ஒவ்வொரு உயிரினமும் இரு ஆதி இச்சைகளை கொண்டிருக்கிறது.
- ஒன்று, உயிர் பிழைத்தலுக்கான உந்துதல்.
- இரண்டு, தன் இரத்தத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான பாலுணர்வு.
இந்த இச்சைகளின் தூண்டுதலால் உயிர் பிழைக்க வேண்டியும், சந்ததியை பெருக்க வேண்டியும், உண்ணுதல், நீர் அருந்துதல், காதல் புரிதல், இணைதல், ஓய்வு எடுத்தல் போன்ற செயல்களை ஒவ்வொரு உயிரியும் சந்ததி சந்ததியாக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு முடிவே இல்லாத சுழல். இந்தச் சுழலில் இருந்து விடுபடுவதே மனிதப்பிறப்பின் நோக்கம் என்று அனைத்து மதங்களும் போதிக்கின்றன.
இவை அனைத்தும் ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை தேவைகள்.
வனத்தில் இந்தத் தேவைகள்; ஆதிக்கம், போட்டி, பலம் ஆகியவற்றின் துணையால் நிறைவேற்றப்பட்டன. நகங்கள், பற்கள், வேகம், ஆற்றல், விஷம், ஆக்ரோஷம் ஆகியவற்றின் துணையால் தான், அந்த நாளில் யார் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்றும் யாரின் சந்ததி பெருக வேண்டும் என்றும் வனத்தில் தீர்மானிக்கப்பட்டது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகி இறுதியில் ஆறறிவு பெற்ற மனிதனாக உருக்கொண்ட பின்பாவது இந்த இச்சை; வன்முறை இன்றி நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. ஆறறிவு கொண்ட மனிதர்களின் வாழ்வும்; குறிஞ்சி நிலத்தில் இதே போல் தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஆனால் தங்களுக்கான உணவை மனிதர்கள் தாங்களே உற்பத்தி செய்ய தலைப்பட்ட பிறகு, இந்த நிலை மாறத் வாங்கியது. குறிப்பாக வளமான மருத நிலங்களில் இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது.
அங்கு தானியங்கள் செழிப்பாக வளர்ந்தன. நதிகளில் நீர் பாய்ந்தது.
இயற்கையின் கொடையால் மனிதர்களின் இச்சையானது அங்கே இரத்தம் சிந்தப்படாமல் நிறைவேறத் துவங்கியது.
மருதம் அமைதியாக இருந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் மென்மையாக இருந்ததால் அல்ல, நிலம் மென்மையாக இருந்ததால் தான் அங்கே அமைதி நிலவுவதற்கான சூழல் அமைந்தது.
ஆனால் எல்லா நிலங்களும் இத்தகைய கருணையை வழங்கவில்லை.
பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த, மக்களின் ஒழுக்கமும் நல்லெண்ணமும் மட்டும் போதுமானதாக இல்லை.
அறிவு, இணக்கம், மற்றும் இயற்கையைப் பற்றிய தெளிவான புரிதல் போன்றவற்றைக் கொண்டே பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியும்.
பாலை நிலத்தை பொறுத்தவரை; அங்கு வாழும் மக்கள், வெறும் நிலத்தை பயன்படுத்துபவர்களாக மட்டுமே இருப்பது பயனைத் தராது.
மனிதர்கள் அங்கே நிலத்தை பராமரிப்பவர்களாக இருக்க வேண்டும். நிலத்தின் சூழலில் சேர்ந்து இணைந்து, இயைந்து வாழ்பவர்களாக இருத்தல் வேண்டும். இயற்கையையும் பருவத்தையும் பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாக இருக்கும் வண்ணம் அந்த சூழல் வடிவமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும்.
குறிஞ்சியில் வாழ்ந்து வந்த மனிதன், பரந்துபட்ட சமநிலத்திற்கு இறங்கி வாழ தலைபட்ட போது; அவனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, முக்கியமான இரு வாய்ப்புகள் அவன் முன் இருந்தன.
ஒன்று மேய்ச்சல் வாழ்வு முறை, மற்றொன்று பயிர் விளைவிக்கும் வாழ்வு முறை.
இந்த இரு வாழ்வு முறைகளையும் முன்னெடுத்துக் கொண்டு இருவகையான குடிகள் உருவாயின.
ஒன்று மேய்ச்சலை தொழிலாகக் கொண்ட ஆயர் சமூகம், மற்றொன்று தானியங்களை விளைவிக்கும் மருத சமூகம்.
இருவகையான மக்கள்...
இரு வகையான வாழ்வு முறைகள்....
ஒரு சமூகம் உழவைப் பின்பற்றியது. மற்றொரு சமூகம் மந்தைகளைப் பின்பற்றியது.
எண்ணிக்கையில் இரு சமூகமும் பெருகிய பொழுது, அவர்கள் இருவரும் ஒரே நிலத்தில் வசிக்கத் தலைப்பட்டனர். அது நிலத்திற்கான போட்டியாக மாறியது.
விவசாயிகள் தாவரங்களை தங்கள் மூச்சைப் போல் பாதுகாத்தனர்.
ஆயர்கள் கால்நடைகளை தங்கள் உறவினர்களைப் போல் காத்தனர். விவசாயத்தின் ஆதாரமாக செடிகளை, கால்நடைகள் மேய்த்துவங்கிய பொழுது
குரோதம் அவர்களுக்கு இடையே நெருப்பை போல் வளர ஆரம்பித்தது.
விவசாயிகள், இளந்தளிர்களை மிதிக்கும் குளம்புகளையும், இலைகளை அசைபோடும் ஆவினங்களையும் கண்டு அஞ்சினர். மேய்பர்கள், மேய்ச்சலை தடை செய்யும் வேலிகளைக் கண்டு சினம் கொண்டனர்.
பல கோடி ஆண்டுகளாக தாவரங்களும் ஆவினங்களும், வேலிகள் தடை ஏதும் இல்லாமல் தான், இணக்கத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறன.
இயற்கையானது பல வழிகளில் இந்த இணக்கத்தைப் பற்றி; தக்காண பீடபூமியில் முரண்பட்டு நிற்கும் இரு குடிகளிடமும் பேச முயற்சித்தது. ஆனால் அதை செவிக்கொண்டு கேட்க அங்கே யாரும் இல்லை. நிலம் இணக்கத்தை வேண்டுவதை அவர்கள் இன்னும் செவிகொடுத்து கேட்கவில்லை.
இயற்கை என்பது ஒரு கோபுரம் என்றும், அந்தக் கோபுரத்தின் உச்சியில் 'தான்' இருப்பதாகவும் மனிதன் எண்ணிக் கொள்கிறான். வர்ணாசிரம தர்மத்தை போன்ற உயர்வு தாழ்வு அடுக்குகளால் அமையப்பெற்றது அல்ல இயற்கை. அது ஒரு சுழற்சி. அந்த சுழற்சியில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும், பங்களிப்பாளர்களாகவும் பயனாளர்களாகவும் செயல்படுகின்றன.
பயிர்களின் நுனி வழங்குவது மனிதர்களுக்கு உணவாகும். பயிர்களின் பச்சை பாகங்கள் கால்நடைகளுக்கு உணவாகும். அனைத்து உயிரினங்களின் கழிவுகளும் நிலத்திற்கு உணவாகும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாகும். இதுவே இயற்கையின் சுழற்சி. இதுவே நாம் வாழும் நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நிலம் என்னும் இயக்கமற்ற சிவத்தை, பொழுது என்னும் இயக்கம் கொண்ட சக்தி தழுவும் பொழுது தான் உயிர்கள் ஜனிக்கும், பல்கிப் பெருகும், இணக்கத்தோடு வாழும்.
இணக்கத்தோடு உயிரினங்கள் வாழும் நிலத்தில் தான் இயற்கையின் சுழற்சி சீராகச் சுழலும். இயற்கையை பொருத்தமட்டில், பிறப்பினால் அனைத்து உயிர்களும் சமம். அங்கே உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. அனைத்து உயிர்களும் இணக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே, இந்த உலகில் நாம் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும்.
ஆனால் இத்தகைய இணக்கம்; தக்காண பீடபூமியில் போருக்காக காத்திருக்கும் இரு குடிகளுக்கும் இன்னும் ஒரு கனவாகவே இருந்தது. அவர்களை இணக்கமாக வாழச் சொல்லி இயற்கை மெல்லிய குரலில் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் மனிதர்களின் சினத்தின் விளைவால் எழுந்த அறைகூவல்கள், இயற்கையின் மெல்லிய முணுமுணுப்பை கேட்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
தக்காண பீடபூமியில் முரண்பட்டு நிற்கும் மனிதர்களது சினம், ஒரு நெருப்பைப் போல மற்ற நிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. அந்த சினம் இப்பொழுது சுற்றத்தாரையும் கொல்ல ஆவல் கொண்டது.
விவசாய குடிகள் தங்களுக்கு ஆதரவான ராஜ்ஜியங்களுக்கு உதவி கேட்டு தூதர்களை அனுப்பினார்கள்.
கிழக்கு முனையிலிருந்து விதர்பாவும் அஸ்மகாவும் விவசாய குலங்களுடன் நின்றனர்.
பீரப்பாவின் பக்கம், அவரது சகோதரி உஜ்ஜயினியின் காளி, மற்றும் அவந்தி, மஹிஷ்மதி வாழ் வேட்டை இன மக்கள் இணைந்தனர்.
பீரப்பா, மேற்கு நோக்கி பயணித்து, யதுக்களையும் வேளிர்களையும் சந்தித்தான். அவர்கள் கரிய தெய்வமான மாயோனை வணங்கும் ஆயர் குலத்தவர்கள். அவர்கள் போருக்கு பதிலாக அமைதியை மதித்து, நடுநிலையைத் தேர்ந்தெடுத்தனர்.
எப்படி ஒரு குடும்பத்திற்கு பெண்ணின் பரிவான அன்பும் ஆணின் தைரியமும் தேவையோ, அதேபோல் ஒவ்வொரு நாகரிகத்திற்கும் காதல் மற்றும் வீரம் இரண்டும் அத்தியாவசியமானது.
காதல், நாகரிகத்தின் சுபீட்சத்தை உறுதி செய்கிறது. வீரம், நாகரிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஒரு குடும்பம் நெருக்கடியில் இருக்கும் பொழுது அண்டை அயலவர்கள் அந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாய் நிற்பது போல, ஒரு நாகரிகத்தின் துணைக்கு அயல் நாகரிகங்கள் நிற்பதும் மிகவும் அவசியம். அது நட்பின் வெளிப்பாடு.
ஆனால் எல்லா நட்புகளும் நேர்மையானவை இல்லை...
தன் மகனின் மரணத்தால் குமைந்து கொண்டிருந்த விவசாயக் குடியிருப்புகளின் தலைவன் பசவண்ணா, எப்படியேனும் பீரப்பாவை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, யாரும் எதிர்பாராத ஒரு இடத்தில் உதவியைக் கோரி பயணப்பட்டான்.
அவன் பயணப்பட்டது வடக்கே இருந்த ஒரு ராஜ்ஜியத்தை நோக்கி...
அந்த ராஜ்ஜியத்தின் தலைவன் பெயர் தக்ஷன்.
தக்ஷன், வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்தவன். படைக்கும் கடவுள் பிரம்மாவே அனைத்து உயிர்களுக்கும் தந்தை என எண்ணுபவன். அவன் பசவண்ணாவிற்கு உதவுவதாக வாக்களித்தான். பூத கணங்கள் போல் போர் புரியும் இந்தப் படைகளை வெல்லுவதற்கான சமயம் இதுவென்று அவன் மகிழ்ச்சி கொண்டான்.
துக்கத்தாலும் கோபத்தாலும் குருடாக்கப்பட்ட பசவண்ணா, தக்ஷனின் உண்மையான நோக்கங்களை அறியவில்லை. தக்ஷன் நீதிக்காக அல்லாமல், நிலத்திற்காக ஏங்குவதை அவன் காணவில்லை.
'தானே' பிரம்மாவின் நேரடி வாரிசு என எண்ணுபவன் தக்ஷன். அதனால் படைப்புகள் அனைத்தும் 'தனது' என்பது அவனது கொள்கை.
தேவைக்கு ஈவதே இயற்கையின் குணம். ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு இயற்கையிடம் இடம் இருக்கிறது. ஆனால் பேராசை என்பது ஈசனின் கபாலம் போன்றது. அதற்கு உலகையே கொடுத்தாலும் போதாது.
'தான்' மற்றும் 'தனது' என்ற தன்முனைப்பு எண்ணம் மேலோங்கியவன் தக்ஷன். தான் மற்றும் தனது என்ற தம்பதிகள் இருக்கும் இடத்தில், அந்தத் தம்பதிகளுக்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாத்சர்யம் என ஆறு குழந்தைகள் பிறக்கும்.
காமம் – கட்டுப்பாடற்ற பாலுணர்வு, முறையற்ற பால்கவர்ச்சி.
க்ரோதம் – பகுத்தறிவை எரிக்கும் கோபம்.
லோபம் – மற்றவர்களின் பங்கை விழுங்கும் பேராசை.
மோகம் – ஞானத்தை குருடாக்கும் பற்று.
மதம் – மனிதர்களை மனிதர்களுக்கு மேல் வைக்கும் பெருமை. உயர்வுதாழ்வு மனப்பான்மை.
மாத்சர்யம் – மகிழ்ச்சியை விஷமாக்கும் பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி.
இவை நாகரிகங்களை உள்ளிருந்து அழிக்கின்றன. இவை மனிதனின் உணர்ச்சிகளை தூண்டி விடுகின்றன. இந்த ஆறு குணங்களின் விளைவாகத்தான் பஞ்சமா பாதகங்கள் தோன்றுகின்றன. இந்த குணங்கள் மேலோங்கும் நாகரிகங்களில் அமைதி நிலைக்க முடியாது.
இவ்வாறு, ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான போர்
தக்ஷனின் பேராசைக்கான மேடையாக மாறியது. அவனின் மதப்பற்றும்; அவன் கொண்ட கொள்கைப் பற்றும், மனிதர்கள் மீதான உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு வித்திட்டது. புல் மற்றும் தானியத்திற்கான சண்டையாகத் தொடங்கியது, வம்சங்களின் போராக மாறியது.
இந்த ஆறு குணங்கள் ஆட்சி செய்யும்போது, முந்தைய பல நாகரிகங்களில் நிகழ்ந்ததைப் போலவே, இங்கே இந்த நிலத்திலும் அழிவு பின் தொடர ஆரம்பித்தது.
நாம் காணும் இந்தப் பழமையான போர், இன்றைய உலகிற்கு கூறுவதற்கென ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டிருக்கிறது.
நாம் இன்னும் நிலத்தையும் பொழுதையும் புரிந்து கொள்ளாமல் நாடுகளை நிர்மாணிக்கின்றோம். நாம் இன்னும் சமநிலைக்கு பதிலாக வெற்றியை நாடுகிறோம். நாம் நமது முன்னோர் வழங்கிய ஞானத்தை புறக்கணிக்கிறோம்.
இந்தக் கதை மறந்துபோன கடந்த காலத்தில் அமைந்திருக்கலாம்,
ஆனால் அதன் உண்மை நித்தியமானது.
அமைதி என்பது, நிலங்கள் வழங்கும் செழிப்பிலிருந்து பிறப்பதில்லை. அது மனிதனது மனக்கட்டுப்பாட்டிலிருந்து பிறக்கிறது. அப்படி மனக்கட்டுப்பாடு கொண்ட மக்கள் வாழும் ராஜ்ஜியத்தில் தான் அன்பு பெருக்கெடுக்கும்... உயிர்களின் உள்ளத்தில் கருணை நிலைத்திருக்கும். அந்த அன்பின் வழியாகத்தான் நாம் இறைவனை காண முடியும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.
இந்த உண்மை சிவனுக்கு உணர்த்தப்பட்டது இந்த மண்ணில் தான்.
இந்த தக்காண பீடபூமியில் தான் அவர் இயற்கையிடம் பேசினார். இயற்கையும் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தது. இதே நிலத்தில்தான் இயற்கை தனது ரகசியங்களை சிவனுக்கு உணர்த்தியது. அந்த உண்மையை உணர்ந்த பிறகு தான் அவர் இறைவனானார்.
ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் அதிகபட்சம் நேரக்கூடிய இன்னல்களை அவரும் சந்தித்துள்ளார். தான் மற்றும் தனது என்ற மாயையின் பிடியில் சிக்காமல், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, அந்த இன்னல்களை எதிர்கொண்டு, அவர் இறுதியில் இறைநிலையை அடைந்தார்.
அந்த இறை நிலையில் இருந்து; இந்த மானுடர்களை இறைநிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை, பல வழிகளில் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார் அந்த மானிடமேந்தி .
நம்மிடமும் இயற்கை இதே உண்மைகளை பேச முயற்சிக்கிறது. இறை நிலையானது இயற்கையின் வழி நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நாம் தான் நம்மை கண்காணிப்பார் யாருமில்லை என்ற குருட்டுதைரியத்தில் மென்மேலும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.
-------
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்;
கண்காணி இல்லா இடமுமில்லை, காணுங்கால்;
கண்காணியாக கலந்தெங்கு நின்றானை;
கண்காணி கண்டார் களவொழிந்தாரே.
-திருமூலர்
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...