Thursday, September 25, 2025

ஏர் முன்னது எருது - 5

 மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

காலம்: கற்காலம்.

 இடம்: மேற்குத் தொடர்ச்சி மலை.

இந்த அடர்வனத்தில் நாம் எவ்வகை தொழில் செய்வதென்று எனக்கு எதுவும் பிடிபடவில்லை. அப்படியே நாம் ஏதேனும் தொழில் கொண்டாலும் இந்த அடர்வனத்தின் கடுமைக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியுமா? சற்றுமுன் காட்டெருமை ஒன்றினை வரிப்புலி மறைந்திருந்து கொடூரமாய் தாக்கியதை மறந்துவிட்டாயா?“

உனக்கு என்ன குறை நண்பா? இந்நிலத்தின் தலைவன் சேயோன் போன்ற வீரம் மற்றும் கட்டுடல். இது போதாதா புலிகளை எதிர்க்க?

இங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும் மக்கள்; இந்த நிலத்தை அவர்கள் தாயாகக் கருதி வாழ்கிறார்கள். இந்தத் தாய் நம்மை மட்டும் கைவிட்டு விடுவாளா என்ன?

நம் தேவைகள் அனைத்தையும் இந்தத்தாய் செவிமடுப்பதாய் தோன்றுகிறது. நம் தேவைகளுக்கான விடை இந்த இயற்கையிடம் நிச்சயம் கிட்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் இச்சூழலை உற்று நோக்குவதேயாகும். வா நாம் சூழல் நோக்குவோம்.”

அதோ பார் அந்த மரமெங்கும்   தேன்கூடு. நாம் தேன் சேகரிக்கலாமே?”

அத்தொழிலை காட்டு நாயக்கர்கள் கைக்கொண்டனரே?”

பழங்கள் குலுங்கும் மரங்கள், தாவியோடும் மான் இனங்கள் இங்கு உள்ளனவே. பழம் பறித்தல் வேட்டையாடல் இதில் ஏதேனும் ஒன்றை கைக்கொள்ளலாமே.”

 “நண்பா பணியர்கள் மற்றும் துடியர்களின் தொழில் அது.”

  “பொறி வைத்து இரை பிடித்தல்?”

 “இருளர்களின் வாழ்வுமுறை ஆயிற்றே?”

என்னதான் மிச்சமுள்ளது நாம் முன்னெடுக்க? யானைகள் வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழ்கிறது என்பார்கள். நாம் வாழ இந்தக் காட்டில் என்ன தான் வழி?”

எறும்புகள் வாழ்கிறது என்றாயே; உன் அருகிலேயே கூடியிருக்கும் இந்த எறும்புகள் எவ்வாறு வாழ்கிறது என கவனித்தாயா?”

ஏதோ வித்தியாசமாய் படுகிறதே.! அந்த எறும்புகள் கொம்பு வைத்த பூச்சி வெளியிடும் திரவத்தை பருகுகிறதே! இங்கே என்ன நடக்கிறது? “

அந்த பூச்சியின் பகைவரிடமிருந்து இந்த எறும்புகள் அவற்றைக் காக்கின்றன. அதற்குக் கூலியாக எறும்பிற்கு சத்துமிகு திரவத்தை அளிக்கின்றன அந்தப் பூச்சிகள். அதேபோல் நாமும் இங்கு மேயும் கால்நடைகளை மேய்ச்சல்  நிலத்திற்கு ஓட்டிச்சென்று வரிப்புலிகளிடமிருந்து காத்து அவற்றின் பாலையும் ஊனையும் பெறலாமே?

 **************-

மனித இன வரலாற்றை, வரலாற்றுக்காலம்‌,  வரலாற்றுக்கு முந்தைய காலம்என்று இரண்டு வகையாகப்பிரித்து எழுதுவது வழக்கமாக இருந்துவருகிறது. எழுத்துச்சான்றுகள்தோன்றிய பிறகு கிடைக்கும்செய்திகளை வரலாற்றுக்காலத்தில்சேர்ப்பர்‌, அதற்கு முந்திய காலத்தை தொல்பழங்காலம்என்றனர். 20 லட்சம்‌ (20,00,000) ஆண்டுகளிலிருந்து, கி. மு. 4000 வரைக்கும்இருக்கக்கூடிய காலத்தைத்தொல்பழங்காலம்என உலக அளவில்குறிப்பிடலாம்‌. தொடக்கத்தில் ஆதிமனிதர்கள் கற்களை ஆயுதமாக பயன் படுத்ததொடங்கினர்இது கற்காலத்தின் ஆரம்பம். பழைய கற்காலம் எனப்படுகிறது.

மிக அண்மைக்காலம்வரை ஆஸ்திரேலியாவில்சில பழங்குடிகள்கற்காலக்கருவிகளை மட்டும்பயன்படுத்திவந்தார்கள்‌; அதாவது அவர்களது கற்காலம் தற்போது வரை நீண்டு இருக்கிறது. உலகின்பெரும்பாலான பகுதிகளில்இந்த வாழ்க்கைநிலை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. எனவே அவர்களது கற்காலத்தின் அளவு மிக அதிகம்.

 ஆகவே ஓவ்வொரு நாட்டுத்தொல்பழங்காலம் கால அளவீடுகளால் வேறுபடும். இந்தியாவிற்குள்ளாகவே வடக்கேயும் தெற்கேயுமே இந்த வேறுபாடுகள் காணப்படுகிறது. இக்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள நமக்குக்கிடைக்கும்சான்றுகள்மனிதன்செய்த கருவிகளான  கற்கருவிகள்‌. இதனை மட்டும் வைத்துக்கொண்டு அவன் யார்? அவன் நல்லவனா கெட்டவனா? தண்ணி சிகரெட் பழக்கம் இருக்கிறதா? நம்பி பொண்ணு குடுக்கலாமா? என்றெல்லாம் அனுமானிப்பது கடினம். இருந்தாலும்கும்பிபாகம்என்று எழுதியிருந்த தடயம் ஒன்றை மட்டும் கொண்டு அன்னியனைக் கண்டறிந்தது போல், ஆராய்ச்சியாளர்கள் அவனது குணநலன்கள், அவனது விருப்ப உணவு முதலியவற்றை ஊகித்துள்ளனர்.

இந்தியாவில்முதன்முதலாகத்தமிழ்நாட்டில்தான்பழங்கற்காலக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1663-ல்ராபர்ட்புரூஸ்என்ற நிலஅமைப்பியல்ஆய்வாளர்சென்னையில்பல்லாவரத்துக்கு அருகில்முதன்முதலாக இந்தக்கண்டுபிடிப்பைச்செய்தார்‌. அவர் கண்டுபிடித்தது ஒரு கற்கோடாரியை. அதை பயன்படுத்திய மக்களின் இந்த தொழில் முறையை மதராஸ்கைக்கோடாரி தொழில்முறை என்றழைத்தனர்.

தமிழ்நாட்டில்திருவள்ளூர்‌, பொன்னேரி வட்டங்கள்வழியே ஓடி எண்ணூருக்கு அருகில்கடலோடு கலக்கும்கொர்த்தலையாற்றுப்பள்ளத்தாக்கில்தான்இவற்றை அதிக அளவில் கண்டெடுத்துள்ளனர். இங்கே நன்னீர் எருமை, நீல்காய் எனும் மான் மற்றும் குதிரை போன்றவற்றின் பற்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைக்கொண்டு இவர்கள் ஆற்றுப்படுகைக்கு அருகில் வசித்தனர் என்று ஊகித்தனர். இதே காலத்தில்மகாராஷ்டிரப்பகுதியிலும்மற்றச்சில இடங்களிலும்நீண்ட தந்தமுள்ள யானைகளும்‌, மூன்று குளம்பு பெற்ற குதிரைகளும்‌, காட்டு ஆவினங்களும்வாழ்ந்தன என்பதற்குச்சான்றுகள்கிடைத்துள்ளன. கிமு 9700 க்கு பிறகு இந்தியாவில் காட்டுக் குதிரைகளே இல்லை. இது போல சிலவகை யானைகள், நீர்யானைகள், நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை போன்ற உயிரினங்களும் இந்தியாவிலிருந்து அழிந்து விட்டன. கற்கால காட்டுமாடுகள் இப்போது வனங்களில் இல்லை. (அதனால் அவை அழிந்துவிட்டன எனக்கூற முடியாது. நாட்டு மாடுகள் உருவில் அவை வாழ்ந்துகொண்டிருக்கின்றன).

இவ்வாறு தின்றே பல உயிர்களை கொன்றதால் இவர்கள் வேட்டையாடிகள் என் உறுதியாகக் கூறமுடியும். வேட்டையாடிய விலங்குகளின்இறைச்சியோடு இயற்கையாகக்கிடைத்த காய்கனிகளையும்,‌ நிலத்திலிருந்து தோண்டியெடுத்த கிழங்குகளையும்இவர்கள்உணவாகக்கொண்டிருக்கவேண்டும்‌. இவர்கள் நெருப்பைப்பற்றி அறிந்திருக்கலாம்‌.

ஆகா தமிழர் வரலாறு இவ்வளவு பழமையானதா? அப்ப மத்தவுங்க எல்லாம் வந்தேறிகளா என்ற எண்ணம் தோன்றி ஷோல்டரை உயர்த்துகிறீர்கள் தானே?

ஆது அனாவசியம். ஷோல்டர இறக்கிட்டு நான் சொல்றத கேளுங்க. உண்மைய சொல்லனும்னா நாமதான் வந்தேறி. அவுங்க எல்லாம் ஆப்ரிக்கக்கற்கால மனிதர்கள். ‘ஹோமோ எரெக்டஸ்’‌ என்ற இனவகையைச்சேர்ந்தவர்களாகக்கருதப்படுகிறார்கள்.

அப்ப அவுங்க மனுஷங்க இல்லையாநமக்கும் அவுங்களுக்கும் சம்மந்தம் இல்லையா?”

அவுங்களும் மனுஷங்க தான். 2G போனுக்கும் 5G போனுக்கும் இருக்கும் வேறுபாடு போன்றதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. சொல்லப்போனா அவுங்களுமே வந்தேறிக தான். ஆப்ரிக்காவிலிருந்து பொடிநடையா கிளம்பி நமக்கு முன்னமே வந்தவுங்க அவுங்க.

அவர்கள் வடஇந்தியாவிலும் அங்கு கிடைத்த கல்லை வைத்து, ஆயுதம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதை சோவன்தொழில்முறை என்கிறார்கள். அவர்களின் எலும்புகள் நர்மதை ஆற்றுப்படுகையில் கிடைத்துள்ளது. அதனால் நர்மதை மனிதன் என்கின்ற பெயரால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் தான் அவ்வழியே நம்ம ஊருக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும்.

 நம்ம உண்மையான மூதாதையர்களானஹோமோ சேப்பியன்ஸ்எனும் ஆதிமனிதர்கள் பொறுமையாக சுமார் 60,000 வருடங்களுக்கு முன் கால்நடையாய் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்டனர்அவர்களில் ஒரு பிரிவினர்  மேற்குத்தொடர்ச்சி மலைகளை வந்தடைந்தனர்.

 முதலாம் காற்று மாசு பதிவில் நாம் ஹாப்லாய்டுகள் பற்றிப் பார்த்தோமேஅதில் கூடஹாப்லாய்டைக் கொண்டு மூதாதையரைக் கண்டறிய முடியும் என்றோமேஅதன் படி முக்கிய Y ஹாப்லாய்ட் குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T போன்ற எழுத்துக்களுடன் லேபிளிடப்பட்டுள்ளன. இந்த முக்கிய குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொதுவான தந்தைவழி மூதாதையரிடமிருந்து பிரிவுபட்ட ஒரு கிளையை குறிக்கின்றன.

ஒவ்வொரு பெரிய ஹாப்லாக் குழுவும்; மேலும் துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை எண்கள் மற்றும் எழுத்துக்களைச் சேர்ப்பதன் மூலம் துணைப்பிரிவுகளாகக் குறிக்கப்படுகின்றன. இந்த துணைப்பிரிவுகள் Y குரோமோசோம் பரம்பரையின் மிக சமீபத்திய மற்றும் குறிப்பிட்ட கிளைகளைக் காட்டுகின்றன.

ஆரம்பகால Y ஹாப்லாக் குழுக்கள் ( மற்றும் பி போன்றவை) பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன, இது பழமையான மனித தந்தைவழி பரம்பரைகளில் சிலவற்றைக் குறிக்கிறது. சி, டி மற்றும் எஃப் போன்ற பிற ஹாப்லாக் குழுக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா, ஆசியா மற்றும் இறுதியில் பிற கண்டங்களில் பரவிய பரம்பரைகளுடன் ஒத்திருக்கின்றன.

இதில் A, B ஹாப்லாய்டு குழுக்கள் முறையே  M91 மற்றும் M60 மரபணுவைக்கொண்டிருந்தன. இவைகளைக்கொண்ட மக்கள்தான் ஆதி ஆப்ரிக்க மனிதனின் சந்ததியினர். C ஹாப்லாய்டு குழுக்களில்  M 130 மரபணு காணப்பட்டது. இவர்கள் தான் ஆப்ரிக்காவிலிருந்து முதலில் வெளியேறியவர்கள்.

 ஆப்பிரிக்காவுக்கு வெளியே காலடிஎடுத்துவைத்த ஆதிமனிதர்கள் உடம்பில் இருந்த M 130  மரபணு மதுரையில் ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் விருமாண்டி என்பவரின் குருதியிலும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆதிமனிதனின் வழித்தோன்றல்.

நாம் தான் ஆதியில் இந்தியாவில் புகுந்தவர்கள் என நிரூபணம் ஆகிவிட்டது. சோல்டரை ஏற்றி விட்டுவிட்டு வந்தேறிகளை வகுந்து விடுவோம் வாருங்கள்”.

சற்றே அமைதி கொண்டு, பின் வருபவற்றை படியுங்கள்.

60,000 ஆண்டுகளுக்கு முன்புபுலிசோறு கட்டிக்கொண்டு ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பியவர்கள் 26 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானை அடைந்திருக்கின்றனர் அவர்களது மரபணு விருமாண்டியினுடையது போன்றசிகுழு கிடையாது. ‘டிமரபணுவைச் சார்ந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவைசிகுழுவின் எம் 130 மரபணு கொண்டிருந்தவர்கள் அடைந்திருக்க கூடும் அவர்கள் தான் ஆதித் தமிழ் குடியினர்.

படம்: அந்தமானின் ஜராவா பழங்குடியினர்.

அந்த அந்தமானியப் பழங்குடியினர் தமது ஆப்ரிக்க மூதாதையருடன் உருவத்தில் ஒற்றுமை கொண்டுள்ளனர். ஆனால் நமது உருவம் ஏன் ஆப்ரிக்கர்கள் போல இல்லை? தமிழகத்தின் பழங்குடியினர் கூட அப்படியொரு உருவ ஒற்றுமையைக் கொண்டிருக்கவில்லையே ஏன்?

துளு மக்கள், குறும்பர்கள், மலையாளப் பழங்குடியினர் போன்றவர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடியினர். இவர்கள் தான் ஆதித்தமிழரின் வாரிசுகள். இவர்களிடமாவது தூய ஆதித்தமிழ் ரத்தம் கலப்பில்லாமல் இருக்கிறதா என்றால் கிடையாது. 60% தான் அவர்கள் ஆதி மனிதர்களின் மரபணுவை கொண்டிருக்கின்றனர். உண்மையில் தூய ஆதி மரபணு கொண்ட எவரும் தமிழகத்தில் இல்லை.

 அவர்கள் குருதியிலேயே 30 சதவீதம் கலப்பு இருக்கிறது என்றால் நமது குருதியில் எவ்வளவு கலப்பு இருக்கும்?

அது சரிநமது குருதியில் கலந்த மற்ற மூதாதையர்கள் யார் யார்? எப்படி இந்தக் கலப்பு நிகழ்ந்தது?”

இந்தியாவில் வசிக்கும் மக்கள் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவை வந்தடைந்த ஆப்ரிக்க இனமாகக் கருதப்படுகிறார்கள். இவர்களை தென்னவர்களின் தொல்குடி மரபுவழி முன்னோர்  (Ancient Ancestral South Indians). அதாவது தற்கால தென்னிந்தியரின் முன்னோர் என்றனர். மேலும் இந்தத் தொல்குடி மரபினரின் மரபணுவில், பல்வேறு காலகட்ட மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக் கலப்பே நாம் பழைய இனமாக இருந்தாலும், நேரடியாக ஆபிரிக்கர் போலல்லாமல் வேறுபட்ட முக, உடல் அமைப்பை நமக்கு அளிக்க ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பத்தாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முதன் முதலில் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே ஈரானிய முதல் விவசாயக் குடிகள், மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து பிரிந்து இடம்பெயர்ந்து இந்தியப் பரப்புக்குள் வந்துவிட்ட இனம், என மரபணு ஆய்வுகள் கூறுகின்றன.

பழைய கற்காலங்களில் ஆற்றுப்படுகைக்கு அருகில் வசித்தவர்கள் நடு மற்றும் புதிய கற்காலத்தில் ஒரு தொழிற்சாலைப்போல் செயல்பட்டு கல்லாயுதங்களைச் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு அவர்களுக்கு தேவைப்பட்டது டோலரைட் எரிபாறைகள்.

 கர்னாடகத்தின் இரும்பும் மற்றேனைய மினரல் வளமும் நிறைந்த பெல்லாரி மாவட்டத்தில் இருக்கும் sanganakallu, hiregudda மற்றும் kupgal / kapgal /kappagal ஆகிய இடங்களில் இருக்கும் மலைகளில் இந்தத் தொழிற்சாலைகள் இருந்த அடையாளங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக பாறைக் குழிகளில் உரசியும், பாறை சுவற்றில் தீற்றியும் ஆயுதங்களைச் செய்துள்ளனர்.

ஒரு பாறை கல்லாயுதமாய் மாறும் படிநிலைகளைப் பற்றிக் காட்டும் படம்


கற்களை பெருகேற்றுவதற்காக பயன்படுத்திய குழிகள் இவை.


இந்த ஆயுதங்கள் செய்யப்பட்ட அந்த மலைகளின் பாறைகள் சில முறைகளில் தட்டப்படும் போது வித்யாசமான ஒலிகள் எழுப்பக்கூடியவை. இதுபோன்ற பாறைகள் உலகின் பல இடங்களில் உள்ளன. இப்பாறைகளின் இந்த வித்யாசமான பண்பினால் தெய்வ வழிபாட்டு முறைகளுக்காக உலகெங்கும் பல்வேறு முறைகளின் அடிப்படையில் தொழப்பட்டு இருக்கின்றன. அதிலும் தென் ஆப்ரிகாவில் இப்படிப்பட்ட ஒரு பாறையில் ஒலி எழுப்பி சில பண்டைய சாங்கிய முறைகள் காலம் காலமாக செய்யப்பட்டு வருகின்றன.

கருப்பான இந்தப் பாறைகள்(dolerite trap) இளஞ்சிவப்பு கிரானைட் பாறைகளுக்கு இடையில் இருப்பது ஆண்-பெண் இணைசேருவது போன்ற தோற்ற மயக்கத்தைத் தருகின்றது, மேலும் குழிகளின் மேல்; உருளை போன்ற கற்களை வைத்து ஆயுதம் செய்யும் முறைகளும் இணைசேருவது போன்ற தோற்ற மயக்கத்தை தருவதால்தான் ஆண்-பெண் இணையும் குறியீடும், லிங்கக் குறி கொண்ட ஆணின் உருவங்களும், அதன் தொடர்புடைய பழங்கால ஓவியங்களும் இங்கு தீட்டப்பட்டுள்ளன எனும் கருதுகோளை முன் வைக்கிறார் பிரித்தானிய கொலம்பிய அறிஞர் Brenda E.F beck அம்மையார். (இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. தமிழின் பேரில் உள்ள காதலால் அவர் பேரையே பிருந்தா என மாற்றிக்கொண்டார்).

கைகளால் இப்பாறைகளைக் மெருகேற்றி ஆயுதங்களாகச் செய்வதற்கு முன்னர், இயற்கையாகவே மெருகேற்றப்பட்ட கல்லாயுதங்கள் தான் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

கல்லாயுதங்கள் ஆதிகாலத்தில் வாழ்ந்துவந்த நர்மதை மனிதர்கள் முதற்கொண்டு அனைவராலும் பயன்படுத்தப்படுத்தப்பட்டன. அந்த மனிதர்கள் ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுத்ததே அளவான உருளைவடிவ கற்கள் நதிக்கரையில் கிடைத்ததாலேயேதான்.

லிங்க வழிபாடு என்பது இங்கிருந்தே தோன்றியிருக்க வாய்ப்புகள் அதிகம். லிங்கங்களில் கைகளால் செய்யப்பட்ட லிங்கத்தை விடஸ்படிக லிங்கம்சிறப்பானது. ஸ்படிக லிங்கத்தை விட சிறப்பானது பாணலிங்கம் எனும் லிங்கவகை. இவை நர்மதை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் உருளைக் கற்களாகும்.

இருவேறு நிறங்களை கொண்ட இவை சிவ-சக்தி இணைப்பைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை. இதுவும் பிருந்தா அம்மையாரின் கருதுகோளுடன் ஒத்துப்போகிறது.

படம்: பாணலிங்கம்

இங்கு ஆண் பெண் இணையும் குறியீடு கொண்ட ஓவியங்கள் மட்டுமல்ல, திமில் காளைகளின் படங்களும் நிறைய வரையப்பட்டுள்ளன. தர்மபுரி சிலநாயக்கனூர் காடுகளிலும் இதே காலத்து திமில் காளை படங்கள் காணப்படுகின்றன. எனவே இவர்கள் மேய்ச்சல் மரபினராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் யானை, எருமை, மான், புலி போன்றவற்றின் படங்களும், விலங்குகளில் பயணம் செய்யும் மனிதன், மூன்று கொம்புடைய காளை, மாடு தலை கொண்ட மனிதன் போன்ற வித்தியாசமான படங்களும் இங்கே வரையப்பட்டுள்ளன. வரையப்பட்ட ஆண்கள் படங்கள் விரைத்த லிங்கக்குறிகளுடன் இருக்கின்றன. இதனை வரைந்தவர்கள் ஒருவேளை delirium, schizophrenia போன்றவற்றின் தாக்கத்தினால் வரைந்திருப்பார்களோ என்னவோ?

 இங்கே மேலும் சில படங்கள் பார்வைக்குத் தெளிவில்லாமல் உள்ளன. அவற்றை யாராலும் தெளிவாகக் காணமுடியவில்லையாம். காரணம் அவை யாரும் எட்ட முடியா உயரத்தில் இருப்பதால் தான். இதைப் பற்றி ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பாருங்களேன்

//This is not art for those with a fear of heights. Both those who viewed the motifs, and, in particular, those who produced them would have had to possess a reasonable degree of physical fitness and agility. In some cases, images are in locations so difficult to reach that we must assume that the artist who produced them was also quite athletic, being required to suspend him or herself from some overhang for the time it took to create the image (such individuals may also have relied on assistance from others). - Nicole Boivin. University of Cambridge //

அப்புறம் அதை அங்கே யார் வரைந்திருப்பார்கள்?”

யாராவது ஜிம்னாஸ்ட்டிஸ்ட் போல உடலை வளைத்து நெளித்து மலையேறுபவர்கள் வரைந்திருப்பார்கள். அதெல்லாம் நமக்கு எதற்கு? வாருங்கள்  நாம் வரலாற்றைப் பார்ப்போம்.”

படம்  : மூன்று கொம்பு காளை. (கொம்பில் முக்குறி)


இந்திய இனங்களிலேயே அதிக சதவீத தொல்குடி மரபை உடையவர்கள் இருளர்கள், குரும்பர்கள் மற்றும் பணியர்கள் போன்றவர்கள். காடுறை உலகின் மேய்ச்சல் சமூகமான குருபா இனமக்கள் மற்றும் வேட்டை சமூகமான பணியர்களிடம் மரபணு ஆய்வு நடத்தப்பட்டதன் மூலம் இது உறுதிசெய்யப் பட்டது. இவர்கள் போன்ற பழங்குடியினரிடம் இருந்தே இந்தக்காடுறை உலகத்தில் நம் மொழி தோன்றியிருக்க வேண்டும்.

ஆதி மனிதர்கள் தாங்கள் குடியேறிய இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு முன்னெடுத்த வாழ்க்கை முறைகள், பலவகையான புதுப்புது நாகரிகங்களுக்கு வித்திட்டன. நம் தமிழரின் நாகரிகமும் அதுபோல இந்தக் குறிஞ்சி நிலத்தில் இருந்தே தொடங்கியது. இன்றும் கரிக்கையூர் குறிஞ்சி நில மலைப்பகுதி; நீலான்கள்,கடமாக்கள் போன்ற மேய்வன உலாவும் பகுதியாய் உள்ளது.

மேய்வனவற்றை உணவாக மட்டுமே பார்த்த ஆஸ்திரேலிய பழங்குடிகள் பல, நாகரிகம் அடையாமலேயே அண்மைக்காலம் வரை வாழ்ந்து, வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர் உலகிலிருந்து மறைந்து விட்டனர். அவர்களைப்போலவே வேட்டையாடியாய் மேய்வனவற்றை அழித்துக்கொண்டிருந்த நம் ஆதி குடியினர்எப்படி, எப்பொழுது மேய்வனவற்றை பாதுகாக்கும் சமூகமாய் மாறியிருப்பார்கள்?

எது அவர்களை அப்படி மாறுவதற்கு உதவியது அல்லது தூண்டியது?”

விடைதமிழ் மொழி.

குழுவாய் வேட்டையாடிய ஒரு மனிதன்; இங்கு மாடுகள் இருக்கின்றன எனும் செய்தியை; எப்படி சக குழுவினனுக்குத் தெரிவித்திருப்பான் என யோசித்துப் பாருங்களேன்

மண்டைக்குமேல் கைகளால் இருகொம்புகள் வைத்து, விரல்களால் அவை இருக்கும் திசைகளைக் சுட்டிக்காட்டி சைகை செய்திருப்பான்

மண்டைக்குமேல் கொம்பு வைத்ததைக் கொண்டு நீலான்களா, கடமாக்களா, எருமைகளா, எனப் பகுத்தறிய முடியாதே. அதற்கு என்ன செய்ய?”

படம் வரைந்து பொருள் சுட்டலாமே.”

ஆம் உண்மைதான். கரிக்கையூரில் இருக்கும் பழமையான இந்தப் பாறை ஓவியங்களைப் பாருங்களேன்மேய்ச்சல் முன்னெடுப்புகளை இவை குறிக்கின்றன.( படம்:அய்யா பாலபாரதி)


இந்தப்படத்தின் மூலம் சக மனிதனான உங்களுக்கு அவர்கள் சொல்ல விழைவது என்ன?

நாங்கள் அனைவரும் மாடு மேய்க்கிறோம்என்பது தான் அவர்கள் சொல்லும் கருத்து.

எதற்காக மாடு மேய்த்தீர்கள்? பாலுக்காகவா?

மாடு கொடுத்த பாலை அப்படியே பருகினீர்களா? இல்லை மாட்டுப்பாலை வச்சு பாதாம் கீர் செஞ்சீங்களான்னு கேட்டால் பதிலுக்கு அவர்கள் படங்கள் கொண்டு உங்களுக்கு விளக்க இயலுமா?

சைகை செய்வதிலும், படம் வரைந்து பொருள் சுட்டுவதிலும் உள்ள பின்னடைவு என்னவென்றால், இம்முறைகளைக்கொண்டு பெரிய நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள முடியாது. மூளையால் ஓரிரு சைகை அல்லது படத்திற்கு மேல், கோர்வையாக நூல் பிடித்து வாக்கியங்களைக் கட்டமைத்து புரிந்து கொள்ள முடியாது.

 ‘மாடுஎன எழுப்பப்படும் உருவமற்ற ஒரு ஒலியால் மாட்டைக் குறிக்கும் போதுமாட்டை படமாக உருவகிக்காமலேயேமாடுஎன மூளையால் எளிதாக சிந்திக்க முடிந்தது.

சரிமாடு எனும் சொல் மாட்டைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியவர் யார்? இது போன்ற சொற்கள் எப்படி தோன்றியிருக்கும்?”

அங்கே என்ன பறவை உள்ளது?” என சைகையால் கேட்டவனுக்கு, பதிலளித்தவன் காகம் போலவே மிமிக்ரி செய்து; காகம் இருப்பதை உணர்த்தியிருக்கலாம். அதன் பின்னேகாக்காஎனக்கத்தினால் காக்காவைத் தான் குறிக்கிறான் என முடிவு செய்திருப்பார்கள்.

இப்படியாக போலச்செய்தும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், பண்புகளைக்கொண்டும் சொற்களை உருவாக்கியிருக்கலாம்.

முதலில் பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்அதைத்தொடர்ந்து வினைச் சொற்கள். இவ்வாறாக சொற்கள் பெருகி மொழி வளர்ந்திருக்கக் கூடும்.

தற்பொதைய தமிழகத்தில் பல மொழிகள் நம்மிடம் புழங்குகின்றன. உதாரணத்திற்கு உருது மொழி.

காய்கறி சந்தையில் இரண்டு பாய்மாருங்க உருதுல பேசிக்கிட்டு இருந்தாங்க. பேச்சுக்கு இடையேகட்டப்பை’ ‘சேப்பக்கிழங்கு’ ‘சிக்கன்எனும் நமக்கு புரிந்த வார்த்தைகள் வந்து விழுந்தன. உடனே கூட இருந்த என்னோட நண்பன்அவங்க என்ன பேசுகிறார்கள் என்று நான் சொல்லட்டுமா?’ என்றான்.

சொல்லேன் கேட்போம்.”

என்ன பாய் என்ன இந்த பக்கம். பை நிறைய கோழிக் கறியா ?” என்று அந்த பாய் கேட்க… “கட்டப்பை நிறைய கோழிக் கறியா வாங்குவாங்க? உள்ள இருக்குறது எல்லாம் சேப்ப கிழங்குயாஎன காண்டாகிறார் இந்த பாய் என மொழிபெயர்த்தான்.

நமக்குத் தெரிந்த ஆங்கில, தமிழ் வார்த்தைகளை மட்டும் கோடிட்ட இடங்களில் நிரப்பி; அவர்களது பாவனைக்கேற்ப வார்த்தைகளை அவனாக உருவாக்கிக் கொண்டு, தனக்கு உருது தெரிவதாக பீற்றிக் கொள்ளும் அவனையும்கூடவே ஒரு மலையாளி, ஒரு   கன்னடர் மற்றும்  ஒரு தெலுங்கரையும் கூட்டிகிட்டு பாகிஸ்தான்ல இருக்க பலுச்சிஸ்த்தான் போவலாம் வாருங்கள்.

வழக்கமா வந்தேறிகளைத்தானே பாக்கிஸ்தானுக்கு போவச் சொல்லுவோம்? நாம எதுக்கு அங்க போவனும்?”

விஷயம் இருக்குவாங்க போவலாம்.”

அங்கே இருக்கும் மக்கள் பேசுவதை கவனிக்கலாமா?

ஆவர்கள் வெவ்வேறு பாவனைகளோடும் உணர்ச்சிகளோடும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையே பின்வரும் வார்த்தைகள் வந்து விழுகின்றன... பாருங்களேன்.

 “அபாபாட்டிலும்மாஇரட்டுகாக்கோமாமாபாயிஒரேநீநான்டுஸ்ஷுர்குட் … xan…”

மூவராலுமே அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். அதுவும் எனது நண்பன் அந்த மொழியைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்வான். ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து விட்டு விடுவோம். ஏனென்றால் அவனுக்கும் சரி, நமக்கும் சரி, கன்னடனுக்கும் சரி, மலையாளிக்கும் சரி, தெலுங்கு பேசுபவருக்கும் சரி, அந்த மொழி தெரியும். அது ஒரு பண்டைய திராவிட மொழி வார்த்தைகள் புழங்கும் பிராகுயி மொழி.

படம்: திடாவிட மொழிக்குடும்பங்கள் (விக்கிபீடியாவில் எடுத்தது)



அபா... அப்பா

பாட்டி... பாட்டி

லும்மா... அம்மா

இரட்டு... இரண்டு

காக்கோ... காக்காய்

மாமா.. மாமா

பாயி... வாய்

டுஸ்... தூசு

ஷுர்... சேறு

குட் ... குட்டி

xan… கண்

பாய் என்பது வாய்... இந்த வார்த்தையை நம்மை விட கன்னடர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அங்கிருந்து தமிழகத்திற்குள் வரும் பொழுது பாயி எனும் வார்த்தை வாய் ஆகியிருக்கிறது.

கன்னடாவின் தெற்கேஹல்லிஎன கிராமங்களின் பெயர்கள் முடிவதை கவனித்திருப்பீர்கள். தமிழகத்திற்குள் நுழையும் பொழுது கிராமங்களின் பெயர்கள்பள்ளிஎன முடிவதையும் அனுமானித்திருப்பீர்கள்.

 

எப்படி பாவானது.?

தெற்கே வரவர எனும் ஒலிகள் இங்கே தமிழில் ஏன் இல்லை?

 பண்டைய திராவிட மொழி எப்படி  தமிழானது

 

கட்டப்பை சேப்பக்கிழங்கு இவை எல்லாம் ஒரிஜினல் அரபிகள் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களது மொழியில் இவற்றிற்கு வார்த்தைகளே இருந்திருக்காது

அதனால்தான் நம்ம பாய்ங்க கட்டப்பைக்கு அரபியில பேசாம, தமிழிலிலேயே கட்டப் பையினைகட்டப்பைஎன்றே   சொன்னார்கள். இது போல பல கலப்புகள் இருந்தால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு நம்மூர் பாய்மார்கள் பேசும் அரபி, ஒரிஜினல் அரபிக்காரருக்கே புரியாது.

தான் இருக்கும் புதுநிலத்தில் புழங்கும் புதுவகை பொருட்களுக்கும், புதிதாக மேற்கொண்ட பழக்கவழக்கங்களுக்கும்புதுவார்த்தைகள் தேவைப்பட்டிருக்க வேண்டும்.

இப்படித்தான் பண்டைய திராவிட மொழியிலிருந்து தமிழ் நிலப்பரப்பில் நமது தமிழ் உருவாகி இருந்திருக்குமா?”

முழுவதுமாக இல்லை, இந்த நிலப்பரப்பில் இருந்த மரங்களும், நிலமும், பொழுதும் இணைந்தே இந்த மொழியை தோற்றுவித்தது.

எப்படி?”

பலுச்சிஸ்த்தானில் தூய ஆதிகுடியினர் இப்பொழுது யாரும் இல்லை. அவர்களது குருதி பல கலப்புக்கு உள்ளாகியுள்ளது. அதில் நமது இரத்தமும் உள்ளது.

இந்தப்பகுதியில் முன்பு வாழ்ந்துவந்த மெஹர்களின் வரலாறு ஒரு பழமையான வரலாறு (கி.மு. 7000 அதன் பழமை).

 கிமு 7900லேயே அங்கே ஆடுகள் பழக்கப்படுத்தப்பட்டனஎலமைட் ஈல மொழி பேசிய ஈரானியவர்கள்; அங்கிருந்த ஆதிகுடிகளுடன் கலந்து ஒரு நாகரிகத்தை தோற்றுவித்தார் அதன் பெயர்தான் மெஹர் நாகரிகம். அவர்கள் தான் உலகின் முதல் பருத்தியை கண்டுபிடித்தவர். அவர்கள் விவசாயிகள். அவர்களிடம் கோதுமை இருந்தது பார்லி இருந்தது. அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான்; சிந்து சமவெளி - ஹரப்ப நாகரிக மக்கள்.

ஹரப்ப நாகரிகம் 5500 இல் இருந்து கிமு 1900 வரை செழித்தோங்கி இருந்தது. அவர்களுக்கு ஆதாரமாக விளங்கிய நதி வறண்ட பொழுது; அவர்கள் தங்கள் நிலங்களை விட்டு பல்வேறு இடங்களுக்கு வலசை செல்ல ஆரம்பித்தனர். தென்னிந்தியாவிற்கு வந்து குறும்பர்கள் போன்ற பழங்குடியினரோடு கலப்பில் ஈடுபட்டு; ஆதித்தமிழர்களோடு மீதித் தமிழர்களாக கலந்து, மொத்தமாகதமிழர்கள்என்று அழைக்கப்பட்டனர். ஹரப்ப நாகரிகம் ஒரு வடஇந்திய நாகரிகம் என்று கருதினாலும், அவர்களிடமும் ஆதி தமிழர்களின் மரபணு இருந்தது. கிட்டத்தட்ட அப்போதைய மிகப்பெரிய நாகரிகமாக நிலப்பரப்பிலும் மக்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் இருந்திருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து வரலாற்று ரீதியாக நிறைய தரவுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதை வைத்துப் பார்க்கும் பொழுது அவர்களிடம் கோயில்கள் இருந்ததில்லை, அவர்களிடம் மன்னர்கள் இருந்ததில்லை, அவர்கள் வழிபட்டது; ஒரு அமைதியான தோற்றமுடைய; மிருகங்களுக்கிடையில் இருக்கும் லிங்கக் குறியோடு காணப்பட்ட பசுபதி என்பவரை என்று அனுமானிக்க முடிகிறது. மேலும் லிங்க வழிபாடும் அங்கு இருந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்திருக்கின்றன. ஹரப்பர்கள் தமிழர்களோடு கலந்து தமிழர்களாக மாறியது போலவேஅவர்கள் வட இந்தியர்களுக்கும் மூதாதைகளா இருந்தனர்.

 வட இந்தியாவில் அவர்களது மரபணு இன்னும் ஆரியர்களோடும் முகலாயர்களோடும் திரும்பத்திரும்ப கலப்பிற்கு உள்ளானது.

 அதனால்நான் தான் தூய  ஆதி இந்தியன்அல்லதுஆதித் தமிழன்என யாரும் மார் தட்டிக் கொள்ள முடியாது. மேலும் இங்கு வந்த முகலாயர்களையோ ஆரியர்களையோ அயலவர்கள் என்றும் கூறி விடமுடியாது. அவர்கள் அனைவரும் நம்முடனே இருந்தனர், நம்மை நம்மை ஆண்டனர், நம்மோடு கலந்தனர். நாமாகவே மாறினர்.

 இப்படி சொல்வதே தவறு என்று தான் தோன்றுகிறது.

நாம் நமக்குள் கலந்து, இப்போது இருக்கும் நாமாக மாறி, தமிழர்கள் என்றும் இந்தியர்கள் என்றும் என பெயர் பெற்றோம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

நம்ம ஊருக்கு வந்து; நம்மோடு கலக்காமல்; நாமாக மாறாமல்; நம்மை பயன்படுத்திக் கொண்டது வெள்ளையர்கள் மட்டுமே.

 வடக்கர்களைசப்பாத்திஎன்று நாம் ஓட்டுவதும், ‘தயிர் சாதம்என அவர்கள் நம்மை ஓட்டுவதையும் ஒரு பண்பாட்டுக் கூறாகவே வைத்திருக்கிறோம். சப்பாத்தி என கூறும் தமிழர்களே, நமது பாட்டனார்களான மெஹர்கர்கள் உண்டது பார்லி மற்றும் கோதுமையைத் தான். தயிர் சாதம் என கூப்பிடும் வடக்கு நண்பர்களே, கங்கையில் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட முதல் விவசாயம் நெற்பயிரே

கற்பிதங்கள் அடிப்படையில் கற்பழிப்புகளை நிகழ்த்துபவர்களின் குருதியை எடுத்து அவர்களுக்கு, ‘தான் யார்என்று காட்டுதல் அவசியம்.

இவ்வாறு பண்டைய திராவிட மொழியில் இருந்து பல மொழிகள் தோன்றின. அவற்றில் தமிழும் ஒன்று. பிராகுயில் 15 % வார்த்தைகள் (2000 வார்த்தைகள்) திராவிட மொழிக்குடும்பதையவை. அதில் பல தமிழோடு ஒத்துப்போகின்றன.

மூலத் திராவிடமொழி மூன்று கிளைகளாகப் பிரிந்தது என்று கூறப்படுகிறது. பலுச்சிஸ்த்தானத்தில் பேசப்படும் பிராகுயிமொழி, வங்காளம், ஒரிசா முதலிய பகுதிகளில் பேசப்படும் மால்டோ, குருக் முதலியனவட திராவிடமொழிகளாகும். இரண்டாம் கிளையாகிய மத்திய திராவிட மொழிகள், மத்தியப்பிரதேசம்

ஆந்திரப்பிரதேசத்திற்கு வடக்குப்பகுதி, ஆந்திரநாட்டிற்குள்ளாகவே சில சின்னஞ்சிறு பகுதிகள் முதலிய இடங்களில் பேசப்படுகின்றன. கன்னடம், தமிழ், மலையாளம், துளு, படகா, தோடா, கோட்டாகுடகு முதலியன மூன்றாம் கிளையாகியதென் திராவிடமொழிகளாகும். தெலுங்குமத்திய திராவிடப்பிரிவோடு நெருங்கிய உறவுடையது; எனினும் சில அம்சங்களில் இது தென் திராவிட மொழிகளின் சில சிறப்பியல்புகளையும் பெற்றுள்ளது.

படம்: திராவிட மொழிக்கிளைகள்

கன்னடமொழிக் குழுவிற்கும், தமிழ் மொழிக் குழுவிற்குமிடையே ஒரு வேற்றுமை உண்டு. தமிழில் இருக்கும்  ‘அனைத்தும் அங்கேவாகிறது.

 

Beku (ಬೇಕು)-Vendum (வேண்டும்)

Beda (ಬೇಡ)-Vendam-(வேண்டாம்)

Bere (ಬೇರೆ)-Veru (வேறு)-

மேளும் வாகவும் மாறியது.

Panri(Tamil)-handi (Kannada), Puli (Tamil)-huli(Kannada)

 

இந்தி கர்னாடகா வரை வந்துருச்சு ஆனா தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாததற்குக் காரணம் என்ன தெரியுமா?

 

 நாம் இருக்கும் நிலமும், பொழுதும் தான் காரணம்.

நம்ம வாயில எல்லாம்  வராது, வரவும் கூடாது.

உதாரணத்திற்கு: ஹோல்ட்  ஆன்  நம்மால் ஓல்டேன் என்றே அழைக்கப்படுகிறது ( நமக்கு ஆவாதுன்னு ஹோ வுல மட்டும் வச்சுகிட்டோம்)

அயர் (ஹையர்)

"கடக்கார்... ஆப்னவருக்கு அயர் சைக்கிள் வேணும்"

 

இந்த எல்லாம்  ஏன் வராதுன்னு பார்ப்பதற்கு முன், திராவிட மொழிக்குடும்பத்தினர்களின் வார்த்தைகள் பற்றி சில தகவல்களைப் பார்த்துவிடலாம்.

 

திராவிட மொழிக் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆதிகாலம் தொட்டு புழங்குகிற ஒரு வார்த்தையானநீர்பிராகுயியில் ‘Dir’ எனப்படுகிறது, மற்றனைத்து மொழிகளிலும்நீர்அல்லதுநீரு’. 

ஹரப்பர்கள் மூலம் வடஇந்தியாவிலும் திராவிடத்தமிழ் வார்த்தைகள் கலந்திருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்உள்ளநீர்‌, மீன்‌” முதலிய சொற்களுக்கு முறையே வடமொழியில்‌ ‘நீர’, ‘மீனஎன்னும்சொற்கள்உள்ளனஇச்சொற்கள்எல்லா திராவிட மொழிகளிலும்காணப்படுகின்றன. இச்சொற்களுக்குப்பதிலாக வேறு சொற்கள்திராவிட மொழிகளில்இடையாது. இச்சொற்களின்றித்திராவிட மொழிகள்வேறு சொற்களைப்பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால்இச்சொற்களின்றி வேறு சொற்களை வடமொழி பயன்படுத்திக்கொள்ள முடியும்‌, ஆகையால்அவை திராவிடச்சொற்களே ஆகும்எனக்கால்டு வெல் குறிப்பிடுகிறார்‌.

 

முண்டா மொழிகளே; திராவிட மொழிகளின்மிகப்பழைய  அண்டை மொழிகளாகும்‌. தமிழிலிருந்து வந்தவை என ஐயுறத்தக்க சில சொற்கள்இவற்றில்உண்டு. “மயூர' என்ற சமஸ்கிருதச்சொல்‌ “மரக்‌” என்ற முண்டா மொழிச்சொல்லிலிருந்து வந்தது என்பர்‌. அனால்இச்சொல்பல திராவிடச்சொற்களுக்கு மிக  நெருக்கமாக உள்ளது எனக்கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய-ஆசிய வடிவத்தில்கூட 'ரக்‌” என்பது விகுதியாக உள்ளது; எனவேஎன்பது இங்கு வேர்ஆகிறது. திராவிட மொழிகளில்‌ 'மயில்‌”  அல்லதுமஞ்ஞைஎன்பதன்வேர்‌ ‘ior’ அல்லதுமைஎன்பதாகும்‌. இதன்பொருள்காரி எனப்படும்கருப்புஅல்லது 'நீலம்‌' என்பதாகும்‌. (காரி , நீலம் எனும் சொற்கள் விஷத்தையும் குறிக்கப் பயன்படுகின்றன). மயில்அல்லது மஞ்ஞை என்னும்சொற்கள்திராவிட மொழிகளிலிருந்து முண்டா மொழிக்குப்போயிருக்கலாம்‌. மயிலுக்கு ஹீப்ரு மொழியில்வழங்கும்‌ 'துஇஎன்பதைத்‌ 'தோகை' எனும் சொல்லிலிருந்தே பெறப்பட்டதாகும்.

 

வார்த்தைகள் சொற்கள் உருவாக்கம் புரிகிறது. தமிழுக்கேயான தனித்துவமான எழுத்துக்கள் எப்படித் தோன்றியிருக்கும்?”

அதை அறிய சில எளிய பயிற்சிகளைச் செய்து பார்ப்போம்.

நீங்கதான் செந்தில் என்று நினைத்துக்கொள்ளுங்கள். கவுண்டமணி வந்து உங்கள் திருமுகத்தைப் பார்த்துநரி ராஜா ஒரு ஊளை விடுஎன்கிறார்.

எங்கே சிறப்பானதொரு ஊளைச் சத்தத்தை எழுப்புங்கள் பார்ப்போம்.

…”

ஊளை விடும் பொழுது; மூச்சு; வாய் வழியாக வெளியேறுகிறது. நன்றாக வாயைக் குவித்து, குவிப்பிற்கு ஏற்றார் போல் நாக்கை இலேசாக உள் இழுத்து, காற்று கொஞ்சம் வேகமாக வெளி வருதால்என்கின்ற ஒலி ஏற்படுகிறது .

நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்று; பிற பேச்சு உறுப்புகளால் எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாமல்; ஃப்ரீயாக வெளிவரும்போது உயிர் சப்தங்கள் உருவாகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் வவ்வல் என்கிறோம்.

எப்படி மத்தளம் அடிக்கும் பொழுது; தோல் கருவியின் தோல் அதிர்ந்து ஒளியை எழுப்புகிறதோ; அதேபோல் உள்ளிருந்து நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்றானது; குரல்வளை நாணை அதிரச்செய்து, அந்த அதிர்வு உதடு குவிப்பதால் குறுக்கப்பட்டு ஊளை சத்தமாக் கேட்கிறது.

இதே போல் வெளியேறும் காற்றானது  குரல்வலை நாணை அதிரசெய்து ஓசையை நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது, வாயைத் திறந்து உள்ளிருந்து காற்றை வெளியே அனுப்பினால்சப்தம் வருகிறது. வாயை இளித்தபடி வெளியிட்டால்’ . இந்த , மற்றும் என்பன தான் முதலில் தோன்றின. இவை சுட்டுவதற்கு பயன் படும் எழுத்துக்கள். இவன் அவன் உவன் போன்றவை மொழி செழுமை பட்டபின்பு வந்தவை.

பின்பு கீழிடை இதழ்விரி முன்னுயிர்,‌ மேல்இதழ்விரிப்பின்னுயிர்,‌ மேல்கீழ்இதழ்விரி முன்னுயிர்,‌ நடுவிடை இதழ்விரி நடுஉயிர்,‌ மூக்கின்உயிர்கள் எனப்பலவாறாக அனைத்து உயிர் எழுத்துக்களும் உருவாகின.

இப்படிப் பிறக்கும் எனும் குறுகிய ஒலிகளை நீட்டி ஒலித்துப் பாருங்களேன்

 ‘ எனும் நெடில்   கிடைக்கும்.

இப்பொழுது நீங்கள் கத்திக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் அன்னை எட்டிப் பார்த்துஏன்டா இப்படி  உயிர் போற மாதிரி அடைச்சுக்கிட்டு கத்துறஎன அடிச்சுக் கேட்டிருக்க கூடும்.

இப்படிக் கத்தினால் தான் உயிர் எழுத்துக்கள் பிறக்கும் அம்மாஎன அன்னையிடம்கூறி விடுங்கள்.

அது கிடக்கட்டும், நீங்கள் ஒன்றைக் கவனித்தீற்களா?

உயிர் எழுத்துக்கள் 12 தானே? ஆனால் பத்து எழுத்துக்கள் தானே இந்தக்கணக்குப் படி வருகிறது?

“‘’ ‘ஒளஎன்று மேலும் இரு உயிரெழுத்துக்கள் உள்ளனவே?”

 அவற்றைப்பற்றி பிரிதொரு சமயம் பார்ப்போம்.

வெளிசெல்லும் காற்று; எவ்வாறு உயிர் ஒலியை உண்டாக்குகிறது என்று பார்த்தோம்.

இவ்வாறு குரல் நாணால் உருவாக்கப்படும் அதிர்வலைகள் காற்று ஊடகத்தால் கடத்தப் பட்டு நம் செவிப்பறையை அதிரச் செய்து, நாம் ஒலியை உணர்கிறோம்.

இதை அப்படியே விட்டுவிட்டு சுவாசிப்பதைப் பற்றி பார்ப்போம். சுவாசிப்பது என்பது இரு வேலை. ஒன்று காற்றை உள்ளிழுத்தல். அடுத்தது காற்றை வெளி விடுதல்.

சுவாசத்தைத் தான் நாம் பேசுவதற்கும் பயன்படுத்துகிறோம்.

உள்ளிழுக்கும் காற்றை உபயோகித்து சிந்தி மொழி போன்ற மொழிகளை பேசமுடியும். நாம் குறட்டை ஒலியைக்கூட உள்ளிழுக்கும் காற்றாலே உண்டு பன்னுகிறோம்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுமே வெளிவிடும் காற்றால் பேசப்படுகின்றன.

வெளிவிடும் காற்றை குரல்வளை,தொண்டை, குட்டி நாக்கு, பின் நாக்கு, நடுநாக்கு, நுனி நாக்கு, பக்க நாக்கு, பின் அன்னம், நடு அன்னம், முன் அன்னம், பல், உதடு ஆகியவற்றால் கட்டுப்படுத்தி தடைகள் ஏற்படுத்தி நாம் பேச்சுக்கு பயன் படும் ஒலிகளை எழுப்புகிறோம்.

நிற்க. இப்போது அடுத்த பயிற்சியை மேற்கொள்ளப் போகிறோம்.

இப்போது நன்றாக மூச்சை உள் இழுத்து பின் வெளியே விடுங்கள் பார்ப்போம்.

மூச்சை உள்ளிழுக்கும் பொழுது வயிறு பெரிதாகிறது மூச்சை வெளித்தள்ளும் பொழுது வயிறு உள் செல்கிறது.

இதை மூன்று முறை செய்து பாருங்கள்.

இப்போது மற்றுமொன்றை நீங்கள் கவனித்திருக்கலாம்

மூச்சை இழுப்பதற்கு உங்கள் முயற்சி தேவைப்படும்மூச்சை வெளி விடுவதற்கு உங்கள் முயற்சி தேவைப்படாது.

மூச்சானது உடலை விட்டு வெளியேறுவதற்கே முயற்சிக்கும். அதை நீங்கள் உங்கள் ஆற்றல் கொண்டு இழுத்துப் பிடிக்கிறீர்கள். அதை பிடிக்கும் வரை தான் உங்கள் உடலில் உயிர் ஓடிக் கொண்டிருக்கும்.

உயிர் எனப்படுவது ஒரு குழப்பமான சப்ஜெக்ட்.

 உயிர் எனப்படுவது இன்னது தான் என்று இதுவரை அறிவியலால் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மூளை தான் உயிரா, அல்லது மூச்சு தான் உயிரா, அல்லது இதயத்துடிப்பு தான் உயிரா? கண்களுக்கு புலப்படாத ஒரு தீபம் ஒன்று உயிராக இருக்கிறதா? மண்டையை போட்ட பிறகு அந்த தீபம் உடலை விட்டு வெளியேறுகிறதா?

 விடை யாருக்குமே தெரியாது.

 சில பேருக்கு விடை தெரியும் என்கின்றனர். எங்கே சொல்லு என்றால் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று குழப்பமான ஒரு பதிலை கூறுகின்றனர். உயிரைப் பற்றி இப்பொழுது பேசவேண்டாம். உயிர் எழுத்துக்களைப் பற்றி மட்டும் இப்போது பேசுவோம்.

மூச்சை வெளி விடுவதற்கு உங்கள் முயற்சி தேவைபடாது தான். ஆனாலும் சில சமயம் உங்கள் முயற்சியின் விளைவால் மூச்சை வெளியிட்டிருக்கலாம். உதாரணம்இருமல்’.

இப்போது உட்கார்ந்த இடத்தில் இருந்து மூன்று முறை பலம் கொண்டமட்டும் இருமிக் கொண்டே உங்கள் உடலை கவனியுங்கள்.

இருமும் பொழுது; வயிறானது சுருங்கி வயிற்றில் உள்ளுறுப்புக்கள் மேல் எழும்பி உதரவிதானத்தைஉந்தித்தள்ளி, நுரையீரலில் இருந்து காற்றை வெளித்தள்ள உதவுகின்றன. வயிற்றைஉந்தித்தள்ளும் பொழுது உங்களை அறியாமல் மோசன் போய் விடக்கூடாது என்று, மோஷன் போகும் பின் வாசல்டப்என்று அடைத்துக் கொள்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதே போல் அடைத்துக் கொண்டு கத்தியதால் தான் உங்கள் அம்மாஏண்டா அடைச்சிக்கிட்டு கத்துறஎன்று காது மேலயே ஒன்று வைத்து அடிச்சுக் கேட்டிருக்கிறார்கள்.

எப்படி இருமல் என்பது வலுக்கட்டாய வெளி சுவாசமோ; அதுபோலத் தான் நீங்கள் உங்கள் விருப்பத்தின் பேரில் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் மூச்சை வெளியிட்டு குரல் நாண்களை அசைத்து வாயை குவித்தோ விரித்தோ உயிர் எழுத்துக்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் நாக்கு, உதடு, அன்னம், வாய் மற்றும் பற்கள் உதவியால் ஓசைக்கு தடை போட்டு மெய்யெழுத்துக்களின் ஓசைகளை உருவாக்குகிறீர்கள் (ஒலிப்பிலா மெய்யொலிகள்‌- க், ச்,ட்,த்,ப்,ர், ஒலிப்புடை மெய்யொலிகள்‌ - ங் ஞ் ண் ந் ம் ன்)

இப்ப அப்படியே என்ன பண்றீங்கன்னாஎச்சிலை ஒரு மிடறு முழுங்கிக் கொண்டே, எச்சில் தொண்டையில் பயணம் செய்யும் போது, மூச்சினை வெளியே விட முயற்சி செய்யுங்கள் பார்ப்போம்.

என்ன மூச்சு விட முடியவில்லையா?

காரணம்மிடறுஎன்னும் தொண்டைப் பகுதியானது ஒரு பொதுப் பாதை. அங்கிருந்து இரு பாதைகள் பிரிகின்றன. அதுவழியாக பயணம் செய்யும் உணவும் காற்றும் மந்தை ஆடுகள் போல இருவழிகளில் பிரிந்து செல்கின்றன.   சாப்பாடானது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குச் செல்லும். மூச்சானது மூச்சு குழாய்க்குச் செல்லும். சாப்பாடு தவறுதலாக மூச்சுக் குழாய்க்கு சென்றால் புரை ஏறிவிடும். அதைத் தவிர்க்கவே சாப்பிடும் வழி திறந்திருக்கும் பொழுது, மூச்சின் வழி அடைக்கப்பட்டு விடும். அதனால் தான் உங்களால் எச்சில் முழுங்கும் போது, மூச்சு விட முடியவில்லை. ஏனெனில் இந்த மிடறு என்பது மூச்சு உணவு இரண்டிற்கும் பொதுப் பாதை.

இப்ப பின்வரும் பாடலை பாருங்களேன்

    உந்தி முதலா முந்து வளி தோன்றி,

    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,

    பல்லும் இதழும் நாவும் மூக்கும்

    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

    உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,

    எல்லா எழுத்தும் சொல்லுங் காலை

    பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

    திறப்படத் தெரியும் காட்சி யான

             (தொல்.எழுத்து.83)

இப்படித்தான் உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர்.

உடற்கூறியல் அடிப்படையில் எழுத்துக்கள் பிறப்பதை எவ்வாறு இவர் அனுமானித்திருப்பார்?

உடற்கூறு எனும் அனாட்டமி படித்த யாராவது சொல்லியிருக்கக் கூடும்.“

அந்தகாலத்தில் யார் இவ்வாறு பிணத்தை வைத்து ஆய்வு நடத்தியிருப்பார்கள்.”

அதை அப்படியே விட்டுத்தள்ளுங்கள்இப்பொழுது நான் சொல்லும் வாக்கியத்தை உங்கள் மனைவி காதில் விழும்படி கத்திச் சொல்லுங்கள்.

இன்னைக்கு சாப்பாடு நல்லா இருக்கேயாரு சமைச்சது? எங்க அம்மாவா?”

சொல்லிவிட்டீர்களா... நல்லதுபின்வரும் பக்திகளை சிறிது நேரம் கழித்துக் கூட படித்துக் கொள்ளலாம். முதலில் உயிர் பிழைக்க ஓட ஆரம்பிங்கள்.  

தலையை வலது பக்கம் சாயுங்கள்இப்பொழுது கரண்டியின் அடியிலிருந்து தப்பித்து விட்டீர்கள்.

தலையைக் கீழே குனியுங்களவிளக்கமாற்றின் அடியிலிருந்து தப்பி விட்டீர்கள்.

வெற்றி! வீரன் தப்பித்து விட்டான்!! வீரமே ஜெயம்!!!

உயிர் பிழைத்து மீண்டும் இந்த பத்தியை படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது உயிர் கெட்டி.

இப்போது உயிர் பிழைக்க எப்படி ஓடினீர்கள் என்று கூற முடியுமா?

மூச்சிரைக்க வாயைத் திறந்த படி நாக்குத் தள்ள ஓடினேன்

நன்று. அப்படித்தான் ஓட வேண்டும். அப்படி ஓடினால் தான், ஓட்டத்தால் அதிகரித்த உங்கள் உடல் சூடு வெளியேறும். இதேபோல் நன்கு வாயைத்திறந்து, ஆர்ப்பரித்துப் பேசுவதன் மூலமும் உடல்சூடு வெளியேறும்.

அடப்பாவிஉன்னால் அம்மாவிடம் அடி வாங்கியாயிற்று இல்லாளிடம் இடி வாங்கியாயிற்று ... இனி பாட்டி மட்டும்தான் பாக்கி .”

இப்ப என்ன பண்றீங்கன்னா உங்க பாட்டிக்கு போன் போடுறீங்க. போன் போட்டுட்டு கீழே வரும் வாக்கியத்தை வேகமாக சொல்லுங்கள்

India is my country and all Indians are my brothers and sisters.

I love my country and I am proud of its rich and varied heritage.

I shall always strive to be worthy of it.

I shall give my parents, teachers and all elders respect and treat everyone with courtesy.

To my country and my people, I pledge my devotion. In their well-being and prosperity alone lies my happiness.

 உங்கள் பாட்டி; என்னடா தஸ்சு புஸ்சுன்னு இங்கிலீஷ்ல பேசுற, என்று கேட்டிருப்பார்களே.

நல்லது பாட்டியிடமும் பாட்டு வாங்கியாயிற்று.

இப்பொழுது பாட்டி கூறிய வாக்கியத்தை உற்று நோக்குவோம். அது ஏன் ஆங்கில மொழி, வடமொழிச் சொற்கள் அனைத்திலும் வாயை அகலமாக்காத இஸ் ஷ் என்ற ஒலிகள் நிறைய உள்ளது. நமது மொழியோ வாயை அகலமாக வைத்து பேசப்படுகிறது.

ஸ்எனும் எழுத்தானது நாக்கை நீட்டியவாறு, பற்களால் தடை போட்டு, நாகம் போல் எழுப்பப்படும் ஒலி.

நாக்கை மடக்கி, மேல் அன்னத்தை தொட்டு, இதேஸ்சை கூறுங்கள்.

கஷ்டமா இருக்கா ?

அப்படியே நாக்கை எடுக்காமல் ஒலியை  உச்சரியுங்கள், உச்சரித்தவாறே மெதுவாக நாக்கை விடுவியுங்கள்

ழகரம்பிறந்து விட்டது!!!



இப்போ என்ன பண்றிங்கன்னாமேலன்னத்தை நாவால் வருடிக் கொண்டே புருவ மத்தியையோ மூளையையோ கவனியுங்கள். இப்படி செய்யும் போது சிலருக்கு ஏதேனும் குறுகுறுப்பு உணர்வு தோன்றலாம்.

அது என்ன குறுகுறுப்பு?

காரணம்ழகரம்உச்சரிக்கப்படும் போது பினியல் சுரப்பி தூண்டப்படுகிறது என்கிறார்கள். யாரேனும் ஆய்வு செய்து இதன் உண்மைத்தன்மையை கண்டறியலாம். இதில் உண்மை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆயினும்ழகரம்என்பது சிறப்பு வாய்ந்த எழுத்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ழகரம்தமிழ், மலையாளம், மற்றும் மண்டரின் இன மொழிகளில் உச்சரிக்கப் படுகிறது.

மண்டரின் இன மொழிகளில் வரும்வில் , தமிழில் உள்ளது போல ழகர உச்சரிப்பு இல்லை. வேறெந்த மொழியிலும் தமிழில் உள்ளது போன்ற ழகர உச்சரிப்பு இல்லை, அதனாலேயே அதை சிறப்பு ழகரம் என அழைக்கிறோம்.

இது இவ்வாறே இருக்க; நாம் ஆங்கிலமொழி - வடமொழிச் சொற்கள் அனைத்திலும்; வாயை அகலமாக்காதஇஸ்’ ‘ஷ்என்ற ஒலிகள் நிறைய உள்ளது ஏன்? எனும் கேள்விக்கு வருவோம்.

நாம் இருப்பது நிலநடுக்கோட்டுக்கு கொஞ்சம் தள்ளி. அதுவும் நம் தமிழ் பிறந்தது குறிஞ்சி நிலம். அவர்கள் மொழி பிறந்தது நிலநடுக்கோட்டில் இருந்து வெகு அப்பால். அது ஒரு குளிர் பிரதேசம்.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

sonority எனப்படும் ஆர்ப்பொலி அல்லது முழங்கொலி; நிலத்தின் பாலும், நிலத்தின் காலநிலையினாலும் வேறுபடும்.

காலநிலை மற்றும் தட்பவெப்ப சூழல் மொழியின் வளர்ச்சியை பாதிக்கின்றனஒலிகள் எவ்வாறு காற்றில் பயணிக்கின்றன, எவ்வாறு கேட்பவரால் உணரப்படுகின்றன என்பதைப் பொறுத்தும், மொழியின் பிறப்பும் வளர்ச்சியும் மாற்றமடைகின்றன. வெப்ப மண்டல நாடுகளின் மொழிகள் அதிக முழங்கொலியுடன் இருக்கும், இதனால் அவை புலப்படுத்தப்படுவதற்கு எளிதாக இருக்கும். குளிரான பகுதிகளின், மொழிகள் மெல்லியதாக இருக்கும்.

மேலும் காற்றின் ஈரப்பதத்திற்கும் எழுத்துக்கள் வெரைட்டியில் பங்கு உள்ளது. ஹிந்தியில்காவிலேயே நாலு வெரைட்டி உண்டு. காரணம் ஈரப்பதம் இல்லாத நிலம் வெவ்வேறு ஒலிகளை ஒலிப்பதற்கு ஏதுவாக உள்ளது. அவர்களிடம் கசடதப வில் வெவ்வேறு ஒலிகள் கொண்ட எழுத்துக்கள் உள்ளன.

கொரியர்கள் பாஷையை கிண்டல் பண்ண ,”ஆப்பாஆஆ... தெர்யாம பண்ணிட்டான்ன்…” என்று படத்தில் பகடி செய்வதை பார்த்திருப்பீர்கள்.

கொரியர்களை நாம் பகடி செய்வது இருக்கட்டும். நாமும் நம்மை அறியாமலேயே இதுபோலவே அதிகம் '' விகுதியை பயன்படுத்துகிறோம். அதுவும் பகடிக்கான பேசுபொருளே.

உதாரணம்:  Did he come என்பதற்கு பதில் ஹி கேம் ? என்று கேட்பது.

is it up ? என்பதற்கு பதில் இஸ் இட் அப்பா? என்று அப்பா அம்மாவை எல்லாம் துணைக்கு அழைக்கிறோம். இப்படி வாயை அகலமாக்கிப் பேசுவதன் மூலம்; நாம் நமது உடலின் அழலைக் குறைக்க முடியும். வெப்பமண்டலத்தில் வாழும் நமக்கு இது அவசியமே.

தெலுங்கு பாஷையை ஓட்டும்போதுலூவிகுதியைச் சேர்ப்பது, மலேசியத்தமிழில்லாவிகுதியைச் சேர்ப்பது, திருனெல்வேலியில்லேவிகுதியை சேர்ப்பது என ஒவ்வொருவரும் மொழியை தாம் இருக்கும் நிலப்பகுதிக்கு ஏற்ப வளைப்பதை நோக்க முடிகிறது. இது காலப் போக்கில் dialect  ஆக மாறுகிறது.

தெலுங்கு மொழி சுந்தரம் மிக்கது. காரணம் அது சொற்களை மெய்யெழுத்துக்கள் கொண்டு முடிக்காமல் உயிர் எழுத்துக்கள் கொண்டு முடிப்பதால் பாடுவதற்கும் கவிதை இயற்றவும் ஏற்ற மொழியாக உள்ளது.

உதாரணம் :

நான் - நேனு, துக்கம் - துக்கமு, கோபமு, பயம் - பயமு,பச்சை - பச்ச, ஆட்டம் - ஆட்ட, தலை - தல.

எனவே அம்மொழியை லா லூஎன்று ராகத்திற்கு என்றவாறு நீட்டிப் பாடமுடிகிறது.

உதாரணத்திற்கு ஒரு பாடலை எடுத்துக் கொள்வோம்.

 ‘அதான்டா இதான்டா, அருணாச்சலம் நாந்தான்டா

எங்க, பாடுங்க பார்ப்போம்?

அதான்டா இதான்டா, அருணாச்சலம் நாந்தான்டா

 இந்தப்பாடலைஅதான் இதான் அருணாச்சலம் நான் தான்என்றால் இழுத்துப் பாடுவதற்கு ராகம் தட்டாது. அதனால் இறுதியில்டாசேர்த்துக் கொண்டனர்.

 இதே தெலுங்கில் பாடும் பொழுதுஅவனு இவனு, அருணாச்சலமு நேனுஎன்று ராகத்தோடு இழுத்துப் பாடுவது எளிதாகிறது.

ஆங்கிலம் Un -phonetic பாஷை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பெரும்பாலான மொழிகள் எப்படி எழுதப்படுகின்றனவோ அப்படியே பேசப்படுகின்றன. ஆங்கிலம் இதற்கு விதி விலக்கு. உதாரணம் தமிழில் -ம்-மா அம்மா என்று வருகிறது. ஆங்கிலத்தில் மம்மியை MAMMI என்று எழுதாமல் MUMMY (மும்மை) என்று எழுதுகிறார்கள்.

பிலியாசூரி, டயரஹோயியா, பினியுமோனியாஇவை எல்லாம் என்ன என கண்டுபிடியுங்கள்?

Pleasure, diarrhoea, pneumonia என்பதை நமது பாணியில் உச்சரித்தால் வரும் ஒலிகள்.

இதுபோலல்லாமல் phonetic பாஷையான நம்பாஷையை செதுக்கியதில் கருப்பொருளான சூழலுக்கும் பங்கு இருக்கிறது. செடிவகைகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் ஒலியின் பரவலை மாற்றி அமைக்கின்றன. அடர்ந்த, வெப்பமான பகுதிகள் எளிய சொற்களையும் ஓசைமிக்க மொழிகளையும் வளர்த்தெடுக்கின்றன, சமவெளிகள்  அதிக மெய்யெழுத்துக்களுடன் கூடிய மொழிகளை வளர்க்க ஏதுவாகிறதுநமது அருந்தமிழ்க்காடு, அடர்வனம் மற்றும் சமவெளிகளை ஒருங்கே கொண்டிருந்தது. அதனால் இங்கு பிறந்த நமது மொழி பன்முகத்தன்மை கொண்ட உயிர் மற்றும் மெய்யழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிகோலியது.

ஓநாயின்ஊளைபல தூரம் தள்ளிக் கேட்கும். ஆனால் பாம்பின்ஸ்ஒலி பக்கத்தில் இருந்தால் மட்டுமே கேட்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஐரோப்பியர்கள்; ஆப்பிரிக்க வனத்துக்குள் நுழையும் பொழுதே; பல கிலோமீட்டருக்கு அப்பால் தள்ளி இருந்த ஆப்பிரிக்கர்கள் அனைவருக்கும்; இவர்கள் வருகையையும் வருகைக்காண காரணத்தையும் ஏற்கனவே அறிந்திருந்ததைக் கண்டு ஐரோப்பியர்கள் ஆச்சரியப்பட்டனர்.

வாய் மட்டும்தான் தொடர்பு கொள்ளும் சாதனமா?

 இல்லைசுவர் கோழிகள் இறக்கையை அதிரச்செய்து தொடர்பு கொள்கின்றனவே.

வாய் மட்டுமே பேசும் உறுப்பு அல்ல. அது போல் காது கேட்கும் உறுப்பு மட்டும் அல்ல. அதை நாம் எப்படிப் பயன் படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடுகள் அமைகின்றன. வாவுப்பறவைகளான வவ்வால்கள் வாயால் ஒலி எழுப்பி, காதால் பார்க்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வினாடிக்கு இருபதாயிரம் தடவைக்கு மேல் அதிரும் அதிர்வுகளை நம் காது வடிகட்டி விடுகிறது. அதே போல வினாடிக்கு இருபது முறைக்கும் கீழ் அதிரும் அதிர்வுகளையும்!

வௌவால்கள் ஏதோ மெளனமாக பறப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் அதீத மீயொலிகளை எழுப்பியவண்ணம் உள்ளன. அவற்றை நாம் கடந்து சென்றால் 'சரியான செவிடன் போறான் பாரு, ரெண்டு ஸ்பீக்கரும் டோட்டலா அவுட்டு போல இருக்கு ' என்று நினைத்தாலும் நினைக்கும்.

பறவைகளுக்குசிரிங்க்ஸ்எனும் தொண்டை உள்ளது. நாயால் ஊளை விட முடியும். சில உயிரெழுத்துக்களைக் கூட உருவாக்கிவிட முடியும். ஆனால் நாவாலோ உதடுகளாலோ பற்களாலோ ஓசைக்குத் தடை ஏற்படுத்தி மெய்யெழுத்துக்களை உருவாக்கிவிடுதல் அவற்றிற்கு எளிதல்ல. சிரிங்கஸ் உதவியால் கிளி, யாழ் பறவை போன்றவற்றால் அவற்றைச் செய்ய இயலும்.

செம்மார்பு குக்குருவான் எனும் ஒரு பறவை தமிழகத்தில் இருக்கிறது. அது உயர்ந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டு டங்கு டங்கு என்று சம்மட்டியால் இரும்பை அடிப்பது போல் ஒலி எழுப்பும். அந்த டங்கு டங்கு ஒளியிலேயே 200க்கும் மேற்பட்ட நோட்ஸ்களை அது வாசிக்கிறது. இப்படியாக தொலைவில்  இருக்கும் பறவைகளோடு குக்குருவான் தொடர்பு கொள்கின்றது.

ஆப்பிரிக்க பழங்குடியினர் இப்படித்தான் குக்குருவான்கள் போல டங்கு டங்கு என்று பறையை அதிரச் செய்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பறை என்னும் தோல் கருவிகள் ஒவ்வொரு மக்களின் பண்பாட்டுக் கூறு. தமிழர்களும் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு பறை இசையை வைத்திருந்தனர். பறை என்பது அவர்கள் சூழியலில் அங்கம் வகித்த ஒரு கருப்பொருள். அவர்களுக்கு கற்காலத்திலிருந்தே பறையானது தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாக இருந்திருக்கிறது. பறைகளில் பல வகைகள் உண்டு. பெரிய சைஸில் இருந்து, கையில் சிக்கெனப் பிடிக்கும் வண்ணம் இடை சுருங்கிய சிறிய பறை வரை உண்டு.

வேட்டுவக் குடிகள் சங்க இலக்கியங்களில் துடியர், எயினர், வேட்டுவர், கானவர் என சுட்டப்படுகின்றனர். இவர்களே தொன்மைத்தமிழர்கள்.

மாங்குடி மருதனார், “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லைஎன்கிறார்

துடியன்பாணன்பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை என்பது இதன் பொருள். ஆதியில் இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே.

இதில் துடியர் என்போர் துடி கொட்டி வேட்டையாடுபவர்.

இந்த நான்கு குலமும் தங்களுக்குள் பறையின் மூலம் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றனர். இதன் காரணமாகவே பேசுதல் என்பதைபறைதல்என்றழைத்தனர். மலையாலத்தில் இன்னும் பறைதல் எனும் சொல் பேசுதலையே குறிக்கின்றதையும் நாம் அறிவோம்.

இதில் ஒரு வித்தியாசமான பறை ஒன்று உள்ளது. அது துடியர்களின் துடிப்பறை. வடக்கே இதை தமருகப்பறை என்கின்றனர்.

இடை சுருங்கு பறை; அல்லது தமருகப் பறை எனும்  துடி பற்றி, பல சங்க கால  பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அதன் துடிப்பான  இசையில் ஆடாத கால்களே இல்லை போலும். அதானால் தான்துடிஎன்றனர் போலும்இது ஒரு இந்திய பாரம்பரிய தாள இசைக் கருவி ஆகும். இதுதமிழ் நாட்டில் தோன்றியதாக கருதப்படுகிறது. இது, முறையே தமிழ்நாடு, கேரளா மற்றும்  வடக்கு மற்றும் கிழக்கு இலங்கைப் பகுதிகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறதுஇதன் ஒரு பக்கத்தில் ஒலி எழுப்பப்படுகிறது. மற்றும் தாளம் இசைக்காத பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உலோக கம்பி வலைகள் கட்டப்படுகின்றன. இதனால் இதனை வாசிக்கும் நபரால் அதிக அதிர்வுகளையும் மெல்லிதான அதிர்வுகளையும் உருவாக்க முடிகிறது. இந்தப்பறை இசை; சாவுக்களை உள்ளவனைக் கூட  பித்து பிடித்தவன் போல் கூத்தாட வைக்கும்.

வேட்டையில் துடியின் பங்கு இருந்திருக்கிறது. துடியர்கள் துடியையும் வேல், சூலம் போன்ற ஆய்தங்களையும் கொண்டிருந்திருக்கின்றனர். அந்த ஆய்தங்களில் தமது துடிப்பறையை கட்டித்தொங்க விட்டிருந்தனர்.

துடியன் கையது வேலேபுறம் 285

துடி யெறியும் புலைய

எறிகோல் கொள்ளும் இழிசின்புறம் 287

துடி போன்ற சிறிய பறைகளின் துணைக் கொண்டும் மனிதர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அதன் நீட்சி தான் மொழி எனக் கருதவும் இடமிருக்கிறது.

வேட்டுவ குடிக்கள் மேய்ச்சல் சமூகமாக சமுதாய வளர்ச்சியின் அடுத்த அடியினை எடுத்து  வைக்க இக்குறிஞ்சி வனம் பங்காற்றியதை, குரும்பர்கள் கதைகளின் மூலம் நாம் அறிய முடிகிறது.

இதுவரை பறை மூலம் பேசியவர்கள், அகத்தில் இருக்கும் எண்ணத்தை நா மூலம் பேச ஆரம்பித்ததால் நாகர்கள் எனப்பட்டனர் எனும் ஒரு கருதுகோளும் உள்ளது.

(நா அகர்... அகத்தில் இருப்பதை நா மூலம் பேசியவர்கள் )

இதன் பின்னர் மக்கள் திணை வழியும்  தொழில் வழியும் பல்வேறு குடிகளாக உருவாகின்றனர்.

ஆங்கிலம் Un -phonetic பாஷை எனப்பார்த்தோம். சைனீஸ் பாஷை NOT EVEN UNPHONETIC ...BEYOND PHONETIC ! 'எனக்குத் தாகமாக இருக்கிறது' என்பதை --க்-கு-த் தா--மா- என்று எழுதாமல் ஒரு மனிதனை வரைந்து பக்கத்தில் ஒரு காலி தண்ணீர் குடுவையை வரைவது! 'அவன் தண்ணீர் குடித்தான்' என்பதை --ன் -ண்-ணீ-ர் என்று எழுதாமல் அவனை வரைந்து தண்ணீர் குடுவையை விட்டு அவன் நகர்ந்து செல்வது போல. இவை சித்திர எழுத்துக்கள், உதாரணத்திற்கு மாடு மீன் போன்றவை எப்படி சித்திர எழுத்தாகின என்பதைப் பாருங்கள்

ஹரப்ப எழுத்துக்கள் கூட சித்திர எழுத்துக்கள் தான். பின்வரும் படத்தில் உள்ளது போல பல சித்திரங்களால் ஆன ஒரு வரியை அவர்கள் எழுதி வைத்துள்ளனர். அவை வாசிக்கத்தக்க ஒரு வாக்கியமா,. அல்லது ஒரு நிகழ்வைப் பற்றிய விவரிப்பா என்பது தெரியவில்லை

இந்த படத்தில் ஜாடி என மொழிபெயர்க்கப்பட்ட சொல்லை பாருங்களேன் அது பல சொற்றொடரின் முடிவில் வருகிறது


அவர்கள் இடத்திலிருந்து வலது நோக்கி எழுதினாரா அல்லது வலதிலிருந்து இடது நோக்கி எழுதினாரா என்பது நமக்குத் தெரியாதல்லவா?

ஐராவதம் மகாதேவன் அவர்கள் இது சொற்றொடரின் ஆரம்பம் என்கிறார். சிலர் இதிலிருக்கும் முதல் படத்தை லிங்கம் என்றும், இரண்டாம் படத்தை ஆவுடை லிங்கம் என்றும் மொழிபெயர்க்கின்றனர்.

 வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்திருந்த தமிழ் சமூகத்திற்கு கரிக்கையூரில் காணப்பட்ட ஓவியத்திற்கு இணங்க மாடுமேய்க்க எடுத்த முன்னெடுப்புகள் அவர்களை பெரும் குழுக்களாய் செயல்பட தூண்டுதலாய் இருந்தது. பெரும் குழுக்களை இவ்வாறு கட்டமைக்கப் பட்ட மொழி இணைத்தது. மொழியை காற்றில் கரையவிடாமல் இருக்க சித்திரங்களின் எளிய வடிமான கிறுக்கல்களால் சொற்களை பாறைகளில் வடிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு தமிழ், எழுத்து வடிவம் பெறத்துவங்கியது.

கோபெக்லி டெப் (Göbekli Tepe) துருக்கியில் உள்ள மிகப்பழமையான பெருங்கற்கால நினைவுச்சின்னங்களை கொண்ட தொல்லியல் பகுதி. 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இப்பண்பாட்டில் உள்ள சில குறியீடுகள் திருச்சி - புதுக்கோட்டை எல்லையில் ஆட்டுக்காரன் பட்டியில் பாறைஓவியங்களிலும் காணக் கிடைக்கின்றன. ஹரப்பாவிலும் இக் குறியீடுகள் உள்ளன.

இது போன்ற எழுத்துக்களை பானைகளில் கீறி வைத்தனர் நம் முன்னோர்கள். இவ்வெழுத்துக்கள் பானைகளில் கீறுவதற்கு எளிதாக இருந்திருக்கிறது ஆனால் ஓலையை கிழிக்காமல் எழுத நேர் கீரல்களை விட, வட்டெழுத்துக்களே  எளிதாக இருந்ததால், நமது எழுத்துக்கள் வட்ட வடிவு பெற ஆரம்பித்தன.

வைதீக மதம் நாகரியில் எழுதியது.

 சமணம் மற்றும் பவுத்தம் பிராகிருதம் மற்றும் பாலி மொழியில் இயங்கியவை. இவ்விரண்டு சமயங்களும் பிராமி எழுத்து முறையை  பின்பற்றினர்.

  ஆசீவக மதம் என்ன எழுத்து முறையை பின்பற்றினார்கள்  என்பது கேள்விக்குறி ?

கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்த அசோகரின் பிராகிருத மொழியில் உள்ள கல்வெட்டு பிராமி கல்வெட்டுகளானக் காணக்கிடைக்கின்றன.

 மதுரை மாங்குளத்தில் கிடைத்த சமணர்கள் கல்வெட்டு இதை ஒத்துள்ளது. இவை தமிழ் பிராமி என்றழைக்கப் பட்டுள்ளது.

 அசோகரின் பிராமி எழுத்துக்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஆனால் புலிமான் கோம்பையில் கிடைத்தவை கி.மு. நாலாம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதிலும்   கீழடியில் கிடைத்தவை கி.மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை தமிழி கிருக்கல் என்றழைக்கப்படுகிறது.

தமிழி கிருக்கல் குறியீடுகள் தமிழி எனப்படுகின்றன. இவற்றின் காலம் 6- 8 ஆம் நூற்றாண்டு

(பாறைகளிலும் பானைகளிலும் இந்தக்கீறல்கள் காணப்படுகின்றனஎளியவர்களும் எழுத்தறிவிக்கப்பட்டிருந்திருக்கின்றனர் என்பது பானைக் கீறல்களின் வழி நமக்கு புலப்படுகிறது.)

அதற்கு முன்னர் தமிழர்கள் என்ன எழுதி இருப்பார்கள் என்கிற கேள்விக்கு விடை எகிப்திலும் இந்தோனேசியாவிலும் உள்ளது. பரோ மன்னர்கள் இருக்கும் காலத்திலேயே முசிறி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியான மிளகு; பிரமிட் கல்லறைக்குள் இருந்திருக்கிறது. அதைப்பற்றிய ஆய்வில் தமிழகப் பானைகளும் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன அவற்றில் தமிழ் எழுத்துக்கள் இருந்திருக்கின்றன முசிறி, பெரியார் நதி வெள்ளப்பெருக்கில் அழிந்திருக்கிறது.

இது போன்ற தரவுகள் எவ்வாறு நமது மொழி, ஒலி மற்றும் எழுத்து வடிவம் பெற்றது எனும் தகவல்களை நமக்குத் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பிறந்த மொழியின் மூலம், குழுக்களாய் இருந்தவர்கள் பெரும் மேய்ச்சல் சமூகமாய் மாறத்தொடங்கினர். அச்சமூகத்தில் இருந்த வலியோர் அந்த மக்களுக்குத் தலைவரானார். தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் தன் மக்களையும் மாக்களையும் காத்தல் பொருட்டு தமது இன்னுயிரையும் தரத்தயங்கவில்லை.

தங்களைக் காக்கும் பொருட்டு இன்னுயிர் ஈந்தவர்களை மாவீரர் தினத்தன்று ஈழம் நினைவு கூறுகிறது அல்லவா? அதேபோல் அந்தத் தீரம் கொண்ட வீரர்களை நமது முன்னோர்கள் நடுகற்கள் செய்து வழிபட ஆரம்பித்தனர்.

தொடங்கியது குலதெய்வ வழிபாட்டு முறை.

படத்தில் புலியைக் குத்திச் சாய்க்கும் வீரனின் வழிபாட்டுக்குறிய நடுகல்.

ஒருத்தரு ஒரு புலியை சமாளிக்கலாம், இரண்டு புலிகளை சமாளிக்க முடியுமா?

 

இரண்டு புலியை சமாளிக்கும் ஒருவரது சின்னம் ஹரப்பாவில் காணப்பட்டிருக்கிறது

இது சற்று அவருக்கு காவியத்தன்மை கொடுப்பதற்காகவும், ஒரு வீரனை உயர்வு நவிற்சி கொள்வதற்காகவும் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.

 

அக்காடிய மொழியின் உலகின் பழமையான கீழ்காமேஷ் கதையிலும் அவர் இரண்டு மிருகங்களை அடக்குகிறார்.


அங்கே புலி இருக்கவில்லை, சிங்கங்கள் தான் இருந்திருக்கின்றன. இது அக்காடிய மொழியின் கதையில் வரும் விவரிப்பை விளக்கும் உருவம்.

 

இப்ப அப்படியே கரூருக்கும் வருவோம் வாங்க. இந்த நடு கல்லைப் பாருங்களேன்

 

கரூருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்


எப்படி இரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு வீரர் காவியத்தலைவனாகி கடைசியில் கடவுளாக்கப்படுகிறார் என்பதற்கான உதாரணமாக இந்த இரு புலிகளை அடக்கும் வீரனைக் கொண்டு நாம் அறிய முடிகிறது. இது பல நாகரிகங்களிலும் காணப்படுவது வியப்புக்குறியது மற்றும் ஆய்வுக்குறியது.

கற்காலத்தின் முடிவில்  பெருங்கல்ஈமச்சின்னங்களைப்பயன்படுத்திய மக்கள்வாழ்ந்த காலம் தொடற்சியாக வருகிறது. தமிழ்இலக்கியங்கள்இறந்துபட்டோரைக்குறிக்கும்போதுகல்லாயினனேஎனச்சுட்டுகின்றனநடுகல் பழக்கமும் இதன் தொடர்ச்சிதான் எனக்கருத இடமுண்டு. பெருங்கல்ஈமக் கல்லறைகளில்கல்திட்டை, கல்பதுக்கை, என்று இரு பிரிவுகள்உள்ளன. கல்திட்டை என்று சொல்லப்படும்கல்லறை பெரும்பாலும்நிலத்திற்கு அதாவது தரை மட்டத்திற்கு மேல்அமைக்கப்பட்டது.

படம்: தமிழகத்து பெருங்கல் ஈமக் கல்லறைகள். (நன்றி – Aran kumar)



பிற நாடுகளிலும்இவ்வகையான ஈமச்சின்னங்கள்காணப்படுகின்றன. இவைகளை அந்த நாடுகளிலுள்ள தொல்லியல்அறிஞர்கள்யாவருமே  ‘மெகாலிதிக்மான்யுமென்ட்ஸ்‌’ அதாவது  ‘பெருங்கல்சின்னங்கள்‌’  என்று கடந்த இரண்டு நாற்றுண்டுக்கும்மேலாக அழைத்துவருகிறார்கள்‌. தமிழ்நாட்டில்காணப்படும்பெருங்கல்சின்னங்களுக்கும்பிற நாடுகளில்காணப்படும்பெருங்கல்சின்னங்களுக்கும்பல ஒற்றுமைகள்உண்டு. அக்கால மக்கள்இரும்பை அதிகமாகப்பயன்படுத்தியதன்காரணமாக அக்காலம்இரும்புக்காலம்எனவும்பெயர்பெறுகிறது.

இதன் பின்னே ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

தாழிகள் மற்றும் பானைகள் முதலியவற்றைச் செய்வது எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்?”

குச்சிகளால் முடையப்பட்ட கூடைகளை குறிஞ்சிவாழ் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

 கூடைகளால் பழங்களை சேகரிக்கலாம்நீரை சேகரிக்க முடியுமா ?

ஆனால் கூடைகளில் நீரை சேகரித்தனர் நம் பழங்குடியினர்கள்.

எப்படி?”

கூடை மேல் சேற்றை பூசி, பின்பு காயவிட்டுவிட்டால்?

இப்படித்தான் பானைகளின் பிறப்பு ஆரம்பித்திருக்க வேண்டும்.

சக்கரத்தின் உதவியுடன் பானைகள் எளிதில் வனையப் பட்ட போது, இருவாழ்வித் தவளை போல் இதுவரை நீருக்கு அருகே வாழ்ந்திருந்த மக்களுக்கு, நீரை தங்களுடன் எடுத்துச் செல்ல முடிந்தது.

மண் பானைகள் உடையக்கூடியவை. ஆனால் உலோகங்கள் உடையாதவை. கற்காலத்திற்கடுத்து செம்பு, இரும்பு, வெண்கலம் எனத் தேவையின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்கள் மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.

பின்வரும் பாடலைக் கவனியுங்களேன்

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்

நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்

எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

கலம் என்பது பானையைக்குறிக்கும், கப்பலையும் குறிக்கும், உடலையும் குறிக்கும். இது போல தமிழ் மொழியில் பெயர்ச்சொல்லைக் கொண்டு மறைபொருளாக சில செய்திகளைக்குறிக்கவும் பயன் படுத்தியிருக்கின்றனர்.

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்

இதில் மண் கலத்திற்கு அடுத்தது வெண்கலம் வந்துவிட்டது. ஏன் காப்பர் பாத்திரங்கள் வரவில்லை?

 உலகின் அனைத்து நாகரிகங்களும் செம்புக்காலத்தை கடந்தே வெண்கல காலத்திற்கு சென்றனர். ஆனால் தென்னிந்தியர்கள் செப்புக் காலம் என்ற ஒன்றை பைபாஸ் செய்துவிட்டது போல் தோன்றுகிறது.

ஆதிச்சநல்லூரில் தாழிகளில்ஏராளமான ஈட்டிகளும்வேல்களும்அம்புகளும் எடுக்கப்பட்டன. அவ்வளவு ஏன்; அங்கே ஒரு திரிசூலம் கூட கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. நர்மதை ஆற்றுப்படுகைக்கு அருகில் இருக்கும் இந்தியாவின் பழமையான குகை ஓவிய இடங்களில் ஒன்று பீம்பெட்கா பாறை ஓவியங்கள். அங்கேயும் இது போன்ற சூல ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. கற்காலத்திலிருந்து மன்னர்கள் காலம் வரையிலான வெவேறு காலகாட்டத்தை நமக்கு உணர்த்துபவை அவ்வோவியங்கள்.

ஆதிச்சநல்லூர் தாழிகளில்தங்கத்திலான நெற்றிப்பட்டம், சில வெண்கலப்பொருட்கள் கூட கிடைத்துள்ளன. தங்கம் கிடைப்பதற்கரிய பொருளாய் இருந்ததாலே அதன் மதிப்பு மற்ற உலோகங்களைவிட அதிகமாய் இருந்திருக்கிறது.

படம்: ஆதிச்சநல்லூர் இரும்புக்கருவிகள் - அலெக்ஸண்டர் ரேயின் அகழாய்வில் கிடைத்தவை .

ஆதிச்சநல்லூரில்ஒரு குறிப்பிடத்தக்க செய்தி, பெரும்பாலும்இந்த ஈட்டி, வேல்களின்முனைகள்கீழ்நோக்கியவண்ணம்இருந்தன என்பதாகும்‌. அத்தாழிகளில்புதைக்கப்பட்ட வீரர்களுக்கு வணக்கம்செலுத்தும்முறையில்இவை இப்படிக்கீழ்நோக்கிக்குத்தி வைக்கப்பட்டனவோ என்று நாம்கருத வேண்டியுள்ளது. எல்லாச்சின்னங்களிலுமே புதைக்கப்பட்ட எலும்புகள்முழு உருவம்அற்றவை. ஒருவேளை, போர்க்களத்திலே இறந்துபோன வீரர்களின்உடல்கள்அங்கிருந்து கொண்டுவரப்படாமல்அடையாளத்திற்காக அவர்களுடைய எலும்புகள்அல்லது உடல் பாகங்கள் மட்டும்அவரவர்களுடைய ஊர்களுக்குக்கொண்டு வரப்பட்டு இச்சின்னங்களில்புதைக்கப்பட்டனவோ என்றும்நாம் கருத இடமிருக்கிறது‌.

பல புறநானூற்றுப்பாடல்களில்பிணங்களை சுடுவதும் குறிக்கப்படுகிறது. இந்தக்குறிப்புகளிலிருந்து, ‌ பெருங்கல்சின்னங்களில்புதைத்து வந்த வழக்கம்அருகி, சுடும்வழக்கம்பெருகிவந்த காலம்சங்ககாலம்எனலாம்‌. அதாவது பெருங்கல்காலத்தின்இறுதிக்கட்டமே சங்ககாலத்தின் தொடக்கமாய் இருந்திருக்க வேண்டும்.

சூடுவோர்இடுவோர்தொடுகுழிப்படுப்போர்தாழ்வயின்அடைப்போர்தாழியிற்கவிப்போர்‌- புறநானூறு

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது பற்றிய பாடல் இது.

இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடினர்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்என்னும் சோழ மன்னன் போரில் இறந்தபோது, ஐயூர் முடவனார் என்னும் புலவர் முதுமக்கள்தாழி செய்வதைத் தொழிலாகக் கொண்டமூதூர்க் கலஞ்செய் கோஎன்பவரிடம்எம் மன்னனின் பெருமைக்கேற்ற முதுமக்கள் தாழியை நீ செய்துவிட முடியுமோ?” என்னும் பொருளில் அமைந்த பாடலொன்றைப் பாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிஞ்சி நிலங்களிலும் முல்லை நிலங்களிலுமே பெருங்கற்படை சின்னங்களான கல்திட்டைகள், கற்பதுக்கைகள், குத்துக்கற்கள், நடுகற்கள், கற்குவைகள் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களாக தொண்டை நாட்டுப்பகுதிகளும், கொங்கு நாட்டுப் பகுதிகளும் பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதிகளாகவே இருப்பதால் இச்சின்னங்களின் பண்பாட்டுக் கூறுகள் வடக்கிலிருந்து தெற்கில் பரவியதாகவே ஆய்வாளர்கள் கருதினர்.

இப்பெருங்கற்படை சின்னங்கள் உருவாவதற்கு கற்கள் அதிகம் தேவைப்படுவதால் இவை குறிஞ்சி நிலங்களிலும் முல்லை நிலங்களிலுமே அதிகம் இருந்தன.

தமிழகத்தின் மருத நிலப் பகுதிகளான தென் பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆற்றுப் படுகைகளிலும் நெய்தல் பகுதிகளான காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் அதிகமாக முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. மருதமும் நெய்தலும் மண் வளமிக்கவை என்பதால் இவற்றில் தாழிகள் செய்வதற்கான மூலப் பொருட்கள் அதிகம் கிடைத்திருக்கும் எனலாம்.

மேலே வடமேற்குத் தமிழகத்துக்கு கூறப்பட்டது போல் புதிய கற்காலத்தில் (கி.மு. 3000 - 1000) இருந்து பெருங்கற்காலத்திற்கு தென்தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. மாறாக தென்தமிழக மற்றும் தமிழக நெய்தக் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் குறுனிக்கற்காலத்திலிருந்து (கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000) நேரடியாக தாழிகளின் காலத்திற்கு அசுர வளர்ச்சி அடைந்தது எனச் சுட்டுகின்றன. அதன் பின்பு சட்டென்று அவர்கள் இரும்பு செம்பு தாமிரம் போன்றவற்றை பயன்படுத்தியதையும் பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்ற ஆரம்பித்ததையும் பற்றிக் குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழர்கள் பெரும் கல் சின்னக்களின் காலத்தில் இருந்து சங்க காலத்திற்கு விரைவாக தாவி விட்டனர். சங்க காலத்தில் உலகிலேயே உச்சம் தொட்ட சமூகத்தினராக மாறிவிட்டனர்

தமிழக வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய முதல் கேள்வியே, தமிழ்ச்சமூகம் எப்போது தன் சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டது? தமிழ் வரலாறு எந்தப்புள்ளியில் ஆரம்பிக்கிறது?

பண்டைய சீனத்தில் கன்பூஸியஸ் எனும் தத்துவவாதி பிறந்தார். இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மதக் கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. சீனர்களது வாழ்வியலிலும் பண்பாட்டிலும் கன்பூஸியசின் தத்துவத்தின் தாக்கம் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் அவர். அவரைப்பற்றி ஏட்டில் உள்ளது. அதற்கு முன்னர் நமது நாகரிகத்தில் தாக்கம் யாரால் இருந்தது என்பதை பற்றி ஏட்டில் பெரிதாக எங்கும் இல்லை. ஆனாலும் செவிவழிக் கதைகள் பல பாடல் வடிவில்  அப்படிப்பட்டவரைப் பற்றி தொல்குல மக்களிடம் புழங்குகின்றன.

சீனத்தின் கன்பூசியஸ் போல அறிவிலும் ஆற்றலின் சிறந்த ஒருவரோ அல்லது அறிவில் சிறந்த குழுவினரோ இரும்பை உருக்கும் விதையைக் கண்டுபிடித்து, கால்நடைகளையும் பழக்கப்படுத்தி, மக்களைக் காக்கும் வைத்திய முறைகளை உருவாக்கியும், மொழியையும் சீராக செப்பிட்டிருக்கலாம்அதற்கான இலக்கணங்கள் வகுத்திருக்கலாம்...  கற்காலத்திலோ பெருங்கல் சின்னங்களின் காலத்திலோ இந்த முன்னெடுப்புகளை நடத்தி போதித்திருக்கக்கூடும்எது எப்படியோ ஒவ்வொரு சமூகத்தின் அடுத்த பாய்ச்சலுக்கும் பழக்கப் படுத்திய விலங்குகள் / கால்நடைகள் தான் உதவியிருக்கின்றன. நந்தி சிலையை ஒத்திருக்கும் திமில் கொண்ட காளைகளை வனத்தில் வாழ்ந்த மூதாதைய கால்நடை (Bos primigenius) இனத்திலிருந்து  வீட்டுவிலங்காகப் பழக்கியதில் இருந்தே நாகரிகம் பல அடிகள் முன்னேறியதை சிந்து சமவெளி முத்திரைகள் மெய்ப்பிக்கின்றன.

ஆனால் தென்னிந்தியாவில் அதே காளைகள் தான் கொண்டுவரப்பட்டதா, அல்லது தென்னிந்தியர்கள் தமக்கான இனங்களை தாமாகவே யார் துணையுமின்றி பழக்கப்படுத்தினரா என்பது ஒரு பெரிய கேள்வி.

அல்சின் அம்மையாரின் இந்த கருத்தை பாருங்கள்

// While humped zebu cattle were certainly domesticated in Baluchistan by ca.

6000 BC, what remains unclear is whether additional domestications of this species

took place elsewhere in South Asia during the Holocene. Some of the distinctive

regional differences between southern and north-western zebu breeds have been

suggested to be very ancient, and perhaps already reflected in artistic evidence of the

third millennium BC, since cattle depicted in Indus seals differ from South Indian

rock art bulls along the same lines as modern genetic breeds//

இதைப் பற்றி பின்னால் விவாதிப்போம். தற்பொழுது பெருங்கல் சின்னங்களைப் பற்றி தொடர்வோம்.

பெருங்கல் சின்னங்களை எழுப்பி வந்த ஆதிமக்களின் நம்பிக்கையான முன்னோர் வழிபாடு, நடுகல் மரபாகத் தொடர்ந்தது. இந்த நடுகல் மரபு அரசாங்கங்கள் தோன்றிய காலங்களிலும் பின்பற்றப்பட்டது. வாளேந்திப் போர்க்களம் சென்று பகையரசரின் களிற்றை வீழ்த்திவிட்டு மாண்டுபோனவனுக்கு நடப்பட்ட  நடுகல் ஒன்றுதான் மக்கள் அனைவரும் வழிபடக்கூடிய தெய்வமாகும் என மாங்குடி கிழார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,              

கல்லே பரவின் அல்லது,

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

புறநானூறு - 335"

 

இவ்வாறு வீரம் மிகுந்த ஆண்கள் போற்றப்பட்டதினால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமூகமோ நம் சமூகம் என எண்ண இடம் இருக்கிறது. ஆனால் உண்மையில் நாம் தாய்வழிச் சமூகமாகவே வாழ்ந்திருக்கிறோம். ஒரு தாயிலிருந்து கிளைத்த ஆண்களும் பெண்களும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்தனர். யானைக்கூட்டத்திலுள்ளது போலவே நமது குழுக்களுக்கும் தாய் தான் தலைமை.

பிராகுயி மக்கள் தாயை ai- aaya, என்றும் லும்மா என்றும் அழைக்கின்றனர். தமிழிலும் யாய், ஆய் என்றால் தாய் எனும் பொருள். ஆயைத் தலைவியாகக் கொண்ட சமூகம் ஆயம் எனப்பட்டது.

 “சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம்பதிற் 30

துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சிபுறம் 224

 

ஓர் ஆயத்தில் இருந்தவர் ஆயர் எனப்பட்டனர். அதே போல் அவர்களின் தலைவன் - மாடுகளின் - அதாவதுகோவின் அரசன் எனப்பொருள் படும்கோன்எனப்பட்டான். எனவே நமது அரசமரபுகள் மேய்ச்சல் குழுக்களில் இருந்தே தோன்றியிருகின்றன எனக்கருதவும் இடமிருக்கிறது.

கோஎனும் எழுத்து தொடங்கும்படி வட இந்தியாவில் உள்ள சில இடங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்குகோமூக்’. மாட்டின் வாய் எனப் பொருள் படும் இடம்.

 

இப்படிப்பட்ட பெயர்கள், இரண்டு கருதுகோள்களுக்கு வழி வகுகின்றன. ஒன்று அங்கே தமிழ் பழங்கி இருக்க வேண்டும், அல்லது நம்ம ஆள் யாராவது அங்கே சென்று அந்தப் பெயரை வைத்திருக்க வேண்டும்.

 

வனத்தில் வேட்டையாடிகளாய் நாம் இருந்த போது கானவன் எய்த முள்ளம்பன்றியின் தசையை, கொடிச்சி, சிறு குடியினருக்கு மகிழ்ச்சியுடன் பகுத்துக் கொடுத்தாள் என்றும்

//கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு காந்தளம் சிறுகுடி பகுக்கும்”. (நற்- 85:8-10) //

கானவர்கள் வேட்டையில் கொண்டு வந்த ஆண் பன்றியை அக்குறிஞ்சிநில மனையோள் தன் குடி முறைக்குப் பகுத்துக் கொடுத்தாள் என்பதாகவும் நற்றிணை பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 “கானவன் வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை புனை இருங்கதுப்பின் மனை யோள் கெண்டி குடிமுறை பகுக்கும் நெடு மலை நாட” (நற். 336-3;6)

 இந்தக் கொடிச்சிக்கும் மனையோளுக்கும் வேட்டையின் மூலம் பெறப்பட்ட பொருளைப் பிரித்துக் கொடுக்கும் உரிமை அவர்களிடம் இருந்தது. அவர்கள் தாய்வழிச் சமூகத்தின் தாயாக இருந்திருக்கின்றனர். தாய் என்னும் சொல் உரிமை என்னும் பொருளில்  வழங்கப்பட்டது. மறக்குடித் தாயத்து (சிலம்பு. வேட்டுவவரி, 14-15) என்னும் சிலப்பதிகாரத் தொடர் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.

………………..

ஒரு வனம் என்பது சில ஆயிரம் உயிர்களுக்குத் தேவையான உணவை வழங்கக் கூடிய தன்மையை கொண்டிருக்கும். ஆனால் நம் ஆதித்தமிழர் கண்டடைந்த இந்த அருந்தமிழ்க்காடு, சில ஆயிரமே எண்ணிக்கையில் இருந்த அவர்களுக்கும் சரி, பல தலைமுறைகளைக் கடந்து கோடிக்கணக்கில் இந்நிலத்தில் குடியிருக்கும் நமக்கும் சரி, நிலையான உணவை வழங்கி நம் நாகரிகத்தைக் காக்கும் அரண் என விளங்கியது.

"அப்படி என்ன சிறப்பை கொண்டிருக்கிறது இந்த வனம்? "

உங்களுக்கு சில கேள்விகள்.

வனம் என்றால் உங்கள் மனதில் தோன்றும் சித்திரம் என்ன?

அடர்ந்த அமேசான் காடுகள் மறைந்து தாக்கும் விலங்குகள் தவளையை பச்சையாக உண்ணும் பியர் கிரில்ஸ்...”

 அதை விடுங்கள் புல்வெளி என்பது வனமா?

இல்லை என்றுதான் தோன்றுகிறது.”

புல்வெளியால் ஏதேனும் பயன் உண்டா?

ஏனில்லை, மேயும் உயிரினங்களின் மேய்ச்சலுக்கு உதவும் பகுதி அது.”

சரி இந்த நிலத்தை பாருங்களேன் இது வனமா?



 மலைகளின் மடிப்புகளில் வனம் உள்ளது. மற்ற இடங்கள் புல்வெளியாய் இருக்கிறதே! இது எந்த இடம்?”

சரி இந்த வனத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை பாருங்களேன். அதன் கீழே நிற்கும் அந்த மனிதனோடு ஒப்பிட்டு அதன் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அரச தோட்டத்தில் ராஜ உரம் போட்டு போட்டு வளர்த்தாலும் எந்த மனிதனாலும் இத்தகைய பருமனும் உயரமும் செழிப்பும் கொண்ட மரத்தை உருவாக்க முடியுமா என்ன?

இது போன்ற மரங்களை இங்கு நட்டது யார்?

இதற்கு நீர் ஊற்றியது யார்? இதற்கு உரம் இடுவார் யார்? பூச்சிமருந்து தெளிப்பவர் யார்? “

மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிவில் சிறந்த அரிஸ்டாட்டிலிலிடம் கேட்டபோது, குளிர்ச்சியான காற்று உறைந்து மழையாய்ப் பொழிகிறது என்றார் அவர். மற்றொரு கிரேக்க அறிஞரான தேல்ஸ் கடல் அடியில் நீர் உற்பத்தியாகிறது, அந்த நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு மலை உச்சிக்கு சென்று ஆறாய் வெளிப்படுகிறது என்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆற்றில் ஒன்று வைகை ஆறு. நல்லந்துவனார் எனும் புலவர் பரிபாடலில் பின்வருமாறு வைகையின் பிறப்பை கூறுகிறார்.

'முகில்கள் கடலில் இருக்கும் நீரை முகந்து வானில் பரவி, நீர் எனும் சுமையை இறக்கி இளைப்பாறும் பொருட்டு பெய்பவை போல் மழை பொழிந்தன. அதனால் பெருகிய நீர் ஊழிக்கால வெள்ளம்போல் மான் கூட்டம் கலங்க, மயில்கள் களித்து அகவ மலைகளின் அழுக்கினை நீக்கும் வண்ணம் அருவியாய் கொட்டுகிறது. அந்த நீர்ப்பெருக்கு மலையில் வளர்ந்துள்ள சுரபுன்னை, வண்டுகள் சூழ்ந்துள்ள செண்பக மரம், குளிர் மிகு தேற்றா மரம், வாள் வீரம், வேங்கை, செவ்வலரி, நாகமரம், ஞாழல், தேவதாரு மரம் என்பனவற்றை சாய்த்து தன்னுள் கொண்டு பெருங்கடல் பொங்குவது போல் விளங்கியது.’

அவர் கூறியது உண்மைதான்.

வான் முகந்த நீரானது மேகமாய் செல்கிறது.

தூரதேசம் செல்லவிருக்கும் அந்த அந்த மேகங்களில் இருந்து நீரை எவ்வாறு நாம் பெறுவது?

மூக்கு லாரிகளை செக்போஸ்டில் மடக்கி வசூல் செய்யும் ஏட்டையாக்கள் போல, மேகங்களை இடைநிறுத்தி மழைநீரை வசூலிக்கவல்லவை மலைத்தொடர்கள்.

தென்மேற்கு பருவக் காற்றிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலை வசூலித்தவைதான் தான் நம்மிடம் வரும் காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி போன்ற ஆறுகள்.

"பருவமழையால் பிறக்கும் ஆறுகள், பருவமழை இல்லாசமயம் வறண்டுவிடுமல்லவா? அச்சமயத்தில் நீருக்கு நாம் என்ன செய்ய ?"

பெருமழையாய் பாறையில் மோதி நீர் கரைத்த மினரல்மிகு மண் மற்றும் ஈரம் சொரியும் மழைநீர், இந்த இரண்டும்தானே மரங்களின் சமையலில் முக்கிய கூட்டுப்பொருள்?

 அதுவும் இத்தகைய அபரிமித கூட்டுப்பொருளோடு சூரியஒளியும் வருடம் முழுவதும் சரியான அளவில் கிட்டினால் அங்கிருக்கும் வனத்தின் திறன் எவ்வகையில் இருக்கும்?

அப்படிப்பட்ட அரிய புவியியல் அமைப்பில் அமையப் பெற்றது தான் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். வருடம் 3,000 மில்லி மீட்டர் அளவு மழைப்பொழிவை கொண்ட இடம் இது.

அழகு வனத்தை உருவாக்கக்கூடிய அனைத்து சாத்தியங்களையும் ஒருங்கே பெற்ற இவ்விடத்தில் உருவானது சாதாரண காடுஅல்ல. இங்கே உருவான வனமானது பூமியில் வேறெங்கும் காணக்கிட்டா அற்புத சோலைக்காடுகள். நமது   நீலகிரி உயிர்க்கோளம் தான் சோலைக் காடுகளில் ஒரே அமைவிடம். இங்கிருக்கும் பெரும்பால மரங்கள் பனி மற்றும் நெருப்பு இரண்டிற்கும் எளிதில் பாதிப்படையக்கூடியன.

பிறகு எப்படி கூதிர்கால பனியையும், திடீரெனத் தோன்றும் வன நெருப்பையும் இவை தாக்குப்பிடித்து இவ்வளவு காலம் வாழ்ந்து வருகின்றன?”

கங்கை யமுனை போன்ற இமயம் ஈன்ற நதிகள் வருடம் முழுவதும் நீர் சொரியும் தன்மை பெற்றவை. கடல்மட்டத்தில் இருந்து 3500 மீட்டர் உயரத்தில் உள்ள பனிச் சிகரங்கள் கொண்ட இமயமலைத் தொடரில் இருந்து உருவாகும் ஆறுகள் அவை. மழைப் பொழிவு இல்லாத வெயில் காலங்களில் கூட, உருகும் பனிப்பாறைகள் தரும் நீரினால் அவை எப்பொழுதும் வற்றாத ஜீவநதியாக உள்ளது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் பனிச் சிகரங்கள் அல்லவே. ஆயினும் கடந்த நூற்றாண்டு வரை வருடம் முழுதும் வருடம் முழுதும் பாயும் ஜீவ நதிகளை அவை எவ்வாறு அளித்து வந்தது?

87% புல்வெளியையும் மீதம் சோலை வனத்தையும் கொண்ட நிலம் இது. இந்த சோலைக்காடுகள் அனைத்தும் ஒரே அளவிலான மரங்களைக் கொண்ட காடுகள் அன்று.

அதிக நிலமதிப்பை கொண்ட சென்னையில் பெருகியிருக்கும் மக்கள் வாழ்வதற்கென்று அடுக்கடுக்காய் அடுக்கங்கள் கட்டி வாழ்கிறார்கள் அல்லவா?

அதுபோல பூமியின் முக்கியமான இந்த நிலப்பரப்பிலும் தாவரங்கள் அடுக்கடுக்காய் வாழ்ந்தன.

 நிலத்திற்குக் கீழே கிழங்கு வகைகள், நிலத்தை மூடி வைக்கும் போர்வையென பூஞ்சை பாசிகள், அவைகளுக்கு மேல் சிறுசெடிகள் புதர்கள், சிறிய மரங்கள், நடுத்தர மரங்கள் மற்றும் நெடுந்துயர்ந்த மரங்கள், அந்த மரங்களை பற்றிப் படரும் கொடிகள், என ஏழுவகை தாவர வகைகள் அடுக்கடுக்காய் அணிவகுத்து தனித்தன்மையுடைய சோலைக் காடாய் உருவாகி நின்றன. இச்சோலைக்காட்டின் ஓரங்களில் இருக்கும் மரங்கள் பனியையும் நெருப்பையும் தாங்கி வளரும் ஆற்றல் கொண்ட ‘ecotone species’ எனப்படும் வகை மரங்கள். Ecotone  என்பது இருவேறு சூழல்கள் அருகருகே இருக்கையில் அவற்றிற்கு இடையில் இருக்கும் இருசூழலையும் இணைக்கும் வண்ணம் தகவமைப்பு கொண்ட பிரதேசம்.

எள் விழ முடியாத அளவிற்கு கூட்டம் என்பார்களே, அதுபோல சூரிய ஒளியோ மழை நீரோ தரையைத்தீண்ட முடியாத வண்ணம் அடர்ந்தகாடு இந்த சோலைக்காடு.

தரையின் ஆழத்தில் இருக்கும் மினரல் சத்துக்களை நெடிந்து உயர்ந்த மரங்களின் அடிஆழம் செல்லும் ஆணிவேர்கள் பூஞ்சைகளின் துணையுடன் அகழ்ந்து எடுக்கின்றன. அந்த உயர்ந்த மரங்களின் உதிர்ந்த பாகங்களின் மூலம் மேற்பரப்பில் இருக்கும் மற்ற உயிரினங்களுக்கு இச்சத்துக்கள் பகிரப்படுகின்றன. மரத்தின் உதிர்ந்த இலைகள் மற்றும் பூஞ்சை பாசிகள் போன்றவற்றால் உண்டான மூடாக்கு பஞ்சு போல் செயல்பட்டு மேல் மண்ணை மூடி ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. அதனால் மினரல், காற்று, நீர்மட்கு ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கொண்ட உயிர்ப்புள்ள மண்ணாய் இது விளங்குகிறது. சிறு செடிகளும் புற்களும் தங்கள் வேர்களைக்கொண்டு இந்த உயிர்கொண்ட மேல்மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்துள்ளன.

  மேலும் இவ்வனத்தின் வெப்பநிலை எப்பொழுதும் 15 லிருந்து 20 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கும்படியான அமைப்பு கொண்டது.  ஆனால் அங்கிருக்கும் புல் வெளியானது  அப்படியல்ல, குளிர்காலத்தில் உறைபனி வரும்பொழுது உறைந்து கிடக்கக்கூடியது. உறைபனியில் சோலைக் காட்டின் மரங்களின் விதைகள்  புல்வெளியில்  உயிர் வாழ முடியாது. எனவே புல்வெளியில் சோலைக்காடுகள் பரவ இயலாது. இவ்வாறாக ஒரே இடத்தில் இருவேறு தட்பவெப்ப சூழ்நிலையில் இருவேறு உயிர்கோளங்கள் இங்கே அருகருகே அமைந்துள்ளனஅந்தப் புல்வெளியானது பல்வேறு புல்வகைகளைக் கொண்டது. இந்தப் புல்வகைகள் மழைநீரை தம்முள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும் தன்மை பெற்ற ஆழம் செல்லும் வேர்ப்பின்னல்களைக் கொண்டவை.

 இந்த சோலை வனங்கள் வெளியேற்றும் நீராவியால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படும். எனவே மழை இல்லாவிட்டாலும் காற்றின் ஈரப்பசையை தம்முள் இழுத்து பஞ்சுபோல் சேகரிக்க வல்லது இந்தப் புற்களின் வேர்பின்னல்கள். பஞ்சு கொள்ளா அளவு நீர் மிகின், சேர்த்து வைக்கப்பட்ட நீர்  வழிந்தோடும். அதுபோல வேர்பின்னல்களில் இருந்து கசிகின்ற நீரானது சிறு ஓடைகளாய் சேர்கின்றன. இவ்வாறு இந்த புல்வெளி சொரிந்த நீரானது பளிங்கின் தூய்மையை கொண்ட மணிநீராய் விளங்கியது.

 மணி நீரால் உருவான சிறு ஓடைகள் ஒன்றிணைந்து ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியாய் பிறக்கின்றன. இதன் காரணமாய் சோலைக்காடுகள் தமிழகத்தின் நீர்த்தொட்டிகள் என்றழைக்கப்பட்டன.

இந்த மண்பரப்புக்கு கீழேயும் சரி, மேலேயும் சரி எண்ணிலடங்கா உயிரினங்கள் உண்டு. மண்ணைக் குடையும் வண்டுகள் புழுக்கள் மட்டுமல்லாமல் மண்ணுளிப் பாம்புகள், வளைதோண்டும் எலிகள் முயல்கள் என பெரிய பட்டியல்   அது.

செடிகளின் இலையை நாடும் பூச்சிகள், இறந்த மரங்களை/மரத்தின் பாகங்களை செரிக்கவல்ல கரையான்கள், புழுக்கள், சிறு பூச்சிகள், அவற்றை நாடும் பறவைகள், பழங்கள் மற்றும் பூக்களை நாடும் விலங்குகள் மற்றும் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் வேட்டையாடி விலங்குகள் என ஒரு உயிர்ப்பு மிகுந்த தனித்தன்மை கொண்ட உயிர்க்கோளம் இது. அருகே இருக்கும் புல்வெளியோ மேயும் வனவிலங்குகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது.

நிலத்தில் இருந்து பெறப்பட்ட வளங்கள் அனைத்தும், மேயும் விலங்குகளின் கழிவுகள் வடிவிலும் இறந்த உடல்கள் வடிவிலும் நிலத்திற்கே திருப்பி அளிக்கப்படுகின்றன. அதனால் இது ஒரு தன்னிறைவு பெற்ற உச்சகட்ட உயிர்க் கோளமாய் அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படிப்பட்ட உயிர்க்கோளம் ஒருநாளில் உருவானதல்ல. பல மில்லியன்வருட கூட்டுப்பரிணாமத்தின் விளைவாய் வந்த அழகிய படைப்பு இது. இவ்வளவு அழகிய வனமாய் உள்ளதால் தான் என்னவோ சினிமாவில் காதல் காட்சிகள் என்றாலே ஊட்டி கொடைக்கானல் என குறிஞ்சி நிலப்பரப்பை நாடுகின்றனர் போலும்.

சரி இப்ப நான் ஒரு சினிமா காதல் காட்சிக்கான சிச்சுவேஷன் சொல்றேன், கற்பனை பண்ணிப் பாருங்கள்.

குளிர் நிறைந்த செழிப்பான குறிஞ்சி நிலம்... ஊட்டி என்றே வைத்துக் கொள்வோம். அங்கே சுற்றுலாவுக்கு வந்து வழிதவறிய கன்னி ஒருத்தி திக்குத் தெரியாமல் நிற்கிறாள். வானம் மழை பெய்வது போல் இருட்டிக் கொண்டு வேறு வருகிறது. தூரத்தில் யானையின் பிளிரல். மிரண்டு இருக்கும் மருண்ட கண் கொண்ட அந்தக் கன்னியை, யார் என்றே தெரியாத ஆடவன் ஒருவன் காப்பாற்றி அங்கிருந்து கூட்டிச் செல்கிறான். பாதுகாப்பான இடத்தில் அவளை விட்டுசெல்கிறான் நம் ஹீரோ. விடை பெறும் போது அலைபேசி எண்களை பரிமாறிக் கொள்கின்றனர்அவனின் குணநலன்கள் தலைவிக்கு பிடித்து போகின்றது. காதல் அரும்பத் தொடங்குகிறது.

அது எப்படி அவ்ளோ பெரிய யானையை ஒரு மனிதனால் சமாளிக்க முடியும்?’ என்று ஆடியன்ஸ் கேட்பார்களே என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அந்த யானை சிறு வயதிலேயே அவனோடு சகோதரன் போல் சேர்ந்து வளர்ந்த வளர்ப்பு யானை என ஃபிளாஷ்பேக்ல ஒரு சீன் வச்சிரலாம்.

தமிழ் சினிமா விதிப்படி இந்த சீனுக்கு ஒரு பாட்டு போடனுமே…’

சரி இளையராஜா இசையில், “வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்னு பாட்டு போட்டு பிறகு கல்யாண சீனை காட்டிருவோம்.

என்னய்யாலாஜிக் இல்லாம கதை சொல்ற. அவள் வேறு வீட்டு பொண்ணு. அவளை எப்படி காட்டில் வாழும் ஒருவனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க?”

பையன் வீரமா அம்சமா நற்குணங்களோடு இருக்கான். பொண்ணுக்கு அவன் மேல் காதல் இருக்கு. வேற என்ன வேணும் கல்யாணம் பண்ணி வைக்க?

குணம் இருந்து என்ன பயன். பணம் வேணும் அல்லவா? அதுவும் ரெண்டு பேரின் ஜாதியும் வேறல்லவா? எப்படி இந்தக் காதல் நிறைவேறும்?”

இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நமது நாகரிகத்தின் இடையின் வந்து சேர்ந்த இடைச்செருகல்கள். நமது ஆரம்பகால வரலாற்றில் இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் கிடையாது. குறமகளாக இருந்தாலும் சரி, இந்திரன் மகளாகவே இருந்தாலும் சரி, பையன் வீரமா இருந்து பொண்ணு அவன காதலித்தால் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.

இந்த சிச்சுவேசனுக்கான இளையராஜா பாட்டை எல்லாம் விட்டுத்தள்ளுங்க. பல நூறு வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே சிச்சுவேஷனுக்கு ஒருத்தர் பாட்டு எழுதி இருக்காரு. அதைப் பார்ப்போம் வாருங்களேன்.

முன்பின் தெரியாத தலைவனிடத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த தலைவியின் முகத்தில் இந்தக்காதல் நிறைவேறுமா எனத்தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:

திணை: குறிஞ்சித் திணை, (புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்த பாடல்களைக் குறிப்பது.)

தலைவன் கூற்று

``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.

பொருள்

என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழைபோல அன்பு கொண்ட நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன.

இப்பாடல்களிறு தரு புணர்ச்சிஎனும் வகையின் கீழ் வருகிறது. தலைவி தினைப்புனம் காவல்புரிந்த காலத்தில் யானை ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக்காத்த தலைவனையே தனது வாழ்க்கைத்துணையாக முடிவு செய்தல்தான் இப்பாடலின் அடிநாதம்.

60 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவிய மனிதர்களுக்குள் ஜாதி பாகுபாடு மதவேறுபாடு எதுவும் இருந்திருக்கவில்லை. அதனால் வீரத்தில் சிறந்த தலைவனை காதல் செய்வதற்கு தலைவிக்கு தடை ஏதும் இல்லை. அவ்வளவு ஏன் Homo sapiens எனும் நம் மனித இனம்  நியாண்டர்தால் எனும் வேறோர் மனித இனத்தோடு கலப்பில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். (நமது இரத்தத்தில் அவர்களது ஜீன்கள் 2 சதவிகிதம் உள்ளது).

இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து வேறொரு தலைவன் தனது தலைவியை  வானூர்தியில் பிக்கப் பண்ணிக்கொண்டு  காதல் புரியலாம். ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம். இன, மத, நிற வேறுபாடுகள் மென்மேலும் தீவிரம் கொள்ளலாம். ஆனால் அடிப்படை உணர்வு ஒன்று மட்டுமே. அந்த உணர்விற்கு இந்த வேறுபாடு, நாகரிக பகட்டு எதுவும் தெரியாது. செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று படுவதுதான் இயல்பு. அப்போது அந்த சிச்சுவெசனுக்கும் இந்தப்பாட்டு பொருந்தும். எக்காலமும் பொருத்திப்பார்த்துக் கொள்ளத்தக்க வகையில்  அடிப்படைக்கூறுகளை உரிப்பொருளாய் கொண்டதாலேயே இம்மொழி இன்னும் வாழ்கிறது. அம்மொழி காட்டிய வழியில் பயணித்ததாலேயே நாமும் அதோடே இணைந்து நம் பண்பாடு நீர்த்துப்போகாமல் வாழ்ந்து வருகிறோம்.

நிலம் மற்றும் பொழுதிற்கேற்ப வெளிப்படும் அக மற்றும் புற உணர்வுகள் மட்டும்தான் மனித உயிர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் நடத்திச் செல்கிறது. இயற்கையும் சூழலும் அதோடு பின்னிப் பிணைந்த நமது அடிப்படை உணர்வுகளும் மட்டுமே நிஜம். அவை ஒன்று மட்டுமே போற்றத்தக்கது. அந்த புனிதமான உணர்வுகளை போற்றியே நமது தமிழ் வளர்ந்து வந்தது. அதனாலேயே தமிழணங்கு இன்னும் இளமையாக இருக்கிறாள்.

காதல் எனும் இந்த உரிப்பொருளே தமிழர்களை ஒவ்வொரு நிலத்திலும் உயிர்ப்போடு வைத்திருந்தது. இதை அவர்களுக்கு உணர்த்துவதில் குறிஞ்சி நிலம் ஒரு முக்கிய பங்காற்றி இருந்திருக்கிறது. நீரானது நிலத்தை நீங்கி குறிஞ்சிநிலம் பாலைவனம் ஆனாலும், தலைவிக்கு தலைவனின் மேல் உள்ள காதல் நீங்கவில்லை. மருத நிலத்தில் நாகரிகத்தின் உச்சத்தை தொட்ட பொழுதிலும் அதன் அடி ஆழத்தில் ஒரு மெல்லிய சரடென இந்த காதல் பின்னிப் பினைந்து அவர்களின் நாகரிகத்தைக் கட்டிக் காத்திருந்தது.

அகத்திணையான காதல் இரு உயிர்களை ஒன்றிணையச்செய்து பல உயிர்களாய் பல்கிப்பெருகச்செய்யும், ஆனால் புற உணர்வான வீரமானது தன்னைக்காப்பதற்கு மட்டும் பயன்பட வில்லை. தனது வளத்திற்கு போட்டியாக வரும் உயிர்களை எதிர்க்கவும் பயன்பட்டது. இதனால் விளைந்த சண்டையில் உயிர்கள் பல அழித்தன.

ஒரு ஏரியாவின் நாய் மற்றொரு ஏரியாவில் புகும்போது ஏற்படும் சண்டைகளை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். ஒரு புலியின் இருப்பிடத்தில் மற்றொரு புலி நுழைந்தால் சண்டை நிச்சயம். எந்த உயிரினமும்  தமது   வளங்களுக்குப் போட்டியாக வரும்  இன்னொரு உயிரினத்தை அண்டவிடாது. இப்பொழுதும் கூட சென்டினல் தீவில் நுழையும் அந்நியர்கள் உயிரற்ற உடல்களாகத்தான்   திரும்ப வேண்டியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

 ஒரே வகையான  தொழிலை  மேற்கொள்ள வகைசெய்யும் பூமியில் தங்கள் நிலத்தின் வளங்களை பழங்குடியின மக்கள் அவ்வளவு எளிதில் மற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை.

அமேசான் காட்டில் இருக்கும் மனிதர்கள்,   அந்தமான் தீவுப் பழங்குடியினர்  போன்றோர் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். மங்கோலியா போன்ற புல்வெளிப் பிரதேசங்களில் உள்ள பழங்குடியினர் மேய்ச்சல்நில வாழ்வு முறையைக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் வாழ்ந்த தனித்தன்மையான இனக்குழுவினர் வெளிமக்கள் தொடர்பை விரும்பியதில்லை. இந்தப் பழங்குடி மக்களுக்கு வேற்று மக்களுடனான வர்த்தகத் தொடர்பு என்பது நாகரிகம் எட்டிப்  பார்க்கும் வரை இருந்திருக்கவில்லை.

நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு அங்கமாய் கடைசியாய் இணைந்த உயிரினம்  m130 ஜீனைக் கொண்ட நமது முன்னோர்கள். அந்த முன்னோர்கள் இக்காடுகள் கொடுத்த நதிகளின் மடியில்தான் உலகு போற்றும் தமிழ் நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். மேய்ச்சல் நிலத்தோடு கூடிய பன்முகத்தன்மை கொண்ட  சோலைக் காடுகளில்  அடைக்கலம் புகுந்த ஆதி மனிதர்களுக்கு அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகள் பல இருந்தன. அங்கே மேய்ச்சல் நிலமும் வனமும் அருகருகே இருந்தன. அதனால் அங்கிருந்த ஒவ்வொரு குழுவினரும் தமக்கென ஒரு தொழிலை கைக்கொண்டு அதில் தனித்துவம் பெற்றனர். அவர்கள் தங்களது  பொருட்களை மற்ற குழுவினரோடு பகிர்ந்து கொண்டனர்.

உதாரணாத்திற்கு இடையர்களைப் பற்றி பார்ப்போம். இடையர் என்றால் இடைநிலத்திலிருப்பவர் என்று பொருள்படும். அதாவது குறிஞ்சி நிலத்திற்கும், முல்லை நிலத்திற்கும் இடையிலிருப்பவர்கள். இவர்களுக்கு ஆயர் என்றும் பெயர் உண்டு.

கால்நடைகளைச் சார்ந்து தமது வாழ்வை கட்டமைத்துக்கொண்டவர்கள் அவர்கள். கிட்டத்தட்ட இதே வாழ்வுமுறையைக்கொண்ட தோடர்கள் இன்னும் நம்மோடே வாழ்ந்து வருகின்றனர். தோடர்கள், எருமையை தீய விலங்குகளிடமிருந்து காத்து அவற்றின் பால் மற்றும் பால் பொருட்களை உண்டு வாழ்பவர்கள். தோடர்கள் தங்களின் பால் பொருட்களை  மற்ற குழுவினரோடு பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் அந்த எருமையை தெய்வமாய் வணங்குகின்றனர். அவர்கள் சுக துக்கம் அனைத்திலும் அவற்றின் பங்கு இருந்தது. இவ்வாறு தமிழர் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாய் இருக்கும் இயற்கையை தெய்வமாய் போற்றும் குணம், இந்த இடத்திலிருந்தே தமிழர்களுக்கு தொடங்கி இருந்திருக்க வேண்டும். (தோடர்கள் பசுக்களை மட்டும் தான் செல்வமாக கருதினர். காளைகளை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. காளைகளும் எருதுகளும் மருதத்தில் தான் மதிக்கப்பட்டன). இந்த எருமைகள் முழுவதுமாக வீட்டு விலங்காக்கப்படவில்லை. இதைப்பற்றி பின்னே காண்போம்


பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் தொல்குடிகளிடம் இருந்துசங்ககாலத்தில் தொடந்துதற்சமயம் வரை பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும்.

தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம்
(
கலித்தொகை-114 : 12-14)

(கொம்பை வழிபடுவது மட்டுமல்லாமல், கொம்பை அணிவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அரசர்களும், கடவுளர்களும், வீரர்களும் உலகமெங்கிலும் கொம்பை அணிந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்).

பல குழுக்கள் இணைந்து இயங்குவது தானே ஒரு நாகரிகத்தின் முக்கிய பண்பு? நீலகிரி உயிர்க் கோளத்தில் தமிழ் நாகரிகத்திற்கான  அடித்தளம் இவ்வாறு எளிதில் உருவாகியது.

இந்த அணிநிழற்காடு, அக்காட்டில் உள்ள உயிர்கொண்ட பஞ்சுபோன்ற மண், மற்றும் நிறமில்லா மாசற்ற மணியான நீர், இவற்றை அஸ்திவாரமாய் கொண்டு அங்கிருக்கும் மேற்கூறிய எருமைகள் போன்ற உயிரினங்கள் உள்ளிட்ட நிலத்தின் கருப்பொருட்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே நமது நாகரிகம். எனவேதான் நாட்டின் அரணாய் இம்மூன்றையும் குறிப்பிட்டார் வள்ளுவர் பெருந்தகை.

 ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பது வள்ளுவர் வாக்கு.

 மணிநீர் நனைத்த இடங்களெல்லாம் முல்லைவனம் செழித்திருந்தது. நாடும் மகிழ்ந்து இருந்தது.தெய்வத்தின் அருளும் நமக்குத்துணையாக இருந்தது.

 மற்ற நாகரிகங்களில் இருந்தது போலவே நமது நாகரிகத்திலும் தெய்வம் இருந்திருக்கிறது. ஆனால் நம் நாகரிகத்தில் தெய்வம் சூழலில் இருக்கும் கருப்பொருட்களில் ஒன்றாக உருக்காப்பட்டு நமக்கு நெருக்கமாகப் படைக்கப்படிருந்திருக்கிறது.

தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.”

பொருள் : தெய்வம் = வழிபடு கடவுட்பகுதி; உணாவே = ஊண்வகை; மா = விலங்குவகை; மரம் = மரஞ்செடிகொடி வகை; புள் = பறவை வகை; பறை = அவ்வந்நிலங்களுக்குரிய பறைவகைகள்; செய்தி = தொழில்வகை; யாழின் பகுதியொடு தொகைஇ = யாழ் வகைகளோடு கூட்டி; அவ்வகை பிறவும் = அவைபோல அகத்திணைகளுக்குச் சார்பாக வகைப்படுவன மற்றையனவும்; கருஎனமொழிப = கருப்பொருள்கள் என்று கூறுவர் அகப்பொருணூலார்.

தொல்காப்பியர் மக்களை ஒரு கருப்பொருளாகச் சேர்க்கவில்லை என்பதை இப்பாடலின் மூலம் அறிய முடிகிறது. பின் வந்த ஆசிரியர்கள் மக்களை கருப்பொருளாக சேர்த்திருக்கின்றனர். தொல்காப்பியர் தெய்வத்தையும் மக்களையும் பிரித்துப்பார்க்கவில்லை. அவர் மக்களின் காதல் உணர்ச்சியையே தெய்வக் குறியீடாக்குகிறார் என்பது முனைவர் மு. கருப்பையா அவர்களின் விளக்கம்.

காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029)

தெய்வம் எனும் சொல் ஆண்டவன், ஊழ் என ஒருபொருள் குறித்த பலசொல் கிளவியாக உள்ளது. ஆண்டவன் என்பது ஆள்பவன் எனும் பொருளையும் தருகிறது. இல்லத்தை ஆள்பவள் இல்லாள். இல்லத்தை ஆள்பவன் இல்லத்தரசன். உயிரினங்களை ஆள்பவன் ஆண்டவன்.

ஆதி இந்தியர்கள்புத்தகத்தில் டோனி ஜோசஃப், மஹாதேவன் எனும் ஆய்வாளர் ஹரப்பர்களின் எழுத்து வரிவடிவத்தைப் பற்றிக் கண்டறிந்த ஒரு முக்கியமான தரவை பதிவு செய்திருக்கிறார். ஹரப்பா நாகரிகம் இந்தியாவில் கண்டறியப்பட்ட பழமையான நாகரிகம். அவற்றின் தெருக்களும் வீடுகளும் கச்சிதமாக நேர்க்கோட்டில் சதுரமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டவை. ஹரப்பர்களின் இரண்டு சதுரங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் சித்திர எழுத்தைஅகத்தின் அரசன்என்று அவர் பொருத்திப் பார்க்கிறார். வெளியே இருக்கும் சதுரம்வீடு அல்லது கோட்டை’, உள்ளிருக்கும் சதுரம் அதிலிருக்கும்முக்கியமான நபர்எனக் குறிக்கிறார். சித்திர எழுத்துக்களைக் கொண்ட மற்றுமொரு முக்கியமான நாகரிகமாகிய எகிப்தில் இதையொத்த குறியீடுகள் உள்ளன. அதில் சதுரத்திற்கு பதிலாக இரண்டு செவ்வகங்கள் இருக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் அந்த கட்டங்கள், கோட்டையையும் அதற்குள் இருக்கும் வீட்டையும் குறிக்கின்றன. அதோடு எகிப்திய மன்னர்களை குறிக்கும்ஃபாரோஎனும் சொல்லாது மிகச்சிறந்த வீடு என்று பொருள் தருவதையும் இங்கே நாம் நோக்க வேண்டியுள்ளது.

புறத்தின் கோட்டைக்கு அரசன் தான் தலைவன், அங்கு வீரமே முக்கியமானது. அகம் எனும் இல்லத்திற்கு அரசன் கணவன் அல்லது தலைவன், தலைவியே இல்லத்தின் அரசி. காதலே அங்கு முக்கியமான உரிப்பொருள்.

 அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆண் மற்றும்  பெண் என்ற இருவரின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும்பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும். பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

வீடு' (வீடு பேறு) என்ற சொல்லுக்கு 'மோட்சம்' என்ற பொருள் வைத்திருப்பது தமிழில் மட்டும் தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. வீட்டை விட்டால்தான் மோட்சம் பெறமுடியும் என்று வடக்கு நினைக்கிறது. ஆனால் தமிழோவீடுகூட மோட்சத்தை அளிக்கவல்லது என்று நம்புகிறது. வடக்கே மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கான அடிப்படையாக நான்கு செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைதர்மம் அர்த்தம் காமம் மோட்சம்ஆகும்ஆனால் தமிழர்களது வாழ்வில் முதல் மூன்று மட்டுமே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தமிழர் வாழ்வியலில்அறம் பொருள் இன்பம் வீடுஆகியவற்றில் முதல் மூன்றை மட்டும் எழுதுபவர்கள் கடைசியான மோட்சத்தைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. அது implicit ! முதல் மூன்றையும் உருப்படியாக செய்தால் மோட்சம் தானாகவே வாய்க்கும் என்கிறார்கள்.

அகம் என்பது அன்பெனும் மனத்தின் உணர்ச்சியை மட்டும் குறிப்பதன்று, உடலையும் குறிக்கிறது. அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால், அகத்திக் கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது.

அகத்தியம் என்று ஒரு நூல் உண்டு இதை எழுதியவர் அகத்தியர். இவர் காலத்தால் தொல்காப்பியருக்கு முந்தியவர். இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று தமிழ் ஆய்வாளர்கள் உரைக்கின்றனர்இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான தமிழி இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு சங்ககால தொடக்கத்தில் எழுதப்பட்ட மூலநூலும் இதுவே என்று தமிழ் ஆய்வாளர்கள் ஐயம் திரிபுற உரைக்கின்றனர். அப்படியானால் சித்தர்களில் முதன்மை சித்தரான அகத்தியர்  தமிழுக்கான இலக்கணத்தை எங்கு அல்லது யாரிடம் கற்றார் எனும் கேள்வி எழுவதும் இயல்பே. தரவுகள் அடிப்படையில் பெருங்கல்சின்னங்கள்‌  காலம் முடிவுறும் சமயத்தில் தான் தமிழின் இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.

அகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை நாம் படித்தறிந்தோம். காமமாகிய காதல் உணர்ச்சி வேறு கடவுள் உணர்ச்சி வேறு அல்ல என்பதே தமிழர்கள் புரிதல். இதுதான் லிங்க வழிபாட்டுக்கும் பின்னணி என்பர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்கள் தற்போது பாக்கிஸ்தானில் உள்ளன. குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களை ஆரியர்கள் பயன்படுத்தியது போல, அந்த நாகரிக மக்கள் திமில் கொண்ட எருதுகளால் இழுக்கப்பட்ட வாகனங்களைக் கொண்டிருந்தனர் என்பது நமக்கு தெரியவருகிறது. அவற்றைக்குறிக்கும் சின்னங்களும் அங்கே நிறைய கிடைக்கின்றன.

 மேலும்; அங்கே கண்டெடுக்கப்பட்ட ஒரு சின்னத்தில்; விலங்குகள் சூழ யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஒருவரின் உருவம் லிங்கக்குறியோடு உள்ளது. பசுவை வீட்டு விலங்காக பழக்கிய அந்தசமூகம் பசுபதியைக் கொண்டாடியதில் வியப்பேதுமில்லை. அந்தச் சின்னத்தில் மீன்களையும் நீங்கள் அவதானித்திருக்கலாம்.  மீன்கள் அக்காலத்தைய முக்கிய உணவு. இது போன்ற உருவங்கள் சூழ இருக்கும் இச்சின்னம், பசுபதிக்கான உருவ வழிபாட்டின் பழங்காலத்தடயம் என்கின்றனர்


இதே போன்ற தலையை அலங்கரிக்கும் கொம்பு மற்றும் தோகைகளுடன் கூடிய தலைப்பை தமிழ்ப் பழங்குடிகளும் அணிந்திருப்பது வியப்பளிக்கக் கூடிய செய்தியாகும்.


டோனி ஜோசஃப்; ஹரப்பர்கள் பற்றிக்குறிப்பிடும் போது; பல தரவுகள் அடிப்படையில் அவர்கள் ஆரியத்தையும் திராவிடத்தையும் சுவிகரித்து உருவானவர்கள் என்கிறார். மேலும் தமிழர்கள் போன்ற திராவிடர்களின் பாரம்பரியம்  மொழி ரீதியிலானது. வடக்கில் இருக்கும் இந்திய-ஆரியர்களின் பாரம்பரியம்; கலாச்சார ரீதியானது என்பது அவரின் கூற்று. ஹரப்பர்களின் கலாச்சாரங்கள் அங்கு இடம் பெயர்ந்திருந்த இந்திய ஆரிய மொழி பேசியவர்களோடு இரண்டறக்கலந்து தனித்துவமான ஒரு பாரம்பரியத்தை உருவாக்கின. வடஇந்தியாவில் தற்பொழுது இருக்கும் இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்கள் தெற்காசியாவை வந்தடைந்த பிறகு; ஹரப்பர்களின் மொழி தென்னிந்தியாவிற்குள் சுருங்கி விட்டது. திராவிட மொழிக்குடும்பத்தின் பிராகுயி மொழி சமூகத்தின் வழி எஞ்சிய மக்கள், இன்று மிகவும் நவீன திராவிட மொழி பேசுபவர்களாக தென்னிந்தியாவில் வாழ்கின்றனர்.

இதுவரை இந்தியர்களின் மரபணுக்கள்ஈரானிய பீடபூமி விவசாயிகள்', 'பான்டிக்-காஸ்பியன் புல்வெளி மேய்ப்பாளர்கள்' மற்றும் 'அந்தமானீஸ் வேட்டையாடுபவர்கள்' எனும் மூன்று முன்னோடி மக்களின் மரபணுக்கள்; பல்வேறு சதவிகிதத்தில் கலந்துள்ளது எனக் கருதப்பட்டது.

2024 இல் வெளிவந்த ‘Novel 4,400-year-old ancestral component in a tribe speaking a Dravidian language எனும் ஆய்வுக்கட்டுரையில் தென்னிந்திய ஆதிகுடிகளான koraga குருதியில் 34% மேற்கு ஈரானில் இருக்கும்10,000 ஆண்டுகள் பழமையான மூதாதையரிடம் இருந்து பெறப்பட்ட மரபணுவோடு ஒத்துவருகிறது எனக்கண்டறியப்பட்டுள்ளது. குருபா, (Kuruba), குருபாகவுடாகுருமா மற்றும் குரும்பர் என்றும் அழைக்கப்படும் ஆதி மேய்ச்சல் சமூகமும், பணியர்கள் எனும் வேட்டைச் சமூகமும் இதுபோல கலப்பு மரபணுவைத்தான் கொண்டுள்ளனர் என்பதும் இவ்வாய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியர் யாரும் நூறு சதவிகிதம் கலப்பில்லா மரபணுவைக்கொண்டிருக்கவில்லை.  

குரும்பர்கள்/குறும்பர்கள் எனப்படும் சமூகத்தினர் தமிழகம்; கர்நாடகம்; ஆந்திரம்; மஹாராஷ்ட்டிரம் முதலிய பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் வழிபாட்டுமதனித்துவமானது. இவர்கள் பீரப்பா (வீரபத்திரர்எனும் மேய்ச்சல் நில தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களின் மற்றும் கொள்ளாக்களின் (யாதவர்கள்) வரலாறு oggu katha எனும் பாடல் வழி அறியக்கிடைக்கிறதுஅந்த கதையின் மெயின் ரோல் மூவருக்கு இருக்கிறது மல்லன்னா (மல்லிகார்ஜுனர்),  பீரப்பா, யெல்லம்மா (எல்லையம்மன் அல்லது மாரியம்மன்).  பானையை வனைய ஆரம்பித்த காலகட்டத்தில் மற்றும் விலங்குகளைப் பழக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தக்கதைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். பானை வனைவது விலங்குகளைப்பழக்குவது தொடர்பான சம்பவங்களே இக்கதைகளின் பேசுபொருளாய் உள்ளது. அதிலும் பீரப்பா ஆடுகளைப் பழக்கியவர் என்றறியப்படுகிறார்.

Oggu கதை ஒரு வகையான மேளத்தைக் கொண்டு இசைத்துப் பாடப்படுகிறது.

அது என்ன மேளம்?”

துடிப்பறை’.

படம்: oggu கதை கூறும் கலைஞர்: source - internet



குறும்பர்கள் பற்றிய சங்ககாலத்தரவுகளைக் காணும் போது, அவர்கள் தமிழகத்தின் பெரும் ஆதிக்குழுக்களாக இருந்திருக்கின்றனர். குறும்பு என்றால் கானகம் என்று பொருள். எனவே கானகத்தில் இருந்த அவர்கள் குறும்பர்கள்/ குரும்பர்கள் எனப்பட்டனர். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லைநில மக்களான இவர்களில் ஒரு பிரிவினர் குரும்பாடுகளை வீட்டுவிலங்காக்கியிருக்கின்றனர். வீரபத்திரரை வழிபடும் இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கர்நாடகா ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்கள் தங்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு, பீரய்யா) வழிபடுகின்றனர்பல கதைகள் அவரைச் சுற்றி உள்ளன. அவற்றைக் கொண்டு இவர்தான் தனது மக்களை மேய்ச்சல் சமூகமாக மாற்றியவர் எனும் கருதுகோளுக்கு இடம் அளிக்கிறது.

 சோழநாட்டிற்கு வடக்கே உள்ள பகுதியைத்தொண்டைநாடு என்று குறிப்பிடுவர். இப்பகுதியில்குறும்பர்‌, அருவாளர்என்னும்மக்கள்வாழ்ந்ததாகப்பழந்தமிழ்இலக்கியமும்மெக்கன்ஸியின் கையெழுத்துச் சுவடியும்தெரிவிக்கின்றன. இந்நாடு இருபிரிவுகளாகப்பிரிக்கப்பட்டிருந்தது. அவை அருவாநாடு, அருவாவடதலைநாடு என்பன. தமிழ்மொழி பேசிய மக்களை  ‘அரவர்‌’ என்னும்பெயரால்வடுகர்சுட்டினர்‌. அருவாளர்கள் வெளியில் இருந்து இங்கு வந்து குடியேறினர் என்ற குறிப்புகளும் உள்ளன. மேருவில் கடவுள்கள் அனைவரும் குடியேறியதால், வடக்கில் எடை அதிகரித்தது. அதனால் தெற்கு பக்கம் எடையை சமன் செய்ய அகத்தியர் அனுப்பப்பட்டாராம். போகும் வழியில் இருந்த துவாரகையின்நெடுமுடி அண்ணலின்அதாவது கண்ணனின்வம்சாவழியினரை (துவாரகை அப்போது கடலில் மூழ்கிவிட்டது) தெற்கே அழைத்து வந்து காடுகளை அகற்றி குடியேற்றினார். வேளிர் மற்றும் அருவாளர்களின் 18 குடும்பங்களை அங்கு குடியேற்றி விட்டு அவர் பொதிகையில் செட்டில் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி போன்ற வள்ளல்கள் அனைவரும் வேளிர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.

ஒமேகா அல்லது ஜாடி(ஜார்) என அழைக்கப்படும் ஒரு குறியீடு(சிம்பல்) ஹரப்ப நாகரிகத்தில் அதிகம் காணக்கிடைக்கிறதுஅய்யா ஐராவதம் மஹாதேவன். அது கமண்டலம் என்றும், திருப்பிப்போட்டால் லிங்கம் போல இருப்பதால் அது லிங்கச்சின்னம் என்றும் பலர் அதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரி பிறந்ததை இதோடு பொருத்தி பார்ப்பதையும் காணமுடிகிறாது.

கபிலர் தனது நண்பனான பாரியின் மறைவுக்குப் பின்னர், பாரியின் மகளிரை இருங்கோள்வேள் எனும் வேளிர் மன்னனுக்கு மணமுடிக்க வேண்டி ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதில் அவர் அவன் குடியைப் பற்றி புகழும் போது நாற்பத்தி ஒன்பது தலைமுறைகள் துவரையை (துவாரகையை) ஆண்ட வேளிர்களில் ஒருவனே என்கிறார். மேலும்வட பால் முனிவன் தடவினுள் தோன்றிஎன்கிறார். இதை வடநாட்டு முனிவரின் அக்கினிக் குண்டத்தில்/ கமண்டலத்தில் உதித்த குலத்தினர் வம்சம் என சிலர் பொழிப்புறை கொடுக்கின்றனர். அந்த முனிவர் சம்பு அல்லது அகத்திய முனியாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

அரவர்என்னும்சொல்லிற்கு  நாகர்என்னும்பொருளும்உண்டு. நாகர்மரபிலே தோன்றிய பீலிவளை என்ற பெண்ணிற்கும்தமிழகத்துக்சோழ அரசமரபைச்சேர்ந்த மன்னன்ஒருவனுக்கும்பிறந்த மகனைப்பற்றிய பேச்சு மணிமேகலையில்விரிவாகப்பேசப்படுகிறது. கள்ளர் வேடர்களில் நீலன், நாகன் என்கிற பெயர்களை சாதாரணமாய் காணலாம்நாகர்கள் கலப்பினால் பல இனங்கள் தமிழர்களுக்குள் தோன்றியிருக்கலாம். இவற்றையெல்லாம்ஒருங்கிணைத்து பார்க்கின்றபொழுது தற்போதைய தமிழர்கள் மரபணுவில் நாகர் மரபணுவின் கலப்பு அதிகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

வேட்டுவ குடிக்கள் மேய்ச்சல் சமூகமாக சமுதாய வளர்ச்சியின் அடுத்த அடியினை எடுத்து  வைக்க இக்குறிஞ்சி வனம் பங்காற்றியதை குரும்பர்கள் கதைகளின் மூலம் நாம் அறிய முடிகிறது. வேட்டுவ சமூகத்தினருக்கும் மேய்ச்சல் சமூகத்தினருக்கும் வருடம் முழுவதும் உணவு வழங்கியது குறிஞ்சியின் வளம். எனவே அள்ளித்தந்த பூமியை அன்னையென போற்றினார்கள் அந்த ஆதித்தமிழர்கள்.

தேவைக்கு ஈவதே இயற்கையின் குணம். ஆனால் தேவைக்கு இடமளிக்கும் இயற்கையிடம் பேராசைக்கு இடமில்லை. பேராசை என்பது ஈசனின் கையில் இருக்கும் கபாலம். உலகையே கொடுத்தாலும் அதற்குப் போதாது.

உங்கள் தேவையைப்பெற நீங்கள்   இயற்கையின் ஒரு அங்கமாய் விளங்க வேண்டும், அது உண்டாக்கிய உயிர் சுழற்சியில் பங்குகொள்ள வேண்டும்நீலகிரி உயிர்க்கோளத்தில் குடிபுகுந்த மனிதர்களும் அந்த உயிர் சுழற்சியின் ஒரு அங்கமாய் விளங்கினர். அவற்றை தெய்வமென போற்றிப் பாதுகாத்தனர்.

  தேவையென அடைக்கலம் தேடிவந்த நம் ஆதிகுடிகளுக்கு அன்னையாய் தெரிந்த இதே வனம், வியாபாரத் தொழில் புரிய வந்தவர்களுக்கு கச்சாப் பொருளாய் தோன்றியது.

நமது குறிஞ்சி நிலத்தைப் பற்றிய வெள்ளையன் பார்வை பின்வருமாறு இருந்தது. நல்ல சீதோசனநிலை, பரந்துவிரிந்த புல்வெளி, அதில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் காடுகள். ஆனால் ஆல்ப்ஸ்மலை பைன் மரங்களின் சீரான வளர்ச்சி போலல்லாது நெட்டையும்  குட்டையுமாய் சமமற்ற மரங்கள் கொண்ட பயனற்ற காடுகள்.

இந்த பயனற்ற காட்டை எப்படி பயனுள்ளதாக மாற்றி வருமானத்தை பெருக்குவது?

அற்புதமண் கொண்ட இக்காட்டில் சமமான உயரம் கொண்ட பைன், வாட்டில் மற்றும் தைல மரங்கள் நடப்பட்டன. அவற்றின் மூலம் ரயில் தண்டவாளங்களை அமைக்கவும், எரிபொருளாகப் பயன்படுத்தவும் நல்ல கட்டைகள் கிடைத்தன. மேலும் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான டானினும் கிடைத்தது.

"பயனுள்ள செடிகள் ஏதுமற்ற புல்வெளியை என்ன செய்யலாம்? "

 மேய்ச்சல் நிலமாய் பயன்படுத்தலாம் என்றால் பிரீசியன் மாடுகள் கடிக்கவியலா பெயர் தெரியா புல் வகைகள் நிறைந்துள்ளதே?

வெள்ளையர்களின் அக்காலத்தைய அறிவு 'புல்லு குடுத்தா பாலு குடுக்கும்' என்ற அளவிலே தான் இருந்தது. அவர்கள் ஆராய்ச்சியின்படி நல்ல நார்சத்து தரக்கூடிய கடிப்பதற்கு எளிதானகிக்கியு’  புல்லை வளரவிட்டால் அது வேகமாக எளிதில் பரவி புல்வெளியை ஆக்கிரமித்துவிடும், புரதச்சத்துக்கு 'க்ளோவரை' பரவவிட்டால் செலவில்லா நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அந்த மாடுகளுக்கு எளிதில் கிடைத்துவிடும் எனும் எண்ணத்தில் நமது புல்வெளிகள் மேற்கூறிய தாவரங்களைக்கொண்டு மாற்றியமைக்கப்பட்டது. விளைவு... நிலச்சரிவு.

"பெயர் தெரியா காட்டுப் பழங்களில் என்ன சக்தி இருக்க போகிறது? "

ஒற்றை ஆப்பிளைக் கொண்டு டாக்டரை துரத்தி விடலாம் எனும் அறிவியல் ஞானம் கொண்ட அவர்களுக்கு நமது தாவரங்கள் களைச் செடிகளாகத் தான் தோன்றின. எனவே கேரட்களும் முட்டைக்கோசுகளும் அங்கே நடப்பட்டன .

இதை கூட ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளலாம், ஆனால் தேஜஸை பெருக்க தேநீரையும் களைப்பைப் போக்க காப்பியையும் மலையெங்கும் பயிரிட ஆரம்பித்தனர். விளைவு நமது அருந்தமிழ்க்  காடு, எரியும் பனிக்காடு ஆனது.

அவர்கள் அழகுக்கு வளர்த்த உண்ணிச்செடி மற்றும் பார்த்தீனியம் செடி வனம் எங்கும் பரவின. அதனால் மேய்ச்சல் நிலம் இழந்த யானைகளும் எருதுகளும் ஊர் புகுந்தன. இதுவரை கணேசனை தொழுத கைகள் தீப்பந்தம் நாடின.





 

87 சதவீதம் இருந்த புல்வெளியில் இப்பொழுது 15 சதவீதம் சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது. மேலும் நமது அதிமுக்கிய பல்லுயிர்க்கோளம் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுவிட்டது.

மடியை அறுத்து விட்டு பால் வரவில்லை என பிதற்றுபவன் போல், மலையை சிரைத்து விட்டு கடைசியில் காவிரியும் கைவிரித்து விட்டதே என புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

வெள்ளைக்காரர்கள் போயிட்டாங்கநாம என்ன இந்த இடத்தில் செய்கின்றோம் எனப்பார்ப்போமா?


இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் சின்ன bubble தான் நாம் பயன்படுத்தத் தகுந்த freshwater. இது இரண்டு வகைப்படும். Groundwater மற்றும் Surface water. Ground water/Freshwater – கடல்மழைகாடுகள்மரங்கள்உயிரினங்கள்விவசாயம்காவிரிதமிழர்.... எல்லாவற்றிக்கும் தொடர்ப்பிருக்கிறது. இது ஒரு Complex cycle. அதனுடையே அருமை தெரியாமல் ரொம்பவும் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறோம். சில அடிப்படைகளை புரிந்துகொண்டாலன்றி அலட்சியத்தின் முழு வீரியமும் புரியாது.

ஏன் எப்பொழுதும் வானத்தில் மேகங்கள் இருக்கின்றன? ஏன் எப்பொழுதும் கடலில் நீரின் அளவு ஒரு நிலையிலேயே இருக்கிறது? எளிமையான காரணங்கள். இதுவொரு endless cycle. கடல் நீர் ஆவியாகி மேலே செல்கின்றன(Evaporation) -> ஆவி, கொஞ்சகொஞ்சமாக உறைந்து மேகமாகிறது(Condensation) --> வெப்ப சலனங்கள் காரணமாக மேகம் தேக்கி வைத்திருக்கும் நீர் உடைந்து மழையாகப் பொழிகிறது(Precipitation).

எப்படி கடல் நீர் ஆவியாகிறதோ, அதுபோல மரங்கள்/செடிகொடிகளும் தாங்கள் உறிஞ்சிய நீரை ஆவியாக்குகிறது (Evapotranspiration). நமது வீட்டு வாசலில் இருக்கும்நன்றாக வளர்ந்த/வயதான மரம், நாள் ஒன்றிக்கு எவ்வளவு நீரை ஆவியாக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? 500 – 800 லிட்டர்ஸ். சதவீத அடிப்படையில்கடலிலிருந்து ஆவியாகும் நீரின் அளவு மரங்கள்/செடிகள் வெளியிடும் நீரின் அளவைவிட அதிகம். Obviously. 70% பூமியில் கடல் நீர்தானே. இவ்வளவு கடல் நீர் இருக்கிறதே... பிறகெதற்கு மழைக்கு மரங்களை மட்டும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது? காடுகளைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டியிருக்கிறது? இங்குதான் சிக்கல். கடலிலிருந்து ஆவியாகும் நீர் பெரும்பாலும் கடற்கரையிலிருந்து 250 கிலோமீட்டருக்குள் மழையாக பெய்துவிடுகிறது (காற்றழுத்த தாழ்வு நிலை/புயல் மாதிரி எதாவது மேகங்களை தள்ளிக்கொண்டு சென்றால் தான் உண்டு). மீதி பகுதிகளில்  மரங்களின் evapotranspiration பல வெப்ப/காற்று சலனங்களை ஏற்படுத்துகிறது. மரங்கள் எவ்வாறு மேகங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என்பதைப்பற்றியெல்லாம் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல முடிவுகள் படிக்கவே அட்டகாசமாக இருக்கின்றன.

ஸ்கூல் பசங்களுக்கு சொல்லித்தரப்படும் (சொல்லி மட்டுமே தரப்படும்) இந்தத் தகவல்கள் எல்லாம் எதற்கு? நிற்க: Western Ghats. 1,60,000 சதுர கிலோமீட்டர். எத்தனை மரங்கள்... நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அந்த மரங்களிலிருந்து வெளியேறும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதைத்தாண்டி, எடுத்தஎடுப்பிலேயே UNESCO மேற்குத்தொடர்ச்சி மலை பற்றி என்ன சொல்கிறது... best examples of the monsoon system on the planet. இதுவும் போதாதென்று மேற்குத்தொடர்ச்சி மலை நமக்குத்தரும் கொடைகளில் முக்கியமான மூன்று விஷயங்கள்: கோதாவரி, கிருஷ்ணா, காவேரி. இம்மூன்று நதிகளையும் தாண்டி, துங்கபத்ரா, தாமிரபரணி போன்ற ஆறுகளையும் அதன் கிளையாறுகளையும் கணக்கெடுத்தால் ஒரு பக்கத்திற்கு லிஸ்ட் போடலாம். Change analysis has revealed the net loss of 35.3% of forest area in the Western Ghats from 1920’s to 2013 என்று ஆய்வுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.

இந்த அழிவிற்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? ஏகத்துக்கும் இருக்கிறது. 1920ல் ஒரு லட்சம் ஹெக்டரில் மரங்கள் இருந்தன என்று வைத்துக்கொள்வோம். அத்தனை மரங்கள் சேர்ந்து செய்யும் evapotranspiration + வெப்பநிலை/காற்று சலனங்களினால் கோவாவில் ஆரம்பித்து தமிழ்நாடு வரை மழை அளவு ஒருமாதிரி இருந்திருக்கும் அல்லவா. இப்பொழுது, ஒரு லட்சம் ஹெக்டர் 64,000மாக குறைந்திருக்கிறது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ?

சீரான மழை இருக்காது, ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒன்றிரண்டு நாட்களில் பெய்து முடித்துவிடும்; இல்லை பொய்த்துப்போக நேரிடும். நான் சொல்லவில்லை. IISc யின் விரிவான ஸ்டடி ஒன்று சொல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மழை அளவு குறைவாகவே இருக்குமென்று. கர்னாடகா தான் இதில் மிகவும் பாதிப்படையக்கூடுமென்றும் இந்த ஸ்டடி கூறுகிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கான மழை அளவு கணிப்பு ஆய்வுகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஒருசில மாதங்கள் தவிர, பல மாதங்களில் மழை அளவு சீரற்றதாகவே உள்ளது. குவாரிகளில் ஆரம்பித்து விவசாயம் வரை deforestrationனுக்கான பல காரணிகளுண்டு. உதாரணத்திற்கு விவசாயம். மலைப்பகுதியை ஆக்ரமித்து (மண்வளம் காரணமாக) விவசாயம் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது. விளைவு? 2003 – 2012. பத்தே வருடம். எவ்வாறு விவசாயம் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இருப்பதிலேயே Southern Western Ghatsல்(கர்னாடகா - தமிழ்நாடு - கேரளா) தான் பாதிப்பதிகம்.

படம்: பெயர்த்து எடுக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள்


மழை பெய்தது/பெய்கிறது/பெய்யப் போகிறது. அடுத்து? இந்த கட்டம்தான் மிகமிக முக்கியமானது. எவ்வளவு கவனமாக நாம் செயல்பட வேண்டும், அசட்டையாக நாம் செய்யும் காரியங்களினால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்... ஏகப்பட்ட விஷயங்களை புரிந்துக்கொள்ள Groundwater/Surface water பற்றிய புரிதல் மிகமிக தேவையானது

Surface water: குளம், குட்டை, ஆறுகள், ஏரிகள்இவைகள் அனைத்துமே surface water. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர். மழை பெய்தவுடன், மேடான பகுதியிலிருந்து இறக்கமான பகுதிக்கு நீர் ஓடும். நடுவில் பள்ளம் (குளம், குட்டை, ஏரி) இருந்தால் அங்கே தேங்கி நின்றுவிடும். Western ghatsசில் பெய்யும் மழையால், கிட்டத்தட்ட 2800m உயரம் என்பதால் மழைநீர் ஒன்று சேர்ந்து(காவேரி) பள்ளத்தை நோக்கி ஓடுகிறது. பள்ளம் ? கடல் தான். பல மில்லியன் வருடங்களாக இந்த process நடந்துகொண்டிருக்கிறது. இந்த natural flow தடைப்பட்டால்ஆற்றுப் பாதையில் ஆக்கிரமிப்பு மாதிரிஎன்னாகும். Simple. சென்னை டிசம்பர் 2015.

Groundwater: மழை அடித்துத் துவைத்திருக்கும். ஆனால் அடுத்தநாள், சுத்தமாக எல்லா நீரும் காணாமல் போயிருக்கும். அட பகல் நேரமாக இருந்தால்கூட ஆவியாகியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். இரவு நேரத்தில் எங்கே போயிருக்கும் ? Of course, எல்லாருக்கும் தெரிந்ததுதான். பூமி உறிஞ்சிக்கொள்ளும். பூமி என்ற வஸ்து என்று தோன்றியதோ, எப்பொழுதிருந்து மழை பெய்ய ஆரம்பித்ததோ எப்பொழுது நதிகள் ஆறுகள் ஓட ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பூமி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது. அந்த நீர் எங்கே போகும் ? Aquifers. எளிமையாக சொல்வதென்றால், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை இடுக்குகள். நமது பூமிக்கடியில் எல்லா இடங்களிலும் நிலத்தடி நீருண்டு. அது எந்த மட்டத்தில், எந்த மாதிரியான பாறைகளுக்கு நடுவில் என்பதுதான் கேள்விஇந்த நிலத்தடி நீர், gravityயின் காரணமாக கடல் மட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பாறைகளமைப்பு, மண் தன்மை போன்ற காரணிகளால் இந்தநகர்தல்சில சமயம் மிகமிகமிக மெதுவாக ஆண்டுக்கணக்காக நடைபெறும். சில சமயம் மிக வேகமாக ஒரேநாளில் கூட நகர்வதுண்டு.Riparian zone - இது மிக முக்கியமானது. ஆறு/நதி ஓரங்களில் இருக்கும் நில/காடு பரப்புகளுக்கு riparian zone/forests என்று பெயர். மிகவும் வளமையான பகுதிகள் இவை. ஏகப்பட்ட உயிரினங்கள் இந்த riparian zoneகளை நம்பியுள்ளன.

Surface waterக்கும் Groundwaterக்கும் இருக்கும் பல முக்கிய வேறுபாடுகளில் ஒன்றுதூய்மைத்தன்மை. நிலத்தடி நீர் பூமிக்கடியில் இருப்பதால், surface waterல் இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்றவைகளோ, கழிவுகளோ இருக்காது. அடியில் போகப்போக Filterராகிவிடும். மாறாக, contamination இருக்கும். குறிப்பாக வேதிப்பொருட்கள். நிலத்தடிநீர் மெதுவாக நகர்வதால்ரசாயன வேதி பொருட்கள் எல்லாம் உள்ளே இறங்கி இறங்கி தங்கி நச்சுத்தன்மை கூடும். Surface waterல் இருக்கும் கழிவுகளைக்கூட கொஞ்சம் சிரமப்பட்டு சரிசெய்து விடலாம். ஆனால் அந்த surface waterரை ஆண்டுக்கணக்கில் உறிஞ்சிகொண்டே இருக்கும் நிலத்தடி நீரில் படிந்த வேதிபபொருட்களை நீக்குவது முடியாத காரியம். இதனால்தான் பலரும் தோல் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் வரை ஆறுகளில் முறையில்லாமல் கலப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

நீர்தான் அனைத்திற்கும் ஆதாரம். நதியின் மடியில் தான் நாகரிகங்கள் தோன்றின. ஆதிமனிதர்கள் நீரின் அருகிலே தான் குடியமர்ந்து தத்தமது நாகரிகங்களுக்கான அடித்தளத்தை அமைத்தனர். நம் நாரிகமும் இவ்வாறே அமையப்பெற்றது. அதன் காரணமாகவே இவ்வுலகானது நீரின்றி அமையாது எனத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனை முறையாகப் பாதுகாத்து பயன்படுத்துதலே ஒரு நாகரிகம் நீடித்திருப்பதற்கான முக்கிய பண்பு. அந்த நீராதாரம் இல்லை என்றால்; குறிஞ்சியும் முல்லையும் அதில் வசிக்கும் மக்களும் தம் நல் இயல்பினை இழந்துவிடுவர்.






















 






























 




No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஏர் முன்னது எருது - 5

  மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் காலம் : கற்காலம் .   இடம் : மேற்குத் தொடர்ச்சி மலை . “ இந்த அடர்வனத்தி...