Saturday, June 20, 2026

உணவு

 கருப்பொருள் - 2

உணவு :

சித்த மருத்துவம் உணவின் பண்பாக மூன்றினை குறிப்பிடுகிறது

அவை முறையே குணம், சுவை மற்றும் உயிர்த்தாது ஆகும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உணவின் முதல் பண்பு - குணம்

சமநிலையில் இருக்கும் எந்தப் பொருளும் இயக்கம் பெறும் போது அது குணமாற்றம் அடையும். உதாரணத்திற்கு  நீர்‌ நிலையிலுள்ள தண்ணீரின்‌ அசைவற்ற பரப்பின்மேல்‌ கல்லை எரிந்தால்‌ கல்‌ விழுந்த இடத்தின்‌ மையத்திலிருந்து சுற்றி அலைகள்‌ ஏற்படும். ஓர்‌ அலையின்‌ எழுச்‌சிக்கும்‌ அடுத்த அலையின்‌ எழுச்சிக்கும் இடையில் ஒரு யூகக்கோடு‌ வரைந்தால்‌ கோட்டினின்று உச்சியை அடையும்‌ பாகத்தை இரசோ  குணம்‌ என்றும்‌, உச்சியிலிருந்து இறங்கும்‌ கோட்டைத்‌ தமோ குணம்‌ என்றும், அலையின்‌ ‌ இவ்விரண்டு கோட்டினைத்‌ தொட்டுக்‌ கொண்டிருக்கும்‌ கோட்டை சத்துவ குணம்‌ என்றும்‌ சித்தர்கள்‌ கூறியுள்‌ளார்கள்‌. அலைகளின்‌ முக்கோணத்தில்‌ மூன்று குணங்கள்‌ உள்ளன. இம்முக்கோணத்துன்‌ மையத்தில்‌ இருக்கும்‌ நிர்குணம்‌ சலனமுற்றால்‌ குணங்களின்‌ பேதா பேதங்களுக்கேற்ப புத்தி/ அறிவு என்னும்‌ தத்துவம்‌ தோன்றுகின்றதென்பர்‌. உணவிலும் இம்மூன்று குணங்களும் உள்ளனவாம். உணவுக்கும் மனத்திற்கும் தொடர்பு உள்ளது அது உங்கள் குண நலனை மாற்றும் என்பது சித்தமருத்துவத்தின் கூற்று. இதே தத்துவத்தை தான் உயிரைப் பற்றி விளக்கும் போதும் கூறுகின்றனர். இத்தத்துவத்தின் படி நாம் அனைவரும் பேரறிவு எனும் கடலின் அலைகளாக உருகப்படுத்தப்பட்டுள்ளோம்.

உணவின் இரண்டாம் பண்பு - சுவை

சுவை பற்றி அறிவியலின் பார்வை:

சுவை என்றால் என்ன? எதற்காக சுவைகள் உள்ளன? சுவைகள் அனைத்தும் உடலில் ஒரே வேலையைத்தான் செய்கின்றனவா?

சுவை என்பது நாவிற்கு உணர்த்தப்படுவது கண்ணுக்கு தோன்றும் படி தனித்து இல்லாமல் உணவோடு கலந்து இருக்கும் உணவின் பண்பு. எல்லா சுவைகளும் நாக்கினால் உணரப்பட்டு மூளையின் செயல்பாடுகளில் கட்டுப்படுத்தப்படும் உணர்வுகளே.

அறிவியல் சுவைகளை ஐந்தாகக் கூறுகிறது.

Sweet- இனிப்பு

Bitter- கசப்பு

Sour- புளிப்பு

Salty- உப்பு

Savory taste/ Umami சுவை என்று ஒன்று உள்ளது. இது Glutamate மற்றும் சில புரத மூலக்கூறுகளால் ஏற்படுவது. இது ஒரு ஜப்பானிய வார்த்தை. சூப்புகளில் Monosodium glutamate (MSG) எனும் பொடியை சேர்த்து சுவைகூட்டுவார்களே. அது தரும் சுவைதான் இது. வெகு காலமாக நான்கு சுவை மட்டுமே அறிவியலால் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிற்பாடு தான்  உமாமி ஒரு சுவையாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது அல்லாமல் சுவை போன்றவை என ஆங்கில மருத்துவம் சிலவற்றைக் குறிப்பிடுகிறது.

Metallic taste/ astringency – இதை கிட்டத்தட்ட துவர்ப்பு எனக்கொள்ளலாம். வாயில் உலர் உணர்வு ஏற்படுத்துவது. சருமத்தை பாதுகாக்கவும், வயிற்றுப்புண்களை ஆற்றவும் பயன் தருபவை என ஆங்கில மருத்துவம் இதைக் குறிப்பிடுகிறது. (சித்தமருத்துவம் குறிப்பிடும் துவர்ப்புக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன).

இதுல காரம் எங்கே?

காரம் என்பதை ஒரு வலி உணர்ச்சியாகத்தான் அறிவியல் பார்க்கிறது. இனிப்பை வாயில் போட்டால் சுவைக்கும், கண்ணில் போட்டால் சுவைக்காது. ஆனால் காரத்தை வாயில் போட்டாலும் எரியும் கண்ணில் போட்டாலும் எரியும். எனவே அது ஒரு வலிஉணர்ச்சி தான். காரத்தைத்தரும் ஸ்பைசஸ் முதலியன; நம்மைப்போன்ற விதைப்பரப்பிகளை  குறி வைத்து உருவாக்கப்பட்டன இல்லை என்றாலும், நமக்கு பலன் அளிக்கக்கூடிய மைக்ரோக்கள் மற்றும் அறிவியலால் இன்னும் முழுதாக புரிந்து கொள்ளப்படாத பல ஊட்டச்சத்து பொருட்களை அது கொண்டிருக்கிறது. காரம் என்பது நாவின் வலி உணர் TRPV1 ஏற்பிகளால் உணர்த்தபடுவது. இந்த ஏற்பிகள் பறவைகளுக்கு இல்லை. அதனால் அவற்றினால் இக்காரத்தை உணர முடியாது. அதிகக்காரம் நாவை மரத்துப்போகச் செய்யுமல்லாவா? எனவே இது ஒருவகை வலிதான். Pungency/ piquancy/ Spicy எனப் பல தொடர்புச்சொற்கள் காரத்தை குறிப்பனவாகும்.

இவ்வாறு பல்வகை செயல்பாடுகளால் நம்மால் உணரப்படும் சுவை என்பது மூளையினால் நிகழத்தப்படும் ஒரு மாயை.

இதை அறிய ஒரு பரிசோதனையை மேற்கொள்வோமா?

ஒரு மேசையின் மீது மீன், புல், மாம்பழம், மிளகாய் ஆகிவற்றை வைத்துவிட்டு பசியோடு இருக்கும் பூனை, ஆடு, குழந்தை மற்றும் கிளி ஆகிவற்றை இந்த உணவுகள் இருக்கும் அறைக்குள் அனுப்பிப் பாருங்கள்.

பூனை மீனை நோக்கிப் பாயும்.

ஆடு புல்லைத் தேடும்.
குழந்தை மாம்பழத்தை எடுக்கும்.
கிளி மிளகாயைத் தின்னத் தொடங்கும்.

“இதில் எது இனிப்பு?” என்று கேட்டால், குழந்தை மாம்பழத்தைக் காட்டும். ஆனால் கிளிக்கு மிளகாயே விருப்பமானதாக இருக்கும். பூனைக்கு மீனே சுவையான உணவாக இருக்கும்.

பறவைகளுக்கும் பூனைகளுக்கும் நாம் இனிப்பு எனக்கருதுவதைக் கொடுத்தால் அவற்றிற்கு இனிக்காது. உங்களுக்கு நன்மை செய்யும் உணவை நீங்கள் உண்ணவேண்டும் என்று, மூளை அவ்வுணவு உண்ணப்படும் பொழுது மகிழுணர்வைத் தோற்றுவிக்கிறது. அதை நாம் இனிப்பென அழைக்கிறோம்.


கழுதைக்கு பேப்பர் இனிக்கக் கூடும்… இரந்துண்ணும் விலங்குகளுக்கு  அழுகியது இனிக்கக் கூடும்.

ஆனால் அழுகியதை நாம் உண்டால் அது நமக்கு கசப்புப் போன்ற சுவையை அறிவிக்கும். கசப்பு என்பது கெட்டுப்போன உணவு, பழுக்காத காய்கள் மற்றும் விஷக்கனிகள் தரும் ஒரு நாவின் உணர்வாகும். அது மூளையின் எச்சரிக்கை.

“பிறகு ஏன் பாகற்காய் மிளகாய் போன்றவை நாம் விரும்பாச் சுவையில் இருந்தாலும் நமக்கு நன்மை அளிக்கின்றன?”

அதை அறிய நாம் சித்தமருத்துவத்தின் கொள்கைகளை ஆராயவேண்டியுள்ளது.

சித்தமருத்துவம் சுவையைப் பற்றி கூறுவது என்ன?

உணவு என்பதை ஆங்கில மருத்துவம் மேக்ரோ மைக்ரோவாகப் பார்க்கிறது ஆனால் சித்த மருத்துவம் அவற்றை அறுசுவையாகப் பார்க்கிறது.

இப்பூமியிலுண்டாகிற எந்தப்‌ பொருளும்‌ நாவிற்‌ போட்ட மாத்திரத்தில்‌ நாவிற்கு ஓர்வித அறிவு அல்லது உணர்ச்சியை  உணர்த்துகின்றது. அவ்வாறு உணர்த்தும்‌ உணர்ச்சிக்குச்‌ சுவை என்று பெயர்‌. இச்சுவைகள்‌ நாவிற்கு உருசியைக்‌ கொடுப்பதற்கென்று மாத்திரமே ஏற்படாமல்‌ உடல்‌ தத்துவங்களில்‌ ஒன்றாகிய பஞ்ச பூதங்களுக்கு இரையாகவும்‌ அமைக்கப்பட்டிறுக்கின்றன என்கிறது சித்த மருத்துவம்.

இச்சுவைகள்‌ கைப்பு(கசப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என ஆறு வகைப்படுகின்றன. இவைகளில்‌ ஒவ்வொன்றும்‌ ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும்‌ தனித்திருப்பதோடல்லாமல்‌ இரண்டு அல்லது அதிகமான சுவைகளுடன் ஒருமித்திருக்கும்‌.

இனிப்பு:

பழங்களில் இருக்கும் sucrose, குளுக்கோஸ், fructose போன்றவை இனிப்புச்சுவை கொண்டவை. சாதம் மற்றும் கிழங்குகளில் இருப்பது ஸ்டார்ச். இதில் இருப்பதும் அடிப்படையில் குளுக்கோஸ்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவை சிறுகுடலுக்கு அருகில்தான் குளுக்கோஸ் மூலக்கூறாக உடைக்கப்படும். அதனை உடைக்கும் வேலை அமைலேஸ் துணையுடன் வாயிலேயே ஆரம்பிக்கிறது.

காரத்தன்மைகொண்ட உமிழ்நீரில் பல்வேறு நொதிகள் உள்ளன. எனவே உணவை அரைத்துக் கூழாக்கி நொதிகளுடன் கலந்தால் தான் செரிமானம் சிறக்கும். அதனால் தான் உணவு ‘அருந்த’ வாருங்கள் எனச் சொல்கிறோம். எனவேதான் ‘சாதத்தை குடிக்க வேண்டும் நீரினை மெல்ல வேண்டும் ‘ என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாம்பழம் நறுமணத்தை தூக்கலாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் மாம்பழத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே அது மணத்தை தூக்கலாகக் கொண்டிருக்கிறது

 வருடத்தில் ஒருமுறை மட்டுமே சீசன் சமயம் மாம்பழம் கிடைக்கும். அதனால் முடிந்த மட்டும் அதன் மைக்ரோக்கள் முதலிய ஊட்டச்சத்தை பெறவேண்டி; உங்கள் மூளை இனிப்புச்சுவை நிறை சீசன்பழங்களை அதிகம் உண்ணவைக்க  உங்களை ஊக்கப்படுத்துகிறது. மேலும் பசியை அதிகரிக்கரிக்கிறது. முடிந்த மட்டும் சாப்பிடு என்று அது உங்களை தூண்டி விடுகிறது. அந்த தூண்டுதலுக்கு ஆதாரம் இனிப்பு மற்றும் மணம்.

மாம்பழத்தின் நார்ச்சத்தானது கார்ப்பை பிடித்துவைத்துக்கொண்டு  உங்கள் உடம்பில் அக்கார்ப்பை மெதுவாக ரிலீஸ் செய்யும். சொல்லப்போனால் இந்த நார்சத்து உங்கள் டயாபடிஸ்க்கு மற்றும் இதய நோய்க்கு ஒரு நல்ல தீர்வு .மேலும் நார்ச் சத்தால் மலம் எளிதாக வெளியேறுகிறது, இது நச்சுக்களையும் வெளியேற்றுகிறது மற்றும் சில வகை கேன்சரையும் தவிர்க்க உதவுகிறது.  இதனால் சில பல விட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கின்றன. மேலும் இது உடல் இளைக்கவும் உதவுகிறது  .

 இதில் மாம்பழத்தின் நிறத்தையும்  மணத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு, மூளையைத் தூண்டிவிடும் இனிப்பைக் கொட்டி, மைக்ரோக்களை தவிர்த்துவிட்டு, சுவை எனும் வலையை விரித்து துட்டு பார்க்கின்றனர் கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனிக்கள்.

நாவு என்பது மெட்டல் டிடெக்ட்டரை வைத்து பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும் பாதுகாவலர் போன்றது. கிட்டத்தட்டே இதேபோல ஒரு பாதுகாவலர்தான் மூக்கும். உணவானது மூக்கைத்தாண்டித் தான் நாக்கிற்கு வழங்கப்படும். அதனால் தான் வாய்க்கு மேலேயே மூக்கு உள்ளது.

மூக்கு பேக்கில் இருந்தால் என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.  அப்படி இருந்தால்  பேக்கில் மோந்து விட்டு பின்னர் வாயில் வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்.

குரங்குக்கு அது இதுவரை பார்க்காத ஒரு புதிய வெளிநாட்டுப்பழத்தைக் கொடுத்துப்பாருங்களேன். அது முதலில் அப்பழத்தை நுகர்ந்து பின்னர்தான் உண்ண ஆரம்பிக்கும். 

ஐந்தறிவு கொண்டது குரங்கு. 

பழம் என்பது உயிரோடு இருக்கும் ஒரு உணவு. 

உயிர் எனப்படும் ஐந்தாம் பூதமாகிய வெளியை நாசியைக்கொண்டும் சுவையைக்கொண்டும் உணர்கிறது  குரங்கு. உயிரற்ற பழமாய் இருந்தால் அழுகல் கசப்புச் சுவை மூலம்  குரங்கிற்கு அறிவிக்கப் படும்.

“அப்பொழுது கசப்பு என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒரு சுவையா?”

கசப்பு:

 ஊமத்தையைப் போல் கொன்றுவிடும்  நோக்கில் அல்லாமல் தன்னை மனிதர்கள் தின்னக்கூடாது என்று மட்டும் முடிவு செய்தவை தான் கைப்புச் சுவை நிறைந்த பாகற்காய் போன்ற காய்கறிகள். ஆனாலும் அவற்றில் மைக்ரோக்கள் நிரம்பி இருந்ததால் அவற்றையும் நாம் உண்ணத் தலைப்பட்டோம். பாகல் போன்ற கசப்பு சுவை கொண்ட பழங்கள் மனிதனால் விரும்பப்படும் சுவை கொண்டவை அல்ல. ஆனால் மனிதனுக்கு நுகரும் திறன் கம்மி என்பதால் மனிதனால் எளிதில் நுகரவியலா வாசனைகள் கொண்டு  மற்ற விலங்குகளை அது கவர முயற்சிக்கிறது.  எனவே கசப்புச் சவை உடையனவற்றை  கசக்கி நுகர்வதன் மூலம்; அதன் நல்ல தன்மையை அறிந்து கொள்ளலாம் என்றனர் சித்தமருத்துவ முன்னோடிகள்.

 இதுபோல நேரடியாக கசப்பை உணர்த்தாமல், கசக்கினாலோ நெருப்பில் இட்டாலோ நறுமணம் தரக்கூடிய அனைத்து இயற்கைதரும் தாவரப்பொருட்களுமே உடலுக்கு கசப்பை உணர்த்துவன. அவற்றில் நரம்பை பலப்படுத்தும் பொருட்கள் நிரம்ப உள்ளது என்பது சித்தமருத்துவத்தின் கருதுகோள். இனிப்பு தருவது நியூட்ரா சூட்டிகிள்ஸ்(nutraceuticals) என்றால் கசப்புப் பொருட்கள் தருவது pharmaceuticals  எனப்படும் மருந்துகள் மற்றும் கிடைப்பதற்கரிய மைக்ரோக்கள்.

சில கசப்புகள் நம்மை அடிமையாக்குபவை. காப்பியின் கசப்பு முதலில் பிடிக்காது. பிறகு மூளை அதற்கு அடிமையாகும். நிக்கோடின் போன்ற லாகிரி வஸ்துக்களும் இதுபோன்ற பிரிவில்தான் வரும். எனவே இதுபோன்ற லாகிரி கசப்பினை மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

உப்பு:

நீர் நிறை பொருட்கள் உப்புச்சுவை கொண்டவை. இவற்றைப்பிழிந்தால் நீர் வரும். உதாரணம்: பூசணி, முளைக்கீரை. நீர்மிகு உப்புப்பண்டங்கள் கொழகொழப்புத்தன்மையையும் சேர்த்து கொண்டிருந்தால் உப்போடு புளிப்பும் கலந்துள்ளது என்று பொருள். குழகுழப்பு மிகுந்தவை புளிப்புப் பண்டங்கள். உதாரணம்: வெண்டை. உப்பு என்பவை சோடியம் குளோரடை மட்டும் குறிப்பதல்ல. அனைத்து மினரல்களும் இதில் அடங்கும்.

உப்பு என்பது நம்மை ஒருங்கிணைத்த ஒரு சாதனம். உப்பு விற்பவர்கள் நெய்தல் நிலத்திலிருந்து பலஊர்களுக்கு சென்று அதை விற்று வந்தனர். அவர்களாலே பல ஊர்களுக்கிடையிலான தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்த உப்பு வணிகத்தைக்கூட பொறுக்க முடியாத வெள்ளையர்கள் உப்பின் மீது வரி விதித்தனர். உப்பைக் கொண்டு மட்டும் பதினாறு லட்சரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள் வெள்ளையர்கள். அப்பொழுது ஆசிரியரின் வருமானமே மூன்றுரூபாய் தான் என்றால் இதன் மதிப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

உப்புக்குப் பின்னால் நம் தேசத்தின் கதையே இருக்கிறது. உணவு ருசிப்பது உப்பால்தான். உப்பு தான் உணர்ச்சிக்கு அடிப்படை என்கின்றார்கள் (சோத்துல உப்பு போட்டுதானே சாப்பிடுற?) உணர்ச்சிக்கான மினரலோ கார்டிக்காய்ட், உப்பைக் கொண்டு தான் வேலை செய்கின்றன.

புளிப்பு:

புளிப்புச்சுவை மற்ற சுவைகள் போலல்லாமல்  H+  அயனியால் உணரப்படுவதாகும். உதாரணம், எலுமிச்சை, புளி, தயிர் போன்றவை புளிப்பின் கீழ் வரும். மாவுப்பொருட்கள் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனாலும், அவை புளிக்கும் தன்மை உடையவை ஆதலால் அவற்றையும் புளிப்பில்தான்  சேர்த்திருக்கின்றனர். லாட்டிக் அமிலம் நிறைந்த புளிப்புச்சுவை மிகுந்த மோர் தயிர் முதலியவன  செரிமானத்திற்கு உதவி செய்யும் நல்ல கிருமிகளைக் கொண்டுள்ளது. இந்த நல்ல கிருமிகள் அனைத்தும் உங்களுக்கு பி மற்றும் கே விட்டமின்கள் முதலியவற்றைத் தரக்கூடியவை.

காரம்:

பெப்பர் எனப்படும் மிளகானது பறவைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்துவிட்டு, பறவையின் குடலில் மெதுவாகச் சென்று விதை நேர்த்தி செய்யப்பட்டு வெளியே வந்து விழுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதையை பறவைகள் பறந்து சென்று பரப்புகின்ற.

பறக்க இயலா உங்களை அது விதைபரவலுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. எனவே அது உங்கள் குடலால் விதை நேர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு பரிணமிக்கப்படவில்லை 

இதன் காரணமாக அது உங்களுக்கு காரச்சுவை அளித்து; நீங்கள் அதை உண்ணாமல் பார்த்துக்கொள்கிறது. மீறி அதை உட்கொண்டீர்கள் என்றால் காரத்தினால் அந்த விதை உங்கள் குடலிலிருந்து வேகமாக வெளித் தள்ளப்பட்டு விடும்.

 அறுசுவைப் பந்தியில் முதல் ரவுண்டிலேயே மூக்குப்பிடிக்க உண்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு, மிளகு தட்டிய ரசத்தை பரிமாறும் பொழுது,  காரத்தின் எரிச்சலால் குடல் வேகமாக நகர ஆரம்பித்து வயிற்றை காலியாக்கி  மோர் சாதத்திற்கு தயார்படுத்துகிறது.

காரச்சுவை கொண்டவை மாவாக மசியாத பகுதிகளை உடையவையாகவும், நார் உடையவையாகவும் இருக்கின்றன. இதுபோல தன்மையை உடையது கருணைக்கிழங்கு. இது நாவுக்கு காரத்தை உணர்த்தாத போதும், இதையும் காரத்தில் தான் சேர்த்திருக்கின்றனர்.

டச்சுக்காரர்கள் இங்கிலாந்தில் அநியாய விலையில் மிளகு கிராம்பு போன்ற காரம் மற்றும் கசப்புச் சுவை பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தனர். இந்த மிளகு கிராம்பு போன்ற சமையல் பொருட்களை இங்கிலாந்து இந்தியர்களிடம் நேரடியாக வாங்க முடிவெடுத்தது. இங்கிலாந்தில் சில வணிகர்கள் அரசரை கூட்டு சேர்த்துக் கொண்டு ஒரு கம்பெனி ஆரம்பித்தனர் அதன் பெயர் தான் கிழக்கிந்திய கம்பெனி. பின்பு நடந்தது எல்லாம் வரலாறு. இந்த மிளகைக் கொண்டு கிரேக்கர்கள் பல மருந்துகளை உருவாக்கினர்.

பொங்கலில் இருக்கும் மிளகை நாம் ஒதுக்கி வைக்கும் பொழுது தேசத்தின் ஒரு கதையையே நாம் ஒதுக்கி வைக்கின்றோம். இப்படிப்பட்ட மகத்துவம் மிக்க உணவுப் பொருட்களால் தான் அந்நியர்கள் இந்தியாவை அடைய நினைத்தனர் என்பதை நாம் மனதில் கொள்வோம்.

துவர்ப்பு என்பது இரத்தத்தை ஊறவைக்கும் சுவை என்கிறது சித்தமருத்துவம்.

சுவைகள் பெரும்பாலும் ஒன்றிரண்டு கலந்தே இருக்கும். உதாரணத்திற்கு நெல்லிக்கனியை எடுத்துக்கொள்வோம்.

 மூத்தோர் சொல் போல முன்னால் கசந்து பின்னால் இனிப்பது நெல்லிக்கனியின் பண்பு. நீர்நிறை காய்கறிகளில் உப்பு இருக்கும் எனப்பார்த்தோமே இதுவும் பிழிந்தால் நீர்வரக்கூடியதே. எனவே இதில் உப்பு உள்ளது, மேலும் சிட்ரிக் அமில புளிப்புச்சுவையும், கொஞ்சமாக பழச்சர்க்கரையையும் கொண்ட கனி அது. அதனால் தான் நாவில் போட்டவுடன் உப்பும் புளிப்பும் இணைந்து; கசப்பது போன்ற தோற்றமயக்கத்தை மூளைக்கு அளிக்கின்றன. நீங்கள் நீர் அருந்தியபின்னர் அமிலங்கள் நீர்க்கப்பட்டு சர்க்கரைச்சுவை உணரப்படுகிறது. அதனால் தான் நெல்லிக்கனி நீர் அருந்திய பின்னர் இனிக்கிறது. இப்படிக்கலவையான சுவையைக் கொண்டிருந்தாலும் அது இரத்தவிருத்திக்கு உகந்தது. எனவே சித்த மருத்துவம் இதை துவர்ப்பில் வகைப்படுத்துகிறது. இதிலேயே சில அரிய வகை மலைநெல்லிகள் உள்ளன. அவை நீண்ட ஆயுளுக்கு உறுதுணை புரிவனவாம். எனவே தான் அதியமான் தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழவேண்டும் எனும் நோக்கில் அவ்வைக்கு  கிடைத்தற்கரிய அக்கனியைத் தந்தான்.

நாவிற்கு வெவ்வேறு சுவைகளை உணர்த்தினாலும் அது உடலுக்கு எவ்வகை நன்மையை செய்கிறது எனும் அடிப்படையிலே தான் சித்தமருத்துவத்தில் சுவைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

 பூ  வழங்குவது நெக்ட்டர் எனும் மது. ஆனால் தேன் என்பது தேனீக்கள்(மதுநக்கிகள்) வாயில் சுமந்து, வயிற்றில் சேகரித்து, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் நொதிகளைக் கலந்து பின்னர் தனது கூட்டில் பாதுகாத்துவைக்கும் பொருள். மேலும் தேனில் ஹைட்ரஜன் பெராக்ஸைட், பிளேவனாய்டுகள், பாலி ஃபீனால்கள், விட்டமின்கள், மினரல்கள் போன்றவை அடர்த்தியாக்கப்பட்டு விடுகின்றன

 எனவே நெக்ட்டர்(மது) என்பது இனிப்பு. ஆனால் தேன் என்பது நாவிற்கு இனிப்பானாலும் உடலுக்கு கசப்பே  என்பது சித்தமருத்துவத்தின் புரிதல்.

குறிஞ்சியில் தேனை எடுத்தல் கிழங்குகளை அகழ்தல் முதலியனதான் முக்கியமான தொழிலாக இருந்தது. குறிஞ்சியில் நாம் மிகவும் தேடியது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையையே.

குறிஞ்சியை விட்டு மற்ற திணைகளுக்கு நகர்ந்தவர்களுக்கு அந்தச் சுவை மறக்கவே இல்லை. இனிப்பின் மீதான ஆசை மருதத்தில் கரும்புகளை விளைவித்த பொழுது தான் அடங்கியது. இருப்பினும் கரும்பு என்பது அளவாக உண்ணப்பட வேண்டும். எனவே தான் ஆசையின் குறியீடாக பட்டினத்தார் அதைக் கையில் ஏந்தியபடி திரிந்தார்.

 குறிஞ்சியில் தினைகளை விதைப்பது வழக்கில் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் அது அங்கே பயிர்செய்யப்படவில்லை. மருதத்தில் நெல் வகைகளும் மானாவாரி நிறத்தில் பல்வகை தினைகளும் அதிக அளவில் விளைவிக்கப்பட்டன.  

 முல்லையில் மாடுகள் மூலம் நமக்கு கிடைத்த  பால் ஆறு சுவைகளையும் கொண்டது. அதில் லாக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. மேலும் மினரல்களும், கொழுப்பும் இருக்கிறது. அதோடே புரதமும் அதில் இருக்கிறது. தேவையான சத்துப் பொருட்கள் நிரம்ப உண்டு அதில். எனவே அது அறுசுவையும் கொண்டதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு நெய்தலின் உப்பு, குறிஞ்சியின் தேன் மற்றும் கிழங்குகள், முல்லையின் பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் முதலிய அனைத்தும் மக்களுக்குக்கிட்டும் வகை மருதத்தில் செய்யப்பட்டது.

உடலை சமநிலையில் வைத்திருப்பதே உணவின் நோக்கம். உடலின் சமநிலை தவறுவதே நோய் எனப்படும். தமிழர்கள் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உயிர்த்தாதுவாக மாறுகின்றன எனும் கொள்கையின் அடிப்படையில் அறுசுவையையும் கொண்டு உடலின் சமநிலையை நிலைநிறுத்தியிருக்கின்றனர்.

உணவின் மூன்றாவது பண்பு – உயிர்த்தாது:

மருத நில வாழ்வு வாழ்ந்தபொழுது அரிசி முதலாய் பல்வகை உணவுப்பொருள்கள் தமிழர்களது உணவுப்பட்டியலில் இருந்தன. அவற்றில் ஒவ்வொரு உணவுப்பண்டத்திலும் சில சுவைகள் மிகுந்தும், குறைந்தும், கலந்தும் இருந்ததை அவர்கள் சுவைத்தறிந்தனர். ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உயிர்த்தாதுவாய் மாறுவதை உடற்கூறாய்வின் மூலம் அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.

 உதாரணத்திற்கு இனிப்புச் சுவை ‘தசை’ (glycogen)  எனும் தாதுவாக மாறுவதைக் கண்டனர். அகோரி போல் சதையைச் சுவைத்தால் ஒழிய இதைக் கண்டுபிடிப்பதற்கு அக்காலத்தில் வாய்ப்பில்லை. அப்படி சுவைப்பதும் தப்பு  இல்லை. ஏனென்றால் ஆங்கில மருத்துவர்களே முந்தைய காலகட்டங்களில் சிறுநீரைச் சுவைத்துதான் மதுமேக நோயைக் கண்டறிந்திருக்கின்றனர்.

 Diabetes mellitus என்ற வியாதியின் பொருள் என்ன தெரியுமா?

 லத்தினில் அதன் பொருள் "sweet urine".

வைத்தியன் என்பவன் கடவுளுக்கு சமானம். அவனுக்கு எதுவுமே அசிங்கம் அல்ல.

 மாவாய் ஆக்கும் பண்டங்களான தானியங்கள், கிழங்குகள் முதலியனவற்றைக் கரைத்து வைக்கும் போது புளிப்பேறுவதைக் கண்ட அவர்கள், இவைகளை புளிப்புச் சுவைப் பண்டம் என வகுத்தனர். இவைகளை அதிகம் உண்ணும் போது கொழுப்பாக (Triglycerides) மாறுவதைக் கண்டு புளிப்பு உணவின் தாது ‘கொழுப்பு’ என்றனர்.

உண்ணும் உணவனைத்தும் அன்ன இரசமாய் மாறி, பிறகு இரத்தமாய் விருத்தியாவதாய் கருதினர். நோயற்ற ஒருவனுக்கு எதை உண்டாலும் இரத்தமாகுமாயினும் இரத்த தாதுவிற்கு துவர்ப்பே உவப்பு என்பது அவர்கள் கணிப்பு. உடலில்‌ நிகழும்‌ எல்லா மாறுதல்களையும்‌ பிரதிபலித்துக்‌ காட்டும்‌ கண்ணாடிபோல்‌ குருதி விளங்குகிறது.

கசக்கினாலோ, நீரிலோ நெருப்பிலோ போட்டாலோ வாசனை தரும் பொருள்களை கசப்பு என்றனர். கசப்பு விண்(வெளி) மற்றும் வளியின் கலவை. சுவைகளிலேயே வெளி எனும் விண்ணின் ஆற்றல் கசப்பிடம் மட்டுமே உள்ளது.  எனவே கசப்பு, நரம்பு எனும் தாதுவிற்கு துணைபுரியும் எனக் கூறினர்.

எவ்வளவு மசித்தாலும் மசியாத பகுதி கொண்டதையும், நார் உடையவற்றையும் நாவிற்கு அறிவிக்கவில்லை என்றாலும் காரச்சுவைமிக்கன என்றனர். மிளகு போன்றவற்றை உண்ணும் போதும், வயிற்றின் அமிலம் மிகும்போதும் காரத்தன்மை கொண்ட எச்சில் சுரப்பதைக் கொண்டு  காரத்தின் (alkali) தாது உமிழ்நீர் என்றனர். காரம் வளி மற்றும் தீயின் கலவை .

இனிப்புச்சுவை என்பது நிலம் மற்றும் நீர் (நிலத்தொடு நீர்) ஆகியவற்றின் கலவையாகும். இது உங்கள் உடலில் வாதம் மற்றும் பித்தம் ஆகியவற்றை பேலன்ஸ் செய்கிறது. ஆனால் இனிப்புச்சுவையை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கபம் அதிகரிக்கிறது.

இனிப்பு மண் மற்றும் நீரின் கலவை என்றனர். 

ஆனால் உப்பு, நீர் மற்றும் நெருப்பின் கலவை என்றனர். 

நீர்சத்து மிகுந்த காய்கறிகள் உப்பினைக் கொண்டுள்ளன. அவை நிலத்தின் அழல் அதிகரிக்கும் கோடைகாலங்களில் தான் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. உப்புக்கள்(minerals) எலும்போடு தொடர்புடையன என்பது செத்து எரிந்து சுண்ணம்பாய் மிஞ்சிய சாம்பல்பொடியால் அவதானித்தனர் (மனிதச் சாம்பலில் அதிகம் இருப்பது சுண்ணம்புச் சத்து எனும் கால்சியம் – ‘செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டான்’ எனும் வழக்கோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்). சாம்பல் ஆற்றலின் குறியீடு.

 மினரல்கள் பூமியை விட வயது முதிர்ந்தவை. தாவர உண்ணிகளால் உப்பை அதிகம் உடலில் சேர்த்துவைக்க இயலாது. அதனால் உப்புச்சுவை மிகுந்த மினரல் கட்டிகளை அவை மிகுவிருப்பத்தோடு நக்கிச்சுவைக்கும். உப்பானது எளிதாய் உடலை விட்டு நீங்க அதிக வாய்ப்புள்ளது. வியர்வை, வாந்தி முதலிய இதற்கு எடுத்துக்காட்டு. தசைபிடிப்பு ஆரம்பித்து உயிர் சேதம் வரைக்கும் உப்புச்சேதம் இட்டுச்செல்லும்.

 உடலில் உப்பு குறையும் போது அதை நீங்கள் உண்டால் நாவிற்கு அது மதுரமாகும். உடலில் உப்பு அதிகரித்தால் நாவுக்கு கரிப்புச்சுவை ஏற்படுத்தும். அளவினைப்பொருத்தே இதன் சுவை என்பது தீர்மானிக்கப்படுகிறது. மேலும் உலோகங்களும் உப்பு வடிவில் உடலில் அதிகரித்து உடலுக்கு ஊறு விளைவிக்கலாம்.

உடலின் சூட்டுக்கு சர்க்கரை எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு உப்பும் அவசியம் ஏனெனில் உப்பு தான் சர்க்கரையை உடலுக்குள் இழுத்து உள்ளே போடுகிறது.  அந்த சர்க்கரை தகனத்தால் தான் உடலில் வெப்பம் பெறப்படுகிறது.


சில சுவைகள் ஒன்றுக்கொன்று நட்பு பாராட்டும், சில சுவைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கும். உதாரணத்திற்கு உப்பும் கசப்பும் இணைந்து உயிர் வளர்ப்பன. ஆனால் இவை மிகின் தூக்கம் கெடும். இவை இரண்டும் பித்தத்தை வளர்ப்பன. பித்தம் என்பது உடல் சூட்டைக் குறிப்பது.

உடலில் கசப்பு அதிகம் உள்ளவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பது நல்லது. அல்லது ஆறு வேளை குளிப்பது நல்லது.  சிவன் கோவிலில் ஆவுடையாரோடு கூடிய லிங்கத்திற்கு வெயிற்காலத்தில் ஆறு வேளை அபிஷேகம் நடக்கும். ஏனெனில் சிவன் உப்பு, சக்தி கசப்பு (என்று ச. கந்தசாமி முதலியார் தனது உணவு மருத்துவம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).

ஏற்கனவே கனசூடு மிகுந்தவர்கள் உடலில் பித்தமும் அதிகரித்து; அதுவும் மூன்றாம் நிலைக்குச் சென்றால், பித்தம் மூளையை பாதித்து hepato encephalopathyக்கு வழிவகுத்துவிடும். இதைத்தான் பித்தம் தலைக்கேறிவிட்டது என்கின்றனர். அப்படிப்படவர்களை பித்தன் என்று தான் அழைப்பார்கள். அவர்கள் அக்காலத்தில் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்து, சித்த மருத்துவ கருதுகோள்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது.

இந்த 'வாதம் பித்தம் கபம்' எனும் வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம், கடந்து வருகிறோம். இவை தான் இந்திய மருத்துவ முறைகளின் ஆதாரமாய் இருப்பதையும் நாம் பார்த்தோம்.

அடுத்த பதிவில் இவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.


No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

உணவு

  கருப்பொருள் - 2 உணவு  : சித்த மருத்துவம் உணவின் பண்பாக மூன்றினை குறிப்பிடுகிறது அவை முறையே குணம், சுவை மற்றும் உயிர்த்தாது ஆகும். அவற்றை ஒ...