Saturday, October 24, 2026

ஏர் முன்னது எருது - உயிர்

உயிர் என்றால் என்ன? உடலில் அது எங்குள்ளது?

‌ மூளையில்‌ இருக்கிறதா?

மூளை சிந்திக்கும்‌ இயந்திரசாலை. ஆகையால்‌ மூளையில்‌ தான்‌ ஆன்மா இருக்கிறதென்று சிலர்‌ கூறுின்றனர்‌.

நம்‌ மனதைக்‌  குறிப்பிட்டுப்‌ பேசும்‌ போது மார்பைக்‌ கையினால்‌ சுட்டிக்‌ காட்டிக்‌ குறிப்பிடுகின்றோம்‌, அளவு கடந்த பயம்‌, இன்பம்‌ அல்லது துன்பம்‌ எற்படும்‌ போது நம்முடைய இதயம்‌ படபடக்கத்‌ தொடங்குகின்றது. இதனால்‌ சிலர் இதயத்தில்‌ உயிர் இருக்கின்றதென்று கூறுகின்றனர்‌.

ஒருவனை தூக்கிலிட்டு உயிர்‌ இழக்கச்‌ செய்யலாம்‌. அப்படியானால்‌ கழுத்தில்‌ உயிர்‌ இருப்பதாக எண்ணலாமா?

 நடு வயிற்றில்‌ உதை கொடுப்பதால்‌  மரணம்‌ எற்படலாம்‌. அப்போ இதுதான் உயிர் இருக்கும் இடமா?

ஒரு மனிதனுக்குப்‌ பிராணன்‌ இழுத்துக்‌ கொண்டு இருக்குபோது சுவாசப்‌ பைகளும்‌ இதயமும்‌ கூடிய மட்டும்‌ வேலை செய்து அவனைக்‌ காப்பாற்ற முயலுன்றன, இதனால்‌ உயிர்‌ சுவாசப்‌ பையில் அல்லது இருதயத்தில்‌ இருப்பதாகச்‌ சொல்லலாமா?

பக்க வாதம் வந்த பகுதி சூம்பிப்போய் அசைவின்றி இருக்கும். அந்த அங்கத்தை உயிர்‌ இழந்த அங்கம்‌ என்று சொல்லலாமா?

இறந்து பின்பு ஒரு  உறுப்பானது இன்னொருவருக்குப் பொருத்தப்படுகிறது. அது அவரது உடலில் வாழுகிறது. அப்போது ஒருவரின் உயிரின் ஒரு பகுதி இன்னொருவர் உடலில் உயிர்வாழ்கிறதா?

பல்லியின்‌ வால்‌ அறுந்து விட்டால்‌ வால்‌ மட்டும்‌ தனியே சற்று நேரம்‌ துள்ளிக்‌ கொண்டிருக்கும்‌. கடலில்‌ வாழும்‌  நட்சத்திர மீனையோ, பிளனேரியாவையோ இரு துண்டாக வெட்டினால்‌ இரண்டு துண்டுகளும்‌ தனித்தனி உயிர்‌ நிலைகளாக வளர்ந்து இரண்டு உயிர்கள்‌  ஆகும். இது போல உயிரினைப் பங்கிடலாமா?

கண் முன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர், திடீரென இறக்கும் அறிகுறிகளைக்காட்டினால் மருத்துவர்கள் என்ன செய்கின்றனர் என படங்களில் பார்த்திருக்கிறோம். நெஞ்சில் கையை வைத்து மாறிமாறி அழுத்துகிறார்கள், வாயோடு வாய் வைத்து சுவாசம் அளிக்கிறார்கள், நெஞ்சில் அயன் பாக்ஸ் போல் ஒரு சாதனத்தை வைத்து கரண்ட் ஷாக் கொடுக்கிறார்கள், ஏர்போர்ட்டில் விழுந்த பெண்ணின் கழுத்தைக் கீறி ஸ்ட்ராவை சொருகுகிறார்கள். இவ்வாறு செய்து உயிர் உடலை விட்டு நீங்குவதைத் தவிர்க்கிறார்கள்.

“அவர்கள் என்னதான் செய்கின்றனர்? “

ஒவ்வொரு செல்லுக்கும் ஆற்றல் மூலக்கூற்றையும், வளி எனும் பிராணனையும் குருதி எடுத்துச் செல்கிறது. இதயம் எனும் மோட்டார் பம்பின் வேலையால் குருதி ஓட்டம் நடைபெறுகிறது. இவற்றில் நேரும் தடையினால் செல்கள் இயங்குவதற்கான வளியும் ஆற்றல் மூலக்கூறும் கிடைக்காமல் போகின்றது. அதன் காரணமாக செல்கள் அனைத்தும் செயலிழந்து மரணம் சம்பவிக்கிறது. தனித்தனி செல்களின் ஒட்டுமொத்த இறப்பு உயிரின் இழப்பு.

கழுத்தைக் கீறி ட்யூபை சொருகுவது மூச்சுப்பாதையின் அடைப்பை நீக்கி, வாயோடு வாய் வைத்து ஊதுவது சுவாசத்தை வெளி உதவியோடு செய்ய, இதயத்தை வெளியிலிருந்து செயல் படுத்துவதற்கான உதவி தான் நெஞ்சை அழுத்துவதும் அயன் பாக்ஸ் கொண்டு கரண்ட் வைப்பதும். இதுமட்டுமல்லாமல் இரத்தப்போக்கை தடுப்பது, ட்ரிப்ஸ் ஏற்றுவது, குருதிக்குழாயின் அடைப்பை நீக்குவது அனைத்தின் அடிப்படையும் இதுதான்.

மேற்கூறிய திடீரென ஏற்படும் வேண்டா தடைகளால் ஒவ்வொரு செல்லும் ஆற்றல் இன்றி தவிக்க,  செல்களின் கூட்டு இயக்கத்திற்கு பாதிப்பு நேருகின்றது. சமச்சீர் இயக்கக் கட்டுக்கோப்பு குலைந்து, உடலின் செல்கள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் நிரந்தரமாக இழக்கப்படுவதே உயிரிழப்பு.

ஆங்கில மருத்துவம் துடிக்கத்தடுமாறும் இதயம், சுவாசிக்கத்தயங்கும் நுரையீரல், கழிவை வெளியேற்றா கிட்னி முதலியவற்றின் வேலைகளை இயந்திரத்தின் துணையுடன் மேற்கொண்டு இறப்பை தள்ளிப்போடுவதன் மூலம் வாழ்நாளை நீட்டிக்கிறது.

ஆங்கில மருத்துவம் நம்மை நீண்ட நாள் வாழவழிசெய்கிறது என்று சொல்லலாம்; அல்லது இயந்திரங்கள் மற்றும் மாத்திரைகள் துணையுடன் இறப்பை மட்டுப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். இம்முறைகளின் மூலம் நாம் இறப்பை தள்ளிப்போட்டு நீண்ட நாள் உயிரோடு இருக்கவைக்கப் படுகிறோம்.

“நாம் ஏன் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகிறோம்?”

 

 ஏனெனில் நாம் மரணத்தை எண்ணி அஞ்சுகிறோம்.

 

“மரணம் என்பது உடலின் அழிவா? அல்லது உயிர் உடலைவிட்டு நீங்கும் செயலா? “

 

நீங்கள் என்பது உங்கள் உடலா? உயிரா?  அல்லது இரண்டும் சேர்ந்ததா?

 

 உண்மையில் நீங்கள் என்பது உங்கள் நியூரானில் பொதித்து வைத்திருக்கப்படும்  உங்கள் நினைவுகளின் தொகுப்பு. நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு உங்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர், பிடித்த உணவு, தண்ணீரில் தத்தளித்த பொழுது எழுந்த அச்சம், காதலனின்/ காதலியின் நிராகரிப்பு தந்த வலி, முதல் சம்பளம் வாங்கிய பொழுது எழுந்த பெருமிதம், கணவனின்/ மனைவியின் கைப்பிடித்து நெருப்பைச் சுற்றிய தருணம், நண்பனின் துரோகம், நண்பனுக்கு இழைத்த துரோகம்,  கைகளில் பிஞ்சு மகளை எந்தி நெங்கிழ்ந்தது... இந்த நினைவுகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு  நல்ல உடல் ஆரோக்கியத்தோடு உங்களை உலாவ விட்டால் உங்களால் உயிர்ப்போடு இயங்க முடியுமா என்ன? உங்கள் உடல் உறுப்புகளில் எதை வேண்டுமானாலும் அறிவியல் துணை கொண்டு மாற்றிவிடலாம். ஆனால் உங்கள் நினைவுகள் பொதிந்திருக்கும் நியூரான்களை உள்ளடக்கிய மூளையையும் மாற்றி விட்டால்?


ஆகவே, உடலின் பல உறுப்புகளை மருத்துவம் மாற்ற முடிந்தாலும், நம்முடைய நினைவுகளையும் ஆளுமையையும் தாங்கி நிற்கும் மூளையை முழுமையாக மாற்றிவிட்டால், அந்த மனிதர் இன்னும் "அவரே" என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

 கில்லடின் எனும் கொல்லும் இயந்திரம் மூலம் 28 ஜூன் 1905 இல்  தலை துண்டிக்கப்பட்ட கைதி ஹென்றி லாங்குயிலின் தலையிடம்  மருத்துவர் கேப்ரியல் பியூரியூக்ஸ் நடத்திய ஆய்வு முக்கியமானது. அந்த மருத்துவர் தனது ஆய்வில் கூறியவை பின்வருமாறு

“தலை துண்டிக்கப்பட்ட ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு இமைகள் துடிதுடித்து  அடங்கிய பிறகு  "லாங்குயில்!" என உறுதியான குரலில் அவனின் பெயர் சொல்லி அழைத்தேன்.

அழைத்ததும் அவனது கண் இமைகள் மெல்ல மெல்ல மேலே எழுவதைப் பார்த்தேன். அவனது பெயரை அழைத்த என்னை நோக்கி  லாங்குயிலின் கண்கள்  உறுதியாக பதிந்தன, உயிருள்ள கண்கள் என்னைப் பார்ப்பது போன்ற எண்ணம் எனக்கு இருந்தது,” என்று பியூரியக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 பாரிஸில் இதுபோல July 17, 1793 துண்டிக்கப்பட்ட  Charlotte Corday என்பவளது தலையை துண்டித்தவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறான். துண்டிக்கப்பட்ட தலை அவனை கோவமாகப் பார்த்ததை கண்டு கூட்டமே வியந்திருக்கிறது.

 உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட பிறகும் 5-10 வினாடிகள் அந்தத் தலையை உயர்ப்புடன் வைப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் குருதியில் இருக்கும். அதுவும் இறப்பதற்கு கண நேரத்திற்குள் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை பிளாஷ்பேக்காக பளிச்சிடும் என்கிறார்கள்.

பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகளாதலால் அதற்கு மூளைக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படாது. எனவே துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கூட உங்களை கடித்து விஷம் ஏற்றக் கூடும். தலை துண்டிக்கப்பட்ட கரப்பான்களால் சில நாட்கள் வரையிலும் கூட உயிர் வாழ முடியும்.

இதுபோன்ற பல ஆய்வுகள் எலிகள் போன்ற உயிரினங்களை வைத்து நடத்தப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு அறிவியல் உலகம் உயிர் என்பது என்ன என்பதைப்பற்றி குருடர்கள் யானையைக் கைகளால் தடவி உணர்வது போல் உணர முயன்று கொண்டு இருக்கின்றன.

 உண்மையில் நீங்கள் என்பது உங்கள் பெயரோ  உடலோ  உயிரோ அல்ல…

 நீங்கள் வாழ்ந்த வாழ்வின் நினைவுகள்.

 இறக்கும்  பொழுது நியூரான்களுக்கு செல்லப்படும் குருதி தடைப்பட்டு நியூரான்கள் அழிய ஆரம்பிக்கிறது. அனுபவத்தால் கட்டமைக்கப்பட்டு நினைவுகள்வழி வாழும் 'நீங்கள்' என்ற ஒன்று இந்த உலகில் இருந்து மறைந்து போகிறது. அதன் பின்பு உங்கள் உற்றார் உறவினர் நினைவுகள் வழி நீங்கள் வாழலாம்.

இன்றிலிருந்து 120 வருடங்கள் கழித்து இந்த உலகில் இருக்கும் அனைவரும் மாற்றப்பட்டு விடுவார்கள்.  அவர்கள் நினைவுகளில் நீங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 உயிர் என்ன என்று  அறிவதை விட, இந்த உயிரோடு இருக்கும் பொழுது  என்ன செய்ய முடியும் என அறிவதே முக்கியம்.

உயிரை இன்னதென்று அறிய, ஓரறிவு கொண்ட மரத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். மரத்தின் உயிர் தண்டில் இருக்கிறதா? அல்லது சைசில் பெரிய கிளை ஏதேனும் ஒன்றில் இருக்கிறதா? அல்லது வேர்தனில் இருக்கின்றதா?

 இதில் ஏதேனும் ஒன்றை வெட்டிவிட்டால் மரம் உயிரிழந்து விடுமா என்ன?

இது ஜைன தீர்த்தங்கரர்களில் முக்கியமானவரான மகாவீரர் என்பருக்கும் தமிழரான மற்கலி கோசாலருக்கும் இடையே நடந்த விவாதத்தை நினைவூட்டுகிறது. 

அவர்கள் இருவரும் பயணத்தின் போது, ​​ஒரு வாடிய மரத்தைக் கண்டார்கள்.

நியதி மீது நம்பிக்கை கொண்ட கோசாலர், மரத்தின் விதி நிலையானது மற்றும் மாறாதது என்பதால் அது உயிரற்றதாகவே இருக்கும் என்று வலியுறுத்தினார்.

மறுபுறம், மகாவீரர், இயற்கை காரணங்களால் மரத்தின் நிலை மாறக்கூடும் என்று நம்பினார்.

சிறிது நாள் கழித்து, சாதகமான சுற்றுச்சூழல் காரணமாக, மரம் புதிய வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது.

இது கோசாலரின் விதியை மாற்ற முடியாது என்ற உறுதியான கூற்றை கேள்விக்குள்ளாக்கியது.

இருப்பினும் அந்த மரம் பிழைக்க வேண்டும் என்ற நியதி இருந்ததனால் அது பிழைத்திருக்கலாம் அல்லவா? இதன் அடிப்படையில் இருவருக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது,

மகாவீரர் ஜீவாவை அல்லது சீவனை (ஆன்மாவை) அழிவற்றது, தனித்துவமானது  மற்றும் உடலிலிருந்து வேறுபட்டது என்று விவரித்தார்.

ஆன்மாவிற்கு அறிவு, உணர்தல், பேரின்பம் மற்றும் ஆற்றல் போன்ற உள்ளார்ந்த குணங்கள் உள்ளன, ஆனால் இவை கர்மாவால் மறைக்கப்படுகின்றன என்றார்.

மோட்சம் என்பது ஆன்மாவை அனைத்து கர்ம அசுத்தங்களிலிருந்தும் விடுவித்து, அதன் தூய்மையான, ஆனந்தமான தன்மையை மீண்டும் பெறும் நிலை என்பதே மகாவீரரின் நிலைப்பாடு.

கோசாலரோ தமிழர்களின் வாழ்வியலின்படி மோட்சத்தை அவர் நம்பவில்லை. அஜீவிகா அல்லது ஆசீவகக் கோட்பாட்டின் படி; சீவன் வாழும் வாழ்வு பிரபஞ்சத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது  என்று கருதுகிறது. அது மகாவீரரின் ஜீவன் கோட்பாட்டை எதிர்த்தலால் ஆ’ஜீவ’க் கோட்பாடு எனப்பெயர் பெற்றது. (ஆசு + ஈவு  +  அகம், என்றும் இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது). ஆன்மாவின் தனித்துவத்தையோ ஆன்மீகப் பயணத்தையோ மற்கலி வலியுறுத்தவில்லை. மேலும் ஜீவனுக்கும் கர்மாவுக்குமான நேரடி உறவை அவர் மறுத்தார். கர்மா மறுபிறப்பு அல்லது மோட்சத்தை பாதிக்கிறது என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார். இக்கொள்கையின் வழி நடந்து, நாடி பிடித்து ஆண்-பெண் பேதம் அறிய முடியா நிலையை அடையும் ஆசீவகர்கள், அய்யனார் – சாத்தன் - சாஸ்தா என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஓரறிவு மரமானது ‘ஜீவன்’ அல்லது ‘உயிர்’ பற்றிய சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி இருவேறு ஆன்மீக மரபினில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்நிகழ்வின் மூலம் அறிய முடிகிறது. ஜீவன் எனும் ஆன்மாவைப் பற்றிய தேடலே இதுபோன்ற ஆன்மீக மரபுகள் அத்தனையின் அடிநாதமாக இருந்திருக்கிறது.

சரி ஜீவன் எனும் உயிர் என்ன என்று நம் முன்னோர்கள் ஏதாவது புரியும்படி கூறியிருக்கின்றனரா?

திருமந்திரப்பாடல் ஒன்று,

மத்திம மோத்த சிலந்தி வலயத்துள்‌

ஒத்தங்‌ கிருந்து உயிருண்ணு மாறுபோல்‌

அத்தனும்‌ ஐம்பொறி யாடகத்‌ துள்நின்று

சத்த முதல்‌ஐந்தும்‌ தானுண்ணு மாறே

அதாவது உயிரானது சிலந்தி நூல் வலை பின்னுவது போல உடலைக் உருவாக்கி உள்ளது. வலையின் துணைகொண்டு இரையை சிலந்தி பொறி வைத்துப்பிடித்து உண்கிறது. அதுபோல உடலில் இருக்கும் ஐம்புலன் கொண்டு உணவை ஈட்டி உடல் வளர்த்து அவ்வுடலில் உயிர் தங்கியிருக்கிறது.



திருமூலர் பல பாடல்களின் வழி அறிவையே உயிர் என்கிறார். அந்த உயிரானது பரிணாமத்தில் பல படிநிலைகளைக்கொண்டுள்ளது.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே (தொல்காப்பியர்)

 ஓரறிவு என்பது தொடு உணர்வு, அடுத்த அறிவு சுவை, மூன்றாம் அறிவு மணம், நான்காவது கண், ஐந்தாவது செவி.

மேற்கூறிய ஐம்புலன்களின் துணையால் சூழலை முடிந்த மட்டும் ஐந்தறிவு உயிர்களால் உணர முடிந்தது. மனிதனால் ஐம்புலன்களால் பெறும் அனுபவங்களை எண்ண அலைகளாக மூளையால் தொகுத்து அறிய முடிகிறது. இதை ஆறாம் அறிவாம் மனம் எனும் பகுத்தறிவாக மனிதர்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால் அறிவை திரையிட்டு மறைக்கும் வேலையையும் புலன்கள் செய்கின்றன. அவை வழங்கும் இன்பம் நம்மை சிந்திப்பதை தவிர்த்து உலக இன்பத்தில் கட்டுண்டு இருக்க வைக்க முயல்வதாக சித்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனாலேயே அவற்றை ஐம்பொறிகள் (five traps) என்று அழைத்தனர். இதைத் தாண்டியும் மேலும் நான்கு அறிவுகள் உள்ளன என்கிறார் திருமூலர்.

உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு அறு ஏழும்

கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்

பற்றிய பத்தும் பலவகை நாழிகை

அற்ற தறியாது அழிகின்ற வாறே-திருமந்திரம்741

 

“ஆறறிவில் இருந்து பத்து அறிவாக உயர்வது எப்படி? அறிவு எனும்  உயிரை எவ்வாறு வளர்ப்பது?”

அதற்கு திருமூலர் தரும் பதில்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...'

திருமந்திரம்- 724

உடலை பாதுகாத்து வளர்த்தல் மூலமே உயிர் வளர்க்கமுடியும் என்கிறார் திருமூலர்.

 "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" என்று திருமூலர் கூறுகிறார். உடல் சிதைந்தால், அதில் வெளிப்படும் உயிரின் செயல்பாடும் நிற்கிறது. உடலின்றி அறிவு வெளிப்பட முடியாது. எனவே உடலைப் பேணுவது உயிரைப் பேணுவதற்கான முதல் படி என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஏர் முன்னது எருது - உயிர்

உயிர் என்றால் என்ன ? உடலில் அது எங்குள்ளது ? ‌ மூளையில் ‌ இருக்கிறதா ? மூளை சிந்திக்கும் ‌ இயந்திரசாலை . ஆகையால் ‌ மூளையில் ‌ தான் ...