Saturday, November 8, 2025

கண்டோபா (ஆதியோகி: அத்தியாயம் 18)

 வெப்பமிகு  உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென  எரிந்து கொண்டிருந்தது.  சிவனால் முன்பு எரிக்கப்பட்ட  சாம்பல் குவியல்கள், இப்போது தங்கள் வெப்பத்தை மெல்லிதாக  வெளியிட்டன.  சிவனது தோல், வெப்ப மிகுதியால் வாடிக் கொண்டிருந்தது. அவரது தோல் காய்ச்சலால் எரிந்தது. ஒரு காலத்தில் பல்வேறு முயற்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அவரின்  அழலானது இப்போது ஆவேசம் கொண்டு  திரும்பியது. பித்தத்தின் பற்றெரிவால் உந்தப்பட்ட அவரது உடல், கபத்தின் குளிர்ந்த தீண்டலுக்காக ஏங்கியது.

 மனிதர்களை விட்டு விலகி இருக்க நினைத்த அவர்; திரும்பவும் மனிதர்களோடு உறவாட வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டார். ஆனால் அதை தடை செய்யும் விதமாக, வில்சனின் நோய்  அவரது மனநிலையை ஆட்டம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. தவறும் மனநிலையோடு அவர் மனிதர்கள் மத்தியில் இருப்பதை விரும்பவில்லை. எனவே அவரது நரம்புப் பிரச்சனைகளை தணிப்பதற்காக மருந்தினை உட்கொள்ள எண்ணம் கொண்டார். ஆனால் அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படும்  வலிமிகு  உயிர்நாடி எழுச்சியையும் அவரது மனம் வேதனையோடு நினைவு கூறத் தவறவில்லை.

 அவர்  பெல்லாரியில் இரும்பு ஆயுதங்களை செய்த பொழுது தாரம்,கௌரி பாசாணம் மற்றும் வீரம் முதலிய பாஷாணங்களையும் எடுத்தார். இந்த பாஷாணங்களையும் வேறு சில மூலிகைகளையும் பயன்படுத்தி தனது நரம்பு சம்பந்தமான அறிகுறிகளையும் தோல் சம்பந்தமான அறிகுறிகளையும் மட்டுப்படுத்த முயன்று  கொண்டிருந்தார். தாரம் எனப்படும் அரிதாரம் அவருக்கு மிகவும் சாந்தத்தை அளித்தது. அது ஹரிதாளம், ஹரி பீஜம் என்று வடமொழியில்  அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளை பற்றி சிவன் அறிந்தே இருந்தார்.  ஹரி பீஜம் சிவனின் பாலுணர்வு சம்பந்தப்பட்டது என்று பண்டைய ஆயுர்வேத ஏடுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த அரிதாரம்  அவர் கண்டறிந்த எண்ணற்ற மருந்துகளில் முக்கியமான ஒன்று.

இந்த ஹரி தாளத்தைக் கொண்டு தான் அவர் பரதத்தை உயிர்த்தெழ வைத்தார். 

பரதம் (Pārada, சமஸ்கிருதத்தில்: पारदः) = "பர" (அப்பால்) + "தா" ( தருவது). பரதம் என்றால் விடுதலை தருவது, மோட்சத்தை அளிப்பது எனும் பொருள் தரும். 

 பரதம் எனும் சொல் ஒரு உலோகத்தைக் குறிக்கும். அந்த சொல் முக்தியையும் குறிக்கும். அந்த உலோகம் சிவ வீர்யம், சிவ ரேதஸ், சிவ தேஜஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

 சிவன் தரும் பரதம் ( பாதரச வகை உலோகம்) உடலைத் தாண்டி ஆன்மாவை மோட்சத்திற்கு ஏற்றும் என்பது நம்பிக்கை.  அதனால்தான் சிவனை ரசேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தமட்டில் பரதமே அமிர்தம் ஆகும். அதுவே அமரத்துவத்தை அளிக்க வல்லது என்று ரச சாஸ்திர வரிகள் கூறுகின்றன.

पारदः परदो ज्ञेयो यतः संसारपारदः

ஆனால் சிவன் இன்னும் பரதத்தை கண்டெடுக்கவில்லை. அது இமயத்தின் ஆழத்தில்  சிவனின் கரங்களால் தீண்டப்படுவதற்காக  காத்துக் கிடக்கின்றது.

 அதனை கண்டெடுப்பதற்கு முன் அவர் பல சோதனைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சோதனைக் களத்தில் தான் அவர் நின்று கொண்டிருக்கிறார். 

 இந்த சோதனைக்களம் கடும்  வெயிலினால் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நிலம் வறண்ட புழுதிக்  காற்றால் மூடப்பட்டிருந்தது.  அங்கிருந்த செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. வறண்ட காற்று குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்தது.

குடக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த வறண்ட காற்று மெல்ல மெல்ல திசை மாறத் துவங்கியது. பின்னர் மெல்லிய தென்றல் காற்று  அவரது மேனியை தொட்டது. சட்டென்று மேனியில் ஒரு சிலிர்ப்பு... அவரது அழல் தணியத் தொடங்கியது.

 அந்தக் காற்றை பின் தொடர்ந்து  தட்டான்கள் கூட்டம் கூட்டமாக தரையை ஒட்டி பறக்க ஆரம்பித்தன. மாயோனின்  நிறத்தைக் கொண்ட கொண்டல் மேகங்கள் திரண்டு  எழுந்து வானத்தை வியாபித்தன. அமுர் வல்லூறுகள் அங்கே வட்டமிட ஆரம்பித்தன. 

விசிறித்தொண்டை ஓணான் ஒன்று வேட்டையாடிகளைப் பற்றிய பயம் ஏதும் இன்றி  தைரியமாக சமவெளிக்கு வந்தது. அது வல்லூறுகளை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அது தனது நீல நிறத் தொண்டையை விசிறி போல விரிக்க ஆரம்பித்தது. அதன் ஒளிரும் நீலத் தொண்டை சிவனின் நீல மிடற்றைப் போல்  மின்னியது .   

 அந்த விசிறியால் மழையையும் தனது துணையையும்  அது அழைக்க ஆரம்பித்தது.

தொலைவில், பனங்காடைகள்  காற்றில் சுழன்றன, அவற்றின் நீலமணி இறக்கைகள் கருமேகம் சூழ் வானத்திற்கு நடுவே அழகாக மின்னின.

 நீலக்கழுத்தை கொண்டிருந்த மயில்கள் மழையின் வரவை அறிவிக்கும் வண்ணம் அகவின.

 இவ்வுயிரினங்களின் அழைப்பை ஏற்று, மலடாகி இருந்த மண்ணை உயிர்ப்பிக்கும் விதமாக, மேகத்தின் ஸ்கலிதமென, மழைநீர் விண்ணிலிருந்து இறங்கி நிலத்தை ஆலிங்கனம் செய்தது.

 மழைத்துளிகள் நிலத்தைத் தொட்ட  மாத்திரத்தில் பூமியின் வெப்பத்தால் ஆவியாகியது. பின்னர் மெல்ல மெல்ல வெப்பம் தணியத் தொடங்கியது. மயக்கும் மண்வாசனை காற்றை அடர்த்தியாக்கியது. 

 வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்த சிவனின் மணிபூரகம் சாந்தமடைந்தது. சிவனது அழல் தணியத் தொடங்கியது. இந்த மோனநிலையால் உந்தப்பட்ட சிவன், தனது இடது காலை சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடத் துவங்கினார். அந்த ஆனந்த நடனத்தில் காற்றும் மழையும் இணைந்து கொண்டன. 
 இது சிவன் தோற்றுவித்த 108 சிவதாண்டவ  கரணங்களில் ஒருவகை. 

 இதைக் கண்ட வரகுக் கோழி  ஒன்று   கூக்குரலிட்டுக் குதித்து, அதுவும் களியாட்டம் புரிய ஆரம்பித்தது.

Source: https://roundglasssustain.com
மழையானது  வேகமெடுக்கத் தொடங்கியது. மழைத்துளிகள் சிவனின் மேனியில் பட்டுச் சிதறின.
நிலம் என்னும் இயக்கமற்றிருந்த சிவம், இயக்க சக்தியான பொழுதினால் அரவணைக்கப்பட்டது .

 நிலம் அந்த நீரை உள்வாங்கியது.

 நிலம் உயிர் பெற்றது. புற்கள் முளைத்தன, மரங்கள் மலர்ந்தன, காட்டுத் தினைகள் உயிர்பெற்றன.  

புற்றில் இருந்து ஈசல்கள் கிளம்பின. அவை வதந்திகளை விட வேகமாக வனம் முழுவதும் பரவின. அவற்றை பின் தொடர்ந்து நீல நிறத் தொண்டை ஓணான்கள் படை எடுத்தன. ஓணான்களை நாகங்களும் பனங்காடைகளும் வேட்டையாடத் துவங்கின.  

மழை என்பது ஜனனத்திற்கான நேரம், புதிய உலகம் பிறக்கும் சமயம். ஆனால் பழையன கழிதலும் இங்கே நடந்து கொண்டிருந்தது. ஆற்றலில் குறைவான பழைய இரை விலங்குகளும் சரி, வயதான பழைய வேட்டையாடிகளும் சரி... இந்த போட்டி மிகு வனத்தில் உயிர்பிழைத்தல் கடினம். 
புதியவர்களுக்கு வழி விடுதலே வலுமிகு சந்ததிகள் வாழ வழிவகுக்கும். 

 இந்த கோட்பாட்டை உரக்க அறிவிக்கும் வண்ணம் கானமயில் இறக்கைகளை விரித்து நடனமாடியது. கருநெஞ்சுக்காடை மழையில் பாடல் இசைத்தது. வனம் உயிர் கொண்டது. மரங்கள் புதிய பசும் இலைகளை துளிர்க்கச் செய்தன.

 மான்கள் அந்த வனத்திற்கு திரும்பின. அவைகள் தங்கள் முன்னங்கால்களை மேலே உயர்த்தியபடி  இலைகளை உண்ணத் தொடங்கின. புதியதாக  முளைத்த பசுமையான இளம் இலைகள் மேலே இருக்க, கிளைகளின் கீழே தொங்கிக் கொண்டிருந்த  வயதான பழைய இலைகளை மான்கள் உண்டன.

சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு ஆடம்பரமான செயல். அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த, உயிரினங்கள் தங்கள் உடல் ஆற்றலை நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். என்னதான்  ஆடம்பரமாயினும் அது ஒரு அத்தியாவசியமான செயல். வனம் வளம் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஆடம்பரத்தை உயிரினங்கள் நிகழ்த்தத் துணியும்.  

 இந்த வனத்தைப் பொருத்தமட்டில் இந்த சமயம் தான் அந்த ஆடம்பரத்தை நிகழ்த்த சரியான தருணம் என்பதை அனைத்து விலங்குகளும் அறியும். எனவே இணை சேர்வதற்கு அவை ஆயத்தமாயின.

 ஆனால் இணை கூடுவதற்கான வாய்ப்பு எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை. இணை சேருவதற்கு முன் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது. 

 தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டி, இரண்டு இரலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதத் தொடங்கின. இது பெண்ணுக்கான போட்டி. 
 வனத்தைப் பொறுத்த மட்டில், பிரச்சனைகளுக்கு வன்முறையால் மட்டுமே தீர்வு காணப்படும். வன விலங்குகளுக்கு பிரச்சனைகளை பேசித் தீர்க்கவோ, மாற்று வழிகளை யோசிக்கவோ  சிந்தனை ஆற்றல் என்பது இல்லை.

 இவை அனைத்தையும் கண்ணுற்ற  சிவன் தனது நடனத்தை நிறுத்திவிட்டு  பெய்யும் மழையில் தியானத்தில் ஆழ்ந்தார்.  மழைத்துளிகள் சிவனின் சிரசைத் தீண்டின. சிவனின் நெற்றிக்கண் அதிர்வுகளை  வெளிப்படுத்த துவங்கியது. வன உயிர்கள் அனைத்தும்  சிவனைச் சூழ்ந்தன.

 அந்த அமைதியை குலைப்பது போல் சாம்பல் நிற ஓநாய் கூட்டம் ஒன்று அங்கே வந்தது. 
picture by Himansu gupta

 அதைக் கண்ட  மான்கள் அனைத்தும் சிதறி ஓடின. மரணத் தருவாயில் இருக்கும் ஓடவியலா  ஒரு வயதான மானை அவைகள் குறி வைத்தன .
 அதிவேகமாக ஓடிய அந்த மான், இப்போது அதிக வயதினால் மந்தமாகிவிட்டது. அது கூட்டத்திலிருந்து சற்றே பிரிந்து நின்றது . 

வேட்டை புத்திசாலித்தனமாகத் தொடங்கியது. இரண்டு ஓநாய்கள் வயதான அந்த மானுக்கு  தென்படாதவாறு பிரிந்து சென்றன.  அந்த பரந்த வெளியில் மானை காணாதது போல் அதன் பார்வைக்கு எட்டும் தூரத்தில் ஒரே ஒரு ஓநாய் தனித்து  நடக்கத் தொடங்கியது 

 வயதான மான் அந்த ஓநாயை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஓநாயானது சற்று அசைந்தாலும் இது ஓடுவதற்கு தயாராக  தனது வலுவை திரட்டி கொண்டு நின்றது. இதற்கிடையில் மற்றொரு ஓநாய் புல்வெளியின் மறைவில் மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வயதான மானை நெருங்கிக் கொண்டிருந்தது 

இப்போது இரண்டாவது ஓநாய் சரியான இடத்துக்கு வந்தவுடன், மானின் முன் நின்ற ஓநாய்  சிறிது முன்னேறியது. மான் அபாயத்தை உணர்ந்து ஓட முயன்றது, ஆனால்  நிலைமை கை மீறிப் போய் இருந்தது. இரண்டாவது ஓநாய் பாய்ந்து வந்து, சில வினாடிகளில் மானை அடைந்தது . அது மானின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, வயதான அந்தமான்  ஒரு அறிதுயில் நிலைக்குச் சென்றது. 

 பின்பு ஒரு இறுதிப் பாய்ச்சல்... ஓநாய் மானை நெருங்கியது... அதன் கழுத்தை ஆழமாக கவ்வியது. அறிதுயில் நிலையிலிருந்து மானானது  வலிக்கான எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல்  உயிர் நீத்தது.

இது இயற்கையின் விதி. ஓநாய்கள் முதியதும் பலவீனமுமான மான்களை வேட்டையாடுவதால், கூட்டத்தில் வலிமையான மான்கள் மட்டுமே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் கூட்டம் ஆரோக்கியமாகவும், புல்வெளி சமநிலையுடனும் இருக்க வைக்கப்படுகிறது.

சூரியன் மறைந்து, வானம் மங்கும் போது, ஓநாய்கள் அமைதியாக தங்கள் வேட்டையை உண்டன. வளங்கள் பெருகும் இந்த மழை பொழுதே அவைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான சமயம். இவ்வண்ணம் ஐவகை நிலப்பரப்பிலும் அந்த நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற வகையில் உயிரினங்கள் நிலத்தோடும் பொழுதோடும் பொருந்தி, சந்ததி சந்ததிகளாக வாழ்ந்து வருகின்றன.

சிவனுக்கு இந்த இயற்கையின் பரிபாஷைகள் புரியத் துவங்கின.

 வறண்ட நிலம், மேகங்கள், குளம்புகள், வேட்டையாடிகள் போன்றவற்றின்  ஒத்திசைவில் அவர் ஒரு புனித தாளத்தைக் கண்டார்.

 இந்த ஒத்திசைவில் தக்காண பீடபூமியின் ஆயர்களும் விவசாயிகளும் இணைந்து கொள்ள இடம் இருக்கிறது என்ற உண்மை அவருக்குப் புரிய வந்தது.

 மழைக்கால மாதங்களில் தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்யும் ஆயர்கள்,  மழைக்கு முன் மேற்கு நோக்கி கர்நாடகாவின் மழை பெய்யும் பள்ளத்தாக்குகளுக்கு அல்லது மழைக்கு பின் கிழக்கு நோக்கி நல்லமலை காடுகளுக்கு தங்கள் மந்தைகளை வழிநடத்தலாம்.  

அவர்களின் பாதையில், அவர்கள் தங்கள் மந்தையின் வளமான எருவை விட்டுச் செல்வார்கள். மந்தைகளும், பயிரிடப்படாத நிலத்தில் முளைத்திருக்கும் களைகளை உண்ணலாம். அவர்களின் விலங்குகள் திறந்த நிலங்களில் மேய்ந்து, பயிரிடப்படாத வயல்களில் தங்கும் போது, மழையால் கரைந்த மேல் மண்ணை இந்த புனித எரு பலப்படுத்தும் .  
விவசாயிகள், பதிலுக்கு, தானியங்களையும் தங்குமிடத்தையும் வழங்குவார்கள்.

பெல்லாரி நிலம் மழையில் பசுமையாக மாறும்போது, மந்தைகள் வடக்கு நோக்கி மஹாராஷ்டிராவின் திறந்த சமவெளிகளுக்கு அல்லது கிழக்கு நோக்கி மராத்வாடாவில் உள்ள லத்தூர் மற்றும் பீட் மாவட்டங்களுக்கு திரும்பலாம்.  இந்த இடம்பெயர்வு, இந்த புனித பாதை ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கத்தை  உருவாக்கும் .

 இந்த இணக்கத்தில் அனைத்து உயிர்களும்  பங்கு பெறும், பலனும் பெறும், 

 மண், மழை, பசி, விலங்கு ஆகியவை தனித்தனி சக்திகள் இல்லை, ஒரு பரந்த துணியில் நெய்யப்பட்ட நூல்கள் என்பதை சிவன் கண்டுகொண்டார்.

சாம்பல் நிற ஓநாய் கூட, மந்தைகளைப் பின்தொடர்ந்து, அதன் தெய்வீக பங்கை வகிக்கும்.  அது எதிரி இல்லை, ஆனால் சமநிலையின் காவலன்.

 இந்த மழையால் அவரது உடல் மட்டுமல்ல, அலை மோதிக் கொண்டிருந்த உள்ளமும் அமைதி கொண்டது 

அவர் இந்தக் கருத்தை கடவுளாக அல்லாமல், இயற்கையுடன் உரையாடிய ஒருவனாக முன்னெடுப்பார். ஆனால் அவரை பின்பற்றியவர்களால்... அவரால் பயனடைந்தவர்களால்... அவர் கடவுளாக தொழப்படுவார்.

தங்கர், குருமா, கொல்லா, குருபா போன்ற பாரம்பரிய மேய்ப்பர் சமூகங்கள், சிவன் காட்டிய வழியினை பின்பற்றி,  ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள்.ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கினாலும், அவை மந்தையைப் பாதுகாக்க உதவுவதாகவும், இழந்த ஆட்டுக்குட்டிகள் கடவுளுக்கு பலியாகக் கருதப்படுவதாகவும் மேய்ப்பர்கள் நம்புவார்கள். அந்த இறைவனே மண்ணில் இறங்கி வந்து மல்லப்பாவாகவும் கண்டோபாவாகவும் தங்களுடனே வாழ்ந்து, தங்களுக்கு இந்தப் பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதாக நம்புவார்கள். சந்ததி சந்ததியாக தங்கள் மக்களுக்கு கண்டோபாவின் இந்த புனிதக் கதையை கூறுவார்கள்.

 ஆனாலும் இந்த இணக்கத்திற்கு  பசவண்ணா உடன்படவில்லை.

 ஆயர்கள் இணக்கத்தை வேண்டினாலும் பசவண்ணாவின் மனதில் வஞ்சம் எரிந்து கொண்டிருந்தது  

விவசாயக் குலத்தின் தலைவன், தன் கொல்லப்பட்ட மகனுக்காக துக்கத்தில் குருடாகி இருந்தான், அவன் இணக்கத்தைப் பற்றி செவிகொடுத்து கேட்கத் தயாராக இருக்கவில்லை.
அவன் இரத்தத்தை வேண்டினான்... பழிவாங்கலை வேண்டினான், 

சிவன் மட்டும் போரைத் தடுக்க விரும்பியவராக இல்லை.
மற்றொரு ஆன்மாவும் போரைத் தவிர்த்து விட முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த ஆன்மாவின் பெயர் காமரதி.  விவசாயத் தலைவனின் மகள் .

 அவள் பீரப்பாவின் மீது காதல் கொண்டிருந்தாள்.

பீரப்பாவின் மீதான காமரதியின் காதல் கிளர்ச்சியால் பிறக்கவில்லை, அங்கீகாரத்தால் பிறந்தது. அவனிடம் அவள் தன் சகோதரனுக்கு ஒரு காலத்தில் இருந்த அதே நெருப்பைக் கண்டாள். பீரப்பாவும் அவளிடம் தனது தாயின் வாஞ்சையைக் கண்டான்.

 ஏற்கனவே அவள் தன் சகோதரனை இழந்திருந்தாள். இப்போது, போர் அவளது தந்தையையோ… அல்லது அவள் நேசித்த பீரப்பாவையோ,
அல்லது இருவரையுமோ பறிக்கக் காத்திருந்தது.

போரை நோக்கிய ஒவ்வொரு அடியும் நிலத்தின் அழிவை மட்டுமல்ல, தனது காதலின் அழிவையும் நோக்கிய பாதை என்பதை அவள் அறிவாள்.  

வன்முறை என்பது சிந்திக்கவியலா உயிரினங்களால், தமக்குள் எழும் பிணக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. 

 ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ பிரச்சனைகளுக்கு தீர்வாக வன்முறையை கையில் எடுப்பது என்பது, 
 மனிதன் எனும்  சிந்திக்கும் விலங்கு  சிந்தனையை மேற்கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி. 

 போர் என்பது ஆறாம் அறிவு கொண்ட உயிரினங்களுக்கு தேவையற்ற ஒன்று.

 போர் என்னும் கொடுஞ்செயல், வளத்தை வழங்கும்  நிலத்தை சாம்பலாக்கும். அது வாழ்வாதாரங்களை வேரறுக்கும்.

கோபத்தில் விதைக்கப்பட்ட  விதைகள், துக்கம் எனும் விளைச்சலை மட்டுமே வழங்கும்.

----








Reference: NITYA SAMBAMURTHY GHOTGE and SAGARI R. RAMDAS. Black sheep and gray wolves. 

Friday, October 31, 2025

பூதப்படையோன் (ஆதியோகி: அத்தியாயம் 17)

ஒவ்வொரு உயிரினமும் இரு ஆதி இச்சைகளை கொண்டிருக்கிறது. 

- ஒன்று, உயிர் பிழைத்தலுக்கான உந்துதல்.
- இரண்டு, தன் இரத்தத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான  பாலுணர்வு.

 இந்த இச்சைகளின் தூண்டுதலால்  உயிர் பிழைக்க வேண்டியும், சந்ததியை பெருக்க வேண்டியும், உண்ணுதல், நீர் அருந்துதல், காதல் புரிதல், இணைதல், ஓய்வு எடுத்தல் போன்ற செயல்களை ஒவ்வொரு உயிரியும் சந்ததி சந்ததியாக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு முடிவே இல்லாத சுழல். இந்தச் சுழலில் இருந்து விடுபடுவதே மனிதப்பிறப்பின் நோக்கம் என்று அனைத்து மதங்களும் போதிக்கின்றன. 

 இவை அனைத்தும் ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை தேவைகள்.

 வனத்தில் இந்தத் தேவைகள்; ஆதிக்கம், போட்டி, பலம் ஆகியவற்றின் துணையால் நிறைவேற்றப்பட்டன. நகங்கள், பற்கள், வேகம், ஆற்றல், விஷம், ஆக்ரோஷம் ஆகியவற்றின் துணையால் தான், அந்த நாளில் யார் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்றும் யாரின் சந்ததி பெருக வேண்டும் என்றும் வனத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகி இறுதியில் ஆறறிவு பெற்ற மனிதனாக உருக்கொண்ட  பின்பாவது இந்த இச்சை; வன்முறை இன்றி நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. ஆறறிவு கொண்ட  மனிதர்களின் வாழ்வும்; குறிஞ்சி நிலத்தில் இதே போல் தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 ஆனால் தங்களுக்கான உணவை மனிதர்கள்  தாங்களே உற்பத்தி செய்ய தலைப்பட்ட பிறகு, இந்த நிலை மாறத் வாங்கியது.  குறிப்பாக வளமான மருத நிலங்களில் இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது.  
அங்கு தானியங்கள் செழிப்பாக வளர்ந்தன.  நதிகளில் நீர் பாய்ந்தது.  
 இயற்கையின் கொடையால்  மனிதர்களின் இச்சையானது அங்கே இரத்தம் சிந்தப்படாமல் நிறைவேறத் துவங்கியது.

மருதம் அமைதியாக இருந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் மென்மையாக இருந்ததால் அல்ல,  நிலம் மென்மையாக இருந்ததால் தான் அங்கே அமைதி நிலவுவதற்கான சூழல் அமைந்தது.

ஆனால் எல்லா நிலங்களும் இத்தகைய கருணையை வழங்கவில்லை.

 பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த,  மக்களின் ஒழுக்கமும் நல்லெண்ணமும் மட்டும் போதுமானதாக இல்லை.

 அறிவு, இணக்கம், மற்றும்  இயற்கையைப் பற்றிய தெளிவான புரிதல் போன்றவற்றைக் கொண்டே பாலை நிலத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியும்.
 
பாலை நிலத்தை பொறுத்தவரை; அங்கு வாழும் மக்கள், வெறும் நிலத்தை பயன்படுத்துபவர்களாக மட்டுமே  இருப்பது பயனைத் தராது.

  மனிதர்கள் அங்கே நிலத்தை பராமரிப்பவர்களாக  இருக்க வேண்டும். நிலத்தின் சூழலில் சேர்ந்து இணைந்து, இயைந்து  வாழ்பவர்களாக இருத்தல்  வேண்டும். இயற்கையையும் பருவத்தையும் பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாக இருக்கும் வண்ணம் அந்த சூழல் வடிவமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும்.

 குறிஞ்சியில் வாழ்ந்து வந்த மனிதன், பரந்துபட்ட  சமநிலத்திற்கு இறங்கி வாழ தலைபட்ட போது; அவனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, முக்கியமான இரு வாய்ப்புகள் அவன் முன் இருந்தன. 

 ஒன்று மேய்ச்சல்  வாழ்வு முறை, மற்றொன்று பயிர் விளைவிக்கும்  வாழ்வு முறை.

 இந்த இரு வாழ்வு முறைகளையும்  முன்னெடுத்துக் கொண்டு இருவகையான குடிகள் உருவாயின.

 ஒன்று மேய்ச்சலை தொழிலாகக் கொண்ட ஆயர் சமூகம், மற்றொன்று தானியங்களை விளைவிக்கும் மருத சமூகம்.
 
இருவகையான மக்கள்... 
இரு வகையான வாழ்வு முறைகள்....

 ஒரு சமூகம் உழவைப் பின்பற்றியது. மற்றொரு சமூகம் மந்தைகளைப் பின்பற்றியது.

எண்ணிக்கையில் இரு சமூகமும் பெருகிய பொழுது, அவர்கள் இருவரும் ஒரே நிலத்தில் வசிக்கத் தலைப்பட்டனர். அது நிலத்திற்கான போட்டியாக மாறியது.

விவசாயிகள்  தாவரங்களை தங்கள் மூச்சைப் போல் பாதுகாத்தனர்.  
ஆயர்கள்  கால்நடைகளை தங்கள் உறவினர்களைப் போல் காத்தனர்.  விவசாயத்தின் ஆதாரமாக செடிகளை, கால்நடைகள் மேய்த்துவங்கிய பொழுது 
குரோதம் அவர்களுக்கு இடையே  நெருப்பை போல் வளர ஆரம்பித்தது.  

 விவசாயிகள், இளந்தளிர்களை மிதிக்கும் குளம்புகளையும், இலைகளை  அசைபோடும் ஆவினங்களையும் கண்டு  அஞ்சினர்.  மேய்பர்கள், மேய்ச்சலை தடை செய்யும் வேலிகளைக் கண்டு  சினம் கொண்டனர்.

 பல கோடி ஆண்டுகளாக  தாவரங்களும் ஆவினங்களும், வேலிகள் தடை ஏதும் இல்லாமல் தான், இணக்கத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறன.

 இயற்கையானது பல வழிகளில் இந்த இணக்கத்தைப் பற்றி; தக்காண பீடபூமியில் முரண்பட்டு நிற்கும் இரு குடிகளிடமும் பேச முயற்சித்தது. ஆனால் அதை செவிக்கொண்டு கேட்க அங்கே யாரும் இல்லை. நிலம் இணக்கத்தை வேண்டுவதை அவர்கள் இன்னும் செவிகொடுத்து கேட்கவில்லை. 

இயற்கை என்பது ஒரு கோபுரம் என்றும்,  அந்தக் கோபுரத்தின் உச்சியில் 'தான்' இருப்பதாகவும் மனிதன் எண்ணிக் கொள்கிறான்.  வர்ணாசிரம தர்மத்தை போன்ற உயர்வு தாழ்வு அடுக்குகளால் அமையப்பெற்றது அல்ல இயற்கை. அது ஒரு சுழற்சி. அந்த சுழற்சியில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும்,  பங்களிப்பாளர்களாகவும் பயனாளர்களாகவும்  செயல்படுகின்றன. 

பயிர்களின் நுனி வழங்குவது மனிதர்களுக்கு உணவாகும். பயிர்களின் பச்சை பாகங்கள் கால்நடைகளுக்கு உணவாகும். அனைத்து உயிரினங்களின் கழிவுகளும் நிலத்திற்கு உணவாகும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாகும். இதுவே இயற்கையின் சுழற்சி. இதுவே நாம் வாழும் நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 நிலம் என்னும் இயக்கமற்ற சிவத்தை, பொழுது என்னும் இயக்கம் கொண்ட சக்தி தழுவும் பொழுது தான் உயிர்கள் ஜனிக்கும், பல்கிப் பெருகும், இணக்கத்தோடு வாழும். 

இணக்கத்தோடு உயிரினங்கள் வாழும் நிலத்தில் தான் இயற்கையின் சுழற்சி சீராகச் சுழலும். இயற்கையை  பொருத்தமட்டில், பிறப்பினால் அனைத்து உயிர்களும் சமம். அங்கே உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. அனைத்து உயிர்களும் இணக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே, இந்த உலகில் நாம் சந்ததி சந்ததியாய் நீடித்து வாழ முடியும். 

ஆனால் இத்தகைய இணக்கம்; தக்காண பீடபூமியில் போருக்காக காத்திருக்கும் இரு குடிகளுக்கும் இன்னும் ஒரு கனவாகவே இருந்தது. அவர்களை  இணக்கமாக வாழச் சொல்லி இயற்கை மெல்லிய குரலில் வேண்டுகோள் விடுத்துக்  கொண்டிருந்தது. ஆனால் மனிதர்களின் சினத்தின் விளைவால் எழுந்த அறைகூவல்கள், இயற்கையின் மெல்லிய முணுமுணுப்பை கேட்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

 தக்காண  பீடபூமியில்  முரண்பட்டு நிற்கும் மனிதர்களது சினம், ஒரு நெருப்பைப் போல மற்ற நிலங்களுக்கும்   பரவ ஆரம்பித்தது. 

சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. அந்த சினம் இப்பொழுது சுற்றத்தாரையும் கொல்ல ஆவல் கொண்டது.

 விவசாய குடிகள் தங்களுக்கு ஆதரவான ராஜ்ஜியங்களுக்கு உதவி கேட்டு தூதர்களை அனுப்பினார்கள்.

கிழக்கு முனையிலிருந்து விதர்பாவும் அஸ்மகாவும் விவசாய குலங்களுடன் நின்றனர்.  
பீரப்பாவின் பக்கம், அவரது சகோதரி  உஜ்ஜயினியின் காளி,  மற்றும் அவந்தி, மஹிஷ்மதி வாழ்  வேட்டை இன மக்கள் இணைந்தனர்.

பீரப்பா, மேற்கு நோக்கி  பயணித்து, யதுக்களையும் வேளிர்களையும் சந்தித்தான். அவர்கள் கரிய தெய்வமான மாயோனை வணங்கும் ஆயர் குலத்தவர்கள். அவர்கள் போருக்கு பதிலாக  அமைதியை மதித்து, நடுநிலையைத் தேர்ந்தெடுத்தனர்.

எப்படி ஒரு குடும்பத்திற்கு பெண்ணின் பரிவான அன்பும் ஆணின் தைரியமும்  தேவையோ,  அதேபோல் ஒவ்வொரு  நாகரிகத்திற்கும்  காதல் மற்றும் வீரம் இரண்டும் அத்தியாவசியமானது. 

காதல், நாகரிகத்தின் சுபீட்சத்தை உறுதி செய்கிறது. வீரம், நாகரிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

 ஒரு குடும்பம் நெருக்கடியில் இருக்கும் பொழுது அண்டை அயலவர்கள் அந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாய் நிற்பது போல, ஒரு நாகரிகத்தின் துணைக்கு அயல் நாகரிகங்கள்  நிற்பதும் மிகவும் அவசியம். அது நட்பின் வெளிப்பாடு.

ஆனால் எல்லா நட்புகளும் நேர்மையானவை இல்லை...

 தன் மகனின் மரணத்தால் குமைந்து கொண்டிருந்த விவசாயக் குடியிருப்புகளின் தலைவன் பசவண்ணா, எப்படியேனும் பீரப்பாவை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, யாரும் எதிர்பாராத ஒரு இடத்தில் உதவியைக் கோரி பயணப்பட்டான். 

 அவன்  பயணப்பட்டது வடக்கே இருந்த ஒரு ராஜ்ஜியத்தை  நோக்கி...

 அந்த ராஜ்ஜியத்தின் தலைவன் பெயர் தக்ஷன். 
 
தக்ஷன், வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்தவன். படைக்கும் கடவுள் பிரம்மாவே  அனைத்து உயிர்களுக்கும் தந்தை என எண்ணுபவன். அவன் பசவண்ணாவிற்கு உதவுவதாக வாக்களித்தான். பூத கணங்கள் போல் போர் புரியும் இந்தப் படைகளை வெல்லுவதற்கான சமயம் இதுவென்று அவன் மகிழ்ச்சி கொண்டான்.

துக்கத்தாலும் கோபத்தாலும் குருடாக்கப்பட்ட பசவண்ணா, தக்ஷனின் உண்மையான நோக்கங்களை அறியவில்லை. தக்ஷன் நீதிக்காக அல்லாமல், நிலத்திற்காக ஏங்குவதை அவன் காணவில்லை. 

'தானே' பிரம்மாவின் நேரடி வாரிசு என எண்ணுபவன் தக்ஷன். அதனால் படைப்புகள் அனைத்தும் 'தனது' என்பது அவனது கொள்கை.

 தேவைக்கு ஈவதே இயற்கையின் குணம்.  ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு இயற்கையிடம் இடம் இருக்கிறது.  ஆனால் பேராசை என்பது ஈசனின் கபாலம் போன்றது. அதற்கு உலகையே கொடுத்தாலும் போதாது. 

 'தான்' மற்றும் 'தனது' என்ற தன்முனைப்பு எண்ணம் மேலோங்கியவன் தக்ஷன். தான் மற்றும் தனது என்ற  தம்பதிகள் இருக்கும் இடத்தில், அந்தத் தம்பதிகளுக்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாத்சர்யம் என ஆறு குழந்தைகள் பிறக்கும். 

காமம் – கட்டுப்பாடற்ற பாலுணர்வு, முறையற்ற பால்கவர்ச்சி.
க்ரோதம் – பகுத்தறிவை எரிக்கும் கோபம்.  
லோபம் – மற்றவர்களின் பங்கை விழுங்கும் பேராசை.  
மோகம் – ஞானத்தை குருடாக்கும் பற்று.  
மதம் – மனிதர்களை மனிதர்களுக்கு மேல் வைக்கும் பெருமை.  உயர்வுதாழ்வு மனப்பான்மை.
மாத்சர்யம் – மகிழ்ச்சியை விஷமாக்கும் பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி.

இவை நாகரிகங்களை உள்ளிருந்து அழிக்கின்றன.  இவை மனிதனின் உணர்ச்சிகளை தூண்டி விடுகின்றன. இந்த ஆறு குணங்களின் விளைவாகத்தான் பஞ்சமா பாதகங்கள் தோன்றுகின்றன. இந்த குணங்கள் மேலோங்கும் நாகரிகங்களில்  அமைதி நிலைக்க முடியாது.

 இவ்வாறு, ஆயர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான போர்
தக்ஷனின் பேராசைக்கான மேடையாக மாறியது. அவனின் மதப்பற்றும்; அவன் கொண்ட கொள்கைப் பற்றும், மனிதர்கள் மீதான உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு வித்திட்டது. புல் மற்றும் தானியத்திற்கான சண்டையாகத் தொடங்கியது, வம்சங்களின் போராக மாறியது.

இந்த ஆறு குணங்கள்  ஆட்சி செய்யும்போது, முந்தைய பல நாகரிகங்களில் நிகழ்ந்ததைப் போலவே, இங்கே இந்த நிலத்திலும் அழிவு பின் தொடர ஆரம்பித்தது.

 நாம் காணும்  இந்தப் பழமையான போர், இன்றைய உலகிற்கு கூறுவதற்கென ஒரு முக்கியமான செய்தியைக்  கொண்டிருக்கிறது.

நாம் இன்னும் நிலத்தையும் பொழுதையும் புரிந்து கொள்ளாமல் நாடுகளை நிர்மாணிக்கின்றோம். நாம் இன்னும் சமநிலைக்கு பதிலாக வெற்றியை நாடுகிறோம்.  நாம்  நமது முன்னோர் வழங்கிய ஞானத்தை புறக்கணிக்கிறோம்.

இந்தக் கதை மறந்துபோன கடந்த காலத்தில் அமைந்திருக்கலாம்,  
ஆனால் அதன் உண்மை நித்தியமானது.

 அமைதி என்பது, நிலங்கள் வழங்கும் செழிப்பிலிருந்து பிறப்பதில்லை.  அது மனிதனது மனக்கட்டுப்பாட்டிலிருந்து பிறக்கிறது. அப்படி மனக்கட்டுப்பாடு கொண்ட மக்கள் வாழும் ராஜ்ஜியத்தில் தான் அன்பு பெருக்கெடுக்கும்... உயிர்களின் உள்ளத்தில் கருணை நிலைத்திருக்கும். அந்த அன்பின் வழியாகத்தான் நாம் இறைவனை காண முடியும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.

 இந்த உண்மை சிவனுக்கு உணர்த்தப்பட்டது இந்த மண்ணில் தான். 

 இந்த தக்காண பீடபூமியில் தான் அவர் இயற்கையிடம் பேசினார். இயற்கையும் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தது. இதே நிலத்தில்தான் இயற்கை  தனது ரகசியங்களை சிவனுக்கு உணர்த்தியது. அந்த உண்மையை உணர்ந்த பிறகு தான் அவர் இறைவனானார்.

ஒவ்வொரு மனிதனது  வாழ்விலும் அதிகபட்சம் நேரக்கூடிய இன்னல்களை அவரும் சந்தித்துள்ளார்.  தான் மற்றும் தனது என்ற மாயையின் பிடியில் சிக்காமல், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி,  அந்த இன்னல்களை எதிர்கொண்டு, அவர் இறுதியில் இறைநிலையை அடைந்தார்.

அந்த இறை நிலையில் இருந்து; இந்த மானுடர்களை இறைநிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை, பல வழிகளில் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார் அந்த மானிடமேந்தி .

நம்மிடமும் இயற்கை  இதே உண்மைகளை பேச முயற்சிக்கிறது. இறை நிலையானது இயற்கையின் வழி நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நாம் தான் நம்மை கண்காணிப்பார் யாருமில்லை என்ற குருட்டுதைரியத்தில் மென்மேலும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.  

-------

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்; 
கண்காணி இல்லா இடமுமில்லை, காணுங்கால்; 
கண்காணியாக கலந்தெங்கு நின்றானை; 
கண்காணி கண்டார் களவொழிந்தாரே.
-திருமூலர்
 

Friday, October 24, 2025

மல்லண்ணா (ஆதியோகி: அத்தியாயம் 16)

அது ஒரு  குன்று. அதன் உச்சியில் பெரும் பாறைகள் செங்குத்தாக இருந்தன. அதன் உச்சியை அடைவது  அவ்வளவு எளிதல்ல. அந்த குன்றின் உச்சியில் சிவன் நிலவொளியின் கீழ்  நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் எண்ணமெங்கும் மாயத் தோற்றங்களால் நிரம்பி இருந்தது. அவரது உடலில் அனல் கொதித்துக் கொண்டிருந்தது.  அவரது குருதியில்  இருந்த தாதுக்கள் உடலிலும் மனதிலும்  விபரீத விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவரது  அனல் கொதிக்கும் உடல், வலி மிகுந்த எழுச்சி அறிகுறிகளை காட்டிக் கொண்டிருந்தது. பித்துப் பிடித்தது போல் உடல் சோர்வடையும் வரை வியர்வை வெள்ளம் பொங்க அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் வலி மிகுந்த  எழுச்சி மட்டுப்படத் தொடங்கியது.

 உடல் சோர்வடைந்தாலும்  சிவனுக்கு உள்ளம் தெளிவடையவில்லை.  தெளிவடையாத சிவன் நந்தனுக்கு அருகில் அமர்ந்தார்,  அவரது விரல்கள் காளையின்  காயமடைந்த கழுத்தைத் தொட்டன.  நந்தனின் காயங்களை பார்த்த பின்பு, சிவனுக்கு நந்தன் நிகழ்த்திய அந்த வீரம் மிகுந்த கோரத்தாண்டவம் நினைவுக்கு வந்தது. 
“நந்தா, நீ வெறும் மிருகமல்ல, ஒரு வீரன். நீ நெருப்பைப் போல் முன்னேறினாய்.  அந்த வீரனை  புராணமாக்கினாய்” என்று பெருமை பொங்கக் கூறினார்.

சிவன் முன்னோக்கிச் சாய்ந்து, நந்தனின் கொம்பைத் தொட்டார்
“இவை... வெறும் கொம்புகள் இல்லை... ஆற்றல் மிகு திரிசூலங்கள். என்னுடைய திரிசூலத்தை விட இவை வலிமையானவை” என்று கூறினார்.

சிவன் அருகில் இருந்த பாறையை நோக்கிச் சென்றார். ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கொண்டு, பாறையின் மேல் செதுக்கத் தொடங்கினார்.

முதலில் அவர் பாறையில் காளையின் உருவத்தை அழகாக வரைந்தார். பின்னர் காளையின் கொம்பினை வரையும் பொழுது, அவருக்கு தனது திரிசூலத்தின் ஞாபகம் வந்தது.  தனது திரிசூலத்திற்கு சமமானது அந்த கொம்பு என்பது அவரது எண்ணம். அந்த எண்ணத்தின் உந்துதலால் ஜோடிக் கொம்புகளை வரைவதற்குப் பதிலாக திரிசூலம் போல் மூன்று கொம்புகளை பாறையில் செதுக்கினார். மாய தோற்றங்களினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் அந்த திரிசூலமாக வரைந்த மூன்று கொம்புகளையும்  ஒவ்வொரு தனித்தனி  திரிசூலமாக வடிவமைத்தார்.  
ஒரு கொம்பு. பின்னர் அது மூன்றாக பிரிந்தது. ஒவ்வொரு கிளையும் மீண்டும் மூன்றாக பிளந்தது. நடுங்கும் கைகளால் அவர் செதுக்கிக் கொண்டே இருந்தார். 

 நந்தனின் மீது பீரப்பா நின்று ஒரு வீரனை குத்தி சாய்ப்பது  போல் அந்தப் படத்தை சிவன் வரைந்து முடித்தார். கொற்றவையின் கலைமான்களையும் மயிலையும் அவர்  அந்தப் பாறையில் செதுக்கினார்.

 இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நந்தன், சிவனின்  செயல்களை புரிந்து கொண்டவனைப் போல் தலையை ஆட்டி ஒரு மெல்லிய உறுமல் ஓசையை  வெளிப்படுத்தினான் .

 சிவனுக்கு நந்தனின் ஓசைகள் எளிதாகப் புரியும். அதை அங்கீகரிப்பது போல ஒரு மெல்லிய புன்னகையை அவர் நந்தனை நோக்கி வீசினார். மெல்ல அவர் மனம் ஆனந்தத்தில் சுழலத் தொடங்கியது. நோயின் வேகத்தால் அவர் காணும் ஒவ்வொரு பொருளும் மாயத் தோற்றமாக மாறத் தொடங்கியது. 

“நீ வெறும் காளை மட்டுமில்லை,” என்று அவர் மெதுவாகச் சொன்னார். “நீ தேவதைகளின் ஆயுதம்... சக்தியின் சக்கரம்.”

 நந்தன்  அவரது எண்ணத்தில்  இரண்டாக... மூன்றாக... நான்காக மலர் போல் விரிந்து... வட்ட வடிவில் சக்கரமாக சுழலத் தொடங்கினான்.
சிவன் மீண்டும் செதுக்கினார்...ஒரு நந்தன்... இரண்டு நந்தன்... நான்கு நந்தன்.. பாறையின் மேல் சுழன்று விரிந்தது போல தனது மாயத் தோற்றங்களை அப்படியே பாறையில் அவர் வரையத் தொடங்கினார். அவை ஒன்றாக இணைந்து ஒரு அழகான வடிவமானது.  எண்ணத்தின் வண்ணங்கள் அனைத்தும் கைகள் வழியாக வெளிப்பட்டு அந்தப் பாறையில் ஒரு அழகிய வரைபடமானது. அவர் வரைந்த அந்தப் படம் எருதுமலர் ஒன்று பாறையில் பூத்தது போல் இருந்தது. 
 ஐந்து காளைகள் ஒன்றாக இணைந்து மலர் போல மாறியது. ஒவ்வொன்றும் வீரப்பாவின் கையில் இருந்த கூர்முனை கொண்ட கணிச்சியை போல் கால்களை கொண்டிருந்தன .  பிற்காலத்தில் சண்டிகேசுவரரின் கைகளை அலங்கரித்த மான் மற்றும் மழு ஒன்றிணைந்தது  போன்ற வடிவில் அது காட்சியளித்தது. அது ஒரு காளை வடிவ மழு. 
மீண்டும் அவர் அதைக் கண்டார்... நந்தன் மீது பீரப்பா... நெருப்பு மற்றும் புழுதி  வழியாக இருவரும் பாய்ந்து போர் புரிந்த நிகழ்ச்சியை அவரால் மறக்க இயலவில்லை. அது உண்மையில் சரித்திரம் மறந்த ஒரு புராண யுத்தம். பழங்குடியினரது பாடல்களில் மட்டுமே அந்தப் போர்  நினைவு கூறப்படுகிறது. அவர்களை எதிர்த்த எதிரிகள் காகங்களைப் போல் சிதைந்து விழுந்தார்கள். எதிரிகளின் முறிந்த கைகள், வளைந்த கால்கள், அவரது கண்கள் முன்பு நிழலாடின. சிவனின் விரல்கள் நடுங்கின. அவர் அந்த நினைவைப் பாறைகளில் வரையத் தொடங்கினார்.
சிவனைச் சுற்றி, டோலரைட் பாறைகள் முணுமுணுத்தன. சிவன் அவற்றைத் தட்டினார், அவை ஆலய மணியைப் போல்  ஒலித்தன. அந்த ஒலி  யுகங்கள் கடந்தும்  எதிரொலிக்கும் உடுக்கை ஒலி  போல இருந்தது.

 அந்த மலையில் கற்களால் ஆயுதங்களை செய்வதற்கு  ஏற்படுத்தப்பட்ட சிறு குழிகள் இருந்தன. கற்களின் மேல் இருந்த அந்த சிறு குழிகள், அவருக்குப் புனிதமாகத் தோன்றின. கல் கோடரி  அவருக்கு லிங்கம் போல தோன்றினது, அது தீட்டப்படும் குழி அவருக்கு ஆவுடையாகத் தோன்றியது.  அது இரு சக்திகளின் இணைப்பாக அவருக்கு தோன்றியது. ஆவுடையின் மேல் லிங்கத்தின் இணைப்பாக அவருக்கு அது தோன்றியது. 
அவர் வெண்பாஷாண தூண்டுதலால் எழுந்த பாலுணர்ச்சி வேகத்தில் இன்னும் பல சித்திரங்களை  பாறைகளில் வடித்தார். தனது வலி மிகு உயிர்நாடி எழுச்சி அறிகுறிகளையும் ஆங்காங்கே கோட்டோவியமாய்  பாறைகளில் செதுக்க ஆரம்பித்தார். 
 அரை மயக்க நிலையில் கண்கள் சொருக உடுக்கையை அடித்தபடி அவர் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டே இருந்தார்.

 ஒவ்வொரு இரவிலும் இது தொடர்ந்தது. வீரப்பாவின் மக்களுக்கு இது அச்சத்தையும் பயத்தையும் கொடுத்தது. மலையின் உச்சியில் ஒரு காளையும் மனிதனும் இருப்பதை மட்டும் அவர்களால் தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. யாராலும் அந்த உச்சியை அடைய முடியாது என்பதால் அங்கு இருக்கும் அந்த உருவம், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டது என அவர்கள் எண்ணினர்.  அதிலும் பாறை அதிர்வினால்  ரீங்கரித்து ஒலிக்கும்  ஓசையும் நடனமும் அவர்களுக்கு பெரும் பீதியை அளித்தது.
 
 இதை அவர்கள் பீரப்பாவின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர். மங்கலான நிலவு ஒளியின் கீழ், ஒரு கட்டுமஸ்தான உருவம் சூரத்தனமாக ஆடுகிறது. யாரும் எளிதில் ஏற முடியாத பாறை உச்சியில் அவ்வுருவம் ஆடிக்  கொண்டிருக்கிறது. 
 அது  மனிதர்களுக்கு எட்டாத ஒரு சக்தி என்று அவர்கள் பீரப்பாவிடம் கூறினர்.

"அது ஒன்றும் எளிதில் அடைய முடியாத உச்சி அல்ல. அங்கே இருப்பது ஏதோ ஒரு மனித உருவம் தான். நான்  இன்றைக்கு அங்கே செல்கிறேன். யாரும் அஞ்ச வேண்டாம்"என்று பீரப்பா தனது மக்களுக்கு உறுதி அளித்தான்.
 
இரவில், பீரப்பா அந்த மலையின் மீது  ஏறினான்.

விசித்திரமான இசை அவனை இழுத்தது. இருளில் மறந்துபோன கடவுளின் இதயத் துடிப்பு போல் உடுக்கை ஒலியும்,  பாறைகளின் ரீங்கார ஓசையும் அந்தப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. அவன் எச்சரிக்கையுடன் நகர்ந்தான், பெரும் பிரயத்தனத்துடன் அவன் அந்த மலையின் உச்சியை அடைந்தான்.

 அது ஒரு முழு நிலவு நாள்.  ஆயினும் நிலவொளியை மேகம் மறைத்திருந்தது. 

 மேகத்தின் நிழல்களில், அவன் அந்த  உருவத்தைக் கண்டான். அந்த உருவம் ஒரு மனிதன் தான். ஆனால்  கற்களால் செதுக்கப்பட்டது போன்ற உடலை அவன் கொண்டிருந்தான். இருளில் அவனது முகத்தை பீரப்பாவால் தெளிவாகக் காண முடியவில்லை.

 ஆனால் அந்த உருவத்தின் நடனம்  பனங்கள்ளின் போதையில்   இருப்பவனது  தள்ளாட்டத்தைக் கொண்டிருந்தது. ஆயினும் அவனது அசைவுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அந்த வேகத்தில் சாதாரண ஒரு மனிதன்; இந்தப் பாறையின் மீது ஆடி இருந்தால், நிச்சயம் அவன் நிலை தவறி கீழே விழுந்திருப்பான். ஆனால் இந்த உருவத்தின் நடனமோ மிகவும் நேர்த்தியாகவும், அதேசமயம் பித்துப் பிடித்தது போல  அசுரத்தனமாகவும் இருந்தது  

அவன் அந்த உருவத்தைக் கூப்பிட்டான்.

பதில் இல்லை!

 காட்டுத்தனமாக,  மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வேகத்தில், நளினத்தோடு கூடிய ஒரு சிவ தாண்டவம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது 

 அவன் திரும்பவும் அழைத்தான்.அந்த அழைப்பை சிவன் காது கொடுத்து கேட்டது போல் தெரியவில்லை. நடனத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு அருகில் சென்று, அவன் சிவனின் தோளில் கையை வைத்தான்.

 மாய உருவங்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டிருந்த சிவனுக்கு பீரப்பாவின் உருவம் நிழலா, நிஜமா, அல்லது மாயத் தோற்றமா என்று பிரித்தறியத் தெரியவில்லை. அதிவேகமாக அவர் சுழன்று சுழன்று நடனம் ஆடிக் கொண்டிருந்தார். சுழற்சி வேகத்தில் அவரது கரங்கள் அருகில் இருந்த பீரப்பாவின் மீது பட்டது. 

 அந்த வேகத்தில் பீரப்பா தூக்கி வீசப்பட்டான். வேறொரு மனிதனாக இருந்திருந்தால், அவன் அந்தப் பாறையின் சரிவில் விழுந்து சிதறி இருப்பான். வனத்தின் ஆதி மகனான வீரப்பாவோ உடல்வலு மிக்கவன். அவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு தனது நிலை குலையாமல் பார்த்துக் கொண்டான். 

 கோபம் கொண்ட பீரப்பா சிவனோடு மல்யுத்தம் புரியத் தொடங்கினான்.

 பீரப்பாவால் அந்த வீரனை அசைக்க முடியவில்லை.

 இதுவரையிலும் தன்னை மிஞ்சிய ஒரு வீரனை அவன் சந்தித்ததில்லை. அவனை இதுவரை யாரும் வீழ்த்தியதும் இல்லை. மல்லப்ப கொண்டாவில் மிகவும் மதிக்கப்பட்ட மல்லன் அவன்.

 இப்பொழுது அவனுடன் சமர் செய்து கொண்டிருந்த வீரன், மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட வீரத்தைக் கொண்டிருந்தான். இருப்பினும் பீரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

 இருவரும் மல்யுத்தம் புரிந்தனர். சிவன் புலன் மயக்கத்தால்  மதி மயங்கி  வீரப்பாவுடன் மோதிக்கொண்டிருந்தார்.
 பீரப்பா, கோபமும் குழப்பமும் நிறைந்தவனாக, திருப்பி அடித்தான். நந்தன் சுற்றி நின்று, யாரைக் காப்பாற்றுவது என்று தெரியாமல் இருந்தான்.

அவர்கள் ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பில் மல்யுத்தம் புரிந்து கொண்டிருந்தனர்.

 பீரப்பா பிடி தளர்ந்தது அவன் பாறையில் விளிம்புக்கு தள்ளப்பட்டான். கீழே விழாமல் இருக்க அவன் ஒரு பாறையை இறுக்கப் பிடித்துக் கொண்டான். பாறையை பிடித்திருந்த அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது. அப்பொழுது மேகங்கள் விலகி நிலவின் ஒளி அந்தப் பிரதேசம் முழுவதும் வெளிச்சத்தை பரப்பியது.  நிலவின் பிரகாசமான ஒளியில் சிவனின் அழகிய முகம் தெரிந்தது 

பீரப்பா அந்த முகத்தைக் கண்டான். அது அவனுக்கு பரிச்சயமான முகம் . தன்னையே அச்சில் பார்த்தார் போல் இருந்த அந்த முகம் அவனுக்கு அவனது பெரியதந்தையை நினைவூட்டியது. 

மூச்சு விடாமல், பீரப்பா வாய்விட்டு கூறினான் , “மல்லண்ணா!!!”

அந்த வார்த்தை நெருப்பிலிருந்து  எழுந்தது, அது வெறும் பெயர் இல்லை. அது ஒரு நினைவு.  
அவர்களின் மொழியில், மல்லன்  என்றால் தைரியம் நிறைந்த ஒரு மல்யுத்த வீரன், ஒருபோதும் தலைவணங்காதவன். ஒரு காலத்தில் அவர்களில் மல்யுத்தத்தில் வலிமையானவருக்கு வழங்கப்பட்ட பட்டம் அது.  அந்தப் பெயர் சிவனின் நினைவு அடுக்குகளில் புதைந்து தொலைந்து போயிருந்த  பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. அது சிவனின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

 அந்தப் பெயரைக் கேட்டதும் சிவனைச்  சுற்றி இருந்த  மாய உருவங்கள் மறைந்து நிஜ உலகத்திற்கு திரும்பினார். புலப்படாத புலன்களின் வழியாக மாய உருவங்களை தரிசித்தபடி இருந்த சிவன் தற்பொழுது நிஜத்திற்கு திரும்பினார். அவர் நிகழ்த்திய விபரீத மல்யுத்தம் முடிவுக்கு வந்தது. அவரது கண்கள் தெளிந்தன. அவரின் முன் இருந்த அந்த இளைய வீரனை அவர் கண்டார்.
மலையின் விளிம்பில் விழ இருந்த பீரப்பாவை அவர் கை கொடுத்து தூக்கி விட்டார். நந்தன் வீரப்பாவின் அருகில் வந்து நின்றான். 

 நந்தன் பீரப்பாவின் கைகளை நக்கிக் கொடுக்க ஆரம்பித்தான். சிவன் குழப்பம் மேலிட அவனை உற்றுப் பார்த்தார். இது முன்பு போர்க்களத்தில் கண்ட நிகழ்வு அல்ல. இந்த வீரன் நிஜத்தில் இருப்பவன். இவன் மாயத் தோற்றம் அல்ல .

இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் அன்பு பொங்க பார்த்துக் கொண்டனர் . 

 பீரப்பாவை காண்கையில்  சிவனுக்கு தன்னையே தெளிந்த ஓடையில்  பார்த்தார் போல் இருந்தது. அந்த வீரனைக் கண்டதும் சிவனுக்கு மனதில் இனம் புரியாத சகோதர பாசம் பொங்கியது. அதே கொப்பளிக்கும் அன்பை வெளிப்படுத்தியவாறு வீரப்பாவும் நின்றிருந்தான் . அவர்களுக்குள் வார்த்தைகள் ஏதும் பெரிதாக பரிமாறப்படவில்லை. அவர்கள் பேச்சு குறைவாக இருந்தது. வார்த்தைகள் அவர்களுக்கு தேவையாய் இருக்கவில்லை .

 பீரப்பா, தாங்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி சிவனிடம் விவரிக்கத் தொடங்கினான். 
“முதலில், நாங்கள் ஆயர்களாக இருந்தோம். ஆனால் இந்த நிலம் எங்களைக் கைவிட ஆரம்பித்தது. மழை எங்களை மறந்தது. நிலம் வறண்டது . பிழைப்புக்காக இந்த நிலத்தின் இரு குடிகளும் மோதிக்கொண்டோம். இப்பொழுது குடியானவர்களின் வாரிசு இறந்துவிட்டான். அவர்கள் பழி தீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.”

 "அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள், மேலும் அவர்களிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களிடம் வெறும் கல்லாயுதங்களே  உள்ளன. அவர்கள் செம்பு முனையை கொண்ட ஈட்டிகளை கொண்டிருக்கின்றனர். எங்களின் கல்லாயுதங்களை விட அவை கூர்மையானவை.நடந்த போரில் எங்கள் பக்கம் இழப்பு அதிகம். எங்களுக்கு ஆயுதங்கள் தேவை. வெற்றி பெறுவதற்கல்ல, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு.”

 அவன் சிவனின் திரிசூலத்தின் கூர்மையை பார்த்தவாறு கூறினான். "அண்ணா எங்களுக்கு இதைப் போன்ற ஆயுதங்கள் தேவை."  

 சிவன் பீரப்பாவிற்கு அமைதியை போதித்தார். ஆயினும் வீரப்பாவோ " இது தவிர்க்க முடியாத ஒரு போர்.இது நடந்தே தீரும். எங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும் அண்ணா, இது எனது வேண்டுகோள்" என்றான்.

 மருத நிலத்தில் அவரது ஞானம் உயிர்களைக் காக்கப் பயன்பட்டது. இப்பொழுது இந்தப் பாலை நிலத்தில், அந்த ஞானம் வேறு ஓரு விலையைக் கோருகிறது.

 வேந்தன் சிவனின் ஞானத்தின் உதவியால்  இரும்பை உருக்கி வேளாண் கருவிகளைச் செய்தார். ஆனால் இங்கு இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சிவனின் முன்னே இருந்தது.

இரும்பு இந்த நிலத்தில் அதிகம் இருப்பதை சிவன் உணர்ந்தார். ஆனால் இந்த இரும்பை வெளிக்கொணர அதிக வெப்பம் தேவை. அதற்கான எரிபொருள் இங்கு இல்லை. அந்தப் பாலை நிலத்தில்   மரங்கள் அதிகம் இல்லை.

 சிவன் அந்த இடத்தை நோக்கினார். இரண்டு வருடங்களாக வெயிலையே காணாத பாலை நிலமாக அது இருந்தது . அந்த நிலம் அழல் மிகுந்த அவரது உடலைப் போலவே காட்சி அளித்தது.

"வற்றாத தாமிரபரணியின் கொடையால் செழிப்புற்றிருந்த   மருத நிலம் இல்லை இது.
 
இது அளவுக்கதிகமான வெப்பத்தால்  பிளவுபட்ட பாலை.  இங்கிருக்கும் நிலத்திற்கும் சரி... இங்கு வசிக்கும் உயிர்களின் உடலுக்கும் சரி... வெப்பம்  வறட்சியை உண்டு பண்ணுகிறது.

  வெவ்வேறு வாழ்வு முறைகள் கொண்ட மக்கள்  இங்கு இணைந்து வாழ்வது சாத்தியமா? "என சிவன் சிந்தித்தவாறு இருந்தார்.

 மக்களின் இணைப்பு என்பது இங்கு சாத்தியமில்லை. இணக்கமாக வாழும் எண்ணம் இப்பொழுது இங்கு யாரிடமும் இல்லை.  இப்பொழுது நடந்து கொண்டிருப்பது பழிவாங்கும் படலம். இங்கு இருப்பவர்களின் தேவையெல்லாம் ஒரு மேம்பட்ட இரும்பு ஆயுதம்.

இரும்பினை  உருக்குவதற்கு எரிபொருள் அவசியம் என்பதை சிவன் பீரப்பாவிடம்  விளக்கினார்.

 பீரப்பா அவருக்கு முல்லை நிலம் ஒன்று அருகில் இருப்பதாக கூறினான். அங்கே இவ்வாயுதத்தை செய்வதற்கு ஏற்ற மரங்கள் கிட்டும் என்றான்.

  அவர் பீரப்பா கூறிய அந்த முல்லை நிலத்திற்கு பயணப்பட்டார். வெப்ப மிகுதியால் சமநிலை இழந்து கொண்டிருந்த சிவனுக்கு மரங்கள் சூழ்ந்த அந்த முல்லை நிலம்  அமைதியை வழங்கிது. அந்த நிலத்தில் அவரது உடலின்  அனல்  தணிந்தது.

 இந்தப் பாலை நிலத்திலும் உயிர்ப்பாக இருக்கும்  மரங்களை அழித்தா  ஆயுதம் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. 

கேள்விகளால் சூழப்பட்ட அவர்  தியான நிலையில் அமர்ந்தார். அவர் எழுப்பிய ஓங்கார ஓசை வனம் முழுவதும் எதிரொலித்தது.அங்கே வெப்பத்தைத் தாங்கி வாழும் உயிரினங்கள்  பல இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை நீளக் கொம்பு கொண்ட ஆவினங்கள். ஓங்கார ஓசையினால் ஈர்க்கப்பட்டு  அவை சிவனைச் சூழ்ந்தன. 

அவை அங்கிருந்த மரங்களின் இலைகளை உணவாகக் கொண்டன. சிவன் வெட்ட வேண்டாம் என நினைத்த மரங்களை அவை உண்டு வாழ்ந்தன.
 மாடுகளினால் மட்டும் அந்த மரங்களின் இலைகள் சேதப்படுத்தப் படவில்லை.  அங்கே   வெயில் மிகுதியாலும் மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்தன. அந்த இலைகள் பூமிக்கு உரமாகும் முன்னரே வெப்ப மிகுதியால் வாடிப்போயின. 

 இவற்றையெல்லாம் கண்டு கொண்டிருந்த  அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன.

  பசுக்கள் இங்கிருக்கும் மரங்களுக்கு  பகைவர்களா? 

மரங்கள் செழிக்க  உரம் வேண்டுமே... அதை இங்கே இருக்கும் மரங்கள் எவ்வாறு பெருகின்றன?

 இந்தப் பாலை நிலத்தில் பசுக்களின் தாக்குதல்களை மீறியும் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மரங்கள் இங்கே பிழைத்திருக்கின்றன?

 தியான நிலையில் இருந்து அவர் அந்த சூழலை அவதானித்தார் . மெல்ல மெல்ல அவருக்குள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது. 

மரத்தின் இலைகளைத் தின்ற ஆவினங்கள் சாணம் வழியாக அந்த வனத்திற்கு உரம் தந்து செடிகளுக்கு உயிரூட்டின. 

தன் உடலை வருத்தும் சூரியனது அழல் தான் செடிகளில் உயிராக இருக்கிறது. செடிகளில்  உயிராற்றலாய் இருக்கும்   அழல்தான் மாடுகளை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. அந்த அழலின் துகள்கள் தான் சாணத்தில் ஆற்றலாக இருக்கிறது. சாணமே இங்கு உரம். சாணமே இங்கு எரிபொருள். 

 பசுபதியாகிய சிவனைச் சூழ்ந்த ஆவினங்கள் அவர் செல்லும் இடமெல்லாம் அவரைப்பின் தொடர்ந்தன. அழல் மிகுந்த தக்காண பீடபூமியில் வசிப்பதற்கேற்ற உடல் அமைப்பு பெற்றவை  இந்த மாட்டினம்.

வறட்சியைத் தாங்கும் அந்த ஹள்ளிகார் இன மாடுகள், கடினமான பாலைநிலத்தின் பீடபூமியை பிளக்கும் வலிமையுடையவை, சூரியனைத் தாங்கும் பொறுமையுடையவை, நிலம் இழந்த  வளத்தை மீட்டெடுக்கும் திறன் மிகுந்தவை. அதோடு இயைந்து வாழ  ஆயர் குழுவினர் முடிவெடுத்தனர்.

அந்த நாளிலிருந்து, அவர்கள் வெறும் ஆயர்கள் மட்டுமல்ல.  
அவர்கள் புனித மந்தையின் காவலர்களாக மாறினர். சிவனை தங்கள் தேவனாகக் கருதினர். இன்னும் அங்கிருக்கும் பழங்குடியினர் வருடம் தோறும் சிவன் நடனம் புரிந்த அந்த மலையில் வந்து Pitlappa வை வணங்குகின்றனர். பித்தம் கொண்ட உடலை உடையதால் அந்தப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டதா அல்லது பித்தளையைக் கொண்ட குருதியை உடையதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

 வீட்டு விலங்குகளை பழக்கிய ஒவ்வொரு சமூகமும் அவற்றின் கழிவுகளில் இருந்து பரவும் நோய்களுக்கு தப்பியதில்லை. ஆனால் சிவன் சாணத்தைக் கழிவாகக் கருதாமல் ஆற்றலாகக் கருதினார். அதை ஒரு எரிபொருளாக உபயோகிக்கத் தொடங்கினார். மேலும் நெருப்பில் எந்த கிருமிகளும் உயிர் வாழாது.  நெருப்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட எதுவும்  ஒருபோதும் வியாதியை பரப்பாது.

சிவனுக்கு இப்போது ஆயுதங்கள் செய்ய சாணம் எனும் சிறந்த எரிபொருள் கிட்டியது.

அவர் சாண எருக் குவியல்களை அடுக்கடுக்காக சதுர வடிவில் சேகரித்து, மெதுவாகவும் ஆழமாகவும் எரிய வைத்தார்.  அந்த வெப்பத்தை கடத்தவும், மென்மேலும் அதிகரிக்கவும் துருத்தி போன்ற அமைப்பை அவர் உருவாக்கினார். இரவு முழுவதும் அது இயக்கப்பட்டு நெருப்பின் வெப்பம் அதிகரிக்கப்பட்டது. அவர் உருவாக்கிய அத்துருத்தி மிகவும் வித்தியாசமானது, அது காலத்தால் மறக்கப்பட்டாலும் அக்கருவி அக்காலத்தைய அறிவியலின் உச்சம். அது இரவு முழுவதும் சீராகவும் நிதானமாகவும் வெப்பத்தை அதிகரிக்க வைத்தது. முடிவில் அவர் உருவாக்கிய அமைப்பில் இரும்பு  உருக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது.
அவர் பிரித்தெடுத்த இரும்பு முழுமையாக பயன்படுத்தப்பட்டது.ஒவ்வொரு துண்டும் அரிவாள்களாகவும் ஈட்டிகளாகவும் கத்திகளாகவும்  மாறியது.  

ஆயுதங்களை உருவாக்கத் தேவையான இரும்பை பிரித்தெடுத்த பின்பு மிஞ்சியது வெறும் சாம்பல் குவியல் கொண்டசாம்பல் மேடுகள்.
படம்: சாம்பல் மேடுகள்.
Source: journey to perhaps the largest ash-mound of Hallur, Karnataka, evidence for iron working. Bharatkalyan97

 அந்தச் சாம்பலை அள்ளி சிவன் பூசிக் கொண்டார். அதை பூசியவுடன் அவரது உடலின் அழல் மிகவும் மட்டுப்பட்டது.

 இந்த இரும்பு உருக்கும் முறையை யாராலும் பிற்காலத்தில் மீளுருவாக்கம் செய்ய இயலவில்லை. சிலர் இதை இழந்த அறிவியலால் உருவாக்கப்பட்டது என்றனர்.  மற்றவர்கள் இது தெய்வீகச் செயல் என்றனர்.  ஆனால் இந்த புதிர் யாராலும் விடுவிக்கப்படாமலேயே  இருக்கிறது.
 
இன்றும், புதிஹால் மற்றும் சங்கனகல்லுவில், அந்த சாம்பல் குவியல்கள் இருக்கின்றன.
இன்றைய அறிவியலாளர்கள்  கூட, அதன் பயன்பாடு எத்தகையது என்பதை பற்றிய அனுமானங்களை மட்டுமே கூற முடிந்திருக்கிறது.

 இப்பொழுது வெறும் சாம்பல் மேடாக காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் உயிர்ப்போடு இருந்தது. அது ஒரு வெப்பம் சூழ்ந்த இடம். 

 வெப்பத்தினால் அவதியுறும் சிவன் அந்த சாம்பல் மேட்டில் ஒரு முக்கியமான இயற்கை ரகசியத்தை அறிந்து கொண்டார்.

நெருப்புக்கு மேல் படர்ந்திருந்த  சாம்பல்  ஒரு காப்புப் பொருளாக இருந்தது.  வெப்பத்தினால் அந்தச் சாம்பலைக்   கடந்து செல்ல முடியவில்லை.  அந்த சாம்பலின் வெப்பத்தைத் தடுக்கும் திறனை பரிசோதிக்க, யாரும் துணியாத காரியத்தை சிவன் செய்தார்.
 நீறு எனும் சாம்பலின் மகத்துவத்தை பரிசோதிக்க வெறும் கால்களோடு நெருப்பின் மீது அவர் நடந்தார். அந்த வெப்பம் சற்றும் அவரது உடலுக்குக் கடத்தப்படவில்லை. நெருப்பின் மேல் பூத்திருந்த நீறு வெப்பத்தைத் தடுத்தது. மேலும் அவர் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டார். அவ்வாறு பூசிக் கொண்ட பின்னர் சூரியனின் அழல் அவரை சிறிதும்   தீண்டவில்லை. 

இது வெறும் சாம்பல் இல்லை. இது மருந்து.... நினைவு...அறிவு.... புத்தி.

இன்றும் இங்கே உள்ள கிராமங்களின் பலவற்றின் பெயர்கள்  பூதி என்று முடிகின்றன. உதாரணத்திற்கு Budihal, Buditippa, அதிலும் பூதிகுண்ட்டா பகுதியில் தான் 46 அடி உயர சாம்பல் மேடு இருந்துள்ளது. 

பூதி எனும் வேர்சொல் சாம்பலைக்குறிப்பது. இதிலிருந்தே விபூதி எனும் பெயர் தோன்றியது.  விபூதி என்பது சிவனை பொருத்த மட்டிலும் ஒரு புனிதப் பூச்சு. அமைதியின் அடையாளம். ஒரு பாதுகாப்புக்கவசம்.

 சிவனைப் பின்தொடர்ந்து பீரப்பாவும் நெருப்பின் மேல் நடந்து பார்த்தான். அவனுக்கும் ஆச்சரியம் தாங்க இயலவில்லை. அவனும் அந்த விபூதியை எடுத்து கையிலும் நெற்றியிலும் பூசிக் கொண்டான். அதைத்தொடர்ந்து நந்தனும் அதன் மேல் ஓடினான்.

இன்றுவரை, அந்த பழங்குடி வீரனின் வழித்தோன்றல்கள்  நெருப்பின் மீது வெறுங்காலுடன் நடக்கின்றனர்,  நீறு பூத்த நெருப்பு அவர்களின் பாதங்களைக் காக்கிறது என்பதை உணர்த்திய அந்தச் செயல், மதப்பூச்சு பூசப்பட்டு மதச் சடங்காக தற்போதும் தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

 இன்றும்கூட அவர்களின் கால்நடைகளும், காளைகளும், பசுக்களும்  நெருப்பில் நடக்க வைக்கப்படுகின்றன.

 இவ்வாறு நீறு எனப்படும் அந்தச் சாம்பல்   அவர்களின் மத அடையாளமாகியது. இன்றும் மௌனமாக, மர்மமாக , தக்காண பீடபூமி முழுவதும், அந்த சாம்பல் குவியல்கள் காணக் கிடைக்கின்றன. 
ஒரு காலத்தில் நெருப்பு இல்லாமல் எரிந்த நெருப்பின் சான்று அது...மறந்துபோன ஒரு தொழில்நுட்பம் அது...  அந்தத் தொழில்நுட்பம் பற்றி இப்போது இருக்கும் யாருக்கும் தெரியாது. அது தக்காண பீடபூமியால்  மட்டுமே நினைவுகூறப்படக் கூடிய ஒரு தெய்வீக நாடகம். 
-------

 “…However it [the ashmound tradition of the Deccan] may ultimately be found to relate to the cult of cattle throughout India, and however humble the theme may appear beside the grander flights of Indian religious thought, at least we may assert that what we have been able to reconstruct is something unique and hitherto undreamed of; and as such it adds a new and peculiarly Indian chapter to the history of human institutions” (Allchin - British archeologist).

-------
Pictures courtesy : Sensual, material, and technological understanding: exploring prehistoric soundscapes in south India
Nicole bolvin. University of Cambridge.

Goddess Worship and Dance in Indian Prehistory: Interrogating Neolithic and Iron Age Evidence for Roots of Hindu Ritual Practice.Srinivasan, Sharada.

Rock art and rock music: Petroglyphs of
the south Indian Neolithic
Nicole Boivin

Prehistoric Petroglyphs of Kappagallu - part II,Journeys across Karnataka blog.

Landscape, Monumental Architecture, and Ritual: A Reconsideration of the South Indian Ashmounds by Nicole Boivin

Friday, October 17, 2025

வீரபத்திரன் (ஆதியோகி: அத்தியாயம் 15)

சிவன் நந்தனுடன் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி சென்றார். அங்கு மலைகள்  கடலாக விரிந்தன. ஈரமான மரப்பட்டையின் மணமும், காட்டு இஞ்சியின் நறுமணமும் காற்றில் நிரம்பியிருந்தன. மண்ணில், அகலமான யானைத் தடங்கள் அமைதியான வழிகாட்டிகளாக வடமேற்கு மலைகளை  நோக்கிச் சென்றன. நந்தனின் குளம்புகள் அந்தப் பாதையின் வழியாக மெதுவாகச் சென்றது. பாதையைத் தேர்ந்தெடுத்தது சிவன் இல்லை, நந்தன்தான் யானைகளைப் பின்தொடர்ந்து மெதுவாக சென்று கொண்டிருந்தான். சிவன் வெறுமனே நந்தனின் மீது  அமர்ந்திருந்தார், அவரது மனம் அலை பாய்ந்தபடி இருந்தது. அவரது நரம்புகள் நிலையாக இருக்கவில்லை. மாய உருவங்களும் மனப்பிரம்மைகளும் அவரை ஆக்கிரமித்தபடி இருந்தன. தற்போது சிவனின் பிறவி சாபமாகிய  வில்சனின் வியாதி அடுத்த கட்டத்தை எட்டி இருந்தது. வியாதியைத் தணிக்க வெண்பாஷாணம் எடுக்கும் பொழுதெல்லாம் வலிமிகு உயிர் நாடி எழுச்சி அவருக்கு தோன்ற ஆரம்பித்தது. அர்சனிக் ஒரு பாலுணர்வூக்கி. செம்பு மிகுந்த அவரது உடலில் அர்சனிக்கும் இணைந்து இந்த அரிதான அறிகுறியை அவருக்கு தோற்றுவித்தன.

 ஒரு காலத்தில் மருந்தாக இருந்த வெண்பாஷாணம் அவரது ரத்தத்தில் ஒரு சாபமென நெளிந்து ஓடியது. ஆனால் ஆர்சனிக்கை நிறுத்தியபோது, தெளிவு திரும்பவில்லை. மாறாக, உலகம் உடைந்தது. புலப்படாத புலன்களின் தோற்றங்கள் மலர்ந்தன. நெருப்பில் உருக்குலைந்த அவரது தாயின் உருவம், ரத்தம் தோய்ந்த அவரது தந்தையின் உருவம், சேற்றை வீசி எரியும் சிறுவர்களின் தோற்றம் போன்ற மாய உருவங்கள் பூதாகரமாக அவரின் மணக்கண்ணில்  நிழலாடியபடி இருந்தன. அவரது உடல் இயற்கைக்கு மாறாகத் துடித்தது. ஆனால் அவர் தனியாக இல்லை. அவரது உற்ற தோழனான   நந்தன் அவர் மயக்கமடையும் பொழுதும், மனப்பிரம்மையால் பிதற்றும்  பொழுதும், கல்லிச்சி மரங்களின் கீழ் அவரை இளைப்பாற வைத்து நாவால் வருடிக் கொடுத்தபடி இருந்தான். 

 இவ்வாறான வலிகளோடு அவர் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.அவரது பயணங்கள் நீண்டு கொண்டே இருந்தது. தாமிரபரணி ஆறு மேல்நோக்கி செல்லச் செல்ல மெலிந்தது. பெரிய பாலக்காடு இடைவெளி வழியாக, காற்று கட்டவிழ்ந்த மிருகம்போல் உறுமியது. அது காட்டின் பச்சை வாசனையையும், தொலைவில் யானைகளின்  பிளிரல் ஓசைகளையும்  கொண்டு வந்தது. அந்தி நேரத்தில்,மரங்களிடையே சாம்பல் நிற நிழல்களாக யானைகள் தோன்றின. நந்தன் அவற்றை உன்னிப்பாகப் பார்த்தான். சிவன் எதையும் பார்க்கவில்லை. அவர் நோயின் பிடியில் சிக்கி இருந்தார். அவரது பார்வை உள்நோக்கி இருந்தது. அவர்கள் முன்னோக்கி செல்லச் செல்ல வனம் விரிந்தது. பெரும்  சமவெளிகள் அவர்கள் முன் திறந்தன, அவை வெயிலில் எரிந்து பொன்னிறமாக மின்னின. அங்கே மான்கள் துள்ளின. மேலே பருந்துகள் வட்டமிட்டன. நொய்யல் ஆற்றின் வளைவில், அவர்கள் நீர் அருந்தினர். சிவன் ஓய்வெடுக்க முயன்றார், ஆனால் தூக்கமும் அவரை ஏமாற்றியது. கல் இச்சி மரங்களின் கீழ், அவர் துடிதுடித்தபடி புரண்டு கிடந்தார் . 

வாரங்கள்  கழிந்தன. அவர்கள் மைசூர் பீடபூமியைக் கடந்தனர். பாதைகள் பிலிகிரி ரங்கன மலைகள் வழியாக வளைந்து நெளிந்து சென்றது. அங்கு, சிவனின் அறிகுறிகள் மோசமடைந்தன. காய்ச்சலின் வேகம் அதிகரித்தது. நந்தன் சோர்வடையவில்லை சிவனை தாங்கியபடி ஒரு மந்திர சொல்லுக்கு கட்டுண்டது போல அவன் முன்னேறி சென்று கொண்டே இருந்தான். அவர்கள் பெல்லாரியை நெருங்கினர்.

 தக்காண பீடபூமி   சிவப்புக் கடலென அவர்கள் முன்  விரிந்தது. தக்காண  பீடபூமியின்  பாறைகள் கூர்மையாக இருந்தன, காற்று உலர்ந்து  இருந்தது. தொலைவில் துங்கபத்திரை ஆறு  முணுமுணுத்தது. ஆனால் சிவனது சிந்தையை கவர்ந்தது அந்த ஆறு அல்ல. அங்கிருந்த பூமியே அவரது சிந்தனையை கவர்ந்தது. அந்த பூமியின் மேற்பரப்புக்கு கீழே, மாக்னடைட் மற்றும் குவார்ட்சைட் தாதுக்கள் நரம்புகள் போல நெளிந்து ஓடியது. அது சிவனது நாடியை படபடக்க வைத்தது.  இந்தப் பாறைகளின் கீழே இருக்கும் கனிமங்கள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன. வேறு ஏதேனும் பாஷாணம் இங்கு இருக்கக் கூடும் என அவர் நம்பினார். அந்த தாதுக்கள் அவரது நோயினை தணிக்கக்கூடும் என்று அவருக்கு தோன்றியது. இந்த நிலத்தில் எங்கோ, அவரது நோய்க்கு மருந்து இருப்பதாக அவர் நம்பினார். 

 அந்த நிலத்தின் பெயர் குப்கல்.  அது ஒரு வறண்ட பிரதேசம்  அங்கு நிலம் வேறுபட்டிருந்தது . காற்றில் உள்ள மொழி மாறியிருந்தது. அங்கிருந்த மக்களின் வார்த்தைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன. அந்த வார்த்தைகள் திராவிட வார்த்தைகளாக இருந்தாலும் மிக  நுட்பமான மாற்றத்தினை அது கொண்டிருந்தது.  

 அந்த மொழி மலைகளாலும் காலத்தாலும் பிரிக்கப்பட்ட தமிழின் உடன்பிறந்த மொழி. அங்கே மொழி பிரிந்து இரு கிளைகளாக வளர்ந்திருந்தது. அது முழுமையாக இப்போதைய கன்னடம் போல் இருக்கவில்லை. அது இப்பொழுது தான் குழந்தை பருவத்தை அடைந்திருக்கும் கன்னட மொழி. அது தமிழின் சாயலையே அதிகம் கொண்டிருந்தது.

அங்கு தமிழின் உடன்பிறப்பான கன்னட மொழி மட்டும் செழிக்கவில்லை. சிவனின் ரத்த பந்தம் ஒன்றும் அங்கே உலாவிக்கொண்டிருந்ததை சிவன் அறிய மாட்டார். அந்த ரத்த பந்தத்தின் பெயர் பத்ரன்... வீரபத்திரன்.

பத்ரன், சிவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவன். ஆனால் சிவனின் தந்தையைப் போல  கருமையான தோலுடையவன். பத்ரன் அவனது தந்தையைப் போலவே புலிகளோடு சமர் செய்தவன். அதனால் வீரப்பன், வீரையன் போன்ற காரணப் பெயர்களால் அவன் அழைக்கப்படலானான். அங்கே மக்கள் வழக்கில் இருந்த ஆதி கன்னட மொழியின் உச்சரிப்புகள் சற்று வித்தியாசமானது. அதனால் அங்கே அவன் பீரப்பா, பீரய்யா என அழைக்கப்பட்டான். 

சங்கனகல்லு எனப்படும் குப்கலில் தன் மக்களுடன் அவன் மிகப்பெரும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.   பீரப்பா குலத்தினர் மலைவாழ் மக்கள், அவர்கள் ஒரு காலத்தில் வேட்டையாடிகள், இப்போது ஆயர்கள். அவர்கள் போராட்டம் மிகுந்த வாழ்க்கை முறையினைக் கொண்ட  வேட்டையாடி சமூகமாய் இருப்பதைக் காட்டிலும், உணவையும் அமைதியையும் நிரந்தரமாக வழங்கும் மேய்ச்சல் வாழ்வுமுறையைத் தேர்ந்தெடுத்தனர். டெக்கானின் கொளுத்தும் வெயிலைத் தாங்கும் ஒரு வலிமையான ஆட்டு இனத்தை அவர்கள் வளர்த்து வந்தனர்.

 அவர்களின் தலைவன், பீரப்பா, புலியை கைகளால் வேட்டையாடிய புராண நாயகன். அவனது புலித்தோல் உடையும், செம்புக் காப்பை அணிந்திருந்த உறுதியான கைகளும் அவனது கடந்த காலத்து வேட்டையாடி வாழ்வையும் , அசைக்க முடியாத வலிமையையும் பறைசாற்றின.


அமைதியை வேண்டிய அவர்களது வாழ்வில் அமைதி நிலைக்கவில்லை. கிழக்குத் தாழ்நில விவசாயக் குடியிருப்புகளிலிருந்து பிரச்சினை வந்தது. அந்த இடத்தின் பெயர் கல்யாணப்பட்டணம். 

 மேய்ப்பர்கள் வாழ்ந்து வந்த  இடத்தில் கடந்த இரு ஆண்டுகளாக துளியும்  மழை பெய்யவில்லை. அதனால்  சற்றே பசுமை மிச்சம் இருந்த கல்யாணபட்டிணத்து நிலத்தை நோக்கி  மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றனர். மேய்ப்பர்களின்  அலைந்து திரியும் ஆடுகள் தங்கள் வறண்ட வயல்களை சேதப்படுத்தி விடுமோ  என கவலைப்பட்ட கல்யாணப்பட்டணக் குடியிருப்பாளர்கள்  மேய்ப்பர்களைத் தாக்கினர்.

 இந்தத் தாக்குதல் வஞ்சத்தால் விளைந்தது அல்ல. இது தோல்வியடைந்த பருவம், குறைந்து வந்த உணவின் இருப்பு, மற்றும் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட   வன்முறையால் பிறந்தது. தற்பொழுது மேய்ப்பர்களாகக்  காட்சியளிக்கும் அவர்கள் முன்பு புலிகளையும் வேங்கைகளையும் வலுவோடு எதிர்த்த மலைவாழ் மக்கள். அவர்களுக்கு தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. ஆடுகளைக் காக்க அவர்கள் திருப்பித் தாக்கினர். 

 இப்பொழுது ஆடுகள் மீது இருந்த வெறுப்பு மெல்ல மெல்ல குரோதமாக உருமாறியது. கல்யாணப்பட்டணத்து வீரர்கள் ஒன்று கூடி  ஆயர்களின் ஆடுகளை சிறைபிடித்தனர்.சிறைபிடிக்க வரும்போது அவர்களின் கழுத்தில்  வெட்சிப்பூவினால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்தனர். இது போருக்கு அழைப்பு விடும் ஒரு சடங்கு.

பதிலுக்கு, பீரப்பாவின் குலம் பழிவாங்கத் தயாரானது. அங்கிருந்த  ஹிரேகுட்ட மலையின் பாறைகள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. அந்த மலையானது  பெரும் கிரானைட் பாறைகளால் ஆனது. கிரானைட் பாறைகளுக்கு  இடையே, டோலரைட் கற்கள் பாறையை பிளக்கும் ஒரு கத்தியை போல்  மலைக்கு இடையில் ஓடியது. அந்த கற்களே அங்கிருந்த பழங்குடியினரது ஆயுதம்.
 அந்த ஆயுதங்களின் செயல்முறை கற்களை உடைப்பதில் இருந்து தொடங்கியது. டோலரைட் கற்களை உடைத்து தடிமனைக் குறைத்து அளவான கோடரிகளை செய்வதற்கு  அங்கிருந்த மெல்லிய பாறைகள் பயன்பட்டன. சிறிய குழிகளில் உரசி உரசி அவை கூர் தீட்டப்பட்டன.

  படம்  : பாறைகள் எப்படி கோடரிகளாக உருமாற்றம் அடைகின்றன என்பதைப் பற்றி விளக்கும் படம். source: Roberto Risch எழுதிய The Prehistoric Axe Factory at Sanganakallu-Kupgal (Bellary District), Southern India. எனும் ஆய்வுக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 


 ஒரு  தொழிற்சாலையைப் போல்  அங்கே கற்போடரிகளும் கல்லாயுதங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது . ஆண்களும் பெண்களும் வட்ட வடிவில் அமர்ந்து பெரும் போருக்கான ஆயுதங்களை அங்கே அந்தத் தொழிற்சாலையில் செய்து கொண்டிருந்தனர்.


 ஆயுதங்களை செய்த பின்னர் அவர்கள் கரந்தைப் பூ மலர்களால் ஆன மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அவர்கள் அந்த பீடபூமியின் பாறைகளால் ஆன இளைப்பாரும் இடத்தில் ஒன்று கூடினர்.

படம்: Birappa Rock Shelter, Kappagallu. source: Journeys across Karnataka blog.

 பயணத்திற்கு முன், அவர்கள் ஒரு  வீரக்கல்லைச் சுற்றி கூடினர். போரில் வீழ்ந்த வீரனின் புதைக்கப்பட்ட நினைவுக் கல் அது. அவனது இரத்தம் இன்னும் அவர்களில் ஓடுவதாக, அவனது தைரியம் அவர்களின் இதயங்களில் எதிரொலிப்பதாக அந்த மக்கள் நம்பினர்.  அவர்கள் ஒரு ஆடு மற்றும் காட்டுப்பன்றியை அந்த வீர கல்லின் முன்  பலியிட்டு அவனது ஆசியை  வேண்டி நின்றனர். அங்கே ஒரு மூப்பரின்  மீது அந்த வீரனின் ஆவி இறங்கி அங்கிருப்பவர்களுக்கு ஆசி வழங்கியது.
 அதன் பின்பு அவர்கள் வெற்றிக் கூச்சலிட்டனர். பறைகள் இசைக்கப்பட்டன. அது போரின் அறைகூவல். அங்கே அனைவருக்கும் முன்பு பீரப்பா கவர்ந்து செல்லப்பட்ட ஆடுகளை மீட்பேன் என உறுதிமொழி எடுத்தான். பின்னர் கவர்ந்து செல்லப்பட்ட தங்கள் ஆடுகளை நோக்கி அவர்கள் ஆயுதம் ஏந்திச் சென்றனர்.

 ஒரு மலைமுகட்டிற்கு மிக அருகில் இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். போர்முரசு கொட்டப்பட்டது. சண்டை துவங்கியது.
அவர்களின் கண்களுக்குத் தென்படாத உயரமான ஒரு குன்றின் மீது சிவன் நடப்பதை பார்த்தவாறு நின்றிருந்தார். சிவன் அங்கே உள்ள பாறை முகட்டின் கீழ் சுருண்டு கிடந்தார். தக்கான பீடபூமியின் எரியும் வெப்பம் அவரது அறிகுறிகளை தீவிரப்படுத்தியது. அவர் ஒரு அரை மயக்க நிலையில் நடப்பதை கவனித்து வந்தார். அவரது உற்ற நண்பன் நந்தன், அருகில் மேய்ந்து கொண்டிருந்தான்.

போர் மிருகத்தனமாக இருந்தது. கற்களால் செய்யப்பட்ட ஈட்டிகளும் கோடரிகளும் எலும்புகளை நொறுக்கின, சதைகளைக்  கிழித்தன, அங்கிருந்த செம்மண் மேலும் குருதியால் சிவக்க வைக்கப்பட்டது.  அந்த இடம் முழுவதும் புழுதி சூழ்ந்தது. மரண ஓலமும் ஆவேசக் கூச்சல்களும்  காற்றில் எதிரொலித்தது.

 இப்போரில் வஞ்சகர் என்றும் யாரும் இல்லை. இரு பக்கத்தினருக்கும் தங்களுக்கான ஒரு நியாயத்தை கொண்டிருந்தனர். கல்யாணப்பட்டிண வீரர்கள் வளமான நிலங்களைப் பாதுகாக்க போராடினர். பீரப்பாவின் குலம் தங்கள் ஆடுகளைப் பாதுகாக்க போராடியது. தக்காண பீடபூமியின் வறண்ட நிலங்கள் ஆண்டில் சில மாதங்களே மேய்ச்சல் அல்லது விதைப்புக்கு உகந்தவை. அந்த நிலம் இரண்டு வகையான குலத்தவருக்கும் தேவையாய் இருந்தது. பற்றாக்குறை வன்மத்தையும் வெறுப்பையும் போட்டியையும்  உருவாக்கியது. இங்கு யாரின் மீதும் குற்றமில்லை.

 ஆனால் எண்ணிக்கையைப் பொருத்தவரை இந்த சண்டை சமமானதாக இல்லை. பீரப்பாவின் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் கல்யாணபட்டிண வீரர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதனால் பீரப்பாவின் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்கினர். இருப்பினும் பீரப்பாவை எவராலும் தொட முடியவில்லை. அவன் ஒரு புயல். அந்தப் புயல் செல்லும் இடமெல்லாம் எதிரணி வீரர்கள் வெட்டப்பட்ட வாழைமரம் போல் வீழத் தொடங்கினர்.

தொலைவில், நந்தன் எதிரிகளால் சூழப்பட்ட  அந்த கருமையான தோல் கொண்ட  வீரனை உற்றுப் பார்த்தான். அவனது தோள்களின் வளைவு, அவனது கண்களில் உள்ள நெருப்பு, அவனது புஜங்கள், அவனது ஆற்றல் அனைத்தும் சிவனைப் போலவே இருந்தது. சிவனின் மறுபிறப்பு  போல் அவன் தோன்றினான். நந்தன் ஆச்சரியம் மேலிட சிவனையும் பீரப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். பீரப்பா கருமை நிறைந்த சிவனின் பிரதி போல நந்தனுக்குத் தோன்றினான். நந்தன்  சண்டை நடக்கும் அந்த இடத்தை நோக்கி முன்னேறினான்.

 அவன் முன்னேறிய அதே சமயம் கல்யாணபட்டிணத்து விவசாய குலத் தலைவன் பசவண்ணாவின் மகனால் வீசப்பட்ட ஒரு ஈட்டி பீரப்பாவை நோக்கி காற்றில் பறந்து வந்தது. அந்த தாக்குதலை பீரப்பா அறியவில்லை.  ஆனால் நந்தன் அதை பார்த்துவிட்டான்.  உள்ளுணர்வு  உந்துதலால், நந்தன் நாலு கால் பாய்ச்சலில்  முன்னோக்கி ஓடினான். நந்தனின் கொம்புகள் பாய்ந்து வந்த  ஈட்டியைச் சந்தித்தது. செம்பு முனை கொண்ட மரத்தாலான அந்த கூரான ஈட்டி சிதறி விழுந்தது. பீரப்பா ஆச்சரியமும் அதிர்ச்சியும் மேலிட நந்தனின் கண்களை சந்தித்தான்.

பீரப்பாவை தன் மீது ஏற்றிக்கொள்ளத் தயாராக நந்தன் மண்டியிட்டு பீரப்பாவின் முன் நின்றான்,  நந்தனின் குளம்புகள் பாய்வதற்குத் தயாராக காத்திருந்தது.

பீரப்பா, கண நேரத்தில், அந்த அழைப்பை புரிந்து கொண்டான். அவன் நந்தனின் மேலேறினான். 

பின்னர் நடந்தது புராணமானது.  வீரன் புயலைப் போல் எதிரி வரிசைகளைத் தகர்த்தான். பயம் பரவியது. கல்யாணபட்டிணத்து வீரர்கள் சிதறி ஓடினர். ஆனால் பசவண்ணாவின் மகன் வீரத்தில் சளைத்தவன் இல்லை. அவன் பீரப்பாவை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாரானான். பீரப்பா  பசவண்ணாவின் மகனின் தாக்குதல்களை தனது கணிச்சியால் தடுத்தபடி இருந்தான். ஆயினும் அவன் பீரப்பாவை தனது பாதுகாவலர்களுடன் சூழ்ந்து தாக்கினான். அவர்களை நந்தன் தனது கொம்புகளால் தூக்கி வீசினான்.பசவண்ணாவின் மகன் மீண்டும் ஒரு கூர்மையான  ஈட்டியை பீரப்பாவை நோக்கி வீசினான். அதன் தாக்குதலில் இருந்து பீரப்பா எளிதில் தப்பி, அந்த வீரனின் நெஞ்சில் கணிச்சியை இறக்கினான். போரின் முடிவில் பசவண்ணாவின் மகன் புழுதியில் உயிரற்றுக் கிடந்தான்.

அருகில் உள்ள முகட்டில் இருந்து, சிவன் இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு நடப்பவை அனைத்தும் ஒரு பனிமூட்டம் போல தோன்றியது. அது நிகழ்காலத்தில் நடக்கிறதா அல்லது கடந்த காலத்தின் தோற்ற மயக்கங்களா என்பது அவருக்கு தெளிவில்லாமல் இருந்தது. அவர் பீரப்பாவின் முகத்தில் தனது தந்தையின் சாயலைக் கண்டார். அவருக்கு தனது கடந்த கால நினைவுகள் மனதில் மின்னலின் ஒளியை போல  அவ்வப்போது மின்னியபடி காட்சியளித்தது.

 போர்க்களத்தில் நந்தனின் மீது சுழன்றாடியபடி பீரப்பா  நடத்திய வெறியாட்டம் முடிவுக்கு வந்தது. மெல்ல மெல்ல போர்க்களத்தை சூழ்ந்திருந்த  தூசி அடங்கியது.  துணைவன் போல தனக்கு உதவிய நந்தனை தடவிக் கொடுத்தபடி பீரப்பா நின்றிருந்தான். நந்தனுக்கு அந்தத் தொடுதல் சிவனை நினைவூட்டியது.

நந்தன்  சட்டென்று சிவனின் இருப்பிடம் நோக்கி விரைந்தான். பீரப்பாவினால் அன்று காளைவடிவில் வந்த உதவி எத்தகையது என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தக்காளை எதற்காக அங்கு வந்தது, எங்கு சென்று அது மறைந்தது என்பது எதுவுமே அவனுக்கு விளங்கவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்கும் அவனுக்கு தற்போது நேரம் இல்லை. ஏனெனில்   அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் சில மிச்சமிருந்தன.

 பீரப்பாவும் அவனது மக்களும் போர்க்களத்தில் வீழ்ந்த தங்களது வீரர்களை மண்ணில் புதைத்து அவர்கள் நினைவாக நடுக்கற்களை எழுப்பினர் . அவர்களது வீரம் அவர்களது குலத்தவர்களால் தலைமுறைகள் பல கடந்து நினைவு கூறப்படும்.

 போரின் இறுதியில் ஆடுகள் மீட்கப்பட்டன. இந்த வெற்றி தற்காலிகமானது என்பதை பீரப்பா அறிவான். எதிர் வரப்போகும் பெரும் புயல்களின் அச்சாரம் இந்த வெற்றி. கல்யாணபட்டிணத்தில் விவசாயக் குடி தலைவன் பசவண்ணா, தனது மகனின் இறப்பிற்கு பழி வாங்குவதாக சூளுரைத்தான்.  

கல்யாணப்பட்டணத்தின் தலைவன் தங்களைப் போலவே விவசாய குடியாக இருக்கும்  விதர்பாவுக்கு உதவி கோரி செய்தி அனுப்பியிருந்தான். பீரப்பாவின் ஆட்கள் இந்த செய்தியினை பீரப்பாவிற்கு தெரிவித்தனர். இதை அறிந்த அவன், தனித்து இந்த எதிர்ப்பினை சமாளிக்க முடியாது என்பதை அறிந்து, வடக்கே உஜ்ஜெயினில் இருக்கும்  அவனது அக்கா மஹாகாளியிடம் உதவி  வேண்டி ஒரு மலைமுகட்டின் உச்சியில் நின்று பறையின் மூலம் செய்தியை அறிவித்தான். அந்தப் அந்தப் பறை  அறிவித்த செய்தியினை  தூரத்திலிருந்த ஒவ்வொரு மலைவாழ் கூட்டத்தினரும் உஜ்ஜினிக்கு தங்களின் பறை ஓசையின் மூலம் கடத்திச் சென்றனர். அச் செய்தியை மகாகாளி பெற்றுக் கொண்டாள்.

அன்று இரவு பீரப்பாவும் அவனது மக்களும் ஒரு குழப்ப மன நிலையில்   இருந்தனர். 

 ஆழ்ந்த இரவிலும் தக்காண பீடபூமியின் வெப்பம் குறைந்த பாடில்லை.  அழலால் தூண்டப்பட்ட சிவனோ பித்தம்  தலைக்கேறி ஒரு மயக்க நிலையில் நகரத் தொடங்கினார்.  அங்கே நட்சத்திரங்களின் ஒளியின் கீழ் யாராலும் எளிதாக ஏற முடியாத குன்று ஒன்றின் உச்சியை அவர் அடைந்தார். தன்னிலை மறந்து ஒரு மோன நிலையில் சிவன் உக்கிரமாக ஆடத் துவங்கினார். உடுக்கை ஒலியும் அவர் பாறையில் அறைந்ததால் அந்தப் பாறை ஏற்படுத்திய வித்தியாசமான ரீங்கார ஒலியும் அந்த பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன.

உடுக்கை ஒலியும் டோலரைட் கற்களை தட்டும்பொழுது எழும் ரீங்கார ஒலிகளும் சீரிய இடைவெளியில் ஒலித்துக் கொண்டிருந்ததை பீரப்பாவும் அவனது மக்களும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். 

அந்த உடுக்கை ஒலியில் பிறந்த வார்த்தைகள் பீரப்பாவிற்கு பரிச்சயமான வார்த்தைகள். ஆனால் இந்தப் பறையின் இசை அவர்களது குலத்தின் பறையின் அதிர்வினை ஒத்தது அல்ல. இது ஏதோ ஒரு வகையில் மாறுபட்டிருந்தது.

 இது எதிரிகளின் தந்திரமா? உதவிக்கு வரும் யாரோ ஒருவரின் செய்தியா? அல்லது கடவுள்களின் குரலா?

 பீரப்பாவிற்கு எதுவுமே விளங்கவில்லை.

 இதற்கான விடைகளை நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்திருந்தன.



Saturday, October 11, 2025

பரம் பாண்டியனார் (ஆதியோகி: அத்தியாயம் 14)


வேந்தன் தனது நாட்டிற்கு அவசரமாகத் திரும்பினான் , ஆனால் அவனது மணக்கண்ணில், கல் இச்சி மரத்தின் கீழ் வீற்றிருந்த அழல் தாங்கிய உடலையும் கருணை மிகு கண்களையும் கொண்டிருந்த அந்த அந்த மனிதனின் உருவம் நிழலாடியபடி இருந்தது.

 வேந்தனின் நாடு முழுவதும்   பயங்கரத்தின் பாரத்தால் நடுங்கியது. குழந்தைகள் சுவாசிக்கத் திணறினர் . முதியவர்களின் இருமல் ஒளி சீரிய தாளகதியில் நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. வயது பேதமின்றி அனைவரும் அந்தக் கோர நோயின் பிடிக்கு மடிந்து கொண்டிருந்தனர். உயிருடன் இருப்பவர்களோ  தங்களை அந்த நோய் எப்பொழுது பீடிக்குமோ என்ற பயத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

 இந்த காட்சியை கண்டபடி வேந்தன் தனது மாளிகைக்கு திரும்பினான். அங்கே வேந்தனின் மகன் மெல்லிய மூச்சு விட்டபடி  அரை மயக்க நிலையில் கிடந்தான். மூப்பர்கள் அவன் இன்றைய நாளை தாண்ட மாட்டான் என கை விரித்து விட்டனர்.  வேந்தனுக்கு அன்றைய பொழுது சூனியமாக கழிந்தது. அவனால் செய்யக்கூடியது எதுவும் இல்லை. இறப்பினை அறிவிக்கும் பறையின் ஒலி அந்த நகர் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. 
 அந்தப் பறை இசையினூடாக மெல்லிய உடுக்கை ஒலி ஒன்று கேட்டது. வேந்தன் இதயம் படபடக்க ஓசை வந்த திசையை நோக்கிப் பார்த்தான். 

பிரகாசமான நிலவு ஒளியின் கீழ், காளையின் மீது அமர்ந்தபடி அந்த மனிதர் நகரத்தை நோக்கி  வந்தார். அவரது இடுப்பில் மூலிகைச் செடிகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன, மலை ஊற்று நீர் நிரம்பிய கொம்புக் குடுவையையும், பின் நாட்களில் விஷம் என அறியப்படும் விசித்திர உப்பு படிகங்களையும் அவர் கொண்டு வந்திருந்தார் .

 அவர் நேராக வேந்தனின் மாளிகைக்குள் நுழைந்தார் அவர் எதுவும் பேசவில்லை. கையை நீட்டி, பையனின் மணிக்கட்டில் விரல்களை வைத்து நாடியின் துடிப்பைப் படித்தார். பின்னர் அவர் தன் வேலையைத் தொடங்கினார்.

 அவர் இலைகளை உள்ளங்கைகளில் நசுக்கி, பசும்பால் மற்றும் சாம்பலுடன் கலந்து, அதோடு சில படிக உப்புக்களையும் கலந்தார். அந்தக் கலவையை ஐந்து உலோகங்களின் கலவையால் ஆன வெண்கலப் பாத்திரத்தில் ஊற்றி அதை மெதுவாக எரியும் நெருப்பில்  சிறிது நேரம் காட்டினார்.  

 பின்னர் அவர் அந்தக் கலவையை சூடான நீருடன் கலந்து சிறுவனுக்கு புகட்டினார்.  விடியற்காலையில் சிறுவனை ஆக்கிரமித்திருந்த  காய்ச்சல் விலகியது.

 இவ்வனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் சிவனை நோக்கி “ நீங்கள் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்து விட்டீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

"நான் நெருப்பை அணைக்க வில்லை" என்றார் சிவன்.

"பின்னர் அது எப்படி தணிந்தது?" என வேந்தன் ஆச்சரியத்துடன் வினவினான். 

“நான் அதற்கு வேறு ஒன்றை எரிக்கக் கொடுத்தேன்” என்றார் சிவன்.

“பையன்… அவன் உயிர் பிழைப்பானா?” வெந்தன் தன் மகனருகில் மண்டியிட்டு கேட்டான்.

சிவன் அமைதியாகத் தூங்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தார் . “அவன் உயிர் பிழைப்பது மட்டுமல்ல,” என்று மென்மையாகக் கூறினார்...“  இந்தக் காளையைப் போல் வீரமிக்கவனாக...  பாண்டியனாக இருப்பான்” என்று நந்தனை வருடியபடி கூறினார் 

“பாண்டியன் ” என்ற வார்த்தை காற்றில் தங்கியது. தமிழில் பாண்டி என்றால் காளை,வலிமை, அசைக்க முடியாத உறுதியின் அடையாளம்.

அன்று முதல், அந்தக் குழந்தை பாண்டியன் எனப் பெயரிடப்பட்டான். பின்நாட்களில் அவன் தன் இரு சகோதரர்களுடன்,  தமிழகத்தை ஒரு வலிமையான காலகட்டத்திற்கு வழிநடத்தினான். 

பின்னர் வந்த வாரங்களில், சிவனின் மருந்து கிராமத்தை குணப்படுத்தியது. இறப்புகள் நின்றன. மாசடைந்த நீரே காரணம் என சிவன் வேந்தனை எச்சரித்தார். மண்ணில் கோடுகள் வரைந்து, வடிகால் கால்வாய்கள் தோண்டவும், மண்  படுக்கைகள் அமைக்கவும் அவர்களுக்கு சிவன் கற்றுக் கொடுத்தார். அவையே பின்னாட்களில் கீழடி மற்றும் ஹரப்பாவில் எதிரொலித்த சுகாதார முறைகளில் முன்னோடி வடிவமாகும். 

 வேந்தன் சிவனிடம்  இரும்பு மற்றும் வெண்கலத்தைப் பற்றியும்  மூலிகைகளைப் பற்றியும் கேட்டான். சிவன் அவனுக்கு தாதுக்களைப் படிக்கவும், உலைகள் கட்டவும், உலோகங்களை உருக்கவும்  கற்றுக்கொடுத்தார்.

 வேந்தனின் கனிவும் வீரமும் மெச்சத்தக்க வகையில் இருந்ததை சிவன் கண்டு கொண்டார். தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும் ஒருங்கே அமைந்த மருத நிலத்தின் வேந்தன் இறைவனுக்கு சமமானவன் என்பதை சிவன் உணர்ந்து கொண்டார். 
 எனவே சிவன் வேந்தனுக்கு வீரத்தையும் அன்பையும் ஒரு அரசன் கைவிடலாகாது என்று போதித்தபடி இருந்தார்.

இந்த வார்த்தைகளை கேட்டுகொண்டிருந்த இளம் பாண்டியன் தனக்கும் அரசாட்சியைப் பற்றி கற்பிக்குமாறு சிவனிடம் அடிபணிந்து நின்றான். பாண்டியனிடம் சிவன் “எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதே வேந்தர்களின் முதல் கடன்,” என்று கூறி, மென்மையாக பையனின் தோளில் கை வைத்தார்.

அந்த வார்த்தைகள் பாண்டியனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன, அவனது வழித்தோன்றல்கள் பல தலைமுறைகளாக அந்த வார்த்தைகளை எப்போதும் அணையாத ஒரு தீபமென இதயத்தின் அருகில் வைத்துப் பாதுகாத்தனர்.

 அந்தப் பாண்டிய குல வழித்தோன்றல்களில் ஒருவர்  மலையத்வஜன். குருக்ஷேத்திரப் போரில் உண்மையின் பக்கம் நின்றவர் அவர். பாண்டவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்தவர். அவர் ஒரு மன்னராக மட்டுமல்ல, நீதியின் அடையாளமாகவும் நின்றார், உண்மையை நிலைநாட்ட பெருவீரர்களை எதிர்த்து அவர் போரிட்டார். 

 அவர் மறைந்தாலும் அந்த மஹாஅதிரதனின் மரபு அவரது மகள் மூலம் தொடர்ந்தது. அவள் மீன்  போன்ற ஒளிரும் கண்களுடைய  அழகிய இளவரசி.  இன்றுவரை, அவளது இருப்பு மதுரையில்  ஒவ்வொரு வீதியிலும் உணரப்படுகிறது. ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் அவள் தான் என்றும் மதுரையின் நிரந்தர அரசி. அந்தப் பாண்டிய  குல மன்னர்கள் தான் உலகின் நீண்ட நாட்கள் அரசாட்சி செய்த மன்னர் குழுவினர். அவர்கள் அனைவரும் ஆதி வேந்தனின் வழித்தோன்றல்கள்.  அவர்களை வழிநடத்தியது ஆதி சிவன்.

 சிவனின் இருப்பால் வேந்தனின் நகரம் செழிக்க தொடங்கியது.
சிவனைப் பின்தொடர்ந்த கால்நடைகள் வேந்தனது நாட்டில் தங்கியிருந்தன. அவை தங்கள் பாலை மக்களுக்கு வாரி வழங்கின, அவற்றின் எரு சிவப்பு மண்ணை உரமாக்கி, அவை மேய்ந்த இடங்களில் உயிரைக் கொண்டுவந்தன. ஒரு புதிய ஒத்திசைவு தொடங்கியது. ஒரு நாகரிகம் எழுந்தது.

  நகரத்தில் மகிழ்ச்சி பெருக ஆரம்பித்தது. ஆனால் சிவனின் உடல் நோயின் தாக்கத்தால் சீற்றம் கொள்ள  ஆரம்பித்தது. நோயின் தாக்கத்தை சிவன் வெண்பாஷாணத்தால் கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஆனால் வெண்பாஷாணம் வேறு ஒரு பக்க விளைவை கொண்டு வந்தது. அது மிகவும் வலி மிகுந்த ஒரு பக்க விளைவு.

 பிரையாபிசம் எனப்படும் வலி மிகுந்த உயிர் நாடி எழுச்சி அவ்வப்போது சிவனுக்கு நேர ஆரம்பித்தது. சிவன் அவ்வலியை அமைதியாகத் தாங்கினார்.  அவரால் மக்களோடு இயல்பாக இருக்க முடியவில்லை.
 இம் மக்களோடு அவருக்கான தொடர்பு முடிவதை அவர் அறிந்து கொண்டார். அவர் இவ்விடத்தை விட்டு புறப்படுவதற்கு தயாரானார். 

 அவருக்கும் தமிழர்களுக்கும் இடையேயான நேரடித் தொடர்பு முடிவடையும் நேரம் நெருங்கி விட்டது. அவர் தமிழர்களுக்கு போதித்த  உலோகவியல், வாழ்வு முறைகள், மருத்துவ முறைகள் அனைத்துமே அவர்களை வழிநடத்தும். பிற்காலத்தைய மனிதர்கள் சிவகளையில் இரும்புகளின் எச்சங்களை கண்டெடுக்கும் பொழுது ஆதித்தமிழனது  பெருமையை இந்த உலகம் உணரும். ஆனால் இவை அனைத்திற்கும்  அடித்தளம் வித்திட்ட சிவன் தற்பொழுது வடக்கு நோக்கி புறப்பட தயாரானார்.

ஒரு அமைதியான இரவில், அவர் நந்தனின் மீது ஏறி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மறைந்தார். அவர் செல்வதை யாரும் பார்க்கவில்லை. மண்ணில் குளம்புத் தடங்கள் மட்டுமே இருந்தன.

 அவர் விட்டுச் சென்ற போதனைகள் தமிழகத்தை வழி நடத்தியது. அவர் விட்டுச் சென்ற கால்நடைகள் நிலங்களை வளப்படுத்தியது. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் அகத்தியர் வரும் வரையிலும் நிரப்பப்படாமலேயே இருந்தது. உலகம் அவரை பல்வேறு வழிபாட்டு முறையில் தொழுதாலும் அவரது போதனை நீர்த்து போக வைக்கப்படடாலும் அகத்தியர் வழி வந்த சித்தர் சமூகம் அப்போதனைகளை... அவர் காட்டிய இறைவனை அடையும் வழிமுறைகளை... இறைவனாகவே ஆகும் பயிற்சிகள் அனைத்தையும் நீர்த்துப் போகாமல் காத்து வந்தனர்.  நட்ட கல்லில் அவரை செதுக்கி கருவறைக்குள்  அடைத்து தமிழர்களிடம் இருந்து அவரை பிரிக்க முயற்சிகள் பல நடந்தன. ஆனால் சித்தர் சமூகம் தமிழர்களுக்கு இறை எனப்படுவது என்ன என்பதை அடையாளம் காட்டிடத் தவறவில்லை.
--------

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

சிவவாக்கியர்

Tuesday, October 7, 2025

கடகம்

Gaia  hypothesis என்று ஒரு தியரி உள்ளது , இதன் படி உலகம் என்பது நம்மை போல ஒரு உயிரினம் . அது  தன்னை தானே சரி செய்துகொள்ளவும் , evolve ஆகவும் வல்லது .நமக்கு உறுப்புகள் உள்ளது போல அதற்கும் உள்ளது , தோலாக ஓசோன் ... நுரை ஈரலாக காடுகள் ....
பூமித்தாய் - GAIA mother
தற்போது   பூமித்தாய்க்கு  காய்ச்சல் ( புவி வெப்பமயமாதல் ) . இது போல காய்ச்சலும் குளிர் சுரமும் பூமிக்கு புதிதல்ல . நாம் தான் குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறோம் ( ஏனென்றால்  இதனால் பூமி அழியாது ஆனால் நாம் அழிய வாய்ப்பு உள்ளது - ராட்சத பல்லிகள் அழிந்ததை போலவே ) .
..........................................................
உடலில் கிருமிகள் ஊடுருவினால் , அவற்றின் வளர்ச்சியை உடல் வெப்பம் அதிகரிப்பதன் மூலம் கட்டுப்படுத்துவதற்காக காய்ச்சல் வருகிறது . காய்ச்சல் வந்தால் சரி செய்து கொள்ளலாம் , கான்செர் வந்தால் ? 

பூமித்தாய்க்கு புவி வேப்பமயமாகும் காய்ச்சல் நோயைவிட தற்போது ஒரு கொடிய கான்செர் நோய் வந்துள்ளது , காய்ச்சலுக்கு காரணமே அந்த புற்று நோய் தான் ...
..............................................................................................................
புற்று நோய் - பெயர்க்காரணம் : பிளான் பண்ணி கட்டப்பட்ட கட்டிடம் அல்ல ஈசலின் புற்று , ஈசலின் எண்ணிக்கைக்கு தக்கவாறு அனைத்து பக்கங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கும் .

அதே போல , புற்று நோயும் விதிகளை மீறி வளரும் கட்டிடம் போல விரிவடைத்து கொண்டே இருக்கும் .


 பக்கவாட்டில் விரிவடைவதாலும் ,பல்வேறு உறுப்புகளை ரத்தகுழாய்களின் மூலம் பயணாமாகி தாக்கவல்லதாலும் கான்செர் என்று அழைக்கப்பட்டது ( நண்டு பக்கவாட்டில் பயணிக்கும் ) .

..................................................



உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ்   மூலம்  வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .


 அப்படி நிரப்பி முடித்த பின்அவற்றின் உற்பத்தி  நின்று விடும். அப்படி நிற்காமல் வளர்ந்து கொண்டே இருந்தால் கட்டியாக மாறி விடும் , அதே கட்டி மற்ற இடங்களுக்கும் பரவக்கூடிய அளவுக்கு புற்றுநோயாக மாற்றமடையலாம்  ..


ஒரு சின்ன காயத்துக்கு  இவ்ளோ பில்ட்அப்பா என்று நீங்கள் கேட்கலாம் ....
உண்மை தான் , இவ்வாறு நிகழ சாத்தியங்கள் மிக குறைவு . அதை பற்றி பின்னால் காண்போம் .
..................................................................................

உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு சமன்பாடு உள்ளது . ஒரு காட்டில் நூறு மான்களுக்கு ஐந்து சிங்கங்கள் ( அதில் ஒரு ஆண் , நான்கு பெண்) என்பது சமன்பாடு .
இதுவே நூறு சிங்கம் , ஐந்து மான்கள் ( ஐந்துமே ஆண்கள் ) என்று இருந்தால் ?

மானுக்கு பதிலாக ஒட்டகசிவிங்கி - அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க 

இந்த இயற்கையின் சமன்பாட்டை மீறும் எதுவும் , தான் அழிவுப்பாதையை நோக்கி செல்வதோடு மட்டும்மல்லாமல் , பூமிக்கும் நோயாக விளங்கும் .
.........................................................

சிங்கங்கள் தேவைக்கு அதிகமாக மான்களை கொல்வதில்லை, யாராலும் வெல்ல முடியாவிட்டாலும் சிங்கங்கள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பல்கி பெருகுவதுமில்லை , மேலும் அவற்றின் வாழும்  இடத்தை ( territory  )விட்டு வேறு இடங்களை  ஆக்கிரமிப்பதும் இல்லை .

உலகின் இந்த சமன்பாட்டை இரு உயிர்கள் உடைத்துள்ளன , அதில் ஒன்று உயிரினமா என இன்னும் வகைப்படுத்த முடியாத வைரஸகள் , 


மற்றொன்று................ வேறயாரு ?நாமதான் .

....................................................................

மனிதர்கள் பல்கிப்பெருகுகின்றனர் . இயற்கையால் சமமாகப்பிரித்தளிக்கப்பட்டுள்ள வளங்களை சுரண்டுகின்றனர் . வளமும் இடமும் தீர்ந்தால் .... அடுத்த இடங்களுக்கு வளங்களை சுரண்ட செல்கின்றனர். இவை அனைத்தும் புற்று நோயின் குணங்கள் .

 

ஒரு ஒட்டுண்ணி என்பது, தான் சார்ந்து  இருக்கும் உயிரினத்தை முழுவதும் அழிய விடாது . ஏனென்றால் அதை survival லுக்கு அது சார்ந்திருக்கும் உயிரினத்தின் survival அவசியம் . ஆனால் புற்று நோயும் சரி , மனிதர்களும் சரி ஒட்டுண்ணிகள்  அல்ல  ,.மனிதர்கள்  உலகின் ஒரு அங்கம் , புற்று நோய் செல்கள் சிறிதே  மாற்றம் அடைந்த நமது சொந்த செல்கள் , ஆனால் இருவருமே தனது வாழ்வாதாரமான உடலை / பூமியை அழிவுப்பாதைக்கு இட்டு செல்கிறார்கள் 
............................................................................

இவ்வாறு மனிதனையும் புற்று நோயையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ?

மனிதன் பரிணாமத்தின் எச்சம்  ...

மேலும் , உலகிலேயே evolution வேகமாக நடக்கும் இடம் - புற்று நோய் செல்களில் தான் .
...........................
இவ்வாறு தொடர்பு படுத்தி ஆராய்வது எளிய புரிதலுக்கு வழிவகுக்கும் .


மேலும் 


புற்று நோயின் பரிணாமத்தையும் , பரிணாமத்தால்  வந்த புற்று நோயையும் பற்றி பின்வரும் பதிவுகளில் விவாதிக்கலாம் . புற்று நோய்க்கான ஆராய்ச்சி பரிணாமரீதியில் அனுகப்பட்டால் , அதை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் .

.............................................................................................................

இந்த தொடர் பதிவின் நோக்கம் ...

1.நாம் புற்று நோயை பற்றி அடிப்படைகளை புரிந்து கொள்வது , 
2.எவ்வாறு அதை தவிர்க்கலாம் என அறிவது ,
3.ஒரு கால்நடை மருத்துவனாக எனது துறையில் நான் அறிந்த புற்று நோயை பற்றிய சில வெளிச்சத்திற்கு வராத தகவல்களை வெளியிட்டு அது human medicine நண்பர்களை சென்றடைய முயலுவது ,
4.மேலும் சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ...
( eg . mutation rating பற்றி குறிப்பிட வில்லை?...).

.......................................................

தொடர்வோம் 











கண்டோபா (ஆதியோகி: அத்தியாயம் 18)

 வெப்பமிகு  உலர்ந்த காற்றினால் தக்காண பீடபூமி நெருப்பு உலையென  எரிந்து கொண்டிருந்தது.  சிவனால் முன்பு எரிக்கப்பட்ட  சாம்பல் குவியல்கள், இப்ப...