Sunday, July 19, 2026

ஆதியோகி - ஆங்கில பேட்டியின் மொழிபெயர்ப்பு

இந்திய ஆன்மிக மரபில் பல நூற்றாண்டுகளாக சிவன் எனும் கடவுள் மிகுந்த மர்மத்துடன் அணுகப்படுகிறார். அழிவின் கடவுளாகவும், மௌனமே உருவான துறவியாகவும், பேரானந்த நடனம் புரியும் ஆடல் வல்லானாகவும், உமையின் காதலனாகவும், அன்பின் ஆதி ஊற்றாகவும், நஞ்சுக்களின் தெய்வமாகவும், விலங்குகளின் காவலனாகவும் மேலும் பல முரண்பாடு கொண்ட தோற்றங்களை ஒன்றாகக் கொண்ட ஒரு ஆளுமையாக அவர் சித்தரிக்கப்படுகிறார்.

 புராணக் கதைகளின் மூலமாகவே இதுகாறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற இந்த தெய்வீக உருவத்தின் பின்னால், மக்களை வழிநடத்திய மனிதரின் போற்றத்தக்க கதை ஒன்று மறைந்திருக்கலாம் அல்லவா?

 அவரது ஞானமும், வாழ்வியல் போதனைகளும் தலைமுறைகள் பல கடந்து புராணங்களாகவும், மரபுகளாகவும் தற்குறிப்பேற்றப்பட்டு இருக்கலாம் அல்லவா ?

 இந்தக் கேள்விகளுக்கான பதில் தேடும் முயற்சியாக உருவானதே இந்த நாவல்.

இந்தச் சிறப்பு உரையாடலில், சிவனைப் பற்றிய தனது வித்தியாசமான மறுவாசிப்பை எழுத்தாளர் பகிர்ந்து கொள்கிறார். சங்கத் தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவ அறிவியல், தத்துவம் ஆகிய பல துறைகளின் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, சிவனை வெறும் தெய்வமாக அல்லாமல், மக்களை குணப்படுத்திய மருத்துவராகவும், ஆழ்ந்த சிந்தனையாளராகவும், ஞானாசிரியராகவும், கருணையின் வடிவமாகவும் அவர் மறுபரிசீலனை செய்கிறார்.

அறிவியல் ஆர்வத்தையும் தமிழர் பண்பாட்டு மரபின் மீதான ஆழ்ந்த மரியாதையையும் இணைக்கும் இந்த உரையாடல், சிவனைப் பற்றிய நம் வழக்கமான புரிதலைத் தாண்டி  புதிய பரிமாணத்தை வழங்குகிறது.

இந்த இலக்கியப் பயணத்தை வடிவமைத்த உந்துதல்கள், ஆய்வுகள், எதிர்பாராத கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகளை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

1. சிவன் பண்டைய மனித சமூகங்களில் வாழ்ந்த ஒரு உண்மையான மனிதராக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு முதன்முதலில் எப்போது தோன்றியது?

சிவன் ஒரு காலத்தில் மனிதர்களிடையே வாழ்ந்த உண்மையான மனிதராக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு முதன்முதலில் தோன்றியது, தமிழ்நாட்டைச் சேர்ந்த  வள்ளலார் (இராமலிங்க அடிகளார்)அவர்களின் போதனைகளை படித்தபோதுதான்.

வள்ளலார் ஒரு சிறந்த ஞானி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி. ஆன்மிகத்தின் உச்ச நிலையை அவர் அடைந்ததாகவும், 1874-ஆம் ஆண்டு அவர் பூட்டப்பட்ட அறையிலிருந்து மர்மமான முறையில் மறைந்ததாகவும் மரபுகள் கூறுகின்றன. அக்கால பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆவணங்களிலும் இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.

வள்ளலாரின் தத்துவத்தின் அடிப்படை 'ஜீவகாருண்யம்’. ஒவ்வொரு உயிரின் மீதும் அன்பு செலுத்துவதே இறை நிலையை அடையும் வழியாக அவர் போதித்துள்ளார். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கையும் இதுவே ஆகும். சிவனை சைவ சித்தாந்திகள் கடவுளாக வழிபடவில்லை. அவர்களுக்கு அன்பு தான் கடவுள். அன்பு தான் சிவம். அன்பும் சிவமும் வேறு வேறு இல்லை என்பதே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையாகும். 

 அதே அன்பை போதித்த வள்ளலார், சிவனை நம்முடன் வாழ்ந்த ஒரு மனிதர் என்று தெளிவாக குறிப்பிடுகிறார். எந்த ஒரு மனிதனும் சிவனைப் போன்ற உயர்ந்த ஆன்மீக நிலையை அன்பின் மூலமாகவும், கருணையின் மூலமாகவும், ஜீவகாருண்யம் மூலமாகவும் அடைய முடியும் என்பதே வள்ளலாரின் போதனை. உலகில் இருக்கும் அனைத்து மதங்களின் அடிப்படைக் கொள்கையும் அன்புதான்.

  வரலாற்றில் பதிவாகிய இயேசு, புத்தர் போன்ற கடவுள்கள் அன்பை போதித்த கதைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

பின்னாளில் கடவுளாக வணங்கப்பட்ட சிலர், உண்மையில் வரலாறு பதிவாகாத காலத்தில் வாழ்ந்த அசாதாரண மனிதர்களாக இருந்து, அவர்களின் வாழ்வும் போதனைகளும் காலப்போக்கில் புனிதமாக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?
 
இந்தக் கேள்வியே எனது நாவலுக்கான தொடக்க விதை?

  இந்தக் கதை சிவனைப் பற்றிய புராணங்களை மறுத்து எழுதப்பட்டது அல்ல. அவரது வாழ்வுக்கு பின்னால் மறைந்திருக்கக்கூடிய மனித வரலாறு, பண்பாட்டு நினைவுகள் மற்றும் தத்துவப் பரிணாமங்களை இலக்கியத்தின் வழியாக ஆராய்வதற்காகவே இந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.

2. தமிழ் இலக்கியம், நாட்டுப்புற மரபுகள், தொல்லியல், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு துறைகளை இணைத்து சிவனின் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்துள்ளீர்கள். இந்த அணுகுமுறை எவ்வாறு உருவானது? இந்த நூலிலிருந்து வாசகர்கள் என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

இந்த நூல், எனது வாழ்க்கையில் இணையாகப் பயணித்த இரண்டு தேடல்களின் சங்கமமாக உருவானது. ஒன்று கால்நடை மருத்துவராக மருத்துவ அறிவியலின் வழியாக மேற்கொண்ட தேடல்; மற்றொன்று தமிழ் இலக்கியம், தொல்லியல், தத்துவம் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆராய்ந்த பயணம்.

கால்நடை மருத்துவராக எனது பணியில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது விலங்குகளைத் தாக்கும் வெறிநாய் (Rabies) போன்ற ஆட்கொல்லி நோய்கள் . வெறி நோய் போன்ற  நோய்களின் தாக்கத்திற்கு ஆங்கில மருத்துவம் இதுவரையிலும் வைத்திய முறைகளை கண்டறியவில்லை. அந்த நோய் தாக்கினால் மரணம் உறுதி. இருந்தபோதிலும் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஏடுகளில் இதற்கான வைத்திய முறைகள் இந்தியாவில் இருந்ததற்கான சான்றுகளை அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த, வெறிநாய்க்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 'தஞ்சாவூர் மாத்திரைகள்' (Tanjavur Pills) என்ற ஆர்சனிக்–பாதரசம் அடிப்படையிலான சிகிச்சை முறையைப் பற்றி அறிந்தபோது, சித்த மருத்துவம், ரசவாதம் மற்றும் சிவனுடன் தொடர்புடைய 'ரசேஸ்வரர்' மரபுகள் மற்றும் 'பாஷாணங்கள்' குறித்து ஆராயத் தொடங்கினேன்.

 அரசனிக் ( வெண் பாசனம் ) மற்றும் பாதரசம் போன்றவை கொடிய நஞ்சுகள்.  

"எந்தத் தேவையின் அடிப்படையில் நஞ்சினை மருந்தாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்? அதை அவர் எவ்வாறு மருந்தாக மாற்றி இருப்பார்? "

 இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேடத் துவங்கினேன். 

அதே நேரத்தில், தமிழக இலக்கணத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மனிதர்கள் எவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. குறிப்பாக அதன் ‘திணை’ கோட்பாட்டைப் படித்தபோது, இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சமநிலை, சூழலுக்கும் மனித உளவியலுக்குமான தொடர்பு போன்ற கருத்துகள் தொடர்ந்து தமிழ் இலக்கணத்தில், தமிழகத்தின் சங்க கால பாடல்களில் வெளிப்படுவதை உணர்ந்தேன். ஒரு மொழியின் இலக்கணத்தில் வாழ்வியலை சேர்ப்பதற்கான காரணம் என்ன? அதை யார் சேர்த்திருப்பார்கள் என்கின்ற கேள்வி என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது?

 அவர் யார் என்னும் கேள்விகளுக்கு விடையை ஆராய்ந்த பொழுது அதன் முடிவில் வந்து நின்றவரின் பெயர் சிவன்.

 முருகன் எனும் கடவுள் ஐந்திரம் எனும் இலக்கண நூலை தோற்றுவித்தார், அதன் அடிப்படையில் அகத்தியம் எனும் நூல் எழுதப்பட்டது. பின்னர் தொல்காப்பியர் அவற்றை இலக்கணமாக ஒழுங்குபடுத்தினார் என்பதே இதுகாறும் நாம் அறிந்த தகவல்கள். 

 மொழியின் வேரை ஆராய்ந்து கொண்டு போனால் அங்கே சிவன் என்னும் கடவுளின் பெயர் இறுதியில் நிற்கிறது. நடனம் முதலிய கலைகளை ஆராய்ந்து கொண்டு போனாலும் அவைகளும் சிவன் என்பவரிடம் சென்று தான் முடிகிறது. யோகம், பிராணாயாமம், சித்துக்கள், பாஷாணங்கள் அனைத்தின் முடிவிலும் அவரது பெயரே வந்து நிற்கிறது. 

"இந்த அனைத்தையும் தனித்தனி துறைகளாகப் பார்க்காமல், அவை அனைத்தும் ஒருகாலத்தில் வாழ்ந்த ஒரு அசாதாரண மனிதரின் வாழ்க்கை நினைவுகளை... அனுபவங்களை... வெவ்வேறு வடிவங்களில் பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவ மற்றும் வாழ்வியல் முறைகள் என்ற வகையில் அணுகலாமா? " என்ற என்ற கேள்வி எனக்குள் எழுந்தது . அந்தக் கேள்விக்கான பதிலாகவே இந்த நாவல் உருவானது.

தமிழ் இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், குறும்பர்களின் நாட்டுப்புறக் கதைகள், உலோகவியல், மருத்துவ அறிவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கற்கால மக்களிடையே வாழ்ந்த, சக உயிர்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட ஒரு தத்துவஞானியாக சிவனை மறுவடிவமைத்துள்ளேன்.

 ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய காதல், திருமணம், பிரிவு மற்றும் பிரிவின் வலி முதலிய அனைத்தையும் அவர் கடந்து வந்திருப்பதாக அவரது புராணம் கூறுகிறது. அசாதாரண உடல் வாதைகளையும் மன வாதைகளையும் தனது ஞானத்தாலும் அன்பினாலும் வெற்றி கொண்ட ஒரு மனிதன்; இது போன்ற துன்பங்களை தனது மக்கள் அனுபவிக்க கூடாது எனும் நோக்கில் நமக்கான வாழ்வியலை ஏன் நம் மொழியில் கலந்திருக்கக்கூடாது?

'மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்' இன்றுவரையிலும் நமது வாழ்வை செதுக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம் அல்லவா?

 எனவே இந்த நாவலில், சிவன் வழிபடப்பட வேண்டிய தெய்வமாக மட்டுமல்லாமல் ; அன்பையும் கருணையும் வெளிப்படுத்தி இயற்கையோடு இணைத்து வாழ வேண்டிய தேவையை மக்களுக்கு போதிக்கும் ஒரு ஞானியாக சித்தரித்துள்ளேன்.

இந்த நூலை வாசித்த பிறகு, தமிழர் நாகரிகத்தின் ஆழத்தையும் அறிவியல் மரபுகளையும் வாசகர்கள் புதிய பார்வையில் அணுக வேண்டும் என்பதே என் விருப்பம். நமது பாரம்பரிய அறிவை மூடநம்பிக்கையாகவோ, கண்மூடித்தனமான பக்தியாகவோ அல்லாமல், அறிவியல் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் அணுக வேண்டும். அதைவிட முக்கியமாக, சிவன் நமக்கு உணர்த்தியதாக நான் நம்பும் மையச் செய்தியான "அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துதல், இயற்கையுடன் இணக்கமாக வாழ்தல்" என்பதையே வாசகர்கள் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

3. இந்த நூலுக்கான ஆய்வின்போது உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய கண்டுபிடிப்பு எது?

இந்த நூலுக்கான ஆய்வில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகத் தோன்றிய பல்வேறு தகவல்களும் சான்றுகளும் ஒரு கட்டத்தில் இயல்பாக ஒன்றோடொன்று இணைந்து, கதையின் போக்கை வடிவமைக்கத் தொடங்கிய தருணங்கள்தான்.

என்னை நீண்ட காலம் சிந்திக்க வைத்த முக்கியமான தொல்லியல் புதிர்களில் ஒன்று, தென்னிந்தியா ஏன்/ எப்படி கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கு ஒப்பீட்டளவில் வேகமாக கடந்துவிட்டது என்பதாகும். உலகின் பல பண்டைய நாகரிகங்களைப் போல நீண்டகால செம்புக் காலம் அல்லது வெண்கலக் காலம் இருந்ததற்கான சான்றுகள் இங்கு குறைவாகக் காணப்படுகின்றன. செம்பு மற்றும் வெண்கல உலோகங்களை உருக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை நாகரிகங்கள் கண்டறிய முற்பட்ட பொழுது அவைகள் ஆர்சனிக் மற்றும் ஈய நச்சுத்தன்மை போன்ற பிரச்சினைகளை கடந்தே வந்திருக்கின்றன. விஷங்களை பற்றிய மேம்பட்ட அறிவைக் கொண்ட ஒருவரால் தான் இதன் தாக்கங்களை உணர்ந்து மக்களை நேரடியாக இரும்பு பயன்பாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதுவே, சிவனை உலோகவியல் மற்றும் நச்சியல் அறிவில் தேர்ந்த ஒரு நிபுணராகச் சித்தரிக்கும் என் புனைவின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக அமைந்தது.

 கங்கா சூடன், சந்திர சூடன், ஆலமர் செல்வன் என்னும் அடையாள பெயர்களை கொண்ட அவர், குளிரைநாடும் அழல் மிகுந்த உடலை கொண்டவராகவே இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். அழல் என்னும் வார்த்தை 'பித்தம்' என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. 'பித்தன்' என்றும் அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தனது உடலையே பரிசோதனை கூடமாக ஆக்கி, மேற்கூறிய மருத்துவ முறைகளை அவர் கண்டறிந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கின்றது. அழலைத் தவிர்ப்பதற்காகவே அவர் நிழல் மிகுந்த நிலங்களை/இடங்களை நாடி இருந்திருக்க வேண்டும் என்றும்... வெள்ளி போன்ற குளிர் தரும் உலோகங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் நான் கருதினேன். வெள்ளியை நீண்ட காலம் அணிந்திருப்பதால் சிவந்த தோல் உடையவர்களின் உடலில் நீல நிற கறையை அது ஏற்படுத்தக்கூடும். 'ஆர்ஜீரியா (Argyria)' என மருத்துவர்களால் அந்த அறிகுறி பெயரிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ உண்மை, 'நீலகண்டன்' என்ற புராணக் குறியீட்டிற்கு ஒரு கற்பனைமிக்க உயிரியல் விளக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. இவ்வாறு, மருத்துவ அறிவியலும் புராணக் கற்பனையும் என் நாவலில் இயல்பாக ஒன்றிணைந்தன.

மேலும், கர்நாடகத்தின் இரும்புக் காலப் பண்பாட்டைப் பற்றி ஆராய்ந்தபோது... குறிப்பாக 'சங்கனகல்லு', 'குப்பகல்' போன்ற இரும்புத் தாது வளமிக்க பகுதிகள், அங்குள்ள 'சாம்பல் மேடு (Ashmound)' தளங்கள், 'பீரப்பா' எனும் சிவனின் சகோதரரை பற்றிய நாட்டுப்புற கதைகள், காளைகள், திரிசூலத்தை ஒத்த கொம்புகள் மற்றும் மனித உருவங்கள் பொறிக்கப்பட்ட பாறை ஓவியங்கள், இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக என் கற்பனையில் இணைந்தன. அவை சிவனின் பயணத்திற்கான உயிரோட்டமிக்க பின்னணியை உருவாக்க உதவின.

என் மருத்துவப் பின்னணியும் பல பாரம்பரியச் சின்னங்களை புதிய கோணத்தில் அணுக உதவியது. 'வில்சன் நோய் (Wilson’s disease)', ஆர்சனிக் நச்சியல் போன்றவற்றைப் படித்தபோது, 'தட்சிணாமூர்த்தி', பேரானந்தத் தாண்டவம், மூலபந்தாசனம், பசுபதி முத்திரை உள்ளிட்ட பல சிவன் குறியீடுகளை மருத்துவ மற்றும் மனிதவியல் பார்வையுடன் கற்பனை ரீதியாக இணைக்க முடிந்தது.

 இதுவரையிலும் அவரை ஆன்மீக நோக்கில் மட்டுமே அவரை நாம் அணுகி இருக்கிறோம். சிவன் தொடர்பான பல குறியீடுகளை மருத்துவ ரீதியாக அணுகிய பொழுது, எப்பேர்பட்ட வாதைகளை அவர் சகித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகியது.

ஆனால், இவை அனைத்தையும் விட என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது வேறு ஒன்று. தொல்லியல், மருத்துவ அறிவியல், தமிழ் இலக்கியம், நாட்டுப்புற மரபுகள் ஆகியவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; வரலாற்றுப் புனைவின் பார்வையில் அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்யக்கூடியவை, என்பதை நான் உணர்ந்தேன் . அவை அனைத்தும் இணைந்தபோதுதான், தென்னிந்தியாவின் பண்பாட்டு மரபுகளில் ஆழமாக வேரூன்றிய, அதே நேரத்தில் கற்பனைக்கும் நடைமுறைக்கும் இடமளிக்கும் ஒரு கதையை என்னால் உருவாக்க முடிந்தது.

4. சிவனைப் பற்றிய பொதுவான நம்பிக்கைகள் அல்லது புராணக் கருத்துகளில், இந்த நூலை எழுதும் போது நீங்கள் மறுபரிசீலனை செய்தவை ஏதேனும் உள்ளதா?

ஆம். இந்த நாவலை எழுதும் முழுப் பயணத்திலும் என்னை தொடர்ந்து துரத்திய ஒரு கேள்வி இருந்தது.

"சிவன் உண்மையிலேயே அழிவின் கடவுளா?"

இந்தியாவின் பல வடமாநில மரபுகளில், சிவன் படைப்பு–காத்தல்–அழித்தல் என்ற அண்டச் சுழற்சியில் 'அழிவின் தெய்வமாக' விளக்கப்படுகிறார். ஆனால் தமிழ்ச் சிந்தனையில் நாம் அவரை அன்பின் வடிவமாகத்தான் பார்த்திருக்கிறோம். “அன்பே சிவம்” என்பதை நமது கொள்கை. 

 வட இந்திய மரபில் அவர் ஏன் அழிவின் கடவுளாக பார்க்கப்படுகிறார். 

அவர் உண்மையில் அழிவின் கடவுளா? 

 இந்திய மரபில் ஒரு சாரரின் அழிவுக்கு அவர் காரணமாக இருந்திருக்கிறாரா?
 இந்தக் கேள்விகளே என் நாவலின் முக்கியக் கருத்துகளில் ஒன்றாக மாறியது. அது குறித்து விரிவாக இரண்டாம் பாகத்தில் விவரிக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

அதேபோல், சிவலிங்க வழிபாடு பற்றியும் நான் புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினேன். அதனை வெறும் பாலியல் குறியீடாகப் பார்க்காமல், சிவனின் அனுபவித்த வாதையின்... அல்லது வாதைக்காக அவர் எடுத்த மருந்துகளின் பக்க விளைவாக இருந்திருக்கலாம்; பின்னாளில் அவை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைச் சாத்தியத்தை என் நாவலில் ஆராய்ந்துள்ளேன். அதிலிருந்து கதை மேலும் விரிந்து, ஆவுடைலிங்கம் எனும் எதிரெதிர் சக்திகளின் சமநிலையைக் குறிக்கும் ஆழமான தத்துவச் சின்னமாக உருவகப்படுத்தப்படுகிறது.

சிவன் இறுதியில் விரும்பியது என்னவென்றால், மக்கள் தன்னையே வழிபட வேண்டியதில்லை; மாறாக, தான் உணர்த்த விரும்பிய 'உலகளாவிய வாழ்வியல் நெறிகளை' நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதே. அந்தக் கோணத்தில், ஆவுடை லிங்கம் என்பது ஒரு வழிபாட்டுப் பொருளாக மட்டும் அல்லாமல், சமநிலை, படைப்பு, இணக்கம்... எல்லாவற்றிற்கும் மேலாக 'அன்பின்' குறியீடாக விளங்குகிறது என்று எனக்கு புரிய வந்தது .


என் விளக்கங்களுடன் அனைவரும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிவனைப் பற்றிய நாம் அறிந்த வழக்கமான கதைகளைத் தாண்டி, அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் தத்துவம், குறியீடுகள் மற்றும் மனிதநேயத்தை புதிய பார்வையில் சிந்திக்க இந்த நாவல் வாசகர்களை தூண்டும் என்று நம்புகிறேன்.

5. உங்கள் பார்வையில் சிவன் யார்? ஆன்மிக ஆசிரியரா, புரட்சிகர சிந்தனையாளரா, அல்லது கருணைமிக்க மனிதரா?

இவை அனைத்தும்தான்.

என் பார்வையில் சிவனை ஒரே ஒரு அடையாளத்திற்குள் அடைத்துவிட முடியாது.

அவர் ஒரு ஆன்மிக ஆசிரியர்.

அவர் ஒரு புரட்சிகர சிந்தனையாளர். 

அதே நேரத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு கருணைமிக்க மனிதர். 'அன்பே சிவம்’ என்ற தத்துவமே எனது நாவலின் மையக் கருத்தாகும். மனிதனின் உயர்ந்த ஆன்மிக நிலை என்பது அன்பும், கருணையும், அனைத்து உயிர்களிடமும் சமமான இரக்கமும் கொண்ட வாழ்க்கை வாழ்வதில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

அதனால்தான், என் நாவலில் சிவன் அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வமாக அல்ல; மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து, நோய்களை குணப்படுத்தி, அறிவைப் பகிர்ந்து, இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ வழிகாட்டும் ஒரு ஞானியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக சிவன் எண்ணற்ற வடிவங்களில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார். என் நாவல் அவற்றை மறுப்பதற்கான முயற்சி அல்ல; மாறாக, அன்பு, அறிவு, கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின்  அடையாளமாக சிவனை முன்னிறுத்தும் ஒரு முயற்சி.

6. கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படும் சிவனை மையமாகக் கொண்டு ஒரு நாவலை எழுதும்போது நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என்ன?

இந்த நூலை எழுதும்போது நான் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால், பக்திக்கும் கற்பனைக்கும் இடையில் சரியான சமநிலையைப் பேணுவதுதான். சிவன் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடனும் ஆன்மிக உணர்வுகளுடனும் இணைந்திருக்கும் உருவம். எனவே, அந்த நம்பிக்கையை முழு மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும் என்பதில் நான் எப்போதும் கவனமாக இருந்தேன்.

இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், நான் எனக்கே தொடர்ந்து நினைவூட்டிக்கொண்ட ஒரு விஷயம் "இது சிவனின் வாழ்க்கை வரலாறு அல்ல; தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு" என்பதுதான் அது.

அறிவியல் அல்லது வரலாற்று அடிப்படையிலான புதிய விளக்கங்களை நான் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், அவை வெறும் பரபரப்பையோ கிளர்ச்சியையோ  ஏற்படுத்துவதற்காக அல்லாமல், சிவனின் காலத்தைத் தாண்டி நிற்கும் தத்துவங்களான அன்பு, கருணை, ஞானம், இயற்கையோடு இணக்கம் ஆகியவற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறதா?என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். அந்தக் கேள்வியே என் எழுத்திற்கு வழிகாட்டியாக இருந்தது.

என் நோக்கம் யாருடைய நம்பிக்கையையும் மறுப்பதோ, மாற்றுவதோ அல்ல. மாறாக, தமிழர் பண்பாட்டு மரபுகள், வரலாறு மற்றும் அறிவியல் சிந்தனையின் வெளிச்சத்தில் சிவனைப் பற்றிய ஒரு புதிய இலக்கியச் சாத்தியத்தை வாசகர்களுக்கு முன்வைப்பதே. வாசகர்கள் இந்த நாவலை "சிந்தனையைத் தூண்டும் ஒரு மாற்றுப் பார்வையாக" ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இறுதியில், இந்த நூல் பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. அவற்றுக்கிடையே ஒரு இணக்கமான உரையாடலை உருவாக்குவதற்காகவே எழுதப்பட்டது. அந்த உரையாடலே, நம் பாரம்பரியத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

7. இந்த நாவலில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான, எழுதும்போது அதிக நிறைவை அளித்த அத்தியாயம் எது?

எனக்கு மிகவும் நிறைவை அளித்த அத்தியாயம் 'ஓங்காரன்'

இந்தப் பகுதியில், சிவன் ஒரு தெய்வமாக அல்ல; இயற்கையின் ஒலிகளைக் கேட்டு, அவற்றின் ஒழுங்கை உணர்ந்து, மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஞானியாக வெளிப்படுகிறார். 
எழுதிக்கொண்டிருந்தபோதே பல முறை என்னை சிந்திக்க வைத்த அத்தியாயமும் இதுவே. ஏனெனில், இதில் புராணம், தமிழ் மரபு, மனிதப் பரிணாமம், மொழியின் தோற்றம் மற்றும் ஆன்மிகச் சிந்தனை ஆகியவை இயல்பாக ஒன்றிணைகின்றன.


8. சிவனைப் பற்றி இவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து, இந்த நாவலை எழுதிய பிறகு, ஆன்மிகம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?

நிச்சயமாக. இந்தப் பயணம் என்னுள் ஏற்படுத்திய மிகப் பெரிய மாற்றம்  ஜீவகாருண்யத்தை  பற்றிய எனது புரிதல்தான்.

தமிழ் இலக்கியங்கள், சித்த மருத்துவ மரபுகள், தொல்லியல் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் வழியாக சிவனைப் புரிந்துகொள்ள முயன்றபோது, அவர் ஒரு தெய்வமாக மட்டுமல்ல, உயிர்களின் துயரத்தைப் போக்க வந்த ஒரு மகத்தான மருத்துவரின்  உருவகமாகவும் எனக்குத் தோன்றினார். என் கற்பனையில், அவர் மனிதர்களுக்கான மருத்துவராக மட்டுமல்லாமல்; விலங்குகளையும்  கருணையுடன் குணப்படுத்திய முதல் கால்நடை மருத்துவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 

சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் வெளிப்படுத்தும் ஆழமான மருத்துவ அறிவைப் படித்தபோது, இத்தகைய மருத்துவ மரபுகளுக்கு ஊக்கமாக இருந்த மனிதர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்று நான் சிந்தித்தேன். என் மனதில் தோன்றிய பதில் மிகவும் எளிமையானது ' அவர் உயிர்களின்  மீது அதீத ஜீவகாருண்யம்  கொண்ட ஒருவர்.'

ஏனெனில், ஒரு உயிரின் வேதனையை உணராமல், அதை குணப்படுத்த முடியாது. அந்த உணர்வே, கால்நடை மருத்துவராக என்னுடைய பணியையும் மாற்றியது.

  இந்தியாவின் இரு பெரும் மொழிக் குடும்பத்திற்கு அடித்தளமான இலக்கணத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர். இருந்த போதிலும் விலங்குகளோடு பழகிய அவர் அவைகளுடன் வார்த்தைகள் மூலம் உரையாடாமல் அவைகளின் மௌனத்தை மொழிபெயர்த்து அவற்றின் துன்பத்தின் வேர்களை நாடி இருக்க வேண்டும். விலங்குகளால் தங்கள் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது; எனவே, அவற்றின் மௌனத்தைக் கேட்பதே ஒரு கால்நடை மருத்துவரின் மிகப் பெரிய பொறுப்பு என்று அவரது வாழ்வியலின் வழி நான் நம்புகிறேன்.

இந்தப் பயணத்திற்குப் பிறகு, ஆன்மீகத்தைப் பற்றிய எனது புரிதல் முற்றிலும் மாறிவிட்டது. ஆன்மீகம் என்பது  அற்புதங்களோ அதிசய சக்திகளோ அல்ல. மற்றொரு உயிரின் துயரத்தை உணர்ந்து, அதற்குக் கருணையுடன் பதிலளிக்கும் திறனே உண்மையான ஆன்மிகம் என்று நான் இன்று நம்புகிறேன். சித்த மரபுகள் கூறுவதுபோல், கருணையே ஞானத்தின் முதல் படி என்பதன் அர்த்தத்தை இந்த நூலை எழுதிய பிறகுதான் நான் இன்னும் ஆழமாக உணர்ந்தேன். 

என் நாவலில் சிவனைப் பற்றிய விளக்கங்களை வாசகர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் இந்த ஒரு செய்தியை மட்டும் மனதில் கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்:

'ஒவ்வொரு குணப்படுத்தலும் ஜீவகாருண்யத்தில் இருந்தே  தொடங்குகிறது. மற்றொரு உயிரின் வேதனையை உணரும் அந்தத் திறன்தான் மனிதனின் உயர்ந்த ஆன்மிக நிலை.'

9. பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து இந்த நூலை வாசகர்களிடம் கொண்டு சென்ற பயணம் எப்படி இருந்தது? அந்த அனுபவம் ஒரு எழுத்தாளராக உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது?

"பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்துடன் எனது பயணம் மிகவும் இனிமையானதும் நிறைவானதுமான  இருந்தது." ஆரம்பத்திலிருந்தே அவர்கள் இந்த நூலை மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் அணுகினர். வரலாறு, தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபுகள், மருத்துவ அறிவியல் மற்றும் புனைவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த நாவலை வாசகர்களிடம் அழகாகவும் தரமாகவும் கொண்டு சேர்ப்பது, அதை எழுதுவதற்குச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக, நூலின் தயாரிப்புத் தரம் என்னை மிகவும் கவர்ந்தது. அட்டைப்பட வடிவமைப்பு நாவலின் ஆன்மாவை அழகாக வெளிப்படுத்துகிறது. அச்சுத் தரம், காகிதத்தின் தரம், பக்க வடிவமைப்பு என அனைத்தும் வாசகர்களுக்கு ஒரு உயர்தர வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. அச்சில் வெளிவந்த என் நூலை முதன்முறையாக கையில் எடுத்த தருணம், ஒரு எழுத்தாளராக எனக்கு மறக்க முடியாத பெருமையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது.

இன்றைய பதிப்புலகில், ஒரு நல்ல நூலை எழுதுவது பயணத்தின் பாதி மட்டுமே. அந்த நூல் சரியான வாசகர்களைச் சென்றடைவதுதான் மீதிப் பயணம். அந்த வகையில், நூலின் விளம்பரம், அறிமுகம் மற்றும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் பேப்பர் டவுன்ஸ் பதிப்பகம் எடுத்த அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. 

 மிகுந்த தொழில்முறைத் திறனுடனும் அக்கறையுடனும் வாசகர்களிடம் கொண்டு சென்ற 'பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்திற்கு' எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிறைவுரை:

இந்த உரையாடலின் வழியாக, ஆதியோகி நாவல் ஒரு புராணக் கதையின் மறுபதிப்பு மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. வரலாறு, தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவத் தத்துவம், அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் வழியாக சிவனை அணுகும் ஒரு இலக்கியப் பயணமாக அது அமைகிறது.

வாசகர்கள் சிவனை கடவுளாகக் கண்டாலும், ஞானாசிரியராகக் கண்டாலும், மகத்தான வைத்தியராகக் கண்டாலும், அல்லது வரலாற்றில் வாழ்ந்த பேரறிவாளராகக் கண்டாலும், இந்த நாவல் எடுத்துரைக்கும் மையச் செய்தி ஒன்றே:

 "அன்பே சிவம்"

 இந்த நூலை அனைவரும் கட்டாயம் வாசித்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

 உங்கள் பிரதியை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்!




Thursday, July 9, 2026

உணவு எந்திரம்

“கொக்கரக்கோ…”

அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான்.

“பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்தத்தை அலாரமா வைச்சிருக்க?” என்றான் சோம்பல் முறித்தபடி.

பாட்டி புன்னகைத்தாள். “ இது ஒரு பறவையின் குரல். அந்த காலத்தில் இந்தப் பறவைதான் எங்களை எழுப்பும். மிருகக்காட்சிசாலையில் தலையில் கொண்டை வைத்த    பறவை ஒன்றை பார்த்தியே… அதன் குரல் தான் இது .”

முருகன் உடனே Food App-ஐ திறந்து, பிரீமியம் செக்‌ஷனுக்குப் போனான். அங்கு “Heritage lab meat” என்னும் வார்த்தைகள்  பளிச்சென்று இருந்தது.

 அதில் பறவை மாமிசம் என்னும் பிரிவின் பிரீமியம் பகுதியில் அந்த சேவல் படம் இருந்தது.

 அந்த அட்டவணையின் கடைசியில் இருந்தது Standard Protein Tissue. அதுதான் அவர்கள் வழமையாக உண்ணும் இறைச்சி.

 அதன் கீழ் இவ்வாறு அச்சிடப்பட்டிருந்தது 

Protein: 24 g

Fat: 8 g

Zero pathogens

 முருகன் ப்ரீமியம் கேட்டகிரியின் கீழ் இருந்த சேவலின் படத்தை கிளிக் செய்தான்.

Original Aseel flavour 

Omega-3 Enriched 

Micronutrient Edition

Heritage Nutrition Series

Natural Myoglobin Premium

 என்று புரியாத வார்த்தைகளில் அதன் கீழ் எழுதியிருந்தது.

 அந்த மாமிசத்தின் விலை ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாதச் சம்பளத்தைவிட அதிகம்.

 ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது முருகன் அவனது தந்தையிடம் அதை வாங்கச் சொல்லி கேட்பான். அவனது அப்பா எப்பொழுது கேட்டாலும் கூறும் அதே பதிலை மந்திரம் போல் திரும்ப உச்சரிப்பார்.

"அடுத்த தீபாவளிக்கு வாங்கலாம்..."

 தீபாவளி ஆண்டுதோறும் வந்தது; ஆனால் அந்த உணவு அவர்களது மேசைக்கு ஒருபோதும் வந்ததில்லை.

 சேவலின் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முருகனின் தலையை பாட்டி மெலிதாக கோதிவிட்டபடி பேசத் தொடங்கினார், " முன்பு இந்த கிராமம் பசுமையாக இருந்தது, எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு மாடாவது இருந்தது."

"உண்மையான மாடா?" என்று ஆச்சரியத்துடன் முருகன் கேட்டான்.

"ஆமாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு. சில கோழிகள். குறைந்தபட்சம் இரண்டு ஆடுகள்."

 பாட்டி ஜன்னலுக்கு வெளியே பரந்து விரிந்திருந்த பழுப்பு நிற நிலப் பகுதியைக் காட்டினாள்.

 "அங்கே ஓர் சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது, அதில் பூவரச மரத்தின் பூக்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் அருகே இருந்த  வரப்பின் மீது பசுமையான புற்கள் இருந்தன. அதன் மீது  வெறும் கால்களுடன் நாங்கள் நடப்போம்.  நடக்கும் போது பாதத்தின் மீது ஜில்லென்று பனித்துளிகள்  படும் உணர்வு மிகவும் அலாதியானது." 

பேசிக்கொண்டே  நானும் பாட்டியும் காய்ந்து கிடந்த அந்த நிலத்தினை அடைந்தோம்.

"ஒரு காலத்தில் இந்த மண்ணுக்கு உயிர் இருந்தது ."

"அதன் பின்னர்  என்ன ஆனது?"

"மக்கள் கால்நடைகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டார்கள். விலங்குகள் இல்லாமலேயே இறைச்சி தருகிறோம் என்று ஆய்வகங்கள் வாக்குறுதி கொடுத்தபோது, மக்கள் தங்கள் மாடுகளையெல்லாம் விற்றுவிட்டார்கள். மாடுகள் மறைந்த பிறகு சாணம் இல்லாமல் போனது. உரமாகும் மக்கும் பொருட்கள் இல்லாமல் போனது."

"மண்புழுக்கள் மறைந்துபோயின.சாண வண்டுகள் காணாமல் போயின."

" மண்ணின் பசிக்கு உணவு இல்லாமல் போனது.மண் செயலிழக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் விளைச்சலில் எந்தக் குறையும் தெரியவில்லை. அதன் பின்னர்  தொழிற்சாலைகள் இரசாயன உரங்களைத் தயாரித்தன."

" பின்னர் மேலும் அதிகமாக மண்ணில் உரம் இடப்பட்டது.

அதன்பிறகு இன்னும் வீரியமான உரங்கள்...

பயிர்கள் வளர்ந்தன...

ஆனால் அவற்றின் கீழிருந்த மண் மெதுவாக உயிரை இழந்தது.  கடைசியில் இந்த மண்  வெறுமனே செடியை தாங்கி நிற்கும் ஒரு ஜடப் பொருளாக மாறியது; "

"நான் சிறுமியாக  இருந்தபோது, உன் கொள்ளுத்தாத்தா கோழிகளை வீட்டுத் தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றவிடுவார். அவை பூச்சிகளைத் தின்றன...மண்ணைக் கிளறின... எச்சமிட்டன."

"எங்கள் தோட்டக் காய்கறிகளின் சுவை மிக அலாதியாக  இருந்தது. முட்டைகளின் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. பண்டிகையின் போது சமைக்கப்படும் கோழியின்..."அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

"அது சமைக்கும்போது வீசிய மணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. உணவோடு சேர்த்து எனது அன்னை அன்பையும் பரிமாறினாள்... நான் இருக்கும் இதே பூமி உயிர்களாலும் அன்பாலும் இணைந்து பிணைந்து இருந்தது. "

 "உனது கொள்ளுத் தாத்தாவிடம் பெரிதாக பணப்புழக்கம் இருந்ததில்லை. இருப்பினும் நாங்கள் இப்பொழுதைக் காட்டிலும் அப்போது திருப்தியாக உண்டோம். மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களைச் சுற்றி இருந்தது."

"அப்போது யாரும் ஒமேகா–3 பற்றி பேசியதில்லை ."

"செலினியத்தின் அளவை யாரும் கணக்கிடவில்லை."

"வைட்டமின் K₂ எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளக்கவில்லை."

"உயிருள்ள மண்ணிலிருந்து வந்த உணவைச் சாப்பிட்டோம். அவ்வளவுதான்."

"மனித உடலுக்குத் தேவையான அனைத்தும் அதில் இருந்தன.

 ஆனால் இப்பொழுது நாம் உண்ணும் உணவில், மருத்துவர்கள் தொடர்ந்து புதிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர்.

இயற்கை, மனிதனால் இன்னும் கண்டறிய முடியாத எண்ணற்ற நன்மைகளை  நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அது நமக்கு  வழங்கியதை எந்த ஒரு தொழிற்சாலையாலும்  ஈடு செய்ய முடியாது." பேசிக்கொண்டே பாட்டி  ஒரு கைப்பிடி உலர்ந்த மண்ணை எடுத்தாள்.

" நாம் இழந்தது வெறும் உயிரினங்களை மட்டுமல்ல... நம்மை உயிரோடு வைத்திருந்த சூழலையும் இழந்து விட்டோம். " என்று கூறியபடி அவள் மண்ணை விரல்களுக்கிடையே நசுக்கினாள்.

" கால்நடைகள் உணவை மட்டும் உற்பத்தி செய்ததாக நாம் நினைத்தோம். உண்மையில் அவை உயிர்ப்பு மிக்க மண்ணை உருவாக்கிக்கொண்டிருந்தன." 

"மண் உயிரை இழந்தபோது... அனைத்தும் நம் கையை விட்டுச் சென்று விட்டது ."

அவள் கையில் இருந்த மண் தூளாக உதிர்ந்து காற்றில் கலந்தது.

ஐயா பாமயன் எழுதிய 'உணவு எந்திரம் ' புத்தகத்தை படித்த தாக்கத்தால் எழுதிய கதை இது. இயற்கையின் சுழற்சி முறையைப் புறந்தள்ளி, நேர்கோட்டு வளர்ச்சியே உண்மையான முன்னேற்றம் என்று உலகை நம்பவைக்கும் கார்ப்பரேட் அமைப்புகளின் அடுத்த இலக்கு... தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாமிசமும் பாலும்.

பற்பசை, சோப்பு போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் தொடங்கி நம் தற்சார்பை நாம் ஏற்கனவே நமது வாழ்வியலில் பெரும் அங்கு இழந்துவிட்டோம். ஆனால் உணவின் தற்சார்பை இழப்பதே நம் சமூகத்தின் மீது விழவிருக்கும் மிகப் பெரிய இறுதி அடியாக அமையக்கூடும்.

"உயிர்களைக் கொல்லாத மனிதநேயம்", "உணவுப் பாதுகாப்பு", "சுற்றுச்சூழல் பாதுகாப்பு", "மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல்" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களால் அலங்கரிக்கப்பட்ட ஜிகினா காகிதத்தில் சுற்றி, சந்தைக்குள் நுழையக் காத்திருப்பவை செயற்கை இறைச்சியும் செயற்கை பாலும். இவ்வாசகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும், அதன் சமூக, பொருளாதார, வேளாண் விளைவுகளையும் இந்த நூல் ஆழமாக ஆராய்கிறது.

தற்போதைய பால் மற்றும் மாமிச உற்பத்தி, அவற்றின் பயன்பாடு, செயற்கை மாற்றுகளால் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கால்நடை வளர்ப்பிலும் வேளாண்மையிலும் நிகழக்கூடிய மாற்றங்கள், சுற்றுச்சூழலின் மீதான விளைவுகள் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக அலசுகிறது இந்த நூல்.

இது விவசாயிகளுக்கான நூல் மட்டுமல்ல. அறிவியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்தவர்கள், கொள்கை வகுப்போர், மேலும் உணவு குறித்து அக்கறை கொண்ட ஒவ்வொரு நுகர்வோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

வேப்பங்குச்சியிலிருந்து மண்பானை வரை நம் கைகளிலிருந்து நழுவிச் சென்றவற்றின் பட்டியலில், உணவும் சேர்ந்துவிடக் கூடாது. கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் நம் உணவுத் தட்டை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கு முன்பே, அந்த ஆபத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த நூல் அதிகமான வாசகர்களைச் சென்றடைய வேண்டும். அது ஒரு புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல; நமது உணவுச் சுதந்திரத்தைப் பற்றிய ஒரு முக்கியமான சமூக உரையாடலின் தொடக்கமாகவும் அமையும்.


ஆசிரியர்: பாமயன் Pamayan 

வெளியீடு: தாளாண்மை

விலை: ரூ. 120/-

தொடர்புக்கு:

செகதீசன் கிருஷ்ணன்

9842048317


Monday, July 6, 2026

ஏர் முன்னது எருது 12 - பித்தம்


இந்தப்படத்தை பாருங்களேன்!

இந்தப் பட்டாம்பூச்சி ஏன் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது?


இந்த மீனும் பல்லியும் ஏன் நிழலை நாடுகின்றன?

இந்த உயிரினங்களுக்கு வெயில் சூட்டுக்கு ஏற்ப உடல் வியர்க்குமா?

உங்களுக்கு குளிரில் உடல் நடுங்குகிறதே, அதே போல் இவற்றிற்கும் உடல் நடுங்குமா?

மழைக்கு ஒதுங்கிய இந்த  அந்துப்பூச்சிக்கு உடல் நடுக்கம் ஏதுமில்லையே?

மழைக்கு உடல் ஜில்லிட்டு, உடல் சூடு குறைந்து இது இறக்க நேரிடுமா?

உடல் சூடு என்பது என்ன?

உனக்கு சூடு சுரணை ஏதாவது உண்டா என கேட்கிறார்களே, சூட்டுக்கும் சுரணைக்கும் என்ன சம்பந்தம்?

சூடு கொண்ட உடலாக இருப்பதன் பயன் என்ன?

உடல் சூடு எங்கிருந்து பெறப்படுகிறது? 

அடுப்பு எரிப்பது போல் உடலுக்குள் ஏதேனும் தகனம் நடக்கிறதா?

--------

"உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீ சுடரிய ஊழியும்
பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்."

— பரிபாடல்

நமது முன்னோர்கள் இயற்கையை ஐம்பூதங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டனர். 

ஐம்பூதங்கள் :

விலகி அசைவது காற்று; கரைத்து எடுத்துச் செல்வது நீர் ; அனைவரையும் தாங்குவது நிலம்; பரந்து விரிந்தது ஆகாயம்; ஆற்றலை வெளிப்படுத்துவது நெருப்பு. 

இந்த மாற்றங்கள் அனைத்தின் மையத்தில் இருப்பது வெப்பமாகும். விதை முளைப்பதிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்வது வரை, செல்களில் உள்ளே நடக்கும் வேதிவினைகளிலிருந்து  புவியியல் நிகழ்வுகள் வரை வெப்பத்தின் பங்கு உள்ளது.

நெருப்பை கட்டுப்படுத்தி பயன்படுத்தக் கற்றது முதல்தான் மனித இனம் தனது முன்னேற்றத்தைத் தொடங்கியது. 

நெருப்பு உணவைச் சமைத்தது; நோய்க்கிருமிகளை அழித்தது; இருளை அகற்றியது; குளிரிலிருந்து பாதுகாத்தது; உலோகங்களை உருக்கியது. 

வெப்பம்:

இதே வெப்பம் தான் உயிரினங்களின் உடலிலும் இடைவிடாமல் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவானது உடலில் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இந்த வளர்சிதை மாற்றங்களின் போது உருவாகும் வெப்பம் தான் நமது உடலின் செயல்பாடுகளை நடத்துகிறது. இதயத்தின் துடிப்பு, தசைகளின் இயக்கம்,  செரிமானம், போன்ற அனைத்திற்கும் வெப்பம் மிகவும் அவசியம். எனவே நமது உடல் வெப்பத்தை தொடர்ந்து உருவாக்கி, பயன்படுத்தி, கட்டுப்படுத்தும் ஒரு இயக்கமிகு அமைப்பாகும்.

உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன; குருதியானது அந்த வெப்பத்தை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அதிகப்படியான வெப்பத்தை உடலானது மூச்சு, வியர்வை போன்றவற்றின் மூலம் வெளியேற்றுகிறது. இவ்வாறாக வெளிப்புற சூழலுக்கு ஏற்ப உடல் தனது வெப்பநிலையை தொடர்ந்து சரிசெய்துக்கொள்கிறது. இந்த  சமநிலையே உயிர் வாழ்வின் அடிப்படையாகும்.

உடலின் வெப்பத்தைத் தாமாகவே உருவாக்கும் திறன் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். தவளைகள் போன்ற இருவாழ்விகள், மீன்கள், பெரும்பாலான ஊர்வன மற்றும் பெரும்பாலான பூச்சிகள் சுற்றுப்புற வெப்பத்தையே சார்ந்து வாழ்கின்றன. இதனால் அவற்றிற்கு குறைந்த உணவே போதுமானதாக இருக்கிறது; எனவே அவற்றால் நீண்ட நாட்கள் உணவின்றி உயிர்வாழ முடியும். ஆனால் குளிரான சூழலில் அவற்றின் தசைகள் - நரம்புகள் போன்றவற்றின் செயல் வேகம், செரிமானம் மற்றும் உடலின் அனைத்து செயல்பாடுகளும் மந்தமடைகின்றன. அதனால் அவை குறைவாக நகரும், அவற்றின் வேட்டையாடும் திறனும் குறையும், இனப்பெருக்கமும் வளர்ச்சியும் மெதுவாகும். 

தவளைகள் குளிர்காலத்தில் சுறுசுறுப்பை இழக்கின்றன; பல்லிகள் வெயிலில் காய்ந்து உடல் வெப்பத்தை உயர்த்திக்கொள்கின்றன; பெரும்பாலான மீன்களின் நீந்தும் வேகமும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்தே அமைகிறது. பூச்சிகளும் குளிர் இரத்தப் பிராணிகளே; இருப்பினும் தேனீக்கள், வண்டுகள் போன்ற சில பூச்சிகள் பறப்பதற்கு முன் தங்களின் பறக்கும் தசைகளை அதிரவைத்து தற்காலிகமாக வெப்பத்தை உருவாக்குகின்றன. 

 வேகமாக நீந்தும் சில சுறாக்கள் உடலின் சில பகுதிகளை சுற்றுப்புற நீரை விட வெப்பமாக வைத்துக்கொள்ளும் திறனை பரிணாம வளர்ச்சியில் பெற்றன.இதன் காரணமாக அவற்றால் குளிர்சூழலில் அதிகம் நகராமலிருந்த மற்ற உயிரினங்களை எளிதாக வேட்டையாட முடிந்தது.

இதற்கு மாறாக, பறவைகளும் பாலூட்டிகளும் அதிக வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பத்தை எப்போதும் நிலையாக வைத்திருக்கின்றன. இதனால் அவற்றின் தசைகள் வேகமாகச் செயல்படுகின்றன; நரம்புத் தகவல்கள் விரைவாகக் கடத்தப்படுகின்றன; செரிமானமும் நோய் எதிர்ப்பும் திறம்பட நடைபெறுகின்றன. எனவே பகல், இரவு, கோடை, குளிர்காலம் என்ற வேறுபாடின்றி தொடர்ந்து இயங்கி, வேட்டையாடி, நீண்ட தூரம் இடம்பெயர்ந்து, குட்டிகளைப் பராமரித்து, துருவப் பகுதிகளிலிருந்து பாலைவனங்கள் வரை பல்வேறு வாழிடங்களில் இவற்றால் வெற்றிகரமாக வாழ முடிகிறது.  இதன் காரணமாகவே இவை வெப்ப இரத்தப்பிராணிகள் எனப்பட்டன. 

இவ்வாறாக பரிணாமத்தில் இரண்டு வெற்றிகரமான உத்திகள் உருவாகின: குறைந்த ஆற்றலைச் செலவழித்து சுற்றுப்புற வெப்பத்தைச் சார்ந்து வாழும் குளிர் இரத்த முறை, மற்றும் அதிக ஆற்றலைச் செலவழித்தாலும் தொடர்ந்து உயர் செயல்திறனுடன் வாழ வழிவகுக்கும் வெப்ப இரத்த முறை.

பித்தம்:

இப்பொழுது நாம் சித்த மருத்துவம் கூறும் பித்தம் எனும் கருதுகோளைப் பற்றி பார்ப்போம்.

பித்தம், தூய தமிழில் 'அழல்' என்று அழைக்கப்படுகிறது. அழல் என்றால் சூடு என்று நாம் அறிவோம்.

 உணவின் முதல் நோக்கம் எரிசக்தி. இதில் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டவை. புரதம் உடலின் கட்டுமானத்திற்கு உதவுகிறது, ஒரு நாளைக்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

புரதத்தின் முதன்மை பணி கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு. ஆனால் தேவைக்கு அதிகமான புரதத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதன் அமினோ அமிலங்கள் உடைக்கப்பட்டு, மீதமுள்ள கார்பன் அமைப்பு எரிக்கப்பட்டு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

 அமினோ அமிலங்களில் இருக்கும் நைட்ரஜன் யூரியாவாக சிறுநீர் வழி வெளியே தள்ளப்பட்டு விடுகிறது. மீதம் இருக்கும் மூலக்கூறுகள் உடலுக்கு எரிசக்தியாக பயன்படுகிறது. 

இந்த உடல் சூடு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை   கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேதிவினை செயல்பாடு விளக்குகிறது. சர்க்கரை ஆக்சிஜனோடு வினைபுரிந்து கார்பன்டையாக்சைடாக உடைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுவதை இந்த வேதிவினை விளக்குகிறது.

உணவை ஆற்றலாக எரிப்பதில் தகனமேடையாம் மைட்டோகாண்ட்ரியா தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பின்வரும் படத்தைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். 

நீங்கள் பட்டினியாய் இருக்கும் போது glycogen  அதன் பின்பு கொழுப்பு முதலியன தகனமேடையாம் மைட்டோ கான்ட்ரியாவில் எரிக்கப்பட்டு, ஆற்றலாம் அழலை உற்பத்தி செய்து, உடல் சூட்டைப்பேணுகின்றன. 

ஒரு கிராம் கார்ப், அல்லது ஒரு கிராம் புரதம் எரிக்கப்படும் போது 4 கிலோ கலோரி ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் ஒரு கிராம் கொழுப்பை எரித்தால் 9 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. சிறுகுடலில் கணைய மற்றும் பித்த நொதிகள் துணையுடன் தான் ஆற்றல் மூலக்கூறுகள் பிரித்து உறிஞ்சப்பட்டு பின் தகனம் நடக்கிறது. எனவே மேற்கூறிய நொதிகள்தான் தகனத்தின் அடிப்படை. ஆதலால் அழலில் குறியீடாக பித்தம் குறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

உணவானது உணவுப் பாதையில் பயணிக்கும் பொழுது சிறு குடலுக்கு அருகில் மஞ்சள் நிற திரவம் கலக்கிறது என்பதை பிணங்களை அறுத்து ஆய்வு செய்தால் யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம். வெள்ளை நிற பரோட்டா வாய் வழியாக சென்று பின்னர் மஞ்சள் நிற மலமாக வெளியேறுவதற்கு அந்த மஞ்சள் நிற திரவமே காரணம் என்பதை எளிதாக அறிந்து விடலாம். இதை அக்காலத்தில் தமிழர்கள் கண்டுபிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால் சித்தர்கள் எனப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகளை உண்டால் பித்தம் அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அந்த உணவுகளில் ஐந்து பூதங்களின் எவற்றின் சாராம்சம் மிகுந்து இருக்கிறது என்பதையும் பகுத்து இருக்கிறார்கள். எந்தெந்த சுவை பித்தத்தை தூண்டும் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இங்குதான் சித்த மருத்துவம் ஒரு மேம்பட்ட அணுகு முறையை கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.  

நவீன அறிவியல் 'குறைப்பியம்' என்னும் முறையை கையாள்கிறது. இது பகுப்பாய்வை ஊக்குவிக்கிறது. 'பகுப்பாய்வு அறிவியல்' அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாக பார்க்கச் சொல்கிறது. அது உடலையும் எந்திரமாகத் தான் பார்க்கிறது. 

அது உடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய்கிறது. ஆனால் சித்த மருத்துவம் உடலை முழுமையான ஒன்றாக அணுகுகிறது. எதையும் குறைக்காமல் விளக்காமல் முழுதாக அணுகும் முறைக்கு 'முழுமை' - wholeness என்று பெயர்.

சித்த மருத்துவம் உடலையும், உணவையும், உலகையும் ஐம்பூதங்களின் கலவையாகத்தான் பார்க்கிறது. அண்டத்தில் இருப்பதைக் கொண்டு வளர்ந்த உயிர் மற்றும் உணர்வினை கொண்ட பூதமாகத்தான் உடல் இருப்பதாக சித்த மருத்துவம் கருதுகிறது.

"உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 

அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்- மணிமேகலை"

அந்த உடலில் இருக்கும் மூன்று குற்றங்களில் ஒன்றான அழலைப் பற்றித்தான்  நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சூரியன் உற்பத்தி செய்த அதே வெப்பம் தான்; செடிகள் வழியாக உங்களை அடைந்து உங்கள் உடலில் அழலாக இருக்கிறது.

 அழல்  செரிமானத்தோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் உதவியுடன் உணவை செரித்துப்பெறப்படும் ஆற்றலே அழல் எனப்படுகிறது. எனவே உணவை ஆற்றலாக மாற்றும் முழு மாற்றச்செயலின் குறியீடாக பித்தத்தை பார்க்கலாம். 

சித்தமருத்துவம் கூறும் பித்தம் என்பது உடலின் மூன்று தோஷங்களில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று. 'பித்தம் அடங்கிடில் பேசாமல் போய்விடு' என மருத்துவரை எச்சரிக்கிறது சித்தமருத்துவம்.உடல் சூடு அவ்வளவு முக்கியம்.இதன் முக்கிய பண்புகள் சூடு, கூர்மை, மாற்றம் (வளர்சிதை மாற்றம்), செரிமானம், பசி,அறிவின் தெளிவு ஆகியவையாகும். பித்தத்தின் இயல்பு நெருப்புத் தன்மையுடன் தொடர்புடையது. அதனால் பித்தம் அதிகரித்தால் உடலில் வெப்பம் அதிகமாக உணரப்படலாம், வாய்ப்புண், கண் எரிச்சல், அதிக தாகம், மஞ்சள் நிற உடல் மாற்றம், எரிச்சல், கோபம், B.P போன்ற அறிகுறிகள் தோன்றலாம். (இதைத்தான் நமது மக்கள் சூடு சுரணை என்கின்றனர் போலும்). 

அதாவது கழுத்துக்கு கீழே தொடங்கி; தொப்புளுக்கு மேலே இருக்கும் பகுதி வரையில் இருக்கும் உருப்புகள் பித்தத்தின் தொடர்பில் உள்ளவை. செரிமானம் மற்றும் இதயம் சம்பந்தமான கோளாறுகள் முதலியவை இதற்குக் கீழ் வருகின்றன.

எந்தப்‌ பொருளானது புசிக்கப்பட்டு அது சீரணமாகும் போதோ அதற்குப்பின்னரோ   வயிற்றை புரட்டல், வாந்தி, புத்திமாறுதல்‌ முதலியவற்றை ஏற்படுத்துகிறதோ  அவற்றை பித்தப்  பொருளென்பர்‌. 

உப்பும் கசப்புமே பித்தத்தை தூண்டுவன என்கிறது சித்த மருத்துவம். உப்பானது நீர், தீ  எனும் இரண்டு பூதங்களின் கலவை. கசப்பு என்பது வளி, விண் ஆகிய பூதங்களின் கலவை. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள். எனவே இனிப்பும் பித்ததோடு தொடர்புடையதாகிறது. இதுதான் பித்தத்தோடு தொடர்புடைய சித்த மருத்துவ அனுமானங்கள். 

சித்த மருத்துவத்தின் இந்த கருத்துக்களை தற்போதைய அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
------

நாமெல்லாம் வெப்ப இரத்தப் பிராணிகள். நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். அதற்குக் கீழே போனாலும் பிரச்சனை தான், மேலே போனாலும் பிரச்சனை தான்.

 வெளியே பத்து டிகிரி குளிர் இருந்தாலும் உடல் எவ்வாறு முப்பத்தியேழு டிகிரியில் இருக்கிறது என்றால் தைராய்டு ஹார்மோன் தான் காரணம்.  உடலின் கொழுப்பையோ கிளைக்கோஜன் போன்ற சர்க்கரை மூலக்கூறுகளையோ எரித்து; அது உடலின் வெப்பநிலையை நிலை நிறுத்துகிறது.

உடலின் வெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதில் தைராய்டு ஹார்மோன்கள் மட்டுமல்ல, உடலில் இருக்கும் ஒரு சிறப்பு கொழுப்பு திசுவும் (Brown fat – பழுப்பு கொழுப்பு) பங்கு வகிக்கிறது.

நாம் பொதுவாக கொழுப்பை உடலின் சேமிப்பு கிடங்கு என்று நினைக்கிறோம். ஆனால் பழுப்பு கொழுப்பு ஒரு சிறிய “அக்னிக்கூடு” போல செயல்படுகிறது. குறிப்பாக குளிர்ச்சியான சூழலில், இது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது.

நமது செல்களின் உள்ளே இருக்கும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) என்பவை உணவிலிருந்து கிடைக்கும் மூலக்கூறுகளை எரித்து ATP எனப்படும் ஆற்றலை உருவாக்கும் தகன மேடைகள் போன்றவை. ஆனால் பழுப்புக் கொழுப்பில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாக்களில் ஒரு சிறப்பு செயல்முறை உள்ளது. இதற்கு “மைட்டோகாண்ட்ரியல் இணைப்பு தளர்வு” (Mitochondrial uncoupling) என்று பெயர்.இதன் மூலம் உடல் குளிரை எதிர்த்து தனது வெப்பநிலையை பாதுகாக்கிறது.

குளிரான சூழலை உணரும் போது, மூளையின் ஹைப்போதலாமஸ் அதனை உணர்ந்து, நரம்பு மற்றும் ஹார்மோன் வழியாக உடலுக்கு தகவல் அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக தைராய்டு ஹார்மோன்களும், பழுப்பு கொழுப்பின் செயல்பாடுகளும் அதிகரித்து, உடலின் “அழல்” நிலையை பராமரிக்க உதவுகின்றன.

இதுவே இயற்கை உருவாக்கிய நுண்ணறிவு.
வெளியில் குளிர் இருந்தாலும், உள்ளே உள்ள நெருப்பு அணையாமல் காக்கும் அமைப்பு.

வெப்பம் ஆற்றலின் வெளிப்பாடு.

அதிக ஆற்றலை கொண்ட விலங்கே வனத்தில் வெற்றியாளராக கருதப்படும். அந்த ஆற்றலை உடலில் நிலை நிறுத்த பரிணாம வளர்ச்சியில் பல படிநிலைகளைத் தாண்டி தகவமைப்பை பெற்று இருக்கின்றன பாலூட்டி விலங்குகள்.

வனத்தில் விலங்குகளின் தேவை மூன்றே மூன்று தான்.

 உணவு (Food)

இணை (Mate / Reproduction)

இருப்பிடம் (Shelter / Territory)

இந்தத் தேவைகளைப் பெறுவதற்கு விலங்குகள் பெரும்பாலும் வன்முறை அல்லது போட்டி (competition & aggression) மூலமே முயல்கின்றன. இதனால் இரண்டு முக்கிய உணர்ச்சி நிலைகள் உருவாகின்றன:

கோபம் / ஆக்ரோஷம் (Anger / Aggression) – எதிரியை எதிர்கொள்ள

பயம் / தப்பி ஓடல் (Fear / Flight) – ஆபத்திலிருந்து தப்பிக்க

ஆபத்தை எதிர்கொள்ளவும் சரி; தப்பி ஓடவும் சரி; உடல் அதிக ஆற்றலை கோருகிறது அதை நிகழ்த்த உடல் அதிகமாக தகனம் செய்யத் தொடங்குகிறது

ஆனால் மருத நிலத்தின் மனிதர்கள் சண்டையைக் கொண்டு எதையும் பெறுவதற்கான அவசியம் அற்றவர்கள். மருத நிலம் என்பது மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் சமத்துவ பூமி. அங்கே கோபம் வன்முறை முதலியவை அவசியமற்றது. வன்முறை என்பது மனிதன் எனும் சிந்திக்கத் தெரிந்த உயிரி சிந்தனையை மேற்கொள்ளாததின் வெளிப்பாடு.

ஆனால் நவீன மனிதனின் தேவைகள் நகரத்திற்குள் பல்வகையில் இருக்கின்றன இந்த கோபம் ஆக்ரோஷம் முதலியன பல வகைகளில் ஏற்பட இங்கே வாய்ப்புள்ளது 

கோபம் (Acute Anger) → உடனடி உணர்ச்சி வெளிப்பாடு

வஞ்சம் (Chronic Resentment) → இருப்பு வைக்கப்பட்ட சினம் 

சோகம் / ஆற்றாமை (Depression / Helplessness) → தீர்க்க முடியாத கோபத்தின் விளைவு

சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார் வள்ளுவர்.அது உயிரியல் ரீதியாகவும் உண்மை. சினமும் அதை சார்ந்த மற்ற உணர்ச்சிகளும்   சிம்பதட்டிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை தொடர்ந்து “உயர் ஆற்றல்” நிலையில் வைத்திருக்கின்றன. 

கடுமையான பதட்டம் – அட்ரினலின் (Adrenaline / Epinephrine)

படபடப்பு மற்றும் பதட்டத்தின் போதும் நம்மை யாரேனும் திட்டும் போதும் சிம்பதட்டிக் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது என்று பார்த்தோம்.

புலி முன் தோன்றுவது, முதலாளி “வேலையை விட்டு தூக்கி விடுவேன்” என்று மிரட்டுவது, அல்லது காதலி “என் கண் முன்னால் முழிக்காதே” எனக் கூறுவது, இவை அனைத்தும் உடலுக்கு உடனடி ஆபத்து சமிக்ஞையாகப் பதிவாகின்றன.

இவை அனைத்தும் நமக்கு பெரும் பதட்டத்தை தூண்டும். அப்போது சுரப்பது அட்ரினலின். அது ஒரு வனவாசியை வனத்தில் தப்புவிக்க செய்த ஒரு ஆதார செயல்பாடு. இது மில்லியன் ஆண்டுகளாக வன விலங்குகளை உயிர் பிழைக்க உதவிய அதே பழங்கால உடலியக்க முறை.

மில்லியன் வருடங்களாக உங்களை காப்பாற்றி வந்த இந்த ஹார்மோன்களுக்கு, உங்கள் முன்னால் நிற்பது காதலியா முதலாளியா என்றெல்லாம் தெரியாது. எப்படியேனும் உங்களின் உடலின் ஆற்றலை அதிகரித்து உங்களை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.

மிதமான / நீடித்த பதட்டம் – கார்டிசோல் (Cortisol)

 இது போன்ற பெரும் பதட்டம் மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறு சிறு பதட்டச் சூழலும் நமது வாழ்வில் அடிக்கடி நேருகின்றது.

காட்டில் இருக்கும் பொழுது சிறு புதரில் ஏற்படும்  அசைவு ஒரு வனவாசியை ஓடச் செய்யவில்லை என்றாலும் வருவது 'புதருக்குள் இருப்பது புலியாக இருக்குமோ?' என்கின்ற சிறு பதட்டத்தை அவனுக்குள் தூண்டிவிடும்.

 “என்ன தம்பி ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குற” என முதலாளி சொல்வது,  “என்ன ஒழுங்கா ரிப்ளை பண்ண மாட்டேங்குற”என காதலி சொல்வது - இவை அனைத்தும்  மிதமான பதட்டத்தைத் தூண்டக்கூடியது. இந்த மிதமான பதட்டம் விரைவாக தப்புவிக்க செய்ய அல்லது சண்டையிடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறது.  சர்க்கரையையும் உப்பையும் குருதியில் அதிகப்படுத்துவதே இதன் வேலை. 

 இந்த மிதமான பதட்டத்தின் விளைவாக கார்டிகோ-ஸ்டீராய்டுகள் எனப்படும் ஹார்மோன்கள் அட்ரினல்  சுரப்பியின் பட்டையிலிருந்து சுரக்கும். ஓடுவதற்குத் தேவையான குளுக்கோசை உடலில் அதிகரிப்பதும், உப்பின் மூலம் பிரஷரை அதிகரிப்பதும் இவற்றின் வேலை. உப்பானது இனிப்பை உடலுக்குள் அனுப்பும் வேலையை செய்கிறது. உப்பும் இனிப்பும் நட்பு சுவைகள்.

உப்பு நேரடியாக உடலில் வெப்பத்தை உருவாக்குவதில்லை. ஆனால் உடலின் நீர்–உப்பு சமநிலை, இரத்த அழுத்தம் மற்றும் செல்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகையில், உப்பு தனியாக “அழலை உருவாக்கும் பொருள்” அல்ல; மாறாக, உடலின் உள் சமநிலையை பராமரிக்கும் ஒரு துணை காரணியாக செயல்படுகிறது. உடலின் நரம்பு–ஹார்மோன் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போது, உயிர் இயக்கத்தை (metabolic activity) நிலைநிறுத்துவதில் பங்கு பெறுகிறது.

சித்தமருத்துவப் பார்வையில் கூறப்படும் “உப்பு அழலைத் தூண்டும்” என்ற கருத்தை, நவீன அறிவியல் மொழியில் பார்க்கும்போது, உடலின் திரவ சமநிலை, நரம்பு தூண்டல் மற்றும் மாற்றச்செயல் செயல்பாடுகளுடன் உப்பின் தொடர்பு இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

சூழலானது குளிர்காணும் பொழுது; மூளையின் ஹைப்போதலாமஸ் அதை உணர்ந்து கொண்டு பிட்யூட்டரியிடம் அது தகவல் சொல்கிறது. பிட்யூட்டரி தைராய்டைத் தூண்டி உடலின் அழலை அதிகரிக்கிறது. நரம்பும் ஹார்மோனும் இவ்வாறு இணைந்து வேலை செய்வதை நியூரோ எண்டோகிரைன் செயல்பாடு என அறிவியல் அழைக்கிறது. நரம்பை வலுப்படுத்தும் கசப்பு பொருட்கள் இவ்வாறு நரம்பின் மூலம் அழலை  உருவாக்குவதில் துணை புரிகின்றன.

 எனவே உப்பு கசப்பு இரண்டுமே அழல் என்னும் பித்தத்தை தூண்டவல்லவை எனும் சித்த மருத்துவத்தின் கருதுகோள் அறிவியல் உண்மைகளுக்கு மிக அருகில் உள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.

சிவன் உப்பு, சக்தி கசப்பு என்று பார்த்தோம். இவை இரண்டும் இணைந்து உயிர் வளர்ப்பன. உப்பு அதிகமானால் வரும் விஷக்காய்ச்சலுக்கு கசப்பே மருந்து. சிவத்தின் சூட்டை சக்தி தணிக்கிறது என இதை நம் மக்கள் உருவகமாக வர்ணித்தனர்.

 இப்படித்தான் உப்பு அதிகரிப்பதால் வரும் அம்மை முதலிய நோய்களை வேப்பிலை மஞ்சள் போன்ற கசப்புகளின் துணையோடு  நாம் வெற்றிக் கொண்டிருக்கிறோம். வெயில் காலங்களில் மாடுகளுக்கு வரும் கோமாரி நோயை இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் கசப்பு என்றுதான் அழைக்கின்றனர்.

தமிழர் பார்வையில் 'அழல்' என்பது வெறும் வெப்பநிலை அல்ல; உயிரை உருவாக்கும் ஆற்றல். அது காமத்தோடு தொடர்புடையது. பூப்படைதல் அந்த ஆற்றலின் எழுச்சி; திருமணச் சேர்க்கை அந்த ஆற்றலை ஒழுங்குபடுத்தி, குடும்பம் மற்றும் சந்ததியினூடாக சமூகத்திற்கு வழிநடத்தும் சடங்கு என்கிறார் brenda எனும் பிருந்தா அம்மையார்*(இவர் ஒரு கனடிய மானுடவியலாளர்).

                 Brenda E.F. Beck
 அதாவது ஆவுடையோடு இணைந்து காமத்தீயை இலிங்கம் தணிக்கும் பொழுது, உடல் தானாக குளிர்ந்துவிடும். அதனால் தான் பருவம் எய்தும் நிகழ்வு 'சமைதல்' என்றும், திருமணச் சேர்க்கை நிகழ்வு, குளிர்விக்கும் பொருள்படும் 'சாந்திமுகூர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது என்பது இவர் முன்வைக்கும் ஆய்வு முடிவுகள் ஆகும்.

அழல் என்பது இவ்வாறாக நம் உடலைப்பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அழல் மிகினும் குறையினும் உடலுக்கு நல்லதல்ல.

அழல்  அதிகமானால் உடல் உருகிவிடும், அழல்   குறைந்தால் உடல் பெருக்கும்.  இதன் காரணமாகத்தான் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடல் குண்டாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உடல்சூடும் கம்மியாக இருக்கிறது. 

ஆனால் அதிகரிக்கும் உடல் சூடு மூளையை பாதித்து வலிப்பை வரவைக்க வல்லது. பித்த நீர் உடலில் அதிகரித்தாலும் இறுதியில் மூளையை  பாதிக்க வல்லது. இதுபோல உடலின் அழலை அதிகம் உடையவர்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டி, ஒவ்வொரு பொருளையும் சுவைத்து உணர்ந்து, உடலை சமநிலைப்படுத்தி,  சித்த மருத்துவத்தின் இந்தக் கொள்கைகளை கண்டறிந்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.


* Colour and Heat in South Indian Ritual. Brenda E.F. Beck. 1969 . 

 A qualitative study of adolescent girls' experiences of menarche and menstruation in rural Tamil Nadu, India. Int J Qual Stud Health Well-being. Gold-Watts A, Hovdenak M, Daniel M, Gandhimathi S, Sudha R, Bastien S. 2020

 

Friday, June 26, 2026

இயற்கையின் குரல் - புத்தகத் திறனாய்வு

ஒரு மொழியை கற்பதற்கு இதுவரையிலும் நாம் பல புத்தகங்களை படித்திருப்போம்.  நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அது போன்றதொரு புத்தகத்தை படித்திருக்கிறேன். அது ஒரு கையடக்க புத்தகம். புத்தகத்தின் தலைப்பு '30 நாட்களில் ஹிந்தி பாஷை'.

 கால்நடை மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க, வட இந்தியா சென்ற பொழுது நான் வாங்கிச் சென்ற புத்தகம் அது.  அந்தப் புத்தகத்தின் உதவியால்  ஹிந்தி மொழியில் சில வினா வாக்கியங்களை அமைக்க கற்றுக்கொண்டேன்.   வேறு எந்த வகையிலும் அந்த புத்தகம் எனக்கு பயன்படவில்லை.  

சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகள் ஹிந்தி மற்றும் போஜ்பூரியை  தங்கள் தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியாது.  இருப்பினும்  அங்கே எனக்கு ஹிந்தி பெரிதாகத் தேவைப்படவில்லை. ஏனெனில் எனது நோயாளிகள் வாயில்லா ஜீவன்கள். எனது நோயாளிகளால் ஹிந்தியை பேசி விட முடியாது. 

 பிறகு எதற்கு எனக்கு ஹிந்தி?  

மாட்டிற்கு என்ன வியாதி என்று மாட்டின் உரிமையாளர்கள் சொல்வதற்கு முன்னமே மாட்டின் துயரம் மிகு கண்கள்  என்னிடம் பேசி விடுகிறதே? பிறகு எதற்கு எனக்கு மற்றொரு மொழி?

  விலங்குகளின் துன்பங்களை அறிவதற்கு எந்தவித  பாஷையும் தேவையில்லை.  Empathy என்கின்ற ஒரு அடிப்படை பண்பு இருந்தால் மட்டுமே போதுமானது.  சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் எந்த ஒருவருக்கும், தனது உணர்வுகளை கடத்துவதற்கு; வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட மொழி என்பது அவசியமற்றது.  இதுவே கால்நடை மருத்துவத்தின் பால பாடம்.

நிற்க . Chat gpt, google translate போன்ற செயலிகள் வந்த பிறகு, பிற மொழிகளை கற்பது என்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகிவிட்டது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மொழியை கற்கும் நோக்கில், மற்றுமொரு புத்தகத்தை வாசிக்க கையில் எடுத்தேன். 

ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை இவ்வளவு சுவாரசியமாக படிப்பேன் என நான் நினைத்துப் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புத்தகம் தான் நான் படிப்பதற்கு தேர்ந்தெடுத்த புத்தகம். 

அப்படி என்ன மொழியை அந்த புத்தகம் கற்பிக்கிறது என்று நீங்கள் கேட்க கூடும். 

அது அனுதினமும் நம்மைச் சுற்றி பேசப்பட்டு வரும் ஒரு மொழி! 

நம்மை சுற்றிலும் பேசப்பட்டு வந்தாலும் நாம் கேட்க மறந்த ஒரு மொழி!! 

அது மண்ணுலகின் மறக்க பட்ட உயிர்ப்பின் மொழி!!! 

 நாம் அறிந்த வரையில் , சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு குரல் வழியாக கடத்துவதே மொழி எனப்படுகிறது. 

அப்படிப் பார்த்தால் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் குரல்வளையால் எழுப்பப்படும் ஒலி அல்லவே?  அது குரலோசை கிடையாதே? அப்படியானால் அது மொழி என்ற பிரிவிற்குள் வராதா? 

நிச்சயமாக இல்லை. 

 சில்வண்டிற்கு அந்த ரீங்காரமே தொடர்பு கொள்ளும் சாதனம். எனவே அந்த ரீங்காரமே சில்வண்டின் மொழியாகும். 

சப்வேயில் துண்டை விரித்து தூங்கிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி உங்களிடம் எந்த வார்த்தையையும் பேசவில்லை.  இருப்பினும் நீங்கள் ஏன் அவருக்கு யாசகம் அளித்தீர்கள்? 

உங்களை யாசகம் அளிக்கத் தூண்டியது யாருடைய குரல்? 

அது எவ்வகை மொழி? 

கணித வாத்தியாரின் கோபம் மிகு கண்கள்,  காதலியின் கடைக்கண் பார்வை, கை தூக்கி விடும் நண்பனின் கரங்கள்,  இவை அனைத்தையும் நம்மால்  கோபம் என்றும், காதல் என்றும், நட்பு என்றும் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. 

ஆனால் தொட்டாசிணுங்கியின் சுணக்கத்தை எப்பொழுதாவது நாம் மொழிபெயர்த்திருக்கிறோமா? 

குறைந்தபட்சம் அந்த தாவரத்தை உயிருள்ள ஒரு ஜீவன் என்ற வகையில் அணுகி இருக்கிறோமா? 

உண்மையில் தாவரங்களால் தங்களை உண்ண வருபவர்களின் குரலை கேட்க முடியும். அண்டை தாவரங்களின் மணத்தை நுகர முடியும். தங்களை நேசிப்பவர்களின் வடிவத்தை போல மாற்றிக் கொள்ள முடியும் என்ற உண்மையை இந்த புத்தகம் எனக்கு போதித்தது. 

நான் படித்த அந்த புத்தகத்தின் பெயர் 'இயற்கையின் குரல்'.அதன் ஆசிரியர் அய்யா பாமயன். 


இயற்கை நம்மிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கிறது.
வெறும் வார்த்தைகளால் அது நம்மிடம் பேசவில்லை; அசைவுகளால், ஒளியால், மணத்தால், காலத்தின் மாற்றங்களால் அது நம்முடன் உரையாடிக்கொண்டிருக்கிறது.

மகுடியின் இசைக்கு பாம்பு அசைவது போல, சூரியனின் பயணத்தை நோக்கி சூரியகாந்தி மலர் திரும்புவது போல, இயற்கையின் மெல்லிய சமிக்கைகளுக்கு ஏற்ப நமது உடலும் தனது இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

நாம் உறக்கத்தில் இருந்தாலும், விடியலின் வருகையை இயற்கை நமக்கு அறிவித்துவிடுகிறது. பறவைகளின் கீதங்கள், காற்றின் தட்பவெப்ப மாற்றங்கள், வெளிச்சத்தின் மெல்லிய தீண்டல், இவை அனைத்தும் நமது கண்கள், காதுகள், சருமம் போன்ற புலன்களின் வழியாக மூளையை அடைந்து, “இது பகலின் நேரம்” என்று உடலுக்குச் சொல்லுகின்றன. அதற்கேற்ப விழிப்பு, செயல்பாடு, ஆற்றல் ஆகியவற்றை இயக்கும் ஹார்மோன்களை நமது உடல் சுரக்கத் தொடங்குகிறது.

இயற்கையோடு இசைந்து வாழ்வதற்காகவே நமது உடல் பரிணமித்திருக்கிறது.

ஆனால், இன்று மனிதன் இயற்கையிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயல்கிறான்.
நாம் எழுப்பிய சுவர்கள் பறவைகளின் பாடல்களை நம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கின்றன.
நாம் அமைத்த சாளரங்கள் சூரியனின் ஒளியைத் தடுக்கின்றன.
குளிரூட்டப்பட்ட அறைகள் காலத்தின் வெப்பத்தையும், பருவங்களின் மாற்றத்தையும் நம்மிடம் இருந்து பிரித்து வைக்கின்றன.

நிலத்தோடும், பொழுதோடும், பருவங்களோடும் இணைந்து வாழ மறுக்கும் இந்த வாழ்க்கை முறை உண்மையில் நமக்கு நன்மை தருகிறதா?

எனது தொழில் கால்நடை மருத்துவம். அது உயிர்களின் அவத்தையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. விலங்குகளின் துன்பத்தையும், மனிதர்களின் துன்பத்தையும் ஒரே உயிரியல் பார்வையில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த எண்ணத்திலிருந்து, இந்த புத்தகம் எனக்குள் எழுப்பிய சிந்தனையை ஒரு ஒப்பீடாக பார்க்க விரும்புகிறேன்.

நிலத்தோடும் காலத்தோடும் இயைந்து வாழும் ஒரு எளிய உயிரினத்தோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போமா?

ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையையும் நமது நகர வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாம் வாழும் நகரங்களில் உணவு, உடை, உறைவிடம் என அனைத்து வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு சொடக்கில் உணவு வீடு தேடி வருகிறது. குளிரூட்டப்பட்ட அறைகள், மென்மையான படுக்கைகள், வசதியான வாழ்க்கை என இயற்கை வழங்காத பல வசதிகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு பட்டாம்பூச்சி தனது உணவிற்காக மலர்கள் தோறும் பறக்க வேண்டும். அதன் உணவு உறுதி செய்யப்பட்டதல்ல. மலர்கள் வழங்கும் மது மட்டுமே அதன் வாழ்வாதாரம்.

ஆயினும், நாம் அன்போடு வளர்க்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளும், பெரியவர்களுக்கு நீரிழிவு நோயும் அதிகரித்து வருவதை நாம் காணமுடிகிறது.

ஆனால் வாழ்நாள் முழுவதும் மலர்களின் மதுரத்தை மட்டுமே சுவைக்கும் பட்டாம்பூச்சிக்கு எந்த ஊட்டச்சத்துகுறைபாடும் வருவதில்லை. மதுமேகம் அதை அண்டுவதில்லை.
ஏனெனில் இயற்கை அதற்குத் தேவையானதை, சரியான அளவில், சரியான நேரத்தில் வழங்குகிறது.

அந்தப் பட்டாம்பூச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் அன்போடு வழங்குகின்றன. அதற்கு பதிலாக, அந்தப் பட்டாம்பூச்சி தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் துணை நிற்கிறது.

வனத்தால் பட்டாம்பூச்சி வாழ்கிறது.
பட்டாம்பூச்சியால் வனமும் வாழ்கிறது.

இதுவே இயற்கையின் சமநிலை.

இவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ்வதே நலமான வாழ்வு என்பதை இந்த புத்தகம் முன்வைக்கிறது. இயற்கையிலிருந்து மனிதன் விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகளை அறிவியல் ஆதாரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.

ஆனால், இயற்கையை விட்டு விலகிய மனிதன் இன்று நுகர்வு வெறியிலும், முடிவில்லாத போட்டியிலும் சிக்கி, தனது நலனையும் சூழலின் நலனையும் ஒருசேர இழந்து கொண்டிருக்கிறான்.

இயற்கையிலிருந்து மனிதனின் பிரிவு உருவாக்கும் முக்கியமான விளைவுகளில் மன அழுத்தமும் பதட்டமும் முன்னிலை பெறுகின்றன என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இயற்கையற்ற சூழலில் வளரும் குழந்தைகள் மனச்சோர்வு, எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மண்ணைத் தொடுதல், வெட்டவெளியில் ஓடுதல், இயற்கையின் மத்தியில் விளையாடுதல் போன்ற அனுபவங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன.

வெயிலிலும் மண்ணிலும் விளையாடுவது என்பது ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு செயல். அனால் வெறும் மண்ணில் குழந்தைகளை நாம் விளையாட விடுவதில்லை.

 உண்மையில் மண் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றா?

கண் பேசும் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாமல் காதலர்கள் தவிக்கும் போது, மண் பேசும் மொழியை இந்த புத்தகம் நமக்குக் கற்றுத் தருகிறது.

மரங்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் அறிவு உண்டு என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி  “இயற்கையின் நுண்ணறிவு” என்ற தலைப்பு.
அதன் கீழ் மண்ணின் மதி, அதன் நினைவு, அதன் உயிர்ப்புத் தன்மை குறித்து ஆசிரியர் விளக்கியிருப்பது, இயற்கையை ஒரு வளமாக அல்லாமல்; ஒரு உயிருள்ள உறவாக பார்க்கச் செய்கிறது.

இயற்கை நம்மைச் சுற்றி இருப்பதல்ல.
நாம் இயற்கையின் ஒரு பகுதி.

அதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் மீண்டும் முழுமையான வாழ்வை நோக்கி திரும்ப முடியும்.


யாரையேனும் திட்டும் போது கூட மண்ணோடு ஒப்பிட்டு திட்டும் வழக்கமுடைய நமக்கு, மண் ஒரு ஞானி என்பதை  எடுத்துரைக்கிறார் ஆசிரியர். மண் உயிருள்ளது, மனிதர்களைவிட எண்ணிக்கையில் நிறைய உயிரினங்களைக்கொண்டது. நமது கணிணி நெட்வொர்க்கைக்காட்டிலும் மேம்பட்ட நெட்வொர்க்கை கொண்டது மண். மண் மீள்திறன் மிக்கது. அறிவாற்றல் மிக்கது என்று ஆசிரியர் நமக்கு புரியும்படி எளிதாக விளக்குகிறார்.

ஆறாம் அறிவு... செயற்கை நுண்ணறிவு... என அறிவின் எல்லைகளை நாம் விஸ்தரித்துக் கொண்டிருக்கும் வேளையிலே, அறிவு என்பது மனித மனங்களுக்கோ அல்லது தொழில்நுட்ப அமைப்புகளுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல என்பதை மண் உள்ளிட்ட இயற்கையின் ஒவ்வொரு கூறும் நமக்கு நினைவூட்டிகொண்டு இருக்கின்றது.
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து,  ஒத்துழைத்து,  தகவமைந்து இயங்குகிறது.  இவை அழிவன அல்ல. மீள் உருவாக்கம் பெற வல்லவை.இவ்வாறு தனக்கே உரிய ஞான வடிவங்களை இயற்கை கொண்டுள்ளது  என்று ஆசிரியர் நமக்கு அறிவிக்கும் போது; அறிவு என்பது என்னவென்று தெரியாமலேயே வெறும் புத்தகங்களில்  மட்டுமே அறிவை தேடுகிறோமே என்று நமக்கே நம் மீது கழிவிறக்கம் வருகிறது. 

ஒன்றுக்கொன்றான ஒத்துழைப்பு மூலமே வாழ்க்கை செழித்து வளர்கிறது என்பதை,  மண் உட்பட இயற்கையின் அனைத்து கூறுகளும் நமக்கு கற்பிக்கின்றது.மனித குலம் பூமியின் உயிருள்ள அமைப்புகளுக்குள் தமக்கான இடத்தை புரிந்து கொள்வதற்கு மண்ணின் இந்த ஞானம் உதவும் என்கிறார் ஐயா பமையன்.

ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கையில் இருந்தே பிறக்கிறது. இயற்கையின் துணை கொண்டே உயிர் வளர்க்கிறது. பிரிதொரு நன்னாளில் இயற்கையோடு கலந்து இயற்கை எய்துகிறது. பின்னர் அந்த உயிர் புதைவுற்ற இடத்திலிருந்து இன்னொரு உயிர் பிறக்கிறது. இயற்கையில் இறந்துபட்ட உடலோ, சாணமோ, எதுவும் கழிவு அல்ல. இயற்கையில் ஒன்றன் 'கழிவு மற்றொன்றின் உணவு'. 

                                                One man's trash is another man's treasure. 

இந்த 'ஊட்டச் சுழற்சி'யில் பூகோள வலை பின்னல் முழுவதும் ஆற்றலும் பொருளும் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுகின்றன . இவ்வாறு இயற்கை 'கழிவில்லா வாழ்க்கை' என்ற கொள்கையை நமக்கு கற்றுத் தருகிறது அது 'அழிவில்லா வாழ்வு'க்கும் வழிகாட்டுகிறது என்கிறார் நூல் ஆசிரியர்.

ஆனால் இது போல் அல்லாமல் இயற்கையின் மூலங்களை சுரண்டி எடுத்தல், பொருட்களை உருவாக்குதல், நுகர்தல், கழிவுகளைக் கொட்டி வைத்தல் என்ற அணுகுமுறையை இந்த இன்றைய தொழில்மய வளர்ச்சி மாதிரிகள் பின்பற்றுகின்றன என்கின்றார் ஆசிரியர். இந்த 'நேர்கோடு வளர்ச்சி' மாதிரியானது இயற்கையை எல்லையற்ற கிடங்காகவும் கழிவுகளை கொட்டும் முடிவற்ற இடமாகவும் கருதுகிறது என்கின்றார்  ஆசிரியர்.

மனிதனின் இடம்பெயர்வு இன்று கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்கிறது. நகரம் என்ற பெரும் குழந்தையின் முடிவில்லாத பசியைத் தீர்க்க இயற்கையின் மடியில் இருக்கும் வளங்களால் மட்டும் இனி தீனி போட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நகரம் என்பது மனிதன் உருவாக்கிய 'நேர்கோட்டு அமைப்பு'; ஆனால் இயற்கை என்பது சுழற்சியின் அடிப்படையில் இயங்கும் ஜீவனுள்ள அமைப்பு. இயற்கை தனித்தன்மையை அழிப்பதில்லை; பன்மயத்தை அரவணைத்து இயங்குகிறது. அங்கு வெற்றி என்பது மற்றொன்றை அழிப்பதில் இல்லை; ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்வதில் உள்ளது. இயற்கையின் உலகில் போட்டியை விட கூட்டுறவு மேலோங்குகிறது. ஒரு காடு என்பது தனித்தனி மரங்களின் கூட்டம் மட்டுமல்ல; வேர்கள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள், விலங்குகள், நீர், காற்று என அனைத்தும் இணைந்து உருவாக்கும் ஒரு உயிரியல் சமூகமாகும் என்பதை ஆசிரியர் நமக்கு தெளிவுற புரிய வைக்கிறார்.

நகர வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை வழங்கியுள்ளது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், தொழில்நுட்பம் போன்றவை மனித வாழ்வை எளிதாக்கியுள்ளன. இவை அனைத்தும் மனிதனின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளங்கள்.

ஆனால், இந்த முன்னேற்றங்களோடு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பழங்குடி சமூகங்களின் அறிவையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டவர்கள்.

ஆசிரியர் பழங்குடி வாழ்க்கையை உயர்த்திப் பேசவும் இல்லை; நவீன அறிவியலை மறுக்கவும் இல்லை. மனித அறிவியலும், இயற்கையோடு வாழ்ந்த மக்களின் அனுபவ அறிவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டுமே முழுமையான முன்னேற்றம் சாத்தியம் என்பதையே வலியுறுத்துகிறார்.

மனிதன் தனது ஆறாம் அறிவால் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளான். ஆனால் இயற்கை கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாக்கிய தீர்வுகள் நமக்கு இன்னும் பல பாடங்களை கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, கரையான் புற்றுகள் மிகக் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி உள்ளே காற்றோட்டத்தையும் குளிர்ச்சியையும் பராமரிக்கின்றன. இதை ஆராய்ந்த மனிதன், இயற்கையை பின்பற்றி நிலையான கட்டிட வடிவமைப்புகளை உருவாக்கினான்.

அதேபோல், மீன்கொத்தியின் அலகு வடிவம் தண்ணீரில் வேகமாக நுழையும் போது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு அதிவேக ரயில்களின் வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டது.


இதனால் இயற்கை என்பது வெறும் வளங்களை தரும் இடம் மட்டுமல்ல; அது நமக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கும் ஒரு ஆசிரியர்.

ஆனால் இயற்கை நமக்கு கற்றுத் தருவது மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நவீன கருவிகள் கடலின் ஆழத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உடனடியாக உணர முடியாத நிலையில், இயற்கையுடன் நெருக்கமாக வாழ்ந்த சில பழங்குடி சமூகங்கள், கடலின் பின்வாங்கல், விலங்குகளின் அசாதாரண நடத்தை, இயற்கையின் மாற்றமான ஒலிகள் போன்ற அறிகுறிகளை கவனித்து ஆபத்தை உணர்ந்தனர்.

அவர்களின் தலைமுறை அனுபவ அறிவு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர உதவியது.


மனித அறிவும் இயற்கை அறிவும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் பகரும் ஒரு எடுத்துக்காட்டு இந்நிகழ்வு. நவீன அறிவியல் கருவிகள் இயற்கையின் மாற்றங்களை அளவிட உதவுகின்றன; ஆனால் இயற்கையோடு நீண்ட காலம் வாழ்ந்த சமூகங்களின் பாரம்பரிய அறிவு, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளும் நுண்ணுணர்வை வழங்குகிறது.

இயற்கை நமக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பதில்லை; அது நம்மை பாதுகாக்கும் ஒரு உயிருள்ள அமைப்பு. அதை கேட்கவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொண்டால், இயற்கையின் ஞானமும் மனிதனின் அறிவியலும் இணைந்து எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். 


பழங்குடி அறிவு அமைப்புகள் ஆதிக்கத்திலிருந்து கூட்டுறவுக்கும், சுரண்டலிலிருந்து பகிர்வுக்கும், துண்டிக்கப்பட்ட பார்வையிலிருந்து முழுமையான புரிதலுக்கும், தனிமனித மையத்திலிருந்து சமூக மையத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன. இது தமிழருக்கு புதிதான சிந்தனை அல்ல; அள்ளித்தந்த பூமியை அன்னையாகவும், சொல்லித்தந்த வானத்தையும் தந்தையாகவும் பார்த்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள்.

சங்க இலக்கியத்தில் வெளிப்படும் 'திணை சிந்தனை'யின் தொடர்ச்சியே இந்த சிந்தனை என்கிறார் ஆசிரியர். நிலம், காலம், உயிர்கள், மனித உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் அந்த வாழ்வியல் பார்வை, இன்று உலகம் எதிர்கொள்ளும் சூழலியல் சிக்கல்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதை ஆசிரியர் இந்தபுத்தகத்திலும் நிறுவுகிறார்.

ஆசிரியரின் முந்தைய நூலான “திணையியம்” வரலாற்று ஆதாரங்கள், சங்க இலக்கிய சான்றுகள் மற்றும் உலகின் மெய்யியல் கோட்பாடுகளோடு தமிழரின் சிந்தனையை ஒப்பிட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் ஒழுகலாறை விளக்கும் ஒரு ஆழமான ஆய்வு நூலாக அமைந்திருந்தது. அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் கனமான சிந்தனைகளை சுமந்திருந்தது. ஒவ்வொரு வரியும் புதிய கேள்விகளை எழுப்பி, வாசகனை சிந்தனையின் ஆழத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால் இந்த நூல் வேறொரு தன்மை கொண்டது. இது வாசிப்பதற்கு எளிதானது; ஆனால் சிந்தனையில் ஆழமானது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் கேட்க மறந்த இயற்கையின் குரலை ஆசிரியர் நமக்குக் கேட்க வைக்கிறார். அதன் பரிபாஷைகளை நமக்கு புரிய வைக்கிறார். நாம் புறக்கணித்த அந்தக் குரல் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பதில்களையும், நாளை எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கான விடைகளையும் பகன்று கொண்டிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

ஆசிரியரின் எழுத்துகளில் ஒரு தனித்தன்மை தெரிகிறது. அவர் மனிதர்களிடம் உரையாடியதை விட இயற்கையிடம் அதிகம் உரையாடியிருக்கிறார் என்பதை புத்தகத்தின் ஒவ்வொரி வரியிலும் நாம் உணர முடிகிறது. இயற்கை அவரிடம் தனது ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறது; தனது மகிழ்ச்சியையும், வேதனையையும்,  எச்சரிக்கைகளையும் அவரிடம் வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த உரையாடலை மிக எளிய மொழியில் இந்த புத்தகத்தில் நமக்குக் கடத்தியிருக்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாமல் நம்மையும் இயற்கையோடு உரையாடத் தூண்டுகிறார் ஆசிரியர்.

இயற்கையோடு கொண்ட உறவிலிருந்தே உண்மையான அறிவு பிறக்கிறது என்பது ஆசிரியரின் எழுத்துகளின் அடிப்படைச் செய்தியாக உள்ளது. இயற்கை என்பது வெறும் வளங்களின் களஞ்சியம் அல்ல; அது ஒரு உயிருள்ள ஆசிரியர். அது மனிதனுக்கு தகவலை மட்டும் வழங்குவதில்லை; வாழ்வதற்கான ஞானத்தையும் வழங்குகிறது என்பதை தனது நூன்முகத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் ஆசிரியர்.

மனிதனின் ஆறாம் அறிவும் அறிவியல் முன்னேற்றங்களும் பல சிக்கல்களைத் தீர்த்துள்ளன. ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவான இயற்கையின் தீர்வுகள் இன்னும் ஆழமான அறிவையும், சமநிலையையும், நிலைத்த வாழ்விற்கான ஞானத்தையும் நமக்கு கற்றுத் தருகின்றன.

இயற்கையை வெல்ல வேண்டிய ஒன்றாக அல்லாமல்; புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக, இணைந்து வாழ வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் பார்வையை நமக்கு உணர்த்துவதே  இந்த நூலின் நோக்கமாக நான் புரிந்து கொள்கிறேன்.

 
அறிவு என்பது கட்டுப்படுத்த விரும்புகிறது ஆனால் ஞானம் என்பது இணைந்து வாழ கற்றுக் கொடுக்கிறது. அந்த ஞானத்தை பெற நாம் இயற்கையோடு உரையாட வேண்டும். இயற்கையின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். மண்ணின் மொழியை மனிதன் மறந்த நிலையில் மீண்டும் இயற்கையுடன் உரையாட துவங்கும் சிறு முயற்சியே இந்த நூல் என்கிறார் ஆசிரியர். 

எனவே சக மனிதர்களின் மொழியை கற்றுக் கொள்வதை விட, தேவ பாஷைகளை படிப்பதை விட, கணினி மொழிகளை மனனம் செய்வதை விட, இயற்கையின் மொழியை நாம் முதலில் புரிந்து கொள்ளத் துவங்க வேண்டும். அந்த இயற்கையின் குரலை புரிந்து கொள்ள எண்பதே பக்கங்களைக் கொண்ட இந்த சிறு புத்தகம் நமக்கு மிகவும் அழகாக  வழிகாட்டுகிறது. 



Wednesday, June 24, 2026

இலகுலீசர் (ஆதியோகி: அத்தியாயம் 21)

வயல்கள் மீண்டும் அமைதியாகின.  
 போரில் சிந்திய இரத்தம் உலர்ந்தது. நிலத்தில் ஒரு புனித மௌனம் திரும்பியது. 

 அந்த நிலத்தில் இருந்த ஒரு  பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள சிறிய மேட்டில் பசவண்ணா நின்று கொண்டிருந்தார். அவரது பார்வை கீழே இருந்த இரு இளம் உருவங்களின் மீது நிலைத்து இருந்தது. அரசமரத்தின் பரந்த கவிகையின் கீழ் உறவினர்களும் சுற்றத்தார்களும் புடை சூழ பீரப்பாவும் காமரதியும் நின்று கொண்டிருந்தனர். 

பீரப்பா, ஒரு அமைதியான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார், அவருக்கு அருகில் காமரதி அன்பின் வடிவாக நின்று கொண்டிருந்தாள். 

அவர்களின் திருமணம் எளிமையாக காளியின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. திருமணம் நடந்த பின்பு  சிவன் பீரப்பாவை நோக்கி முன்னேறி, தன் திரிசூலத்தை பீரப்பாவின் கைகளில் வைத்தார். அவர்களை வாழ்த்தி விட்டு சிவன் தனியாக நடந்து சென்றார்.

அவர் விரும்பிய இணைப்பு இங்கு நிகழ்ந்துவிட்டது. இந்தத் திருமணம் வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டும் அல்ல. அது போரினால் அழியவிருந்த இரு தரப்பு மக்களின் இணைப்பு.

 விவசாயத்தை முன்னெடுத்த விவசாய குல மக்களும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் ஆயர் குல மக்களும், நிலம் என்னும் முதற்பொருளோடு, பொழுது என்னும் மற்றொரு  முதற்பொருளின் ஒத்திசைவில்,  கருப்பொருளாக இணைந்து வாழவிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு அந்த திருமணத்தின் மூலம் தொடங்கியது.

 ஆயர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  மழையின் முதல் சாரல் தொடங்கும் முன்னர், அவர்கள் தங்கள் புனித இடம்பெயர்வைத் தொடங்கினர். அவர்கள் மழையின் தாளத்தை பின்பற்றினர். போகும் இடம் எங்கும் வளத்தை விதைத்துச் சென்றனர்.நிலம் அதற்கு ஏற்ப பதிலளித்தது. விவசாய குலமக்கள் அந்த வளத்தினால் செழித்தனர்.

 நிலத்தில் வாழ்ந்து வந்த எரும்பில் தொடங்கி ஓநாய்கள் வரை அங்கு இருக்கும் அனைத்து உயிரிகளும் அங்கு வாழ்ந்து வந்த மக்களால் மதிக்கப்பட்டன.  அனைத்து உயிர்களும் அங்கு சமமாகக் கருதப்பட்டன. சாம்பல் நிற ஓநாய்களைக் கண்டு கூட அவர்கள் அஞ்சவில்லை. அவற்றைக் கொல்லவும் அவர்கள் எண்ணம் கொள்ளவில்லை. ஒரு ஓநாய் முன்னால் ஓடினால், மூன்று நாட்களில் அடுத்த பள்ளத்தாக்கில் மழை வரும்  என்று ஆயர்கள் நம்பினார்கள். அவை தங்கள் ஆடுகளை உணவாகக் கொண்டால், இறைவன் தங்களை ஆசீர்வதித்ததாக எண்ணி மகிழ்ந்தனர்.

 அந்த நிலத்தில் ஓநாய்கள் முதலிய கொலுண்ணி விலங்குகள் மனிதர்கள் தொந்தரவு இன்றி தங்குவதற்கு ஏற்ப ஒரு காடு இருந்தது. அது தெய்வம் உலாவும் காடு... தேவரு காடு.

 தமிழில் கோயில் காடு என அழைக்கப்படுபவை அந்தக் காடுகள். அவை மிகவும் புனிதமான காடுகள். 

 இங்கனம் மல்லப்பா என்றும் கண்டோபா என்றும் அவர்களால் அழைக்கப்பட்ட கடவுள் காட்டிய புனித பாதையின் வழி தலைமுறை தலைமுறையாக பயணித்தபடி இருந்தனர் அந்த ஆயர்கள்.  எத்தனை நகரங்கள் முளைத்தாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அவர்களின் அந்த புனித நகர்வு நிற்பதே இல்லை.

இந்த இடம்பெயர்வைக் குறிக்க ஏடுகள் இல்லை...  
சுவடிகள் இல்லை....
கொடிகள் இல்லை... 
மன்னர்கள் இல்லை...

எந்த ராஜ்ஜியத்தையும் விட இவை பழமையானவை. எந்த தெய்வத்தை விடவும் இவை புனிதமானவை.   

 இதை அவர்கள் தங்கள் தொழில் முறையாக பின்பற்றவில்லை  வாழும் முறையாக பின்பற்றினார். இறைவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியாக இந்தத்தொழிலை அவர்கள் கருதினர். 
 
அந்தப் பணியை செவ்வன மேற்கொண்ட  அவர்களை சந்ததிகள் பல கடந்தும்  இந்த நிலம் வாழ்வாங்கு வாழ வைத்தது. 

ராஜ்ஜியங்கள் பேராசையால் மண்ணை எரித்தபோதும், இந்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்த போதும், ஆயர்கள் இந்தப் பாதையின் வழி நடப்பதை மறக்கவில்லை.

அவர்கள் இந்த புனித நிலத்தை  உணவளிக்கும் இயந்திரமாக பார்க்கவில்லை. 

 நிலத்தோடு உரத்தை சேர்ப்பது அதிக விளைச்சலை தரும் என்பதே தற்போதைய அறிவியலின் எண்ணமாக இருக்கிறது.

அது உண்மைதான். ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு தான் வரும். ஆனால் ஆயர்கள் பின்பற்றிய கணக்கில், ஒன்றும் ஒன்றும் உறவாடி மூன்றாகியது.

 ஒன்று ஒன்றும் சேர்வதினால் இரண்டு வரும் என்பது ஒரு எளிய கூட்டல் கணக்கு. ஆனால் ஆயர்கள் பின்பற்றியது வாழ்வுக்கான கணக்கு.

 இந்தக் கணக்கில் பரிணாமங்களின் உறவாடல் நிகழ்ந்தது.

 இந்த நிலத்தில் சிவனின் முன்னெடுப்பால் நிலம் எனும் பரிணாமம் பொழுது எனும்  பரிணாமத்தோடு உறவாட வைக்கப்பட்டு, விளைச்சல் வேகம் என்னும் மூன்றாம் பரிணாமம் உச்சமடைய வைக்கப்பட்டது. 

 பொதுவாக நாம் பிரபஞ்சத்தை மூன்று பரிணாமங்களில் பார்க்கின்றோம். சரியாக சொல்வதென்றால் வெளியின் மூன்று பரிணாமங்கள் மற்றும் காலத்தின் ஒரு பரிணாமம் . 

வெளியின் பரிணாமங்களில் நாம் முன்னும்  பின்னும் மேலும் கீழும் நகரலாம். ஆனால் காலத்தில் நாம் முன்னோக்கி மட்டுமே நகர முடியும். நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. எனவே இந்தக் கால பரிணாமத்தை அனுமானித்து, ஆறாம் அறிவு  கொண்டு சிந்தித்து, பொழுதை நமக்கு உகந்ததாக பயன்படுத்திக் கொள்வதே எந்த ஒரு நாகரிகத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

 நிலம் என்னும் பரிணாமத்தோடு பொழுது என்னும் பரிணாமம் உறவாடும் பொழுது, உயிர்கள் அந்த நிலத்தில் நிலைத்து நீடித்து வாழ வழிவகை செய்யப்பட்டது . 

நிலம் + பொழுது = உயிர்ப்பு.

இது ஒரு எளிய கூட்டல் இல்லை, ஒரு புனிதத் தாளம். 

வெளி மற்றும் காலத்தின் இணக்கம். 

வெளியும் காலமும்  பிரபஞ்சம் நெய்யப்பட்டதும் பிறந்த முதல்  பரிமாணங்கள்.

  நமது தற்போதைய இயற்பியல் விதிகள் செல்லுபடியாகாத  சுத்த சிவ  நிலையிலிருந்து தான் அனைத்தும் ஆரம்பித்தது. இன்று நமக்குத் தெரிந்த வெளியும் காலமும் தோன்றுவதற்கு முன்பு, ஒரு ஒற்றை புள்ளியில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் பிறந்தது.

பின்னர்,  ஆரம்ப பிரபஞ்சத்தை நீட்டி, மூன்று 'வெளிப் பரிமாணங்களையும்' ஒரு 'காலப் பரிமாணத்தையும்' நிலைப்படுத்தி, இன்று நாம் காணும் பிரபஞ்சம்  உருவாகியது. 

இந்த வெளி மற்றும் காலம் என்னும் நாடக மேடையில் தான் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின்  வாழ்வு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த இணைப்பு வெறும் பயிர்களைத் தாங்கவில்லை; அது உயிரையே சாத்தியமாக்கியது.

இவை வெறும் வளங்கள் இல்லை.  

இவை  நாகரிகத்தின் முதன்மையான முன்னுரிமைகள்.  

இதைப் புறக்கணித்த என்ன நாகரிகமும் நம்முடன் இப்போது இல்லை.

இவற்றை புறக்கணித்தால், தெய்வங்களும் வீழ்ச்சியடையும். 

இவற்றை மதித்தால், உயிர் சமநிலையில் மலரும்.

இது ஒரு கூட்டல் சமன்பாடு இல்லை.  
இது ஒரு ஆற்றல் நடனம்!

இது ஒரு சிவ சக்தித் தாண்டவம்!!

 நிலமானது பெரும் பொழுதுடன்  இணக்கமாக  சமநிலையில் சந்தித்தபோது,  செழிப்பு எழுந்தது

இந்தத் தாண்டவம் ஒத்திசைத்து நடக்கும்  இடத்தில் தான் தெய்வங்களும் குடியேற முடியும். அந்த தெய்வமே அங்கிருக்கும் கருப்பொருட்களில் முதன்மையான கருப்பொருளாக இருந்து  மற்றேனைய கருப்பொருட்களை காத்து நிற்கும்.  

 மக்களும் அந்த கருப்பொருட்களில் ஒன்றாக இணக்கமாக வாழத் துவங்கினர்.  

 கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலப்பரப்புடனும் பிணைந்த வாழ்க்கையின் குறியீட்டு சாரம்:   அவர்கள் வணங்கிய கடவுள்கள்,  அவர்கள் உண்ட உணவு,
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்,  அங்கு வாழ்ந்த மக்கள்,  அவர்கள் பின்பற்றிய தொழில்கள்,  அவர்களது பாடல்கள், சடங்குகள்,  அனைத்தும் அதற்குள் அடக்கம்.

 இதுவே சிவன்  நமக்கு கட்டமைத்துத் தந்த  வாழ்வு முறை.

 இந்த வாழ்வு முறையே நமது நாகரிகத்தின் அடிப்படைக் கூறு. தென்னகம் முழுவதும் இந்த வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வரத் துவங்கின.

 இதை  கட்டமைத்த அந்த சிவனை மக்கள்  மஹாகாலேஸ்வரில் தட்சிணாமூர்த்தியாக வணங்கினர்.
 தட்சிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாமூர்த்தி என்றால் 
 தெற்கு நோக்கி நிற்கும் கடவுள். 

 மக்கள் அவரை கடவுளாக வணங்கினாலும் அவர் அடிப்படையில் ஒரு மனிதன் தான். அந்த மனிதனுக்குள்  ஒரு ஆழமான வலி இருந்தது, வெளியே சொல்ல முடியாத உயிர் நாடியில் ஏற்பட்டிருக்கும் துன்பம் மிகு வலி அது. பிறவியில் இருந்தே அவரைத் துரத்தும் சாபம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போர் அது. அவரின் உயிர்நாடி எழுச்சி, மக்களால் ஆண்மையின் ஆற்றல் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.  ஆனால் அது அவருக்குள் இருக்கும் நோயின் ஒரு அறிகுறி. அவர் எடுத்த நஞ்சின் பக்க விளைவு அது. 

 அந்த அறிகுறியின் காரணமாக அவர் மக்களுடன் புழங்குவதைத் தவிர்த்தார்.   தனது அறிகுறிகளின் வாதையை தணிக்கும் ஒரு குளிர்ந்த இடத்தை நோக்கி அவர் பயணப்பட்டார். அமர்கண்டக்கை நோக்கி அவரது பயணம் அமைந்தது. அது புனித நர்மதை நதியின் பிறப்பிடம்.

ஒரு ஆலமரத்தின் கீழ் அவர் தெற்கு நோக்கி அமர்ந்தார். அவரது உயிர் நாடிக்கு திருப்பி விடப்பட்ட இரத்தத்தின் காரணமாக தாங்கொணா  வலி அவருக்கு நேர்ந்தது.  உயிர்நாடியை நோக்கி குவிக்கப்பட்ட ரத்தத்தை மடை மாற்றுவதற்கு அவர் கால்களை அகற்றி, குதிகால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்தார். அந்த ஆசனத்தில் அவர் அமரும் பொழுது அவரது வலி கட்டுப்பட்டது. 

 இதுவே அவர் கண்ட முதல் ஆசனம்! அதுவே அவர் கண்டறிந்த ஆதியோகம்!! அவர்தான் இந்த நிலத்தின் ஆதியோகி!!!

 இந்த யோக ஆசனங்கள் ஆற்றலின் காரணமாக பிறக்கவில்லை, தேவையால் பிறந்தது. வலிகளைத் தீர்க்கப் பிறந்தது.

அந்த நிலையில், நெருப்பு உள்நோக்கி திரும்பியது.  
வலி மறையவில்லை, ஆனால் அது திசை மாற்றப்பட்டது .  அந்த வலியை அவர் உடலில் கரைய விட்டார், மூச்சின் வழியாக வெளியேற்றினார். அவர் யாருடனும் பேச விரும்பவில்லை.
மௌனம் அவரது குணமாக மாறியது.  
அவர் தியானிக்கத் தொடங்கினார்.  

 அவர்  அமர்ந்திருந்த அந்த ஆசனத்தின் பெயர் 'மூலபந்தாசனம் '.

 மூலம் என்றால் , "வேர்... அடித்தளம்..."; பந்தம் என்றால் பூட்டு என்று பொருள்படும்.

 இந்த ஆசனத்தின்  தொடர்புடைய மூலகம் -  நிலம், தொடர்புடைய புலன் - தொடுதல் உணர்வு.

 உலகில் முதன் முதலில் பிறப்பெடுத்தவை ஓருயிர் உயிரினங்கள். ஓருயிர் உயிர்களுக்கு இருந்த ஒரே அறிவு 'தொடுதல் அறிவு'. அந்தத் தொடுதல் அறிவைக் கொண்டுதான் அது தனது இரையைத் தேடியது, இணையைத் தேடியது. இந்த அறிவைக் கொண்டு மட்டுமே அது தனது சந்ததிப் பெருக்கத்தை நிகழ்த்தியது.

ஓறறிவாகிய தொடு உணர்வே, காமத்தின் நிலைக்கண்!

உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பதுபோல்,  இந்த உயிரின் இயக்க மையமாக இருப்பது  மூலாதாரம். ஆனால் தீண்டல் இச்சையினால் உந்தப் பட்டு இருக்கும் வரை, மூலாதாரத்தில்  மையம் கொண்டு இருக்கும்  உயிரின் இருப்பை மனது அறிவதில்லை.

படைப்புத் தொழிலின் ஆதாரம் இங்குதான் ஒரு பாம்பு போல் உறங்குகிறது. தொடுதல் உணர்வு தரும் இன்பத்தில் மயங்கி, அந்த ஆற்றல் அங்கு மட்டும்  செயல்படும்போது, ஓறறிவு உயிராக மட்டுமே நாம் இருக்கிறோம். இந்த உண்மை அவருக்கு தியானத்தின் மூலம் உணர்த்தப்பட்டது. 

 அதிகப்படியான பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்த முலாபந்தாசனம் உதவுகிறது என்றும்,  இந்த ஆசனம் மூல சக்கரமான மூலாதாரத்தை செயல்படுத்துகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார் . 

 அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவர் தியானிக்கத் தொடங்கியதும் அந்த வனத்தில் இருக்கும் விலங்குகள் அனைத்தும் தெய்வீக வாக்கிற்கு கட்டுப்பட்டது போல் அவரை சூழத் தொடங்கின.
 அவர் தனிமையை விரும்பி தியானத்தில் அமர்ந்தாலும், மனிதர்கள் அவரை தனித்து இருக்க விடவில்லை.

ஹரப்பாவில், ஒரு காலத்தில் துடிப்பாக இருந்த நகரங்களில் நோய்கள் பரவத் தொடங்கின. கழிவு நீரால் வியாதிகள் பரவின. எனவே, அவர்கள் தங்களைக் காக்க வேண்டி மற்ற நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினர். வேளிர்களும்  யாதவர்களும் தம்மைக் காக்க அவதரித்த கடவுளை பற்றி ஹரப்பர்களுக்கு செய்தி அனுப்பினர். ஹரப்பர்கள் நர்மதியின் பாதை வழியே பயணப்பட்டு சிவனை அடைந்தனர்.

அவர்கள் சிவனை  மரங்களிடையே விலங்குகளுக்கு மத்தியில் கண்டனர். அவர் அவர்களை அறிவால் குணப்படுத்தினார்.  அவர் அந்த மக்களுக்கு  கழிவு நீர் குழாய்களை அமைக்கவும், மூலிகைகள் மற்றும் நஞ்சுக்களால்  சிகிச்சையளிக்கவும், உடலை பலப்படுத்தும் யோக முறைகளையும் கற்றுக் கொடுத்தார் . 

 அவரது முன்னேற்பாடுகளால் அந்த நாகரீகம் அழிவிலிருந்து மீண்டது. புதிய கடவுளின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது.

ஆனால் அவர்கள் சிவனை தவறாகப் புரிந்து கொண்டனர்.

 சிந்து நதி நாகரிக மக்கள்,  ஆயர்களாக இருந்த பொழுதும், பசுக்களை விட   காளைகளே அவர்களை அதிகம் கவர்ந்தது. அவர்களது  சின்னங்கள் முழுக்க காளைகளே நிரம்பி இருந்தன. 

 காளைகள் ஆண்மையின் அடையாளம். ஆற்றலில் வெளிப்பாடு.

 ஆண்மையையும், வீரத்தையும், ஆற்றலையுமே அவர்கள் போற்றத்தக்கதாக கருதினர். சிவனையும் அவர்கள் ஆற்றலின் மறு உருவமாகத்தான் கருதினர். அவரது உயிர்நாடி எழுச்சி அதீத ஆற்றலின் பிரதிபலிப்பாகக் கருதப்பட்டது.

 தமிழர்களின் ஆதி குடிகளுக்குச் செய்யப்படும் அலங்காரமாகிய கொம்பு மற்றும் தோகை தலைப்பாகையுடன்  கூடிய, மூன்று முகங்கள் கொண்ட அவரது உருவத்தை ஆண்மை எழுச்சி அறிகுறியுடன் அவர்கள் அச்சில்  வடித்து வணங்கத் தொடங்கினர். 

 ஆனால் சிவன் தனது உருவத்தை வணங்குவதை விரும்பவில்லை. எனவே உருவம் அற்ற லிங்கத்தை அந்த மக்கள் ஆற்றலின் உருவமாக வணங்க ஆரம்பித்தனர்.

ஆனால் சிவனை ஏற்கனவே வெறுப்புடன் பார்த்த வடக்கு மன்னன் தக்ஷன், இதை தெய்வ அவமதிப்பாகக் கண்டான்.

லிங்கச் சின்னங்கள் தக்ஷனை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
“இந்த சிஷ்ணதேவர்கள்,” அவன் இகழ்ந்தான், “அவர்கள் ஆண்மையை வணங்கத் துணிகிறார்கள். அசிங்கத்தை பின்பற்றுகிறார்கள்… புனிதத்தை அவமானமாக மாற்றுகிறார்கள்.” என்று ஆவேசப்பட்டான்.

//ரிக்வேதம் VII. 21-5. சிஷ்ணதேவனை (லிங்கத்தினை) தெய்வமாகக் கொண்டோர் எமது புனித (வழிபாட்டிற்கு) இடத்திற்கு வராதிருக்கக் கடவர்.//


மூன்று முகம் கொண்ட சிவனை காணும் பொழுதெல்லாம் தஷனுக்கு கோபம் பொங்கியது. அவனது தந்தைக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அதில் ஒரு முகமான  தன்முனைப்பை சிவன் அழித்து விட்டதாக அவன் கருதினான் 

  இந்த முகங்கள் ஒரு மனிதனின் கோபம் சாந்தம் போன்றவற்றை குறிப்பன என்றும் ஆக்கல் அழித்தல் காத்தல் போன்றவற்றை குறிப்பன என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில் சிவனுக்கு இருப்பதும்  ஐந்து முகங்கள் தான். 

இந்து சைவ ஆகமப் பாரம்பரியத்தின் படி, சிவன் ஐந்து தெய்வீக செயல்களை நிகழ்த்துவதாக சைவர்கள் நம்புகின்றனர்: ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (பாதுகாப்பு), ஸம்ஹாரம் (அழிவு), அனுகிரகம் (அருள்), திரோகணா/அவித்யா (மாயை).

இந்த ஐந்து செயல்களில் முதல் மூன்று செயல்கள் சிவனின் முகங்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றன: ஹரப்ப சின்னத்தில் இருக்கும் மூன்று முகங்களைத் தவிர பின்னாலும் முகம் மறைந்துள்ளது.

 ஆனால் ஆதியில் வழிபடப்பட்டது வெறும் லிங்கம் மட்டுமே. அந்த லிங்கமும் ஆவுடையில்லாத லிங்கம். அது வெறும் ஆண்மையின் ஆற்றலைக் குறிக்கும் லிங்கம்.

 
தமிழர்கள் ஆதியில் பெருந்தெய்வங்களாய் வணங்கியது மாயோன், சேயோன், வருணன், வேந்தன் எனும் நா நில தெய்வங்களும் கொற்றவை எனப்படும் பெண் தெய்வமும் தான். இந்தத் தெய்வங்கள் அனைத்தும் அந்தந்த நிலங்களின் ஆற்றல் அல்லது தொழில் நிமித்த வெளிப்பாடுகள். தொல்காப்பியர் காலம் வரை இது தான் தமிழகத்தில் நிலவரம். 
ஆனால் கடைச் சங்க காலத்தில் மற்ற சமூகத்தினரின் தாக்கம் தமிழகத்தில் ஊடுறுவும் பொழுது மாயோன் சேயோன் இருவரும் திருமால் முருகன் என மாற்றமடைகின்றனர். துவாரகை தெய்வங்களான பலதேவன் வழிபாடு, காமன் வழிபாடுகள் ஆரம்பிக்கின்றன. திருமால்‌ வழிபாட்டில்‌  ‘செங்கட்காரி' (வாசுதேவன்‌), ‘கருங்கண்‌ வெள்ளை’ (சங்‌ கருடணன்‌), 'பொன்கண்‌ பச்சை” (பிரத்தியும்தன்‌), ‘பைங்கண்‌ மால்’ (அநிருத்தன்‌) என்னும்‌ பெயர்கள்‌ பரிபாடலில்‌ வழங்குகின்றன. 
ரிக் வேதத்தில் “சிவன்” என்பது ஆதியில் ஒரு தனிப்பட்ட கடவுளின் பெயராக இல்லை; அது “மங்களமானவன்”, “நன்மை தருபவன்” என்ற பொருளுடைய ஒரு சிறப்புப் பெயராக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் அந்த “சிவன்” என்ற அடைமொழி ரிக்வேதத்தில் காணப்பட்ட “ருத்ரன்” என்ற கடவுளோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்தது, புதிய தெய்வ அடையாளமாக மாறியது.

ஶ்வேதாஶ்வதர உபநிஷத் மற்றும் மகாபாரத காலத்தில், “சிவன்” என்பவர் முழுமுதற்கடவுள் .நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது. புதிய கடவுளின் கொள்கைகளால் உடல் மற்றும் உள்ளம் நலமடைவதை கண்ட வேதாந்திகள் தங்களின் பழைய கடவுள்கள் பலரை கைவிட்டு விட்டு சிவனை முதற்கடவுளாக வழிபட ஆரம்பித்ததை நாம் அறிய முடிகிறது.

வேதாந்திகளால் இறைவனாக்கப்பட்டார் அவர். வேதாந்திகளின் பிறமொழிக் கலப்பு நம்மிடம் ஊடுருவுகையில் நமது மக்களும் அவரை இறைவனாக பார்க்க ஆரம்பித்தனர். கடைச்சங்க நூல்களில் சிறிது சிறிதாக அவருக்கு இறைவனுக்கான பதவி கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. 

சங்க காலப் பாடல்களில் மணிமிடற்றோன் என குறிப்பிடத் தொடங்கப் படுகிறார் அவர். காந்திக்கு தமிழகம் ‘அண்ணல்’ பட்டம் கொடுத்தது போல் அவருக்கும்  அண்ணல் பட்டம் கொடுக்கப்படுகிறது. பாடல்களில் “மிடறண்ணல்” எனப்படுகிறார். இறுதியில் “காரியுண்டிக்கடவுள்‌” என்றும்‌, “மாற்றருங்‌ கணிச்சி மணிமிடற்றோன்‌”என்றும்‌வழிபட்டு வந்ததைக்‌ காண்கிறோம்‌. ‘மணி’ என்பது நீலநிறத்தைக் குறிக்கும். காரி என்பது கருப்புநிறத்தையும் குறிக்கும், விஷத்தையும் குறிக்கும்.
ஹரப்ப சின்னங்களில் கொம்பு வைத்த ஒரு மனிதரும், அவருக்கு அருகில் மும்முனை சூலம் – திரிசூலம், அல்லது பலமுனை சூலம் அடிக்கடி காணப்படுகிறது. இந்த சின்னத்தின் பெயர் ‘மகாதேவன்’ என்று ஆய்வாளர் ‘ஐராவதம் மஹாதேவன்’ அவர்கள் குறிப்பிடுகிறார்.

 ஐராவதம் மஹாதேவன் அவர்கள் இச்சின்னத்தை ‘நீல கண்டன்’ எனவும் மொழிபெயர்க்கிறார். கழுத்தைச் சுற்றி நாக வடிவில் அவர் அணிந்திருந்த உலோகம் அல்லது உலோகக்கலவை ஏற்படுத்திய கறையாகவே இது இருந்திருக்கவேண்டும். செப்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் இவற்றின் கலவையான ஐம்பொன் உலோகக் கலவை சித்தர்கள் கண்டறிந்தது என்பதை நாம் அறிவோம். செம்பு, நிக்கல், நாகம், இரும்பு, மற்றும் வெள்ளி முதலிய உலோகங்கள் அல்லது அவை இருக்கும் கலவைகள், தோலில் கறையை ஏற்படுத்த வல்லவை.

’அணியலும் அணிந்தன்று நஞ்சினது கறுப்பு திருமிடற்றை’ 
‘கறை மிடறும் அணியலும் அணிந்தன்று’ போன்ற வரிகள் இக்கருத்திற்கு வலுசேர்க்கின்றன.
படம்: வெள்ளி மற்றும் வெள்ளிகலந்துள்ள ஆபரணத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் localized argyria – நீலக்கறை
 
பண்டைய தமிழ் மற்றும் ஹரப்ப நாகரிகரிகங்கள் இவ்வாறு சிவனது ஆரம்ப கால வாழ்வை நமக்குக் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த இரு நாகரிக மக்களுமே; சிவன் – தஷிணாமூர்தியாக குருவின் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்கு போதித்த போதனையால் செழித்தவர்கள். அதனால் இருநாகரிக மக்களும் அவரைத் தொழ ஆரம்பித்தனர். அதிலும் ஹரப்பர்கள் லிங்கத்தையும் சிவனது ஆற்றல் வெளிப்பாடாகக்  கருதினர். அதனை வணங்க ஆரம்பித்தனர். அந்த வழிபாட்டு முறைகள் தக்ஷன் முதலிய வேதாந்திகளை சினம் கொள்ள வைத்தது.

 இந்த வழிபாட்டு முறைகளைக் கண்டு சிவனும் வருத்தம் கொண்டார். தன்னை பின்பற்றுபவர்களும் சரி, தன்னை எதிர்ப்பவர்களும் சரி, தனது கொள்கைகளை புரிந்து கொள்ளாதது சிவனுக்கு வருத்தத்தை அளித்தது. மேலும் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் அவர் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த வருத்தத்துடன் அவர் நர்மதி நதிக்கரையில் உலாவிய பொழுது லிங்க வடிவில் ஒரு கல்லைக் கண்டார்.
 வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன்  அது காட்சியளித்தது. அது இரு வேறு கற்களின் இணைப்பு.
  அதைக் காணும் பொழுது சிவனுக்கு சமநிலை தத்துவம் நினைவுக்கு வந்தது.

இது பின்னர் மக்களால் பாண லிங்கம் என அழைக்கப்பட்டது.  இதையும் மக்கள் லிங்கம் வழிபடத் தொடங்கினர்.
 சிவன் முன்னிறுத்தியது கொள்கைகளை தான். அந்தக் கல்லின் மூலம் உணர்த்தப்படும் உருவகமான உண்மையைத்தான் அவர் வலியுறுத்தினார். அந்தக் கல் உணர்த்திய தத்துவம் தான் சிவனின் கொள்கை. சிவனின் சித்தாந்தம்.
 சிவனுக்கு வழிபடக்கூடிய கற்களில் சக்தி இல்லை என்பது தெரியும்.
 மக்கள் வழிபட வேண்டியது, அது போதிக்கும் பாடம். 

அந்தக் கல்லை அவர் எதிர் துருவங்களின் இணைப்பாக கருதினார். இரு வேறு ஆற்றல்களின் சங்கமமாக கருதினார். 

தெய்வீகம் என்பது அதீதமான ஒன்றல்ல. தெய்வீகம் என்பது இரு அதீத  ஆற்றல்களின் ஒத்திசைவினால் பிறந்த சமநிலை.  

இரவும் பகலும்...
ஆணும் பெண்ணும்...
வீரமும் காதலும்...
சிவனும் சக்தியும்.  
 என்று அதீத ஆற்றல்களின் சங்கமம் நிகழும் பொழுதுதான் தெய்வீகம் பிறப்பெடுக்கும்.

 இந்த இணைப்பு  இல்லாமல், படைப்பு இல்லை. 

இதுவே சிவனின் முதன்மையான சித்தாந்தம். 

 அதீத ஆற்றலின் வாதையை அனுபவித்துக் கொண்டிருந்த சிவனை இன்னும் சக்தி  அரவணைக்கவில்லை. அந்த அரவணைப்பினால் மட்டுமே அவரது உடல் சமநிலையை அடையும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
 அந்த அரவணைப்பின் அடித்தளம் 'அன்பு' எனும் உரிப்பொருள்.
 முதற் பொருளையும் கருப்பொருளையும் ஆதாரமாகக் கொண்டு ஜீவித்திருக்கச் செய்யவல்ல உரிப்பொருள் 'காதல்' மட்டுமே.

அதுவே புனிதம்.
அன்பே தொழத்தக்கது.
அன்பே சிவம்.

 சிவனது அடிப்படைக் கொள்கையான சமநிலை மற்றும் காதலை ஒரு சேர வலியுறுத்தும்  முக்கிய சின்னமே ஆவுடையோடு கூடிய லிங்கம். 

ஆனால் சிவனின் இந்த சித்தாந்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த சித்தாந்தம்  வேதாந்தத்திற்கு எதிரான கருத்தாகக் கருதப்பட்டது.
 அதனால் அந்த லிங்கங்கள் உடைக்கப்பட்டன,  அவரது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அவரது சித்தாந்தங்கள் மாற்றியும் மறுத்தும்  எழுதப்பட்டன. 
 இதன் காரணமாக அவரது கொள்கைகள் சிதறடிக்கப்பட்டன... நீர்த்துப் போக வைக்கப்பட்டன... மழுங்கடிக்கப்பட்டன...
இறுதியில் மறக்கப்பட்டன.

ஆனால் முற்றிலுமாக இழக்கப்படவில்லை!

அவரது சித்தாந்தம் எந்தக் கலப்படமும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 அவர் தனது சித்தாந்தங்களை பாதுகாக்க மொழியை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்
தனது சித்தாந்தங்களை அவர்   தனக்கு ஒருபோதும் துரோகம் செய்யாத... இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் நினைத்துக் கொண்டிருக்கின்ற  ஒரு மண்ணின் மொழியில் அவர் விதைத்துள்ளார்.  

 அந்த மண்... தமிழ் மண்! 
அந்த மொழி... தமிழ் மொழி!!

அதன் இலக்கணம் அவர் கூறிய உண்மைகளை, யுகங்கள் பல கடந்தும் தூய்மையாகத் தாங்கியது. 
ஒருவர் இடத்தில் பிறந்தாலும், அங்கே எந்த தெய்வம் குடியிருந்தாலும், அந்நிலத்தின் முதற்பொருள் நிலமும் பொழுதும் மட்டுமே. அதுவே அடித்தளம். அந்த அடித்தளத்தை அச்சாரமாகக்கொண்டு கருப்பொருட்கள் ஜனித்திருக்க, உரிப்பொருளாம் அன்பெனும் ஜோதி அணையாவிளக்காக அங்கே ஒளிவீசத்தொடங்கும் என்பதே சிவன் நமக்களித்த வாழ்வுக்காண இலக்கணம்.

ஆன்மாவை அறிய முயலும் இயக்கங்களே ஆன்மீக இயக்கங்கள். அவற்றின் கொள்கைகள் பலவிதம்.ஆனால் தமிழர்களின் உயிர் அல்லது ஆன்மாவைப்பற்றிய புரிதல் மிக எளிதானது.

 “அன்பின் வழியது உயிர்நிலை” என்பதே தமிழர்களின் புரிதல்.
 சக உயிர்கள் மீதான அன்பு மற்றும் தன் உடம்பின் மீதான அன்பு ஒன்றே தன்னையும் தான் சாந்த சமூகத்தையும் காக்கவல்லது. ஆனால் உயிரை விட மேலானது ஒழுக்கம். 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
அந்த ஒழுகலாறை திணையியமாக நமக்கு வடிவைமைத்துக்கொடுத்தது ஆதிசிவன்.

வாழ்வை இந்தவகையில் அனுகும் முறையை தமிழர்கள் மட்டுமே பின்பற்றினர் எனக்கூறிவிட முடியாது. 
பின்வரும் ஹரப்ப அச்சில் முதலில் இருக்கும் சின்னத்தை ஜாடி அல்லது கமண்டலம் என்கின்றனர், சிலர் அதை உரிப்பொருளாம் அன்பைக்குறிக்கும் ஆவுடை லிங்கம் எனவும் மொழிபெயர்க்கின்றனர். அந்த அச்சில் அடுத்து காணப்படுவது பலபல் சூலத்தைக் கொண்ட கருப்பொருளாம் தெய்வம், அதற்கடுத்தது இருமீன் எனும் பொழுதின் சின்னம்.
கடைசியாக கட்டத்திற்குள் கட்டம் இருக்கும் சின்னத்தை இல்லத்தில் இருக்கும் தலைவனைக் குறிப்பிடுகிறது என்கின்றனர். இதை வலதில் இருந்து இடதாகப் படிக்கும் போது; இல்லம் எனும் நிலம், இருமீன் எனும் பொழுது, தெய்வம் எனும் கருப்பொருள், காதல் எனும் உரிப்பொருள் எனக் குறிப்பிட்டுருக்கலாம் எனக் கருதவும் இடமிருக்கிறது.எனவே ஹரப்பர்களும் இதே ஒழுகலாறைப் பின்பற்றி இருந்திருக்கின்றனர்.
ஆனால் அவர் போதித்த இந்த வாழ்வுமுறைக்கான இலக்கணம் இன்றும் நிலைத்திருப்பது தமிழகத்தில் மட்டும் தான். 

 தமிழ் மண்ணே அவரது சித்தாந்தத்தின் விதை நெல் பாதுகாக்கப்படும் இடம். 
 தமிழ் மொழியின் இலக்கணமே அவரது சித்தாந்தத்தின் மூலப்பிரதி.
இந்தக் கொள்கைகளை தமிழர்கள் தங்கள் மொழியோடு  கலந்துப் பழகி, பயின்று, வாழ்ந்து வருகின்றனர் 
 தமிழர்களால் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் எதையும் அனுமதிக்க மனம் ஒப்பவில்லை. 

 சிவன் தங்களில் ஒருவன் தங்களுடையவன் என்பதில் தமிழர்களுக்கு எள்ளளவும்  சந்தேகம் இல்லை.  

இருப்பினும் அவன் தங்களுக்கானவன் என்று மட்டும் சுயநலமாக அவர்கள் எண்ணவில்லை. 

சிவனது சித்தாந்தங்கள் அனைத்து நாட்டினருக்கும்  உரித்தானவை. அனைத்து நாட்டினருக்கும் அவசியமானவை. ஏனெனில் உலகினை காக்கக்கூடிய சித்தாந்தங்கள் அவை.
இன்றும் உலகம், விளைச்சலுக்காக வேகமாக ஓடுகிறது... 

சமநிலையை மறந்து தீவிரங்களைத் துரத்துகிறது... அதீதங்களின் பின் அலைகிறது.

அது ஓநாயைக் கொல்கிறது.  
மண்ணை விஷமாக்குகிறது.  
ஆடுகளின் இடம்பெயர்வின் தாளத்தை புறக்கணிக்கிறது.
மழைப் பாதைகளின் புனிதத்தை அது மறுதலிக்கிறது. 

இதன் விளைவாக அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
 அந்த அழிவில் இருந்து காக்க வல்லவை சிவனின் கொள்கைகள்.
அவரது கொள்கைகளால் தான் இந்த உலகம் காக்கப்படப் போகிறது. 
 தென்னாட்டு சிவனது சித்தாந்தம்,  எல்லா உயிர்களையும் காக்க வல்லது!
 அந்த சித்தாந்தம்  எந்நாட்டவர்க்கும் பொதுவானது!!
அதுவே இறையாகத் தொழத்தக்கது!!
                                                                      -------===------
                                          தென்னாடுடைய சிவனே போற்றி!
                             எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி!!






                                                                    -------===------
                                                         முதல் பாகம் முற்றும்.

கபம்

  கபம்: ‘வளி’யாக உள் செல்லும் காற்று, கணையத்தின் மற்றும் ஈரலின் நொதிகள் துணையுடன் உணவை எரித்து வெப்பம் எனும் ஆற்றலைப் பெறுகிறது (அழல் அல்ல...