Friday, November 21, 2025

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்களைத் தொட்டபோது, அவை உயிர் பெற்று அசைந்தது போலத்  தோன்றியது.  இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்த  அந்தக்  காலை ஒளி, போர்க்களத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த படைகள் மீது பட்டு, நீண்டு விரியும் நிழல்களை தரையில் படறவிட்டது. காற்று மிகவும் கனமாகவும் அசைவற்றும் இருந்தது. அது அந்த  சூழ்நிலையின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. அன்றைய தினத்தில்  பீம்பேட்கா சமவெளி இன்னொரு காவியத்தின் பிறப்பை காணத் தயாராகி கொண்டிருந்தது.

 அந்தப் பிரதேசத்தில்  வீரர்கள் எழுப்பும் காலடித்தடத்தின் ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் எழவில்லை. பறவைகள் கூட எந்த ஓசையையும் எழுப்பவில்லை. இயற்கை முழுவதுமே நிம்மதியின்றி, நடக்கவிருக்கும் நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இரு பக்கத்து படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரே,  ஒரு மயான அமைதியில்  நின்றனர். 

ஒரு பக்கம் பீரப்பாவின் படைகள் நின்றன. அவர்கள் குறிஞ்சியின் மலைகளிலும், முல்லையின்  அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  மலைகளின் பாறைகளைப் போல  உறுதியானவர்கள், மேய்ச்சல் நிலங்களின் நெடிய புயல்களைப் போன்ற வலுவை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பழங்குடிகளிலிருந்தும் வந்திருந்தாலும், இன்று அவர்கள் அனைவரும் பீரப்பாவின் கீழ் ஒன்றாகத் திரண்டு  தங்கள் ஒற்றுமையையும் பலத்தையும்  நிரூபிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆயுதங்கள் இதுவரையிலும் இந்த உலகம் கண்ட எந்த உலோகத்தையும் ஒத்திருக்கவில்லை. அவை இதுவரை அந்த மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அல்ல.  அந்த ஆயுதங்கள் செம்பினாலோ வெண்கலத்தினாலோ செய்யப்பட்டபவை  அல்ல. அவை புனித நெருப்பில் வார்க்கப்பட்டவை.  விஞ்ஞானத்திற்கும் தெய்வீகத்திற்கும்  இடையே பிறந்த ஆயுதங்கள் அவை . 

அந்த ஆயுதங்களைத் தாங்கி நின்ற மக்கள் எவ்வித அசைவையும் காட்டாமல் கல்லைப் போல சமைந்து நின்றனர். மலைப்பாறைகளுக் கூட அஞ்சாத ஒரு அமைதி அவர்கள் முகங்களில் வேரூன்றி இருந்தது. பீரப்பா அவர்கள் முன் நின்றார், அவரது கண்கள் எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு அருகில் அக்கா மகாகாளி நின்று கொண்டிருந்தார். அவர் பீரப்பாவின் சகோதரி மட்டுமல்ல, அவர்களின் குலத்தின் இதயம், பெண்களின் உயிர், வீரர்களின் துணிவு. அவர் பார்வை, எதிரே நின்ற  படையின் மீது நிலைத்து நின்றது. அவரது பார்வையில் பயமோ கோபமோ தென்படவில்லை. மிகவும் ஆழமான தீர்மானத்தை மட்டுமே அவரது  கண்கள் வெளிப்படுத்தியது. சூரிய ஒளியில் அவரது கருமையான முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவரது ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் அரிவாளும் இருந்தது. 

அவர் தனது மக்களுக்கு அன்னையின் அன்பையும் பரிவையும் வற்றாது வழங்குபவர்.அவர் காண்பதற்கு கருங்கல்லில் செதுக்கிய  கொற்றவை போலவே இருந்தார்.  காட்டின் நடுவே  நச்சுப் பாம்புகள் தனது மக்களை தீண்ட வந்தால், முதலில் தன் காலால் அதை மிதித்தவர். கொல்லும் விலங்குகள் வந்தால் அதன் நெஞ்சில் முதல் ஈட்டியை பாய்ச்சியவர்.எதிரிகள் வந்தால், முதலில் எதிர்த்து நின்றவர். 

 அவர் இரக்கத்தின் மறு உருவம். ஆனால் தன் மக்களை , காப்பதில் கடுமையானவர், போரில் இரக்கமற்றவர்.   கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டையோடுகளை பெருமிதத்தோடு ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின்  நாகர் பழங்குடியினரை போலவே, அவரும் மண்டையோடுகளை அணிந்தபடி காட்சியளித்தார்.

 அவர் இப்பொழுது தனது சகோதரனுக்குத் துணையாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.

 அவர்களுக்கு எதிரே நிற்கும் படை அளவில் பெரியது. அந்தப் படை   தங்களது ரத்தத்தை வேண்டுவதை அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனால் அவர்கள்  நெஞ்சில் ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே இருந்தது. இந்தப் போரில் அவர்கள் நிச்சயம் வென்றாக வேண்டும். ஏனெனில் இன்று அவர்கள் தங்கள் நிலத்திற்காக மட்டுமல்ல; தங்கள் மரபுக்காகவும், தங்கள் நிலத்தின் உயிரின் மூச்சாகிய எதிர்காலத்திற்காகவும் போராடுகின்றனர்.

அவர்களுக்கு எதிரே பசவண்ணா தலைமையில் நின்றது விவசாயப் படை. ஒரு காலத்தில் பரிவையும் பாசத்தையும் மட்டுமே கொண்டிருந்த  தலைவராக இருந்தவர் அவர். இப்போது தனது மகனின் மரணத்திற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தார்.  அவரது கண்கள் காளியை வெறுப்புடன் பார்த்தது.

“நான் அவனைக் கொல்ல வேண்டும்,” என்று பசவண்ணா உரக்க கூறினார்.

“நாங்கள் இரத்தம் சிந்த விரும்பவில்லை, ஆனால் பகைக்கு பயந்தவர்கள் அல்ல  நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம்.” என்று பீரப்பா கூறினார்.

"நானும் தயாராக இருக்கிறேன்,” என்று பசவண்ணா கூறி ஒரு படி முன்னேறினார்.

காளியின் குரல் கூர்மையாக எழுந்தது, “என் சகோதரன் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உங்களைக் கண்டு  பயம் இல்லை.

நான் உயிர்களை மதிப்பவள். ஆனால் எங்களில் ஒருவரைத் தொட்டால், உங்கள் ஒருவரையும் நான் விட்டு வைக்க மாட்டேன் ” என உரக்கக் கூறினாள்.

மலையின் மேலிருந்து தக்ஷனின் சேனாதிபதி இரு படைகள் கூடியிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். 

அவனது முகம் பாறையில் செதுக்கப்பட்டது போல, உணர்ச்சியற்று இருந்தது.“அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்,” என்று அவன் கூறினான். 

அவனது வீரர்கள் அவன் வார்த்தைகளை பதற்றத்துடன் கவனித்தனர். 

திடீரென்று அவனது முகம் அதிர்ச்சியின் ரேகைகளை வெளிப்படுத்தியது.

“அவர்களின் கத்திகள்… அவை வெண்கலம் இல்லை. இவை என்ன ஆயுதங்கள்? 
இந்தக் வனவாசிகள் இப்படிப்பட்ட ஆயுதங்களை எங்கிருந்து பெற்றார்கள்?” என்று அவன் வியப்போடு கேட்டான்.

“ ராட்சசர்களிடையே ஒரு புதிய கடவுள் உருவாகி இருப்பதாக ஒற்றர்கள் தெரிவித்துள்ளனர், ஒருவேளை அவரது வேலையாக இருக்கக்கூடும்" என்று அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வீரன் கூறினான்.

பின்னர் அது தொடங்கியது...  வரலாறுகளில் பதிவாகாத ஒரு யுத்தம், ஆனால் பீம்பேட்காவின் உயிர்ப்புள்ள சுவர்களில் பொறிக்கப்பட உள்ள ஒரு பெரும் போர். 

விவசாயப் படை, மெருகேற்றப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட ஆயுதங்களுடனும், செப்பு முனையுடன் கூடிய அம்புகளுடனும் முன்னேறியது.

 ஆனால் அவர்களின் வெண்கலம் பழங்குடியினரின் கத்திகளைத் தாக்கியபோது, வெண்கலம் உடைந்தது. புனித ஆயுதங்கள் உறுதியாக நின்றன.

காளி, தீப்பிழம்பின் உருவாக, போர்க்களத்தின் நடுவில் புயல் போல இருந்தார்.

 அவர் ஒரு தேர்ந்த வேட்டையாடி. இப்பொழுது அவர் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார். 

அவர் தளைகளில் இருந்து  விடுவிக்கப்பட்ட ஒரு போர்க்கடவுள் போலக் காட்சியளித்தார் .
 
ஒரு விவசாய குல பெருவீரன்,  அவர் மீது வெண்கலக் கோடரியை உயர்த்தினான். அவர் குனிந்து, புழுதியில் சறுக்கி, பாய்ந்து வரும் புலியைக் கூட நிறுத்த வல்ல ஒரு கூச்சலுடன்,  வாளை  அவன் வயிற்றில் குத்தி மேலே இழுத்தார். அவன் நைந்து போன துணியைப் போல போர்க்களத்தில் வீழ்ந்தான்.

 அவரது கோபம் காட்டுமிராண்டித்தனமாக இல்லை. அது ஒழுங்கானது... பழமையானது...

சாம்பலின் கீழ் உள்ள நெருப்பைப் போல அவரது கோபம் கனன்று கொண்டிருந்தது. 

அவர் தனது கோபத்தையும் வீரத்தையும் நேர்த்தியாக வாள் வீச்சின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

 காளியின் வாள்வீச்சு அழகான ஒரு அப்சரசினுடைய அசைவுகளின் நளினத்தைக் கொண்டிருந்தது.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பழங்குடி வீரர்கள் விவசாயப் படையை அடி மேல் அடி எதிர்கொண்டனர். போர் சமநிலையில் இருந்தது. 

 இதுவரை மழையை மட்டுமே அருந்திக் கொண்டிருந்த  அந்த நிலத்தில் ரத்தம் வழிந்தோடியது. பீரப்பாவும் காளியும் எதிரிப்படைகளை சாய்த்துக் கொண்டிருந்தனர்.

 இதை கண்ணுற்ற சேனாதிபதி கடும் ஆவேசம் கொண்டான். அவனது பார்வை காளியின் மீது நிலை குத்தி இருந்தது  

 “ கரிய நிறத்தில் இருக்கும் அந்தப் பெண் யார் ?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்.

 சேனாதிபதியின் அருகில் இருந்த ஒரு படை வீரன், " அவர்தான் அக்கா மகாகாளி. அவர் உஜ்ஜைனியின் பழங்குடி மக்கள் தலைவி, பீரப்பாவின் சகோதரி " என்று கூறினான்.

“நாம் இந்த ராட்சசர்களை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்… அவர்கள் பூதகணங்களைப் போல போரிடுகிறார்கள்.” என்று கூறிவிட்டு கோபத்தில் சேனாதிபதி தனது வாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான்.

 “ இதற்கு மேலும் நாம் அமைதி காத்தால் பசவண்ணாவின் படை வீழ்ந்துவிடும். 

 இந்த மண் இதுவரை குதிரைப்படைகளை பார்த்ததில்லை. குதிரைப் படையின் வேகத்தையும் வாள் வீச்சையும், நிலத்தில் நின்று போராடும் இந்த மக்களுக்குக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .” என்று கூறிவிட்டு  அவன் கையை உயர்த்தினான்.

 “தேர்களையும் குதிரை வீரர்களையும் விடுவியுங்கள். போரின் தாளத்தை, குதிரைகளின் வேகத்தை ,  அவர்கள் உணரட்டும்.”

பின்னர் அவன் ஒரு தளபதியிடம் நெருங்கி, “ அங்கே காமரதியோடு பீம்பெட்கா குகைகளில் காத்துக் கொண்டிருக்கும் நமது வீரர்களுக்கு செய்தி அனுப்பு. காமரதியின் தலையை எனக்கு விரைவில் கொண்டு வா. அது குழப்பத்தை உருவாக்கும். பீரப்பா மற்றும் பசவண்ணா இருவரும்  கட்டுப்பாட்டை இழப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஆவேசத்தோடு தாக்கிக் கொள்வார்கள் . பசவண்ணாவின் படையும் இதில் வீழ்ந்தால், இன்னும் சிறப்பு. நம் அரசனுக்கு இரட்டை வெற்றி. அவர்களின் நிலம் எளிதில் நம் வசப்படும்” என்று கூறினான்.

------------------------------------------

பீம்பெட்காவின் பழமையான குகைகளுக்குள், பல்லாயிரமாண்டுகள் பழமையான ஓவியங்களின் பார்வையில், காமரதி தக்ஷனின் ஐம்பதற்கும் மேற்பட்ட  வீரர்களால் சூழப்பட்டு நின்றாள். அவர்கள் தங்கள் கத்திகளைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.

“ஒரு பெண்ணை ஐம்பது கத்திகளால் சூழ்கிறீர்கள், இதுதான் உங்கள் வீரமா?” என்று காமரதி கேட்டாள்.

ஒரு ஆணும் அசையவில்லை.

“நீங்கள் கோழைகள். பீரப்பாவின் நிழலுக்குக் கூட நீங்கள் சமமாக மாட்டீர்கள்” என்று அவள் வெறுப்புடன் கூறினாள்.

 அவளின் பேச்சை அங்கு இருக்கும் யாரும் மதித்ததாகத் தெரியவில்லை ஒருவன் அவளை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையை வீசிவிட்டு, கூர்தீட்டப்பட்ட வாளை அவள் கழுத்தை நோக்கி உயர்த்தினான்.

 அப்போது... தூரத்தில் உடுக்கையின் ஒலி சன்னமாகக்  கேட்டது...

 காற்று நடுங்கியது...

 அந்தக் காற்றின் ஊடே  ஒரு மிருகத்தின் குளம்பொலி எதிரொலித்தபடி இருந்தது. ஆனால் அது குதிரையின் குளம்பொலி இல்லை. அதைவிட வலுவான ஏதோ ஒன்றின் குளம்பொலி.

 வீரர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

 காற்று  வேகமாக சுழன்று, அந்த பிரதேசம் முழுவதும் புழுதி மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் கண்களுக்கு வருவது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

 பின்னர் காற்றைக் கிழித்துக்கொண்டு  புழுதிக்கு  மத்தியில் வெண்ணிறக் காளை ஒன்று புயல் போல் வந்தது. அதன் மேல் மனித வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

 அவர் மின்னலின் வடிவில்  இருந்தார்.  அவரது முடிக் கற்றைகள்   கரிய பாம்புகள் போல சுருண்டிருந்தது, அவரது உடல் சாம்பல் மற்றும் காட்டு மூலிகைகளின் மணத்தால் சூழப்பட்டிருந்தது. அவரது கண்கள்  எரியும் இரு சூரியன்கள் போல இருந்தது. புலித்தோல் அவர் பின்னால் பறந்தது. அவரது ஒரு கையில் மழுவும் மற்றொரு கையில் திரிசூலமும் இருந்தது.

 நிலைமையை புரிந்து கொண்ட ஒரு வீரன் வேகமாக செயல்பட்டான்... அவன் காமரதியின் கரழுத்தை நோக்கி கத்தியை உயர்த்தினான். ஆனால் அதை அவன் வீசுவதற்குள்...

 பறந்து வந்த திரிசூலம் அவனது நெஞ்சில் பாய்ந்தது . புயலின் சிக்கிய மரம் போல் அவன் தூக்கி வீசப்பட்டான்.

காமரதி தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். அவளது மூச்சு தடைபட்டது. வார்த்தைகள் விம்மியபடி வெளிவந்தது.

 “மகாதேவா... நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்பதை நான் அறிவேன் " என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

 சிவன் வீரர்களை சிதறடித்தார். அவர் இடி போலத் தாக்கினார், கத்திகள் உடைந்தன.  வீரர்கள்  சிதறினர். 

சாதுமிரண்டால் என்னவாகும் என்பதை உலகம் அன்று கண்ணுற்றது. 


காமரதியை அவர் நந்தனின் மீது ஏற்றிக்கொண்டார். பின்னர் அவர் குகையை விட்டு நீங்கினார். குகை, அவர் பின்னால்  பயத்தில் எரிந்தது.

இதற்கிடையில், பழங்குடிப் படைகள் ஆற்றை எதிர்க்கும் அணையைப் போல போராடின. வெண்கல கத்திகள் இரும்புக்கு எதிராக உடைந்தன. அம்புகள் சீறிப்பாய்ந்தன. கூச்சல்கள் எழுந்தன.

ஆனால் நிலம் நடுங்கத் தொடங்கியது. சேனாதிபதியின் குதிரைப்படை சமவெளியில் இடியோசையுடன்  இறங்கி வந்தது.

பழங்குடி வீரர்கள் அச்சத்துடனும் வியப்புடனும் இந்தக் காட்சியை பார்த்தனர்.  இந்த நிலத்தில் இருக்கும் யாரும் அதுவரை குதிரைகளை பார்த்ததில்லை. தரையின் மீது  நின்று கொண்டு போர் புரியும் வழக்கம் கொண்ட அந்த மக்களுக்கு, குதிரைகளின் மீது வந்து கொண்டிருக்கும் வீரர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. யாரும் இதற்கு முன் இப்படி ஒரு படையை  எதிர்கொண்டதுமில்லை.

இப்போது இரு பக்கங்களிலிருந்து, காளியும் பீரப்பாவும் சூழப்பட்டனர். முன்னால் பசவண்ணாவின் படை, பின்னால் தக்ஷனின் குதிரைப்படை.

“இறக்கத் தயாரா, பீரப்பா?” சேனாதிபதி  ஆவேசமாக கத்தினான், அவரது வாள் உயர்ந்து.

ஆனால் வானம் வேறு பதிலை வைத்திருந்தது.அப்போது,  எருதுகளால் இழுக்கப்பட்ட தேர்கள் காட்சிக்கு வந்தன.

 வேளிர் குலங்கள் வந்துவிட்டன.முன்னணி தேரில் வேள், வேளிர் குலத்தின் அரசன், மேருவைப் போல் நின்று கொண்டிருந்தான்.


:“இது எங்கள் நிலம்! இது எங்களுக்கு இடையேயான பிரச்சனை. எந்த அந்நிய வாளும் எங்கள் மண்ணை உரிமை கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன். இங்கு, நான் துரோகத்தின் வாசனையை உணர்கிறேன்.”அவர் குதிரைப்படையை நோக்கி கண்களைச் சுருக்கினார். “ஒரு அடி முன்னேறினால், வேளிர்களின் கோபத்தை எதிர்கொள்வீர்கள்” என்று அவர் சேனாதிபதியை நோக்கி எச்சரித்தார்.

சேனாதிபதி முன்னேறினான், பின்னர் அவன் தனது குரலை உயர்த்தினான், பசவண்ணாவின் வீரர்கள், வேளிர்கள், பழங்குடி வரிசைகள் அனைவரும் கேட்கும் வண்ணம் பேச ஆரம்பித்தான் :“ வேளிர்களின் அரசே... என்னை உண்மையைப் பேச அனுமதியுங்கள்,”  அவரது குரல் அளவாக இருந்தது, ஆனால் வார்த்தைகள் விஷத்துடன் கலந்து இருந்தது. “நாங்கள் இந்த மண்ணை  அழிக்க வரவில்லை... பாதுகாக்க வந்துள்ளோம்.”

“இந்த மனிதன்... பீரப்பா,” அவர் பழங்குடித் தலைவரை கூர்மையாக சுட்டிக்காட்டி, “நீதியின் பெயரில் மறைந்து நிற்கிறான். ஆனால் அவன் உண்மையில் விரும்புவது… பசவண்ணாவின் நிலம்.”

சேனாதிபதி தனது புதிய திட்டத்தை விரிவாக்கத் தொடங்கினான்,

 வேளிர்களையும் மற்றவர்களையும் தாங்கள் பசவண்ணாவுக்கு உதவ வந்ததாக நினைக்க வைக்க, அவன் பீரப்பாவை பசவண்ணாவின் நிலத்தை ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டதாகவும், அதன் காரணமாகவே  அவரது மகனைக் கொன்றதாகவும், இப்போது காமரதியை கொன்றுவிட முயல்வதாகவும் குற்றம் சாட்டினான். 

 காமராதியை பீரப்பா பீம்பெட்கா  குகைகளில் கடத்தி வைத்திருப்பதாகவும், தக்ஷனின் வீரர்கள் அவளைக் காப்பாற்ற சென்றிருப்பதாகவும், அவர்கள் திரும்பும்போது உண்மை வெளிப்படும் என்றும் கூறினார். 

குழப்பம் பரவியது.காளியின் கண்கள் சுருங்கின. வேளிர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வேள் அமைதியாக நின்றார், அவரது மனம் சந்தேகத்திற்கும் கோபத்திற்கும் இடையில் சலனமாடியது.

பசவண்ணா, பெரும் வேதனையுடன் பீரப்பாவைப் பார்த்தார். அவரது குரல் துக்கத்தில் நடுங்கியது.“நீ என் மகனைக் கொன்றாய். இப்போது என் மகளையும் பறிக்க நினைக்கிறாய்!” அவர் பெரும் கோபத்துடன் தன் வாளை உருவினார்.

“நான் சொல்வதை சற்றே செவி மடுத்துக் கேளுங்கள்” என்று பீரப்பா பசவண்ணாவிடம் மன்றாடினார். 

ஆனால் பசவண்ணா ஆவேசத்துடன் முன்னேறினார். அவர் வெறிகொண்டு பீரப்பாவை தாக்கினார். பீரப்பா பசவண்ணாவை தாக்கவில்லை. அவர் 
தயக்கத்தோடும் எச்சரிக்கையோடும் அவரது வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தார், காளி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தார்.

சேனாதிபதி நடப்பதனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பொறி வேலை செய்தது. எதிரிகளின் ஒற்றுமை உடைந்து கொண்டிருந்தது.

 ஆனால் சேனாதிபதியின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...

அதுவரை இந்தக் குழப்பங்களை பிரதிபலிப்பது போல் மங்கலாகவும் மேகமூட்டத்துடனும்
 காணப்பட்டிருந்த வானம், தெளிவடையத் தொடங்கியது ... 

உலகின் மூச்சு நின்றது போல, காற்று அடங்கியது...

கதிரவனின் ஒளிக்கீற்று மேகங்களுக்கிடையே ஊடுருவி,  ஒரு ஒற்றைக் கீற்றை வெளிப்படுத்தியது...

அந்த ஒளிக்கீற்றின்  வெளிச்சத்தின் வழியே, மின்னும் கொம்புகளைக் கொண்ட  காளை ஒன்றின் மீது அவர் வந்தார். 

அவரது நெற்றியிலும் உடலிலும் புனித விபூதி பூசப்பட்டிருந்தது, அவரது தசைகள் புயல்களின் வலிமையுடன் அசைந்தன. அவரது நெற்றியில்,  மிளிரும் கண்களுக்கு மேலே, மூன்றாவது கண் ஒன்று  உலகை அமைதியாக உற்று நோக்கியது. மறுபிறவி எடுத்த கடவுளைப் போல அவர் காட்சியளித்தார்.  

 சிறிது நேரத்திற்கு முன்பு வரை கூச்சல்களாலும் மரண ஓலங்களாலும் நிரம்பி இருந்த போர்க்களம், விசித்திரமான அமைதியில் ஆழ்ந்தது. போர் கூட அவரது முன்னிலையில் மூச்சுவிடத் துணியவில்லை.

காமரதி அவருடன், எவ்வித சேதாரமும் இன்றி அமர்ந்திருந்தார். 

இதைக் கண்ட  பீரப்பாவின் முகம் ஆனந்தத்தால் பிரகாசமாகியது.

பசவண்ணாவின் கைகளில் இருந்து வாள் நழுவியது.

 சேனாதிபதியின்  கண்கள்  வியப்பினால்  விரிந்தன. அவனது முகத்தில் அச்சத்தின் ரேகைகள் படரத் துவங்கின. அவன் பொய்களால் கட்டி எழுப்பிய கோபுரம் சரிந்து கொண்டிருந்தது.

 வேளிர் வீரர்களின் முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தது . 

அனைவரின் பார்வையும் சிவனின் மேல் பதிந்தது.

அந்த கணத்தில் தங்களின் காப்பாளர் வந்துவிட்டார் என்பதை  உலகம் அறிந்தது. போர்க்களம் முழுவதும் அமைதியாக அவரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒருவன் மட்டும் அந்தப் புனித அமைதியை பயன்படுத்திக் கொண்டு விரைவாக செயல்பட்டான். 

தான் தோல்வியடைந்ததை சேனாதிபதி அறிந்து கொண்டான். அவனது முகம் பயத்தின் ரேகைகளை வெளிக்காட்டியது. கதை அவன் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருந்ததை அவன் அறிந்தான்.

 ஆயினும் அந்தக் கதையின் இறுதி வரிகளை அவன் எழுதி விட எண்ணம் கொண்டான்.

 அவன் யாரும் அறியா வண்ணம் ஒரு சிறிய குறுவாளை உரையிலிருந்து வெளியே எடுத்தான். அந்தக் குருவாள் ஒரு கொடிய நெஞ்சினை தாங்கியிருந்தது.

 தேர்ந்த வீரனான அவன், அதை நேராக பீரப்பாவின் முதுகை நோக்கி வீசினான். அது பறக்கும் ஒரு நாகத்தை போல்  சீறிப்பாய்ந்து பீரப்பாவின்  முதுகில் பதிந்தது.

 கத்தியை முதுகில் தாங்கியதும் கோபமடைந்த பீரப்பா கத்தி வந்த  திசையை நோக்கி திரும்பினார். 

 " முன் நின்று தாக்காமல், பின் நின்று தாக்கும் நீ வீரனா? கோழையே... உனது கதையை முடிக்கிறேன்" என்று ஆவேசத்துடன் சேனாதிபதியை நோக்கி பீரப்பா முன்னேறினார். 

 இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் கால்கள் தளர்ந்து பூமியில் விழுந்தார் பீரப்பா. அவரது உடலில் நீலம் பாயத் துவங்கியது.

 சேனாதிபதி ஒரு ஏளனப் பார்வையை பீரப்பாவை நோக்கி வீசினான். 

 இதைக் கண்ட காளி கடும் கோபம் கொண்டார்.  

அவர் கோபத்தில் கொற்றவையைப் போலப் பாய்ந்து, சேனாதிபதியின் நெஞ்சில் உதைத்தார். அவன் பின்னால் பறந்து, புழுதியில் மோதி விழுந்தான். காளி அவனது கூந்தலைப் பற்றி, வாள் கொண்டு ஒரே  வீச்சில்  அவனது தலையை வெட்டினார்.

தக்ஷனின் வீரர்கள் பயத்தில் பின்வாங்க ஆரம்பித்தனர். பின்னர் அவனது   படை வடக்கு நோக்கி ஓடியது, 

காளி பதட்டத்துடன் பீரப்பாவின் பக்கம் ஓடினார். பீரப்பாவின்  உடல் ஜில்லிட ஆரம்பித்தது, தோல் அசாதாரணமாக நீல நிறத்தில்  இருந்தது. 

பீரப்பாவின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது.  .“பசவண்ணா… இறுதியாக… உங்களது  சந்தேகங்களுக்கு… விடை கிடைத்துவிட்டது.... இனி நான் நிம்மதியாக மரணிப்பேன்...” என்று வலியோடும் வேதனையோடும் கூறினார்.

பசவண்ணாவின் வாள் நழுவியது. அவர் மண்டியிட்டார், அவரால் பேச முடியவில்லை.

பீரப்பா சிவனையும் காளியையும் பார்த்து பேசத் துவங்கினார் "என் சகோதரி… காளி… என் சகோதரர்… மல்லப்பா… உங்கள் முன் இறப்பது… எனக்குப் பெருமை .”

 பின்னர்  அவர் பலவீனமாக காமரதியை நோக்கித் திரும்பினார். “நாம் இந்த முறை… ஒன்று சேர முடியவில்லை… என்னை மன்னித்து விடு காமரதி... " அவரது கண்கள் மூடத் துவங்கியது.

சிவன் பீரப்பாவிற்கு அருகில்  மண்டியிட்டார். அவர் மணிக்கட்டில் விரல்களை வைத்து  பீரப்பாவின்
நாடியைப் பரிசோதித்தார். அவர் சில மூலிகைகளை நசுக்கி,  பாஷாணங்களின் கலவையை கரைத்து  பீரப்பாவின் நாக்கின் கீழ் வைத்தார்.

பீரப்பாவின் உடல் தெளிவடைந்தது... அவர் மூச்சு விடத் துவங்கினார்.

 இதைக் கண்ட  வேளிர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது...

" மரணிப்பவர்களை எழுப்புபவர் வந்துவிட்டார்"

“அவர் மனிதர் இல்லை” 

“அவர் மாயோனின்… மறுபிறவி"

வேளிர்கள் பிரமிப்பில் தங்களுக்கு இடையே பேசிக்கொண்டனர். 

"அந்த நீல நிறக்கழுத்து...அவர்... மிடற்றண்ணல்!!!"

" நமது பழைய ஓலைச் சுவடிகள் முன்னறிவித்தவர்."

"கடற்கோளால் அழியவருக்கும் நமது குலத்தை காக்க வந்த அளவில்லாப் பெம்மான் அவர் "வேளிர்களின் தலைவன் வேள் உரக்கக் கூறினான்.

 பின்பு அவன் சிவனின் முன்பு  மண்டியிட்டான். அவனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிவனின் முன்பு மண்டியிட்டனர்.
-------

 இவ்வாறு பீம்பேட்காவின் போர் முடிவுக்கு வந்தது. நிலம் தூக்கத்தில் இருந்து மீண்டது. நிலத்திற்கான சண்டை முடிவடைந்தது.

 வளத்திற்கான சண்டையே இந்த பூமியில் பல கோடி ஆண்டுகளாக உயிர்களிடையே  இதுவரையிலும் நிகழ்ந்து வந்திருந்தது. அப்படி நிலத்திற்கான போட்டியாக ஆரம்பித்த இந்தப் பெரும் போர், இணக்கத்திற்கான அச்சாரமாக அமைந்தது இந்த நாளில்தான். 

அந்த நாள் வெறும் போரின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவின் கற்றல் காலத்தின் தொடக்கம். ஆறறிவு உயிரினங்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தின் ஆரம்பம். 

அது, கடவுள்கள் மண்ணில் அவதரித்து, கற்காலத்தைய மனிதர்களை நாகரிகத்திற்கு உயர்த்திய காலம்!

 நமது முன்னோர்களின் அறிவு விழித்தெழத் தொடங்கிய காலம்!

கடவுள்கள் மனிதர்களுடன் கைகோர்த்து நடந்த காலம்!

அது இந்தியாவின் பொற்காலம்.

---------


The Rock Art of the Bhimbetka Area in India - Meenakshi Dubey-Pathak

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

அளவிலாப் பெம்மான் (ஆதியோகி: அத்தியாயம் 20)

காலைக் கதிரவன் பீம்பேட்கா சமவெளியின் விளிம்பில் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி பாறைச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த  பழமையான ஓவியங்...