கருப்பொருள் - 1
காலம்: கிபி 2050
இடம்: கடற்கோளுக்குத் தப்பிய சென்னையின் ஒரு பகுதி.
"நண்பா… என் பையனுக்கு எலும்புக் குறைபாடு இருக்கிறது. பால் நிறைய குடிக்கிறான், இருந்தும் இந்தக் குறைபாடு எப்படி வந்தது என்றே தெரியவில்லை."
"உடலில் கால்சியம் சேர்வதற்கு பால் மட்டும் பத்தாது நண்பா."
"உண்மைதான், அதற்காகத்தான் டாக்டர் விட்டமின் கே, மக்னீசியம் மாத்திரைகளை சேர்த்து உண்ணக் கொடுத்தார், அப்பொழுதும் குறைபாடு தீரவில்லை.
இவ்வளவு கொடுத்தும் ஊட்டச்சத்து குறைபாடு வருகிறது. ஆனால் காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு இது போன்ற குறைபாடுகள் ஏதும் வருவதில்லையே ஏன்? "
"அது அதற்காக விதிக்கப்பட்ட சூழலில் படைக்கப்பட்ட உணவுகளை உண்டு வருகிறது. இயற்கையை நீ உற்று நோக்கி இருந்தால் தெரியும்.
நம்மைப்போலவே ஜீன்களை கொண்ட சிம்பன்சி குரங்குகளைப் பார் நண்பா. அவற்றின் உணவில் பெரும்பான்மையாக இருப்பது அத்திப்பழங்கள். அவற்றில் மேற்கூறிய அனைத்து சத்துக்களும் இருக்கிறது."
"அப்போ அந்தக் குரங்குகளை பாவித்து நாமும் அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளலாமே?"
"அப்படி எடுத்துக் கொண்டாலும் உடலில் கால்சியம் சேர்வது கடினமே. ஏனெனில் கால்சியம் உடலில் சேருவதற்கு விட்டமின் டி தேவை."
"அப்போ வெயிலில் விளையாடச் சொல்ல வேண்டியதுதான்."
"இந்த காலகட்டத்தில் அதுவும் பயனற்றது நண்பா. நமது நகர் முழுவதும் காற்று மாசடைந்துள்ளது. அதனால் போதிய சூரிய வெளிச்சம் உடலில் படுவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகம், வாழத் தகுதியற்றதாக மாறிவருகிறது."
"கவலை வேண்டாம் நண்பா சில வருடங்களில் நாம் அனைவரும் செவ்வாய்க்குச் சென்றுவிடுவோம். அங்கே நாம் புது வாழ்வைத் தொடங்கலாம்."
________
கருப்பொருட்களின் முக்கியத்துவம்:
கருப்பொருள் என்பது நம்மைச்சுற்றி இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களால் அமைந்தது. அது நமது உடல் நலத்தை பேணுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஐவகை நிலங்களில் வெவ்வேறு கருப்பொருட்கள் உள்ளன. தெய்வம் எனப்படும் ஆற்றல், உணவு, பறவைகள், விலங்குகள், தொழில், மரங்கள், மலர்கள், பறை, யாழ், பாடல் முதலிய இசை ஓசைகள் அனைத்துமே கருப்பொருளில் வருகின்றன.
ஐவகை நிலங்கள் மற்றும் அதற்கேற்ற வெவ்வேறு வாழ்முறைகளை கலாச்சாரத்தை நாம் பின்பற்றி வந்துள்ளோம், அதுவே நம் பண்பாடு எனப்படுகிறது. அந்த வாழ்வியல் முறையில் நேரும் சிறு பிசகும் நம் நலத்தை நேரடியாகவோ மறை முகமாகவோ பாதிக்க வல்லவை. கால்நடைகளுடன் நெருங்கிய பொழுதே, நாம் அவைகளிடம் இருந்து பல கிருமிகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அந்த கொள்ளை நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் பெற்றவர்களின் சந்ததிகள் தான் நாம். நிஃபா, கொரோனா, பறவைக்காய்ச்சல் போன்றவை; நம் எல்லைகளை வனத்திற்குள் விஸ்தரிக்க எண்ணியதால் உருவானவை. வனவிலங்குகளை அழித்தொழித்துவிட்டு நம்மால் புவியில் வாழ்ந்துவிட முடியாது. வனத்தின் பெரும் விலங்குகளை விட்டுவிடுவோம்; ஒரு எறும்பைக்கூட நாம் அழிக்கக்கூடாது. அது இருதியில் நாம் வாழும் சூழலையே பாதித்து நமது இருப்பை கேள்விக்குறியாக்கிவிடும். நமது உடல்நலம் பாதிக்கும் ஒவ்வொரு வியாதியையும் நூல்பிடித்துக்கொண்டு போனோம் என்றால் அது சூழல் காரணி ஒன்றில் போய் முடியும்.
கருப்பொருட்கள் எவ்வளவு முக்கியமானது. அது எப்படி நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப்பற்றிக் காணலாம்.
கஷ்ட்டமா இருக்குல்ல?
ஏன் மாங்கா, இலையைப்போலவே பச்சை நிறத்தில் இருக்கு?
ஏன் மாங்காயில் இருந்து வாசம் வருவதில்லை?
மாங்காய் ஏன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டேங்குது?
இதுவே மாம்பழமா இருந்தா... இலைகளுக்கு நடுவே வசீகரிக்கும் பளீர் வர்ணத்தில் தெரியுமல்லவா? கண் தெரியாத மாற்றுத்திறனாளி கூட வாசனை கொண்டு அதனை அடையாளம் காணமுடியுமல்லவா?
"காயைப்போல் அல்லாமல் பழம் மட்டும் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்?"
கிட்ட வாங்களேன், உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்.
தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் எந்த ஒன்றும், வாசனைத் திரவியங்களையும் பளீர் வர்ணங்களையுமே தேர்ந்தெடுக்கும், மனிதர்கள் உட்பட. (இந்தப் பளீர் வர்ணங்கள் எச்சரிக்கவும் பயன்படும் என்பதை மறந்து விடாதீர்கள்).
இவ்வாறு பழத்தை வெளிப்படுத்தவதால் மரத்திற்கு என்ன லாபம்?"
பழத்தை உண்ட குரங்கு, விதைப்பரவலுக்கு உதவுகிறதல்லவா?
சரி அத விடுங்க... பழுக்காத காய்களை உடைய தாவரம்தனை எங்கேனும் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
தெரியலையா ?
நானே சொல்றேன்...
‘ஊமத்தை.’
இந்தச் செடியில, இதோட காய்கள் எங்கே இருக்கு?
அவ்ளோ சீக்கிரம் வெளிய தெரியாது... கீழ குனிஞ்சு பாருங்க… தெரியும்.
ஊமத்தை, விதைகளை வெடித்துப் பரவ விடும், மேலும் இதன் விதைகள் நீரிலே மிதக்க வல்லவை. அதன் விதைப்பரவலுக்கு விலங்குகள் தேவையில்லை… அதனால் அது தனது காய்களை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
பசியோடு அலையும் விலங்குகள் காய்களைக் கண்டுகொள்ளும் வாய்ப்பு இருப்பினும், அக்காய்களைக் கண்டுகொண்ட விலங்குகளை, முட்கள் கொண்டு எச்சரிக்கிறது ஊமத்தை. அதையும் மீறி சாப்பிட்டால், அடுத்தமுறை அக்காயை சாப்பிட அந்த விலங்கு உயிரோடு இருக்காது. ஊமத்தையின் விஷம் புத்தியை பேதலிக்க வைக்கக்கூடியது, இதயத்துடிப்பை அதிகரிக்கக் கூடியது, உடல் அழலை மாற்ற வல்லது, மூச்சுக்குழாயை விரிவடைய வைப்பது. அதனை அதிகமாக உண்டால் மரணம் நிச்சயம்.
அதன் விதை பரவலுக்கு நீங்கள் தேவையில்லை. எனவே நீங்கள் அதை உண்டுவிடக்கூடாதென அது விஷத்தை தனக்குள் வைத்து உங்களை எச்சரிக்கிறது.
ஆனால் நீல ஊமத்தையை வடஇந்தியர்கள் குளிர்காலத்தில் புகைப்பதைக் காணமுடியும். ஆஸ்துமாவினால் முச்சு விடத்திணறுபவர்கள்; குறைந்த அளவில் இதைப்புகைப்பதால் மூச்சுக்குழாய் விரிவடைகிறது. அதனால் மூச்சு தடைபட்டு; இறப்பதை அவர்கள் தவிர்க்கமுடிகிறது. நீல ஊமத்தை ஆயுர்வேத சிகிச்சையில் உலோக நச்சுக்களை நீக்க பயன்படுகிறது என்ற குறிப்பு ‘ரசேந்திர சூடாமணி’ எனும் நூலில் காணப்படுகிறது. மேலும் மண்ணில் உலோகக்கழிவுகள் நிறைந்துள்ள இடத்தில் இத்தாவரத்தை வளர்ப்பதம் மூலம் அக்கழிவுகளை நிலத்தில் இருந்து அகற்றலாம் என அறிவியல் குறிப்பிடுகிறது. இதை phytoremediation என அழைக்கின்றனர். இப்படிப்பட்ட மலரை சிவனுக்கு பூஜிக்க தேர்ந்தெடுத்ததில் வியப்பேதும் இல்லை.
தாவரங்கள் என்பது உணவாகவோ மூலிகை வடிவிலோ நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான் இது போன்ற விஷம் கொண்ட தாவரங்கள் காவல் பயிராக உயிர்வேலியில் வளருவதை அனுமதித்தனர். மூலிகை என்பது வளர்க்கப்படக் கூடாது. உயிர்வேலியில் அடையாளம் காணப்பட வேண்டும். உயிர்வேலி என்பது கோயில் காட்டின் மினியேச்சர் வர்ஷன்.
இதய மருந்துகளில் ஒன்றான டிஜாக்சின் ஐரோப்பியர்களால் சூனியக்காரர்கள் என்றழைக்கப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மூலிகைமருந்து. அதை முறையாக ஆராய்ந்து இப்பொழுது ஆங்கில மருத்துவம் அதை பயன்படுத்தி வருகின்றது.
நேற்றைய மந்திரம் இன்றைய அறிவியல் ஆனது இப்படித்தான்.
அந்த ஆய்வுகள் அறிவியலால் பொதுவில் வைக்கப்பட்டன. அலோபதி மருத்துவம் பொதுவில் வைக்கப்பட்டதால் வளர்ந்தது. சித்த மருத்துவம் பொதுவில் வைக்கப்படாததால் சிலது மறைந்தது, சிலது தவறாக பொருள் கொள்ளப்பட்டது, சிலது திரிக்கப்பட்ட பொருள் கொள்ளப்பட்டது
சித்தர்கள் கண்டறிந்த சிலவகை மூலிகைகள் வெளிஉலகத்திற்குத் தெரியாமலேயே இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கண்டறிந்த மூலிகை மற்றும் உலோகக் கலவைகள், பஸ்பங்கள் எவ்வகையில் நம் நோயினைத் தீர்க்கும் என்பது தற்கால அறிவியலுக்கு தெரியாமல் இருக்கலாம். அவ்வகை மூலிகைகள் தற்கால அறிவியலால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வாக கூட இருக்கலாம்.
உதாரணத்திற்கு இன்று வரைக்கும் ரேபிஸ் எனப்படும் வெறி நோய்க்கு ஆங்கில மருத்துவம் வைத்தியம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் 'தஞ்சாவூர் மாத்திரை' எனப்படும் ஊமத்தை, வெண்பாசனம் மற்றும் ரசம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகை சித்தமருந்து, வெறி நோய்க்கு தீர்வாக இருந்ததை; சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாக இருந்த மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் மற்றும் தலைமை மருத்துவர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர் .
சரி, ஊமத்தை காய்களில் விஷம் உள்ளது அதனால் அது உங்களை முட்கள் கொண்டு எச்சரித்தது. ஆனால் ஊமத்தைப் பூக்களைப் பாருங்களேன்… அது எவ்வளவு அழகாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றன?
காரணம் அவற்றின் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை சுண்டியிழுக்க வேண்டுமல்லவா?
பட்டாம்பூச்சிகள் அவற்றின் வாழ்வில் டயட் ஏதும் இருப்பதில்லை. அவற்றின் உணவு என்பது ஒன்றே ஒன்றுதான். அது நெக்டார் எனும் மலர் தரும் மது. அது வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும்; அது அந்த மது ஒன்றிலேயே பெற்றுவிடுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினத்தை தனது தேவைக்கேற்ப எதிர்க்கிறது அல்லது பயன்படுத்திக் கொள்கிறது.
இவ்வாறாக மண்ணிலிருந்து எடுத்த பொருட்களை, பிற உயிர்களுக்குத் தேவையான வண்ணத்திலும் வடிவத்திலும் தாவரங்கள் அளிக்கின்றன. அந்த உயிர்கள் இறந்தபின் பின்னர் அவை மண்ணில் மட்க்கி, மண்ணின் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. நுண்ணுயிர்களின் கழிவை எடுத்துக்கொண்டு செடிகள் வளர்கின்றன. இது மண்ணில் நடக்கக்கூடிய ஒரு சுழற்சி. இந்த சுழற்சியில் இருக்கும் மண்ணே உயிர்ப்புடன் விளங்குகின்றது.
இந்த சுழற்சியில் பங்குகொள்ளும் உயிரினங்களுக்கு, வாழ்வதற்குத் தேவையான ஊட்டச்சத்தானது, அவற்றிற்குத் தேவையான வகையில், தேவையான விகிதத்தில், அவை விரும்பும் சுவையில் எளிதில் கிடைத்துவிடும். ‘எனவே ஊட்டச்சத்தானது பல உயிர்களைக் கடந்து வந்திருக்க வேண்டும்’.
உதாரணத்திற்கு, நீங்கள் டாக்டர் பரிந்துரையோடு உட்கொள்ள இருக்கும் கால்சியம் மாத்திரைகள், சுழற்சியின் ஓரிடத்தில் அத்திப்பழ ரூபத்தில் எளிதாக நீங்கள் விரும்பும் சுவையோடு கிடைக்கின்றன.
------
நிலம், நீர் மற்றும் காற்று இவற்றில் இருக்கும் மூலப்பொருட்களைக் கொண்டுதான் உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அண்டத்தின் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது தான் அண்டத்தில் உள்ளது.
இவ்வாறு அண்டத்தில் உள்ள மினரல்களும் காற்றும் நீரும் நெருப்பும் வெளியும் ஒரு ஒழுங்கில் ஒன்றுகூடி உயிர் பெற்று ரோட்டிலே நடக்கின்றன, இது போல் blog எழுதுகின்றன, ‘நான் யாரு தெரியுமா?’ என சவால் விடுகின்றன, நான் தான் தலையில் பிறந்தேன் என்கின்றன, நான் ஏன் பிறந்தேன் என வருந்துகின்றன, பின் ஒரு சுபமுகூர்த்த தினத்தில் ஒழுங்கு குலைந்து மண்ணில் புதைந்து மீண்டும் அண்டமாகின்றன.
“அண்டம் எவ்வாறு உடல் வடிவெடுத்தது? மெய் எனப்படும் உடல் எவ்வாறு உருவானது?”
மெய்யாகிய உடல் பற்றிய ஞானம் தமிழில் மெய்ஞானம் எனப்பட்டது. நம் நாட்டின். மெய்ஞானக் கொள்கைக்கும் மக்களது வாழ்க்கைக்கும் அதிகத் தொடர்புண்டு. இத்தத்துவஞானமும் வாழ்க்கையும் ஒன்றெனக் கருதுமளவுக்கு அவை இரண்டும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட தத்துவ ஞானத்தில் முக்கியமானது பொருள் தத்துவம்.
தமிழில் 'பொருள்' என்பது சொல்லில் உணரப்படுவது ஆகும் (எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே – தொல்காப்பியர்). அது முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என மூவகைப்படும்.
“முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை. “ (அகத்திணை இயல்).
முதற் பொருளானது நிலம் மற்றும் காலம் என இருவகைப்படும்.
13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் பிறந்தது. அதனோடே ‘காலம்’ மற்றும் ‘வெளி’(space) ஆகியவற்றின் பிறப்பும் நிகழ்ந்தது. இந்தக் காலம் முதற்பொருள்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம். இதன் பின்னர் பொறுமையாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது புமி பிறப்பெடுத்தது. புதிதாய்ப் பிறந்த பூமி ஒரு நெருப்புக்குழம்பாய் தான் இருந்தது. அந்த நெருப்பு மற்றும் வெளி ஆகிய இரண்டும் தான் ஆரம்பகாலத்தில் இருந்த பூதங்கள். அடுத்து ஆகாச வெளியின் குளிர்ச்சியால் பூமி இருகி நிலம் எனும் பூதம் பிறந்தது. பூமியின் வளியானது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெளியேற்றிய நீராவி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் அமோனியா போன்ற வாயுக்கள் மூலம் உருவானது, பின்னர் ஆரம்பகால ஒளிச்சேர்க்கை உயிரினங்களால் ஆக்ஸிஜன் சேர்க்கப்பட்டதால் நிலையான, உயிர்வாழும் கலவையாக உருவானது வளிமண்டலம். வளிமண்டலத்தில் இருந்த நீராவி மழையாய்ப் பொழிந்து கடல் உருவானது. இவ்வாறாக வளி மற்றும் நீர் எனும் பூதங்கள் உருவாகின.
வளி எனும் பூதம் ஆக்சிஜனைக் கொண்டுள்ளது. இது நிறம், மணம், உருசி ஏதும் அற்ற வளியின் வகையாகும். இது உயிரினங்களுக்குத் தேவையான ஒன்று. சீவன்களுக்கு அவசியம் வேண்டியது. ஆகையால் பிராணன் வளியிலிருந்து ஓயாமல் சுவாசிக்கப்படும். பிராணவாயு இல்லாமல் ஒரு உயிரும் இருக்கமாட்டாது.
கருப்பொருள் என்பது நிலத்தின் மற்றும் காலத்தின் பால் தோன்றுவது. நம்மை சுற்றி இருப்பது. உரிப் பொருளாவது மக்கட்குரிய பொருள்: அது அகம் புறம் என இருவகைப்படும்.
கட்டிப் பொருளாக இருப்பது அனைத்தும் நிலமாக கருதப்படுகிறது.
கீழ் சேரும் இயல்பு கொண்டது நீர்
மேல் சேர் இயல்பு கொண்டது தீ.
காற்று விலகி அசைவது.
இவற்றை நான்கையும் நம்மால் உணர முடியும். இதோடு விண்ணாற்றல் இணையும் பொழுது தான் உயிர் உருவாகின்றது என்றனர் தமிழ்ச் சான்றோர்.
இவ்வாறு உருவான ஐம்பூதங்களும் ஒன்றுகூடி நம் உடலைக்கட்டமைத்துள்ளன. இந்த ஐந்து பூதங்களையும் நம் உடல் உணர்ந்து கொள்ள உருவானதே ஐம்புலன்கள். பின் வரும் பாடலைக் கவனியுங்களேன்… நாம் படித்தறிந்த அதே பொருள் படும் சித்தர் பாடல்.
வளப்பம்கேள் பூமி வாசிக்கும் நாசியில்
குளப்பமாய வன்னிதானு அங்கண்ணிலே
அளப்பமாய் அப்பு அசங்கிடு நாவிலே
புளப்பூ நல்வாயு பரிச்சிக்கும் எங்குமே.
ஒற்றை செல்லாய் உலகை வலம் வந்து கொண்டிருந்த உயிர்களுக்கு ஐம்புலன்களும் தேவைப்படவில்லை.
எதிரியின் மற்றும் இரையின் அருகாமை மற்றும் வெப்பமாற்றம் போன்றவற்றை உணர்ந்துகொண்டால் மட்டுமே அவைகளுக்குப் போதும். ஆனால் நம்மைப்போல் பல செல்களால் ஆன உயிர்களுக்கு ஐம்புலன்களும் தேவைப்பட்டிருக்கிறது .
புலன்களில் முக்கியமான ஒன்றான கண்ணை எடுத்துக்கொள்வோம்.
சூரியன் தன் பெரும்பாலான ஆற்றலை கட்புலனாகும் (visible) அலைநீளத்தில் வெளியிடுகிறது (390 to 750 nm ) இந்த அலைநீளத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி நம் கண்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு பொருள் வெளியிடும் மின்காந்த அலைகளின் அலைநீளம் (அல்லது அதிர்வெண்) அதன் வெப்ப நிலையை சார்ந்தது. சூரியனின் வெப்பநிலை 5780 கெல்வின் டிகிரி என்பதால் அது தன் ஆற்றலை 400 nm to 700 nm வரம்பில் வெளித்தள்ளுகிறது. எனவே பூமியில் பெரும்பாலான உயிர்களின் கண்கள் இந்த அலைநீளத்தை கிரகித்துக் கொள்ளும்படி வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு நட்சத்திரம் நம் சூரியனை விட இன்னும் அதிகமான வெப்பநிலையில் இருந்தால் (ஒரு கோடி கெல்வின்கள்) அது எக்ஸ்-ரே கதிர்களை அதிகமாக வெளித்தள்ளும். அப்போது அந்த நட்சத்திரத்தை சுற்றும் கிரகத்தில் ஒருவேளை உயிர்கள் இருந்தால் அவைகளின் கண்கள் எக்ஸ்-ரே கதிர்களைப் பார்க்கும்படி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும்.அவற்றின் தோல் எக்ஸ்ரே கதிர்கள் ஊடுருவாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது அவர்கள் எலும்புமுறிவின் போது உள்ளே பார்க்க (அதிக ஆற்றல் கொண்ட)காமா கதிர்களைப் பயன்படுத்தக்கூடும்.
மற்ற கிரகத்தை விடுங்கள். பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பார்வைத்திறன் ஒன்றுபோல்தான் இருக்குமா என்றால் இல்லை. உதாரணத்திற்கு பூ நக்கிகளுக்கு நம்மைவிட பூக்கள் இன்னும் அழகாகக் காட்சியளிக்கும். காரணம் அவைகளால் யு.வி அலைகளையும் பார்க்க முடியும்.
குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மூன்று வர்ணங்கள் அடிப்படையில் தான் காட்சிகள் தெரிகிறது. நமது கண்களின் கோன் செல்களால் நீலம், பச்சை மற்றும் சிவப்பினையும் அவற்றின் கலப்பு வர்ணங்களையும் தான் பார்க்க முடியும். பழங்களையும் காய்களையும் பிரித்தறிந்துகொள்ளும் வகையிலேயே நமது கண்கள் பரிணமித்திருக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. நாய்கள் தங்களின் இரையை துரத்தி வேட்டையாடுவன. அதனால் இரையைக் குறிவைக்க வேண்டி அதன் இருகண்களும் பக்கவாட்டில் இல்லாமல் முகத்தில் அருகருகே இருக்கின்றன.
அவற்றிற்கு வர்ணங்களை பெரிதாக பிரித்தரிய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதனால் நம்மைப்போல் உலகம் அதற்கு வர்ணமயமாக இருக்காது.
அய்யோ நாய் மிகவும் பாவம், என எண்ணத் தோன்றுகிறதா? கவலை வேண்டாம் அதற்கு நுகரும் திறன் அதிகம். அது இரையை வர்ணமயமாய் பார்த்து அறிந்துகொள்வதை விட நுகர்ந்து அறிந்துகொள்ளும். நமக்கு மற்ற மிருகங்களைவிட நுகரும் திறன் மிகக்குறைவே. எனவே தான் நம்மை கவரநினைக்கும் பழங்கள் வாசனையை தூக்கலாகக் கொண்டிருக்கும்.
வர்ணம்சிந்தும் பழங்கள் மனிதர்களின் கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும் பழத்தின் இருப்பை சுகந்தம் உணர்த்திவிடும். பளீர்வர்ணமும், கமழும் சுகந்தமும் வசீகரிக்க - தித்திக்கும் மதுரம் நாவை கிளுகிளுப்பூட்ட - உடலாய் உருவெடுக்கக் காத்திருக்கும் பழமானது வாய் எனும் கதவுவழி உடல்நுழைகிறது.
கண்கள்; நமக்கு சூழலைப் பற்றிய தகவல்களைத்தரும் ஒரு முக்கிய புலன். ஆனால் காற்றைக் கண்களால் பார்க்க முடியாது. விலகி அசையும் காற்றையும், வெப்பம் தரும் அனலையும், குளிர்ச்சி தரும் புனலையும் சருமம் உணர்ந்து கொள்ளும். கண்ணுக்குத் மழை தெரியாவிடினும், வேகக்காற்று சருமம் தொடாவிடினும், தூரத்து இடியோசை மழையின் வருகையை அறிவித்துவிடும்.
இரவாடிகளுக்கு சில புலன்கள் அதீதமாக வேலை செய்யும். உதாரணத்திற்கு இரவில் வேட்டையாடும் தேவாங்குக்கு கண்ணும் சரி காதும் சரி அதிக புலன் சக்தி உள்ளது. ஆனால் இரவடியான வவ்வாலுக்கு கண் அந்த அளவுக்கு புலன் சக்தி கொண்டது அல்ல அதனால் அது காதுகளையே கண்களாக கொண்டிருக்கிறது. காதுகளினால் உணரப்படும் ஒலிகள் அதற்கு மூளையில் படமாக தெரியும். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் பொழுது திரையில் தோன்றும் ஒளி புள்ளிகளால் ஆன படத்தைப் போல அதற்கு மூளையில் உருவங்கள் தோன்றும். எனவே சுவை, ஒலி,ஒளி, ஊறு, மணம் ஆகியவை மூலம் சூழலை ஆன்மா அறிந்துகொள்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு புலனையும் கொண்டு; ஒவ்வொரு பூதத்தையும் நாம் உணர முடியும். நமது புலன்களின் சக்தியை கூட நாம் பயிற்சிகளைக் கொண்டு அதிகரிக்க முடியும். குங்ஃபூ படத்தில் கூட கண்களைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவதற்கு பயிற்சி எடுப்பார்களே அதுபோல.
கால்நடை மருத்துவர்களுக்கு கை தான் கண்கள். கருவில் இருக்கும் பசுவின் சிசுவை நாங்கள் கைகளால் தான் பார்த்தறிய வேண்டி இருக்கிறது.
இவ்வாறு தான் 'நிலம், நீர், காற்று' போன்றவை நம்மால் உணரப்படுகின்றன.
அப்போ 'விண்' அல்லது 'வெளி' எனும் ஐந்தாவது பூதத்தை நாம் உணர முடியாதா?
வெளி என்னும் பூதமே உயிராய் உடலை இயக்குகிறது என்பது சித்தர்களின் அனுமானம். அதை எந்தப் புலனைக்கொண்டு அறிந்து கொண்டனர் என்பதே இன்று வரை மறைபொருளாக உள்ளது. அதைப்பற்றி பேசுவதற்கு முன், நாம் பல அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.