துருத்தியை இயக்கினான். காற்று நந்தனின் மூச்சு போல உள்ளே பாய்ந்து, நெருப்பு உறுமியது. வெப்பநிலை உயர்ந்த பொழுது அதிலிருந்து கசடு  உருகி பிரிந்தது. கசடிலிருந்து நுண்ணிய உலோக இரும்பு தோன்றியது.

சிவன் சூடான உலோகத்தை கல் அடுப்பில் தட்டி, கசடை அகற்றி, உலோகத்தை ஒருங்கிணைத்தான். அதை ஒரு திரிசூலமாக அவன் உருவாக்கினான்.   அந்த ஆயுதம் நிலவின் ஒளியில் சிவனது தாமிரக் கண்களைப் போலவே மின்னியது. ஆனால், அவன் செய்த இரும்பில் குறைபாடுகள் தெளிவாக இருந்தன: அது எளிதில் வளைந்தது, விரைவில் மழுங்கியது, மேலும் அது  துருபிடித்தது.

"இது போதாது," என்று சிவன் முணுமுணுத்தான். 

தேரிக்காட்டின் செங்கதிர் மணலில், பூமியின் இரும்பின் இரகசியங்களை அடைய தன் தீவிர முயற்சியில் சிவன் அயராது உழைத்தான். மண்ணால் மூடப்பட்ட அடுப்புகளில், ஹீமடைட் நிறைந்த மணலையும் கரியையும் அடுக்கி எரித்தான். தன் புதுமையான காற்றாடிகளால் காற்றை கட்டுப்படுத்தி, அக்கினியின் மூச்சை தன் விருப்பப்படி வழிநடத்தினான். பலமுறை தோல்வி அடைந்தாலும் அவன் தனது முயற்சியை கைவிடவில்லை. வெப்பம், தாது, எரிபொருள் ஆகியவற்றின் வித்தியாசமான கலவைகள் உலோகத்தின் தன்மைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை அவன் கூர்ந்து கவனித்தான்.

ஒரு  இரவில், நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் உருக்கப்பட்ட இரும்பில், கரியிலிருந்து வரும் கார்பன் கரைந்து கலந்து விட்டது. இதனால், மென்மையான, எளிதில் வளைந்துவிடும் இரும்பு, அதிக வலிமையுடைய, உறுதியான பொருளாக—எஃகாக மாறியது. 

 சிவன் அதைக் கடுமையாக சோதித்தான். தூய இரும்பு சூடாகி, விரைவாக குளிர்ந்தது. வார்ப்பு இரும்பு உடையக்கூடியது. ஆனால், எஃகு நெகிழ்ச்சி மற்றும் கடினத்தன்மையை சமநிலைப்படுத்தியது. அந்த இரும்பை நெருப்பில் தணித்து, ஆற்று நீரில் குளிர வைத்த போது , மார்ட்டென்சைட் படிகங்கள் உருவாகி, சூலத்தின் விளிம்புகள் மிளிர்ந்தன . 

சிவன் தான் உருவாக்கிய அந்த மின்னும் ஆயுதத்தை ஆற்று நீரில் தணித்தான். அதை நீரில் தணிக்கும் போது ஆவேசம் கொண்ட விரியன் பாம்பு சீறுவது போல ஸ்ஸென்ற ஒலி எதிரொலித்தது.

துருவை எதிர்க்க, அவன் அதை நெய்யால் பூசினான். பின்னர், அதை உயர்த்தி, அதன் கழுத்தில் தனது பறையை கட்டி தொங்க விட்டான்.

 இப்போது அவனது ஆயுதம் முழுமை பெற்றது!

 அவனது மனம் முழுவதும்  எதையோ சாதித்த திருப்தி பரவியது. சிவன் ஆனந்தத்தில் ஆடினான், அவனது மகிழ்ச்சி இரவு வானத்தை நிரப்பியது. 

இவ்வாறு, திரிசூலம் உருவாக்கப்பட்டது. படைப்பு, பாதுகாப்பு, அழிவு ஆகியவற்றைக் குறிக்கும் மூன்று முனைகள் கொண்ட  ஆயுதம் அது. 

அது ஒரு அழிக்கும் போர்க்கருவியல்ல, அபயம் அளிக்கும்  பாதுகாவலரின் கருவி, 

 இது பூமி, நெருப்பு, காற்று, மற்றும் நீர் ஆகியவற்றின் ஒத்திசைவால் பிறந்த ஒரு ஆயுதம். 

அதை உருவாக்கிய ஆனந்தத்தில், பறை இசையை இசைக்கத் தொடங்கினான் சிவன். அந்தப் பறையின் அதிர்வினால்  மணல்கள் அதிர்ந்தன,  சிவன் ஆனந்தத்தில் ஆடினான்.

ஆனால் சிவனின் ஆனந்தத்தை அந்த மருத நிலம் பிரதிபலித்தது போல் தெரியவில்லை.

 அந்த நிலத்தில் இருந்த மக்கள் தங்களது ஆனந்தத்தை இழந்து கொண்டிருந்தனர். அந்த நிலத்தை துன்பத்தின் நிழல்கள் பீடிக்கத் தொடங்கியிருந்தது. 

அந்த மருத நிலம் மரணம் என்னும் இருளால் சூழப்பட்டுக் கொண்டிருந்தது . 

 சிவன் அதை கவனிக்கத் தவறவில்லை 

 ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் , பிணங்கள் பெருகின. வயதானவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் குழந்தைகளும், ஒரு கொடிய நோயால் வீழ்ந்தனர்.

 மருத நில சமவெளிகளில் மக்களின் அடர்த்தி அதிகமாக இருந்தது.இது நாகரிகத்தின் ஆதிக் குறை. 

 அடர்த்தியும் மக்கள் பெருக்கமும் நோய் பரவலை  அனுமதித்தன.

 மருத நிலம் என்பது தானியங்களின் களஞ்சியம். மக்கள் சேமித்த அந்த தானியங்களை நோக்கி எலிகள் ஈர்க்கப்பட்டன. மக்கள் வெளியேற்றிய கழிவு நீரில் ஈக்கள் செழிக்கத் தொடங்கின.  நீர் தேங்கிய இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தன.

 குறிஞ்சி நிலத்தில் இறப்பானது  சண்டையினாலும் வேட்டையினாலும் பாம்பின் நஞ்சினாலும்  மட்டுமே நிகழ்ந்து வந்தது. ஆனால் மருத நிலத்தில் இறப்பானது தொற்று நோய்களால் நிகழ ஆரம்பித்தது. இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, எதன் மூலம் வருகிறது, ஏன் வருகிறது, என்பதற்கான விடை அவர்களுக்கு கிடைக்கவில்லை.

 விடை கிடைப்பதற்கு முன்னர் மக்களில் பலர் இந்த உலகத்தை விட்டே விடைபெறத் தொடங்கினர்.  

 அந்த மருத நிலத்தில் இருந்த வீடுகளின் உறுதி மிக்க கதவுகளால் காலனின் வருகையை தடுக்க முடியவில்லை.

 அவர்களைக் காக்க அங்கு யாருமே இல்லை.

 தங்களைக் காக்க வேண்டி மக்கள் பல தெய்வங்களை தொழுதனர். ஆனால் அவர்களுக்கு எந்த தெய்வமும்  பதிலளிக்கவில்லை. 

 எந்த ஒரு கடவுளும் தங்களை கண்கொண்டு பார்க்கவில்லை என்பதை அந்த மக்கள் உணரத் தொடங்கினர்.

 ஆனால் நடப்பவற்றை எல்லாம்  மூன்றாம் கண் ஒன்று பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் அறிய மாட்டார்கள்.
--------

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் 
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே 
காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே 
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.


'திணையியம். தமிழின் ஆதி மெய்யியல்' புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்.

 திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில்...