சிவா எல்லாவற்றையும் புதிதாகப் பிறந்த கன்றைப் போலப் பார்த்தான்.
ஒவ்வொரு ஒலியின் அதிர்வு, காற்றில் தவழ்ந்து வரும் மணம், ஒளியின் கீற்று, வெப்பத்தின் சூடு ஆகியவை அவனுக்கு மிகவும் அந்நியமாகவும், புதியதாகவும் இருந்தன.
அவனது கரம் தமருகப்பறை கட்டப்பட்டிருந்த திரிசூலத்தை இறுகப் பற்றியிருந்தது. அது அவனது மறந்துபோன வாழ்க்கையின் மிச்சமிருக்கும் ஒரே எச்சம்.
சூரியன் அவனது வெளிறிய தோலை எரித்தது.
பசியோ அவனது வயிற்றைக் கிள்ளியது.
திடீரென, மங்கலான ஒரு உருவம் எரியும் நெருப்பின் நடுவில் இருந்து மகனே என்று கத்தியது போன்ற உணர்வு அவனுக்குள் எழுந்தது ... அதைத்தொடர்ந்து முகத்தை நோக்கி பாயும் ஒரு புலியின் உருவம்...
அவன் தடுமாறிப் பின்வாங்கினான், மூச்சு அதிகரித்தது. திரிசூலத்தை இறுகப் பற்றினான். நதியின் அலைகள் அவனது கால்களை தீண்டியபடி இருந்தன. திடீரென்று மின்னலைப் போல் நீரிலிருந்து ஒரு மீன் தாவியது.
கானகத்தின் பழம்பெரும் வேட்டையாடிகளின் வாரிசான அவன் உள்ளுணர்வு உந்துதலால் கையில் இருந்த சூலத்தை மீனை நோக்கி விட்டெறிந்தான்.
அதன் மழுங்கிய முனைகள் மீனைக் கொல்லத் தவறின.
பசி நீடித்தது.
அப்போது காற்றில் இருந்து சுகந்த மணம் ஒன்று அவனைச் சுண்டி இழுத்தது. அந்த மணம் அருகில் இருந்த மாமரம் ஒன்றிலிருந்து வந்தது. அவன் மாமரத்தை உற்று நோக்கினான். அந்த மரத்தில் இலைகளுக்கு நடுவில் பச்சை நிறத்தில் இலைகளைப் போலவே மாங்காய்கள் இருந்தன. அவை தன்னை யாரும் தீண்டக் கூடாது என்று உருமறைப்பில் இருந்தன. அவற்றை சிவன் புசித்த பொழுது புளிப்புச் சுவை நாவில் ஏறியது.
அவன் மாமரத்தை உற்றுப் பார்த்தான். தங்க நிறத்தில் சில பழங்கள் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு சுகந்த மணத்தால் அவனை ஈர்த்தது. கண்களால் பார்த்ததை கைகளால் பறித்தான். கண்களுக்கு கீழ் இருந்த நாசியினால் மாம்பழத்தை நுகர்ந்தான். தன்னை புசி என்று சுகந்த மணத்தால் மாம்பழம் அவனை அழைத்தது. வாயில் எச்சில் சுரந்தது. அதை ஆவலுடன் கடித்தான் மதுரம் நாவைத் தீண்டியது. வயிற்றில் எரிந்து கொண்டிருந்த அழலுக்கு அந்த மாம்பழம் உணவாக அமைந்தது. அவனது உடல் உயிர் பெற்றது.
எது பாதுகாப்பானது, எது பாதுகாப்பற்றது என்று அவனுக்கு உள்ளுணர்வு அறிவுறுத்தியது. மனதில் ஆழத்தில் எங்கோ ஒரு மூளையிலிருந்து அந்த அறிவானது அவனுக்கு வெளிப்பட்டு தூண்டப்பட்டது. நினைவிலிருந்து அல்ல, சிந்தனையை விட பழமையான ஒரு இடத்திலிருந்து அது கிளர்ந்து எழுந்தது .
பழைய நினைவுகள் அவனை முற்றிலுமாக கைவிடவில்லை. அவ்வப்போது ஏதோ ஒன்று அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. இருப்பினும் அவன் உலகை புதிதாக படிக்கத் தொடங்கினான்.
அவன் அந்தச் சூழலை உற்று கவனித்தான். அந்த முல்லைவனம் பல்வகை உயிரினங்களால் நிரம்பி இருந்தது. அந்த விலங்குகள் ஒவ்வொன்றையும் அவன் உற்று நோக்கினான்.
குரங்குகளுக்கு அவனைப் போல் கைகள் இருந்தன. பறவைகளுக்கு கைகளுக்கு பதில் இறக்கைகள் இருந்தன.
மரங்களும் செடிகளும் தங்கள் நுனியில் தருவதை இவ்விரு வகை உயிர்களும் உண்டன. மேய்வன எல்லாம் இலைகளை உண்டன. கொல்லுண்ணி விலங்குகள் இவை அனைத்தையும் வேட்டையாடி உண்டது.
வயதான மரங்களும் செடிகளும் பறவைகளும் விலங்குகளும் மடிந்து பூமியில் விழுந்தன.
உயிரிழந்த அனைத்தையும் பூமி உண்டது. அந்த பூமியில் இருந்து மீண்டும் உயிர்கள் ஜனித்தன.
இந்த சுழற்சி புனிதமானது. இதுவே இந்த உலகை நிலையாக சுழல வைக்கிறது என்பதை சிவன் புரிந்து கொண்டான்.
ஒவ்வொரு காலையும் சிவனுக்கு ஒரு புதிய பிறப்பாக இருந்தது. அங்கே அவனுடன் பேசுவோர் யாரும் இல்லை, வழிநடத்துவாரும் யாருமில்லை. அவன் தன்னிடமே பேசிக் கொண்டான். தன்னைத்தானே வழிநடத்திக் கொண்டான். தனக்குத்தானே கற்பித்துக் கொண்டான்.
சிவன் அந்த காட்டில் வெறுமனே உயிர் பிழைத்திருப்பவனாக இருந்திருக்கவில்லை. மனிதர்கள் காண மறந்த புதியதொரு பரிணாமத்தின் வழி அவன் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கற்கத் தொடங்கினான். அவனுக்கு அவனே கற்பித்துக் கொள்ளவும் தொடங்கினான்.
அவனது கற்பிதங்கள் புதிதானவை. அவனது கற்பிதங்கள் புரட்சிகரமானவை.
அவன் கற்ற அந்தக் கற்பிதங்கள் இந்த உலகை வழி நடத்தப் போகிறது . அந்த கற்பித்தங்கள் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் வாழ்வில் எதிரொலிக்கப் போகிறது .
ஆனால் இப்போதைக்கு, அவன் உடலிடமும் இந்த பிரபஞ்சத்திடமும் பாடங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல, அவன் உள்நோக்கி திரும்பினான்—அவனது உடலை கவனித்தான்: அதன் நடுக்கங்கள், துடிப்புகள், தாளங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு புரிபடத் தொடங்கியது.
அவன் உண்ட பழங்கள்தான் அவனுக்கு உயிர் ஊட்டின. அந்த உணவே அவனது உடலின் எரிபொருளாக இருந்தது. அதிலிருந்து அவனுக்கு அழல் என்னும் ஆற்றல் கிடைத்தது. ஆனால் அந்த அழல் சூரியனிடமிருந்து வந்தது. பூமி நீர் காற்று இவை அனைத்தும் ஒன்றிணைந்து உணவை உருவாக்கின. உணவானது சூரியனின் பிழம்பை அதற்குள் பிடித்து வைத்திருந்தது.
வானில் எரியும் அதே பிழம்பு தனக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிவதை அவன் உணர்ந்தான்.
பிரபஞ்சத்தால் அவன் வாழ்ந்தான் . அவனால் பிரபஞ்சமும் வாழ்ந்தது .
அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருக்கிறது பிண்டத்தில் இருப்பது தான் அண்டத்திலும் இருக்கிறது என்ற பேருண்மையை அவன் உணர்ந்தான்.
அவன் ஓடும்போது, வெப்பம் உருவாகியது.அவனது மூச்சு அதிகரித்தது. அழல் அவனது மார்பில் பாய்ந்தது. இந்த நெருப்புக்கு பித்தம் என பெயர் வைத்தான் அந்த பித்தன்.
அந்தப் பித்தமானது சூரியன் உச்சிக்கு வரும் பொழுது உடலில் உச்சம் கண்டது. அவன் போராடும் பொழுதும், அவன் ஆவேசம் கொள்ளும் பொழுதும் அது தூண்டப்பட்டது. இரவின் பொழுதும், தூக்கத்தின் பொழுதும், மௌனத்தின் பின்பும் அது மட்டுப்பட்டது.
பருவங்கள் மாறும்போது, அவனது உடலில் சமநிலையும் மாறியது.உணவு, இயக்கம், உணர்ச்சி— அனைத்தையும் அவன் தனது உடலின் அழலைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினான்.
அந்த அழலை குளிர்விக்க, அவன் ஆற்று சேற்றை நெற்றியில், மார்பில், தோள்களில் முழுவதும் பூசினான்.
அப்பொழுது எழுந்த உணர்வு அவனுக்கு பழக்கப்பட்ட உணர்வாக இருந்தது.
"சேற்றுடலோன்... மாயாவி... " என்ற சிறுவர்களின் கெக்களிப்பு அவனது கபாலத்திற்குள் ஒலித்தது. அவனது விலாக்கள் நினைவில் இறுகின. முகங்கள், குரல்கள், நிழல்கள் அவனது மனதில் அலையாடின. அவனது கடந்த காலம் இலைகளின் வழியாக உடைந்த ஒளி போல மின்னியது.ஆனால் எதுவும் அவனுக்கு தெளிவாக நினைவில்லை.
ஏதோ ஒரு இனம் புரியாத வலி அவனுக்குள் எழுந்தது.
இருப்பினும், அவன் முன்னோக்கி நடந்தான். ஆனால் இந்த முறை, அவன் தெளிவாக இருந்தான். அவனது நடையில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.
வெளியே உள்ள வெப்பமும், உள்ளே உள்ள அழலும் —எதிரிகள் இல்லை. அவை தான் உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன எனும் உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.
கற்களை எடுத்து காய்ந்த கருக்குகளை குவித்து நெருப்பினை மூட்டினான்.
தோலை சுட்டெரிக்கும் அதே நெருப்பு உணவை சமைத்தது, உலோகத்தை வடிவமைத்தது, நட்சத்திரங்களை ஒளிரச் செய்தது.அவனது கடந்த காலத்தை எரித்த அதே பிழம்பு இப்போது அவனது பாதையை ஒளிரச் செய்தது.
இவை தான் இந்த உடலின் விதிகள் என அவனுக்கு புரிந்தது. இந்த விதிகள் கல்லில் செதுக்கப்படவில்லை, ஆனால் அவனது சதையில் மூச்சில் குருதியில் பிரித்தறிய முடியாதபடி கலந்து அந்த விதிகள் அவனை வழி நடத்தியபடி இருந்தன.
அவன் மூச்சை ஆராய்ந்தான். அது நெருப்புக்கு எரிபொருளாக இருந்தது. அந்த எரிபொருள் உடலில் அதிகமாக எரியும் பொழுது அவனது கை மணிக்கட்டில் உள்ள தமணி வித்தியாசமாக துடித்தது. அதன் துடிப்பு அவனது தமருகப்பறையின் தாளத்துடன் பொருந்தியது. அவன் தனது பறையை இசைக்க ஆரம்பித்தான்.
அவன் அதை வாசிக்கும்போது, எழுத்துக்கள் அவனது கண்ணில் மின்னின. அந்த எழுத்துக்கள் அவனுக்கு மிகவும் பழக்கமானவை... அவை மிகவும் பழமையானவை.
ஒரு நாள், வியர்வை அவனது செப்புக் காப்புடன் கலந்தது. செம்பு அவனது உடலுக்குள் தோல் வழி ஊடுருவியது.
ஒரு விசித்திரமான வெப்பம் அவனது கையில் ஒரு உயிருள்ள புழு போல ஊர்ந்தது. அதை நாடி என்று அவன் அழைத்தான்.
சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி துடித்தது. சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி தணிந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அவன் ஆராய முற்பட்டான்.
செம்புக் காப்பு வியர்வையில் நனையும் பொழுதெல்லாம் அவனுக்கு பித்தம் அதிகரித்தது.அந்த செம்பை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு பிம்பம் அவனது மனதில் நிழலாடியது —அவனது தந்தை அதை உருக்குவது, சுத்தியால் அடிப்பது, வடிவமைப்பது....
பதறிய அவன், காப்பை கழற்றினான். ஒரு காலத்தில் பாதுகாப்பின் சின்னமாக இருந்த செப்பு, இப்போது உள்ளே எரியும் நெருப்பை தூண்டியது. அது இனி அவனுக்கு உதவப் போவதில்லை —அது அவனை பலவீனப்படுத்தியது.
ஆனால் அவன் இன்னுமொரு உலோகத்தை அணிந்திருந்தான். நாகத்தின் உருவத்தை கொண்ட ஒரு வெள்ளி வளையம் அவனது கழுத்தை சுற்றியிருந்தது. அவனது தந்தை அவனுக்கு அணிவித்த அன்பின் அடையாளம்.
அது அவனை குளிர்விக்கத் தவறவில்லை. ஆனால் அவனது வெளிறிய தோலில், விசித்திரமான மாற்றத்தை அது ஏற்படுத்தியிருந்தது.
அவன் செப்புக்காப்பை அணிந்திருந்த கையில் பச்சை நிற கறை ஒன்று தோலின் மேல் படிந்திருந்தது
, காலப்போக்கில் அந்தக் கறை மெதுவாக மறைந்தது.
ஆனால் வெள்ளியினால் ஏற்படுத்தப்பட்ட கறை ஆழமானது. ஒரு நுட்பமான நீல நிறம் அவனது தோலில் படிய ஆரம்பித்தது.
எவ்வளவு கழுவினாலும் தோலை விட்டு நீங்காத நீல நிறக் கறை அது.
இதை தற்போதைய மருத்துவர்கள் கண்டால் localized argyria என்று அழைப்பார்கள். அது தீங்கற்ற ஒரு தழும்பு என்று கூறி விடுவார்கள்.
ஆனால் அக்காலத்தைய மனிதர்களுக்கு நீல நிறம் என்பது மிகவும் அரிதான ஒன்று.
கழுத்தில் இருக்கும் இந்த நீலக்கரையின் காரணமாக நீலகண்டன், மணிமிடற்றோன், மிடற்றண்ணல் என்று பல்வகை பெயர்களால் அவனை அழைக்க போகிறார்கள்.
உலோகங்களுக்கும் அவனுக்கும் இடையிலான தொடர்பை பக்கங்களால் விளக்கி விட முடியாது.
செம்பு காப்பினை அவன் தவிர்த்து விட்டான் ஆனாலும் அவன் கையில் ஏந்தி இருந்த திரிசூலமும் செம்பால் ஆனது.
அது தணிக்க வேண்டிய பிழம்பை அவனுள் தூண்டியது. மேலும் அது வளைந்து காணப்பட்டது. அது..
அவனது பழைய வாழ்வில் நேர்ந்த துன்பத்தின் அடையாளமும் கூட.
அதை இனிமேலும் சுமக்க அவன் தயாராக இல்லை. அவனுக்கு இன்னும் உறுதியான உலோகம் தேவைப்பட்டது.
செம்பு மட்டும் அவனுக்குள் இருந்த பித்தத்தைத் தூண்டவில்லை. சிலவகை உணவுகளும் அவனது பித்தத்தைத் தூண்டின.
புளிப்பு, உப்பு, மிகுந்த உணவுகளை அவன் சுவைக்கும்போதெல்லாம், அவனது நாடி எச்சரிக்கை முரசு போல துடித்தது. அதிக மூத்திரம் சயம் முதலியவன் உண்டானது.
அவனது வெளிரிய தோல் மஞ்சள் நிறமாக மாறியது.அவனது கண்கள் மங்கின. தூக்கம் மெல்லியதாகவும் அமைதியற்றதாகவும் ஆனது. தினவெடுத்த அவனது தோள்களில் இருந்து வலிமை நழுவியது.
அவனது வாய் புளித்தது. அவனது புலன்கள் இருளாக மங்கின.
அவன் அறிகுறிகளை அடையாளம் கண்டான்: அவை சமநிலையின்மையின் குறியீடுகள்.
அவனை இந்த அறிகுறிகள் அச்சப்படுத்தவில்லை.
அவனது உடல் இந்த அறிகுறிகளால் தோல்வி அடையவில்லை.
அவன் கேட்கத் தொடங்கினான். அவன் சமநிலையை பாவிக்கத் தொடங்கினான்.
தசைகள் மூச்சுக்காற்றை கொண்டு உணவை எரித்த பொழுது உடலில் அழல் உயர்ந்தது எனவே, அவன் தனது வழக்கங்களை மாற்றிக்கொண்டான்.
சூரியனின் கீழ் அவன் தனது உணவுகளை உண்டு விட்டு பகலில் இளைப்பாறினான்.
அவன் நிலவின் கீழ் நகர்ந்தான்—குளிர்ந்த, அமைதியான, இரவினையே அவன் மிகவும் விரும்பினான்.
அவன் ஒரு இரவாடியாக மாறினான்.
இரவு அவனது எரியும் தோலை ஆற்றியது.காற்று ஒரு புதிய மொழியில் பேசியது.நட்சத்திரங்கள் ரகசியங்களுடன் மின்னின.மௌனம் குரல்களை விட உரத்து பாடியது.
காரிருளில் அவன் கண்களால் பார்ப்பதை விட புலன்களால் அந்த வனத்தை அறிய முற்பட்டான்.
வௌவால்களைப் போல, அவன் காதுகளால் உலகைப் பார்த்தான்.
பாம்புகளைப் போல, அவன் அதிர்வுகளை உணர்ந்தான்.
யானைகளைப் போல, அவன் தொலைவில் உள்ள நீரை முகர்ந்தான்.
அவனது புருவங்களுக்கு இடையே உள்ள காயம் இப்பொழுது குணமாகிவிட்டது. அது மூடி இருக்கும் ஒரு கண்ணைப் போல் தோற்றம் அளித்தது. இதன் காரணமாக நெற்றிக்கண்ணன்,
நுதற்கண்ணன், கண்ணுதல் என மக்கள் அவனை அழைக்கப் போகின்றனர்.
மற்ற புலன்களால் அவன் பார்க்கும் பொழுது அவனது மூன்றாவது கண் மெல்லிதாக அதிர ஆரம்பித்தது.
தமருகப்பறையின் அதிர்வினை அது வெளிப்படுத்தியது.
அப்பொழுது அவனது மனதில் ஒரு எழுத்து எதிரொலித்தது:
அது ழகரம்.
"மகனே நாவால் மேல் அண்ணத்தைத் தொட்டு இந்த எழுத்தை உச்சரி." மூளைக்குள் அவனது அன்னையின் குரல் ஒரு அசரீரி போல ஒலித்தது...
அவன் ழகரத்தை உச்சரித்தான் .உள்ளே ஏதோ மின்னல் போன்ற ஒன்று துடித்தது. அது அவனை வழிநடத்தியது.
அவன் இந்தப் பிரபஞ்சத்தை மூன்றாவது கண்ணால் பார்க்க ஆரம்பித்தான்.
பூமியின் கீழ் இருக்கும் உலோகங்கள்; அதிர்வுகள் மூலம் அவனுக்கு தங்களது இருப்பிடத்தை அறிவித்தன .
அவனது கண்கள் வலசைப்பறவைகளைப்போல காந்தப்புலனை காணத்தொடங்கியது. அதிலும் அவனது மூன்றாவது கண் கிட்டத்தட்ட மடகாஸ்கர் ஸ்விஃப்ட் உயிரினத்தின் மூன்றாவது கண்ணைப் போல இயங்கியது.
அந்த மூன்றாம் கண்ணானது அவனுக்கு ஒரு திசைகாட்டி, ஒரு கடிகாரம், ஒரு நாட்காட்டி, ஒரு மாய உணர்கருவி.
அவனது மூன்றாவது கண்ணில் உடலின் அழலானது மையம் கொண்டு ஜோதி போல எரியத்துவங்கியது.
நெருப்பு அவனது உடலுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை.
நெருப்பு அவனது வெளி உலகையும் ஆட்சி செய்தது.
அது அவனது நாட்களை வடிவமைத்தது, அவனது வலிமையைச் சோதித்தது, எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடவுளைப் போல மீண்டும் மீண்டும் அவனது வாழ்வில் எதிர்பட்டது.
ஒரு நாள், புதர்களில் கோபமான கடவுள்களின் மூச்சு போல ஒரு காட்டுத் தீ பரவியது.
அந்த நெருப்பைக் கண்டதும் அவனது மனதில் மறைந்திருந்த நினைவுகள் மின்னின. அவனது அன்னையின் கூச்சல்... துடியர்களின் குடியிருப்பில் படர்ந்த அக்கினி...
ஆனால் இந்த முறை, அவன் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை. நெருப்புக்குள் ஓடினான்.
உள்ளே ஒரு கன்று சிக்கியிருந்தது.
அவன் அதை விடுவித்தான்.
அந்தக் கன்று ஒரு பசுவை நோக்கி ஓடியது.
பசு நன்றியின் மிகுதியால் அவனது முகத்தை நக்கியது. அவன் அதன் அருகில் படுத்தான்—அந்த வெப்பத்தில், அவன் தனது தாயின் கதகதப்பை மீண்டும் உணர்ந்தான். இப்பொழுது கன்று பசுவிடமிருந்து பாலைக் குடித்தது. இதைக் கண்ணுற்ற அவனும் அந்த பசுவிடமிருந்து பாலைக் குடித்தான்
இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளின் புனித ஒன்றிணைப்பாக அந்தப் பால் விளங்கியது .
அவன் அந்தப் பசுக்களின் சுவாசத்தின் கீழ் தூங்கினான்,
பசுக்கள் பகலில் மேய்ந்து இரவில் அசை போட்டன. அவனைப் போலவே இரவு முழுவதும் அவை விழித்திருந்தன.
அவை அவனுக்கு இரவுத் தோழனாக விளங்கின.
கூட்டம் அவனை ஏற்றுக்கொண்டது.வார்த்தைகள் இல்லை. கேள்விகள் இல்லை. வெறும் தொடுதலும் நம்பிக்கையும் மட்டுமே அங்கே நிலவி வந்தது.
கூட்டத்தை ஒரு மூத்த பெண் பசு வழிநடத்தியது—அதன் கண்கள் காலத்தால் ஆழமானவை, அதன் இருப்பு நிலவைப் போல அமைதியானது.
அது அவனுக்கு கொடிச்சியையும் அவனது அன்னையையும் நினைவூட்டியது, ஒரு மின்னல் வடிவ பிம்பமாக...
அந்த மின்னல்கள் கனவுகளைப் போல அவனது மனதில் அடிக்கடி தோன்றின,
அது ஒரு தரிசனமா?
மற்றொரு வாழ்க்கையா?
பூர்வ ஜென்ம நினைவுகளா?
அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் அந்த பிம்பம் மேலெழும்போதெல்லாம், அவன் மனதில் அமைதி திரும்பியது.
ஆனால், இந்தக் காட்டில் அமைதி நீண்ட நேரம் தங்குவதில்லை.
காட்டின் நிழல்களில் இருந்து ஒரு பெரிய காளை வந்தது—அது பெண் பசுக்களைச் சுற்றி பாதுகாப்பது போல அலைந்தது...
அது தனது கண்களில் புயல்களின் பாரத்தைச் சுமந்தது.
அதன் கோபம் பழமையானது.
அதன் பாதங்கள் இடியாக ஒலித்தன.
அது ஒரு இயற்கையின் சக்தி.
சிவனோ பித்தத்தின் மறு உருவம்
ஆனால் அந்தக் காளையோ வாதத்தின் பிரதிநிதியைப் போல தோற்றமளித்தது.
சிவன் அந்த கூட்டத்தில் இருப்பதை அது விரும்பவில்லை.
வாதமும் பித்தமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
காளை மணலின் ஆழம் வரை கொம்புகளைப் பதித்து, நெம்பி எடுத்து மணலை நாற்புறமும் விசிறி அடித்தது, கோபத்துடன் அவனைப் பார்த்து உறுமியது.
சிவன் ஓடவில்லை.
மிருகம் கர்ஜித்து முன்னேறியது.சிவா பாய்ந்தான், கொம்புகளுக்குள் சிக்கி விடாமல் காளையின் திமிலைப் பிடித்தான்.அது அவனைப் புழுதியிலும் முள் செடிகளிலும் இழுத்துச் சென்றது.அவனது பிடி இறுகியது.
இரு வீரர்களும் சமமானவர்கள் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டனர்.
காளையின் வேகம் குறைந்தது .
சிவனின் பிடியும் தளர்ந்தது.
காளை திரும்பி சிவனை உற்று நோக்கியது.
இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.
அவர்களுக்கு இடையில் ஏதோ கடந்தது.
அது பயம் அல்ல.
சவாலும் அல்ல.
ஒரு அங்கீகாரம்.
உயிர்களை நேசிப்பவனான சிவன் அந்த விலங்குக்கு எந்த தீங்கினையும் செய்ய விரும்பவில்லை.
அவன் மீண்டும் தனிமையைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தை விட்டு வெளியேறினான். அங்கே மீண்டும் அமைதி திரும்பியது.
ஆனால் அவனது உடலின் வெப்பம் தணிவதாகத் தெரியவில்லை. அவன் உடல் சுடும்போதெல்லாம் உடலை குளிரச் செய்யும் வெள்ளி வளையத்தை கைகளால் தொட்டுப் பார்ப்பான்.
செம்பினால் தூண்டப்பட்ட அழலை வெள்ளி தணித்துக் கொண்டிருந்தது.
வெள்ளியைப் போல் வேறொரு உலோகம் அவனது சமநிலையின்மைக்கு தீர்வு அளிக்கக்கூடும் என்ற எண்ணம் சிவனுக்கு மேலோங்கியது. மேலும் அவனுக்கு பாதுகாப்பளிக்கக் கூடிய ஆயுதமாகவும் ஒரு புது உலோகம் அவனுக்குத் தேவைப்பட்டது.
அவனது மூன்றாவது கண் மீண்டும் அவனை வழிநடத்தியது.
அது துடித்தது.
அவன் தேடினான்.
வளையாத உலோகத்திற்காக.
உடையாத ஆயுதத்திற்காக.
சமநிலையை மீட்டெடுக்கும் மருந்திற்காக.
ஆன்மாவை தாங்கக்கூடிய உடலுக்காக.
அவன் இனியும் சிறுவன் அல்ல. அந்தப் பிறைசேர் சடையான் ஒரு சரித்திரமாக மாறிக் கொண்டிருந்தான். அந்த மாற்றத்தை அவனது சடைக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...