பண்டைய தென்னிந்தியாவின் அடர்ந்த காடுகளின் இதயத்தில், குறிஞ்சி மலர்கள் பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மலைகளுக்கு இடையில் இருந்த முல்லை நிலத்தில், புல்லாங்குழலின் ஊடாக காற்று நுழைந்து இசையை எழுப்புவது போல சிவனின் அன்னை 'ஆயி' ஒரு தாலாட்டை இசைத்துக் கொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றி, பழங்குடியின பெண்கள் ஒரு புனித வட்டத்தில் கூடினர். கொடிச்சி... அவர்களின் தலைவி, உறுதியும் ஞானமும் கொண்டவள். அவள் அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினாள். அவர்களின் முகங்கள் நடுவில் பிரகாசமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சுவாலையில் பெருமிதமாக ஒளிர்ந்தன.
இம் மக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகிலுள்ள முல்லை நிலங்களில் அமைந்த துடியர் இனப் பழங்குடியினர். அந்த இனத்தின் பெண்கள் நெருப்பின் காப்பாளர்களாகவும், நினைவுகளின் நெசவாளர்களாகவும், நீதியினை தங்களது நெஞ்சில் தாங்குபவர்களாகவும் இருந்தனர். காடு அவர்களை துடியன் குலம் என்று அழைத்தது. அவர்களின் இரத்தம் உலகின் எந்த ஒரு அரசர் குலத்தைக் காட்டிலும் பழமையானது.
சிவன் தனது முதல் ஐந்து ஆண்டு கால வாழ்க்கையை நிலத்தின் துடிப்பை தங்கள் கைகளில் தாங்கிய துடியர் குல பெண்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தான்.
அவனது தாய் ஆயி. அந்தக் குல பெண்களில் மிகவும் மதிக்கப்பட்டவள். அவளது நாவில் பழந்தமிழ் பாட்டுக்கள் தாண்டவம் ஆடும். துடிப்பறை இசையிலும் அவள் வல்லவள்.
துடிப்பறை என்பது மணல் கடிகார வடிவிலான இந்த பழங்குடியினருக்கே உரித்தான ஒரு வகை முரசு ஆகும். அந்தப் பறை இசை மூலமாகத்தான் தூரத்தில் இருக்கும் அவர்களது உறவினர்களுடன் அவர்கள் பேசிக் கொள்வார்கள்.
தற்பொழுது அவள் தனது மகனான சிவனுடன் அமர்ந்திருந்தாள். அவளது கையில் பழமையான ஒரு துடிப்பறை இருந்தது. அதன் தோல் இன்னும் மழையின் ஈரத்தைக் கொண்டிருந்தது. அதனால் அதை அவள் இசைக்கும் பொழுது இன்னும் கூர்மையான ஒலியை அது எழுப்பியது.
“ஒவ்வொரு அசைவும் ஒரு தாளம், சிவா,” என்று அவள் மெலிதாகச் சொல்வாள், அவளுடைய குரல் பள்ளத்தாக்கை செதுக்கும் ஆறு போல உறுதியாக இருந்தது. “நீ பேசும்போது, உன் மிடற்றால் காற்றை அதிரச்செய்து நாவை அசைத்து ஒலிகளை எழுப்புகிறாய்.”
ஒவ்வொரு ஒளியையும் நாவை அசைத்து அவள் தனது மகனுக்கு சொல்லிக் கொடுப்பாள். அந்த ஒளி; முரசால் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதையும் கூடவே சொல்லிக் கொடுப்பாள்.
சிவனால் அவளுக்கு இணையாக ஒலிகளை எழுப்ப இயலவில்லை. அச்சிறுவனால் கவனத்தை குவிக்க இயலவில்லை.
அவன் உச்சரிப்பில் தடுமாற்றங்கள் நிறைந்திருந்தன.
ஆனால் ஆயி பொறுமை நிறைந்தவள். ஒவ்வொரு காலையும், அவள் அவனருகில் மண்டியிட்டு, அவனது சிறிய கைகளை துடிப்பறையின் மீது வழிநடத்தி, அவனது தயங்கும் விரல்களிலிருந்து மிருதுவான தாளங்களை வரவழைத்தாள்.
அவனுக்கு மிகவும் பிடித்த ஒலி, புனிதமான தமிழ் எழுத்தான ழகரம்.
வடக்கே பிராகுயி இன மக்கள் தொடங்கி முண்டாரி இன மக்களைத் தாண்டி தெற்கே வாழும் இவர்களைப் போன்ற பல குடியின மக்கள் தங்கள் வார்த்தைகளுக்குள், ஒலிகளுக்குள், சப்தங்களுக்குள் ஒற்றுமையை பாவிக்க முடியும். ஏனெனில் அவர்கள் அனைவரும் சகோதர இன மக்கள், ஒரே கிளையிலிருந்து பிரிந்து பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருபவர்கள். ஆனால் இந்த ழகரம் இவர்களுக்கேயான தனித்துவமான ஒரு ஒலி.
அந்த ழகரத்தை உச்சரிக்க ஆயி அவனுக்கு கற்றுக் கொடுத்தாள்.
அவன் தன் நாக்கை மேல்அண்ணத்துடன் அழுத்தி ழகரத்தை உச்சரித்தான்.
அதை உச்சரித்த போது அவனது கண்கள் விரிந்தது... விரல்களால் தனது புருவ மத்தியை தொட்டான்.
“ஆயி,” என்று அவன் மெலிதாக விளித்தான்.
“நான் இந்த எழுத்தை உச்சரிக்கும் பொழுது… என் கண்களுக்கு இடையில் மின்னல் போல ஒரு உணர்வு வருகிறது.”
ஆயி மென்மையாகச் சிரித்து, அவன் முகத்தில் இருந்த வெளிர் கூந்தலைத் துடைத்து “ இதை சொல்லும் பொழுது உனக்குள் ஏற்படும் உணர்வு தனித்துவமானது. எனவே இந்த எழுத்தை அடிக்கடி உச்சரித்துப் பார் மகளே ” என்று அவள் கூறினாள்.
" புருவ மத்தியில் ஒரு மின்னல் கீற்று நெளிவது போல் உள்ளது", என்றான் சிவன்.
“ அப்படியா! அப்படியானால் அந்த மின்னல் உன்னை வழிநடத்தட்டும். " ஆயியின் குரல் அசரீரி போல் ஒலித்தது.
"ழ என்பது நமது கடவுள் சேயோன் உச்சரித்த எழுத்து. அது மிகவும் புனிதமானது. அதை உன் குரலில் நெருப்பைப் போல பாதுகாப்பாயாக என் அன்பு மகனே.”
ஆனால் சிவாவின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. அவனது அல்பினிசம் அவனை சூரியனுக்கும் சந்தேகத்திற்கும் இலக்காக்கியது. அவனது வெளிர் தோல்; சுள் என்று தாக்கும் சூரியனின் வெப்பத்தில் வெந்தது, மற்ற குழந்தைகள் அவனது விசித்திரமான தோற்றத்தை கேலி செய்தனர். வெப்பத்திலிருந்து தப்பிக்க அவன் நீரில் முங்கியபடியே இருப்பான். குளிர் மரங்களின் நிழலை நாடி இருப்பான். வெப்பத்தை தவிர்ப்பதற்கு அவன் பின்பற்றாத முறைகளே இல்லை எனலாம்.
ஒரு மதியம், ஒரு எருமை குளிர்ந்த சேற்றில் நெற்றியை நனைப்பதைப் பார்த்த அவன் ஈரமான சேற்றை அள்ளி, தன் நெற்றியிலும் தோலிலும் பூசினான். இச்செயலாளர் அவனுக்கு சூரிய ஒளிச் சூட்டில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைத்தது, ஆனால் பின்னால் வந்த மற்ற குழந்தைகளின் சிரிப்பு கொடுமையாக இருந்தது.“சேற்றுத்தோலோன்... வெண்ணிற மாயாவி!” என்று அவர்கள் சிவனை பார்த்து கூவினர். அவர்களின் கேலிகள் சூரியனின் சூட்டைக் காட்டிலும் ஆழமாக காயங்களை அவன் மனதில் ஏற்படுத்தின.
ஆனால் ஆயி, அவனருகில் குனிந்து, அவனது கண்ணீரைத் துடைத்தாள். “ அவர்களின் வார்த்தைகள் உன்னை அழ வைப்பதை நோக்கமாகக் கொண்டு உச்சரிக்கப்படுபவை. நீ அழுது அவர்களை வெற்றி பெறச் செய்து விடாதே மகனே” என்று அவள் மென்மையாகச் சொன்னாள். “நீ பூமியின் தாளம். உன்னை காப்பதன் மூலம் பூமி தன் உரிமையைப் பாதுகாக்கும்.”
ஒதுக்கப்படுதலின் வலியை மீறி, சிவா வெறும் தோற்றத்தில் மட்டுமல்லாமல் தனித்துவமான செயல்களின் மூலமாக தனது குழுவில் இருக்கும் மற்ற குழந்தைகளை காட்டிலும் வேறுபட்டவனாக இருந்தான்.
மூன்று வயதில், அவன் மலைக்காற்றில் சிக்கிய இலை போல நடனமாடினான். அவனது கால்கள் மணலின் மீது மெலிதாகப் பேசின, அவனது கைகள் நீர் அலைகள் போலப் பாய்ந்தன.
அவன் பாடும்போது, கானகம் செவி மடுத்தது.
அவனது ஓவியங்கள் உயிருடன் துடித்தன.
அந்தப் பழங்குடி மக்கள் அவனது முதுகுக்குப் பின்னால் பேசத் துவங்கினர்: "இந்தப் பையனின் கைகள் நெருப்பால் ஆசிர்வதிக்கப்பட்டவை."
ஆனால் பொறாமை கொண்ட கோடன் இதை வேறு விதமாக பாவித்தான். அவன் சிவாவின் தந்தையை, நீண்ட காலமாக வெறுத்தான். சிவனின் தந்தையைப் போல கோடனும் ஒரு வேல் வீரன் தான். ஆனால் அத்தனின் வீரத்திற்கு அவர்கள் கூட்டமே தலைவணங்கியது கோடனுக்குப் பிடிக்கவில்லை.
கோடனின் ஈட்டி விரைவாக இருந்தது, ஆனால் அவனது நாக்கு அதைவிட கூர்மையாக இருந்தது.“இந்தக் குழந்தை,” என்று அவன் அடிக்கடி முணுமுணுத்தான், “மிகவும் விசித்திரமானவன். அவன் நம்மைப் போல இல்லை.” இவ் வார்த்தைகளை ஒரு மந்திரம் போல அடிக்கடி உச்சரித்து வந்தான் கோடன்.
பழங்குடியினரின் குடிசை குடியிருப்புகள் வட்ட வடிவில் இருந்தது. அங்கே பல்வகை மக்கள் இருந்தனர். வேட்டைக்காரர்கள், உணவு சேகரிப்பவர்கள், முரசு அடிப்பவர்கள், பானை செய்பவர்கள், அவர்கள் குடியிருப்பின் மையத்தில் புனித நெருப்பைச் சுற்றி எளிய குடிசைகளில் வாழ்ந்தனர்.
அந்த நெருப்பு கொடிச்சியை போன்ற மூத்த பெண்களால் பகலும் இரவும் பராமரிக்கப்பட்டது. அவர்கள் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்த மக்கள். அவர்கள் கல் ஆயுதப் பயன்பாட்டாளர்கள். கத்திகள், சுரண்டிகள், அம்புகள் போன்றவற்றை கற்களில் செதுக்குபவர்கள். அந்தக் கூட்டத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணுவதற்கு முன்பே கற்களைத் தீட்டவும் வடிவமைக்கவும் கற்றனர். அவர்களின் களிமண் பாண்டங்கள், ஆழமற்ற களிமண் குழிகளில் சுட்டு உருவாக்கப்பட்டவை. வேட்டையாடுதலே அங்கு உணவுக்கான முக்கிய வழி. அவர்கள் கூட்டத்தில் வேட்டையாடுதல் ஒரு கூட்டுச் சடங்காக இருந்தது.
பறைகளின் மூலம் தூரத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்வதும், கானகத்தின் பிற உயிர்களுக்கு கேட்காத வண்ணம் சமிக்கைகள் மூலம் பேசிக் கொள்வதும் அவர்களின் உயிர்வாழ்வு மொழியாக இருந்தன.
ஒரு கூட்டம் ஒரு காட்டெருதின் தடமறிந்து; அவற்றின் பின்னர் கானகத்தின் பிற உயிர்கள் அறியா வண்ணம் மெதுவாகச் செல்லும். மிருகத்தின் பழக்கங்களை அறிந்து, அதன் தாகத்தை முன்னறிந்து அவற்றின் பாதையை அடியொற்றி அந்தக் கூட்டம் செல்லும். அதன் இருப்பிடத்தை அறிந்ததும்; அதை சுற்றி வளைக்க ஏதுவான இடத்தை தேர்வு செய்ததும், துடிப்பறையின் மூலம் சகக்குழுவினருக்கு இந்தச் செய்தி அறிவிக்கப்படும். அத்தனின் தலைமையில் ஒரு குழு அதை வேட்டையாட அவர்கள் தடத்தை ஒற்றி பின் செல்லும். ஒரு வெற்றிகரமான வேட்டை அனைவருக்குமான வெற்றியாக இருந்தது.
கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது, அதை தன் மக்களுக்குப் பிரித்து தரும் வேலையை திறம்பட செய்தவள் கொடிச்சி.
நெருப்பினை சுற்றி வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு அந்த இறைச்சியை அவர்கள் பகிர்ந்து உண்பார்கள். அப்படி ஒரு நிகழ்வில் சிவா தனிமையில் அமர்ந்து இறைச்சியை உண்ணாமல் அதை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஆயி இதைக் கவனித்து, அவனருகில் அமர்ந்து, அவனது தோளில் இருந்த சாம்பலைத் துடைத்தாள். “ஏன் தனியாக இருக்கிறாய், சிவா?” என்று அவள் மென்மையாகக் கேட்டாள். அவன் தலையை ஆட்டினான். “ஏன் அவற்றைக் கொல்ல வேண்டும், ஆயி? அந்த எருது புல்லை உண்ணவும், தன் குட்டிகளைப் பாதுகாக்கவும் மட்டுமே விரும்பியது. அதன் பசி நம்முடையதை விட ஏன் குறைவாக மதிக்கப்படுகிறது?” அவனது குரல் நடுங்கியது, பயத்தால் அல்ல, ஒரு விசித்திரமான கருணையால்.
ஆயி ஆச்சரியத்துடன் தலை சாய்த்தாள். “பிறகு நீ என்ன சாப்பிடுவாய், குட்டி?” என்று கேட்டாள். சிவா ஆற்றை நோக்கிப் பார்த்தான், அங்கு விரால் மீன்கள் ஆழமற்ற நீரில் நடனமாடின. “மீன் எனக்கு போதும்,” என்று அவன் உறுதியாகச் சொன்னான். “அவை இறக்கும்போது கத்துவதில்லை.” ஆயி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அப்படியானால் நீ மீன்களைப் பிடித்துக் கொண்டு வா உனக்கு நான் சமைத்து தருகிறேன் என்றாள் சிவனின் அன்னை.
சிவன் தனது தந்தையின் ஈட்டியை போலவே சிறிதான ஒன்றை செய்து கொண்டு மீன் வேட்டையாட கிளம்பினான். ஒற்றை முனை கொண்ட ஈட்டியால் மீன்களை எளிதாக சிவனால் வேட்டையாட முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய அவனை அந்த தாய் பாசத்தோடு அணைத்துக் கொண்டாள்.
கொடிச்சி எல்லாவற்றின் மையத்தில் அமர்ந்திருந்தாள்—மூப்பு மிகுந்தவள் அவள்,ஆனால் வளையாதவள், அவளது சுருக்கம் நிறைந்த தோலில் பூக்கள் பல வடிவில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவளது கத்தி, ஆற்றால் மெருகூட்டப்பட்ட கற்களால் செய்யப்பட்டது. அந்தக் கல் அவளது மனதைப் போலவே கூர்மையாக இருந்தது. அவள் அந்தப் பழங்குடியின் ஆன்மா, காட்டின் சட்டதிட்டத்தின் உயிர் மூச்சு, இணக்கத்தின் காப்பாளர்.
“ஏன் அவள் நமது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறாள்?” என்று ஒருமுறை சிவா கேட்டான். “ஏனெனில் அவள் கேட்கிறாள்,” என்று ஆயி பதிலளித்தாள். “ அவள் தான் அனைத்தையும் கவனிக்கிறாள்... "
"நீயும்தான் கவனிக்கிறாய். என்னையும் இந்த கூட்டத்தின் தலைவனான நம் தந்தையையும் கவனிப்பவள் நீதானே அம்மா."
"என்னைப் போன்ற தாய்களை கவனிக்கும் தாய் அவள். அவளே நமது குழுவின் மையச் சரடு. அந்த சரடினைச் சுற்றியே வண்ண மலர்களான நாம் அனைவரும் மாலையாக கோர்க்கப்பட்டிருக்கிறோம்."
தெளிந்த நீரோட்டம் போல சென்று கொண்டிருந்த அந்த குழுவினரது வாழ்க்கையில் ஒரு துர் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு இரவு, சமையல் குழியில் இருந்து ஒரு தீப்பொறி குடிசையின் கூரையைப் பற்றியது. புலி போல பாய்ந்து, கிராமத்தின் பாதியை ஆற்றால் தணிக்கப்படுவதற்கு முன் விழுங்கியது.
வருத்தத்தில் மௌனமாக இருந்த குழு மக்களுக்கு இடையே கோடனின் குரல் உயர்ந்தது. “இந்தப் பையன்!” என்று அவன் குற்றம்சாட்டும் விரலால் சுட்டிக்காட்டினான். “அவனது விசித்திரம் இந்த சாபத்தை கொண்டுவந்தது! அவன் ஒரு கெட்ட சகுனம்!” அவனது வார்த்தைகள் இடி போல உடைந்தன. சிவா உறைந்து நின்றான், அவன் தோலில் மண், அவன் கண்களில் தீயின் ஒளி.
அவனது தந்தை முஷ்டிகளை மடக்கி முன்னேறினான், ஆனால் ஆயி அவனைத் தொட்டு தடுத்தாள்.“காற்றைக் குறை சொல், குழந்தையை அல்ல,” என்று அவள் சொன்னாள்.
பழங்குடி மக்களின் உதடுகள் முணுமுணுத்தன. கொடிச்சி எழுந்தாள். “இந்தத் தீ யாருடைய தவறும் இல்லை,” என்று அவள் சொன்னாள். “பயம் எனும் தீயால் எரியாதவற்றை எரிக்கத் துணியாதீர்கள்.” அவளது வார்த்தைகள் அந்த மக்களிடையே நிலைத்தன, ஆனால் கோடன் ஏற்படுத்திய வார்த்தைகளின் தழும்பு சிவனின் மனதில் நீங்காத தழும்பாகத் தங்கியது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் குறிஞ்சிப் பூ மலை முழுவதும் மலர்ந்து, மலைகளைப் போர்த்தத் தொடங்கியது. மலைகள் குறிஞ்சியின் நிறத்திற்கு மாறின. காற்று குறிஞ்சியின் மகரந்தத்தை பரப்பியது... தேனீக்கள் பாடல்களால் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன.
இது தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து பழங்குடியினரும் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியின் தொடக்கம். 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலரும் பொழுது இந்த ஒன்று கூடல் நடக்கும்.
மல்லப்பக் கொண்டா என இப்பொழுது நம்மால் அழைக்கப்படும் ஒரு இடத்தில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. அங்கே சேயோனுக்கான வழிபாடும், அணங்கு வெறியாடலும், உயிர் பலிச் சடங்கும் நடத்தப்படும்.
இச்செய்தியை தென்னகம் முழுவதும் காற்றிலே பறையர்களின் பறை ஒலி பரப்பியது. பறையர்களின் பறை இசை ஒலி சற்றே ஆழமானது, அது மலைகளைத் தாண்டி பயணித்தது. ஒவ்வொரு மலையிலும் வசிக்கும் பறையர் இனக் குழுக்கள் அந்தச் செய்தியை தென்னகம் முழுவதும் பரவச் செய்தனர்.
ஆண்கள் அனைவரும் தங்கள் சுற்றத்தாரையும் நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் சந்தோஷத்தில் பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தனர். சிவனின் தந்தை புலித்தோலை ஆடையாக அணிந்து கொண்டார். அவரது தலை உச்சியை காட்டெருதின் கொம்பு அலங்கரித்தது. அதற்கு மேல் மயிர் பீலி அசைந்தாடியது. கோடன் தான் வீழ்த்திய புள்ளி மான் ஒன்றின் தோலை ஆடையாக அணிந்திருந்தான்.
சிவா தனது தந்தையை நோக்கி ஆசையுடன் முன்னேறினான், அவனது வெளிர் கண்களில் நம்பிக்கை மின்னியது." அப்பா நானும் உங்கள் கூடவே வருகிறேன்" என்றான் சிவன்.
ஆனால் அவனது தந்தை தயங்கினான், “ அங்கே வருபவர்கள் உன்னை புரிந்து கொள்ள மாட்டார்கள் சிவா” என்று அவன் அமைதியாகச் சொன்னான். “ அவர்கள் உன் மனதை பார்ப்பதற்கு முன் உன் நிறத்தைத் தான் பார்ப்பார்கள். நீ இங்கு இருப்பதே நலம்.”
அவர்களின் பயணம் அதிகாலையில் தொடங்கியது. சிவா அவர்கள் மலைகளின் வழியாக செல்வதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான், அவர்களின் நிழல்கள் மூடுபனியாலும் மரங்களாலும் விழுங்கப்பட்டன. அவர்கள் சிவனின் பார்வையில் இருந்து மறைந்து விட்டனர்.
தனியாக அவன் கிராமத்தைக் காக்கும் பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, தன் விரலால் மணலின் மேல் உருவங்களை வரைந்து கொண்டிருந்தான்.
காற்றில் அடித்து வரப்பட்ட குறிஞ்சி மலரின் இதழ்கள் மென்மையாக அவனைச் சுற்றி விழுந்தன. அரிதாக மலரும் அந்த மலரின் அழகை ஆராதிக்க அங்கு யாரும் இல்லை.
**************************
இதன் முந்தைய பாகத்தை படிக்க
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...