Sunday, August 31, 2025

அருள்வல்லான்



சிவன் அன்பே உருவானவன், மௌனத்தை விட மென்மையானவன். எனினும் தன்னை அண்டியவர்களை பாதுகாப்பதில் உக்கிரமானவன்.
 அவனது வலிமை ஆவேசத்தினால் தூண்டப்பட்டதல்ல, தன்னை சரணடைந்தவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அவனது வலிமை தூண்டப்பட்டது. 

  உடலளவிலும் மனதளவிலும் அவன் அவனது தந்தையைப் போலவே பெருவீரன். இந்த வனத்தில் அவன் எதைக் கண்டும் அச்சப்பட்டதில்லை. அந்தப் பெருவீரனுக்கு இப்பொழுது நந்தனும் துணை இருந்தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எந்த வேட்டையாடியும் அவர்களை அண்டியவர்களை தீண்டத் துணியவில்லை. அவர்கள் இருந்த சூழலில் அமைதி நிலவியது.

ஆனால், அமைதி என்பது ஓய்வு அல்ல.

 அவனது மாபெரும் படைப்பாகிய வெண்கல சூலம் உடைந்து கிடந்தது. இப்போது அவனுக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ஆயுதம் என்பது அவனைப் பொருத்தமட்டில் அழிப்பதற்கான கருவி அல்ல. அது காப்பதற்கான கருவி. அந்த ஆயுதம் வளையக்கூடிய செம்பாகவோ நொறுங்கக்கூடிய வெண்கலமாகவோ இருப்பதை அவன் விரும்பவில்லை. அவன் தன்னைப் போலவே வலிமையான ஒரு உலோகத்தை தேடினான். இதுவரை அவனிடம் இருந்த உலோகங்கள் அவனது ஆற்றலை தாங்கும் திறனை பெற்றிருக்கவில்லை. ஒன்று அவை வளைந்தன அல்லது கண்ணாடித் துண்டை போல் அதிக ஆற்றல் கொண்டு தாக்கும் பொழுது உடைந்தன. 

 உடைந்து கிடந்த அவனது சூலத்தை நோக்கும் பொழுதெல்லாம் அவனுக்குள் ஆற்றாமை பொங்கி எழுந்தது. வலிமையான உலோகம் ஏதும் கிட்டாதா என்று அவன் தேடத் துவங்கினான்.
 அப்படிப்பட்ட உலோகத்தின் இருப்பை அவன் அருகில் உள்ள ஒரு நிலப்பரப்பில் உணர்ந்தான்.

 முல்லை வனத்திற்கு அப்பால் பரந்த சமவெளிகளில் இருந்து ஒரு காந்தப்புலன் அவனை ஈர்த்துக் கொண்டே இருந்தது. நோயின் தாக்கத்தாலும் தனக்குத் தானே பயிற்றுவித்துக் கொண்ட ஆன்ம பயிற்சிகளாலும் உயிர் பெற்றிருந்த அவனது நாடிகள் அவனுக்கு அந்த உலோகத்தின் இருப்பிடத்தை குறிப்பால் அறிவித்தபடி இருந்தன.

அவன் அந்த மின்காந்தத் துடிப்பை பின் தொடர்ந்து அந்த உலோகத்தை கண்டறிய ஆவல் கொண்டான். சிவன் அந்த இடத்தை நோக்கிச் செல்ல முடிவெடுத்தான். சிவன் நந்தனின் திமிளைப் பற்றி நந்தனின் மீது ஏறினான். இப்பொழுது நந்தன் சிவனின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தான். 

சிவன் நந்தன் மீது அமர்ந்து செல்லும்போது, நந்தனை வழி நடத்துவதற்கு சிவனுக்கு வார்த்தைகளோ கடிவாளமோ தேவைப்படவில்லை. சிவனின் ஒவ்வொரு நுட்பமான அசைவும், எடையின் லேசான மாற்றமும், காலின் மென்மையான தொடுதலும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன் மூலம் அவனது விருப்பம் நந்தனுக்கு உடனடியாக கடத்தப்பட்டு விடும் . அவர்கள் இருவரது ஆன்மாவும் ஒரு புலப்படாத கயிற்றினால் இணைக்கப்பட்டிருந்தது போல தோன்றியது. அது ஓட்டுபவனுக்கும் வாகனத்திற்கும் இடையிலான பிணைப்பு மட்டுமல்ல , மாறாக அன்பினால் இணைந்த இரு ஆன்மாக்களின் பரிபூரண ஒத்திசைவு இணக்கம்.

சிவன் மென்மையாக நந்தனின் தோலைத் தீண்டிய உடனேயே, நந்தனுக்கு எந்தப் புறம் செல்ல வேண்டும் என்பது விளங்கியது.

அவர்கள் காட்டை விட்டு வெளியேறி, வளமான மருத நிலங்களை நோக்கி பயணிக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் வேகத்தை அதிகரித்து, அடர்ந்த, நிழல் படர்ந்த காடுகளின் வழியாகச் சென்றனர். அந்த அடர்ந்த காடு நெருக்கமான புதர்களாலும் முள்மரங்களாலும் அடைபட்டிருந்தது, ஆனால் அவற்றால் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க இயலவில்லை. சிவன் தனது சூலத்தைக் கொண்டு புதர்களை விலக்கினான்.காட்டின் எல்லையில் பெரும் மதில் சுவரென அமையப்பெற்ற விழுந்து கிடந்த பெரிய மரங்களை நந்தன் தனது கொம்புகளால் முட்டித் தூக்கி எறிந்து வழி ஏற்படுத்தி புயலைப் போல் விரைந்து சென்றான் . இறுதியாக அவர்கள் இருவரும் பொருநை நதியின் கரையினை அடைந்தனர்.

 அது சற்றே மேடான நிலப்பரப்பு அங்கே இருந்து பார்க்கும் பொழுது பல மைல்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

அங்கே, உலகம் வேறுவிதமாக காட்சியளித்தது .

 அங்கே காற்றின் மணம் வேறுவிதமாக இருந்தது.

 அந்த நிலம், மக்களால் நிறைந்திருந்தது. அவர்களின் ஆடைகளும் அணிகலன்களும் வித்தியாசமாக இருந்தன. அவனது திசை காட்டியான மூன்றாம் கண்ணும் நாடிகளும் அவனை அந்த கிராமத்திற்கு அப்பால் உள்ள ஒரு பரந்த நிலப்பரப்பினை நோக்கி ஈர்த்தன.

  மனித நடமாட்டம் குறைவாக இருந்த கிராமத்தின் எல்லைப் பகுதி வழியாக அந்த கிராமத்தை கடக்க சிவனும் நந்தனும் எண்ணம் கொண்டனர்.

 காட்டினை ஒட்டி கிராம எல்லையில் யாரும் பார்த்து விடா வண்ணம் மரங்களுக்கு இடையிலேயே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
 அப்பொழுது அந்த இடத்தின் அமைதியை குலைப்பது போல திடீரென ஒரு பாடல் ஒலித்தது. அது சோகம் ததும்பும் பாடல். அது ஒரு ஒப்பாரி. அந்தப் பாடலினால் ஈர்க்கப்பட்ட சிவன் அங்கேயே நின்று அங்கு நடக்கும் செயல்களை கவனிக்க தொடங்கினான்.
 அவர்கள் நுழைந்திருந்த இடம் ஒரு இடுகாடு. பின் நாட்களில் இந்த உலகம் அந்த இடத்தை ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப் போகிறது.அந்த இடத்தில் காற்று ஈரமண்ணின் மணத்துடனும் காட்டு மல்லிகையின் நறுமணத்துடனும் கனத்திருந்தது. மருத நிலங்களின் வழியாக சிறு ஊர்வலம் அங்கே அமைதியாக நகர்ந்தது, மாலையின் தங்க ஒளி வளமான வயல்களின் மீது வெளிச்சத்தைப் பரப்பியது. 

அங்கிருந்த மக்கள் இறந்து பட்ட வீரன் ஒருவனை கௌரவிக்கக் கூடியிருந்தனர். அவன் தமிழ்பரணி ஆற்றின் கிழக்குக் கரையில் வாழ்ந்த ஒரு வீரன், தன் மக்களைக் காக்க போராடியவன். இப்போது அவன் தனது முன்னோர்களுடன் இணைய, பெரிய முதுமக்கள் தாழியில் இடம்பெறவிருந்தான்.இறந்துபட்ட அந்த மனிதனின் உடல் ஒரு பெரிய மண்பானையில் அமர வைக்கப்பட்டது. அந்த மண்பானை ஒரு முதுமக்கள் தாழி, மூத்தோரின் அடக்கப் பானை. அந்தத் தாழியானது ஒரு உயரமான மண் கலயம், அது மிகப் பெரியதாக இருந்தது, அந்தத் தாழியின் மேற்பரப்பு மினுமினுப்பாகப் பளபளத்தது. அது குயவர்களால் கவனமாக உருவாக்கப்பட்டது .

 அந்தப் பானையின் விளிம்புப் பகுதியில் வட்ட வடிவில் கைவிரல் பதித்த அச்சு முத்திரைகள் ஒரு வளையத்தை உருவாக்கி இருந்தன. அந்த முத்திரைகள் ஒரு வடிவத்தை உருவாக்கின. அது ஒரு யோனியைக் குறித்தது.

யோனி - பிறப்பின் புனித சின்னம்.

 கருப்பையில் இருந்து யோனி வழியாக இந்த உலகில் பிறந்தவன், திரும்பவும் இயற்கைத் தாயின் கருவறைக்குள் புக இருப்பதை, தாழியில் புதைக்கும் இந்த ஈமச்சடங்கு குறிப்பால் உணர்த்துகிறது . 
 
அவன் பயன்படுத்திய அரிய விலைமதிப்புமிக்க செம்புக் கணிச்சி, தெற்குக் கடற்கரையிலிருந்து வந்த முத்து வளையல்கள், ஆபரண மணிகள், தானியங்கள் நிரப்பப்பட்ட கருப்பு-சிவப்பு மண் பாண்டங்கள் போன்றவை தாழியில் வைக்கப்பட்டிருந்தன
அவனின் உடல் மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்ட துணியில் சுற்றப்பட்டு, முதுகு நிமிர்த்தப்பட்டு , தலை சற்று முன்னோக்கி வணங்கிய நிலையில் உட்கார வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் அவனது வீரத்தை சிறப்பிக்கும் நோக்கத்தில் அணிவிக்கப்பட்ட ஒரு மெல்லிய தங்கப் பட்டை இருந்தது. அது மட்டுமல்லாமல் அவனது மார்பை அலங்கரிக்கும் விதமாக முத்து மற்றும் கல் மணிகளின் மாலை காணப்பட்டது . 

பெண்கள் தங்கள் ஒப்பாரிப் பாடலைத் தொடங்கினர். அந்தப் பாடல் அவனது வீரத்தை பறைசாற்றுவதாக இருந்தது. ஒரு மூத்த பெண்; அரிசி நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டத்தை உள்ளே வைத்தார். அது அவனது ஆன்மாவை பசியாற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. 
 இறந்து பட்ட வீரனின் உற்ற நண்பன் ஒருவன் அவர்கள் இணைந்து வேட்டையாடிய ஒரு சிறுத்தையின் விரல் நகத்தால் செய்யப்பட்ட ஆபரண மணியை அவனுக்கு அருகில் மென்மையாக வைத்தான், அவன் பயணத்திற்கு ஒரு தோழனாக அது இருக்கும் என்று அவன் எண்ணி இருக்கக் கூடும்.

இரு ஆண்கள், பானையின் கழுத்தில் தடித்த மரக் கம்புகளைக் கட்டியிருந்தனர். ஒன்றாக, அவர்கள் அதை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் இறக்கினர். 
தாழியின் வாய்; கிண்ண வடிவில் இருந்த ஒரு மண் கலையத்தால் மூடப்பட்டது. தாழி இறக்கப்பட்ட குழி தற்போது மணலை கொண்டு மூடப்பட்டது. மேலே, ஒரு நடுகல் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நடுகல்லின் நிழல் மாலைச் சூரியனின் ஒளியில் நீண்டு காணப்பட்டது.

கிராம மூப்பர், வேம்பு மரத்தால் செதுக்கப்பட்ட கைத்தடியை ஊன்றி, சிவந்த அந்திவானத்தை நோக்கி தலையை உயர்த்தினார். 
“தமிழ்பரணியின் மகனே, நீ இந்த மண்ணின் காவலனாக திரும்பவும் இயற்கையின் கருவறைக்குள் திரும்புகிறாய். உன் ஆன்மா பழைய வேட்டையாடிகளும் வீரர்களும் உள்ள புலங்களில் நடக்கட்டும். பரணி கடலைச் சேரும் இடத்தில் வருடம் தோறும் உன் வழித்தோன்றல்களால் உனது புகழ் பாடப்படட்டும். உன் வழித்தோன்றல்களின் வாழ்வை முன்னோர்கள் ஆன்மாக்களுடன் இணைந்து நீ வழிநடத்துவாயாக ”.
அவரது குரல் வயது மூப்பின் நடுக்கத்திலும் உறுதியாக இருந்தது.
மக்கள் அவர் வார்த்தைகளை எதிரொலித்தனர், அவர்களின் வார்த்தைகள் அந்திக் காற்றின் சலசலப்புடன் கலந்தது. அந்த நடுகல் அமைதியாகவும், பெருமையுடனும் நின்றது, இந்த வீரன் மறக்கப்படமாட்டான் என அது உறுதியளித்தது. அந்த நடுகல்லின் கீழே, கருவறைக்குள் திரும்பிய அந்த வீரன் தன் மக்களின் அன்பளிப்புகளால் சூழப்பட்டு நித்திய விழிப்பில் அமர்ந்திருந்தான், அவனது ஆன்மா இறக்கவில்லை. அவனை நேசித்தவர்களின் நினைவுடன் பிணைந்திருந்தது.அது அவர்களின் வாழ்வினை வழி நடத்த உறுதி கொண்டது.

 அந்த வீரனின் ஆன்மா அழிவற்றது ... இறப்பு இல்லாதது....

 தமிழர்களை இறப்பு என்ற ஒன்றை நம்பவில்லை.

இறப்பு என்பது இல்லாமல் போவது.

 இயற்கையில் இருந்து உதித்த ஒரு உயிர் திரும்பவும் இயற்கையோடு கலந்து விட்டது என்பதே தமிழர்களின் நம்பிக்கை. 

 எனவேதான் தமிழர்கள் இறந்து விட்டான் என்று கூறுவதில்லை, இயற்கை எய்தினார் எனக் கூறுகிறார்கள்.
 
 அப்படி இயற்கையை எய்திய அந்த வீரனின் நினைவுகளோடு அவனது உற்றாரும் உறவினரும் இந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

 நடப்பவை அனைத்தையும் அடர்ந்த மரங்களுக்கு இடையில் நின்றிருந்த சிவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

 நடந்து கொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் அவனது மனதுக்குள் கலவையான எண்ணங்களை எழுப்பியபடி இருந்தன.
அவனது புலன்களும் மூன்றாம் கண்ணும் அவனை இந்த புனித நிலத்தைத் தாண்டி மேலும் தொலைவுக்குச் செல்லத் தூண்டின.
 
ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. 

 அந்த மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்தனர்.

அதனால் அவன் தனது காட்டை நோக்கி,, தனது தனிமையை நோக்கி.திரும்பினான்.

 அவன் காட்டை நோக்கி செல்ல முற்பட்ட அதே தருணத்தில் காட்டிற்குள் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

 அவள் தலையில் விறகுக்கட்டை சுமந்திருந்தாள். அவளது தோல் மழை பொழிந்த கரிசல் மண்ணைப் போல் இருந்தது. அந்தியின் கடைசி வெளிச்சத்தில் அந்தக் கருமை நிறத்தோல் மின்னியது.

அவள் நிலத்தின் தாளத்துடன் நகர்ந்தாள், அவளது மூச்சு, வெப்பத்தால் கனமாக இருந்தது.

 இருட்டுவதற்குள் அவள் வீடு திரும்ப வேண்டும். அவள் தனது நடையின் வேகத்தை அதிகரித்தாள். அப்போது வேகமாக கடந்து செல்லும் காளை ஒன்றின் குளம்பொலிச் சத்தத்தால் அவளது கவனம் திரும்பியது.
 சத்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்பினாள்.

 அவளுக்கு அருகில் ஒரு காளை வேகமாகக் கடந்து சென்றது. அதன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவனது மார்பு பாறையைப் போல அகலமாக இருந்தது, அவனது கைகால்கள் ஆவேசத்தையும் அழகையும் ஒருங்கே அறிந்த ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டவை போல இருந்தன. அவனது தோல் செம்மல் மலரின் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. ஒரு விசித்திரமான உலோக வளையம் , பாம்பு போல வடிவமைக்கப்பட்டு, அவனது கழுத்தைச் சுற்றியிருந்தது. ஒரு உடைந்த வெண்கல ஆயுதம் அவனது மடியில் கிடந்தது.

ஆனால் அவளை திகைப்பில் ஆழ்த்தியது அவனது கழுத்து.
 அந்தக் கழுத்து கருநீல வண்ணத்தைக் கொண்டிருந்தது.

அவனது கண்கள் பிறை வடிவில் தங்க நிறத்தில் ஜொலித்தன. அந்தக் கண்களில் அன்பும் அளப்பரியா தைரியமும் நிரம்பி இருந்தன .

  அந்த கண்களுக்கு மேல் உள்ள நெற்றியை அவள் பார்த்தாள். சேற்றுமண்ணை பூசி இருந்த நெற்றியில் புருவங்களுக்கு இடையே ஒரு மூன்றாவது கண் இருந்தது 

அது ஒருபோதும் நகராத கண்.
மற்ற கண்கள் மூடப்பட்டிருக்கும்போதும் பார்க்கக்கூடிய ஒரு கண்.

 சிவனும் அவளைப் பார்த்தான்!

அது ஒரு உவா நாள்— சூரியனும் சந்திரனும் ஒருங்கே காணப்படும் நாள்.

 காளையின் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் வலது புறத்தில் சூரியனும், இடது புறத்தில் சந்திரனும் 
காட்சியளித்தது.

 இந்தக் காட்சியினால் அவள் சற்று தடுமாறினாள்,   அவளது மூச்சு வியப்பில் நின்றது. அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் நிலம் அவனுக்காக நிறுத்தப்பட்டது போலிருந்தது, காற்று அமைதியானது, பறவைகள் தங்கள் பாடல்களை நிறுத்தின. அவள் ஒரு தெய்வீக அனுபவத்தால் சூழப்பட்டாள்.  அவளது கைகளில் இருந்து விறகு கட்டு நழுவியது.

 ஒரு இனம் புரியாத தெய்வீக உணர்வு உந்த; இரு கைகளையும் உயர்த்தி சிவனை அவள் வணங்கினாள். 

அந்த மனிதன் எதுவும் பேசவில்லை.
அவர்களது கண்கள் ஒரு கணம் சந்தித்தன.

 சிவனது கண்களில் அன்பு மட்டுமே ததும்பி இருந்தது 

 சிவன் நந்தனை கால்களால் மெலிதாகத் தீண்டினான். அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட நந்தன் அங்கிருந்து விரைவாக கிளம்பினான். அந்த கணத்தில் இந்த நிலத்தின் ஒரு புதிய அத்தியாயம் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.

அது நெருப்பிலும் மௌனத்திலும் பிறந்த உலோகத்தின் அத்தியாயம்.

 ரசவாதத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தப் போகும் அத்தியாயம் 

 அந்த அத்தியாயம் வெறும் வார்த்தைகளால் எழுதப்பட்டதல்ல,
 அது சிவனது துடிப்பறையின் புனித தாளத்தால் செதுக்கப்பட்டது,

 சிவன் இப்பொழுது இந்த உலகிற்கு போதிப்பதற்கு தயாராகி இருந்தான் . 
 அவரது போதனையால் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற பயன்கள் பற்பல

 தமிழர்கள் அவனிடமிருந்து...
 தமிழைக் கற்றனர்,
 மருத்துவத்தைக் கற்றனர்,
 வீரத்தைக் கற்றனர்,
 வாழும் முறையைக் கற்றனர்,
 அறிவியலைக் கற்றனர்,
 ஆன்மீகத்தைக் கற்றனர்,

 ஆனால் அதைவிட முக்கியமாக... அன்பையும் காதலையும் கற்றனர்.
 அது ஒன்றுதான் அவரது அனைத்து போதனைகளிலும் புனிதமான ஒன்று.

 அந்த மாசற்ற தூய அன்பின் விளைவால் தான் அவன் இறை நிலைக்கு உயர்ந்தான்.

 இறை நிலைக்கு உயர்ந்த அவரை மக்கள் இறைவனாக வழிபடத் தொடங்கினர். தான் இறைவனாக வழிபடப்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் இந்த உலகிற்கு தன்னை இறைவனாக முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அன்பின் சின்னமான ஆவுடையோடு கூடிய லிங்கத்தையே வழிபடக்கூடிய சின்னமாக அவர் முன்னிறுத்தினார். 

 யாராலும் காண இயலாத இறை நிலையை அன்பினால் மட்டுமே எளிதாக அடைய முடியும் என்பதே அவரது முக்கியமான போதனை.
--------

நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால், நல்ல சிவஞானத்தால் நான் அழிய- வல் அதனால், ஆரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படும் காண் ஆரேனும் காணாத அரன்

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

அருள்வல்லான்

சிவன் அன்பே உருவானவன், மௌனத்தை விட மென்மையானவன். எனினும் தன்னை அண்டியவர்களை பாதுகாப்பதில் உக்கிரமானவன்.  அவனது வலிமை ஆவேசத்தினால் தூண்டப்பட...