Wednesday, January 14, 2026

ஏர் முன்னது எருது-9-வான்நின்று உலகம் வழங்கி வருதலால்...

 காலம்: முதற்சங்க காலம்

இடம்: வரண்ட தென் மாவட்டம்

"உயிர்ப்பு மிக்க மேல்மண் வெயிலில் வறுக்கப்பட்டு விட்டது. பெய்யும் மழையோ மேல் மண்ணை அரித்து ஓடிவிட்டது. பூமி பாளம் பாளமாய் பிளந்து கிடக்கிறது. இனியும் இந்த நிலத்தில் வாழ வழியில்லைவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்தோம். நமது நதி வறண்ட பின்பு கிடந்த நிலங்கள் போலவே இந்த நிலமும் மாறுவதை பார் நண்பாநாம் வாழ என்ன தான் வழி? பேசாமல் கொள்ளையடிக்கச் சென்று விடலாம் என எண்ணுகிறேன்."

"நம்பிக்கையை விட்டு விடாதே நண்பா. அந்த மரத்தின் கீழே பார். அந்த அந்த மரத்தை சுற்றியுள்ள மண் மட்டும் அடித்துச் செல்லப்படாமல் மரத்தினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறது பார்த்தாயா?

மேலும் வழிந்தோடும் மழைநீரின் குறுக்கே வரப்புபோல் உயர்ந்து நிற்கும் இடங்களில் மண்ணும் ஈரமும் பாதுகாக்கப்பட்டு உயிர்கள் ஜனித்திருப்பதை பார் நண்பா."

"வரப்பு கட்டி மழை நீரை நிலத்தில் இறங்கி விடலாம், மேல் மண்ணை பாதுகாத்து விடலாம், ஆனால் மரங்கள் வளர்க்க நீர் வேண்டுமே?

இந்தப் பாலையாய்  திரிந்த நிலத்தில் நீருக்கு எங்கே செல்வது? "

"மரம் வளர்க்க  நீர் எதற்கு? ஈரம் இருந்தாலே போதும்.

 இதோ, பறவையின் எச்சத்தில்  விழுந்த விதையானது மக்கிய செத்தையில் இருக்கும் ஈரத்தைக் கொண்டு  வளர்வதை பார்.


மரத்தின் மட்கு, விலங்கின் கழிவு இவற்றைக் கொண்டு இந்த நிலத்தை முல்லை வனம் ஆக்கிவிடலாம், வா நண்பா."

------------------

மருதம் என்பது  தீம்புனல் உலகமாகும். இது வற்றாத நீரைக் கொண்டுள்ளது. வான் பொய்ப்பினும்  தான் பொய்யாக் காவிரி போன்ற வருடம் முழுவதும் பாயும் நதிநீரினால் நனைக்கப்பட்டவை இந்த நிலங்கள்.

தமிழகத்தின் எல்லா நிலங்களும் நதிநீரால் நனைக்கப்பட்டவை அல்ல. தமிழர்களுக்கு உண்மையான சவால் வருடத்தின் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மழையைக் காணும் வானம் பார்த்த பூமியில்  கால்பதித்து; மனிதர்களோடு மற்றேனைய உயிர்களையும் பெருகச்செய்து; அந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாய் நிலையாய் வாழ்வது.

தமிழகத்தில் நாம் உண்ணும் உணவில் 55 சதவீதம் மழைக்காக ஏங்கிடும் மானாவாரி நிலத்தில் இருந்து பெறப்பட்டவை. இந்த மானாவாரி மருதநிலம் என்பது தரம் உயர்த்தப்பட்ட பாலை நிலம்.

மழையின் சமயம் நமது உடலிலும் சரி நிலத்திலும் சரி பல மாறுதல்கள் நேருகின்றன.

நமது உடலைப் பொருத்தவரை மழை தொடங்கும் பொழுது முதலில் பெரிதாக தாகம் எடுப்பதில்லை. பிறகு உறக்கம் அதிகரிக்கிறது பெரிதாக பசி எடுப்பதில்லை மழை முடியும் பொழுது நிலத்தில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதன் பின்னர் அந்த நிலத்தினில் இருந்து வேனில் சமயத்தில் நீர் நீங்க ஆரம்பிக்கிறது. உடலும் வேனில் பொழுதில் உடலின் அழலைக்குறைக்கும் செயலில் ஈடுபடத்தொடங்குகிறது. எனவே இந்த பூமியில் நாம் வாழ்வாங்கு வாழ இந்நிலப்பரப்புக்கான தனித்தன்மையான தொழில்முறைகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை நம் மக்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம்.

நஞ்சை நிலம் என்பது நன்னீர் சூழலால் அமைந்து. அது மீன்களும், நத்தைகளும், அவற்றை நாடும் பறவைகளும் கூடியிருக்கும்  நிலமாகும். சகதி மிகுந்த நிலத்தில் எருமைகளே அதிகம் வளர்க்கப்பட்டன. அந்த நன்னீர் சூழலில் நிலத்தை உழுவதை விட சாணத்தை மட்க்கச் செய்து நிலத்திற்கு உரமிடுவதே தேவையாயிருந்தது என்பதை நாம் அறிவோம்.

 மேலும் சகதி நிலத்தை உழுவதென்பது ஈரமான பீச் நிலத்தில் நடப்பது போன்ற கடினமான செயல். நீண்ட கால்களை உடைய காங்கேயம் போன்ற மாடுகள், அந்த சகதி நிலத்தை உழ ஏற்றவை அல்ல. எனவே கால்கள் குட்டையான ஆனால் பலம் மிகுந்த உம்பளச்சேரி போன்ற அந்த சூழலுக்கேற்ற குட்டையின மாடுகள் உருவாக்கப்பட்டன.


மருத நிலம் கோடைகாலத்திலும் குளிர்ந்த புனல் ஒழுக்கம் கொண்டது என குறிப்பிடுகின்றனர்.

வேனி லாயினுந் தன்புன லொழுகும் ஐங்: 54-2

ஆனால் மானாவாரி நிலம் ஈரமான சகதிநிலம் அல்லவே. மானாவாரி என்பது வருடத்தின் முக்கால்வாசி நாட்களில் நீரையே காணாத பிரதேசம் அல்லவா?

அப்படி அரிதாக மழை பொழிந்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே கிரிக்கெட் விளையாடுகிற மைதானம் போல மேல் ஈரம் காய்ந்து விடும். எவ்வளவு தண்ணீரையும் அசந்த நேரத்தில் உறிஞ்சிக் குடித்து விடுகிற ஊதாரி  நிலம் அவை.

 எனவே அவற்றின் நல்லியல்பு திரிந்து பாலையாகிவிடாமல் தவிர்க்க, நீரை நிலத்தில் நிறுத்தவும், மேல் மண்ணை வளமாக்கவும், வளமாக்கிய மண்ணை நிலத்திலிருந்து நீங்காமலும் செய்ய வேண்டியிருந்தது.

மேல் மண்ணை வளமாக்க அந்த மக்களுக்குக் கை கொடுத்தவை கால்நடைகள். அக்காலத்தைய மானாவாரி நிலங்கள் முல்லைநில கால்நடை வளர்ப்பின் ஒரு வடிவமாகவே இருந்தன என்கிறார் அறிஞர் பாமயன் அவர்கள். கால்நடைகளே அந்நிலத்தை வளப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. முல்லை நிலத்திலுமே மட்கு இல்லாமல் நீரை, நிலத்தில் நிலை நிறுத்துதல் கடினமாகும். முல்லை நிலம் செம்மண் கொண்டது. இதில் மணல் விழுக்காடு அதிகரித்தும் ஈரப்பத விழுக்காடு குறைந்தும் இருக்கிறது. இது தண்ணீரை எளிதில் உறிஞ்சும், ஆனால் சேகரிக்காது.

இதுபோன்ற நிலத்தில் எவ்வளவுதான் கால்நடைகளைக் கொண்டு நிலத்தில் உயிர்மக் கரிமத்தை நிலை நிறுத்தினாலும், தகிக்கும் வெயிலானது உயிர்ம கரிமத்தை பயன்படா கெமிக்கல் கரிமமாய் வறுத்துவிடுகிறது. அவற்றைத் தடுக்கும் ஆற்றல் மரங்களுக்கு மட்டுமே இருந்தன. மானாவாரி மரங்கள் வெயிலிலும் கால்நடைகளுக்கு உண்ண இலைகளை வழங்கின. மண்ணை வளப்படுத்த மட்கு வழங்கின. சொல்லப்போனால் மாடுகளிடும் சாணத்தை விட மரங்கள் நல்கும் மட்கு அளவில் அதிகம். மேலும் மரம் நல்கும் நிழல், உயிர்மகரிமம் வேதியியல் கரிமமமாய் மாறுவதைத் தடுக்கிறது. நீர் ஆவியாவதை தடுக்கின்றது. அவை, மேல்மண்ணையும் நீரையும் தமது வேர் மண்டலத்தைக் கொண்டு பிடித்து வைக்கின்றன. மேலும் ஒருமரமானது தன் முதிர்ந்த இலைகளை உதிர்க்கும்போது கூடவே கொஞ்சம் பச்சை இலைகளையும் உதிர்க்குமாம். இது 25 க்கு 1அல்லது 30க்கு1 என்ற விகிதத்தில் இருக்கும். காரணம் காய்ந்து உதிர்ந்த இலைகளில் மிகுதியாக கரிமச்சத்து (corban) இருக்கும், பச்சை இலைகளில் தழைச்சத்து அதிகமாக இருக்கும். மண்ணுக்கு தேவை மிகுதியான கரிமச்சத்தும் அளவான தழைச்சத்துமே.

மேலும் மரங்கள் தம்மைச் சுற்றியுள்ள இடங்களில் உதிர்ந்த இலைகளின் கீழ் நிலவாழ் பூச்சிகளும் நுண்ணுயிரிகளும் வளர உதவுகின்றன. இது நிலத்தில் உயிர்ம கரிமத்தை அதிகரிக்கிறது. மேலும் மண்புழுக்கள் வாழ வகை செய்கிறது.

தமிழகத்தில் பெய்யும் மழையைப் பிடித்து வைக்க 2.5% உயிர்மக்கரிமம் போதுமானது. ஆனால் ஆனால் அது 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்பொழுது தமிழகத்தில் உள்ளது.

இந்த மானாவாரி நிலத்தில் வெயிலின் தாக்கத்தைத்  தாங்கி வளரக்கூடிய விதைகளும் கால்நடைகளும் artificial selection மூலம் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்டன.

மேலும்  இங்கு சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை கலப்புப் பயிர் வளர்ப்பு முறையில் பயிர் செய்யப்பட்டன. இவை அங்குள்ள மனிதர்களின் புரதத் தேவையை அவை ஈடு செய்தன. வளமிகு குறிஞ்சி நிலத்தில் கிட்டிய அறுசுவை உணவை மானாவாரி நிலத்திலும் பெற வழிவகை செய்யப்பட்டதே நமது மக்கள் செய்த சாதனை.  (அப்படிப்பட்ட பயிர் வித்துக்கள் பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்பது வருந்தத்தக்க செய்தி ).

_________

நதி பாயும் நன்னீர் சூழலில் நஞ்சை நிலத்திலே மீன்கள் நிறைந்திருந்தது.

அந்த மீன்களை உண்ணும் ஒரு வகை பிராணி அங்கே இருந்தது அவற்றின் பெயர் நீர்நாய்.. இப்போது அவை மிகவும் அரிதாகவே காணக் கிடைக்கின்றன.

படம்: அய்யா பாலபாரதி


ஆனால் மானாவாரி நிலத்தில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் காட்டு முயல்கள் நிறைந்திருந்தன. அவர்களைத் துரத்திப் பிடிக்க ஓட்டத்தில்வல்ல நாய் இனங்கள் உருவாக்கப்பட்டன

காட்டில் இருந்த மூதாதைய நாய்கள் கடும் சினம் கொண்டவை. நாய்களின் சினத்திற்கு MC2R (Melanocortin 2 receptor) எனும் ஜீனே காரணம். இது தான் கார்டிசால் எனப்படும் ஹார்மோனை கோபத்தின் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலத்தால் தூண்டப்பட்டு உற்பத்தி பண்ணுகிறது. நம்மோடு பழக ஆரம்பித்து வீட்டு விலங்காக்கப்பட்ட வீட்டு நாய்களில் இந்த மரபணு மாற்றம் கண்டு, அதன் கோபம் குறைந்து நம்மோடு அன்பு பாராட்டுகிறது.

ஆனால் வீட்டுநாயைக் விட வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் உடையது. இதனால் வேட்டை நாயை 'கதநாய்' என்றே தொகைப்பாடல்கள் கூறும். சங்க காலத்திலும், நாய்கள் காவலுக்கு பயன்படுத்தப்பட்டதை,

கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125

காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240, எனும் பாடல்கள் விளக்குகின்றன.

மேலும் புராணங்களிலும் நாய்கள் இடம்பெற்றுள்ளன. ஈசன் காசியில் உலாவிய ஒரு கதையில் ஆடையின்றி பிச்சையெடுப்பவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை பிச்சாடனர் கோலம் என்கின்றனர். பிச்சாடனர் மற்றும் பைரவர் இருவரோடும் நாயின் வடிவமும் இணைந்தே காணப்படுகின்றன.



வறண்ட நிலத்தில் நாய்களின் பங்கை பார்த்தோம். அதை விட அதிக பங்கு எருதுக்கு இருக்கிறது. இந்த நிலத்தைப் பொருத்தமட்டில் 'ஏரினும் நன்றாம் எருவிடுதல்' என்னும் நடைமுறை செல்லுபடியாகாதுவறண்ட நிலத்தை மழைக்கு முன்பே ஒரு பலம் எடையுள்ள புழுதி, கால்பலம் ஆகும்வரை உழுதல் அவசியம். அப்பொழுதுதான் மழைநீரை மண்ணில் பிடித்து வைக்க முடியும். “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்எனும் வள்ளுவரின் கூற்றின் மூலம் இதை அறியலாம். எனவே வறண்ட நிலத்தை அந்த அளவிற்கு உழுவதற்கேற்ற நீண்ட பலம் கொண்ட கால்களை உடைய மாடுகள் தேவைப்பட்டன. காங்கேயம் போன்ற இனங்கள் உருவாக்கப்பட்டது இந்த நோக்கத்தில்தான். முல்லையில் பால் வழங்கும் பசுக்களே செல்வமாகக் கருதப்பட்டன. ஆனால் மானாவரியின் செல்வம் எருதுதான்.

உழவில் கால்நடைகளின் பங்கை கம்பர் ஏரெழுபது நூலில் கூறியுள்ளார். என்னதான் மழை பெய்தாலும் விளைச்சலானது எருதின் திறனைப் பொருத்தே அமையும் என்பது கம்பரின் வாக்கு. அதனால் தான் கம்பர் எருதின் கழுத்தில் ஏர் பூட்டியதால் தோன்றிய சுவற்கறைத் தழும்பினை சிவனின் கழுத்தில் இருக்கும் நீலத்தழும்போடு ஒப்பிட்டு, எருதினை ஈசனாய் உருவகிக்கிறார்.


 இப்படிப்பட்ட எருதுகள் மானாவாரி நிலத்திலும் மனிதர்கள் நீடித்து வாழ வழிவகை செய்தன. இதனால் அவர்கள் வாழ்வியலோடு கால்நடைச் செல்வங்கள் பின்னிப்பிணைந்திருந்தன. முல்லையில் கால்நடை மேய்ப்போர் காளைகளை அடக்கும் தம் திறனைக் காட்டகொல்லேரு கொண்டல்எனும் நிகழ்வில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கி மணமுடிப்பர். மருதநிலத்தில் செய்யப்படும் விவசாயத்தின் அடித்தளமாக இருந்தவை கால்நடைகளே. இதன் காரணமாகவே அம்மக்களின் முக்கிய பண்டிகையும் ஏறு தழுவுதலாக இருந்தது.

ஒவ்வொரு உயிரினமும் ஆணின் உடல்வலுவை பரிசோதித்து அதன் பின்னர் தான் இணை செரும். மருதநில மகளிரும் இதே பழக்கத்தை அடியொற்றி தம் காளைகளை அணையும் காளையரை அணைக்கத் தயாராயினர்.

இதன் மூலம் நல்ல வலுமிகுந்த காளைகளின் மற்றும் காளையர்களின் சந்ததிகள் பெருகின. மேலும் அத்தகைய வலு கொண்ட காளைகள் செக்கிழுத்தல், வண்டி இழுத்தல்  போன்ற வேலைகளையும் எளிதாக்கின.

 அதுமட்டுமல்லாமல் நிலத்தை வளப்படுத்த ஆடுகளும் மாடுகளும் கிடை போடப்பட்டன.


இதுபோல கிடை மாடுகளும் வெயில் தாங்கி வாழும் பற்பல  ஆட்டினங்களும் புறக்கடை கோழிகளும்  அந்த  நிலத்தில்  வளர்க்கப்பட்டன. அந்தக் கால்நடைச் செல்வங்களைக் கொண்டு தமது புரத மற்றும் பொருளாதாரத் தேவையை அந்த மனிதர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.

மேற்கூறிய முறைகளால் கால்நடைகளையும் மரங்களையும் பெருக்கியாயிற்று. இனி நீரை நிலத்தில் அமரச் செய்வது ஒன்று மட்டுமே பாக்கி.

"நீரை நிலத்தில் அமரச் செய்வது எப்படி?"

எண்ணிறந்த தடாகங்களும் இரு நிலத்தும் இயற்றுவித்துஎன்று பாண்டியர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது போல நிலம் எங்கெங்கு பள்ளமாக உள்ளதோ அங்கெல்லாம் குளங்கள் வெட்டப்பட்டன.

நம் முன்னோர்கள் மேடான இடங்களில் குடியிருப்பை அமைத்துக்கொண்டு, பள்ளமான நிலங்களில் மழைநீரை தேக்கி, அந்த நீரை வயல்களுக்கு சமமட்ட வாய்க்கால்கள்   வழியாக திருப்பி விட்டனர்வயலுக்குப் பாயும்   நீரைத் தடுக்கும் வண்ணம் வரிசையாக சமமட்ட வரப்புகளை அமைத்தனர்


வரப்பை பலப்படுத்தவும் மக்கை அதிகரிக்கவும் வரப்பில் மரங்களை நட்டனர். இதன் மூலம் நிலத்தடி நீரும் அதிகரித்தது. நிலமும் வளமாகியது.

 கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும்  இந்த முறை பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்ற வல்லது. உண்மையான பாலைவனமான ராஜஸ்தானில் மூன்று கிராமங்கள் இதேபோன்ற சதுர வடிவில் நிலத்தை அகழ்ந்து மழை நீரைப் பிடித்து வைக்கும் ஒரு முறையைப் பின்பற்றி சோலை வனமாக மாறி உள்ளனர். அவர்கள் இதை ‘chauka’ முறை என்றழைக்கின்றனர்.



வறண்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் இதுபோன்றதொரு முறை பின்பற்றப்படுகிறது. அவர்கள் நீர் வழிந்தோடும் பகுதிகளில் சிறுசிறு  பள்ளங்களை ஏற்படுத்தி நீரை நிலத்தில் இறங்கச் செய்துமேல் மண்ணையும் பாதுகாத்து செடிகளை வளர்க்கின்றனர். இந்த முறையானது அந்த நிலங்களில் அளப்பரிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தமுறையின் பெயர் ‘zai pits’.


நீரை நிலத்துக்குள் இறக்குவது தான்  இந்த முறைகளின்  நோக்கம். இதன் முன்னேறிய வடிவம்தான் நாம் பயன்படுத்திய முறை. அந்த முறையில்,  'நடந்த' நீரானது குளத்தில் 'நிற்க' வைக்கப்பட்டது. நிற்கவைத்த நீர் விவசாய மண்ணுக்குள் 'அமர' வைக்கப்பட்டது.

பாலை நிலத்தில் தகிக்கும் சூரியனும் இருக்கும் இடமும் அபரிமிதம் என்று கண்டோம்அங்கே தேவையானது நீர் மட்டுமே. அந்த நீருக்கான  ஒரே ஆதாரம் மழை. எனவே அவர்கள் மழைநீரை மிகுந்த கவனத்தோடு சேகரித்து பயன்படுத்தினர்.


"சேகரிக்கப்பட்ட நீரானது மனிதர்களுக்குப் போதும். ஆனால் இந்த நிலத்தில்  மேயும் கால்நடைகளுக்கு எங்கிருந்து தண்ணீர் கிட்டும்?

 மேலும் இங்கே வளரும் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வேண்டுமே? பயிர்களை பூச்சிகளிலிருந்து காக்க பறவைகள் வேண்டுமே? எலித்தொல்லையிலிருந்து காக்க பாம்புகள் வேண்டுமே? பாம்பை கட்டுப்படுத்த  மயில்கள் வேண்டுமே? மயில்களின்  பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவற்றின் முட்டைகளை உண்ணும் நரிகள் வேண்டுமே? அவைகள் தங்குவதற்கு காடுகள் வேண்டுமே. நிறைய மரங்களும் கால்நடைகளும் தானே மானாவாரி நிலத்தின் தேவை?

அவைகளை ஊருக்குள் வளர்க்க முடியாதே?

அவைகள் எங்கே தங்கும்? எங்கே பெருகும்? அவை எங்கே நீர் பருகும்? "

பெருநிலத்தில் மழைக்காலத்தில் வழிந்தோடும் நீர், பள்ளமான பகுதியில் தேங்கும் அல்லவா? அந்த இடத்தில் குளங்கள் அகழப்பட்டன, அவற்றை சுற்றி விளைநிலங்கள் அமைக்கப்பட்டன. மேட்டு நிலத்தில் ஊர் அமைக்கப்பட்டது.

அந்த ஊரைத்தாண்டி வழிந்தொடும் நீரின் பாதை கால்வாயாக அகழப்பட்டது. அதை அடுத்து நீர் தேங்கும் பள்ளமான இடத்தில் மற்றுமொரு குளம் அகழப்பட்டு அவற்றை சுற்றி விளைநிலங்கள் அமைக்கப்பட்டு, மேட்டு நிலத்தில் ஊர்மக்கள் குடியேறினர்.

கடைசியில் அந்த நீரானது பெரும் ஏரி அல்லது கடலில் சென்று முடியும்.




இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் இருந்த அந்தக் குளங்கள் கால்நடைகளின் தாகம் தீர்த்தது.


குளத்தைச் சுற்றி மரங்கள் நடப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு அவற்றை சுற்றி ஒரு குறும்காடு அமைக்கப்பட்டது. அந்த குறுங்காட்டில் விவசாயத்திற்கு உதவும் பறவைகள், விலங்குகள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மயில்கள், நரிகள் மற்றும் வலசை வரும் பறவைகள் குடி கொண்டன.

சங்க நூலான இனியவை நாற்பதுகாவோடு அறக்குளம் தொட்டல மிக இனிதேஎன்கிறது. அதேபோன்று திரிகடுகம் என்னும் நூல்காவோடு அறக்குளம் தொட்டானும் நாவினால்என்று போற்றுகிறது. குளம் வெட்டுவதும் காடுகள் வளர்ப்பதுமே அறம் என்கிறது இப்பாடல்கள். குளத்தோடு கூடிய காடுகள் ஒவ்வொரு கிராமத்தின் கட்டாய அங்கமாய் இருந்திருக்கிறது.

இவ்வாறு குளமும் அதோடு கூடிய காடுகளும் கிராமம் தோறும் நிறுவப்பட, அங்கே இருக்கும் உயிரினங்கள் கூலி ஏதும் பெற்றுக்கொள்ளாமல் அவர்களின் விளைநிலங்களில் இருந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தின, மகரந்தச் சேர்க்கைக்கு உதவின, உரம் தூவின. மேலும் அவர்கள் வளர்த்த கால்நடைகளுக்கு வெயிலிலும்   உண்ண இலைகள் வழங்கின அந்த மரங்கள். இந்தப் பொது இடம் ஒவ்வொரு ஊரின் சூழலைப்  பேண உதவியது, அந்த மக்களையும் அவர்களது விவசாயத்தையும் காத்தது.

"கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது

ஆனால் அங்கிருந்த பறவைகளை யாரும் வேட்டையாட வில்லையா?

அங்கிருந்த பாம்புகளை யாரும் கொல்லாமலா இருந்திருப்பார்கள்?

அங்கு இருந்த மரங்களை யாரும் வெட்டிக் கடத்தாமலா போயிருப்பார்கள்? "

நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாய் கொண்டு இயற்கை பேணி வந்த அந்த சமூகம், அந்த நிலத்தின் சிசுவென உருவான விலங்கு, மரங்கள், பறவை, பூ போன்ற கருப்பொருட்களோடு முக்கியமான ஒரு கருப்பொருளை சமைத்து அந்த அனைத்து உயிர்களையும் காத்தது.

அந்த கருப்பொருளின் பெயர் 'தெய்வம்'.

மற்றேனைய சமூக மக்கள் எப்படி 'கடவுள்' எனும் விசும்பின் வழிவந்தவரைக்   காட்டிபயம் மற்றும் மரியாதை உணர்ச்சியின் அடிப்படையில் தனது சமூகக் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்திக் கொண்டனரோ, அதேபோல் இந்தக் காடுகளும் அதன் விலங்குகளும் அங்கிருந்த நீர்நிலைகளும் தெய்வத்தின் பொறுப்பில் விடப்பட்டன.

நடுகற்களாக  இருந்த முன்னோர்கள் ஊரின் எல்லையில் 'எல்லைச் சாமியாய்' வனம் காத்து நின்றார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவரை வான்உறையும் தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர் அந்த மக்கள். அந்த தெய்வத்தின் காட்டை அதாவது  அந்த கோயில் காட்டையும், அதன் விலங்குகளையும் யாரும் தீண்டத் துணியவில்லை. மேலும் காடுகள் மனித நடமாட்டம் இன்றி காட்டு விலங்குகளால் இயற்கையான பாதுகாப்பைப் பெற்றிருந்தன என அக நானூற்றின் 362 ஆவது பாடல் குறிப்பிடுகிறதுதவிர, “காடு காத்து உறையும் கானவர் உளரே” (மலை.279) எனும் பாடலில் கூறியபடி கானவர்களும் காடுகளைப் பாதுகாத்தனர். கிராமங்களில் மட்டுமல்லாமல் அரசர் குடியிருக்கும் பெரு நகரங்களிலும் வனங்களும், வனத்தின் வளங்களும் பாதுகாக்கப்பட்டன. உதாரணத்திற்கு பூம்புகார்நெருங்கிய மக்கள்கூட்டத்தொடு பொருந்திய பெருநகராக மட்டும்இல்லை என்பதும்அப்பேரூரின்நடுநடுவே இதய வெளிகளெனப்பல வனங்கள்இருந்தன என்பதும்அறியக்கிடக்கின்றன. சுதமதி மணிமேகலைக்குக்கூறிய வகையில்அவர்கள்உறையும்இடத்துக்கு அருகிலேயே ஐந்து பெரு வனங்கள்இருந்தன என்று குறிக்கின்றார்சாத்தனார்‌. இலவந்திகை வனம்‌, உய்யான வனம்‌, சம்பாதி வனம்‌, கவேர வனம்‌, உவவனம்என அவை அழைக்கப்பெற்றன. அதிலும் இந்த இலவந்திகைச் சோலை அரசனுக்கு உரியது.

இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். பாண்டிய மன்னர்களும் தங்களுக்கென இலவந்திகை வனத்தைக் கொண்டிருந்ததும் அதில் யாரும் நுழைய அனுமதி இல்லை என்பதும் சங்ககாலப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோயில் காடுகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் முனைவர் அமிர்தலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு உள்ளன. இவ்வாறு நீர்நிலைகளும் அதனை ஒட்டி இருக்கும் கோயில் காடுகளும் ஒவ்வொரு ஊரின் முக்கிய அமைவிடமாக இருந்தது. அதனையொட்டி வனம் காக்கும் தெய்வமும் வனத்தின் மற்றேனைய கருப்பொருட்களோடு கருப்பொருளாய் சமைந்திருந்தன. 

மானாவரி நிலத்தில் உத்ராயணம் எனப்படும் காலத்தில் பகல் நீள துவங்குகிறது. உடல் நலிவிற்கான வாய்ப்பு அதிகரிக்கிறதுகோடை நம்மை வாட்டத்துவங்குகிறது. உடல் அழல் காண ஆரம்பிக்கிறது.

காடுகள் வேனில் காலத்தில் அடிக்கும் வெப்பக்காற்றை தடுக்கின்றன, வெப்பத்தின் ஒரு பகுதியை அவை பிரதிபலிக்கினறன. நீராவியினை வெளியிடுவதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கின்றன. அதிலும் வேம்பு, கல் இச்சி மரம், ஆலமரம் போன்றவை கடும் கோடையிலும் பசுமை மாறாதவை. அவை தம்மை சூழ்ந்திருக்கும் பகுதிகளை குளிர்ச்சியாக வைத்திருப்பவை. மேலும் அவை மழையை ஈர்க்க வல்லவை. அடர்ந்த காடுகள் தமக்கான மழையை உருவாக்க வல்லவை. ஓடிச்செல்லும் மழை நீரை தடுக்கும் செயலை செய்வதன் மூலமும், பெய்யும் மழையை மெதுவாக மண்ணில் இறக்கச் செய்யும் வேலையைச் செய்வதன் மூலமும் அவை நீர்மட்டத்தை அதிகரிக்கின்றன. சூரிய ஒளியை உணவாக மாற்றுவது, காற்றின் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு நமக்கு ஆக்சிஜன் வழங்குவது, கரிமத்தை நிலத்தில் புதைத்து காற்றினைத் தூய்மைப்படுத்துவது போன்ற வேலைகளையும் நகர இயலா இந்தச் சமையல்காரர்கள் செய்து வருகின்றனர்.

மழையின் போதும் வெயில் உச்சத்தை அடைந்த போதும் தமிழர்கள் அதிகம் உடல் நலிவுற்றிருந்தனர். மழை துவங்கும்பொழுது கொசுக்களால் பரப்பப்படும் வியாதிகள் அதிகரிக்கின்றன. வெயில் அதிகமாகும் பொழுது அம்மை முதலிய வியாதிகள் அதிகரிக்கின்றன. இவை தொற்று வியாதிகள். இவற்றை சமாளிக்கவும் மக்களுக்கு கோயில் காட்டின் கருப்பொருட்கள் தான் துணை நின்றன.

அவை எப்படி துணை நின்றன?”

நெய்தலில் பிள்ளைப் பேறு தொடர்பான தாய்தெய்வ வழிபாட்டைக் கண்டோம் அல்லவா, அதன் நீட்சியாக சுரம் கொண்ட மானாவாரி நிலத்தில் மழை என்னும் மாரியைத்  தரவல்ல தாய்தெய்வத்தின் தலையை சிலையாய் வடித்து வழிபட்டனர்.

மாரி எனும் தெய்வம் 'மாறுதல்' என்று பொருள்படும். பக்தர்கள் இந்த அம்மனை மாற்றக்கூடியவள் என்று வெளிப்படையாக வர்ணிக்கின்றனர். இவள் கோபம் மிக்க தெய்வம், உடலில் அழலை அதிகமாக்கி அம்மை நோய் முதலியவற்றை கொடுக்கக்கூடியவள். அதே சமயம் மழை எனும்மாரியைத் தந்து நிலம் மற்றும் உடலைக் குளிர்வித்துக் காப்பவள் இந்த மாரி. எல்லம்மா அல்லது எல்லையம்மன் எனவும் இவள் தென்னிந்தியர்களால் அழைக்கப்படுகிறாள்.

மாரிக்கு உகந்தவை வேம்பு. வேப்பஞ்செடிகள் கடும் வெயிலில் தான் பசுமை நிறைந்து இருக்கின்றன. குளிர் மழை காலங்களில் இலைகளை உதிர்த்து விடுகின்றன. வெயிலுக்கென தகவமைந்தவை இவை.கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது இந்த தாய்தெய்வ வழிபாட்டு முறை.

"அதெல்லாம் சரிஅந்த அம்மனின் தலையை மட்டும் ஏன் வழிபட வேண்டும்? உடல் என்ன ஆனது?"

 அந்த கிராமம்தான் அவளது உடல். அதன் மக்கள் தான் அவளது குழந்தைகள். அவள் தரும் மழை தான் அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் பால்அமுதுகுழந்தைகளை தாய் காப்பதுபோல் வேனில் காலத்தில் வரும் அம்மை முதலிய கொள்ளை நோய்களிலிருந்து அவர்களை அந்தத் தாய்மானாவாரி  நிலத்திலுள்ள வேப்பிலை துணையுடன் காத்து நின்றாள். இதன் காரணமாக தாய் தெய்வமான நிலத்தை அந்த மக்கள் தம் அன்னையென போற்றிப் பாதுகாத்தனர்.

இதுபோன்று உருவகமாக உருவாக்கப்பட்டவை தான் அவர்களது தெய்வங்கள். அந்த தெய்வத்தை அவர்களால் உரிமையோடு தொட்டு வணங்க முடிந்ததுஅந்த சாமிக்கு அவர்கள் பேசும் மொழி புரிந்தது. அவர்களது குறைகளுக்கு அவர்களின் தெய்வம் செவிமடுத்தது. அவர்களையும், அந்த ஊரையும், அந்த சூழலையும் அந்த தெய்வம் காத்து நின்றதுதமது சாமிக்குப் பிடித்ததை வருடம்தோறும் ஊர்கூடி படைத்து  உண்டு, உறவைப் பேணி அவர்கள் மகிழ்ந்திருந்தனர். அந்த சமூகத்தினர் அப்பேற்பட்ட அமைப்பினால் வறட்சியையும் தாங்கி  பகுத்துண்டு வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

இவ்வாறாக ஒவ்வொரு கிராமமும் சிறுசிறு சூழியல் மண்டலங்களாய் அமைந்திருந்தது. இவை அனைத்தும் ஒன்றுகூடி  தமிழகமானது மிகப்பெரும் திணைய மண்டிலமாய் விளங்கியது.

 அந்த தமிழகத்திற்கு அணிநிழற்காடும், அதிலிருந்து வந்த மணிநீரும், வளமான மண்ணும் அரணாய் விளங்கியது. மேலும் புயல் காற்றிலிருந்தும் பேரலைகளில் இருந்தும்  காக்கும் அரணாய் அலையாத்தி காடுகள் இருந்தன. இந்த அரண்களுக்கு  நடுவில் இருந்த திணைய   மண்டிலத்தின் வளமிகு மண் அவர்களை  நீடூழி வாழ வைத்தது.

வியாபாரம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு, அபரிமித வெயிலைத் தாங்கி, நீரை சேமித்து செய்யப்படும் இந்த விவசாய முறை பிடிபடவில்லை. அவர்களின் விவசாய முறையே வேறுவெள்ளையர்களின் நிலமானது குளிர்மிகு  பிரதேசம். அந்த நிலத்தில் அவனுக்கு மழையை விட லிட்டில் ஜானியின்   விளையாட்டு முக்கியமாய் இருந்தது (rain rain go away பாடல் பதினேழாம் நூற்றாண்டில் little Arthur wants to play எனும் வடிவில் பாடப்பாட்ட ஆங்கிலேயர்களின் நாட்டுப்புறப்பாடலாகும்). நாம் மழைக்கு ஏங்கி இருந்ததுபோல் அவன்  வெயிலை வேண்டி ஏங்கி இருந்தான். நம் முன்னோர்கள் காற்றுள்ள சமயம் நம்மைத்  தூற்றிக்கொள்ள அறிவுறுத்திய போதுஅவர்களின் முப்பாட்டன் வெயில் வரும்பொழுது புல்லை உலர்த்த அறிவுறுத்தினான்.

இப்போது கூட நமது நாட்டில் விலங்குகளுக்காக பண்ணை அமைக்கும் போது கால்நடைமருத்துவர்கள் பண்ணையைவடக்கு தெற்குபார்த்து கட்ட சொல்லுவார்கள். அப்போது தான் விலங்குகள் மீதான சூரிய வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில்  கம்மியாக இருக்கும். ஆனால் அவர்கள் நாட்டில் பண்ணைகள் நிறைய சூரிய ஒளி கால்நடைகள் மீது பட வேண்டி கிழக்கு மேற்கு பார்த்து கட்டப்படும்.



தாவர சமையல் காரர்களின் ரெசிப்பியில் நீர், வளமிகு மண் மற்றும் சூரிய வெளிச்சம் ஆகியன முக்கியப்பொருட்கள் என்பதைப்பற்றி நாம் அறிவோம். அதில் நமது தேவை நீர். ஆனால் அவனது தேவையோ சூரிய ஒளி. மேலும் வெயில் வரும் பொழுதுதான் அவனது  நாட்டில் பனி வடிவில் சிறைபட்ட நீர் உயிர் பெறும். எனவே அவனது நாட்டில் சமையலின் இருமுக்கிய மூலப்பொருட்களும் சூரியனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் நிலையில் இருந்தன.

Subsistence farming எனப்படும் வாழ்வாதாரத்திற்கான விவசாயம் அவர்களால் 16ஆம் நூற்றாண்டு வரை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனால் அவர்களும் நிரந்தர உணவுக்காக கிராமப்புறங்களில் நிலத்தைச் சார்ந்தே வாழ்ந்து வந்தனர். விவசாயத்தில் உயிர்சுழற்சி பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. கழிவுகளும் இறந்த உடல்களும் எவ்வளவு விரைவாக மக்குகின்றதோ, அவ்வளவு விரைவாக அவை உணவுச் சங்கிலியில் நுழைந்து  சுழற்சியில் பங்கு கொள்ளும். வெயில் இல்லா குளிர்மிகு அவர்கள் தேசத்தில் கழிவுகளும் இறந்த உடல்களும் குளிர்சாதன பெட்டியில் இருப்பது போல் பதப்பட்டு இருந்தன. அவை மட்கும் வேகம் அங்கு குறைவு. எனவே சாணத்தை தாது எருவாக்குதல் அங்கு சாத்தியப்படவில்லை. மேலும் அவர்களின் விவசாய மூறையில் பன்முகத்தன்மை இல்லை. அதனால் தான் அவர்களால் விளைவிக்க இயலாப் பொருட்களை நம்மிடம் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நீரும், சூரிய வெளிச்சமும் பருவத்திற்கேற்ப மாறும் தன்மையன. அதை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நிலம் இயக்க சக்தியற்றது. அந்த நிலத்தை, உயிர்கள் துணையுடன் வளமிகு மண்ணாய் மாற்றுவதில் தான் விவசாயத்தின் வெற்றி அடங்கியுள்ளது

சமையலின் முக்கிய ரெசிப்பியான இந்த வளமிகு நிலத்தைப்பற்றி பார்ப்போம்.

நிலம் தன் சத்தை இழந்து அடுத்த விளைச்சலுக்கு தயாராகாமல் இருப்பதுதான் உலகின் அனைத்து விவசாயக்குடிகளாலும் எதிர்கொள்ளப்பட்டு வந்த முக்கியப் பிரச்சனை. அதற்கு நீட்டித்திருக்கத்தக்க சூழல் பாதுகாக்கும் ஒரே தீர்வு கால்நடைகளின் எரு மட்டுமே.

 ‘முன்னாடியே விளைந்துவிட்டோமேஇப்ப எதுக்கு திரும்ப விளையனும்?’ என்று நிலம் தன் வளத்தை ஒளித்து வைத்தாலும் முன்பு வைத்த எரு இப்போது கைகொடுக்கும் என்கிறதுதொல்லது விளைந்தன நிலம் வளம் கரப்பினும்… (203:2)” எனும் இந்தப் புறநானூற்றுப் பாடல். இந்த முறையைப் பின்பற்றியதால் தான் நமது விளைச்சல் அனைத்து போகத்திலும் குறையாமல் இருந்தது. இதன் காரணமாக அதிகரித்த விளைச்சலை பெற மாடுகளைக்கொண்டு போரடிக்க முடியாமல் யானைகளைக் கொண்டு போரடிக்கும் நிலையில் இருந்தனர் நம் மக்கள்.

நமது விவசாய முறையானது மழையை எதிர்பார்த்துச் செய்யப்பட்ட விவசாய முறை. அவர்களுடைய விவசாயம் மிதவெயிலடிக்கும் இருமாதங்களைக் குறிவைத்து செய்யப்படும் விவசாயம். அவர்கள் சாணத்தை எருவாக்காமல் அப்படியே உரமாகக் கொண்டு விளைவித்தாலும், விளைச்சலுக்கு பிந்தைய நிலமானது சத்துக்கள் குறைந்து அடுத்த விளைச்சலை கொடுக்கும் அளவிற்கு தயாராகாமல் இருந்ததுஏனெனில் அவர்கள் நாட்டில் சாணமானது மட்க்க குறைந்த பட்சம் ஒரு ஆண்டு ஆனது. இதனைத் தவிர்க்க அவர்கள் நிலத்தை மூன்றாகப் பிரித்துக்கொண்டு, ஒரு பங்கு நிலத்தில் பார்லியையும் மற்றொரு பங்கில் கோதுமையையும் பயிரிட்டு வந்தனர். மூன்றாம் பங்கு நிலத்தை தரிசாக விட்டு அங்கு கால்நடைகளை மேய விட்டனர். அடுத்த ஆண்டு கால்நடை சாணத்தால் சத்துக்கள் ஓரளவிற்கு மீண்ட நிலத்தில் மேற்கூறிய தானியங்கள் சுழற்சி முறையில் பயிரிடப்பட்டு விளைசல் பெறப்பட்டது. இதுபோல மிகுந்த பிரயாசத்தின் பேரிலேயே அவர்களது வேளாண்மை நடைபெற்றது.



நைட்ரஜன் சத்தை நிலத்தில் நிலை நிறுத்தும்  பயிர்களைப் பற்றிய அறிவு வந்த பிறகு 'டச்சு நான்கு பயிர் சுழற்சி முறை' என்கின்ற முறையில் கிலோவர் டர்னிப் போன்ற தாவரங்களை சுழற்சி முறையில் பயிரிட்டு விளைச்சலை அதிகரிக்க ஆரம்பித்தனர்.

 இது ஒரு அடிப்படை தற்சார்பு விவசாய முறை. இதை அவர்கள் கண்டுபிடித்தது 17ஆம் நூற்றாண்டில். இதன் முன்னேறிய வடிவங்களை தமிழக நாகரிகங்கள் முதற்கொண்டு பல முன்னேறிய மருத நிலத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகங்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு மாயன்  நாகரிக விவசாய முறையில் 'மூன்று சகோதரிகள்' என்னும் விவசாய உத்தி ஒன்று உண்டு. அம்முறையில் சோளமும் பீன்ஸும் ஸ்குவாஷும் ஒன்றாக பயிரிடப்பட்டது. சோளத்தண்டு, பீன்ஸ் கொடி பற்றிப்படற உதவியது. பீன்ஸ் நைட்ரஜனை நிலத்தில் நிலை நிறுத்தியது. ஸ்குவாஷ் செடி தரையில் படர்ந்து களைகளை உருவாக விடாமல் தடுத்தது, மேலும் மண்ணை ஈரமாக வைத்தது. இவ்வாறு ஒரே கல்லில்இல்லை இல்லை ஒரே மண்ணில் மூணு மாங்காய் பெறப்பட்டது.


நமது விவசாய முறையிலும் நிலமும் பயிர்களும் கால்நடைகளும் மக்களும் பின்னிப் பிணைந்து இருந்தனர். ஒன்றன் கழிவை ஒன்றன் உணவாக்கிக் கொண்டிருந்தனர். இம்முறை விவசாயத்தில் ஒவ்வொரு உயிரினமும் பங்களிப்பாளராகவும் இருந்தன பங்கு பெறுபவராகவும் இருந்தன. இதனால் நிலத்தில் ஒரு சமநிலை நிலவி வந்தது

அவர்கள் விவசாய முறையில் பயிர்கள் எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதை பற்றி பார்த்தோம். அங்கே கால்நடைகளின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்று பார்ப்போமா?

அங்கேயும் மாடுகளும் பன்றிகளும், பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. அவைகள் மட்டுமல்லாமல் அவர்கள் செம்மறி ஆடுகளையும் நிறைய வளர்த்து வந்தனர். காரணம் குளிரைத் தாங்கும் கம்பளி அவற்றிடம் நிரம்ப உண்டு. இந்தக் கம்பளியை சேகரிக்கவும், நூலாய் நூற்கவும், ஆடையாய் தைக்கவும் நெசவாளர் கூட்டம், குடும்பம் குடும்பமாக வேலை செய்து கொண்டிருந்தது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு நெசவாளர்களால் துணி தைத்துக் கொடுக்க இயலவில்லை. 17ஆம் நூற்றாண்டு வாக்கில் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் நெசவில் சில புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்தினர். அந்த கண்டுபிடிப்புகள் தொழிற் புரட்சியின் அடித்தளமாக அமைந்தது. அதன் விளைவாய் அவர்களால் நிறைய நெசவு செய்ய முடிந்தது. ஆனால் அதிகரிக்கும் உற்பத்திக்குத் தேவையான கம்பளிகள் பத்தவில்லை. கம்பளிக்குப் பதிலாக பருத்தி அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியது. ஆனால் அவர்கள் விவசாய முறையில் தானியத்தை விளைவிப்பதே பெரும்பாடாக இருந்ததால், பருத்தியை பயிர் செய்யாமல் வெளி தேசங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளானார்கள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் பருத்தியை இறக்குமதி செய்யத் தொடங்கினர்இப்பொழுது மூலப்பொருட்கள் நிரம்பி விட்டன. ஆனால் அவற்றை ஆடையாக நெய்வதற்கு பழைய தொழில் நுட்பங்கள் கை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு கை கொடுத்தது ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியம் அவர்களுக்கு பருத்தி விளைவிக்க நிலங்களையும் அடிமைகளையும் கொடுத்தன. தொழிற் புரட்சியின் விளைவால் பவர்லூம் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர் அவனுக்கு நெய்யப்பட்ட துணி தேவைப்படவில்லைபருத்தி இருந்தாலே போதுமானதாய் இருந்தது. அதேபோல் அனைத்து துறைகளிலும் இயந்திரத்தின் பயன்பாட்டைக்  கொண்டு வர ஆரம்பித்தான். தற்பொழுது அவனது தேவை பருத்தி, சர்க்கரை, புகையிலை, தேயிலை போன்றவற்றை விளைவிக்க நல்ல நிலப்பரப்பு மற்றும் விளைவிக்கும் அடிமைகள். விளைவித்ததை இயந்திரங்கள் கொண்டு ஆடையாய் நெய்தாலும் மிதமிஞ்சிய உற்பத்தியை யார் தலையில் கட்டுவது? அதற்கும் அடிமை நாடுகள் இருக்கின்றனவே. பிறகென்ன கவலை?

அடிமைகள் மூலம் வரிப்பணமும், அந்த நிலத்தின் மக்களின் மூலம் அடிமைகளும் போர் வீரர்களும் அவர்களுக்கு தட்டுப்பாடின்றிக் கிடைத்தன. அதன் காரணமாக அவர்கள் சாம்ராஜ்யம் விரிவுபடுத்தப்பட்டது. பருத்தி விளைவிக்க அடிமைகளின் நிலங்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய அடிமைகளும் பயன்பட்டது என்னவோ உண்மைதான். இதனால் உற்பத்தியும் இலாபமும் பெருகியது. ஆனால் பேராசைக்கான தீனியை ஏகாதிபத்தியத்தால் வழங்க இயலவில்லை. பேராசைக்கு தீனி வழங்கும் வேலையை முதலாளித்துவம் எடுத்துக் கொண்டது.

அதுவரை சக்தி என்பது அடிமைகளின் உடல் உழைப்பிலும், நீர் மற்றும் காற்று சுழற்றும் சக்கரங்களின் வடிவிலும் அவர்களால் பெறப்பட்டு வந்தது

மேற்கூறிய ஆற்றல்களால் பெறப்பட்ட லாபம் முதலாளிகளுக்கு போதவில்லை. அவர்களுக்கு உற்பத்தி பெருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டது. அதன் விளைவாய் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்புக்குப் பிறகு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக புதிய தொழில்நுட்பங்களில் முதலாளிகளால் அதிக முதலீடு செய்யப்பட்டது. தொழிற்புரட்சியின் யுகம் தொடங்க ஆரம்பித்தது. விளைவு ரயில் என்ஜின்கள், தொலை தொடர்பு சாதனங்களான டெலிகிராம் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பயனால் நகரங்களில் இருந்தபடியே மூலை முடுக்குகளுக்கு தொடர்புகொள்ள முடிந்தது. எனவே நகரங்களுக்கு அவர்களின் மக்கள் இடம்பெயரத்தொடங்கினர்.

17 ஆம் நூற்றாண்டின் நடுவாக்கில் இங்கிலாந்தின் நகரங்களில் 15 சதவீத மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டில் அது 50% ஆகியது. அதுவரை இந்தியாவின் ஆடைகள் தான் உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்பட்டிருந்தன அதனோடு சேர்ந்து உலோக வணிகங்களும் வாசனை திரவியங்களும் மற்றேனைய பொருட்களையும் வணிகம் செய்து வந்தது இந்தியா. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தி வரைக்கும் உலக ஆடைகளின் உற்பத்தியில் 25 சதவீதம் இந்தியா தான் பங்களித்து வந்துள்ளது. அதை அடியோடு அடித்து நொறுக்கியது இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம். உற்பத்திப்பொருட்களை விளைவிக்க அடிமை நாடான இந்தியா பயன்பட்டது. இந்தியாவின் உற்பதியாளர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. உப்பு உற்பத்திக்கே வரி விதித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். விளைவு இந்தியாவில் உற்பத்தி அடியோடு குறைந்தது. அவர்கள் நாட்டில் நெய்யப்பட்ட பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். பஞ்சம் தலைவிரித்து ஆடியது. இவ்வாறு ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது வரலாற்றில் எங்கும் காணமுடியாத சுரண்டல் என்பது JT Sunderland எனும் புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வாளர் அவர்களின் கருத்து.

இப்படி இந்தியா போன்ற வாரிக்கொடுக்கும் நிலங்களைத் தேடி டச்சு, ஸ்பானிஷ், பிரஞ்சு, இங்கிலாந்து மக்கள்கள் முதலாளித்துவத்தின் பேராசையின் விளைவால் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தனர். அடிமைப்படுத்திய நாடுகளில் சுதேசி வியாபாரங்களை அடியோடு அடித்து நொறுக்கினர். நாட்டை அடிமைப்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்பட்ட சண்டைக்கு தொழிற்புரட்சி தீனி இட்டதுவெடி பொருட்கள் ராணுவ தளவாடங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களுக்குள் மூண்ட சண்டையை அடிமைகளைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். முதலாளித்துவத்தின் முதலீடு தொழில்நுட்பங்களுக்கு தீனி இட்டது. தொழில்நுட்பங்கள் நகரமயமாக்களுக்கு தீனி இட்டது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் இங்கிலாந்தின் 85 சதவீத மக்கள் நகர்புறங்களுக்கு வந்து விட்டனர். தற்போது அவர்கள் நாட்டில் விவசாயம் மிகச் சிலராலே கைக்கொள்ளப்பட்டது. விவசாயம் செய்தவர்களுக்கோ பயிர் சுழற்சியும் கால்நடை சாணங்களும் தேவைப்படவில்லை. சண்டையில் மிஞ்சிய வெடிபொருட்களை நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சல் அபரிமிதமாக  இருந்ததை கண்டறிந்தவர்கள், இது விவசாயத்தில் ஏற்பட்ட புரட்சி என கொண்டாடித் தீர்த்தனர். வாழ்வாதார விவசாயம் முதலாலித்துவத்தின் பிடிக்குச் சென்று தொழிற்சாலையின் மாற்றுவடிவமாக மாறியது.

இவ்வாறு நிலத்தின் பன்முகத் தன்மை பற்றிய புரிதல் இல்லாத அவர்கள் புகுத்திய முறைதான் ரசாயன முறை விவசாயம்.

"ரசாயன முறை விவசாயத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. அதை பின்பற்றுவதில் என்ன தவறு? "

 ரசாயன உரத்தைப் பயன்படுத்திய பொழுது மண்ணிலிருந்து நுண்கிருமிகள் அழிக்கப்பட்டன. மேலும் இதுவரை செறிவு மிகுந்த வேர் செல்லின் திரவம் வெளியிலிருக்கும் செறிவு குறைந்த நீரை சவ்வூடு பரவல் மூலம் எடுத்து உயிர் வாழ்ந்து வந்தது. ஆனால் ரசாயன உப்புகள் நிலத்தில் சேர்ந்ததால் வேரில் இருக்கும் நீர், நிலத்தை நோக்கி உறிஞ்சப்பட்டது. இதை தவிர்க்க நிறைய நீர் பாய்ச்சப் பட வேண்டியிருந்தது. நிறைய நீரின் தேவைக்காக நிலத்தடி நீர், போர் போட்டு உறிஞ்சப்பட்டது. நிலத்தடி நீரானது வண்டியின் 'ரிசர்வ்' போன்றது. பஞ்சத்தில் பயன்படுத்தவேண்டிய பாதுகாப்பு அமைப்பை பயமின்றி பயன்படுத்துகிறோம். விளைவு, நடுக்காட்டில் வண்டி நின்று விடுகிறது. விவசாயம் ஒரு சூதாட்டம் என்ற பெயரைப் பெறுகிறது.

ரசாயனங்களினால் விவசாயம் மட்டும் பாதிக்கப்படவில்லைஅதன் விஷநாக்குகள் இயற்கையின் பல இடங்களில் ஊடுருவ ஆரம்பித்தது. உதாரணத்திற்கு நாம் அளவின்றி பயன்படுத்திய யூரியா எல்லாம் மழை நீரில் கரைந்து நீர்நிலைக்கு சென்றன. அதிகரித்த நீரின் யூரியாவால் அந்த நீர்நிலைகளில் உள்ள ஆல்கேக்கள் அபரிமித வளர்ச்சி அடைந்து, நீரின் மேல் போர்வையாக மூடி, நீரின் உள்ளே ஆக்சிஜன் கரையாமல்  நீர்நிலை  உயிரினங்கள்  பாதிக்கப்பட்டன. மேலும் பொட்டுலிசம் எனப்படும் கிருமிகளின் நச்சு நீர் நிலையில் கலக்க ஏதுவான சூழல் இதனால் உருவானது. அந்த நீரைக்குடித்த கால்நடைகளின் நரம்புமண்டலம் செயலிழக்க ஆரம்பித்தது.



மேலும் நிறைய யூரியாவைக் கொண்டு விளைவிக்கப் பட்ட பயிர்கள், மிகுந்த பச்சைத் தன்மையுடன் காணப்பட்டன. அந்தப் புல்லை உண்ணும் மாடுகள் மக்னீசிய குறைபாட்டால் வலிப்பு வந்து சாக ஆரம்பித்தன.

அதிக பச்சை நிறப்புற்கள் நிறைய பூச்சிகளை வசீகரித்தது. அவற்றைக் கொல்ல  பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டன.

தீயவர்களைத் தாக்க கட்டையோடு சுற்றிக்கொண்டிருந்த  லேபர் கோபாலைஅப்ரன்டிசுகள் அநியாயமாய் தாக்கியது போல, மேலே சுற்றிக்கொண்டிருந்த நன்மை செய்யும் வேட்டையாடி பூச்சிகள், நம்மால் அழிக்கப்பட்டன.

படம்: மேலே  இருக்கும் நன்மை செய்யும் சிலந்திக் கூட்டம்.


தீமை செய்யும் பூச்சிகள் எப்பொழுதும்போல் இலைக்கு கீழ் பத்திரமாக இருந்தன. விஷத்தை எதிர்த்து தப்பிப் பிழைத்த அந்த பூச்சிகளின் சந்ததிகள்  விஷத்திற்கு எதிராக வீரியம் பெற்றன. கொல்லவேண்டிய உயிர்களைத் தவிர மற்ற அனைத்து உயிர்களையும் அது பாதித்தது…. நம்மையும் சேர்த்து.


இதுகாறும் தாளாண்மை கொண்டிருந்த வேளாண்மை பாதை மாறி வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

விளைவு பாலையாகிவிட்டது என்று, நிலத்தை விட்டு மக்கள் வெளியேறத் துவங்கினர். வெறிச்சோடிய கிராமத்தின் எல்லையில், தனது பேரன்கள் எப்போது வருவார்கள் என்று எல்லைச்சாமி வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

"ரசாயனங்களால் தீமைகள் இருப்பது என்னமோ உண்மைதான். கட்டுக்கடங்கா மக்கள் பெருக்கத்திற்கு அதிக விளைச்சல் அல்லவா தேவைப்படுகிறது? விளைச்சல் அதிகரிக்க ரசாயன உரங்கள்  தானே கை கொடுக்கின்றன. "

வணிகநோக்குகொண்ட வெள்ளையர்களுக்கு அனைத்துமே லாபக் கணக்கு தான். நாம் வெள்ளையர்கள் போல் சிந்திப்பதை விடுத்து முன்னோர்கள் போல் சிந்திப்போமே.

இசைந்து வாழ்வதைவிட பயன்படுத்திக் கொள்வதே வெள்ளையர்களின் வாழ்வு முறை. நிலத்தோடு உரத்தைச் சேர்த்தால் அதிகவிளைச்சல் என்று எண்ணியது அவர்களின் வணிக மனம்.

"உண்மைதான், ஒன்றோடு ஒன்றைக் கூட்டினால் இரண்டு தானே வரும், இரட்டிப்பு லாபம் தானே? "

இருக்கலாம்ஆனால் இசைந்து வாழும் எண்ணம் கொண்டவர்களின் கணக்கு  ஒன்றையும் ஒன்றையும் உறவாட வைத்து மூன்றாக்கியது.

ஆங்கிலேயர்கள் உரத்தைக் கொண்டு விளைச்சலை அபரிமிதமாக்கிக்  காட்டினர். நம்மவர்கள் உரத்திற்கு மிகவும் மெனக்கெடவில்லை. உரம் தான் விலையின்றி கால்நடைகள் மூலமும் மரங்கள் மூலமும் கிடைத்துவிடுகிறதே. அதைப்பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்?

"அப்படியானால் அவர்கள் விளைச்சலை அதிகரிக்க என்ன செய்தார்கள்?"

அவர்கள் நிலம் என்னும் பரிணாமத்தோடு மற்றொரு பரிமாணத்தை  உறவாட வைத்து விளைச்சலை அதிகரித்தனர்.

நாம் நம் உலகத்தை அல்லது பிரபஞ்சத்தை மூன்று பரிமாணமாகப் பார்க்கிறோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிமாணங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிமாணம். நாம் இயற்பியலின் கணக்குகளை எல்லாம் இந்த நான்கு பரிமாணங்களை வைத்து தான் போடுகிறோம். E =MC2  என்பதும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. வெளியில் முன்னும் பின்னும் நம்மால் நகர முடிவது போல காலத்தில் நகர முடியாததற்கு அதன் திசை ஒரு காரணம் என்கிறார்கள்.அதன் திசை எப்போதும் எதிர்காலத்தை நோக்கியே இருக்கிறது. நம்மால் ஏன் கடந்த காலத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது? ஏன் எதிர்காலம் நமக்குத் தெரியவில்லை என்ற கேள்விக்கு இது விடையளிக்கிறது.

காலத்தை அனுமானிப்பதற்கு உருவாக்கப்பட்டவையே கேலண்டர் மற்றும் மானிட ஜோதிடங்கள் அனைத்தும். எதிர்காலத்தை இவற்றால் அனுமானிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பாகுபாடு கிடையாது. காலம் என்பது வெளியின் ஒரு பண்பு (property of space) அவ்வளவு தான். மனிதன் என்ற தர்க்கரீதியான ஒரு உயிரினம் பிரபஞ்சத்தில் வந்ததால் தான் காலத்தை கடந்த காலம் எதிர்காலம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டி வந்தது.

இப்படிப்பட்ட புதிரான  காலப் பரிணாமத்திற்கு தமிழர்கள் வைத்த  பெயர் தான் 'பொழுது'.




















 


 



 


 




 








 






 



No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஏர் முன்னது எருது-9-வான்நின்று உலகம் வழங்கி வருதலால்...

  காலம் : முதற்சங்க காலம் இடம் : வரண்ட தென் மாவட்டம் " உயிர்ப்பு மிக்க மேல்மண் வெயிலில் வறுக்கப்பட்டு விட்டது . பெய்யும் ம...