Monday, September 22, 2025

ஏர் முன்னது எருது - 4

 நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை

நீங்கள் உண்ணும் ஒரு கொய்யாப்பழம் (எனும் கொய்த பழம்), உங்கள் உடலாய்  மாறுவது தான் இந்த உலகின் ஆகச்சிறந்த அறிவியல் கலை மற்றும் மந்திரக்கலையாகும்.

மனித உடலின் வேதியியல் பொருட்களில் முக்காலே மூன்று வீசம் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறப்பட்டவையே, மீதம் நிலத்திலிருந்து பெறப்பட்டது. நமது உடல் யார் துணையுமின்றி   நம்மால் தானாக உற்பத்தி செய்யப்பட்டதல்ல. அது நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவர சமையல்காரர்களிடமிருந்து உணவுச்சங்கிலி வழியாகப் பெறப்பட்டதாகும்.

இந்த மண்ணையும் காற்றையும் மனித உடலாய் மாற்றும் வித்தை எந்த விஞ்ஞானிக்கும் மெய்ஞ்ஞானிக்கும் இதுவரை கைவரவில்லை. புவியின் இந்த வளங்களை உடலின் கட்டுமானப்பொருளாய் மாற்றும் வித்தை அறிந்தவர்கள் தாவரங்கள்.  நிலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களையும் மற்றும் நமது தாயாய் விளங்கும் இந்த நிலத்தையும் இணைக்கும் தொப்புள்கொடியாய் இருக்கின்றன தாவரங்கள். ஆதிஉயிர்கள் தமது பிறந்த வீட்டைவிட்டு; புகுந்த வீடான நிலத்திற்குள் புகுந்தது தாவரங்களின் துணையோடுதான். என்னதான் புது வீட்டில் புகுந்தாலும்; விட்டகுறை தொட்டகுறையாய் நிலம் புகுந்த தவளை போன்ற இருவாழ்விகள்; முட்டையிட நீர் என்னும் பிறந்த வீட்டையே நாட வேண்டியிருந்தது. நிலத்தில் தவளை முட்டைகள் உயிர்ப்புடன் இருக்க முடியாது. பரந்துபட்ட இந்த நிலத்தினை ஆள; இது அவைகளுக்குத் தடையாய் இருந்தது. அந்தத்தடையை உடைக்க பரிணமித்தவையே பல்லிகள். பல்லிகள் வரண்ட நிலத்தின் சூழலில் இருந்து தன் குட்டிகளைக் காக்க, கடின ஓட்டைக் கொண்ட முட்டையை இடத்துவங்கின.

முட்டைகள் என்பது எதிர்த்துத் தாக்காத, தப்பி ஓடாத, சத்துக்கள் நிறைந்த ஒரு உயிரி. அதை அபகரிக்கக் காத்திருக்கும் உயிர்கள் பல. அக்காலத்தைய பல்லிகள்; தற்போதைய ஆமைகள் முட்டையிடுவது போல்; தன் முட்டைகளைக் குழிக்குள் தள்ளி; மறைத்து வைத்தன. இருப்பினும் முட்டைகள் அடிக்கடி மற்ற விலங்குகளுக்கு இரையாயின.

எனவே சந்ததி தழைக்க வேண்டி அடுத்த உபாயம் ஒன்றை கைக்கொள்ளும் நிலைக்கு அவை தள்ளப்பட்டன. உயிர்பிழைத்தலுக்கான உந்துதலின் பேரில்  அடுத்து வந்த பல்லிகளின் மூளையை பெரிதாக்கி, கூடிவாழும் உணர்வு, பந்தபாச உணர்வு, போன்ற உணர்ச்சிகளை பரிணாமசக்தி உருவாக்கியது. இப்போதும்கூட பல்லிகளின் வழித்தோன்றலான பறவைகளில் அந்த உணர்வை நீங்கள் காணலாம். அன்றில் போன்ற பறவைகள் இணைபிரியாது கூடுகட்டி, அடைகாத்து, குஞ்சு பொரித்து, அவற்றை வளர்க்கும் கலையானது கவிஞர்கள் கண்ணுக்கு காதலாய் தெரிந்தாலும், அவை உயிர் பிழைத்தலுக்கான ஓர் பரிணாம உத்தியேயாகும்.

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இரு முக்கியத்தேவைகள் இருக்கின்றன. முதலாம் தேவை, வாழும் ஒவ்வொரு நாளிலும் எதிரிகளிடம் சிக்காமல் பதட்டத்தோடு அலைந்து உணவினை அடைதல். இரண்டாம் தேவை, தான் சாவதற்கு முன் தனது சந்ததியை முடிந்தமட்டும் பெருகச்செய்தல். உணவினை அடைதல் மற்றும் உயிர்பிழைத்தல் இவை இரண்டும் உடல்வலுவை அடிப்படையாகக் கொண்டவீரம்என்ற பண்பின் அடிப்படையால் நிகழ்ந்து வந்தது.

இருவாச்சி பறவைகளில் பெண்பறவை உடல்வலு மிகுந்த ஆண் பறவையைத் தன் துணையாகத் தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த ஆணுடன் இணை சேரும். இணைசேர்ந்த பின்னர்; முட்டையிடும் சமயத்தில் நல்லதொரு மரப்பொந்தில் கூடுகட்டி, பெண் பறவை கூட்டிற்குள்ளேயே தங்கிவிடும். ஆண்பறவை அந்த பொந்தில் சிறு துவாரம் மட்டும் இடைவெளி விட்டுவிட்டு, முழு பொந்தினையும் பூசி அடைத்துவிடும். உயிர்களின் முதலாம் தேவையான உணவுத்தேடலை ஆண்பறவை பார்த்துக்கொள்ளும், முட்டையை அடைகாத்தல் குஞ்சுகளை வளர்த்தெடுத்தல் போன்ற சந்ததி வளர்ப்பை பெண்பறவை பார்த்துக்கொள்ளும். இவ்வாறு பரிணாமத்தின் அடுத்தகட்ட உயிரிகள் அனைத்தும்வீரம்எனும் பண்பு மட்டுமல்லாமல்காதல்எனும் முக்கியமானதொரு பண்பையும் உரிக்கொண்டு எளிதாக சந்ததிகளைப் பெருக்கி நீடூழி வாழ ஆரம்பித்தன. இந்த பரிணாம உத்தியான காதல் தான் நமது உலகின் அஸ்திவாரமாக அமைந்தது.

ராட்சச பல்லிகள் உலகை ஆண்டு வந்த அதே சமயத்தில் இன்னொரு வகை உயிரினமும் அப்போது பரிணமித்தது. அவை உங்கள் வீட்டு எலியைப் போன்ற தோற்றம் கொண்டவை. அவற்றால் ஒருபோதும் பல்லிகளை எதிர்த்து வாழ்ந்திருக்க முடியாது. பரிணாமம் அவற்றின் உடலில் வேறு ஒரு மாயத்தை நிகழ்த்தியது. சிறுசிறு பூச்சிகள், நீர்த்தாவரங்கள் போன்ற உணவை உண்டுவந்த அந்த எலி இனம், பல்லிகளைப் போல் பூமியில் முட்டை இடாமல், தனது உடலுக்குள்ளேயே தனது குட்டிகளை அடைகாத்து குழந்தை ரெடியானதும் பிரசவித்து, அவை வளரும் வரை தனது உடல் தயாரித்த சத்து மிகுந்த பால் எனும் திரவத்தை ஊட்டி வளர்த்தன. பல்லிகளை எதிர்க்கத் திராணி இல்லாத அவை; தனது சந்ததி தழைக்க வேண்டி; பெண் எலியையும் குட்டிகளையும் பாதுகாப்பாய் வலை தோண்டி உள்ளே இருக்க வைத்து விட்டு, அவைமட்டும் வெளியே உணவு சேகரித்து தாய்க்கும் குட்டிகளுக்கும் அளித்து வந்தது. இச்செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செய்ய அவற்றின்மூளை இன்னும் சற்று பெரிதாக வளர்ந்தது.

இந்த காலகட்டத்தில்தான் பூமி ஒரு பெரும் விண்வெளிக்கல்லின் மோதலுக்கு ஆளானது. அந்த மோதலின் காரணமாக பூமியில் இருந்த உயிரினங்களில் 80 சதவீதம் அழிந்து விட்டது. மோதலினால் உண்டான விளைவுகளால் பூமி முழுவதும் புகை மண்டலமாக ஆகியது. அதன் காரணமாய் ஒளிச்சேர்க்கை இன்றி தரைவாழ் தாவரங்கள் மடிந்தன. பல்லிகள் பயமற்ற அவ்வுலகில் பாதுகாப்பாய் வலைக்குள் பதுங்கியிருந்த எலி போன்ற அந்த உயிரி வெளியே வரத்தொடங்கியது. தப்பிப்பிழைத்த பூச்சிகளையும் நீர்வாழ் தாவரங்களையும் உண்டுவந்த அந்த உயிரி, இச்சோதனை காலத்தை மிகுந்த பிரயாசம் ஏதுமின்றி கடந்தது. தகைவன தப்பிப் பிழைத்தன. தொடங்கியது உலகில் பாலூட்டிகளின் ஆட்சி.

புவியில் மீண்டும் வசந்தம் மலரத்தொடங்கியது. மரங்களைப் பொருத்தவரை மண்ணுக்கு அடியில் இருந்த மரங்களின் விதைகளும், வேர்களும் ஆண்டுக்கணக்கில் தாக்குபிடிக்க கூடியவை. விண்கல் தாக்குதலுக்கு பின் மண் முழுக்க சாம்பல் ஆனதால் அவற்றுக்கு நல்ல உரம் கிடைத்தது போல் ஆனது. விரைவில் மரங்களும், செடிகளும் துளிர்க்க ஆரம்பித்தன

பூக்கும் இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் புற்கள் போன்ற ஒரு வித்திலைத் தாவரங்கள் புவியை ஆக்கிரமிக்கத் தொடங்கின. புதிய சூழலுக்கு ஏற்ப பல்வகை பாலூட்டி இனங்கள் பரிணமித்தன. பல்லிகள் காலத்தைய அதே சமன்பாடு பாலூட்டிகள் காலத்திலும் தொடர்ந்தது. தாவரங்களின் இலைகளையும் புற்களையும் ஆடுமாடு போன்ற தாவர உண்ணிகள் எடுத்துக் கொண்டன. தாவரங்களின் முனைப்பகுதி நல்கும் பூக்களையும் பழங்களையும் விதைகளையும் நம்பி பழந்திண்ணி வவ்வால் அணில் போன்ற பாலூட்டிகள் பரிணமித்தன. இந்த உயிரினங்கள் அனைத்தையும் உண்ணும் புலி சிங்கம் போன்ற வேட்டையாடும் விலங்குகள் பூமியில் உலா வரத் தொடங்கின. அந்த அனைத்து மிருகங்களும்  தற்போதைய மிருகங்களைக் காட்டிலும் உருவத்தில் பெரியவை

அந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகை பாலூட்டி இனம், பூச்சிகளை முக்கிய உணவாகக் கொண்ட போதிலும், நிலத்தில் உள்ள விலங்குகளில் தொல்லை இல்லா மரஉச்சியில் குடிகொண்டு, மரத்தின் நுனி வழங்கும் பழங்களை உணவாகக் கொண்டு வாழத் துவங்கின. மரத்திற்கு மரம் தாவும் வண்ணம் நீண்ட கைகளையும் விரல்களையும் அவை கொண்டிருந்தன. அவைதான் நமது முன்னோர் என டார்வின் சொன்னபோது யாரும் அவரை நம்பவில்லை.



குரங்குகள் அனைத்திற்கும் 48 குரோமோசோம்கள். நமக்கோ 46 குரோமோசோம்கள்.

“48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக எப்படி மாறியது ?”

மனிதனைத் தவிர மற்ற குரங்குகளுக்கு  48 குரோமோசோம் (24 சோடிகள்) மனிதனுக்கோ  46 குரோமோசோம் (23 சோடிகள்). மீதி ஓரு சோடி எங்கே என வாழைப்பழக்காமெடி கவுண்டமணி போல ஆய்வாளர்களர் அதிர்ச்சியுற்றனர்?

குரோமொசொமில் centre ல் இருப்பது centromere, இருபக்க முடிவில் tail endல் இருப்பது telomere என நாம் அறிவோம்.  48 குரோமோசோம்; 46 குரோமோசோமாக மாறினால், ஏதோ ஓரு சோடி குரோமொசொம்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கலாம் என பலகாலமாக நம்பி வந்தனர்,

அப்படி ஒட்டியிருந்தால்ஒட்டி உருவான குரோமொசொமில் இருபக்க முடிவில் இரு telomere இருப்பது மட்டுமல்லாமல் எக்ஸ்ட்ரா ஒரு centromere’ரும்; ஒரு telomere’ரும் நடுவில் காணப்படவேண்டுமல்லவா?

அப்படி ஒரு குரோமோசோமை கண்டு பிடித்து விட்டார்கள்,

 


இதுபோல் மரபணு பிழைகளால் குரங்குகளில் இருந்து நாம் தோன்றினோம் என்பதை மரபணுக்களைக் கண்டறியாத அக்காலத்தில் எப்படி நிரூபித்திருப்பார்கள்?

இக்கருத்தை நிரூபிக்க புதைபடிவ ஆதிமனித மண்டையோடுகள் பயன்பட்டன.

ஆதி மனிதர்களின் மண்டையோடுகள் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஒரு வழியாக குரங்குகள் தான் நம் மூதாதையர் என ஒத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

அடுத்த கேள்வி மனிதன் எங்கிருந்து தோன்றினான்?

டார்வின் "ஆப்பிரிக்காவில் தேடுங்கள். கிடைக்கும்" என்றார்.

ஏன் ஆப்பிரிக்கா? டார்வின் ஏதும் அகழ்வாராய்ச்சி செய்தாரா?

இல்லை. ஆனால் அங்கேதான் சிம்பன்ஸி, உராங் உடான், கொரில்லா மாதிரியான ஏப் வகை குரங்குகள் அதிகம் இருந்தன. மனிதனும் அப்போது அங்கேதானே தோன்றி இருக்கமுடியும்?

உண்மைதான் அங்கே தான் நாம் தோன்றினோம்.

ஆப்ரிக்கக் காட்டில் உலாவி வந்த பாலூட்டி விலங்கிலிருந்து கிளைகள் தாவும் விலங்காக நாம் மாறியபிறகு, முன்னால் இருந்த இருகால்களும், கைகள் எனும் பதவி உயர்வைப் பெற்றன. அந்தக் கைகளைக்கொண்டு கிளைகள் தாவுதல், பழங்கள் பறித்தல், பெண் குரங்குகளுக்கு பேன் பார்த்து அவற்றை கரெக்ட் செய்தல் போன்ற செயல்களை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.

இதே சமயம் பூமியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களால் காடுகளை விட்டு  பரந்த புல்வெளி சவானாவில்நம் முன்னோர்கள் இருகால்கள் கொண்டு  நடைபழக ஆரம்பித்தனர். மரங்கள் குறைவாக இருக்கும் தரையில் உலாவி வந்த  அவர்கள்; தரை வேட்டையாடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தங்கள் வாழ்வுமுறையில் சில மாற்றங்களைப் பழக ஆரம்பித்தனர். சமூகமாய் கூடி இருத்தல், மற்ற விலங்குகள் போல சீசனில் கூடாமல் வருடம் முழுதும் கூடி நிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற வாழ்வுமுறை மாற்றங்கள் அவற்றில் குறிப்பிடும்படியானவை.

 இதன் பின்னே முழுவதுமாய் நிமிர்ந்த நடை வந்ததால், அவர்களின் முன்னங்கைகளுக்கு முழு விடுதலை கிடைத்தன. சும்மா இருக்கும் கைகளுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டுமே என அவர்களின் கைகள் பரபரத்தன. பேன் பார்த்த கைகள்; பூ பறித்துக் கொடுத்து காதலை ப்ரொபோஸ் செய்திருக்கும் என நாம் எண்ணுவதற்கு இடம் இருக்கிறதுதான். இனப்பெருக்கத்திற்கான காதல் எவ்வளவு முக்கியமோ அந்த சமூகத்தில் இருந்த மனிதனுக்கு வீரம் அதைவிட முக்கியமான தேவையாக இருந்தது. இப்போது கூட உங்கள் துணைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதைப் பார்த்துக் கொண்டு உங்கள் கைகள் என்ன பூப்பறித்துக் கொண்டிருக்குமா? அல்லது கல்லைக் கொண்டு எதிரியின் மண்டையை உடைக்குமா?

எனவே வேட்டையாடுவதற்காகவும் வேட்டையாடப்படாமல் இருப்பதற்காகவும் கைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் நம் முன்னோர்கள். விளைவுகற்களை ஆயுதமாக பயன்படுத்த தொடங்கினார்கள் அவர்கள். அதனால் அவர்களது உடலமைப்பில் மாற்றம் நேர்ந்தது. எந்த அளவிற்கு மாற்றம் என்றால் விலங்குகளிலேயே அதிக தூரம் ஒரு பொருளை தூக்கி எறிய கூடிய சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது எனும் அளவிற்கான மாற்றம்

மேலும் அவர்கள் நெருப்பினைக் கண்டுபிடித்த பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்தனர்அதன்பின் நெருப்பில் வாட்டி உணவு உண்ணும் முறையையும் கண்டுபிடித்தனர்இதனால் இரண்டு பயன்கள் விளைந்தன.

சமைத்த உணவினால் இப்பொழுது செரிமானம் மிகஎளிதாக நடக்கத் துவங்கியது. மேலும் குடலின் நீளமும் குறையத் துவங்கியது. கற்கால பேலியோடயட் மனிதன் கிடைத்ததை எல்லாம் சமைத்து உண்ணும் மனிதனாக மாறத் துவங்கினான். சமைத்த உணவை உண்டதால் மூளையும் வளர்ந்தது. வளர்ந்த மண்டையை உடைய குழந்தைகளை பிரசவிக்க நம்  மூதாதையப்பெண்கள் திணறினர். அதனால் முழு வளர்ச்சியுடைய மூளையோடு பிரசவித்து, பிறந்தவுடனே ஓடும் திறன் பெற்ற மற்றவிலங்குகளின் குழந்தைகள்  போலல்லாமல், குறைந்த மூளை வளர்ச்சியுடைய குழந்தைகளை ஈன்றனர் மனிதர்கள். அவர்கள் பெற்ற அக்குழந்தைகள் முழு வளர்ச்சியடைந்து நடக்க ஆரம்பிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. எனவே மகளிருக்கு குழந்தை வளர்ப்பு என்பது முக்கிய வேலையானது. மேலும் ஐந்து வருடங்களுக்கு ஒரு குழந்தை என்ற அளவிலேயே அப்போதைய மனிதப்பெருக்கம் இருந்தது. அதிலும் வலுக்குறைந்த குழந்தைகளைக் குறிவைத்து உருவில் பெரிய கழுகுகளும் மற்றேனைய வேட்டையாடிகளும் சப்புக்கொட்டியபடி வலம் வந்தன. இதனால் குழந்தைப்பேறு குழந்தை வளர்ப்பு என மகளிரும் குழந்தைகளும் பாதுகாப்பாய் வீட்டில் இருக்க, ஆண்கள் குழுவாய் வேட்டையாடத் தொடங்கினர்.

பகல் முழுவதும் வேட்டை, பிறகு இரவு சமூகமாய் கூடி; வேட்டையாடிய உணவை உண்டு உறங்குதல் என வாழப்பழகினர் மனிதர்கள். அட்ரினலின் எனப்படும் பகலின் பதட்ட ஹார்மோனால் மனிதர்கள் பயந்தும் பாய்ந்தும் வந்தனர். அதுவே அவர்களை சிறந்த வேட்டையாடியாகவும் எதிர்க்கவியலா வேட்டையாடியிடம் இருந்து சிறப்பாக தப்பிக்கவும் செய்தது. பகல் முழுவதும் பதட்டம் மற்றும் பசி, மாலை வயிற்றுப்பசி தணிந்தபின் இரவு முழுவதும் பகலின் பதட்டத்தைத் தணிக்கும் உறக்கம் என அப்போதைய மனிதர்களின் வாழ்வானது தராசின் இருதட்டுகள் போல அழகாக ஊசலாடியவாறு இருந்துவந்தது.

உணவுச்சங்கிலியின் உச்சியில் இருக்கும் ஒரு புலியால் வனத்தில் உள்ள எல்லா மான்களையும் அழித்துவிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் அவை பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக அந்த உச்சியில் வந்தமர்ந்திருக்கிறது. அவற்றில் இருந்து தப்பிக்கும் ஓட்டத்தையும் உருவ மாற்றத்தையும் புலியின் வேகத்திற்கும் தாக்கத்திற்கும் தப்பித்து ஓடுவதற்கு மான்களும் பலமில்லியன் ஆண்டுகளாகப் பரிணமித்து வந்திருக்கும்.

 ஆனால் மனிதனோ கையில் ஆயுதம் ஏந்திய பிறகு, டபுக்கு டபுக்கு என கொக்கி குமாரைப் போல்  மேலே வந்து விட்டான். அருகாமையில் இருக்கும் விலங்குகளிடம் மட்டுமே புலி தனது ஆற்றல்மிகு ஆயுதங்களான பற்களையும் நகத்தையும் பயன்படுத்த முடியும். ஆனால் ஆயுதங்களை கையில் எடுத்தமனிதனால் மறைந்திருந்தும் தாக்கமுடியும். மேலும் தூரத்தில் இருந்தும் தாக்க முடியும். விளைவு, ஆயுதங்கள் எனும் ஸ்பெஷல் ஐட்டத்தை எங்கிருந்து எறிகின்றனர் எனத் தெரியாமல் தள்ளாடும் வடிவேலுவைப்போல் சஸ்பென்சோடு சாக ஆரம்பித்தன அப்போதைய விலங்குகள். இவ்வாறு திடீரென்று உணவுச்சங்கிலியின் உச்சிக்கு வந்த மனிதர்களது வேகத்திற்கு மற்ற விலங்குகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவனால் பல விலங்குகள் இந்த உலகில் இருந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லாமல் மறையத் துவங்கின.

ஆப்ரிக்காவில் ஓரிடத்தில் நம் நேரடி மூதாதையர்களானஹோமோ ஹாபிலிஸ்’; ஒரு பபூன் குரங்குக்கூட்டத்தை ஒன்றுகூடி கல்லெறிந்தே கொன்றழித்ததற்கான தடையங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறாக உணவுக்காக கொன்றது மட்டுமல்லாமல் வளங்களுக்குப் போட்டியாக இருந்த சக குரங்குகளையும் கொல்ல ஆரம்பித்தனர் நமது முன்னோர்கள். ‘ஆஸ்ற்றலோபதிகஸ் ரொபஸ்ட்டஸ்என்பவர்கள் உருவில் பெரிய மனிதஇனம். அவர்கள் ப்யூர் வெஜிடேரியன்கள். அனைத்துண்ணிகளான  நமது உணவில் வெஜிடேரியனும் இருந்ததால் போற போக்குல அவர்களையும் போட்டுத்தள்ளி விட்டோம்.

வளங்களுக்குப் போட்டியாய் உள்ளவர்களை அழித்தாலும் அதிகரிக்கும் எண்ணிக்கை காரணமாக, இருக்கும் வளங்கள் பத்தாமல் புதிய வளங்களைத் தேடி கால்நடையாகவே உலகம் முழுதும் பரவ ஆரம்பித்தனர் அக்காலத்தைய மனிதர்களானஹோமோ சேப்பியன்ஸ்’. ஹோமோ எனும் மனிதப் பேரினத்தின் கீழ் பல இனங்கள் இருந்தன. எப்படி பூனைக் குடும்பத்தில் புலி சிங்கம் சிறுத்தை வீட்டு பூனை போன்ற பல வகை குழுக்கள் இருக்கிறதோ அதே போல அந்தகாலத்தில் மனித குடும்பத்தில் பல வகை மனித குழுக்கள் இருந்தனஉதாரணத்திற்கு நமது நெருங்கிய பேலியோ டயட் நீண்டர்தால் மனிதர்கள். அவர்கள் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நம் மூதாதைய மனிதர்கள் போல கிடைத்ததை சமைத்து உண்ணும்  வழக்கத்திற்கு மாறாமல், உண்ணுவதற்கு  கறி தான் வேண்டும் குறியாக இருந்தனர். அதனால் மம்மூத் யானைகளின் மண்டையைப் பிளந்து மாவிளக்கு வைத்து தின்றுகொண்டிருந்த அவர்கள், மம்மூத் யானை அழிவுக்கு காரணமாக அமைந்தனர். மம்மூத் யானைகள் அழிந்த பிறகு உணவு தட்டுப்பாட்டினால் சுற்றிக் கொண்டிருந்த பங்காளிகள்; பனியுக முடிவில் உலகில் இருந்தே மறைந்து விட்டனர். இவ்வாறு பலவகை மனித இனங்களும் அழிந்தன அல்லது நம்மால் அழிக்கப்பட்டன. மிஞ்சிய Homo sapiens என்கின்ற நமது இனம் மட்டும் உலகில் வாழ ஆரம்பித்தது. பனியுகம் முடிந்து கண்டங்கள் தனிமை பட்டபோது அந்தந்த இடங்களிலேயே; பல குழுக்களாய் பிரிந்த Homo sapiens மனிதர்கள் தங்கிவிட்டனர்.

ஓரிடத்தில் நிலையாய் தங்குவதற்கு முக்கியத் தேவை, நிலையான உணவு கிடைத்தல். நீர்நிலைகள்மீன்என்னும் நிலையான உணவைக்   கொண்டிருந்தன. மூளை பெரிதான மனிதனுக்கு மீன்பிடிக்கும் கலை எளிதில் கைவந்தது. உண்டது போக மீதம் ஒதுக்கிய மீன் கழிவுகளைக் கொண்டு தாவரங்கள் புஷ்டியாக வளர்வதை கவனித்த மனிதன், நிலத்தைச் சீரமைத்து தாவரங்களை வளர்க்கத் தொடங்கினான்.

தாவரங்கள் வழங்கிய பழங்கள் தானியங்களை; தான் எடுத்துக்கொண்டு, தாவரங்களின் மற்ற பகுதியை வேட்டையில் சிக்கிய இளம் கன்றுகளுக்கும் ஆடுகளுக்கும் கொடுத்து அவற்றை வளர்த்து, பின்னர் அவை அளவில் பெரிதானதும் உண்ணத்தொடங்கினான். மேய்வனவற்றை இவ்வாறு வீட்டு விலங்காகப் பழக்கத்தொடங்கினான் அவன். அவைகளும் மனிதனோடு இணைந்து வாழத் தொடங்கின. அவற்றின் கழிவைக் கொண்டு மட்கச்செய்யும் உயிரிகளும், மண்புழுக்களும், வண்டுகளும் நிலத்தை உயிர்ப்புடன் வைக்க, நிலம் பண்பட்டது. மாமிசம் போலல்லாமல், தானியங்களைக் கெடாமல் சேமிக்க முடிந்தது. மேலும் தானியம் நல்கும் உயர்தர மாவுச்சத்து; மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரித்தது. இதன் விளைவால் செரிமானத்திற்கு நேரம் மிகவும் குறைவாக செலவிடப்பட்டது. மீதி உபரி நேரத்தில் வளர்ச்சியடைந்த மூளையைக் கொண்டு முக்கியமான ஒரு விஷயத்தை செய்தார்கள் மனிதர்கள்.

அந்தச் செயலின் பெயர்சிந்தனை’.

காட்டுக்குள்ள  போனீங்கன்னா; நீங்க வந்ததை ஆள்காட்டிப் பறவைகளும் இலங்கூர் குரங்குகளும் வனத்திற்கே கூச்சலிட்டு காட்டிக் கொடுத்து விடும். லங்கூர் குரங்குகள் எதிரிகளுக்கு ஏற்ப அலறல் லியின் அளவை கூட்டி குறைத்து பிற விலங்குகளுக்கு வரும் விலங்கு இன்னதென்று தெரிவிக்கின்றது. புலி என்றால் பெரிய அலறல், நரி என்றால் அதற்கு ஒரு வகை அலறல், இணையைக் காணும் போது ஒரு வகை அலறல்.

 இவ்வாறு எதிரியின் வரவை அறிவிக்க அவை எழுப்பும் லியை பாஷை என எடுத்துக் கொள்ளலாமா?

ஆட்காட்டி பறவைகளாலும் லங்கூர் குரங்குகளாலும் எதிரி வரும் பொழுது தான் சத்தம் எழுப்ப முடியும். ஆனால் சிந்தனையின் விளைவாக மனிதர்கள் எதிரி இல்லாத பொழுதும்  உபரி நேரத்தில் வித விதமான சப்தம் எழுப்பி, உணர்வுகளைப் பரிமாற ஆரம்பித்தனர். ‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவேஎனும் தொல்காப்பியரின் கூற்றுக்கு இணங்க மனிதனானவன் அவன் பார்த்த மற்றும் உணர்ந்த ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சொல்லை உருவாக்கிக் கொண்டான். அவைதான் ஒரு மொழிக்கே அடித்தளமாய் அமைந்தது.

எண்ணிக்கையில் பெருகிய மனிதர்களுக்கு; தங்களுக்குள் அவர்கள் கண்டுபிடித்த மொழியாலேயே எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது. தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் என்னநேரும், அதை எப்படி எதிர்கொள்ளலாம் என திட்டமிட முடிந்தது.

இவ்வாறாக மொழியைக் கண்டுபிடித்த பிறகும் அவர்களுக்கு ஒரு குறை இருந்தது. அவர்கள் மொழியின் துணைகொண்டு பேசிய சொற்களனைத்தும் காற்றில் விரைவாகக் கரைந்து போயின.

பேசும் சொற்களை சாசுவதமாக்க என்ன செய்யலாம்? நான் சொன்ன வாக்கியங்களை வார்த்தை மாறாமல் என் சந்ததிகள் அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?”

 புலியை புலியின் தோற்றத்திலேயே குகையில் கிருக்கியவன், வார்த்தைகள் பயன்பாடு அதிகரித்து; மொழி பிறந்த பிறகு, ஒவ்வொரு வார்த்தையையும் எளிய கோடுகளால் வரைய ஆரம்பித்தான். மொழி எழுத்து வடிவம் பெறத் துவங்கியது. எழுத்துக்கள் பாறைகளில் வடிக்கப்பட்டன. மனிதனாகப்பட்டவன் தான் சொல்ல நினைத்த வாக்கியங்களை; கல்வெட்டில் வெட்டி வச்சுட்டு பக்கத்துலயே உக்காந்துகிட்டான்அவனுக்கு பின்னாடி வந்த சந்ததிகள்; அதை பார்த்து  படித்து தெளிவாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறு எழுத்து வடிவங்களை மொழி அடைய ஆரம்பித்தது. அதன் பின்னர் தனது எண்ணத்தை, தான் பார்த்ததை, தான் இரசித்ததை நயம் பட எழுத ஆரம்பித்தான் மனிதன். இதன் காரணமாய் உருவாகத் தொடங்கின இலக்கியங்கள்.

இவ்வாறாக சிந்தனையின் துணையால் கண்டுபிடிக்கப்பட்ட மொழி, ஞானத்தால் சீர்படுத்தப்பட்டது. அவ்வாறு சீர்பெற்று சிறப்பு வாய்ந்த மொழிகள் பலவும் இப்போது பேச்சு வழக்கற்று போய்விட்டன. உதாரணத்திற்கு ஆசிய மொழிகளான சுமேரிய மொழி, ஹாத்திக் மொழி, ஹூரியத் மொழி, உராத்திய மொழி, அக்காடிய மொழி, எப்லைட் மொழி, ஆர்மோரை மொழி, ஹிட்டைட்டு, லூவிய மொழி மற்றும் எலமைட் ஈல மொழி அனைத்தும் இப்போது யாராலும் பேசப்படவில்லை.

தரவுகளின் அடிப்படையில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இழையறாமல் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருபவை மண்டரின் எனப்படும் சீன மொழி  மற்றும் தமிழ் மொழி. இவை இரண்டுக்குமான ஒற்றுமை ஒன்று உள்ளது. இவை இரண்டுமே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இலக்கியத்தைக் கொண்டவை.

கில்கமேஷ், இயேசு பிறப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்னால் அக்காடிய மொழியில் மெசபட்டோமியாவில் களிமண்ணில் அச்சு வடிவில் எழுதப்பட்ட ஒரு புனைவுக்கதை. அந்தப் புனைவின் மூலம் அவர்கள் வாழ்வியல் எவ்வாறு இருந்தது என நமக்கு ஒரு சித்திரம் புலப்படுகிறதுஆனால் அவை தற்போதைய வாழ்வியலுக்குத் தொடர்பில்லாதவை. அப்போது அந்த நிலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பண்பாடு; மதம்; வாழ்வியல் போன்றவற்றிற்கும், தற்போது அங்கே வாழும்  ஈராக்கியர்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை.

ஆனால் மக்களின் வாழ்வியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் மூலம் வளர்ந்த மொழியானது தானும் அழியாமல் தன்னைப் பேசும் மக்களையும் அழியாமல் வளர்ந்து வரும்.

அதற்கு உதாரணமாக சீனமொழியைக் கொள்ளலாம். சீனர்களின் பாடல்கள் பொதுவாக நமது சங்ககாலப் பாடல்கள் போன்றே செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன. கிட்டத்தட்ட இதேவடிவில் தான் கில்கமேஷ் காவியமும் எழுதப்பட்டது. கில்கமேஷ் ஒரு புனைவு இலக்கியம். ஆனால் நம்மை போலவே அரிசி விளைவிக்கும் விவசாய வாழ்வு  வாழ்ந்து வந்த சீனர்கள், தாம் இயற்றிய செய்யுளில் இயற்கையின் கூறுகளையும் காதலையும் பின்னிப் பிணைத்து எழுதியிருந்தனர். அதனால் சீனமொழி இன்றளவும் உயிரோடு இருக்கும் ஒரு செம்மொழியாக விளங்கி வருகிறது.

உலகு முழுவதும் பரவிய மனிதர்கள் தங்களுக்கான மொழியை மட்டும் கண்டடையவில்லை. அவர்கள் தங்களுக்கான உயர்சத்து நல்கும் ஒரு தானியத்தையும் கண்டுபிடித்து விவசாயக்குடிகளாக மாறிக்கொண்டிருந்தனர். மேலும் விவசாயக்குடிகள் தங்கள் சூழலில் உள்ள விலங்குகளை வீட்டு விலங்குகளாகப் பழக்க ஆரம்பித்தனர். அது அவர்களது வேலைகளை எளிதாக்கியது, அவர்களுக்கு புரதம் நிறைந்த உணவை வழங்கியது. மேலும் நிலத்தையும் வளமாக்கியது.

இருப்பினும் விவசாயக்குடிகள் மூலம் சமூகம் பெரிதான போது எதிரிகள் தொல்லையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே எதிரிகளிடமிருந்து காக்க ஒரு குழுவினர், உழைக்க ஒரு குழுவினர், வழிநடத்த ஒரு தலைவன் என்று வேலைகளைப் பிரித்துக் கொண்டனர் அச்சமூகத்தினர். இதன் மூலம் ஒரு நல்ல சமூகக்கட்டமைப்பு உருவானது. அச்சமூகங்களிலிருந்து பல்வகை நாகரிகங்கள் முளைக்க ஆரம்பித்தன. அதுவரை வலுத்தது வலுக்குன்றியதை அடித்து உண்ணுவதே இயற்கையாய் இருந்ததுஆனால் நாகரிகக் கட்டமைப்பில், வலுத்தவன் வலுக்குன்றியவனை பாதுகாப்பது அரசின் முதற் கடமையாய் மாறியது. இந்த அறம் நோக்கிய முன்னகர்வு நாகரிகங்களை ஸ்திரப்படுத்தியது. இவ்வாறு ஒவ்வொரு நாகரிகமும் தமக்கென அறக்கோட்பாடுகளை வகுத்துக்கொண்டன. அவை மனிதர்களைப் பண்படுத்தி பண்பாடு உருவாகக் காரணமாய் அமைந்தது.

 ஒரு நாகரிகம் உருவாக முக்கியத் தேவை நிலையான உணவு, அரசாங்க கட்டமைப்பு, மொழி வன்மை, பண்பாடு மற்றும் புது தொழில்நுட்பங்கள். இவை அனைத்தையும் கொண்டு ஒரு நல்ல நாகரிகம் உருவான போதிலும்; அத்தகைய நாகரிக குழுக்களைச் சிதைக்கும் வண்ணம், திருட்டு கொள்ளை முதலிய சமூகவிரோத காரியங்கள் தலைதூக்க ஆரம்பித்தன. சமூகவிரோத கருத்துக்கள் மனதில் உருவாகாமல் தடுத்தால் மட்டுமே சமூகம் சிதையாமல் இருக்குமல்லவா? எனவே சில அறிவில் சிறந்த மக்கள் அவ்வாறான எண்ணத்தை மக்களின் மனதில் தலைதூக்க விடாமல் செய்ய மனிதனை உயிர்பிழைக்க செய்துகொண்டிருந்த ஒரு ஆதி உணர்ச்சியினை பகடைக்காயாய் கொண்டு ஒரு பிரமாதமான உருவகத்தை உருவாக்கி அம்மக்களை கட்டுப்படுத்தினர்.

அவசர காலங்களில் உயிரினங்களை பிழைக்க வைக்க தன்னிச்சையாய் முடிவெடுக்கத் தூண்டும் ஒரு ஹார்மோனை உடல் சுரக்கச்செய்யும். அதன் பெயர்அட்ரினலின்என்பதைப்பற்றி பார்தோமல்லவா. அதன் வேலை யாதெனில், ஆபத்து ஏதேனும் ஒரு உருவில் நம் முன்னர் நிற்கும்போது, எதிர்க்கக்கூடிய ஆபத்தாய் இருந்தால் அதை எதிர்த்து நிற்கத்தூண்டும். எதிர்க்க முடியாத ஆபத்தாய் இருந்தால் தப்பியோட அல்லது சரணடையச் சொல்லும். எதிரிகள் முன் இருக்கும் போது உடலில் தற்காப்புக்காக ஒரு உணர்ச்சியை மூளையின் அமைக்டாலா துணையுடன் தோற்றுவிக்கும். அதன் பெயர்பயம்’. குரங்கை விட சற்றே அறிவைத் தூக்கலாய்க் கொண்டிருந்த ஆரம்பகால மனித சமுதாயம், தன் அறிவைக் கொண்டு அறியவியலா சக்திகளைக் கண்டு பயந்து ஓடின. நெருப்பு, இடி, புயல், வெள்ளம், கொள்ளை நோய்கள் என அவற்றின் எண்ணிக்கை பெரிது.

 ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு நாய் ஒன்றை மடக்கினால், ஒன்று அது நம்மை திருப்பித் தாக்கவரும். அல்லது தனது கால்களுக்கிடையில் வாலைக்குழைத்து குறுகி நம்மிடம் மண்டியிட்டு சரணடையும். மேற்கூறிய சக்திகளிடமும் மனிதன் பயத்தின் காரணமாக அவ்வாறே சரணடைந்தான்.

அதன்காரணமாய் அவனை பயப்படுத்திய அந்த ஐந்து பூதங்களையும் வணங்க ஆரம்பித்தான். அந்த ஐம்பூதங்களில் வானைத் தவிர மற்ற பூதங்களை அறிவு விசாலமானதும் தெளிவுற அறிந்து கொண்டு, அவற்றை ஆக்கபூர்வமாக உபயோகித்தான். 'Yesterday's magic is today's science and today's magic is tomorrow's science' என்ற கூற்றுக்கு இணங்க நேற்றைய மந்திரமாகிய நெருப்பு உள்ளிட்ட ஆற்றல்களை  அறிவியலாக்கி தனக்கு நன்மை பயக்கும் வண்ணம் பயன்படுத்த ஆரம்பித்தான்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விழுந்த முதல் பொறி, நெருப்பினுடையதே. நெருப்பு - perhaps the greatest discovery of mankind. நெருப்பின் கண்டுபிடிப்பு தாமதப்பட்டுப் போயிருந்தால், பல நிகழ்வுகள் தள்ளிப் போயிருக்கலாம். யார் கண்டது. சாப்பிடும் பொருட்களை அதில் வாட்டுதல்-இருள்,குளிரை சமாளித்தல்-ஆயுதம் செய்யவென்று பல அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு நெருப்பே பிரதானம். அதனினும் முக்கியமாக ஒரு நிகழ்வை-அட, கற்களை உரசினால் டக்கென்று பொறி வருகிறதே-தன்வசப்படுத்த முடிந்த பெருமை உளவியல் ரீதியாக மிகப் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். இருப்பினும் நெருப்புக்கு கடவுள் அந்தஸ்து நீக்கப்படவில்லை. அது இயற்கையின் ஒரு கூறு என்பதால் அதை வழிபடுவது தவறில்லை என்றே தோன்றுகிறது.

அடுத்து வானுக்கு வருவோம்

இந்த வானம் - வெளி சார்ந்த விஷயங்கள் மீது ஆதி மனிதனுக்கு இருந்த தீராவேட்கையை அவர்களது மேலிருந்து ஒளி இறங்குவது போலவோ,அமானுஷ்ய உருவங்கள் இருப்பது போலவோ வரைந்த அல்லது செதுக்கிய குகை ஓவியங்கள் - சுவர் சித்திரங்கள் - சிற்ப வேலைகள் போன்றவைகளிலிருந்து நாம் மிகச் சுலபமாக உணரலாம். எப்பொழுதுமே வானம் அவனுக்கு எட்டா தொலைவு தான். மலை - கடல் - காடு என்று எல்லாவற்றுடனும் அவனுக்கு ஒரு physical contact இருந்தது. ஆனால், வானத்துடன் மட்டும், mere psychological contact.

நாளைக்கே வானின் மீது ஏதேனும் பறந்தால் அது ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இதுவரை நாம் கண்டிருக்காத வடிவில் இருந்தால் அது கட்டாயம் கடவுளாக்கப்பட்டு விடும் அல்லது சாத்தானாக்கப்பட்டு விடும். முன்னது நல்ல பயம். பின்னது கெட்ட பயம்.

இப்படித்தான்தானா தீவுபழங்குடியினர் தாம் கண்ட ஒரு பறக்கும் பொருளை வழிபட ஆரம்பித்தனர்.

அவர்கள் கண்டது ஒரு ஏரோப்பிளேனை!




சிரிப்பு வருகிறதா?

நாம் அவர்களைக் கண்டு சிரிக்கக் கூடாது என்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

ஒன்றுஅடுத்தவர் மத நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

இரண்டுபிளேன் ஆத்தாவை பழித்தால் , அவள் உங்கள் கண்ணை குத்தி விடுவாள்.

மூன்றுவாயிலிருந்து லிங்கத்தை எடுத்தால்; உடனே காலில் விழுந்துவிடும் நமக்கு, அவர்களைப் பார்த்து சிரிக்க யோக்கியதை இல்லை.

அவர்களை விடுங்கள்நாம் அறிவியலில் முன்னேறியவர்கள் என்று கூறிக்கொள்கிறோம் அல்லவா? இருப்பினும் அறிவியலாலும் விசும்பு அல்லது வெளி எனப்படும் ஆகாயத்தைப் பற்றி மட்டும் இன்னும் முழுவதும் அறிந்த பாடில்லை தானே?

 அதனால் இன்னும் அதனிடம் பயஉணர்ச்சி மிச்சமிருக்கிறது நமக்கு.

ஒருபுறம் பயம் இருந்தாலும், வானம் -> வானியல் சார்ந்த நிகழ்வுகளை எவ்வடிவிலாவது பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலும் அக்காலத்தைய மக்களிடம் வளரத் தொடங்கியது. கி.பி.15,000 போன்ற காலகட்டத்திலேயே நிலவின் வளர்பிறை - தேய்பிறை சுழற்சியினை (lunar calendar) வரைந்து வைத்துள்ளனர். Stonehenge மாதிரியான விஷயங்கள் நிறுவப்பட்டு வந்தன. சில கட்டுமானங்களின் பயன் தெரியாவிட்டாலும், பெரும்பாலும் இதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் நட்சத்திரங்கள், சூரியன், நிலவு போன்றவைகளின் இடங்களை - திசையை கண்டறியவே (sort of a calendar) கட்டப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், வானியல் நிகழ்வுகள் கூர்மையாக கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஆவணப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்தே வெகு சீராக ஏதோவொரு வகையில் வான்வெளியை கூர்ந்து நோக்கும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில் வானியல் நிகழ்வுகளை தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் விஷயமும் நடைமுறைக்கு வந்தது (Astrology). ஒருசில பேர் அறிவியல் ரீதியாக இவ்விஷயங்களை அணுக முற்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு கடும் மழை, புயல், வெள்ளம், எரி நட்சத்திரம் போன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்து பயம் இருந்தபடியால், சடங்குகள் ரீதியிலான வழிமுறையே அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. இந்த சடங்குகளைச் செய்தால், இதிலிருந்து தப்பிக்கலாம் எனும் போது, சர்வ நிச்சயமாக அந்த வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தவறோ - வியப்போ இல்லை. Emergency exit. இந்த இயற்கை - வானியல் குறித்த நிகழ்வுகளை அக்காலகட்டத்தில் எவ்வாறு கையாண்டனர் என்பது மிக மிக முக்கியமானதொரு விஷயம். காரணம், இதன் பின்னணியில் மதம் பெரும் பங்காற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த மிக முக்கியமானதொரு கட்டுரை 1795ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுள்ளது. The History of Astronomy by Adam Smith.

யார் இந்த ஆடம் ஸ்மித்? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, 18ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு சமூக தத்துவியலாளர்.

Father of economics என்று பலர் இவரை அழைக்கின்றனர். அவரின் இந்தக் கட்டுரை மிக உன்னிப்பாக - வானியல் சார்ந்த மூட பழக்கங்களையும் மனிதர்களிடம் அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெகுவாக பதிவு செய்திருக்கிறது.

அவர் எதனடிப்படையில் இவ்விஷயத்தை அணுகினார் எனபது குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மிகச் சிறந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை இதிலிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அறிவியலின் அளப்பரிய வளர்ச்சியால் மதம்கடவுள் குறித்து பார்வைகள் முற்றிலும் மாறிப் போனது. வெளி - வளி மண்டலம் - சூரியன் - அண்டம் போன்றவைகள் பற்றிய நமது பார்வை விரிவடைய விரிவடைய, அதன் மர்மங்கள் - சூட்சமங்கள்  - பிரமாண்டம் ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது. ஆனால், இன்னும் அதில் நாம் முழுமையடவில்லை. முடியுமா என்பதும் கேள்விக்குறியே.




அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவந்த போதிலும், மனித மூளையில் அளப்பரிய அளவிற்கான radical change ஏற்பட வழிவகுத்த போதிலும், இன்னும் பல வகைகளில் மதங்களின் பெயரால் சில (போலி)நம்பிக்கைகள் உலா வந்துகொண்டே தான் இருக்கின்றன. சுருக்கமாக இதுபோன்றவைகளை "அற்புதங்கள்" என்று அதனை நம்புகிறவர்கள் அழைக்கிறார்கள். இதை அவர்கள் நம்புவது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், அவர்கள் நம்பும் விஷயங்களை அறிவியல் எப்படி பார்க்கிறது என்பது தான் முக்கியம்.

எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் இறை பயமும் அதே அளவிற்கு வளர்ந்து வருகிறது என்பதைக் காண முடிகிறது. அந்த பயத்தின் அடிப்படையில் பலரும் பணத்தை வசூலிப்பதையும் பார்க்க முடிகிறது.

 இந்த காலத்திலேயே கடவுளின் மீது இவ்வளவு பயம் இருப்பதை பார்க்கும் நாம், அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த பயம் பணத்தை வசூலித்து வைப்பதற்காக அன்றி சமூகத்தை காப்பதற்காகவே தோன்றின என்பதையும் நாம் உணர வேண்டும்

ஆகாயத்திலிருந்து வரும் மனிதர் சமூக விரோதியை தண்டிப்பார் என்ற பய உணர்ச்சியின் அடிப்படையில் சமூகநீதியை கட்டமைத்துக் காக்க வானுறையும்தெய்வம்என்னும் உருவகம் இதன் காரணமாகவே உருவாக்கப்பட்டது. இவ்வாறாக ஒவ்வொரு நாகரிகமும் தமது நாகரிகங்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டி தமக்கென ஓர் இறைவனை சமைத்துக் கொண்டன. இவ்வாறாக நாகரிகங்கள் பலவும் இறைபயத்தின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்தன.

இவ்வளவு கட்டமைப்புகள் இருந்தும் அக்காலத்தில் தோன்றிய பல நாகரிகங்கள் ஏதும் இப்போது உயிர்ப்புடன் இல்லையே! என்ன காரணம்?”

அவை அழிந்ததற்கான காரணத்தை அறிந்து கொண்டால், தற்போதைய மனித இனம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டலாமல்லவா? அதன் அடிப்படையில் நமது சமுதாயத்தை அழியாமல் நாம் காத்துக்கொள்ளலாம் அல்லவா?

ஜேர்ட் டைமண்ட் என்பவர் அழிந்துபோன பல நாகரிகங்களை ஆராய்ந்து அவற்றின் அழிவுக்கான முக்கிய காரணிகளை பட்டியலிட்டுள்ளார். இதில் முதன்மைக்காரணி சூழலாகும். சூழல் மாற்றத்தால் மறைந்த சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் ஹரப்ப நாகரிகம் நம் கண்முன்னே இருக்கும் சூழலின் முக்கியத்துவத்தைப் பகரும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

சமூகங்கள் வீழ்ச்சியடைவதற்கு ஐந்து முக்கியக் காரணங்களை டயமண்ட் சுட்டிக்காட்டுகிறார்:

1.       காலநிலை மாற்றம்,

2.       விரோதம் பாராட்டும் அண்டை நாடுகள்,

3.       வர்த்தக பங்களிப்பவர்களின் இழப்பு,

4.       சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

5.       இந்த சவால்களுக்கு சமூகங்கள் எவ்வாறு நீடித்த தீர்வு காண்கின்றன எனும் செயல்பாடு.

அதிகரிக்கும் மக்கள் தொகை; வளங்களை அவற்றின் நடைமுறை வரம்புகளுக்கு அப்பால் உபயோகிப்பதில் சென்று முடிகிறது. காடழிப்பு, மண் அரிப்பு, நீர் பிரச்சினைகள், அதிக வேட்டையாடுதல், மீன்பிடித்தல், ஒரு நிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களால் அல்லது செடி வகைகளால் ஏற்படும் தீங்கு மற்றும் ஒவ்வொரு நபரும் வளங்களில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். இவைதான் அப்போதைய நாகரிகங்களையும் சரி; நமது இப்போதைய வாழ்க்கையிலும் சரி; சமூக கட்டமைப்பை மற்றும் நாகரிகத்தை அழிவில் தள்ளவல்ல காரணிகளாகும்.

கூடுதலாக, தற்போதைய வாழ்வு முறையில் மேலும் நான்கு புதிய சிக்கல்கள் உள்ளன என்கிறார் அவர். அவை-காலநிலை மாற்றம், காற்று உணவு நீர் ஆகியவற்றில் அதிகரிக்கும் நச்சுத்தன்மை, ஆற்றல் பற்றாக்குறை மற்றும் உயிர்களை ஆதரிக்கும் பூமியின் திறனின் திரிபு. இவை வரும்காலத்தில் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தலாம் அல்லது சிதைக்கலாம் என்கிறார் அவர். எது எப்படியோ சூழல் காரணிதான் இவை அனைத்திலும் அதிமுக்கிய காரணி என்பது திண்ணம்.

இந்த உலகமே பஞ்சபூதங்களின் கட்டமைப்பு தானே? நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களின் துணை கொண்டே உருவாக்கப்பட்டது அல்லவா? ஒரு நிலையான நாகரிக கட்டமைப்பை அமைக்க, சூழல் காரணிகளான இந்த பஞ்சபூதத்தில் நாம் எதைப் பிரதானமாகக் கொள்வது?

நிலம், நீர், காற்று மற்றும் சூரிய வெப்பத்தால் கட்டமைக்கப்பட்டது நமது உடல் என்று கண்டோம். இதில் நிலவாழ் உயிரிகளுக்கு நிலமே பிரதானம் என்பது திண்ணம்.

 இந்த நிலம் என்பது இயக்க சக்தியற்றது, ஆனால் நிலையானது. மற்ற மூன்று காரணிகளான நீர், காற்று மற்றும் வெப்பம் ஆகியவை இயக்கசக்தி உள்ளவைஆயினும் ஒரு நாளின் பொழுதுக்கு ஏற்பவும் ஒரு வருடத்தின் பருவ மாற்றத்திற்கு ஏற்பவும் மாறக் கூடியவை அவை. அவற்றில் ஏற்படும் மாற்றம் நிலவாழ் உயிரிகளின்  வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே ஓர் அறிவார்ந்த சமூகம், நிலத்தையும் பொழுதையும் முதற் பொருளாய் கொண்டு இயங்கி; அவற்றைப் போற்றிப் பாதுகாத்தால், அந்தச் சமூகம் நீடூழி வாழும் அல்லவா?

அப்படியும் ஒரு சமூகம் இப்புவியில் இருந்தது! இப்போதும் இருக்கின்றது !!

அச்சமூகத்தின் பெயர்தமிழ்ச் சமூகம்’.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அச்சமூகம் முதற்பொருளாய் எதைக்கொண்டு இயங்கியது என்று ஒருவர் கூறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் பாருங்களேன்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே

 (தொல்காப்பியர், பொருள்- 4)

 நிலத்தையும் பொழுதையும் முதற் பொருளாய் கொண்டே இருந்தது நமது பண்டைய தமிழ்ச் சமூகம். மற்றேனைய சமூகங்கள் உலகை இன்னும் விசும்பில் இருக்கும் இறைவன் படைத்தான் எனக் கூறிக்கொண்டிருந்தபோது, தொல்காப்பியர் என்ன கூறினார் என்பதை பாருங்களேன்.

நிலம் நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்

(தொல்காப்பியர் பொருள் 635)

இயற்கை பற்றிய தெளிவான புரிதல் கொண்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்திருக்கிறது என்பது இக்கூற்றின் மூலம் புலனாகிறதல்லவா?

உலகம் முழுதும் பல இடங்களில் பல குழுக்களாய் மனிதன் குடிபுகுந்த பொழுது; தமிழ்க்குடி என அழைக்கப்படும் குழுவினர் புகுந்த நிலப்பரப்பானது ஒரு தனித்தன்மையுடைய நிலப்பரப்பாக இருந்தது. அந்த நிலப்பரப்பு வேங்கடம் தொடங்கி குமரியில் முடிவுற்றது. கடக ரேகை மகர ரேகை இரண்டுக்குமிடையில் இருந்த காரணத்தால் சம இரவு - பகல் கொண்டிருந்தது. பருவமழை மற்றும் மழைப் பொழிவை தருவிக்க வல்ல மலைத்தொடரையும் அதனால் அடர்ந்த  பசுமைக் காடுகளையும் கொண்டிருந்தது. மலையில் இருந்து வழிந்து வந்த நீர்பாதைகள் நிலத்தை நனைத்து சென்றன. நீர்நிலைகளும் கடற்கரைகளும் அந்நிலத்தில் இருந்தன. மழை பொய்த்த சமயம் பாலை நிலங்களும் அங்கே தோன்றின. மொத்தத்தில் ஐந்து வகை நிலப்பரப்பையும் ஒருங்கே கொண்டு இருந்தது அந்த இடம்.

குரங்கிலிருந்து நிமிர்ந்த நடை கொண்ட மனிதர்களாகிய அனைத்து சமூகத்தினரும்; தாம் புகுந்த நிலங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் கொண்டிருந்தனர்.

இதேபோல் தமிழகத்தில் இருந்த ஐவகை நிலங்களின் தன்மைக்கேற்ப தங்கள் வாழ்வினை, வணங்கும் தெய்வத்தை, தங்கள் பண்பாட்டினை, பொழுதுபோக்கைக் கட்டமைத்துக் கொண்டனர் தமிழ்க்குடியினர். அவர்கள் இந்த நிலத்தில் புகுந்து மொழியினை செப்பிட்டு, தானியங்களையும், விலங்குகளையும் பழக்கி, பெரும் சமூகமாக வளர்ந்து, கடல்கடந்து வாணிபம் செய்து, உலகின் செல்வக்குடியாக வாழ்ந்து வந்தனர். பிறிதொரு சுபமுகூர்த்தத்தில் அடிமைப்பட்டு; தம் பண்பாடு நாகரிகம் போன்றவற்றை மறக்க ஆரம்பித்தனர்.

ஏறத்தாழ ஐநூறு தலைமுறைக்கு முன் நாகரிகம் தோன்றியது. 20 தலைமுறைக்கு முன் அறிவியல் தோன்றியது. பத்து தலைமுறைக்கு முன் நாம் அடிமைப்பட்டோம். சில தலைமுறைகளுக்கு முன் விடுதலை பெற்றோம். இப்பொழுது அடுத்த தலைமுறைக்கு உலகம் இருக்குமா என்ற கேள்வி உருவாக ஆரம்பித்துவிட்டது.

 கடைசி 20 தலைமுறைகளில் எங்கேயோ தவறு நிகழ்ந்துள்ளது போல தோன்றுகிறது.

அப்போது நிகழ்ந்த  அந்தத் தவறு நமது இயற்கைச் சூழலை பாதித்திருக்கிறது.

எனவே அப்போது இருந்த இயற்கைச் சூழலையும்; அதை காக்க  முன்னோர்கள் எடுத்த முன்னகர்வையும்; அது நமது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும்; இப்போதைய இயற்கைச் சூழலோடு ஒப்பிட்டு நோக்கும் பொழுது, நம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள  ஏதேனும் வழி கிட்டலாம் அல்லவா? எனவே நம் தமிழகத்தில் எஞ்சியிருக்கும் இயற்கைச் சூழலை உற்று நோக்கியும், தமிழர்கள் எவ்வாறு இயற்கையை காக்க முயற்சி செய்தனர் என்பதையும், வரலாறு நெடுகும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களைத் தேடி விடை கண்டறிய முயல்வோம் நண்பர்களே

வரலாறு என்பது அடிப்படையானது. அது தெரிந்து கொள்ளப்பட வேண்டியது. அது நமக்கு படிப்பினைகளை போதிப்பது. அது நாம் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது, எப்படி இருக்கக் கூடாது என்பதையும் போதிக்கிறது.

வரலாறு என்பது நம்மிடம் இருக்கும் தரவுகள் மட்டுமேஉண்மைகள் அல்ல. வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படிப்பினைகள் எழுதப்படலாம் புதினங்கள் வடிக்கப்படலாம் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படலாம். மேற்கூறிய படைப்புகள் அனைத்தும் தரவுகள் எனப்படும் புள்ளிகளை ஆதாரமாக வைத்து வரையப்படும் அழகான கோலங்கள். இந்த புத்தகமும் அது போன்றதொரு கோலம் என்பதை மனதில் கொண்டே இந்த புத்தகத்தை வாசியுங்கள். வாருங்கள் நண்பர்களேஇயற்கையையும் வரலாற்றையும் ஒருசேர நோக்கத் தொடங்குவோம்.

 

 

 

 

 

 

ஏர் முன்னது எருது - 4

  நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை நீங்கள் உண்ணும் ஒரு கொய்யாப்பழம் ( எனும் கொய்த பழம் ), உங்கள் உடலாய்   மாறுவது தான் இந்த உ...