Sunday, August 31, 2025

அருள்வல்லான்



சிவன் அன்பே உருவானவன், மௌனத்தை விட மென்மையானவன். எனினும் தன்னை அண்டியவர்களை பாதுகாப்பதில் உக்கிரமானவன்.
 அவனது வலிமை ஆவேசத்தினால் தூண்டப்பட்டதல்ல, தன்னை சரணடைந்தவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அவனது வலிமை தூண்டப்பட்டது. 

  உடலளவிலும் மனதளவிலும் அவன் அவனது தந்தையைப் போலவே பெருவீரன். இந்த வனத்தில் அவன் எதைக் கண்டும் அச்சப்பட்டதில்லை. அந்தப் பெருவீரனுக்கு இப்பொழுது நந்தனும் துணை இருந்தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எந்த வேட்டையாடியும் அவர்களை அண்டியவர்களை தீண்டத் துணியவில்லை. அவர்கள் இருந்த சூழலில் அமைதி நிலவியது.

ஆனால், அமைதி என்பது ஓய்வு அல்ல.

 அவனது மாபெரும் படைப்பாகிய வெண்கல சூலம் உடைந்து கிடந்தது. இப்போது அவனுக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ஆயுதம் என்பது அவனைப் பொருத்தமட்டில் அழிப்பதற்கான கருவி அல்ல. அது காப்பதற்கான கருவி. அந்த ஆயுதம் வளையக்கூடிய செம்பாகவோ நொறுங்கக்கூடிய வெண்கலமாகவோ இருப்பதை அவன் விரும்பவில்லை. அவன் தன்னைப் போலவே வலிமையான ஒரு உலோகத்தை தேடினான். இதுவரை அவனிடம் இருந்த உலோகங்கள் அவனது ஆற்றலை தாங்கும் திறனை பெற்றிருக்கவில்லை. ஒன்று அவை வளைந்தன அல்லது கண்ணாடித் துண்டை போல் அதிக ஆற்றல் கொண்டு தாக்கும் பொழுது உடைந்தன. 

 உடைந்து கிடந்த அவனது சூலத்தை நோக்கும் பொழுதெல்லாம் அவனுக்குள் ஆற்றாமை பொங்கி எழுந்தது. வலிமையான உலோகம் ஏதும் கிட்டாதா என்று அவன் தேடத் துவங்கினான்.
 அப்படிப்பட்ட உலோகத்தின் இருப்பை அவன் அருகில் உள்ள ஒரு நிலப்பரப்பில் உணர்ந்தான்.

 முல்லை வனத்திற்கு அப்பால் பரந்த சமவெளிகளில் இருந்து ஒரு காந்தப்புலன் அவனை ஈர்த்துக் கொண்டே இருந்தது. நோயின் தாக்கத்தாலும் தனக்குத் தானே பயிற்றுவித்துக் கொண்ட ஆன்ம பயிற்சிகளாலும் உயிர் பெற்றிருந்த அவனது நாடிகள் அவனுக்கு அந்த உலோகத்தின் இருப்பிடத்தை குறிப்பால் அறிவித்தபடி இருந்தன.

அவன் அந்த மின்காந்தத் துடிப்பை பின் தொடர்ந்து அந்த உலோகத்தை கண்டறிய ஆவல் கொண்டான். சிவன் அந்த இடத்தை நோக்கிச் செல்ல முடிவெடுத்தான். சிவன் நந்தனின் திமிளைப் பற்றி நந்தனின் மீது ஏறினான். இப்பொழுது நந்தன் சிவனின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தான். 

சிவன் நந்தன் மீது அமர்ந்து செல்லும்போது, நந்தனை வழி நடத்துவதற்கு சிவனுக்கு வார்த்தைகளோ கடிவாளமோ தேவைப்படவில்லை. சிவனின் ஒவ்வொரு நுட்பமான அசைவும், எடையின் லேசான மாற்றமும், காலின் மென்மையான தொடுதலும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன் மூலம் அவனது விருப்பம் நந்தனுக்கு உடனடியாக கடத்தப்பட்டு விடும் . அவர்கள் இருவரது ஆன்மாவும் ஒரு புலப்படாத கயிற்றினால் இணைக்கப்பட்டிருந்தது போல தோன்றியது. அது ஓட்டுபவனுக்கும் வாகனத்திற்கும் இடையிலான பிணைப்பு மட்டுமல்ல , மாறாக அன்பினால் இணைந்த இரு ஆன்மாக்களின் பரிபூரண ஒத்திசைவு இணக்கம்.

சிவன் மென்மையாக நந்தனின் தோலைத் தீண்டிய உடனேயே, நந்தனுக்கு எந்தப் புறம் செல்ல வேண்டும் என்பது விளங்கியது.

அவர்கள் காட்டை விட்டு வெளியேறி, வளமான மருத நிலங்களை நோக்கி பயணிக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் வேகத்தை அதிகரித்து, அடர்ந்த, நிழல் படர்ந்த காடுகளின் வழியாகச் சென்றனர். அந்த அடர்ந்த காடு நெருக்கமான புதர்களாலும் முள்மரங்களாலும் அடைபட்டிருந்தது, ஆனால் அவற்றால் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க இயலவில்லை. சிவன் தனது சூலத்தைக் கொண்டு புதர்களை விலக்கினான்.காட்டின் எல்லையில் பெரும் மதில் சுவரென அமையப்பெற்ற விழுந்து கிடந்த பெரிய மரங்களை நந்தன் தனது கொம்புகளால் முட்டித் தூக்கி எறிந்து வழி ஏற்படுத்தி புயலைப் போல் விரைந்து சென்றான் . இறுதியாக அவர்கள் இருவரும் பொருநை நதியின் கரையினை அடைந்தனர்.

 அது சற்றே மேடான நிலப்பரப்பு அங்கே இருந்து பார்க்கும் பொழுது பல மைல்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

அங்கே, உலகம் வேறுவிதமாக காட்சியளித்தது .

 அங்கே காற்றின் மணம் வேறுவிதமாக இருந்தது.

 அந்த நிலம், மக்களால் நிறைந்திருந்தது. அவர்களின் ஆடைகளும் அணிகலன்களும் வித்தியாசமாக இருந்தன. அவனது திசை காட்டியான மூன்றாம் கண்ணும் நாடிகளும் அவனை அந்த கிராமத்திற்கு அப்பால் உள்ள ஒரு பரந்த நிலப்பரப்பினை நோக்கி ஈர்த்தன.

  மனித நடமாட்டம் குறைவாக இருந்த கிராமத்தின் எல்லைப் பகுதி வழியாக அந்த கிராமத்தை கடக்க சிவனும் நந்தனும் எண்ணம் கொண்டனர்.

 காட்டினை ஒட்டி கிராம எல்லையில் யாரும் பார்த்து விடா வண்ணம் மரங்களுக்கு இடையிலேயே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
 அப்பொழுது அந்த இடத்தின் அமைதியை குலைப்பது போல திடீரென ஒரு பாடல் ஒலித்தது. அது சோகம் ததும்பும் பாடல். அது ஒரு ஒப்பாரி. அந்தப் பாடலினால் ஈர்க்கப்பட்ட சிவன் அங்கேயே நின்று அங்கு நடக்கும் செயல்களை கவனிக்க தொடங்கினான்.
 அவர்கள் நுழைந்திருந்த இடம் ஒரு இடுகாடு. பின் நாட்களில் இந்த உலகம் அந்த இடத்தை ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப் போகிறது.அந்த இடத்தில் காற்று ஈரமண்ணின் மணத்துடனும் காட்டு மல்லிகையின் நறுமணத்துடனும் கனத்திருந்தது. மருத நிலங்களின் வழியாக சிறு ஊர்வலம் அங்கே அமைதியாக நகர்ந்தது, மாலையின் தங்க ஒளி வளமான வயல்களின் மீது வெளிச்சத்தைப் பரப்பியது. 

அங்கிருந்த மக்கள் இறந்து பட்ட வீரன் ஒருவனை கௌரவிக்கக் கூடியிருந்தனர். அவன் தமிழ்பரணி ஆற்றின் கிழக்குக் கரையில் வாழ்ந்த ஒரு வீரன், தன் மக்களைக் காக்க போராடியவன். இப்போது அவன் தனது முன்னோர்களுடன் இணைய, பெரிய முதுமக்கள் தாழியில் இடம்பெறவிருந்தான்.இறந்துபட்ட அந்த மனிதனின் உடல் ஒரு பெரிய மண்பானையில் அமர வைக்கப்பட்டது. அந்த மண்பானை ஒரு முதுமக்கள் தாழி, மூத்தோரின் அடக்கப் பானை. அந்தத் தாழியானது ஒரு உயரமான மண் கலயம், அது மிகப் பெரியதாக இருந்தது, அந்தத் தாழியின் மேற்பரப்பு மினுமினுப்பாகப் பளபளத்தது. அது குயவர்களால் கவனமாக உருவாக்கப்பட்டது .

 அந்தப் பானையின் விளிம்புப் பகுதியில் வட்ட வடிவில் கைவிரல் பதித்த அச்சு முத்திரைகள் ஒரு வளையத்தை உருவாக்கி இருந்தன. அந்த முத்திரைகள் ஒரு வடிவத்தை உருவாக்கின. அது ஒரு யோனியைக் குறித்தது.

யோனி - பிறப்பின் புனித சின்னம்.

 கருப்பையில் இருந்து யோனி வழியாக இந்த உலகில் பிறந்தவன், திரும்பவும் இயற்கைத் தாயின் கருவறைக்குள் புக இருப்பதை, தாழியில் புதைக்கும் இந்த ஈமச்சடங்கு குறிப்பால் உணர்த்துகிறது . 
 
அவன் பயன்படுத்திய அரிய விலைமதிப்புமிக்க செம்புக் கணிச்சி, தெற்குக் கடற்கரையிலிருந்து வந்த முத்து வளையல்கள், ஆபரண மணிகள், தானியங்கள் நிரப்பப்பட்ட கருப்பு-சிவப்பு மண் பாண்டங்கள் போன்றவை தாழியில் வைக்கப்பட்டிருந்தன
அவனின் உடல் மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்ட துணியில் சுற்றப்பட்டு, முதுகு நிமிர்த்தப்பட்டு , தலை சற்று முன்னோக்கி வணங்கிய நிலையில் உட்கார வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் அவனது வீரத்தை சிறப்பிக்கும் நோக்கத்தில் அணிவிக்கப்பட்ட ஒரு மெல்லிய தங்கப் பட்டை இருந்தது. அது மட்டுமல்லாமல் அவனது மார்பை அலங்கரிக்கும் விதமாக முத்து மற்றும் கல் மணிகளின் மாலை காணப்பட்டது . 

பெண்கள் தங்கள் ஒப்பாரிப் பாடலைத் தொடங்கினர். அந்தப் பாடல் அவனது வீரத்தை பறைசாற்றுவதாக இருந்தது. ஒரு மூத்த பெண்; அரிசி நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டத்தை உள்ளே வைத்தார். அது அவனது ஆன்மாவை பசியாற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. 
 இறந்து பட்ட வீரனின் உற்ற நண்பன் ஒருவன் அவர்கள் இணைந்து வேட்டையாடிய ஒரு சிறுத்தையின் விரல் நகத்தால் செய்யப்பட்ட ஆபரண மணியை அவனுக்கு அருகில் மென்மையாக வைத்தான், அவன் பயணத்திற்கு ஒரு தோழனாக அது இருக்கும் என்று அவன் எண்ணி இருக்கக் கூடும்.

இரு ஆண்கள், பானையின் கழுத்தில் தடித்த மரக் கம்புகளைக் கட்டியிருந்தனர். ஒன்றாக, அவர்கள் அதை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் இறக்கினர். 
தாழியின் வாய்; கிண்ண வடிவில் இருந்த ஒரு மண் கலையத்தால் மூடப்பட்டது. தாழி இறக்கப்பட்ட குழி தற்போது மணலை கொண்டு மூடப்பட்டது. மேலே, ஒரு நடுகல் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நடுகல்லின் நிழல் மாலைச் சூரியனின் ஒளியில் நீண்டு காணப்பட்டது.

கிராம மூப்பர், வேம்பு மரத்தால் செதுக்கப்பட்ட கைத்தடியை ஊன்றி, சிவந்த அந்திவானத்தை நோக்கி தலையை உயர்த்தினார். 
“தமிழ்பரணியின் மகனே, நீ இந்த மண்ணின் காவலனாக திரும்பவும் இயற்கையின் கருவறைக்குள் திரும்புகிறாய். உன் ஆன்மா பழைய வேட்டையாடிகளும் வீரர்களும் உள்ள புலங்களில் நடக்கட்டும். பரணி கடலைச் சேரும் இடத்தில் வருடம் தோறும் உன் வழித்தோன்றல்களால் உனது புகழ் பாடப்படட்டும். உன் வழித்தோன்றல்களின் வாழ்வை முன்னோர்கள் ஆன்மாக்களுடன் இணைந்து நீ வழிநடத்துவாயாக ”.
அவரது குரல் வயது மூப்பின் நடுக்கத்திலும் உறுதியாக இருந்தது.
மக்கள் அவர் வார்த்தைகளை எதிரொலித்தனர், அவர்களின் வார்த்தைகள் அந்திக் காற்றின் சலசலப்புடன் கலந்தது. அந்த நடுகல் அமைதியாகவும், பெருமையுடனும் நின்றது, இந்த வீரன் மறக்கப்படமாட்டான் என அது உறுதியளித்தது. அந்த நடுகல்லின் கீழே, கருவறைக்குள் திரும்பிய அந்த வீரன் தன் மக்களின் அன்பளிப்புகளால் சூழப்பட்டு நித்திய விழிப்பில் அமர்ந்திருந்தான், அவனது ஆன்மா இறக்கவில்லை. அவனை நேசித்தவர்களின் நினைவுடன் பிணைந்திருந்தது.அது அவர்களின் வாழ்வினை வழி நடத்த உறுதி கொண்டது.

 அந்த வீரனின் ஆன்மா அழிவற்றது ... இறப்பு இல்லாதது....

 தமிழர்களை இறப்பு என்ற ஒன்றை நம்பவில்லை.

இறப்பு என்பது இல்லாமல் போவது.

 இயற்கையில் இருந்து உதித்த ஒரு உயிர் திரும்பவும் இயற்கையோடு கலந்து விட்டது என்பதே தமிழர்களின் நம்பிக்கை. 

 எனவேதான் தமிழர்கள் இறந்து விட்டான் என்று கூறுவதில்லை, இயற்கை எய்தினார் எனக் கூறுகிறார்கள்.
 
 அப்படி இயற்கையை எய்திய அந்த வீரனின் நினைவுகளோடு அவனது உற்றாரும் உறவினரும் இந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

 நடப்பவை அனைத்தையும் அடர்ந்த மரங்களுக்கு இடையில் நின்றிருந்த சிவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

 நடந்து கொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் அவனது மனதுக்குள் கலவையான எண்ணங்களை எழுப்பியபடி இருந்தன.
அவனது புலன்களும் மூன்றாம் கண்ணும் அவனை இந்த புனித நிலத்தைத் தாண்டி மேலும் தொலைவுக்குச் செல்லத் தூண்டின.
 
ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. 

 அந்த மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்தனர்.

அதனால் அவன் தனது காட்டை நோக்கி,, தனது தனிமையை நோக்கி.திரும்பினான்.

 அவன் காட்டை நோக்கி செல்ல முற்பட்ட அதே தருணத்தில் காட்டிற்குள் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

 அவள் தலையில் விறகுக்கட்டை சுமந்திருந்தாள். அவளது தோல் மழை பொழிந்த கரிசல் மண்ணைப் போல் இருந்தது. அந்தியின் கடைசி வெளிச்சத்தில் அந்தக் கருமை நிறத்தோல் மின்னியது.

அவள் நிலத்தின் தாளத்துடன் நகர்ந்தாள், அவளது மூச்சு, வெப்பத்தால் கனமாக இருந்தது.

 இருட்டுவதற்குள் அவள் வீடு திரும்ப வேண்டும். அவள் தனது நடையின் வேகத்தை அதிகரித்தாள். அப்போது வேகமாக கடந்து செல்லும் காளை ஒன்றின் குளம்பொலிச் சத்தத்தால் அவளது கவனம் திரும்பியது.
 சத்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்பினாள்.

 அவளுக்கு அருகில் ஒரு காளை வேகமாகக் கடந்து சென்றது. அதன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவனது மார்பு பாறையைப் போல அகலமாக இருந்தது, அவனது கைகால்கள் ஆவேசத்தையும் அழகையும் ஒருங்கே அறிந்த ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டவை போல இருந்தன. அவனது தோல் செம்மல் மலரின் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. ஒரு விசித்திரமான உலோக வளையம் , பாம்பு போல வடிவமைக்கப்பட்டு, அவனது கழுத்தைச் சுற்றியிருந்தது. ஒரு உடைந்த வெண்கல ஆயுதம் அவனது மடியில் கிடந்தது.

ஆனால் அவளை திகைப்பில் ஆழ்த்தியது அவனது கழுத்து.
 அந்தக் கழுத்து கருநீல வண்ணத்தைக் கொண்டிருந்தது.

அவனது கண்கள் பிறை வடிவில் தங்க நிறத்தில் ஜொலித்தன. அந்தக் கண்களில் அன்பும் அளப்பரியா தைரியமும் நிரம்பி இருந்தன .

  அந்த கண்களுக்கு மேல் உள்ள நெற்றியை அவள் பார்த்தாள். சேற்றுமண்ணை பூசி இருந்த நெற்றியில் புருவங்களுக்கு இடையே ஒரு மூன்றாவது கண் இருந்தது 

அது ஒருபோதும் நகராத கண்.
மற்ற கண்கள் மூடப்பட்டிருக்கும்போதும் பார்க்கக்கூடிய ஒரு கண்.

 சிவனும் அவளைப் பார்த்தான்!

அது ஒரு உவா நாள்— சூரியனும் சந்திரனும் ஒருங்கே காணப்படும் நாள்.

 காளையின் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் வலது புறத்தில் சூரியனும், இடது புறத்தில் சந்திரனும் 
காட்சியளித்தது.

 இந்தக் காட்சியினால் அவள் சற்று தடுமாறினாள்,   அவளது மூச்சு வியப்பில் நின்றது. அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் நிலம் அவனுக்காக நிறுத்தப்பட்டது போலிருந்தது, காற்று அமைதியானது, பறவைகள் தங்கள் பாடல்களை நிறுத்தின. அவள் ஒரு தெய்வீக அனுபவத்தால் சூழப்பட்டாள்.  அவளது கைகளில் இருந்து விறகு கட்டு நழுவியது.

 ஒரு இனம் புரியாத தெய்வீக உணர்வு உந்த; இரு கைகளையும் உயர்த்தி சிவனை அவள் வணங்கினாள். 

அந்த மனிதன் எதுவும் பேசவில்லை.
அவர்களது கண்கள் ஒரு கணம் சந்தித்தன.

 சிவனது கண்களில் அன்பு மட்டுமே ததும்பி இருந்தது 

 சிவன் நந்தனை கால்களால் மெலிதாகத் தீண்டினான். அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட நந்தன் அங்கிருந்து விரைவாக கிளம்பினான். அந்த கணத்தில் இந்த நிலத்தின் ஒரு புதிய அத்தியாயம் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.

அது நெருப்பிலும் மௌனத்திலும் பிறந்த உலோகத்தின் அத்தியாயம்.

 ரசவாதத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தப் போகும் அத்தியாயம் 

 அந்த அத்தியாயம் வெறும் வார்த்தைகளால் எழுதப்பட்டதல்ல,
 அது சிவனது துடிப்பறையின் புனித தாளத்தால் செதுக்கப்பட்டது,

 சிவன் இப்பொழுது இந்த உலகிற்கு போதிப்பதற்கு தயாராகி இருந்தான் . 
 அவரது போதனையால் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற பயன்கள் பற்பல

 தமிழர்கள் அவனிடமிருந்து...
 தமிழைக் கற்றனர்,
 மருத்துவத்தைக் கற்றனர்,
 வீரத்தைக் கற்றனர்,
 வாழும் முறையைக் கற்றனர்,
 அறிவியலைக் கற்றனர்,
 ஆன்மீகத்தைக் கற்றனர்,

 ஆனால் அதைவிட முக்கியமாக... அன்பையும் காதலையும் கற்றனர்.
 அது ஒன்றுதான் அவரது அனைத்து போதனைகளிலும் புனிதமான ஒன்று.

 அந்த மாசற்ற தூய அன்பின் விளைவால் தான் அவன் இறை நிலைக்கு உயர்ந்தான்.

 இறை நிலைக்கு உயர்ந்த அவரை மக்கள் இறைவனாக வழிபடத் தொடங்கினர். தான் இறைவனாக வழிபடப்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் இந்த உலகிற்கு தன்னை இறைவனாக முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அன்பின் சின்னமான ஆவுடையோடு கூடிய லிங்கத்தையே வழிபடக்கூடிய சின்னமாக அவர் முன்னிறுத்தினார். 

 யாராலும் காண இயலாத இறை நிலையை அன்பினால் மட்டுமே எளிதாக அடைய முடியும் என்பதே அவரது முக்கியமான போதனை.
--------

நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால், நல்ல சிவஞானத்தால் நான் அழிய- வல் அதனால், ஆரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படும் காண் ஆரேனும் காணாத அரன்

Friday, August 8, 2025

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் முறையாக, அவன் மீண்டும் பேசத் தொடங்கினான் — மனிதர்களுடன் அல்ல ஒரு காளையுடன்.

அவன் அதற்கு ‘நந்தன்’ என்று பெயர் வைத்தான். 

அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியது முதற்கொண்டு, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்தனர். மனிதனும் காளையும், காட்டின் பயணிகளாக, பசுக்களின் பாதுகாவலர்களாக இணைந்தே இருந்தனர்.

அவர்களுக்கு இடையே வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. பார்வைகள் மற்றும் அசைவுகள் மட்டுமே அவர்களுக்கு இடையில் தொடர்பு சாதனமாக இருந்தது. இருவரும் பார்வைகளால் பேசிக்கொண்டனர். இருவரும் கண் அசைவின் மூலமும் உடல் மொழியின் மூலமும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டனர். 

ஆனாலும் சிவனுக்கு ஏதோ ஒரு குறை இருந்தது. உடல் அசைவுகள் மூலம் அருகில் இருக்கும் பொழுது மட்டும்தான்  நந்தனுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.  சிவனால் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் வெறும் பார்வையாலும் அங்க அசைவுகளாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிவன் ஒலியின் மெல்லிய அதிர்வுகள் மூலம் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் தொடர்பு கொள்ள விரும்பினான். சிவன் நந்தனுடன் பேச விரும்பினான். ஆனால் இருவரின் பாஷைகளும் வேறு வேறாக இருந்தன.

 சிவன் எழுப்பிய வார்த்தைகள் வித்தியாசமானது, தனித்துவமானது. நந்தன் பேசிய மொழியோ வேறுவிதமானது. நந்தனின் மொழியும் சிவன் பேசிய தமிழைப் போல மிகப் பழமையானது.

 வராது வந்த மாமணி போல் சிவனின் வாழ்வில் வந்த இந்த நண்பனுடன் எப்படியேனும் பேசிவிட வேண்டும் என்று சிவன் விரும்பினான். 

 அது ஒரு வசந்த காலம். வனம் எங்கும் வசந்தம் நிலவியது. அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ்  சிவன் நந்தனுடன் அமர்ந்தான். 

 தூரத்தில் பசுக் கூட்டங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

 சிவன் நந்தனின் தோள்களில் சாய்ந்தவாறு படுத்திருந்தான்.

 

சிவனின் உதவியால் பிறந்த  சின்னஞ்சிறு கன்று; சிவனின் காலை நக்கியபடி அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பசி எடுத்தது போலும்... சிவனின் விரல்களை அது பால் குடிப்பது போல ஒலி எழுப்பிக் கொண்டே சப்ப ஆரம்பித்தது . 

தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, இந்த  சின்ன சப்தத்தை கேட்டு, தாயுணர்வால் தனது கன்றினை நோக்கி ஓடிவந்து பால் கொடுக்க ஆரம்பித்தது.

 இச்சிறிய ஓசை எப்படி அந்தத் தாயின்  ஆன்மாவை தொட்டது என்று சிவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

 சிந்தனையின் விளைவால்  சுற்றி இருந்த சூழலை அவன் உற்று கவனிக்க ஆரம்பித்தான். 

பசுக்களின் மெல்லிய நடை... 
மடியை முட்டி பால் குடிக்கும் கன்று... 
காற்றில் அசையும் இலைகள்...
பாறையில் மோதும் நதியலைகள்...

ஒவ்வொரு நகர்வும் காற்றில் அதிர்வலைகளை எழுப்பி, ஓசையை உற்பத்தி செய்தன.

சிவன் ஒவ்வொரு ஓசையையும் கூர்ந்து கவனித்தான்.

அவனுக்கு அருகிலேயே இருந்த நந்தனின் மூச்சுக்காற்றின் ஓசை, சீரிய தாள கதியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

மூக்குத் துவாரங்களை விரித்து நந்தன்  மூச்சு விடுவதை சிவா கவனிக்க ஆரம்பித்தான். சில புரிந்து கொள்ள முடியாத சப்தங்களையும் அந்தக் காளை அவ்வப்பொழுது எழுப்பி வந்தது.

அந்த புனிதமான அமைதியில், சிவனுக்கு ஒரு கேள்வி எழுந்தது.

"மொழி என்றால் என்ன?"

சிவா நந்தனின் சுவாசத்தை கவனித்தான். அவனது பெரிய வயிறு ஒவ்வொரு மூச்சிலும் ஆழமாகவும், மெதுவாகவும் உயர்ந்து தாழ்ந்தது. 

 ஓநாயைப் போன்ற  வேட்டையாடிகள் தங்கள் மார்பை அசைத்தே சுவாசத்தை மேற்கொண்டது; ஆனால் நந்தன் தன் வயிற்றை மட்டுமே அசைத்தான். 

 சிவன் தனது மூச்சை கவனிக்க ஆரம்பித்தான் . 

 சிவன் தன் மார்பை விரிய விட்டான்—அப்போது அவன் முக்கியமான ஒன்றை உணர்ந்தான். அவன் தனது மார்பை விரியவிட்ட பொழுது பிரபஞ்சத்தில் இருக்கும் காற்று அவனுக்குள் நுழைந்தது. அவன் நுரையீரல்களை நிரப்பியது. அது ஒரு மின்னோட்டம் போல அவனை உயிர்ப்பித்தது, 

"இது வெறும் காற்று அல்ல. இது உயிர்."

 பின்னர் சிவன் உள்ளே இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விட்டான்.

மூச்சு மென்மையாக, மலையிலிருந்து கடலுக்கு பாயும் ஆறு போல வெளியேறியது. அது அவனது முயற்சியின்றி தானாகவே நிகழ்ந்தது. 

சிவன் மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தான். பின்னர் வெளியிட முயன்றான்.  இப்பொழுது அவனை விட்டு வெளியேற முயன்ற மூச்சை நாசி வழியாக வெளியேற்றாமல், வாய் வழியாக வெளியேற்றினான். சுவாசக்காற்று  வாய் வழியாக வெளியேறும்  பொழுது; தனது தொண்டையில் அமையப்பெற்ற  குரல்வளை நாணை சிவன் அதிரவிட்டான்.

அவனது தொண்டை  தமருகம் போல செயல்பட்டது. 

 அவனது கழுத்தின் சிறிய மத்தளம் அதிரத்  தொடங்கியது.

 ஒலி பிறந்தது!

 பேச்சு என்பது கட்டுப்படுத்தப்பட்ட வெளி சுவாசம் என்பதை அறிந்து கொண்டான்.

இது இயல்பானது அல்ல. இது அவனது முயற்சியால் உருவாக்கப்பட்டது. 

இப்போது சிவன் திரும்பவும் நந்தனது சுவாசத்தை கவனித்தான்.

 நந்தன் தனது மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது அது முயற்சித்து உள்ளிழுத்தது. வெளியிடும் பொழுது முயற்சி இல்லாமல் வெளியே விட்டது.

 திடீரென்று நந்தன் மூக்கில் ஏதோ தூசி புகுந்தது போல அது தும்மியது.

 சிவன் சிந்தித்தான்...

 தும்மல் ஒரு வெளி சுவாசம்... இருமலைப் போலவே...

 ஒருமுறை தனக்குத் தானே இருமிப் பார்த்தான்...
 
எப்படி இருமல் என்பது வலுக்கட்டாய வெளி சுவாசமோ, அதேபோல் பேச்சு என்பதும் வலுக்கட்டாய வெளி சுவாசம் தான்.

 அப்போது, தொலைவில் ஒரு ஒலி - ஒரு ஓநாயின் ஊளைச் சத்தம், மரங்களுக்கு அப்பால்... மலைகளைத் தாண்டி தூரத்திலிருந்து கேட்டது.

சட்டென்று  நந்தனின் காதுகள் விரைத்துக் கொண்டன. அவனது உடல் இறுகியது. அவனது கண்கள் குறுகின.

 அந்த ஊளைச் சத்தத்திற்கு பதில் அளிப்பது போல்  நந்தன்  தனது இருப்பை நிறுவ ஒரு ஒலியை எழுப்பினான். அது ஒரு உரத்த ஊளைச் சத்தம் அல்ல. “ஹ்ர்ர்” என்ற குறுகிய ஒலி.

சிவா அந்த இரு உயிர்கள் ஏற்படுத்திய ஒலிகளைக் கவனித்தான்.

 ஊளைச் சத்தம் வலிமையானது. நீண்ட தூரத்திற்கு பயணிக்க கூடியது.

ஆனால் “ஹ்ர்ர்” என்ற ஒலி குறுகியது. அது ஒரு குறைந்த காற்று வெளியீடு. அதை வெளியிடுவதற்கு குறைந்த ஆற்றலே நந்தனால் செலவிடப்பட்டது . 

 சிவா புரிந்து கொள்ளத் தொடங்கினான்.

 நன்றாக வாயைக் குவித்து, குவிப்பிற்கு ஏற்றார் போல் நாக்கை இலேசாக உள் இழுத்து, காற்றைக் கொஞ்சம் வேகமாக சிவன்  வெளியேற்றினான். மிடற்றில் இருக்கும் நாண்கள் அதிந்தன. அதனால்  ‘ஊ’ என்கின்ற ஒலி எழுப்பப்பட்டது. அந்த ஓசையினூடே அவனது ஆற்றலும் வெளியேறுவதை சிவன் உணர்ந்தான். 

ஊளை விடும் பொழுது; மூச்சானது வாய் வழியாக வெளியேறியது. நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்று; பிற பேச்சு உறுப்புகளால் எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாமல்; சுதந்திரமாக வெளிவந்தது.

 மத்தளம் அடிக்கும் பொழுது; எவ்வாறு தோல் கருவியின் தோல் அதிர்ந்து ஒலியை எழுப்புகிறதோ; அதேபோல்  நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்றானது; குரல்வளை நாணை அதிரச்செய்து, அந்த அதிர்வு உதடு குவிப்பதால் குறுக்கப்பட்டு ஊளை சத்தமாகக் கேட்கிறது என சிவன் புரிந்து கொண்டான். 

 அப்போது அங்கே ஒரு செம்மார்பு குக்குருவான் பறவை  உயர்ந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டு 'டங்கு' 'டங்கு' என்று சம்மட்டியால் இரும்பை அடிப்பது போல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது . தொலைவிலிருந்து வேறொரு பறவை அதே போல் ஒலி எழுப்பி இந்தப் பறவையை தொடர்பு கொண்டது. இப்படியாக தொலைவில் இருக்கும் பறவைகளோடு குக்குருவான் ஒலியின் அதிர்வுகளால் தொடர்பு கொள்கின்றது என்று அறிந்து கொண்டான்.

அந்த டங்கு டங்கு ஒலியிலேயே 200க்கும் மேற்பட்ட மாற்றங்களை சிவன் கவனித்தான். இதே போல வெவ்வேறு அதிர்வலைகளைத் தான் தனது பறையும் எழுப்புகிறது என்பது அவனுக்கு விளங்கியது. 

 ஒவ்வொரு வகை அதிர்வும் ஒவ்வொரு வகை எழுத்து!!

 பிறகு ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கத் தொடங்கினான்.

சிவன் நேராக எழுந்து அமர்ந்தான். அவனது முதுகுத்தண்டு நேராக இருந்தது. பிறகு ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தான். சிவன் தனது வயிற்றை மேல்புறமாக உந்தித் தள்ளினான். உதரவிதானம் நுரையீரலை மேல்புறமாக அழுத்தி காற்றை வெளியேற்றியது.

வாயின் வழி வெளியேறும் காற்றினை; குரல்வளை நாணின் துணையால்  அதிரச் செய்து; ஓசை வெளிப்படும் பொழுது, வாயை அகலமாக்கினான் சிவன்.  

 ‘அ’ சப்தம் பிறந்தது!

 இதழ்களை விரித்தும் குவித்தும் குறுக்கியும் பல்வகை எழுத்துக்களை   உச்சரித்தான். 'அ இ உ எ ஒ' எனும் ஒலிகள் பிறந்தன.

 ‘அ இ உ எ ஒ’ எனும் குறுகிய ஒலிகளை நீட்டித்து ஒலித்துப் பார்த்தான் …
 ‘ஆ ஈ ஊ ஏ ஓ’ எனும் நெடில் ஓசைகள் ஒலித்தன. 

 இந்த உயிர் எழுத்துக்கள் நந்தனின் செவியைத் தீண்டின. அந்த அதிர்வு செவிப்பறை வழியாக நந்தனின் மூளைக்கு கடத்தப்பட்டது. இவன் ஏதோ பேச வருகிறான் என்பது போல காதுகளை சிவனை நோக்கித் திருப்பி நந்தன்  கவனித்தது.

 குரல் நாணால் உருவாக்கப்படும் அதிர்வலைகள்; காற்று ஊடகத்தால் கடத்தப் பட்டு;  செவிப்பறையை அதிரச் செய்து,  அந்த ஒலியை நந்தன் உணர்ந்து கொண்டதை சிவன் அறிந்தான்.
 
சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு கடத்துவதே மொழி என்று அவன் உணர ஆரம்பித்தான்.

அதிகப்படியான ‘ஊளை’ போன்ற வெளி சுவாசத்தை ஏற்படுத்தும் பொழுது அவன் சிறிது  களைப்படைய தொடங்கினான், ஊளை சப்தம்,  மூளைக்கு செல்லும் பிராணனைக் குறைத்தது. 

‘ஊ’ நெடில், இதை உச்சரிக்க அதிக பிராணன் தேவை படுகிறது!

இவ்வகை எழுத்துக்களை சிவன் உச்சரித்த பொழுது, அவனது உயிராற்றல் அதிகப்படியாக செலவிடப்பட்டதை உணர்ந்தான்.

உயிராற்றலை அதிகம் வேண்டும் இவை உயிர் எழுத்துக்கள் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

 பின்னர் புலியைப் போல 'உர்' என்று உறுமிப் பார்த்தான்.

உறுமும் போது எழுப்பப்படும் ‘உ’ குறில், இது குறைந்த வளி செலவினால் எழுப்பப்படும் ஒலி. அதுவும் ‘ர்’ எனும் ஒலியைக் கொண்டு வெளிசுவாசத்தில் தடை ஏற்படுத்தும் போது, வளி செலவு இன்னும் மட்டுப்படுகிறது என்று சிவனுக்கு புரிந்தது .

நாக்கு, உதடு, அண்ணம், வாய் மற்றும் பற்கள் உதவியால் ஓசைக்கு தடை போட்டு க் ச் ப் போன்ற ஓசைகளை உருவாக்கினான்.

“ப்,” “ம்,” என்ற எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது, அந்த எழுத்துக்கள் ஆற்றலை உடலில் (மெய்யில்) இறுக்கி பிடித்து வைத்தன. அவை உயிர் செலவை கட்டுப்படுத்தின... ஆற்றலை உடலுக்குள் சேமித்தன. 

உயிராற்றலால் பிறந்தது உயிர் எழுத்து, உடல்(மெய்) என்னும் கருவியின் துணையால் உருவானது மெய்யெழுத்து என்று சிவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

பின்னர் உயிரை உடலோடு இணைத்தான். மொழி உயிர் பெற்றது.

 உயிரும் மெய்யும் சேர்ந்ததால் உருவானதே உயிர்மெய் எழுத்து என்று வகுத்துக்கொண்டான். 

 இவ்வாறு அவன் ஒவ்வொரு எழுத்தையும் நினைவு கூர்ந்தான், மறு கண்டுபிடிப்பு செய்து கொண்டிருந்தான்.

ஒவ்வொரு எழுத்து...
ஒவ்வொரு அதிர்வு...
மறந்துபோன மத்தளத்தின் ஒவ்வொரு துடிப்பு...

 இவ்வனைத்தும் சிவனின் பழைய புதைந்த நினைவுகளில் இருந்து வெளிவரத் துவங்கின. நீண்ட காலத்திற்கு முன்பு அவனது அன்னை அவனுக்கு பயிற்றுவித்தவற்றை ஒவ்வொன்றாக  அவன் நினைவு கூர்ந்தான். 

எழுத்து வாரியாக அவன் உச்சரிக்கத் தொடங்கினான்.

அவன் பல்வேறு எழுத்தின் கலவைகளை வெவ்வேறு வகையில் உச்சரித்து பார்க்கத் தொடங்கினான்... அவற்றை தனது உள்ளுணர்வால் ஆராய்ந்தான். 

 எழுத்துக்களை உச்சரிக்க செலவிடப்படும் மூச்சைக் கொண்டும், அவை உச்சரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் கொண்டும்  அவற்றை அவன் எடை போட்டான். பின்னர் அதை தனது மத்தளத்தில் ஒலித்துப் பார்த்தான்.

சேயோன் செப்பிட்ட தமிழ் மொழியை, சிவன் தன்னை அறியாமல் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

 அவன் மெருகேற்றிய தமிழ்; பிற்காலத்தில் அவனது சீடனின் சீடனால் இலக்கணமாக வகுக்கப்பட்டது. 
-----------
உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
 எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யா.
 - தொல்காப்பியர்.
-------
 நாட்கள் பல நகர்ந்தன. பின்னர் குளிர்காலம் தொடங்கியது. அப்படிப்பட்ட ஒரு குளிர் இரவில் தூரத்தில் இருந்த நந்தனின் சிறு உறுமல்  கூட சிவனுக்கு எளிதாகப் புலனாகியது.

 சிவன் தனது புலன்களை கூர்த்தீட்டினான். சூழலை காதுகளால் பார்க்க ஆரம்பித்தான்.

குளிர் இரவுகளில் நாகத்தின் மெல்லிய ஒலி கூட சிவனுக்கு எளிதாகக் கேட்டது.

 நாகம் ஏற்படுத்திய ஒலியை சிவனும் எழுப்பிப் பார்த்தான்.

அது வாயை அகலமாக்காத "ஸ்" என்ற ஒலி.

'ஸ்’ என்பது நாக்கை நீட்டி, பற்களால் தடை போட்டு, நாகம் போல் எழுப்பப்படும் ஒலி. 

ஸ் ஷ்... என்பன போன்ற எழுத்துக்கள் குளிர் பிரதேசத்திற்கான மெல்லிய ஒலிகள் என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

 தனது மத்தளத்தின் வலது பக்கம் 'ழ'கரத்தையும் இடது பக்கம் 'ஸ'கரத்தையும் ஒலித்துப் பார்த்து அவற்றை எடை போட்டான்.

 அவன் இடப்பக்கம் எழுப்பிய பறை ஒலிகள் வட இந்தியாவில் பாணினியால் பிற்காலத்தில் இலக்கணமாக வகுக்கப்பட்டன. 

 இப்பொழுது எழுத்துக்களை  அவன் பறையாலும் வாயாலும் உச்சரித்துப் பார்க்கத் தொடங்கினான்.

 நாவால் மேலண்ணத்தைத் தொட்டு 
' ஸ் ' என்ற ஒலியை உச்சரிக்க முயற்சித்தான்.

 சப்தம் எதுவும் எழவில்லை.

 ஆனால் மேலண்ணத்தை அவன் தொடும் போது புருவமத்தி குறுகுறுத்தது.

 அவனது தாய் கற்பித்த ழகரம் மனதில் மின்னலென பளிச்சிட்டது.

 ழகரத்தை உச்சரித்தான். 

பின்னர் புருவ மத்தியை கவனித்து ஒரு மோன நிலைக்குச் சென்றான்.

அவன் அந்த  நிலையில் இருக்கும் பொழுது, பிரபஞ்சத்துடன் ஒன்று கலந்தது போல் தோன்றியது.

 பிரபஞ்சம் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியது.

பின்னர் உள்ளுணர்வு உந்த, மெதுவாக, அவன் “அ…” என்று உச்சரித்தான்.

'அ' என்பது அடிப்பகுதியிலிருந்து எழுந்த ஒரு ஒலியின் அதிர்வு. அந்த அதிர்வு  ஒரு நாகம் போல மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறியது.

 அதைத்தொடர்ந்து “உ…”என்று உச்சரித்தான். அப்போது அதிர்வானது அவனது மார்பு வழியாக வளைந்து, நெருப்பு போல உயர்ந்தது.

இறுதியாக “ம்…” என்று முடித்தான்.

 அப்பொழுது எழுப்பப்பட்ட அந்த ஒலி சிவனின் கபாலத்தின் உச்சியில் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது .

 மூன்று ஒலிகளையும் ஒன்றிணைத்து   சிவன் உச்சரித்தான்  —ஓம்— என்னும் ஒலி பிறந்தது 

அ + உ+ ம் என்பதன் இணைப்பே 'ஓம்' எனும் ஒலி.

 அதை உச்சரித்துக் கொண்டே உச்சந்தலையின் அதிர்வுகளை  சிவன் கவனிக்க ஆரம்பித்தான்.

 அந்த அதிர்வு பிரபஞ்சத்தின் அதிர்வோடு இணைந்தது.

"எழுத்துக்கள் வெறும் ஓசைகள் அல்ல—அவை அதிர்வுகள், ஆன்மாவின் திறவுகோல்கள்."

 இப்பொழுது அவன் வெளிப்படுத்திய அதிர்வுகள்  புனிதத்தைக் கடத்தியபடி வனமெங்கும் படர்ந்து பரவியது.

 அந்த அதிர்வினை நோக்கி காட்டின் விலங்குகள் ஈர்க்கப்பட்டன.

 காட்டின் விளிம்பிலிருந்து மான்கள் தோன்றின. ஒரு மயில் சிவனை நோக்கி நெருங்கி வந்தது. பய உணர்ச்சி ஏதுமில்லாமல் ஆச்சரியத்தில் அது தன் தோகையை  விரித்தது. பறவைகள் அமைதியாயின. எங்கிருந்தோ பறந்து வந்த குருவிகளும், தாவிக் குதித்து  வந்த காட்டு முயல்களும் சிவனைச் சூழ்ந்தன. நாகம் ஒன்று சிவனது கழுத்தின் மீது படர்ந்தது.

 சிவன் சற்றும் அசையவில்லை. 

அவனது குரல்வளை அதிர்வுகளை எழுப்பியபடி இருந்து கொண்டிருந்தது.
வனத்தின் ஆன்மாக்கள் அனைத்தும்  அவனைச் சூழ்ந்து கொண்டன. 

 அவன் 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

  காடு அதை அமைதியாகக் கேட்டது.
-----------

 ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்

ங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை

ஓங்கார சீவ பரசிவ ரூபமே


Friday, August 1, 2025

மழவெள்ளை விடையான் (ஆதியோகி: அத்தியாயம் 8)

அது ஒரு கோடை மாலை. தொலைவில், யானைகள் அடர்ந்த காட்டில் சாம்பல் நிற ஆறு போல மெதுவாக நகர்ந்தன. முன்னால், கூட்டத்தைத் தலைமை தாங்கிய பெண் யானை; தன் துதிக்கையை உயர்த்தி, நீர் இருக்கும் திசையை முகர ஆரம்பித்தது. 

 நீர் இருக்கும் திசையை நோக்கி தனது கூட்டத்தை அது வழி நடத்திச் சென்றது.

அவை முன்னேறும்போது, முட்புதர்களையும் செடிகளையும் கிழித்து, பரந்த திறந்தவெளிகளை அந்த யானைகள் ஏற்படுத்திச் சென்றது. அவற்றின் பாதையில், யானையின் கழிவுகள் எரு வடிவில் வெதுவெதுப்பாக தரையெங்கும் விழுந்தன. 

 அந்த யானைகள் தாகமுள்ள மண்ணில் வளத்தை விதைத்தன.

காலப்போக்கில், அந்தப் பாதை ஒரு  புல்வெளியாக மாறியது.

 அப்படிப்பட்ட ஒரு புல்வெளியில் பசுக்கள், பசுமையையும் மணத்தையும் பின்தொடர்ந்து, யானை பாதையில் மேய்ந்து, மெதுவாக காட்டின் விளிம்பிற்குள் நுழைந்தன. அவற்றின் குளம்புகள் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை சந்திக்கும் இடத்தில் வந்து நின்றன. அந்த இடத்தில் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை ஆரத் தழுவியது  போலத் தோன்றியது.

 பசுக்கள் கூட்டத்துடன் சிவனும் நடந்தான். 

பசுக்கள் அவனது இருப்பை உணர்ந்தன.  அவை அதை வரவேற்றன. அவனது இருப்பு அவைகளுக்கு மிகவும் பாதுகாப்பு அளித்தது.

 மேய்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு பசு மட்டும் திடீரென நகராமல் பின்தங்கத் தொடங்கியது. 

 அந்தப் பசுவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. அது சினையுற்றிருந்தது.

 அதன் கால்கள் தள்ளாடின , நடப்பதற்கு  தயங்கின. 

 சிறிது நேரத்தில் அந்த பசுவின் நீர்க் குடம் உடைந்து கீழே உள்ள மண்ணை நனைத்தது.

 அந்தப் பசு ஒரு முனகல் ஒலியை வெளிப்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் தலைவியாக இருந்த வயதான ஒரு பசு அவளை நோக்கி முன்னேறியது. கன்றை ஈனும் பசுவினை  அது சுற்றி வந்தது. நாவால் அதன் நெற்றியை வருடியது.

 மற்றேனைய பசுக்களும் அந்த பசுவிற்கு ஆதரவாக சூழ்ந்து கொண்டன.

பனிக்குடம் உடைந்ததும் பசுவின் வாலின் கீழ் இருந்து, ஒரு சிறிய கன்றினது முகம் தோன்றியது. ஆனால் கன்றின் உடல் பின்தொடரவில்லை.அது சிக்கியிருந்தது. 

 தாய்ப் பசு முடிந்த மட்டும் முக்கி கன்றினை வெளித்தள்ளப் பார்த்தாள்.

 அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது. அவள் பக்கவாட்டில் சரிந்தாள்.

அவளது மூச்சு வேகமாகவும் மெலிந்ததாகவும் வந்தது.

தலைவிப் பசு அவளருகில் இருந்தாள், இன்னும் நக்கிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.

சிவா அமைதியாக, உறுதியாக முன்னோக்கி நகர்ந்தான்.அவன் பசுவுக்கு அருகில் மண்டியிட்டு, அவளது அவளது அறைக்குள் கையை நுழைத்து பசுவின் பிஞ்சுக் கால்களை தேடத் துவங்கினான். 

அவன் தனது கைகளை உள்ளே நழுவவிட்டு, மடங்கி இருந்த கால்களை லாவகமாக நிமிர்த்தி வெளியே இழுக்கத் தொடங்கினான். இரத்தமும் பிரசவ திரவங்களும் அவனது கைகளை நினைத்தன.

 திடீரென்று காற்றில் மெல்லியதொரு சலனம்...

அவனது மூன்றாவது கண் துடித்தது...

 பசுக் கூட்டங்கள் பயத்தில் சிதறி ஓடத் துவங்கின.

 செந்நாய்கள் வித்தியாசமான ஒளியை எழுப்பிய படி அவர்களை சூழத் தொடங்கியது.

 அவற்றின் மணம் வலுவாக இருந்தது.

 அவற்றின் பசி இன்னும் வலுவாக இருந்தது.

 நிலைமையை கவலைக்கிடமாக்கும் வண்ணம் மற்றொரு  அழையா விருந்தாளியும் அந்த இடத்தில் நுழைந்தது.

தொலைவில் உள்ள  மூங்கில் நிழல்களால் மறைக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து ஒரு உருவம் தோன்றியது.

புலி!!!

சிவனின் பழைய எதிரி... காட்டின் புதிய அரசன்.

 இரத்த  வாடை அதை இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும்.

 அதன் கண்களின் முன்பு காட்டின் இதயத்தில் வெளிப்படையாக வைக்கப்பட்ட ஒரு உணவு தயாராக இருந்தது.

சிவா உறைந்தான்.

 தூரத்தில் பசுக்களின் அலறல்...

 அருகிலே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தள்ளாடும் ஒரு தாய்...

 அவனது சூலம் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  

அவனுக்கு முன்னால் புலி தாழ்ந்து குனிந்தது. பின்னங்கால்களை பாய்வதற்குத் தயாராக அழுத்தி ஊன்றியது.

காடு அமைதியாகியது. 

பறவைகள் கூட மௌனமாகின.

 ஜனனம் , மரணம்...

 வேட்டையாடிகள், பாதுகாவலன்...

 இவற்றிற்கு இடையே உள்ள நிச்சயமற்ற சுவாசம்  அங்கே அந்த இடத்தைச் சூழ்ந்தது.

 பசுக்களின் கூட்டம் எப்படியும் தப்பி விடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது.

 நிற்கதியாய் நிற்கும் இந்த பசுவிற்கு  அவனது துணை அவசியம் .

 அடர்ந்த மூங்கில் காடுகளுக்கு இடையில்  இருந்து, புலி திறந்தவெளியில் அடியெடுத்து வைத்தது. 

 சிவனின் தங்க நிறத்தில் ஒளிரும் கண்கள் அந்த புலியின் கண்களுடன் பொருந்தின.

சிவா அசையவில்லை. 

 அவனது திரிசூலம் கைக்கு எட்டும் தொலைவில் தான் இருந்தது. ஆனால் அதை எடுப்பதற்கு தற்பொழுது அவகாசம் இல்லை.

அவன் புலிக்கும் பிரசவிக்கும் பசுவுக்கும் இடையில் தன்னை நிறுத்தினான்.

சிவாவின் இதயம் உரத்துத் துடித்தது, ஆனால் அவன் உறுதியாக இருந்தான்.

காடு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

 உலர்ந்த காற்றில் மரணத்தின் ஏவலாள் போல புலி பாய்ந்தது.

சிவாவின் உடல் உள்ளுணர்வின் அறிவுறுத்தலில் விலகியது. விலகிய வேகத்தில் அவன் தனது முஷ்டியை புலியின் தாடையில் பதித்தான்  அவனது தந்தை அவன் வழியாக அந்தப் புலியை தாக்கியது போல இருந்தது அந்தத் தாக்குதல்.

 அந்த ஒரு தாக்குதல் புலியை சற்றே தள்ளி புழுதியிலும் உலர்ந்த இலைகளிலும் சறுக்கி விழச் செய்தது

அந்த கணம் மிக சுருக்கமாக இருந்தது.சிவா திரும்பி, திரிசூலத்தை நோக்கித் தாவினான்.

ஆனால் புலி அவனைவிட வேகமாக இருந்தது. அது மீண்டும் அவனை நோக்கிப் பாய்ந்தது, அவனது காலை பிடித்தது. அவனது காலில் புலியின் பற்கள் ஆழமாகப் பதிந்தன. 

அவன் விழுந்தான், அவனது இரத்தம் கீழே இருந்த சருகுகளை நனைத்தது.

 அவர்கள் மல்லுக்கட்டினர்.

 ஒளிரும் தெய்வீகக் கண்களைக் கொண்ட இளைஞன் ஒருவனும் காட்டின் அரசனும் கட்டி உருண்டனர்.

 நகங்கள் அவனது தோலைக் கிழித்தன. அவனது முஷ்டிகள் புலியின் எலும்பை பதம் பார்த்தன. 

 அங்கு நடந்த போராட்டம் இரு உயிர்களுக்கு இடையே ஆனது மட்டுமல்ல...

 இரு பழமையான உயிர்கள் நித்திய சோதனையில் ஒன்றிணைந்து துடித்தது போல இருந்தது அந்த காட்சி.

 சிவன் தனது பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைத்து புலியை வீசி எறிந்தான்.

 அவனது கைகள் திரிசூலத்தை கைப்பற்றின.

 அந்தத் திரிசூலம் அவனது உன்னத  கண்டுபிடிப்பு. 

அது அவனது பாதுகாவலன்.

 அவனது துணைவன்.

 எதிர்க்கவியலா மாபெரும் அஸ்திரம்.

 திரிசூலத்தை ஏந்திய தைரியத்தில் காட்டின் அரசனை எதிர்க்க அவன் தயாரானான்.

 புலி  கவ்விய கால்களில் இருந்து இன்னும் குருதி வழிந்து கொண்டிருந்தது. சதைத் துணுக்குகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு கால் கிட்டத்தட்ட பயனற்றதாக ஆகிவிட்டது.

 அவன் சூலத்தை ஊன்றி ஒற்றை காலை பூமியில் நன்றாக அழுத்தி மற்றொரு காலை சற்றே தொங்கவிட்டபடி உறுதியாக நின்றான்.

 பிறகு பாய்ந்து வரும் புலியின் முகத்தை   நோக்கி சூலத்தை விட்டெறிந்தான்

 பாய்ந்து வந்து கொண்டிருந்த புலி சற்றே தனது முகத்தை நகர்த்தியது.

 புலி முழுதாகத் தப்பவில்லை...

 முகத்தின் பக்கவாட்டில் விரைந்து சென்ற சூலமானது  அதன் ஒற்றைக் கண்ணை கிழிக்கத் தவிறவில்லை.

 பக்கவாட்டில் காற்றைக் கிழித்துச் சென்ற அந்த சூலம் பின்னால் இருந்த பாறையில் மோதியது. 

 சூலத்தின் ஒரு பல் கண்ணாடித் துண்டைப் போல்  நொறுங்கியது

 ஒரு காலத்தில் ஒளிர்ந்த ஆயுதம், இப்போது முனைகள்  உடைந்து கிடந்தது.

சிவா மூச்சு வாங்கினான்.அவனது மனம் தடுமாறியது.

 அந்த ஒரு தெய்வீக கணத்தில் அவனது தந்தையின் குரல் அவனுக்குள் ஒரு அசரீரி போல ஒலித்தது

“ வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல .”

சிவா எழுந்தான். தோள்பட்டை, கால்,  ஆகியவற்றில் இரத்தம் வடிந்தது.புலி, காயமடைந்து, ஒரு கண் குருடாகி, இப்போது ஆவேசத்துடன் உறுமியது.

அது மீண்டும் முன்பை விட பயங்கரமாகப் பாய்ந்தது.

 அப்பொழுது அங்கே இடி முழங்குவது போல  குளம்புகளின் ஒலி பூமியில் அதிர்ந்தது.

 சூலத்தின் முனைகளை விட கூர்மையான கொம்புகளை உடைய அந்த வெள்ளை நிறக்  காளை, கூற்றுவனைப் போல் பாய்ந்து வந்தது.

குளம்புகள் இடியாக ஒலித்தன. கொம்புகள் மின்னின.

 ஒரே பாய்ச்சலில் காளை புலியை குத்தித் தள்ளியது.

புலி தூக்கி வீசப்பட்டது, 

இந்த முறை கர்ஜனையின்றி அது விழுந்து. தோல்வியை ஒப்புக்கொண்டது போல தடுமாறி ஓடியது .

திறந்தவெளி மௌனமாகியது.

 ரத்தம் வழியும் தேகத்துடன் ஒரு இளைஞனும்... உக்கிரத்தின் உருவெடுத்த ஒரு காளையும் நேருக்கு நேர் நின்றனர்.

 தூரத்தில் செந்நாய்களின் கெக்களிப்பும் பசுக்களின் கதறலும் சன்னமாகக் கேட்டது

 பசுக்களுக்கு ஆபத்து!!!

 சிவா தாமதிக்கவில்லை சட்றென்று தனது திரிசூலத்தை எடுத்துக் கொண்டு பசுக்களை நோக்கி ஓடத் தொடங்கினான்.

 ஒவ்வொரு முறை அவன் பாதத்தை பூமியில் வைக்கும் பொழுது கிழிபட்ட அந்தக் காலின் சதைகளில் இருந்து குருதி வழிந்தது

 அவன் அதை பொருட்படுத்தாமல் விந்தி விந்தி ஓடினான்.

காளை அவன் தடுமாறுவதைப் பார்த்தது.

பின்னர், மௌனமாக, அது அவனை நோக்கித் திரும்பியது.தன் உடலைத் தாழ்த்தியது.தன் தலையைக் குனிந்தது.

 அது வார்த்தைகள் ஏதுமற்ற மௌனமான அழைப்பு.


சிவன் காளையின் கண்களைப் பார்த்தான்.

 அந்தப் பார்வையில்...

பயமில்லை...

சந்தேகமில்லை...

 பரஸ்பர நம்பிக்கை உணர்வு மட்டுமே அங்கே நிலவியது.

அவன் அந்தக் காளையின் மீது ஏறினான்.

 சிவனின் இரத்தம் தோய்ந்த கைகள் காளையின் பெரிய திமில் மேட்டைப் பற்றியது, 

 சிவன் உடைந்த திரிசூலத்தை கையில் உயர்த்தினான்

 இருவரும் பசுக்களின் கூச்சல் சத்தத்தை நோக்கி புயல் வேகத்தில் நகரத் தொடங்கினர்.

 கீழே இடியின் உருவில் காளை

 மேலே புயலின் உருவில் சிவன்

அவர்களது பயணம் அங்கு தொடங்கியது.

அது ஒரு முடிவற்ற பயணம்.

உலகம் அதை  என்றென்றும் நினைவு கூறும்.

 வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான பந்தமாக மட்டுமல்ல... ஆனால் ஏதோ நித்தியமான ஒன்றின் தொடக்கமாக.

அந்த நாளில், பசுக்கூட்டம் இரட்சிக்கப்பட்டது.  உலகைக் காண தவித்துக் கொண்டிருந்த கன்று  எந்தவித சேதாரமும் இன்றி வெளியே எடுக்கப்பட்டது, 

 அன்று பிறந்தது வெறும் பசுவின் கன்று மட்டுமல்ல, இந்த நிலத்தின் தெய்வீகக் கதையில் ஒரு புதிய அத்தியாயம். 


நெருப்பும் காற்றும்...

 சூரியனும் சந்திரனும்...

காளையும் கடவுளும்...

 ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பித்த ஒரு அத்தியாயம். 

 அது இந்த உலகத்தின்  பாதுகாவலர்களுடைய நித்தியப் பயணத்தின் தொடக்கம்.

----------

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச்சூழப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில் சூழ்பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனையல்லாது உறுதுணைமற்று அறியேனே.


----


இயற்கை நோக்குதல் -வீட்டாண்ட காடு

Flash back: காணும் பொங்கல் ... கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ... இடம் : வண்டலூர் உயிரியல் பூங்கா எல்லாம் நல்லாத்தான்...