Sunday, July 13, 2025

ஆதியோகி: அத்தியாயம் 2 - அந்திவண்ணன்

காட்டின் சுவாசம் மரங்களிடையே நுழைந்தபடி இருந்தது. அந்த முல்லை நிலத்தின் இதயத்தில்—பழமையான இலுப்பை, புன்னை, குருக்கத்தி, நாவல் போன்ற மரங்களின் அடர்ந்த இருப்புக்கு இடையே, நேற்றிரவு பெய்த மழையின் மணம் இன்னும் பூமியில் மணம் பரப்பியபடி இருந்தது. ஈரமான அந்த மண்ணில் துடியர்களின் பாதங்கள் எழுப்பிய மெல்லிய ஒலி, சுவர் கோழியின் ரீங்காரத்தோடு இணைந்தது. அந்த வேட்டைக் குழு அகலமான ஒரு வளைவில் முன்னேறியது. அவர்களின் நிழல்கள் மரங்களுக்கு இடையே அமைதியாக நகர்ந்தன.


அவர்கள் வேட்டையாடிகள், ஆனால் அதற்கும் மேலாக அவர்கள் துடியர்கள், துடிப்பறை எழுப்பும் தாளத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் கையில் இருக்கும் ஈட்டியும், கணிச்சியும், ஆற்றின் படுக்கைகளுக்கு அருகில் சேகரிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை.

அவர்களின் தலைவன் அத்தன். காட்டின் மண்ணைப் போல கருமையான தோலும், அகலமான மார்பும் கொண்டவன். அவன் தனது குழுவை திறம்பட வழி நடத்திக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவும் அவரது கூட்டத்தினரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

உறுதியாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் ஓசை எழுப்பாமலும் நகர்ந்து கொண்டிருந்த அவனது பாதம் நகர மறுத்து அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றது. அவன் திடீரென்று தனது கையை உயர்த்தினான். அவனது முழு குழுவும் அந்த கட்டளைக்குப் பணிந்து நின்றது. அவன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து, உடைந்த ஒரு கிளையைத் தொட்டான். மேற்கு நோக்கி ஒரு பார்வை பார்த்து, “கடமான்... அருகில் உள்ளது,” என்று மெதுவாக முணுமுணுத்தான். மற்றவர்கள் அவன் கூறியதை கூர்ந்து கவனித்தனர் .


சடாரென்று ஒரு கடமான் அவ்வழியே பாய்ந்தது. தயாராக இருந்த அவர்கள் அந்த மானை கிழக்கு நோக்கி விரட்டினர், மலைகளுக்குப் பின்னால், செதுக்கப் பட்ட கல்லால் ஆன ஈட்டிகளை ஏந்திய ஒரு சிறிய குழு அம்மானை வளைத்தது. அந்தமான் சிறிது கூட தப்ப வாய்ப்பு இல்லாதது போல் அவர்களின் திட்டம் அமைந்திருந்தது. இவர்களின் இந்தத் திட்டம் காட்டைப் போலவே பழமையானது.

முழு முனைப்போடு வேட்டையை அவர்கள் துவங்கிய அதே வேளையில், திடீரென காற்றைக் கிழிக்குமாறு எழுந்த ஒரு உருமல் அனைவரையும் உறைய வைத்தது. அழையா விருந்தாளி ஒன்று அவர்களின் வேட்டையின் குறுக்கே வந்தது.

அது ஒரு வரிப்புலி. மரங்களின் ஊடே நுழைந்து வரும் சூரிய ஒளி; செம்மண்ணைத் தீண்டியது போல தோற்றமளிக்கும்  செவ்வரிகள் அதன் உடலில் இருந்தது. அது மண்ணில் பதித்த பாதத்தடங்கள் மலர்ந்த ரோஜாவினைப் போல் இருந்தது.

அது துரத்தி வந்தது தனக்கான  வேட்டையைத்தான் , ஆனால் அது இப்போது கண்டறிந்திருப்பது வேட்டையாடிகளை.

இருபுறமும் பதட்டம் பரவியது.

பதட்டமும் பயமும் காட்டின் பரிபாஷைகள். ஆனால் அத்தனின் முகத்திலோ பயத்தின் ரேகைகள் சிறிதும் வெளிப்படவில்லை.

அவன் உறுதியாக நின்றான். அவன் ஓடவில்லை. தனக்கு சமமான எதிரியை கண்டறிந்த திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. புலியின் முகத்திலும் அதே உணர்வு பிரதிபலித்தது போலத் தோன்றியது.

புலியின் பின்னங்கால்கள் பூமியில் அழுத்தமாகப் பதிந்தன, வில்லிலிருந்து புறப்படும் நாணை போல காற்றைக் கிழித்துக்கொண்டு புலி அத்தனை நோக்கிப் பாய்ந்தது. அத்தனின் கால்கள் ஆச்சா மரத்தின் வேர்கள் போல பூமியில் அழுத்தமாக ஊன்றி இருந்தன, ஆனால் அவனது உடலோ நாணலைப்போல் போல் வளைந்து புலியின் தாக்குதலை தவிர்த்தது. அவனது உடல் கீழ்நோக்கி வளைந்தாலும் ஈட்டியை பிடித்திருந்த கை உயர்ந்திருந்தது. அது புலியின் கீழ்நெஞ்சில் ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.

  வலியினால் புலி தரையில் விழுந்து கர்ஜித்துத் துடித்தது.

அத்தனின் கை இடுப்பில் இருந்த கணிச்சியை அனிச்சையாக உருவியது. காயம் பட்டப் புலியும்... கடும் வேகத்துடன் அத்தனும்... ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். அந்த ஒரு க்ஷணத்தில் காட்டின் சுவாசம் நின்றது, இலைகள் அசைய மறுத்தன, அத்தனின் குழுவினரின் கண்கள் அனைத்தும் இக்காட்சியை நோக்கி உறைந்திருந்தன.

நீரைத் தீண்டிய ஒளி விலகிப் பாய்வது போல, கானகத்தின் தரைக்கு மேலே சில அடிகள் உயரத்தில் புலியும் அத்தனும் நெருங்கிய அந்த வேலையில் அத்தன் சிறிதே விலகி இலாவகமாக கணிச்சியை புலியின் தொண்டையில் இறக்கினான்.

சூடான இரத்தம் அவனது கைகளை நனைத்தது. அவன் வெற்றியுடன் நின்றான், அவனது மார்புக்கூடு ஏறி இறங்கியது, காடு அவனைச் சுற்றி அமைதியானது. 

அந்த அமைதியை கிழிப்பது போல் ஒரு தாள ஓசை முல்லை நிலமெங்கும் எதிரொலித்தது.அது துடிப் பறையின் அழைப்பு. 

பள்ளத்தாக்குகளுக்கு அப்பால், தொலைவில் ஒரு “துடிப் பறை" ஒலித்தது—ஒரு துடிப்பு, பின்னர் இடைவெளி, வரிசைக்கிரமமாக துடிப்பு ஒளி காற்றில் செய்தியை சுமந்து வந்தது.

பேசுதலை குறிக்கப் பயன்படும் பறைசாற்றுதல், பறைதல், போன்ற வார்த்தைகளின் வேர்ச்சொல்லை தேடி பயணப்பட்டீர்கள் என்றால் அது இந்த துடிப்பறையின் அதிர்வில் தான் வந்து முடியும்.

 பறை இசை கேட்ட அனைவரும் அசையாது நின்றனர் .ஒரு புதிய உயிர் உலகில் நுழைந்ததை அந்தத் துடிப்பறை அறிவித்திருந்தது. அத்தனின் துணைவி ஒரு குழந்தையை பெற்றிருந்த செய்தியை அது அறிவித்தது. அனைவரும் இந்த சந்தோஷமான செய்தியை எதிர்கொள்ள தங்கள் இருப்பிடத்தை நோக்கி வேகமாக நடந்தனர். 

 செல்லும் வழியில் அத்தனின் ஒரு குழுவினன் கீழ்மண்ணில் கிடந்த ஒரு விசித்திரமான பொருளை எடுத்தான். அது ஒரு பெண் காட்டு எருமையின் கொம்பு. கருப்பாகவும், உறுதியாகவும் அது இருந்தது. அந்த வேட்டையாடி அதை எடுத்து, முத்தமிட்டு, வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினான்.

 புலியின் தோலையும் வெற்றிவாகை சூடிய தன் தலைவனின் தலையை அலங்கரிக்கும் விதமாக காட்டெருமை கொம்பையும் பொருத்தியபடி அவர்கள் ஆனந்தம் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். அவர்கள் பழங்குடி குடியேற்றத்தை அடைந்தபோது, பெண்கள் மகிழ்ச்சியிலும் பயபக்தியிலும் குலவை சத்தம் எழுப்பினர்.

ஒரு சிறிய குடிசையின் உள்ளே, அத்தனது துணைவி களைப்புடன்புதிதாகப் பிறந்த குழந்தையைத் தழுவியபடி  படுத்திருந்தாள்.

 அத்தன் உள்ளே நுழைந்தான். மற்றவர்கள் விலகினர். ஆவலுடன் அவனது குழந்தையைக் காண அவன் தனது துணைவியை நெருங்கினான். திடீரென்று அவனது கண்கள் வியப்பால் சுருங்கின... கூடே வந்திருந்த அனைவரின் கண்களும் தான். 

 அந்தக் குழந்தையினுடைய தோல் பௌர்ணமி நிலவைப் போல் வெளிரி இருந்தது. அந்தக் குழந்தை தனது தந்தையைப் பார்த்து கண்களை சிமிட்டியது.

 தமிழகத்தின் காடுகளில் வாழ்ந்து வந்த அந்தப் பூர்வ குடிகள் பூமியின் கருமையான பாறையைப் போல தோலுடையவர்கள், இப்படி ஒரு குழந்தையைப் இதுவரையிலும் அவர்கள் பார்த்ததில்லை.

 அங்கே சிறிது சலசலப்பு நிலவியது. அந்தக் கூட்டத்தில் ஒருவன் சற்றே குரலை உயர்த்தினான். அவனது பெயர் கோடன்... வேட்டையில் குறைவான திறனுடையவன் ஆனால் பேச்சிலே விரைவானவன். அத்தனுக்குக் கிடைத்த புகழினால் மனம் வெம்பிய அவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். அனைவருக்கும் கேட்கும் படியாக தனது குரலை அவன் உயர்த்தினான்...

" கடவுளர்கள் கோபமடைந்துள்ளனர். இங்கே இருப்பது புலியின் இரத்தத்தில் இருந்து பிறந்த ஒரு வெளிர் குழந்தை... இது ஒரு சாபத்தின் வெளிப்பாடு. "

 மற்றவர்கள் சற்றே பயத்தில் பின்வாங்கினர். அவர்களின் பழைய மூடநம்பிக்கைகள் கிளர்ந்தன. வனத்தை பொருத்தமட்டிலும் வெளிர் விலங்குகள் சமநிலையின்மையின் அடையாளங்கள். அதன் காரணமாக அனைவரும் அந்தக் குழந்தையை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 ஆனால் அந்தக் குழந்தையின் தாய் மெலிதாகப் புன்னகைத்தாள். குழந்தையின் நிறம் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. 

 அந்த சிறிய குழந்தை தனது மெல்லிய விரல்களால் காற்றில் இசைப்பது போல கைகளை ஆட்டிக் கொண்டிருந்தது. அத்தனோ ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தான். இருப்பினும் அந்தக் குழந்தையின் வாத்சல்யம் அவனுள் பாசத்தை தூண்டி விட்டது. அவன் புலியின் தோலை எடுத்து, மெதுவாக அந்தக் குழந்தைக்கு அருகில் வைத்தான். காட்டெருதின் கொம்பினை அந்த குழந்தையின் தலைமாட்டிற்கு அருகில் சற்றே ஜாக்கிரதையாக அத்தன் வைத்தான். 

 ஒளிரும் வெளிச்சத்தில், காட்டு எருமை கொம்பு மகுடம் அவனருகில் பளபளத்தது.

 மரங்களின் வேர்கள் பயத்தில் நடுங்கும் அளவிற்கு அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் திடீரென்று ஒரு இடி வானை கிழிப்பது போல சப்தம் ஏற்படுத்தியது. 

 அந்த ஒலியைக் கேட்டதும் குழந்தை பயத்தில் அழ ஆரம்பித்தது, அந்தக் குழந்தையின் சிறிய உடல் நடுங்கியது.

 பால் வண்ணத் தோலைக் கொண்ட அந்தக்  குழந்தையின் முகம் பயத்தில் சிவந்து  அந்திவானின் நிறத்தை வெளிப்படுத்தியது.

 அந்தக் குழந்தையின் சிவந்த முகம் வசந்தத்தில் புதிதாக பூத்த செம்மல் மலரின் தீவிர நிறத்தை ஒத்திருந்தது. 

 அனிச்சையாக அந்தத் தாய் தனது மகனை இறுக்கி தழுவினாள். அவனது கண்ணீரை மென்மையான விரல்களால் துடைத்து, அவனது கன்னங்களின் நிறத்தை உற்று நோக்கினாள். ஒரு மென்மையான, ஆனால் உறுதியான புன்னகை அவளது உதடுகளைத் தொட்டது. " அன்றலர்ந்த செம்மல் மலர் போல... செக்கச் சிவந்த நமது கடவுள் சேயோன் போல்...,” அவள் மெதுவாக முணுமுணுத்தாள், அவளது குரல் சற்றே உயர்ந்தது. “இவ்வளவு பிரகாசமாக, இவ்வளவு உயிர்ப்புடன் அந்திவானம் போல இருக்கும் என் அருமை மகனே... செஞ்சந்தனத்தின் எழிலைக் கொண்டவனே... நீ சிவந்தவன்.... நீ சிவன். "


 இந்த உலகம் அவனை பல்வேறு பெயர்களால் வருங்காலத்தில் தொழப்  போகிறது. ஆனால் அவனுக்கு அவன் அன்னை சூட்டிய ஆசைப் பெயர் 'சிவன்'. 

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...