வெப்பமிகு உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென எரிந்து கொண்டிருந்தது. சிவனால் முன்பு எரிக்கப்பட்ட சாம்பல் குவியல்கள், இப்போது தங்கள் வெப்பத்தை மெல்லிதாக வெளியிட்டன. சிவனது தோல், வெப்ப மிகுதியால் வாடிக் கொண்டிருந்தது. அவரது தோல் காய்ச்சலால் எரிந்தது. ஒரு காலத்தில் பல்வேறு முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அவரின் அழலானது இப்போது ஆவேசம் கொண்டு திரும்பியது. பித்தத்தின் பற்றெரிவால் உந்தப்பட்ட அவரது உடல், கபத்தின் குளிர்ந்த தீண்டலுக்காக ஏங்கியது.
மனிதர்களை விட்டு விலகி இருக்க நினைத்த அவர்; திரும்பவும் மனிதர்களோடு உறவாட வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதை தடை செய்யும் விதமாக, வில்சனின் நோய் அவரது மனநிலையை ஆட்டம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. தவறும் மனநிலையோடு அவர் மனிதர்கள் மத்தியில் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவரது நரம்புப் பிரச்சனைகளை தணிப்பதற்காக மருந்தினை உட்கொள்ள எண்ணம் கொண்டார். ஆனால் அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படும் வலிமிகு உயிர்நாடி எழுச்சியையும் அவரது மனம் வேதனையோடு நினைவு கூறத் தவறவில்லை.
அவர் பெல்லாரியில் இரும்பு ஆயுதங்களை செய்த பொழுது தாரம்,கௌரி பாசாணம் மற்றும் வீரம் முதலிய பாஷாணங்களையும் எடுத்தார். இந்த பாஷாணங்களையும் வேறு சில மூலிகைகளையும் பயன்படுத்தி தனது நரம்பு சம்பந்தமான அறிகுறிகளையும் தோல் சம்பந்தமான அறிகுறிகளையும் மட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தார். தாரம் எனப்படும் அரிதாரம் அவருக்கு மிகவும் சாந்தத்தை அளித்தது. அது ஹரிதாளம், ஹரி பீஜம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளை பற்றி சிவன் அறிந்தே இருந்தார். ஹரி பீஜம் சிவனின் பாலுணர்வு சம்பந்தப்பட்டது என்று பண்டைய ஆயுர்வேத ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த அரிதாரம் அவர் கண்டறிந்த எண்ணற்ற மருந்துகளில் முக்கியமான ஒன்று.
இந்த ஹரி தாளத்தைக் கொண்டு தான் அவர் பரதத்தை உயிர்த்தெழ வைத்தார்.
பரதம் (Pārada, சமஸ்கிருதத்தில்: पारदः) = "பர" (அப்பால்) + "தா" ( தருவது). பரதம் என்றால் விடுதலை தருவது, மோட்சத்தை அளிப்பது எனும் பொருள் தரும்.
பரதம் எனும் சொல் ஒரு உலோகத்தைக் குறிக்கும். அந்த சொல் முக்தியையும் குறிக்கும். அந்த உலோகம் சிவ வீர்யம், சிவ ரேதஸ், சிவ தேஜஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சிவன் தரும் பரதம் ( பாதரச வகை உலோகம்) உடலைத் தாண்டி ஆன்மாவை மோட்சத்திற்கு ஏற்றும் என்பது நம்பிக்கை. அதனால்தான் சிவனை ரசேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தமட்டில் பரதமே அமிர்தம் ஆகும். அதுவே அமரத்துவத்தை அளிக்க வல்லது என்று ரச சாஸ்திர வரிகள் கூறுகின்றன.
पारदः परदो ज्ञेयो यतः संसारपारदः
ஆனால் சிவன் இன்னும் பரதத்தை கண்டெடுக்கவில்லை. அது இமயத்தின் ஆழத்தில் சிவனின் கரங்களால் தீண்டப்படுவதற்காக காத்துக் கிடக்கின்றது.
அதனை கண்டெடுப்பதற்கு முன் அவர் பல சோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சோதனைக் களத்தில் தான் அவர் நின்று கொண்டிருக்கிறார்.
இந்த சோதனைக்களம் கடும் வெயிலினால் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிலம் வறண்ட புழுதிக் காற்றால் மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. வறண்ட காற்று குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்தது.
குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த வறண்ட காற்று மெல்ல மெல்ல திசை மாறத் துவங்கியது. பின்னர் மெல்லிய தென்றல் காற்று அவரது மேனியை தொட்டது. சட்டென்று மேனியில் ஒரு சிலிர்ப்பு... அவரது அழல் தணியத் தொடங்கியது.
அந்தக் காற்றை பின் தொடர்ந்து தட்டான்கள் கூட்டம் கூட்டமாக தரையை ஒட்டி பறக்க ஆரம்பித்தன. மாயோனின் நிறத்தைக் கொண்ட கொண்டல் மேகங்கள் திரண்டு எழுந்து வானத்தை வியாபித்தன. அமுர் வல்லூறுகள் அங்கே வட்டமிட ஆரம்பித்தன.
விசிறித்தொண்டை ஓணான் ஒன்று வேட்டையாடிகளைப் பற்றிய பயம் ஏதும் இன்றி தைரியமாக சமவெளிக்கு வந்தது. அது வல்லூறுகளை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அது தனது நீல நிறத் தொண்டையை விசிறி போல விரிக்க ஆரம்பித்தது. அதன் ஒளிரும் நீலத் தொண்டை சிவனின் நீல மிடற்றைப் போல் மின்னியது .
அந்த விசிறியால் மழையையும் தனது துணையையும் அது அழைக்க ஆரம்பித்தது.
தொலைவில், பனங்காடைகள் காற்றில் சுழன்றன, அவற்றின் நீலமணி இறக்கைகள் கருமேகம் சூழ் வானத்திற்கு நடுவே அழகாக மின்னின.
நீலக்கழுத்தை கொண்டிருந்த மயில்கள் மழையின் வரவை அறிவிக்கும் வண்ணம் அகவின.
இவ்வுயிரினங்களின் அழைப்பை ஏற்று, மலடாகி இருந்த மண்ணை உயிர்ப்பிக்கும் விதமாக, மேகத்தின் ஸ்கலிதமென, மழைநீர் விண்ணிலிருந்து இறங்கி நிலத்தை ஆலிங்கனம் செய்தது.
மழைத்துளிகள் நிலத்தைத் தொட்ட மாத்திரத்தில் பூமியின் வெப்பத்தால் ஆவியாகியது. பின்னர் மெல்ல மெல்ல வெப்பம் தணியத் தொடங்கியது. மயக்கும் மண்வாசனை காற்றை அடர்த்தியாக்கியது.
வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த சிவனின் மணிபூரகம் சாந்தமடைந்தது. சிவனது அழல் தணியத் தொடங்கியது. இந்த மோனநிலையால் உந்தப்பட்ட சிவன், தனது இடது காலை சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடத் துவங்கினார். அந்த ஆனந்த நடனத்தில் காற்றும் மழையும் இணைந்து கொண்டன.
இதைக் கண்ட வரகுக் கோழி ஒன்று கூக்குரலிட்டுக் குதித்து, அதுவும் களியாட்டம் புரிய ஆரம்பித்தது.
மழையானது வேகமெடுக்கத் தொடங்கியது. மழைத்துளிகள் சிவனின் மேனியில் பட்டுச் சிதறின.
நிலம் என்னும் இயக்கமற்றிருந்த சிவம், இயக்க சக்தியான பொழுதினால் அரவணைக்கப்பட்டது .
நிலம் அந்த நீரை உள்வாங்கியது.
நிலம் உயிர் பெற்றது. புற்கள் முளைத்தன, மரங்கள் மலர்ந்தன, காட்டுத் தினைகள் உயிர்பெற்றன.
புற்றில் இருந்து ஈசல்கள் கிளம்பின. அவை வதந்திகளை விட வேகமாக வனம் முழுவதும் பரவின. அவற்றை பின் தொடர்ந்து நீல நிறத் தொண்டை ஓணான்கள் படை எடுத்தன. ஓணான்களை நாகங்களும் பனங்காடைகளும் வேட்டையாடத் துவங்கின.
மழை என்பது ஜனனத்திற்கான நேரம், புதிய உலகம் பிறக்கும் சமயம். ஆனால் பழையன கழிதலும் இங்கே நடந்து கொண்டிருந்தது. ஆற்றலில் குறைவான பழைய இரை விலங்குகளும் சரி, வயதான பழைய வேட்டையாடிகளும் சரி... இந்த போட்டி மிகு வனத்தில் உயிர்பிழைத்தல் கடினம்.
புதியவர்களுக்கு வழி விடுதலே வலுமிகு சந்ததிகள் வாழ வழிவகுக்கும்.
இந்த கோட்பாட்டை உரக்க அறிவிக்கும் வண்ணம் கானமயில் இறக்கைகளை விரித்து நடனமாடியது. கருநெஞ்சுக்காடை மழையில் பாடல் இசைத்தது. வனம் உயிர் கொண்டது. மரங்கள் புதிய பசும் இலைகளை துளிர்க்கச் செய்தன.
மான்கள் அந்த வனத்திற்கு திரும்பின. அவைகள் தங்கள் முன்னங்கால்களை மேலே உயர்த்தியபடி இலைகளை உண்ணத் தொடங்கின. புதியதாக முளைத்த பசுமையான இளம் இலைகள் மேலே இருக்க, கிளைகளின் கீழே தொங்கிக் கொண்டிருந்த வயதான பழைய இலைகளை மான்கள் உண்டன.
சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு ஆடம்பரமான செயல். அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த, உயிரினங்கள் தங்கள் உடல் ஆற்றலை நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். என்னதான் ஆடம்பரமாயினும் அது ஒரு அத்தியாவசியமான செயல். வனம் வளம் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஆடம்பரத்தை உயிரினங்கள் நிகழ்த்தத் துணியும்.
இந்த வனத்தைப் பொருத்தமட்டில் இந்த சமயம் தான் அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த சரியான தருணம் என்பதை அனைத்து விலங்குகளும் அறியும். எனவே இணை சேர்வதற்கு அவை ஆயத்தமாயின.
ஆனால் இணை கூடுவதற்கான வாய்ப்பு எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை. இணை சேருவதற்கு முன் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது.
தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி, இரண்டு இரலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதத் தொடங்கின. இது பெண்ணுக்கான போட்டி.
வனத்தைப் பொறுத்த மட்டில், பிரச்சனைகளுக்கு வன்முறையால் மட்டுமே தீர்வு காணப்படும். வன விலங்குகளுக்கு பிரச்சனைகளை பேசித் தீர்க்கவோ, மாற்று வழிகளை யோசிக்கவோ சிந்தனை ஆற்றல் என்பது இல்லை.
இவை அனைத்தையும் கண்ணுற்ற சிவன் தனது நடனத்தை நிறுத்திவிட்டு பெய்யும் மழையில் தியானத்தில் ஆழ்ந்தார். மழைத்துளிகள் சிவனின் சிரசைத் தீண்டின. சிவனின் நெற்றிக்கண் அதிர்வுகளை வெளிப்படுத்த துவங்கியது. வன உயிர்கள் அனைத்தும் சிவனைச் சூழ்ந்தன.
அந்த அமைதியை குலைப்பது போல் சாம்பல் நிற ஓநாய் கூட்டம் ஒன்று அங்கே வந்தது.
அதைக் கண்ட மான்கள் அனைத்தும் சிதறி ஓடின. மரணத் தருவாயில் இருக்கும் ஓடவியலா ஒரு வயதான மானை அவைகள் குறி வைத்தன .
அதிவேகமாக ஓடிய அந்த மான், இப்போது அதிக வயதினால் மந்தமாகிவிட்டது. அது கூட்டத்திலிருந்து சற்றே பிரிந்து நின்றது .
வேட்டை புத்திசாலித்தனமாகத் தொடங்கியது. இரண்டு ஓநாய்கள் வயதான அந்த மானுக்கு தென்படாதவாறு பிரிந்து சென்றன. அந்த பரந்த வெளியில் மானை காணாதது போல் அதன் பார்வைக்கு எட்டும் தூரத்தில் ஒரே ஒரு ஓநாய் தனித்து நடக்கத் தொடங்கியது
வயதான மான் அந்த ஓநாயை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஓநாயானது சற்று அசைந்தாலும் இது ஓடுவதற்கு தயாராக தனது வலுவை திரட்டி கொண்டு நின்றது. இதற்கிடையில் மற்றொரு ஓநாய் புல்வெளியின் மறைவில் மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வயதான மானை நெருங்கிக் கொண்டிருந்தது
இப்போது இரண்டாவது ஓநாய் சரியான இடத்துக்கு வந்தவுடன், மானின் முன் நின்ற ஓநாய் சிறிது முன்னேறியது. மான் அபாயத்தை உணர்ந்து ஓட முயன்றது, ஆனால் நிலைமை கை மீறிப் போய் இருந்தது. இரண்டாவது ஓநாய் பாய்ந்து வந்து, சில வினாடிகளில் மானை அடைந்தது . அது மானின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, வயதான அந்தமான் ஒரு அறிதுயில் நிலைக்குச் சென்றது.
பின்பு ஒரு இறுதிப் பாய்ச்சல்... ஓநாய் மானை நெருங்கியது... அதன் கழுத்தை ஆழமாக கவ்வியது. அறிதுயில் நிலையிலிருந்து மானானது வலிக்கான எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் உயிர் நீத்தது.
இது இயற்கையின் விதி. ஓநாய்கள் முதியதும் பலவீனமுமான மான்களை வேட்டையாடுவதால், கூட்டத்தில் வலிமையான மான்கள் மட்டுமே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கூட்டம் ஆரோக்கியமாகவும், புல்வெளி சமநிலையுடனும் இருக்க வைக்கப்படுகிறது.
சூரியன் மறைந்து, வானம் மங்கும் போது, ஓநாய்கள் அமைதியாக தங்கள் வேட்டையை உண்டன. வளங்கள் பெருகும் இந்த மழை பொழுதே அவைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான சமயம். இவ்வண்ணம் ஐவகை நிலப்பரப்பிலும் அந்த நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற வகையில் உயிரினங்கள் நிலத்தோடும் பொழுதோடும் பொருந்தி, சந்ததி சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றன.
சிவனுக்கு இந்த இயற்கையின் பரிபாஷைகள் புரியத் துவங்கின.
வறண்ட நிலம், மேகங்கள், குளம்புகள், வேட்டையாடிகள் போன்றவற்றின் ஒத்திசைவில் அவர் ஒரு புனித தாளத்தைக் கண்டார்.
இந்த ஒத்திசைவில் தக்காண பீடபூமியின் ஆயர்களும் விவசாயிகளும் இணைந்து கொள்ள இடம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிய வந்தது.
மழைக்கால மாதங்களில் தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்யும் ஆயர்கள், மழைக்கு முன் மேற்கு நோக்கி கர்நாடகாவின் மழை பெய்யும் பள்ளத்தாக்குகளுக்கு அல்லது மழைக்கு பின் கிழக்கு நோக்கி நல்லமலை காடுகளுக்கு தங்கள் மந்தைகளை வழிநடத்தலாம்.
அவர்களின் பாதையில், அவர்கள் தங்கள் மந்தையின் வளமான எருவை விட்டுச் செல்வார்கள். மந்தைகளும், பயிரிடப்படாத நிலத்தில் முளைத்திருக்கும் களைகளை உண்ணலாம். அவர்களின் விலங்குகள் திறந்த நிலங்களில் மேய்ந்து, பயிரிடப்படாத வயல்களில் தங்கும் போது, மழையால் கரைந்த மேல் மண்ணை இந்த புனித எரு பலப்படுத்தும் .
விவசாயிகள், பதிலுக்கு, தானியங்களையும் தங்குமிடத்தையும் வழங்குவார்கள்.
பெல்லாரி நிலம் மழையில் பசுமையாக மாறும்போது, மந்தைகள் வடக்கு நோக்கி மஹாராஷ்டிராவின் திறந்த சமவெளிகளுக்கு அல்லது கிழக்கு நோக்கி மராத்வாடாவில் உள்ள லத்தூர் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு திரும்பலாம். இந்த இடம்பெயர்வு, இந்த புனித பாதை ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கும் .
இந்த இணக்கத்தில் அனைத்து உயிர்களும் பங்கு பெறும், பலனும் பெறும்,
மண், மழை, பசி, விலங்கு ஆகியவை தனித்தனி சக்திகள் இல்லை, ஒரு பரந்த துணியில் நெய்யப்பட்ட நூல்கள் என்பதை சிவன் கண்டுகொண்டார்.
சாம்பல் நிற ஓநாய் கூட, மந்தைகளைப் பின்தொடர்ந்து, அதன் தெய்வீக பங்கை வகிக்கும். அது எதிரி இல்லை, ஆனால் சமநிலையின் காவலன்.
இந்த மழையால் அவரது உடல் மட்டுமல்ல, அலை மோதிக் கொண்டிருந்த உள்ளமும் அமைதி கொண்டது
அவர் இந்தக் கருத்தை கடவுளாக அல்லாமல், இயற்கையுடன் உரையாடிய ஒருவனாக முன்னெடுப்பார். ஆனால் அவரை பின்பற்றியவர்களால்... அவரால் பயனடைந்தவர்களால்... அவர் கடவுளாக தொழப்படுவார்.
தங்கர், குருமா, கொல்லா, குருபா போன்ற பாரம்பரிய மேய்ப்பர் சமூகங்கள், சிவன் காட்டிய வழியினை பின்பற்றி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கினாலும், அவை மந்தையைப் பாதுகாக்க உதவுவதாகவும், இழந்த ஆட்டுக்குட்டிகள் கடவுளுக்கு பலியாகக் கருதப்படுவதாகவும் மேய்ப்பர்கள் நம்புவார்கள். அந்த இறைவனே மண்ணில் இறங்கி வந்து மல்லப்பாவாகவும் கண்டோபாவாகவும் தங்களுடனே வாழ்ந்து, தங்களுக்கு இந்தப் பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதாக நம்புவார்கள். சந்ததி சந்ததியாக தங்கள் மக்களுக்கு கண்டோபாவின் இந்த புனிதக் கதையை கூறுவார்கள்.
ஆனாலும் இந்த இணக்கத்திற்கு பசவண்ணா உடன்படவில்லை.
ஆயர்கள் இணக்கத்தை வேண்டினாலும் பசவண்ணாவின் மனதில் வஞ்சம் எரிந்து கொண்டிருந்தது
விவசாயக் குலத்தின் தலைவன், தன் கொல்லப்பட்ட மகனுக்காக துக்கத்தில் குருடாகி இருந்தான், அவன் இணக்கத்தைப் பற்றி செவிகொடுத்து கேட்கத் தயாராக இருக்கவில்லை.
அவன் இரத்தத்தை வேண்டினான்... பழிவாங்கலை வேண்டினான்,
சிவன் மட்டும் போரைத் தடுக்க விரும்பியவராக இல்லை.
மற்றொரு ஆன்மாவும் போரைத் தவிர்த்து விட முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த ஆன்மாவின் பெயர் காமரதி. விவசாயத் தலைவனின் மகள் .
அவள் பீரப்பாவின் மீது காதல் கொண்டிருந்தாள்.
பீரப்பாவின் மீதான காமரதியின் காதல் கிளர்ச்சியால் பிறக்கவில்லை, அங்கீகாரத்தால் பிறந்தது. அவனிடம் அவள் தன் சகோதரனுக்கு ஒரு காலத்தில் இருந்த அதே நெருப்பைக் கண்டாள். பீரப்பாவும் அவளிடம் தனது தாயின் வாஞ்சையைக் கண்டான்.
ஏற்கனவே அவள் தன் சகோதரனை இழந்திருந்தாள். இப்போது, போர் அவளது தந்தையையோ… அல்லது அவள் நேசித்த பீரப்பாவையோ,
அல்லது இருவரையுமோ பறிக்கக் காத்திருந்தது.
போரை நோக்கிய ஒவ்வொரு அடியும் நிலத்தின் அழிவை மட்டுமல்ல, தனது காதலின் அழிவையும் நோக்கிய பாதை என்பதை அவள் அறிவாள்.
வன்முறை என்பது சிந்திக்கவியலா உயிரினங்களால், தமக்குள் எழும் பிணக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ பிரச்சனைகளுக்கு தீர்வாக வன்முறையை கையில் எடுப்பது என்பது,
மனிதன் எனும் சிந்திக்கும் விலங்கு சிந்தனையை மேற்கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி.
போர் என்பது ஆறாம் அறிவு கொண்ட உயிரினங்களுக்கு தேவையற்ற ஒன்று.
போர் என்னும் கொடுஞ்செயல், வளத்தை வழங்கும் நிலத்தை சாம்பலாக்கும். அது வாழ்வாதாரங்களை வேரறுக்கும்.
கோபத்தில் விதைக்கப்பட்ட விதைகள், துக்கம் எனும் விளைச்சலை மட்டுமே வழங்கும்.
----
Reference: NITYA SAMBAMURTHY GHOTGE and SAGARI R. RAMDAS. Black sheep and gray wolves.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...