ஒரு காலத்தில் மருந்தாக இருந்த வெண்பாஷாணம் அவரது ரத்தத்தில் ஒரு சாபமென நெளிந்து ஓடியது. ஆனால் ஆர்சனிக்கை நிறுத்தியபோது, தெளிவு திரும்பவில்லை. மாறாக, உலகம் உடைந்தது. புலப்படாத புலன்களின் தோற்றங்கள் மலர்ந்தன. நெருப்பில் உருக்குலைந்த அவரது தாயின் உருவம், ரத்தம் தோய்ந்த அவரது தந்தையின் உருவம், சேற்றை வீசி எரியும் சிறுவர்களின் தோற்றம் போன்ற மாய உருவங்கள் பூதாகரமாக அவரின் மணக்கண்ணில் நிழலாடியபடி இருந்தன. அவரது உடல் இயற்கைக்கு மாறாகத் துடித்தது. ஆனால் அவர் தனியாக இல்லை. அவரது உற்ற தோழனான நந்தன் அவர் மயக்கமடையும் பொழுதும், மனப்பிரம்மையால் பிதற்றும் பொழுதும், கல்லிச்சி மரங்களின் கீழ் அவரை இளைப்பாற வைத்து நாவால் வருடிக் கொடுத்தபடி இருந்தான்.
இவ்வாறான வலிகளோடு அவர் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.அவரது பயணங்கள் நீண்டு கொண்டே இருந்தது. தாமிரபரணி ஆறு மேல்நோக்கி செல்லச் செல்ல மெலிந்தது. பெரிய பாலக்காடு இடைவெளி வழியாக, காற்று கட்டவிழ்ந்த மிருகம்போல் உறுமியது. அது காட்டின் பச்சை வாசனையையும், தொலைவில் யானைகளின் பிளிரல் ஓசைகளையும் கொண்டு வந்தது. அந்தி நேரத்தில்,மரங்களிடையே சாம்பல் நிற நிழல்களாக யானைகள் தோன்றின. நந்தன் அவற்றை உன்னிப்பாகப் பார்த்தான். சிவன் எதையும் பார்க்கவில்லை. அவர் நோயின் பிடியில் சிக்கி இருந்தார். அவரது பார்வை உள்நோக்கி இருந்தது. அவர்கள் முன்னோக்கி செல்லச் செல்ல வனம் விரிந்தது. பெரும் சமவெளிகள் அவர்கள் முன் திறந்தன, அவை வெயிலில் எரிந்து பொன்னிறமாக மின்னின. அங்கே மான்கள் துள்ளின. மேலே பருந்துகள் வட்டமிட்டன. நொய்யல் ஆற்றின் வளைவில், அவர்கள் நீர் அருந்தினர். சிவன் ஓய்வெடுக்க முயன்றார், ஆனால் தூக்கமும் அவரை ஏமாற்றியது. கல் இச்சி மரங்களின் கீழ், அவர் துடிதுடித்தபடி புரண்டு கிடந்தார் .
வாரங்கள் கழிந்தன. அவர்கள் மைசூர் பீடபூமியைக் கடந்தனர். பாதைகள் பிலிகிரி ரங்கன மலைகள் வழியாக வளைந்து நெளிந்து சென்றது. அங்கு, சிவனின் அறிகுறிகள் மோசமடைந்தன. காய்ச்சலின் வேகம் அதிகரித்தது. நந்தன் சோர்வடையவில்லை சிவனை தாங்கியபடி ஒரு மந்திர சொல்லுக்கு கட்டுண்டது போல அவன் முன்னேறி சென்று கொண்டே இருந்தான். அவர்கள் பெல்லாரியை நெருங்கினர்.
தக்காண பீடபூமி பீடபூமி சிவப்புக் கடலென அவர்கள் முன் விரிந்தது. தக்காண பீடபூமியின் பாறைகள் கூர்மையாக இருந்தன, காற்று உலர்ந்து இருந்தது. தொலைவில் துங்கபத்திரை ஆறு முணுமுணுத்தது. ஆனால் சிவனது சிந்தையை கவர்ந்தது அந்த ஆறு அல்ல. அங்கிருந்த பூமியே அவரது சிந்தனையை கவர்ந்தது. அந்த பூமியின் மேற்பரப்புக்கு கீழே, மாக்னடைட் மற்றும் குவார்ட்சைட் தாதுக்கள் நரம்புகள் போல நெளிந்து ஓடியது. அது சிவனது நாடியை படபடக்க வைத்தது. இந்தப் பாறைகளின் கீழே இருக்கும் கனிமங்கள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன. வேறு ஏதேனும் பாஷாணம் இங்கு இருக்கக் கூடும் என அவர் நம்பினார். அந்த தாதுக்கள் அவரது நோயினை தணிக்கக்கூடும் என்று அவருக்கு தோன்றியது. இந்த நிலத்தில் எங்கோ, அவரது நோய்க்கு மருந்து இருப்பதாக அவர் நம்பினார்.
அந்த நிலத்தின் பெயர் குப்கல். அது ஒரு வறண்ட பிரதேசம் அங்கு நிலம் வேறுபட்டிருந்தது . காற்றில் உள்ள மொழி மாறியிருந்தது. அங்கிருந்த மக்களின் வார்த்தைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன. அந்த வார்த்தைகள் திராவிட வார்த்தைகளாக இருந்தாலும் மிக நுட்பமான மாற்றத்தினை அது கொண்டிருந்தது.
அந்த மொழி மலைகளாலும் காலத்தாலும் பிரிக்கப்பட்ட தமிழின் உடன்பிறந்த மொழி. அங்கே மொழி பிரிந்து இரு கிளைகளாக வளர்ந்திருந்தது. அது முழுமையாக இப்போதைய கன்னடம் போல் இருக்கவில்லை. அது இப்பொழுது தான் குழந்தை பருவத்தை அடைந்திருக்கும் கன்னட மொழி. அது தமிழின் சாயலையே அதிகம் கொண்டிருந்தது.
அங்கு தமிழின் உடன்பிறப்பான கன்னட மொழி மட்டும் செழிக்கவில்லை. சிவனின் ரத்த பந்தம் ஒன்றும் அங்கே உலாவிக்கொண்டிருந்ததை சிவன் அறிய மாட்டார். அந்த ரத்த பந்தத்தின் பெயர் பத்ரன்... வீரபத்திரன்.
பத்ரன், சிவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவன். ஆனால் சிவனின் தந்தையைப் போல கருமையான தோலுடையவன். பத்ரன் அவனது தந்தையைப் போலவே புலிகளோடு சமர் செய்தவன். அதனால் வீரப்பன், வீரையன் போன்ற காரணப் பெயர்களால் அவன் அழைக்கப்படலானான். அங்கே மக்கள் வழக்கில் இருந்த ஆதி கன்னட மொழியின் உச்சரிப்புகள் சற்று வித்தியாசமானது. அதனால் அங்கே அவன் பீரப்பா, பீரய்யா என அழைக்கப்பட்டான்.
சங்கனகல்லு எனப்படும் குப்கலில் தன் மக்களுடன் அவன் மிகப்பெரும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். பீரப்பா குலத்தினர் மலைவாழ் மக்கள், அவர்கள் ஒரு காலத்தில் வேட்டையாடிகள், இப்போது ஆயர்கள். அவர்கள் போராட்டம் மிகுந்த வாழ்க்கை முறையினைக் கொண்ட வேட்டையாடி சமூகமாய் இருப்பதைக் காட்டிலும், உணவையும் அமைதியையும் நிரந்தரமாக வழங்கும் மேய்ச்சல் வாழ்வுமுறையைத் தேர்ந்தெடுத்தனர். டெக்கானின் கொளுத்தும் வெயிலைத் தாங்கும் ஒரு வலிமையான ஆட்டு இனத்தை அவர்கள் வளர்த்து வந்தனர்.
அவர்களின் தலைவன், பீரப்பா, புலியை கைகளால் வேட்டையாடிய புராண நாயகன். அவனது புலித்தோல் உடையும், செம்புக் காப்பை அணிந்திருந்த உறுதியான கைகளும் அவனது கடந்த காலத்து வேட்டையாடி வாழ்வையும் , அசைக்க முடியாத வலிமையையும் பறைசாற்றின.
அமைதியை வேண்டிய அவர்களது வாழ்வில் அமைதி நிலைக்கவில்லை. கிழக்குத் தாழ்நில விவசாயக் குடியிருப்புகளிலிருந்து பிரச்சினை வந்தது. அந்த இடத்தின் பெயர் கல்யாணப்பட்டணம்.
மேய்ப்பர்கள் வாழ்ந்து வந்த இடத்தில் கடந்த இரு ஆண்டுகளாக துளியும் மழை பெய்யவில்லை. அதனால் சற்றே பசுமை மிச்சம் இருந்த கல்யாணபட்டிணத்து நிலத்தை நோக்கி மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றனர். மேய்ப்பர்களின் அலைந்து திரியும் ஆடுகள் தங்கள் வறண்ட வயல்களை சேதப்படுத்தி விடுமோ என கவலைப்பட்ட கல்யாணப்பட்டணக் குடியிருப்பாளர்கள் மேய்ப்பர்களைத் தாக்கினர்.
இந்தத் தாக்குதல் வஞ்சத்தால் விளைந்தது அல்ல. இது தோல்வியடைந்த பருவம், குறைந்து வந்த உணவின் இருப்பு, மற்றும் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட வன்முறையால் பிறந்தது. தற்பொழுது மேய்ப்பர்களாகக் காட்சியளிக்கும் அவர்கள் முன்பு புலிகளையும் வேங்கைகளையும் வலுவோடு எதிர்த்த மலைவாழ் மக்கள். அவர்களுக்கு தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. ஆடுகளைக் காக்க அவர்கள் திருப்பித் தாக்கினர்.
இப்பொழுது ஆடுகள் மீது இருந்த வெறுப்பு மெல்ல மெல்ல குரோதமாக உருமாறியது. கல்யாணப்பட்டணத்து வீரர்கள் ஒன்று கூடி ஆயர்களின் ஆடுகளை சிறைபிடித்தனர்.சிறைபிடிக்க வரும்போது அவர்களின் கழுத்தில் வெட்சிப்பூவினால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்தனர். இது போருக்கு அழைப்பு விடும் ஒரு சடங்கு.
பதிலுக்கு, பீரப்பாவின் குலம் பழிவாங்கத் தயாரானது. அங்கிருந்த ஹிரேகுட்ட மலையின் பாறைகள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. அந்த மலையானது பெரும் கிரானைட் பாறைகளால் ஆனது. கிரானைட் பாறைகளுக்கு இடையே, டோலரைட் கற்கள் பாறையை பிளக்கும் ஒரு கத்தியை போல் மலைக்கு இடையில் ஓடியது. அந்த கற்களே அங்கிருந்த பழங்குடியினரது ஆயுதம்.
அந்த ஆயுதங்களின் செயல்முறை கற்களை உடைப்பதில் இருந்து தொடங்கியது. டோலரைட் கற்களை உடைத்து தடிமனைக் குறைத்து அளவான கோடரிகளை செய்வதற்கு அங்கிருந்த மெல்லிய பாறைகள் பயன்பட்டன. சிறிய குழிகளில் உரசி உரசி அவை கூர் தீட்டப்பட்டன.
படம் : பாறைகள் எப்படி கோடரிகளாக உருமாற்றம் அடைகின்றன என்பதைப் பற்றி விளக்கும் படம். source: Roberto Risch எழுதிய The Prehistoric Axe Factory at Sanganakallu-Kupgal (Bellary District), Southern India. எனும் ஆய்வுக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.
ஒரு தொழிற்சாலையைப் போல் அங்கே கற்போடரிகளும் கல்லாயுதங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது . ஆண்களும் பெண்களும் வட்ட வடிவில் அமர்ந்து பெரும் போருக்கான ஆயுதங்களை அங்கே அந்தத் தொழிற்சாலையில் செய்து கொண்டிருந்தனர்.
ஆயுதங்களை செய்த பின்னர் அவர்கள் கரந்தைப் பூ மலர்களால் ஆன மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அவர்கள் அந்த பீடபூமியின் பாறைகளால் ஆன இளைப்பாரும் இடத்தில் ஒன்று கூடினர்.
படம்: Birappa Rock Shelter, Kappagallu. source: Journeys across Karnataka blog.
பயணத்திற்கு முன், அவர்கள் ஒரு வீரக்கல்லைச் சுற்றி கூடினர். போரில் வீழ்ந்த வீரனின் புதைக்கப்பட்ட நினைவுக் கல் அது. அவனது இரத்தம் இன்னும் அவர்களில் ஓடுவதாக, அவனது தைரியம் அவர்களின் இதயங்களில் எதிரொலிப்பதாக அந்த மக்கள் நம்பினர். அவர்கள் ஒரு ஆடு மற்றும் காட்டுப்பன்றியை அந்த வீர கல்லின் முன் பலியிட்டு அவனது ஆசியை வேண்டி நின்றனர். அங்கே ஒரு மூப்பரின் மீது அந்த வீரனின் ஆவி இறங்கி அங்கிருப்பவர்களுக்கு ஆசி வழங்கியது.
அதன் பின்பு அவர்கள் வெற்றிக் கூச்சலிட்டனர். பறைகள் இசைக்கப்பட்டன. அது போரின் அறைகூவல். அங்கே அனைவருக்கும் முன்பு பீரப்பா கவர்ந்து செல்லப்பட்ட ஆடுகளை மீட்பேன் என உறுதிமொழி எடுத்தான். பின்னர் கவர்ந்து செல்லப்பட்ட தங்கள் ஆடுகளை நோக்கி அவர்கள் ஆயுதம் ஏந்தி சென்றனர்.
ஒரு மலைமுகட்டிற்கு மிக அருகில் இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். போர்முரசு கொட்டப்பட்டது. சண்டை துவங்கியது.
அவர்களின் கண்களுக்குத் தென்படாத உயரமான ஒரு குன்றின் மீது சிவன் நடப்பதை பார்த்தவாறு நின்றிருந்தார். சிவன் அங்கே உள்ள பாறை முகட்டின் கீழ் சுருண்டு கிடந்தார். தக்கான பீடபூமியின் எரியும் வெப்பம் அவரது அறிகுறிகளை தீவிரப்படுத்தியது. அவர் ஒரு அரை மயக்க நிலையில் நடப்பதை கவனித்து வந்தார். அவரது உற்ற நண்பன் நந்தன், அருகில் மேய்ந்து கொண்டிருந்தான்.
போர் மிருகத்தனமாக இருந்தது. கற்களால் செய்யப்பட்ட ஈட்டிகளும் கோடரிகளும் எலும்புகளை நொறுக்கின, சதைகளைக் கிழித்தன, அங்கிருந்த செம்மண் மேலும் குருதியால் சிவக்க வைக்கப்பட்டது. அந்த இடம் முழுவதும் புழுதி சூழ்ந்தது. மரண ஓலமும் ஆவேசக் கூச்சல்களும் காற்றில் எதிரொலித்தது.
இப்போரில் வஞ்சகர் என்றும் யாரும் இல்லை. இரு பக்கத்தினருக்கும் தங்களுக்கான ஒரு நியாயத்தை கொண்டிருந்தனர். கல்யாணப்பட்டண வீரர்கள் வளமான நிலங்களைப் பாதுகாக்க போராடினர். பீரப்பாவின் குலம் தங்கள் ஆடுகளைப் பாதுகாக்க போராடியது. தக்கான பீடபூமியின் வறண்ட நிலங்கள் ஆண்டில் சில மாதங்களே மேய்ச்சல் அல்லது விதைப்புக்கு உகந்தவை. அந்த நிலம் இரண்டு வகையான குலத்தவருக்கும் தேவையாய் இருந்தது. பற்றாக்குறை வன்மத்தையும் வெறுப்பையும் போட்டியையும் உருவாக்கியது. இங்கு யாரின் மீதும் குற்றமில்லை.
ஆனால் எண்ணிக்கையைப் பொருத்தவரை இந்த சண்டை சமமானதாக இல்லை. பீரப்பாவின் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் கல்யாணபட்டிண வீரர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதனால் பீரப்பாவின் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்கினர். இருப்பினும் பீரப்பாவை எவராலும் தொட முடியவில்லை. அவன் ஒரு புயல். அந்தப் புயல் செல்லும் இடமெல்லாம் எதிரணி வீரர்கள் வெட்டப்பட்ட வாழைமரம் போல் வீழத் தொடங்கினர்.
தொலைவில், நந்தன் எதிரிகளால் சூழப்பட்ட அந்த கருமையான தோல் கொண்ட வீரனை உற்றுப் பார்த்தான். அவனது தோள்களின் வளைவு, அவனது கண்களில் உள்ள நெருப்பு, அவனது புஜங்கள், அவனது ஆற்றல் அனைத்தும் சிவனைப் போலவே இருந்தது. சிவனின் மறுபிறப்பு போல் அவன் தோன்றினான். நந்தன் ஆச்சரியம் மேலிட சிவனையும் பீரப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். பீரப்பா கருமை நிறைந்த சிவனின் பிரதி போல நந்தனுக்குத் தோன்றினான். நந்தன் சண்டை நடக்கும் அந்த இடத்தை நோக்கி முன்னேறினான்.
அவன் முன்னேறிய அதே சமயம் கல்யாணபட்டிணத்து விவசாய குலத் தலைவன் பசவண்ணாவின் மகனால் வீசப்பட்ட ஒரு ஈட்டி பீரப்பாவை நோக்கி காற்றில் பறந்து வந்தது. அந்த தாக்குதலை பீரப்பா அறியவில்லை. ஆனால் நந்தன் அதை பார்த்துவிட்டான். உள்ளுணர்வு உந்துதலால், நந்தன் நாலு கால் பாய்ச்சலில் முன்னோக்கி ஓடினான். நந்தனின் கொம்புகள் பாய்ந்து வந்த ஈட்டியைச் சந்தித்தது. செம்பு முனை கொண்ட மரத்தாலான அந்த கூரான ஈட்டி சிதறி விழுந்தது. பீரப்பா ஆச்சரியமும் அதிர்ச்சியும் மேலிட நந்தனின் கண்களை சந்தித்தான்.
பீரப்பாவை தன் மீது ஏற்றிக்கொள்ளத் தயாராக நந்தன் மண்டியிட்டு பீரப்பாவின் முன் நின்றான், நந்தனின் குளம்புகள் பாய்வதற்குத் தயாராக காத்திருந்தது.
பீரப்பா, கண நேரத்தில், அந்த அழைப்பை புரிந்து கொண்டான். அவன் நந்தனின் மேலேறினான்.
பின்னர் நடந்தது புராணமானது. வீரன் புயலைப் போல் எதிரி வரிசைகளைத் தகர்த்தான். பயம் பரவியது. கல்யாணபட்டிணத்து வீரர்கள் சிதறி ஓடினர். ஆனால் பசவண்ணாவின் மகன் வீரத்தில் சளைத்தவன் இல்லை. அவன் பீரப்பாவை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாரானான். பீரப்பா பசவண்ணாவின் மகனின் தாக்குதல்களை தனது கணிச்சியால் தடுத்தபடி இருந்தான். ஆயினும் அவன் பீரப்பாவை தனது பாதுகாவலர்களுடன் சூழ்ந்து தாக்கினான். அவர்களை நந்தன் தனது கொம்புகளால் தூக்கி வீசினான்.பசவண்ணாவின் மகன் மீண்டும் ஒரு கூர்மையான ஈட்டியை பீரப்பாவை நோக்கி வீசினான். அதன் தாக்குதலில் இருந்து பீரப்பா எளிதில் தப்பி, அந்த வீரனின் நெஞ்சில் கணிச்சியை இறக்கினான். போரின் முடிவில் பசவண்ணாவின் மகன் புழுதியில் உயிரற்றுக் கிடந்தான்.
அருகில் உள்ள முகட்டில் இருந்து, சிவன் இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு நடப்பவை அனைத்தும் ஒரு பனிமூட்டம் போல தோன்றியது. அது நிகழ்காலத்தில் நடக்கிறதா அல்லது கடந்த காலத்தின் தோற்ற மயக்கங்களா என்பது அவருக்கு தெளிவில்லாமல் இருந்தது. அவர் பீரப்பாவின் முகத்தில் தனது தந்தையின் சாயலைக் கண்டார். அவருக்கு தனது கடந்த கால நினைவுகள் மனதில் மின்னலின் ஒளியை போல அவ்வப்போது மின்னியபடி காட்சியளித்தது.
போர்க்களத்தில் நந்தனின் மீது சுழன்றாடியபடி பீரப்பா நடத்திய வெறியாட்டம் முடிவுக்கு வந்தது. மெல்ல மெல்ல போர்க்களத்தை சூழ்ந்திருந்த தூசி அடங்கியது. துணைவன் போல தனக்கு உதவிய நந்தனை தடவிக் கொடுத்தபடி பீரப்பா நின்றிருந்தான். நந்தனுக்கு அந்தத் தொடுதல் சிவனை நினைவூட்டியது.
நந்தன் சட்டென்று சிவனின் இருப்பிடம் நோக்கி விரைந்தான். பீரப்பாவினால் அன்று காளைவடிவில் வந்த உதவி எத்தகையது என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தக்காளை எதற்காக அங்கு வந்தது, எங்கு சென்று அது மறைந்தது என்பது எதுவுமே அவனுக்கு விளங்கவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்கும் அவனுக்கு தற்போது நேரம் இல்லை. ஏனெனில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் சில மிச்சமிருந்தன.
பீரப்பாவும் அவனது மக்களும் போர்க்களத்தில் வீழ்ந்த தங்களது வீரர்களை மண்ணில் புதைத்து அவர்கள் நினைவாக நடுக்கற்களை எழுப்பினர் . அவர்களது வீரம் அவர்களது குலத்தவர்களால் தலைமுறைகள் பல கடந்து நினைவு கூறப்படும்.
போரின் இறுதியில் ஆடுகள் மீட்கப்பட்டன. இந்த வெற்றி தற்காலிகமானது என்பதை பீரப்பா அறிவான். எதிர் வரப்போகும் பெரும் புயல்களின் அச்சாரம் இந்த வெற்றி. கல்யாணபட்டிணத்தில் விவசாயக் குடி தலைவன் பசவண்ணா, தனது மகனின் இறப்பிற்கு பழி வாங்குவதாக சூளுரைத்தான்.
கல்யாணப்பட்டணத்தின் தலைவன் தங்களைப் போலவே விவசாய குடியாக இருக்கும் விதர்பாவுக்கு உதவி கோரி செய்தி அனுப்பியிருந்தான். பீரப்பாவின் ஆட்கள் இந்த செய்தியினை பீரப்பாவிற்கு தெரிவித்தனர். இதை அறிந்த அவன், தனித்து இந்த எதிர்ப்பினை சமாளிக்க முடியாது என்பதை அறிந்து, வடக்கே உஜ்ஜெயினில் இருக்கும் அவனது அக்கா மஹாகாளியிடம் உதவி வேண்டி ஒரு மலைமுகட்டின் உச்சியில் நின்று பறையின் மூலம் செய்தியை அறிவித்தான். அந்தப் அந்தப் பறை அறிவித்த செய்தியினை தூரத்திலிருந்த ஒவ்வொரு மலைவாழ் கூட்டத்தினரும் உஜ்ஜினிக்கு தங்களின் பறை ஓசையின் மூலம் கடத்திச் சென்றனர். அச் செய்தியை மகாகாளி பெற்றுக் கொண்டாள்.
அன்று இரவு பீரப்பாவும் அவனது மக்களும் ஒரு குழப்ப மன நிலையில் இருந்தனர்.
ஆழ்ந்த இரவிலும் தக்காண பீடபூமியின் வெப்பம் குறைந்த பாடில்லை. அழலால் தூண்டப்பட்ட சிவனோ பித்தம் தலைக்கேறி ஒரு மயக்க நிலையில் நகரத் தொடங்கினார். அங்கே நட்சத்திரங்களின் ஒளியின் கீழ் யாராலும் எளிதாக ஏற முடியாத குன்று ஒன்றின் உச்சியை அவர் அடைந்தார். தன்னிலை மறந்து ஒரு மோன நிலையில் சிவன் உக்கிரமாக ஆடத் துவங்கினார். உடுக்கை ஒலியும் அவர் பாறையில் அறைந்ததால் அந்தப் பாறை ஏற்படுத்திய வித்தியாசமான ரீங்கார ஒலியும் அந்த பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன.
உடுக்கை ஒலியும் டோலரைட் கற்களை தட்டும்பொழுது எழும் ரீங்கார ஒலிகளும் சீரிய இடைவெளியில் ஒலித்துக் கொண்டிருந்ததை பீரப்பாவும் அவனது மக்களும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த உடுக்கை ஒலியில் பிறந்த வார்த்தைகள் பீரப்பாவிற்கு பரிச்சயமான வார்த்தைகள். ஆனால் இந்தப் பறையின் இசை அவர்களது குலத்தின் பறையின் அதிர்வினை ஒத்தது அல்ல. இது ஏதோ ஒரு வகையில் மாறுபட்டிருந்தது.
இது எதிரிகளின் தந்திரமா? உதவிக்கு வரும் யாரோ ஒருவரின் செய்தியா? அல்லது கடவுள்களின் குரலா?
பீரப்பாவிற்கு எதுவுமே விளங்கவில்லை.
இதற்கான விடைகளை நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்திருந்தன.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...