நஞ்சை நிலம்
இடம்: புற்கள் நிறைந்த சகதி நிலம்,
இந்த நிலத்தை உற்று கவனியுங்களேன்….
இங்கே ஒரு
புல் உண்ணும்
பூச்சி இருக்கிறதே!
இதோ அந்த பூச்சியை உண்ணும் ஒரு தவளை.
அவற்றை நாடும் பாம்பு.
பாம்பு நோக்கும் மயில்.
இதே நிலத்தில்; நமக்கேற்ற; நாம் விரும்பிய தானியம் நல்கும் புல் வகைகளை வளர்த்தால், அவற்றை அறுவடை செய்து, அந்த நிலத்தில் நிரந்தரமாய் குடியேறி வாழ்வாங்கு வாழலாம் அல்லவா?
அந்த நிலத்தில் முன்பு இருந்தது சமன்பாடு பேணுகின்ற பல்வேறு புல் வகைகள் மற்றும் தாவரங்களின் கலவையான இருப்பு. ஆனால் இப்பொழுது நிலத்தில் மக்கள் பயிர் செய்ய உத்தேசித்திருப்பது ஒரே வகையான தாவரம்.
'அத்தனை அட்டைகளும் ஜோக்கராய் இருந்தால் ஆட்டத்தில் ஜெயிப்பது எப்படி? '
ஒரே வகையான தாவரங்கள் ஒரே வகையான சத்துக்களை நிலத்தில் இருந்து பெறுபவை. மேலும் ஒரே வகையான பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகுபவை. அவற்றின் நீர்த் தேவையும் ஒன்று போலவே இருக்கும்.
ஒரு நிலத்தில் சமன்பாட்டை மீறும் வண்ணம் எண்ணிக்கையில் பெருகத் தொடங்கிய ஒரே வகையான தாவரம், மற்றும் அதை சார்ந்த மனிதர்களின் எண்ணிக்கைப் பெருக்கம், போன்றவற்றைச் சமாளிக்க இயற்கை என்ன செய்யும்?
தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளையும்; மனிதர்களைத் தாக்கும் கொசுக்களையும்; சாணத்தை நோக்கி ஈக்களையும், கூடவே கொள்ளை நோய்களையும் அனுப்பும்.
"அப்பொழுது மனிதர்களும் தாவரங்களும் மடியத் தான் வேண்டுமா?"
தேவையில்லை... தீமை செய்யும் பூச்சிகளையும்; கொசுக்களையும்; அவற்றின் லார்வாக்களையும் உண்ணும் சிலந்திகள், தட்டான்கள் போன்றவற்றின் பெருக்கத்தை ஊக்குவித்தால் போதுமே?
"அவற்றின் எண்ணிக்கையை யார் கட்டுப்படுத்துவது?"
தவளைகளை வளர அனுமதிக்க வேண்டியதுதான். அவற்றை உண்ணும் பாம்பு அதை உண்ணும் மயில், short toed snake eagle போன்றவைகள் பெருக வழி செய்தால் சமநிலையில் சிக்கல் ஏதும் ஏற்பட்டு விடுமா என்ன?
"பாம்பும், பாம்பு உண்ணும் மயில்களும், மயில்களின் முட்டைகளை உண்ணும் நரிகளும், மனித நடமாட்டம் நிறைந்த ஊருக்குள்ளே எப்படி வாழும்?"
அதற்கும் பழந்தமிழர்கள் அற்புத உபாயத்தைக் கண்டடைந்தனர். (அதைப் பற்றி பின்னே காண்போம்).
அந்த நிலத்தில் நாம் விரும்பிய தாவரங்களோடு கூடவே வளரும் இயற்கையான மற்ற தாவரங்களின் முளைப்பு 'களைகள்' என்று அழைக்கப்பட்டாலும், அவை போட்டியாளர்கள் அல்ல, உண்மையில் 'கூட்டுறவாளர்' எனும் புரிதல் அவர்களுக்கு இருந்தது.
"சரி சமநிலையைப் பேணி விடலாம். ஆனால் வருடாவருடம் விளைச்சலை அள்ளிக் கொடுக்க நிலம் என்ன அட்சய பாத்திரமா?"
அட்சய பாத்திரம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் திருப்பித் தருதல் விதிப்படி நிலத்தில் இருந்து பெற்றவை நிலத்திற்கு அளிக்கப்பட்டது. அதனால் சந்ததி சந்ததியாக ஒரே நிலத்தை சார்ந்து மனிதர்களால் வாழ முடிந்தது.
அதற்கு அவர்கள் பின்பற்றிய முறை 'நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி காட்டுக்கு' எனும் முறை.
மனிதனுக்குத் தேவை செடியின் நுனியில் இருக்கும் தானியங்கள், அவன் வளர்த்த கால்நடைகளுக்கு தேவைப்பட்டது நடுவில் இருக்கும் வைக்கோல்.
அவை அனைத்தும் நிலத்திற்குத் திருப்பி அளிக்கப்பட்டது
"அதைத் தான் மாடு தின்றுவிட்டதே. அது எப்படி நிலத்திற்குப் போகும்? "
அதுதான் சாணியாக வெளியே வந்து விடுமே?
அதுவும் அந்த சாணம் நல்ல உரமாக 'தாது எரு மன்றங்கள்' மூலம் மதிப்புக் கூட்டப்பட்டு நிலத்திற்கு திரும்பி அளிக்கப்பட்டது என்பதை சங்க காலப் பாடல்கள் நிறுவுகின்றன. மேலும் தந்திவர்மனின் கல்வெட்டுகள் (805 CE) எரு விற்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
புற்கள் சூரிய ஒளியை அறுவடை செய்து வைத்துள்ளன. பழுத்து விழவேண்டிய பழைய இலைகளை மாடுகளுக்கு விருப்பத்துடனே வழங்குபவை அவை. ஆனால் மாடுகளால் புற்களின் செல்லுலோசுக்குள் பதுங்கி இருக்கும் ஆற்றலை அறுவடை செய்ய இயலாது. அதற்காக அவை தனது அசையூன் வயிற்றில், நுண்ணுயிர்கள் துணையுடன், அந்த ஆற்றலை அறுவடை செய்கிறது. மைட்டோகாண்ட்ரியா இல்லாத நுண்ணுயிர்களால் செல்லுலோசுக்குள் இருக்கும் அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணர இயலாது. மாடு பத்து சதவீதம் தான் புற்களின் ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. எனவே வெளிவரும் சாணத்தில் இன்னும் வெளிக்கொணரப்பட வேண்டிய பல ஆற்றல் ஒளிந்துள்ளது.
அதை பண்டைய திராவிடர்கள் நெருப்பைக்கொண்டு அறுவடை செய்தனர். அவர்கள் சாணத்தை எரித்து உபயோகப்படுத்தினர். ஹரப்பர்கள் செங்கற்களை செய்ய விறகுகளைப்பயன்படுத்தி காட்டழிப்பு செய்தனர். ஆனால் தென்னிந்தியர்கள் காய்ந்த சாணத்தின் மூலம் புற்களை விறகுகளாக பயன்படுத்தத் தொடங்கினர். எரித்தது போக மிஞ்சிய சாம்பல் நல்லதொரு மினரல் உரம். மேலும் இவற்றை உடலில் பூசிக்கொண்டால் கொசுக்களும் அண்டாது.
சாணம் மற்ற உயிர்களின் கழிவு போல அருவருக்கத் தக்கதல்ல. அதனால் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அவற்றை குவிக்க ஆரம்பித்தனர். வடகர்னாடகத்திலும் மற்றும் சில ஆந்திரா தெலுங்கானா பகுதியிலும் பலவிடங்களில் காணப்படும் கற்கால முடிவில் இருந்த சாம்பல்மேடுகள் பல ஆண்டுகள் அந்த இடங்களில் வந்து தங்கிய கால்நடைகளின் சாணச்சாம்பலைக் கொண்டவையாக உள்ளன, இந்தச் சாம்பல்மேடுகளை அகழ்வு செய்த ஆல்சின் முதலான தொல்பழங்கால ஆசிரியர்கள் கற்கால முடிவில் வாழ்ந்த மக்கள் ஏராளமான ஆவினங்களை உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒருசில இடங்களில் நூற்றுக்கணக்கான மாடுகள் வந்து தங்கிய அறிகுறிகள் காணப்படுகின்றன. இம்மக்கள் தங்களுடைய ஆவினங்களை ஆண்டில் சில மாதங்களில் தங்களூர்களிலிருந்து தூரத்திற்கு ஓட்டிச்சென்று மேய்ச்சல் நிலங்களின் அருகில் கூடாரம் அடித்து இருந்துவிட்டுத் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்களும் இவ்வகையான வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்திருக்கலாம். மேலும் அங்கிருக்கும் கிராமங்கள் பலவற்றின் பெயர்கள் பூதி என்று முடிகின்றன. உதாரணத்திற்கு Budihal, Buditippa, அதிலும் பூதிகுண்ட்டா பகுதியில் தான் 46 அடி உயர சாம்பல் மேடு இருந்துள்ளது. பூதி எனும் வேர்சொல் சாம்பலைக்குறிப்பது. இதிலிருந்தே விபூதி எனும் பெயர் தோன்றியது. இந்தச் சாம்பல் மேடுகள் இருந்ததற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அதில் இவை சாம்பல் சத்தாக பயன்பட்டிருக்க வேண்டும் என்பது ஏற்புடைய ஒரு கருத்து. ஆனாலும் ஒரே இடத்தில் ஏன் எரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு தீர்வு காணப்படவில்லை. சிலர் இவை இரும்பு உருக்கப் பயன் பட்டிருக்கலாம் என்கின்றனர். இவை இருக்கும் பெல்லாரி மாவட்டம் இரும்புத்தாதுவுக்கு பெயர் போனது. தாது மணலை உருக்கி பாற்கடலை கடைந்தது போல் இரும்பை கடைந்து எடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற டமஸ்கஸ் இரும்பை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்பது பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்த முனைவர். ஷ்ரதா எனும் ஆய்வாளரின் புத்தகத்தில் வரும் இந்தப்பத்தியைப் படித்துப் பாருங்களேன்.
// I stop to take a picture of this eternal rural India. Just then I notice the stuff lying around on the mound. ‘What’s all that, is it not fossilized cow-dung?’. My mind flashes back to one of our enthusiastic lecturers at the Archaeology Institute in London, waving a piece of smelted debris at us and saying ‘You see, slag has this nice flow texture’. ‘So, that’s what it must be’, I re-assure myself as I pick through the dried cowdung and scoop up bits of lava-like stuff, broken ‘pot-sherds’ and such like.//
இருப்பினும் இரும்புக்காக உருவானவை சாம்பல் மேடுகள் எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் இல்லை. அப்படி என்றால் இந்த இடம் ஏதேனும் மத ஆல்லது ஆய்வு சம்பத்தப்பட்ட காரியங்களுக்காக இருந்திருக்குமோ என்னமோ? யார் கண்டார்?
நெருப்புக்கு அனைத்தையும் தூய்மை செய்யும் ஆற்றல் உள்ளது. எனவே கொள்ளை நோய்கள் கண்ட உடல்கள் அனைத்தையும் தூக்கிச்சென்றுப் புதைப்பதை விட எரிப்பதே மேல் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது.
அதனால் தான் நெருப்பில் நடக்கும் பூமிதிப் பழக்கம் தோன்றியிருக்குமோ? கால்நடைகளை நெருப்பில் தாண்ட வைப்பதை இன்னும் கர்னாடகாவில் செய்து வருகின்றனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
‘மூண்டெரியும் அக்கினுக்குள் மூழ்கி வருவோம்’ எனும் பாம்பாட்டி சித்தரின் பாடலை இச்செயலோடு ஒப்பிடத்தோன்றுகிறது.
இன்றும் நெருப்பில் நடப்பது பல நாடுகளில் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாம்பல் மேடு எந்த அளவிற்கு புதிர் கொண்டது என்பதை பின் வரும் வரிகளின் மூலம் அறியலாம்.
“…However it [the ashmound tradition of the Deccan] may ultimately be found to relate to the cult of cattle throughout India, and however humble the theme may appear beside the grander flights of Indian religious thought, at least we may assert that what we have been able to reconstruct is something unique and hitherto undreamed of; and as such it adds a new and peculiarly Indian chapter to the history of human institutions” (Allchin 1963: 178).
ஒரே இடத்தில் மக்கள் மற்றும் விலங்குகள் நெருக்கமாக வாழ்வதால் நன்மைகள் நிறைய இருந்தாலும் இது இயற்கை விதிக்கு முரணானது என்பதைப்பற்றி நாம் பார்த்தோம். கடன் பட்டார் நெஞ்சு கலக்கமடைந்தது போல காலையில் எழுந்தவுடன் வயிற்றில் இருக்கும் இயற்கையின் கடனானது கலக்கி விடுகிறது. அதனால் ஆறறிவு கொண்ட மக்கள் காலைக்கடனைக் கழிக்க மக்கள் வாழாத ஒதுக்குப்புறமான இடத்தில் ஒதுங்க ஆரம்பித்தனர். ஆனால் மாடுகளுக்கோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வயிறு கலங்கியது. வனம் முழுவதும் உரம் போட்ட அவற்றை ஓரிடத்தில் கட்டிப்போட்டு கூடவே தங்க ஆரம்பித்த நம்மக்களுக்கு எழுந்த முதல் பிரச்சனை சாணி தான். காரணம் சாணம் ஈக்களை வசீகரித்தது. கொள்ளை நோய்கள் எளிதில் தொற்றுவதற்கு ஏற்ற சூழலாய் இது இருந்தது. அதுமட்டுமல்லாமல் நம் ஆதிமுன்னோர்கள் கண்டடைந்த இந்த நிலம் வெப்பமண்டலம். வேனில் வெப்ப சமயம் அம்மை போன்ற புதிதாக சில நோய்களும் மனிதர்களுக்குப் பரவ ஆரம்பித்தது. மக்கள் புழங்கிய கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் ஈக்கள்; பல வகை பாக்கள் பாடியவாறே திரிய ஆரம்பித்தன. அவற்றாலும் பல்வகை தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்தன.
மேய்ச்சல் சமூகங்களுக்குப் பிறகு வந்த மக்கள்; தானியங்களைப் பழக்கி வளர்க்க ஆரம்பித்த பின்னர் நிலமை இன்னும் மோசமாகியது. எலிகள் தொல்லை வேறு பெரும் தொல்லையாக இருந்தது. எலிகள் எலிக்காய்ச்சல், பிளேக் போன்றவற்றை மனிதர்களுக்கு பரப்ப ஆரம்பித்தன.
எலிகளைப்பற்றி ஆராய்ந்த பொழுது உலகில் இருக்கும் அனைத்து எலிகளுமே இந்தியாவின் ஒரு மூதாதைய எலியில் இருந்து வந்தவை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். தானியங்களோடே வசிக்க ஆரம்பித்த எலிகள் விவசாயம் பரவிய இடங்கள் அனைத்திலும் பரவி வாழ ஆரம்பித்தன. இதன் பொருள் யாதெனில் விவசாயம் தொடங்கியது இந்தியாவில் என்பதே.
எலிகள் விவசாயத்திற்கு பெரும் தொல்லை தருவன.
வயல் எலிகளை பாம்புகள் கட்டுப்படுத்தின. ஆனால் வீட்டுக்குள்ளே பாம்புகளை அனுமதிக்க முடியாதே. என்ன செய்ய?
வீட்டுக்குள்ளே இருக்கும் எலிகளை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். அந்த உபாயத்தை எகிப்தியர்கள் சிறப்பாக செய்தனர். எகிப்தியர்கள் பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை உண்மையிலேயே வீட்டு விலங்கா என்ற கேள்வி எனக்கு அடிக்கடி எழும். அதுவும் பூனைக்கு ஊசி போடும் பொழுது, இவை தாம் வீட்டு விலங்குகள் இல்லை என்று எனக்கு நிரூபித்துவிடும்.
தனக்கு உணவிடும் மனிதர்களை கடவுளாக நினைப்பவை நாய்கள். ஆனால் பூனைகள் தனக்கு உணவு வழங்குபவனை பூசாரியாகத் தான் பார்க்கின்றன. கடவுள் போல் நடந்து கொண்டாலும் அவை எலிகளையும் தேள்களையும் பாம்புகளையும் அண்ட விடாமல் தானியங்களையும் மனிதர்களையும் காத்ததனால் அவற்றை எகிப்தியர்கள் கடவுளாகவே வழிபட்டனர்.
“உண்மையிலேயே பூனை தெய்வமாக வழிபடத்தக்கதா என்ன?”
இல்லை.
நாத்திகர்கள் தெய்வம் என்ற ஒன்றை நிரூபிக்கச் சொல்வதும், ‘தெய்வம் இல்லை என நீ நிரூபி பார்க்கலாம்’ என ஆத்திகர்கள் பதிலுக்குச் சொல்வதும் வாழைப்பழ காமெடி போல் பல காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் என்பவர் ‘what can be asserted without evidence, can also be dismissed without evidence’ என்கிறார்.
தெய்வம் என்பதற்கான தமிழர்களின் புரிதல் ரொம்ப எளிதானது. போற்றத்தக்க செயல் அல்லது ஆற்றலே வழிபடத்தக்கது. அதன் படி சமன்பாட்டைப் பேண வழிவகை செய்யும் இயற்கையே தெய்வம்.
வனத்தில் இருக்கும் வரை விலங்குகள் என்பவை தனக்கான எல்லைக்குள் தான் வசிக்கும். இரு விலங்குகள் சந்திப்பு என்பது mostly வேட்டைக்களத்தில் தான் நிகழும். அதுபோலல்லாமல் நாள் முழுதும் விலங்குகளோடே ஒத்துவாழும் பொழுது அதன் நோய்களையும் நாம் பகிர்ந்து கொள்ள நேரிடுகிறது. அம்மையை நாம் வென்று விட்டாலும் முழுவதுமாய் கண்டறியப்படா பல நோய்கள் விலங்குவழி நம்மை நெருங்க ஏதுவான சமயத்தை எதிர் நோக்கி உள்ளன. நம்ம சங்காத்தமே வேண்டாம் என இரவு மட்டுமே வெளிவரும் வவ்வால்கள் மேல் கைவைத்ததால் தான் கொரனா நம்மை ஒரு காட்டு காட்டியது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். மனிதர்களுக்கு ஏற்பட்ட கருச்சிதைவுக்கு பூனைகளும் ஒரு முக்கிய காரணம் என்பது 1970 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பூனை, நாய், மனிதன் என யாருக்குமே தெய்வப்பதவி கொடுப்பது முறையல்ல. இயற்கை ஒன்று மட்டுமே வழிபடத்தக்கது.
மனிதர்கள் தெய்வமாக வணங்கியது ஆற்றலைத்தான். வரலாறு நெடுகிலும் மனிதர்களின் முக்கியத்தேவையாக இருந்தது ஆற்றல். அந்த ஆற்றலை மனிதன் நெருப்பு வடிவில் அடைந்த போதுதான் நாகரிகத்தின் பாய்ச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது. அதிலிருந்து மனிதன் எதையாவது எரித்துக்கொண்டே இருக்க ஆரம்பிதான். அந்த செய்கையை அவன் தற்போது வரை விட்டபாடில்லை. எண்ணை வளங்களை சண்டையிட்டு அடைந்து அவற்றை எரிப்பதன் மூலம் ஆற்றல் பெருவதே தற்போது அவனது முக்கிய கொள்கையாய் இருக்கிறது.
நாகரிகங்கள் பல அழிந்தாலும் சில ஆயிரம் வருடங்களாக அழியாமல் இருந்த ஹரப்ப நாகரிகத்தின் அழிவுக்கு இந்த ஆற்றல் நுகர்வு ஒரு முக்கியக் காரணியாக முன்வைக்கப் படுகிறது. கழிவு நீரை முறையாக கையாளத்தெரிந்த அந்தப்பழமையான நாகரிகம் செங்கற்கள் பல செய்வதற்காக கட்டைகளை பயன்படுத்தி காட்டை அழித்தனர்.
ஆனால் நமது சாம்பல் மேட்டுவாழ் முன்னோர்கள் கட்டைகளுக்கு பதில் சாணத்தைப் எரிபொருளாகப் பயன் படுத்தினர். சாம்பல் மேடுகளில் மாடுகளைப்பழக்கிய அதே சமயம் தானியங்களையும் அவர்கள் உட்கொண்டிருந்திருக்கின்றனர். எனவே வேனிலின் சூரிய வெப்பம், மழையின் கொசு, சாணத்தின் ஈ, தானியத்தின் பின்னே வரும் எலி முதலிய சவால்கள் அவர்களுக்கும் இருந்திருக்கும். அதை அவர்கள் எப்படி சமாளித்தனர்?
எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது இயற்கையை அவதானித்தல் மற்றும் அவதானிப்பின் அடிப்படையில் இயற்கையை பாவித்தல்.
உடலெங்கும் அலையும் பூச்சிகளை பறவைகள் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதை அவற்றை பாவித்தாலே அறிந்துகொள்ளலாம்.
படத்தில் மணற்குளியல் செய்து பூச்சிகளை நீக்கும் பஞ்சுருட்டான்.
வெப்பம் மற்றும் கொசுக்கடி இரண்டிலிருந்தும் தன்னைக்காத்துக்கொள்ளும் ஒரு உபாயத்தை மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்த முக்கிய விலங்கு எருமை. நெற்றி மற்றும் உடலை சேற்றில் பூசி காயவிட்டு உடல் வெப்பத்தை அது தணிக்கிறது. எக்ஸ்ட்ரா தோலான சேற்றை கொசு மற்றும் ஹெமட்டோபியா போன்ற பூச்சிகளின் கூரிய வாயால் துளைக்க முடியாது என்பது சேற்றைப் பூசுவதால் ஏற்படும் கூடுதல் பயன்.
ஆசியா முழுவதும் மருதநிலத்தின் ஆதார விலங்கு எருமைதான். தமிழர்கள் அந்த எருமையைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் கன்னடர்கள் கைவிடவில்லை.
எத்தியோப்பியர்கள், சூடான் பழங்குடியினர் அனைவரும் நம் நிறத்தவர்கள். காரணம் நில நடுக்கோட்டு கொஞ்சம் தள்ளி இவர்கள் அனைவரும் வசிப்பதால் நம் போலவே அவர்களது தோலும் மிதமாக வறுபட்டிருக்கிறது.
புவியியல் அமைப்பின் அடிப்படையில் மக்களின் நிற வேறுபாடு பற்றி விளக்கும் படம்:
நம் நிறம் கொண்ட சூடானின் முண்டாரிப் பழங்குடிகள் சிலரது படங்களைப் பாருங்களேன்.
இவர்களும் நம் சாம்பல் மேட்டு முன்னோர்கள் போலவே ஒரு மேய்ச்சல் சமூகம். இவர்களது கால்நடைகள் தான் இவர்களுக்கு உயிரினும் மேலான சொத்து. ஆநிரை கவர்பவர்களிடமிருந்து அதைக்காப்பதற்காகத்தான் துப்பாக்கி ஏந்தியுள்ளனர்.
“இவர்கள் எப்படி சாணத்தைக் கையாள்கின்றனர்?”
இவர்கள் சாணத்தைக்குவித்து எரிக்கின்றனர். அதன் சாம்பலை தங்கள் மீதும் மாடுகள் மீதும் பூசுகின்றனர். மாட்டின் சிறுநீரில் தலையைக் கழுவி மயிரை ‘ப்ளீச்’ செய்கின்றனர்.
ஆயர்களின் வீரத்திற்கு எத்தியோகிப்பியர்கள் ஒரு நல்ல உதாரணம். ஆங்கிலேயர்களால் ஆப்பிரிக்க கண்டத்தில் அடிமைப்படுத்த முடியாத ஒரே நாடு எத்தியோப்பியா. ஆக்சம் பேரரசு பண்டைய உலகின் குறிப்பிடத்தக்க சக்திகளில் ஒன்றாகும். இது நவீன எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கீழ் காணும்படத்தில் சேறு பூசியிருப்பவர்கள் எத்தியோப்பிய முர்சி பழங்குடியினர்.
இவர்கள் தலையில் கொம்புகளை வைத்திருப்பது போலத்தான் பசுபதி அச்சிலும் கொம்புகள் காணப்பட்டன.
இந்தக் கொம்புதான் சிவனின் பிறையாக மாறியதாகவும் சிலர் கருதுகின்றனர். பசுபதியின் மற்றுமொரு அச்சைக் காணும் போது இக்கருத்து உண்மைதான் எனத் தோன்றுகின்றது.
ஆப்ரிக்க சகோதர்களின் சாணப்பயன்பாடு பற்றிப்பார்த்தோம். நமது சாணப்பயன்பாடு அதையும் தாண்டி நீண்டது. எலித்தொல்லை பெருந்தொல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் எலிகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்களுக்கு சாணம் உதவி செய்தது.
எனவே சாணத்தை பிள்ளையாராக பிடித்து கடவுளாக வழிபட்டனர் தமிழர்கள். சாணப் பிள்ளையார் கட்டுப்படுத்திய எலியை அவருக்கு அருகிலேயே உட்கார வைத்து விட்டனர்.
பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும். சாணம் ஒரு இயற்கை உரம். சாணம் இயற்கை எரிவாயு தயாரிக்கவும் பயன்படுகிறது. நம் மக்கள் இச்சாணத்தினை வயல்வெளிகளுக்கும் உரமாக பயன்படுத்துகின்றனர். இது இயற்கை உர வகையைச் சார்ந்தது. இந்த சாணத்தில் நைட்ரஜனும், கால்சியமும், பாஸ்பரசும் மிகுந்து காணப்படுகின்றன.
தமிழர்களின் வழிபாடுகளுக்கு பயன்படும் திருநீறு தயாரிக்கவும், தமிழர்களின் இல்ல வாசல்களில் மெழுகவும் சாணம் பயன்படுகிறது. இதனை கிருமிநாசினி என தமிழர்கள் கருதுகிறார்கள். சாணத்தினால் வீட்டை மெழுகுதல் ஆப்ரிக்க பழங்குடிகளிலும் காணும் ஒரு வழக்கமாகும். சாணத்திலிருந்து விபூதி, பல்பொடி, கொசு விரட்டி, சாம்பிராணி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயிலில் சாணத்திலிருந்து தட்டப்பட்ட வரட்டியை பொங்கல் வைக்க உபயோகம் செய்து, பின் அதன் சாம்பலை பிரசாதமாக தருகின்றார்கள் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒரு செய்தி.
அடர்ந்த காடுகளில் யானை உண்டாக்கிய பாதைகள் வழியாகத்தான் ஆதி மனிதர்கள் பயணப்பட்டிருக்க வேண்டும். அங்கே சிதறிக் கிடந்த யானையின் சாணம், ஒரு மணி நேரத்திற்குள் காணாமல் போய்விடும். அதனை பயன்படுத்தும் பல உயிர்கள் வனத்தில் உள்ளன. வனம் செழிக்க யானைகளின் சாணம் மிகவும் அவசியம். இந்த அவதானிப்பு தான் பசுக்களின் சாணத்தை உரமாக பயன்படுத்த வேண்டிய தேவையை தமிழர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.
கொள்ளை நோய்கள் தலையெடுக்கும் போதுதான் உடல் ஆரோக்கியம் மற்றும் சூழல் அவதானிப்பு ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை மனிதர்கள் உணர்கின்றனர். சாணம் மற்றும் இறந்த உடல் ஆகியவற்றை எரிக்கும் வழக்கம் பெருங்கல் சின்ன காலத்திற்கு பிறகு உதயமாக ஆரம்பித்துவிட்டது. கொள்ளை நோய்களைத் தடுக்கும் அடிப்படையில் இவை நிகழ்ந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
சாணம் கழிவாக இருந்து நோய்களைப் பரப்பியதால் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் உண்மையான பயன் சங்ககாலத்தில் தாது எரு மன்றங்கள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது மீத்தேன் வெளியீடு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மாடுகளும் ஒரு காரணியாக முன் வைக்கப்படுகிறது.
மீத்தேன் ஒரு நல்ல எரிபொருள். சொல்லப்போனால் மாடுகள் போடும் சாணியை விட நாம் தான் அதிக சாணம் இடுகிறோம். இவை அனைத்துமே நல்ல எரிபொருள்தான்.
சாணத்தில் இருக்கும் எரிவாயுவையும் நவீன உத்திகளால் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். சாண எரிவாயுவில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகம் காணப்படுகின்றன. இச்சாண எரிவாயு மரபுசாரா எரிசக்தியாக உபயோகப்படுத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் இதுபோன்ற நவீன உத்திகளும் அரவணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சாணத்தின் மதிப்பு கூட்டப்படுவதோடல்லாமல், சூழலுக்கும் நன்மை பயக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இது போன்ற ஆற்றல் நுகர்வு மாற்றத்தை நாம் பின்பற்றினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் என உங்களுக்குத் தோன்றலாம்.
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். ஆற்றல் நுகர்வு மாற்றத்தை நாம் பின்பற்றினால் கடலில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விடும்.
“எப்படி?”
ஏனெனில், கடலில் செல்லும் கப்பல்கள் பெரும்பாலும் நிலக்கரி, எண்ணை பீப்பாய்கள், எரிவாயு இவற்றைத்தான் எடுத்துச் செல்கின்றன.
ஆற்றல் நுகர்வை பற்றிய இந்த படத்தையும் பாருங்களேன்.
இவ்வாறான ஆற்றல் பயன்பாடே சூழல் மாசுபாட்டின் அடிநாதமாய் உள்ளது என்பதை இப்படம் உள்ளங்கை உருளைக்கிழங்காய் நமக்குக் காட்டுகிறது.
மீத்தேன் (CH₄), ஒரு ஆற்றல்மிக்க பசுமை இல்ல வாயு, இயற்கையாகவே நிலப்பரப்புகள், கழிவு நீர் மற்றும் உரம் ஆகியவற்றில் உள்ள கரிமப் பொருட்களை சிதைப்பதில் இருந்து இது வெளியேற்றப்படுகிறது. கழிவுப்பொருட்களில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கைப்பற்றுவதன் மூலம், அது வளிமண்டலத்தில் வெளியேறுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயுவாகவும் இதை மாற்ற முடியும். இந்த வாயுவை உற்பத்தி செய்ய மனித மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கலாம். ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தின் செயல்திறனை நிரூபித்துள்ளன. சச்சிதானந்த முகர்ஜீ என்பவர் எழுதிய Turning Human Waste into Renewable Energy: Scope and Options for India கட்டுரையை வாய்ப்பு இருந்தால் படித்துப்பாருங்கள். சிதம்பரம் குமிடிமூலை கிராமம் மற்றும் முசிறி முதலிய இடங்களில் இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.
உடலும் சரி மலமும் சரி இயற்கையில் எதுவுமே கழிவு கிடையாது. மலத்தை இவ்வாறு நவீன உத்திகள் துணையால் மதிப்புக்கூட்டி பயன்படுத்தியது போலவே உடலையும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அறிவியல் வழங்குகின்றது. பெருங்கற்கால புதைக்கும் வழக்கம் எரிக்கும் வழக்கமாக மாறியது அக்காலத்தின் தேவை. எரிப்பதை விட உடலை தானமாகக் கொடுப்பதே சிறந்தது. இறந்த பின்னும் வாழும் வாய்ப்பை உடல் தானம் வழங்குகிறது.
அக்காலத்தைய சாம்பல் மேடுகள் சாணத்தை எரித்ததற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்தோம். பழைய கற்காலத்தில் கல் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று பெல்லாரி மாவட்டத்தின் மலையில் இருந்ததாகப் பார்த்தோமே… சாம்பல் மேடுகள் இருக்கும் இந்த இடம் அந்தக் கல் ஆயுதத் தொழிற்சாலைக்கு மிக அருகில் தான் உள்ளது.
அந்த மலைக்கு இப்பொழுதும் குரும்பர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
“குரும்பர்கள் அங்கு யாரை வழிபடுகின்றனர்?”
வீரப்பா எனப்படும் வீரபத்திரரை.
சாணச் சாம்பலைப் பூசுவது உடலைக்குளிர்விக்கவே பழங்குடிகளால் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பது நமக்குப் புலனாகிறது. மேலும் வெள்ளி போன்ற உலோகங்களும் ஸ்படிகம் போன்ற கற்களும் உடலைக் குளிர்விக்கப் பயன்பட்டன. நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் சித்தர்களால் பல நோய்களுக்கு மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம். புதைப்பதிலிருந்து எரிக்கும் வழக்கம், எரித்ததை பூசும் வழக்கம், மெட்டலர்ஜியில் பல புதுமைகள், புதிய மருத்துவ முறைகள் அனைத்தும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை இதுபோன்ற தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
நாம் வெப்பமண்டலத்தில் வாழ்பவர்கள். இயல்பாகவே சூடு நம்மை பாடாய்படுத்தியிருக்கிறது. எனவே இது போன்று மருந்துகளையோ அல்லது உடலைக் குளிர்விக்கும்முறையையோ கண்டறிந்தவருக்கு உடல் சூடு எனப்படும் அழல் வழக்கத்தைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் சொல்லாடலை மெய்ப்பிப்பது போல; எதையாவது பூசிக் கொள்வதன் மூலமோ, ஏதாவது ஒரு மூலிகை அல்லது பஸ்பத்தை உண்டோ, ஏதாவது பயிற்சி முறைகளின் மூலமோ, இல்லை எதையாவது அணிந்து கொண்டோ தனது அழலை அந்த நபர் குறைக்க முயன்றிருக்க வேண்டும் எனும் அனுமானத்திற்கு இத்தரவுகள் இட்டுச்செல்கின்றன. அந்த நபர்; தான் காணும் ஒவ்வொன்றையும் மருந்தாக்க முயன்றிருக்கிறார் என்பதையும் அனுமானிக்க முடிகிறது.
“அப்படி ஒரு நபர் உண்மையிலேயே இருந்தாரா? கடைசியாக அவர் உடல் சூட்டை தணித்தாரா இல்லையா? உடலை குளிர்விக்கும் மருந்தை கண்டுபிடித்தாரா இல்லையா?”
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். அவராலோ அல்லது அவர் வழி வந்தவர்களாலோ இது போன்ற நிறைய கண்டுபிடிப்புகள் நடத்தப்பட்டன என்பது திண்ணம். அவை அனைத்திற்கும் நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. அந்த இரகசியங்கள் பெல்லாரி மாவட்ட சாம்பல் மேட்டிலும், பாறை ஓவியங்களிலும், ஆதிச்சநல்லூர் மற்றும் தாதுமணல் பரப்புகளிலும், அகத்திய மலையினிலும், சித்தர் பாடல்களிலும் ஒளிந்துள்ளன.
ஆனால் இதில் என்ன சோகம் என்றால்… அந்த பெல்லாரியின் பாறைகள் தற்போது குவாரிகளால் பெயர்க்கப்பட்டு விட்டன, தாது மணற்பரப்பும் தாமிரவருணியும் இப்பவோ அப்பவோ என இழுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் காப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு சாபச்செயல் போல் மாறிவிட்டது. தாமிரபரணியை காக்க உழைத்த வனபாரதி மோகன்ராம் ஐய்யா, தாமிரபரணி மடியிலேயே உயிரை விட்டார் என்பதை இக்கணத்தில் நான் மிகு வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
எது எப்படியோ கற்கால இறுதியில் கால்நடைகளை மேய்க்கும் சமூகமாக இருந்தவர்கள் தொடங்கி; உபரி சாணத்தை பல்வேறு மக்கள் பலவகையில் கையாண்டு, இறுதியில் சாணத்தின் உண்மையான பயனைக் கண்டறிந்து தாது எரு மன்றங்களில் அதை மேலும் வீரியமாக்கிப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதே நாம் பெறும் செய்தியாகும்.
நீர்நிறை நஞ்சை நிலங்களில் ஏர் உழுவதைவிட எரு இடுதல் விளைச்சலுக்கு முக்கியத் தேவையாக இருந்தது என்பதை 'ஏரினும் நன்றாம் எருவிடுதல்' எனும் வள்ளுவர் வாக்கு நிரூபிக்கின்றது. ‘எரு’ என்பதன் வேர்ச்சொல் பண்டைய திராவிட மொழியான kuruk (Oraon) தந்தது. அது குழந்தைகளின் மற்றும் விலங்குகளின் கழிவைக் குறிக்கிறது.
பத்து சதவீதம் சத்துக்களை மாடு எடுத்துக்கொண்டது போக மீதமிருக்கும் சத்துக்கள் நிரம்பிய சாணமானது தாதுஎருவின் மூலம் நிலத்தின் நுண்ணுயிரிகளுக்கு அளிக்கப்பட்டது. அவை உண்டு சிதைத்த கழிவு தானே பயிருக்கு நல்ல உணவு?
மாடு என்பது ஏர் உழுவதற்கு மட்டும் தான் என எண்ணி அவற்றை விவசாயத்திலிருந்து பிரிக்கப்பார்க்கிறோம். அவற்றின் பயன்கள் விவசாயத்தில் அதையும் தாண்டியது. வயலில் களைகளை நீக்குவது தொடங்கி அறுவடைக்கு பின்பு வரை கால்நடைகள் எவ்வாறு பங்களித்தன என்பது பற்றி ஏரெழுபது மற்றும் பெரும்பாணாற்றுப்படை நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தை உழுவதோடு மட்டுமல்லாமல், சாணத்தைக் கொடுத்து நிலத்தையும், பால் கொடுத்து மக்களையும் வளப்படுத்தின கால்நடைகள். இதன் விளைவு, இதுவரை பயிர் விளைவித்தவரை வேளாளர் என்று அழைத்துவந்த நம் சமூகம், யாரிடம் கால்நடை உள்ளதோ அவரையே வேளாளர் என்றழைக்கத் தொடங்கியது.
“எருது உடையான் வேளாளன்” (நான்மணிக்கடிகை).
இவ்வாறு மருத நிலத்து வேளாளர்கள் கால்நடைகள் துணையுடன் மிகு விளைச்சல் கொள்ள ஆரம்பித்தனர்.
“மிஞ்சிய விளைச்சலை என் செய்ய?”
நால்வகை நிலத்தின் மக்களும் இவ்வாறு தங்கள் நிலத்தின் தனித்தன்மை கொண்ட விளைபொருட்களை விளைவித்து, மற்ற நிலத்து மக்களோடு தங்கள் விளைபொருட்களை வணிகம் செய்யத்தொடங்கினர். முதலில் பண்டமாற்றாய் துவங்கிய வணிகம் அன்னிய நாடுகளோடு வாணிபம் செய்யும் அளவிற்கு விரிவடைந்தது.
“மீன் கொடுத்து நெல் குவைஇ”, “கழிஉப்பு முகந்து கல் நாடுமடுக்கும்”, “குளைகீழ் விளைந்த களைக்கொல் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப” எனும் பல்வேறு புறநானூற்று வரிகள் நால்வகை நிலத்தினரும் தங்களுக்குள் பண்டமாற்று செய்ததை மெய்ப்பிக்கிறது.
குறிஞ்சியை விட்டு நீங்கிய பின்னர் நம் முன்னோர்களுக்கு அறுசுவையில் சிலசுவைகள் மட்டுமே உண்ணக்கிடைத்தன. அவர்களின் மனத்தில் நிழலாடிய குறிஞ்சியின் அறுசுவைக் கனவினை மருதம் நிறைவேற்றியது.
இவ்வாறு முதன்மை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்களும் நிலத்தின் மட்கு உயிர்களும் உணவுச் சங்கிலியின் பலமான அஸ்திவாரமாக மிகுந்திருக்க, அவற்றைச் சார்ந்த கால்நடைகள் அடுத்தடுத்து அமர்ந்திருக்க, வேளாண் பொருட்கள் மிகு உற்பத்தியில் திளைக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் பெருக, கல்வியும் செல்வமும் நீக்கமற நிறைந்திருக்க, செல்வச்செழிப்பில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க எதற்கும் அஞ்சாத வீறு நிலை கொண்ட வலிமைமிகு அரசாங்கக்கட்டமைப்பு தோன்ற, நமது நாகரிகம் நிலைபெறத்துவங்கியது.
கல்வி, அஞ்சாமை, புகழ், வரையாது வழங்கும் வள்ளன்மை ஆகியவை இருக்கும் போது தான் பெருமிதமாகிய வீறு தோன்றும் எனும் தொல்காப்பியரின் கூற்றோடு இதை நாம் ஒப்பு நோக்கலாம்.
இத்தனை பெருமிதத்திற்கும் அடிப்படை வேளாண்மை. அதனைச்சார்ந்தே அனைவரின் வாழ்வும் அந்த நாகரிகக் கட்டமைப்பில் சுழன்று வந்தது. அதனால் தான் யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழும் விவசாயிகளே உண்மையான வாழ்வு வாழ்பவர், மற்றவர் அனைவரின் வாழ்வும் அவர்களை அண்டியே உள்ளது என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் 1033)
மன்னரின் வீரமும், வணிகர்களின் வாணிபமும் மிகுந்த பொருளை ஈட்டிக் கொடுத்தாலும் விவசாயமே நாட்டின் அடிப்படை என்பதை அறிவில் சிறந்தவர்கள் தெளிவுற அறிந்து வைத்திருந்தனர்.
மன்னா நீ எவ்வளவு பெரிய ஆளு… நீ அடிச்சா அடி விழாது… இடி விழும் என்று புலவர்கள் சங்க கால மன்னர்களுக்கு பில்டப் கொடுத்து பரிசில் பல பெற்று பர்சை நிறைப்பதில் கவனம் செலுத்தினாலும், அறிவில் சிறந்த அவர்களுக்கு விவசாயமே நாட்டின் அடிப்படை என்பதை அறிந்ததனால் அதைப்பற்றிப் பாட்டின் ஊடே மன்னர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தனர்.
வெள்ளைக்குடி நாகனார் கிள்ளிவளவனைப் பாடும் போது, "நின் போர்ப்படை தந்த வெற்றியும் உழுபடையால் உண்டாவதே' என்றார்.
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழ லவர் (1034) என்னும் திருக்குறளிலும் இதைப் போன்றதொரு கருத்தே இடம் பெற்றுள்ளது.
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் (10:149-50) என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் இதே கருத்தைக் கூறுகிறார்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் இன்னொரு நிகழ்வையும் நாம் பார்த்து விடுவோம்.
அரசகுல திருமண நிகழ்வில் மூத்தவள் வாழ்த்து வேண்டி அரசனால் அறிவிற்சிறந்த முப்பாட்டி அழைக்கப்பட்டிருக்கிறாள். அழைக்கப்பட்ட நம்ம ஆத்தாவின் வாழ்த்து பின்வருமாறு…
வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் "
_ ஔவை
விவசாயம் எனும் பலமான அடித்தளம்தான் உலகு போற்றும் நாகரிகத்தை தோற்றுவித்தது. விவசாயத்தினாலே இதுவரை அலைந்து திரிந்து வாழ்ந்துவந்த நம் மக்கள் நிலையாய் ஓரிடம் தங்கி வாழ்வாங்கு வாழ ஆரம்பித்தனர்.
நெய்தல் மற்றும் பாலை நிலத்தலைவிகள் பிரிவுத்துயரில் வாடியிருந்தனர் என்பதைப் பற்றிக் கண்டோம். ஆனால் நிலையான ஓரிட வாழ்வு அமையப் பெற்றபின் தலைவனும் தலைவியும் கொரோனா காலத்தம்பதியினர் போல ஒருவர் முகத்தை ஒருவர் நாள்முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கும் வாய்ப்பு அமையப் பெற்றனர். புருஷனும் பொண்டாட்டியும் தற்போது ஒன்றாய் வாழ ஆரம்பித்தால் இந்நிலத்தின் உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆனது. செல்வம் மிகுந்த தலைவன் பரத்தையர் இல்லம் நாட ஆரம்பித்த பொழுது ஊடல் உக்கிரம் அடைந்தது.
இப்படிப் பட்ட போகவாழ்வு அனைத்திற்கும் காரணமான விவசாயம் நீடித்திருக்க அடிப்படை ‘நீர்’. எனவே நீர் ஆதாரத்தை பேணுதல் அவசியம் அல்லவா?
நீர் இருப்பு வருடம்தோறும் சரியான அளவில் இருக்க, நீர் பாதைகள் குளங்கள் ஏரிகள் முதலியன பராமரிக்கப்பட்டன, சரியான கால அளவில் தூர்வாரப் பட்டன. இந்த செய்கையே அரசின் முதல் கடமையாக முன்னிறுத்தப்பட்டது. காவிரியை கொண்டுவந்த தலைவர்களை ஃப்லெக்ஸ் அடித்து புகழ்வது போல, நீர் நிலைகளைப் பேணிய அரசர்களை பாடல்கள் இயற்றி ஊக்கமூட்டி பேர் தேடிக் கொடுத்தனர் அறிவில் சிறந்த புலவர்கள்.
தம்பி நீ எவ்வளவு பெரிய மன்னனா வேணா இருந்துக்க…நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம், நீர் நிலைகள் அமையும்படி கரை கட்டினாத்தான் உனக்கு அழியாப்புகழ் என்கிறார் ஒரு புறநானூற்றுப் புலவர்.
படம்: வறட்சி மாவட்டங்களில் மன்னர்கள் அகழ்ந்த நீர் நிலைகள் – சாட்டிலைட் படம்.
‘நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’ – குடபுலவியனார்.
மன்னர்களும் இதனால் நீர் செல்லும் பாதைகளில் தடங்கல் நேராமல் பார்த்துக்கொண்டனர்.
உதாரணத்திற்கு பாண்டியனின் இந்தக் கல்வெட்டுச் செய்தியினைப் படித்துப் பாருங்களேன்.
‘நீர்ப்பிழை புரிதல் ஊர்ப் பிழைத் தற்றால்
நெடுமுடி மன்னன் கடுஞ்சினங் கொள்ளும்’
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் வழிப் பாதைகளைத் தடுத்தாலோ, மன்னன் பெருங் கோபம் கொள்வான். கடும் தண்டனை கிடைக்கும்.
ஆற்று நீரும், ஊற்று நீரும் நிறைந்த நஞ்சை நிலத்தில், விவசாயம் அள்ளித் தரவல்லது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பூமியின் மொத்த நீரில், 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர். Freshwater. அந்த 2.6% லும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் பகுதியில் இருக்கும் glaciers. எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் மிகக் குறைவானதே.
1960 வரைக்குமே surface waterகளான ஆற்றுநீர், குளம், குட்டைகளைத்தான் நமது விவசாயம் நம்பி இருந்தது. உணவில் தன்னிறைவை அடைவதற்காக "பசுமை புரட்சி" கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக கொஞ்சகொஞ்சமாக நிலத்தடி நீரை நோக்கை நகர ஆரம்பித்தது நமது விவசாயம். காரணம் ? "இறக்குமதி" செய்யப்பட்ட HYV (High Yield Varieties) அரிசி/கோதுமை விதைகளுக்கு நமது பாரம்பரிய விதைகளை விட பலமடங்கு தண்ணீர் தேவைப்பட்டது. 1950களில் இந்தியா முழுக்க - நிலத்தடி நீரை நம்பி செய்யப்பட்ட விவசாயத்தின் சதவீதம் இன்று எந்தளவுக்கு இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 10.....20....50...100...ம்ஹும்....500 %, சரியாகத்தான் வாசித்தீர்கள் 500 % அதிகரித்திருக்கிறது. குறைந்தசெலவில் மின் மோட்டர்கள், இலவச மின்சாரம் என்று பலதும் சேர்ந்து சக்கையாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. மேலும் விவாசாயிகள் பணப்பயிர்களுக்கும், கரும்பிற்கும் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நிலத்தடி நீர் வண்டியின் ரிசர்வ் போன்றது. ஆபத்துக் காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டியது அது. அந்த நிலத்தடி நீர் ஒருபக்கம் கழிவுகளால் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்த பிரச்சனை... over exploitation.
பிரச்சனைக்கான அடுத்த காரணி ஆற்று மணல். ஆற்று மணல்களுக்கு நீரை உறிஞ்சும் தன்மை அதிகம்; மழை நீரை உள்ளது உள்ளபடி அலேக்காக உறிஞ்சிக்கொள்ளும். இதனை கண்டபடி அள்ளும்போது நிலத்தடி நீர் மட்டம் குறையும்; ஆற்றின் போக்கு மாறும்; வெள்ளப்பெருக்குகளுக்குக்கூட காரணமாக அமையும்.
அதற்கு அடுத்த காரணி பாறைகள். வெடிகள் கொண்டு பாறைகளைத் தகர்க்கும் போது மொத்தமாக இந்த பாறைகளின் அமைப்பு சிதைந்து நிலத்தடி நீர் அங்கேயே மாட்டிக்கொள்ளக்கூடும். இதுபோன்ற பகுதிகளை aquitards என்று சொல்வார்கள்.
மணலையும் பாறைகளையும் நீரையும் சூறையாடப்படுவதை அரசு தான் கவனிக்க வேண்டும். நீர்ப்பிழை புரிபவர்களை நெடுமுடி மன்னன் தான் கடுஞ்சினங் கொண்டு தண்டிக்க வேண்டும்.
நெடுமுடி மன்னனுக்கு இருக்க வேண்டிய பொறுப்பை விட, நீரைப் பாதுகாக்க வேண்டிய கடமை விவசாயிகளிடம் அதிகம் உள்ளது. ஏனெனில் விவசாயத்தில் தான் அதிக நீர் தேவையாய் இருக்கிறது.
நெல் - அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர். ஆனால் சிறுதானியங்களுக்கு அவ்வளவு தேவைப்படாது என்பதை நாம் உணர வேண்டும்.
2015ல் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடந்த மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? நமக்கு மேலே இருக்கும் எல்லா தென்னக மாநிலங்களும். குறிப்பாக, கர்நாடகாவில். எங்கிருந்து பிரச்சனை தொடங்கியதென்றால் பயிர் செய்யும் முறையிலிருந்து. கர்னாடகாவில், 40 வருடத்தில் கரும்பு பயிரிடப்படும் ஹெக்டரின் அளவு... நம்ப முடிகிறதா...+586 % அதிகரித்திருக்கிறது. தமிழகமும் இதற்கு விலக்கல்ல. காரணம் கரும்பிற்கு தரப்பட்டும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP - Minimum Support Price) அதிகம். இந்தக் கர்னாடகாவும் தமிழகமும் தான் காவிரியை அதிகம் நம்பி உள்ளன. காவிரிப் பிரச்சனையின் அடிவேர் இங்கு தான் உள்ளது.
பாவமல்லவா நம் விவசாயிகள். நமது பசிக்காக பயிரை விளைவித்து கடைசியில் நாண்டுகொண்டு சாகின்றனர்.
“அவனை யாரு கரும்பு பயிர் செய்ய சொன்னது? அவன் செத்தால் நானா பொறுப்பாக முடியும்? எவன் செத்தா எனக்கு என்ன?”
உண்மைதான் பொங்கல் தவிர வேறெப்போதும் நீங்க கரும்பு வாங்குவதில்லையே… நீங்களா பொறுப்பாக முடியும்?
“ஆமாம்பா இப்ப பொங்கலுக்குக் கூட நான் கரும்பு வாங்கறது கிடையாது”.
சரி உங்களுக்கு வேண்டும் அளவிற்கு கரும்பு தருகிறேன். எத்தனை கரும்பினை உங்களால் திங்க முடியும்?
“அரைக் கரும்பு.”
அப்புறம் எதுக்கு இவ்வளவு கரும்பை விவசாயிகள் விளைவிக்க வேண்டும்? எல்லாம் எங்கே செல்கின்றன?
எல்லாரும் இப்பொழுது மாரடைப்பு வந்து சாய்கிறார்களே … அதற்கு உப்பின் மேல் பழியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மைதான்! உப்பு நிறைந்த திரவத்தின் துணையுடன் செடிகள் வேரில் இருந்து நீரை உறிஞ்சுகுகிறது என்று படித்தோமே… அதேபோல அதிகப்படியான உப்பு ரத்தத்தில் இருக்கும் பொழுது நிறைய தண்ணீரை அதற்குள் இழுத்து வைத்து ரத்தத்தின் அளவு அதிகமாகின்றது, அதிக ரத்தத்தை (preload என்பார்கள்) பம்ப் செய்து அனுப்ப இதயம் திணறுகிறது. ப்ரெஷர் அதிகமாகிறது.
ஆனால் உண்மையில் வில்லன் உப்பு கிடையாது. சர்க்கரை தான்.
உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. முக்கியமா பிளட் பிரஷருக்கு காரணம் உப்பு அல்ல.
“நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கரண்டி சார் உப்பு சாப்பிடுவீர்கள்… பத்து கரண்டி?”
யோவ். அவ்வளவு எல்லாம் இருக்காது. ஐந்தே அதிகம்.
“அப்புறம் எப்புடி 40 வயச தாண்டினாலே எல்லாரும் மாரைப் பிடித்துக்கொண்டு விழுகிறார்கள்?”
காரணம் சர்க்கரை. சர்க்கரையும் preloadஐ அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணி. அது மட்டுமல்லாமல் சுகர் தொடங்கி அதிக உடல்நலப் பிரச்சனைகளுக்கு சர்க்கரையே மூல காரணி.
ஒரு பாட்டில் அக்கா மாலா கப்சியில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று தெரியுமா?
“சோலி முடிஞ்ச்”.
இந்த உண்மையை கப்சிக்காரன் முடிந்த வரை அமுக்கிப்பார்த்தான். முடியவில்லை. சர்க்கரை தான் வில்லன் என உலகம் உணர ஆரம்பித்தது.
எனவே தங்களது விற்பனை படுத்துவிடாமல் இருக்க 1980ல் சாக்ரின் எனும் செயற்கை இனிப்பை போட்டு டயட் அக்காமாலா, டயட் கப்ஸி என புது சரக்கை இறக்கினான். சாக்ரின்னால் கெடுதல் வரும், புற்றுநோய் வரும் என ஆய்வுகள் சொல்ல ஆரம்பிக்க "இல்லை, வரும்னா அதை நிருபி" என ஒரு அஞ்சாறு வருசம் சொன்னார்கள். சாக்ரின் கெடுதல்ன்னு நிருபணமானதும், டக்குனு அடுத்த நிமிடம் "நாங்க ஆஸ்பர்டாமிக்கு மாறிட்டோம்"னு சாக்ரினை விட்டு ஆஸ்பர்ட்டமிக்கு மாறிட்டாங்க. இப்ப ஆச்பர்டாமியால் கெடுதல்ன்னு பலரும் தலை, தலையா அடிச்சுட்டு சொல்லியும் இவர்கள் கண்டுகொள்ள வில்லை. நிரூபி, ஆதாரம் கொடுன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. இப்ப அதை நிருபிக்க 20 வருசம் ஆகியிருக்கு. அடுத்த வினாடி "நாங்க ஸ்ப்ளென்டாவுக்கு மாறிடோம்"னு மாறிட்டாங்க. அதுபோக வெக்கமில்லாம "டயட் பெப்ஸியில் ஆச்பர்டாமி இல்லை"ன்னு பெருமையாக் இப்ப விளம்பரம் வேற செய்யறாங்க.
டயட் அக்காமாலா, டயட் கப்ஸி போன்றவற்றில் சர்க்கரை இல்லை, பூஜ்யம் கலோரி... ஆனால் அவற்றை குடித்தால் என்ன ஆகும்?
இந்த செயற்கை சுவையூட்டிகள் நம் பெருங்குடலில் உள்ள ப்ரொபயாடிக் பாக்டிரியாக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இதனால் ஆண்டிபயாடிக் சாப்பிட்ட விளைவு உருவாகி கட் பாக்டிரியா பாதிப்படைந்து எடை ஏறுகிறது. அதுமட்டுமல்ல ரத்த சர்க்கரை அளவுகளும் ஏறுகிறது. எலிகள் மனிதர்கள் அனைவரிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதை மெய்ப்பிக்கின்றன என்கின்றார் மரு. ஃபரூக் அப்துல்லா.
அக்காமாலா மட்டும் சர்க்கரையை நம்பி இல்லை, நீங்கள் உண்ணும் பிஸ்கட் தொடங்கி சூப்பர் மார்க்கெட் பாக்கெட் உணவு பதார்த்தங்கள் அனைத்திலுமே சர்க்கரையின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
விஞ்ஞான ரீதியாக ஆய்வுகள் செய்ய ஃபண்டிங் அவசியம். கப்சியை எதிர்த்து கைக்காசு போட்டு ஆய்வு நடத்த பணம் யார் தருவார்? ஆனால் அக்காமாலா நல்லது என நிரூபிக்க ஆய்வு செய்தால் அக்காமாலாவே பணம் தரும்.
விஞ்ஞானம் என்பது ஒரு கற்பக விருட்சம் போன்றது.அதற்குக் கீழே நின்று கொண்டு நல்லதோ கெட்டதோ எது கேட்டாலும் அப்படியே கிடைக்கும். அதில் அதிகம் கெட்டதே வேண்டப்படுகிறது எனும் குற்றச்சாட்டுக்குக் காரணம் வேண்டுபவர்களின் நோக்கம் வியாபரம்.
“சரி நான் கப்சி மற்றும் பிஸ்கெட்டுகளை உண்பதை நிறுத்தி விட்டால்… நானும் சுபிட்சமாகி… நாடு சுபிட்சமாகிவிடுமா?”
அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃப்லோ உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள். அவர்கள் இருவரும் வறுமை ஒழிப்பில் முக்கிய ஆய்வுகளை செய்தவர்கள். இருவரும் 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றனர்
“அப்படி அந்த ஆய்வில் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?”
ஏழைகள் வருமுன் காப்பது இல்லை. வந்தபின் குணப்படுத்த முயற்சி செய்துதான் வறுமையில் சிக்குகிறார்கள் என்கிறார்கள் அவர்கள்.
உதாரணமாக ஜாம்பியாவில் சுத்தமான குடிநீர் இல்லை. ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான க்ளோரின் 14 ரூ தான். ஆனால் அந்த 14 ரூபாயை மிச்சபடுத்த நினைத்து பல குடும்பங்கள் தண்ணீரை சுத்தபடுத்தாமல் குடித்து வியாதி வந்தபின் ஆயிரமாயிரமாக செலவு செய்கிறார்கள். இது அவர்களின் வறுமையை அதிகரிக்கிறது.
அதேபோல உணவுதேர்வுகள் என வருகையில் அதிக கலோரிகள் கொண்ட உணவை தான் ஏழைகள் வாங்குவார்களாம். அவற்றில் ஊட்டசத்து மிகக் குறைவே. மைதா பரோட்டா தான் நம் ஊரில் நீக்கமற நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மாற்று சிறுதானியங்களே. சிறுதானியங்களே மானவாரி பூமியின் ஹீரோ. அவைகளின் சத்துக்களும் பயன்களும் எண்ணில் அடங்காதவை.
தமிழகத்தின் எல்லா நிலங்களும் நதி நீரால் நனைக்கப்பட்டவை அல்ல. தமிழர்களின் உண்மையான சவால் வருடத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே மழை என்னும் வேற்று நீரைப் பெறுகின்ற வானம் பார்த்த பூமியில் கால்பதித்து, அந்நிலத்தில் மனிதனோடு மற்ற உயிரினங்களையும் நிலைபெறச்செய்து வாழ்வாங்கு வாழ்தல் எப்படி என்பதாகும்.
அந்த பூமியில் நம்மவர்களை வாழவைத்தவை சிறுதானியங்களே. நெற்பயிருக்கு 1400–1500 mm நீர் தேவை ஆனால் சிறுதானியங்களுக்கு 300–400 mm தண்ணீர் போதுமானது.
இவ்வாறு குறைந்த நீரில் விவசாயம் செய்து தமது ஊட்டச்சத்துத்தேவையையும், வாழ்வாதாரத்தையும் மக்கள் எப்படிப்பேணினர் என்பதைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்.