Thursday, July 9, 2026

உணவு எந்திரம்

“கொக்கரக்கோ…”

அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான்.

“பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்தத்தை அலாரமா வைச்சிருக்க?” என்றான் சோம்பல் முறித்தபடி.

பாட்டி புன்னகைத்தாள். “ இது ஒரு பறவையின் குரல். அந்த காலத்தில் இந்தப் பறவைதான் எங்களை எழுப்பும். மிருகக்காட்சிசாலையில் தலையில் கொண்டை வைத்த    பறவை ஒன்றை பார்த்தியே… அதன் குரல் தான் இது .”

முருகன் உடனே Food App-ஐ திறந்து, பிரீமியம் செக்‌ஷனுக்குப் போனான். அங்கு “Heritage lab meat” என்னும் வார்த்தைகள்  பளிச்சென்று இருந்தது.

 அதில் பறவை மாமிசம் என்னும் பிரிவின் பிரீமியம் பகுதியில் அந்த சேவல் படம் இருந்தது.

 அந்த அட்டவணையின் கடைசியில் இருந்தது Standard Protein Tissue. அதுதான் அவர்கள் வழமையாக உண்ணும் இறைச்சி.

 அதன் கீழ் இவ்வாறு அச்சிடப்பட்டிருந்தது 

Protein: 24 g

Fat: 8 g

Zero pathogens

 முருகன் ப்ரீமியம் கேட்டகிரியின் கீழ் இருந்த சேவலின் படத்தை கிளிக் செய்தான்.

Original Aseel flavour 

Omega-3 Enriched 

Micronutrient Edition

Heritage Nutrition Series

Natural Myoglobin Premium

 என்று புரியாத வார்த்தைகளில் அதன் கீழ் எழுதியிருந்தது.

 அந்த மாமிசத்தின் விலை ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாதச் சம்பளத்தைவிட அதிகம்.

 ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது முருகன் அவனது தந்தையிடம் அதை வாங்கச் சொல்லி கேட்பான். அவனது அப்பா எப்பொழுது கேட்டாலும் கூறும் அதே பதிலை மந்திரம் போல் திரும்ப உச்சரிப்பார்.

"அடுத்த தீபாவளிக்கு வாங்கலாம்..."

 தீபாவளி ஆண்டுதோறும் வந்தது; ஆனால் அந்த உணவு அவர்களது மேசைக்கு ஒருபோதும் வந்ததில்லை.

 சேவலின் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முருகனின் தலையை பாட்டி மெலிதாக கோதிவிட்டபடி பேசத் தொடங்கினார், " முன்பு இந்த கிராமம் பசுமையாக இருந்தது, எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு மாடாவது இருந்தது."

"உண்மையான மாடா?" என்று ஆச்சரியத்துடன் முருகன் கேட்டான்.

"ஆமாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு. சில கோழிகள். குறைந்தபட்சம் இரண்டு ஆடுகள்."

 பாட்டி ஜன்னலுக்கு வெளியே பரந்து விரிந்திருந்த பழுப்பு நிற நிலப் பகுதியைக் காட்டினாள்.

 "அங்கே ஓர் சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது, அதில் பூவரச மரத்தின் பூக்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் அருகே இருந்த  வரப்பின் மீது பசுமையான புற்கள் இருந்தன. அதன் மீது  வெறும் கால்களுடன் நாங்கள் நடப்போம்.  நடக்கும் போது பாதத்தின் மீது ஜில்லென்று பனித்துளிகள்  படும் உணர்வு மிகவும் அலாதியானது." 

பேசிக்கொண்டே  நானும் பாட்டியும் காய்ந்து கிடந்த அந்த நிலத்தினை அடைந்தோம்.

"ஒரு காலத்தில் இந்த மண்ணுக்கு உயிர் இருந்தது ."

"அதன் பின்னர்  என்ன ஆனது?"

"மக்கள் கால்நடைகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டார்கள். விலங்குகள் இல்லாமலேயே இறைச்சி தருகிறோம் என்று ஆய்வகங்கள் வாக்குறுதி கொடுத்தபோது, மக்கள் தங்கள் மாடுகளையெல்லாம் விற்றுவிட்டார்கள். மாடுகள் மறைந்த பிறகு சாணம் இல்லாமல் போனது. உரமாகும் மக்கும் பொருட்கள் இல்லாமல் போனது."

"மண்புழுக்கள் மறைந்துபோயின.சாண வண்டுகள் காணாமல் போயின."

" மண்ணின் பசிக்கு உணவு இல்லாமல் போனது.மண் செயலிழக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் விளைச்சலில் எந்தக் குறையும் தெரியவில்லை. அதன் பின்னர்  தொழிற்சாலைகள் இரசாயன உரங்களைத் தயாரித்தன."

" பின்னர் மேலும் அதிகமாக மண்ணில் உரம் இடப்பட்டது.

அதன்பிறகு இன்னும் வீரியமான உரங்கள்...

பயிர்கள் வளர்ந்தன...

ஆனால் அவற்றின் கீழிருந்த மண் மெதுவாக உயிரை இழந்தது.  கடைசியில் இந்த மண்  வெறுமனே செடியை தாங்கி நிற்கும் ஒரு ஜடப் பொருளாக மாறியது; "

"நான் சிறுமியாக  இருந்தபோது, உன் கொள்ளுத்தாத்தா கோழிகளை வீட்டுத் தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றவிடுவார். அவை பூச்சிகளைத் தின்றன...மண்ணைக் கிளறின... எச்சமிட்டன."

"எங்கள் தோட்டக் காய்கறிகளின் சுவை மிக அலாதியாக  இருந்தது. முட்டைகளின் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. பண்டிகையின் போது சமைக்கப்படும் கோழியின்..."அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

"அது சமைக்கும்போது வீசிய மணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. உணவோடு சேர்த்து எனது அன்னை அன்பையும் பரிமாறினாள்... நான் இருக்கும் இதே பூமி உயிர்களாலும் அன்பாலும் இணைந்து பிணைந்து இருந்தது. "

 "உனது கொள்ளுத் தாத்தாவிடம் பெரிதாக பணப்புழக்கம் இருந்ததில்லை. இருப்பினும் நாங்கள் இப்பொழுதைக் காட்டிலும் அப்போது திருப்தியாக உண்டோம். மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களைச் சுற்றி இருந்தது."

"அப்போது யாரும் ஒமேகா–3 பற்றி பேசியதில்லை ."

"செலினியத்தின் அளவை யாரும் கணக்கிடவில்லை."

"வைட்டமின் K₂ எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளக்கவில்லை."

"உயிருள்ள மண்ணிலிருந்து வந்த உணவைச் சாப்பிட்டோம். அவ்வளவுதான்."

"மனித உடலுக்குத் தேவையான அனைத்தும் அதில் இருந்தன.

 ஆனால் இப்பொழுது நாம் உண்ணும் உணவில், மருத்துவர்கள் தொடர்ந்து புதிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர்.

இயற்கை, மனிதனால் இன்னும் கண்டறிய முடியாத எண்ணற்ற நன்மைகளை  நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அது நமக்கு  வழங்கியதை எந்த ஒரு தொழிற்சாலையாலும்  ஈடு செய்ய முடியாது." பேசிக்கொண்டே பாட்டி  ஒரு கைப்பிடி உலர்ந்த மண்ணை எடுத்தாள்.

" நாம் இழந்தது வெறும் உயிரினங்களை மட்டுமல்ல... நம்மை உயிரோடு வைத்திருந்த சூழலையும் இழந்து விட்டோம். " என்று கூறியபடி அவள் மண்ணை விரல்களுக்கிடையே நசுக்கினாள்.

" கால்நடைகள் உணவை மட்டும் உற்பத்தி செய்ததாக நாம் நினைத்தோம். உண்மையில் அவை உயிர்ப்பு மிக்க மண்ணை உருவாக்கிக்கொண்டிருந்தன." 

"மண் உயிரை இழந்தபோது... அனைத்தும் நம் கையை விட்டுச் சென்று விட்டது ."

அவள் கையில் இருந்த மண் தூளாக உதிர்ந்து காற்றில் கலந்தது.

ஐயா பாமயன் எழுதிய 'உணவு எந்திரம் ' புத்தகத்தை படித்த தாக்கத்தால் எழுதிய கதை இது. இயற்கையின் சுழற்சி முறையைப் புறந்தள்ளி, நேர்கோட்டு வளர்ச்சியே உண்மையான முன்னேற்றம் என்று உலகை நம்பவைக்கும் கார்ப்பரேட் அமைப்புகளின் அடுத்த இலக்கு... தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாமிசமும் பாலும்.

பற்பசை, சோப்பு போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் தொடங்கி நம் தற்சார்பை நாம் ஏற்கனவே நமது வாழ்வியலில் பெரும் அங்கு இழந்துவிட்டோம். ஆனால் உணவின் தற்சார்பை இழப்பதே நம் சமூகத்தின் மீது விழவிருக்கும் மிகப் பெரிய இறுதி அடியாக அமையக்கூடும்.

"உயிர்களைக் கொல்லாத மனிதநேயம்", "உணவுப் பாதுகாப்பு", "சுற்றுச்சூழல் பாதுகாப்பு", "மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல்" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களால் அலங்கரிக்கப்பட்ட ஜிகினா காகிதத்தில் சுற்றி, சந்தைக்குள் நுழையக் காத்திருப்பவை செயற்கை இறைச்சியும் செயற்கை பாலும். இவ்வாசகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும், அதன் சமூக, பொருளாதார, வேளாண் விளைவுகளையும் இந்த நூல் ஆழமாக ஆராய்கிறது.

தற்போதைய பால் மற்றும் மாமிச உற்பத்தி, அவற்றின் பயன்பாடு, செயற்கை மாற்றுகளால் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கால்நடை வளர்ப்பிலும் வேளாண்மையிலும் நிகழக்கூடிய மாற்றங்கள், சுற்றுச்சூழலின் மீதான விளைவுகள் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக அலசுகிறது இந்த நூல்.

இது விவசாயிகளுக்கான நூல் மட்டுமல்ல. அறிவியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்தவர்கள், கொள்கை வகுப்போர், மேலும் உணவு குறித்து அக்கறை கொண்ட ஒவ்வொரு நுகர்வோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

வேப்பங்குச்சியிலிருந்து மண்பானை வரை நம் கைகளிலிருந்து நழுவிச் சென்றவற்றின் பட்டியலில், உணவும் சேர்ந்துவிடக் கூடாது. கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் நம் உணவுத் தட்டை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கு முன்பே, அந்த ஆபத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த நூல் அதிகமான வாசகர்களைச் சென்றடைய வேண்டும். அது ஒரு புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல; நமது உணவுச் சுதந்திரத்தைப் பற்றிய ஒரு முக்கியமான சமூக உரையாடலின் தொடக்கமாகவும் அமையும்.


ஆசிரியர்: பாமயன் Pamayan 

வெளியீடு: தாளாண்மை

விலை: ரூ. 120/-

தொடர்புக்கு:

செகதீசன் கிருஷ்ணன்

9842048317


No comments:

Post a Comment

உணவு எந்திரம்

“கொக்கரக்கோ…” அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான். “பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்...