Friday, August 7, 2026

வாதம்‌

 வாதம்‌ 

 கொழுப்போ, சர்க்கரையோ, அமினோ அமிலமோ எதுவாகிலும் அது உணவின் வழியாகவே உடலுக்குள் பெறப்பட்டது.

இந்த ஆற்றல் மூலக்கூறுகள் ‘வளி’ எனும் பிராண வாயுவால் தான் எரிக்கப்படுகிறது.

 வாதம்‌ என்னும்‌ சொல்லை திருவள்ளுவர்‌ திருக்குறளில்‌ ‘வளி’ என்றே குறிப்பிடுகிறார்.

‘வாதம்’ ‌ என்னும்‌ சொல்‌ பல பொருள்பட தமிழ்‌ மக்களிடையே வழங்கப்பட்டு வருகிறது. வாதம் என்பது பேச்சாற்றலைக் குறிக்கவும் நம்மால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல்லாகும்.  சில உலோகங்களை பொன்னாக மாற்றுவதையும் இரச’வாதம்’ எனக்குறித்தனர். எனினும்‌ வாதத்தை ‘வாயு/வளி ’ என்ற சொல்லாலும்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த வாயு என்ற சொல்‌ காற்றையும்‌ குறிக்கின்றது. உடலில்‌ இயங்கும்படியாக ‘உயிர்’ தாதுவையும்‌ குறிகின்றது. இதனால்‌ 'வெளி' எனப்படும் காற்றைக் குறிக்கப்பயன்படும் 'வாயு' எனும்சொல்லும்,‌ உடலில்‌ இயங்கும்படியான வாயுவும்‌ ஒன்றா என்ற ஐயம்‌ தோன்றி அநேகக்‌ குழப்பங்கள்‌ ஏற்படுகின்றன.

உடலில்‌ இயங்குகின்ற உயிர்த்தாது வாதம்‌, வளி, வாயு என்ற சொற்களால்‌ குறிப்பிடப்பட்டன என்றுணர வேண்டும்‌ என்கிறது 'உடல் தத்துவம்' புத்தகம். புறத்தே உலாவுகின்ற காற்றை 'கால்‌, சாற்று' என்று அறிவுறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. காற்று; செல்களில் வாத உயிர்த்தாதுவை மிகச் செய்தபடியால்‌, சித்தர்கள்‌ அதனையும்‌ உயிர்த்தாதுவாக வளி, வாயு என்று; குறிப்பிட்டுள்ளனர் எனவும் கருதுவதற்கு இடமிருக்கிறது‌. 

 இந்த வாயு எவ்வாறு தகனத்திற்கு உதவி புரிந்து ஆற்றலை உடலுக்கு அளிக்கிறது என்பதை முந்தைய பதிவில் ஏற்கனவே  பார்த்து விட்டோம்.


வாதம்‌ என்பது சீவனின்‌ ஆக்கல்‌ தொழிலைப்‌ புரிகின்ற உயிர் சக்தியாகும்‌. அதனை கண்கூடாகப்‌ பார்க்க முடியாது. அதனின்‌ இயக்கத்தினால்‌ அவையங்கள்‌ தொழில்‌ புரிவதால்‌ அவதானிக்கலாம்‌.

சித்தர்‌கள்‌ ஆன்ம சக்தியைக்‌ 'குண்டலினி சக்தி' என்றும்‌ கூறுகின்றனர்‌. குண்டலினி சக்தியின்‌ பண்பை ஒரு பாம்பானது தன்‌ புற்றில்‌ வளைய வளையமாகச்‌ சுருட்டி படுத்துச்கொண்டிருக்கும்‌ நிலைக்கு ஒப்பிடப்‌பட்டுள்ளது. 

 சித்த மருத்துவத்தில் கூறப்படும் வாதத்தின் இயக்க பண்புகளை, நவீன அறிவியலில் நரம்பு மண்டலத்தின் இயக்கம், தகவல் பரிமாற்றம், உடல் இயக்க கட்டுப்பாடு போன்றவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். பலகோடி செல்கள் எனப்படும் நம் உடலின் சீவராசிகள், வாதம் பித்தம் எனும்‌ உயிர்ச்‌ சக்திகள்‌; நரம்பு மண்டலங்களிலிருந்து கொண்டு நரம்புகளின்‌ மூலமாகச்‌ செய்வுணர்வு, மெய்யுணர்வு, சூடுணர்வு, குளிர்வுணர்வு போன்ற அநேக உணர்ச்சி நிகழ்வுகளுக்குக்‌ காரண சக்திகளாக உடலை இயக்குகின்றன என்பதே இதன் பொருளாகும்.

வாத தோஷம் உடலின் அனைத்து இயக்கங்களையும், நரம்புத் தூண்டுதல்களின் பரிமாற்றத்தையும், உணர்வு மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயல்பாட்டுக் கொள்கையாக சித்த மருத்துவம் விளக்குகிறது. இதனை நவீன உடலியலில் உள்ள நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுடன், குறிப்பாக கார்டிகோஸ்பைனல் (Corticospinal) போன்ற மோட்டார் நரம்புப் பாதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சித்த மருத்துவ நூல்களில், வாதத்தின் இயக்கம் 'நாடிகள்' வழியாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதில் முக்கியமான இரண்டு நாடிகள் இடகலை மற்றும் பிங்கலை. 

'இடகலை நாடி'வலது காலிலிருந்து மேலெழுந்து,  இடப்பக்கமாகச் சென்று, கத்திரிக்கோலைப் போலக் குறுக்காக மாறி,  இடது பக்கம் முடிவடைகிறது என்று வர்ணிக்கப்படுகிறது.

'பிங்கலை நாடி' இடது காலிலிருந்து மேலெழுந்து,   கத்திரிக்கோலைப் போலக் குறுக்காக மாறி, தலையின் வலப்பக்கத்தை அடைகிறது என்று கூறப்படுகிறது.


இவை நரம்பியல் துறையில் கூறப்படும் 'மேல்மோட்டார் நரம்பு (Upper Motor Neuron) இழைகளின் 'குறுக்குக் கடத்தல் (Decussation)' என்ற நிகழ்வுடன் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்துப் போகிறது  

கார்டிகோஸ்பைனல் நரம்பு இழைகள் மூளைத்தண்டில் எதிர்ப்பக்கத்திற்குக் குறுக்காகக் கடப்பதால்தான், 'வலது மூளையில் ஏற்படும் பாதிப்பு இடது உடல் பக்கத்தில் பக்க'வாதத்தை' உருவாக்குகிறது; அதேபோல் இடது மூளையில் ஏற்படும் பாதிப்பு வலது உடல் பக்கத்தை பாதிக்கிறது.'

 இந்த நாடிகள் சுவாசத்துடனும் தொடர்பு கொண்டவை. அவற்றிலும் இந்த இடது வலது பிரிவினைகள் கூறப்படுகின்றன.

வளி எனும் காற்றுக்கும் அழலுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நாம் அறிவோம். சுவாசிப்பதன் மூலமே வளி உடலுக்குள் நுழைகிறது. சுவாசிப்பது என்பது நெஞ்சுக்கூட்டைச் சூழ்ந்துள்ள தசைகளின் துணையுடன் நுரை ஈரலின்  வெளியை(space) அதிகரித்து வளியை உள்ளிழுக்கும் செயலாகும். வளியில் உள்ள பிராணவாயு (ஆக்சிஜன்), குருதியால் சுமக்கப்பட்டு ஒவ்வொரு செல்லுக்கும் சென்றடைகிறது. அங்கு குளுக்கோஸ் போன்ற மூலக்கூறுகளிலிருந்து ஆற்றலை வெளியிடும் செயலுக்கு துணைபுரிகிறது.

அந்த ஆற்றலை அதிகம் உபயோகிப்பது தலைமைச் செயலகமான மூளை. மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைபடுதலாலேயே மூளையின் செல்களுக்குத்தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் முதலியன கிட்டாமல் பக்க’வாதம்’ முதலியன நிகழ்கின்றன.

Cognitive Functions எனப்படும், மூளையின் செயல்பாடுகளுக்கு ‘வளி’ மிக அவசியம். சுவாசத்தின் ஒழுங்கு, நரம்பு மண்டலத்தின் அமைதியையும், மனநிலையின் சமநிலையையும் பாதிக்கக்கூடியது. தர்க்க ரீதியாக முடிவெடுப்பதற்கும், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதற்கும் மூச்சின் பங்கு உள்ளது.மிகவும் நிதானமாகச் சிந்தித்து திறமையான முடிவுகளை எடுக்கிறவர்களின் சுவாசத்தில் ஒரு ரிதம் இருக்கும். 

சுவாசத்தை கவனிப்பது 'விபாசனா' எனப்படுகிறது. இதுதான் புத்தருக்கு ஞானத்தை வழங்கிய கலை என்கின்றார்கள்.

“சுவாசத்தை கவனிப்பது அப்படி என்ன மாயத்தை நிகழ்த்தும்?”

சரி சிறிது நேரம் சுவாசத்தை கவனியுங்களேன்.

“மூச்சு உள்ளே செல்கிறது பின் வெளியேறுகிறது.”

இரு சுவாசத்திற்கும் இடையில் ஏதேனும் இடைவெளி விட்டீர்களா?

சரி தூங்குபவர்களின் சுவாசத்தை கவனியுங்களேன்.

ஆழ் உறக்கத்தில் இருக்கும் போது வளியை வெளிவிட்டதற்குப் பிறகு ஒரு நிறுத்தம் தோன்றுவதை அவதானிக்கலாம். அது (post-expiratory pause) எனப்படுகிறது.

இந்த post-expiratory pause நுரையீரலில் வளியின் பரிமாற்றத்திற்கு துணைபுரிகிறது. தூக்கம் அல்லது ஓய்வின் போது, இந்த மூச்சு ​​இடைநிறுத்தம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது, குறிப்பாக பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தில் அதன் தாக்கத்தின் மூலம் அமைதிப்படுத்த உதவுகிறது.

பிராணயாமாவில், வளியை உள்ளிழுத்தல் வெளிவிடுதல் இரண்டுக்கும் இடையில் நிறுத்தி வைத்தல் அறிவுறுத்தப்படுகிறது. இது 'கும்பகம்' எனப்படுகிறது.  நம் பொதுவான சுவாசத்தில் கும்பகம் இருப்பதில்லை.

கும்பகம் ஒரு இடைநிறுத்தம் மட்டுமல்ல, மனம், உடல் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் ஒரு கருவி என்கின்றனர். இது சுவாச செயல்திறனை மேம்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தின் அமைதியை ஊக்குவிக்கிறது, மன கவனத்தை மேம்படுத்துகிறது என்பது அவர்களின் நம்பிக்கை.

இதில் நிறைய உண்மை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

‘breath-hold diving’ ‘apnoea diving’  எனும் இழுத்துப்பிடித்து மூச்சை நிறுத்தி வைக்கும்  ஒரு வகை பயிற்சியில் நிறைய உடல் நலன் சார்ந்த பயன்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

Bajau எனப்படும் பரதவப் பழங்குடியினர், நீண்ட காலமாக கடலோடு இணைந்து வாழ்ந்து வரும் ஒரு சமூகமாகும். அவர்கள் ஆழ்கடல் நீச்சலில் அசாதாரணமான திறனை பெற்றுள்ளனர். இவர்களில் சிலர் பல நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி, ஆழமான நீரில் இறங்கி மீன்பிடிக்கும் திறன் கொண்டவர்கள். சிலர் சுமார் 10 நிமிடங்கள் வரை மூச்சை நிறுத்தி நீருக்கடியில் இருப்பதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வெறும் பயிற்சியால் மட்டுமல்ல; அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள சில பரிணாம மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, Bajau மக்களில் மண்ணீரல் (spleen) அளவு சராசரியாக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மண்ணீரல் என்பது உடலில் உள்ள இரத்த அணுக்களை சேமித்து வைக்கும் ஒரு உறுப்பு. நீண்ட நேரம் மூச்சை நிறுத்தும் போது, உடல் ஒரு “அவசர நிலை” செயல்பாட்டைத் தொடங்குகிறது. மண்ணீரல் சுருங்கி, அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிவப்பு இரத்த அணுக்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் ஆக்சிஜனை சுமக்கும் திறன் சிறிது நேரம் அதிகரிக்கிறது.

மேலும், தொடர்ந்து நீருக்கடியில் வாழ்ந்த அனுபவம், அவர்களின் உடலில் ஒரு வகையான diving adaptation எனப்படும் நீர்மூழ்கல் தழுவலை உருவாக்கியுள்ளது. குளிர்ந்த நீரில் இறங்கும்போது இதயத் துடிப்பு குறைவது (diving reflex), இரத்த ஓட்டம் முக்கிய உறுப்புகளுக்கு முன்னுரிமையுடன் செல்லுதல் போன்ற மாற்றங்கள் அவர்களின் உயிர்வாழ்வுக்கு உதவுகின்றன.

இது இயற்கையின் மற்றொரு நுண்ணறிவை காட்டுகிறது.
மனிதன் இயற்கையோடு நெருக்கமாக வாழும் போது, அவனது உடலும் அந்த சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.

மூச்சு என்பது வெறும் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றும் செயல் மட்டுமல்ல; அது உயிர் மற்றும் சூழலுக்கு இடையே நடைபெறும் ஒரு தொடர்ச்சியான உரையாடல்.


அதிர்ச்சியான விஷயத்தைப் பார்க்கும் போது, மூச்சே நின்று விட்டது என்கிறோம். காரணம் மூச்சை நிறுத்துவது நிதானத்தைத் தரும் என்கிறார்கள்.

பிராணாயாமம் செய்கிற போது கும்பகம் செய்கிறோம். மெல்ல மெல்லப் பயிற்சி செய்து சாதாரணமாய் சுவாசிக்கையிலும் கும்பகம் வருமாறு செய்ய ஆரம்பித்து விட்டால் நம்மை நாம் Manage செய்யும் விதம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது முன்னோர்கள் புரிதல்.

(இந்த ‘தம்’ பிடித்து மூச்சை அடக்கும் முறைகளை முறையாக பழக வேண்டும் தடாலடியாகச் செய்யக்கூடாது).

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்

துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே (திருமந்திரம் 566)

Breath Control என்பது கள் உண்ட இன்பத்தையும் தரும், அதே சமயம் கள் உண்டவன் போல் சோம்பலில் மயங்கிக் கிடக்காமல், துள்ளியெழுந்து உற்சாகமாகவும் இருக்க வைக்கும் என்று இப்பயிற்சியினை குதிரையோடு ஒப்பிட்டு சொல்கிறார் திருமூலர்.

“ஏன் அவர் குதிரையோடு ஒப்பிட்டார்?”

இதை புரிந்துகொள்ள பின் வரும் கேள்விகளுக்கு விடை காணவேண்டியுள்ளது.

நீங்கள் எவ்வாறு மூச்சு விடுகிறீர்கள்? நெஞ்சு கூட்டை அசைத்தா அல்லது வயிற்றை உந்தியா? 

மூச்சு விடுவதற்கு முதுகுத்தண்டின் பங்கு உள்ளதா?

வயிறு என்பது நீர் நிரப்பி முனையில் முடிச்சு போட்ட பலூன் போன்றது. அது உந்தி அழுத்தப்படும் பொழுது நீர்பலூன் போன்ற அது, மேலே பிதுங்கி நுரையீரலை அழுத்தி அதிலிருக்கும் காற்றை வெளித்தள்ள உதவுகிறது. வயிறானது அழுத்தப்படும் பொழுது அதன் கொள்ளளவு மாறுவதில்லை. அதன் உருவ அளவில் மட்டுமே மாற்றம் ஏற்படுகிறது.

ஆனால் நெஞ்சு கூட்டினுள் இருக்கும் நுரையீரலானது ‘பாம் பாம்’ என ஒலி எழுப்பும் ஹாரன் போன்றது. அது  அழுத்தப்படும் பொழுது கொள்ளளவு மற்றும் உருவ அளவில்  மாற்றம் ஏற்படுகிறது.

முதுகுத்தண்டு முன்னோக்கி வளைக்கப்படும் பொழுது நுரைஈரல் அழுத்தப்பட்டு அதிலிருக்கும் காற்று வெளியேற உதவுகிறது. பின்னோக்கி வளைக்கும் பொழுது காற்றினை உள்ளே இழுக்க உதவுகிறது.

இதை மிருகங்களில் தெளிவாக அவதானிக்கலாம்.

வெளியேசென்று தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருந்தால் அவை மூச்சுவிடுவதைக் கவனியுங்கள். அதிலும் நான் சொல்வதை வேட்டைநாய்களில் நன்றாக அவதானிக்கலாம்.

வேட்டை நாய்களுக்கு நெஞ்சு கூடு அகலமாகவும்; வயிறு ஒட்டியும் காணப்படும். அவற்றின் சுவாசம் நெஞ்சுக் கூட்டை அசைப்பதின் மூலமே அமைகிறது.

 மேலும் அவை நான்கு கால் பாய்ச்சலில் ஓடுகையில் முதுகுத் தண்டை அவதானித்துப் பாருங்களேன்...

அவை பாய்ச்சலில் ஓடும் போது முதுகுத்தண்டு ‘C’ வடிவில் சுருங்கி மீண்டும் விரிகிறது. முதுகு விரியும் போது நெஞ்சுக்கூட்டின் இடவசதி அதிகரித்து காற்றை உள்ளிழுக்க உதவுகிறது; சுருங்கும் போது காற்றை வெளியேற்ற உதவுகிறது.

இதனால் ஓட்டமும் சுவாசமும் ஒன்றோடொன்று இணைந்த இயந்திர இயக்கமாக செயல்படுகின்றன.


முதுகுத்தண்டை முன்னோக்கியும் பின்னோக்கியும் வளைத்து மூச்சை இழுப்பதையும் வெளிவிடுவதையும் ஒத்திசைந்து செய்யும் கலையே சூரிய நமஸ்காரம். ஆதியில் கண்டறியப்பட்ட மூச்சுக்கலை சூரிய நமஸ்காரமாகத் தான் இருந்திருக்கும்.  ஏனெனில் சூரியனும் மூச்சுப் பயிற்சியும் உடலில் கசப்பு என்னும் அழலை அதிகரித்து நரம்பை வலுப்படுத்துவன. இதில் நிகழ்த்தப்படும் ஸ்ட்ரெச்சிங்க் உடலுக்கு இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது.

உணவினால் மட்டும் நாம் கசப்பின் நன்மைகளை பெறமுடியுமா என்றால் கிடையாது. கசப்பின் நன்மைகளை மூச்சும் செய்யும். Fenn விளைவின்படி எவ்வளவு தசை வேலை செய்கிறதோ அவ்வளவு அழல் உற்பத்தியாகிறது. மூச்சு வாங்க ஓடும் பொழுது இந்த விளைவின்படி அழல் அதிகரிப்பதை நீங்கள் அவதானித்திருக்க கூடும்.

“உயிர் சுமக்கும் அனைவரும் தான் மூச்சு விடுகிறோம், உயிர் வாழ்கிறோம். இதை பயிற்சியாக செய்வது அவசியமா?”

ஆக்சிலேட்டரை அழுத்தினால் வண்டி ஓடும்தான். ஆனால் ஆக்சிலேட்டரை மிதிக்கத்தெரிந்தவரை எல்லாம் ஓட்டுனராகக் கருத முடியாது. கியரை மாற்றி, ஆக்சிலேட்டரைத்திருப்பி, ஏற்ற இறக்கங்களை அனுசரித்து ஓட்டுபவனே நல்ல ஓட்டுனன். அதுபோல பல்வேறு உடல் மற்றும் மன மாறுதல்களிலும் மூச்சை கவனமாக நிலை நிறுத்தப் பயன்படும் மூச்சுக்கலையினை பயின்று; அதன்மூலம் நமது உயிராற்றலை சிறப்பாக நிலைநிறுத்தலாம் என்கிறது 'யோகா அனாடமி' புத்தகம்.

வேட்டைநாய்கள் நெஞ்சுக்கூட்டை அசைத்து மூச்சுவிட்டதைப்பற்றி பார்த்தோமல்லவா? இப்போது மாடுகளைப்பற்றிப் பார்ப்போம்.

மாடுகள் புல்லை செரிப்பதற்காக பெரிய நொதிகலன்களை வயிறாக கொண்டிருக்கிறது. அதனால் தான் மாடுகள் பிள்ளைத்தாய்ச்சி போல பெரிய வயிற்றுடன் காணப்படுகின்றன. எனவே மாடுகளுக்கு நாய்களின் நெஞ்சுக்கூட்டு சுவாசம் போல் அல்லாமல் வயிற்றின் துணை கொண்டே அதன் சுவாசம் அமைகிறது. மூச்சு முட்ட உண்பது என்னும் சொலவடை உள்ளதை நீங்கள் அறிவீர்கள். வயிறு புடைக்க உண்ட பிறகு பெருத்திருக்கும் வயிறானது நுரையீரல் விரிவதற்கு தடை ஏற்படுத்துகிறது. எனவே  தான் ஒரு பேருணவுக்கு பிறகு உழைப்பு தவிர்க்கப்பட வேண்டும்.

இதில் குதிரைகள் சற்று  வித்தியாசமானவை. இவைகள்  புல்லையும் செரிக்க வேண்டும் அதே சமயம் வேட்டை நாய்கள் போல ஓடவும் வேண்டும். அதனால் இவற்றிற்கு நெஞ்சும் வயிறும் மூச்சுவிடுவதற்கு இணைந்தே துணைபுரிகின்றன. அதிலும் அவை ஓடும்பொழுது சுவாசத்திற்கு முதுகுத் தண்டும் துணை புரிகிறது. ஓட்டத்தோடு அவற்றின்  சுவாசமும் ஒன்றிணைந்து ஒத்திசைந்து அவை மின்னல் வேகத்தில்பாய வழி செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவை எவ்வளவு வேகமாக ஓடினாலும் அவற்றிற்கு நாய்களைப் போல் நாக்குத் தள்ளி இதய படபடப்பு நேர்வதில்லை.குதிரைகள் நாய்களைப் போல நாக்கைத் தொங்கவிட்டு panting மூலம் அல்லாமல், வியர்வை மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சுவாசத்தின் மூலம் வெப்பத்தை கட்டுப்படுத்துகின்றன

 அவைகளுக்கு இதய படபடப்பு நேராததற்குக் காரணம்  vagal tone.

கால்பந்தாட்ட வீரர்களில் சிலர் எவ்வளவு ஓடினாலும் நாக்கு தள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களுக்கு இந்த vagal tone அதிகம் இருப்பதை உறுதி செய்தனர். பாராசிம்பதட்டி தானியங்கி நரம்பு மண்டலத்தின் முக்கிய நரம்பான வேகஸ், நாம் வேகமாக ஓடும் பொழுதும் இதயத்தை ஆற்றுப்படுத்த வல்லது. நமது உடல் நலத்தை பாதுகாப்பதில் இது முக்கியபங்கு வகிக்கிறது.

இந்த வேகஸ் நரம்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் சிம்பதெட்டிக் நரம்புகளும் உடலின் பல உறுப்புகளை கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் (Autonomic Nervous System) முக்கிய பகுதிகளாகும். இந்நரம்புகள் சில இடங்களில் கொத்துக்கொத்தாக (nerve plexuses/ganglia) அமைந்துள்ளன. அவற்றின் அருகாமையில் சில முக்கிய நாளமில்லா சுரப்பிகளும் (endocrine glands) காணப்படுகின்றன. சிவ தத்துவத்தில் கூறப்படும் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளதாகக் கருதப்படும் பகுதிகளும், இந்த autonomic nerve plexuses மற்றும் endocrine glands அமைந்துள்ள பகுதிகளும் கிட்டத்தட்ட  ஒத்துப் போகின்றன.


  மூலாதார சக்கரம் தான் முதல் சக்கரம். அதிலிருந்து குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ர நாம சக்கரத்திற்கு கொண்டு வருவதே யோக கலையின் உச்சம்.

தானியங்கி நரம்புமண்டலத்தின் தூண்டுதலால் 
மூக்கின் இரு துவாரங்களிலும் காற்றோட்டத்தின் அளவு சில மணி நேர இடைவெளியில் மாறிக்கொண்டிருக்கும்  (மூக்கு அடைத்துக்கொண்டு ஒரு பக்கம் மூச்சு விடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை). Nasal cycle என்று அறிவியலாளர்கள் இதை அழைக்கின்றனர். இதை நமது முன்னோர்களும் அவதானித்து உள்ளனர்.

‘கால்’ என்கிற வார்த்தைக்குக் காற்றுன்னு அர்த்தம். கால் என்னும் சொல்லுக்கு காலம் என்றும் அர்த்தம். நாம் காலமாகாமல் இருக்க கால் என்னும் மூச்சே காரணம். காலம் தான் எமன்.

காற்றின் ஓட்டத்துக்குக் ‘கலை’ என்றும் சொல்லப்பட்டிருக்கு. மூக்கின் இடப்புறத் துவாரத்தில் ஓடும் மூச்சுக்கு சந்திரகலை என்று பெயர். வலப்புறத்துக்கு சூரியகலை என்று பெயர். உலகத்தில் சந்திரனும் சூரியனும் மாறி மாறி ஒளி தருவது போல இடகலையிலும் (வல)பிங்கலையிலும் சுவாசம் மாறி மாறி ஓடும்.

கண்ணதும் காய்கதிரோனும் உலகினை

உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்

விண் உறுவாரையும் வினை உறு வாரையும்

எண் உறும் முப்பதில் ஈர்ந்தொழிந்தாரே (திருமந்திரம் 184)

(கண் = குளிர்ந்த நிலவு)

சூரியனும் சந்திரனும் மாறி மாறி வருவதும், சில நேரம் சேர்ந்தே இருப்பதும் போலவே சந்திரகலை, சூரியகலை என்பதை முப்பது வயதுக்குள் உணர்ந்து, சரியான காலத்தில் வேலைகளைச் செய்கிறவர்கள் வீடு பேற்றை அடைவார்கள்; பிறர் வினைப் பயன்களில் அகப்பட்டுத் துன்பம் அடைவார்கள் என்பது இப்பாடலின் பொருள்.

இரவும் பகலும், சூரியனும் சந்திரனும், பகலில் சிம்பதடிக் நரம்புமண்டல பதட்டமும் இரவின் பாராசிம்பதெடிக் நரம்புமண்டல ஆற்றுதலும் எவ்வாறு ஒரு ஊசல் போல் ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றன என்பதை நாம் அறிவோம்.

ஒவ்வொரு மூச்சிலுமே இந்த ஊசலாட்டம் நிகழ்கிறது.

மூச்சு உள்ளிழுக்கப்படும் போது இதயப் படபடப்பு அதிகரித்து பின் மூச்சை வெளியே விடும் போது இதயப்படபடப்பு தணிகிறது. இதை 'சைனஸ் அரித்மியா' என்கின்றனர் அறிவியலாளர்கள்.

ஒரு நிமிடத்தில் சுமார் 15 மூச்சு நம்மால் விடப்படுகிறது. ஒரு நாளில் 21600 மூச்சுகள்.

பேச்சு என்பது கட்டுப்படுத்தப்பட்ட வெளிசுவாசம் என்பதை நாம் அறிவோம். மூச்சை உள்ளே இழுக்காமல்  தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தீர்களானால், மூளைக்கு போகும் பிராணவாயுவின் அளவு  குறைய ஆரம்பிக்கிறது. இது ஆபத்தை விளைவிக்கும்.

பேச்சு என்பது உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள்  துணையுடன் நம்மால் நிகழ்த்தப்படுகிறது.

விலங்குகளை கவனித்துப்பார்க்கும் போது அவை உயிரெழுத்து ஓசைகளையே அதிகம் எழுப்புகின்றன (உதாரணம்: ஊளை). மேலும் அவை உயிரைத்தொடர்ந்து மெய்யெழுத்துக்கள் கொண்டும் ஓசை என்னும் வெளி சுவாசத்தை மட்டுப்படுத்துகின்றன (உதாரணம்: உர்ர்ர்ர்ர் கர்ஜனை).

ஆதிகப்படியான ‘ஊளை’ போன்ற வெளிசுவாசம், மூளைக்கு பிராணனைக் குறைத்துவிடும்.

‘ஊ’ நெடில், இதை உச்சரிக்க அதிக பிராணன் தேவை. உறுமும் போது எழுப்பப்படும் ‘உ’ குறில், இது குறைந்த வளி செலவினால் எழுப்பபடும் ஒலி. அதுவும் ‘ர்’ எனும் மெய்யினைக் கொண்டு வெளிசுவாசத்தில் தடை ஏற்படுத்தும் போது வளி செலவு இன்னும் மட்டுப்படுகிறது.

உயிராற்றலால் பிறந்தது உயிர் எழுத்து, உடல் என்னும் கருவியின் துணையால் உருவானது மெய்யெழுத்து, உயிரும் மெய்யும் சேர்ந்ததால் உருவானதே உயிர்மெய் எழுத்து. நமது மொழியில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18.

உயிரெழுத்து வழியாக வளியை வெளியே செல்லவிடாமல், மெய்யெழுத்துக்களோடு இணைத்து அணை போட்டதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்கள், வளியை கும்பகத்தில் இழுத்து வைக்க முயல்கின்றன. 12 உயிர் x 18 மெய் = 216 உயிர் மெய் எழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துகளை உச்சரிக்கும் போது  மூச்சு வீணாவது தடுக்கபடும். உயிர் வளர்க்க உறுதுணை புரியும். உயிர் மெய் எழுத்துக்கள் நிறைய இருக்கும் நம் மொழியைப் பேசுவதே ஒரு வகை மூச்சுப்பயிற்சி தான். தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.

 உயிர் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை குறில் மற்றும் நெடில். 'அ' என்பது குறில் 'ஆ' என்பது நெடில். இதில் குறிலின் நீட்டிப்பு போல வரும் நெடில் எழுத்துக்கள் அல்லாமல் ' ஐ ' 'ஔ ' என இரு எழுத்துக்கள் கூடுதலாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். உயிர் எழுத்துக்கள் எண்ணிக்கை 12 எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விரு எழுத்துக்களும் உருவானதாக கூறுகின்றனர்.

உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் இதுவே என்கின்றனர்.

ஆகாயத்தை வெட்டவெளி என்றும்‌, அம்பலம்‌ என்றும்‌ கூறுவர்‌. இவ்வெட்டவெளி, பிரபஞ்சத்திலும்‌ அணுவிலும்‌ அகத்தும்‌ புறத்தும்‌ இருந்து நிலவுகிறது. ஆகாய அணுவிலும்‌ பஞ்சபூதங்களும்‌ அடங்கியுள்ளன.

விண்’வெளி’யாகட்டும், உடல் ‘வெளி’ யாகட்டும், இவ்விரு வெளியைப் பற்றி அறிவியலால் இன்னும் முழுமையாக அறியமுடியவில்லை. நமது உடலிலுலம் சரி, விண்ணிலும் சரி வெளி என்னும் சூன்யமே 99% நிறைந்துள்ளது. உடலின் வெளியை நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் நாம் ஒரு கடுகளவுதான் இருப்போம். நமது உடலின் வெளியைப்பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே (அறிவியல் துணை கொண்டு) பின் வரும் கருத்துக்களின் நம்பகத்தன்மையை அறியமுடியும்.  பின் வரும் கருத்துக்களை முறையான பயிற்சிகள் மூலம் உணர்ந்து அறியவேண்டிவை என்பது முன்னோர்கள் புரிதல்.

அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் பார்த்தோம்.

அ + உ+ ம் என்பதன் இணைப்பு ‘ஓம்’ எனப்படுகிறது.

 'அ ' என்பது  அடிவாரத்தில் இருந்து ஆரம்பித்து 'உ' என உச்சரிக்கும் பொழுது  தொண்டையில் அதிர்வை ஏற்படுத்தி 'ம்' என்று சொல்லும் பொழுது  உச்சந்தலையில்  அதிர்வை ஏற்படுத்துகிறது  என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். அ - என்பது முதல்வனான சிவனையும், உ -என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.

எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று இயக்கங்களைக் குறிப்பவையாகும்.

அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன. இதை பயிற்சிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

இது என்னைப் போல் உங்களுக்கும் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி தமிழை ஒழுங்காகப் பேசுவதே ஒரு உடல் நலம் பேணும் மூச்சுப் பயிற்சி என்பதாகும்.

மூச்சுக்காற்றே நம் உயிருக்கான ஆதாரம். ஆனால் தற்போது நாம் சுவாசிக்கும் காற்றானது  மிகவும் மாசடைந்துள்ளது. உலகசுகாதார நிலையம் 2.5 மைக்ரான் அளவு கொண்ட துகள்கள்… 15 மைக்ரோகிராம்/ cubic metre அளவிற்கு காற்றில் இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் டெல்லியில் குளிர்கால நவம்பர், டிசம்பர்  மாதங்களில் இவை 600 மைக்ரோகிராம்/ cubic metre அளவைத்தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் சிகரெட் பிடிக்காமல், மூச்சுக்கலை பயிலும் உத்தமராக இருந்தாலும் இக்காற்றை சுவாசிப்பது தினமும் ஐந்து சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமம். இதில் கார்பன் சல்ஃபர் போன்றவை மட்டுமல்லாமல் நாகம், ஈயம், மெர்குரி போன்றவற்றின் துகள்களும் கலந்துள்ளன. 


 

No comments:

Post a Comment

வாதம்‌

  வாதம்‌   கொழுப்போ, சர்க்கரையோ, அமினோ அமிலமோ எதுவாகிலும் அது உணவின் வழியாகவே உடலுக்குள் பெறப்பட்டது. இந்த ஆற்றல் மூலக்கூறுகள் ‘வளி’ எனு...