இந்திய ஆன்மிக மரபில் பல நூற்றாண்டுகளாக சிவன் எனும் கடவுள் மிகுந்த மர்மத்துடன் அணுகப்படுகிறார். அழிவின் கடவுளாகவும், மௌனமே உருவான துறவியாகவும், பேரானந்த நடனம் புரியும் ஆடல் வல்லானாகவும், உமையின் காதலனாகவும், அன்பின் ஆதி ஊற்றாகவும், நஞ்சுக்களின் தெய்வமாகவும், விலங்குகளின் காவலனாகவும் மேலும் பல முரண்பாடு கொண்ட தோற்றங்களை ஒன்றாகக் கொண்ட ஒரு ஆளுமையாக அவர் சித்தரிக்கப்படுகிறார்.
புராணக் கதைகளின் மூலமாகவே இதுகாறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற இந்த தெய்வீக உருவத்தின் பின்னால், மக்களை வழிநடத்திய மனிதரின் போற்றத்தக்க கதை ஒன்று மறைந்திருக்கலாம் அல்லவா?
அவரது ஞானமும், வாழ்வியல் போதனைகளும் தலைமுறைகள் பல கடந்து புராணங்களாகவும், மரபுகளாகவும் தற்குறிப்பேற்றப்பட்டு இருக்கலாம் அல்லவா ?
இந்தக் கேள்விகளுக்கான பதில் தேடும் முயற்சியாக உருவானதே இந்த நாவல்.
இந்தச் சிறப்பு உரையாடலில், சிவனைப் பற்றிய தனது வித்தியாசமான மறுவாசிப்பை எழுத்தாளர் பகிர்ந்து கொள்கிறார். சங்கத் தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவ அறிவியல், தத்துவம் ஆகிய பல துறைகளின் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, சிவனை வெறும் தெய்வமாக அல்லாமல், மக்களை குணப்படுத்திய மருத்துவராகவும், ஆழ்ந்த சிந்தனையாளராகவும், ஞானாசிரியராகவும், கருணையின் வடிவமாகவும் அவர் மறுபரிசீலனை செய்கிறார்.
அறிவியல் ஆர்வத்தையும் தமிழர் பண்பாட்டு மரபின் மீதான ஆழ்ந்த மரியாதையையும் இணைக்கும் இந்த உரையாடல், சிவனைப் பற்றிய நம் வழக்கமான புரிதலைத் தாண்டி புதிய பரிமாணத்தை வழங்குகிறது.
இந்த இலக்கியப் பயணத்தை வடிவமைத்த உந்துதல்கள், ஆய்வுகள், எதிர்பாராத கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகளை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.
1. சிவன் பண்டைய மனித சமூகங்களில் வாழ்ந்த ஒரு உண்மையான மனிதராக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு முதன்முதலில் எப்போது தோன்றியது?
சிவன் ஒரு காலத்தில் மனிதர்களிடையே வாழ்ந்த உண்மையான மனிதராக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு முதன்முதலில் தோன்றியது, தமிழ்நாட்டைச் சேர்ந்த வள்ளலார் (இராமலிங்க அடிகளார்)அவர்களின் போதனைகளை படித்தபோதுதான்.
வள்ளலார் ஒரு சிறந்த ஞானி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி. ஆன்மிகத்தின் உச்ச நிலையை அவர் அடைந்ததாகவும், 1874-ஆம் ஆண்டு அவர் பூட்டப்பட்ட அறையிலிருந்து மர்மமான முறையில் மறைந்ததாகவும் மரபுகள் கூறுகின்றன. அக்கால பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆவணங்களிலும் இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
வள்ளலாரின் தத்துவத்தின் அடிப்படை 'ஜீவகாருண்யம்’. ஒவ்வொரு உயிரின் மீதும் அன்பு செலுத்துவதே இறை நிலையை அடையும் வழியாக அவர் போதித்துள்ளார். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கையும் இதுவே ஆகும். சிவனை சைவ சித்தாந்திகள் கடவுளாக வழிபடவில்லை. அவர்களுக்கு அன்பு தான் கடவுள். அன்பு தான் சிவம். அன்பும் சிவமும் வேறு வேறு இல்லை என்பதே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையாகும்.
அதே அன்பை போதித்த வள்ளலார், சிவனை நம்முடன் வாழ்ந்த ஒரு மனிதர் என்று தெளிவாக குறிப்பிடுகிறார். எந்த ஒரு மனிதனும் சிவனைப் போன்ற உயர்ந்த ஆன்மீக நிலையை அன்பின் மூலமாகவும், கருணையின் மூலமாகவும், ஜீவகாருண்யம் மூலமாகவும் அடைய முடியும் என்பதே வள்ளலாரின் போதனை. உலகில் இருக்கும் அனைத்து மதங்களின் அடிப்படைக் கொள்கையும் அன்புதான்.
வரலாற்றில் பதிவாகிய இயேசு, புத்தர் போன்ற கடவுள்கள் அன்பை போதித்த கதைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
பின்னாளில் கடவுளாக வணங்கப்பட்ட சிலர், உண்மையில் வரலாறு பதிவாகாத காலத்தில் வாழ்ந்த அசாதாரண மனிதர்களாக இருந்து, அவர்களின் வாழ்வும் போதனைகளும் காலப்போக்கில் புனிதமாக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?
இந்தக் கேள்வியே எனது நாவலுக்கான தொடக்க விதை?
இந்தக் கதை சிவனைப் பற்றிய புராணங்களை மறுத்து எழுதப்பட்டது அல்ல. அவரது வாழ்வுக்கு பின்னால் மறைந்திருக்கக்கூடிய மனித வரலாறு, பண்பாட்டு நினைவுகள் மற்றும் தத்துவப் பரிணாமங்களை இலக்கியத்தின் வழியாக ஆராய்வதற்காகவே இந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.
2. தமிழ் இலக்கியம், நாட்டுப்புற மரபுகள், தொல்லியல், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு துறைகளை இணைத்து சிவனின் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்துள்ளீர்கள். இந்த அணுகுமுறை எவ்வாறு உருவானது? இந்த நூலிலிருந்து வாசகர்கள் என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
இந்த நூல், எனது வாழ்க்கையில் இணையாகப் பயணித்த இரண்டு தேடல்களின் சங்கமமாக உருவானது. ஒன்று கால்நடை மருத்துவராக மருத்துவ அறிவியலின் வழியாக மேற்கொண்ட தேடல்; மற்றொன்று தமிழ் இலக்கியம், தொல்லியல், தத்துவம் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆராய்ந்த பயணம்.
கால்நடை மருத்துவராக எனது பணியில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது விலங்குகளைத் தாக்கும் வெறிநாய் (Rabies) போன்ற ஆட்கொல்லி நோய்கள் . வெறி நோய் போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆங்கில மருத்துவம் இதுவரையிலும் வைத்திய முறைகளை கண்டறியவில்லை. அந்த நோய் தாக்கினால் மரணம் உறுதி. இருந்தபோதிலும் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஏடுகளில் இதற்கான வைத்திய முறைகள் இந்தியாவில் இருந்ததற்கான சான்றுகளை அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த, வெறிநாய்க்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 'தஞ்சாவூர் மாத்திரைகள்' (Tanjavur Pills) என்ற ஆர்சனிக்–பாதரசம் அடிப்படையிலான சிகிச்சை முறையைப் பற்றி அறிந்தபோது, சித்த மருத்துவம், ரசவாதம் மற்றும் சிவனுடன் தொடர்புடைய 'ரசேஸ்வரர்' மரபுகள் மற்றும் 'பாஷாணங்கள்' குறித்து ஆராயத் தொடங்கினேன்.
அரசனிக் ( வெண் பாசனம் ) மற்றும் பாதரசம் போன்றவை கொடிய நஞ்சுகள்.
"எந்தத் தேவையின் அடிப்படையில் நஞ்சினை மருந்தாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்? அதை அவர் எவ்வாறு மருந்தாக மாற்றி இருப்பார்? "
இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேடத் துவங்கினேன்.
அதே நேரத்தில், தமிழக இலக்கணத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மனிதர்கள் எவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. குறிப்பாக அதன் ‘திணை’ கோட்பாட்டைப் படித்தபோது, இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சமநிலை, சூழலுக்கும் மனித உளவியலுக்குமான தொடர்பு போன்ற கருத்துகள் தொடர்ந்து தமிழ் இலக்கணத்தில், தமிழகத்தின் சங்க கால பாடல்களில் வெளிப்படுவதை உணர்ந்தேன். ஒரு மொழியின் இலக்கணத்தில் வாழ்வியலை சேர்ப்பதற்கான காரணம் என்ன? அதை யார் சேர்த்திருப்பார்கள் என்கின்ற கேள்வி என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது?
அவர் யார் என்னும் கேள்விகளுக்கு விடையை ஆராய்ந்த பொழுது அதன் முடிவில் வந்து நின்றவரின் பெயர் சிவன்.
முருகன் எனும் கடவுள் ஐந்திரம் எனும் இலக்கண நூலை தோற்றுவித்தார், அதன் அடிப்படையில் அகத்தியம் எனும் நூல் எழுதப்பட்டது. பின்னர் தொல்காப்பியர் அவற்றை இலக்கணமாக ஒழுங்குபடுத்தினார் என்பதே இதுகாறும் நாம் அறிந்த தகவல்கள்.
மொழியின் வேரை ஆராய்ந்து கொண்டு போனால் அங்கே சிவன் என்னும் கடவுளின் பெயர் இறுதியில் நிற்கிறது. நடனம் முதலிய கலைகளை ஆராய்ந்து கொண்டு போனாலும் அவைகளும் சிவன் என்பவரிடம் சென்று தான் முடிகிறது. யோகம், பிராணாயாமம், சித்துக்கள், பாஷாணங்கள் அனைத்தின் முடிவிலும் அவரது பெயரே வந்து நிற்கிறது.
"இந்த அனைத்தையும் தனித்தனி துறைகளாகப் பார்க்காமல், அவை அனைத்தும் ஒருகாலத்தில் வாழ்ந்த ஒரு அசாதாரண மனிதரின் வாழ்க்கை நினைவுகளை... அனுபவங்களை... வெவ்வேறு வடிவங்களில் பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவ மற்றும் வாழ்வியல் முறைகள் என்ற வகையில் அணுகலாமா? " என்ற என்ற கேள்வி எனக்குள் எழுந்தது . அந்தக் கேள்விக்கான பதிலாகவே இந்த நாவல் உருவானது.
தமிழ் இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், குறும்பர்களின் நாட்டுப்புறக் கதைகள், உலோகவியல், மருத்துவ அறிவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கற்கால மக்களிடையே வாழ்ந்த, சக உயிர்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட ஒரு தத்துவஞானியாக சிவனை மறுவடிவமைத்துள்ளேன்.
ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய காதல், திருமணம், பிரிவு மற்றும் பிரிவின் வலி முதலிய அனைத்தையும் அவர் கடந்து வந்திருப்பதாக அவரது புராணம் கூறுகிறது. அசாதாரண உடல் வாதைகளையும் மன வாதைகளையும் தனது ஞானத்தாலும் அன்பினாலும் வெற்றி கொண்ட ஒரு மனிதன்; இது போன்ற துன்பங்களை தனது மக்கள் அனுபவிக்க கூடாது எனும் நோக்கில் நமக்கான வாழ்வியலை ஏன் நம் மொழியில் கலந்திருக்கக்கூடாது?
'மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்' இன்றுவரையிலும் நமது வாழ்வை செதுக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம் அல்லவா?
எனவே இந்த நாவலில், சிவன் வழிபடப்பட வேண்டிய தெய்வமாக மட்டுமல்லாமல் ; அன்பையும் கருணையும் வெளிப்படுத்தி இயற்கையோடு இணைத்து வாழ வேண்டிய தேவையை மக்களுக்கு போதிக்கும் ஒரு ஞானியாக சித்தரித்துள்ளேன்.
இந்த நூலை வாசித்த பிறகு, தமிழர் நாகரிகத்தின் ஆழத்தையும் அறிவியல் மரபுகளையும் வாசகர்கள் புதிய பார்வையில் அணுக வேண்டும் என்பதே என் விருப்பம். நமது பாரம்பரிய அறிவை மூடநம்பிக்கையாகவோ, கண்மூடித்தனமான பக்தியாகவோ அல்லாமல், அறிவியல் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் அணுக வேண்டும். அதைவிட முக்கியமாக, சிவன் நமக்கு உணர்த்தியதாக நான் நம்பும் மையச் செய்தியான "அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துதல், இயற்கையுடன் இணக்கமாக வாழ்தல்" என்பதையே வாசகர்கள் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
3. இந்த நூலுக்கான ஆய்வின்போது உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய கண்டுபிடிப்பு எது?
இந்த நூலுக்கான ஆய்வில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகத் தோன்றிய பல்வேறு தகவல்களும் சான்றுகளும் ஒரு கட்டத்தில் இயல்பாக ஒன்றோடொன்று இணைந்து, கதையின் போக்கை வடிவமைக்கத் தொடங்கிய தருணங்கள்தான்.
என்னை நீண்ட காலம் சிந்திக்க வைத்த முக்கியமான தொல்லியல் புதிர்களில் ஒன்று, தென்னிந்தியா ஏன்/ எப்படி கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கு ஒப்பீட்டளவில் வேகமாக கடந்துவிட்டது என்பதாகும். உலகின் பல பண்டைய நாகரிகங்களைப் போல நீண்டகால செம்புக் காலம் அல்லது வெண்கலக் காலம் இருந்ததற்கான சான்றுகள் இங்கு குறைவாகக் காணப்படுகின்றன. செம்பு மற்றும் வெண்கல உலோகங்களை உருக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை நாகரிகங்கள் கண்டறிய முற்பட்ட பொழுது அவைகள் ஆர்சனிக் மற்றும் ஈய நச்சுத்தன்மை போன்ற பிரச்சினைகளை கடந்தே வந்திருக்கின்றன. விஷங்களை பற்றிய மேம்பட்ட அறிவைக் கொண்ட ஒருவரால் தான் இதன் தாக்கங்களை உணர்ந்து மக்களை நேரடியாக இரும்பு பயன்பாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதுவே, சிவனை உலோகவியல் மற்றும் நச்சியல் அறிவில் தேர்ந்த ஒரு நிபுணராகச் சித்தரிக்கும் என் புனைவின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக அமைந்தது.
கங்கா சூடன், சந்திர சூடன், ஆலமர் செல்வன் என்னும் அடையாள பெயர்களை கொண்ட அவர், குளிரைநாடும் அழல் மிகுந்த உடலை கொண்டவராகவே இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். அழல் என்னும் வார்த்தை 'பித்தம்' என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. 'பித்தன்' என்றும் அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தனது உடலையே பரிசோதனை கூடமாக ஆக்கி, மேற்கூறிய மருத்துவ முறைகளை அவர் கண்டறிந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கின்றது. அழலைத் தவிர்ப்பதற்காகவே அவர் நிழல் மிகுந்த நிலங்களை/இடங்களை நாடி இருந்திருக்க வேண்டும் என்றும்... வெள்ளி போன்ற குளிர் தரும் உலோகங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் நான் கருதினேன். வெள்ளியை நீண்ட காலம் அணிந்திருப்பதால் சிவந்த தோல் உடையவர்களின் உடலில் நீல நிற கறையை அது ஏற்படுத்தக்கூடும். 'ஆர்ஜீரியா (Argyria)' என மருத்துவர்களால் அந்த அறிகுறி பெயரிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ உண்மை, 'நீலகண்டன்' என்ற புராணக் குறியீட்டிற்கு ஒரு கற்பனைமிக்க உயிரியல் விளக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. இவ்வாறு, மருத்துவ அறிவியலும் புராணக் கற்பனையும் என் நாவலில் இயல்பாக ஒன்றிணைந்தன.
மேலும், கர்நாடகத்தின் இரும்புக் காலப் பண்பாட்டைப் பற்றி ஆராய்ந்தபோது... குறிப்பாக 'சங்கனகல்லு', 'குப்பகல்' போன்ற இரும்புத் தாது வளமிக்க பகுதிகள், அங்குள்ள 'சாம்பல் மேடு (Ashmound)' தளங்கள், 'பீரப்பா' எனும் சிவனின் சகோதரரை பற்றிய நாட்டுப்புற கதைகள், காளைகள், திரிசூலத்தை ஒத்த கொம்புகள் மற்றும் மனித உருவங்கள் பொறிக்கப்பட்ட பாறை ஓவியங்கள், இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக என் கற்பனையில் இணைந்தன. அவை சிவனின் பயணத்திற்கான உயிரோட்டமிக்க பின்னணியை உருவாக்க உதவின.
என் மருத்துவப் பின்னணியும் பல பாரம்பரியச் சின்னங்களை புதிய கோணத்தில் அணுக உதவியது. 'வில்சன் நோய் (Wilson’s disease)', ஆர்சனிக் நச்சியல் போன்றவற்றைப் படித்தபோது, 'தட்சிணாமூர்த்தி', பேரானந்தத் தாண்டவம், மூலபந்தாசனம், பசுபதி முத்திரை உள்ளிட்ட பல சிவன் குறியீடுகளை மருத்துவ மற்றும் மனிதவியல் பார்வையுடன் கற்பனை ரீதியாக இணைக்க முடிந்தது.
இதுவரையிலும் அவரை ஆன்மீக நோக்கில் மட்டுமே அவரை நாம் அணுகி இருக்கிறோம். சிவன் தொடர்பான பல குறியீடுகளை மருத்துவ ரீதியாக அணுகிய பொழுது, எப்பேர்பட்ட வாதைகளை அவர் சகித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகியது.
ஆனால், இவை அனைத்தையும் விட என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது வேறு ஒன்று. தொல்லியல், மருத்துவ அறிவியல், தமிழ் இலக்கியம், நாட்டுப்புற மரபுகள் ஆகியவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; வரலாற்றுப் புனைவின் பார்வையில் அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்யக்கூடியவை, என்பதை நான் உணர்ந்தேன் . அவை அனைத்தும் இணைந்தபோதுதான், தென்னிந்தியாவின் பண்பாட்டு மரபுகளில் ஆழமாக வேரூன்றிய, அதே நேரத்தில் கற்பனைக்கும் நடைமுறைக்கும் இடமளிக்கும் ஒரு கதையை என்னால் உருவாக்க முடிந்தது.
4. சிவனைப் பற்றிய பொதுவான நம்பிக்கைகள் அல்லது புராணக் கருத்துகளில், இந்த நூலை எழுதும் போது நீங்கள் மறுபரிசீலனை செய்தவை ஏதேனும் உள்ளதா?
ஆம். இந்த நாவலை எழுதும் முழுப் பயணத்திலும் என்னை தொடர்ந்து துரத்திய ஒரு கேள்வி இருந்தது.
"சிவன் உண்மையிலேயே அழிவின் கடவுளா?"
இந்தியாவின் பல வடமாநில மரபுகளில், சிவன் படைப்பு–காத்தல்–அழித்தல் என்ற அண்டச் சுழற்சியில் 'அழிவின் தெய்வமாக' விளக்கப்படுகிறார். ஆனால் தமிழ்ச் சிந்தனையில் நாம் அவரை அன்பின் வடிவமாகத்தான் பார்த்திருக்கிறோம். “அன்பே சிவம்” என்பதை நமது கொள்கை.
வட இந்திய மரபில் அவர் ஏன் அழிவின் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
அவர் உண்மையில் அழிவின் கடவுளா?
இந்திய மரபில் ஒரு சாரரின் அழிவுக்கு அவர் காரணமாக இருந்திருக்கிறாரா?
இந்தக் கேள்விகளே என் நாவலின் முக்கியக் கருத்துகளில் ஒன்றாக மாறியது. அது குறித்து விரிவாக இரண்டாம் பாகத்தில் விவரிக்க எண்ணம் கொண்டுள்ளேன்.
அதேபோல், சிவலிங்க வழிபாடு பற்றியும் நான் புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினேன். அதனை வெறும் பாலியல் குறியீடாகப் பார்க்காமல், சிவனின் அனுபவித்த வாதையின்... அல்லது வாதைக்காக அவர் எடுத்த மருந்துகளின் பக்க விளைவாக இருந்திருக்கலாம்; பின்னாளில் அவை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைச் சாத்தியத்தை என் நாவலில் ஆராய்ந்துள்ளேன். அதிலிருந்து கதை மேலும் விரிந்து, ஆவுடைலிங்கம் எனும் எதிரெதிர் சக்திகளின் சமநிலையைக் குறிக்கும் ஆழமான தத்துவச் சின்னமாக உருவகப்படுத்தப்படுகிறது.
சிவன் இறுதியில் விரும்பியது என்னவென்றால், மக்கள் தன்னையே வழிபட வேண்டியதில்லை; மாறாக, தான் உணர்த்த விரும்பிய 'உலகளாவிய வாழ்வியல் நெறிகளை' நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதே. அந்தக் கோணத்தில், ஆவுடை லிங்கம் என்பது ஒரு வழிபாட்டுப் பொருளாக மட்டும் அல்லாமல், சமநிலை, படைப்பு, இணக்கம்... எல்லாவற்றிற்கும் மேலாக 'அன்பின்' குறியீடாக விளங்குகிறது என்று எனக்கு புரிய வந்தது .
என் விளக்கங்களுடன் அனைவரும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிவனைப் பற்றிய நாம் அறிந்த வழக்கமான கதைகளைத் தாண்டி, அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் தத்துவம், குறியீடுகள் மற்றும் மனிதநேயத்தை புதிய பார்வையில் சிந்திக்க இந்த நாவல் வாசகர்களை தூண்டும் என்று நம்புகிறேன்.
5. உங்கள் பார்வையில் சிவன் யார்? ஆன்மிக ஆசிரியரா, புரட்சிகர சிந்தனையாளரா, அல்லது கருணைமிக்க மனிதரா?
இவை அனைத்தும்தான்.
என் பார்வையில் சிவனை ஒரே ஒரு அடையாளத்திற்குள் அடைத்துவிட முடியாது.
அவர் ஒரு ஆன்மிக ஆசிரியர்.
அவர் ஒரு புரட்சிகர சிந்தனையாளர்.
அதே நேரத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு கருணைமிக்க மனிதர். 'அன்பே சிவம்’ என்ற தத்துவமே எனது நாவலின் மையக் கருத்தாகும். மனிதனின் உயர்ந்த ஆன்மிக நிலை என்பது அன்பும், கருணையும், அனைத்து உயிர்களிடமும் சமமான இரக்கமும் கொண்ட வாழ்க்கை வாழ்வதில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அதனால்தான், என் நாவலில் சிவன் அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வமாக அல்ல; மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து, நோய்களை குணப்படுத்தி, அறிவைப் பகிர்ந்து, இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ வழிகாட்டும் ஒரு ஞானியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக சிவன் எண்ணற்ற வடிவங்களில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார். என் நாவல் அவற்றை மறுப்பதற்கான முயற்சி அல்ல; மாறாக, அன்பு, அறிவு, கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அடையாளமாக சிவனை முன்னிறுத்தும் ஒரு முயற்சி.
6. கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படும் சிவனை மையமாகக் கொண்டு ஒரு நாவலை எழுதும்போது நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என்ன?
இந்த நூலை எழுதும்போது நான் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால், பக்திக்கும் கற்பனைக்கும் இடையில் சரியான சமநிலையைப் பேணுவதுதான். சிவன் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடனும் ஆன்மிக உணர்வுகளுடனும் இணைந்திருக்கும் உருவம். எனவே, அந்த நம்பிக்கையை முழு மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும் என்பதில் நான் எப்போதும் கவனமாக இருந்தேன்.
இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், நான் எனக்கே தொடர்ந்து நினைவூட்டிக்கொண்ட ஒரு விஷயம் "இது சிவனின் வாழ்க்கை வரலாறு அல்ல; தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு" என்பதுதான் அது.
அறிவியல் அல்லது வரலாற்று அடிப்படையிலான புதிய விளக்கங்களை நான் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், அவை வெறும் பரபரப்பையோ கிளர்ச்சியையோ ஏற்படுத்துவதற்காக அல்லாமல், சிவனின் காலத்தைத் தாண்டி நிற்கும் தத்துவங்களான அன்பு, கருணை, ஞானம், இயற்கையோடு இணக்கம் ஆகியவற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறதா?என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். அந்தக் கேள்வியே என் எழுத்திற்கு வழிகாட்டியாக இருந்தது.
என் நோக்கம் யாருடைய நம்பிக்கையையும் மறுப்பதோ, மாற்றுவதோ அல்ல. மாறாக, தமிழர் பண்பாட்டு மரபுகள், வரலாறு மற்றும் அறிவியல் சிந்தனையின் வெளிச்சத்தில் சிவனைப் பற்றிய ஒரு புதிய இலக்கியச் சாத்தியத்தை வாசகர்களுக்கு முன்வைப்பதே. வாசகர்கள் இந்த நாவலை "சிந்தனையைத் தூண்டும் ஒரு மாற்றுப் பார்வையாக" ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இறுதியில், இந்த நூல் பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. அவற்றுக்கிடையே ஒரு இணக்கமான உரையாடலை உருவாக்குவதற்காகவே எழுதப்பட்டது. அந்த உரையாடலே, நம் பாரம்பரியத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
7. இந்த நாவலில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான, எழுதும்போது அதிக நிறைவை அளித்த அத்தியாயம் எது?
எனக்கு மிகவும் நிறைவை அளித்த அத்தியாயம் 'ஓங்காரன்'
இந்தப் பகுதியில், சிவன் ஒரு தெய்வமாக அல்ல; இயற்கையின் ஒலிகளைக் கேட்டு, அவற்றின் ஒழுங்கை உணர்ந்து, மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஞானியாக வெளிப்படுகிறார்.
எழுதிக்கொண்டிருந்தபோதே பல முறை என்னை சிந்திக்க வைத்த அத்தியாயமும் இதுவே. ஏனெனில், இதில் புராணம், தமிழ் மரபு, மனிதப் பரிணாமம், மொழியின் தோற்றம் மற்றும் ஆன்மிகச் சிந்தனை ஆகியவை இயல்பாக ஒன்றிணைகின்றன.
8. சிவனைப் பற்றி இவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து, இந்த நாவலை எழுதிய பிறகு, ஆன்மிகம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?
நிச்சயமாக. இந்தப் பயணம் என்னுள் ஏற்படுத்திய மிகப் பெரிய மாற்றம் ஜீவகாருண்யத்தை பற்றிய எனது புரிதல்தான்.
தமிழ் இலக்கியங்கள், சித்த மருத்துவ மரபுகள், தொல்லியல் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் வழியாக சிவனைப் புரிந்துகொள்ள முயன்றபோது, அவர் ஒரு தெய்வமாக மட்டுமல்ல, உயிர்களின் துயரத்தைப் போக்க வந்த ஒரு மகத்தான மருத்துவரின் உருவகமாகவும் எனக்குத் தோன்றினார். என் கற்பனையில், அவர் மனிதர்களுக்கான மருத்துவராக மட்டுமல்லாமல்; விலங்குகளையும் கருணையுடன் குணப்படுத்திய முதல் கால்நடை மருத்துவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் வெளிப்படுத்தும் ஆழமான மருத்துவ அறிவைப் படித்தபோது, இத்தகைய மருத்துவ மரபுகளுக்கு ஊக்கமாக இருந்த மனிதர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்று நான் சிந்தித்தேன். என் மனதில் தோன்றிய பதில் மிகவும் எளிமையானது ' அவர் உயிர்களின் மீது அதீத ஜீவகாருண்யம் கொண்ட ஒருவர்.'
ஏனெனில், ஒரு உயிரின் வேதனையை உணராமல், அதை குணப்படுத்த முடியாது. அந்த உணர்வே, கால்நடை மருத்துவராக என்னுடைய பணியையும் மாற்றியது.
இந்தியாவின் இரு பெரும் மொழிக் குடும்பத்திற்கு அடித்தளமான இலக்கணத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர். இருந்த போதிலும் விலங்குகளோடு பழகிய அவர் அவைகளுடன் வார்த்தைகள் மூலம் உரையாடாமல் அவைகளின் மௌனத்தை மொழிபெயர்த்து அவற்றின் துன்பத்தின் வேர்களை நாடி இருக்க வேண்டும். விலங்குகளால் தங்கள் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது; எனவே, அவற்றின் மௌனத்தைக் கேட்பதே ஒரு கால்நடை மருத்துவரின் மிகப் பெரிய பொறுப்பு என்று அவரது வாழ்வியலின் வழி நான் நம்புகிறேன்.
இந்தப் பயணத்திற்குப் பிறகு, ஆன்மீகத்தைப் பற்றிய எனது புரிதல் முற்றிலும் மாறிவிட்டது. ஆன்மீகம் என்பது அற்புதங்களோ அதிசய சக்திகளோ அல்ல. மற்றொரு உயிரின் துயரத்தை உணர்ந்து, அதற்குக் கருணையுடன் பதிலளிக்கும் திறனே உண்மையான ஆன்மிகம் என்று நான் இன்று நம்புகிறேன். சித்த மரபுகள் கூறுவதுபோல், கருணையே ஞானத்தின் முதல் படி என்பதன் அர்த்தத்தை இந்த நூலை எழுதிய பிறகுதான் நான் இன்னும் ஆழமாக உணர்ந்தேன்.
என் நாவலில் சிவனைப் பற்றிய விளக்கங்களை வாசகர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் இந்த ஒரு செய்தியை மட்டும் மனதில் கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்:
'ஒவ்வொரு குணப்படுத்தலும் ஜீவகாருண்யத்தில் இருந்தே தொடங்குகிறது. மற்றொரு உயிரின் வேதனையை உணரும் அந்தத் திறன்தான் மனிதனின் உயர்ந்த ஆன்மிக நிலை.'
9. பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து இந்த நூலை வாசகர்களிடம் கொண்டு சென்ற பயணம் எப்படி இருந்தது? அந்த அனுபவம் ஒரு எழுத்தாளராக உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது?
"பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்துடன் எனது பயணம் மிகவும் இனிமையானதும் நிறைவானதுமான இருந்தது." ஆரம்பத்திலிருந்தே அவர்கள் இந்த நூலை மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் அணுகினர். வரலாறு, தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவ மரபுகள், மருத்துவ அறிவியல் மற்றும் புனைவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த நாவலை வாசகர்களிடம் அழகாகவும் தரமாகவும் கொண்டு சேர்ப்பது, அதை எழுதுவதற்குச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.
குறிப்பாக, நூலின் தயாரிப்புத் தரம் என்னை மிகவும் கவர்ந்தது. அட்டைப்பட வடிவமைப்பு நாவலின் ஆன்மாவை அழகாக வெளிப்படுத்துகிறது. அச்சுத் தரம், காகிதத்தின் தரம், பக்க வடிவமைப்பு என அனைத்தும் வாசகர்களுக்கு ஒரு உயர்தர வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. அச்சில் வெளிவந்த என் நூலை முதன்முறையாக கையில் எடுத்த தருணம், ஒரு எழுத்தாளராக எனக்கு மறக்க முடியாத பெருமையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது.
இன்றைய பதிப்புலகில், ஒரு நல்ல நூலை எழுதுவது பயணத்தின் பாதி மட்டுமே. அந்த நூல் சரியான வாசகர்களைச் சென்றடைவதுதான் மீதிப் பயணம். அந்த வகையில், நூலின் விளம்பரம், அறிமுகம் மற்றும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் பேப்பர் டவுன்ஸ் பதிப்பகம் எடுத்த அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
மிகுந்த தொழில்முறைத் திறனுடனும் அக்கறையுடனும் வாசகர்களிடம் கொண்டு சென்ற 'பேப்பர் டவுன்ஸ் பதிப்பகத்திற்கு' எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைவுரை:
இந்த உரையாடலின் வழியாக, ஆதியோகி நாவல் ஒரு புராணக் கதையின் மறுபதிப்பு மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. வரலாறு, தமிழ் இலக்கியம், தொல்லியல், சித்த மருத்துவத் தத்துவம், அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் வழியாக சிவனை அணுகும் ஒரு இலக்கியப் பயணமாக அது அமைகிறது.
வாசகர்கள் சிவனை கடவுளாகக் கண்டாலும், ஞானாசிரியராகக் கண்டாலும், மகத்தான வைத்தியராகக் கண்டாலும், அல்லது வரலாற்றில் வாழ்ந்த பேரறிவாளராகக் கண்டாலும், இந்த நாவல் எடுத்துரைக்கும் மையச் செய்தி ஒன்றே:
"அன்பே சிவம்"
இந்த நூலை அனைவரும் கட்டாயம் வாசித்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
உங்கள் பிரதியை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment