Thursday, September 4, 2025

ஏர் முன்னது எருது - 1

 

அவனுரை

கருவில் இருக்கும் சிசுவின் அசைவை உணர்வதே  ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்த பேறு... அப்படிப்பட்ட அசைவுகளை அனுதினமும் ஸ்பரிசிக்கும் பாக்கியம் கொண்டவன் அவன்.

அவன் ஒரு கால்நடை மருத்துவன்.

அவனது பணி... கடவுளாய் இருத்தல்.

 கடவுளாய் இருக்கிறான் என்றால், அவன் ஒரு போலிச்சாமியா என உங்கள் மனதில் ஐயப்பாடு எழுவது சகஜமே. உண்மையில் அவன்தான் ஒரிஜினல் சாமி. அவனது தொழிலே ஆக்குதல், அழித்தல் மற்றும் காத்தலாகும்.

அந்த பணிகளில் ஒன்றான ஆக்குதலை நிகழ்த்தவேண்டி கையுறை மாட்டிய கைகளை மாட்டின் பின்னே அவன் கொண்டு செல்கையில், அந்தப் பசு அவசரமாய் பிரசவித்தது.

கருவுறும் முன்னமே பிரசவமா? இது என்ன ஆச்சரியம் எனது வியக்க வேண்டாம்.  அந்தப் பசு ஈன்றது பச்சைமாமேனி கொண்ட சாணியை. குடல்வழி தவழ்ந்து வெளி வந்த அந்த சாணிக் குழந்தையை ஜாக்கிரதையாக கையில் ஏந்தினான் அவன்.

செல்லப்பிராணிகளை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருந்த நாகரிக மாந்தர்கள் சாணியைக் கண்டு முகம் சுழித்தனர். உயிர்த்துளியாம் மழைத்துளிக்கே சிதறி ஓடும் இச்சிறு கூட்டம், சாணியைக்கண்டு அசூயை கொண்டதில் அவனுக்கு வியப்பேதுமில்லை. அவ்வளவு ஏன்?  அவனே அந்தச் சாணியைக் கண்டு பயந்தவன் தான். 'ஒழுங்காய் படிக்காவிட்டால் சாணி தான் அள்ள வேண்டும்' என்ற மிரட்டலே அவனை கால்நடை மருத்துவனாக்கி இருக்கிறது. கால்நடை மருத்துவனாகிய பின்னர்தான் சாணியின் பெருமை அவனுக்கு புலப்பட்டது.

அதுவரைக்கும் சாணியைப் பற்றிப் பல வினாக்கள் அவன் மனதில் அலையாடிய படியே இருக்கும். இந்தச் சாணி மற்ற மிருகங்களின் கழிவு போல வெறுக்கத்தக்கது அல்லவே. அதன் மணமும் அசூயை கொள்ளும் அளவிற்கு இல்லையே. சாணியைக்கொண்டு தானே பிள்ளையாரைப் பிடித்து வைக்கின்றனர். சாணியைத்தானே முன்னோர்கள் வணங்கி வந்திருக்கின்றனர்.

இருந்தும் அனைவருக்கும் சாணியின் மேல் ஏன் இவ்வளவு துவேஷம்?  சாணி செய்த பாவம் என்ன? இயற்கை விவசாயம் செய்பவர்களைத் தவிர வேறு யாருக்குமே ஏன்  சாணியைப் பிடிக்கவில்லை? பொல்யூஷனால் அவதியுறும் இவ்வுலகிற்கு மற்றுமொரு துளி விஷமாய் வந்து சேர்ந்தது தான் இந்த சாணியா?  சாணியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை முறை விவசாயம் டுபாக்கூரா? புவி வெப்பமயமாதலுக்கும் காற்று மாசுக்கும் இந்த கால்நடைகள் தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றனவே அது உண்மையா?

புவி வெப்பமயமாதலையும் காற்று மாசினையும் கண்டு மனம் வெதும்பி கால்நடைகள் மீது பழி சொல்லும் தோழர்களே  உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இதைவிட மிகப்பெரிய காற்று மாசினை நம் புவி சந்தித்துள்ளது. அதைப் பற்றித் தெரிந்து கொள்வது நமக்கு நிச்சயம் ஒருநாள் உதவப் போகிறது. வாருங்கள் நண்பர்களே அந்த காற்று மாசினைப் பற்றி அறிந்துகொள்வோம்.

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஆங்கிலத்தில் ஆதியோகி புத்தகம் - Adhiyogi in English

For most of us, Lord Siva is the supreme cosmic force, eternal, formless, and divine. But Tamil literature, southern folklore, and ancient o...