Tuesday, December 23, 2025

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - ஏர் முன்னது எருது - 8

 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

காலம்: இடைக்கற்காலம்  

இடம்: புல்வெளி நிறைந்த  சமவெளி

பரந்த சமவெளி. இந்த நிலம் நம்மைப்போல் பல குழுவினர் கூடி வாழ ஏற்றதல்லவா?”

உண்மைதான். ஆனால் நிரந்தர உணவின் இருப்பு இங்கு கிட்டுமா? வெறும் புல்வெளி அல்லவா இது?”

இங்கும் பல உயிர்கள் வாழ்கின்றனவே, அதோ பார் புல்லை மேய்வன நிறைய உள்ளன.”

இவை மேய்வன அல்ல, பாய்வன. இவற்றை இந்தப் பரந்த சமவெளியில் வேட்டையாடுவது கடினம், அதுவுமல்லாமல் இவை நிரந்தர உணவு அல்லவே? பெரியதொரு குழுவாய் வாழும் நம்மால் எங்ஙனம் இச்சிறு புல்லை நம்பி வாழ்க்கை நடத்த இயலும்?”



இந்த புல்லை நம்மால் செரிக்க இயலாதே? மரங்களாக இருந்தால் பழங்கள் இருக்கும். இந்த புற்களில் என்ன இருக்கப்போகிறது நாம் உண்ணுவதற்கு?”

அங்கே பார். அந்தப் அந்தப் பறவைகளுக்கு இந்த புற்கள் ஏதோ வழங்குகிதே?”



 தானியங்கள்!!! குறிஞ்சி நிலத்தில் நாம் உண்ட மூங்கில் அரிசி போலவே உள்ளனவே!”

புற்கள், மரங்களைப்போல் பழங்கள் நல்குவதில்லை. ஆனால் அவற்றின் வித்துகள்... சத்துக்கள் நிரம்பியவைஆனால் இவற்றை ஒவ்வொரு புல்லாய் சென்று சேகரித்து எப்போது நாம் உண்ணயாரேனும் இவற்றை நமக்கு சேகரித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?”

மற்றொரு  குழுவினர் நமக்காக தானியங்கள் சேகரிப்பதை பார் நண்பா. வா நிலம் தோண்டி அந்தத் தானியங்களை ருசித்துப் பார்ப்போம்.”

ஆஹா, அற்புத சுவை. மரங்களைப் போலவே இவற்றையும் நாம் விளைவித்தால் என்ன? இங்கே பலவகை புற்கள் உள்ளனவே. அவை பல்வேறு வகை தானியங்களை வழங்குகின்றன, இவற்றில் நாம் எதை உண்ணுவது?”

அதோ அந்தக் கிளி உண்ணும் தானியம் அளவில் பெரிதாக உள்ளதே! அதை நாம் விளைவித்து உண்ணலாம்.”


இதுவரை உணவுக்காக ஆடு மாடு போன்ற உயிரினங்களை வேட்டையாடி வாழ்ந்துவந்த சமூகம், முதல்முறையாக புற்களை வளர்க்க ஆரம்பித்தது.

 அவர்களின் முதல் விளைச்சல் அமோகமாய் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த விளைச்சல்கள் குறையத் தொடங்கின.

‌“அய்யய்யோ களை மண்டிப்போச்சே... நிலத்தோட சத்து குறைந்து விட்டதே இப்பொழுது என்ன செய்வது?”

ஒன்று வேறு இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும். இல்லை என்றால் இதே இடத்தில் புதிய மண்ணை நிரப்பி விவசாயம் செய்யலாம்.”

இதெல்லாம் சாத்தியமா? வேற வழியே இல்லையா என்ன?” 

கவலை வேண்டாம். காலம் காலமாக நமக்கு விடை வழங்கும் இயற்கையை நோக்குவோம்.”

அங்கே அவர்கள், வராகமானது புதிய பூமியை கோரைப்பற்களுக்கிடையில் மேலே கொண்டு வரக்கண்டனர்.

கலப்பையொன்றைச் செய்து, பலங்கொண்டு களம் கண்டனர்.

சிலவகை புழுக்கள் இருந்த மண், புரட்டுவதற்கு எளிதாக பொலபொலவென்று  இருக்கக்கண்டனர். அந்த மண்ணில் விளைச்சலும் அதிகமாக இருக்கக்கண்டனர். என்பிலதாம் மண்புழு குடைந்த வழி வழியே  நிலம் சுவாசிக்கின்றது என்று அறிந்து கொண்டனர். அவைதான் உழவுக்கு நண்பன் என புரிந்து கொண்டனர்.

 மேலும் அவர்களைக்கண்டால் பாய்ந்து தப்பியோடிய மேய்வன, இப்போது புற்கள் வேண்டி அவர்களை நாடிவர ஆரம்பித்தன. மேய்வன போகும் வழியெங்கும் இடும் சாணிதான் நிலத்தின் சத்தென்று அறிந்துகொண்டனர். அச்சாணியை உழவுக்கு அச்சாணி ஆக்கிக் கொண்டனர். பயிர்களை அழிக்கும் பூச்சிகளை, சில வகை பூச்சிகளும் பறவைகளும் கட்டுப்படுத்தத் துணைபுரியக்கண்டனர். அவற்றையும் தன் நண்பர்களாக பாவித்தனர். தொடங்கியது விவசாயம் என்னும் அகிம்சை வழியிலான அற்புதமான வாழ்வு முறை.


புற்கள் வழங்கிய தானியங்கள் மீதான மனிதர்களின் காதல், எறும்புகள் சேகரித்த புல்லரிசியை நிலத்திலிருந்து குத்தி எடுத்து உண்ணத் தொடங்கியது முதலே தோன்றியது.

இருநிலக் கரம்பை படுநீறாடி

நுண்புல் அடங்கிய வெண்பல் எயிற்றியர்” (பெரும் 90:9-10) என்ற பாடலின் மூலம் இதை நாம் அறிந்துகொள்ளலாம். மேலும் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (366:2-4) வில்லேந்திய வீரர்கள் எறும்புகள் சேகரித்த புல்லரிசியை உணவாகக் கொண்டனர் எனும் தகவல் இடம்பெற்றுள்ளது.

கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுவதற்கு முன்னர், காட்டுப்பன்றி அகழ்ந்த நிலத்தில் சிறுதினையை விதைத்து விளைச்சல் பெரும் பழக்கம் இருந்ததை

கடுங்கண் கேழல் உழுத பூமி

நல் நாள் வருபதம் நோக்கி குறவர்

உழாஅது வித்திய பருஉக்குரல்சிறுதினை… (163:4)” எனும் பாடல் குறிப்பிடுகிறது. இது குறிஞ்சி நிலத்தில் அதிகம் பின்பற்றப்பட்டு வந்த முறை.

மிருகங்கள் தரும்  மாமிசம் மற்றும் பால் போல ஒரே நாளில் அழுகிவிடும் தன்மை கொண்டவை அல்ல தானியங்கள். தானியங்கள் நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கத்தக்கவை. ஒரு தானியத்தை நிலத்திலிட்டால் ஆயிரம் தானியமாக மாறும் தன்மை கொண்டது அது.

விதைக்குள் இருப்பது தாவரம் அல்ல. எண்ணற்ற விதைகளைப் பெறுவதற்கான மரபறிவு.

ஒவ்வொரு நாகரிகமும் தமக்கான தானியத்தை தலைமுறை தலைமுறையாகப் பழக்கி, தமக்கான செரிவான மரபறிவைக் கொண்ட தனித்துவமான தானிய வகைகளைக் கொண்டிருக்கின்றன. அவை தான் நமது முன்னோர்களின் சீதனம். அவற்றைக் காத்து நமது சந்ததிகளுக்கு அளிக்க வேண்டியது நம் கடமை.

 உலகில் மூன்று வகை பேருணவு கலாச்சாரங்கள் இருக்கின்றன. முதலாவது கோதுமைக் கலாச்சாரம். மேற்கத்தியநாடுகளில் தொடங்கி ஐரோப்பா வடஇந்தியா என பரவிச் செல்லும். அடுத்தது மக்காச்சோள கலாச்சாரம். வட மற்றும் தென் அமெரிக்கா இந்த கலாச்சாரத்தை கொண்டுள்ளது. மூன்றாவது அரிசி கலாச்சாரம். 12 நூற்றாண்டுகளுக்கு முன் பணக்கார நாடுகளாக இருந்த இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவை அரிசி கலாச்சாரத்தை கொண்டவை.  மக்களின் கூட்டு வாழ்க்கை மற்றும் நாகரிக முறைக்கு அடித்தளமிட்டு வழிகாட்டியதே  நெற்பயிர்கள் தான் என்பது தாமஸ் பால்கன் எனும் உளவியல் ஆராய்ச்சியாளரின் கருத்து.

 அரிசிக்கு மிகவும் சிக்கலான உயர்ந்த முறை நீர் மேலாண்மை தேவைப்பட்டிருக்கிறது. அதிக நீர் பாய்ச்சுவது, தொடர்ந்து பல வாரங்கள் தேக்குவது, பின்பு வடிப்பது; ஒருவரின் வடிகால் நீரானது அடுத்தவரின் வயலுக்குச் சென்று பாய்ந்து இறுதியில் ஆற்றையோ குளத்தையோ அடைவது; என்பது போன்ற செயல்பாடுகள், மக்களின் ஒருங்கிணைப்பையும் இயற்கை பற்றிய புரிதலையும் ஏற்படுத்தியது.

 நாம் இதுவரை பார்த்த நால்வகை நிலங்களிலும் சமன்பாட்டை தீர்மானிக்கும் சக்தியாய் இயற்கை இருந்ததை உணர்ந்திருப்பீர்கள். இயற்கை என்பதே ஒரு மாபெரும் சமன்பாடு. அது எல்லாம் முரண்பாடுகளையும் எல்லா மீறல்களையும் சமன் செய்தபடி இருக்கின்றது. எந்த ஒரு அமைப்பும் நன்றாக இயங்க ஒரு சமநிலை அவசியம். உதாரணத்திற்கு உங்கள் உடலை எடுத்துக் கொள்ளுங்களேன். உங்கள் உடலின் வெப்பநிலை, உங்கள் உடலின் நீர்இருப்பு, அமிலத்தன்மை, சர்க்கரை அளவு என அனைத்திலும் சமநிலை  பேணப்படுகிறது. இந்த சமநிலையில் இருந்து விலகுதலேநோய் என அறியப்படுகிறது. ஒவ்வொரு நாகரிகமும் அழியாமல் இருக்க உடலைப்போலவே சமநிலையைப் பேண வேண்டும். அச்சமநிலையை இழந்தவையே அழிவை சந்திக்கின்றன.

சரி, இயற்கை எவ்வாறு இந்த சமநிலையை பாவிக்கிறது என்பதை பற்றிக் காண்போம். வேட்டையாடிவிலங்கு வெறிகொண்டு துரத்தும்போது வேகமாய் ஓடும் காட்டுமாடுகள் மட்டுமே அவற்றிடமிருந்து தப்பும் அல்லவா? இதன்மூலம் சிறந்த சிறந்த ஓட்டக்கார மாடுகள் மட்டுமே பிழைத்து  பெருகியிருக்க இயற்கை அனுமதிக்கிறது. ஓட்டத்தில் வேகம் குறைவான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகள் மற்றும்  வயதான மாடுகள் அனைத்தும் வேட்டையாடிக்கு உணவாக வேண்டியதுதான். இதுபோல விரைவான வேட்டையாடிக்கு மட்டுமே இரை கிட்ட, மற்ற வேட்டையாடிகள் பட்டினிச்சாவு அடைய வேண்டியதுதான்.

இயற்கை இவ்வாறு உயிரினங்களை தேர்ந்தெடுக்கும் பண்பு, பார்ப்பதற்கு இரக்கமற்ற செயலாய்த் தோன்றினாலும், இச்செயலால்தான் தகுதியான உயிரினங்களின் எண்ணிக்கை நிறுவப்பட்டு சமநிலை பேணப்படுகிறது. இப்படி இயற்கை தேர்ந்தெடுத்ததால் உருவானவையே நாமும் மற்ற உயிரினங்களும்.

டைனோசார்கள் பேரழிவு கண்ட நிகழ்வைப்போல் இதுவரை நம் உலகம் ஆறு பெரும் ஊழிகளை சந்தித்துள்ளது. இப்போது நம்மால் நடத்தப்படுக்கொண்டிருப்பது ஆறாம் ஊழி. இதைத் தொடங்கி வைத்தது நம் முன்னோர்கள். எண்ணிக்கையில் பெருகிய அவர்கள்உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்எனும் கூற்றுக்கு இணங்க 50 கிலோ எடைக்கு அதிகமாய் இருந்த அனைத்து உயிர்களையும் வேட்டையாடி உண்ண ஆரம்பித்தனர். இதனால் உலகை விட்டே மறைந்த விலங்குகள் பல. அவ்வளவு ஏன் நியாண்டர்தால்கள் சக மனிதர்களையே அடித்து உண்டிருக்கிறார்கள். இந்தியாவைப்பொருத்த வரை 20 சதவிகித 50 கிலோ எடைக்கு அதிகமான விலங்குகளை உலகிலிருந்து நமது முன்னோர்கள் அப்புறப்படுத்தி இருக்கின்றனர். கற்காலத்தைய அமெரிக்க ஆஸ்திரேலிய மக்கள் செய்த கொடுமையை விட விகிதாச்சார கணக்குப்படி இது சற்றே குறைந்த கொடுமை எனலாம்.

இப்படி சுயநலக்காரனாய் இருந்த மனிதன் எப்போது மற்ற விலங்குகளை அரவணைத்து வாழ ஆரம்பித்தான்?”

சுறாக்கள் இரையைக் கவ்வி ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொல்லும். அப்போது இரையின் சதைத் துணுக்குகள் நாற்புறமும் சிதறும். நாம் உண்ணும் போது சிந்தியதை சேகரிக்க எறும்புகள் நம்மோடே சுற்றிக்கொண்டிருந்ததைப் போல், சக்கர் மீன் எனப்படும் மீன் ஒன்று சுறாவின் வயிற்றில் ஒட்டிக்கொண்டு அவற்றோடே பயணம் செய்து சுறாவின் இரையில் சிதறுவதை உண்டு வாழ்ந்து வரத் தொடங்கியது. சுறா கண்ட இடமே சொர்க்கமாக அதற்குத் தெரிந்தது

இதுபோலவே 15,000  வருடங்களுக்கு முன்னால் நம் முன்னோர்கள் விட்டுவைத்த மிச்சத்தை உண்ண அவர்களோடே ஓநாய்கள் சில சுற்றிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பழகிய அவை அம்மனிதர்களின் வேட்டைக்கும் துணைபுரிய ஆரம்பிக்க, இதுவரை பார்த்ததையெல்லாம் போட்டுத்தள்ளிக்கொண்டிருந்த மனிதன் முதல் முதலில் ஒரு அன்னிய விலங்கை தன் கூட வளர அனுமதித்தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் இருப்பதை புரிந்து கொண்ட அவன் கொஞ்சகொஞ்சமாய் உயிரினங்களோடு இயைந்து வாழத் தலைபட்டான். ஆடு மாடு என அந்த லிஸ்ட் பெருசாக ஆரம்பித்தது. பிறகு பறவைகள் பூச்சிகள் அந்த லிஸ்ட் நீண்டது. இறுதியில் செடி கொடி கிழங்கு வகைகள் என முழுமை பெற்றது அந்த லிஸ்ட்.

இவ்வாறு வீட்டு விலங்குகளைப் பழக்கிய பின்னர், தானும் ஒரு வீட்டு விலங்காக மாறியதை அவன் உணரவில்லை. பழங்குடிகள் இயற்கையின் அரவணைப்பில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மருத்துவம், கொத்துவேலை, தையல் வேலை, சமையல், ஆபத்து கால மேலாண்மை, வானியல் என அனைத்திலும் கொஞ்சம் அறிவு இருந்தது. ஆனால் விலங்குகளைப்பழக்கி தனக்கான சூழலை உருவாக்கிய அவனது சந்ததிகள் மேற்கூறிய அனைத்து வேலைகளிலும் தனித்தனியாக பாண்டித்யம் கொண்டிருந்தனர். இதனால் வேலைகள் எளிதாகின. உடல் நலம் மேம்பட்டது. ஆறாம் ஊழியின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அவன் உருவாக்கிய இந்த சூழலைத்தாண்டி அவனாலும் சரி, அவனது வீட்டுவிலங்குகளாலும் சரி, இனி தனியாகப் பிரிந்து வாழுதல் இயலாத ஒன்று. இந்த அடிப்படையை மறந்த நவீன மனிதன் இயற்கையிலிருந்து விலக ஆரம்பிக்க, பற்பல பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன.

மனிதன் வனவிலங்குகளை வீட்டு விலங்காகப் பழக்கியது இயற்கையை மீறிய ஒரு செயல். எப்படியென்றால், மனிதன் மாடுகளை ஓட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை. அவை பால் வழங்கும் பண்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தான். அதனால் உணவு உற்பத்தி அதிகரித்ததென்னவோ உண்மைதான். ஆனால் இது இயற்கையை மீறிய ஒரு செயல். இதுவரை இயற்கை தேர்ந்தெடுத்தது, சூழ்நிலைக்கு பொருந்திய வெற்றியாளர்களை. ஆனால் மனிதன் தேர்ந்தெடுத்தது, தனது தேவைக்கு பொருந்திப் போகின்ற பண்பு   கொண்ட உயிர்களை. ஆனால் இந்த இயற்கையை மீறிய செயல் நாகரிகக் கட்டமைப்பை சிதைக்காமல் இருக்க, இயற்கையின் சமநிலையை பேணுதல் அவசியம். அச்சமன்பாட்டை பின்பற்றா நாகரிகங்கள்   நம்மிடம் இப்போது இல்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மனிதன் தனது ஆற்றல் கொண்டு ஓரளவிற்குதான் சமன்பாட்டு மீறல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும். பால் மாடுகளைத் தாக்கவரும் புலிகளை மனிதன் எதிர்க்கலாம், ஆனால் தான் தேர்ந்தெடுத்து வளர்த்த பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை என்ன செய்ய?

மாடுகளைத்தேடி புலிகள் வருவதும், பயிர்களைத் தேடி பூச்சிகள் வருவதும், உங்களைத்தேடி கொசுக்கள் வருவதும், ஓரிடத்தில் எண்ணிக்கையில் அதிகரிக்கும் உயிர்களைக் கட்டுப்படுத்தி இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்காக தான். ரசாயன பூச்சிக்கொல்லிகளை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாமே என நீங்கள் எண்ணலாம். ஆனால் அந்த ரசாயனம், நிலம் மற்றும் நீரின் சமன்பாட்டை பாதித்து வேறொரு பிரச்சனைக்கு இட்டுச்செல்லும்.

அப்போ விவசாயம் புரிவதே தவறா? நாம் அனைவரும் வாழ வேறுவழி இல்லையா? நாம் சாகத்தான் வேண்டுமா?”

கவலை வேண்டாம். இயற்கையின் சமன்பாட்டிற்கு எந்த ஊறும் ஏற்படுத்தாமல் வாழ்வாங்குவாழ்வது எப்படி என்று தமிழரின் மருதநிலவாழ்வுமுறை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாழ்வு முறைதான் நம் நாகரிகத்தைக் கட்டிக்காத்து வந்துள்ளது. மற்ற நாகரிகங்கள் தமக்கான தனித்துவ விவசாய முறையை உருவாக்கி இருந்தாலும், அவை அங்கிருந்த வனஉயிர்களை துரத்திவிட்டு, அந்நிலத்தில் மனிதர்களும் வீட்டு விலங்குகளும் மட்டுமே பெருகி வாழவகை செய்வதாய் இருந்தது. நமது விவசாய முறையோ நிலத்தின் கருப்பொருளாகிய அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய விவசாயமுறை. அதைப்பற்றி விரிவாகக் காண்போம்.

சூழ்நிலை அமைப்பு என்பது தாவரங்கள் போன்ற முதன்மை உணவு உற்பத்தியாளர்களை அடிப்படையாகக் கொண்டு; பல ஆற்றல்மட்ட அடுக்குகளில், பல்வேறுவகை உயிரினங்கள் கூடிவாழ்ந்து சமநிலையை பேணுவதாகும். அதில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சமநிலையைப் பேணும் தனித்தன்மையான பங்களிப்பு இருக்கும்.இந்த நன்னீர் சூழல் அமைப்பில் பல்வகை  பறவைகள் இருப்பதைக் காணலாம்.



இவை அனைத்தும் மீன்களை உண்ணும் பொதுவான வேலையைச் செய்வது போல் தோன்றினாலும், ஒவ்வொரு பறவை இனமும் இச்சூழ்நிலை அமைப்பில் தனித்தன்மையான பங்களிப்பை கொண்டுள்ளன. அங்கேயுள்ள அந்த சிறுவெண் கொக்கு, மீன்கள் மற்றும் பூச்சிகளை உண்பவை. அவை ஆழம் குறைந்த கரையில் இருக்கும் மீன்களையும் அருகில் உள்ள புல்வெளியில் உள்ள பூச்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. நெடுங்கால் உள்ளான் எனும் பிங்க்நிற நீண்ட காலையுடைய அந்தப்பறவை, கரையை அடுத்துள்ள சற்றே ஆழமான பகுதிகளில் உள்ள மீன் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைக்கின்றன. நீண்ட கால் மற்றும் நீண்ட அலகு கொண்ட கருந்தலை அரிவாள் மூக்கன் பறவை, ஆழத்தில் உள்ள மீன்களை பார்த்துக்கொள்கிறது.  புள்ளிமூக்கு வாத்துக்கூட்டம் ஆழம்மிகுந்த குளத்தின் நடுவில் நீந்திச்சென்று மீன்களைப்பிடித்து உண்கிறது. இந்த நன்னீர்  குளத்தின்  ஒவ்வொரு பகுதிக்குஏற்ப, உடலமைப்பை தகவமைத்துக் கொண்ட  பல்வேறு பறவை இனங்கள்  கூடிகுளத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய மீன் எண்ணிக்கையை  கட்டுப்பாட்டில் வைக்கின்றன. இவ்வாறு பறவைகளின் தனித்தன்மை கொண்ட பங்களிப்பால் உருவான நன்னீர் சூழல் அமைப்பு, நீடித்திருக்கத்தக்க சமன்பாடுபாவிக்கும் சூழலாய் விளங்குகிறது.

இதுபோன்ற பல நன்னீர்சூழலை மழைக்காலங்களில் நாம் காணலாம். அப்படிப்பட்ட மழைக்காலங்களில் சமவெளி புற்களால் நிறைந்திருக்கும் அல்லவா? அவற்றை உண்ணும் வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளின் அதிகரிக்கும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், திடீரென்று தோன்றிய நன்னீர்குட்டைகளில் மீன்களின் சமநிலையைப் பேணவும், மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுக்களை கட்டுக்குள் வைக்கவும் இங்கிருக்கும் வேட்டையாடிகளின் எண்ணிக்கை போதாதல்லவாஇயற்கை எவ்வாறு அங்கே சமநிலையைப் பேணும்?

 இங்கே நமக்கு மழைக்காலமாய் இருக்கும் சமயம், பூமியின் வடபாகங்களில் பனிக்காலமாகும். பனிப்பிரதேசம் என்பதே பாலை நிலம் எனக் கண்டோம் அல்லவா? அப்போ அந்தப் பாலை நிலத்தில் வசிக்க முடியாத பறவைகள், உயிர்சூழல் மிகுந்த நமது நிலங்களுக்கு வலசை வரும். அவைகளின் மூலம் இயற்கையின் சமநிலை அங்கே பேணப்படும். மேலும் கொசுக்களின் லார்வாக்களை உண்ண தட்டான்களும் வலசை வரும். இவற்றைப் பற்றி பின்னே நாம் விரிவாகக் காணலாம்.

உலகம் முழுவதும் விவசாயத்தின் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், விவசாயம் இயற்கைக்கு எதிரானது, காடுகளையும் அதுசார் உயிரினங்களையும் அழித்து விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதாகும்.

 மரங்களை வீழ்த்தி நிலஅமைப்பை மாற்றிவரும் கொடுஞ்செயலை மனிதன் மட்டுமே செய்கின்றான் எனக்கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. இப்புவியில் பல்லாயிரம் வருடங்களாக மரங்களை வீழ்த்தி, நிலஅமைப்பை மாற்றும் செயலை இன்னொரு உயிரினமும் செய்து வருகிறது. அதுவும் அந்த உயிரினம் ஒவ்வொன்றும் ஒரு வருடத்திற்கு 200 மரங்களை சாய்க்கிறது. அது பெரியசைஸ் எலி போன்ற ஒரு உயிரினம். அதன் பெயர் பீவர். அவை கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மரங்களை வருடம் தோறும் சாய்க்கின்றன.

எதற்காக அவை அப்படி செய்கின்றன ?”

ஆற்றின் நடுவே தங்குமிடம் அமைக்க.

 "எதற்காக அவற்றுக்கு ஆற்றின் நடுவே அப்படியொரு தங்குமிடம் அமைக்க வேண்டும்?"

  தனது குழந்தைகளை வேட்டையாடியிடம் இருந்து பாதுகாக்க.

"தான் நன்றாய் வாழ, காட்டை அழித்து இயற்கையின் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதா?"

 அவை அவ்வளவு மரங்களையும்கொண்டு நதியின் போக்கைத் தடுக்குமளவிற்கு பெரிய தங்குமிடத்தைக் கட்டியதால் விளைந்த நன்மைகள் பல. அது கட்டிய அணை, உதிர்ந்த இலைகளையும் நதியில் அடித்து வரப்படும் மரத்தின் பாகங்களையும் தடுத்து நிறுத்துகிறது. இவை பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களால் வளமான மண்ணாய் மாற்றப்படுகிறது. அது ஒரு நல்ல சதுப்புநிலசூழலை உருவாக்குகிறது. அந்நாட்டின் அழிவில் இருக்கும் 50% உயிர்கள் இச்சூழலில்தான் வாழ்கின்றன. இந்த பீவர் இல்லாவிட்டால் அவற்றின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். புதிய சூழலை உருவாக்கி இயற்கையின் சமநிலை பேணும் இவ்வுயிரினத்தை ‘Keystone species’ என்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.

ஒரு நதியின் போக்கை சரியான வகையில் கட்டுப்படுத்துவதால் எவ்வளவு நன்மை பார்த்தீர்களா?

நம் தமிழகத்தில் குறிஞ்சிக்கும் நெய்தலுக்கும் இடையில் பரந்துபட்ட பல சமவெளிகள் உள்ளன. அவற்றின் வழியாக நதிகள் பாய்கின்றன. பருவமழையின் போது பிரவாகம் எடுக்கும் நதிகள், வெள்ளக் காடாய் அழிவை ஏற்படுத்துகின்றன. நதிகள் பாயா நிலமோ, வருடத்தில் இரு மாதத்தில் மட்டும் மழையை பெற்று, புல்வெளிகளாகவும் நன்னீர்சூழல் அமைவாகவும் இருக்கின்றன. மீதி பத்துமாதங்கள் உயிரிப்பின்றி பாலை நிலமாக கிடக்கின்றன.  இதுவே உயிர்ப்பு இல்லாத ரத்தஓட்டம் தடைபட்ட திசுக்களாய் இருந்தால், அவற்றை உயிர்ப்பிக்க பைபாஸ் சர்ஜரி செய்யலாம். இந்த வறண்ட நிலங்களை அது போல உயிர்ப்பிக்க பைபாஸ் சர்ஜரி செய்வது சாத்தியமா?

இடைக் கற்காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின்  ஆரம்பகட்ட முன்னெடுப்புகளை பற்றிய ஆய்வுகள், பாக்கிஸ்தானில் நடந்திருக்கின்றன.

 முல்லை நில மேய்ச்சல்  குழுக்கள்பசுமை நிறைந்திருக்கும் இடங்களைத்தேடி நாடோடிகளாக இருப்பதை பார்த்து இருக்கிறோம்.  

 ஆனால் பலுச்சிஸ்தானுக்கு அருகே வாழ்ந்து வந்தவர்கள் மருதநில நாடோடிகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறுசிறு குன்றுகளால் ஆன  மிதவறட்சி கொண்ட நிலம் அது. அங்கே மழை எப்பொழுது வரும், எங்கே வரும் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. திடீரென எதிர்பாரா சமயத்தில் மழை வரும் போது, அங்கே  சிறுசிறு நதிகளும் சிற்றோடைகளும்  தோன்றும்.

 சிற்றோடைகளால் கரைக்கப்பட்ட குன்றுகளின் பாறைகள்; வண்டல் மண்ணாக ஓடைகளுக்கு அருகில் பரவி இருக்கும் இடம் அது. அங்கே  திடீரென ஏற்படும் மழைப்பொழிவை ஒட்டி, சில காலங்களுக்கு அங்கே பசுமை நிறைந்திருக்கும். அந்தத்திடீர் பசுமையால்  ஈர்க்கப்பட்ட மேய்வனவற்றை பின் தொடர்ந்து வந்த  மனிதர்களுக்குநதி வறண்ட பின்னே எங்கே செல்வது என்கின்ற தவிப்பு நிச்சயம் இருந்திருக்கும்.

 மழைபசுமை - வேட்டை... மழைபசுமை - வேட்டை... என சந்ததி சந்ததியாக அங்கிருந்த மனிதர்களுக்கு இந்த வாழ்வு முறை தொடர்ந்தது.

எனவே மண வாழ்க்கையை எண்ணி ஏங்கும் 90ஸ் கிட்ஸ்களைப் போல, மழையை எண்ணி ஏங்க ஆரம்பித்தனர் அந்த வேட்டையாடி மனிதர்கள்.

 தொடர் வேட்டையால் மேவனவற்றின் எண்ணிக்கை குறைந்தது, ஆனால் வேட்டையாடி மனிதர்களின் எண்ணிக்கையோ அதிகரித்த வண்ணம் இருந்தது. சில ஆயிரம் ஆண்டுகளில் 50 கிலோ எடைக்கு மேல் இருந்த பல வகை மெய்வனவும் வேட்டையாடி மனிதர்களால்  அடித்தொழிக்கப்பட்டு விட்டன

 வேறு வழியில்லாமல் தங்களுக்கான உணவை தாங்களே உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அந்த  மக்கள் .

 இங்கொன்றும் அங்கொன்றுமாய் அந்த நிலைப்பரப்பில் அவ்வப்போது பெய்து வந்த மழையைத் தொடர்ந்து உருவாகிய சிறுசிறு நதிகளை ஒட்டி இருந்த வண்டல் மண்ணில், நாடோடி விவசாய முறையை பின்பற்ற ஆரம்பித்தனர் அந்த மக்கள்.

 சரிவான நிலப்பரப்பில் சடுதியில் ஓடி மறைந்த நதியினால் அந்த நிலப்பரப்பு வேகமாக வறண்டு விட்டது. அடுத்து அங்கே எப்பொழுது  மழை வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. எனவே மழை பெய்து சிற்றோடை தோன்றிய இடத்தில்  உழவு செய்வதற்கு நாடோடிகளாய் அலைந்து இருக்கின்றனர் அந்த நிலத்து மக்கள்.

பெண் பார்க்கும் படலத்தில்; கன்னியைக் காண காத்திருக்கையில்; மாப்பிள்ளையின்  முன்னே மின்னலென என கன்னிகை ஓடி மறைந்தால்; மணப்பெண்ணைக் காணவந்த மாப்பிள்ளைக்கு  நேரும் ஏமாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ?

 எனவே சடுதியில் ஓடிச்செல்லும் நதியின் வேகத்தைக் குறைத்து நிலத்தை நோக்கி திருப்பிவிட; அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு முன்னெடுப்பை நிகழ்த்தினர். சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் ஒரு பெரிய நாகரிகம் முளைப்பதற்கான அச்சாரமாக அந்த நிகழ்வு இருந்தது.

 நதி மகளின் வேகத்தைத் தடுக்கும் வண்ணம் கற்களால் சிறு சிறு  கட்டுமானங்களை எழுப்பி, அவளை சமவெளி நோக்கி திருப்பி விட்டனர் அம்மக்கள். மேலும் அவள் எங்கேயும் ஓடி  மறைந்து விடாமல் இருப்பதற்காக, கற்களால் அவளை  சிறை பிடிக்க ஆரம்பித்தனர்.

 பலுச்சிஸ்தானுக்கு அருகில் இருக்கும் சிந்து கோகிஸ்தான் எனும் நிலப்பரப்பினை ஆய்ந்த ஆய்வாளர்கள். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த புதைபொருள் படிமங்களை கண்டறிந்துள்ளனர். நதி  உடைத்து உருட்டி வந்த கற்களைக் கொண்டு செய்யப்பட்ட கற்கருவிகளை அங்கே கண்டறிந்தனர். அங்கே இருந்த வண்டல் மண் நிறைந்திருக்கும் இடங்களுக்கு அருகில்  நாடோடி மக்கள்  தங்கி சமைத்து விட்டுச் சென்றதற்கான தடயங்களையும் அவர்கள்  கண்டறிந்தனர். இது முதலில் நிகழ்ந்த வேட்டை முன்னெடுப்புகளைக் குறிக்கின்றன. கற்காலத்தின் முடிவில் அங்கிருந்த நாடோடிகள் கற்சிறைகளை எழுப்பியதையும் அவர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். அந்தக் கற்சிறைகளுக்கு அவர்கள்கபர் பந்த்என்று பெயரிட்டு இருக்கின்றனர். அவை இன்னும் அங்கே பயன்பாட்டில் உள்ளன.

 மேலும் அங்கே அலங்கரிக்கப்பட்ட பானைகளும்சிறுசிறு ஆபரணங்களும் மற்றும் செம்பு அம்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. கற்களைக் கொண்டு கல்லாயுதங்களை செய்து நாடோடியாய் வாழ்ந்த வேட்டையாடிகள்பிறகு நாடோடி மருத இனத்தவர்களாக வாழ்ந்ததையும்; அதன் பின்னே கற்சிறைகளை எழுப்பி நிரந்தரமாக குடிகொள்ள முயன்ற முயற்சிகளையும்; அதன் பின்னே ஒரு தனித்துவ நாகரிகமாக  அவர்கள் வளர்ந்ததையும் பற்றிய சித்திரத்தை இவை நமக்கு எடுத்து இயம்புகின்றன. ஹரப்பர்கள் எந்த தெய்வத்தையும் வழிபடவில்லை. ஆனால் அவர்கள் நீரை வழிபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. நீரை ஆடிப்படையாகக் கொண்டு உருவான அந்த நாகரிகம், நீரை வழிபட்டதில் வியப்பேதும் இல்லை.

இப்போது அங்கேகட்செய்து விட்டு நம்ம ஊருக்கு வருவோம் வாருங்கள்.

 காவிரியானது உகுநீர்க்கல் எனப்படும் ஒகேனக்கலின் வழியாக வேகமாக தமிழகத்திற்குள் நுழைகிறது.


வேகமாய்ச் செல்லும் நீரால் தர்மபுரி மாவட்டத்திற்கு எந்த பயனும் இல்லை. ‘வாம்மா மின்னல்என அழைக்கையில் சடுதியில் மறையும் மங்கையென ஓடிச்செல்கின்ற வெள்ளத்தால் என்ன நன்மை?

தவழ்ந்து செல்லும் நதியே நிலங்களை நனைத்துச் செல்கிறது. வேகமாய் செல்லும் நதியினால் அழிவுதான் அதிகம். இவ்வாறு வேகமாய் பாய்ந்துவந்த காவேரி; திருச்சியை அடையும்பொழுது  இடப்பக்கம் இன்டிகேட்டர் போட்டு; பள்ளமான சிதம்பரம் நோக்கி வேகமாகச் சென்று கடலில் கலந்தது. அதை வலப்புறம் தஞ்சை, நாகை பகுதிகளின் சமவெளிக்குத் திருப்பி விட்டால், அதன் வேகம்குறைந்து தவழ ஆரம்பிக்கும் எனும் எண்ணம் கரிகாலனுக்கு தோன்றியது. அப்படி தஞ்சை நாகை சமவெளி நோக்கி திருப்பி விடப்பட்ட காவிரி மங்கை, தனது ஓட்டத்தைக் குறைத்து நடக்க ஆரம்பித்தாள். தமிழகம் அவளைநடந்தாய் வாழிஎன கைகூப்பித் தொழ ஆரம்பித்தது.


அணைக்கட்டுகள் தமிழில்கற்சிறைஎன்று அழைக்கப்பட்டன. இவை பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தின் வேகத்தையும் அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் வளைவான வடிவில் அமைக்கப்பட்டன என்பது

‘’வருந்திக் கொண்ட வல்வாய் கொடுஞ்சிறை மீதிலி கொடுநீர் போக்கி’’

எனும் அகநானூற்று பாடல் மூலம் தெரிய வருகிறது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹரப்பா நாகரிக மக்கள் வெள்ளப் பெருக்கெடுக்கும்திரிஷவதிநதிக்கரை தோறும்எல்வடிவில் சிறிய வளைவான கட்டுமானங்களை உருவாக்கினர். அதன் பெயர் gabar bund. அவை பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தின் வேகத்தையும் அழுத்தத்தையும் குறைத்து விளை நிலங்கள் நோக்கி திருப்பி விட்டன.

அதைப்போல ஒரு கட்டுமானமே கல்லணை. ஆனால் காவிரிநாடன் எனப்படும் கரிகாலன் கட்டிய கட்டுமானம் மிகப்பெரியது.

படம்: நீரை வளைத்து சமவெளி நோக்கித் திருப்பும் கபர் பந்த் மற்றும் கல்லணைஒப்பீட்டுப்படம்.

    

இதுபோன்றதொரு அணையை எகிப்து மன்னர்களால் கூட எவ்வளவு முயன்றும் கட்ட முடியவில்லை. ஓடும் நீரில் கட்டப்பட்ட அந்த அணை, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் வளமாக்கியது. டெல்டாவில் மொத்தம் 36 ஆறுகளாக அவை பிரிந்து தவழ்கின்றது. அதிலிருந்து பிரிந்து செல்பவை 27 ஆயிரம் வாய்க்கால்கள். 100 அடி தூரம் கூட உழப்படா நிலம் காவிரியின் டெல்டாவில் இல்லை எனும் அளவிற்கு நிலம் முழுவதும் காவிரி அன்னநடை நடக்க வைக்கப்பட்டாள். விளைவு, அழிவுப் பாதையில் இருந்து காவிரி, ஆக்கப்பாதைக்கு மாறத்துவங்கினாள். இதனால் பாலை நிலமாய் கிடந்த காடு நாடாகியது. உறையூரைத் தலைநகராகக் கொண்ட கரிகாலன் தனது தலைநகரை போலவே செழிப்புமிக்கதாய் அந்த நதிபாய்ந்த பல இடங்களை மாற்றினான். அங்கே பள்ளமான நிலங்களில் குளங்களை அகழ்ந்து நீரை சேமித்தான். கடல் நோக்கி செல்லும் ஆறுகள் தம் வழிமுழுவதும் அகழப்பட்டுள்ள குளங்களை நிறைத்து செல்லும் எனும் குறிப்பு நற்றிணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்தரா காட்டை நாடாக்கி, குளங்களைத் தோண்டி, நீர் வளத்தைப் பெருக்கி, உறையூரை போல உறந்தை என்னும் ஊரை உருவாக்கி குடிகொள்ள வைத்தவன் கரிகாலன்.

காடு கொன்று நாடாக்கி

குளம் தொட்டு வளம் பெருக்கி

 பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்

 கோயிலோடு குடி நிறிஇ.

(பட்டினப்பாலை 283-286)

 ‘உறந்தைநாடுஎனும்ஒரத்தநாடு’, ’உறந்தைராயன்- குடி- காடு’,  போன்றவற்றின் செழிப்பினைக் காணும்போது; எப்பேர்பட்ட தொலைநோக்குப் பார்வை இது என்பது வியக்க வைக்கிறது.

சரி காட்டை நாடாக்கி விட்டனர். ஆனால். அங்கிருந்த உயிர்களின் கதி?”

கரையான் புற்று பக்கவாட்டில் பெருகுவது போல; பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் பறவைகளைத் துரத்திவிட்டு, பல்லடுக்கு குடிமனைகள் உருவாக்கியது போல அமைக்கப் பட்டவை அல்ல அந்த ஊர்கள். அவற்றால் பல்லுயிர்ப் பெருக்கம் அந்த ஊர்களில் அதிகரித்தது. இயற்கையின் சமநிலை அங்கு பேணப்பட்டது. அந்த நிலப்பரப்பின் keystone species ஆக பழந்தமிழர்கள் இருந்து; மற்ற  உயிரினங்களையும் காத்து, அவற்றின் துணையுடன் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர்.

வாருங்கள் நண்பர்களே பழந்தமிழரின் நஞ்சை நிலத்தின் வாழ்வியலைக் காணலாம்.

 

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - ஏர் முன்னது எருது - 8

  சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் காலம் : இடைக்கற்காலம்   இடம் : புல்வெளி நிறைந்த   சமவெளி “ பரந்த சமவெளி . இந்த நிலம் நம்மைப்போல் ...