Friday, October 3, 2025

ஏர் முன்னது எருது - 6

 

நீரின்றி அமையாது உலகு  - பாலை நிலம்


காலம்: 21ம் நூற்றாண்டு தொடக்கம்

இடம்தென்மாவட்ட தலைநகர் ஒன்றை ஒட்டி இருக்கும்  மழைபொய்த்த  வனம் (பாலை நிலமாகத்திரிந்த முல்லை நிலம்)

நிலம்: மணலும், மணல் சார்ந்த இட ம்.

பெரும் பொழுது: முதுவேனில்.

சிறு பொழுது: நண்பகல் 12 மணி.

-----------------------------------------

இக்கொடியை பாருங்களேன்... பார்வையற்ற மாற்றுத்திறனாளியைப் போல் பற்றிக்கொள்ள படலை ஏதும் கிட்டாதா என நெடுந்தூரம் தடவித்தவழ்ந்து அலைகிறது.


ஒரு நிமிஷம் இக்கொடியை உற்று நோக்குங்களேன்.

என்ன ஆச்சர்யம்!!! தானே எழும்ப முயல்கிறதே!!!

சரி... நீங்க என்ன நினைக்கிறீங்க?

தனது மெல்லிய உடல் கொண்டு இக்கொடி எழும்பி ஒரு மரமென வளர்தல் சாத்தியமா?

சத்தியமா சாத்தியமில்லை தானே.

ஏன் இயற்கைக்கு இப்படி ஒரு ஓரவஞ்சனை?

இக்கொடியால் ஒரு மரத்தைப்போலோ, செடியைப்போலோ... குறைந்தபடிச்சம் ஒரு நாணலைப்போலவோ ஏன் நிமிர்ந்து நிற்கப் படைக்கப்படவில்லை?


காரணம்... “இது படைக்கப்பட்டதல்ல. பரிணமிக்கப்பட்டது.”

தாவரமாய் பரிணமித்த உயிர்களின் தேவை என்ன?

 

1.      இருக்க இடம்

2.      குடிக்க நீர்

3.      ஒளிக்கு சூரியன்

 

குறிஞ்சியும் முல்லையும் நீர்நிறை பிரதேசங்கள்அதனால் அந்நிலத்தில் குடியேற கடும் போட்டி. money சூழ் மாநகரமாம் சென்னையில் நெருக்கி இருக்கி வசிக்கும் ஒண்டுக்குடித்தனவாசிகள் போல, நீர்நிறை இப்பிரதேசத்தில் தாவரங்கள் போட்டியிட்டுக்கொண்டு நெருக்கி இருக்கி வளர்கின்றன.

சரி... நிலத்தை வசப்படுத்தினால் மட்டும் போதுமா?

வெயிலுக்கு?

இங்கே உறுதியாகவும் உயரமாகவும் வளரும் வல்லவர்களால்தான் நிலத்திலே நிலைத்து நிற்கவும், வெயிலிலே  சமைக்கவும் முடியும்.

 

அப்ப இது வல்லவர்களுக்கு மட்டுமேயான நிலப்பரப்பாசிறுசெடிகள் இங்கே வாழ்வதற்கு வழியேதும் இல்லையா?

பெற்றோரை சுற்றி வந்து மாம்பழத்தை வென்றது  போல, குறுக்குவழி நாடும் சில தாவரங்கள் இங்கே உண்டு.

படம்: மரத்தை பற்றி ஏறும் கொடி


பற்றி ஏறும் கொடிகள்; பல வருடங்கள் பாடுபட்டு அடைந்த உயரத்தை, பத்தே நாட்களில் எட்டிவிடும்.

  சரி... இப்ப பல ஆண்டுகளுக்கு மழை பொய்த்துவிட்டதுன்னு வைத்துக்கொள்வோம். எல்லா மரமும் செத்துப்போச்சு. பட்ட மரங்கள் எல்லாம் செல்லரித்துமுல்லை இல்லை என்றாகிவிட்டது. அந்த இடத்திலே எப்படியோ தப்பிப்பிழைத்த ஒரு கொடி இருக்குன்னு வச்சுக்குங்க. அந்த கொடியானது எதைப்பற்றிக்கொண்டு வளரும்?

 -எதற்காக எதையாவது பற்றிக்கொண்டு வளரனும்?

பாழ்பட்ட அந்நிலத்திலே இருக்க இடமும் தகிக்கும் சூரியனும் தான் அபரிமிதமாயிற்றே. அப்படிப்பட்ட ஒரு நிலப்பரப்பில் குடிக்க நீரை மட்டும் சமாளித்தாலே போதுமே, ஜாலியா பூமியில் பரவி  வளரலாமே.

படம்: பூமியில் படரும் படர்கொடி தாவரம் (குமட்டிக்காய் )


அப்படி சமாளித்து வளருவோரின் வசிப்பிடம் பேரு என்ன தெரியுமா?

 சிலப்பதிகாரம் என்ன சொல்லுதுன்னா...

'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.'

செடிகளின் சமையலுக்குத் தேவையான நீர் வெப்பமிகுதியால் நிலத்தை நீங்கும் போது, குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பை  இழந்து பாலையாகிறது. அதனால் அங்கே உயிர்மக்கரிமம் வேதியியல்  கரிமமாக கருக்கப்பட்டு பயன்படாவண்ணம் மாற்றப்படுகிறது. இதனால் பூப்பெய்திய உயிர்ப்புநிலம், உயிர்ப்பு இல்லா பாலைநிலமாக மாறிவிடுகிறது.

இந்நிலத்தை 'நடுவண் ஐந்திணை' என்கிறார்கள். அதாவது நிலங்கள் செழிப்பின்றி இருக்கும் போது பாலையாகிறது. பாலைக்கென நிலமில்லை. எனவே அதை அனைத்து நிலத்திற்கும் நடுவண் என்கிறார்கள். பாலை என்பது; நில அடிப்படையிலான  திணை என்பதை விட, கால அடிப்படையிலான திணை என்றே கூறலாம். வெயில் காலமும் மழை பொய்த்த காலமும் பாலையை உருவாக்குவதில் பங்கு வைக்கின்றன.

தமிழகத்தில் உண்மையான பாலைவனம் என்று தேரிக்காட்டை அழைக்கலாம். இது திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களில் 150 சதுர மைல் பரப்பில் உள்ளது. தேரி மணல்மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகள் கரிசல் காடாகவும் ஒரு பகுதி தேரிக்காடாகவும் அமைந்து பாலை நிலத்தின் பண்புகளைப்பெற்றிருக்கின்றன. கருநிற மண்ணைக்கொண்ட கரிசல் நிலம் நீரைத்தக்கவைப்பதால் அதில் ஓரளவேனும் பயிர்செய்ய முடிகிறது. ஆனால் தேரிக்காடு என்பது நீரை ஈர்த்துவைக்காத செம்மண் மேடுகளைக்கொண்டது. பின்வரும் குறுந்தொகைப்பாடலில் உழவன் செம்மண் ஈரம் காயுமுன்னர் உழுதுமுடிக்கத் துடிப்பதுபோல தலைவியைக்காணவிழையும் தலைவனின் உள்ளமும் துடிப்பதாக வருகிறது.

ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்

தோரே ருழவன் போலப்

பெருவிதுப் புற்றன்றோ னோகோ யானே

               — குறுந்தொகை 131:4-6

 

இங்கே மழை பொழியும்போது காட்டாறுகளும் ஓடும். அந்நேரங்களில் வெள்ளப்பெருக்காக ஓடி செம்மண் அதில் கரைந்து கடலில் சேரும். கடலே அந்நேரத்தில் செந்நிறமாகக் காட்சியளிக்கும். பின்னர் செம்மண் கடலின் அடியில் சேறாகப்படியும். இதில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆகையால் இது மீன்வளம் பெருகுவதற்கும் துணைசெய்கிறது.

இம்மணல்தாதுக்கள்நிரம்பிய தாதுமணல் ஆகும்கனிம மற்றும் தாது வளங்கள் நிறைந்த இம்மணலை கோள்ளையடிக்க காத்திருக்கும் ஆக்டோபஸ் கரங்கள் பல உள்ளன. இக்கனிமங்களின் தனித்தன்மை  நமது கற்காலமுன்னோர்களை வசீகரித்திருக்கிறது. பலவகை கனிமங்கள் ஒரே இடத்தில் கிடைத்ததால் பலவகை கலவைகளை எளிதில் பரிசோதித்துப் பார்க்க ஏற்ற பூமியாக இது அவர்களுக்கு இருந்திருக்கிறது. இந்ததேரிக்காட்டிற்கு அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் எனும் ஊரில் கிடைத்த செம்பு, வெண்கலம், இரும்பு, தங்கம் போன்ற உலோகப்பொருட்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

வடஇந்தியாவில்‌  மற்றும் உலகம் முழுவதும் புதிய கற்காலத்தையடுத்து தான்செம்புக்காலம்தொடங்கிற்று (Chalcolithic age). ஆரியர்களின் பழமையான வேதமான ரிக் வேதத்தில் செம்பினைஅயஸ்எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இரும்பைகிருஷ்ண அயஸ்என்கிறார்கள். இதன் மூலம் நாம் இரண்டு செய்திகளைப் பெருகின்றோம். ஆரியர்களால் செம்புக்குப் பின்னரே இரும்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிருஷ்ணரின் நிறம் கருப்பு என்பதையும் அறிய முடிகிறது.

உலகம் முழுவதும் கற்காலத்திற்கு அடுத்து காப்பர் எனப்படும் தாமிரம் அல்லது செம்புக்காலம் தொடங்கியது. ஏனென்றால். இயற்கையாகக் கிடைக்கும் சில உலோகங்களில் இதுவும் ஒன்று. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு உலோகத்தின் மீதான காதல் மனிதர்களுக்கு அரும்பத் தொடங்கியது.

ஆரம்பகால மக்கள் மிகவும் தூய்மையான தாமிரத்தை சுத்திகரித்தனர். ஆனால் தாமிரத்தின் பிரச்சனை என்னவென்றால், அது மிகவும் மென்மையாக இருந்தது. கோப்பை, பானை போன்றவற்றை செய்வதற்கு அதன் பயன்பாடு மெச்சத்தக்க வகையில் இருந்தது, ஆனால் ஆயுதங்கள் செய்ய செம்பு பயனற்றது.

தாமிரத்தை உருக்கும் செயல்பாட்டின் போது சிறிதளவு ஆர்சனிக் சேர்த்ததால், அவர்களுக்கு 'வெண்கலம்' கிடைத்தது (arsenical bronze), அது மிகவும் கடினமானது. அதைக்கொண்டு எதிரியை உறுதியோடு தாக்க முடியும் மேலும் உறுதியான விவசாயக் கருவிகளையும் அதைக்கொண்டு செய்ய முடியும்.

ஆனால் ஆர்சனிக் மிகவும் துல்லியமான அளவில் சேர்க்கப்பட வேண்டும் - இரண்டரை சதவீதத்திற்கும் அதிகமாக ஆர்சனிக் சேர்த்ததால், வெண்கலம் மிகவும் உடையக்கூடியதாக மாறியது.

ரோமானியர்கள் வல்கனை வணங்கினர், கிரேக்கர்கள் ஹெபிஸ்டோஸைப் வணங்கினர், ஜேர்மனியர்கள் வைலாண்டை வணங்கினர், ஸ்காண்டிநேவியர்கள் வுலண்டரை வணங்கினர், மற்றும் ஃபின்ஸ் இல்மரினனை வணங்கினர்.

யார்ரா இவுங்கள்ளாம்? இதை ஏன் இப்போ சொல்ற?”

இவுங்க எல்லாம் வெவ்வேறு நாகரிகங்களில் இருந்த ஆயுதம் மற்றும்  நெருப்போடு தொடர்புடைய கடவுளர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இவர்கள் அனைவரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் கொண்டிருந்தனர். காரணம் அர்சனிக்.

காப்பர் உடலுக்குத் தேவையானது. அதிகமானால்தான் பித்த வியாதியைத்தூண்டும். அல்லது சிலவகை பிறவிக்குறைபாட்டால் காப்பர் உடலில் அதிகரித்து, நரம்பு சம்பந்தமான அறிகுறிகளைக் காட்டும். ஆனால் அர்சனிக் ஒரு விஷம். இது நேரடி நரம்பு பாதிப்பை உருவாக்கும். அக்காலத்தைய கம்மாளர்கள் அனைவரும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். மக்கள் வளர்ச்சிக்காக தம் உயிரைப் பணயம் வைத்த அவர்கள் மக்களால் போற்றப்பட்டனர். அவர்களைப் போற்ற, அவர்களில் சிறந்தவர்கள் விஷ்வகர்மாவைப் போல் கடவுளுக்கு நிகராக ஒவ்வொரு நாகரிகத்திலும் ஆக்கப்படிருந்திருக்கின்றனர்.  இதில் வல்கன் குறிப்பிடும் படியானனவர். இவருக்கு நெருப்பில் அவிர்பாகம் வழங்கப்பட்டது. ரிக் வேதத்தில் Tvashtr என்று ஒருவர் வருகிறார். இவருக்கும் வல்கனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

கிமு. 3,200 ஆண்டு வாழ்ந்த ஓட்சி என்பவரது உடல் பனிச்சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் 99.7% சுத்தமான காப்பரால் ஆன கோடாலி இருந்தது. அவரது உடலில் செம்பு மற்றும் அர்சனிக் கலந்து இருந்தது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

உலகம் முழுவது செம்பு யுகத்தின் காலம் நீண்டு காணப்பட்டது. அது சுமார் கிமு 3200இல் தொடங்கி கிமு2300ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தியாவிலும் வடக்கே இதே ஆண்டுவாக்கில் தான் செம்புயுகம் தொடங்கியது. செம்போடு கூடவே சில இடங்களில் இயற்கையாகவே கலந்திருந்த அர்சனிக்கை உருக்கும் போது மக்கள் அர்சனிக்கல் வெண்கலத்தை கண்டுபிடித்திருக்க வேண்டும். அதன் பின்பு அதன் விஷத்தன்மையை மக்கள் உணர ஆரம்பிக்க பலதலைமுறை ஆகியிருக்கிறது. பல கம்மாளர்கள் நரம்புபாதிப்புக்கு உள்ளான பிறகே அதன் தீமைகளை உணர ஆரம்பித்திருக்கின்றனர். உணர்ந்த போதிலும் அதற்கு மாற்றான உபாயத்தை அவர்களால் உடனே கண்டறியமுடியவில்லை. பல முயற்சிகளுக்குப்பின் பலகலவைகளை அக்காலத்தைய அறிவின் அடிப்படையில் கலந்துபார்த்து, மிகத்தாமதமாகவே புதிய வெண்கலக்கலவை ஒன்றை அவர்களால் கண்டறிய முடிந்தது. அதன் பின்புதான் டின் உலோகத்தை இணைத்து தீங்கில்லா வெண்கலம் உருவாக்கப்பட்டு வெண்கல யுகம் தொடங்கியது.

 

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை; இரும்புக் காலம் என்கின்றனர். இக்காலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன.

பூமிக்கு உள்ளே உருகிய இரும்பு, நிக்கல் போன்றவை அதிக அளவில் உள்ளன. இயற்கையில் இரும்பு தனித்துக்கிடைப்பது மிகவும் அரிது. இரும்புக்கனிமத்தை பழுக்கச் சூடாக்கி அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, ஈரம், கரிமப் பொருட்களை வெளியேற்றிவிடுவார்கள். பின்னர் இதை நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் இவற்றுடன் கலந்து உலையில் 1500 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்குவார்கள். உருகிய குழம்பில் மிதக்கும் கழிவுகளை அகற்றி விட்டு இரும்பை வார்த்து வார்ப்பிரும்பாகப் (Cast iron or Pig iron) பெறுவார்கள். வார்ப்பிரும்பில் 4 முதல் 5 விழுக்காடு கார்பன், 1 முதல் 2 விழுக்காடு சிலிகான் மற்றும் மாங்கனீசு போன்ற வேற்றுப்பொருட்கள் இருந்தன. இதனால் இரும்பு எளிதில் உடையக் கூடியதாக இருந்தது. இதனைப் பட்டறைப்பயனுக்கு உள்ளாக்க முடியாததால் இப்பொருட்களை அகற்றிப்பயன்படுத்துவர். ஆக்சிஜன் வளியில் இத்தாதுவினை எரித்து அதிலுள்ள கார்பனை அகற்றுவார்கள். ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பைத் தேனிரும்பு (Wrought iron) மற்றும் எஃகு (Steel) என்பர்.

 கிமு2600 தொடங்கி கிமு 1900 ஆம் ஆண்டு வரை  நீடித்த ஹரப்ப நாகரிகத்தில் வெண்கலப் பயன்பாடு தான் இருந்திருக்கிறது. அதன் பின்புதான் கிமு 1000ஆம் ஆண்டு வாக்கில் உலகெங்கிலும் இரும்பின் யுகம் ஆரம்பித்திருக்கிறது. வட இந்தியாவிலும் இதே சமயத்தில்தான் கிருஷ்ண அயஸ்/ சியாம அயஸ் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மேலும் ஹரப்பர்கள் இரும்பை உருக்கியதற்கான தடயங்கள் ஏதும் இதுவரை பெறப்படவில்லை.

 

ஆனால் வழக்கத்திற்கு மாறாக தமிழகத்தில்இரும்புக் காலமும் பெருங்கற் சின்னங்களின் காலமும் சமகாலத்தில் அமையப்பெற்றன. (பெருங்கல் எனப்படுவது கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்படும் கற்களைக் குறிப்பிடுகின்றது என்பதை அறிவோம், கற்காலம் முடியும் சமயம் தமிழகத்தில் பெருங்கற் காலம் எனப்படுகிறது).

ஆதிச்சநல்லூரில்‌ (ஆதிஎச்ச - நல்லூர்) கற்கருவிகளுடன்இரும்புக்கருவிகளும்கலந்து காணப்படுகின்றன. செங்கற்பட்டில்பெரும்பேயா்என்னும்இடத்திலும்‌, கேரளத்தில்தலைச்சேரி என்னும்இடத்திலும்இவ்வாறே கற்கருவிகளும்‌, இரும்புக்கருவிகளும்கலந்தே கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் தொகரப்பள்ளி அருகிலுள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தில் நடந்த ஆய்வுகள் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் நடந்தன. இந்த அகழாய்வில் கல்திட்டை பகுதியில் இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.  தூத்துக்குடி சிவகளையில் நடந்த ஆய்வின் முடிவில்; அங்கு கண்டறியப்பட்ட இரும்புப் பொருட்களின் மைய அளவீட்டுக்காலம் கிமு. 3345 எனக் கண்டறியப்பட்டுள்ளது. (ஆய்வுகளைப்பற்றிய பல கேள்விகள் எழுவதைப் பார்க்க முடிகிறது, எது எப்படியோ வருடங்களின் எண்ணிக்கை முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் பெருங்கல் சின்னங்களின் காலத்தில் தமிழகத்தில் இரும்பு ஆயுதங்கள் இருந்திருக்கின்றன என்பது திண்ணம்).

எனவே, தமிழகத்தில்கற்காலம்முடிவுறும்போதே இரும்புக்காலமும்தொடங்கிவிட்டது, பெரும் கற்கால ஈமத்தாழிகள் அனைத்தும் இரும்புப் பொருட்களைக் கொண்டிருந்தது நாம் செம்புக்காலத்தையும் வெண்கல-காலத்தையும் பைபாஸ் செய்துவிட்டது போல் தோற்றம் தருகின்றன.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான விளக்கமாக ஆய்வாளர்கள் தருவது, ஒன்று, மக்கள்வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்குடி பெயர்ந்து வந்தபோது முதன்முதல்இரும்பைத்தம்முடன்‌  கொண்டு வந்திருக்கலாம் என்கின்றனர் (இந்தக்கருத்து சிவகளை கண்டுபிடிப்புக்கு முன்னால் கூறப்பட்ட கருத்தாகும்). ஆனால் அந்த சமயத்தில் பெரிதாக யாரும் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை. மற்றொன்று, கற்காலத்திலேயே மக்கள்ஏதோ ஒரு வகையில் இரும்பைக்கண்டுபிடித்துப்பயன்படுத்தத்தொடங்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்‌. சிவகளை, மயிலாடும்பாறை  ஆய்வுகளின்படி இரண்டாம் கருதுகோளுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

வடஇந்தியா முதற்கொண்டு உலகம் முழுவதும் செம்புக்காலம் மிக அதிகம். தமிழகத்தில் செம்பு இருந்திருக்கிறது. ஆனால் செம்புக்காலம் என்று தனியாக பெரிய காலம் இல்லை. தமிழர்கள் நேரடியாக இரும்பு பயன்பாட்டுக்குள் போய்விட்டனர்.

 அவர்கள் எப்படி இதை பைபாஸ் செய்தனர் ?

அல்லது ஏன் இதை பைபாஸ் செய்தனர் ?

இப்போதுஈயம்எனப்படும் ‘lead’ உலோகத்திற்கு வருவோம். இதுவும் மனிதர்கள் கண்டறிந்த பழமையான உலோகம். இரண்டையும் உருக்குவது எளிது. ஆனால் ஈயத்தை விட செம்பையே மக்கள் விரும்பினர். காரணம் ஈயம் செம்பை விட மென்மையானது. மேலும் செம்பு எளிதாகக் கிடைத்தது.

ஈயத்திற்கு இலத்தீன் மொழியில் பிளம்பம் என்று பெயர். காரணம் அது பைப்புகள் செய்ய பிளம்பர்களால் பயன்படுத்தப்பட்டது. ஈயத்தை வெண்கலத்துடன் சேர்க்கும் போது, அந்த உருக்கை; அச்சுகளில் எளிதாக ஊற்ற முடிந்தது. இதனால் காசுகள் செய்யவும், சிலைகள் செய்யவும்ஈயம்மிகவும் உபயோகமாய் இருந்தது. ஆனால் ஈயமும் அர்சனிக் எனப்படும் வெண் பாஷாணத்தை போலவே விஷத்தன்மை கொண்டது. ஈயம் நச்சுத்தன்மை உள்ளது என்பதை அறியாத ரோமர்கள் அதைப்பயன்படுத்தி பாத்திரபண்டங்கள், பைப்புகள் முதலியவற்றை செய்தனர். அதனால் நாள்பட்ட நோய்களின் பாதிப்புக்குள்ளானார்கள். ரோமர்களின் அழிவுக்கு ஈயமும் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அவர்களின் அந்த நோய்க்குப் பெயரேபிளம்பிசம்என வழங்கப்பட்டது.

ஈயத்தை தமிழர்களும் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் கண்டறிந்த கலவை தனித்துவமானது. ஈயம் முதலான ஐந்து உலோக்கக் கலவை கொண்டு தத்ரூபமான ஐம்பொன் சிலைகளை தமிழர்கள் உருவாக்கினர்.

வெண் பாஷாணம் எனப்படும் அர்சனிக் மற்றும் நாகம் எனப்படும் ஈயம் இரண்டுமே விஷங்கள். சில தலைமுறைகள் பாதிப்படைந்த பிறகுதான், அதன் விஷத்தன்மை உலகிற்கு தெரியவந்தது. மேலும் அவற்றை முறையான கலவையில் பயன்படுத்தும் வித்தையைக் கண்டறியவும் பல தலைமுறை உழைப்பு உலகிற்குத் தேவை பட்டிருக்கிறது.

மேம்பட்ட மெட்டலர்ஜி  தொழில் நுட்பத்தையும், உடல் செயல்பாடு மற்றும் நச்சியல் பற்றிய நுண்ணிய அனுமானங்களையும் உடையவர்களால் மட்டுமே இதை வெகு விரைவில் அனுமானித்து உடனடியாக இரும்புப்பயன்பாட்டிற்கு தமிழர்களை அழைத்துச் சென்றிருக்க முடியும். மேலும் செம்பு உருக்குபவர்களால் அதிவிரைவாக இரும்பு உருக்கும் தொழில் நுட்பத்திற்கு மாறிவிட முடியாது. காரணம் செம்பைக்காட்டிலும் இரும்பை உருக்க அதிக வெப்பம் தேவைப்பட்டிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறியவும் உலகமக்களுக்கு அதிக தலைமுறை காலம் ஆகியிருக்கிறது. ஆனால் இந்தத் தொழிநுட்பமும் தமிழகத்தில் மிக விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நச்சு என்பது அளவினைப் பொறுத்தது. சரியான அளவில் பயன்படுத்தப்படும் பொழுது அவை ஒரு நல்ல மருந்து. இதே வெண்பாஷாண நச்சு, புற்று நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதை அல்லோபதி மருத்துவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதே விஷத்தை பயன்படுத்தித்தான் நவபாஷாண சிலையும் செய்யப்பட்டது. நவபாஷாணத்தில் இதுவும் ஒரு பாஷாணம். அதை செய்தவர் ஒரு சித்தர்.

தமிழன்னா சும்மாவா, அந்த காலத்திலேயே என்னென்ன செஞ்சுருக்கோம் பாத்தியா

ஷோல்டரை இறக்கவும். பழனியில் இருக்குன் நவபாஷாண சிலையை செய்தவர் ஒரு சீனர். அவர் தமிழர் எனும் குறிப்புகள் காணப்பட்டாலும் போகர் 7000 எனும் நூலில் அவர் சீனர் என்பது போன்ற குறிப்புகளே உள்ளன. மேலும் இந்த அறிவை தனது தாய் நாட்டு மக்களுக்கு போதித்ததைப் பற்றியும் அவர் அந்நூலில் விளக்கியுள்ளார். சீனாவில் போகர் ‘போயாங் வேய்என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் இரு நாட்டினருக்கும் கிட்டியது. அவரால் அருளப்பட்டதே நவபாஷாண சிலை.

ஆகா நவ பாஷாணம் இங்கே இருக்கிறதே! சுரண்டித் தின்று நமது தீராத வியாதிகளை தீர்த்துக் கொள்ளலாம் என நினைப்பீர்களென்றால் நீங்கள் தொலைந்தீர்கள். அவை அனைத்தும் விஷங்கள். எவ்வளவு உடலில் சேர வேண்டுமோ அவ்வளவு மட்டுமே அதை நனைத்த தீர்த்தங்கள் வழி உட்கொள்ளப்படலாம். மீறி சுரண்டித் தின்றீர்களானால் நச்சுக்கள் உங்கள் உடலை உருக்கி; இறக்கும் பொழுது உங்கள் கால்களையே வெட்டி எடுத்துவிடும் அளவிற்கு அது உங்கள் உடல் நிலையை பாதிக்கலாம். சுரண்டியவர்கள் கைகளும் அழுகிவிட வாய்ப்பிருக்கிறது. (எனவேஉசாரய்யா உசாரு ஒரஞ்சாரம் உசாரு!).

நிற்க. நச்சுத்தன்மை மிக்க உலோகங்களின் நுகர்வு இன்றைய வாழ்க்கையில் மருந்து வடிவிலோ, அல்லது வணிகப் பொருட்களின் வடிவிலோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கூட நூடுல்சில் ஈயம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா முழுவதும் பேசுபொருளானது உங்களுக்கு நினைவிருக்கலாம். மனித உடலில் இயல்பான அளவை விட உலோகங்கள் அதிகரிப்பது உலோக நச்சுத்தன்மையின் முக்கிய காரணமாகும். அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருந்தால் கூட;; நாள்பட்ட ஈய பயன்பாடு, குறிப்பாக குழந்தைகளில் கடுமையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு, ச்செலேஷன் தெரபி, (EDTA) மற்றும் 2,3-Dimercaprol போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி, உலோக நச்சுத்தன்மையைக் குறைக்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும், இந்த மருந்துகள்  உடலில் இருந்து நமக்குத் தேவையான அத்தியாவசிய உலோகத் தாதுக்களையும் குறைக்க வாய்ப்பிருக்கிறது,

சித்த மருத்துவத்தில், ரச திரவியம் எனும் மருந்து  உலோக நச்சுத்தன்மையை குறைப்பதற்கு  பயன்படுகிறது. ச்செலேஷன் தெரபிக்கு மாற்றாக பக்கவிளைவுகள் இல்லாத ஒரு மருந்தாக இது உள்ளது.

சந்ததிப் பெருக்கமே அனைத்து உயிர்களின் அடிப்படை. நச்சுத்தன்மை கொண்ட உலோகங்களின் பயன்பாட்டால் நரம்பு மண்டலப்பாதிப்பு ஏற்பட்டு, ஜனன உறுப்புகளையும் அவை பாதிக்கக்கூடும். இது சிலருக்கு Priapism எனப்படும் நீடித்த விறைப்பு அறிகுறி வரை கூட கொண்டு செல்லும்.

உயிர்நிலையை பாதிக்கும் இவ்வறிகுறி மிகவும் வலியினை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
மூல பந்தாசனம்  போன்ற சில யோகமுறைகளில் உட்காரும்பொழுது, இடுப்புப் பகுதிகளுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் மடை மாற்றம் ஏற்படுகிறது.   நீடித்த விரைப்பிற்கு நிவாரணம் தரவல்லது இந்த யோக முறை.  ‘லைட் ஆன் யோகாபுத்தகத்தில் அதிகப்படியான விரைப்பை இந்த ஆசனம் கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆசனமே உலகில் முதல்முதலாகக் கண்டறியப்பட்ட ஆசனமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மேற்கூறியது போல் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்களினால் மட்டும்தான் உடல் நலக்குறைவு வருமா என்றால் இல்லை. நமது உடல்நலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உலோகங்கள் கூட உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு செம்பு. செம்பு எனப்படும் தாமிரம் இரத்த சோகையை தவிர்க்க வல்லது. ஆனால்வில்சனின்  நோய்போன்ற சில பிறவிக்கோளாருகளினால் செம்பின் அளவு குருதியில் அதிகரித்து பித்தத்தைத் தூண்டிவிட வல்லது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலேயே ஏற்படலாம். முதலில் பித்த சம்பந்தமான அறிகுறிகள் ஏற்படும்பிறகு நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் காணப்படும். நரம்பு அறிகுறிகள் இருக்கும் நோயர்களின் கண்களில்; பிறை போல் தொடங்கி, முழு வட்டவடிவில் கருவிழியைச் சுற்றி காப்பர்படிவங்கள் தாமிர அல்லது தங்க நிறத்தில் தோன்றும். அந்த நோயர்களின் கண்கள் காணுவதற்கு மிகவும் அழகாக இருந்திருக்கக்கூடும். இது போன்ற நோயர்களின் உடலில் மேலும் செம்பு சேரும் போது நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. ATP7B  எனும் மரபணு மாற்றம் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும்  ATP7B மாற்றம் தென்னிந்தியர்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

உயிரினங்களில் ஒரு வினோதமான பழக்கம் ஒன்று உண்டு. நம்ம ஊரில் நாமக்கோழி எனும் பறவை ஒன்று குளங்களில் நீந்திக்கொண்டு இருக்கும். அவை ஓரு ஸ்ரிக்ட்டான பெற்றோர். அவை தனது குஞ்சுகளை மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டே இருக்கும். அந்தத் தாக்குதலில் சில குஞ்சுகள் இறந்தே கூட போய்விடும். முடிவில் தைரிய மற்றும் தெம்பான குஞ்சுகள் மட்டுமே பிழைக்கும். நாய் போன்ற பாலூட்டி விலங்குகள் இந்த அளவிற்கு கொடூரத்தை காட்டாவிட்டாலும் பிறவிக்கோளாரு கொண்ட குட்டிகள் பிழைக்காது எனத்தெரிந்தால் சவலைக்குட்டிகளை தாயே தின்றுவிடும். வனத்தில் உயிர்வழத்தகுதியான குட்டிகளுக்கு மட்டுமே தனது ஆற்றலை செலவிட்டு வளர்க்க விலங்குகள் தலைப்படும். தகுதி இல்லாத சவலைக்குழந்தைகளைக்காக்க அவை ரிஸ்க் எடுப்பதில்லை. இதே போலொரு சூழலில் வனத்தில் விலங்குகளை எதிர்த்து வாழும் பழங்குடிகளும் பிறவிக்கோளாரு உள்ள குழந்தைகளை கைவிட்டு விடுவார்கள். தீரமும் அளவுகடந்த அறிவாற்றலும் இருந்தால் மட்டுமே தாய் தந்தை இல்லாத அந்தக்குழந்தைகள் வனத்தின் கடுமைக்கு பிழைத்திருக்க முடியும். ஸ்பார்டன்கள்  வனத்தில் விட்ட குழந்தைகள் பெருவீரர்களாகத்திரும்புவது போல் அக்குழந்தைகளும் உயிரோடு திரும்பிவிட்டால்  எமனால் கூட எதிர்க்கவியலா உடல் மற்றும் மனோபலம் அக்குழந்தைக்கு கிட்டுமல்லவா?

ஈயம், தனி உலோகமாகப் பயன்படுத்தும் போது நச்சின் வீரியம் அதிகமுள்ளது. அதனால் கலவைகளில் அவற்றை உபயோகிக்கும் போது அது மட்டுப்படுத்தப்படுகிறது. செம்பு, இரும்பு, தங்கம், ஈயம், டின், வெள்ளி, இரும்பு முதலிய உலோகங்கள்  கண்டறியப்படும் போது பலவகைக் கலவைகள் செய்யப்பட்டிருக்கின்றன. மற்ற நாடுகளில் கிடைக்கப்பட்ட வெண்கலங்களைவிட தமிழகத்தில் இருக்கும் வெண்கலத்தில் டின் கலப்பு அதிகபட்சமாய் உள்ளது  வியப்பளிக்கிறது. எனவே கிட்டத்தட்ட ஒரு ஆய்வுக்கூடம் போல் உருவாக்கி பல கலவைகளை நம்மவர்கள் உபயோகித்து பார்த்துள்ளனர் எனக் கருதத்தோன்றுகிறது.

பின் வரும் பாடல் அதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

ஈயஞ் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற்

றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றொடக்கத்

தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்

தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்.

 

 ஈயமும் செம்பும் இரும்பும் வெள்ளியும் என்பனவும், ஒன்றோடொன்று கலத்தலால் உண்டாகும் பித்தளையும் வெண்கலமும் ஆராயும் பலவகை உலோகங்களும் சித்தர் முன் வைக்கப்பட்டது (ஈயம் முதலியன தனியுலோகம், பித்தளை முதலியன கலப்பு உலோகம் என்றனர்).

 

இதுபோன்ற ஆய்வுகளின் விளைவால் தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர்கார்பன் கம்பிஎஃகு மூலம் புகழ்பெற்ற டமாஸ்கஸ் வாள் தயாரிக்கப்பட்டது. கிரேக்கம், பாரசீகம், ரோமானியப் பதிவுகளில் இவற்றைப் பற்றி  குறிப்புகள் உள்ளது.

 

திரு. ஸ்ரீனிவாசன் மிகப் பழமையான உயர் தகரம் இணைந்த வெண்கலம் மற்றும் உயர் கார்பன் எஃகு தயாரிப்பு; தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் முதலிய சில இடங்களில் நடைபெற்றதற்கான சான்றுகளைக் கண்டறிந்தார். அவர் மேற்கொண்ட ஆய்வில், க்ரூசிபிள் எஃகு உற்பத்தி (புகழ்பெற்ற Wootz எஃகு - டமாஸ்கஸ் வாள் தயாரிக்க பயன்பட்ட எஃகு) 1400°C முதல் வெப்பநிலையிலுள்ள இரும்பை கார்பன் கொண்டு தயாரிக்கப்பட்டது என உறுதிபடுத்தியுள்ளார். Wootz என்ற சொல்லின் வேர்  'உருக்கு' என்பதாகும். இதுஉலோகம் உருகுதல்என்று பொருள்படும்.

 

பழந்தமிழர்இரும்பை உருக்கி படைக்கலன்களும்‌, வேளாண்கருவிகளும்பிறவும்செய்யும்திறன்பெற்றிருந்தனர்‌. எடுத்துக்காட்டாக, யானை மூச்சுவிட்டது போல்கை கோப்புப்பொருந்திய உலையின்வாயினை, “பிடியுயிர்ப்பன்ன கைகவ ரிரும்பின்நோவுற ழிரும்புறங்காவல்கண்ணி? என்று குறிப்பிடுகிறது புறநானூறு. மேலும்‌, “கருங்கைக்கொல்லன்செந்தீ மாட்டிய இரும்பு ணீரினு மீட்டற்கரிதென? என்பதிலும்‌, “இரும்புபயன்படுக்குங்கருங்கைக்கொல்லன்விசைத்தெறி. கூடமொடு பொருஉம்உலைகல்லன்ன வல்லா என்னே?” என்பதிலும்‌, உலோகத்தொழில்நுட்பத்தில்பழந்தமிழர்தேர்ச்சிப்பெற்றுள்ளமை தெளிவாகிறது. இதன்வழி, .'.குத்தாதினைக்கண்டறியவும்‌, அதனைப்பிரித்தறியவும்‌, அதிலிருந்து உலோகப்பொருள்களை வடித்தெடுக்கவும்ஆற்றலையும்‌, தொழில்நுட்பத்தினையும்‌, பழந்தமிழர்கைவரப்பெற்றிருந்தனர்என்பது உய்த்துணரப்படுகிறது. மேற்கூறிய முறையில் உருவாக்கப்பட்ட இரும்பு பொருட்கள் எப்படி இருக்கும் என்பதை ஆதிச்சநல்லூரில் கிடைத்த ஆயுதங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.

 

இந்த ஆதிச்சநல்லூர் பெயர் அடிக்கடி அடிபடுகிறதே என நீங்கள் யோசித்திருக்கலாம்.

 உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாக இருந்த இடம் அது. ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள், ஆனால் ஆஸ்திரேலிய பழங்குடி ஒருவரது மண்டை ஓடு ஒன்றும் அங்கே கண்டறியப்பட்டுள்ளது ஒரு வியப்பான செய்தி.

படம்: ஆஸ்திரேலிய பழங்குடிகள்

ஆதிச்சநல்லூர் பொருநை நதிக்கரையோரம் இருக்கிறது. அது ஒரு வற்றாத நதி என பெயர் பெற்றது. ஆனாலும் நாம பண்ணுன வேலைகளால சமீபத்தில் வற்றியது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்சித்தர்காடுபகுதியில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள் நடவடிக்கையால் மணற்குவியல் அகற்றப்பட்டு, ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது. ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றித் தண்ணீர் நிறைந்துள்ளது.

தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் ஒரே நதி இந்தப் பொருநை. வால்மீகி ராமாயணத்திலும், வியாசர் பாரதத்திலும் காளிதாசனின் இரகுவம்சத்திலும் 505-587-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வாரகமிகிரர் என்பவரும் கூட இந்நதியைப்பற்றி கூறியுள்ளனர்,

யோவ்பொருநைன்னு ஒரு நதி தமிழ்நாட்ல இருக்கா என்ன?”

பொருநையோட இன்னோரு பேரைச் சொன்னால் தான் உங்களுக்கு அது எந்த நதின்னு புலப்படும் போல.

அந்தப் பேரைத்தான் சொல்லேன்.”

தாமிரபரணி. (தாமிரம் என்றால் செம்பு, பரணி என்றால் நதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டதாக் குறிப்புகள் உள்ளன).

அப்பேர்பட்ட நதி வற்றினால்; பொதிகை மலை கூட பாலையாகிவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஏனெனில் பொழுதால் சமைந்ததே பாலை நிலம். வெப்பம் மிகுந்த நண்பகலும் வேனில் காலமுமே நிலத்தை நீர் வற்றச்செய்து பாலையாக்குகின்றன.

வருடத்தில் சில நாட்களில் மட்டுமே மழைபெரும் நிலங்கள்தான் தமிழகத்தில் நிறைந்துள்ளன. அவை மழையின் சமயம் மட்டும் மேய்ச்சலுக்குகந்த முல்லையாய் இருக்கும். மீதி நாட்களில் அது பாலையாகிவிடும்.

பாலை நிலத்தில் இருக்க இடமும் தகிக்கும் சூரியனும் அபரிமிதமாக உள்ளன என்று பார்த்தோம். இருந்தாலும் நீருக்கு அங்கே பஞ்சமல்லவா? அங்கிருக்கும் மரங்கள் இந்தச் சூழலை எவ்வாறு சமாளிக்கும்"

குறிஞ்சி நிலத்தில் மரங்கள் வெளிச்சத்தைத் தேடி மேல்நோக்கிப்  பயணப்பட்டன. பாலையிலே நீரைத்தேடி கீழ் நோக்கிப்  பயணப்பட வேண்டும். வேருக்கு வேண்டிய நீருக்கு ஆழச்சென்று அருந்துவது ஒரு வழியென்றால், சிக்கனமாய் சேமித்து செலவைக்குறைப்பது மற்றுமொரு வழி.

 பாலைவாசிகள் இதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

ஆட்சியில் இருக்கும்போதே அமுக்கிவிடும் அரசியல்வாதிகள் போல, பாலைவாசிகள் நீர் இருக்கும்போதே தமக்குள் பதுக்கி கொழுத்துக்கொள்வார்கள்.    

பாத்தீங்களா...எப்புடி பதுக்கி வச்சு கொழுத்து உள்ளார்கள் என்று?

இப்ப இந்த எடத்துலேருந்து கட் பண்ணி அப்புடியே இமயமலைக்கு போவலாம் வாங்க.

இமயமலையின் கோமூக் எனப்படும் இப்பகுதி  குறிஞ்சி என்றாலும், இப்பகுதியிலுள்ள நீர் பயன்படுத்தமுடியாவண்ணம் உறைந்துள்ளது. சோ defenition படி இந்நிலமும் பாலையே. அதனால் தான் இங்கேயுள்ள தாவரங்களும் succulantடாக  நீர் பதுக்கி கொழுத்துள்ளன.



yes...அதே டெய்லர்...அதே வாடகை. அதனால் தான் நீர் இல்லாவிடினும் அப்படி ஒரு செழிப்பு அவற்றின் உடலில். மேற்கத்திய நாடுகளிலும் பனியின் சமயம் நீரானது இவ்வாறு உறைந்து காணப்படும். அவர்கள் நாட்டில் பனிக்காலமே பாலையாகும்.

பாலையிலும் செழித்திருக்கும் தாவரங்களைப்பற்றிப் பார்த்தோம்.

 

 செழிப்பான மகிழ்மதி காலகேயர்கள் கண்ணில் பட்டால்?

 

  " எப்புடி இந்த தாக்குதலிலிருந்து தப்பிக்கிறது?"

                       
 
செழிப்பாய் இருக்கும் தனவந்தர்கள் இல்லத்தை; காவலாளிகள் பாதுகாப்பது போல், ஒவ்வொரு இலைக்கும் பாதுகாப்பாக குத்தீட்டிக்காவலாளிகளை பெற்றுள்ளன இச்செடிகள். மேலும் வெயில் தாக்குதலில் தப்பிக்க மெழுகு பூச்சு கொண்டவை பாலை  தாவரங்களின் இலைகள்.

இது மட்டுமா? பல்வேறு தகவமைப்புகளையும் பாலைச் செடிகள் கொண்டுள்ளன.

 செடியே இலையாய்... உடல் முழுதும் குத்தீட்டிகள்.



பதுக்கி வைத்த பணத்தைக்காக்க கண்ணாடி பதித்த காம்பவுண்டு.


ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு இலைக்கும் குத்தீட்டிக்காவலாளி போட்டு கஷ்ட்டப்பட்டு வாழ்ந்துட்டு  இருக்கானுங்க, ஆனா இந்த ரேடியோ பூச் செடி, எருக்கஞ்செடி எல்லாத்தையும் பாருங்களேன். எவ்வளவு தைரியமா பாதுகாப்பு ஏதுமின்றி நிக்கிதுங்க.



"அப்போ அவைகள் எல்லாம் ஆடுகளுக்கு விருந்தாக வேண்டியது தானா ?"

 

இல்லை. இவைகளைத் தின்றால் ஆடுகளுக்குத்தான் ஆபத்து.

ஏன்னா இவைகள் ஒடம்பு பூரா விஷம். நரம்புகள் எங்கும் விஷம்தனை ஓடவிடுதல் ஒரு சர்வைவல் உத்தி.   இப்படி விஷமாய் விளைதல் ஒரு உத்தியென்றால். எதிரிகள் விரும்பாச் சுவைகொண்டு பாலையிலே ஆடுகள் தீண்டா வண்ணம் வளர்தல் மற்றுமொரு உத்தி.

எடுத்துக்காட்டுஆடுதீண்டாப்பாளை .  

 இவ்வாறு ஆடுகள் தீண்டா வண்ணம், பூச்சிகள் தீண்டா வண்ணம், கிருமிகள் தாக்கா வண்ணம் என பலரீதியில் பலவாறாக பரிணமித்துள்ளன இத்தாவரங்கள்.

இவற்றின் இக்குணங்களை பூச்சிகளை எதிர்க்கவும், கிருமித்தொற்றைத் தவிர்க்கவும் என பல்வேறு பயன்களின் அடிப்படையில் மருத்துவத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தனர் நம் மக்கள். இவற்றின் பயன்களைக்கண்டு இத்தாவரங்களை, அனைத்திற்கும் மூலமாகிய தெய்வத்தின் ஈகையென கொண்டாடிமூலிகைஎன்றழைத்தனர். இந்த மூலிகைகளையும், மண்ணின் கனிமங்களையும், வேதிப்பொருட்களையும் கொண்டு பண்டுவம் பார்ப்பதில் ஒரு சாரார் விற்பனர் ஆனார்கள். அவர்களையும் நம்மவர்கள் நடுகல் எழுப்பி தொழுதிருக்கின்றனர். அவற்றில் நவபாஷாணம் செய்யுமளவிற்கு உச்சம் தொட்டவர்கள் சித்தர்கள் எனப்பட்டனர். இந்த சித்தர்கள் உடற்கூறு பற்றியும் தெளிவுற அறிந்திருந்தனர்.

உலகில் அரிதாகத்தான் பல்துறை அறிவில் சிறந்த ஞானவான்களின் பிறப்பு நிகழும். அவர்கள் கால்பதித்த அனைத்து துறையிலுமே உச்சம் தொட்டவர்களாக இருப்பர். அவர்களால் அவர்களின் நாகரிகத்தை மற்ற நாகரிகங்களை விட சீக்கிரம் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் தான் டாவின்சி. அவர் ஒரு ஓவியர், வரைவாளர், பொறியாளர், விஞ்ஞானி, கோட்பாட்டாளர், சிற்பி மற்றும் கட்டிடக் கலைஞர். அவர் வரைந்த மனித அனாட்டமிப் படங்கள் மிக பிரசித்தம். அதிலுமே தவறுகள் உள்ளன. காரணம் பிணங்களைக் கூறாய்வு செய்வது அப்போது எளிதான காரியமில்லை.

மரணதண்டனைக் குற்றவாளிகளின் பிணத்தின் மீது மட்டுமே பிணக்கூறாய்வு செய்யமுடியும் என்ற சட்டம் அப்போது நிலவி வந்தது. அறிவியல் தாகத்தைத்தீர்க்க அப்பிணங்களின் எண்ணிக்கை போதவில்லை. எனவே இடுகாட்டைத் தஞ்சமடைந்தனர் அறிவியலாளர்கள். ‘Body snatcher’களின் உதவியுடன் பிணங்கள் திருடப்பட்டு அதன் மூலமே மருத்துவத்தை வளர்க்கும் நிலையிலிருந்தனர் அப்போதைய ஆய்வாளர்கள்.

எனவே சித்தர்கள் எனப்பட்ட ரகசிய குழுவினர்; சவங்களின் உடற்கூறு ஆய்விற்காகவும், கனிம வேதியியல் ஆய்விற்காவும் மனிதர்கள் தொல்லையில்லா இடுகாடு போன்ற இடங்களில் வாழ்திருந்திருக்கின்றனர். பகலில் தலைகாட்டாமல்; இரவில் மட்டுமே அவர்கள் வெளியில் உலவி வந்திருக்கிறார்கள். (மனிதர்கள் தொல்லை இல்லாமல் இருக்கச்செய்ய ஒரு எளிய யுக்தி உள்ளது. இந்த இடத்தில்தான் பேய்களும் பூதகணங்களும் உலாவுகின்றன எனும் பீதியைக் கிளப்பி விட்டிருந்தால் யார் வரத்துணிவர்?).  

மனிதர்களால் அவர்களுக்கு எளிதில் தொல்லை தரவும் முடியாது. ஏனெனில் அவர்கள் மருத்துவம், மெட்டலர்ஜி, யோகம் மட்டுமல்லாமல் தற்காப்புக்கலைகளிலும் ஆயுதப் பயிற்சியிலும் போதிதர்மர் போல விற்பனர்களாய் இருந்திருந்தனர். ஒருகையில் மூலிகையும் மற்றொரு கையில் சூலாயுதம் போன்ற தற்காப்புக் கருவியோடும் தான் அவர்கள் திரிந்திருக்கின்றனர்.

படத்தில் கட்டாரியை ஒருகையிலும் மூலிகையை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் ஒருவரின் நடுகல்லைக் காணலாம். இவர் சித்தர் அல்லது வைத்தியராக இருந்திருக்க வேண்டும்.



அவரின் நெற்றி, கழுத்தை எல்லாம் பாருங்களேன் ஆபரண மணிகளை அணிந்துள்ளார். பெரும் தனவந்தர் போலும்?”

 

அது ஆபரணங்களாக இருக்க குறைந்த வாய்ப்புகளே உள்ளன. சித்தருக்கு எதற்கு ஆபரணங்கள்? அது இரசமணியாகக் கூட இருக்கலாம்.

அது  என்ன இரசமணி?”

பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். உலோகத் தோற்றமும், திரவ நிலையும் ஒன்றாய் அமைந்த பாதரசம் நெடுங்காலம் மக்களுக்கு ஒரு ஆச்சரியமாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருந்திருக்கிறது. ரோமானியர்கள் பாதரசத்தைக் கடவுளாகவே வழிபட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும் என்பது சித்தர்கள் நம்பிக்கைஅதற்கு முதலில் பாதரசத்தை மயில்துத்தம் கொண்டு சுத்தி செய்ய வேண்டுமாம். மயில்துத்தம் என்பது காப்பர் சல்ஃபேட். மயில் கழுத்து போலவே நீலக்கலரில் இருப்பதால் மயில்துத்தம் என்று பெயர். அகத்தியர்மயில் துத்தம்கொண்டு அந்த காலத்திலேயே பேட்டரி செய்துள்ளதாக வடஇந்தியாவில் குறிப்புகள் கிடைக்கின்றன.
அவர் வடமொழியில் பல மூலிகை சாத்திரங்களை எழுதி உள்ளார். அவர் ஒரு பன்மொழி வித்தகர்.

ஆதிச்ச நல்லூரில் தாமிரம் மற்றும் வெண்கலப் பொருட்களோடு மஞ்சள் நிற உலோகம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. என்னமோ தெரியவில்லை மனிதர்களுக்கு அந்த உலோகத்தின் மீது மோகம் அதிகம். அதன் பெயர் தங்கம்.

இரசவாத வித்தை கொண்டு உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கு உலகில் பலரும் முயன்றுள்ளனர். தங்கம் அவ்வளவு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ரசவாதம் சித்தர்கள் சமாச்சாரம். திருமூலர் காலம் Alchemist காலத்துக்கு மிக மிக முந்தையது! மிகப் பழைய Alchemist கள் பத்தாம் நூற்றாண்டினர். திருமூலர் குறைந்தது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

//செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்

செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்

செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்

செம்பு பொன்னான திருவம்பலவே.// என்கிற பாட்டில் ரசவாதம் வருகிறது.

 

விசேஷம் என்னவென்றால் பொன்னாக்கும் தத்துவத்தில் பாதரசமும், செம்பும் வருகின்றன. பீரியாடிக் டேபிள் பிரகாரம் தங்கம், தாமிரம் எனும் செம்பு மற்றும் வெள்ளி அனைத்தும் 11ஆம் க்ரூப்பில் ஒரே குடையின் கீழ்தான் வருகின்றன. ஹாரிஸாண்ட்டல் ரோ பிரகாரம் பாதரசத்துக்கு அருகிலும் இருக்கிறது தங்கம். மேலும் தங்கத்தின் அடாமிக் நம்பர் 79, மெர்குரிக்கு 80.


சாமானிய மக்களின் மோகம் தங்கத்தின் மீதுதான் இருந்தது. ஆனால் சித்தர்கள் தாமிரத்தையே அதிகம் விரும்பி இருக்கின்றனர். தங்கம், வெள்ளியை விட காப்பர் எனப்படும் செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும், வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பை குறிப்பிடுகிறார். அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கத்தையும், வெள்ளியையும் பயன்படுத்த முடியும் என்கிறார் அவர். எனவே செம்பு அவர்களால் அதிகம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்திருக்கிறது. இவ்வாறான ஆய்வுகளின் சமயம் உடலில் செம்பு சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பனியில் கிடந்த ஓட்சியின் உடலில் கூட தாமிரக்கலப்பு இருந்ததை நாம் அறிவோம். செம்பு உடலில் சேர்தல் நல்ல உடல்நிலை கொண்டவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்காது. ஆனால் வில்சனின் வியாதி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு அது பித்தத்தைத் தூண்டி; அவர்களுக்கு பித்ததைத் தலைக்கேறியிருக்க வைத்திருக்கும் என்பது திண்ணம். அவர்கள் Schizophrenia-like psychosis போன்ற பித்து பிடித்த அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

 

செம்பு, வெள்ளி போன்ற தனி; அல்லது வெள்ளி எனும் உடலில் செம்பு எனும் உயிர் சேர்க்கப்பட்ட கலவை உலோகங்களாலான ஆபரணங்களை அணியும் போது; பச்சை அல்லது நீலக்கறையை தோலில் ஏற்படுத்துகின்றன. அதுவும் சிவப்புத்தோலில் இது எடுப்பாகத் தெரியும். உடலில் காணப்பட்ட இது போன்ற  நீல நிறக்கறை அந்த கால மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஏனெனில் நீல நிறம் என்பது அக்காலத்தில் மதிப்பு மிகுந்தது மற்றும் கிடைத்தற்கரியது. எகிப்தியர்கள் அவர்களின் பிரமிடுகளில் வரைவதற்கான நீலநிறத்தை பெற ஆஃப்கானிலிருந்து lapis lazuli கல்லை இறக்குமதி செய்யவேண்டியிருந்தது என்றால் நீலத்தின் அரியதன்மையை நாம் அறிந்துகொள்ளலாம். தமிழகத்திலும் நீல நிறக்கல் ஒன்று இருந்திருக்கிறது. அதை மணி என்று குறிப்பிடுவர். மணி என்பதே நீல நிறத்தைக் குறிக்கும் ஒரு சொல்.

மனித குலத்தின் உலோகங்கள் மீதான காதலில் முக்கியமான கட்டம் ரசவாதம்.

உலகத்தின் எகிப்து முதலான பல பண்டைய நாகரிகங்களில் ரசவாதத்தை மேற்கொண்டவர்களிடம் ஒரு முக்கிய சின்னம் காணப்பட்டது.

ஒரு பாம்பு தன் வாலை கடித்துக் கொண்டிருப்பது போன்ற சின்னம்


பயந்ததை எல்லாம் கடவுளாக வழிபட்டவர்கள் படையே நடுங்கும் பாம்பை மட்டும் விட்டு வைத்திருப்பார்களா என்ன?

நம்ம ஊரிலும் பாம்பை வழிபட்டு இருக்கிறார்கள். அதனாலேயே அவர்களுக்கு நாகர்கள் என்ற பெயர் வந்தது என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

பாம்பு பல விதங்களில் மக்களை வசீகரித்திருக்கிறது. அதிலும் வயதான பாம்பு சட்டையை கழட்டுவது போல் தோலைக்கழட்டி புதிய பிறப்பெடுத்தது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. ஈயமானது  தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஒரே பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பெயர்நாகம்’. ஈயம் எனப்படுவது ஒரு விஷம். அதனாலேயே அதற்கு நாகம் என்று பெயர் வந்திருக்கலாம்.
அல்லது நாகர்கள் பயன்பாட்டில் இருந்ததால் அது நாகம் என அழைக்கப்பட்டு இருக்கலாம். அதன் விஷத்தன்மையை முறித்து பஸ்பமாகவும் ஆயுர்வேதம் மற்றும் சித்த மூலிகைகளில் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

பேரிச்சம் வாங்க பயன்படுத்தப்படும் ஈயம் பித்தளையை மக்கள் தங்கமாக மாற்ற எண்ணினர் அதுவே ரசவாதம் எனப்பட்டது. இந்த ஈயம் எனும் நாகமானது தங்கமாக புதிய உருமாற்றம் பெறும் ரசவாதக் கலையை  அவர்கள் வாலைக் கடிக்கும் பாம்பு சின்னத்தோடு ஒப்பிட்டனர்.

நாகம் தன் வாலை கடித்துக் கொண்டிருப்பது போன்ற சின்னத்தில் நாகத்தின் வால் ஆணுறுப்பாகவும் வாய் பெண்ணுறுப்பாகவும் உருவகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஆவுடை-லிங்கச் சின்னத்தை நினைவுபடுத்தும் மற்றொரு  சின்னமாகவும் இது இருந்திருக்கிறது.

பென்சீன் வளையத்தின் சின்னம்; பாம்பு தனது வாலைத் தின்னும் கனவின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. முடிவிலி சின்னமும் பாம்பு-வால் சின்னத்தின் திரிபே.

மேலும் மூலாதாரத்தில் வாலைக் கடித்தபடி சுருண்டு கிடக்கும் நாகமானது மனிதனின் உச்சிக்கு எழுப்புதலே குண்டலினி யோகம் எனும் யோக முறை. இங்கேயும் அதே பாம்பு உருவகமே பயன்படுத்தப்படுகிறது. கீழ் காணும் பாடல் அதை விளக்குகிறது.

வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே
மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே
தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத் தேவிளையாடு பாம்பே.

குண்டலினி என்பது " குண்டல் " என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது வட்ட அல்லது சுருள் வடிவ காதணி நகைகள்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் இதை நமக்குத் தெரிவிக்கின்றன

குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே.

எனவே குண்டலினியைக்குறிக்கும் அணிகலன்களை நாகம் வால் கடிக்கும் சின்னங்களாய் காதிலும் கழுத்திலும் கைகளிலும் அணிந்திருக்கின்றனர். ஆண்கள் கூட அக்காலத்தில் வளையல் காப்புகளை அணிந்திருக்கின்றனர். பசுபதி அச்சு முத்திரையில் கூட அவர் வளையலை அணிந்திருப்பவராகத்தான் காட்சியளிக்கிறார்.

இரசவாதத்தில்  செம்பு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றிடும் உத்திகளும் சித்தர்களால் கூறப் பட்டிருக்கிறது.

அவை எல்லாம் சித்தர் பாடல்களில் உள்ளன. ஆனால் யாருக்கும் புரியா வண்ணம் பரிபாஷையில் உள்ளன. சித்தர்கள் தாம் எழுதும் நூல்களில் உள்ள உண்மைகள், தவறானவர்களால் புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் தீமைகள், நடந்துவிடக் கூடாது என்ற நோக்கில் 'பரிபாஷை' என்னும் 'மறைமொழி'யிலேயே எழுதுவார்கள்.

 

சித்தர்களில் ஒருவரான சட்டைமுனியின் 'வாதகாவியம்' நூலை அற்புதமான வேதியியல் நூல் என்கின்றனர். சட்டைமுனி இவ்வாறு எல்லோருக்கும் புரியும் வண்ணம் மறைபொருளை வெளிப்படுத்திவிட்டாரே என்று சக சித்தர்கள் அவர் எழுதிய 'தீட்சாவிதி' என்னும் நூலைக் கிழித்தெறிந்தார் என்று கூறுவர். சிவபெருமான் சட்டைமுனியின் நூல்களைப் பாதுகாக்க ரகசியமாக மலைக்குகைகளில் அவற்றை மறைத்து வைக்க உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. சட்டைமுனியின் மேல் சிவபெருமானுக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு எனவும், சட்டை முனியை அவர் அடிக்கடி கயிலாயத்துக்கு அழைத்ததாகவும், அதனாலேயே, `கயிலாய கம்பளிச் சட்டைமுனிஎன்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கயிலை மலையின் கடுங்குளிரைத் தாங்க முடியாமல் அவர் எப்போதும் கம்பளிச்சட்டை அணிந்திருப்பாராம்!

 

"சாதி, சமயச் சடங்குகளைக் கடந்து, சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மத மாத்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்தவாதிகளாகவும் சித்தர்கள் வாழ்ந்தனர்.

 

சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். இந்த அறிவே சித்தாந்தம் எனப்படுகிறது

இது அடிப்படை வாதமாகிய வேதாந்தத்திற்கு முரணானது.

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. சித்தாந்தம் மருத்துவத்தோடு யோகம், சோதிடம், இரசவாதம் போன்ற அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். சித்தர்கள் இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும்.  "மெய்ப்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது மெய் நிலையை அடைய முயன்றவர்கள் சித்தர்கள். அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித்துடிப்பினைக் கொண்டு; உடலில் உப்பு கசப்பு போன்ற சுவைகள் மிகுந்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என அறிந்து; உணவின் மூலமோ, மூலிகைகள் அல்லது உலோக பஸ்பங்கள் துணையுடனோ, நோயினை நீக்குவர்

இன்றிருப்பதைப்போல பரிசோதனைச் சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

 

நாம் தற்கால அறிவியலுக்கு பொருந்திப்போகிற தற்போது பின்பற்றத்தக்க கருத்துகளைப் பற்றியே சங்ககாலப் பாடல்களின் வழியாகவும் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் மிச்சங்களின் வழியாகவும் தேடிக்கொண்டிருப்பதால், சித்தர்களின் புதிர்கள் நிறைந்த மறைபொருள் வாழ்வுமுறையில் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு அவர்களை சற்று எட்டியே நின்று இரசிப்போம்.

 

இது இவ்வாறே இருக்க நமது பேசு பொருளான ஆடுகள் தீண்டா வண்ணம், பூச்சிகள் தீண்டா வண்ணம், கிருமிகள் தாக்கா வண்ணம் பரிணமித்துள்ள தாவரங்களைப் பற்றிப்பார்ப்போம். இது போன்ற தாவரங்களில் நிலத்திற்கு கிடைத்தற்கரிய சத்துக்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு எருக்கன் செடியில் இரும்பு, போரான் போன்ற தனிமங்கள் கூடுதலாக உள்ளன. அதனால் இவற்றை வயலில் மட்கச்செய்து உரமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இவற்றை அடுத்து வாழும் செடிகளை பூச்சிகள் எளிதில் அண்டாமல் காத்து நிற்கும் காவல் பயிர்கள் இவை, ஆனால் தற்போதைய நவீன முறை விவசாயத்தில் இவையனைத்திற்கும் பெயர் 'களைச் செடிகள்'. ஆனால் நமது பாரம்பரிய விவசாய முறையில் இவைதாம் உயிர் வேலிகள்.

 

 " பாலையிலே... ஒன்னு எதிரிகள் கண்ணில் சிக்காதவாறு தரையோட தரையா...மட்டையா மடிஞ்சுர்றானுங்கஇல்ல குத்தீட்டியாவோ விஷவாசிகளாகவோ, சிறு உயரச்செடியாக வாழ்றானுங்க.

  ஏன்? இங்க கொஞ்சம் ஒசரமா, மரமால்லாம் வளர முடியாதா?"

நீங்க ஒன்ன வசதியா மறந்துட்டீங்க. இத்தாவரங்களை இயக்குவதுஉயிர் பிழைத்தலுக்கான உந்துதல்எனும் ஆற்றல்மிகு விதி. அது அவ்ளோ சீக்கிரம் சேட்டிஸ்ஃபை ஆகாது.

 பாலையிலே வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும்... ஆனால் சீராக இருக்கும்.

‘ Slow and steady wins the race’க்கு எடுத்துக்காட்டு பாத்துருக்கீங்களா?

 -சுள்ளிகள் நிறை பாலையிலே மரமென வளர்ந்திருக்கும் இச்சதுரக்கள்ளியைப் பாருங்கள். கீழே நிற்பவனோடு ஒப்பிட்டு அதன் உயரத்தை நீங்கள் அறியலாம்.


மழைநீர் இங்கு எட்டிப்பார்க்கையில்... சிதறுதேங்காய் சேகரிக்கும் சிறுவனின் அவசரத்தோடும் துல்லியத்தோடும் நீரை  சேகரித்து, சிறிது சிறிதாய் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து, இது இவ்வளவு உயரம் அடைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகின்றேன்.

மழைநீரை மட்டுமே இவை நம்பி இல்லை, இவை நானோ ஊசிகளைக்கொண்டு காற்றிலிருந்தும் நீரினை பெற்றுக்கொள்ள வல்லவை.

 பாலையிலே சிலர் இவ்வுயரத்தை விரைவிலே எட்டிவிடுவதுண்டு.
"
யார்ரா அவன் இந்த வெயில்லயும் தில்லா பனமர ஒசரத்துக்கு வளர்ரவன்"ன்னு தானே கேக்குறீங்க?

 பில்குல் சஹி ஜவாப். பனைமரமேதான்.

"உயரமாய் வளர்வதில் அப்படியென்ன சவுகர்யம்? ஏன் கஷ்டப்பட்டு உயரமாய் வளரனும்?"

-காரணம் சிம்பிள். காலகேயர்கள் தொல்லை உயரத்தில் இருப்பதில்லை.

இளமையில் கடிவாங்கினாலும் தாக்குப்பிடித்து இலைகளை பாதுகாப்பான உயரத்திற்கு கொண்டுசென்று விட்டால் காலம் முழுவதும் ஜாலிதான்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இப்பனை ரீசன்ட்டாக பாலைக்கென பரிணமித்த ஒருவித்திலை தாவரவாசி. அதாவது இது புற்களின் தமையன். மத்தபடி ரெகுலர் இருவித்திலை மரங்களும் பாலைக்கென பரிணமித்துள்ளனர்.

குறிஞ்சிநில மரங்கள் போல விண்ணை எட்டுமளவு கூராக வளரவேண்டிய அவசியம் பாலை மரங்களுக்கு இல்லை. காரணம் அபரிமிதமாய் கிடக்கும் போட்டியற்ற நிலப்பரப்பு.

ஆளில்லா பேருந்தின் மூணுசீட்டிலே பரப்பிக்கொண்டு உட்காருபவன் போல ஒவ்வொரு இலையிலும் வெளிச்சம் பட வசதியாக பரப்பிக்கொண்டு வளரும் தன்மையன பாலையின் மரங்கள்.


"சுரம் கொண்ட பூமி ஒரு பக்கம்... என்கிட்டே நெருங்குனா, உன்ன கத்தியால குத்தி விஷம் வைத்து  கொன்று விடுவேன்னு  டெரர் காட்டும் பாலையின் தாவரங்கள் மறுபக்கம்இப்படிப்பட்ட ஒரு  ரத்த பூமியில யாரு சார் வாழுவா?"

ஆதி காலம்தொட்டே தாவரங்களும் மற்றேனைய உயிர்களும் ஒண்ணா மண்ணா பரிணமிச்சு வந்தவுங்க. அவ்வளவு சீக்கிரம் சொந்தம் விட்டுப்போயிருமா என்ன?

வாங்க பாலை நிலத்தை உற்று நோக்குவோம்.

'வெயில் மிகுதியால்  பட்டுப்போன முட்செடிகள்'. 

எதுக்காக இவ்ளோ பெரிய முள்ளு ? இலையை  பாதுகாக்கத்தானே?

அப்ப இலைகள் எங்கே?

இதோ இங்கே !

முட்களின் பாதுகாப்பில் பத்திரமாய் இலைகள்.

! அப்போ இது உயிருடன் தான் உள்ளதா?”

அளவில் சிறிய இலைகளால் நீரிழப்பைக்குறைத்து, அளவில் பெரிய முட்களால் காத்துக்கொள்ளும் யுக்தி கொண்ட பாலை செடிகள் இவை.

அது சரி, இந்தச் செடி யாருக்கென பூத்திருக்கு?"

படம்: பூவின் மேல் நெக்டார் நக்கிப் பூச்சிகள்...

அருகே ஒரு ஓணான்

ஓணானுக்கு வல்லிய ஊறு  விளைவிக்கவல்ல வல்லூறு... 

இதோ  பாலையின் உயிர்ச்சூழல்.

எல்லாம் சரிஇந்த தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்?”

-சுத்தி இது மாதிரி கவர் பண்ணிக்கலாம் .

"கவர் பண்ண இயலாதவர்கள் ? "

குளுகுளு வீட்டை கட்டிக்கொள்ள வேண்டியது தான்.

காற்றானது குறுகலான பகுதியில் இருந்து வெளியே வரும்போது அதன் வெப்பநிலை குளிர்ந்துவிடும். இதன் பெயர் ஜூல்ஸ் - தாம்சன் விளைவு. கரையான் புற்றுகள் எல்லாமே ஜூல்ஸ் தாம்சன் விளைவின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை. கரையான் புற்றில் பல லட்சக்கணக்கில் சிறு துளைகள் இருக்கும். வெளிக்காற்று அதனுள் புகுந்து கரையான் புற்றுக்குள் வருகையில் ஏசி போட்டது போல புற்றுக்குள் ஜில் என இருக்கும். மைக் பியர்ஸ் என்பவர் கறையான் புற்றின் வடிவைமைப்பை பாவித்து ஷாப்பிங் மால் ஒன்றைக்கட்டி ஏசி போடாமலே அதை குளிர்வித்துக்காட்டினார். வங்கதேசத்திக் கூட இதே முறையைப் பயன்படுத்தி வீடுகளை குளிர்விக்கும் எளிய ஏசிமுறை பயன்பாட்டுக்கு வந்தது. இவ்வாறு மிகவும் கடினமான சவால்களுக்கு இயற்கை எளிதான பதில்களைக்கொண்டிருக்கிறது. நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். இயற்கையை பாவிப்பது. அதன் அடிப்படையில் தீர்வுகளை கட்டமைப்பது.

இதே முறையைப் பின்பற்றி உடலின் அழலை அதிகமாகக் கொண்டவர்கள் ஒரு  பிராணாயாம முறையை வடிவமைத்து உடலைக் குளிவித்திருக்கின்றனர். அந்த முறைக்கு சீத்தளி பிராணாயாமம் என்று பெயர்.

கரையான்களும் இதே போல் ஜில் ஜில் வீட்டை இவ்வாறு கட்டி பாலையில் கூட சுகமாய் வாழ்கின்றன.

"இது எதுவுமே முடியலப்பா , வேறு என்னதான்  தீர்வு ? "

வேறு வழியில்லைவெயிலிலிருந்து தப்பிக்க நிழலை நாட வேண்டியதுதான்.  இந்த வெயிலுக்கு,  நிழலும் ஈரமும் இருக்கும் இடங்கள் நிச்சயம் பலரை வசீகரிக்கும். அப்படிப்பட்ட இடம் தான் மரத்தின் பொந்துகளும் சந்துகளும்

                                                      பொந்துக்குள்ள இரயில் பூச்சி...

இந்த சந்துகள்லயே சூப்பரான சந்து, பனைமர இலைப் பட்டைகளுக்கு இடையே உள்ள சந்துதான்.

இந்த சந்துல அளவான ஈரமும் பதமான மட்கிய செத்தைகளும் இருக்குது. இங்கே கொஞ்சமா உரம் போட்டு விதை நட்டு வச்சா; அவை சூப்பரா வளரும் தெரியுமா?

"யாரு இங்க உரம் போட்டு விதை நட்டு மரம் வளக்குறது?"
 
யாருக்கு என்ன குடுத்தா என்ன வேலை செய்வார்கள் என்பதை தெளிவாக அறிந்து வைத்துள்ளது இயற்கை. அதுனால விதை போட்டு மரம் வளர்க்க ஒரு ஆளை அது நியமித்து உள்ளது.

பாலையிலும் கிட்டக்கூடிய வேப்பம்பழம்ஆல மற்றும் அரச மரத்துப்பழம் ஆகியவற்றைத் தின்னும் இக்குருவிகள் பனைப் பட்டை சந்துல பாத்ரூம் போனா என்ன ஆவும்?

படம்: சந்தில் எச்சமிடும் கருஞ்ச்சிட்டு

விதைஎச்சம் எனும் உரம்ஈரம் = செடி.

அதுவும் அந்த விதையானது பறவைகளின் குடல் வழியே பயணம் செய்யும் போது, அமிலம் காரம் மற்றேனைய நொதிகளின் துணையுடன் விதைநேர்த்தி செய்யப்படுவதால் அதன் முளைக்கும் திறனும் அதிகமாகிறது . ஆலமரம் அரசமரம் எல்லாம் ஃபைக்கஸ் குடும்பத்தின் வகைகள். இடுக்குகளில் கூட வளரும் தன்மை பெற்றவை அவை. அவற்றை அழகாக வளர்த்தெடுக்கும் பொறுப்பை பனைகள் செவ்வனவே செய்யும்.

அலையாத்தி காடுகளில் இருக்கும் குட்டிபோடும் தாவரங்களைப் போல் இவையும் குழந்தையை இடுப்பில் வளர்த்து மண்ணில் காலூன்ற வைக்கின்றன. அவையும் வளர்ந்த பின்னே தாயைப்பிரியாமல் வளர்கின்றன.

இந்த ஃபைக்கஸ் குடும்பத்தில் தனித்துவமான ஒருவன் இருக்கிறான். அவன் பாறைகளுக்கு இடையில் கூட வளரக்கூடியவன். அவனின் பெயர் கல்லால மரம். கல்இச்சி என்றும் இதைச் சொல்வார்கள். கோயிலில் ஒருமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி யோக சமாதியில் இருக்கும் சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த மரம் தான் கல் இச்சி மரம். (தட்சிணாமூர்த்தி - தட்சிணம் என்றால் தெற்கு, தென்னாட்டு சிவன் என்றும் பொருள்படும்) ரிஷபதேவர் கூட ஆலமரத்தடியை விரும்புபவர் தான். காரணம் வெயிலிலும் அது தரும் குளுமை).

கல் இச்சி மரம் தென்னிந்தியாவில்  குறிப்பாக மேற்குத் தொடற்சி மலைகளில் காணப்படும் நமக்கேயான தனித்துவமான மரம். இது இங்கே மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் மாலதீவிலும் காணப்படுகின்றனஒரு காலத்தில் இவை மூன்றும் ஒரே நிலப் பகுதியாக  இருந்தனவோ என்னவோ?

பனைமரத்துக்கு அருகில் விழுந்தாலும் வெயிலைத் தாக்குப்பிடிக்கும் வேப்பமரங்கள் முளைக்கும்.

இதனால் நாம் பெறும் செய்தி என்னவென்றால் மரங்களைப் பெருக்க பனைகளை நட்டாலே போதுமானது. மீதியை இயற்கை பார்த்துக்கொள்ளும்.

 நிற்க. பனைமர சந்துகள் பாதுகாப்பானவை தான் ஆனால் இவற்றில் பெரிய சைஸ் உயிரினங்களுக்கு இடம் இல்லை, அதனால் பல பாலைவாசிகள் ப்ளாட்பாரவாசிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். அவர்கள் தான் ground dwellers எனப்படும் தரை வாசிகள்

படம்: தரை வாசி பெருங்கண்ணி பறவை ஜோடி

தரை வாசி பறவைகளுக்கு ஓணான், பல்லி மற்றும் பாம்புங்க தான் பிரதான உணவு. ஓணான்   பல்லி பாம்புல்லாம் இங்க அபரிமிதம்.

ஏன்னா பல்லி, பாம்பு, ஓணான் எல்லாம் குளிர் இரத்தப்பிராணிகள்ங்குறதால தகிக்கும் வெயிலுக்கு வியர்வை சிந்தி உடல்சூட்டை நிலையாய் வைக்கவேண்டிய அவசியம் இல்லாதவை. உதாரணத்திற்கு இந்த ஓணானைப் பாருங்களேன்... பல்லைக்காட்டும் பங்குனி வெயிலிலும், அதை சற்றும் சட்டை செய்யாமல்இது தனது துணைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கு.


வெப்பத்தை தவிர்க்க எளிதான யுக்தி  வவ்வாலைப் போல் இரவாடுதல்.

இரவாடவும் முடியல, வெயிலாடவும் முடியலன்னா என்ன பண்றது? "

மழை வர்ர வரைக்கும் மட்டையாயிர வேண்டியது தான்.

படம்: மழை வரும்வரை நீள் உறக்கக்கத்திலிருக்கும் நத்தை.

ஆனால் இந்த உத்திகள் ஏதும் கைக்கொள்ளாமல் வெப்ப இரத்தப்பிராணிகள் கடும் பிரயாசத்தின் பேரிலே இங்கே வசிக்கின்றன.

இந்த இடம் பாலை என்று நம்மால் அழைக்கப்பட்டாலும், இது தார் பாலைவனம் போல நீரே காணாத பிரதேசமல்ல. குணதிசைக் காற்று நிச்சயம் இங்கே நீர் வார்க்கத்தான் போகிறது. அதனால் ஒரிஜினல் பாலைவாசியான ஒட்டகம் போல இங்கே வாழும் வெப்ப இரத்தப்பிராணிகளுக்கு உடலளவில் தகவமைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை

 "அப்ப ஒரு இடத்துல பலகாலத்திற்கு மழையே இல்லா பஞ்சம் ஒன்னு வந்தா, இங்க இருக்க வெப்ப இரத்த பிராணிகள் எல்லாம் என்ன பண்ணும் ?"

அங்கேருந்து பொட்டிய கட்டிட்டு கெளம்பிற வேண்டியது தான்!!!

உயிர் பிழைக்க இவை இப்படி பொட்டிய கட்டிட்டு கெளம்புற யுக்திக்கு பெயர்வலசை செல்லுதல்’.


இந்த மான் இருக்கும் இடம் ஒரு பாலை நிலம். அத சுத்தி உள்ள ஏரியாவெல்லாம் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவிட்டன

நாம ஏற்கனவே பாத்த மாதிரி இந்த மான்களெல்லாம்  அந்த இடத்தில் மட்டும் வாழ் நாள் முழுக்க குத்தவச்சு வாழப்பழகவில்லை. இப்ப ஒரு கடும்கோடை வருதுன்னு வச்சுக்குங்க... அவற்றின் உள்ளுணர்வின் படி அவை நீர் இருக்கும் திசை நோக்கி வலசை செல்ல ஆரம்பிக்கும்.

 ஆனா அங்கதான் ட்விஸ்ட்டு... நாம தான் காட்டுக்கு வெளிய ரோடு போட்டு வச்சுருக்கோம், வீடு கட்டி வச்சுருக்கோம், வேகவேகமா காரு ஓட்டிக்கிட்டு போவோம், தெருநாயெல்லாம் சுத்தும்.

  இப்ப பாத்தீங்கன்னா சார்... காட்டுக்குள்ள இருந்தாலும் சாவு... காட்டுக்கு வெளிய வந்தாலும் சாவு.

கார் இடிச்சு செத்த கர்ப்பிணி மான்ல இருந்து, நாய் கடிச்சு செத்த கெடா மான் வரைக்கும் வெரைட்டியான மான் சாவு எல்லாம் தினம் தினம் செய்திகளில் நீங்கள் அசுவாரசியமாய் கண்டு கடந்திருக்கலாம்.

  "அய்யய்யோ... இப்புடியே போனா இதுங்களோட நெலம?"

 விடுங்க பாஸ்அதுங்க இருந்தா என்ன? செத்தா நமக்கென்ன? பிக்பாஸ்ல ஓவியா படாத கஷ்டத்தையா இதுங்க பட்டுருச்சுங்க?

 ஆனால் ஒருவிஷயம் மட்டும் என்னால் அறுதியிட்டுக்கூற முடியும்உயிர்ச்சங்கிலியின் கண்ணிகள் எளிதில் அறுபடக்கூடியவையே. அவற்றை அறுப்பதும் எளிதானதே. இயற்கையை இவ்வாறு எளிதாக நம்மால் தாக்கிவிட முடியும். ஆனால் அதன் எதிர்த்தாக்குதல் மிக மூர்க்கமாய் இருக்கும். இதோ இப்போது நீங்கள் வருடாவருடம் அனுபவிக்கும் வெயிலையும் புயலையும் போல.

-------------

 பாலைவாசிகள் எப்படிப்பாலையை தாக்குபிடித்து வாழ்கை நடத்துறாங்கன்னு பாத்தோம்சரி, இப்ப ஒரு சிச்சுவேசன் சொல்றேன், கற்பனைப் பண்ணிப் பாருங்க. வறட்சி இன்னும் தீவிரமாகுது, அப்படிப்பட்ட சூழலில் சொட்டு நீரைக்கூட இந்நிலம் பார்க்காமல் இருந்தால்  என்னவாகும்.

பஞ்சம் வரும்.”

குறிஞ்சி என்பது குளிர் பிரதேசம். அங்கே மூக்கில் சளி (கபம்) வரும். ஆனால் பாலையின் பஞ்சத்திலோ வயிற்றின் பித்த நெருப்பின் ஜோதி மங்க ஆரம்பிக்கிறது.

அக்காலத்தில் இது போன்ற பஞ்சகால பாலை நிலத்தில் மக்கள் உயிர் வாழ என்னதான் செய்தனர்.”

முதலில் பாலையின் கடுமையைப் பற்றி ஒரு தலைவனின் கூற்றைப் பார்க்கலாம்.

நம்ம தலைவனுக்கோ கையில காசில்லை, இங்கயே இருக்கலாமா? இல்ல துபாய்க்கு போகலாமா என ஜோசியம் கேட்கும் வடிவேலுவின் மனநிலையில் நமது தலைவன் இருக்கிறான். பிழைப்புக்காக வேறு ஊருக்குச் செல்லலாம் என்றால், போகும் வழி ஒரு பாலை நிலமாக உள்ளது. அந்த நிலத்தின் கடுமை அவன் கண் முன்னே வந்து போகுமா இல்லையா?

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற

நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துப்

போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை

முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி

ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ் செவி

எருவைச் சேவல் கரிபு சிறை தீய

வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை

நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி

பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்

பிரியின் புணர்வது ஆயின், பிரியாது

ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்

சே இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்

மனை முதல் வினையொடும் உவப்ப

நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

ஆளே இல்லாத காடு. மொட்டையாக உயர்ந்து இருக்கும் யா மரத்தில் நிழலே இருக்காது. பருந்துக்குக் கூட உணவு கிடைக்காம  அது அலைந்து திரிஞ்சு அதன் இறக்கைகள் தீய்ந்துபோனதுதான் மிச்சம். லட்டு மாதிரி பொண்டாட்டிய விட்டுப்புட்டு இப்படிப் பட்ட இடத்தைக்கடந்து போய் பொருள் ஈட்டனுமா? நம்ம ஊரிலேயே ஓரு ஓரஞ்சாரமா இருந்து பொருள் ஈட்டினால் என்ன என தலைவன் யோசிக்கிறான்.

மாலாமாலாஎன தலைவியின் முந்தானையைப் பிடித்தபடி சுற்றிவருவதற்கென தலைவன் கூறும் சப்பைகட்டுகள் இதுவென நாம் கருதுவதற்கு இடம் இருக்கிறது. இருப்பினும் கள்ளிச் செடிகள் சூழ் பாலை நிலத்தில் கள்வர்கள் தொல்லை அதிகம் என்பதாலேயே இப்பிரிவைப்பற்றி அதிகம் யோசித்து வருந்தியிருக்கின்றனர் காதலர்கள். அதனாலேயே பாலையின் உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாய் இருந்திருக்கிறது.

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.

 “அப்போ பாலை நிலமக்கள் அனைவரும் கள்வர்களா?”

இல்லை. பாலை நில மக்கள் எயினர்கள். எயினர் என்ற சொல் பாலை நில பொது மக்களின் பொதுப் பெயரைக் குறிக்கும். துடியர் போன்ற வேட்டுவ குடியை சேர்ந்தவர்களைக் குறிப்பதாக அது இருந்திருக்கிறது. //கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3// துடியர்கள் துடிப்பறை கொண்டு விலங்குகளை முடுக்க,  அவைசெல்லும் வழி மரங்களுக்கு இடையே மறைந்திருக்கும் சக துடியர் சூலம் எறிந்து வேட்டையைக் கொல்வர். இதுதான் அடர்வனத்தில் நமது முன்னோர்களான துடியர்கள் பின்பற்றிய வேட்டை முறை. ஆனால் பாலை நிலம் மறைந்து தாக்க ஏற்ற நிலம் அல்ல. எனவே எயினர் வில் எடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. எயினர் என்போர் வில் ஏந்திய  வேட்டுவர்கள்.

இராமனுக்கு படகோட்டிய குகனை கம்பராமாயணம் "நாவாய் வேட்டுவன்" என்பதோடு "எயினர் வேந்தன்" என்கிறது.

எயினர் பட்டணம் என்று பெயர் பெற்ற சேமிக்கும் இடங்கள் இருந்தன அவற்றைக் காத்தவர்கள் எயினர்கள்.

அவ்வளவு ஏன், இளவெயினனார் என ஒரு எயினர் குலப் புலவரே இருந்திருக்கிறார். அவர்கள் குலத்தில் சிலர் முன்னாள் வீரர்கள்போரில் தோற்ற மன்னனின் குடிகள் எனப்பலர் இக்குலத்தவராக இருந்திருக்கின்றனர். அக்கடின பூமியில் வாழுவதற்குத் தக்க உடல்வலுவும் மூர்க்கமும் அவர்களுக்கு இருந்தது. அவர்களில் சிலர் பாலை நிலத்தில் பிழைத்தல் வேண்டி களவை மேற்கொண்டிருக்கின்றனர்.

வறட்சி இன்னும் தீவிரமாகுது, அப்படிப்பட்ட சூழலில் சொட்டு நீரைக்கூட இந்நிலம் பார்க்காமல் இருந்தால்  மனிதர்களின் நிலை என்னவாகும் எனப்பார்த்தோம். பல மில்லியன் வருடம் இதுபோல பஞ்சம் நீட்டித்தால் அங்கு இருக்கும் தாவரங்களுக்கு என்ன நேரும்?

நாம் பார்த்த இதே தாவரங்கள்உதாரணத்திற்கு முள் நிறைந்த நாட்டுக்கருவேல மரத்த எடுத்துக்குவோம், அது எப்படி இந்நிலதிற்கு ஏற்ப தகவமைப்புக் கொள்ளும்?”

 நிச்சயம் நீரைத்தேடி வேரானது மிக ஆழமாய் ஊடுருவும்.

         "முட்கள்?"

இன்னும் அதிக நீளமாய் ஆகும்.

      "இலைகள்?"

இன்னும் சிறுத்து, நீர் இழப்பை குறைக்க முயலும்

நாம  யூகித்தவை எல்லாம் சரியான்னு பாக்க, மெக்சிக்கோவின் பாலைவனத்துக்கு ஏற்ப பரிணமித்த  கருவேலவாசி ஒருவனைக் காண்போமா?

நம்ம ஊர் செடியும் / மெக்சிக்கோ செடியும்.

    அடடே! நாம் எண்ணியதற்கு மாறாக அளவான முள். பெரிய இலைகள்!!

   " அய்யய்யோ! இந்தப் பாதுகாப்பு பத்தாதே?"

கவலப்படாதீங்க இந்த இலைகள அவ்வளவு சீக்கிரம் மேய்வன தீண்டாது... அப்படிப்பட்ட tannin கலவை இதன் இலைகளுக்குள் உள்ளது.

 

  "அதெல்லாம் சரி, இது எப்புடி அந்த பாலையிலும் இவ்ளோ பசுமையா? அப்புடி என்ன பெசல் ஐட்டம் அதுகிட்ட இருக்கு?"

 அதிக ஆழம் செல்லக்கூடிய வேர் இதுகிட்ட இருக்கு.

  "ஆஹா! இப்படிப்பட்ட ஒரு தாவரத்தத் தான் இவ்ளோ நாள் தேடிகிட்டு இருந்தேன்.

இத நம்மூர் வரண்ட காடுகளில் வளத்தா பாலையெல்லாம் சோலை ஆயிரும்ல?”

இதேதான் நம்ம  நாட்டோட அந்த கால ஆட்சியாளர்களுக்கும் தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் இதன் விதைகள நாடு முழுதும் தூவிவிட்டனர்இது வேற யாரும் இல்ல. நம்ம சீமைக்கருவேல மரம் தான்.

"இதனால் நமக்கு நன்மையா தீமையா?"

மொதல்ல இதோட பலன்கள் என்னன்னு பாக்கலாம்.
-
இது ஒரு தாவரம், அதுனால இது கட்டாயமா ஒரு ஆக்ஸிஜன் வழங்கி.

- இது ஒரு நல்ல fire wood அதாவது  இது நல்ல எரிபொருள்.

- இதன் காய்கள் புரதம் மிகுந்தவை. ஆட்டுக்குத் தீவனமாய் வழங்களாம்.

-நம்மூர் பாலைவாசிகளைவிட வெயில் தாக்கத்திலும் செழித்து வளரும் தன்மை.

 இதோ இந்த நிலத்தை நோக்குங்களேன். நம்மூர் பாலைவாசிகள் வெயிலுக்கு டக் அவுட் ஆகி பட்டுப்போய் இருக்க, இவன் மட்டும் பசுமையாக நிக்கிறான்.

சரிபசுமையா இருக்கு தான்...இங்கே  இவன் பிழைத்தால் மட்டும் போதுமா?

இந்நிலத்திற்கும், இங்குள்ள தாவரங்களுக்கும் ஏற்ப பரிணமித்து வந்த உயிர்சூழல்; இவன் வருகையினால் நன்மை அடைந்துள்ளனவா இல்லை பின்னடைவு கண்டுள்ளனவா?

வாங்க நோக்கலாம்.

 இந்த மாடுகளுக்கு இவற்றின் தண்டுச்சாறை உறிதலில் தடையேதுமில்லை. அவற்றை சார்ந்திருக்கும்  எறும்புகளுக்கும் இவற்றால் பாதிப்பேதும் இல்லை 

படம்: மாடு மேய்க்கும் எறும்பு .

தயிர்சிலுப்பிகளும் இங்கே முட்டை இடத்தயங்கவில்லை.

தரை வாசிகளுக்கும்  இவற்றால் எவ்வித பாதிப்பும் இருப்பதாய் தெரியவில்லை  . இதோ இந்த  மயில்கள் கூட முட்களின் அரவணைப்பில் அமைதியாகவே உள்ளன.


பல்லுயிர் பிழைத்தோங்கிய தமிழகத்தின் பல வறண்ட பகுதிகளில் தற்போது சீமைக்கருவேலம் மட்டுமே எஞ்சியிருக்கும் அவல  நிலை காணக்கிட்டுகிறது .

"இது போல சீமைக்கருவேலம் மட்டுமே ஆக்கிரமிக்கும் பகுதிகளில் என்ன நேரலாம்?"

 மாடு எனப்படும் மர ஹாப்பர்களும் தரை வாசிகளும் இங்கே தப்பிப்பிழைக்கக்கூடும், ஆனால் பொந்துவாசிகளுக்கு இங்கே நிச்சயமாய் இடமில்லை. அவற்றைச்  சார்ந்திருக்கும் வேட்டையாடிகளுக்கும் இது ஒரு இழப்புதான்.

நற்செய்தி கூறா அடியாளைக் கொல்லும் ஆண்டனிபோல், இயற்கையானது நம்மால் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றத்திற்கு தகவமையாத இவ்வுயிர்களுக்கு கருணையேதும் காட்டப்போவதில்லை

மாற்றத்திற்கு தகவமையாத எந்த உயிரும் அழிய வேண்டியது தான்.

 "அழியாமல் இருக்க என்ன செய்ய  வேண்டும்?"

 இச்சூழலுக்குப் பழகித்தான் ஆக வேண்டும். இதோ இந்த கிளியையும் கூட்டுப்புழுவையும் போல.

  இதுலேருந்து என்ன தெரியுதுன்னாநாம் உருவாக்கிய இச்செயற்கை மாற்றத்திற்கு தாக்குப்பிடித்தால்தான் இம்மண் சார் உயிர்களால் இச்சூழலில் தப்பமுடியும்

 அதுல என்ன ப்யூட்டின்னு பாத்தீங்கன்னாஇந்தத் தாக்குப்பிடிக்க வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் நாமளும் இருக்கோம்.

இதே பாலைபூமில சீமைக்கருவேலனுக்கு சவால் விடும் வகையில் சில பசுமைமாறா   மரங்கள் இருக்கின்றன.

 இது பேரு நுணா மரம்.

இந்த ஒரு மரத்த மட்டும் நோக்குவோமா?

இங்க பாருங்களேன் ... இதன் இலை ஒன்றில் வீவர் எறும்பு போல் வேடமிட்டுள்ள ஒரு சிலந்தி.

 " இவன்  ஏன் வீவர் எறும்பு போல் வேடமிடவேண்டும்?"

 ஏன்னா இது வீவர் எறும்பின் விருப்பமான மரம். வீவர் தானேன்னு  நெருங்கும் பூச்சிகள் இதுக்கு இரையாக வேண்டியது தான்.

படம்: இலைகளை வளைத்துக் கூடு கட்டும் வீவர் எறும்புகள்.

இரவாடி வவ்வால்களுக்கு இதன் பழங்கள் தான் பிடித்தமான இரவு டின்னர் டிபன்இது மட்டுமா? இதன் பூக்கள் முல்லைக்கு சவால் விடும் பாலையின் நெக்டார் மற்றும் பழம் வழங்கிகள்.

 இதன் பழத்தில் மட்டுமே பிறந்து வளரக்கூடிய ஸ்பெஷல்   ஒன்றும்  உள்ளது.   இதே போல் பல பாலைவாழ் தாவரங்கள் உள்ளன

.கா...பாலை, வெப்பாலை, குரவம், புங்க மரம், பாதிரி, வெள்ளிளோத்திர மரம், ஓமை, அரச மரம், வேம்பு, நுணா மரம் மற்றும் கல் இச்சி மரம்.

இவையனைத்தும் உணர்த்துவது ஒன்றைத்தான். சுரத்தை தாங்குமளவிற்கு மரங்களை வளர்ந்து விட்டால், அவை சார்ந்த உயிர்கள் பிழைத்து பல்கி இருக்க வழிவகுக்கும்.

 நுணா, பாலை, வெப்பாலை போன்ற  நமது பாலை நிலத்திற்கென பரிணமித்த மரங்கள்சீமை கருவேல மரங்கள் இருக்குமிடங்களிலெல்லாம் பாலை நிலத்தில் விரவியிருப்பதாக யோசித்துப்பாருங்களேன்

அத்தகைய நிலப்பரப்பின்  உயிர்ச் சூழல் எப்படி இருக்கும்?

பாலை முல்லையாகிவிடுமல்லவா?

   சரி அதெல்லாத்தையும் விடுங்க... இந்த நிலத்தில் எடுக்கப்பட்ட இந்த ஒரு படத்தை பாருங்களேன். நாம் பதிவின் ஆரம்பத்தில் பார்த்தோமே பற்றிப்படரும் கொடி...அப்படிப்பட்ட கொடி  ஒன்றின் எச்சம்இம்மரத்தின் மேல் படர்ந்துள்ளது.


  இது நமக்கு உணர்த்துவது என்ன?

 இப்பாலையிலும் இவை செழித்து வளருமளவிற்கு முன்பு ஒரு காலத்தில் மழையானது பெய்திருக்க வேண்டும்.

சரி அப்படி ஒரு மழை இப்பாலையில் மறுபடி பெய்தால்?

       வாங்க காத்திருப்போம்.

 

ஒரு சிறிய மழைக்கு  பிந்தைய அதே பாலை நிலம்...


                       பட்டுவிட்டென நாம் கருதிய மரங்களின் தற்போதைய தோற்றம்.

                நத்தையின் உறக்கம் திறக்கும் அளவிற்கு நீர் இன்னும் வரவில்லை .


இவை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், எப்படியேனும் வெயிலைத் தாங்கும் மரங்களை இங்கு நிறைய வளர்த்து விடுதல் மற்றும் நீரை நிலத்தில் நிறுத்தி வைத்திருக்கும் உத்தியை  கற்றுக்கொள்ளுதல்இந்த இரண்டையும் கைக்கொண்டால் இந்தப் பாலை, பல்லுயிர் பிழைத்திருக்கும் முல்லையாகும் தன்மை கொண்டது.

 

நீர் புகா பாறை நிலமாயினும்சரிமட்கு, உரம் மற்றும் ஈரம் மட்டும் போதும் அந்த நிலத்தை உயிர்ப்பிக்க.

 

படம்சிறிய மழைக்கு முன்னரும் பின்னரும்- பாறையின் சந்தில் வளரும் கல் இச்சி (குறிஞ்சியில் பாலை )

நண்பர்களே, பனைமரத்தின்  சந்தில் இருந்த மட்கு, உரம் மற்றும் ஈரம் இவற்றின் துணைகொண்டு வெயிலிலும்  பாலை மற்றும் பாறை நிலத்தில் மரம்  வளர்வதை கண்டோம். இந்த மட்கு, உரம் மற்றும் ஈரம்  இவற்றின் துணையுடன் பாலைநிலம் முல்லை நிலமாய் தமிழர்களால் உயிர்ப்புடன் இருக்க வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த உத்தியை கற்றுக் கொள்வதற்கு முன், பருவம் என்னும் பெரும்பொழுதின்  பகடைக்காய்களாக மனிதர்கள் இந்த நிலத்தில் வாழ்ந்து வந்தனர். பருவம் மழையை அள்ளித்தந்த பொழுது வேட்டுவ சமூகத்தினராய் இருந்தவர்கள், மழை பொய்த்த பொழுது  கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த அவல நிலையில் இருந்து வெளிவர, வருடம் முழுவதும் நிரந்தர உணவு வழங்கும் ஒரு இடம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.


















 
























 







































 




















No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஏர் முன்னது எருது - 6

  நீரின்றி அமையாது உலகு  - பாலை நிலம் காலம் : 21 ம் நூற்றாண்டு தொடக்கம் இடம் :  தென்மாவட்ட தலைநகர் ஒன்றை ஒட்டி இருக்கும்   மழைபொ...