Thursday, September 4, 2025

ஏர் முன்னது எருது - 2

 முதலாம்  காற்று மாசு

 ராஜா ஒருத்தர் ஒரு தீவுல பல வகை கூட்டத்தினரைக்கொண்டு போய் விட்டார், ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் ஒவ்வொரு திறமை. சிலர் நீச்சலில் வல்லவர்கள், சிலர் புஜபல பராக்கிரமசாலிகள், சிலர் பல அடி தூரம் தாவ வல்லவர்கள், இப்படிப் பலர்.

போட்டி என்னன்னா, எந்த கூட்டத்தினர் தீவை கட்டுக்குள் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கே தீவு சொந்தம்.

 

ஒவ்வொரு கூட்டத்தினரும் தீவை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக சண்டையிட்டனர்இதில் ஒரு குறிப்பிட்டகூட்டத்தினருக்கு மட்டும் கால் கிடையாது, அவர்களால் நகர முடியாது. அவர்களால் சண்டை இட முடியாத காரணத்தால் மற்ற அனைத்து கூட்டத்தினருக்கும் சமைத்து போடும் வேலையை செய்து வந்தனர்.

 

போட்டி கடுமையாக இருந்தது, பல தலைமுறைகள் கடந்தது. வெற்றி யாருக்கும் நிலையாக வாய்க்கவில்லைபோட்டியின் தீவிரத்தில் சில கூட்டத்தினர் அழிந்தே கூட போயினர். தீவின் அதிகாரம் ஒவ்வொரு கையாக மாறிக்கொண்டே இருந்தது...

 

"கடைசியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றது யாரு?"

அனைவரையும் ஜெயித்து அதிகாரம் செலுத்தியதுதான் வெற்றி என்றால், கிட்டத்தட்ட அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெற்றி பெற்றவர்களாகக்கருத வேண்டியுள்ளது.

 

ஆனால் உண்மையான வெற்றி, நகரமுடியாதவர்கள்களுக்கே. அவர்களுக்கே இந்தத் தீவு சொந்தம்.

 

"எப்படி?"

 

நகரமுடியாதவர்கள் தீவுக்கே சமைத்துப்போடும் வேலையை எடுத்துக்கொண்டதினால்; மற்ற அனைவரும் சமைத்து உண்ணவே இல்லைஅனைவரும் சண்டையிலேயே தீவிரமாக இருந்தார்கள். இதை பயன்படுத்திக்கொண்ட   நகரமுடியாதவர்கள், அனைவரையும் தன்னைச் சார்ந்து இருக்குமாறு ஒரு நிலையை ஏற்படுத்தினர்.

 

எத்தனையோ கூட்டத்தினர் போரில் அழிந்தாலும், இவர்கள் மட்டும் தலைமுறைகள் பல கடந்து நிலைத்து நின்றனர்.

--------------------------------------------------------------------------

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...

 

நல்ல செய்தி என்னன்னா?

காற்று மாசினால் உலகமே அழிஞ்சிடும்ன்னு எல்லாரையும் பயமுறுத்திகிட்டு இருக்காங்களே, அது உண்மை இல்ல. உலகம் அழியாது.

 

ஆனா கெட்ட செய்தி என்னன்னா? அத பாக்குறதுக்கு நாம யாரும் உசுரோட இருக்க மாட்டோம்.

................................................

பூமிக்கு முன்னும் பின்னும் இருக்கும் கிரகங்களான வீனஸ் மற்றும் மார்சின் காற்று மண்டலத்திற்கும், பூமியின் காற்று மண்டலத்திற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது. பூமியில் மட்டும் தான் நைட்ரஜனும் ஆக்சிஜனும் வளிமண்டலத்தில் பெரும்பான்மை சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன.

 

ஏன் இந்த வேறுபாடு?”

 

இது   நகரமுடியாதவர்கள்கள் செய்த தந்திரம்உலகின் முதல் காற்று மாசு அந்த உயிரியாலேயே ஏற்பட்டது.

 

 பூமி பிறந்தபோது இருந்த வாயு மண்டலத்தை, அந்த உயிரி எப்படி மாசுபடுத்தி மாற்றி அமைத்தது என்பதைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள, பூமியின் பிறப்பிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

 

புதிதாய் சுடச்சுட பிறந்த பூமி அது. சூடான இட்டிலியில் இருந்து வெளிப்படும் ஆவிபோல பூமி வெளியிட்ட வாயுக்களால் வளிமண்டலம் உருவானது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சூடு குறைந்து குளிரத் துவங்கியது.  அதனால் சூடான லாவாக்குழம்பு இறுகி பாறையாக மாற ஆரம்பித்தது. ஆனால் பூமியின் நடுவில் உள்ள பகுதியில் இரும்பு உள்ளிட்ட பல தாதுப் பொருட்கள் சூடான நிலையிலயே இருந்தன. இது போலத்தான் வீனஸ் மற்றும் மார்சிலும் நிகழ்ந்தது.

 

அப்போதைய பூமியில் தூங்கவேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு நாள் பத்தாது. ஏனென்றால் அன்றைய ஒருநாள் என்பது ஆறுமணி நேரம் மட்டுமே. காரணம் அவ்வளவு வேகவேகமாய் சூரியனை சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தது அது. பூமி சுழலவில்லை என்றால் அதன் பகல் பகுதி தொடர்ந்து சூடேறி எப்போதோ கடல்கள் ஆவியாகி இருக்கும். அந்தப்பகுதி முழுவதும் ஒரு வறண்ட பாலைவனம் ஆகி விட்டிருக்கும். கிரீன் ஹவுஸ் விளைவால் வெப்பம் 110 டிகிரி செல்சியஸ் வரை எகிறும். அதே சமயம் பூமியின் இருண்ட பகுதி பயங்கர குளிரில் ஜில் என்றிருக்கும். அங்கேவளிமண்டல வாயுக்கள் கூட உறைந்து போகும் அளவு குளிர் நிலவி இருக்கும்.

 

சின்னஞ்சிறு வயதில் பயமறியா இளம் கன்றைப் போல் வேகவேகமாய் சுழன்று வந்த பூமியின் வேகத்தைக் குறைக்கும் வண்ணம் அதன் மண்டையில் யாரோ பெரிய கல்லைக் கொண்டு தாக்கினர். அது ஒன்றும் சாதாரண கல் அல்ல. செவ்வாய் கிரகத்தின் அளவிலான ஒரு பெரிய பொருள் பூமியின் மீது மோதியது. மோதியதிலும் ஒரு நன்மை இருந்தது. அத்தகைய வேகமாக மோதலினால் பூமியின் உடலிலிருந்து ஒரு பாகம் பிரிந்து பூமிக்கு ஒரு தங்கை உருவானாள்.  அந்த தங்கை மிகவும் அழகானவள். பிற்காலத்தில் வர இருக்கும் மனிதர்கள் அவளைநிலா என்று அழைக்கப் போகின்றனர்.

 

இப்போது அக்காளும் தங்கையும் ஜோடியாய் கைகோர்த்தபடி சூரியனைச் சுழன்று வரத் தொடங்கினர். இதுகாறும் வேகவேகமாய் சுழன்ற நம்பூமி, தனது தங்கைக்கு ஏற்றார்போல் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுழலத் தொடங்கினாள். இவ்வாறாக படிப்படியாக வேகம் குறைந்து இன்றைய 24 மணிநேரம் கொண்ட பூமியின்ஒரு நாள் உருவானது. ஆடி முடிக்கும் போது தள்ளாடிச்சுழலும் பம்பரம் போல; தள்ளாடியவாறு சுழன்ற நம்பூமி, இப்போது சிறிய தமக்கை நிலாவைப் பிடித்துக்கொண்டு சாய்வான அச்சில் தள்ளாட்டம் இன்றி சுழல ஆரம்பித்தாள்.



அந்த சாய்வான அச்சு 23.5 டிகிரி பாகையில் இருந்தது. சாய்ந்த சுழற்சியின் காரணமாய் பூமிப்பெண் பருவமடையத் தொடங்கினாள். அதாவது நாம் பருவம் என அழைக்கும் பருவநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாய் இந்த சாய்வான அச்சு அமைந்தது.

 

மேலும் விண்வெளியிலிருந்து பல விண்கற்கள் சீரிய இடைவெளியில் பூமியை மோதிக்கொண்டிருந்தன. அந்த விண்கற்கள் ஒரு முக்கியமான பரிசுப்பொருளை பூமியில் கொண்டுவந்து சேர்த்தன. அந்தப் பரிசுப் பொருளின் பெயர்நீர். நாம் குடித்துக் கொண்டிருக்கும் இந்த நீரானது, பூமியை விட வயது அதிகம் உடைய ஒரு பொருளாகும். மேற்கூறிய விண்கற்கள்தான் அவற்றை சிறிது சிறிதாய் பூமியில் கொண்டுவந்து சேர்த்தன. பரந்த விண்வெளியில் தனித்தீவென இருக்கும் இந்த பூமியில், மறைமுகமாய் ஆட்சி செய்யப்போகும் நகரமுடியாத சமையல்காரர்களின் சமையலில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கப் போகும் மூலப்பொருள் இந்த நீர்.

 

பில்ட்அப் பயங்கரமா இருக்கே. யாருய்யா அந்த சமையல்காரன்? அப்படி என்ன நாங்கள் பார்க்காத சமையலை அவன் செய்துவிட்டான்?”

 

நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரணமானவன் தான் அந்த சமையல்காரன். ஆனால் உலகின் தலைசிறந்த chefஆல் கூட அவன் செய்யும் சமையலை செய்ய முடியாது.”

 

அப்படி என்ன சமையல் ரெசிபி அது? சொல்லேன் கேட்போம்.”

 

அது ரொம்ப சாதாரணமான ரெசிபி தான். நான்கு சிட்டிகை மணல், கொஞ்சம் காற்று, சில தேக்கரண்டி நீர், இவற்றை மிதமான சூரிய சூட்டில் கலக்கி உயிரை உண்டாக்க வேண்டும். முடியுமா?”

 

இது சமையல் கலையில் வராது, மாந்திரீகத்தில் வேண்டுமானால் வரும்.”

 

மாயமில்லை மந்திரமில்லை. இந்த ரெசிபி நம்மைச் சுற்றி தினம் தினம் சமைக்கப்பட்டு வருகிறது, ஆனால் அந்த சமையல்காரர்கள் இந்த ரெசிபியை ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை,

 

அது பல மில்லியன் வருடக் கலை.”

 

--------------------------------------

நெருப்புக் கோளமாக இருந்த பூமி, குளிர்ந்த பின்னர் உமிழ்ந்த கரியமில வாயு, மீத்தேன், அமோனியா மற்றும் விண்கற்கள் கொண்டுவந்த நீர் ஆவியாகி ஒரு கலவையாய் பூமியை போர்த்தி அப்போதைய வளிமண்டலம் உருவானது. தகுந்த காரணிகள் இருந்த காரணத்தால் நீராவியானது குளிர்ந்து, உலகம் முழுவதும் நீர் பரவி, கடல் உருவானது.

 

பூமியின் ஆரம்ப கால வளிமண்டலத்தில்  கரியமிலவாயு (Carbondioxide)  நிறைய இருந்தது போலவே வீனஸ் கிரகத்திலும்  கரியமிலவாயு நிறைய இருக்கிறது, அதன் காரணமாக வீனசின் வளியில் நுழைந்த சூரியக்கதிர்கள் வெளியேறாமல் அந்த கிரகத்தை கதகதப்பாக வைத்துள்ளன. அதனால் அதன் வெப்பநிலை 467 °C.

 

வீனசைப் போலவே அடுப்பில் வைத்த இரும்புச்சட்டி கணக்காய் இருந்திருக்க வேண்டிய நமது பூமியிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சிக்கொண்டு; ஆக்ஸிஜனை வெளியேற்றி; உலகின் முதல் காற்றுமாசை உருவாக்கிய குற்றவாளி யார்

-----------------------------------------

உலகில் முதல் உயிர்கள் கடலில் ஆழத்தில் தோன்றின. பரிணாமம் அடைந்த அவ்வுயிர்கள் யாவும் நிலத்தை நோக்கிவர பயப்பட்டன. காரணம் புறஊதாக்கதிர்களைத் (UV கதிர்களை) தடுக்கும் ஓசோன் படலம் அப்போது உருவாகியிருக்கவில்லை. அதனால் புறஊதாக்கதிர் தாக்குதலுக்கு ஆளாக யாரும் தயாராய் இல்லை. அந்த காலகட்டத்தில் உணவுக்கான ஒரே வழி, அடுத்தவனை உண்பது. எளியோரை வலியோர் வாய்க்குள் போட்டுக்கொள்ள சண்டைகள் பல இட்டு வந்த காலம் அது.  இந்த சண்டையில் நாட்டமில்லா சில காந்தியவாதிகள், தங்களுக்கான உணவை தானே உற்பத்தி செய்ய தலைப்பட்டனர்.

 

இதுல முக்கியமான பாயிண்ட் என்னன்னா... சாப்பிடுவது எதற்காக?

உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்காக.”


உணவின் நோக்கம் உடலுக்கு சக்தி.

அளப்பறியா சக்தி சூரிய ஒளியாக பூமியில் இருக்கும் போது, அடுத்தவனின் உடலை அடைய எதற்காக சண்டை இடனும்?

 

அடித்துக்கொண்டு அலைவதைக் காட்டிலும், தானே சமைத்து  ஜோராக வாழலாம் என்று சிலர் முடிவெடுத்தனர்.

 

சமையல் தொடங்கியது!

 

 ரெசிப்பி ரொம்ப சிம்பிள்.

 

-அன்றையகால காற்றில் கரியமிலவாயு அதிகம்,
-
வாழும் இடமனைத்தும் நீர் சூழ் உலகு,

சூரிய ஒளியின் சக்தியை குளுகோசினுள் பதுக்கி, சக்தி தேவையான சமயத்தில் குளுகோஸை எரித்துக்கொள்வதின் மூலம்; உடல் இயக்கத்திற்கான ஆற்றலை அகிம்சை முறையில் பெறும் அற்புத  உபாயம் ஒன்றை முதன் முதலில் பழக ஆரம்பித்தது கடல் பாசியை போல தோற்றம் கொண்டிருந்த அந்த ஒரு செல் தாவர உயிரி. வளியில் உள்ள கரியமில வாயுவை உறுஞ்சி; சர்க்கரை போன்ற ஆற்றல் மூலக்கூறுகளாக  அவ்வுயிரியால் மாற்றப்பட்டது.

 

 


ஆனால் இந்த சமையலின் முடிவில் வெளியேறிய வாயு ஆக்சிஜன்,

 

ஆக்சிஜன் வளியில் நிறைந்துள்ள அமோனியாவுடன் கூடி நைட்ரஜனை உருவாக்கியது. வெளித்தள்ளப்பட்ட ஆக்சிஜனும் நைட்ரஜனும் காற்று மண்டலத்தை வியாப்பிக்கத் தொடங்கின

 

தொடங்கியது உலகின் முதல் காற்றுமாசு!!!

 

இந்த குளுக்கோசினுள் சூரிய ஒளியின் ஆற்றல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை உடைப்பதன் மூலம் சூரிய சக்தியின் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளலாம். அப்போது வாழ்ந்து வந்த பழமை நுண்ணுயிரிகளால் நொத்தித்தலின் மூலம் இந்த குளுக்கோசினுள் இருக்கும் ஆற்றலை ஓரளவிற்கு மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. புரியும்படி கூறின் அவற்றிடம் இருக்கும் பழைய ஸ்பேர் பார்ட்சைக் கொண்டு குறைந்த அளவே அவைகளால் மைலேஜ் பெற முடிந்தது.

இதே சமயம் மற்றுமொரு நுண்ணுயிரிக் குழுக்கள் பிராணவாயுவைக் கொண்டு; குளுக்கோசை எரித்து; அதிக மைலேஜ் பெற ஆரம்பித்தன. அதைக் கண்ட மற்ற உயிரிகள்பிச்சைக்காரனிடம் இவ்வளவு காசா?’ என பதட்டப்பட்டன.

 


பழமை நுண்ணுயிரிகள் சில; இந்தப் புது வகை நுண்ணுயிரிகளை விழுங்கின. அந்த பிச்சைக்காரனை செல்லுக்குள் அடைத்து அந்த காசை எல்லாம் வசூலிக்க ஆரம்பித்தன. இந்தப் புது வகை நுண்ணுயிரிகளும் அவற்றின் ஒரு பாகமாகவே மாறி; அவற்றிற்கு ஆற்றல் வழங்கும் வேலையை செய்ய ஆரம்பித்தன. இப்போது வரைக்கும் கூட நம் செல்லின் ஒரு பாகமாகவே அவை உயிர்வாழ்கின்றன. அவற்றின் பெயர்மைட்டோகான்ட்ரியா’. இதே போலபச்சயைம்கொண்டு குளுக்கோசை உற்பத்தி செய்யும் உயிரிகளை தம் உடல் பாகமாகக் கொண்டவை செடிகளுக்கு முன்னோர்களாக மாறின.

 

படம்: மைட்டோகான்ட்ரியா மற்றும் பச்சயத்தை விழுங்கி தம் உடல் பாகமாக மாற்றும் பண்டைய உயிரிகள்.



அதன் பின் போட்டியின் தீவிரத்தால்; ஒற்றை செல்லாய் இதுவரை வாழ்ந்து வந்தவை; தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாத காரணத்தால், கூட்டணி அமைத்துபல செல்உயிரிகளாக மாறின. விளைவு போட்டி இன்னும் தீவிரமடைந்தது.

 

உலகின் உயிர்கள் அனைத்தின் நோக்கமும் உயிர்வாழ்தல் மற்றும் சந்ததியைப் பெருக்குதல். உயிர்வாழத் தேவையான உணவைப்பெரும் வேலையையும், மற்றும் சந்ததியைக் கருவிலிருந்து வளர்க்கும் வேலையையும் ஒருசேர செய்வதைக்காட்டிலும் பகிர்ந்து கொண்டு செய்யலாம் என உயிரினங்கள் முடிவெடுத்தன. இதனால் போட்டியை அவற்றால் எளிதில் சமாளிக்க முடிந்தது.

 

அலைந்து திரிந்து உணவைத்தேடுவன ஆண் என்றும், அகத்தில் அமர்ந்து பிள்ளை பெறுபவை பெண் என்றும் முடிவானது. அலையும் ஆணானவன் அலைந்து திரிந்து தனக்கான பெண்ணை அடையும் போது, அந்த இரு உயிர்களின் வாழ்வு முழுமை பெற ஆரம்பித்தது. இந்த முடிவினால் அவற்றின் உயிர்பிழைத்தல் மற்றும் சந்ததியைப் பெருக்குதலுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரித்தது.

 

 

ஆண்-பெண் இணை சேர இயலா சூடு மிகுந்த காலங்களில் அசுவினிப்பூச்சிகள் மாவுப்பூச்சிகள்  எல்லாம் ஆண்துணை ஏதுமின்றி பிள்ளைகள் பெற ஆரம்பிக்கும்.

 

இது போல் ஆண் துணை இன்றி பிள்ளை பெற்றால் வேறுபாடு ஏதுமின்றிதாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலைஎனும் சொலவடைக்கிணங்க; செராக்ஸ் எடுத்தது போல்தான் வாரிசுகள் இருக்கும் (நூலைப்போல் சேலை என்பது சரியான பதம். ஏனென்றால் மரபணுக்கள் நூல்களைப்போல் க்ரொமோசோமுக்குள் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன).

 

ஆனால் வெள்ளை நிறத்தொரு பூனைக்கு செராக்ஸ் எடுத்தது போல் பால்வண்ண வெள்ளைநிறப்பூனை தான் பிறக்குமா என்றால் இல்லை. அதன் குட்டிகள் கறுப்பு நிறத்திலும் பிறக்கலாம். காரணம்ஆண் பெண் வேறுபாடு’. கருப்புநிற ஆணின் டிக்காசன், பெண்பாலில் கலந்து பல்வகை கலவைகளில் பூனைகள் பிறக்க வழிவகை செய்கின்றன.

 

இவ்வாறு ஒவ்வொரு உயிரியின் நிறம், மணம், குணம், பண்புகள் அனைத்தும் நால்வகை எழுத்துக்களைக்கொண்டு; பல வார்த்தைகள் வாக்கியங்கள் முதலியன உருவாக்கப்பட்டு, பெரிய புத்தகமாக மரபணுவில் எழுதிவைக்கப்பட்டுள்ளன.

 

மரபணு என்பதை புத்தகமாக உருவகித்தால், க்ரொமோஸோம்கள் எனும் நிறப்புரிகளை புத்தகத்தின் தனித்தனித் தலைப்புகளாகக் கொள்ளலாம். தலைப்புகளின் கீழ் இருக்கும் பத்திகள் தான் ஜீன்.



 

க்ரொமோஸோம்கள் கையுறைகள் போன்றவை. சோடியாகத்தான் இருக்கும். சோடியின் ஒரு கையுறை தந்தையிடம் இருந்து பெறப்பட்டது, மற்றொன்று தாயிடம் இருந்து பெறப்பட்டது. உங்கள் மரபணுவில் இதுபோல 23 சோடி கையுறைகள் உள்ளன. இதை உங்களிடம் 46 கையுறைகள் மொத்தம் உள்ளதாகவும் குறிப்பிடலாம்.

படம்: மூன்று சோடிக் கையுறைகள் அல்லது  ஆறு கையுறைகள்.



தந்தை அல்லது தாய் தரும் ஒற்றைக்கையுறை ஹாப்ளாய்டு (Haploid) எனப்படும்.

மனிதர்களில், விந்தணு மற்றும் முட்டை ஹாப்ளாய்டு ஆகும் (தனித்தனி கையுறைக), அவற்றில் தலா 23 க்ரொமோசோம்கள் உள்ளன. தாய் மற்றும் தந்தையிடமிருந்து  பெறப்பட்ட தனித்தனி கையுறை இணைகையில் அது டிப்ளாய்டு எனப்படுகிறது (46 கையுறைகள் அல்லது 23 சோடிக் கையுறைகள்). படத்தில் வலப்புறம் ஒற்றைக் காற்றாடி போல் இருப்பது ஹாப்ளாய்டு. இரண்டு காற்றாடி இணைந்தது போல் இருப்பது டிப்ளாய்டு. காற்றாடியின் centre ல் இருப்பது centromere, இருபக்க முடிவில் tail endல் இருப்பது telomere எனப்படுகிறது



நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிப்பது  X மற்றும் Y க்ரொமோஸோம் ஆகியவற்றின் வேலை (இவை ஹாப்ளாய்டுகள்).

 

X மற்றும் Y க்ரொமோசோம் இணைந்து  ஆண் பாலினத்தை நிர்ணயிக்கிறது. ஆண்கள் தங்களின் Y க்ரொமோசோமை தந்தையிடமிருந்து பெறுகின்றனர். பெண்களுக்கு இரண்டுமே X தான்அந்த இரண்டில் ஒன்று தந்தையிடம் இருந்து பெற்றது, மற்றொன்று தாயிடம் இருந்து பெற்றது. (XX என்றிருந்தால் பெண், XY என்றிருந்தால் ஆண்).

 


ஒரு மனிதனின் Y க்ரொமோஸோம் மாற்றத்தை அவனது முன்னோர் வழி நூல்பிடித்துகொண்டு போனால் அவன் தந்தை வம்சாவளியை அடையாளம் காணலாம்.

 

அப்போ அந்த வம்சாவளி கடைசியில் ஆதாமில் போய் முடியும் தானே?”

 

ஷோலம் அலைச்சம்ஆதாம் தான் உலகிலேயே அதிர்ஷ்டம் செய்த ஆண்மகன்; ஏனெனில் அவனுக்கு தான் மாமியார் இல்லை”  என்கிறார். அனால் விதி யாரையும் விட்டுவைக்காது. அறிவியலின் படி; ஆதாமும் மாமியார் கொடுமையிலிருந்து தப்பித்திருக்க முடியாது.

ஆனால் மாமியாரின் முன்னோர்களைக் கண்டுபிடிக்க மைட்டோகான்ட்ரியாவை ஆராய வேண்டியுள்ளது.

மைட்டோகாண்ட்ரியா தனக்கான தனித்துவமான மரபணுவைக் கொண்டுள்ளது, இதை மைட்டோகான்ட்ரியல் DNA (mtDNA) எனக் கூறுவர். மைட்டோகான்ட்ரியல் DNA தாயிடமிருந்து மட்டுமே பரிமாறப்படுகிறது, இந்த மரபியல் குறி; தாயாரின் வம்சத்தைச் சுட்டிக்காட்ட உதவுகிறது.

 

நிற்க. தானே சமையல் செய்யும் தாவர செல்கள் உருவானதைப் பற்றி பார்த்தோம் அல்லவா? அதை தற்போது தொடருவோம்.

 

மற்ற உயிரினங்கள் கடலின் ஆழத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கஒரு செல் தாவரங்கள் கரியமிலவாயுவுக்காகவும் மற்றும் சூரிய ஒளிக்காகவும் கடல் மேல்பரப்புக்கு வந்தன. அவைகள் பரிணாமமடைந்து பல செல்தாவரங்களாக பெருக்கின.

 

அடுத்த பிரச்சனை- இடப்பற்றாக்குறை ...

 

தீர்வு?”

 

யாருமே சொந்தம்கொண்டாடாத நிலப்பரப்பு. நிலப்பரப்பில் வேரூன்றி இன்னும் பல ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஆரம்பித்தன தாவரங்கள். இப்போது மனிதர்களால் நடைபெறும்  pollution 'னில் கரியமிலவாயு நிறைய வெளியேற்றப்படுகிறது, கரியமிலவாயு மரங்களின் சமையலில் முக்கியமான ரெசிப்பி, நியாயமாக மரங்களுக்கு இது நற்செய்தி தான். ஆனால் நாம் மரங்களையும் வெட்டி விடுவதால், இந்த  pollution பல உயிர்களின் அழிவுக்கு வித்திடும் வித்திட்டுகொண்டு இருக்கிறது  .

 

இப்புடியே போச்சுன்னாகொஞ்ச நாளில் வீனசைப் போல ஆகிவிடும் நமது பூமி.

 

இது போல் அல்லாமல்முதலாம் pollution'னில்  வெளித்தள்ளப்பட்ட ஆக்சிஜன் உயிர்களின் தேவையாக இருந்தது. காரணம்

-Anaerobic metabolism'
த்தை காட்டிலும்  Aerobic Metabolism அதாவது ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு கொண்டு நடத்தப்படும் வளர்சிதைமாற்றத்தில்  அதிக ஆற்றல் பெறப்பட்டது.

 

-மேலும் ஆக்சிஜன் மூலக்கூறுகளின் மூலம் ஒசோனும் உருவாக்கப்பட்டது, அதனால் புற உதாக்கதிர் பயமும் இப்போது இல்லை.

 

-மேலும் உணவை சமைக்கும் தாவரங்களின் இருப்பு .

 

 இவை அனைத்தும் ஆக்சிஜன் விரும்பிகளை  நிலத்தை நோக்கி சுண்டியிழுத்தன .

 

 


 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

தி நாய் ஸ்டோரி - கதையல்ல கருப்பு சரித்திரம்

வடநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது , நல்ல கல்லூரி , இயற்கை எழில் கொஞ்சும் இடம் , ஆனால் பாஷை புரியாது ,வாயினால் வில்லுவண்டி ஓட்ட...