Friday, November 14, 2025

நந்தியாவருத்தனன் (ஆதியோகி: அத்தியாயம் 19)

இன்னும் சில நாட்களில் போர் துவங்க இருந்தது. பசவண்ணாவின் வீரர்களும், அவரது நட்பு நாட்டின் வீரர்களும்   பீம்பேட்காவிலிருந்து வடக்கே  இரண்டு யோசனை தூரத்திற்கு அப்பால் இருந்த பரந்த சமவெளியில் ஒன்று கூடத் துவங்கினர்.

பீம்பேட்கா, பாறைக் குன்றுகளால் நிறைந்த பகுதி. பாறைக் குன்றுகள் பழமையான காவலர்களைப் போல அங்கே நின்று கொண்டிருந்தன. 


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உயர்வையும் வீழ்ச்சியையும் அந்தப் பாறை குன்றுகள் பார்த்துக் கொண்டிருந்ததற்கு சாட்சியாக பல படங்கள் அங்கே தீட்டப்பட்டுள்ளன. அவற்றின் குகைகளின் சுவற்றில் காலச்சுழலில் மறக்கடிக்கப்பட்ட வேட்டையாடிகளின் வாழ்வும், கனவுகளும், கதைகளும் சித்திரங்களாக  தீட்டப்பட்டுள்ளது.

 அங்கே வாழ்ந்து வந்த சாமானிய மக்கள்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதலாக இப்பொழுது வரைக்கும், பல்வேறு காலகட்டங்களில் அந்த நிலத்தில் நிகழ்ந்ததை, தங்கள் வாழ்விடங்களில் சித்திரமாக பதிவு செய்யத் தவறவில்லை.
இங்கே இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கதையும் அந்த கற்குகைகளின் சுவற்றில்  சித்திரமாக தீட்டப்பட உள்ளது. 

வரலாற்றினால் இந்தக் கதை மறக்கடிக்கப்பட்டாலும், செவி  வழியாகவும், பாடல்கள் வழியாகவும்  மக்கள் மத்தியில் புழங்கிய இந்த புனிதக் கதை, சில நூற்றாண்டுகளுக்கு பின்பு மக்களால் அங்கே சித்திரமாக தீட்டப்பட்டன. அங்கே நிகழ்ந்தவற்றை வடிக்க ஏடுகள் மறந்தாலும், அந்தப் பாறைகள் இந்த புனிதக்  கதையை சாஸ்வதமாக சுமந்து கொண்டிருக்கும். 

 அப்படிப்பட்ட அந்த நிலத்திற்கு அருகே உள்ள சமவெளியில்  கூடாரங்களில் வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

 போருக்கான ஆயத்த வேலைகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. மறையும் சூரியனின் பொன்னொளியானது ஈட்டிகளில் மிளிரியது. கேடயங்கள் புளிய மரத்  தண்டுகளின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன, போர் முரசுகள் அமைதியாக காத்திருந்தன. எண்ணெய், வியர்வை மற்றும் பழமையான ஏதோவொரு வாசனையால் காற்று கனமாக இருந்தது.

 கூடாரத்திற்குள் தீபங்கள் ஏற்றப்பட்டன. நெருப்பு மெதுவாக எரிந்து, அசையும் அமைதியற்ற நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல்கள் ஆவிகளைப் போல் நடனமாடின.  விவசாயக் குலங்களின் தலைவர் பசவண்ணா, ஒரு கூடாரத்தினுள் எரியும் தீபத்தின்  முன் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு காலத்தில் சால் மரத்தைப் போல் அகலமாகவும்,  நேராகவும் இருந்த அவரது உருவம், இப்போது கூனிக் குறுகி காணப்பட்டது. துக்கமும் கோபமும் ஒரு சேர  அவரைச் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் மழையை மதிப்பிடவும், மண்ணைப் படிக்கவும்  அலைந்து கொண்டிருந்த அவரது கண்கள், இப்போது எதையும் பார்க்காமல் சூனியத்தை வெறித்தன. அவரது மகனின் மரணம், எந்த அறுவடையாலும் நிரப்ப முடியாத காயத்தை அவருள் விட்டுச் சென்றிருந்தது. 

அவருக்கு எதிரே, அவர்களது மண்ணைச் சேராத ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். விந்திய மலைக்கு அப்பால்  இருந்து வந்திருந்த ஒரு சேனாதிபதி அவன். அவனது அடையாளங்கள் அங்கு இருப்பவர்களை விட மிகவும் அன்னியமாய் இருந்தன. அவன் அனுபவமிக்க வீரர்களையும் கூட வாய்மூட வைக்கும் ஆகிருதியுடன் இருந்தான்.

“பசவண்ணா... உங்களது சோகத்தின் ஆழத்தை எங்களால் உணர முடிகிறது. உங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு அவர்கள் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும்,” என்று அவன் பசவண்ணாவிடம் கூறினான், அவனது கண்கள் நாகத்தின் கண்களைப்போல் மின்னின. 


அவன்  தனது வாளை உரையிலிருந்து எடுத்து அதன் மேல் விரலை நீவியபடி பேசத் துவங்கினான்," ஆயர்கள் தங்கள் உடல் வலுவின் மேல் உள்ள நம்பிக்கையில் போரிடுகின்றனர். எந்த வலுவும் எங்களுடைய இந்த வெண்கல ஆயுதத்திற்கு ஈடாகாது.

உங்கள் ஆட்கள் எங்களின் இந்த ஆயுதங்களை  பயன்படுத்தும்போது, அவை எதிரிகளின் தோல் கேடயங்களை  வாழைத்தண்டை வெட்டுவது போல் வெட்டும்.”

அவன் கூடாரத்தின் மூலையில் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு குவியலை நோக்கி சைகை செய்தான். அவனது வீரர்கள் அந்தக் குவியலின் மேல் போர்த்தப்பட்டிருந்த தோலால் ஆன போர்வையை இழுத்தனர்.

கீழே, புதிதாக வார்க்கப்பட்ட வெண்கல ஆயுதங்கள் மின்னின. குறுவாள்கள், பிறை-கத்தி வாள்கள், கோடாரிகள் மற்றும் கூரிய  முனைகள் கொண்ட அம்புகள் போன்றவை அங்கே  இருந்தன. தெற்கே இருந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த கல் ஆயுதங்களுக்கு  மாறாக, இவை விசித்திரமான பொன்னிற ஒளியுடன்  மின்னின.

“இவை மனித கைவினைஞர்களால் உருவாக்கப்படவில்லை,” சேனாதிபதி கூறினான். “துவாஷ்ட்ரியின் பிள்ளைகளால், தெய்வீக கைவினைஞரால். ஒவ்வொரு கத்தியும் புனித எண்ணெயில் தணிக்கப்பட்டு, விண்ணியல் தாளத்தில் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை இவை. இவற்றின் விளிம்புகள் மின்னலின் ஒளியை தாங்குகின்றன. இவற்றைக் கொண்டு தாக்கினால் சதைத் துண்டுகள் எலும்பிலிருந்து எளிதில் பிரித்து எடுக்கப்பட்டு விடும். உங்கள் எதிரிகள் தாக்குவது எதுவென்று அறிவதற்குள்  மரணித்து விடுவார்கள்.”

" இந்த அம்புகள் ஒவ்வொன்றும் மிகவும் கூரானவை. காற்றைக் கிழித்துக்கொண்டு வெகுதூரம் பறக்க வல்லவை. இவை எளிதாக பீரப்பாவின்  இருதயத்தை ஊடுருவி விடும். " என்று அவன் கூறினான்.  
பசவண்ணா முன்னேறி, ஒரு வாளை  கையில் ஏந்தி காற்றில் வெட்டுவது போல் வீசி பார்த்தார். அது சரியாக சமநிலையில் இருந்தது. புல்லைப் போல் இலேசாக இருந்தது. ஆனாலும் அதன் வலுவில் எந்தக் குறையும் இல்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதி பசவண்ணாவை நோக்கி வந்தான்.

அவன் எதுவும் கூறவில்லை, 
அவன் முன்னேறி, ஒரு சிறிய குறு வாளை வெளியெடுத்தான். அதை பசவண்ணாவிடம் நீட்டினான். நெருப்பின் ஒளியில் அதன் விளிம்பு மென்மையாக மின்னியது.

 பின்னர் அவன் குரலைத் தாழ்த்தினான்.“இந்தக் கத்தி ஒரு கொடிய விஷத்தைத் தாங்குகிறது. ஒரே ஒரு கீறல் போதும்...
 நுரையீரல் மூச்சை மறந்துவிடும். இது பீரப்பாவிற்கான சிறப்பு பரிசு.”

பசவண்ணா அந்தக் கத்தியை நீண்ட நேரம் பார்த்தார். பின்னர் மெதுவாக சேனாதிபதியை நோக்கி அதைத் தள்ளினார்.

“ இது எனக்கு அவசியம் இல்லை ,” என்று அவர் கூறினார், அவரது குரல் உலர்ந்து இருந்தது. “என் மகன் ஒரு வீரனைப் போல்  போரில் வீழ்ந்தான். நான் பீரப்பாவை அதே வழியில் எதிர்கொள்வேன்."

சேனாதிபதி தனது புருவத்தை உயர்த்தினான். ஒரு கணம் அவன் அசையாமல் இருந்தான். பின்னர் அவன் உதட்டில் இருந்து மெல்லிய  புன்னகை ஒன்று வெளிப்பட்டது .

“நன்று,” என்று அவன் உரைத்தான். பின்னர் கத்தியை உறைக்குள் திருப்பி வைத்தான். “உங்கள் போர்,உங்கள் நெறி. ஆனால்  எங்கள் ஆயுதங்கள் மட்டுமல்ல, நாங்களும் உங்களுக்காக இந்த போரில் துணை நிற்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். நாங்கள் வழங்கியவற்றுடன், எங்கள் வீரர்களும் உங்களது அழைப்புக்காக மலைக்கு அப்பால் காத்துக் கொண்டு இருப்போம்.

எங்கள் குதிரைப் படையின் வேகத்தை  இந்த நிலத்தை சேர்ந்த எவரும் இதுவரை கண்டதில்லை.  நிலத்தில் நின்று கொண்டிருந்து போர் புரியும் வழக்கம் கொண்டிருக்கும் அவர்களால், ஒரு கணம் கூட குதிரையின் வேகத்தோடு வரும் வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாது."

சேனாதிபதி மேலும் கூறினான். “உங்கள் பழிவாங்கல் விரைவாக இருக்கும். உங்களுக்கு நாங்கள் தேவைப்பட மாட்டோம் என்று நம்புகிறேன். ” என்று கூறிவிட்டு அவன் கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறுவதற்கு முன் ஒரு முறை பசவண்ணாவை நோக்கித் திரும்பினான். “பீரப்பா இன்னும் இது சமமான போர் என்று நம்புகிறான். அவனை நம்ப விடுங்கள்.” என்று கூறினான்.

நெருப்பொளியின் எல்லைக்கு அப்பால், ஒரு உருவம் அசைந்தது. பசவண்ணாவின் மகள் காமரதி, ஒரு தாழ்ந்த புதருக்குப் பின்னால் ஒளிந்து நின்று இதை கேட்டுக் கொண்டிருந்தாள், அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது . 

அவள் அமைதியாக யாரும் அறியா வண்ணம்  தனது கூடாரத்தை நோக்கி ஓடினாள்,  அங்கு அவளது பணிப்பெண் அவளுக்காக காத்திருந்தாள், அவளது வெளுத்த முகத்தைக் கண்டு பணிப்பெண்  திடுக்கிட்டாள்.  

“என்ன நடந்தது,?”  என்று பணிப்பெண் கேட்டாள்.

“என் தந்தை தவறாக வழிநடத்தப்படுகிறார்,” என காமரதி கூறினாள். “இது போர் இல்லை. இது ஒரு பொறி.”  

பணிப்பெண் கவலையுடன் பார்த்தாள்.

“அவர்கள் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு போரிட திட்டமிடுகின்றனர். மேலும் தக்ஷனின்  ஆயுதமேந்திய குதிரைப் படைகள், யாரும் எதிர்பாரா சமயம் திடீரென்று தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறது.. பீரப்பாவுக்கு இது தெரியாது. இது நியாயமான போர் என்று அவர் நினைக்கின்றார். இரு பக்கங்களும் சமமாக உள்ளன என்று அவர் நம்புகின்றார். அவர்  போர் என்று நினைத்து  சிங்கத்தின் வாய்க்குள் நடக்கிறார்.”  

பணிப்பெண் தலையசைத்தாள். “ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? தற்போது அவரால் உதவிக்கு  மற்றொரு படையை சேகரிக்க முடியாது. இப்பொழுது அதற்கு அவகாசமும் இல்லை.”  

காமரதியின் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தின “ மாயோனை வழிபடும் அனர்தாவின் வேளிர்களும் யதுக்களும் நீதியின் பக்கம் நிற்பவர்கள். ”  

அவள் உறுதியாக கூறினாள், “அவர்கள் நிச்சயமாக அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நிற்பார்கள். போர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. நாம் சரியான நேரத்தில் செய்தி அனுப்பினால், அவர்கள் பீரப்பாவிற்கு  ஆதரவாக வரக்கூடும்.”  

 “நீங்கள் எப்படி அவர்களுக்கு செய்தி அனுப்புவீர்கள்?”  என்று  பணிப்பெண் கேட்டாள்.

“வேளிர்களுக்கு செய்தி அனுப்ப விரைவாக பறக்கும் புறாக்களைப் பயன்படுத்துவோம். ஆனால் பீரப்பாவுக்கு பறை அறைந்து செய்தி அனுப்பலாம். நீ பீரப்பாவின் குலத்தை சேர்ந்தவள் தானே? உனக்கு பறை மூலம் செய்தி அனுப்பத் தெரியுமல்லவா?” என்றாள் காமரதி .

 “பறையின் மூலம் செய்து அனுப்பினால் விரைவாக  செய்தி சென்று சேரும்.”  
“ஆனால் அந்தச் செய்தி மற்றவர்களால் கேட்கப்படலாம்,” பணிப்பெண் எச்சரித்தாள்.  

காமரதி தலையசைத்தாள். “ஆம். நம்மைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்பட்ட வருகிறது, தவறான காதுகள் இந்தச் செய்தியை கேட்க கூடும். எனவே புறாக்களை மட்டுமே அனுப்புவது உசிதமாகும்.”  

புறாக்களின் காலில் செய்திகள் கட்டப்பட்டன. 

காமரதியின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த பணிப்பெண் அவளுக்கு  ஆறுதல் கூறும் விதமாக ," கவலை வேண்டாம் இளவரசி, பீரப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. பீரப்பாவை தெய்வீக சக்தி ஒன்று காப்பதாக எனது அன்னை கூறினார்."

“தெய்வீக சக்தி?”  

“ஒரு விசித்திரமான தெய்வீக உருவம் அவரைக் காக்கிறது. அந்த உருவம் பேசுவது குறைவு, ஆனால் மலைபோல் நிற்கிறவர் அவர். 
அவரை... மல்லண்ணா என்று எங்கள் மக்கள் அழைக்கிறார்கள்.” 

காமரதியின் முகம் பிரகாசமடைந்தது,
" அவரே  இந்தப் போர் சூழலில் நம்மைக் காக்க இருக்கும் நந்தியாவருத்தனன். எதிரிகளின் சூழ்ச்சியை பற்றிய செய்தி அவரையும் சென்று சேர வேண்டும்.”  

  "கிழக்கில் இருக்கும் முல்லைவனத்தில் அவர் தியானத்தில் இருப்பதாக எனது அன்னை கூறினார். நான் நேரில் சென்று அவரிடம் தகவல் தெரிவிக்கிறேன் . " என்றாள் பணிப்பெண்.

அவள் நிலவொளியில் வெளியேறினாள். இரண்டு வெள்ளைப் புறாக்கள் அவளது மணிக்கட்டில் பறந்து வந்தன. நடுங்கும் கைகளால், அவள் புறாக்களின் காலில் செய்திகளைக் கட்டினாள். 

ஒன்று வேளிர்களுக்கு, ஒன்று பீரபாவிற்கு.  

அவை இரவு வானத்தில் காமரதியின் பணிப்பெண்ணால் பறக்க விடப்பட்டன .  இரண்டு வெள்ளை புறாக்களும் வானின் இருளை கிழித்துக்கொண்டு  இறக்கைகள் படபடக்க பறந்து சென்றன. 

ஆனால் வேறு யாரோ புறாக்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதை  பார்த்தனர்.  

தொலைவில் உள்ள ஒரு  கூடத்தில், ஒரு மனிதன் நிலவொளியில் நின்று கொண்டிருந்தான். அவனருகில் இருந்த அவனது பணியாள் ஒருவன், பயிற்சி பெற்ற இராசாளி ஒன்றை வானில் பறக்க விட்டான். அது உயரமாகவும் வேகமாகவும் பறந்து,  ஒரு புறாவை அதன் கூர்மையான கால்களில் பிடித்துக் கொண்டு வந்து  அவனிடம் சேர்ந்தது.

எதிரி அமைதியாக புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த செய்தி மடலைப் படித்தான். அவனது உதடுகள் ஒரு புன்னகையை வெளிப்படுத்தியது.
“ காமரதி பீரப்பாவை  நேசிக்கிறாள்,” என்று அவன் கூறினான்.

அவன் தன் ஆட்களை நோக்கி திரும்பினான். “அவள் நமது முக்கிய ஆயுதம். பசவண்ணாவுக்கும் பீரப்பாவுக்கும் எதிராக நாம் பயன்படுத்தக்கூடிய பகடைக்காய்.”  

மற்றொருவன் நெருங்கினான். “நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?”  

“இரு நாட்களில் போர் துவங்கவிருக்கிறது, இந்தப் பதட்டமான சூழலில் யாருக்கும் தெரியாமல் நாம்  அவளை அமைதியாக சிறை பிடிக்க வேண்டும். போர் வெறித்தனமாக இருக்கட்டும். எந்தப் பக்கம் வெற்றி பெறுகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இறுதியில்... வெற்றி நம்முடையதாக இருக்க வேண்டும். நமது அந்த வெற்றிக்கு காமரதி  மிகவும் உதவியாக இருப்பாள் .”

------
Pictures courtesy

1. Rock Shelters of Bhimbetka
Continuity through Antiquity, Art & Environment

2. http://www.dsource.in/resource/bhimbetka

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

நந்தியாவருத்தனன் (ஆதியோகி: அத்தியாயம் 19)

இன்னும் சில நாட்களில் போர் துவங்க இருந்தது. பசவண்ணாவின் வீரர்களும், அவரது நட்பு நாட்டின் வீரர்களும்   பீம்பேட்காவிலிருந்து வடக்கே  இரண்டு யோ...