Friday, August 8, 2025

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் முறையாக, அவன் மீண்டும் பேசத் தொடங்கினான் — மனிதர்களுடன் அல்ல ஒரு காளையுடன்.

அவன் அதற்கு ‘நந்தன்’ என்று பெயர் வைத்தான். 

அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியது முதற்கொண்டு, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்தனர். மனிதனும் காளையும், காட்டின் பயணிகளாக, பசுக்களின் பாதுகாவலர்களாக இணைந்தே இருந்தனர்.

அவர்களுக்கு இடையே வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. பார்வைகள் மற்றும் அசைவுகள் மட்டுமே அவர்களுக்கு இடையில் தொடர்பு சாதனமாக இருந்தது. இருவரும் பார்வைகளால் பேசிக்கொண்டனர். இருவரும் கண் அசைவின் மூலமும் உடல் மொழியின் மூலமும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டனர். 

ஆனாலும் சிவனுக்கு ஏதோ ஒரு குறை இருந்தது. உடல் அசைவுகள் மூலம் அருகில் இருக்கும் பொழுது மட்டும்தான்  நந்தனுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.  சிவனால் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் வெறும் பார்வையாலும் அங்க அசைவுகளாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிவன் ஒலியின் மெல்லிய அதிர்வுகள் மூலம் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் தொடர்பு கொள்ள விரும்பினான். சிவன் நந்தனுடன் பேச விரும்பினான். ஆனால் இருவரின் பாஷைகளும் வேறு வேறாக இருந்தன.

 சிவன் எழுப்பிய வார்த்தைகள் வித்தியாசமானது, தனித்துவமானது. நந்தன் பேசிய மொழியோ வேறுவிதமானது. நந்தனின் மொழியும் சிவன் பேசிய தமிழைப் போல மிகப் பழமையானது.

 வராது வந்த மாமணி போல் சிவனின் வாழ்வில் வந்த இந்த நண்பனுடன் எப்படியேனும் பேசிவிட வேண்டும் என்று சிவன் விரும்பினான். 

 அது ஒரு வசந்த காலம். வனம் எங்கும் வசந்தம் நிலவியது. அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ்  சிவன் நந்தனுடன் அமர்ந்தான். 

 தூரத்தில் பசுக் கூட்டங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

 சிவன் நந்தனின் தோள்களில் சாய்ந்தவாறு படுத்திருந்தான்.

 

சிவனின் உதவியால் பிறந்த  சின்னஞ்சிறு கன்று; சிவனின் காலை நக்கியபடி அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பசி எடுத்தது போலும்... சிவனின் விரல்களை அது பால் குடிப்பது போல ஒலி எழுப்பிக் கொண்டே சப்ப ஆரம்பித்தது . 

தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, இந்த  சின்ன சப்தத்தை கேட்டு, தாயுணர்வால் தனது கன்றினை நோக்கி ஓடிவந்து பால் கொடுக்க ஆரம்பித்தது.

 இச்சிறிய ஓசை எப்படி அந்தத் தாயின்  ஆன்மாவை தொட்டது என்று சிவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

 சிந்தனையின் விளைவால்  சுற்றி இருந்த சூழலை அவன் உற்று கவனிக்க ஆரம்பித்தான். 

பசுக்களின் மெல்லிய நடை... 
மடியை முட்டி பால் குடிக்கும் கன்று... 
காற்றில் அசையும் இலைகள்...
பாறையில் மோதும் நதியலைகள்...

ஒவ்வொரு நகர்வும் காற்றில் அதிர்வலைகளை எழுப்பி, ஓசையை உற்பத்தி செய்தன.

சிவன் ஒவ்வொரு ஓசையையும் கூர்ந்து கவனித்தான்.

அவனுக்கு அருகிலேயே இருந்த நந்தனின் மூச்சுக்காற்றின் ஓசை, சீரிய தாள கதியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

மூக்குத் துவாரங்களை விரித்து நந்தன்  மூச்சு விடுவதை சிவா கவனிக்க ஆரம்பித்தான். சில புரிந்து கொள்ள முடியாத சப்தங்களையும் அந்தக் காளை அவ்வப்பொழுது எழுப்பி வந்தது.

அந்த புனிதமான அமைதியில், சிவனுக்கு ஒரு கேள்வி எழுந்தது.

"மொழி என்றால் என்ன?"

சிவா நந்தனின் சுவாசத்தை கவனித்தான். அவனது பெரிய வயிறு ஒவ்வொரு மூச்சிலும் ஆழமாகவும், மெதுவாகவும் உயர்ந்து தாழ்ந்தது. 

 ஓநாயைப் போன்ற  வேட்டையாடிகள் தங்கள் மார்பை அசைத்தே சுவாசத்தை மேற்கொண்டது; ஆனால் நந்தன் தன் வயிற்றை மட்டுமே அசைத்தான். 

 சிவன் தனது மூச்சை கவனிக்க ஆரம்பித்தான் . 

 சிவன் தன் மார்பை விரிய விட்டான்—அப்போது அவன் முக்கியமான ஒன்றை உணர்ந்தான். அவன் தனது மார்பை விரியவிட்ட பொழுது பிரபஞ்சத்தில் இருக்கும் காற்று அவனுக்குள் நுழைந்தது. அவன் நுரையீரல்களை நிரப்பியது. அது ஒரு மின்னோட்டம் போல அவனை உயிர்ப்பித்தது, 

"இது வெறும் காற்று அல்ல. இது உயிர்."

 பின்னர் சிவன் உள்ளே இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விட்டான்.

மூச்சு மென்மையாக, மலையிலிருந்து கடலுக்கு பாயும் ஆறு போல வெளியேறியது. அது அவனது முயற்சியின்றி தானாகவே நிகழ்ந்தது. 

சிவன் மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தான். பின்னர் வெளியிட முயன்றான்.  இப்பொழுது அவனை விட்டு வெளியேற முயன்ற மூச்சை நாசி வழியாக வெளியேற்றாமல், வாய் வழியாக வெளியேற்றினான். சுவாசக்காற்று  வாய் வழியாக வெளியேறும்  பொழுது; தனது தொண்டையில் அமையப்பெற்ற  குரல்வளை நாணை சிவன் அதிரவிட்டான்.

அவனது தொண்டை  தமருகம் போல செயல்பட்டது. 

 அவனது கழுத்தின் சிறிய மத்தளம் அதிரத்  தொடங்கியது.

 ஒலி பிறந்தது!

 பேச்சு என்பது கட்டுப்படுத்தப்பட்ட வெளி சுவாசம் என்பதை அறிந்து கொண்டான்.

இது இயல்பானது அல்ல. இது அவனது முயற்சியால் உருவாக்கப்பட்டது. 

இப்போது சிவன் திரும்பவும் நந்தனது சுவாசத்தை கவனித்தான்.

 நந்தன் தனது மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது அது முயற்சித்து உள்ளிழுத்தது. வெளியிடும் பொழுது முயற்சி இல்லாமல் வெளியே விட்டது.

 திடீரென்று நந்தன் மூக்கில் ஏதோ தூசி புகுந்தது போல அது தும்மியது.

 சிவன் சிந்தித்தான்...

 தும்மல் ஒரு வெளி சுவாசம்... இருமலைப் போலவே...

 ஒருமுறை தனக்குத் தானே இருமிப் பார்த்தான்...
 
எப்படி இருமல் என்பது வலுக்கட்டாய வெளி சுவாசமோ, அதேபோல் பேச்சு என்பதும் வலுக்கட்டாய வெளி சுவாசம் தான்.

 அப்போது, தொலைவில் ஒரு ஒலி - ஒரு ஓநாயின் ஊளைச் சத்தம், மரங்களுக்கு அப்பால்... மலைகளைத் தாண்டி தூரத்திலிருந்து கேட்டது.

சட்டென்று  நந்தனின் காதுகள் விரைத்துக் கொண்டன. அவனது உடல் இறுகியது. அவனது கண்கள் குறுகின.

 அந்த ஊளைச் சத்தத்திற்கு பதில் அளிப்பது போல்  நந்தன்  தனது இருப்பை நிறுவ ஒரு ஒலியை எழுப்பினான். அது ஒரு உரத்த ஊளைச் சத்தம் அல்ல. “ஹ்ர்ர்” என்ற குறுகிய ஒலி.

சிவா அந்த இரு உயிர்கள் ஏற்படுத்திய ஒலிகளைக் கவனித்தான்.

 ஊளைச் சத்தம் வலிமையானது. நீண்ட தூரத்திற்கு பயணிக்க கூடியது.

ஆனால் “ஹ்ர்ர்” என்ற ஒலி குறுகியது. அது ஒரு குறைந்த காற்று வெளியீடு. அதை வெளியிடுவதற்கு குறைந்த ஆற்றலே நந்தனால் செலவிடப்பட்டது . 

 சிவா புரிந்து கொள்ளத் தொடங்கினான்.

 நன்றாக வாயைக் குவித்து, குவிப்பிற்கு ஏற்றார் போல் நாக்கை இலேசாக உள் இழுத்து, காற்றைக் கொஞ்சம் வேகமாக சிவன்  வெளியேற்றினான். மிடற்றில் இருக்கும் நாண்கள் அதிந்தன. அதனால்  ‘ஊ’ என்கின்ற ஒலி எழுப்பப்பட்டது. அந்த ஓசையினூடே அவனது ஆற்றலும் வெளியேறுவதை சிவன் உணர்ந்தான். 

ஊளை விடும் பொழுது; மூச்சானது வாய் வழியாக வெளியேறியது. நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்று; பிற பேச்சு உறுப்புகளால் எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாமல்; சுதந்திரமாக வெளிவந்தது.

 மத்தளம் அடிக்கும் பொழுது; எவ்வாறு தோல் கருவியின் தோல் அதிர்ந்து ஒலியை எழுப்புகிறதோ; அதேபோல்  நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்றானது; குரல்வளை நாணை அதிரச்செய்து, அந்த அதிர்வு உதடு குவிப்பதால் குறுக்கப்பட்டு ஊளை சத்தமாகக் கேட்கிறது என சிவன் புரிந்து கொண்டான். 

 அப்போது அங்கே ஒரு செம்மார்பு குக்குருவான் பறவை  உயர்ந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டு 'டங்கு' 'டங்கு' என்று சம்மட்டியால் இரும்பை அடிப்பது போல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது . தொலைவிலிருந்து வேறொரு பறவை அதே போல் ஒலி எழுப்பி இந்தப் பறவையை தொடர்பு கொண்டது. இப்படியாக தொலைவில் இருக்கும் பறவைகளோடு குக்குருவான் ஒலியின் அதிர்வுகளால் தொடர்பு கொள்கின்றது என்று அறிந்து கொண்டான்.

அந்த டங்கு டங்கு ஒலியிலேயே 200க்கும் மேற்பட்ட மாற்றங்களை சிவன் கவனித்தான். இதே போல வெவ்வேறு அதிர்வலைகளைத் தான் தனது பறையும் எழுப்புகிறது என்பது அவனுக்கு விளங்கியது. 

 ஒவ்வொரு வகை அதிர்வும் ஒவ்வொரு வகை எழுத்து!!

 பிறகு ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கத் தொடங்கினான்.

சிவன் நேராக எழுந்து அமர்ந்தான். அவனது முதுகுத்தண்டு நேராக இருந்தது. பிறகு ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தான். சிவன் தனது வயிற்றை மேல்புறமாக உந்தித் தள்ளினான். உதரவிதானம் நுரையீரலை மேல்புறமாக அழுத்தி காற்றை வெளியேற்றியது.

வாயின் வழி வெளியேறும் காற்றினை; குரல்வளை நாணின் துணையால்  அதிரச் செய்து; ஓசை வெளிப்படும் பொழுது, வாயை அகலமாக்கினான் சிவன்.  

 ‘அ’ சப்தம் பிறந்தது!

 இதழ்களை விரித்தும் குவித்தும் குறுக்கியும் பல்வகை எழுத்துக்களை   உச்சரித்தான். 'அ இ உ எ ஒ' எனும் ஒலிகள் பிறந்தன.

 ‘அ இ உ எ ஒ’ எனும் குறுகிய ஒலிகளை நீட்டித்து ஒலித்துப் பார்த்தான் …
 ‘ஆ ஈ ஊ ஏ ஓ’ எனும் நெடில் ஓசைகள் ஒலித்தன. 

 இந்த உயிர் எழுத்துக்கள் நந்தனின் செவியைத் தீண்டின. அந்த அதிர்வு செவிப்பறை வழியாக நந்தனின் மூளைக்கு கடத்தப்பட்டது. இவன் ஏதோ பேச வருகிறான் என்பது போல காதுகளை சிவனை நோக்கித் திருப்பி நந்தன்  கவனித்தது.

 குரல் நாணால் உருவாக்கப்படும் அதிர்வலைகள்; காற்று ஊடகத்தால் கடத்தப் பட்டு;  செவிப்பறையை அதிரச் செய்து,  அந்த ஒலியை நந்தன் உணர்ந்து கொண்டதை சிவன் அறிந்தான்.
 
சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு கடத்துவதே மொழி என்று அவன் உணர ஆரம்பித்தான்.

அதிகப்படியான ‘ஊளை’ போன்ற வெளி சுவாசத்தை ஏற்படுத்தும் பொழுது அவன் சிறிது  களைப்படைய தொடங்கினான், ஊளை சப்தம்,  மூளைக்கு செல்லும் பிராணனைக் குறைத்தது. 

‘ஊ’ நெடில், இதை உச்சரிக்க அதிக பிராணன் தேவை படுகிறது!

இவ்வகை எழுத்துக்களை சிவன் உச்சரித்த பொழுது, அவனது உயிராற்றல் அதிகப்படியாக செலவிடப்பட்டதை உணர்ந்தான்.

உயிராற்றலை அதிகம் வேண்டும் இவை உயிர் எழுத்துக்கள் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

 பின்னர் புலியைப் போல 'உர்' என்று உறுமிப் பார்த்தான்.

உறுமும் போது எழுப்பப்படும் ‘உ’ குறில், இது குறைந்த வளி செலவினால் எழுப்பப்படும் ஒலி. அதுவும் ‘ர்’ எனும் ஒலியைக் கொண்டு வெளிசுவாசத்தில் தடை ஏற்படுத்தும் போது, வளி செலவு இன்னும் மட்டுப்படுகிறது என்று சிவனுக்கு புரிந்தது .

நாக்கு, உதடு, அண்ணம், வாய் மற்றும் பற்கள் உதவியால் ஓசைக்கு தடை போட்டு க் ச் ப் போன்ற ஓசைகளை உருவாக்கினான்.

“ப்,” “ம்,” என்ற எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது, அந்த எழுத்துக்கள் ஆற்றலை உடலில் (மெய்யில்) இறுக்கி பிடித்து வைத்தன. அவை உயிர் செலவை கட்டுப்படுத்தின... ஆற்றலை உடலுக்குள் சேமித்தன. 

உயிராற்றலால் பிறந்தது உயிர் எழுத்து, உடல்(மெய்) என்னும் கருவியின் துணையால் உருவானது மெய்யெழுத்து என்று சிவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

பின்னர் உயிரை உடலோடு இணைத்தான். மொழி உயிர் பெற்றது.

 உயிரும் மெய்யும் சேர்ந்ததால் உருவானதே உயிர்மெய் எழுத்து என்று வகுத்துக்கொண்டான். 

 இவ்வாறு அவன் ஒவ்வொரு எழுத்தையும் நினைவு கூர்ந்தான், மறு கண்டுபிடிப்பு செய்து கொண்டிருந்தான்.

ஒவ்வொரு எழுத்து...
ஒவ்வொரு அதிர்வு...
மறந்துபோன மத்தளத்தின் ஒவ்வொரு துடிப்பு...

 இவ்வனைத்தும் சிவனின் பழைய புதைந்த நினைவுகளில் இருந்து வெளிவரத் துவங்கின. நீண்ட காலத்திற்கு முன்பு அவனது அன்னை அவனுக்கு பயிற்றுவித்தவற்றை ஒவ்வொன்றாக  அவன் நினைவு கூர்ந்தான். 

எழுத்து வாரியாக அவன் உச்சரிக்கத் தொடங்கினான்.

அவன் பல்வேறு எழுத்தின் கலவைகளை வெவ்வேறு வகையில் உச்சரித்து பார்க்கத் தொடங்கினான்... அவற்றை தனது உள்ளுணர்வால் ஆராய்ந்தான். 

 எழுத்துக்களை உச்சரிக்க செலவிடப்படும் மூச்சைக் கொண்டும், அவை உச்சரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் கொண்டும்  அவற்றை அவன் எடை போட்டான். பின்னர் அதை தனது மத்தளத்தில் ஒலித்துப் பார்த்தான்.

சேயோன் செப்பிட்ட தமிழ் மொழியை, சிவன் தன்னை அறியாமல் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

 அவன் மெருகேற்றிய தமிழ்; பிற்காலத்தில் அவனது சீடனின் சீடனால் இலக்கணமாக வகுக்கப்பட்டது. 
-----------
உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
 எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யா.
 - தொல்காப்பியர்.
-------
 நாட்கள் பல நகர்ந்தன. பின்னர் குளிர்காலம் தொடங்கியது. அப்படிப்பட்ட ஒரு குளிர் இரவில் தூரத்தில் இருந்த நந்தனின் சிறு உறுமல்  கூட சிவனுக்கு எளிதாகப் புலனாகியது.

 சிவன் தனது புலன்களை கூர்த்தீட்டினான். சூழலை காதுகளால் பார்க்க ஆரம்பித்தான்.

குளிர் இரவுகளில் நாகத்தின் மெல்லிய ஒலி கூட சிவனுக்கு எளிதாகக் கேட்டது.

 நாகம் ஏற்படுத்திய ஒலியை சிவனும் எழுப்பிப் பார்த்தான்.

அது வாயை அகலமாக்காத "ஸ்" என்ற ஒலி.

'ஸ்’ என்பது நாக்கை நீட்டி, பற்களால் தடை போட்டு, நாகம் போல் எழுப்பப்படும் ஒலி. 

ஸ் ஷ்... என்பன போன்ற எழுத்துக்கள் குளிர் பிரதேசத்திற்கான மெல்லிய ஒலிகள் என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

 தனது மத்தளத்தின் வலது பக்கம் 'ழ'கரத்தையும் இடது பக்கம் 'ஸ'கரத்தையும் ஒலித்துப் பார்த்து அவற்றை எடை போட்டான்.

 அவன் இடப்பக்கம் எழுப்பிய பறை ஒலிகள் வட இந்தியாவில் பாணினியால் பிற்காலத்தில் இலக்கணமாக வகுக்கப்பட்டன. 

 இப்பொழுது எழுத்துக்களை  அவன் பறையாலும் வாயாலும் உச்சரித்துப் பார்க்கத் தொடங்கினான்.

 நாவால் மேலண்ணத்தைத் தொட்டு 
' ஸ் ' என்ற ஒலியை உச்சரிக்க முயற்சித்தான்.

 சப்தம் எதுவும் எழவில்லை.

 ஆனால் மேலண்ணத்தை அவன் தொடும் போது புருவமத்தி குறுகுறுத்தது.

 அவனது தாய் கற்பித்த ழகரம் மனதில் மின்னலென பளிச்சிட்டது.

 ழகரத்தை உச்சரித்தான். 

பின்னர் புருவ மத்தியை கவனித்து ஒரு மோன நிலைக்குச் சென்றான்.

அவன் அந்த  நிலையில் இருக்கும் பொழுது, பிரபஞ்சத்துடன் ஒன்று கலந்தது போல் தோன்றியது.

 பிரபஞ்சம் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியது.

பின்னர் உள்ளுணர்வு உந்த, மெதுவாக, அவன் “அ…” என்று உச்சரித்தான்.

'அ' என்பது அடிப்பகுதியிலிருந்து எழுந்த ஒரு ஒலியின் அதிர்வு. அந்த அதிர்வு  ஒரு நாகம் போல மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறியது.

 அதைத்தொடர்ந்து “உ…”என்று உச்சரித்தான். அப்போது அதிர்வானது அவனது மார்பு வழியாக வளைந்து, நெருப்பு போல உயர்ந்தது.

இறுதியாக “ம்…” என்று முடித்தான்.

 அப்பொழுது எழுப்பப்பட்ட அந்த ஒலி சிவனின் கபாலத்தின் உச்சியில் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது .

 மூன்று ஒலிகளையும் ஒன்றிணைத்து   சிவன் உச்சரித்தான்  —ஓம்— என்னும் ஒலி பிறந்தது 

அ + உ+ ம் என்பதன் இணைப்பே 'ஓம்' எனும் ஒலி.

 அதை உச்சரித்துக் கொண்டே உச்சந்தலையின் அதிர்வுகளை  சிவன் கவனிக்க ஆரம்பித்தான்.

 அந்த அதிர்வு பிரபஞ்சத்தின் அதிர்வோடு இணைந்தது.

"எழுத்துக்கள் வெறும் ஓசைகள் அல்ல—அவை அதிர்வுகள், ஆன்மாவின் திறவுகோல்கள்."

 இப்பொழுது அவன் வெளிப்படுத்திய அதிர்வுகள்  புனிதத்தைக் கடத்தியபடி வனமெங்கும் படர்ந்து பரவியது.

 அந்த அதிர்வினை நோக்கி காட்டின் விலங்குகள் ஈர்க்கப்பட்டன.

 காட்டின் விளிம்பிலிருந்து மான்கள் தோன்றின. ஒரு மயில் சிவனை நோக்கி நெருங்கி வந்தது. பய உணர்ச்சி ஏதுமில்லாமல் ஆச்சரியத்தில் அது தன் தோகையை  விரித்தது. பறவைகள் அமைதியாயின. எங்கிருந்தோ பறந்து வந்த குருவிகளும், தாவிக் குதித்து  வந்த காட்டு முயல்களும் சிவனைச் சூழ்ந்தன. நாகம் ஒன்று சிவனது கழுத்தின் மீது படர்ந்தது.

 சிவன் சற்றும் அசையவில்லை. 

அவனது குரல்வளை அதிர்வுகளை எழுப்பியபடி இருந்து கொண்டிருந்தது.
வனத்தின் ஆன்மாக்கள் அனைத்தும்  அவனைச் சூழ்ந்து கொண்டன. 

 அவன் 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

  காடு அதை அமைதியாகக் கேட்டது.
-----------

 ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்

ங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை

ஓங்கார சீவ பரசிவ ரூபமே


No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

இயற்கை நோக்குதல் -வீட்டாண்ட காடு

Flash back: காணும் பொங்கல் ... கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ... இடம் : வண்டலூர் உயிரியல் பூங்கா எல்லாம் நல்லாத்தான்...