Saturday, July 12, 2025

ஆதியோகி. அத்தியாயம் 1: நிலவு நிறத்தவள்


ஷாங்காய் மக்கள் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு, ஒளிரும் விளக்குகளால் பகல் போல் மிளிறியது. கிருமிநாசினியின் மெல்லிய மணம், மருத்துவர்களின் வெள்ளை அங்கிகளின் மென்மையான சலசலப்பு... இவற்றால் மருத்துவமனை உயிர்ப்புடன் இருந்தது . அந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், செவிலியர் மையத்தில் ஒரு நோயாளியின் பதிவேட்டைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

 மெலிந்த உடலமைப்புடைய, வட்டக் கண்ணாடி அணிந்த, கூர்மையான பார்வையுடைய மருத்துவர் லி வெய் என்பவர், புருவங்களைச் சுருக்கியபடி பதிவேட்டைப் புரட்டினார். அவருக்கு அருகில், அதிக கேள்விகளை கேட்கும் இயல்புடைய இளைய மருத்துவரான டாக்டர் ஜாங் மெய், மெதுவாகவும் ஆர்வத்துடனும் தனது சீனியர் மருத்துவரான லீ வெய்யிடம் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்.

 கேள்விகளை உள்வாங்கிய லீ, பதிவேட்டைத் தட்டியபடி “அவளுக்கு பத்தொன்பது வயது , நேற்று இரவு அனுமதிக்கப்பட்டாள். கடுமையான தோல் பாதிப்பு , மஞ்சள் காமாலை, இப்போது… நரம்பியல் அறிகுறிகள். பெரும்பாலும் நடுக்கம். சில சமயம் தன்னை மறந்து பிதற்றுகிறாள் .”

டாக்டர் ஜாங் பதிவேட்டில் இருந்த பெயரைப் பார்த்தார்: சென் லிக்ஸ்யூ. “ வெளிறிய நிலவு போன்ற தோலில் தீய்ப்புக் காயங்கள்... இதுதான் உங்களை அல்பினிசத்திற்கு பரிசோதிக்க வைத்தனவா?”

டாக்டர் லி தலையசைத்தார். “அவளது தோல் சிறிது கூட நிறமிகள் இல்லாமல் உள்ளது. பளிங்கு போன்ற அந்தத் தோல், உடலில் ஓடும் குருதியை பிரதிபலிக்கிறது. அதனால் தான் அவள் சிவந்து காணப்படுகிறாள். இந்த அறிகுறிகளைக் கண்டதால் தான் அவள் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று பரிசோதித்தேன். நான் நினைத்தது சரிதான் என்று பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 ஆக்குலோ குட்டேனியஸ் அல்பினிசம், வகை 2 என பரிசோதனையின் முடிவு தெரிவிக்கிறது. அவளால் சூரிய ஒளியை தன் தோளில் ஏற்க முடியாததற்கு இதுதான் காரணம். "

"அவளின் நோய்க்காரணி இதோடு முடிந்து விடவில்லை ” என்று கூறிய அவர், ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டினார். “அவளது கல்லீரல் செயல்பாடுச் சோதனையின் முடிவுகள் மோசமாக உள்ளன. அவளது உடலில் காப்பர் எனப்படும் செம்பின் அளவு மிக அதிகமாக உள்ளன. அவளுக்கு வின்சனின் நோய் பாதிப்பும் இருக்கிறது."

டாக்டர் ஜாங்கின் கண்கள் விரிந்தன. “இரண்டு பிறவிக் குறைபாட்டு நோய்கள் ? அல்பினிசமும் வில்சனும்? இது… மிகவும் அரிது.”

 டாக்டர் லி தனது கண்ணாடியை சரிசெய்தபடி “வில்சன் நோய் மறைமுகமாக நடக்கிறது. இது மரபணுக் குறைபாடு, பிறவியிலிருந்து இருக்கிறது, ஆனால் அது தன் அறிகுறிகளை உடனடியாக காட்டுவதில்லை. 
  ஈரலில் காப்பரின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் பொழுது ஆறு அல்லது ஏழு வயதில், மிதமான அறிகுறிகள் தோன்றலாம்: பசியின்மை, மெல்லிய மஞ்சள் காமாலை, கண்களில் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகளை அந்த குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும் .

 பதின்பருவத்தில், இது மோசமாகிறது,கல்லீரல் பிரச்சனைகள் தெளிவாகத் தெரியும், மஞ்சள் காமாலை அறிகுறிகள் தோன்றும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பதின்பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் ஆரம்பத்தில் இந்த நோயின் தாக்கம் மூளையை பாதிக்கிறது, இவளுக்கு தற்போது நேர்ந்திருப்பதைப் போல . 

நடுக்கம், தெளிவற்ற பேச்சு, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, அல்லது மன பிரமைகள் போன்ற மனநல பிரச்சனைகள் கூட தோன்றலாம். கருவிழியைச் சுற்றி தாமிரம் படிய ஆரம்பிக்கும். இதனால்தான் அவளது கண்கள் ஒரு தங்க வளையம் போல அழகாகத் தோன்றுகின்றன. "

 அவர் கூறியதை மனதுக்குள்ளே அசை போட்டுக் கொண்டிருந்த டாக்டர் ஜாங், “அப்படியானால், இது மெதுவாக உடலில் சேரும் விஷம். இவள் உடலில் ஆண்டுக் கணக்கில் செப்பு எனப்படும் தாமிரம்  சேர்ந்து கொண்டே இருக்கிறதா?”

“சரியாகச் சொன்னீர்கள். அவளுக்கு பதின்ம வயதில் மஞ்சள் காமாலை தொடங்கியிருந்தால், செலேஷன் சிகிச்சையால் இதை நாம் மட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது, மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது .”

டாக்டர் ஜாங், நோயாளியின் அறையைப் பார்த்தார், அங்கு அந்த இளம் பெண் அமைதியாக படுத்திருந்தாள், அவளது வெளிர் தோல் மங்கிய மருத்துவமனை விளக்குகளின் கீழ் ஒளிர்ந்தது. 

“நல்ல வேளையாக அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள்... நான் ஒரு ஆண் நோயாளியை வில்சன் நோயுடன் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் பாவம். காரணம் ப்ரயாபிசம் அறிகுறிகளையும் அவர் கொண்டிருந்தார். "

"ப்ரயாபிசம்? "

" மிகவும் வலி தரக்கூடிய ஆண்குறி எழுச்சி அறிகுறி. அதை ஆங்கிலத்தில் பிரயாபிசம் எனக் கூறுவார்கள்."

 டாக்டர் லி ஒரு புருவத்தை உயர்த்தினார். “ வில்சன் நோயின் நச்சுத்தன்மையில் இது போன்ற அறிகுறிகள் மிகவும் அரிது , ஆனால் அரிதாக இந்த அறிகுறி ஒருவருக்கு ஏற்படலாம் . 

நரம்பு மண்டலத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, அது எவ்வாறு இது போன்ற மாறுபட்ட அறிகுறிகளை காட்டுகிறது என்பது இன்னும் வியப்பளிக்க கூடிய செய்தியே.

 இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்த அந்த நோயாளியினால் வெளியில் கூட இயல்பாக செல்ல முடியாது. மிகவும் அவமானகரமாக அவர் உணர்ந்தார். மேலும் அவர் பொறுத்துக் கொள்ள முடியாத வலியில் அவதிப்பட்டார்.  
 இவள் பெண்ணாய் இருப்பது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். வில்சனின் பொதுவான அறிகுறிகளை மட்டுமே அவள் வெளிப்படுத்துகிறாள். இது போன்ற அரிதான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை ”

டாக்டர் ஜாங் கைகளைக் கட்டிக்கொண்டு, மனதுக்குள்ளாரே அவளது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை யோசிக்க தொடங்கினார் “அப்படியானால், அவள் சூரிய ஒளியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வில்சன் நோய்க்கு… செலேஷன் சிகிச்சை? பெனிசிலமைன்?”

டாக்டர் லி தலையசைத்தார். “நாங்கள் அவளுக்கு ட்ரையன்டைன் தொடங்கியிருக்கிறோம். பெனிசிலமைனை விட குறைவான நச்சுத்தன்மை உடைய மருந்து அது . செப்பு உடம்பில் அதிகமாவதைத் தடுக்க ஜிங்க் அளிக்கப்படுகிறது. அவளது கல்லீரலை பாதுகாத்து விட்டால், அவளது வாழ்நாளை  நம்மால் அதிகரிக்க முடியும்.”

 “கடந்த காலத்தில் மக்கள்  எப்படி இது போன்ற நோயை எதிர்கொண்டனர் ? வில்சன் நோய் மரபணு  நோய் தானே. அல்பினிசமும் கூட மரபணு நோய் தானே. நூற்றாண்டுகளுக்கு முன்பும் இந்த நோய்கள் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்போது இருந்த மனிதர்கள் இறப்பை தீண்டுவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை அல்லவா? "

டாக்டர் லியின் உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தது , அது அவரது வழக்கமான கடினமான முகபாவனையில் இருந்து நிகழக்கூடிய அரிதான மாற்றம்.

 “பாரம்பரிய மருத்துவத்தில் அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. போ-யாங் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”டாக்டர் ஜாங் கண் சிமிட்டினார்.

 “போ-யாங்? சீன மருத்துவரா?”

டாக்டர் லி மென்மையாகச் சிரித்தார். “இங்கு நாம் அவரை அப்படித்தான் அழைக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் அவரை தமிழர் என்கின்றனர். அவர் ஒரு சித்தர். போகநாதர் என்று அழைக்கப்படுபவர். நமது நாட்டில் அவரை போ யாங் என்று அழைக்கின்றோம். அவர்கள் வழி வந்தவர்கள் அரிய பல வகை நோய்களுக்கு மருத்துவத்தை அறிந்து வைத்திருக்கின்றனர். நாம் விஷம் என கருதும் பல உலோகங்களை பாஷாணம் ஆக்கி அவர் பயன்படுத்தியதாக கேள்வி.
 அவரது மருத்துவ முறைகள் இன்று நாம் ஆதாரமற்ற அறிவியல் என்று அழைக்கின்றோம் , ஆனாலும் அவை வேலை செய்தன.”

“ஒரு தமிழர்?” டாக்டர் ஜாங்கின் புருவங்கள் சுருங்கின. “ஒரு தமிழர் எப்படி சீன மருத்துவ நூல்களில் இடம்பெற்றார்?"

டாக்டர் லி தோள்களை உயர்த்தினார், “யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சிலர் அவர் சீனாவுக்கு பயணித்தார் என்று கூறுகிறார்கள், சிலர் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும், வில்சன் நோயின் அறிகுறிகளுடன் என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு 38 வயது நோயாளி ஒருவரை நான் பரிசோதித்து இருக்கிறேன்.
 அவர் போயாங்கின் முறைப்படி சிகிச்சை பெற்றவர். அந்த சிகிச்சை அவரை முழுமையாக குணப்படுத்தவில்லை என்றாலும், அவரது அறிகுறிகளை பெருமளவில் மட்டுப்படுத்தியது. மேலும் அவரது வாழ்நாளை 38 வயது வரை நீடித்து வைத்திருந்தது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது."
 
டாக்டர் ஜாங் அவரை நம்ப முடியாமல் நோக்கினார். “அவர்கள் எப்படி அத்தகைய சிக்கலான ஒன்றை அப்போது கண்டறிந்தார்கள்?”

டாக்டர் லியின் கண்கள் ஒரு ஆச்சரியத்துடன் ஒளிர்ந்தன. “அதற்கான விடை கடவுள்களுக்கு மட்டுமே தெரியும்,” என்று கூறியபடி அவர் மீண்டும் மற்ற பதிவேடுகளை புரட்ட ஆரம்பித்தார், 

 மருத்துவமனை சுவர்களுக்கு அப்பால், ஷாங்காயின் வானவெளி ஒரு பிறைநிலவின் கீழ் பளபளத்தது, அந்த அழகிய நிலவொளி நகரத்தின் மீது ஒரு மெல்லிய குளுமையை பரப்பியது.

 நோயாளியின் அறையில், சென் லிக்ஸ்யூ என்று அழைக்கப்பட்ட அந்த பௌர்ணமி ஒளி பொருந்திய பெண் திடீரென்று சிலிர்த்தாள், சாளரத்தின் வழி நிலவின் ஒளி அவளது தோளின் மீது படர்ந்து குளிரை பரப்பியது. அது அவளது சிலிர்ப்பை சற்றே மட்டுப்படுத்தியது.

 அவளின் அந்த சிலிர்ப்பு தமிழ்நாட்டின் மலைகளில் நீல நிறக்கழுத்துடன்... சிவந்த தோலுடன்... சாம்பல் பூசிய தேகத்துடன் அலைந்து திரிந்த ஒருவரின் கதையை எதிரொலிப்பது போல தோன்றியது.

------

 இந்தக் கதை கோயில்களின் கலசங்கள் வானத்தை எட்டுவதற்கு முன் நிகழ்ந்தது. அப்பொழுது பூமி இன்னும் நெருப்பின் மொழியில் தான் பேசிக் கொண்டிருந்தது. 
 மனிதர்கள் கல் கோடரிகளால் வேட்டையாடிய காலத்தில், தெற்கில், இப்போது தமிழ்நாடு என்று பெயர் பெற்ற  மண்ணில் ஒரு குழந்தை பிறந்தது.
 அந்தக் குழந்தை ஒரு வித்தியாசமான குழந்தையாக பிறப்பிலேயே காட்சியளித்தது.
 அந்தக் குழந்தையின் தோல் பால் வண்ணத்தில் இருந்தது. மழையின் சாரலில் மிளிரும் பனையின் கருமையை ஒத்த மக்கள் வசித்து வந்த அந்தக் குழுவில், இந்தக் குழந்தையின் நிறம் மிகவும் அசாதாரணமானது . 

 மக்கள் அந்தக் குழந்தையை சாபம் பெற்ற குழந்தை என்று கருதினர். இரவின் குளுமையை மட்டுமே விரும்பிய அந்தக் குழந்தை  வனத்திின் இதயத்தில்  அன்னையின் அன்பின் கதகதப்பிலும்  தந்தையின் வீரத்தின் நிழலிலும் துளிர்த்து வளர்ந்து சிறு வயது பிராயத்தை எட்டியது.

 பிரிதொரு நாளில் அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டான். அவனது உடல் நடுங்கியது, அவனது தோல் மஞ்சள் நிறமாக மாறியது. பலர் அவன் இறந்துவிடுவான் என்று நினைத்தனர்.ஆனால் அவன் இறக்கவில்லை.அவன் உயிர் பிழைத்தான். 

 அவன் உயிர் பிழைத்தது கடவுள்களின் கருணையாலோ ஆசீர்வாதத்தாலோ அல்ல... தவறுகள் மூலமாக, தானே உணர்ந்த அனுபவங்களின் வழியிலும், மனம் தளராத முயற்சியின் வழியிலும், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற உந்துதலினாலும், இயற்கையோடும் வெளியோடும்  நடத்திய உரையாடல்களின் மூலமாகவும் அவன் தனது உயிரை உடலோடு நிறுத்தினான் .

  இந்த உலகின் முதல் மருத்துவம், முதல் யோகம், முதல் மந்திரம், முதல் ரசவாதம் அனைத்தும் அவனது போராட்டத்தின் வழி உலகிற்கு கிடைத்தது. 

 இந்த உலகம் அவனை ஆதியோகி என்று அழைக்கப் போகிறது. ஆனால் இந்த கதையின் தொடக்கத்தில் அவன் கல்லீரலில் அதிகரிக்கும் செம்பின் தீவிரத்தால் நடுங்கும் உடலைக் கொண்ட ஒரு சாதாரண சிறுவனாகத்தான் இருந்தான். 

 காலம் அவனை செம்பை தங்கமாக மாற்ற வைத்தது. அவனது செம்பு உடலும் தங்க உடலாக ஜொலித்தது.
----------
"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஆங்கிலத்தில் ஆதியோகி புத்தகம் - Adhiyogi in English

For most of us, Lord Siva is the supreme cosmic force, eternal, formless, and divine. But Tamil literature, southern folklore, and ancient o...