அவர்கள் ஆதிச்சநல்லூரின் அடர்ந்த மரங்களுக்கு அருகில் பதுங்கி இருந்தனர். அவர்கள் அந்த சுடலையாடியின் வருகைக்காக காத்திருந்தனர்.
வரப்போவது கடவுளா? அசுரனா? அல்லது அதற்கும் மீறிய சக்தியா?
யாருக்கும் தெரியாது!
ஆனால் அவர்கள் அச்சம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். யாராக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர் கொள்வதற்கு தயாராக இருந்தார்கள் அந்த வீரர்கள். அவர்கள் கையில் செம்பினால் செய்யப்பட்ட குத்தீடீகள் தயாராக இருந்தன.
அப்பொழுது காற்றில் விவரிக்க இயலா ஒரு நறுமணம் பரவியது. இடியின் மறு உருவமென உருவெடுத்த ஒரு காளையும் மின்னலின் மேனி கொண்ட ஒரு காளையனும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அந்த மனிதனது உருவம் வதந்திகளை மெய்ப்பிப்பது போல இருந்தது. அப்படி ஒரு ஆகிருதியை அவர்கள் இதுகாறும் கண்டிருக்கவில்லை.
அவன் அவர்களை நோக்கி திரும்பினான். அவர்கள் இருப்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. இருப்பினும் அவன் அவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை. பின்னர் அவன் தனது வேலையை துவங்கினான். அவன் பிணங்களை எரியூட்ட ஆரம்பித்தான்.
அவர்களும் இருப்பிடத்தை விட்டு அசையவில்லை. என்னதான் நிகழ்கிறது என்று பார்த்து பார்த்து விடுவோம் என்ற உறுதியோடு அவர்கள் அங்கு இருந்தனர்.
அவன் எரியூட்டப்பட்ட பிணங்களுக்கு நடுவில் தனது நடனத்தை துவங்க ஆரம்பித்தான்.
நெருப்புக்கு மத்தியில் அவன் தனது தமறை இசைக்கத் துவங்கினான்.
அங்கே, எரியும் பிணத்தின் ஒளிரும் கனலுக்கு முன், மனிதர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அந்த தெய்வீக உருவம் நடனமாடத் தொடங்கியது. அவனது உடல் அசாதாரணமான அழகுடன் நகர்ந்தது, ஒவ்வொரு அடியும் பூமியை இடியாகத் தாக்கியது, ஒவ்வொரு சுழலும் காற்றை ஆணையிட்டது. அவனது கால்கள் தரையைத் தொடும்போது தீப்பொறிகள் பறந்தன. அவனது தொண்டை ஆழமான நீல நிறத்தில் மின்னியது, அவனது வெளிர் உருவம் ஒளிரும் வெளிச்சத்தில் பிரகாசித்தது. அவனது கண்கள் தங்க நிறத்தில் ஜொலித்தன. அவனது மேல் நோக்கிய பார்வை வானத்தை ஊடுருவியது, அவனது நெற்றியில் மூன்றாவது கண் ஒன்று இருந்தது.
ஒரு கையில், அவன் தமரை வைத்திருந்தான். மற்றொரு கையில், மின்னல் போல பளபளக்கும் திரிசூலம் இருந்தது. அவனது மேனி நெருப்பினால் தூண்டப்பட்டு மேலும் சிவந்து காணப்பட்டது.
“ இவன் சிவன் … சிவந்தவன்,” என்று ஒருவன் மெல்லிய குரலில் கூறினான்.
சிவன் அவர்களின் நிறத்தைக் கொண்டவன் அல்ல. ஆனால் அவன் ஒரு வேற்று மனிதன் அல்ல. இங்கே குழுமியிருக்கும் வீரர்களின் பூர்வீக ஆதி குடியில் பிறந்தவன் சிவன். ஆனால் தென்னிந்தியாவில் இத்தகைய சிவப்பு நிறம் மிகவும் அசாதாரணமானது.
அந்த சிவப்பு நிறத்தின் காரணமாக அவனது தாய் ஒரு முறை அவனது காதுகளில் முணுமுணுத்த அதே பெயரால் அவர்கள் இப்போது அவனை அழைத்தனர். அந்தப் பெயரானது நோய், மௌனம், தனிமை ஆகியவை சிவனின் உலகை கைப்பற்றுவதற்கு முன் அவள் அவனுக்கு அளித்த பெயர். அந்தப் பெயரை கிட்டத்தட்ட அவன் மறந்தே போயிருந்தான் . அதே பெயர் திரும்பவும் அவனுக்கு இப்பொழுது அடையாளமாகியது.
அந்த சிவந்த சிவன் கொழுந்து விட்டு எரியும் சிவந்த நெருப்பிற்கு முன் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே இருந்தான். அதைப் பார்ப்பதற்கு ஒரு தவம் போல் இருந்தது.
வேந்தனால் இதற்கு மேலும் பொறுமை காக்க இயலவில்லை. வேந்தன் தனது வீரர்களுக்கு சமிக்கை செய்தான். அவர்கள் மெல்ல மெல்ல சிவனை சூழ ஆரம்பித்தனர்.
சிவன் அதை கவனித்தது போல தெரியவில்லை அவன் ஒரு மாயக் கட்டளைக்கு ஆட்பட்டது போல சுழன்று சுழன்று நடனம் ஆடிக்கொண்டிருந்தான். ஆனால் சிவனை சூழ்ந்த அவர்களை எச்சரிப்பது போல புலியின் கர்ஜனையை ஒத்த உறுமல் ஒன்று கேட்டது .
நந்தன் அவர்களை கண்டு விட்டது.
அவனது குளம்புகள் பூமியை தோண்டின. அவனது மூச்சு ஆவியாக வெளிப்பட்டது.
ஒருவன் நந்தனை அலட்சியம் செய்தபடி சிவனை நோக்கி முன்னேறினான்.
நந்தன் அந்த மனிதனை நோக்கி பாய்ந்தான்.அந்த மனிதன் புயல் காற்றில் சிக்கிய இலை போல தூக்கி எறியப்பட்டான்.மற்றொருவன் செம்பு முனை கொண்ட ஈட்டியை சிவனை நோக்கி விட்டெறிந்தான் . சிவன் தனது ஆட்டத்தை நிறுத்தவில்லை. ஆனாலும் பாய்ந்து வந்த அந்த ஈட்டியை அவன் திரிசூலத்தைக் கொண்டு தடுக்கத் தவறவில்லை.
சிவன் சுழன்று நடனமாடினான். அவனது கரங்களில் திரிசூலம் மின்னியது. பறந்து வந்த ஈட்டிகள் திரிசூலத்தில் பட்டுச் சிதறின.
இப்போது ஈட்டிகள் எல்லா பக்கங்களிலிருந்தும் மழையாக பொழிந்தன. ஆனாலும் சிவன் நிறுத்தவில்லை அவனது நடனத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
அவனது கால்கள் தரையை துடிக்கும் தாளத்தில் தாக்கின. ஒவ்வொரு சுழலும் ஆபத்தை திசை திருப்பியது. அவனது உடலின் ஒவ்வொரு அசைவும் பாய்ந்து வரும் ஈட்டிகளுக்கு பதில் சொல்லும் விதமாக இருந்தன. அந்த நடனம் விரைவானதாகவும் அழகானதாகவும் தடுக்க முடியாததாகவும் இருந்தது.
அவர்கள் இதுவரை இப்படியொரு காட்சியைப் பார்த்ததில்லை. ஆவேசம் கொண்ட அவர்கள் அனைவரும் ஒரு சேர சிவனை நெருங்க முற்பட்டனர். நந்தன் அவர்களுக்கு இடையில் ஒரு மதிலென நின்றான். நந்தன் அவர்களை தாக்கினான். தாக்குதலுக்குள்ளான வீரர்கள் கதறினர், உடைந்த தண்டுகள் போல எறியப்பட்டனர். பயம் பரவியது. பலர் ஓடினர். இறுதியில் அங்கு வேந்தன் மட்டுமே நின்றிருந்தான். அவன் முன்னோக்கி பாய்ந்து, கைகளால் காளையின் திமிலைப் பற்றினான்.
வெறும் நொடிகளுக்குள் நந்தன் அவனைத் தூக்கி எறிந்தான்.
திகைத்தாலும் வேந்தன் அசரவில்லை, அவன் பயம் என்றால் என்னவென்று அறியாதவன். வேந்தன் எழுந்து, கையில் வேலுடன் நின்றான். அவன் முன்னேறி, நந்தனைத் தாக்கத் தயாரானான். சிவன், சுய நினைவுக்கு வந்தது போல் நடனத்தை சட்டென்று நிறுத்தினான் , அவன் நந்தனை நோக்கி ஒரு பார்வையை வீசினான். சிவனின் பார்வையை புரிந்து கொண்ட நந்தன் சிவனை நோக்கி தாவியோடி வந்து நின்றான்.
சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.
ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவன் காளையின் முதுகில் தாவினான்.
அவர்கள் காட்டுக்குள் மறைந்தனர்.
வேந்தன் அவர்களை பின்தொடர்ந்தான்.
மென்மையான மண்ணில் பதிந்திருந்த ஆழமான குளம்புத் தடங்களைப் பின்தொடர்ந்து, வேந்தன் முல்லை நிலத்தின் பசுமையான பகுதிகளை கடந்து பயணித்தான். அந்த தடம் அவனை ஒரு காட்டு வெளியில் கொண்டு வந்தது, அங்கு மௌனம் ஆட்சி செய்தது, அவ்வப்போது கால்நடைகளின் மெல்லிய ஒலியும் , பறவைகளின் இறகு அசைவும் மட்டுமே அங்கு கேட்டுக் கொண்டிருந்தது .
அங்கே, கல் இச்சி மரத்தின் பரந்த கவிகையின் கீழ், வேந்தன் சிவனைக் கண்டான்.
சிவன் மலர்ந்த தாமரையை போல் அமர்ந்திருந்தார். பசுக்கள், மான்கள், மயில்களால் சிவன் சூழப்பட்டிருந்தார். அவரது உடல், வெளிர்ந்து மென்மையாக ஒளிர்ந்தது. அவரது கையில் பறைக் கருவி மௌனமாக இருந்தது. திரிசூலம் அருகில், மண்ணில் சாய்ந்தவாறு வைக்கப்பட்டிருந்தது. சிவன் வேந்தனை நேருக்கு நேர் பார்த்தார்.
“இந்த பாலைக் குடி. நீ மிகவும் களைத்திருக்கிறாய்.” என்றார் சிவன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிவன் முதல் முறையாக ஒரு மனிதனுடன் பேசிய வார்த்தைகள் இவை.
சிவன் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு வெண்கல பாத்திரத்தில் அந்தப் பாலை அவனுக்கு நீட்டினார்.
வேந்தன் சிவனது கண்களைப் பார்த்தான். அமைதியும் அன்பையும் சொரியும் இந்தக் கண்களா நேற்று நெருப்பில் தனலென ஜொலித்தது என்ற எண்ணம் அவன் மனதுக்குள் நிழலாடியது.
திரும்பவும் அவன் சிவனின் கண்களை உற்று நோக்கினான். தங்க நிறத்தில் பிறை வடிவில் ஜொலிக்கும் கண்கள் அவை. அந்தக் கண்களில் அன்பு இருந்தது. பயமில்லை. அகங்காரமோ அதிகாரமோ ஏதுமில்லை . வெறும் அன்பு மட்டுமே அந்தக் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.
அவன் பாத்திரத்தை எடுத்து குடித்தான்.
பால் அவனை ஆசுவாசப்படுத்தியது,
“நீ யார்?” வேந்தன் மெல்லிய குரலில் கேட்டான்.
சிவன் மேலே, மரக்கவிகையை நோக்கிப் பார்த்தார். ஒரு மென்மையான புன்னகை அவரது உதடுகளை கடந்தது.
“ நானும் இந்த கேள்விக்கு தான் விடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன் ” என்று பதிலளித்தார். பின்னர், அவர் மென்மையாக வேந்தனின் தலையை ஆசீர்வதிக்கும் விதமாக தொட்டார் .
அவரது கை தலையைத் தீண்டிய மறுகணம், வேந்தனுக்கு திடீரென ஒரு வெப்பம் உடலில் பரவியது. அவன் சற்று பின்னால் தடுமாறினான், திகைப்புடன்.
“ உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறது,” என்று அவன் கூறினான்.
சிவன் தலையசைத்தார். “சூரியன் உதிக்கும்போது, என்னுள் உள்ள நெருப்பும் உயர்கிறது. அந்த அழலை மட்டுப்படுத்த நான் ஓய்வெடுக்க வேண்டும். குளிர்ச்சியை மட்டுமே பரப்பும் இந்த கல் இச்சி மரம் எல்லா மரங்களிலும் குளிர்ச்சியானது என்றாலும், எனது இந்த அழலை அதனால் முற்றிலுமாக குறைத்து விட முடியாது. அப்படிப்பட்ட நெருப்பு என்னுள்ளே எரிந்து கொண்டிருக்கிறது ” என்றார் சிவன்.
" அதனால்தான் உடல் முழுவதும் நீ சாம்பலை பூசிக் கொண்டிருக்கிறாயா? " என்று வேந்தன் கேட்டான்.
" இந்த சாம்பல் அழலை மட்டும் தணிக்கவில்லை. இது புனிதமானது, பூசத்தக்கது... பூசிக்கத்தக்கது " என்று சிவன் கூறினார். பிறகு அவர் ஒரு பிடி சாம்பலை அள்ளி வேந்தனின் நெற்றியில் பூசினார்.
இது என்னை மட்டும் அல்ல அனைவரையும் காக்கும் என்றார்.சிவனது குரல் மென்மையாகவும் ஆழமாகவும் இருந்தது, அவரது இருப்பு மென்மையாகவும் அதே சமயம் பிரம்மாண்டதாகவும் இருந்தது.
வேந்தன் உறைந்து நின்றான். பயத்தால் அல்ல, விவரிக்க இயலாத ஒரு தெய்வீக அனுபவத்தால் அவன் கட்டுண்டு நின்றான்.
அப்போது, பின்னால் இருந்து ஒரு சலசலப்பு கேட்டது. வேந்தனின் ஒரு ஆள், மூச்சு வாங்கியபடி, வந்து சேர்ந்தான்.
“என் தலைவா, உங்கள் மூத்த மகன்... அவனுக்கு உடல்நலமில்லை. கிராமங்களில் பரவும் அதே காய்ச்சலால் அவனும் பீடிக்கப்பட்டிருக்கிறான் …”
வேந்தன் சிவனை நோக்கி திரும்பினான்.
சிவன் மௌனமாக கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
--------
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...