Sunday, July 13, 2025

ஆதியோகி: அத்தியாயம் 2 - அந்திவண்ணன்

காட்டின் சுவாசம் மரங்களிடையே நுழைந்தபடி இருந்தது. அந்த முல்லை நிலத்தின் இதயத்தில்—பழமையான இலுப்பை, புன்னை, குருக்கத்தி, நாவல் போன்ற மரங்களின் அடர்ந்த இருப்புக்கு இடையே, நேற்றிரவு பெய்த மழையின் மணம் இன்னும் பூமியில் மணம் பரப்பியபடி இருந்தது. ஈரமான அந்த மண்ணில் துடியர்களின் பாதங்கள் எழுப்பிய மெல்லிய ஒலி, சுவர் கோழியின் ரீங்காரத்தோடு இணைந்தது. அந்த வேட்டைக் குழு அகலமான ஒரு வளைவில் முன்னேறியது. அவர்களின் நிழல்கள் மரங்களுக்கு இடையே அமைதியாக நகர்ந்தன.


அவர்கள் வேட்டையாடிகள், ஆனால் அதற்கும் மேலாக அவர்கள் துடியர்கள், துடிப்பறை எழுப்பும் தாளத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் கையில் இருக்கும் ஈட்டியும், கணிச்சியும், ஆற்றின் படுக்கைகளுக்கு அருகில் சேகரிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை.

அவர்களின் தலைவன் அத்தன். காட்டின் மண்ணைப் போல கருமையான தோலும், அகலமான மார்பும் கொண்டவன். அவன் தனது குழுவை திறம்பட வழி நடத்திக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவும் அவரது கூட்டத்தினரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

உறுதியாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் ஓசை எழுப்பாமலும் நகர்ந்து கொண்டிருந்த அவனது பாதம் நகர மறுத்து அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றது. அவன் திடீரென்று தனது கையை உயர்த்தினான். அவனது முழு குழுவும் அந்த கட்டளைக்குப் பணிந்து நின்றது. அவன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து, உடைந்த ஒரு கிளையைத் தொட்டான். மேற்கு நோக்கி ஒரு பார்வை பார்த்து, “கடமான்... அருகில் உள்ளது,” என்று மெதுவாக முணுமுணுத்தான். மற்றவர்கள் அவன் கூறியதை கூர்ந்து கவனித்தனர் .


சடாரென்று ஒரு கடமான் அவ்வழியே பாய்ந்தது. தயாராக இருந்த அவர்கள் அந்த மானை கிழக்கு நோக்கி விரட்டினர், மலைகளுக்குப் பின்னால், செதுக்கப் பட்ட கல்லால் ஆன ஈட்டிகளை ஏந்திய ஒரு சிறிய குழு அம்மானை வளைத்தது. அந்தமான் சிறிது கூட தப்ப வாய்ப்பு இல்லாதது போல் அவர்களின் திட்டம் அமைந்திருந்தது. இவர்களின் இந்தத் திட்டம் காட்டைப் போலவே பழமையானது.

முழு முனைப்போடு வேட்டையை அவர்கள் துவங்கிய அதே வேளையில், திடீரென காற்றைக் கிழிக்குமாறு எழுந்த ஒரு உருமல் அனைவரையும் உறைய வைத்தது. அழையா விருந்தாளி ஒன்று அவர்களின் வேட்டையின் குறுக்கே வந்தது.

அது ஒரு வரிப்புலி. மரங்களின் ஊடே நுழைந்து வரும் சூரிய ஒளி; செம்மண்ணைத் தீண்டியது போல தோற்றமளிக்கும்  செவ்வரிகள் அதன் உடலில் இருந்தது. அது மண்ணில் பதித்த பாதத்தடங்கள் மலர்ந்த ரோஜாவினைப் போல் இருந்தது.

அது துரத்தி வந்தது தனக்கான  வேட்டையைத்தான் , ஆனால் அது இப்போது கண்டறிந்திருப்பது வேட்டையாடிகளை.

இருபுறமும் பதட்டம் பரவியது.

பதட்டமும் பயமும் காட்டின் பரிபாஷைகள். ஆனால் அத்தனின் முகத்திலோ பயத்தின் ரேகைகள் சிறிதும் வெளிப்படவில்லை.

அவன் உறுதியாக நின்றான். அவன் ஓடவில்லை. தனக்கு சமமான எதிரியை கண்டறிந்த திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. புலியின் முகத்திலும் அதே உணர்வு பிரதிபலித்தது போலத் தோன்றியது.

புலியின் பின்னங்கால்கள் பூமியில் அழுத்தமாகப் பதிந்தன, வில்லிலிருந்து புறப்படும் நாணை போல காற்றைக் கிழித்துக்கொண்டு புலி அத்தனை நோக்கிப் பாய்ந்தது. அத்தனின் கால்கள் ஆச்சா மரத்தின் வேர்கள் போல பூமியில் அழுத்தமாக ஊன்றி இருந்தன, ஆனால் அவனது உடலோ நாணலைப்போல் போல் வளைந்து புலியின் தாக்குதலை தவிர்த்தது. அவனது உடல் கீழ்நோக்கி வளைந்தாலும் ஈட்டியை பிடித்திருந்த கை உயர்ந்திருந்தது. அது புலியின் கீழ்நெஞ்சில் ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.

  வலியினால் புலி தரையில் விழுந்து கர்ஜித்துத் துடித்தது.

அத்தனின் கை இடுப்பில் இருந்த கணிச்சியை அனிச்சையாக உருவியது. காயம் பட்டப் புலியும்... கடும் வேகத்துடன் அத்தனும்... ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். அந்த ஒரு க்ஷணத்தில் காட்டின் சுவாசம் நின்றது, இலைகள் அசைய மறுத்தன, அத்தனின் குழுவினரின் கண்கள் அனைத்தும் இக்காட்சியை நோக்கி உறைந்திருந்தன.

நீரைத் தீண்டிய ஒளி விலகிப் பாய்வது போல, கானகத்தின் தரைக்கு மேலே சில அடிகள் உயரத்தில் புலியும் அத்தனும் நெருங்கிய அந்த வேலையில் அத்தன் சிறிதே விலகி இலாவகமாக கணிச்சியை புலியின் தொண்டையில் இறக்கினான்.

சூடான இரத்தம் அவனது கைகளை நனைத்தது. அவன் வெற்றியுடன் நின்றான், அவனது மார்புக்கூடு ஏறி இறங்கியது, காடு அவனைச் சுற்றி அமைதியானது. 

அந்த அமைதியை கிழிப்பது போல் ஒரு தாள ஓசை முல்லை நிலமெங்கும் எதிரொலித்தது.அது துடிப் பறையின் அழைப்பு. 

பள்ளத்தாக்குகளுக்கு அப்பால், தொலைவில் ஒரு “துடிப் பறை" ஒலித்தது—ஒரு துடிப்பு, பின்னர் இடைவெளி, வரிசைக்கிரமமாக துடிப்பு ஒளி காற்றில் செய்தியை சுமந்து வந்தது.

பேசுதலை குறிக்கப் பயன்படும் பறைசாற்றுதல், பறைதல், போன்ற வார்த்தைகளின் வேர்ச்சொல்லை தேடி பயணப்பட்டீர்கள் என்றால் அது இந்த துடிப்பறையின் அதிர்வில் தான் வந்து முடியும்.

 பறை இசை கேட்ட அனைவரும் அசையாது நின்றனர் .ஒரு புதிய உயிர் உலகில் நுழைந்ததை அந்தத் துடிப்பறை அறிவித்திருந்தது. அத்தனின் துணைவி ஒரு குழந்தையை பெற்றிருந்த செய்தியை அது அறிவித்தது. அனைவரும் இந்த சந்தோஷமான செய்தியை எதிர்கொள்ள தங்கள் இருப்பிடத்தை நோக்கி வேகமாக நடந்தனர். 

 செல்லும் வழியில் அத்தனின் ஒரு குழுவினன் கீழ்மண்ணில் கிடந்த ஒரு விசித்திரமான பொருளை எடுத்தான். அது ஒரு பெண் காட்டு எருமையின் கொம்பு. கருப்பாகவும், உறுதியாகவும் அது இருந்தது. அந்த வேட்டையாடி அதை எடுத்து, முத்தமிட்டு, வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினான்.

 புலியின் தோலையும் வெற்றிவாகை சூடிய தன் தலைவனின் தலையை அலங்கரிக்கும் விதமாக காட்டெருமை கொம்பையும் பொருத்தியபடி அவர்கள் ஆனந்தம் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். அவர்கள் பழங்குடி குடியேற்றத்தை அடைந்தபோது, பெண்கள் மகிழ்ச்சியிலும் பயபக்தியிலும் குலவை சத்தம் எழுப்பினர்.

ஒரு சிறிய குடிசையின் உள்ளே, அத்தனது துணைவி களைப்புடன்புதிதாகப் பிறந்த குழந்தையைத் தழுவியபடி  படுத்திருந்தாள்.

 அத்தன் உள்ளே நுழைந்தான். மற்றவர்கள் விலகினர். ஆவலுடன் அவனது குழந்தையைக் காண அவன் தனது துணைவியை நெருங்கினான். திடீரென்று அவனது கண்கள் வியப்பால் சுருங்கின... கூடே வந்திருந்த அனைவரின் கண்களும் தான். 

 அந்தக் குழந்தையினுடைய தோல் பௌர்ணமி நிலவைப் போல் வெளிரி இருந்தது. அந்தக் குழந்தை தனது தந்தையைப் பார்த்து கண்களை சிமிட்டியது.

 தமிழகத்தின் காடுகளில் வாழ்ந்து வந்த அந்தப் பூர்வ குடிகள் பூமியின் கருமையான பாறையைப் போல தோலுடையவர்கள், இப்படி ஒரு குழந்தையைப் இதுவரையிலும் அவர்கள் பார்த்ததில்லை.

 அங்கே சிறிது சலசலப்பு நிலவியது. அந்தக் கூட்டத்தில் ஒருவன் சற்றே குரலை உயர்த்தினான். அவனது பெயர் கோடன்... வேட்டையில் குறைவான திறனுடையவன் ஆனால் பேச்சிலே விரைவானவன். அத்தனுக்குக் கிடைத்த புகழினால் மனம் வெம்பிய அவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். அனைவருக்கும் கேட்கும் படியாக தனது குரலை அவன் உயர்த்தினான்...

" கடவுளர்கள் கோபமடைந்துள்ளனர். இங்கே இருப்பது புலியின் இரத்தத்தில் இருந்து பிறந்த ஒரு வெளிர் குழந்தை... இது ஒரு சாபத்தின் வெளிப்பாடு. "

 மற்றவர்கள் சற்றே பயத்தில் பின்வாங்கினர். அவர்களின் பழைய மூடநம்பிக்கைகள் கிளர்ந்தன. வனத்தை பொருத்தமட்டிலும் வெளிர் விலங்குகள் சமநிலையின்மையின் அடையாளங்கள். அதன் காரணமாக அனைவரும் அந்தக் குழந்தையை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 ஆனால் அந்தக் குழந்தையின் தாய் மெலிதாகப் புன்னகைத்தாள். குழந்தையின் நிறம் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. 

 அந்த சிறிய குழந்தை தனது மெல்லிய விரல்களால் காற்றில் இசைப்பது போல கைகளை ஆட்டிக் கொண்டிருந்தது. அத்தனோ ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தான். இருப்பினும் அந்தக் குழந்தையின் வாத்சல்யம் அவனுள் பாசத்தை தூண்டி விட்டது. அவன் புலியின் தோலை எடுத்து, மெதுவாக அந்தக் குழந்தைக்கு அருகில் வைத்தான். காட்டெருதின் கொம்பினை அந்த குழந்தையின் தலைமாட்டிற்கு அருகில் சற்றே ஜாக்கிரதையாக அத்தன் வைத்தான். 

 ஒளிரும் வெளிச்சத்தில், காட்டு எருமை கொம்பு மகுடம் அவனருகில் பளபளத்தது.

 மரங்களின் வேர்கள் பயத்தில் நடுங்கும் அளவிற்கு அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் திடீரென்று ஒரு இடி வானை கிழிப்பது போல சப்தம் ஏற்படுத்தியது. 

 அந்த ஒலியைக் கேட்டதும் குழந்தை பயத்தில் அழ ஆரம்பித்தது, அந்தக் குழந்தையின் சிறிய உடல் நடுங்கியது.

 பால் வண்ணத் தோலைக் கொண்ட அந்தக்  குழந்தையின் முகம் பயத்தில் சிவந்து  அந்திவானின் நிறத்தை வெளிப்படுத்தியது.

 அந்தக் குழந்தையின் சிவந்த முகம் வசந்தத்தில் புதிதாக பூத்த செம்மல் மலரின் தீவிர நிறத்தை ஒத்திருந்தது. 

 அனிச்சையாக அந்தத் தாய் தனது மகனை இறுக்கி தழுவினாள். அவனது கண்ணீரை மென்மையான விரல்களால் துடைத்து, அவனது கன்னங்களின் நிறத்தை உற்று நோக்கினாள். ஒரு மென்மையான, ஆனால் உறுதியான புன்னகை அவளது உதடுகளைத் தொட்டது. " அன்றலர்ந்த செம்மல் மலர் போல... செக்கச் சிவந்த நமது கடவுள் சேயோன் போல்...,” அவள் மெதுவாக முணுமுணுத்தாள், அவளது குரல் சற்றே உயர்ந்தது. “இவ்வளவு பிரகாசமாக, இவ்வளவு உயிர்ப்புடன் அந்திவானம் போல இருக்கும் என் அருமை மகனே... செஞ்சந்தனத்தின் எழிலைக் கொண்டவனே... நீ சிவந்தவன்.... நீ சிவன். "


 இந்த உலகம் அவனை பல்வேறு பெயர்களால் வருங்காலத்தில் தொழப்  போகிறது. ஆனால் அவனுக்கு அவன் அன்னை சூட்டிய ஆசைப் பெயர் 'சிவன்'. 

Saturday, July 12, 2025

ஆதியோகி. அத்தியாயம் 1: நிலவு நிறத்தவள்


ஷாங்காய் மக்கள் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு, ஒளிரும் விளக்குகளால் பகல் போல் மிளிறியது. கிருமிநாசினியின் மெல்லிய மணம், மருத்துவர்களின் வெள்ளை அங்கிகளின் மென்மையான சலசலப்பு... இவற்றால் மருத்துவமனை உயிர்ப்புடன் இருந்தது . அந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், செவிலியர் மையத்தில் ஒரு நோயாளியின் பதிவேட்டைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

 மெலிந்த உடலமைப்புடைய, வட்டக் கண்ணாடி அணிந்த, கூர்மையான பார்வையுடைய மருத்துவர் லி வெய் என்பவர், புருவங்களைச் சுருக்கியபடி பதிவேட்டைப் புரட்டினார். அவருக்கு அருகில், அதிக கேள்விகளை கேட்கும் இயல்புடைய இளைய மருத்துவரான டாக்டர் ஜாங் மெய், மெதுவாகவும் ஆர்வத்துடனும் தனது சீனியர் மருத்துவரான லீ வெய்யிடம் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்.

 கேள்விகளை உள்வாங்கிய லீ, பதிவேட்டைத் தட்டியபடி “அவளுக்கு பத்தொன்பது வயது , நேற்று இரவு அனுமதிக்கப்பட்டாள். கடுமையான தோல் பாதிப்பு , மஞ்சள் காமாலை, இப்போது… நரம்பியல் அறிகுறிகள். பெரும்பாலும் நடுக்கம். சில சமயம் தன்னை மறந்து பிதற்றுகிறாள் .”

டாக்டர் ஜாங் பதிவேட்டில் இருந்த பெயரைப் பார்த்தார்: சென் லிக்ஸ்யூ. “ வெளிறிய நிலவு போன்ற தோலில் தீய்ப்புக் காயங்கள்... இதுதான் உங்களை அல்பினிசத்திற்கு பரிசோதிக்க வைத்தனவா?”

டாக்டர் லி தலையசைத்தார். “அவளது தோல் சிறிது கூட நிறமிகள் இல்லாமல் உள்ளது. பளிங்கு போன்ற அந்தத் தோல், உடலில் ஓடும் குருதியை பிரதிபலிக்கிறது. அதனால் தான் அவள் சிவந்து காணப்படுகிறாள். இந்த அறிகுறிகளைக் கண்டதால் தான் அவள் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று பரிசோதித்தேன். நான் நினைத்தது சரிதான் என்று பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 ஆக்குலோ குட்டேனியஸ் அல்பினிசம், வகை 2 என பரிசோதனையின் முடிவு தெரிவிக்கிறது. அவளால் சூரிய ஒளியை தன் தோளில் ஏற்க முடியாததற்கு இதுதான் காரணம். "

" அவளின் நோய்க்காரணி இதோடு முடிந்து விடவில்லை ” என்று கூறிய அவர், ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டினார். “அவளது கல்லீரல் செயல்பாடுச் சோதனையின்்் முடிவுகள் மோசமாக உள்ளன. அவளது உடலில் காப்பர் எனப்படும் செம்பின் அளவு மிக அதிகமாக உள்ளன. அவளுக்கு வின்சனின் நோய் பாதிப்பும் இருக்கிறது.

டாக்டர் ஜாங்கின் கண்கள் விரிந்தன. “இரண்டு பிறவிக் குறைபாட்டு நோய்கள் ? அல்பினிசமும் வில்சனும்? இது… மிகவும் அரிது.”

 டாக்டர் லி தனது கண்ணாடியை சரிசெய்தபடி “வில்சன் நோய் மறைமுகமாக நடக்கிறது. இது மரபணுக் குறைபாடு, பிறவியிலிருந்து இருக்கிறது, ஆனால் அது தன் அறிகுறிகளை உடனடியாக காட்டுவதில்லை. 
  ஈரலில் காப்பரின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் பொழுது ஆறு அல்லது ஏழு வயதில், மிதமான அறிகுறிகள் தோன்றலாம்: பசியின்மை, மெல்லிய மஞ்சள் காமாலை, கண்களில் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகளை அந்த குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும் .

 பதின்பருவத்தில், இது மோசமாகிறது—கல்லீரல் பிரச்சனைகள் தெளிவாகத் தெரியும், மஞ்சள் காமாலை அறிகுறிகள் தோன்றும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பதின்பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் ஆரம்பத்தில் இந்த நோயின் தாக்கம் மூளையை பாதிக்கிறது, இவளுக்கு தற்போது நேர்ந்திருப்பதைப் போல . 

நடுக்கம், தெளிவற்ற பேச்சு, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, அல்லது மன பிரமைகள் போன்ற மனநல பிரச்சனைகள் கூட தோன்றலாம். கருவிழியைச் சுற்றி தாமிரம் படிய ஆரம்பிக்கும். இதனால்தான் அவளது கண்கள் ஒரு தங்க வளையம் போல அழகாகத் தோன்றுகின்றன. "

 அவர் கூறியதை மனதுக்குள்ளே அசை போட்டுக் கொண்டிருந்த டாக்டர் ஜாங், “அப்படியானால், இது மெதுவாக உடலில் சேரும் விஷம். இவள் உடலில் ஆண்டுக் கணக்கில் செப்பு எனப்படும் தாமிரம்  சேர்ந்து கொண்டே இருக்கிறதா?”

“சரியாகச் சொன்னீர்கள். அவளுக்கு பதின்ம வயதில் மஞ்சள் காமாலை தொடங்கியிருந்தால், செலேஷன் சிகிச்சையால் இதை நாம் மட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது, மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது .”

டாக்டர் ஜாங், நோயாளியின் அறையைப் பார்த்தார், அங்கு அந்த இளம் பெண் அமைதியாக படுத்திருந்தாள், அவளது வெளிர் தோல் மங்கிய மருத்துவமனை விளக்குகளின் கீழ் ஒளிர்ந்தது. 

“நல்ல வேளையாக அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள்... நான் ஒரு ஆண் நோயாளியை வில்சன் நோயுடன் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் பாவம். காரணம் ப்ரயாபிசம் அறிகுறிகளையும் அவர் கொண்டிருந்தார். "

"ப்ரயாபிசம்? "

" மிகவும் வலி தரக்கூடிய ஆண்குறி எழுச்சி அறிகுறி. அதை ஆங்கிலத்தில் பிரயாபிசம் எனக் கூறுவார்கள்."

 டாக்டர் லி ஒரு புருவத்தை உயர்த்தினார். “ வில்சன் நோயின் நச்சுத்தன்மையில் இது போன்ற அறிகுறிகள் மிகவும் அரிது , ஆனால் அரிதாக இந்த அறிகுறி ஒருவருக்கு ஏற்படலாம் . 

நரம்பு மண்டலத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, அது எவ்வாறு இது போன்ற மாறுபட்ட அறிகுறிகளை காட்டுகிறது என்பது இன்னும் வியப்பளிக்க கூடிய செய்தியே.

 இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்த அந்த நோயாளியினால் வெளியில் கூட இயல்பாக செல்ல முடியாது. மிகவும் அவமானகரமாக அவர் உணர்ந்தார். மேலும் அவர் பொறுத்துக் கொள்ள முடியாத வலியில் அவதிப்பட்டார்.  
 இவள் பெண்ணாய் இருப்பது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும் — வில்சனின் பொதுவான அறிகுறிகளை மட்டுமே அவள் வெளிப்படுத்துகிறாள். இது போன்ற அரிதான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை ”

டாக்டர் ஜாங் கைகளைக் கட்டிக்கொண்டு, மனதுக்குள்ளாரே அவளது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை யோசிக்க தொடங்கினார் “அப்படியானால், அவள் சூரிய ஒளியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வில்சன் நோய்க்கு… செலேஷன் சிகிச்சை? பெனிசிலமைன்?”

டாக்டர் லி தலையசைத்தார். “நாங்கள் அவளுக்கு ட்ரையன்டைன் தொடங்கியிருக்கிறோம். பெனிசிலமைனை விட குறைவான நச்சுத்தன்மை உடைய மருந்து அது . செப்பு உடம்பில் அதிகமாவதைத் தடுக்க ஜிங்க் அளிக்கப்படுகிறது. அவளது கல்லீரலை பாதுகாத்து விட்டால், அவளது வாழ்நாளை  நம்மால் அதிகரிக்க முடியும்.”

 “கடந்த காலத்தில் மக்கள்  எப்படி இது போன்ற நோயை எதிர்கொண்டனர் ? வில்சன் நோய் மரபணு  நோய் தானே. அல்பினிசமும் கூட மரபணு நோய் தானே. நூற்றாண்டுகளுக்கு முன்பும் இந்த நோய்கள் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்போது இருந்த மனிதர்கள் இறப்பை தீண்டுவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை அல்லவா? "

டாக்டர் லியின் உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தது , அது அவரது வழக்கமான கடினமான முகபாவனையில் இருந்து நிகழக்கூடிய அரிதான மாற்றம்.

 “ பாரம்பரிய மருத்துவத்தில் அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. போ-யாங் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”டாக்டர் ஜாங் கண் சிமிட்டினார்.

 “போ-யாங்? சீன மருத்துவரா?”

டாக்டர் லி மென்மையாகச் சிரித்தார். “இங்கு நாம் அவரை அப்படித்தான் அழைக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் அவரை தமிழர் என்கின்றனர். அவர் ஒரு சித்தர். போகநாதர் என்று அழைக்கப்படுபவர். நமது நாட்டில் அவரை போ யாங் என்று அழைக்கின்றோம். அவர்கள் வழி வந்தவர்கள் அரிய பல வகை நோய்களுக்கு மருத்துவத்தை அறிந்து வைத்திருக்கின்றனர். நாம் விஷம் என கருதும் பல உலோகங்களை பாஷானம் ஆக்கி அவர் பயன்படுத்தியதாக கேள்வி.
 அவரது மருத்துவ முறைகள் இன்று நாம் ஆதாரமற்ற அறிவியல் என்று அழைக்கின்றோம் , ஆனாலும் அவை வேலை செய்தன.”

“ஒரு தமிழர்?” டாக்டர் ஜாங்கின் புருவங்கள் சுருங்கின. “ஒரு தமிழர் எப்படி சீன மருத்துவ நூல்களில் இடம்பெற்றார்?"

டாக்டர் லி தோள்களை உயர்த்தினார், “யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சிலர் அவர் சீனாவுக்கு பயணித்தார் என்று கூறுகிறார்கள், சிலர் அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். 
 ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் —வில்சன் நோயின் அறிகுறிகளுடன் என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு 38 வயது நோயாளி ஒருவரை நான் பரிசோதித்து இருக்கிறேன்.
 அவர் போயாங்கின் முறைப்படி சிகிச்சை பெற்றவர். அந்த சிகிச்சை அவரை முழுமையாக குணப்படுத்தவில்லை என்றாலும், அவரது அறிகுறிகளை பெருமளவில் மட்டுப்படுத்தியது. மேலும் அவரது வாழ்நாளை 38 வயது வரை நீடித்து வைத்திருந்தது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. "
 
டாக்டர் ஜாங் அவரை நம்ப முடியாமல் நோக்கினார். “அவர்கள் எப்படி அத்தகைய சிக்கலான ஒன்றை அப்போது கண்டறிந்தார்கள்?”

டாக்டர் லியின் கண்கள் ஒரு ஆச்சரியத்துடன் ஒளிர்ந்தன. “ அதற்கான விடை கடவுள்களுக்கு மட்டுமே தெரியும்,” என்று கூறியபடி அவர் மீண்டும் மற்ற பதிவேடுகளை புரட்ட ஆரம்பித்தார், 

 மருத்துவமனை சுவர்களுக்கு அப்பால், ஷாங்காயின் வானவெளி ஒரு பிறைநிலவின் கீழ் பளபளத்தது, அந்த அழகிய நிலவொளி நகரத்தின் மீது ஒரு மெல்லிய குளுமையை பரப்பியது.

 நோயாளியின் அறையில், சென் லிக்ஸ்யூ என்று அழைக்கப்பட்ட அந்த பௌர்ணமி ஒளி பொருந்திய பெண் திடீரென்று சிலிர்த்தாள், சாளரத்தின் வழி நிலவின் ஒளி அவளது தோளின் மீது படர்ந்து குளிரை பரப்பியது. அது அவளது சிலிர்ப்பை சற்றே மட்டுப்படுத்தியது.

 அவளின் அந்த சிலிர்ப்பு தமிழ்நாட்டின் மலைகளில் நீல நிறக்கழுத்துடன்... சிவந்த தோலுடன்... சாம்பல் பூசிய தேகத்துடன் அலைந்து திரிந்த ஒருவரின் கதையை எதிரொலிப்பது போல தோன்றியது.

------

 இந்தக் கதை கோயில்களின் கலசங்கள் வானத்தை எட்டுவதற்கு முன் நிகழ்ந்தது. அப்பொழுது பூமி இன்னும் நெருப்பின் மொழியில் தான் பேசிக் கொண்டிருந்தது. 
 மனிதர்கள் கல் கோடரிகளால் வேட்டையாடிய காலத்தில், தெற்கில்—இப்போது தமிழ்நாடு என்று பெயர் பெற்ற  மண்ணில் ஒரு குழந்தை பிறந்தது.
 அந்தக் குழந்தை ஒரு வித்தியாசமான குழந்தையாக பிறப்பிலேயே காட்சியளித்தது.
 அந்தக் குழந்தையின் தோல் பால் வண்ணத்தில் இருந்தது. மழையின் சாரலில் மிளிரும் பனையின் கருமையை ஒத்த மக்கள் வசித்து வந்த அந்தக் குழுவில், இந்தக் குழந்தையின் நிறம் மிகவும் அசாதாரணமானது . 

 மக்கள் அந்தக் குழந்தையை சாபம் பெற்ற குழந்தை என்று கருதினர். இரவின் குளுமையை மட்டுமே விரும்பிய அந்தக் குழந்தை  வனத்திின் இதயத்தில்  அன்னையின் அன்பின் கதகதப்பிலும்  தந்தையின் வீரத்தின் நிழலிலும் துளிர்த்து வளர்ந்து சிறு வயது பிராயத்தை எட்டியது.

 பிரிதொரு நாளில் அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டான். அவனது உடல் நடுங்கியது, அவனது தோல் மஞ்சள் நிறமாக மாறியது. பலர் அவன் இறந்துவிடுவான் என்று நினைத்தனர்.ஆனால் அவன் இறக்கவில்லை.அவன் உயிர் பிழைத்தான். 

 அவன் உயிர் பிழைத்தது கடவுள்களின் கருணையாலோ ஆசீர்வாதத்தாலோ அல்ல... தவறுகள் மூலமாக தானே உணர்ந்த அனுபவங்களின் வழியிலும், மனம் தளராத முயற்சியின் வழியிலும், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற உந்துதலினாலும், இயற்கையோடும் வெளியோடும்  நடத்திய உரையாடல்களின் மூலமாகவும் அவன் தனது உயிரை உடலோடு நிறுத்தினான் .

  இந்த உலகின் முதல் மருத்துவம், முதல் யோகம், முதல் மந்திரம், முதல் ரசவாதம் அனைத்தும் அவனது போராட்டத்தின் வழி உலகிற்கு கிடைத்தது. 

 இந்த உலகம் அவனை ஆதியோகி என்று அழைக்கப் போகிறது. ஆனால் இந்த கதையின் தொடக்கத்தில் அவன் கல்லீரலில் அதிகரிக்கும் செம்பின் தீவிரத்தால் நடுங்கும் உடலைக் கொண்ட ஒரு சாதாரண சிறுவனாகத்தான் இருந்தான். 

 காலம் அவனை செம்பை தங்கமாக மாற்ற வைத்தது. அவனது செம்பு உடலும் தங்க உடலாக ஜொலித்தது.
----------
"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"

Related Posts Plugin for WordPress, Blogger...