Showing posts with label ஏர் முன்னது எருது. Show all posts
Showing posts with label ஏர் முன்னது எருது. Show all posts

Monday, July 6, 2026

ஏர் முன்னது எருது 12 - பித்தம்


இந்தப்படத்தை பாருங்களேன்!

இந்தப் பட்டாம்பூச்சி ஏன் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது?


இந்த மீனும் பல்லியும் ஏன் நிழலை நாடுகின்றன?

இந்த உயிரினங்களுக்கு வெயில் சூட்டுக்கு ஏற்ப உடல் வியர்க்குமா?

உங்களுக்கு குளிரில் உடல் நடுங்குகிறதே, அதே போல் இவற்றிற்கும் உடல் நடுங்குமா?

மழைக்கு ஒதுங்கிய இந்த  அந்துப்பூச்சிக்கு உடல் நடுக்கம் ஏதுமில்லையே?

மழைக்கு உடல் ஜில்லிட்டு, உடல் சூடு குறைந்து இது இறக்க நேரிடுமா?

உடல் சூடு என்பது என்ன?

உனக்கு சூடு சுரணை ஏதாவது உண்டா என கேட்கிறார்களே, சூட்டுக்கும் சுரணைக்கும் என்ன சம்பந்தம்?

சூடு கொண்ட உடலாக இருப்பதன் பயன் என்ன?

உடல் சூடு எங்கிருந்து பெறப்படுகிறது? 

அடுப்பு எரிப்பது போல் உடலுக்குள் ஏதேனும் தகனம் நடக்கிறதா?

--------

"உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீ சுடரிய ஊழியும்
பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்."

— பரிபாடல்

நமது முன்னோர்கள் இயற்கையை ஐம்பூதங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டனர். 

ஐம்பூதங்கள் :

விலகி அசைவது காற்று; கரைத்து எடுத்துச் செல்வது நீர் ; அனைவரையும் தாங்குவது நிலம்; பரந்து விரிந்தது ஆகாயம்; ஆற்றலை வெளிப்படுத்துவது நெருப்பு. 

இந்த மாற்றங்கள் அனைத்தின் மையத்தில் இருப்பது வெப்பமாகும். விதை முளைப்பதிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்வது வரை, செல்களில் உள்ளே நடக்கும் வேதிவினைகளிலிருந்து  புவியியல் நிகழ்வுகள் வரை வெப்பத்தின் பங்கு உள்ளது.

நெருப்பை கட்டுப்படுத்தி பயன்படுத்தக் கற்றது முதல்தான் மனித இனம் தனது முன்னேற்றத்தைத் தொடங்கியது. 

நெருப்பு உணவைச் சமைத்தது; நோய்க்கிருமிகளை அழித்தது; இருளை அகற்றியது; குளிரிலிருந்து பாதுகாத்தது; உலோகங்களை உருக்கியது. 

வெப்பம்:

இதே வெப்பம் தான் உயிரினங்களின் உடலிலும் இடைவிடாமல் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவானது உடலில் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இந்த வளர்சிதை மாற்றங்களின் போது உருவாகும் வெப்பம் தான் நமது உடலின் செயல்பாடுகளை நடத்துகிறது. இதயத்தின் துடிப்பு, தசைகளின் இயக்கம்,  செரிமானம், போன்ற அனைத்திற்கும் வெப்பம் மிகவும் அவசியம். எனவே நமது உடல் வெப்பத்தை தொடர்ந்து உருவாக்கி, பயன்படுத்தி, கட்டுப்படுத்தும் ஒரு இயக்கமிகு அமைப்பாகும்.

உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன; குருதியானது அந்த வெப்பத்தை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அதிகப்படியான வெப்பத்தை உடலானது மூச்சு, வியர்வை போன்றவற்றின் மூலம் வெளியேற்றுகிறது. இவ்வாறாக வெளிப்புற சூழலுக்கு ஏற்ப உடல் தனது வெப்பநிலையை தொடர்ந்து சரிசெய்துக்கொள்கிறது. இந்த  சமநிலையே உயிர் வாழ்வின் அடிப்படையாகும்.

உடலின் வெப்பத்தைத் தாமாகவே உருவாக்கும் திறன் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். தவளைகள் போன்ற இருவாழ்விகள், மீன்கள், பெரும்பாலான ஊர்வன மற்றும் பெரும்பாலான பூச்சிகள் சுற்றுப்புற வெப்பத்தையே சார்ந்து வாழ்கின்றன. இதனால் அவற்றிற்கு குறைந்த உணவே போதுமானதாக இருக்கிறது; எனவே அவற்றால் நீண்ட நாட்கள் உணவின்றி உயிர்வாழ முடியும். ஆனால் குளிரான சூழலில் அவற்றின் தசைகள் - நரம்புகள் போன்றவற்றின் செயல் வேகம், செரிமானம் மற்றும் உடலின் அனைத்து செயல்பாடுகளும் மந்தமடைகின்றன. அதனால் அவை குறைவாக நகரும், அவற்றின் வேட்டையாடும் திறனும் குறையும், இனப்பெருக்கமும் வளர்ச்சியும் மெதுவாகும். 

தவளைகள் குளிர்காலத்தில் சுறுசுறுப்பை இழக்கின்றன; பல்லிகள் வெயிலில் காய்ந்து உடல் வெப்பத்தை உயர்த்திக்கொள்கின்றன; பெரும்பாலான மீன்களின் நீந்தும் வேகமும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்தே அமைகிறது. பூச்சிகளும் குளிர் இரத்தப் பிராணிகளே; இருப்பினும் தேனீக்கள், வண்டுகள் போன்ற சில பூச்சிகள் பறப்பதற்கு முன் தங்களின் பறக்கும் தசைகளை அதிரவைத்து தற்காலிகமாக வெப்பத்தை உருவாக்குகின்றன. 

 வேகமாக நீந்தும் சில சுறாக்கள் உடலின் சில பகுதிகளை சுற்றுப்புற நீரை விட வெப்பமாக வைத்துக்கொள்ளும் திறனை பரிணாம வளர்ச்சியில் பெற்றன.இதன் காரணமாக அவற்றால் குளிர்சூழலில் அதிகம் நகராமலிருந்த மற்ற உயிரினங்களை எளிதாக வேட்டையாட முடிந்தது.

இதற்கு மாறாக, பறவைகளும் பாலூட்டிகளும் அதிக வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பத்தை எப்போதும் நிலையாக வைத்திருக்கின்றன. இதனால் அவற்றின் தசைகள் வேகமாகச் செயல்படுகின்றன; நரம்புத் தகவல்கள் விரைவாகக் கடத்தப்படுகின்றன; செரிமானமும் நோய் எதிர்ப்பும் திறம்பட நடைபெறுகின்றன. எனவே பகல், இரவு, கோடை, குளிர்காலம் என்ற வேறுபாடின்றி தொடர்ந்து இயங்கி, வேட்டையாடி, நீண்ட தூரம் இடம்பெயர்ந்து, குட்டிகளைப் பராமரித்து, துருவப் பகுதிகளிலிருந்து பாலைவனங்கள் வரை பல்வேறு வாழிடங்களில் இவற்றால் வெற்றிகரமாக வாழ முடிகிறது.  இதன் காரணமாகவே இவை வெப்ப இரத்தப்பிராணிகள் எனப்பட்டன. 

இவ்வாறாக பரிணாமத்தில் இரண்டு வெற்றிகரமான உத்திகள் உருவாகின: குறைந்த ஆற்றலைச் செலவழித்து சுற்றுப்புற வெப்பத்தைச் சார்ந்து வாழும் குளிர் இரத்த முறை, மற்றும் அதிக ஆற்றலைச் செலவழித்தாலும் தொடர்ந்து உயர் செயல்திறனுடன் வாழ வழிவகுக்கும் வெப்ப இரத்த முறை.

பித்தம்:

இப்பொழுது நாம் சித்த மருத்துவம் கூறும் பித்தம் எனும் கருதுகோளைப் பற்றி பார்ப்போம்.

பித்தம், தூய தமிழில் 'அழல்' என்று அழைக்கப்படுகிறது. அழல் என்றால் சூடு என்று நாம் அறிவோம்.

 உணவின் முதல் நோக்கம் எரிசக்தி. இதில் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டவை. புரதம் உடலின் கட்டுமானத்திற்கு உதவுகிறது, ஒரு நாளைக்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

புரதத்தின் முதன்மை பணி கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு. ஆனால் தேவைக்கு அதிகமான புரதத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதன் அமினோ அமிலங்கள் உடைக்கப்பட்டு, மீதமுள்ள கார்பன் அமைப்பு எரிக்கப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

 அமினோ அமிலங்களில் இருக்கும் நைட்ரஜன் யூரியாவாக சிறுநீர் வழி வெளியே தள்ளப்பட்டு விடுகிறது. மீதம் இருக்கும் மூலக்கூறுகள் உடலுக்கு எரிசக்தியாக பயன்படுகிறது. 

இந்த உடல் சூடு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை   கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேதிவினை செயல்பாடு விளக்குகிறது. சர்க்கரை ஆக்சிஜனோடு வினைபுரிந்து கார்பன்டையாக்சைடாக உடைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுவதை இந்த வேதிவினை விளக்குகிறது.

உணவை ஆற்றலாக எரிப்பதில் தகனமேடையாம் மைட்டோகாண்ட்ரியா தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பின்வரும் படத்தைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். 

நீங்கள் பட்டினியாய் இருக்கும் போது glycogen  அதன் பின்பு கொழுப்பு முதலியன தகனமேடையாம் மைட்டோ கான்ட்ரியாவில் எரிக்கப்பட்டு, ஆற்றலாம் அழலை உற்பத்தி செய்து, உடல் சூட்டைப்பேணுகின்றன. 

ஒரு கிராம் கார்ப், அல்லது ஒரு கிராம் புரதம் எரிக்கப்படும் போது 4 கிலோ கலோரி ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் ஒரு கிராம் கொழுப்பை எரித்தால் 9 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. சிறுகுடலில் கணைய மற்றும் பித்த நொதிகள் துணையுடன் தான் ஆற்றல் மூலக்கூறுகள் பிரித்து உறிஞ்சப்பட்டு பின் தகனம் நடக்கிறது. எனவே மேற்கூறிய நொதிகள்தான் தகனத்தின் அடிப்படை. ஆதலால் அழலில் குறியீடாக பித்தம் குறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

உணவானது உணவுப் பாதையில் பயணிக்கும் பொழுது சிறு குடலுக்கு அருகில் மஞ்சள் நிற திரவம் கலக்கிறது என்பதை பிணங்களை அறுத்து ஆய்வு செய்தால் யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம். வெள்ளை நிற பரோட்டா வாய் வழியாக சென்று பின்னர் மஞ்சள் நிற மலமாக வெளியேறுவதற்கு அந்த மஞ்சள் நிற திரவமே காரணம் என்பதை எளிதாக அறிந்து விடலாம். இதை அக்காலத்தில் தமிழர்கள் கண்டுபிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால் சித்தர்கள் எனப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகளை உண்டால் பித்தம் அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அந்த உணவுகளில் ஐந்து பூதங்களின் எவற்றின் சாராம்சம் மிகுந்து இருக்கிறது என்பதையும் பகுத்து இருக்கிறார்கள். எந்தெந்த சுவை பித்தத்தை தூண்டும் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இங்குதான் சித்த மருத்துவம் ஒரு மேம்பட்ட அணுகு முறையை கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.  

நவீன அறிவியல் 'குறைப்பியம்' என்னும் முறையை கையாள்கிறது. இது பகுப்பாய்வை ஊக்குவிக்கிறது. 'பகுப்பாய்வு அறிவியல்' அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாக பார்க்கச் சொல்கிறது. அது உடலையும் எந்திரமாகத் தான் பார்க்கிறது. 

அது உடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய்கிறது. ஆனால் சித்த மருத்துவம் உடலை முழுமையான ஒன்றாக அணுகுகிறது. எதையும் குறைக்காமல் விளக்காமல் முழுதாக அணுகும் முறைக்கு 'முழுமை' - wholeness என்று பெயர்.

சித்த மருத்துவம் உடலையும், உணவையும், உலகையும் ஐம்பூதங்களின் கலவையாகத்தான் பார்க்கிறது. அண்டத்தில் இருப்பதைக் கொண்டு வளர்ந்த உயிர் மற்றும் உணர்வினை கொண்ட பூதமாகத்தான் உடல் இருப்பதாக சித்த மருத்துவம் கருதுகிறது.

"உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 

அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்- மணிமேகலை"

அந்த உடலில் இருக்கும் மூன்று குற்றங்களில் ஒன்றான அழலைப் பற்றித்தான்  நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சூரியன் உற்பத்தி செய்த அதே வெப்பம் தான்; செடிகள் வழியாக உங்களை அடைந்து உங்கள் உடலில் அழலாக இருக்கிறது.

 அழல்  செரிமானத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் உதவியுடன் உணவை செரித்துப்பெறப்படும் ஆற்றலே அழல் எனப்படுகிறது. எனவே உணவை ஆற்றலாக மாற்றும் முழு மாற்றச்செயலின் குறியீடாக பித்தத்தை பார்க்கலாம். 

சித்தமருத்துவம் கூறும் பித்தம் என்பது உடலின் மூன்று தோஷங்களில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று. 'பித்தம் அடங்கிடில் பேசாமல் போய்விடு' என மருத்துவரை எச்சரிக்கிறது சித்தமருத்துவம்.உடல் சூடு அவ்வளவு முக்கியம்.இதன் முக்கிய பண்புகள் சூடு, கூர்மை, மாற்றம் (வளர்சிதை மாற்றம்), செரிமானம், பசி,அறிவின் தெளிவு ஆகியவையாகும். பித்தத்தின் இயல்பு நெருப்புத் தன்மையுடன் தொடர்புடையது. அதனால் பித்தம் அதிகரித்தால் உடலில் வெப்பம் அதிகமாக உணரப்படலாம், வாய்ப்புண், கண் எரிச்சல், அதிக தாகம், மஞ்சள் நிற உடல் மாற்றம், எரிச்சல், கோபம், B.P போன்ற அறிகுறிகள் தோன்றலாம். (இதைத்தான் நமது மக்கள் சூடு சுரணை என்கின்றனர் போலும்). 

அதாவது கழுத்துக்கு கீழே தொடங்கி; தொப்புளுக்கு மேலே இருக்கும் பகுதி வரையில் இருக்கும் உருப்புகள் பித்தத்தின் தொடர்பில் உள்ளவை. செரிமானம் மற்றும் இதயம் சம்பந்தமான கோளாறுகள் முதலியவை இதற்குக் கீழ் வருகின்றன.

எந்தப்‌ பொருளானது புசிக்கப்பட்டு அது சீரணமாகும் போதோ அதற்குப்பின்னரோ   வயிற்றை புரட்டல், வாந்தி, புத்திமாறுதல்‌ முதலியவற்றை ஏற்படுத்துகிறதோ  அவற்றை பித்தப்  பொருளென்பர்‌. 

உப்பும் கசப்புமே பித்தத்தை தூண்டுவன என்கிறது சித்த மருத்துவம். உப்பானது நீர், தீ  எனும் இரண்டு பூதங்களின் கலவை. கசப்பு என்பது வளி, விண் ஆகிய பூதங்களின் கலவை. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள். எனவே இனிப்பும் பித்ததோடு தொடர்புடையதாகிறது. இதுதான் பித்தத்தோடு தொடர்புடைய சித்த மருத்துவ அனுமானங்கள். 

சித்த மருத்துவத்தின் இந்த கருத்துக்களை தற்போதைய அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
------

நாமெல்லாம் வெப்ப இரத்தப் பிராணிகள். நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். அதற்குக் கீழே போனாலும் பிரச்சனை தான், மேலே போனாலும் பிரச்சனை தான்.

 வெளியே பத்து டிகிரி குளிர் இருந்தாலும் உடல் எவ்வாறு முப்பத்தியேழு டிகிரியில் இருக்கிறது என்றால் தைராய்டு ஹார்மோன் தான் காரணம்.  உடலின் கொழுப்பையோ கிளைக்கோஜன் போன்ற சர்க்கரை மூலக்கூறுகளையோ எரித்து; அது உடலின் வெப்பநிலையை நிலை நிறுத்துகிறது.

உடலின் வெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதில் தைராய்டு ஹார்மோன்கள் மட்டுமல்ல, உடலில் இருக்கும் ஒரு சிறப்பு கொழுப்பு திசுவும் (Brown fat – பழுப்பு கொழுப்பு) பங்கு வகிக்கிறது.

நாம் பொதுவாக கொழுப்பை உடலின் சேமிப்பு கிடங்கு என்று நினைக்கிறோம். ஆனால் பழுப்பு கொழுப்பு ஒரு சிறிய “அக்னிக்கூடு” போல செயல்படுகிறது. குறிப்பாக குளிர்ச்சியான சூழலில், இது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது.

நமது செல்களின் உள்ளே இருக்கும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) என்பவை உணவிலிருந்து கிடைக்கும் மூலக்கூறுகளை எரித்து ATP எனப்படும் ஆற்றலை உருவாக்கும் தகன மேடைகள் போன்றவை. ஆனால் பழுப்புக் கொழுப்பில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாக்களில் ஒரு சிறப்பு செயல்முறை உள்ளது. இதற்கு “மைட்டோகாண்ட்ரியல் இணைப்பு தளர்வு” (Mitochondrial uncoupling) என்று பெயர்.இதன் மூலம் உடல் குளிரை எதிர்த்து தனது வெப்பநிலையை பாதுகாக்கிறது.

குளிரான சூழலை உணரும் போது, மூளையின் ஹைப்போதலாமஸ் அதனை உணர்ந்து, நரம்பு மற்றும் ஹார்மோன் வழியாக உடலுக்கு தகவல் அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக தைராய்டு ஹார்மோன்களும், பழுப்பு கொழுப்பின் செயல்பாடுகளும் அதிகரித்து, உடலின் “அழல்” நிலையை பராமரிக்க உதவுகின்றன.

இதுவே இயற்கை உருவாக்கிய நுண்ணறிவு.
வெளியில் குளிர் இருந்தாலும், உள்ளே உள்ள நெருப்பு அணையாமல் காக்கும் அமைப்பு.

வெப்பம் ஆற்றலின் வெளிப்பாடு.

அதிக ஆற்றலை கொண்ட விலங்கே வனத்தில் வெற்றியாளராக கருதப்படும். அந்த ஆற்றலை உடலில் நிலை நிறுத்த பரிணாம வளர்ச்சியில் பல படிநிலைகளைத் தாண்டி தகவமைப்பை பெற்று இருக்கின்றன பாலூட்டி விலங்குகள்.

வனத்தில் விலங்குகளின் தேவை மூன்றே மூன்று தான்.

 உணவு (Food)

இணை (Mate / Reproduction)

இருப்பிடம் (Shelter / Territory)

இந்தத் தேவைகளைப் பெறுவதற்கு விலங்குகள் பெரும்பாலும் வன்முறை அல்லது போட்டி (competition & aggression) மூலமே முயல்கின்றன. இதனால் இரண்டு முக்கிய உணர்ச்சி நிலைகள் உருவாகின்றன:

கோபம் / ஆக்ரோஷம் (Anger / Aggression) – எதிரியை எதிர்கொள்ள

பயம் / தப்பி ஓடல் (Fear / Flight) – ஆபத்திலிருந்து தப்பிக்க

ஆபத்தை எதிர்கொள்ளவும் சரி; தப்பி ஓடவும் சரி; உடல் அதிக ஆற்றலை கோருகிறது அதை நிகழ்த்த உடல் அதிகமாக தகனம் செய்யத் தொடங்குகிறது

ஆனால் மருத நிலத்தின் மனிதர்கள் சண்டையைக் கொண்டு எதையும் பெறுவதற்கான அவசியம் அற்றவர்கள். மருத நிலம் என்பது மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் சமத்துவ பூமி. அங்கே கோபம் வன்முறை முதலியவை அவசியமற்றது. வன்முறை என்பது மனிதன் எனும் சிந்திக்கத் தெரிந்த உயிரி சிந்தனையை மேற்கொள்ளாததின் வெளிப்பாடு.

ஆனால் நவீன மனிதனின் தேவைகள் நகரத்திற்குள் பல்வகையில் இருக்கின்றன இந்த கோபம் ஆக்ரோஷம் முதலியன பல வகைகளில் ஏற்பட இங்கே வாய்ப்புள்ளது 

கோபம் (Acute Anger) → உடனடி உணர்ச்சி வெளிப்பாடு

வஞ்சம் (Chronic Resentment) → இருப்பு வைக்கப்பட்ட சினம் 

சோகம் / ஆற்றாமை (Depression / Helplessness) → தீர்க்க முடியாத கோபத்தின் விளைவு

சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார் வள்ளுவர்.அது உயிரியல் ரீதியாகவும் உண்மை. சினமும் அதை சார்ந்த மற்ற உணர்ச்சிகளும்   சிம்பதட்டிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை தொடர்ந்து “உயர் ஆற்றல்” நிலையில் வைத்திருக்கின்றன. 

கடுமையான பதட்டம் – அட்ரினலின் (Adrenaline / Epinephrine)

படபடப்பு மற்றும் பதட்டத்தின் போதும் நம்மை யாரேனும் திட்டும் போதும் சிம்பதட்டிக் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது என்று பார்த்தோம்.

புலி முன் தோன்றுவது, முதலாளி “வேலையை விட்டு தூக்கி விடுவேன்” என்று மிரட்டுவது, அல்லது காதலி “என் கண் முன்னால் முழிக்காதே” எனக் கூறுவது, இவை அனைத்தும் உடலுக்கு உடனடி ஆபத்து சமிக்ஞையாகப் பதிவாகின்றன.

இவை அனைத்தும் நமக்கு பெரும் பதட்டத்தை தூண்டும். அப்போது சுரப்பது அட்ரினலின். அது ஒரு வனவாசியை வனத்தில் தப்புவிக்க செய்த ஒரு ஆதார செயல்பாடு. இது மில்லியன் ஆண்டுகளாக வன விலங்குகளை உயிர் பிழைக்க உதவிய அதே பழங்கால உடலியக்க முறை.

மில்லியன் வருடங்களாக உங்களை காப்பாற்றி வந்த இந்த ஹார்மோன்களுக்கு, உங்கள் முன்னால் நிற்பது காதலியா முதலாளியா என்றெல்லாம் தெரியாது. எப்படியேனும் உங்களின் உடலின் ஆற்றலை அதிகரித்து உங்களை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.

மிதமான / நீடித்த பதட்டம் – கார்டிசோல் (Cortisol)

 இது போன்ற பெரும் பதட்டம் மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறு சிறு பதட்டச் சூழலும் நமது வாழ்வில் அடிக்கடி நேருகின்றது.

காட்டில் இருக்கும் பொழுது சிறு புதரில் ஏற்படும்  அசைவு ஒரு வனவாசியை ஓடச் செய்யவில்லை என்றாலும் வருவது 'புதருக்குள் இருப்பது புலியாக இருக்குமோ?' என்கின்ற சிறு பதட்டத்தை அவனுக்குள் தூண்டிவிடும்.

 “என்ன தம்பி ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குற” என முதலாளி சொல்வது,  “என்ன ஒழுங்கா ரிப்ளை பண்ண மாட்டேங்குற”என காதலி சொல்வது - இவை அனைத்தும்  மிதமான பதட்டத்தைத் தூண்டக்கூடியது. இந்த மிதமான பதட்டம் விரைவாக தப்புவிக்க செய்ய அல்லது சண்டையிடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறது.  சர்க்கரையையும் உப்பையும் குருதியில் அதிகப்படுத்துவதே இதன் வேலை. 

 இந்த மிதமான பதட்டத்தின் விளைவாக கார்டிகோ-ஸ்டீராய்டுகள் எனப்படும் ஹார்மோன்கள் அட்ரினல்  சுரப்பியின் பட்டையிலிருந்து சுரக்கும். ஓடுவதற்குத் தேவையான குளுக்கோசை உடலில் அதிகரிப்பதும், உப்பின் மூலம் பிரஷரை அதிகரிப்பதும் இவற்றின் வேலை. உப்பானது இனிப்பை உடலுக்குள் அனுப்பும் வேலையை செய்கிறது. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள்.

உப்பு நேரடியாக உடலில் வெப்பத்தை உருவாக்குவதில்லை. ஆனால் உடலின் நீர்–உப்பு சமநிலை, இரத்த அழுத்தம் மற்றும் செல்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகையில், உப்பு தனியாக “அழலை உருவாக்கும் பொருள்” அல்ல; மாறாக, உடலின் உள் சமநிலையை பராமரிக்கும் ஒரு துணை காரணியாக செயல்படுகிறது. உடலின் நரம்பு–ஹார்மோன் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போது, உயிர் இயக்கத்தை (metabolic activity) நிலைநிறுத்துவதில் பங்கு பெறுகிறது.

சித்தமருத்துவப் பார்வையில் கூறப்படும் “உப்பு அழலைத் தூண்டும்” என்ற கருத்தை, நவீன அறிவியல் மொழியில் பார்க்கும்போது, உடலின் திரவ சமநிலை, நரம்பு தூண்டல் மற்றும் மாற்றச்செயல் செயல்பாடுகளுடன் உப்பின் தொடர்பு இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

சூழலானது குளிர்காணும் பொழுது; மூளையின் ஹைப்போதலாமஸ் அதை உணர்ந்து கொண்டு பிட்யூட்டரியிடம் அது தகவல் சொல்கிறது. பிட்யூட்டரி தைராய்டைத் தூண்டி உடலின் அழலை அதிகரிக்கிறது. நரம்பும் ஹார்மோனும் இவ்வாறு இணைந்து வேலை செய்வதை நியூரோ எண்டோகிரைன் செயல்பாடு என அறிவியல் அழைக்கிறது. நரம்பை வலுப்படுத்தும் கசப்பு பொருட்கள் இவ்வாறு நரம்பின் மூலம் அழலை  உருவாக்குவதில் துணை புரிகின்றன.

 எனவே உப்பு கசப்பு இரண்டுமே அழல் என்னும் பித்தத்தை தூண்டவல்லவை எனும் சித்த மருத்துவத்தின் கருதுகோள் அறிவியல் உண்மைகளுக்கு மிக அருகில் உள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.

சிவன் உப்பு, சக்தி கசப்பு என்று பார்த்தோம். இவை இரண்டும் இணைந்து உயிர் வளர்ப்பன. உப்பு அதிகமானால் வரும் விஷக்காய்ச்சலுக்கு கசப்பே மருந்து. சிவத்தின் சூட்டை சக்தி தணிக்கிறது என இதை நம் மக்கள் உருவகமாக வர்ணித்தனர்.

 இப்படித்தான் உப்பு அதிகரிப்பதால் வரும் அம்மை முதலிய நோய்களை வேப்பிலை மஞ்சள் போன்ற கசப்புகளின் துணையோடு  நாம் வெற்றிக் கொண்டிருக்கிறோம். வெயில் காலங்களில் மாடுகளுக்கு வரும் கோமாரி நோயை இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் கசப்பு என்றுதான் அழைக்கின்றனர்.

தமிழர் பார்வையில் 'அழல்' என்பது வெறும் வெப்பநிலை அல்ல; உயிரை உருவாக்கும் ஆற்றல். அது காமத்தோடு தொடர்புடையது. பூப்படைதல் அந்த ஆற்றலின் எழுச்சி; திருமணச் சேர்க்கை அந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி, குடும்பம் மற்றும் சந்ததியினூடாக சமூகத்திற்கு வழிநடத்தும் சடங்கு என்கிறார் brenda எனும் பிருந்தா அம்மையார்*(இவர் ஒரு கனடிய மானுடவியலாளர்).

                 Brenda E.F. Beck
 அதாவது ஆவுடையோடு இணைந்து காமத்தீயை இலிங்கம் தணிக்கும் பொழுது, உடல் தானாக குளிர்ந்துவிடும். அதனால் தான் பருவம் எய்தும் நிகழ்வு 'சமைதல்' என்றும், திருமணச் சேர்க்கை நிகழ்வு, குளிர்விக்கும் பொருள்படும் 'சாந்திமுகூர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது என்பது இவர் முன்வைக்கும் ஆய்வு முடிவுகள் ஆகும்.

அழல் என்பது இவ்வாறாக நம் உடலைப்பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அழல் மிகினும் குறையினும் உடலுக்கு நல்லதல்ல.

அழல்  அதிகமானால் உடல் உருகிவிடும், அழல்   குறைந்தால் உடல் பெருக்கும்.  இதன் காரணமாகத்தான் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடல் குண்டாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உடல்சூடும் கம்மியாக இருக்கிறது. 

ஆனால் அதிகரிக்கும் உடல் சூடு மூளையை பாதித்து வலிப்பை வரவைக்க வல்லது. பித்த நீர் உடலில் அதிகரித்தாலும் இறுதியில் மூளையை  பாதிக்க வல்லது. இதுபோல உடலின் அழலை அதிகம் உடையவர்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டி, ஒவ்வொரு பொருளையும் சுவைத்து உணர்ந்து, உடலை சமநிலைப்படுத்தி,  சித்த மருத்துவத்தின் இந்தக் கொள்கைகளை கண்டறிந்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.


Colour and Heat in South Indian Ritual. Brenda E.F. Beck. 1969 . 

 A qualitative study of adolescent girls' experiences of menarche and menstruation in rural Tamil Nadu, India. Int J Qual Stud Health Well-being. Gold-Watts A, Hovdenak M, Daniel M, Gandhimathi S, Sudha R, Bastien S. 2020

 

Wednesday, May 20, 2026

ஏர் முன்னது எருது

  கருப்பொருள் - 2

உணவு:

ஐம்பூதங்களால் ஆனதே இப்பூமி. இப்பூமியில் உலாவும் நம் உடலும் இந்த ஐம்பூதங்களால் ஆனதே. இந்த ஐம்பூதங்களும் ஐம்புலன்கள் வழி உடல் வளர்க்கின்றன. இவ்வாறு உடலைக் காக்கவும் உடலை வளர்க்கவும் புலன்கள் நமக்குத் துணைபுரிகின்றன.

எவ்வாறு இந்த ஐந்து பூதங்களும் உடலாய் ஆனது?”

சுற்றியிருக்கும் கருப்பொருட்களின் உதவியுடன் பெறப்பட்ட உணவால் உடல் உருவானது.

உணவு என்பது என்ன?”

ஒவ்வொரு நிலத்திற்கும் அங்கிருக்கும் காலத்திற்கும் ஏற்ப; விலங்குகளின் தேவையை அனுசரித்து; அவைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நிலம் மற்றும் நீரின் துணை கொண்டு வழங்குகின்றன தாவரங்கள். அதை எடுத்துக்கொண்டு தமது உடல் வளர்க்கின்றன தாவரஉண்ணிகள். அவற்றை ஊன்உண்ணிகள் வேட்டையாடி உண்ணுகின்றன. உணவுச் சங்கிலியில் இதுபோல ஒவ்வொரு படிநிலையில் இருக்கும் விலங்குகள் தமக்கான உணவை பெறுகின்றன. எனவே தமிழர்களைப் பொருத்தமட்டில் உணவு என்பது நிலத்தொடு நீரே.

உணவே உயிர் வளர்க்கும் சாதனம். அது சூழலில் இருக்கும் கருப்பொருட்களின் துணையுடனே பெறப்பட வெண்டும். உணவு என்பது சூழலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற கருப்பொருட்களால் பெறப்படுகிறது

அறிவியலும் உணவை உண்ணத்தக்க உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களாகத்தான் பகுக்கிறது.

உயிருள்ள உணவுகள்: தாவரம், பூஞ்சை, ஈசல் போன்ற பூச்சிகள், விலங்குகள், விலங்கு தரும் பால் முதலியவை.

உயிரற்ற உணவாகும் பொருட்கள்: உப்பு, சுண்ணாம்பு முதலிய மினரல்கள், வினிகர், நீர்... போன்றவை..

நவீன அறிவியல், உணவு என்பதை மேக்ரோ என்றும் மைக்ரோ என்றும் பகுக்கிறது. 

 மைக்ரோ என்பவை அளவில் குறைவாகத் தேவைப்படுபவை. மேலும் மைக்ரோக்கள் உடல்நலம் பேணுவதற்கு இன்றியமையாதவை.

மேக்ரோ: மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் அமினோஅமிலங்களை அடிப்படையாகக் கொண்ட புரதங்கள்

மேக்ரோ என்பவை அளவில் அதிகம் உண்ணப்படுபவை. ஆற்றல் மற்றும் கட்டுமானத்திற்கானவை. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மாவுச்சத்து:

கீழ்காணும் படத்தில் இருக்கும் ஒவ்வொரு அறுகோண டப்பாவும் ஒரு சர்க்கரை மூலக்கூறு. இதில் கிளைகோஜன் என்பது விலங்குகள் உடலில் எதிர்காலத்தேவைக்காக பொதித்துவைக்கப்பட்ட சர்க்கரைப் பொதி. இந்த செல்லுலோஸ் என்பது தான் நார்சத்து. இதைப்பற்றி தாவரங்கள் பரிணாமத்தைப் பற்றி பார்க்கும் போது நாம் படித்தோமேஞாபகம் இருக்கிறதா? இவற்றையே மாடுகள் முக்கிய உணவாகக் கொள்கின்றன.நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பேப்பர்கூட இதே செல்லுலோசால் ஆனது தான். ஸ்டார்ச் என்பது செடிகள் கிழங்கு வடிவில் சேர்த்து வைக்கும் மாவுச்சத்து. இவற்றில் கிளைகளற்ற சங்கிலி தான் அமைலோஸ். இவற்றை உடைக்கும் நொதியே அமைலேஸ்.


பேப்பரை எரித்தால் சில மணித்துளிகளே எரியும். காரணம் அதில்  ஆற்றல் சிறிதளவே அடங்கியுள்ளது.

கொழுப்புச் சத்து:

செல்லுலோஸ் கொண்ட பச்சைப் புற்களைத் தின்று; வெள்ளைப்பால் தரும் பசுவை; புலி உண்கிறது. பசுவின் ஊனில் கொழுப்பும் புரதமும் மிகுந்து உள்ளது. பாலிலும் நெய்யிலும் ஊனிலும் உள்ள கொழுப்பு; புற்களின் செல்லுலோசிடம் இருந்து பெற்ற ஆற்றலைக் கொண்டு  உருவாக்கப்பட்டது. அது இன்னும் அதிக ஆற்றலை அடர்த்தியாகக் குவித்து வைத்துள்ளது. கொழுப்பையோ நெய்யையோ எரித்தீர்கள் என்றால் அது நாள் முழுக்க எரியும்.  இதன் மூலம் நாம்  கொழுப்பின் ஆற்றல் அடர்த்தியை  அறிந்து கொள்ளலாம்.

புரதச் சத்து:

புரதம் என்பது உடல் கட்டுமானத்திற்கு அவசியமான ஒரு மேக்ரோ

எவ்வாறு வெறும் ABCD… எனும் 26 எழுத்துக்களைக் கொண்டு  பெரும்புத்தகத்தை எழுதுகிறோமோ அதே போல் , நம் உடலும் 20 அமினோ அமிலங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது 

இது போன்ற மேக்ரோ மற்றும் மைக்ரோக்களால் ஆன உணவானது வாய் எனும் குழாயின் ஒருபகுதி ஓட்டை வழியாக உள்தள்ளப்பட்டு, ஆசனவாய் எனும் மறுஓட்டை வழியாக வெளியேறுகிறது. உணவானது வாயால் அரைக்கப்பட்டு, சிறுகுடலில் பித்தம் மற்றும் கணைய நொதிகளால் குளுக்கோஸ் போன்ற அடிப்படை சர்க்கரை மூலக்கூறுகளாகவும், அமினோ அமிலங்களாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்படுகிறது. மீதம் இருக்கும் குடல் கழிவுகள், பெருங்குடலுக்குச் சென்று கழிவில் இருக்கும் நீர்சத்து மற்றும் உப்புச்சத்து முதலியன பெருங்குடலில் உறிஞ்சப்படுகிறது. மேலும் குடல் வாழ் நன்மை செய்யும் கிருமிகள் கழிவில் இருக்கும் நார்சத்தின் துணை கொண்டு, பல நல் விட்டமின்களை உருவாக்குகிறது. இறுதியாக ஐம்புலன்கள் வழி நுழைந்த உணவானது  நமது உடலாய் உருவெடுக்கிறது. உறிஞ்சப்பட்டது போக மீதம் உள்ளவை மலமாகிறது. அந்த மலமே நிலத்தில் இருக்கும் சிற்றுயிர்களுக்கான  உணவாகிறது. அதைக் கொண்டு தாவரங்கள் வளர்கின்றன. 


உடலுக்குள் செல்லும்  உணவை உடல் மூன்று விதமாக கையாளுகிறது,

1.       சக்கை (கரும்பு, முருங்கை, பனங்கிழங்கு இவற்றைத்தின்னும் போது நாம் துப்புவது)

2.       சத்து (துப்பியது போக உடலுக்குள் சென்றவை அன்னரசமாய் மாற்றப்பட்டு உடல  உறிஞ்சுவது)

3.       மலம் - மீதம் கழிவுகளாக வெளித்தள்ளப்படுவது.

இவ்வாறு உடலால் உறிஞ்சப்பட்ட ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் தான், வளி எனும் பிராணவாயுவால் எரிக்கப்பட்டு, உடல் இயங்குவதற்கான ஆற்றலைப் பெருகிறது. இந்நிகழ்ச்சியேதகனம்எனப்படுகிறது. இதை கீழ்காணும் படம் விளக்குகிறது.

இதனால்  சக்தி எனும்அழல்உடலுக்குக் கிடைக்கிறது. இந்த தகனத்தை செய்யும் தகன மேடையாகமைட்டோகான்ட்ரியாஉள்ளது. உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு குருதி வழியாக செல்களை அடைந்து அவை செல்களில் தகனம் செய்யப்படுவதை கீழ்காணும் படம் விளக்குகிறது.

ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் வளியின் துணையுடன் எரிக்கும் இந்நிகழச்சிதான் உயிர்களின் அடிப்படை வேதிவினை. இதே டெம்ப்ளேட் தான் நம் போன்ற அனைத்து ஜீவராசியின் உடல் செல்லுக்குள்ளேயும்  நடக்கிறது.

 இந்த வேதிவினையின் முடிவில் வெளித்தள்ளப்படும் கரியமில வாயுவும் நீரும் தாவரங்களின் சமையலுக்கான மூலப் பொருட்கள். இதைக் கொண்டுதான் அவைகள் உணவை உற்பத்தி செய்கின்றன.

 தாவரங்களும் விலங்கினங்களும் இவ்வாறு இந்த வேதி வினையை எதிரெதிர் பக்கத்தில் நிகழ்த்தி உலகின் சமநிலையை பேணுகின்றன. 

இந்த வேதிவினை நடப்பதற்கு ஆதாரமான ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உறிஞ்சும் வேலையை ஜீரணமண்டலம் செய்கிறது. பிராண வாயுவை உடலுக்குள் கொண்டுசென்று கரியமில வாயுவை வெளியேற்றும் வேலையை நுரை-ஈரல் செய்கிறது. பிராணவாயு மற்றும் ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உடல் முழுவதற்கும் கொண்டு செல்லும் வேலையை இரத்தம் செய்கிறது. இந்த இரத்தத்தை தமனி எனும் பைப்புகள் வழியாக அனைத்து செல்களுக்கும் பாய்ச்சும் வேலையை இதயம் எனும் பம்ப் செய்கிறது. இதில் ஈரல் என்னும் உறுப்பு நச்சுப் பொருட்களை உடலில் இருந்து நீக்க பாடுபடுகிறது.

கரியமிலவாயு தவிர்த்த மற்றனைத்து நீரில் கரையும் கழிவுகளையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. அதிகசக்தி தேவைப்படும் பதட்டப்பொழுதில் தகனத்தை அதிகமாகச் செய்யவும், உண்டபின் சீரணிப்பதை பதட்டமல்லா பொழுது  செய்யவும் மூளை மற்றும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. மொத்தமாக இவ்வனைத்து உறுப்புக்களும் சிதறிவிடாதபடி தோல் எனப்படும் பையில் பொதித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வனைத்து மண்டலங்களையும் கட்டுக்கம்பி; சிமெண்ட் வைத்து கட்டியது போல உருவம் கொடுக்கவும் நகர வைக்கவும்; நரம்பு மண்டலத்தின் கட்டளைப்படி  ‘எலும்பு-தசை மண்டலங்கள்வேலை செய்கிறன.

கூறுவேன் தேகமது என்னவென்றால்

        குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

      மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

         வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

      தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

          தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

      ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

           அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே

அந்த வாய்வு போச்சு என்றால், ‘படையப்பன் மூச்சு நின்னு போச்சுஎன்று அர்த்தம்.

இந்த தேகமெனும் பைக் ஓடுவதற்கான பெட்ரோல்தான் உணவு. அந்த உணவிற்கு மூன்று முக்கியமான வேலைகள் உள்ளன.

1.                சக்தி அளிப்பது

2.                உடலின் வளர்சிக்கான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடலின் தேய்மானத்தை சரிசெய்யும் பட்டி டிங்கரிங்க் வேலைகள் செய்வது.

3.                உடலைக் காக்கும் வேலையைச் செய்வது.

 

இந்த மூன்று வேலைகளைப்பற்றிய புரிதல், பழங்கால சித்தமருத்துவத்தை எழுதியவர்களுக்கும் நவீன அறிவியலாலர்களுக்கும் தெளிவாக இருந்திருக்கிறது.

சரி மைக்ரோக்களின் கதைக்கு வருவோம். மைக்ரோக்கள் சிறிதளவே உடலுக்குத்தேவை என்றாலும் அவை உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள்

மைக்ரோகளை கண்டுபிடித்தது அறிவியல் அறிஞர்கள் மட்டும்தானா? பண்டைய மக்களுக்கு இதைப் பற்றி அறிவு என்பது இல்லையா?”

இந்தப் பெயர் வைத்தது மட்டும்தான் அவர்கள். இதைப் பற்றிய புரிதல் மக்களுக்கு இருந்திருக்கிறது.

அறிவியலாலர்கள்; வெண்ணை, பால் முதலியனவற்றை உண்டால் பார்வை மேம்படுகிறது என்றுணர்ந்தனர். உயிர்வாழ அத்தியாவசியமானவை எனும் பொருள் பட விட்டமின் என பெயர் அந்த சக்திக்கு பெயர் சூட்டினர். விட்டமின் வை அறிவியல் இவ்வாறு கண்டறிந்தது.

பழங்களை பலநாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. அந்த காலத்தில்; நொடுந்தூர கடல் பயணங்களில்; பழங்கள் இல்லா உணவை உண்டுவந்த கடல் பிரயாணிகளுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. எலுமிச்சம்பழத்தை உண்பதன் மூலம் இந்நோய் தவிர்க்கப்படுவதை உணர்ந்த அறிஞர்கள் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் ஒரு சத்துதான் இதற்கு காரணம் என்று அந்த சத்துக்குவிட்டமின் சிஎன்று நாமகரணம் சூட்டினர். அதுவரை மாவுசத்து, புரம், கொழுப்புச்சத்து மட்டும் தான் கணக்கில் இருந்தது. சில சத்துகள் உணவில் குறைந்தால்  உடல்நலிவுறும் என்ற புரிதல் இவ்வாறு நவீன அறிவியலுக்கு கிட்ட ஆரம்பித்தது. அவற்றிற்கு , பி,சி, டி என பெயர்சூட்ட ஆரம்பித்தனர்.

பனிப்பிரதேசத்தில் பழங்களே இல்லை. அங்கே இருக்கும் எஸ்கிமோக்களுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் நோய் இல்லை. காரணம் அவர்கள் சீல்களை வேட்டையாடி உண்ணும்போது அவற்றின் கிட்னியைச் சுற்றி உள்ள கொழுப்பை பச்சையாக உண்டனர். அதை ஆராய்ந்து பார்த்த போது அதில்விட்டமின் சிஇருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு பெயரிடாமலேயே அதைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர் எஸ்கிமோக்கள்.

சமச்சீரற்ற உணவு  உண்ட பொழுது உடல் தனக்கு என்ன தேவை என்று கேட்கும்.

அதன் அடிப்படையில் அவற்றின் பெயர் தெரியா விட்டாலும் அந்த அத்தியாவசியமான சத்தைஉதாரணத்துக்குவைட்டமின் சியை உடம்பு வேண்டி கேட்டுக்கொள்ளும். மாசமாய் இருக்கும் பெண்கள் புளிப்பான பொருளாய் சாப்பிட விரும்புவது இதன் காரணமாகத்தான். (சாம்பல் cravingகிற்கான காரணம், மினரல்கள் தேவையை உடல் பெறுவதற்காக).

அதேபோல் எகிப்தியர்கள் மாலைக்கண் நோயை சரிசெய்ய ஈரலை உண்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஈரலில் உள்ள ஏதோ ஒரு சத்து குறைவதால் மாலைக்கண் நோய் வருகிறது என்பதைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருந்தது.

ஆறிவியலாலர்கள் உணவில் உள்ள மைக்ரோக்களை இதுபோல ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்க ஆரம்பித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் நமக்கு நன்மை அளித்ததை விட முதலாலிகளுக்குத் தான் அதிகம் நன்மை விளைவித்தது.

இதுகாறும் உணவு என்பதுஒவ்வொரு நாகரிகத்திலும் முழுதான ஒரு பண்டமாய் தான் பார்க்கப்பட்டது.

அரிசி என்பது முழு உணவு. முழு அரிசியை விற்றால் லாபம் குறைவு. அப்ப லாபம் அதிகரிக்க என்ன பண்ணலாம்?

அரிசியில் உமியை நீக்கி, குருணையையும் நீக்கி, பட்டை தீட்டி மதிப்புகூட்டி(மதிப்புக் குறைத்து) விற்கப்பட்டது. அதில் உடைந்த விற்பனையாகாத அரிசி கோழிகளுக்கு தீவனமானது. உமியில் இருந்து எண்ணை பிழியப்பட்டு  bran oil  என விற்கப்பட்டது. உமியின் சக்கை குதிரைகளுக்கு உணவாக்கப்பட்டது. ஒத்தை அரிசியில் பலவகை இலாபம் என முதலாளிகள் மகிழ்ந்தனர்.

ஆனால் பட்டை தீட்டிய அரிசியை உண்ட மனிதர்களுக்கோபெரி பெரிநோய் வர ஆரம்பித்தது. கோழிகளுக்குபாலினியூரைட்டிஸ்எனும் வாத நோய் வர ஆரம்பித்தது. கடைசியாக இவ்வனைத்து நோய்களுக்கும் காரணம்  ‘விட்டமின் பி1’ (தையமின்) குறைபாடு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டமின் பட்டியலில் மற்றுமொரு விட்டமின் சேர்க்கப்பட்டது.

உமியை குதிரைக்கு கொடுத்தார்களே அது மட்டும் தப்பித்ததா?

பாஸ்பரஸ் அதிகம் இருந்த உமியை உண்டதால் அதன் மண்டை வீங்க ஆரம்பித்தது. இதன்பின்னர் தான் கால்சியமும் பாஸ்பரசும் உடலுக்குத்தேவை, அதிலும் ஒரு விகிதாச்சாரத்தில் தான் அவை உட்கொள்ளப்படவேண்டும் எனும் புரிதல் அவர்களுக்கு வந்தது.

இக்காலகட்டத்தில் தான் உணவைப்பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய தலைதூக்க ஆரம்பித்தன. ஒரு ஆய்வாளர்; பாலின் புரதம், கொழுப்பு போன்றவற்றை தனித்தனியாக ஒரு எலிக்கூட்டத்திற்கும், ‘பாலைபாலாகவே மற்றுமொரு எலிக்கூட்டத்திற்கும் கொடுத்து பரிசோதித்தார். விளைவு தனித்தனி உணவாக பாலின் கூறுகளை உண்ட எலிகள் செத்து மடிந்தன. ஆனால் பாலை முழு உணவாக உண்ட எலிகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தன. பாலை எலிக்கு கொடுத்து சாவடித்த பிறகாவது திருந்தினார்களா என்றால் இல்லை. அனைத்தையும் பிரித்து; தனித்தனியாக அவற்றை எவ்வாறு விற்பது என்பதே அவர்களது குறிக்கோளாய் இருக்கிறது

ஆங்கில மருத்துவம் இன்னும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை பற்றியும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவில்லை.

 ஒரு உணவை முழுமையாகவே அவர்கள் பார்ப்பதில்லை. உணவு என்பது முழுமையாக உணவு மட்டும் தான். பழங்களிலும் காய்கறிகளிலும் இருப்பவற்றை  phyto nutrients என்கின்றனர். phyto nutrients பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடந்துவருகின்றன. இவை புற்றுநோயை கூட எதிர்க்க வல்லவை. எனவே அவற்றையும் தனியாகப்பிரித்து துணைஉணவுகள் எனும் பெயரில் விற்க ஆரம்பித்துவிட்டனர்.தற்பொழுது இவை ஆங்கில மருத்துவத்தில் nutraceuticals என துணை உணவுகளாகவும் மேலும் மருந்துகளாகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்துவம் உணவையும் மருந்தையும் தனித்தனியாக பார்ப்பதில்லை. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை உணவு தான் மருந்து, மருந்து தான் உணவு.

உடலுக்கு சக்தி அளிப்பது, உடலை பராமரிப்பது மற்றும் உடலைக் காப்பது தான் உணவின் முக்கியமான நோக்கங்களாகும்.

 அந்த நோக்கங்களை உணவு எவ்வாறு பூர்த்தி செய்கிறது எனும் அடிப்படையில் தான் சித்த மருத்துவத்தில் உணவு பாகுபாடானது பகுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பருவத்தின் மாற்றத்தால் எந்த சுவை உடலுக்கு அதிகம் தேவைப்படும் என்பதில் மாற்றம் நேரலாம். அதையும் பூர்த்தி செய்யும் நோக்கில் தான் சித்தமருத்துவத்தின் உணவுப் பாகுபாடு அமைக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் பயன்படுத்திய அதே அடிப்படை கருதுகோளான மூன்றாம் பரிணாமமாகிய பொழுதினையும் உணவோடு இணைத்தே பார்த்தது சித்தமருத்துவம்.

இந்தப் பாகுபாட்டில் மேக்ரோக்கள் மைக்ரோக்கள் முதற்கொண்டு அனைத்து ஊட்டச்சத்துகளும்  மருந்துகளும் அறுசுவை உணவில் அடங்கி விடுகின்றன. இந்த அறுசுவை உணவு ஒழுங்காக எடுக்கப்படாவிட்டால்; ஊட்டச்சத்துக்குறைபாடு    நேரிடலாம்.

சூழியலில் இருக்கும் கருப்பொருட்களைக் கொண்டும்; வாழியல் சார் உணவு முறைகளைக் கொண்டும், உடல் நலத்தை பேணும் வழிவகை செய்வதால் தான்  சித்த மருத்துவம் அனைவருக்குமான  சிறந்த மருத்துவமாக இருக்கிறது.

மருத்துவம் என்பது பிணியை சரி செய்யும் வழிமுறைகள். பிணிகளில் முதன்மையானது பசிப்பிணி. அதுதான் வாழ்வில் அனுதினமும் நம்மை வாட்டும் பிணியும் கூட.

அது மட்டுமல்லாமல் வாந்தி, பேதி, இரத்த சோகை, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள் முதலிய பல் வகைப் பிணிகள் நம்மை வாட்டுகின்றன.

பிணிகளின் அறிகுறிகள் என்னென்ன, அவை எவ்வாறு நம் உடலைத்தாக்குகின்றன, இதை நாம் எவ்வாறு சரிசெய்துகொள்வது, என்பது மனிதனாகப்பிறந்த அனைவரின் மனதையும் உறுத்தும் கேள்விகளாகும்.

இந்தக்கேள்விகளுக்கான பதிலை; பண்டைய கால மக்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பித்தம், இரத்தம், சளி முதலியன அதிகரிப்பதும் மற்றும் வெளியேறுவது உடலின் பிணியைக் குறிப்பது என்ற அறிவு கிட்டத்தட்ட பண்டைய மக்கள் அனைவருக்கும் இருந்திருக்கிறது. கண்களின் இமைகளை கீழிறக்கிப்பார்த்தாலே காமாலை, இரத்தசோகை போன்றவற்றை mucous membrane காட்டிக்கொடுத்துவிடும்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த பண்டைய மக்களுக்கு; சாவு என்பது விலங்குகள் வடிவிலோ, விஷத்தின் வடிவிலோதான் பெரும்பாலும் நிகழ்ந்திருக்கிறது. இவற்றினால் ஏற்படும் மரணங்கள் உடனடி மரணங்கள்.

காய்ச்சல், சளி, வாந்தி பேதி போன்றவற்றாலும் மக்களுக்கு மரணம் நிகழ்ந்துள்ளது.  இவை உடனடி மரணத்தை சம்பவிக்காமல் சில நாட்களுக்கு உடலைவாட்டி, இதன் காரணமாய் உடலின் சமநிலை தவறி, பின் மரணத்தை சம்பவித்திருக்கிறது.

 நீண்ட ஆரோக்கிய வாழ்வு பின்னர் வேண்டாத நிகழ்வுகளால் உடனடி சாவு. இவ்வகை சாவுதான் அக்காலங்களில் அதிகம் நிகழ்ந்து வந்திருக்கிறது.  உடனடி இறப்புகளான அரவம்தீண்டி இரத்தம் உறையாமல் வெளியேறி இறப்பது, பித்தவாந்தி எடுத்து உடல்நலிவுற்று மரணம் நிகழ்வது,  சளி மூச்சுத்திணறல்  போன்றவற்றால் ஏற்படும் இறப்புகள், போன்ற சம்பவங்கள் மனிதமனத்தை கலங்கச்செய்திருக்கும் என்பது திண்ணம். இது போன்ற வண்ண திரவங்களின் வெளியேற்றம் மக்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த ஜலம் அல்லது திரவங்கள் உடலில் மிகுதலே நோய்க்காண முக்கிய காரணியாக பண்டைய காலங்களில் அவதானிக்கப்பட்டது.

  கிரேக்கர்கள் நான்கு ஜலத்தைப் பற்றி (humo[u]rs) குறிப்பிட்டுள்ளனர். blood, phlegm(சளி/கபம்), yellow bile (பித்தம்), மற்றும் black bile. நமது மருத்துவமுறையிலும் இது போன்ற ஜலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ‘வளி’ என்ற ஒரு கருதுகோளும் நம் மருத்துவ முறைகளில் கூடுதலாக இடம்பெறுகிறது.

வளி (வாத தோஷம்) என்பது ஜலமல்ல, வளியைப்பற்றி  hippocratic corpus புத்தகத்தில் குறிப்புகளேதும் இல்லை. வளி என்பது காற்றை மட்டும் தான் குறிக்கிறதா என்றால் இல்லை. வள்ளுவர் சித்தமருத்துவத்தைப் பற்றிக்குறிப்பிடும் போது ‘வளி முதலாய்’ என்று தான் குறிப்பிடுகிறார். வளியைப் போன்ற ஒரு கருதுகோள் சீனமருத்துவத்திலும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நமது சித்தமருத்துவத்தின் ‘நாடி’ போன்ற ஒரு கருதுகோள் அது. அதை அவர்கள் “Qi” என்றழைக்கின்றனர். Qi சமநிலை தவரும் போது நோய் உருவாகிறது என்பது அவர்களின் கொள்கை. யிங் மற்றும் யாங் எனும் இரு எதிர் ஆற்றல்கள் இணைந்து Qi வின் சமநிலையைப் பேணுகின்றன. இரு எதிர் துருவங்கள் இணைந்து ‘இரட்டையில் ஒற்றுமை’ சமநிலை பேணுவதே இந்தத்தத்துவத்தின் அடிப்படைக் கூறாகும்.

புத்தமருத்துவத்தின் பாடல்களிலும் ‘சரக சம்ஹிதா’ நூலிலும் வாத பித்த கப தோஷங்கள் பற்றியும், தாதுக்கள் பற்றியும், மலம் எனும் கழிவுகளைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. Samkhya-karika  எனும் நூல் உணவின் குணங்களாக ‘சத்வ தமஸ் ரஜோ’ என்பனவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சித்த மருத்துவமும் இதே கருதுகோள்களின் அடிப்படையில் தான் இயங்குகிறது. உற்று நோக்கினால் இந்திய மருத்துவமுறைகள் அனைத்தின் அடிப்படையும் ஒன்றுபோலவே உள்ளன.

“பித்தம், கபம் போன்ற ஜலங்களும் வளி போன்றவையும் என்ன? அவற்றிற்கும் உணவுக்கும் என்ன தொடர்பு? “


உணவு எந்திரம்

“கொக்கரக்கோ…” அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான். “பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்...