Monday, March 30, 2026

ஏர் முன்னது எருது - 11 - சிறுபொழுது

 இடம்:

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ஒரு அடர்ந்த வனம்.

அங்கே வேட்டையாடி சிறுத்தை ஒன்று பதுங்கியவாறு முன்னேறிக்கொண்டு இருக்கின்றது... இதைப் பற்றி ஏதுமறியா அப்பாவி மான்கள் அங்குள்ள செழுமையான புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன.

மான்கள் அறியும், அவை எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாடப் படலாம் என்று. இந்த பதற்றமான பொழுது  செரிப்பதற்கு  ஏற்ற நேரம் அல்ல என்பதால், அவை தாம் மேய்ந்த செழுமையான புற்களை செரிக்காமல் rumen  என்று அழைக்கப்படும் முன்வயிற்றில்(ஆசையூண் வயிற்றில்) சேகரித்து வைக்கின்றன.

இவற்றை நோக்கி மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சிறுத்தையின் உருவத்தை உற்று நோக்குங்களேன்அது ஒரு perfect வேட்டையாடி. ஓசையேதும் எழுப்பாமல் பதுங்கி நடப்பதற்கு ஏற்ற பாதம். இரையை குத்திக் கிழித்து உண்ணுவதற்கு ஏற்ற கூரிய பற்கள். மாமிசம் மட்டுமே உண்டு பழகியதால் கார்பை செரிப்பதற்கான amylase நொதி ஏதும் அற்ற உமிழ்நீர்

அது கடைசியாக இரையை உண்டது இரண்டு நாட்களுக்கு முன்பு. பசி அதன் துல்லியத்தை அதிகரிக்கின்றது. இதோ குறிவைத்த இரையை நோக்கி சிறுத்தை ஓடத் தொடங்குகிறது.

சிறுத்தையை கண்ட மான்களும் சிதறி ஓடத் தொடங்குகின்றன.

தாக்கும் சிறுத்தை ... தப்பியோடும் மான்... இவ்விரு உயிர்களின் உடலையும் தற்போது இயக்கிக் கொண்டிருப்பது Sympathetic Nervous System எனும் ஒரு தானியங்கி நரம்பு மண்டலம்

வெறி கொண்டு வேட்டையாடுதல் அல்லது  தலைதெறிக்க தப்பியோடல், மற்றும் இந்த பதட்டமான பொழுதின் இடைவெளியில் உணவை செரித்தல். இந்த இரண்டு செயல்கள் மட்டுமே காட்டின் பகலில் உயிரினங்களின் வாழ்வில் நடைபெறும்  முக்கியமான நிகழ்வாகும்.

அய்யய்யோ பகல் முழுதும் இப்படி ஒரு stressful வாழ்வு வாழ்ந்தால் அது BP வந்து செத்துப் போய்டுமே!!! அல்சர் வந்து அல்பாயுசில்  போய்டுமே!!! 

கவலைப்படாதீர்கள் நாம் பார்த்தது தராசின் ஒரு முனை மட்டும்தான் .

தராசின் மறுமுனை:

 
சிறுத்தையானது தான் கொன்ற இரையை இழுத்துக்கொண்டு தொல்லை ஏதுமற்ற ஒரு மரத்தின் மேல் அமர்ந்து அமைதியாக உண்ணத் தொடங்கும். அதேபோல் வேட்டையாடிகளின் தொல்லைகள் ஏதும் அற்ற அமைதியான இரவில் முன்வயிற்றில் சேகரித்து வைத்திருந்த புற்களை திரும்ப பொறுமையாக எடுத்து அசைபோட்டு செரிக்கத் தொடங்கும் மான்கள். அவை உண்ட உணவை சீராக செரிக்க Parasympathetic Nervous System அப்போது தலையெடுக்கத் தொடங்கும்

 
பகலுண்ணிகள் வாழ்வில் பகலிலே பதட்டமும் உண்டபின் உறக்கமுமாகதராசின் இரு முனைகளும் sympathetic மற்றும் Parasympathetic Nervous System  எனும் இரு வேறு தானியங்கி நரம்பு மண்டலத்தின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.


அது என்ன சார் சிம்பதட்டிக் மற்றும் பாராசிம்பதட்டிக் நரம்பு மண்டலங்கள்?”
 
பெண்களுக்குக் கரப்பான் பூச்சியும், ஆண்களுக்கு மனைவியும் முன்னே வந்து நிற்கும் பொழுது  உடம்பில் ஏற்படும்  மாற்றங்களுக்குக் காரணம் Sympathetic Nervous System எனும் தானியங்கி  நரம்பு மண்டலம்.

இதன் இயக்கத்தால்  மூச்சுக்குழாய் விரிவடைந்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  கிடைக்கிறது. இதனால் இதயம் அதிவேகமாக துடிக்கிறது, சுவாசம் பலமாகிறது. இந்த நேரத்தில், உடலில் உள்ள வலிகூட  பெரியதாகத் தெரியாது. இதனால்தான், காயம் ஏற்பட்டாலும்கூட தப்பி ஓடும் அவசரத்தில் வலி நமக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக நம்முடைய வலிமை அதிகரிக்கிறது. இந்நிலையில் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. சுருங்கக் கூறின் எதிர்க்க அல்லது தப்பி ஓட உடலை தயார் படுத்தும்  மாற்றங்களை ஏற்படுத்தும் நரம்பு மண்டலம் இது.

ஞாயிறு மதியம் பிரியாணி உண்டபின் உடல்கோரும் மாற்றங்கள் பாராசிம்பதட்டிக் nervous system த்தின் வேலை. அது ஜீரண உறுப்புகளுக்கு வேலை கொடுக்கும். உடல் உறக்கம்  நாடும்.

நீங்கள் கோயில் குரங்குகளை  பார்த்ததுண்டா

மற்ற குரங்குகளோடு போட்டிப்போட்டுக்கொண்டு விழுங்கும் வாழைப்பழங்களை தனது கன்னக் கதுப்புகளுக்குள் பதுக்கி வைத்துக் கொண்டு பிறகு ஓய்வான ஓரிடத்தில் அதை எதுக்களித்து பொறுமையாகச் செரிக்கத் தொடங்கும் அல்லவா

இந்தக் குரங்குகள் போலவே தோற்றம் கொண்ட ஒரு வகை சமூக விலங்குகள்... இதே வாழ்வு முறையை ஒட்டி; வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் போன்றவற்றை பகலில் செய்து, இரவு தன் சமூகத்தோடு அளவளாவி  பேருணவை உண்டு வந்தன. அவ்வகை விலங்குகள் இப்புவியில்  தற்போது பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. அவ்வகை விலங்குகளை உடனடியாக காண வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு கண்ணாடி தேவைப்படும்.

அந்த விலங்கின் உடலமைப்பை கண்ணாடியின் துணை கொண்டு உற்று நோக்குங்களேன் பார்க்கலாம்.

வாயிலே அரவைப் பற்கள். சின்னதாய் canine teeth. மாவுச் சத்தை செரிக்க வாயிலே ஒரு amylase நொதி... அது போதாதென்று சிறுகுடலிலும் amylase நொதிபழங்களை பறிக்கவும் கருவிகளை உபயோகிக்கவும் பயன்படும் திறன் மிக்க விரல்கள், குழுவாய் திட்டமிட்டு செயல்படத்தக்க திறன் மிக்க பெரிய மூளை. சேவிங் செய்யப்பட்ட சிம்பன்சி குரங்கைப் போன்ற உடலமைப்பு. சமைத்து உண்ணப்பழகியதால் எடுப்பான தாடை அமைப்பு குறைந்து அனுமார் வாயைப் போல அல்லாமல் மனித வாயமைப்பு.

அவை கறியைத்தான் தின்றன என்று ஒருசாராரும்பூராப் பயலும் விஜிடேரியன்என ஒருசாராரும் போர்க்கொடி பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

 “அவை எதைத்தான் தின்றன?”

எது கிடைத்ததோ அதைத் தின்றன.

நிரந்தர உணவு என்று ஒன்று கிட்டிய பின்னரே ஜீவகாருண்யம் தோன்றியது. நிலங்கள் அனைத்தும் தம் நல்லியல்பு தொலைத்து பாலை நிலமானால் நாய்தின்று மிஞ்சிய ஈமொய்க்கும் உணவாயினும் தின்றுதான் ஆகவேண்டும். பாலை நிலத்தில், சமுதாயத்தைக் கட்டமைக்கும் சட்டங்களும் தர்மங்களும் செல்லுபடியாகாது. அங்கே எது தேவையோ, அதுவே தர்மம்.

//‘ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு’// பாலை நிலம் வழி பயணம் செய்கையில் பசிமிகுதியால் செந்நாய் உண்டுகழித்த எச்சிலை உண்டிருக்கின்றனர் தமிழர்கள் என்கிறது இந்தப் பாடல்.

சிம்பன்சிக்களாய் செழிப்புமிகு குறிஞ்சி/முல்லை நிலத்திலே வாழ்ந்து வந்த நம் முன்னோர்களுக்கு முக்கிய உணவுபழங்கள்’. அதிலும் அத்தி அவற்றின் விருப்ப உணவு. அத்திமரமும் அதன் விதைப்பரவலுக்கு சிம்பன்சியையே தேர்ந்தெடுத்தன. மற்ற மரங்கள் கிளைகளின் நுனியில் பழங்களை வழங்கிய போது, அத்தி மரங்கள், குரங்குகள்  நுனிவரை வந்து விழுந்துவிடக் கூடாதென்று, தண்டிலேயே பழங்களை வழங்க ஆரம்பித்தன. சிம்பன்சிக்களும் சிரமமேதுமின்றி தண்டிலே பழுத்த பழங்களை எளிதில் பறித்து உண்டுவாழ ஆரம்பித்தன.

அத்தியைப் பிளந்தால் அத்தனையும் பூச்சி’, ‘அத்தி பூத்தார்ப் போலபோன்ற சொலவடைகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.

அத்தி பூவாமல் காய்க்கும் கோளி மரம். அதன் மலர்கள் கோளிக்குள் இருக்கும். உலகில் உள்ள 800க்கும் மேற்பட்ட அத்திப்பழ இனம் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் அத்திப்பழத்தை நம்பியிருக்கும் தனித்துவமான அத்திக்குளவி இனங்கள் உள்ளன. அவை தான் அதன் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பெண் குளவிகளால் மட்டுமே அத்திப் பழத்திற்குள் சென்று முட்டையிட முடியும். எனவே தான் அத்தியைப் பிளந்தால் அத்தனையும் பூச்சியாக உள்ளது. சிம்பன்சி குரங்குகளின் முக்கிய உணவு அத்தி. அந்தக் குரங்குகளின் மாமிசத்தேவையையும் அத்தி, பூச்சி வடிவில் பூர்த்தி செய்தன.

சிம்பன்சிக்களில் இருந்து மனிதனாய் பரிணாமம் அடைந்த பின்னர்; பழங்களைச் சேகரித்தும் விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்துவந்தனர் நம் முன்னோர்கள். தமது உணவை தானே உற்பத்தி செய்யும் விவசாயம் என்னும் அகிம்சை வழி வாழ்வு முறையை உருவாக்கிய பின்னர் தானியங்கள் மற்றும் பால் பொருட்களை செரிப்பதற்கேற்ற உடல் மாற்றத்தைப் அவர்கள் பெற ஆரம்பித்தனர். மரபணு மாற்றத்தால் பல விவசாயக்குடிகள் பாலை செரிக்கலாக்ட்டேஸ்மற்றும் தானியத்தை செரிக்கஅமைலேஸ்போன்ற நொதிகளைப் பெற ஆரம்பித்தனர். இதுல என்ன காமெடின்னா சுத்த அசைவ ஓநாய் வம்சாவளி வந்த நாய்களும், விவசாயக் குடிகளோடு பழகியதால் மாவுச்சத்தை செரிக்கத்தக்க அமைலேஸ் உற்பத்திக்கான மரபணு மாற்றத்தை பெற ஆரம்பித்தன.


கொஞ்சம் நாகரிகத்தில் முன்னேறிய முல்லைநில ஆயர்கள் வாழ்விலும் பகலில் பதட்டமும் இரவு பேருணவுக்குப்பின் உறக்கமாகவும் தான் இருந்துவந்தது. மருத நிலத்திலும் பகலில் பழங்கஞ்சி சிற்றுணவு உட்கொண்டு பகல் முழுதும் உழைப்பு... இரவு ஒரு பேருணவுக்குப்பின் நல்லதொரு உறக்கம் என  தனது வேட்டையாடி முன்னோர்களின் வாழ்வு முறையை ஒட்டியே தமது வாழ்வு முறையையும் கட்டமைத்துக் கொண்டு  எவ்வித தொல்லையுமின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் நாகரிக வாழ்வில் அடியெடுத்து வைத்த பின் நமது circadian rhythm  எனும் உயிர்க் கடிகாரம் கடிகாரம் பாதிப்படையத் தொடங்கியது

அது என்ன சார் circardian rhythm?”

நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப உங்கள் கைக்கடிகாரம் மணி காட்டுகிறது. நீங்கள் ஐரோப்பா சென்றால் அந்த நேரத்திற்கு ஏற்ப உங்கள்  கைக்கடிகாரத்தை எளிதாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது உடலின் கடிகாரம் அவ்வளவு லேசில் மாறி விடாது. அது பழைய மணிக்கணக்குப்படி தான் தூக்கம், உணவு எல்லாவற்றையும் எதிர்பார்க்கும்.

"என்னது உடலுக்குள் கடிகாரமா? அதற்கும் நமது தூக்கம் போன்ற அடிப்படை உடல் செயல்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? "

 சம்பந்தம் இருக்கிறது. உடலுக்குள் ஓடுகின்ற அந்தக் கடிகாரத்தின் துணையோடுதான் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நடக்கின்றன.

கடிகாரத்தைக் காணுவதற்கு தேவையான கண்கள் ஏதுமற்ற தூங்கு மூஞ்சி மரம், எப்படி மாலை வந்ததை அறிந்து தூங்கத் தொடங்குகிறது? அடுத்த நாள் காலை அல்லி அலர்வதைப் போல  எப்படி அதன் இலைகள் அழகாக விரியத் தொடங்குகிறது?

ஒரே இடத்தில் நகராமல் நிலையாக வீற்றிருக்கும் மரங்களில் கூட அந்தக் கடிகாரம் செயல்படுகிறதென்பதை இது உணர்த்துகிறது. அப்போ ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கும் அது அவசியமல்லவா?

பருவநிலை மாற்றத்திற்கேற்ப உயிரினங்களின் இனப்பெருக்கம் முதற்கொண்டு பல விஷயங்கள் நடப்பதை பெரும்பொழுது பற்றி காணும்போது பார்த்தோம். பருவநிலை மாற்றம் என்பது பூமி சூரியனை சுற்றிவரும் போது நிகழும் நிகழ்வு. 24 மணி நேரத்தைக் கொண்ட சிறுபொழுது என்பது பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் ஏற்படுவதுஎனவே நாம்  இருக்கும் இடத்திற்கும் அன்றைய பொழுதுக்கும் ஏற்பசமநிலையைப் பேண, பல வேலைகள் உடலுக்குள் ஒத்திசைந்து நடக்கின்றன.

உங்களுக்கு ஒரு கேள்வி?

நிம்மதியான  வாழ்வு என்பது எது?

"ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமாற்றமில்லா BP,  80ல் இருந்து 120 க்குள் சுகர், அறையில் 24 டிகிரி செல்சியஸ் மிதமான குளிர், இறைந்து பேசா இல்லாள், demontenisation செய்யா அரசு. "

ஆஹா இதுவல்லவோ காவிய வாழ்க்கை!!!

'எங்கள் வாழ்வில் எல்லா நாளும் கார்த்திகை' என்பது விக்ரமன் படங்களில் மட்டுமே சாத்தியம். ஆனால் வாழ்க்கை என்பது ஹரி இயக்கி கொண்டிருக்கும் படம் அல்லவா!

இரவு பகல்இன்பம் துன்பம்நன்மை தீமைகுளிர் வெயில்பஞ்சம் வசந்தம்இதுபோன்று மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. நேர்க்கோடு போல செல்வது வாழ்க்கை அல்ல.

இரவு, குறிஞ்சி நிலம் போல் குளிர்ந்து உறக்கம் வேண்டுகிறது. நண்பகல், பாலை நிலம் போல் சுடுகிறது.   பாலைப் பகலின் படபடப்பை இரவின் குறிஞ்சி தணிக்கிறது. ஒரு நாள் என்பது இவ்வாறு இரவு பகல் என இருவேறு சூழல் கொண்டு இயங்குகிறது. உலகின் அனைத்து உயிரினங்களும் இந்த இருவேறு சூழலுக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை கட்டமைத்துக் கொண்டன.

காட்டிலே வேட்டையாடி விலங்கும் சரி, வேட்டையாடப்படும் விலங்கும் சரி, அவற்றின் வாழ்விலே பகலிலே பதட்டமும் உண்டபின் உறக்கமுமாக   தராசின் இரு முனைகளும் sympathetic மற்றும் Parasympathetic Nervous System  எனும் இரு வேறு தானியங்கி உடலியக்கக் நரம்பு மண்டலத்தின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. பகலின் பதட்டம் எனும் தராசின் ஒரு தட்டு சாய்வை  இரவின் உறக்கம் மறுபுறம் சாய்ந்து  சமன் செய்கிறது.  இதுபோல இன்சுலின் குளுக்கோகான், லெப்ட்டின் க்ரெலின், என உணவுக்கும் பசிக்கும் இடையேயான போராட்டம் நாம் வாழும் மட்டும் தொடர்கிறது. வளர்சிதை மற்றும் தேய்சிதை மாற்றம் தம் சமநிலையை இழத்தல் நோய்க்கு வழிவகுக்கிறது.

படம்: ஸ்ட்ரெசினால் அதிகரிக்கும் தேய்சிதை ஹார்மோன்கள் ஏற்படுத்தும் பாதிப்பை விளக்கும் படம்.


வேட்டையாடியாக உலாவிய மனிதனுக்கு பட்டு மெத்தை உறக்கம்பஞ்சனையிலேயே பெட் காபி போன்ற எதுவும் பழக்கமில்லை. ஒவ்வொரு விடியலும் அவனுக்கு புதுவாழ்வு.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்புஎனும் குறளுக்கு இணங்க ஒவ்வொரு புது நாளும் அவனுக்கு பிழைப்பிற்கான ஓட்டத்தோடு தான் தொடங்கியது. அவனது விழிப்பு; கார்டிசால் என்னும் என்னும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனோடு தான் நிகழ்கிறது

ஒரு ஆரோக்கிய வேட்டையாடி, பகலிலே வேட்டையும் ஓட்டமுமாய் துடிப்புடன் இருப்பான்இரவிலே சேகரித்த உணவை சமூகமாய் கூடி உண்டு நிம்மதியாக உறங்குவான். இது அவன் வாழ்வில் நடைபெற்ற அன்றாட சுழற்சி.

அவனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இந்த சுழற்சிதான் நகர்த்தி வந்துள்ளது. அவனது சந்ததிகளும் இந்த சுழற்சியை ஒட்டியே வாழ்ந்து வந்தனர். இச்சுழற்சிக்கு இசைந்து தான் அவனதுஅதாவது நமது உடல் பரிணமித்துள்ளது.

உங்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செல்லும் மற்றும் உங்களோடே ஒத்திசைந்து வாழ்ந்து  வரும் குடல்வாழ் நுண்ணுயிரிகள் உட்பட, உங்கள் உடல் சார்ந்த அனைத்தும் இச்சுழற்சியை ஒட்டியே வாழப்பழகியவை.

உங்கள் உடலின் செரிமானம், நோய் எதிர்ப்பாற்றல், புதிய செல்களின் உற்பத்தி, பழைய செல்களின் மரணம் அனைத்தும் இச்சுழற்சியின் தொடர்பிலே தான் செயலாற்றி வருகின்றன. பகலிலே பலவானாய் இருக்கவும், இரவிலே உண்ட மயக்கத்தில் உறங்கவும் prewire செய்யப்பட்ட உயிர் கடிகாரத்தின் ஆதரவில் தான் உடல் இயக்கம் நடந்து வருகிறது. இரவு உணவிற்குப் பிறகு நள்ளிரவு சமயம் மூன்றாம் கண்ணின் உதவியுடன்மெலட்டோனின்சுரக்கிறது. இந்த மெலடோனின் தான் சந்ததிப்பெருக்கத்திற்கான ஆதார ஹார்மோன். மேலும் மெலடோனின் தான் பகலின் படபடப்பினால் ஏற்பட்ட டேமேஜை சரி செய்யும் முக்கிய ஆன்ட்டிஆக்சிடன்ட். இது ஒழுங்காக இருந்தால் உங்களை நரை திரை மூப்பு அண்டாது. இதை உற்பத்தி செய்வது பினியல் சுரப்பியாகும்.

மெலடோனின் ஒரு பழைமையான ஹார்மோன். இதன் முன்வடிவம் ஒருசெல் உயிரிகளிலேயே காணப்பட்டது. ஆன்ட்டிஆக்சிடன்ட்டாக இது அவற்றிற்கு உதவியிருந்திருக்கிறது. பின்னர் படிப்படியாக தாவரங்கள் உள்ளடக்கிய அனைத்து உயிரிகள், தமது சூழலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்துகொள்ள இது உதவி இருந்திருக்கிறது.

நம்மை இந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைய வைப்பது மட்டும் மூன்றாம் கண்ணாகிய பினியல் சுரப்பியின் வேலை அல்லநமது உடல்நலம் சரியாக இருப்பதற்கும் பினியல் சுரப்பியின் உதவி மிக அவசியம். ஆனால் உறுப்புகளிலேயே விரைவாக கால்சியம் படிவினால் கெட்டிப்படுவது பினியல் சுரப்பியில் அதிகமாக நிகழ்கிறது.

வயதாகும் இப்போது பினியல் சுரப்பியானது கால்சியம்படிவால் கெட்டிப்பட்டு விடுகிறது. காந்தப்புலன் கொண்டு இதை  தவிர்க்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.

காந்தப்புலனை அறிவதில் பினியலின் பங்கைப் பற்றி நாம் அறிவோம். அது இயற்கை காந்தப்புலன். ஆனால்செயற்கை காந்தப்புலன் நாகரிக நகர வாழ்வில்  நம்மை இப்பொழுது அதிகம் சூழ்ந்துள்ளது. extremely low-frequency magnetic fields (ELF-EMF) (1 to 300 Hz) நமக்கு புற்றுநோய் ஏற்படுத்த வல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் புற்று நோய்களான மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு மெலடோனின் குறைபாடும் ஒரு காரணம். புற்றுநோயை தடுப்பதில் மெலடோனின் பங்கு அதிகம்.

சுற்றியிருக்கும் சூழலை சார்ந்து வாழவே ஒவ்வொரு உயிரினமும் பரிணமித்துள்ளது. அச்சூழலின் மாற்றம் உணர்ந்து உயிரினங்களின் உடல் இயக்கத்தின் சமநிலையைப் பேண, உள்ளே இந்த உயிர்க் கடிகாரம் எப்பொழுதும் சுழன்று வருகிறது. அறிவியல் கூறும் நல்லுலகம் அந்த  கடிகாரத்தை சர்காடியன் சுருதிலயம் என்று அழைக்கிறது.

காலைக் கதிரவனின் ஒளி கண்களின்  வழி ஊடுருவும்போது ஆரம்பித்துஇரவு மெலட்டோனின் மடியில் உறங்க வைப்பது என நம் உடலை உடலை இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது இக்கடிகாரம்.

இதுதாங்க அந்த கடிகாரம்!!!

இந்தக் கடிகாரம் ஓடுவதற்கான தூண்டுதல் சூரிய ஒளி. சூரியனை நோக்கும் சூரியகாந்தி போல் நம் உடலும் சூரிய ஒளியால் இயக்கப்பட்டு வருகிறது.

இக்கடிகாரத்தின் சுழற்சி உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் முன்னோக்கி சுழற்ற அந்நாள் ஆரோக்கியமாக நகர்கிறது.

நமது தாத்தா பாட்டி காலம்வரை, பகலிலே விவசாயம், பசிக்கு நீராகாரம், இரவு உணவிற்குப் பின் உறக்கம் என சக்கரத்தின் சுழற்சிக்கு எந்தத்  தடையுமின்றி இருந்து வந்தது.

ஆனால் மாறி வரும் நம் நாகரிக வாழ்க்கை இந்த சுழற்சியிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.

மாலைப்பொழுது முல்லை போன்றது, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கொண்ட அது உங்களிடம் நம்மிடம் கேட்பது வீட்டில் இருக்க வேண்டும் என்பதை.

குளிர் கொண்ட இரவு குறிஞ்சியை போன்றது. குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து உறங்க வேண்டிய நேரம் அது, வெளியில் சென்று வேலை செய்ய வேண்டிய நேரம் அல்ல. வெள்ளைக்காரர்களுக்கு ஊழியம் செய்ய, அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில்  நகரத்தில் இருக்கும் மாந்தர்கள் விழித்திருக்க வேண்டியுள்ளதுஇரவு வெளிச்சத்தில் முட்டையிடும் கோழிகளில் ஹார்மோன் மாற்றம் நேர்வது போல  நகரத்தில் இருக்கும் மாந்தர்கள் உடலும் ஹார்மோன் மாற்றம் காணத் துவங்குகிறது.

வெயில் கொண்ட உச்சி நேரம் பாலை போன்றது. அப்பொழுது நிகழ்த்தப்படும் தூக்கம் உடல் கடிகாரத்தையும் அது சார்ந்து சுரக்கும் ஹார்மோன்களையும் திகைப்படைய வைக்கிறது. இதன் காரணமாய் திசைமாறிய சக்கரத்தின் சுழற்சி  நகரத்தில் இருக்கும் மாந்தர்கள் உடல் நலத்தை பின்னோக்கி இழுக்கின்றது.

ஒரு நிரந்தர உணவைத் தேடி மேற்கொள்ளப்பட்டு வந்த மனிதர்களின் பெருநகர்வு வெவ்வேறு இடங்களுக்கு அவர்களை இட்டுச் சென்றது. முதற்பொருளாகிய  நிலம் என்னும் தோசை கல்லில், மற்றுமொரு முதற்பொருளாகிய பொழுதும் எனும் மிதமான சூட்டில், பெரிய ரவுண்டாகவும் இல்லாமல் சிறிய ரவுண்டாகவும் இல்லாமல், பொதுவான சைஸில் கேரட் சீவல்களை தூவி, இட்லிப் பொடியை மழை சாரல் போல் தூவி, நெய் ஊற்றி, பொன்னிறமாக சுடப்பட்ட தோசையை பல்வேறு கருப்பொருட்கள் துணையுடன் சமைத்து இன்பமாய் உண்டு வாழவே ஆதி மனிதர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் அவர்கள் புகுந்த நிலத்திற்கும் பொழுதிற்கும் ஏற்ப விரும்பா சுவையிலும் தரத்திலுமேஅண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்என்ற வகையில் அந்த நிலத்தில் கடும்பிரயாசத்தின் பேரிலேயே உணவினைக் கிடைக்கப்பெற்றனர். அது அவர்களது உரிப்பொருள் ஒழுக்கத்தை பாதித்து ஒழுக்கம் தவற வைத்து சண்டையிடச் செய்தது. இதற்காக விரும்பும் சுவையில் உடலுக்கும் மனதிற்கும் ஏற்ற நல்ல தோசையை வீட்டிலேயே சமைக்க எண்ணி மருத நிலத்தை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். அது அவர்களை வாழ்வாங்கு வாழ வைத்தது.

நிரந்தர அறுசுவை உணவு மருதநிலத்தில் கிட்டியது. உடல் உழைப்போடு கூடிய அறுசுவை உணவு உடல்நலம் பேணியது. ஆனால் தற்பொழுது உணவே விஷமாகியது,

ஔவையாரும் உணவு குறித்துச் சொல்லும்போதுமீதூண் விரும்பேல்' என்றார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.’ என்றார் வள்ளுவர்.

ஆனால் இப்போது ஜீரணமண்டலம் அடிமை போல வேலை வாங்கப்படுகிறது. அதற்கு ஓய்வே தரப்படுவதில்லை.

ஐவகை நில மக்கள் பகிர்ந்து கொண்ட அறுசுவை உணவுகள் அனைத்தும் சூழலில் இருந்த அனைத்து கருப்பொருட்கள் உதவியுடனே பெறப்பட்டன. ஆனால் கருப்பொருட்களுடனான நமது தொடர்பு கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்டது.

மேலும் முதற்பொருளாகிய  நிலமானது நிலையானது. மற்றுமொரு முதற்பொருளாகிய பொழுது - மாறக்கூடியது

நிலம் தவிர்த்த மற்ற பூதங்களாகிய நீர், நெருப்பு மற்றும் காற்று  பொழுதுக்கு ஏற்ப மாற்றம் கொள்வன என்பதை நாம் அறிவோம்.

பொழுதுக்கேற்ப மாறும் தன்மைகொண்ட அந்த மாற்றத்தினை நவீன மனிதன் விரும்பவில்லை. அதற்காக அவனுக்கான ஒரு திணையை அவன் உருவாக்கத் தலைப்பட்டான்.

அந்தத்திணைநகரத்திணை

அதன் முதற்பொருள்:

நிலம்: அடுக்குமாடி குடியிருப்பு

பொழுது : வருடம் முழுவதும் 24 மணி நேரமும் அறையின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்

கருப்பொருட்கள்:

தெய்வம்: பணம்

பறவை: காகம்

விலங்கு: காவல் நாய் , பூனை

ஊர்: மாநகரம்

நீர்: மினரல் வாட்டர் , கோக், ஆல்ககால்

மலர்: வாடாத செயற்கை மலர்கள்

மரம்: ஏதுமில்லை

உணவு: இரண்டு நிமிட நூடுல்ஸ், பிரட்தேனீர்

பறை: ட்ரம் செட்

யாழ்: கிட்டார்

பண்: கூச்சலிசை

தொழில்: பெரு வியாபாரம்

உயர்ந்தோர்: பணம் உள்ளவர்கள்

தாழ்ந்தோர்: பணம் இல்லாதவர்கள்

 உரிப்பொருள்: உண்மை அன்பைத் தேடலும் தேடல் நிமித்தமும்.

இந்த  நகரத்தில் இருக்கும் மாந்தர்களின் வாழ்வு, பலலட்சம் வருடங்களாக நமக்குள் சுழன்று வரும் கடிகாரத்தின் சுருதிலயத்திற்கு எதிராக உள்ளது.

பகல் புலர்ந்ததை  அறிவிக்க வரும் சூரியக்  கதிர்களை  திரைச்சீலைகள் தடுத்துவிடுகின்றன.

வெப்பத்தின் மாற்றத்தால் பகலை உணர்ந்துகொள்ளும் சருமமோ ஏசியின் குளிர்ச்சியில் மயங்கி கிடக்கிறது. வெளிச்சத்தை உணரும் விழித்திரையை கூலர் கண்ணாடிகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. சருமத்தை வெயில் அண்டா பூச்சுக்கள் மறைத்துள்ளன.

கைப்பேசிகளின் கலர் ஒளிகள் நகரத்திணை மாந்தர்களுக்கு இரவின் இருளை  விலக்கி வைக்கின்றன. அதனால் ஆதார ஹார்மோனாகிய மெலடோனின் சுரக்க மறுக்கிறது.

இந்த இரவின் இருளை விலக்கும் ஒளி நம்மை மட்டுமல்ல, பல உயிரினங்களையும் பாதிக்கிறது.

உலகில் 30% முதுகெலும்பிகளும், 60% முதுகெலும்பற்ற உயிரினங்களும் இரவு நேர விலங்குகளாகும். இவை ஒளி மாசுபாட்டினால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி விட்டன.

 இரவு நேர பாலூட்டிகளான வவ்வால்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. ஆனால் அவற்றின் முக்கிய உணவான பூச்சிகள் அனைத்தும் இரவு நேர செயற்கை வெளிச்சத்தை நோக்கியே கவர்ந்திழுக்கப்படுகின்றன. எனவே பல இடங்களில் வௌவால்கள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

கங்காருவைப் போன்ற பையுள்ள பாலூட்டியான வல்லபிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிக ஒளியுள்ள இடத்தில் வாழும் வல்லபிகள் குறை பிரசவத்தில் குட்டிகளை ஈனுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வலசை போகும் பறவைகள் நிலவொளியையும், நட்சத்திரங்களின் வெளிச்சத்தைமே அடையாளமாக வைத்து செல்கின்றன. கடற்கரை மணலில் புதிதாக பொறிக்கும் ஆமைக்குஞ்சுகள் நிலா வெளிச்சத்தை பார்த்து தான் கடலை நோக்கி நகர்கின்றன. ஆனால் இன்றோ கடற்கரையை அழகூட்டுவதற்காக நாம் வைத்துள்ள செயற்கை ஒளி விளக்குகளை, நிலவொளி என்றெண்ணி கடலுக்கு பதிலாக கடற்கரையை நோக்கி ஊர்ந்து சென்று, சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஆமைக்குஞ்சுகள் இறக்கும் பரிதாபமும் பல இடங்களில் நடக்கிறது. உலக அளவில் பூச்சிகளின் எண்ணிக்கை குறையவும் ஒளி மாசுபாடு காரணமாக அமைந்துள்ளது. பூச்சியினங்களில் 49.4% இரவு நேரத்தில் வாழ்பவை. இவற்றில் 77.8% வண்ணத்துப்பூச்சியினங்களும், 60% வண்டினங்களும் அடங்கும். ஒளி மாசுபாடு இவை அனைத்தின் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம்.

இரவு என்பது வெளிச்சம் பாய்ச்சும் செல்பேசிகள் ஒளியால் நிரப்பப்பட்டு வருகிறது. தலைவனும் தலைவியும் நேரிலே பார்த்துக்கொள்ளாமல் செபேசிகளில் மாய உருவங்களாய் சஞ்சரித்து சந்திக்கின்றனர்.

தற்போதிருக்கும் ஒரு தலைவனைப்பற்றி சங்ககால தலைவி பாடினால் அப்பாடல் பின்வருமாறு தான் இருந்திருக்கும்.

ஃபோன் உடைய செவியன்

பைக் மீதே ஏறியோர்

கருங் கூலிங்கிளாஸ் கண் சூடி

மணமுடைய டால்கம் பொடி பூசி

என் உள்ளம் கவர் கள்வன்.

 

இதுதான் நகரத்திணை தலைவனின் தற்போதைய தோற்றம்.

தலைவன் தலைவியின் தோற்றம் செல்பேசிகளால் மாய பிம்பங்களாய் மாற்றிக் காட்டப்படுகின்றன.

மாய பிம்பங்களாய் தோற்ற மாறுதல் நிகழ்த்தப்படுவது  ஒருபுறம் இருக்கட்டும்...  இதுபோலல்லாமல், மனிதனின் உண்மையான  உருவமைப்பிலும் திணைகளின் தாக்கத்தால்  மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன .

ஒருசூழலில் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால்  அச்சூழலுக்கு ஏற்ப அவர்கள் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும்.

இதன் காரணமாகத்தான் பல்வகை நிலமக்கள் பல்வேறு நிறம் மற்றும் குணங்களுடன் குட்டையாக கருப்பாக வெளுப்பாக பல வகைகளில் உள்ளார்கள்.

இந்தக் கூற்றுக்கு உதாரணமாக கூர்க்காக்கள் ஷெர்பாக்கள் போன்றவர்களைக் குறிப்பிடலாம்இவர்கள் பாரம்பரியமாக இமயத்தின் மலைப்பகுதிகளிலிருந்து வந்தவர்கள், குறைவான ஆக்ஸிஜன் மற்றும் கடினமான நிலப்பரப்பு போன்ற சவால்கள் இது போன்ற இடங்களில் உள்ளன,

அதிக உயரத்தில் வாழும் இவர்கள் குறைந்த உயரத்தோடு காணப்படுவார்கள். இந்த உயரம் உடல் வெப்பத்தை பாதுகாப்பதில் அவர்களுக்குத் துணை புரிகிறது.

படம்: பனியிலும் வெயிலிலும் வசிப்பவர்களின் உருவத்தோற்றம்.

எவரெஸ்டில் முதல் முதலில் ஏறியவர் என்று எட்மன்ட் ஹிலாரியைச் சொல்வார்கள். கூடவே அவருடைய லக்கேஜைத் தூக்கிக் கொண்டு வழிகாட்டியாகச் சென்றவர் பழங்குடியான ஷெர்ப்பா இனத்தைச் சேர்ந்தவர். அவருக்கே அச்சாதனையின் பெருமை சேரும்.

கருப்பு ஆப்பிரிக்கர்களின்  வழி வந்த ஐரோப்பியர்கள் எப்படி வெளுப்பாகவும் நீல நிற கண்களை கொண்டவர்களாகவும் மாறினர் என்பது ஒரு பெரிய கேள்வி. ஐரோப்பிய நிலம் புகுந்த ஆதி ஆப்பிரிக்கர்களின் புதைப்படிவ எச்சத்தின் மரபணு வழியே ஆராய்கையில் அவர்கள் நீலக் கண்களை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த மரபணுடன் தொடர்புடைய நெருங்கிய வெள்ளை இன வழித்தோன்றல் ஒருவர் இந்த புதை படிவங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து மிக அருகில் தற்போது வசித்து வருவது அறியப்பட்டது.

படம்: நீலக்கண் மூதாதையரும் அவரது வாரிசும்.


   ஆப்பிரிக்க கருப்பு மக்களில் கூட அவ்வப்போது ஆல்பினோக்கள் பிறப்பதுண்டு.   வெள்ளைத் தோல் கொண்டவர்களால், பனி நிலத்தில் தான் எளிதில் வாழ முடியுமாதலால், அந்த ஜீன் வழி வழியாக கடத்தப்படலாம்.

அதே போல் உணவு பழக்கவழக்கங்களும் திணை எனப்படும் நிலத்தைப் பொருத்து வேறுபடும். குளிர் பகுதியில் இருப்பவர்கள் கொழுப்பு மிக்க உணவை உண்ண வேண்டும். வெட்டவெளிப் பகுதியில் இருப்பவர்கள் நீர்ச்சத்து மிகுந்த அந்தப் பிரதேசத்திற்கான நுங்கு வெள்ளரி போன்ற இயற்கை தரும் பண்டங்களை உண்ண வேண்டும். இவற்றை முறையாக பின்பற்றாமல் நரத்திணை துரித உணவுகளை உண்ணும் பொழுது ஹார்மோன்கள் மாற்றத்தால் உடல்நலன் பாதிப்புக்கு உள்ளாக ஆரம்பிக்கும்.

விளைவு, ஹார்மோன் சுரப்பு பாதிப்பதால் குழந்தைப்பேறு தொடங்கி உடல்  பருமன் முதலிய அனைத்து வியாதிகளும் சூழத் தொடங்குகிறது.

 உடல்பருமன் தவிர்க்க, ஜிம்மிற்கு சென்று புரதப்பவுடர் அருந்தி, ஊட்டச்சத்து மாத்திரைகள் விழுங்கி, உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க நீங்கள் பகீரதப் பிரயத்தனம் எடுக்கலாம். அட்டவணை அளவீடுகள் கொண்டு வளர்க்கப்படும் பண்ணைக் காளைகள் அர்னால்டு போல தோற்றமளிக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் நிலத்தையும் பொழுதையும் சூழலையும் சார்ந்து வாழும் காட்டுமாடுகளுக்கு ஈடாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

படம்: பண்ணைக் காளைகள் & காட்டுமாடுகள் (Gaur)


இந்தக்காட்டு மாடுகள் முதற்பொருளான நிலத்தையும் பொழுதையும் மட்டுமல்ல அதற்கான உணவையும் கொண்டே இத்தேகத்தினை கட்டமைத்துள்ளன 

அந்த உணவு என்பது சூழலில் இருக்கும் கருப்பொருட்களால் சமைந்த மற்றுமொரு கருப்பொருளாகும்.

//காலை மலமொடு கடும்பகல் பசி நிசி வேளை நித்திரை பிழைத்தும்// எனும் பாடல் நமது அனுதின உயிர்வாழ்விற்கான அல்லலைக் கூறுகிறது.

ஒவ்வொரு நாளின் நோக்கமும் பசி எனும் நோயைத் தணிப்பதற்கான அல்லலாகவே இருந்தது எனக்கண்டோம்.

 அந்தப் பசியை ஆதித்தமிழர்கள்  எவ்வாறு கையாண்டனர்?

தமிழர்கள் பசி என்பதை நோயாகக் கருதினர். அதைத் தணித்தவர்கள் பசிப்பிணி மருத்துவர்கள் என்றும் உயிர் கொடுத்தவர்கள் என்றும் போற்றப்பட்டனர். அதே போல் உடலைத்தாக்கும் நோய்களையும் உணவினைக் கொண்டே சரிசெய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தனர். அந்த உயிர்கொடுக்கும் உணவை நிரந்தரமாகப் பெறுவதற்கான நீடித்திருக்கத்தக்க ஒரே வழியாக இருந்தது மருதத்திணை. அனைத்து திணைகளிலுமே நமக்கு உணவினை வழங்குவதில் நிலமும் பொழுதும் பெரும் பங்கு வகித்தன

அந்த உணவை நேரடியாகப் பெருவதை விட பல்லுயிர் கூட்டமைப்பின் வழியாகப் பெருவதாலேயே நமது நலம் மேம்படும்

அதற்கு நிலத்தில் இருந்த கருப்பொருட்கள் தான்  நமக்கு துணைபுரிந்தன.   

ஏர் முன்னது எருது - 11 - சிறுபொழுது

  இடம் : மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ஒரு அடர்ந்த வனம் . அங்கே வேட்டையாடி சிறுத்தை ஒன்று பதுங்கியவாறு முன்னேறிக்கொண்டு இ...