Saturday, July 19, 2025

சந்திரசூடன் (ஆதியோகி: அத்தியாயம் 3 )

 முழு நிலவின் ஒளி மல்லப்ப கொண்டா மலையின் மீது கவிழ்ந்தது, நிலவானது அந்தப் புனித மலையை  குளிரில்  குளிப்பாட்டியது. மல்லப்ப கொண்டா... மல்லர்கள் கூடும் மலை. அந்த மலையின் காற்றில் முரசின் ஒலிகளும்,  உச்சாடனங்களும் ஒருவித புனித அதிர்வினை பரப்பியபடி இருந்தன.

குரவம், தளவம், குருந்து, முல்லை போன்ற மலர்களால் செய்யப்பட்ட மாலை சேயோனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தது. 

 சேயோன் முன் இடித்து மாவாக்கிய கருங்கால் வரகு, இருங்கதிர் தினை மாவு இவை இரண்டும் தேனுடன் குழைத்து வைக்கப்பட்டிருந்தது , கொள்ளு மற்றும் அவரை ஆகியவை அவித்து வைக்கப்பட்டிருந்தன.

அனைத்து திசைகளில் இருந்தும் வந்திருந்த துடியர்கள்  பறையர்கள் பாணர்கள் கடம்பர்கள் போன்ற ஆதி குடிகள் அங்கே கூடி இருந்தனர்.

பெண்கள் குலவை சத்தம் எழுப்ப வெறியாடல் தொடங்கியது.

 செங்குருதி நிறத்துச் சேயோனின் ஆவியும் அணங்கின் ஆவியும்  அங்கே குழுமியிருந்த மக்களின் மீது  இறங்கியது. ஆவி இறங்கியவர்கள் ஆவேச கூச்சலிட்டனர். அந்த ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் வெறிகொண்டு கூச்சலிட்டு ஆடினர்.

வெறியாட்டம் என்பது இடியில் பிறந்த ஒரு பிரார்த்தனை. 

வெறியாட்டம் ஒரு விடுதலை.

மனதை அழுத்தும் துயரத்தின் வடிகால்.மாபெரும் சக்தியின் முன் சரணாகதி அடைதலின் மாற்று வடிவம் அது. 

 வரையாடு செம்மறியாடு மற்றும் சேவல் போன்றவை அங்கே பலியிடப்பட்டுக் கொண்டிருந்தன.பலியிடப்பட்ட ஆட்டின் குருதி கனமான மணத்தை காற்றில் பரப்பியது.பலியிடப்பட்ட வரையாட்டின் தோலினை  சாமியாடிகள் உரித்துக் கொண்டிருந்தனர் . 

 இவற்றிற்கு மத்தியில் சிவனின் தந்தை சேயோனை தொழுது கொண்டிருந்தார். அங்கே புலித் தோலை அணிந்து கொண்டிருந்த வெகு சிலரில் அவரும் ஒருவர். அங்கேயிருந்த சில மூப்பர்கள் சிவனின் தந்தையை நோக்கி சுட்டிக்காட்டி இரண்டு புலிகளைக் கொன்ற மாவீரன் அவன் தான் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். "மல்லர்களில் சிறந்த மல்லன் இவன், இவனே மல்லப்பா எனும் பட்டத்தை சுமப்பவன். இந்த முறையும் இவனை இங்கு எதிர்க்க யாரும் இல்லாததால் அவனே இன்னும் 12 வருடங்களுக்கு மல்லப்பாவாகக் கருதப்படுவான். சேயோன் அவரது வம்சத்தை காக்கட்டும்", என்று அத்தனை அவர்கள் ஆசீர்வதித்தனர்.

 அங்கே புலி ஆடையை அணிந்திருந்த மற்றொருவரும் இருந்தார். அவர் பார்ப்பதற்கு அச்சு அசல்  சிவனின் தந்தையைப் போலவே தோற்றம் கொண்டிருந்தார். அவர் அத்தனின் இளைய சகோதரர். வடக்கே இருக்கும் கானகத்தின் பெருவீரர் அவர். இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணுற்றனர். பாச மிகுதியால் தழுவிக் கொண்டனர். அவர் அத்தனை மல்லண்ணா என பாசமிகுதியால் அழைத்தார்.

 அவருக்கு அருகில் அவரது கால்களை தழுவிய படி கூர்மையான  கண்களுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.  அவனை ஒட்டி ஒரு சிறிய செம்மறி ஆட்டுக்குட்டியும் இருந்தது. அந்த குட்டிக்கு அவன்  புங்கை மரத்து இலைகளை   உண்ணுவதற்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அங்கும் இங்கும் ஓடித் திரியும்  இயல்புடைய அவனின் பாதங்களில் புழுதி படிந்திருந்தது. பார்ப்பதற்கு கருப்பு நிற சிவனைப் போல் இருந்தான்.

   “இவன் பத்ரா, நாங்கள் வீரையன் என்று அழைப்போம் ,” என்று சகோதரர் கூறினார், அவரது கை சிறுவனின் தலைமுடியை கோதிவிட்டபடி இருந்தது . “ இவனும் இவன் சகோதரி எல்லாம்மாவும்  பலியிடுவதற்காக பிடித்து வைக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் பின்னாலே சுற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்கள்."

" எல்லம்மா இங்கே வரவில்லையா?" என்றார் அத்தன்.

 அவளுக்கு தனது ஆடுகள் அறுக்கப்படுவதை கண் கொண்டு காண இயலவில்லை. அதனால் வரமாட்டேன் என்று கூறிவிட்டாள். "

சிவாவின் தந்தை, பத்ரன் ஒரு ஆட்டுக்குட்டியிடம் மெதுவாக பேசுவதைப் பார்த்தார், அது அவனது காலடியில் அமர்ந்திருந்தது. அவரது முகத்தில்  மேகம் கடந்து செல்வது போல ஒரு புன்னகை தோன்றியது. அவருக்கு சிவனின் நினைவு வந்தது. "சிவனும் இவனைப் போல் தான் மிருகங்களின் மீது அளவுகடந்த பாசம் உடையவன்." என்று அத்தன் கூறினார்.

  “சிவா ஏன் இங்கு வரவில்லை?” என்று சகோதரர் கேட்டார்.

 வலி நிரம்பிய புன்னகை ஒன்றை மட்டுமே அத்தனால்  பதிலாகத் தர முடிந்தது.  அத்தனின் கண்ணில் தோன்றிய வலியின்  நிழலை கண்ட இளைய சகோதரர்  தனது இடுப்பில் தொங்கிய தோல் பையில் இருந்து ஒரு செப்புக்காப்பை எடுத்தார்.

"வடக்கு கணவாய் வழியாக வந்த ஒருவர் இதை எனக்கு புலியின் பற்களுக்கு மாற்றாக கொடுத்து விட்டுச் சென்றார் இதை நான் சிவனின் மணிக்கட்டில் அணிவிக்க விரும்புகிறேன். சிவன் இதை நிச்சயம் விரும்புவான்" என்று அதை மெதுவாக தனது அண்ணனின் கையில் வைத்தார். 

 மேலும் பச்சை நரம்புகள் நிறைந்த,  செப்புத் தாதின் ஒரு துண்டை அவர் தனது அண்ணனிடம் காட்டினார் . “அவன் இது போன்ற தாதுவை  நெருப்பில் உருக்கி, மோதிரங்கள், பாத்திரங்கள், கருவிகள் முதலியவற்றை உருவாக்குகிறான். இதை பூமியின் இருதயத்தில் இருக்கும் பொக்கிஷம் என்கின்றான் அவன் "

 அத்தன் அந்த கல்லின் கரடுமுரடான விளிம்பை தனது கட்டைவிரலால் தடவினார், அவரது கண்களில் ஆர்வம்  பிரகாசித்தது. “அற்புதம்,” என்று மெதுவாக முணுமுணுத்தார். “நம் மலைகளிலும் இப்படிப்பட்ட கற்களைப் பார்த்திருக்கிறேன்… இதை நானும் உருக்க முயற்சிக்கிறேன். பூமி நமக்கு பரிசுகளை அளிக்கிறது என்றால், நாம் அவற்றை வடிவமைக்க  கற்றுக்கொள்ள வேண்டும்". அத்தனின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.

மலைகளின் தாளம் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 மெல்ல மெல்ல தாளங்கள் மௌனத்தை நோக்கி திரும்பின. புனித சடங்குகள் முடிவுக்கு வந்தன. அத்தனின் குழுவினர் மற்ற குழுவினருடன் பிரியாவிடை பெற்று தங்களின் வனத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அத்தனின் குழுவினர் தங்கள் இருப்பிடத்தை நெருங்குவதற்கு முன்னர் ஒரு பேராபத்து அவர்கள் குடியிருப்பை நெருங்கியது.

 சிவன் வெயிலை வெறுத்தவன். குளிர் இரவு அவனுக்கு உகந்தது. நிலவின் இரவுகள் அவனுக்கு  விருப்பமானது. எப்போதும் நிலவின் குளிர்ந்த கரங்களால் ஈர்க்கப்பட்டவன் அவன்.  நிலவின் குளிரில் மட்டுமே அவன் இயல்பாக இருந்தான். நிலவினை எப்பொழுதும் தனது தலையின் மேல் வைத்திருக்க விரும்பினான். நிலவுக்கு தலைகாட்டிய படி சுற்றும் அவனை அவனது அன்னை செல்லமாக சந்திர சூடன் என்று அழைப்பாள்.

 அப்படிப்பட்ட ஒரு நிலவின் இரவில், குடியிருப்பில் வீரர்கள் அனைவரும் இல்லாத அந்த சமயத்தில், வெள்ளி வானத்தின் கீழ், சுதந்திரமாக சிவன் சுற்றிக் கொண்டிருந்தான். காற்று அவனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய ஒரு தாளத்தை முணுமுணுத்தது, மரங்கள் கூட அவனது பெயரை மெதுவாக உச்சரிப்பது போலிருந்தது.

 அந்தக் குளிர் இரவில் பசியுடன் திரிந்த இரண்டு பளபளப்பான கண்கள் அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை.

 காரிருளில் பதுங்கியபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு வேட்டையாடி. அது இருளின் நிறத்தை ஒத்திருந்தது — அது ஒரு கருப்பு சிறுத்தையாக இருக்கக் கூடும்  அல்லது அதைவிட பழமையான ஏதோ ஒன்று... நிறுத்தி நிதானமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

 காற்றில் வேட்டையாடியின் மனத்தை சிவா உணர்ந்து கொண்டான்.

 சிவா ஓடினான், வேர்களில் தடுமாறி கீழே விழுந்த படி முட்களின்  கீறல்களை பொருட்படுத்தாமல் மிக விரைவாக ஓடினான்.  அவனது கூச்சல்கள் பள்ளத்தாக்கில் எதிரொலித்தன, ஒரு பறவையின் இறுதி குறிப்பு போல கூர்மையாகவும் மெல்லியதாகவும் இருந்த அந்த கூச்சல் இருளை கிழித்தது. கிராமத்தில் வீரர்கள் யாரும் இல்லை.

 ஆயி மற்றும் கொடிச்சி இருவரும் சிவனை காக்க விரைந்தனர். கண்ணில் கருணையையும் நெஞ்சில் வீரத்தையும் கொண்டிருந்த கொடிச்சி, மரணத்திற்கும் சிவனுக்கும் இடையில் தன்னை தயக்கமின்றி  நிறுத்திக் கொண்டாள்.  

 பொழுது விடிந்த பொழுது கொடிச்சி உயிருடன் இல்லை.

 வீரர்கள் வீடு திரும்பி இருந்தனர், துக்கம் அவர்களை மௌனமாக்கியது.

 கோடன்  மௌனத்தை கலைத்தான் . “இந்தப் பையன்... மீண்டும்! இவன் துரதிர்ஷ்டத்தைத் தருகிறான். முதலில் நெருப்பு, இப்போது மரணம். இது முடிவுக்கு வர வேண்டும். இவன் இந்தக் குடியிருப்பில் இருக்கத் தகுதியற்றவன் .” அவன் அனைவரும் கேட்கும்படி தனது குரலை உயர்த்தினான். ஆனால் இப்போது கோடனை அமைதிப்படுத்த கொடிச்சி இல்லை. 

அத்தனும் ஆயியும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.

 சிவனின் உடலில் இன்னும் குருதி வழிந்தபடி இருந்தது. அவனது கண்கள் சூனியத்தை வெறித்தபடி இருந்தன. திடீரென்று சிவன் சரிந்தான். அவனது உடல் நடுங்கத் தொடங்கியது கண்கள் மேல் சொருகின.

 அவனது உதடுகளில் இருந்து நுரை மட்டுமே வந்தது. கிராம மூப்பரான ஆதன் என்பவர் சிவனின் முன் விரைந்தார்.  நோய்களைப் பற்றியும் மூலிகளைப் பற்றியும்  ஞானமுள்ளவர் அவர்.  

 அவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார், " இவனது கண்கள் மஞ்சள் பூத்துள்ளன... இவனது மூச்சு பலவீனமாக உள்ளது."

 அவரால் இயன்ற மூலிகை கசாயங்களை அவனுக்கு புகட்டினார். சிவன் மெல்லிதாக மூச்சுவிட்டு அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான்.

  "இவனை கைவிட்டு விடுவதே சிறந்தது. இவன் அதிக காலம் வாழ மாட்டான் ." மூப்பர்  அத்தனைப் பார்த்து மெதுவான குரலில் கூறினார்.

 சிவனுக்கு தோன்றிய அறிகுறிகள் அவனது இரத்தத்தில் மறைந்திருந்த அழலின்  முதல் அறிகுறியாகும். அதன் காரணம் வில்சனின் நோய், ஆனால் அக்காலத்தில் அதைப்பற்றி அறிந்தோர் யாரும் இல்லை.

 அன்று இரவு சிவனின் தந்தை ஒரு முடிவு எடுத்தார். குலத் தலைவராக இருந்த அவர் தனது பதவியில் இருந்து விலகினார். தனது ஈட்டியை கோடனிடம் ஒப்படைத்தார். தூக்க முடிந்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டார். ஆயி மற்றும் புலித்தோலில் சுற்றப்பட்ட துவண்டு கிடந்த சிவனுடன், அவர்கள் தெற்கு நோக்கி பயணமானார்கள்.

 நீண்ட நெடிய பயணம் அது. இளைப்பாற அமர்ந்த ஒவ்வொரு இடமும் சிவனின் அழலை தூண்டி விட்டது. 

 இறுதியில் அவர்கள் பொதிகை மலையின் உச்சியை அடைந்தனர்.  அது ஒரு குறிஞ்சி நிலம். அந்த நிலம் பகலில் கூட நிலவொளியில் குளித்தது போல குளிர்ந்து இருந்தது.

 அங்கே எப்பொழுதும்  ஒரு மென்மையான குளிர் மரங்களைச் சுற்றி வந்தது, வானமே பூமிக்கு அருகில் மண்டியிட்டது போல காணப்பட்டது. அங்கே இருந்த கற்கள் வெப்பத்தை தக்கவைக்கவில்லை. அங்கே மேகக் கண்ணீரில் பிறந்த ஆறுகள், வெள்ளிப் பாம்புகள் போல பாறைகளுக்கு மத்தியில் வளைந்து சென்றன.

 "இந்த இடம் நம் மகனுக்கு உகந்த இடம். இங்கே நம் மகனுக்கு ஒருபோதும் வெயில் தெரியாது. நாம் ஒரு புது வாழ்க்கையை இங்கே துவங்குவோம்." அத்தனின் இந்த வார்த்தைகளை சிவனின் தாய் முழு மனதுடன் ஆதரித்தாள்.

 அவர் சிவனுக்கு அருகில் மண்டியிட்டு செப்புக் காப்பை எடுத்து அவனது மணிக்கட்டில் பொருத்தினார்.   சிறுவன் அதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

 அந்த செம்பு மெல்ல அவனது உடலில் ஊடுருவி அவனுக்குள் ஏற்படுத்த போகும் மாற்றங்களை சிவன் அறிய மாட்டான்.

 இது அவனது உடலில் நிகழப்போகும் மறைமுகமான போரின் ஒரு தொடக்கமாகும். 

   அந்த செம்பு காப்பானது; ஒரு நாள் அவனது வாழ்க்கையை மட்டுமல்ல, அவனை வணங்கியவர்களின் விதியையும் மாற்றப் போகிறது.

  இதைப் பற்றி ஏதும் அறியாத அவர்கள்  பொதிகை மலையின் குளிர்ந்த சரிவுகளில், புனித பொருநை ஆற்றுக்கு அருகில், காட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலைக்கு இடையே,  கல்லாலும் மௌனத்தாலும் ஒரு இல்லத்தைக் கட்டினர்.கருப்புப் பாறைகளால் அடுப்புக்குழிகளை   வடிவமைத்து, காற்றை தாங்கும் கூரைகளை பின்னினர். சிவனும் ஆர்வத்துடன் வீடு கட்டுவதில் தாய் தந்தைக்கு உதவினான்.

 அது அவர்களால் கட்டப்பட்ட வீடு. அது அவர்களுக்கேயான வீடு. அது அன்பின் இல்லம். அன்னையின் அன்பும் தந்தையின் உறுதியும் குழைத்துக் கட்டப்பட்ட அன்னை இல்லம் அது.

 அந்த இல்லத்திற்கு பாதைகள் ஏதுமில்லை. மலைகள் அனுமதித்தால் மட்டுமே அவர்களை மற்றவர்கள் அணுக முடியும்.

 அந்தப் பொதிகையில் பொருநை நதியோரம்,  கடுஞ்சொற்களுக்கும் வஞ்சத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகில்,  கடவுள் ஒருவன் மெதுவாக வளரத் தொடங்கினான். 

அவன் குளிர்நிலவை தலையில் சூடியவன். அவன் ஒரு சந்திரசூடன்.

******************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஆங்கிலத்தில் ஆதியோகி புத்தகம் - Adhiyogi in English

For most of us, Lord Siva is the supreme cosmic force, eternal, formless, and divine. But Tamil literature, southern folklore, and ancient o...