Saturday, June 16, 2012

கடகம் 2 - புற்றின் மூலம்


//உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ்   மூலம்  வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .//
என்று போனமுறை கூறியிருந்தேன் .

 முதலில் மைட்டாசிஸ் பற்றி பார்த்து விடுவோம் .

          nucleus உள்ள அனைத்து  eukaryotic செல்லும்  தன்னை போல இன்னொரு செல்லை உருவாக்கும் முறை தான் மைட்டாசிஸ் . அதாவது தன்னை போல இன்னொரு செல்லை பிரதி எடுத்தல் . இவ்வாறு ஒரே போல உள்ள செல்கள் ( இங்கே காயத்தை நிரப்பும் தோல் செல்கள் ) பல செல்களாய் பிரிந்து அந்த இடைத்தை நிரப்பும்.
அந்த இடைவெளியை நிரப்பிய பின்னரும் அவை கட்டுக்கடங்காமல் வளர்ந்தால் .... கான்செர் கட்டி என்று அழைக்கப்படும் ( benign ), இது சாது ,அங்கேயே தேமே என்று இருக்கும் , ஆனால் அது மற்ற இடங்களுக்கு பரவும் படி மாறினால் ? malignant . அப்புறம் கஷ்டம் தான் .

...........................................................................................................................................
                இப்போது நம் மனதில் எழும் கேள்விகள் ....

       செல்களின் இவ்வாறான பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுக்கோப்பு எவ்வாறு உருவானது ?

இந்த கட்டுக்கோப்பை உடைத்து கான்சர் எவ்வாறு உருவாகிறது .?

முதல் கேள்விக்கு விடை தெரிந்தால் இரண்டாவது   கேள்வியை எளிதாக எதிர் கொள்ளலாம் .

............................

              இப்போது நாம் பார்க்கும் இடம் எண்ணூறு  மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய  பூமி ,

இப்போ பூமி புதிதாக வயதுக்கு வந்த புது பெண் ,

பூமி முழுதும் ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்து வந்த கால கட்டம் , இங்கே ஒரே ஒரு சட்டம் தான் ...
                                               "எனக்கு நானே" சட்டம் ....

                                            "a single cell for itself "

இந்த சட்டத்தின் படி புற்று நோய் போல செல்கள் கட்டுக்கடங்காமல் பல்கி பெருகுவது தவறு கிடையாது  ,

சொல்லப்போனால் அவ்வாறு பல்கிப்பெருகும செல்கள் தான் அவர்களின் இனம் தழைத்து நிற்க போட்டியிடும் போட்டியில் வெற்றி பெற முடியும் .


இந்த போட்டி நூறு மில்லியன்  ஆண்டுகள் தொடர்ந்தன ...

சிலரால் போட்டியை சமாளிக்க முடியவில்லை ,

போட்டியை தனித்து சமாளிக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள் ?


                                                      கூட்டணி தான் .

இனிதே ஆரம்பித்தது metazoan களின் கூட்டணி ஆட்சி . 

ஆட்சி மலர்ந்ததும் கூட்டணிக்கு என்று சில சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன , இங்கே எனக்கு நானே சட்டம் வேலைக்காவாது , இது மக்களாட்சி , நாட்டுக்காக மக்கள் மக்களுக்காக நாடு என்பது போல .

அந்த metazoan கள் ஒட்டிவைத்த தெர்மாகோல் பந்துகளை போல காட்சி அளித்தன .
                                       கூட்டாக வாழ்வதில்பல சவுகரியங்கள் ...........


பல trial  and error க்கு வழிவகுத்து பல வடிவங்கள் சாத்தியபட்டன .

வேலை பகிர்ந்தளிக்கப்பட்டன ...

இரையை  பிடிக்க ஒரு கூட்டம் , அவற்றை செரிக்க ஒரு கூட்டம் , இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த ஒரு கூட்டம் ,,,.....

கூட்டங்கள் உறுப்புகளாக வளர்ச்சி பெற்றன .

ஆம் நம் உடலே ஒரு அரசாங்கம் ( அப்ப புற்று நோய் செல்கள் தனியாட்சி கேட்கும் மாவோயிஸ்டுகள் என்று வைத்துக்கொள்ளலாமா ?) , மூளை தான் தலைமை செயலகம் ( நன்றி சுஜாதா சார் ).

ஆனால் உடல் ஒழுங்காக செயல் பட ஒவ்வொரு செல்லும் தலைமையை மதிக்க வேண்டும் , தேவையான பொது தான் பெருக வேண்டும் , தன்னிச்சையாக செயல் படக்கூடாது , சுயநலம் கூடவே கூடாது . இது தான் கூட்டணி தர்மம் .

இருந்தும் போதிதர்மனின் நினைவுகள் DNA  விலிருந்து   பீரிட்டு கிளம்பியதை போல , சில செல்கள்  தனது எண்ணூறு மில்லியன் ஆண்டு பழைய சுயநல வாழ்க்கை முறை நினைவுகள் திரும்பவரப்பெற்று தனிராஜியம் துவங்க போர்க்கொடி பிடிக்கின்றனர் . அவற்றை மருத்துவம் கூறும் நல்லுலகம் கான்சர் என்று அழைக்கின்றனர் .

............................................................................
யாருப்பா அது , அவனின் நினைவுகளை கிளறி விட்டது ? 

mutation 

mutation  என்றால் என்ன ?

ஹீரோ மேல அணுக்கழிவின்    கதிர்கள் படும் , உடனே அவருக்கு ரெக்கை முளைக்கும் , கையில கத்தி வரும் , கண்ணுல தீ வரும் ......


இவை படங்களில் மட்டுமே சாத்தியம் , அப்ப உண்மையில் mutation என்றால் என்ன . 

ஒரு செல் இரண்டாக ஆவது பற்றி மைட்டாசிஸ்சில் பார்த்தோம் . 

மைடாசிசின் போது DNA இரண்டு செட்டாக இரு குரோமோசோம் பைகளில் திணிக்கப்பட்டு இரு செல்களுக்கு அளிக்கப்படும். 

 DNA காப்பி ஆகும் போது அதில் சில தவறுகள் நேரலாம் .  அந்த தவறை சரி செய்ய சில மெக்கானிசம்கள் உள்ளன , இவற்றையும் மீறி ஏற்படும் தவறுகளே  mutation.

மைடாசிசின் நோக்கம் செல்களின் பெருக்கம் அல்ல , இறந்த செல்களை replace செய்வது .

நிறைய முறை மைட்டாசிஸ் நடக்கும் இடத்தில்  DNA காப்பி செய்வதில் ஏற்படும் தவறுகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

ஐந்து பைசா திருடிகள் திருடித்திருடி , ஐந்து கோடி திருட்டாக மாறி அந்நியனிடம் கும்பிபாகம் பெருவது போல,

ஒவ்வொரு முறையும் மைட்டாசிஸ் நடக்கும் போது , mutation னுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன , 

அதிகப்படியான  mutation கான்சருக்கு வழிவகுக்கும் .
.......................................................
நமது உடலில் 30 ட்ரில்லியன் செல்கள் உள்ளன ( மூனுக்கு பக்கத்தில் எத்தனை முட்டையோ ) , நமது வாழ்நாளில் நடக்கும் செல் division ளின் எண்ணிக்கை  10  ட்ரில்லியன். ( எல்லாம் தோராய கணக்கு தான் , ஒன்னு ரெண்டு கூட குறைய இருக்கலாம் ).

தோலிலும் குடலிலும் தினமும் செல்கள் உதிர்ந்து  கொண்டே இருக்கின்றன ., அவற்றை replace செய்ய புது செல்கள் மைடாசிசின் மூலம் முளைக்கின்றன  .
நிறைய மைட்டாசிஸ் ,mutation னுக்கான  நிறைய  சாத்தியக்கூறுகள் ....

அதனால் தான் தோலிலும் குடலிலும் புற்று நோய் அதிகம் வருகின்றன .(அங்கே செல்கள் தினமும் உதிர்கின்றன ),

இதய செல்கள் பிறப்பிலிருந்தே அவ்வாறே இருக்கும் , அதனால் தான் இதய கான்சர் என்று ஒன்றை நாம் கேள்விபட்டது இல்லை . 
--------------------------------------------------------------------------------------------------
மனிதனின் ஒரு செல் கான்செர் செல்லாக மாற கிட்டத்தட்ட 12 mutation கள் நடக்க வேண்டும் .
6 என்பது எல்லைக்கோடு { அதாவது pre  cancerous செல் ( கான்செருக்கும் நல்ல செல்லுக்கும் இடைப்பட்ட செல் வகையறா)   கான்சர் செல் ஆவதற்கு முந்தின பருவம் }.

ஆறுக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு மரபு மாற்றமும் இந்த கடவுள் பாதி மிருகம் பாதி செல்லை முழுவதும்  மிருகமாக மாற்றமடைய செய்யும் .
----------------------------------------------------------------------------------------------------

இப்போது  ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி .....

முதலில் நல்ல செய்தி .

ஒரு நல்ல செல் இந்த ஆறை எட்டுவதற்கான சாத்தியங்கள் மிக மிக மிக குறைவு .

கெட்ட செய்தி 

சில சாயனங்கள்   , கதிரியக்கங்கள் மூலமாக ஆறை ஒரே தாவலில் எட்டி விடலாம் .

சிகரெட்டில் இருக்கும் நிகொடினில் ஆரம்பித்து , தமிழ் சினிமா வில்லன் பயன் படுத்தும் அனைத்து லாகிரி வஸ்துக்களிலும் இருக்கும் பொருட்கள் ஆறை எளிதில்  அடைய துணை போக வல்லது .

"சிகரெட் பிடிக்கும் அனைவரும் புகையோடு  தனக்கான சங்கையும் சேர்த்தே ஊதுகின்றனர். "

     எனது வட இந்திய நண்பர் ஒருவர் வாயில் மாவாவை எந்நேரமும் அதக்கி வைத்துக்கொண்டு இருப்பார் . மாவாவின் கெமிக்கல்கள் அவரது உதட்டின் செல்களில் mutation நை தூண்டி விட்டு ஆறு மற்றும் பனிரெண்டை வேகமாக அடைய ச்செய்து கட்டி உண்டாக்கியது ,.தாடையையே  அகற்றும் நிலைமை . அந்தோ பரிதாபம் , தாடையை அகற்றியும் புற்று செல்கள் உடல் முழுதும் பரவியதால் மரணத்தை தழுவினார் .
............................................................................
போதையின் hellucination  னை   மழலையின் சிரிப்பிலும் ,அன்னையின் முத்தத்திலும் ,காதலியின் அரவைணைப்பிலும் வரும் endorphin வெள்ளத்தினால் எளிதில் அடையலாமே .
.............................................................................
பின்னர்  எப்படித்தான் இந்த mutation ரேட்டை குறைப்பது ?

, றுத்த பண்டங்களை  தவிர்த்து   பச்சை காய்கறிகள், நார்சத்து உணவுகள்   நிறைய சாப்பிடுங்கள் .

அடுத்த பதிவில் , இன்னும் பல தகவல்களை  பகிர்ந்து கொள்ளாலாம் ........

Thursday, June 7, 2012

தி நாய் ஸ்டோரி - கதையல்ல கருப்பு சரித்திரம்


வடநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது , நல்ல கல்லூரி , இயற்கை எழில் கொஞ்சும் இடம் , ஆனால் பாஷை புரியாது ,வாயினால் வில்லுவண்டி ஓட்டும் எனக்கு  டிகே'வையும் துமாரா நாம் க்யா ஹை' யையும் வைத்து கொண்டு வடநாட்டில் டயர் வண்டி கூட ஓட்ட முடியாத அவல நிலை.
   தெரிந்த பாஷையோ தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான் , சிறு வயதில் நிறைய நாய்கள் வளர்த்தால் நாய் பாஷை தெரியும் .

வந்து சேர்ந்த முதல் நாளே பலத்த மழை. கிஷோருக்கு எப்படி குஷ்பு இடுப்பு பிடிக்குமோ , அது போல எனக்கு மழை மிகவும் பிடிக்கும் .

    மொபைலில் செவ்வானம்  பன்னிர் தூவும் பொன் நேரம்  என பாடிக்கொண்டிருக்க , ஒரு கில்மாடிக்ஸ்சான மூட் create ஆகிகொண்டிருந்தது . அப்போது வெளியே,  " ஆடி காத்துல டவுசர் கிழியுது , இவனுக்கு சிச்சுவேசன்   சாங் ஒன்னு தான் கொறச்சல் ", என்று  பேசிக்கொள்ளும் குரல் கேட்டது .

     நான் பதிலுக்கு " டவுசரே போடாத நாய்ங்க எல்லாம் இத பத்தி பேசுதுங்க , எல்லாம் கலி காலம் ", என்றேன் . 

தங்களின் பாஷையை அடையாளம் கண்டு கொண்டதை எண்ணி அதிர்ச்சியில் பயத்தோடு  என்னை பார்த்தனர் சில்பியும் , கருவாந்தியும் .


இவளுக எப்பவுமே இப்புடித்தான் தம்பி ஊர்வம்பு வளப்பாளுக , தெரியாம பண்ணிட்டளுங்க மன்னிச்சு விட்ருங்க தம்பி என்று என்ட்ரி கொடுத்தாள் அவர்களின் அன்னை தாய்க்கிழவி .
நானும் ரொம்ப நல்லவன் ஆதலால் , அவர்களை பெருந்தன்மையோடும் , கருணையோடும் , அன்போடும் , பெரியமனுசதனத்தோடும் மேலும்  இன்ன பிற"தோடுகளோடும் " மன்னித்து விட்டுவிட்டேன் . 

தாய்க்கிழவி ,  நான் ஒரு கால்நடை மருத்துவன் என கூறியதும் சந்தோசப்பட்டாள் , ரொம்ப நாட்களாக ஒரு பக்க இடுப்பு வலிப்பதாக கூறினாள் .
 நான் அவளிடம் வயதுக்கு தகுந்தவாறு ஒழுங்காக நடந்து கொண்டால் இது போன்ற வலிகளை தவிர்க்கலாம் என்றேன் . கடுப்பாகி என்னை முறைத்தாள். 

உண்மை கசக்கத்தானே செய்யும்.   

பிறகு நான் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி விசாரித்தேன் . 

    கல்லூரியில் வலது  பகுதிக்கு சோப்ராஜ் தலைவனாக உள்ளான் என்றும் , இடது பகுதில் மைகேல் ஆட்சி நடப்பதாகவும், ஆனால் இருவரும் நண்பர்கள் என்றும் , இருவரும் முரடர்கள் என்றும் , அவர்களிடம் இருந்து தனது இரண்டு பெண்களையும் காப்பாற்றுவதற்காக  ஈசானி மூலைக்கு குடி வந்துவிட்டதாகவும் கூறினாள். 

ஆனால் இவளின் இந்த கவலையை சில்பியும் , கருவாந்தியும் லட்சியம் செய்ததாக தோன்றவில்லை .


பின்னர் மழை நின்றதும் தாய்கிழவி தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள் . போகும் பொது நான் அவளிடம் இடுப்பு பத்திரம் என்றேன் . திரும்பவும் முறைத்து விட்டு சென்றாள். 

தாய்க்கிழவி சென்ற பின்னர் . சில்பியும் கருவாதியும் என்னிடம் பெர்சனலாக மன்னிப்பு கேட்டனர் . நான் நல்லவனாதலால் அதை அப்பவே மறந்து விட்டேன் என்றேன் . உன்னை பார்த்தால் நல்லவன் போல தெரியவில்லையே என்றார்கள் . நான் நல்லவன் என்று நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளான காரணத்தினால் அவர்கள் இருவரையும் கட்டையால் அடிக்காமல் விட்டு விட்டேன் .

......................................................................................................
நாட்களை இன்பமாக கழித்தனர் சில்பியும் கருவாந்தியும் .  


விதி அவர்களை நோக்கி புன்னகைத்தது ...

ஒரு நல்ல நாளில் மைக்கேலும் சோப்ராஜும் ஈசானி மூலைக்கு விஜயம் செய்தனர் .
தொடரும்...........

Wednesday, June 6, 2012

கடகம்

Gaia  hypothesis என்று ஒரு தியரி உள்ளது , இதன் படி உலகம் என்பது நம்மை போல ஒரு உயிரினம் . அது  தன்னை தானே சரி செய்துகொள்ளவும் , evolve ஆகவும் வல்லது .நமக்கு உறுப்புகள் உள்ளது போல அதற்கும் உள்ளது , தோலாக ஓசோன் ... நுரை ஈரலாக காடுகள் ....
பூமித்தாய் - GAIA mother
தற்போது   பூமித்தாய்க்கு  காய்ச்சல் ( புவி வெப்பமயமாதல் ) . இது போல காய்ச்சலும் குளிர் சுரமும் பூமிக்கு புதிதல்ல . நாம் தான் குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறோம் ( ஏனென்றால்  இதனால் பூமி அழியாது ஆனால் நாம் அழிய வாய்ப்பு உள்ளது - ராட்சத பல்லிகள் அழிந்ததை போலவே ) .
..........................................................
உடலில் கிருமிகள் ஊடுருவினால் , அவற்றின் வளர்ச்சியை உடல் வெப்பம் அதிகரிப்பதன் மூலம் கட்டுப்படுத்துவதற்காக காய்ச்சல் வருகிறது . காய்ச்சல் வந்தால் சரி செய்து கொள்ளலாம் , கான்செர் வந்தால் ? 

பூமித்தாய்க்கு புவி வேப்பமயமாகும் காய்ச்சல் நோயைவிட தற்போது ஒரு கொடிய கான்செர் நோய் வந்துள்ளது , காய்ச்சலுக்கு காரணமே அந்த புற்று நோய் தான் ...
..............................................................................................................
புற்று நோய் - பெயர்க்காரணம் : பிளான் பண்ணி கட்டப்பட்ட கட்டிடம் அல்ல ஈசலின் புற்று , ஈசலின் எண்ணிக்கைக்கு தக்கவாறு அனைத்து பக்கங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கும் .

அதே போல , புற்று நோயும் விதிகளை மீறி வளரும் கட்டிடம் போல விரிவடைத்து கொண்டே இருக்கும் .


 பக்கவாட்டில் விரிவடைவதாலும் ,பல்வேறு உறுப்புகளை ரத்தகுழாய்களின் மூலம் பயணாமாகி தாக்கவல்லதாலும் கான்செர் என்று அழைக்கப்பட்டது ( நண்டு பக்கவாட்டில் பயணிக்கும் ) .

..................................................உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ்   மூலம்  வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .


 அப்படி நிரப்பி முடித்த பின்அவற்றின் உற்பத்தி  நின்று விடும். அப்படி நிற்காமல் வளர்ந்து கொண்டே இருந்தால் கட்டியாக மாறி விடும் , அதே கட்டி மற்ற இடங்களுக்கும் பரவக்கூடிய அளவுக்கு புற்றுநோயாக மாற்றமடையலாம்  ..


ஒரு சின்ன காயத்துக்கு  இவ்ளோ பில்ட்அப்பா என்று நீங்கள் கேட்கலாம் ....
உண்மை தான் , இவ்வாறு நிகழ சாத்தியங்கள் மிக குறைவு . அதை பற்றி பின்னால் காண்போம் .
..................................................................................

உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு சமன்பாடு உள்ளது . ஒரு காட்டில் நூறு மான்களுக்கு ஐந்து சிங்கங்கள் ( அதில் ஒரு ஆண் , நான்கு பெண்) என்பது சமன்பாடு .
இதுவே நூறு சிங்கம் , ஐந்து மான்கள் ( ஐந்துமே ஆண்கள் ) என்று இருந்தால் ?

மானுக்கு பதிலாக ஒட்டகசிவிங்கி - அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க 

இந்த இயற்கையின் சமன்பாட்டை மீறும் எதுவும் , தான் அழிவுப்பாதையை நோக்கி செல்வதோடு மட்டும்மல்லாமல் , பூமிக்கும் நோயாக விளங்கும் .
.........................................................

சிங்கங்கள் தேவைக்கு அதிகமாக மான்களை கொல்வதில்லை, யாராலும் வெல்ல முடியாவிட்டாலும் சிங்கங்கள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பல்கி பெருகுவதுமில்லை , மேலும் அவற்றின் வாழும்  இடத்தை ( territory  )விட்டு வேறு இடங்களை  ஆக்கிரமிப்பதும் இல்லை .

உலகின் இந்த சமன்பாட்டை இரு உயிர்கள் உடைத்துள்ளன , அதில் ஒன்று உயிரினமா என இன்னும் வகைப்படுத்த முடியாத வைரஸகள் , 


மற்றொன்று................ வேறயாரு ?நாமதான் .

....................................................................

மனிதர்கள் பல்கிப்பெருகுகின்றனர் . இயற்கையால் சமமாகப்பிரித்தளிக்கப்பட்டுள்ள வளங்களை சுரண்டுகின்றனர் . வளமும் இடமும் தீர்ந்தால் .... அடுத்த இடங்களுக்கு வளங்களை சுரண்ட செல்கின்றனர். இவை அனைத்தும் புற்று நோயின் குணங்கள் .

 

ஒரு ஒட்டுண்ணி என்பது, தான் சார்ந்து  இருக்கும் உயிரினத்தை முழுவதும் அழிய விடாது . ஏனென்றால் அதை survival லுக்கு அது சார்ந்திருக்கும் உயிரினத்தின் survival அவசியம் . ஆனால் புற்று நோயும் சரி , மனிதர்களும் சரி ஒட்டுண்ணிகள்  அல்ல  ,.மனிதர்கள்  உலகின் ஒரு அங்கம் , புற்று நோய் செல்கள் சிறிதே  மாற்றம் அடைந்த நமது சொந்த செல்கள் , ஆனால் இருவருமே தனது வாழ்வாதாரமான உடலை / பூமியை அழிவுப்பாதைக்கு இட்டு செல்கிறார்கள் 
............................................................................

இவ்வாறு மனிதனையும் புற்று நோயையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ?

மனிதன் பரிணாமத்தின் எச்சம்  ...

மேலும் , உலகிலேயே evolution வேகமாக நடக்கும் இடம் - புற்று நோய் செல்களில் தான் .
...........................
இவ்வாறு தொடர்பு படுத்தி ஆராய்வது எளிய புரிதலுக்கு வழிவகுக்கும் .


மேலும் 


புற்று நோயின் பரிணாமத்தையும் , பரிணாமத்தால்  வந்த புற்று நோயையும் பற்றி பின்வரும் பதிவுகளில் விவாதிக்கலாம் . புற்று நோய்க்கான ஆராய்ச்சி பரிணாமரீதியில் அனுகப்பட்டால் , அதை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் .

.............................................................................................................

இந்த தொடர் பதிவின் நோக்கம் ...

1.நாம் புற்று நோயை பற்றி அடிப்படைகளை புரிந்து கொள்வது , 
2.எவ்வாறு அதை தவிர்க்கலாம் என அறிவது ,
3.ஒரு கால்நடை மருத்துவனாக எனது துறையில் நான் அறிந்த புற்று நோயை பற்றிய சில வெளிச்சத்திற்கு வராத தகவல்களை வெளியிட்டு அது human medicine நண்பர்களை சென்றடைய முயலுவது ,
4.மேலும் சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ...
( eg . mutation rating பற்றி குறிப்பிட வில்லை?...).

.......................................................

தொடர்வோம் Related Posts Plugin for WordPress, Blogger...