சில நாட்களுக்கு முன் வரை நிறைசூல் கொண்டிருந்த பொருநை ஆறு இப்போது அபலைப் பெண் போல காட்சி அளித்தாள்.
பொருநையின் நீர் களைப்புடன் மந்தமாக ஓடியது. வெளியில் பரவி இருந்த வெப்பம் சிவனுக்குள் இருந்த அழலை அதிகரித்தது. அவனது வில்சனின் நோய் அவனுக்குள் மெளனமாக கொதித்துக் கொண்டிருந்தது .
அந்தக் காலை அமைதியாக இருந்தது—வினோதமான அமைதி. சூரியன் உயிரற்ற பூமியின் மீது உதித்தது.
காற்று வெப்பத்துடன் கனமாக வீசியது.பறவைகள் மௌனமாகின.
வெளியே நடந்து கொண்டிருந்த சிவனின் கால்களுக்குக் கீழ் உலர்ந்த இலைகள் நொறுங்கின.
பணம் இழந்தவனை நண்பர்கள் கைவிட்டு நீங்குவது போல, விலங்குகள் காட்டின் தொலைவில் உள்ள நீரை நோக்கிச் சென்று விட்டன .
நண்பர்களின் நினைவுகளிலிருந்து நாம் நீங்கினாலும் பகைவர்கள் நம்மை எப்போதும் மறப்பதில்லை. அவர்கள் நம்மைத் தேடி எப்படியும் வந்து விடுவார்கள்... பழைய பகையை முடிக்க.
அனல் தகிக்கும் அந்தக் காட்டிலே பகை விலங்கு ஒன்று மெல்ல இவர்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்து வந்தது.
அது ஒரு வரிப்புலி.
பசி மற்றும் வெப்பத்தால் அதன் குரூரம் அதிகரித்திருந்தது. அதன் விலா எலும்புகள் தோலில் தெரிந்தன, அதன் மூச்சு சூடாகவும் கரடுமுரடாகவும் இருந்தது. ஒவ்வொரு புற்றையும், கைவிடப்பட்ட பாதையையும் அது முகர்ந்தது.
இறுதியாக தான் தேடியதை அது கண்டடைந்தது.
தனியாக சிவா, வழக்கம்போல, வனத்தை வலம் வரத் தொடங்கினான். அவனது பெருமைமிக்க கண்டுபிடிப்பான செப்புப் பற்களைக் கொண்டிருந்த பலமுனை சூலத்தை அவனது கை அலட்சியமாக பற்றி இருந்தது. அதில் தமருகப்பறை கட்டப்பட்டிருந்தது.
அவனது பாதங்கள் கவலையற்றவை, அவனது இதயம் நேற்றைய மகிழ்ச்சியின் நினைவில் இன்னும் நடனமாடியது. ஆனால் அவனுக்கு பின்னால், இறந்து போன புதர்களுக்கு இடையே, புலி மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தது .
தொலைவில், அவனது தந்தை அவரை விதைகளை சேகரித்த படி நின்றிருந்தார்.
திடீரென்று ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அந்தச் செயலை அப்படியே நிறுத்தினார்.
வழமைக்கு மாறான அமைதி.
அவருக்கு மிகவும் பழக்கமான அரிதான ஒரு மணம் காற்றில் வீசியது.
அவர் திரும்பி, கற்கள் மீது வெறுங்காலுடன் ஓடினார், “சிவா!” என்று கூவினார்.
ஆனால் புலி ஏற்கனவே பாய்ந்து விட்டது.
சிவன் சடாரென்று திரும்பினான்.
அவன் கண்கள் விரிந்தன.
விலங்குகளின் அரசன் முன்னங்கால்களை விரித்தபடி, நகங்கள் சூரிய ஒளியில் மின்ன, அவனை நோக்கி காற்றில் மிதந்து வந்தது.
அனிச்சையாக அவன் தனது ஈட்டியை உயர்த்தினான்.
நிச்சயம் அது அந்தப் புலியின் மீது பட்டது.
ஆனால் அந்தக் கொடிய விலங்கினை அத்தாக்குதல் பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை
சிவன் தப்பிவிட்டான்... ஆனால் இம்முறை அது தனது இலக்கை துல்லியமாகக் குறி வைத்து பாயத் தயாரானது
சிவன் தனது ஈட்டியை பார்த்தான். அதன் முனைகள் சில வளைந்து ஒடிந்து விட்டன. வெறும் மும்முனை கொண்ட சூலமாக அது காட்சியளித்தது.
மூன்று கூர்மையான பற்கள், அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
செப்பு ஆயுதம் புலிக்கு ஈடாகவில்லை...
புலி மீண்டும் பாய்ந்தபோது, அவனது தந்தையின் குரல் நினைவுக்கு வந்தது: “தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல...”
அந்த கணத்தில், அவர்களது மூதாதையரின் தைரியம் அவனுள் பாய்ந்தது. அவன் தனது திரிசூலத்தை உறுதியாகக் கையில் ஏந்தினான். அங்கே திரிசூலத்துடன் நின்றிருந்தது ஒரு சிறுவன் அல்ல. புலிகளை கைகளால் சமர் செய்தவர்களின் வழிவந்த ஒரு தேர்ந்த வனவாசி.
புலியும் சிவனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். இம்முறை அதன் பாய்ச்சலில் துல்லியமும் வேகமும் அதிகரித்திருந்தன. சிவன் தனது சூலத்தை அதன் பஞ்சு போன்ற குரல்வளைக்கு அருகே சொருகி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.
ஆனால் அவனது தந்தை அங்கே சரியான நேரத்தில் வந்தார். வனத்தின் மௌனத்தை உடைப்பது போல மிருகத்திற்கும் சிறுவனுக்கும் இடையில் பாய்ந்தார். காட்டைப் பிளப்பது போல ஒரு கர்ஜனையுடன், அவர் புலியின் முகத்தில் நேராக முஷ்டியால் குத்தினார் .
புலியின் தாடையில் முஷ்டியானது பட்டவுடன் கற்கள் நொறுங்குவது போன்ற ஒரு சத்தம் எழுந்தது.
புலி தடுமாறி விழுந்தது.
“ஓடு!” என்று அவனது தந்தை கத்தினார்.
சிவா ஓடவில்லை. அவனது கால்கள் நகர மறுத்தன. அவன் உறைந்து நின்றான், திரிசூலம் அவன் பிடியில் நடுங்கியது, இதயம் அவனது விலாக்களுக்கு எதிராக ஒரு முரசு போல அதிர்ந்தது.
சிவனின் தந்தை அவனை ஆழமாக கண்களுக்குள் ஊடுருவி பார்த்தார்.
அந்தக் கண்களில் பெருமிதம் மின்னியது.
"இன்று நீ வெளிப்படுத்திய துணிச்சல் அசாதாரணமானது. உன்னை எண்ணி பெருமை கொள்கிறேன் மகனே."
என்று அவர் உறுதியான குரலில் கூறினார்.
பின்னர் அவர் மிருகத்தை நோக்கி திரும்பினார், அவரது உடல் எங்கும் இரத்தம் கசிந்தாலும் அவரது கண்களில் தைரியம் பிரகாசித்தது.
இரு புலிகளை ஏற்கனவே கைகளால் கொன்ற பெருவீரன் அவர்.
அந்தப் பெருவீரனும், பசியால் ஆவேசம் கொண்ட புலியும் இறுதி யுத்தத்திற்கு தயாரானார்கள்.
இதை கண்ணுற்ற சிவனின் உடல் நடுங்கின. நடுங்கும் கைகளால் கற்களை உரசி அவனது இடுப்பில் கட்டப்பட்ட உலர்ந்த மாவளிக் கருக்கை பற்ற வைத்தான்.
அவன் அதை ஆவேசமாக சுழற்றியபடி புலியை நோக்கி ஓடினான் , காற்றுக்கு எதிராக தீப்பிழம்பு எரிந்தது.
ஆனால் காற்று அவனுக்கு எதிராகத் திரும்பியது.
மாவளியில் இருந்து; சிறு சிறு பொறிகள் ஒரு விடுவிக்கப்பட்ட சாபம் போலப் பறந்தன. பொறிகள் ஆவிகளைப் போல உலர்ந்த வனம் முழுவதும் பரவியது.
கூச்சலைக் கேட்டு ஓடி வந்த அவளது அன்னை அந்த நெருப்பின் கரங்களுக்குள் அடைபட்டுக் கொண்டாள்.
அவளைச் சுற்றிய உலர்ந்த செடிகள் தீப்பற்றின. தரையில் இருந்து ஒரு நெருப்பு சுவர் எழுந்து, அவளை ஒரு தீக் கூண்டாக சூழ்ந்தது.
அவள் அவனை அடைய முயன்றாள், வெப்பத்தின் வழியாக கைகளை நீட்டினாள். அவளது ஆடை தீப்பற்றியது. இருப்பினும், அவள் புகையால் குருடாகி, அன்பால் உந்தப்பட்டு முன்னோக்கி வர தடுமாறினாள். அவளது குரல் உடைந்தது. அது சன்னமான ஒரு இறுதி பிரார்த்தனையைப் போல சிவனின் பெயரை உச்சரித்தது.
பின்னர் நெருப்பு அவளை எடுத்துக் கொண்டது.
இக்காட்சியினால் கவனம் சிதைந்த சிவனின் தந்தை இவர்களை நோக்கி பார்வையை திருப்பிய அதே வேளையில். புலியின் நகங்கள் அவரது நெஞ்சிலே ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.
அவரது இரத்தம் வானில் இருந்து உதிர்ந்த நட்சத்திரங்களைப் போல பூமியில் பரவியது.
ஆனால் அவனது தந்தை எதிர்த்து போராடினார்.
“ஓடு!” என்று அவர் கடைசியாகக் கத்தினார்.
சிவனின் கண்களை அவர் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.
அவர்களது கண்கள் சந்தித்துக் கொண்டன .
அந்தத் தந்தையின் இறுதிப் பார்வையில், பயமோ வலியோ இல்லை. பெருமையும் அன்பும் மட்டுமே நிரம்பி இருந்தது.
பின்னர் தனது வலு அனைத்தையும் ஒன்று திரட்டி, அவர் புலியின் மீது பாய்ந்தார் .
புலியும் அவரும் ஒன்றாக, பாறை விளிம்புக்கு அப்பால் விழுந்தனர்.
ஒரு பெரும் மௌனம் அங்கே சூழ்ந்தது.
காட்டின் நெருப்பில் சுள்ளிகள் எரியும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
மரங்கள் நொறுங்கின. வானமே பின்வாங்குவது போலத் தோன்றியது. காடு அழுதது.
சிவன் நெருப்புக்கு மத்தியில் நின்றிருந்தான் . அவனது திரிசூலம் ரத்தத்தால் நனைந்திருந்தது . அவனது கைகள் நடுங்கின . அவனது ஆன்மா உடைந்து சிதறியது.
அவனது தாய் நெருப்பினால் விழுங்கப்பட்டு விட்டாள். அவனது தந்தை ஆழமான பள்ளத்தாக்கில் கரைந்து விட்டார்.
சிவாவின் உலகம் நொடிப் பொழுதில் உடைந்து விட்டது. அவனது உடல் நடுங்கியது. வில்சனின் நோய் அதன் அடுத்த கொடூர கட்டத்திற்கு உயர்ந்தது. அவனது உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் துடித்தன. அவனது தொண்டையில் இருந்து யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு கூச்சல் எழுந்தது.
அவன் தனது திரிசூலத்தை இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு நெருப்புக்கு மத்தியில் கூச்சலிட்டுக்கொண்டு அரற்றினான். தமருகப்பறையின் ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது.
சேயோன் அவன் மீது இறங்கியது போல நெருப்புக்கு மத்தியில் நடனம் ஆடினான்.
அப்படியே அவன் நிலை தடுமாறி பொருநை நதியில் விழுந்தான். அவனது நெற்றி நதியில் இருந்த ஒரு கூர்மையான பாறையில் மோதியது. நெற்றிக்கு நடுவில் இருந்து குருதி கொப்பளித்தது. நதி அவனை கீழ்பள்ளத்தாக்கிற்கு உருட்டிச் சென்றது.
மயக்கத்தில், அவன் மிதந்தான்.
நீரோட்டம் அவனை மலைகளில் இருந்து சமவெளிகளில் பரவி இருந்த ஒரு முல்லைக் காட்டின் ஆற்றுப் படுகைக்கு அருகே ஒதுக்கி தள்ளியது.
அவன் முல்லை நிலத்தை அடைந்தான்—புல்வெளிகளின் அடர்ந்த காடுகள் புனித ஆற்றங்கரையைச் சந்திக்கும் இடம் அது.
அவன் நீரருகில் உடைந்து கிடந்தான். திரிசூலம் அவனருகில் மின்னியது. அதில் கட்டப்பட்டிருந்த பறையின் மீது நீரின் அலைகள் மோதி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.
அவனுக்கு மேலே, பாருக்கழுகுகள் வட்டமிட்டன. அவனது நெற்றியின் மையத்தில் இருந்து இரத்தம் மெதுவாக வடிந்து கொண்டிருந்தது. அது அவனது மூன்றாம் கண் அழுவது போல காட்சியளித்தது.
அசைவற்றுக் கிடந்த அந்த உடலின் மீது ஒரு நாகம் படர்ந்தது. மெதுவாக அவனது கழுத்தைச் சுற்றி படம் எடுத்து நின்றது.
அந்த நாகம் மெதுவாக சீரியது.
சட்டென்று அவன் கண் விழித்தான்.
இங்கே வெயில் காய்ந்தது. அவனது
தோல் எரிந்தது.
அவன் கண் விழித்தான்.
சுற்றி இருந்த உலகம் அவனுக்கு புதிதாக இருந்தது.
பலவீனமான குரலில் "நான் எங்கே இருக்கிறேன்?” என்று மெதுவாகக் கேட்டான்.
“நான்… யார்?”
அவனுக்கு எதுவும் நினைவில்லை.
நெருப்பு இல்லை. புலி இல்லை. தந்தையோ தாயோ இல்லை. அவன் யார் என்றே அவனுக்கு நினைவில் இல்லை.
சுத்தமாக துடைக்கப்பட்ட ஒரு பலகையைப் போல... புதிதாக பூத்த புது மலரைப் போல அவன் காட்சியளித்தான்.
அவன் புயல்களால் வீசி எறியப்பட்டவன். நெருப்பின் சாம்பலில் இருந்து உதித்தவன்
அவனைச் சுற்றி காடு உயிர்ப்புடன் இருந்தது. அவன் தன்னை புதியவனாக உணர்ந்தான்.
இந்த உலகம் இனி அவனை சுயம்பு என்றே அழைக்கப் போகிறது.
அவனது வாழ்க்கையின் தொடக்கம் எது என்று யாருக்குமே தெரியாது.
அது ஒரு மறக்கப்பட்ட கதை.
அவனுக்கு ஆதி என்பதே இல்லை. அதேபோல் அவனுக்கு அந்தமும் இல்லை.
அவன் முதலும் அற்றவன்.
முடிவும் அற்றவன்.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரென முல்லைக் காட்டின் மத்தியில் நின்றிருக்கும் இந்தச் சிறுவனுக்கென்று இப்போது யாரும் இல்லை. அவனுக்கு போக்கிடமும் ஏதுமில்லை. அந்த சிறுவனிடம் பாசம் காட்டுவார் என்று யாரும் இல்லை. அந்தச் சிறுவனுக்கு எவரிடமும் எந்த பற்றும் இல்லை.
உறுதி இழந்த உடலோடும், நினைவுகள் இழந்த உயிரோடும், சூரியக் கதிர்களால் பொசுக்கப்பட்ட தோலோடும், நடுங்கும் நரம்புகளோடும், முனை மழுங்கிய பயனற்ற ஆயுதத்தோடும் நடுக்காட்டில் நிற்கதியாய் நின்றிருந்தான் அந்தச் சிறுவன்.
அவனுக்கு முன்னே உள்ள பாதைகள் வலி நிரம்பியவை. கடவுள்கள் அவனை மென்மேலும் சோதிப்பார்கள். அச்சோதனைகளைத் தாண்டி பெருஞ்சோதியாய் உருவெடுத்து, அனைவரையும் ஆட்கொள்ளும் அன்பின் பேரூற்றாய் அவன் நிச்சயம் விளங்குவான்.
------
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
**************
இதன் முந்தைய பாகத்தை படிக்க
1.
2.
3.
4.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...