திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில் எடுத்தேன். நிறுத்தம் ஒன்றில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமெடுக்க ஆரம்பித்தது பேருந்து. சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் சலசலப்பு. "படியில் தொங்காதே", "மேலே சாயாதே", "உள்ளே தள்ளி நில்", "சில்லறை இல்லையா? " போன்ற கலவையான குரல்கள் செவியில் வந்து விழுந்தன. சூழலின் வெம்மை மனிதர்களின் குரலிலும் வெளிப்பட்டது. ஆச்சரிய படத்தக்க வகையில் இந்த புத்தகத்தின் பேசு பொருளும் அதுவாகவே இருந்தது.
ஏதோ ஒரு தேடலில் உந்துதலால்தான் ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம் . சிறு வயது முதற்கொண்டு கணிதம், இலக்கணம், இலக்கியம், விலங்கியல், தாவரவியல், புவியியல், சூழலியல் என பல பாட புத்தகங்களை படித்து வந்துள்ளோம். பின்னர் பொறியியல், மருத்துவம், மனோ தத்துவவியல் என தொழில் சார்ந்து படித்தோம். ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை படித்தனர். அத்தனையைப் படித்தும் இந்த தேடலின் முடிவில் கசடற கற்றோமா? கற்றது பயன் தந்ததா? ஞானத்தை கண்டறிந்தோமா? என்றால் ஒரு மிகப்பெரும் கேள்விக்குறியே மனதில் எஞ்சி நிற்கிறது.
கேள்விகளுக்கான விடையை அறிவியல் நோக்கில் தேடுவது விஞ்ஞானம். விஞ்ஞானம் பொருள்களை ஆராய்கிறது. மெய்ஞானம் பொருளின் தத்துவத்தை ஆராய்கிறது. பொருள் என்பது தனித்த ஒன்று அல்ல, அது மற்றவற்றுடன் கொண்டுள்ள உறவின் காரணமாகத்தான் பொருளாக அறியப்படுகிறது என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.
நாம் அறிந்த வகையில் தமிழ்க் இலக்கணத்தின் முதல் நூலான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் பொருள் அதிகாரம் என்பது மக்களின் அக (காதல்) மற்றும் புற (வீரம், போர், ஆட்சி) வாழ்க்கை முறை, மற்றும் செய்யுள் இலக்கணம் பற்றிய விதிகளை எடுத்துரைக்கும் பகுதியாகும். இதில் பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை 'திணை' என்றார்கள். இந்த வகையிலேயே தான் நமக்கு திணை என்பது பரிட்சயம். ஆனால் இது ஒரு மெய்யியல் கோட்பாடு எனும் கருத்தை இப் புத்தகத்தின் ஆசிரியர் முன்வைக்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் நாம் இதுவரை கற்று வந்துள்ள பல அறிவியல், சூழியல், மெய்யியல் கோட்பாடுகள் அனைத்தையும் திணையியம் ஒரே உறவியல் பார்வையில் வாசிக்க உதவுகிறது.
இதற்கிடையில் அடுத்த நிறுத்தத்தில் இன்னும் அதிக கூட்டம் பேருந்தில் ஏறியது. நண்பகல் உச்சம் கண்டது. கூச்சல்கள் அதிகரித்தது. ஆனால் எனது அருகில் அமர்ந்திருந்த இளைஞனை இந்த கூச்சல்கள் பாதித்ததாக தெரியவில்லை. அவன் தனது அலைபேசியில் மூழ்கி இருந்தான்.
தொல்காப்பியர் கட்டமைத்த விதிகளை எனது அருகில் இருந்த அந்தத் தலைவனோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.
முதற்பொருள் நிலமும் பொழுதும் என்கிறார் தொல்காப்பியர். இதில் நிலத்தை முதலில் கொண்டு வருவதில்லையே பிணக்கு ஏற்பட்டு விட்டது.
நான் இருப்பது எவ்வகை நிலம்?
சுற்றிலும் கான்கிரீட் காடுகள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் இதில் எதிலும் இந்த கான்கிரீட் காடுகள் அடங்காதே?
இந்த நிலத்தை பாலையாகக் கொள்ளலாமா?
பாலைக்கென்று நிலமில்லை என்கிறார்களே?
இதற்கான விடையையும் புத்தகத்திலேயே வழங்குகிறார் ஆசிரியர். நகரத்திணை என்றும், விருச்சுவல் உலகம் எனும் தனித்தனியாகவும் திணைகளை விரித்துக்கொண்டே செல்வதற்கு இந்த திணையத்தில் இடம் இருக்கிறது என்று இந்த மெய்யியலின் செழுமையை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
குறிஞ்சித் திணையில் பல தடைகளைத் தாண்டி தலைவன் தலைவியை சந்தித்தான். ஆனால் இங்கே எனது அருகில் இருக்கும் தலைவன், நொடிப் பொழுதில் பல தலைவிகளின் ப்ரோஃபைல்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். இந்தத் தலைவனும், அவன் தொடர்பு கொள்ள விரும்பிய தலைவியும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. இருந்தும் செம்புலப் பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தனை இணைக்கும் எண்ணம் கொண்டு, அவன் தனது விரிச்சுவல் உலகில் காதல் வலையை வீசியபடி இருந்தான்.
அந்த மெய்நிகர் உலகில் அந்தத் தலைவன் தொடர்பு கொள்ளும் தலைவி உண்மையில் தலைவிதானா? இல்லை fake id யா? என்பதே மிகப் பெரும் கேள்விக்குறி.
எனவே அந்த மெய்நிகர் திணையின் உரிப்பொருள் உண்மை அன்பை தேடலும் தேடல் நிமித்தமாகவும் இருப்பதை காண முடிகிறது.
திணை என்பது முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய முக்கலன்களின் கூட்டணைப்பு. இது நிலவியல், சூழலியல், மனத்தியல், அறிவியல் தன்மைகளால் பின்னப்படுகின்றது என்கிறார் ஆசிரியர்.
முதற்பொருளே அடித்தளம்... நிலமும் பொழுதுமே அனைத்து உயிர்களின் அடித்தளம். கருப்பொருட்கள் வாழ்மைக்கான கூறுகளை கொண்டவை. உரிப்பொருள் என்பது உணர்வு கூறுகள் என்பதை பல சங்க பாடல்களின் வழி ஆதாரத்தோடு விளக்குகிறார் ஆசிரியர்.
உரிப்பொருள் என்பது சப்ஜெக்டிவ் எலமெண்ட்ஸ் எனும் அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். ஆசிரியரின் பல்வேறு படைப்புகளின் வழி அது நீருக்கும் பொருந்தும் என்ற செய்தி ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்துகிறது.
உதாரணத்திற்கு தலைவன் தலைவியை பிரிவது பாலையின் உரிப்பொருள் . அங்கே நீரும் நிலத்தை விட்டு பிரிகிறது. குறிஞ்சியில் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருளாக வருகிறது. அங்கேதான் நீர் நிறை மேகங்கள் மலையோடு புணர்ந்து நிலத்தில் அருவியாக ஆர்ப்பரிக்கிறது.
"காதலி அருமை பிரிவில்.
மனைவியின் அருமை மறைவில்.
நீரின் அருமை அறிவாய் கோடையிலே. " எனும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் நினைவுக்கு வருவதை இந்த இடத்தில் தவிர்க்க இயலவில்லை.
இது மட்டுமல்லாமல் அகத்திணை மற்றும் புறத்திணையில் வரும் உரிப்பொருட்களையும் இணைத்தே பார்க்கிறார் ஆசிரியர்.
குறிஞ்சியின் உரிப்பொருளான உள்ளம் கவர்தல் மற்றும் வெட்சியின் உரிப்பொருளான நிறை கவர்தல்... இவ்விரண்டும் ஒரே வகையான உணர்வின் வெளிப்பாடு என்கிறார். இந்த கண்ணோட்டத்தோடு பார்க்கையில் ஒவ்வொரு புறத்திணையும் அகத்திணையோடு உரிப்பொருள் அடிப்படையில் பொருந்திப் போகிறது.
கைக்கிளை மற்றும் பெருந்திணை இரண்டுமே இயற்கைக்கு புறம்பானது. எனவே அதற்கு நிலமில்லை என்கிறார் ஐயா பாமயன். ஒழுக்கமற்ற செயல்களை செய்வதற்கு பூமியில் இடம் இல்லை என்பது எத்துணை நுண்ணிய பகுப்பு?
இப்பாகுபாடுகளை பகுத்தவர்(கள்) மக்கள் நிச்சயம் இந்த கொள்கைகளை தங்கள் வாழ்வியலோடும் சூழியலோடும் பின்பற்றி வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதியிருக்க வேண்டும் என்பது திண்ணம். இதுவரையிலும் இலக்கியத்தின் அடிப்படையிலேயே படிக்கப்பட்டு வந்த திணை பாகுபாடு, ஆசிரியரின் எழுத்தில் ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு காட்டுகிறது.
ஐந்திணை எனக் குறிப்பிடுவதால் ஐந்து வகை நிலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். பாலை என்பது பொழுதால் மட்டுமே அமைவது எனவே அதற்கு நிலம் இல்லை. எனவே நான்கு நிலங்கள் மட்டுமே கணக்கில் வருகிறது.
ஆனால் திணையியத்தை விளக்க முற்பட்ட பல ஆசிரியர்கள் இந்த நிலப்பாகுபாட்டில் முரண்படுவதையும் நாம் காண முடிகிறது.
எவ்வகை நிலமாயினும் அங்கே அன்பே உரிப்பொருள். பாலை நிலமாயினும் அங்கேயும் அன்பு வெளிப்படும். எனவே ஐந்திணை என்பது 'அன்பின் ஐந்திணை'யைத்தான் குறிப்பிடுகிறது என்று நிறுவுகிறார் பாமயன் அவர்கள்.
இவற்றை அனைத்தையும் புரியும் வகையில் ஆதாரத்தோடு கூறிவிட்டு 'அன்பின் வழியது உயிர்நிலை' எனவே அன்பே திணை கோட்பாட்டின் ஊற்றுக்கண் என்று இம்மாபெரும் மெய்யியலை ஒரே வரியில் விளக்குகிறார்.
எந்த ஒரு அறிவியல் கருதுகோளாகட்டும் மாபெரும் கணித சமன்பாடாகட்டும் உலகை காக்கும் அறக்கோட்பாடாகட்டும், அவை அனைத்தையும் ஒரு வரியில் நாம் சுருக்கி கூறிவிடமுடியாவிட்டால்... அது இன்னும் முழுமை பெறாத, அல்லது புரிந்து கொள்ளாத ஒரு கருதுகோளாகத்தான் கருதப்படும்.
' உயிர்' என்பது இன்னும் அறிவியலால் முழுதாக புரிந்து கொள்ளப்படாத ஒன்று. உயிரினை 'அறிவு' (consciousness) எனும் பொருள்படவே தமிழர்கள் கூறியுள்ளனர். ஆனால் தமிழர்களின் உயிரைப் பற்றிய புரிந்துணர்வு மிகவும் எளிதானது.
அன்பின் வழியது உயிர்நிலை. என்பதே தமிழர்களின் புரிதல்.
அன்பே உயிரின் அடிநாதம். அதுவே திணை கோட்பாட்டின் அடித்தளமாகவும் விளங்குகிறது.
ஆனால் உயிரை விட ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்பது தமிழர்களின் கொள்கை.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறார் வள்ளுவர்.
அந்த ஒழுகலாறு தான் திணையியம் என்று புத்தகம் முழுவதுமே நிறுவிக் கொண்டு வருகிறார் பாமயன் ஐயா.
இது போன்ற கருத்துக்களை ஒரு வரியில் சொன்ன வள்ளுவரை, குறிப்பிட்ட இன மத பிரிவுக்குள் அடைக்க பல முயற்சிகள் நடக்கப்பட்டு வருவதை அறிகின்றோம். அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதையும் ஆங்காங்கே இந் நூலின் ஆசிரியர் தரவுகளைக் கொண்டு நிறுவுவதையும் பார்க்க முடிகிறது.
உறவுகளின் வலையாக இயங்குகிறது இந்தப் பேரண்டம் என்பதே தமிழர்களின் புரிதல், அதையேதான் குவாண்டம் இயற்பியலும் வழிமொழிகிறது. எனவே பகிர்வு, கூட்டணி, ஒப்புரவு , சமத்துவம் ஆகியவற்றின் வழியே மட்டும்தான் மனித சமூகம் நிலைத்திருக்க முடியும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.
காதல் வீரம் தவிர மேலும் பல விழுமியங்களை சங்க இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது என்பதை ஒவ்வொரு தலைப்பின் கீழ் அழகாக இப் புத்தகம் விளக்குகிறது.
வெறும் மனனம் செய்யும் திறனை வைத்து மட்டுமே மாணவனை மதிப்பிடும் தற்போதைய சமூகத்தில், அறிவு என்பது எது என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அறிவு என்பது அளவீடுகளோ தரவுகளோ அல்ல.
'அப்பொழுது அறிவு என்பது என்ன?' என்ற கேள்விக்கு மிக அழகாக பதிலை இந்த புத்தகம் தருகிறது.
தெய்வம் என்பது என்ன? உண்மையிலேயே தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா? என்பதும் ஒரு குழப்பமான கேள்வி. தெய்வம்... இறை... கடவுள்... இவற்றைப் பற்றியும் இந்த புத்தகம் தெளிவான விளக்கத்தை கொடுக்கிறது.
மேலும் 'எவ்வாறு இத்தகைய மெய்யியல் நம் தமிழ் நிலத்தில் தோன்றி இருக்கக் கூடும்?' என்கின்ற மிகப்பெரிய கேள்விக்கும் இந்த புத்தகத்தில் விடை கூறப்பட்டிருக்கிறது.
மேற்குலகின் கோட்பாடுகள் மெய்யியல்கள் எந்த வகை மனநிலையில் இருந்து எழுப்பப்பட்டவை? அதனை காட்டிலும் திணையியம் எவ்வாறு சிறந்தது? ஏன் இது உலகம் முழுமைக்குமான ஒரு மெய்யியல் என்பதை ஆணித்தரமாக இந்த புத்தகம் நிறுவுகிறது. இந்த மெய்யியலை நாம் இவ்வளவு காலம் தீண்டாமல் வைத்திருக்கிறோம் என்பதே ஒரு குற்ற உணர்வை தருகிறது.
எனவே இந்த மெய்யியலை ஒவ்வொருவரும் தமது துறையில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
இந்த புத்தகத்தை படித்து முடிக்கையில் தமிழனது மெய்யியலை உலகம் முழுவதும் உணரச் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதையும் இந்த புத்தகம் நமக்கு புரிய வைக்கிறது. இதன் மூலம் நாம் விரும்பத் தகுந்த மாற்றத்தையும் தனி மனித அளவிலும் உலக அளவிலும் கொண்டுவர இயலும்.
மாற்றம் முரண்பாடுகளால்.
நடைபெறலாம், உடன்பாடுகள் மூலமாகவும் நடைபெறலாம். ஆனால் உடன்பாடுகள் மூலமாக ஏற்படும் மாற்றம் மட்டுமே நீடித்திருக்கத்தக்கது . முரண்பாடுகளை உடன்பாடு ஆக்குதலை பற்றி இசைவியல் என்னும் தலைப்பில் மிக அருமையாக விளக்கி இருக்கிறார் பாமயன் அவர்கள். Pattern and rhythm எனும் பாங்கு மற்றும் இசைவோட்டம் ஆகியவற்றை, நிலத்துடனும் பொழுதுடனும் பொருத்தி, இணக்கமான சமநிலையை உருவாக்குதலை பற்றி அத்தலைப்பில் விவரிக்கிறார்.
இதன் மூலம் நீடித்திருக்கத்தக்க ஒரு மாற்றத்தை அனைத்து துறைகளிலுமே நாம் கொண்டுவர இயலும். எனவே இது அனைவருக்குமான ஒரு புத்தகமாக இருக்கிறது. ஆகவே இதை அனைவரும் அனைத்து மொழிகளிலும் படிப்பதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை.
சில ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்து பழகி வந்த வாழ்வு முறைகளை... அறநெறிகளை... தமிழர்களின் ஆதி மெய்யியலை ஒரே புத்தகத்தில் நாம் படிக்க இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டே இந்த புத்தகம் வாசிக்கப்பட வேண்டும். ஒரு புதினத்தை போல் இலகுவாக வாசிப்பதற்கு இந்த புத்தகம் ஏற்றதல்ல.
இந்த புத்தகத்தின் பக்கங்களை எளிதாக புரட்டி விட முடியாது.
இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியும் உலக வரலாற்றையும், அறிவியல் உண்மைகளையும், ஆசிரியரது ஞானத்தையும், ஒரு பொதுப் பார்வையில் விளக்கி... அதை திணையியலோடு தொடர்பு படுத்தி... அது எவ்வாறு தமிழரின் வாழ்வியலாக இருந்தது என்று முடிக்கிறார். அந்த வாழ்வியலை இப்பொழுது பின்பற்றுவதன் மூலம் உலகம் எவ்வாறு சமநிலை அடையும் என்கின்ற நமது அனுமானத்தையும் தூண்டி விட அவ்வரிகள் தவறுவதில்லை.
உதாரணத்திற்கு பொழுதினை பற்றி விளக்கும் போது, காலத்தை அறிவியல் எவ்வாறு பார்க்கிறது என்பதை விளக்குவதோடு மட்டுமல்லாமல், புத்த மதம் தொடங்கி பல்வேறு மத நிறுவனங்கள் அதை மாயையாகவும் தெய்வமாகவும் அணுக முற்பட்டதையும் விளக்குகிறார். பின்னர் காலம் என்ற வார்த்தை தமிழில் எவ்வாறு உருவாகி இருக்கக்கூடும் என்று தரவுகளோடு விளக்குகின்றார். காற்றுக்கும் அதற்கும் என்ன தொடர்பு, பொருள் நிகழ்வு என்று ஒன்று நடக்கும் பொழுதுதான் நாம் காலத்தை உணர்கிறோம் என்பதையும் தொல்காப்பியரின் வார்த்தைகள் வழி விளக்குகிறார்.
இதை படிக்கையில் மனம் பல்வேறு வகையில் அலைபாய்கிறது...
நாம் காலமாகாமல் இருக்க 'கால்' எனும் மூச்சே காரணம் என்ற எண்ணம் தோன்றுகிறது. 'அப்போ காலம் தான் எமனா ?' என்ற கேள்வி மனதில் சுழன்றாடுகிறது.
காலம் என்பதை எழுத்துக்களை உச்சரிப்பதை பற்றி படிக்கும் பொழுது படித்திருக்கிறோமே?
எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது எடுத்துக்கொள்ளும் கால அளவு... கண் இமைக்க அல்லது கை நொடிக்க ஆகும் கால அளவு ஒரு 'மாத்திரை'... இதைத்தான் ஒரு நொடி என்கிறார்களோ?
இப்படி எண்ண அலைகளால் மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்கிறது. அடுத்த பத்தியை வாசிப்பதற்கு தடை ஏற்படுகிறது. பக்கங்கள் நகர மறுக்கின்றன.
வாசகர்களுக்கு படிக்கும் பொழுது இந்த அனுபவம் நிகழும் என்பது ஆசிரியருக்கு தெரிந்தே இருக்கிறது. எனவே அதை முன்னுரையிலேயே தெளிவு படுத்தி விடுகிறார். இதை ஒரு அடிப்படை நூல் என்று அவர் குறிப்பிடுகிறார். சூழல் கருதி குறைவான பக்கங்களில் இதை எழுதி இருப்பதாக அவர் ஒப்புக் கொள்கிறார். திணை பற்றிய அடிப்படை தரவுகளை எடுத்துக்காட்டினால் போதும் என்ற நிலையில் இந்த நூலை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே இந்த நூல் பல திறப்புகளுக்கும் திறனாய்வுகளுக்கும் மறுப்பாடல்களுக்கும் வழிவகுக்கும் என்று அவர் நம்புவதாக ஒப்புக்கொள்கிறார். இதன் மூலம் அவர் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்று; இன்னும் கற்றல் நிலையிலேயே தனது மனநிலை இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். அதே மனநிலை புத்தகத்தை வாசிக்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
இந்த உலகில் பற்பல நாகரிகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு நாகரிகங்களும் தமக்கென ஒரு வாழ்வு முறையை கொண்டிருந்திருக்கின்றன. அந்த நாகரிகங்கள் பலவும் அழிந்து விட்டன.
காலநிலை மாற்றம், காற்று, உணவு, நீர் ஆகியவற்றில் அதிகரிக்கும் நச்சுத்தன்மை, ஆற்றல் பற்றாக்குறை, ஆற்றலுக்கான போட்டி மற்றும் உயிர்களை ஆதரிக்கும் நிலத்தின் திறனின் திரிபு போன்ற சவால்கள் வரும்காலத்தில் சமூகங்களை மேலும் சீர்குலைக்கும். மேலும் நுகர்வு கலாச்சாரத்தாலும் மேற்கத்திய வாழ்வு முறை தாக்கத்தாலும் தனிமனித வாழ்விலும் பற்பல பிரச்சனைகள் நேருகின்றன. உறவு சிக்கல்கள் தலைதூக்குகின்றன. இவை அனைத்திற்குமான தீர்வினை திணையியல் மெய்யியல் கோட்பாடு வழங்குகிறது.
அன்பையும் அருளையும் அடிப்படை பண்பாகக் கொண்டு, உயிர்மநேயம் பாராட்டினால் மட்டுமே நமது இருப்பு இங்கே உறுதி செய்யப்படும். திணைக்கூறுகளோடு இணைந்து வாழும் பொழுது தற்சார்பு தானாக விளைகிறது. இது மீறப்படும் பொழுது வருங்காலத்தினரின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிறது. இதுபோல் நாம் தற்பொழுதும் வருங்காலத்திலும் எதிர்கொள்ள இருக்கும் அனைத்து சவால்களுக்குமான தீர்வை இந்த மெய்யியல் நமக்கு வழங்குகிறது.
எனவே இது நம் அனைவருக்குமான புத்தகம்.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...