கருப்பொருள் - 2
உணவு:
ஐம்பூதங்களால் ஆனதே இப்பூமி. இப்பூமியில் உலாவும் நம் உடலும் இந்த ஐம்பூதங்களால் ஆனதே. இந்த ஐம்பூதங்களும் ஐம்புலன்கள் வழி உடல் வளர்க்கின்றன. இவ்வாறு உடலைக் காக்கவும் உடலை வளர்க்கவும் புலன்கள் நமக்குத் துணைபுரிகின்றன.
“எவ்வாறு இந்த ஐந்து பூதங்களும் உடலாய் ஆனது?”
சுற்றியிருக்கும் கருப்பொருட்களின் உதவியுடன் பெறப்பட்ட உணவால் உடல் உருவானது.
“உணவு என்பது என்ன?”
ஒவ்வொரு நிலத்திற்கும் அங்கிருக்கும் காலத்திற்கும் ஏற்ப; விலங்குகளின் தேவையை அனுசரித்து; அவைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நிலம் மற்றும் நீரின் துணை கொண்டு வழங்குகின்றன தாவரங்கள். அதை எடுத்துக்கொண்டு தமது உடல் வளர்க்கின்றன தாவரஉண்ணிகள். அவற்றை ஊன்உண்ணிகள் வேட்டையாடி உண்ணுகின்றன. உணவுச் சங்கிலியில் இதுபோல ஒவ்வொரு படிநிலையில் இருக்கும் விலங்குகள் தமக்கான உணவை பெறுகின்றன. எனவே தமிழர்களைப் பொருத்தமட்டில் உணவு என்பது நிலத்தொடு நீரே.
உணவே உயிர் வளர்க்கும் சாதனம். அது சூழலில் இருக்கும் கருப்பொருட்களின் துணையுடனே பெறப்பட வெண்டும். உணவு என்பது சூழலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற கருப்பொருட்களால் பெறப்படுகிறது.
அறிவியலும் உணவை உண்ணத்தக்க உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களாகத்தான் பகுக்கிறது.
உயிருள்ள உணவுகள்: தாவரம், பூஞ்சை, ஈசல் போன்ற பூச்சிகள், விலங்குகள், விலங்கு தரும் பால் முதலியவை.
உயிரற்ற உணவாகும் பொருட்கள்: உப்பு, சுண்ணாம்பு முதலிய மினரல்கள், வினிகர், நீர்... போன்றவை..
நவீன அறிவியல், உணவு என்பதை மேக்ரோ என்றும் மைக்ரோ என்றும் பகுக்கிறது.
மைக்ரோ என்பவை அளவில் குறைவாகத் தேவைப்படுபவை. மேலும் மைக்ரோக்கள் உடல்நலம் பேணுவதற்கு இன்றியமையாதவை.
மேக்ரோ: மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் அமினோஅமிலங்களை அடிப்படையாகக் கொண்ட புரதங்கள்.
மேக்ரோ என்பவை அளவில் அதிகம் உண்ணப்படுபவை. ஆற்றல் மற்றும் கட்டுமானத்திற்கானவை. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மாவுச்சத்து:
கீழ்காணும் படத்தில் இருக்கும் ஒவ்வொரு அறுகோண டப்பாவும் ஒரு சர்க்கரை மூலக்கூறு. இதில் கிளைகோஜன் என்பது விலங்குகள் உடலில் எதிர்காலத்தேவைக்காக பொதித்துவைக்கப்பட்ட சர்க்கரைப் பொதி. இந்த செல்லுலோஸ் என்பது தான் நார்சத்து. இதைப்பற்றி தாவரங்கள் பரிணாமத்தைப் பற்றி பார்க்கும் போது நாம் படித்தோமே… ஞாபகம் இருக்கிறதா? இவற்றையே மாடுகள் முக்கிய உணவாகக் கொள்கின்றன.நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பேப்பர்கூட இதே செல்லுலோசால் ஆனது தான். ஸ்டார்ச் என்பது செடிகள் கிழங்கு வடிவில் சேர்த்து வைக்கும் மாவுச்சத்து. இவற்றில் கிளைகளற்ற சங்கிலி தான் அமைலோஸ். இவற்றை உடைக்கும் நொதியே அமைலேஸ்.
பேப்பரை எரித்தால் சில மணித்துளிகளே எரியும். காரணம் அதில் ஆற்றல் சிறிதளவே அடங்கியுள்ளது.
கொழுப்புச் சத்து:
செல்லுலோஸ் கொண்ட பச்சைப் புற்களைத் தின்று; வெள்ளைப்பால் தரும் பசுவை; புலி உண்கிறது. பசுவின் ஊனில் கொழுப்பும் புரதமும் மிகுந்து உள்ளது. பாலிலும் நெய்யிலும் ஊனிலும் உள்ள கொழுப்பு; புற்களின் செல்லுலோசிடம் இருந்து பெற்ற ஆற்றலைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அது இன்னும் அதிக ஆற்றலை அடர்த்தியாகக் குவித்து வைத்துள்ளது. கொழுப்பையோ நெய்யையோ எரித்தீர்கள் என்றால் அது நாள் முழுக்க எரியும். இதன் மூலம் நாம் கொழுப்பின் ஆற்றல் அடர்த்தியை அறிந்து கொள்ளலாம்.
புரதச் சத்து:
புரதம் என்பது உடல் கட்டுமானத்திற்கு அவசியமான ஒரு மேக்ரோ.
எவ்வாறு வெறும் ABCD… எனும் 26 எழுத்துக்களைக் கொண்டு பெரும்புத்தகத்தை எழுதுகிறோமோ அதே போல் , நம் உடலும் 20 அமினோ அமிலங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது .
இது போன்ற மேக்ரோ மற்றும் மைக்ரோக்களால் ஆன உணவானது வாய் எனும் குழாயின் ஒருபகுதி ஓட்டை வழியாக உள்தள்ளப்பட்டு, ஆசனவாய் எனும் மறுஓட்டை வழியாக வெளியேறுகிறது. உணவானது வாயால் அரைக்கப்பட்டு, சிறுகுடலில் பித்தம் மற்றும் கணைய நொதிகளால் குளுக்கோஸ் போன்ற அடிப்படை சர்க்கரை மூலக்கூறுகளாகவும், அமினோ அமிலங்களாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்படுகிறது. மீதம் இருக்கும் குடல் கழிவுகள், பெருங்குடலுக்குச் சென்று கழிவில் இருக்கும் நீர்சத்து மற்றும் உப்புச்சத்து முதலியன பெருங்குடலில் உறிஞ்சப்படுகிறது. மேலும் குடல் வாழ் நன்மை செய்யும் கிருமிகள் கழிவில் இருக்கும் நார்சத்தின் துணை கொண்டு, பல நல் விட்டமின்களை உருவாக்குகிறது. இறுதியாக ஐம்புலன்கள் வழி நுழைந்த உணவானது நமது உடலாய் உருவெடுக்கிறது. உறிஞ்சப்பட்டது போக மீதம் உள்ளவை மலமாகிறது. அந்த மலமே நிலத்தில் இருக்கும் சிற்றுயிர்களுக்கான உணவாகிறது. அதைக் கொண்டு தாவரங்கள் வளர்கின்றன.
உடலுக்குள் செல்லும் உணவை உடல் மூன்று விதமாக கையாளுகிறது,
1. சக்கை (கரும்பு, முருங்கை, பனங்கிழங்கு இவற்றைத்தின்னும் போது நாம் துப்புவது)
2. சத்து (துப்பியது போக உடலுக்குள் சென்றவை அன்னரசமாய் மாற்றப்பட்டு உடல உறிஞ்சுவது)
3. மலம் - மீதம் கழிவுகளாக வெளித்தள்ளப்படுவது.
இவ்வாறு உடலால் உறிஞ்சப்பட்ட ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் தான், வளி எனும் பிராணவாயுவால் எரிக்கப்பட்டு, உடல் இயங்குவதற்கான ஆற்றலைப் பெருகிறது. இந்நிகழ்ச்சியே ‘தகனம்’ எனப்படுகிறது. இதை கீழ்காணும் படம் விளக்குகிறது.
இதனால் சக்தி எனும் ‘அழல்’ உடலுக்குக் கிடைக்கிறது. இந்த தகனத்தை செய்யும் தகன மேடையாக ‘மைட்டோகான்ட்ரியா’ உள்ளது. உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு குருதி வழியாக செல்களை அடைந்து அவை செல்களில் தகனம் செய்யப்படுவதை கீழ்காணும் படம் விளக்குகிறது.
ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்கள் வளியின் துணையுடன் எரிக்கும் இந்நிகழச்சிதான் உயிர்களின் அடிப்படை வேதிவினை. இதே டெம்ப்ளேட் தான் நம் போன்ற அனைத்து ஜீவராசியின் உடல் செல்லுக்குள்ளேயும் நடக்கிறது.
இந்த வேதிவினையின் முடிவில் வெளித்தள்ளப்படும் கரியமில வாயுவும் நீரும் தாவரங்களின் சமையலுக்கான மூலப் பொருட்கள். இதைக் கொண்டுதான் அவைகள் உணவை உற்பத்தி செய்கின்றன.
தாவரங்களும் விலங்கினங்களும் இவ்வாறு இந்த வேதி வினையை எதிரெதிர் பக்கத்தில் நிகழ்த்தி உலகின் சமநிலையை பேணுகின்றன.
இந்த வேதிவினை நடப்பதற்கு ஆதாரமான ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உறிஞ்சும் வேலையை ஜீரணமண்டலம் செய்கிறது. பிராண வாயுவை உடலுக்குள் கொண்டுசென்று கரியமில வாயுவை வெளியேற்றும் வேலையை நுரை-ஈரல் செய்கிறது. பிராணவாயு மற்றும் ஜீவசக்தியுள்ள இரசாயனப்பொருட்களை உடல் முழுவதற்கும் கொண்டு செல்லும் வேலையை இரத்தம் செய்கிறது. இந்த இரத்தத்தை தமனி எனும் பைப்புகள் வழியாக அனைத்து செல்களுக்கும் பாய்ச்சும் வேலையை இதயம் எனும் பம்ப் செய்கிறது. இதில் ஈரல் என்னும் உறுப்பு நச்சுப் பொருட்களை உடலில் இருந்து நீக்க பாடுபடுகிறது.
கரியமிலவாயு தவிர்த்த மற்றனைத்து நீரில் கரையும் கழிவுகளையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. அதிகசக்தி தேவைப்படும் பதட்டப்பொழுதில் தகனத்தை அதிகமாகச் செய்யவும், உண்டபின் சீரணிப்பதை பதட்டமல்லா பொழுது செய்யவும் மூளை மற்றும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. மொத்தமாக இவ்வனைத்து உறுப்புக்களும் சிதறிவிடாதபடி தோல் எனப்படும் பையில் பொதித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வனைத்து மண்டலங்களையும் கட்டுக்கம்பி; சிமெண்ட் வைத்து கட்டியது போல உருவம் கொடுக்கவும் நகர வைக்கவும்; நரம்பு மண்டலத்தின் கட்டளைப்படி ‘எலும்பு-தசை மண்டலங்கள்’ வேலை செய்கிறன.
‘கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’
அந்த வாய்வு போச்சு என்றால், ‘படையப்பன் மூச்சு நின்னு போச்சு’ என்று அர்த்தம்.
இந்த தேகமெனும் பைக் ஓடுவதற்கான பெட்ரோல்தான் உணவு. அந்த உணவிற்கு மூன்று முக்கியமான வேலைகள் உள்ளன.
1. சக்தி அளிப்பது
2. உடலின் வளர்சிக்கான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடலின் தேய்மானத்தை சரிசெய்யும் பட்டி டிங்கரிங்க் வேலைகள் செய்வது.
3. உடலைக் காக்கும் வேலையைச் செய்வது.
இந்த மூன்று வேலைகளைப்பற்றிய புரிதல், பழங்கால சித்தமருத்துவத்தை எழுதியவர்களுக்கும் நவீன அறிவியலாலர்களுக்கும் தெளிவாக இருந்திருக்கிறது.
சரி மைக்ரோக்களின் கதைக்கு வருவோம். மைக்ரோக்கள் சிறிதளவே உடலுக்குத்தேவை என்றாலும் அவை உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள்.
“மைக்ரோகளை கண்டுபிடித்தது அறிவியல் அறிஞர்கள் மட்டும்தானா? பண்டைய மக்களுக்கு இதைப் பற்றி அறிவு என்பது இல்லையா?”
இந்தப் பெயர் வைத்தது மட்டும்தான் அவர்கள். இதைப் பற்றிய புரிதல் மக்களுக்கு இருந்திருக்கிறது.
அறிவியலாலர்கள்; வெண்ணை, பால் முதலியனவற்றை உண்டால் பார்வை மேம்படுகிறது என்றுணர்ந்தனர். உயிர்வாழ அத்தியாவசியமானவை எனும் பொருள் பட விட்டமின் என பெயர் அந்த சக்திக்கு பெயர் சூட்டினர். விட்டமின் ஏ’வை அறிவியல் இவ்வாறு கண்டறிந்தது.
பழங்களை பலநாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. அந்த காலத்தில்; நொடுந்தூர கடல் பயணங்களில்; பழங்கள் இல்லா உணவை உண்டுவந்த கடல் பிரயாணிகளுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. எலுமிச்சம்பழத்தை உண்பதன் மூலம் இந்நோய் தவிர்க்கப்படுவதை உணர்ந்த அறிஞர்கள் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் ஒரு சத்துதான் இதற்கு காரணம் என்று அந்த சத்துக்கு ‘விட்டமின் சி’ என்று நாமகரணம் சூட்டினர். அதுவரை மாவுசத்து, புரம், கொழுப்புச்சத்து மட்டும் தான் கணக்கில் இருந்தது. சில சத்துகள் உணவில் குறைந்தால் உடல்நலிவுறும் என்ற புரிதல் இவ்வாறு நவீன அறிவியலுக்கு கிட்ட ஆரம்பித்தது. அவற்றிற்கு ஏ, பி,சி, டி என பெயர்சூட்ட ஆரம்பித்தனர்.
பனிப்பிரதேசத்தில் பழங்களே இல்லை. அங்கே இருக்கும் எஸ்கிமோக்களுக்கு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் நோய் இல்லை. காரணம் அவர்கள் சீல்களை வேட்டையாடி உண்ணும்போது அவற்றின் கிட்னியைச் சுற்றி உள்ள கொழுப்பை பச்சையாக உண்டனர். அதை ஆராய்ந்து பார்த்த போது அதில் ‘விட்டமின் சி’ இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு பெயரிடாமலேயே அதைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர் எஸ்கிமோக்கள்.
சமச்சீரற்ற உணவு உண்ட பொழுது உடல் தனக்கு என்ன தேவை என்று கேட்கும்.
அதன் அடிப்படையில் அவற்றின் பெயர் தெரியா விட்டாலும் அந்த அத்தியாவசியமான சத்தை… உதாரணத்துக்கு ‘வைட்டமின் சி’ யை உடம்பு வேண்டி கேட்டுக்கொள்ளும். மாசமாய் இருக்கும் பெண்கள் புளிப்பான பொருளாய் சாப்பிட விரும்புவது இதன் காரணமாகத்தான். (சாம்பல் cravingகிற்கான காரணம், மினரல்கள் தேவையை உடல் பெறுவதற்காக).
அதேபோல் எகிப்தியர்கள் மாலைக்கண் நோயை சரிசெய்ய ஈரலை உண்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஈரலில் உள்ள ஏதோ ஒரு சத்து குறைவதால் மாலைக்கண் நோய் வருகிறது என்பதைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருந்தது.
ஆறிவியலாலர்கள் உணவில் உள்ள மைக்ரோக்களை இதுபோல ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்க ஆரம்பித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் நமக்கு நன்மை அளித்ததை விட முதலாலிகளுக்குத் தான் அதிகம் நன்மை விளைவித்தது.
இதுகாறும் உணவு என்பதுஒவ்வொரு நாகரிகத்திலும் முழுதான ஒரு பண்டமாய் தான் பார்க்கப்பட்டது.
அரிசி என்பது முழு உணவு. முழு அரிசியை விற்றால் லாபம் குறைவு. அப்ப லாபம் அதிகரிக்க என்ன பண்ணலாம்?
அரிசியில் உமியை நீக்கி, குருணையையும் நீக்கி, பட்டை தீட்டி மதிப்புகூட்டி(மதிப்புக் குறைத்து) விற்கப்பட்டது. அதில் உடைந்த விற்பனையாகாத அரிசி கோழிகளுக்கு தீவனமானது. உமியில் இருந்து எண்ணை பிழியப்பட்டு bran oil என விற்கப்பட்டது. உமியின் சக்கை குதிரைகளுக்கு உணவாக்கப்பட்டது. ஒத்தை அரிசியில் பலவகை இலாபம் என முதலாளிகள் மகிழ்ந்தனர்.
ஆனால் பட்டை தீட்டிய அரிசியை உண்ட மனிதர்களுக்கோ ‘பெரி பெரி ‘நோய் வர ஆரம்பித்தது. கோழிகளுக்கு ‘பாலினியூரைட்டிஸ்’ எனும் வாத நோய் வர ஆரம்பித்தது. கடைசியாக இவ்வனைத்து நோய்களுக்கும் காரணம் ‘விட்டமின் பி1’ (தையமின்) குறைபாடு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டமின் பட்டியலில் மற்றுமொரு விட்டமின் சேர்க்கப்பட்டது.
உமியை குதிரைக்கு கொடுத்தார்களே அது மட்டும் தப்பித்ததா?
பாஸ்பரஸ் அதிகம் இருந்த உமியை உண்டதால் அதன் மண்டை வீங்க ஆரம்பித்தது. இதன்பின்னர் தான் கால்சியமும் பாஸ்பரசும் உடலுக்குத்தேவை, அதிலும் ஒரு விகிதாச்சாரத்தில் தான் அவை உட்கொள்ளப்படவேண்டும் எனும் புரிதல் அவர்களுக்கு வந்தது.
இக்காலகட்டத்தில் தான் உணவைப்பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய தலைதூக்க ஆரம்பித்தன. ஒரு ஆய்வாளர்; பாலின் புரதம், கொழுப்பு போன்றவற்றை தனித்தனியாக ஒரு எலிக்கூட்டத்திற்கும், ‘பாலை’ பாலாகவே மற்றுமொரு எலிக்கூட்டத்திற்கும் கொடுத்து பரிசோதித்தார். விளைவு தனித்தனி உணவாக பாலின் கூறுகளை உண்ட எலிகள் செத்து மடிந்தன. ஆனால் பாலை முழு உணவாக உண்ட எலிகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தன. பாலை எலிக்கு கொடுத்து சாவடித்த பிறகாவது திருந்தினார்களா என்றால் இல்லை. அனைத்தையும் பிரித்து; தனித்தனியாக அவற்றை எவ்வாறு விற்பது என்பதே அவர்களது குறிக்கோளாய் இருக்கிறது
ஆங்கில மருத்துவம் இன்னும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை பற்றியும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவில்லை.
ஒரு உணவை முழுமையாகவே அவர்கள் பார்ப்பதில்லை. உணவு என்பது முழுமையாக உணவு மட்டும் தான். பழங்களிலும் காய்கறிகளிலும் இருப்பவற்றை phyto nutrients என்கின்றனர். phyto nutrients பற்றிய ஆய்வுகள் பெருமளவில் நடந்துவருகின்றன. இவை புற்றுநோயை கூட எதிர்க்க வல்லவை. எனவே அவற்றையும் தனியாகப்பிரித்து துணைஉணவுகள் எனும் பெயரில் விற்க ஆரம்பித்துவிட்டனர்.தற்பொழுது இவை ஆங்கில மருத்துவத்தில் nutraceuticals என துணை உணவுகளாகவும் மேலும் மருந்துகளாகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன.
ஆனால் சித்த மருத்துவம் உணவையும் மருந்தையும் தனித்தனியாக பார்ப்பதில்லை. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை உணவு தான் மருந்து, மருந்து தான் உணவு.
உடலுக்கு சக்தி அளிப்பது,
உடலை பராமரிப்பது மற்றும் உடலைக் காப்பது தான் உணவின் முக்கியமான நோக்கங்களாகும்.
அந்த நோக்கங்களை உணவு எவ்வாறு பூர்த்தி செய்கிறது
எனும் அடிப்படையில் தான் சித்த மருத்துவத்தில் உணவு பாகுபாடானது பகுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பருவத்தின் மாற்றத்தால் எந்த சுவை உடலுக்கு அதிகம் தேவைப்படும் என்பதில் மாற்றம்
நேரலாம். அதையும் பூர்த்தி செய்யும் நோக்கில் தான் சித்தமருத்துவத்தின் உணவுப் பாகுபாடு
அமைக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் பயன்படுத்திய
அதே அடிப்படை கருதுகோளான மூன்றாம் பரிணாமமாகிய பொழுதினையும் உணவோடு இணைத்தே பார்த்தது
சித்தமருத்துவம்.
இந்தப் பாகுபாட்டில் மேக்ரோக்கள்
மைக்ரோக்கள் முதற்கொண்டு அனைத்து ஊட்டச்சத்துகளும் மருந்துகளும் அறுசுவை உணவில் அடங்கி விடுகின்றன.
இந்த அறுசுவை உணவு ஒழுங்காக எடுக்கப்படாவிட்டால்; ஊட்டச்சத்துக்குறைபாடு நேரிடலாம்.
சூழியலில் இருக்கும் கருப்பொருட்களைக்
கொண்டும்; வாழியல் சார் உணவு முறைகளைக் கொண்டும், உடல் நலத்தை பேணும் வழிவகை செய்வதால்
தான் சித்த மருத்துவம் அனைவருக்குமான சிறந்த மருத்துவமாக இருக்கிறது.
மருத்துவம் என்பது பிணியை
சரி செய்யும் வழிமுறைகள். பிணிகளில் முதன்மையானது பசிப்பிணி. அதுதான் வாழ்வில் அனுதினமும்
நம்மை வாட்டும் பிணியும் கூட.
அது மட்டுமல்லாமல் வாந்தி,
பேதி, இரத்த சோகை, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள் முதலிய பல் வகைப் பிணிகள் நம்மை வாட்டுகின்றன.
பிணிகளின் அறிகுறிகள் என்னென்ன,
அவை எவ்வாறு நம் உடலைத்தாக்குகின்றன, இதை நாம் எவ்வாறு சரிசெய்துகொள்வது, என்பது மனிதனாகப்பிறந்த
அனைவரின் மனதையும் உறுத்தும் கேள்விகளாகும்.
இந்தக்கேள்விகளுக்கான பதிலை;
பண்டைய கால மக்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பித்தம், இரத்தம், சளி முதலியன அதிகரிப்பதும் மற்றும்
வெளியேறுவது உடலின் பிணியைக் குறிப்பது என்ற அறிவு கிட்டத்தட்ட பண்டைய மக்கள் அனைவருக்கும்
இருந்திருக்கிறது. கண்களின் இமைகளை கீழிறக்கிப்பார்த்தாலே காமாலை, இரத்தசோகை போன்றவற்றை
mucous membrane காட்டிக்கொடுத்துவிடும்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த பண்டைய மக்களுக்கு;
சாவு என்பது விலங்குகள் வடிவிலோ, விஷத்தின் வடிவிலோதான் பெரும்பாலும் நிகழ்ந்திருக்கிறது.
இவற்றினால் ஏற்படும் மரணங்கள் உடனடி மரணங்கள்.
காய்ச்சல், சளி, வாந்தி பேதி போன்றவற்றாலும் மக்களுக்கு
மரணம் நிகழ்ந்துள்ளது. இவை உடனடி மரணத்தை சம்பவிக்காமல்
சில நாட்களுக்கு உடலைவாட்டி, இதன் காரணமாய் உடலின் சமநிலை தவறி, பின் மரணத்தை சம்பவித்திருக்கிறது.
நீண்ட ஆரோக்கிய
வாழ்வு பின்னர் வேண்டாத நிகழ்வுகளால் உடனடி சாவு. இவ்வகை சாவுதான் அக்காலங்களில் அதிகம்
நிகழ்ந்து வந்திருக்கிறது. உடனடி இறப்புகளான
அரவம்தீண்டி இரத்தம் உறையாமல் வெளியேறி இறப்பது, பித்தவாந்தி எடுத்து உடல்நலிவுற்று
மரணம் நிகழ்வது, சளி மூச்சுத்திணறல் போன்றவற்றால் ஏற்படும் இறப்புகள், போன்ற சம்பவங்கள்
மனிதமனத்தை கலங்கச்செய்திருக்கும் என்பது திண்ணம். இது போன்ற வண்ண திரவங்களின் வெளியேற்றம்
மக்களை பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த ஜலம் அல்லது திரவங்கள் உடலில்
மிகுதலே நோய்க்காண முக்கிய காரணியாக பண்டைய காலங்களில் அவதானிக்கப்பட்டது.
வளி
(வாத தோஷம்) என்பது ஜலமல்ல, வளியைப்பற்றி
hippocratic corpus புத்தகத்தில் குறிப்புகளேதும் இல்லை. வளி என்பது காற்றை
மட்டும் தான் குறிக்கிறதா என்றால் இல்லை. வள்ளுவர் சித்தமருத்துவத்தைப் பற்றிக்குறிப்பிடும்
போது ‘வளி முதலாய்’ என்று தான் குறிப்பிடுகிறார். வளியைப் போன்ற ஒரு கருதுகோள் சீனமருத்துவத்திலும்
கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நமது சித்தமருத்துவத்தின் ‘நாடி’ போன்ற ஒரு கருதுகோள்
அது. அதை அவர்கள் “Qi” என்றழைக்கின்றனர்.
Qi சமநிலை தவரும் போது நோய் உருவாகிறது என்பது அவர்களின் கொள்கை. யிங் மற்றும் யாங்
எனும் இரு எதிர் ஆற்றல்கள் இணைந்து Qi வின் சமநிலையைப் பேணுகின்றன. இரு எதிர் துருவங்கள்
இணைந்து ‘இரட்டையில் ஒற்றுமை’ சமநிலை பேணுவதே இந்தத்தத்துவத்தின் அடிப்படைக் கூறாகும்.
புத்தமருத்துவத்தின்
பாடல்களிலும் ‘சரக சம்ஹிதா’ நூலிலும் வாத பித்த கப தோஷங்கள் பற்றியும், தாதுக்கள் பற்றியும்,
மலம் எனும் கழிவுகளைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. Samkhya-karika எனும் நூல் உணவின் குணங்களாக ‘சத்வ தமஸ் ரஜோ’ என்பனவற்றைப்
பற்றிக் குறிப்பிடுகிறது. சித்த மருத்துவமும் இதே கருதுகோள்களின் அடிப்படையில் தான்
இயங்குகிறது. உற்று நோக்கினால் இந்திய மருத்துவமுறைகள் அனைத்தின் அடிப்படையும் ஒன்றுபோலவே
உள்ளன.
“பித்தம், கபம் போன்ற ஜலங்களும் வளி போன்றவையும்
என்ன? அவற்றிற்கும் உணவுக்கும் என்ன தொடர்பு? “
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...