Thursday, September 4, 2025

ஏர் முன்னது எருது - 3

 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

 

அக்காலத்தைய தாவரங்கள், தங்களைப் பின் தொடர்ந்து நிலத்திற்கு வந்த மற்ற உயிரினங்களை விரும்பவில்லை. டீக்கடையில் பஜ்ஜி உண்ணும் போது; நம் வாயைப் பார்க்கும் நாயை நாம் வெறுப்போடு விரட்ட எண்ணுவது போல, உணவுக்காக தம்மைச் சூழ்ந்திருந்த பிற உயிர்களை வெறுப்போடு பார்த்தன தாவரங்கள். நாள் முழுவதும் வெயிலில் நின்று சமைத்த உணவை; பிற உயிர்களுக்குத் தாரைவார்க்க யாருக்குத்தான் மனம் வரும்?

 

 தாவரங்களால் தனித்து வாழ முடியும். நீரையும், ஒளியையும், காற்றையும் கொண்டு சமையல் செய்ய யார்துணையும் அவற்றிற்குத் தேவைப்படவில்லை. மளிகைக் கடைக்காரரின் மனைவிக்கு, சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள் எளிதில் கிட்டுவது போல, நீரில் இருந்தவரை தாவரங்களுக்கு எந்த கஷ்டமும்  இருக்கவில்லை. கடல்மேல் மிதக்கும் போது பகலின் பகலவன் ஒளிவெள்ளம் எளிதில் கிட்ட, நீரும் நீரில் கரைந்திருந்த மினரல் சத்துக்களும் சுற்றிலும் சூழ்ந்திருக்க, அவற்றின் சமையல் எளிதாகவே இருந்தது.

 

 ஆனால் நிலத்திற்கு வந்ததும் தாவரங்களின் சமையல் புதுமனைவியின் சமையல் போல் ஆனது. யூடியூபில் பார்த்துப் பார்த்து சமையல் செய்கையில், ஒவ்வொரு சமையல் ஸ்டெப்க்கும் சமையல் பொருள் வாங்க மளிகை கடைக்கு சிறுவனை துரத்துவது போல், நிலத்தில் இருந்த தாவரங்கள் ஒளியை வாங்க; இலை என்னும் சிறுவனை மேலே அனுப்பியது. நீர் வாங்க வேர் என்னும் சிறுவனை கீழே அனுப்பியது, மேலும் கடின நார்களை கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டு செங்குத்தாய் நின்றது. நீரானது சமையலில் ஒரு முக்கிய பொருளானதால், நீர்நிலைகளுக்கு அருகில் நிலையாய் நின்றன தாவரங்கள்.

செடியின் செல்களுக்குள் உப்பு மிகுந்து; தண்ணீர் குறைந்து இருக்கும். இந்த செறிவு மிக்க திரவத்தை நோக்கி மண்ணில் இருக்கும் நீர், சவ்வூடு பரவல் மூலம் இழுக்கப்படும். இவ்வாறாக நீர்நிலைகளுக்கு அருகில் வளர்ந்திருந்த தாவரங்கள் எளிதாக நீரைப் பெற்று வந்தன.

 

இருப்பினும் உடல் கட்டமைப்பிற்குத் தேவையான மினரல்களை மண்ணிலிருந்து கரைத்து எடுப்பது அவற்றிற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. யாராவது பாறையில் இருந்து மினரல்களை கரைத்துக் கொடுத்தால் பதவிசாக வாழலாம் என அவை எண்ணின. அதே காலகட்டத்தில் பூமிக்குக் கீழே ஒரு உயிரினம் வலைப்பின்னல் அமைத்து பாறைகளைக் கரைத்து உண்டு வந்தது. அவற்றின் பெயர் பூஞ்சைகள். பூஞ்சைகளுக்கு குளுக்கோஸ் மீது மிகுந்த ஆசை. முதல் முறையாக தாவரங்கள் அடுத்த ஒரு உயிரினத்தோடு விரும்பி கூட்டணி வைத்துக்கொள்ள தலைப்பட்டன.

 

 வேர்களைச் சுற்றி படர்ந்த பூஞ்சைகள்; தாவரங்களுக்கு மினரல்கள் அளித்தது, அதற்குக் கூலியாக அவை குளுக்கோஸை பெற்றுக் கொண்டன.

 

 அப்போதைய தாவரங்கள்; இப்போதைய மரங்களைப்போல் பெரிய உயரங்களை எட்டி இருக்கவில்லை. இப்போது நாம் காணும் பாசிகள் பெரணி வகை தாவரங்கள் போன்ற சிறு சிறு தாவரங்களே அப்போதைய பூமியில் நிறைந்திருந்தன.

 

 உயரமாய் வளர்ந்தால் சூரிய ஒளியைப் போட்டியின்றி அடையலாம், மேலும் தன் இலையைத் தின்னக்காத்திருக்கும் தரைவாழ் உயிரினங்களிடமிருந்து தப்பலாம் என்கின்ற பரிணாம உந்துதலால் வாஸ்குலார் தாவரங்கள் (கடத்துத்திசு தாவரம்எனும் புது வகை தாவரங்கள் பரிணமித்தன.

 

ஆனால் உயரமாய் வளர்வதில் ஒரு முக்கியமான சிக்கல் காத்திருந்தது. உயரமாய் வளர்ந்தால் உச்சியிலுள்ள இலைகளுக்கு எப்படி நீரை கொண்டு செல்வது?

 

பானையில் உள்ள தண்ணீரை; காக்கைகள் போல் கல் நிரப்பி; மேல் எழுப்புவதை விட, ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது தானே எளிது? தாவரங்களும் அதுபோல நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சத் தலைப்பட்டன. ஸ்ட்ராவில் தண்ணீரை மேலெழுப்ப; யாராவது ஒரு முனையில் நெகட்டிவ் பிரஷர் கொடுத்து உறிஞ்ச வேண்டும் அல்லவா?

 

இங்கு அப்படி யாரைக் கொண்டு நீரை உறிஞ்ச விடுவது?”

 

இலையின் துளைகள் வழியாக ஆவியாகி வெளியேறும் நீரானது அத்தகைய உறிஞ்சு சக்தியை உண்டுபண்ணி, நீரை தாவரங்களின் உடல்வழி மேல் எழும்பச்செய்தது. உடல் முழுவதும்உறிஞ்சு குழல் கொண்ட அந்தத் தாவரங்களைவாஸ்குலார் பிளான்ட்ஸ்என்றழைத்தனர். 

 

நிலத்திலிருந்து உறிஞ்சப்படும் நீரில் ஒரு சதவீதம் மட்டுமே செடிகளால் பயன்படுத்தப்படுகின்றன. மீதி 99% நீராவியாக்கப்படுகிறது. சாதாரணமாய் நீரானது, நீராவியாய்  ஆக அதிக வெப்பம் தேவைப்படுகிறது, ஆனால் இந்த வேலையை தாவரங்கள் எளிதாகச் செய்கின்றன. இதனால் தாவரங்களைச் சுற்றி வெப்பம் குறைந்து ஈரப்பதம் அதிகமாகியது. இவ்வாறான சூழ்நிலை மாற்றத்தை; மரங்கள் தன்னை சுற்றி  உருவாக்கியதன்  மூலம், தனக்கு மேல் செல்லும் மேகங்களிலிருந்து மழை தருவிக்கும் வினை ஊக்கியாக அவை செயல்பட்டன. இதன் மூலம் தனக்குத் தேவையான நீரை மழை வடிவில் எளிதில் பெற்றன தாவரங்கள்.

 

இந்த உபாயத்தைக் கைக்கொண்டு தாவரங்கள் உயரமாய் வளர ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் வேர்கள் தற்காலத்திய தாவரங்கள் அளவிற்கு ஆழம்   செல்லவில்லை. எனவே சிறு புயலுக்கே கொத்துக்கொத்தாய் மரங்கள் சாய்ந்தன. தற்காலத்தய கரையான்களோ மற்றும் மக்கச் செய்யும் நுண்ணுயிரிகளோ அப்போதைய பூமியில் இல்லை. எனவே அவை மக்காமலே மண்ணில் புதைந்தன. மரங்களின் பாகங்கள்செல்லுலோஸ், லிக்னின்எனப்படும் மூலக்கூறுகளால் ஆனது. காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் பூமியில் உள்ள நீரைக் கொண்டு குளுக்கோசைப் போலவே இவையும் தாவரங்களால் உருவாக்கப் பட்டன. மரங்களின் இப்பாகங்கள்; நெகிழியைப் போன்று மக்காமல் பூமிக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தவை. இவற்றை மக்கச்செய்யும் பூஞ்சைகள் நிலத்தில் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் பிடித்தன.

 

அதுவரை கரியமிலவாயுவானது மரங்களின் பாகங்கள் உருவில் மண்ணில் புதையப்புதைய, காற்றிலுள்ள கரியமில வாயு குறைந்துகொண்டே வந்தது. மேலும் தாவரங்கள் வெளித்தள்ளிய ஆக்சிஜன் அளவு காற்றில் அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போதைய காற்றில் 20% தான் ஆக்சிஜன் உள்ளது. ஆனால் அப்போதைய காற்றில் ஆக்சிஜன் அளவு 30% இருந்தது. அதிகப்படியான ஆக்சிஜன் பூச்சிகளின் திசுக்களுக்குள் எளிதாக ஊடுருவ முடிந்ததால், பூச்சிகள் அபார வளர்ச்சி கண்டன. உதாரணத்திற்கு அக்காலத்தைய தட்டான்பூச்சிகள் எல்லாம் கழுகின் அளவில் இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

 

பல மில்லியன் வருடங்கள்   கழித்து உருவான மனித உயிர்கள், பூமிக்குள் நிலக்கரியாய் புதைந்து கிடந்த அந்த மரங்களை அகழ்ந்தெடுத்து எரிக்கும் வரை; மண்ணுக்குள்ளே நிலக்கரி வடிவில் கார்பன் அனைத்தும் சிறைபட்டுக் கிடந்தன.

 

இதே காலகட்டத்தில் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய தவளை போன்ற ஈரிடவாழ்வி உயிரிகளில் இருந்து, நிலத்தில் கடினஓட்டு முட்டையிடும் பல்லிகள் பரிணமித்தன.

 

அதுவரை பூ என்ற ஒரு வஸ்துவே தாவரங்களின் உடலில் இல்லை. ஊட்டி பைன் மரங்களை பார்த்திருக்கிறீர்களா அவற்றில் எங்கேனும் மலர்களை நீங்கள் கண்டதுண்டா? ஆண் மற்றும் பெண் கோன்களின் மூலம் காற்றின் துணை கொண்டே அவை இனப்பெருக்கம் செய்து வருகிறதல்லவா? அதே போன்ற தாவர இனப்பெருக்கமே அக்காலத்திய தாவரங்களில் நடைபெற்று வந்தது.

 

 மற்ற உயிரினங்கள் ஓடியாடி துணை தேடிச்சென்று கலவி கொள்கையில், மரங்கள் மட்டும் நகர வழியின்றி தவித்தன. இதுவரை தொல்லை எனக்கருதிய நகரும் உயிரினங்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டால்; தொலைதூரத்தில் இருக்கும் வேறொரு தாவரத்தோடு கூடுதல் சாத்தியப்படும் அல்லவா?

 

 இந்த உந்துதலால் பரிணமித்தவையே பூக்கும் இருவித்திலைத் தாவரங்கள்.

 

 பூச்சிகளில் ஒரு கூட்டத்தினர் நெக்ட்டர் என்னும் கூலியைப் பெற்றுக்கொண்டு; ஆண் செடிகளின் மகரந்தத்தை பெண் செடிகளுக்கு பரப்பின. சினைஊசி போடும் கால்நடை மருத்துவரின் செயலுக்கு ஒப்பானது பூச்சிகளின் இச்செயல். சந்ததிப்பெருக்கமே ஒவ்வொரு உயிரின் இலட்சியம். அந்த சந்ததிப்பெருக்கத்தை பூச்சிகள் செய்ததால் அத்தகைய பூச்சிகளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நெக்ட்டரிலே நிரப்பி விருப்பத்தோடு வழங்க ஆரம்பித்தன  பூக்கும் தாவரங்கள். மேலும் மகரந்தச் சேர்க்கையில் உருவான கருவை எடுத்துச்சென்று மண்ணில் புதைக்கும் உயிரிகளை ஊக்குவிக்க; கரு அமைந்துள்ள விதையைச் சுற்றி சத்தான சதைப் பகுதியை இணைத்து; ‘பழம் என்னும் உருவத்தில் நல்கின அந்த மரங்கள்.

 

 நம்மூர் நாட்டுத் தக்காளி நெடுஞ்சாலைப் பயணம் செய்து பெங்களூர் தக்காளியுடன் கூடுதல் சாத்தியமா? ஆனால் உங்களுக்கு அந்தப் பயணம் சாத்தியமே. அதனால் உங்களுக்குத் தேவையான சத்துகளை  நாட்டுத்தக்காளி வழங்குகிறது. அதை நீங்கள் ஆவலாய் தின்றுவிட்டு காலைக்கடனைக் கழிக்க பெங்களுரு கம்மாய்க்கரையோரம் ஒதுங்கும் போது, உரத்தோடு நாட்டுத்தக்காளி விதையை அங்கே விட்டுவிட்டு செல்கிறீர்கள். இவ்வாறு தாவர உணவு உற்பத்தியாளர்கள் அவற்றிற்கு உணவளிக்கும் பட்டாம்பூச்சி தொடங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் விருப்பத்தோடு உதவத்தொடங்கின.

 

இவ்வாறாக தாவரங்களின் அவுட்சோர்சிங் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் காரணமாய் இருவித்திலைத் தாவரங்கள்; பண்டைய தாவரங்களை விட எளிதில் உலகெங்கும் பரவின. எண்ணிக்கையிலும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதே காலகட்டத்தில் ஊர்வனப்பல்லிகள் ராட்சசப் பல்லிகளாய் பரிணமித்தன. அவற்றின் உயரத்திற்கு பல அடி உயர மரங்களும் சின்னஞ்சிறு காலிபிளவர் கொத்துக்கள் போலக் காட்சியளித்தன.

 

அந்தப் பல்லிகளின் மேய்ச்சலுக்கும் பாய்ச்சலுக்கும் இருவித்திலைத் தாவரங்களால்  ஈடுகொடுக்க முடியவில்லை.

 

என்ன உபாயம் செய்தால் இவற்றிடம் இருந்து தப்பிக்கலாம்?”

 

தகைவன தப்பிப் பிழைக்கும் என்ற ஆற்றல்மிகு விதியால் இயக்கப்படுவது அல்லவா இயற்கை?  அந்த விதியின் பால் பரிணமித்தவைதான் ஒருவித்திலைத் தாவரங்கள்.

 

 இருவித்திலைத் தாவரங்களின் வளர்ச்சி நடக்கும் மொட்டுப்பகுதி (Apical buds)  பாதுகாப்பின்றி மேலே நீட்டிக்கொண்டிருந்தது. அவற்றை மேய்வன  மேல்வாக்கில் மேயும்போது செடியின் முக்கியப் பகுதியான மொட்டுப் பகுதி மேயப்பட்டுவிடுகிறது. பழுத்துக் கீழே விழ இருக்கும் வயதாகிய இலைகளோ பாதுகாப்பாக கீழே இருந்தன.

 அடி வாங்குவதற்கு என்றே அளவெடுத்து செய்தார் போல் மேய்வதற்காகவே உருவானவைதான் ஒருவித்திலைத் தாவரமான புற்கள்.

 

புற்களின் வளர்ச்சி நடக்கும் மொட்டுப் பகுதியானது பாதுகாப்பாக கீழே இருக்கும். வயதாகி கீழே விழ வேண்டிய இலைகள் மேல் நோக்கிச் செல்ல; அவற்றை மேய்வன  மேய்ந்து கொள்ளும்.


இந்த உத்தியினால் ஒரு வித்திலைத் தாவரங்கள் உலகெங்கும் பரவ ஆரம்பித்தன.

 

மேய்வன பூமியில் அதிகரித்ததால் ஒரு நன்மையும் உண்டானது. உலகின் முக்கியமான இன்னொரு மூலப்பொருள்; புற்கள்மேயும் பிராணிகளால் பூமியில் அதிகரிக்க ஆரம்பித்தது. அந்தப் பொருள் தான் இந்தப்புத்தகத்தின் கதாநாயகன்.

 

அதன் பெயர்சாணம்’.

 

ராட்சச பல்லிகள் போடும் சாணமானது, கோழிகளைப் போல் சிறுநீர் மற்றும் மலம் கலந்த நைட்ரஜன் சத்து நிறைந்தது. இந்த நைட்ரஜன், செடிகளுக்குத் தேவையான ஒரு முக்கிய சத்து. அதைத்தான் நாம் யூரியா எனும் ரூபத்தில் செடிகளுக்கு அளிக்கின்றோம். யூரியாவை நாம் கைகளைக் கொண்டு வயல் முழுதும் தூவலாம், ஆனால் இந்த சாணத்தை யார் செடிகளுக்குப் பகிர்ந்தளிப்பது?

 

நாம் தேவையில்லை என விட்டெறிந்த பொருள் தானே குப்பை பொறுக்குவோரின்  மூலதனம்?

 

‘One man's trash is another man's treasure’ அல்லவா?

 

பல்லிகள், கழிவாக வெளித்தள்ளிய சாணத்தை மூலதனமாய்க் கொள்ளும் பூச்சிகள் உருவாக ஆரம்பித்தன. அவற்றில் முக்கியமானவைசாண வண்டுகள்’. அவை ஓரிடத்தில் குவிந்து கிடந்த சாணியை வனம் முழுவதும் உருட்டிச் சென்று புதைத்தன. இதனால் தாவரங்களுக்கு நைட்ரஜன் சத்து எளிதில் கிடைக்கப்பெற்றது. மேலும் இதன் காரணமாய் நிலத்தின் நுண்ணுயிரிகளும் அதிகரிக்கத் தொடங்கின. நுண்ணுயிரி நிறைந்த மண்ணை உண்ணும் புழுக்களும் உருவாக ஆரம்பித்தன. அவற்றைமண்புழுக்கள்எனப் பின் வரப்போகும் மனிதர்கள் அழைத்தனர். அவை நிலத்தைக் குடைந்த வழி வழியே நிலம் சுவாசிக்க ஆரம்பித்தது. நிலத்தில் ஈரம் எளிதில் ஊடுருவ ஆரம்பித்தது. கீழே இருக்கும் மினரல்சத்துமிகுந்த மண், மண்புழுக்களால் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டது. நுண்ணுயிரிகளின் பெருக்கம் மரங்கள் உதிர்த்த இலைகள் மட்க்க உதவின. 30 மடங்கு இலைக்கு ஒரு பங்கு சாணம் என நாம் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தும் உத்தி; இயற்கையாகவே அந்த நிலத்தில் அமையப்பெற்றது.

 

மரணித்து விழுந்த மரங்கள் மற்றும் உதிர்ந்த இலைகளை நுண்ணுயிரிகளின் துணையுடன் செரிக்க கரப்பான்பூச்சியின் வம்ச வழி வந்தகரையான்கள்சமூகமாய் கூடி செயல்பட்டன. இதுவரை நிலக்கரியாய் மக்காமல் மண்ணில் புதைந்த கரிமச்சத்து உயிர்ச் சுழலுக்குள் விடப்பட்டு அனைத்து உயிர்களுக்கும் பகிந்தளிக்கப்பட்டது. பல்வகை உயிரினங்களும் அவற்றை பகுத்துண்டு வாழ ஆரம்பித்தன. இவை அனைத்தும் நிகழ்வதற்கான வினையூக்கியாக சாணம் செயல்பட்டது.

 

இதன் காரணமாய் இதுகாறும் கன்னிப் பெண்ணாய் இருந்த நிலம், பல்லுயிர் சுமக்கும் தகுதியைப் பெற்று பூப்பெய்தியது.

 

பூப்பெய்திய அந்த நிலத்தில் 25 சதவீதம் காற்றும் 25 சதவீதம் நீரும் 10%  மட்கும் 40% மினரல்களும்  இருந்தன.

 

நீரையும் கரியமில வாயுவையும் சூரிய ஒளியைக்கொண்டு சமைத்து குளுக்கோஸ் பொன்ற உணவுப்பொருட்களாய் செடிகள் சமைக்க, அந்த குளுக்கோசை எரித்து கரியமில வாயுவையும் நீரினையும் உயிர்கள் வெளியிட்டன. அவற்றைத்திரும்ப தாவரங்கள் உபயோகித்தன.

இவ்வாறு பூமி சமநிலைப் பெறத்துவங்கியது. சமநிலைப் பெற்ற உயிர்க்கோளம் புவியில் அமையப்பெற்ற அதேசமயம், இப்புவியெங்கும் கில்லியென உலாவந்த பல்லிகளை, சல்லியாய் நொறுக்கும் வண்ணம் விண்வெளியில் இருந்து ஒரு பாறை பூமியைத் தாக்க வந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்வு பூமியின் கதையை மாற்றி எழுதக் காரணமாய் அமைந்தது.







No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஆங்கிலத்தில் ஆதியோகி புத்தகம் - Adhiyogi in English

For most of us, Lord Siva is the supreme cosmic force, eternal, formless, and divine. But Tamil literature, southern folklore, and ancient o...