நிலங்கள் உழப்படுவதற்கு முன்பு, நகரங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, மனிதர்கள் நிலையாக ஒரு இடத்தில் இருந்திருக்கவில்லை. அவர்கள் உணவுக்காகவும் இருப்பிடத்திற்காகவும் அலைந்து திரிந்தனர்.
பழங்காலத்தில், காடுகளிலும் மலைகளிலும், வாழ்ந்து வந்த மனிதர்களின் வாழ்க்கையானது இடைவிடாத வேட்டையிலும் அலைச்சலிலும் நிரம்பியிருந்தது. மனிதனின் அடிப்படை தேவையான உணவு மற்றும் உறைவிடம் இரண்டிற்கும் அவர்கள் இயற்கையை நம்பி இருந்தனர். வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழைய வாழ்க்கை முறையில் அடுத்த பொழுதின் உணவு என்பது கேள்விக்குறியாக இருந்தது.
அங்கிருந்த மக்களுக்கு உணவு என்பது வேட்டையின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருந்தது. உறைவிடம் என்பது பருவநிலையின் அதிர்ஷ்டத்தை பொறுத்திருந்தது. மேலும் இயற்கையின் இடர்களான வெள்ளம் வறட்சி காட்டு தீ போன்றவை அங்கிருந்த மக்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வைத்தன.
அந்த மக்கள் சிறு சிறு குழுக்களாக மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயற்கையின் தாக்குதல்களுக்கு எளிதில் பலியாகக் கூடியவர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட அப்போது இருந்த மக்களில் 43% பேர் பருவ வயதை அடைவதற்கு முன்னமே இறப்பை எய்தினர்.
வேட்டையின் காயங்கள் விலங்குகளின் தாக்குதல்கள் பிரசவ சிக்கல்கள் போன்றவற்றால் அவர்களில் பெரும்பான்மை சதவீத மக்கள் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு நிரந்தரமான தங்குமிடம் என்று எதுவும் இல்லை, புதுமைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அவர்களிடம் நேரம் இல்லை. அவர்களின் அனைத்து ஆற்றலும் உயிர்வாழ்தலுக்காகவே செலவிடப்பட்டது.
அவர்கள் வாழ்வு நிச்சயமற்றது. ஒவ்வொரு விடியலிலும் அவர்களுக்கு புதுப்புது சவால்கள் காத்திருந்தன. அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். ஆனால் அவர்களால் வெல்ல முடியாதவற்றின் எண்ணிக்கை பல. எனவே அவர்கள் தங்களால் வெல்ல முடியாதவற்றைக் கண்டு பயந்தனர். பாம்பு, மின்னல், நெருப்பு என அவர்கள் பயந்தவற்றின் எண்ணிக்கை அதிகம். எனவே, அவர்கள் அவற்றை வணங்கினர்.
ஆனால், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் தொடங்கின. மக்கள் நிரந்தர உணவினைத் தேடி பயணப்பட்டனர். தங்களுக்கான உணவை தாங்களே பயிரிட ஆரம்பித்தனர். நிலையான உணவு கிடைத்த பிறகு ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கத் துவங்கினர்.
அதற்கு நதிக்கரைகள் அச்சாரமாக அமைந்தன. நதிக்கரைகள் நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின.
என்றுமே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணிக் கரையில் அப்படி ஒரு நாகரிகம் உருவாகத் தொடங்கியது.
தற்போதைய தெற்குத் தமிழ்நாட்டின் வளமான எல்லைகளில், தாமிரபரணி ஆற்றின் சமவெளிகளுக்கு அருகில் இருந்த நிலமானது நிரந்தரத்தை வழங்கியது. இது முதல் மருதம். தமிழ் வேளாண் நிலப்பரப்பின் முன்னோடி.
மலை மற்றும் காட்டின் கரடு முரடான நிலப்பரப்பைப் போலல்லாமல், மருதம் மென்மையானதாகவும் ஈரமானதாகவும் இருந்தது. ஆற்று நீரால் வளப்படுத்தப்பட்ட அதன் வளமான மண், ஆதி சமூகங்களை தங்கவைத்து, பயிர்களை வளர்க்கவும், உபரி உணவை சேமிக்கவும் அனுமதித்தது. இனி அவர்கள் அலைந்து திரிந்து வேட்டையாடும் வேட்டையாடிகளாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக கவிவசாயிகளாக மாறினர்.
இந்த முயற்சி அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வந்தது.
நிலையான உணவின் இருப்பு, திட்டமிடலையும் உபரியையும் அனுமதித்தது.மக்கள் தொகை வளர்ந்தது, குடியிருப்புகள் கிராமங்களாகவும் பட்டணங்களாகவும் மாறின. நிரந்தர வீடுகள் பருவகால முகாம்களை மாற்றின. தொழில் பிரிவு தோன்றியது. சிலர் விவசாயம் செய்தனர், மற்றவர்கள் கருவிகளை உருவாக்கினர், சிலர் நோய்களை குணப்படுத்தினர், சிலர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர், சிலர் காவல் காத்தனர். இதனால் மக்களுக்கு ஓய்வும் உபரி நேரமும் கிடைத்தது. உபரி நேரத்தில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர் அதனால் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. நீர்ப்பாசனம், உழவுக் கருவிகள், சேமிப்பு கலன்கள், மற்றும் உலோகவியல் போன்றவை முயற்சித்துப் பார்க்கப்பட தொடங்கின .
ஆனால் இந்தப் பரிசுகள் ஒரு விலையுடன் வந்தன.
நிலத்துடன் உரிமை வந்தது, உரிமையுடன் ஏற்றத்தாழ்வு வந்தது. பலரால் உற்பத்தி செய்யப்பட்ட உபரி, சிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள், ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். சமூக படிநிலைகள் உருவாகின.
மக்கள் இப்பொழுது பிறவிலங்குகளுடன் பூசல் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் நாகரீக கட்டமைப்பின் ஒழுங்கு குலைந்தது.
நாகரிகம் திறமாக இயங்குவதற்கு ஒரு ஒழுங்கு தேவைப்பட்டது, ஒழுங்கிற்கு அதிகாரம் தேவைப்பட்டது. அதிகாரத்தை நிலை நிறுத்த வேந்தன் என்று ஒருவன் தேவைப்பட்டான்.
இவ்வாறு வேந்தன் உருவானான், ஒரு தலைவனாக மட்டுமல்ல, சட்டமியற்றுபவனாகவும் அவன் இருந்தான். அவன் நீதியை அமல்படுத்தினான், எல்லைகளைப் பாதுகாத்தான், அறுவடையை ஒழுங்குபடுத்தினான், தகராறுகளைத் தீர்த்தான். அவனது வார்த்தை சட்டமானது. வேந்தன் மருத நிலத்தின் ஒட்டுமொத்த அதிபதியாகக் காட்சியளித்தான்.
கடவுளுக்கு இணையான அதிகாரத்தை கொண்டவன் வேந்தன். ஆனால் வேந்தனும் ஒரு மனிதன் தான்.
வேந்தனின் மனித இயல்பை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. பிறந்தநாள் அவன் இயற்றிய சட்டங்கள் எளிதில் மீறப்பட்டன. எனவே மக்கள் ஒரு புதிய ஒரு உருவகத்தை உருவாக்கினர். வேந்தனை விட உயர்ந்த ஒரு சக்தி, கையூட்டப்பட முடியாத, கொல்லப்பட முடியாத, வேந்தனையும் கண்காணிக்கும் ஒரு இருப்பு உருவாக்கப்பட்டது.
அதன் பெயர் கடவுள்!
கடவுள் எனும் உருவகம் வேந்தன் உள்ளிட்ட அனைத்து மனிதர்கள் மனதிலும் தர்மத்தை மீறினால் தண்டிக்கப்படுவோம் எனும் பயத்தை உருவாக்கி நாகரிக கட்டமைப்பின் ஒழுங்கை நிலை நிறுத்த உதவியது.
உருவகமாக உருவாக்கப்பட்ட கடவுள்களால் மனித மனத்தின் ஒழுங்கை பரிபாலிக்க முடிந்தது. ஆனால் அந்த உருவகத்தால் கொள்ளை நோய்களை தடுக்க இயலவில்லை.
மக்கள் தொகை அடர்த்தி இந்த ஆரம்பக் குடியிருப்புகளில் அதிகரித்தபோது, நோய்களும் அதிகரித்தன. வீட்டு விலங்குகளோடு மக்கள் நெருங்கி பழகிய போது அவற்றின் கிருமிகளை அவர்கள் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர்.
மக்கள் பெருக்கம் கழிவுகளை அனுமதித்தது. கழிவுகள் ஈக்களையும் கொசுக்களையும் வளர்த்தெடுத்தது.மேலும் தானியங்கள் காட்டில் இருந்த எலிகளை வீட்டிற்குள் அழைத்து வந்தன. இவை அனைத்தும் மக்களுக்கு கொள்ளை வியாதிகளை பரப்ப ஆரம்பித்தன.
கடவுள்களால் குற்றங்களை தடுக்க முடிந்தது. ஆனால் பெருகிவரும் கொள்ளை நோய்களை கடவுள் என்னும் உருவகத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை. கொள்ளை நோய்கள் கடவுள்களின் கோபத்தின் விளைவாக பார்க்கப்பட்டன. கடவுள்களின் சாபமாகக் கருதப்பட்டன.
ஆனால் தமிழ் மருத நிலங்களில், ஒரு வேறுபட்ட கடவுள் தோன்றினான்.
அவன் அழிக்கவில்லை; அவன் ஆறுதல் அளித்தான்.
அவன் பலியைக் கோரவில்லை; அவன் அறிவியலை கற்பித்தான்.
இந்த பசுமையான, நீர் நிறைந்த மருத நிலத்தில், சிவன் மக்களை குணப்படுத்தும் வைத்தீஸ்வரனாக மாறத் துவங்கிய காலகட்டம் அது. மக்களை குணப்படுத்தும் ஆற்றலை அவன் வெறுமனே அதிர்ஷ்டத்தால் மட்டும் பெறவில்லை. அதை பெறுவதற்காக அவன் நெருப்பாற்றில் நீந்தினான்
அவன் பிறந்தபோது பளீரென வெண்மையாக இருந்தான். அவன் காட்டில் வாழ்ந்த வேட்டுவ இன மக்களின் அசாதாரண வெளிறிய குழந்தை. மூப்பர்கள் இதை சாபம் என்றனர், ஆனால் அவனது தாய் அவனது பார்வையில் தெய்வீகத்தை கண்டாள். அவன் வளர்ந்தபோது, உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளும் வளர்ந்தான். ஒரு செம்பு அணிகலன் அவனது நோயை மோசமாக்கியபோது, அவனுக்கு ஆறுதலாக அவனது பெற்றோர் இருந்தனர்.பின்னர் அவர்களையும் அவன் இழந்தான்.
அதன் பின்னர் அவன் சுயம்புவாக வளர்ந்தான். அவன் தனக்குத்தானே கற்பித்துக் கொண்டான். பிறருக்கு கற்பிக்கவும் பிறரை பாதுகாக்கவும் அவன் முடிவெடுத்தான். இப்போது மருத நிலம் அவனது அருளைக் கோறியது.
மருத நிலம் என்பது புராணக் கதைகளில் நாம் காணும் கடவுளர்கள் வாழ்ந்த சொர்க்க நிலம் அல்ல. அது ஒரு உயிர்ப்பு மிக்க ஈரநிலம்:அது, எருமைகள் தண்ணீரில் மெதுவாக நகரும் சதுப்புநிலம். தாமரைகளுடன் ஆம்பல்கள் மலர்ந்து, தும்பிகளால் சூழப்பட்ட இடம். அங்கே நீர்நாய்கள் விளையாடின, மீன்கள், நெல் வயல்களுக்கு ஊடாக நீந்தின. அங்கே அன்றில் பறவைகள் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தன. உணவும் உயிரும் பழகிப் பெருக வகை செய்யும் ஒரு சரியான சூழலியல் அது.
காடு, வேட்டை விலங்குகளின் பற்களாலும் மற்றும் நாகங்களின் விஷத்தாலும் அங்கு வாழ்ந்து வந்த மக்களை கொன்றது.
ஈரநிலம், எவ்வளவு தாராளமாக இருந்தாலும், அது வேறுவிதமான விலையைக் கோரியது:
இப்பொழுது தமிழகத்தின் முன்னோடி மருத நிலத்தில் கொள்ளை நோய் ஒன்று கோரத்தாண்டவம் ஆடியது.
அந்த மாலையில், சிவன் உயர்ந்த நிலத்திலிருந்து இறங்கினான், காட்டிலிருந்து கிராமத்தின் விளிம்பு வரை இடுகாட்டை நோக்கி பயணித்தான்.
ஒவ்வொரு முறையும் அவன் அந்த மருத நிலத்தின் வெளிப்புற எல்லையைக் கடந்து தேரிக்காட்டினை நோக்கி செல்லும்போதும், ஒரு மாற்றத்தை அங்கு அவன் கவனித்தான்.
முதலில், ஓரிரு முதுமக்கள் தாழி இருந்த இடத்தில் தற்போது மூன்று நான்கு என தாழிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது .
மருதத்தின் நெரிசலான சமவெளிகளில், கொள்ளை நோய்கள் ஈரமான தானியத்தில் பூஞ்சை படர்வது போல் படர்ந்தது.
அதிகரிக்கும் மரணங்களின் பாரத்தால் இந்த இடுகாடு நெருக்கடி மிகுந்ததாக மாறியது .
பல முதுமக்கள் தாழிகள் இந்த மண்ணில் வரிசையாக நின்றன,
முன்பு அவற்றிற்குள் அடக்கமாகி இருந்தவர்களுக்கு, விரிவான விடை கூறல் பாடல்கள் பாடப்பட்டன.
ஆனால் இந்த முறை, விடைகள் விரைவாக இருந்தன. சடங்குகள், கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டன . பல தாழிகள் அவசர கதியில் மூடப்படாமல் இருந்தன.
சில தாழிகள் இன்னும் மூச்சு விடுவது போலிருந்தன. அவை மிகவும் மென்மையான மூச்சுகள். இறப்பின் வாசலில் இருந்தவர்களது மூச்சுகள் அவை.
மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தாழிகள் புதைப்பதற்குக் கூட முயற்சிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த சமயத்தில், அந்த இடுகாட்டில் நோய் முற்றி இறந்த ஒருவனது சடலம் தாழியில் எடுத்துச் செல்லப்பட்டது.
அந்தத் தாழியின் பாரம் மிகவும் கனமாக இருந்தது. அதை எடுத்துச் சென்றவர்களது கைகள் நடுங்கின. அதை தூக்கிச் சென்ற ஒருவன் பாரம் தாங்காமல் தடுமாறினான். தாழி மூங்கில் கம்புகளிலிருந்து வழுக்கியது. ஒரு சரிவில் உருண்டோடி பாறையில் மோதி உடைந்து சிதறியது.
வெளியே வந்த உடல் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் இருந்தது. அந்த உடலின் துளைகளிலிருந்து சீழ் வழிந்தது, மூச்சை அடைக்கும் துர்நாற்றம் அந்த இடத்தை சூழ்ந்தது. யாரும் அந்த சடலத்தின் அருகில் செல்லத் துணியவில்லை.அந்தத் தாழியை சுமந்து வந்தவர்கள் அருவருப்பு மேலிட அந்த உடலை கைவிட்டுவிட்டு ஓடினர்.
இறந்துபட்ட அந்த மனிதனின் கால்கள் வீங்கி இருந்தன , சீழ் மற்றும் கோழையுடன் தோலானது பளபளத்தது. மூக்கில் இருந்து கோழை திரவமாக வடிந்தது.
சிறிது நேரத்தில் அங்கு மனித நடமாட்டம் அற்றுப்போனது. அந்த இடுகாட்டை இருள் சூழத் துவங்கியது. மெல்ல மெல்ல நிலவின் குளிர் அங்கே பரவத் தொடங்கியது.
இத்தனை நாட்களாக அங்கு நடந்து கொண்டிருந்ததை கவனித்து வந்த சிவன், நிலமை மோசமாவதை உணர்ந்தான்.
அதுவும் சிதறிக் கிடந்த அந்த உடலை காணும் பொழுது சிவனுக்கு கலவையான எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. இறுதியாக சிவன் ஒரு முடிவோடு அந்த இடுகாட்டிற்குள் நுழைந்தான். கைவிடப்பட்ட அந்த உடலை நோக்கி முன்னேறினான்.
உடலைச் சுற்றி காற்று அடர்த்தியாக இருந்தது, கிட்டத்தட்ட கண்களுக்கு புலப்படுவது போன்று அது தோன்றியது,
சதுப்பு நிலம் ஈரத்தை வெளியேற்றுவது போல அவ்வுடலில் இருந்து திரவங்கள் வெளியேறியது .
திரவங்கள் வழியும் அந்த உடல் வெள்ளம் நிறைந்த நிலத்தைப் போல சிவனுக்கு தோன்றியது .
" அதிகப்படியான நிலத்தின் ஈரத்தை சூரியனின் வெப்பமே நீக்க வல்லது."
"அதிகப்படியான கபம் உடலை அழுகச் செய்கிறது. இதை அழலை கொண்டு தான் தணிக்க வேண்டும்," சிவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
உலர்ந்த சாணம், காய்ந்த சருகுகள் ,
மரக்கட்டைகள் போன்றவற்றை அவன் சேகரித்தான். அந்த உடலை சுற்றி, அவன் ஒரு சிதையைக் கட்டினான். அதில் நெருப்பை பற்றவைத்தான். தீப்பிழம்புகள் உயிர்த்து எழுந்தன. உடலின் தோல் பிளந்து வெடித்தது. சீழ் சீறி ஆவியாக மறைந்தது. அந்தக் காட்சி அருவருக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் சிவன் அசையவில்லை.
ஜ்வாலை கொழுந்து விட்டு எறிந்தது. அது அந்த உடலை கபளீகரம் செய்தது
எஞ்சியது சாம்பல் மட்டுமே.
இந்த சாம்பல் ஒரு காலத்தில் உயிர் கொண்ட உடலின் ஒரு பாகமாக இருந்தது.
இப்பொழுது அது உயிரற்று இருந்தாலும் மீண்டும் ஒரு உடலாக உருக்கொள்ள வல்லது.
சிவன் அந்த சாம்பலைத் தொட்டான். அதைத் தீண்டிய பொழுது அவனது மூன்றாம் கண்ணில் ஒரு சிலிர்ப்பை சிவன் உணர்ந்தான்.
"இது மரணமல்ல... இது மாற்றம்.
இது வெறும் சாம்பல் அல்ல... உயிருக்கு உடல் கொடுத்த துகள்கள் இவை. உணவுச் சங்கிலிக்குள் மீண்டும் நுழையத் தயாராக காத்திருக்கும் விதைகள் இவை ."
“இது தீண்டத் தண்டாதது அல்ல,”
“இது புனிதம்.”
அவன் சாம்பலை தன் நெற்றியில், கழுத்தில், கைகளில் பூசிக்கொண்டான். அதை பூசியபொழுது அவனது உடலின் அழல் தணியத் தொடங்கியதை உணர்ந்தான்.
இனி சேற்று மண் அவனது நெற்றியை அலங்கரிக்கப் போவதில்லை. வழக்கமான செந்நிற மண்ணை இனி அவன் பூசிக்கொள்ளப் போவதில்லை , அதற்கு பதிலாக சுடலையில் வெந்து தணிந்த இந்த சாம்பலையே அவன் பூசிக்கொள்ளப் போகிறான்.
ஒவ்வொரு நாளும் கைவிடப்பட்ட உடல்களை அவன் சேகரித்து எரிக்க ஆரம்பித்தான்.
இதுவரை தமிழர்களால் புதைக்கப்பட்டு இயற்கையை எய்த காத்திருந்த உடல்கள் அவனால் எரிக்கப்பட்டு விடுதலை அளிக்கப்பட்டன.
உடல் மட்டும்தான் விடுதலை அடைந்தது...
ஆனால் உயிரை அவன் தளைகளில் இருந்து விடுவிக்க வில்லை. அதற்கான காலம் இன்னும் அவனுக்கு வரவில்லை. அந்தக் காலம் வரும் பொழுது இந்த உலகம் அவனை கடவுளாகத் தொழும்.
உயிர்களை முக்தி அடையச் செய்யும் கடவுளாக அவன் இன்னும் மாறவில்லை. ஆனால் அந்த மாற்றத்திற்கான முதல் காட்சி இந்த தகன மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தது.
அவன் மூட்டிய சிதைகளில் இருந்து நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது.
எரியும் உடலை ஒரு மௌன நிலையில் இருந்து அவன் அவதானித்துக் கொண்டிருந்தான். நாகம் போல படம் எடுத்து ஆடும் தழல் அவனது கண்ணில் பிரதிபலித்தது. அவனது புருவ மத்தியிலும் ஒரு தழல் எறியத் துவங்கியது.
உடல் என்பது ஒரு மாயை என்னும் இரகசியம் அவனுக்கு இந்த தகன மேடைக்கு அருகில் அறிவிக்கப்பட்டது .
கீழே கிடந்த கபாலம் ஒன்றை அவன் கையில் ஏந்தினான்.
அவனுக்குள் எல்லையற்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது.
அவனது கைகளில் இருந்த உடுக்கை உயிர் பெறத் தொடங்கியது.
ஆனந்தத்தில், அவன் நட்சத்திரங்களின் கீழ் தனித்து ஆடினான். காற்று அவனைச் சுற்றி வந்தது. சிதையிலிருந்து எழுந்த நெருப்புப் பொறிகள் வானத்திற்கு தூதுவர்களாக எழுந்தன. அவனது தாளங்கள் எட்டுத்திக்கும் எதிரொலித்தன.
ஒரு விசித்திரமான துடிப்பறை தாளம் இரவு முழுவதும் அந்த மயானத்தில் எதிரொலித்தது.
அடர்ந்த மரங்களுக்கு பின்னால் இருந்து இதை கிராமத்து மக்கள் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காலையில் கதிரவன் உதித்த பிறகு அந்த இடுகாட்டிற்கு அவர்கள் வந்தனர். இடுகாடு முற்றிலும் மாறியிருப்பதைக் கண்டனர்.
ஒரு காலத்தில் துர்நாற்றமடித்த தாழிகள் நிரம்பி இருந்த இடத்தில், இப்போது சாம்பல் மட்டுமே நேர்த்தியாக குவிக்கப்பட்டு இருந்தது.
என்ன நடக்கிறது?
அவன் யார்?
அவர்களுக்குத் தெரியவில்லை!
ஆனால் அவர்களின் இறந்தவர்கள் இனி நோயைப் பரப்பவில்லை. அவர்களின் துயர் இனி சிதைவுடன் வரவில்லை.
ஆனால் அவர்கள் காண வேண்டிய அதிசயம் இன்னும் இருந்தது.
அந்த நிலத்தில் முன்னை விட நோயின் வேகம் அதிகமாக இருந்தது. அதனால் மக்கள் இறந்தவர்களோடு இறக்கப் போகிறவர்களையும் கைவிட ஆரம்பித்தனர். நோய் முற்றியவர்களையும் இறப்பதற்கு முன்னமே இடுகாட்டில் தூக்கி வந்து போட ஆரம்பித்தனர்.
அந்த இடுகாட்டின் நிழல்களுக்கு அருகில், பிணங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட இறந்துவிட்ட ஒரு மனிதன் கைவிடப்பட்டு கிடந்தான். அவனது மூச்சு மிகவும் மெலிதாக இருந்தது, அவனுள் கபம் ஆவேசமாக இருந்தது. அவன் நோயை பரப்பி விடுவான் என்று அவன் இறக்கும் முன்னரே இங்கே கைவிடப்பட்ட கிடந்தான். மரண தேவன் மெல்ல மெல்ல அவன் அருகில் வந்தான்.
ஆனால் காலனுக்கு முன்னர் காவலன் ஒருவன் அவனை நெருங்கி விட்டிருந்தான்.
நீறு பூசிய நெற்றியுடன் அங்கே உலாவிக் கொண்டிருந்த சிவனின் கண்களுக்கு இந்த மனிதன் தட்டுப்பட்டான்
சிவன் அவனுக்கு அருகில் வந்தான்.
சிவன் அந்த மனிதனின் நாடியை பரிசோதித்தான். அது கோடைகால ஓடையைப் போல மெலிதாக ஊர்ந்து கொண்டிருந்தது . சற்று நேரத்தில் அது நிற்கப் போகிறது.
ஒரு பையிலிருந்து, அவன் மூலிகைகளை, கனிம உப்புகளுடன் அரைத்து, புனித சாம்பலுடன் கலந்து அந்த மனிதனின் நாக்கில் வைத்தான்.
அவனது காதுக்கு அருகில் சென்று“சுவாசி,” என்று அவன் கருணை மிகுந்த குரலில் மெல்லிதாகக் கூறினான்.
மெல்ல அவன் சுவாசிக்க ஆரம்பித்தான்.
காலை வந்தது.
கிராமவாசிகள் நடுக்கமான முகங்களுடனும் பயத்துடனும் இடுகாட்டை நோக்கி வந்தனர். ஆனால் அவர்கள் கண்டது பயத்தை ஆச்சரியமாக மாற்றியது.
மரணத்தின் வாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மனிதன்...
இன்று இறந்திருப்பான் என கருதப்பட்டு புதைக்கப்படவிருந்த ஒரு மனிதன்... அவர்களுக்கு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவன் மட்டுமல்ல... நாட்கள் செல்ல செல்ல இடுகாட்டில் கைவிடப்பட்ட பலர் மெல்ல மெல்ல உயிர் பெறத் தொடங்கினர்.
வதந்திகள் பறவைகளை விட வேகமாக பறந்தன:
“நீலக் கழுத்து கொண்ட ஒரு மனிதன்…”
“…கண்களுக்கு இடையில் மூன்றாம் கண்ணுடன் இருக்கும் ஒரு மனிதன்…”
“…காளை மீது பயணிக்கிறான்…”
“…இறந்தவர்களை எழுப்புகிறான்…”
" நெருப்பில் நடனமாடுகிறான்... "
யாருக்கும் அவனது பெயர் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அவனை பற்பல பெயர்களால் அழைக்கத் தொடங்கினர்.
சிவந்தவன்!
பூடபாலன்!
நீலகண்டன்!
சடையன்!
அனலாடி!
எரியாடி!
அரவஞ்சூடி!
காவாலி!
நீற்றன்!
கண்ணுதல்!
சுடலையாடி!
அவனைப் பற்றிய கதைகள் ஆச்சரியத்தாலும் பயத்தாலும் எடுத்துச் செல்லப்பட்டு தூரம் பயணித்தன. அவை அந்த நிலத்தை ஆளும் மனிதனான வேந்தனை அடைந்தன.
இச்செய்திகளைப் பற்றியும் கொள்ளை நோயைப் பற்றியும் கலந்துரையாடுவதற்காக அவன் தனது நம்பிக்கையானவர்களை அழைத்து ஒரு கூட்டத்தை கூட்டினான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு ஒவ்வொரு விதமான தகவல்களை அளித்தனர்.
அவர்களின் பதில் எதுவும் அவனுக்கு திருப்தியை அளிக்கவில்லை. அவன் மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி இருந்தது.
“ நம் மக்களை ஏன் மரணம் சூழ்ந்தது?
காட்டிலிருந்து வந்த இந்த மனிதன் யார்?
மரணம் ஏன் அவனுக்குக் கீழ்ப்படிகிறது?”
-----------
உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...