Thursday, September 4, 2025

நாய் ஸ்டோரி _பகுதி 2


நாட்கள் உருண்டோடின ...

சில்பியும் கருவாந்தியும் ஒரு நாள் மிகவும் சோகமாக காணப்பட்டனர் , என்னவாயிற்று என்று நான் விசாரித்தேன் .
தாய்க்கிழவியை இரண்டு நாட்களாக காணவில்லையாம்.
அவள் அடிக்கடி NH ரோட்டின் பக்கம் உலாத்துவாள், ஒரு வேலை அடி பட்டு இறந்திருப்பாளோ ?
..............................................................................

தாய்க்கிழவியின் மறைவுக்கு பின்னர் சில்பியும் கருவாந்தியும் மிகவும் மாறிவிட்டனர் , இருவரும் சோப்ராஜின் எல்லைகளுக்குசென்று விட்டனர் ,


என்னதான் சோப்ராஜும் மைக்கேலும் முரடர்களாக இருந்தாலும் , அவர்களின் கட்டழகுக்கு சில்பியும் கருவாந்தியும் மயங்கிவிட்டதாகவே தோன்றியது.


ஒரு நாள் அந்த காட்சியை காண நேரிட்டது , சோப்ராஜுடன் சில்பி கருவாந்தி இருவரும் சல்லாபிதுக்கொண்டிருந்தனர் .

 ஒரு கல் சோப்ராஜை வேகமாக சென்று தாக்கியது . கவுண்டமணியை கண்ட செந்திலைப் போல தெறித்து ஓடினான் சோப்ராஜ் .

அடப்பாவமே ... வாயில்லா ஜீவனை எந்த எருமை அடித்தது என்று அனைவரும் கல் வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

 அங்கே கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்தது... நான் தான்!

என்ன செய்ய கோவம் கண்ணை மறைத்து விட்டது.

 இந்த சம்பவத்திற்கு பிறகு கருவாந்தியும் சில்பியும் என்னிடம் முகம் கொடுக்கவே தயராயில்லை.


_ எங்க காதல் யாராலயும் பிரிக்க முடியாத காதல்... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல...அல்ல...

_ புரிஞ்சுக்க கருவாந்தி...இது காதலே அல்ல ... இது அதுக்கான வயசும் இல்ல. ஒரு டாக்டரா சொல்றேன்... நீங்க  physicalலா இன்னும் தயாராகல.

_ எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க மூடுங்க டாக்டர்.

அன்று இரவு முழுவதும் 'ஒரு பெண்புறா' பாடலை ரிப்பீட் மோடில் ஒலிக்க விட்டபடி சோகத்துடன் இருந்தேன்.
_______________________

அதன் பிறகு அவர்கள் யாரையும் எங்கள் ஏரியாவில் காணவில்லை.

பிறிதொரு நாள் ஒரு வேலையாக ஈசானி மூலைக்கு சென்றேன். அங்கே சோப்ராஜோடு கருவாந்தியைக் கண்டேன்.அவள் ஏன் அன்று தங்களின் காதலை பிரிக்கவியலாக் காதல் எனக்கூறினாள் என்பது அவர்கள் இருந்த பொசிசனின் மூலம் விளங்கியது. இதுபோல் பல பிரிக்கவியலா காதல்களை சிறுவயதில் கட்டையைக் கொண்டு பிரித்துவிட்ட அனுபவம் இருந்தாலும் இம்முறை என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இருப்பினும் அக்காட்சி கிளப்பிய சோகத்தின் நிமித்தம் 'ஒரு பெண்புறா' பாடல் எனது அறையில்திரும்பவும் ரிப்பீட் மோடில் ஒலித்தபடி இருந்தது.
____________

நாட்கள் பல உருண்டோடின... மெல்ல மெல்ல காலம்  என் மனக்காயங்களை  ஆற்றியது.

அன்று ஒரு நாள் முன்பனிக்காலம் ஒன்றில் ஈசானிமூலையில் அழகிய மூன்று நாய்க்குட்டிகளைக் கண்டேன். அவற்றில் ஒன்று கருவாந்தியைப் போல் இருக்க மற்ற இரண்டும் சோப்ராஜ் போல் தோற்றம் அளித்தது.


சில நாட்கள் சென்று பார்த்த போது இரண்டு குட்டிகள் மட்டுமே அங்கே இருந்தன. அவையும் உடல் இளைத்து சொரியோடு இருந்தன.


அதன் பின்னர் ஒருநாள் அந்த இரண்டு... ஒன்றானது!

அந்த ஒன்றையும் பட்டினிக்கு பலிகொடுக்க மனமின்றி எனது இடத்திற்கு கடத்தி வந்துவிட்டேன்.
-------------------
_ ஆமா... நீங்க யாரு ? என்ன எதுக்கு  இந்த இடத்துக்கு தூக்கிட்டு வந்தீங்க ? நீங்க பூச்சாண்டியா?


- நா பூச்சாண்டி இல்ல.

- அப்படின்னா உங்க பேரு என்ன?

_ நீ என்ன friend ன்னு கூப்பிடலாம்.

_ ஓக்கே friend. என்னய எங்க அம்மாட்ட கொண்டுபோய் விடுங்க friend.

_ அதுக்கு முன்னாடி இத சாப்புடு.

_ தேங்க்ஸ் friend. ரொம்ப டெஸ்ட்டா இருந்துச்சு. எனக்கு இது மாதிரி டெய்லி சாப்பிடத் தருவீங்களா?

- கட்டாயமா. நாளைக்கு உங்க அம்மாவையும் இங்க சாப்பிட வரசொல்றியா?

- கண்டிப்பா friend. நான் போயிட்டு வரேன் bye.

_ உன்னோட பேர நீ சொல்லவே இல்லையே?

- எம்பேரு குஞ்சாக்கோ. Bye bye friend.
_____________
அன்று காலையிலே வந்துவிட்டாள் குஞ்சாக்கோ.

- Friend. எப்புடி இருக்கீங்க? எனக்கு சாப்பிட என்ன வச்சுருக்கிங்க?

- friend.உங்க அம்மாவையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னியே...எங்க அவுங்களைக் காணோம்?

- இங்க யாரோ ஒரு முட்டக்கண்ணன் இருக்கானாம் friend. அவனுக்கும் எங்க அம்மாக்கும் அவாதாம். அதுனால வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க friend...

யாரோ ஒரு முட்டக்கண்ணன பத்தி சொன்னா உங்களுக்கு ஏன் பொறயேறுது friend ?

- உங்க அம்மா வராட்டி பரவால்ல. நாம வேற டாப்பிக் பத்தி பேசலாம் friend.

//கருவாந்திக்கு கர்வம் இன்னும் அடங்கவில்லை.//

------------------
எப்பேற்பட்ட கர்வத்தையும் அடக்கவல்லது ஒரு paw வயிற்றுப் பசி!!!

ஒரு குளிர் பின்னிரவின் நேரம்... வாசலில் ஈனஸ்வரத்தில் ஒலித்த குரல் கேட்டு வெளியே வந்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி....

உடல் இளைத்து ... மேனியெங்கும் சொரியோடு...குளிர் தாங்க முடியாமல் கருவாந்தியும் குஞ்சாக்கோவும் சுருண்டு கிடந்தனர்.

_ அம்மா இதுதான்மா என்னோட friend. friend எனக்கும் அம்மாக்கும் ஏதாச்சும் சாப்பிட தாங்க friend.

நான் கொடுத்த பண்டத்தை  குற்ற உணர்வோடு  சாப்பிட ஆரம்பித்தாள் கருவாந்தி.


'physicalலா இன்னும் தயாராகல' என்று அன்று நான் கூறியது இப்போது அவள் மைண்ட் வாய்ஸில் எதிரொலித்தது எனக்கு கேட்டது.

ஒரு பெட்டி ஒன்றை அவர்களுக்கு அருகில் வைத்தேன்.

_ அம்மா... friend நமக்காக பெட்டி வச்சுருக்காரு பாரும்மா...வாம்மா அதுல படுத்துக்கலாம்.


சற்றே தயங்கியது கருவாந்தி... கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால்...



To be continued

1 comment:

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

தி நாய் ஸ்டோரி - கதையல்ல கருப்பு சரித்திரம்

வடநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது , நல்ல கல்லூரி , இயற்கை எழில் கொஞ்சும் இடம் , ஆனால் பாஷை புரியாது ,வாயினால் வில்லுவண்டி ஓட்ட...