போரில் சிந்திய இரத்தம் உலர்ந்தது. நிலத்தில் ஒரு புனித மௌனம் திரும்பியது.
அந்த நிலத்தில் இருந்த ஒரு பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள சிறிய மேட்டில் பசவண்ணா நின்று கொண்டிருந்தார். அவரது பார்வை கீழே இருந்த இரு இளம் உருவங்களின் மீது நிலைத்து இருந்தது. அரசமரத்தின் பரந்த கவிகையின் கீழ் உறவினர்களும் சுற்றத்தார்களும் புடை சூழ பீரப்பாவும் காமரதியும் நின்று கொண்டிருந்தனர்.
பீரப்பா, ஒரு அமைதியான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார், அவருக்கு அருகில் காமரதி அன்பின் வடிவாக நின்று கொண்டிருந்தாள்.
அவர்களின் திருமணம் எளிமையாக காளியின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. திருமணம் நடந்த பின்பு சிவன் பீரப்பாவை நோக்கி முன்னேறி, தன் திரிசூலத்தை பீரப்பாவின் கைகளில் வைத்தார். அவர்களை வாழ்த்தி விட்டு சிவன் தனியாக நடந்து சென்றார்.
அவர் விரும்பிய இணைப்பு இங்கு நிகழ்ந்துவிட்டது. இந்தத் திருமணம் வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டும் அல்ல. அது போரினால் அழியவிருந்த இரு தரப்பு மக்களின் இணைப்பு.
விவசாயத்தை முன்னெடுத்த விவசாய குல மக்களும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் ஆயர் குல மக்களும், நிலம் என்னும் முதற்பொருளோடு, பொழுது என்னும் மற்றொரு முதற்பொருளின் ஒத்திசைவில், கருப்பொருளாக இணைந்து வாழவிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு அந்த திருமணத்தின் மூலம் தொடங்கியது.
ஆயர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழையின் முதல் சாரல் தொடங்கும் முன்னர், அவர்கள் தங்கள் புனித இடம்பெயர்வைத் தொடங்கினர். அவர்கள் மழையின் தாளத்தை பின்பற்றினர். போகும் இடம் எங்கும் வளத்தை விதைத்துச் சென்றனர்.நிலம் அதற்கு ஏற்ப பதிலளித்தது. விவசாய குலமக்கள் அந்த வளத்தினால் செழித்தனர்.
நிலத்தில் வாழ்ந்து வந்த எரும்பில் தொடங்கி ஓநாய்கள் வரை அங்கு இருக்கும் அனைத்து உயிரிகளும் அங்கு வாழ்ந்து வந்த மக்களால் மதிக்கப்பட்டன. அனைத்து உயிர்களும் அங்கு சமமாகக் கருதப்பட்டன. சாம்பல் நிற ஓநாய்களைக் கண்டு கூட அவர்கள் அஞ்சவில்லை. அவற்றைக் கொல்லவும் அவர்கள் எண்ணம் கொள்ளவில்லை. ஒரு ஓநாய் முன்னால் ஓடினால், மூன்று நாட்களில் அடுத்த பள்ளத்தாக்கில் மழை வரும் என்று ஆயர்கள் நம்பினார்கள். அவை தங்கள் ஆடுகளை உணவாகக் கொண்டால், இறைவன் தங்களை ஆசீர்வதித்ததாக எண்ணி மகிழ்ந்தனர்.
அந்த நிலத்தில் ஓநாய்கள் முதலிய கொலுண்ணி விலங்குகள் மனிதர்கள் தொந்தரவு இன்றி தங்குவதற்கு ஏற்ப ஒரு காடு இருந்தது. அது தெய்வம் உலாவும் காடு... தேவரு காடு.
தமிழில் கோயில் காடு என அழைக்கப்படுபவை அந்தக் காடுகள். அவை மிகவும் புனிதமான காடுகள்.
இங்கனம் மல்லப்பா என்றும் கண்டோபா என்றும் அவர்களால் அழைக்கப்பட்ட கடவுள் காட்டிய புனித பாதையின் வழி தலைமுறை தலைமுறையாக பயணித்தபடி இருந்தனர் அந்த ஆயர்கள். எத்தனை நகரங்கள் முளைத்தாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அவர்களின் அந்த புனித நகர்வு நிற்பதே இல்லை.
இந்த இடம்பெயர்வைக் குறிக்க ஏடுகள் இல்லை...
சுவடிகள் இல்லை....
கொடிகள் இல்லை...
மன்னர்கள் இல்லை...
எந்த ராஜ்ஜியத்தையும் விட இவை பழமையானவை. எந்த தெய்வத்தை விடவும் இவை புனிதமானவை.
இதை அவர்கள் தங்கள் தொழில் முறையாக பின்பற்றவில்லை வாழும் முறையாக பின்பற்றினார். இறைவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியாக இந்தத்தொழிலை அவர்கள் கருதினர்.
அந்தப் பணியை செவ்வன மேற்கொண்ட அவர்களை சந்ததிகள் பல கடந்தும் இந்த நிலம் வாழ்வாங்கு வாழ வைத்தது.
ராஜ்ஜியங்கள் பேராசையால் மண்ணை எரித்தபோதும், இந்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்த போதும், ஆயர்கள் இந்தப் பாதையின் வழி நடப்பதை மறக்கவில்லை.
அவர்கள் இந்த புனித நிலத்தை உணவளிக்கும் இயந்திரமாக பார்க்கவில்லை.
நிலத்தோடு உரத்தை சேர்ப்பது அதிக விளைச்சலை தரும் என்பதே தற்போதைய அறிவியலின் எண்ணமாக இருக்கிறது.
அது உண்மைதான். ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு தான் வரும். ஆனால் ஆயர்கள் பின்பற்றிய கணக்கில், ஒன்றும் ஒன்றும் உறவாடி மூன்றாகியது.
ஒன்று ஒன்றும் சேர்வதினால் இரண்டு வரும் என்பது ஒரு எளிய கூட்டல் கணக்கு. ஆனால் ஆயர்கள் பின்பற்றியது வாழ்வுக்கான கணக்கு.
இந்தக் கணக்கில் பரிணாமங்களின் உறவாடல் நிகழ்ந்தது.
இந்த நிலத்தில் சிவனின் முன்னெடுப்பால் நிலம் எனும் பரிணாமம் பொழுது எனும் பரிணாமத்தோடு உறவாட வைக்கப்பட்டு, விளைச்சல் வேகம் என்னும் மூன்றாம் பரிணாமம் உச்சமடைய வைக்கப்பட்டது.
பொதுவாக நாம் பிரபஞ்சத்தை மூன்று பரிணாமங்களில் பார்க்கின்றோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிணாமங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிணாமம் .
வெளியின் பரிணாமங்களில் நாம் முன்னும் பின்னும் மேலும் கீழும் நகரலாம். ஆனால் காலத்தில் நாம் முன்னோக்கி மட்டுமே நகர முடியும். நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. எனவே இந்தக் கால பரிணாமத்தை அனுமானித்து, ஆறாம் அறிவு கொண்டு சிந்தித்து, பொழுதை நமக்கு உகந்ததாக பயன்படுத்திக் கொள்வதே எந்த ஒரு நாகரிகத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
நிலம் என்னும் பரிணாமத்தோடு பொழுது என்னும் பரிணாமம் உறவாடும் பொழுது, உயிர்கள் அந்த நிலத்தில் நிலைத்து நீடித்து வாழ வழிவகை செய்யப்பட்டது .
நிலம் + பொழுது = உயிர்ப்பு.
இது ஒரு எளிய கூட்டல் இல்லை, ஒரு புனிதத் தாளம்.
வெளி மற்றும் காலத்தின் இணக்கம்.
வெளியும் காலமும் பிரபஞ்சம் நெய்யப்பட்டதும் பிறந்த முதல் பரிமாணங்கள்.
நமது தற்போதைய இயற்பியல் விதிகள் செல்லுபடியாகாத சுத்த சிவ நிலையிலிருந்து தான் அனைத்தும் ஆரம்பித்தது. இன்று நமக்குத் தெரிந்த வெளியும் காலமும் தோன்றுவதற்கு முன்பு, ஒரு ஒற்றை புள்ளியில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் பிறந்தது.
பின்னர், ஆரம்ப பிரபஞ்சத்தை நீட்டி, மூன்று 'வெளிப் பரிமாணங்களையும்' ஒரு 'காலப் பரிமாணத்தையும்' நிலைப்படுத்தி, இன்று நாம் காணும் பிரபஞ்சம் உருவாகியது.
இந்த வெளி மற்றும் காலம் என்னும் நாடக மேடையில் தான் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின் வாழ்வு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்த இணைப்பு வெறும் பயிர்களைத் தாங்கவில்லை; அது உயிரையே சாத்தியமாக்கியது.
இவை வெறும் வளங்கள் இல்லை.
இவை நாகரிகத்தின் முதன்மையான முன்னுரிமைகள்.
இதைப் புறக்கணித்த என்ன நாகரிகமும் நம்முடன் இப்போது இல்லை.
இவற்றை புறக்கணித்தால், தெய்வங்களும் வீழ்ச்சியடையும்.
இவற்றை மதித்தால், உயிர் சமநிலையில் மலரும்.
இது ஒரு கூட்டல் சமன்பாடு இல்லை.
இது ஒரு ஆற்றல் நடனம்!
இது ஒரு சிவ சக்தித் தாண்டவம்!!
நிலமானது பெரும் பொழுதுடன் இணக்கமாக சமநிலையில் சந்தித்தபோது, செழிப்பு எழுந்தது
இந்தத் தாண்டவம் ஒத்திசைத்து நடக்கும் இடத்தில் தான் தெய்வங்களும் குடியேற முடியும். அந்த தெய்வமே அங்கிருக்கும் கருப்பொருட்களில் முதன்மையான கருப்பொருளாக இருந்து மற்றேனைய கருப்பொருட்களை காத்து நிற்கும்.
மக்களும் அந்த கருப்பொருட்களில் ஒன்றாக இணக்கமாக வாழத் துவங்கினர்.
கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலப்பரப்புடனும் பிணைந்த வாழ்க்கையின் குறியீட்டு சாரம்: அவர்கள் வணங்கிய கடவுள்கள், அவர்கள் உண்ட உணவு,
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் பின்பற்றிய தொழில்கள், அவர்களது பாடல்கள், சடங்குகள், அனைத்தும் அதற்குள் அடக்கம்.
இதுவே சிவன் நமக்கு கட்டமைத்துத் தந்த வாழ்வு முறை.
இந்த வாழ்வு முறையே நமது நாகரிகத்தின் அடிப்படைக் கூறு. தென்னகம் முழுவதும் இந்த வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வரத் துவங்கின.
இதை கட்டமைத்த அந்த சிவனை மக்கள் மஹாகாலேஸ்வரில் தட்சிணாமூர்த்தியாக வணங்கினர்.
தட்சிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாமூர்த்தி என்றால்
தெற்கு நோக்கி நிற்கும் கடவுள்.
மக்கள் அவரை கடவுளாக வணங்கினாலும் அவர் அடிப்படையில் ஒரு மனிதன் தான். அந்த மனிதனுக்குள் ஒரு ஆழமான வலி இருந்தது, வெளியே சொல்ல முடியாத உயிர் நாடியில் ஏற்பட்டிருக்கும் துன்பம் மிகு வலி அது. பிறவியில் இருந்தே அவரைத் துரத்தும் சாபம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போர் அது. அவரின் உயிர்நாடி எழுச்சி, மக்களால் ஆண்மையின் ஆற்றல் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அது அவருக்குள் இருக்கும் நோயின் ஒரு அறிகுறி. அவர் எடுத்த நஞ்சின் பக்க விளைவு அது.
அந்த அறிகுறியின் காரணமாக அவர் மக்களுடன் புழங்குவதைத் தவிர்த்தார். தனது அறிகுறிகளின் வாதையை தணிக்கும் ஒரு குளிர்ந்த இடத்தை நோக்கி அவர் பயணப்பட்டார். அமர்கண்டக்கை நோக்கி அவரது பயணம் அமைந்தது. அது புனித நர்மதை நதியின் பிறப்பிடம்.
ஒரு ஆலமரத்தின் கீழ் அவர் தெற்கு நோக்கி அமர்ந்தார். அவரது உயிர் நாடிக்கு திருப்பி விடப்பட்ட இரத்தத்தின் காரணமாக தாங்கொணா வலி அவருக்கு நேர்ந்தது. உயிர்நாடியை நோக்கி குவிக்கப்பட்ட ரத்தத்தை மடை மாற்றுவதற்கு அவர் கால்களை அகற்றி, குதிகால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்தார். அந்த ஆசனத்தில் அவர் அமரும் பொழுது அவரது வலி கட்டுப்பட்டது.
இதுவே அவர் கண்ட முதல் ஆசனம்! அதுவே அவர் கண்டறிந்த ஆதியோகம்!! அவர்தான் இந்த நிலத்தின் ஆதியோகி!!!
இந்த யோக ஆசனங்கள் ஆற்றலின் காரணமாக பிறக்கவில்லை, தேவையால் பிறந்தது. வலிகளைத் தீர்க்கப் பிறந்தது.
அந்த நிலையில், நெருப்பு உள்நோக்கி திரும்பியது.
வலி மறையவில்லை, ஆனால் அது திசை மாற்றப்பட்டது . அந்த வலியை அவர் உடலில் கரைய விட்டார், மூச்சின் வழியாக வெளியேற்றினார். அவர் யாருடனும் பேச விரும்பவில்லை.
மௌனம் அவரது குணமாக மாறியது.
அவர் தியானிக்கத் தொடங்கினார்.
அவர் அமர்ந்திருந்த அந்த ஆசனத்தின் பெயர் 'மூலபந்தாசனம் '.
மூலம் என்றால் , "வேர்... அடித்தளம்..."; பந்தம் என்றால் பூட்டு என்று பொருள்படும்.
இந்த ஆசனத்தின் தொடர்புடைய மூலகம் - நிலம், தொடர்புடைய புலன் - தொடுதல் உணர்வு.
உலகில் முதன் முதலில் பிறப்பெடுத்தவை ஓருயிர் உயிரினங்கள். ஓருயிர் உயிர்களுக்கு இருந்த ஒரே அறிவு 'தொடுதல் அறிவு'. அந்தத் தொடுதல் அறிவைக் கொண்டுதான் அது தனது இரையைத் தேடியது, இணையைத் தேடியது. இந்த அறிவைக் கொண்டு மட்டுமே அது தனது சந்ததிப் பெருக்கத்தை நிகழ்த்தியது.
ஓறறிவாகிய தொடு உணர்வே, காமத்தின் நிலைக்கண்!
உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பதுபோல், இந்த உயிரின் இயக்க மையமாக இருப்பது மூலாதாரம். ஆனால் தீண்டல் இச்சையினால் உந்தப் பட்டு இருக்கும் வரை, மூலாதாரத்தில் மையம் கொண்டு இருக்கும் உயிரின் இருப்பை மனது அறிவதில்லை.
படைப்புத் தொழிலின் ஆதாரம் இங்குதான் ஒரு பாம்பு போல் உறங்குகிறது. தொடுதல் உணர்வு தரும் இன்பத்தில் மயங்கி, அந்த ஆற்றல் அங்கு மட்டும் செயல்படும்போது, ஓறறிவு உயிராக மட்டுமே நாம் இருக்கிறோம். இந்த உண்மை அவருக்கு தியானத்தின் மூலம் உணர்த்தப்பட்டது.
அதிகப்படியான பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்த முலாபந்தாசனம் உதவுகிறது என்றும், இந்த ஆசனம் மூல சக்கரமான மூலாதாரத்தை செயல்படுத்துகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார் .
அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவர் தியானிக்கத் தொடங்கியதும் அந்த வனத்தில் இருக்கும் விலங்குகள் அனைத்தும் தெய்வீக வாக்கிற்கு கட்டுப்பட்டது போல் அவரை சூழத் தொடங்கின.
அவர் தனிமையை விரும்பி தியானத்தில் அமர்ந்தாலும், மனிதர்கள் அவரை தனித்து இருக்க விடவில்லை.
ஹரப்பாவில், ஒரு காலத்தில் துடிப்பாக இருந்த நகரங்களில் நோய்கள் பரவத் தொடங்கின. கழிவு நீரால் வியாதிகள் பரவின. எனவே, அவர்கள் தங்களைக் காக்க வேண்டி மற்ற நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினர். வேளிர்களும் யாதவர்களும் தம்மைக் காக்க அவதரித்த கடவுளை பற்றி ஹரப்பர்களுக்கு செய்தி அனுப்பினர். ஹரப்பர்கள் நர்மதியின் பாதை வழியே பயணப்பட்டு சிவனை அடைந்தனர்.
அவர்கள் சிவனை மரங்களிடையே விலங்குகளுக்கு மத்தியில் கண்டனர். அவர் அவர்களை அறிவால் குணப்படுத்தினார். அவர் அந்த மக்களுக்கு கழிவு நீர் குழாய்களை அமைக்கவும், மூலிகைகள் மற்றும் நஞ்சுக்களால் சிகிச்சையளிக்கவும், உடலை பலப்படுத்தும் யோக முறைகளையும் கற்றுக் கொடுத்தார் .
அவரது முன்னேற்பாடுகளால் அந்த நாகரீகம் அழிவிலிருந்து மீண்டது. புதிய கடவுளின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது.
ஆனால் அவர்கள் சிவனை தவறாகப் புரிந்து கொண்டனர்.
சிந்து நதி நாகரிக மக்கள், ஆயர்களாக இருந்த பொழுதும், பசுக்களை விட காளைகளே அவர்களை அதிகம் கவர்ந்தது. அவர்களது சின்னங்கள் முழுக்க காளைகளே நிரம்பி இருந்தன.
காளைகள் ஆண்மையின் அடையாளம். ஆற்றலில் வெளிப்பாடு.
ஆண்மையையும், வீரத்தையும், ஆற்றலையுமே அவர்கள் போற்றத்தக்கதாக கருதினர். சிவனையும் அவர்கள் ஆற்றலின் மறு உருவமாகத்தான் கருதினர். அவரது உயிர்நாடி எழுச்சி அதீத ஆற்றலின் பிரதிபலிப்பாகக் கருதப்பட்டது.
தமிழர்களின் ஆதி குடிகளுக்குச் செய்யப்படும் அலங்காரமாகிய கொம்பு மற்றும் தோகை தலைப்பாகையுடன் கூடிய, மூன்று முகங்கள் கொண்ட அவரது உருவத்தை ஆண்மை எழுச்சி அறிகுறியுடன் அவர்கள் அச்சில் வடித்து வணங்கத் தொடங்கினர்.
ஆனால் சிவன் தனது உருவத்தை வணங்குவதை விரும்பவில்லை. எனவே உருவம் அற்ற லிங்கத்தை அந்த மக்கள் ஆற்றலின் உருவமாக வணங்க ஆரம்பித்தனர்.
ஆனால் சிவனை ஏற்கனவே வெறுப்புடன் பார்த்த வடக்கு மன்னன் தக்ஷன், இதை தெய்வ அவமதிப்பாகக் கண்டான்.
லிங்கச் சின்னங்கள் தக்ஷனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
“இந்த சிஷ்ணதேவர்கள்,” அவன் இகழ்ந்தான், “அவர்கள் ஆண்மையை வணங்கத் துணிகிறார்கள். அசிங்கத்தை பின்பற்றுகிறார்கள்… புனிதத்தை அவமானமாக மாற்றுகிறார்கள்.” என்று ஆவேசப்பட்டான்.
//ரிக்வேதம் VII. 21-5. சிஷ்ணதேவனை (லிங்கத்தினை) தெய்வமாகக் கொண்டோர் எமது புனித (வழிபாட்டிற்கு) இடத்திற்கு வராதிருக்கக் கடவர்.//
மூன்று முகம் கொண்ட சிவனை காணும் பொழுதெல்லாம் தஷனுக்கு கோபம் பொங்கியது. அவனது தந்தைக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அதில் ஒரு முகமான தன்முனைப்பை சிவன் அழித்து விட்டதாக அவன் கருதினான்
இந்த முகங்கள் ஒரு மனிதனின் கோபம் சாந்தம் போன்றவற்றை குறிப்பன என்றும் ஆக்கல் அழித்தல் காத்தல் போன்றவற்றை குறிப்பன என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில் சிவனுக்கு இருப்பதும் ஐந்து முகங்கள் தான்.
இந்து சைவ ஆகமப் பாரம்பரியத்தின் படி, சிவன் ஐந்து தெய்வீக செயல்களை நிகழ்த்துவதாக சைவர்கள் நம்புகின்றனர்: ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (பாதுகாப்பு), ஸம்ஹாரம் (அழிவு), அனுகிரகம் (அருள்), திரோகணா/அவித்யா (மாயை).
இந்த ஐந்து செயல்களில் முதல் மூன்று செயல்கள் சிவனின் முகங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன: ஹரப்ப சின்னத்தில் இருக்கும் மூன்று முகங்களைத் தவிர பின்னாலும் முகம் மறைந்துள்ளது.
ஆனால் ஆதியில் வழிபடப்பட்டது வெறும் லிங்கம் மட்டுமே. அந்த லிங்கமும் ஆவுடையில்லாத லிங்கம். அது வெறும் ஆண்மையின் ஆற்றலைக் குறிக்கும் லிங்கம்.
தமிழர்கள் ஆதியில் வழிபட்ட ஐவகை நிலத்தின் தெய்வங்கள் அனைத்தும் தொழில் நிமித்த அல்லது ஆற்றல் நிமித்த வெளிப்பாடுகள்.
ஹரப்பர்கள் லிங்கத்தையும் ஒரு மனிதனது ஆற்றல் வெளிப்பாடாகக் கருதினர்
இந்த வழிபாட்டு முறைகளைக் கண்டு சிவனும் வருத்தம் கொண்டார். தன்னை பின்பற்றுபவர்களும் சரி, தன்னை எதிர்ப்பவர்களும் சரி, தனது கொள்கைகளை புரிந்து கொள்ளாதது சிவனுக்கு வருத்தத்தை அளித்தது. மேலும் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் அவர் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த வருத்தத்துடன் அவர் நர்மதி நதிக்கரையில் உலாவிய பொழுது லிங்க வடிவில் ஒரு கல்லைக் கண்டார்.
வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன் அது காட்சியளித்தது. அது இரு வேறு கற்களின் இணைப்பு.
அதைக் காணும் பொழுது சிவனுக்கு சமநிலை தத்துவம் நினைவுக்கு வந்தது.
இது பின்னர் மக்களால் பாண லிங்கம் என அழைக்கப்பட்டது. இதையும் மக்கள் லிங்கம் வழிபடத் தொடங்கினர்.
சிவன் முன்னிறுத்தியது கொள்கைகளை தான். அந்தக் கல்லின் மூலம் உணர்த்தப்படும் உருவகமான உண்மையைத்தான் அவர் வலியுறுத்தினார். அந்தக் கல் உணர்த்திய தத்துவம் தான் சிவனின் கொள்கை. சிவனின் சித்தாந்தம்.
சிவனுக்கு வழிபடக்கூடிய கற்களில் சக்தி இல்லை என்பது தெரியும்.
மக்கள் வழிபட வேண்டியது, அது போதிக்கும் பாடம்.
அந்தக் கல்லை அவர் எதிர் துருவங்களின் இணைப்பாக கருதினார். இரு வேறு ஆற்றல்களின் சங்கமமாக கருதினார்.
தெய்வீகம் என்பது அதீதமான ஒன்றல்ல. தெய்வீகம் என்பது இரு அதீத ஆற்றல்களின் ஒத்திசைவினால் பிறந்த சமநிலை.
இரவும் பகலும்...
ஆணும் பெண்ணும்...
வீரமும் காதலும்...
சிவனும் சக்தியும்.
என்று அதீத ஆற்றல்களின் சங்கமம் நிகழும் பொழுதுதான் தெய்வீகம் பிறப்பெடுக்கும்.
இந்த இணைப்பு இல்லாமல், படைப்பு இல்லை.
இதுவே சிவனின் முதன்மையான சித்தாந்தம்.
அதீத ஆற்றலின் வாதையை அனுபவித்துக் கொண்டிருந்த சிவனை இன்னும் சக்தி அரவணைக்கவில்லை . அந்த அரவணைப்பினால் மட்டுமே அவரது உடல் சமநிலையை அடையும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அந்த அரவணைப்பின் அடித்தளம் 'அன்பு' எனும் உரிப்பொருள்.
முதற் பொருளையும் கருப்பொருளையும் ஆதாரமாகக் கொண்டு ஜீவித்திருக்கச் செய்யவல்ல உரிப்பொருள் 'காதல்' மட்டுமே.
அதுவே புனிதம்.
அன்பே தொழத்தக்கது.
அன்பே சிவம்.
சிவனது அடிப்படைக் கொள்கையான சமநிலை மற்றும் காதலை ஒரு சேர வலியுறுத்தும் முக்கிய சின்னமே ஆவுடையோடு கூடிய லிங்கம்.
.
ஆனால் சிவனின் இந்த சித்தாந்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த சித்தாந்தம் வேதாந்தத்திற்கு எதிரான கருத்தாகக் கருதப்பட்டது.
அதனால் அந்த லிங்கங்கள் உடைக்கப்பட்டன, அவரது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அவரது சித்தாந்தங்கள் மாற்றியும் மறுத்தும் எழுதப்பட்டன.
இதன் காரணமாக அவரது கொள்கைகள் சிதறடிக்கப்பட்டன... நீர்த்துப் போக வைக்கப்பட்டன... மழுங்கடிக்கப்பட்டன...
இறுதியில் மறக்கப்பட்டன.
ஆனால் முற்றிலுமாக இழக்கப்படவில்லை!
அவரது சித்தாந்தம் எந்தக் கலப்படமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவர் தனது சித்தாந்தங்களை பாதுகாக்க மொழியை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்.
தனது சித்தாந்தங்களை அவர் தனக்கு ஒருபோதும் துரோகம் செய்யாத... இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மண்ணின் மொழியில் அவர் விதைத்துள்ளார்.
அந்த மண்... தமிழ் மண்!
அந்த மொழி... தமிழ் மொழி!!
அதன் இலக்கணம் அவர் கூறிய உண்மைகளை, யுகங்கள் பல கடந்தும் தூய்மையாகத் தாங்கியது.
தமிழ் மண்ணே அவரது சித்தாந்தத்தின் விதை நெல் பாதுகாக்கப்படும் இடம்.
தமிழ் மொழியின் இலக்கணமே அவரது சித்தாந்தத்தின் மூலப்பிரதி.
இந்தக் கொள்கைகளை தமிழர்கள் தங்கள் மொழியோடு கலந்துப் பழகி, பயின்று, வாழ்ந்து வருகின்றனர்
தமிழர்களால் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் எதையும் அனுமதிக்க மனம் ஒப்பவில்லை.
சிவன் தங்களில் ஒருவன் தங்களுடையவன் என்பதில் தமிழர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இருப்பினும் அவன் தங்களுக்கானவன் என்று மட்டும் சுயநலமாக அவர்கள் எண்ணவில்லை.
சிவனது சித்தாந்தங்கள் அனைத்து நாட்டினருக்கும் உரித்தானவை. அனைத்து நாட்டினருக்கும் அவசியமானவை. ஏனெனில் உலகினை காக்கக்கூடிய சித்தாந்தங்கள் அவை.
இன்றும் உலகம், விளைச்சலுக்காக வேகமாக ஓடுகிறது...
சமநிலையை மறந்து தீவிரங்களைத் துரத்துகிறது... அதீதங்களின் பின் அலைகிறது.
அது ஓநாயைக் கொல்கிறது.
மண்ணை விஷமாக்குகிறது.
ஆடுகளின் இடம்பெயர்வின் தாளத்தை புறக்கணிக்கிறது.
மழைப் பாதைகளின் புனிதத்தை அது மறுதலிக்கிறது.
இதன் விளைவாக அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த அழிவில் இருந்து காக்க வல்லவை சிவனின் கொள்கைகள்.
அவரது கொள்கைகளால் தான் இந்த உலகம் காக்கப்படப் போகிறது.
தென்னாட்டு சிவனது சித்தாந்தம், எல்லா உயிர்களையும் காக்க வல்லது!
அந்த சித்தாந்தம் எந்நாட்டவர்க்கும் பொதுவானது!!
அதுவே இறையாகத் தொழத்தக்கது!!!
-------===------
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி!!
-------===------
முதல் பாகம் முற்றும்.

No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...