பூமியில் உள்ள காந்தப் புலனை உணரும் இந்த ஆற்றல் பலருக்கு தெய்வ சக்தியாக தோன்றலாம்.
ஆனால் வில்சன் நோயுடன் பிறந்த சிவனுக்கு இது ஆபத்தின் எச்சரிக்கை.
செம்பினை போர் கடவுளின் உலோகம் என்பார்கள். ஆனால் அது அவனுக்கு பித்தத்தை தூண்டியது, அவனது இரத்தத்தில் நெருப்பைப் போல பாய்ந்தது, நரம்புகளை எரியச் செய்தது.
வயது அதிகமாக அதிகமாக, அவனுக்கு வில்சன் நோயின் நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் வேறு வெளிப்படத் தொடங்கின. அவனின் இந்த வாத அறிகுறிகள் மிகவும் கொடுமையானவை.
அவன் அந்த மணல் பரப்பு முழுவதும் அலைந்து திரிந்தான். கால் வைக்கும் இடமெங்கும் செம்பின் துடிப்பை உணர்ந்தான். நரம்புகளுக்குள் நெருப்பு படர்ந்தது போல் இருந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவன் பேரமைதியை உணர்ந்தான். அந்த இடத்தில் தன் உள்ளங்கையை மண்ணில் பதித்தான். அங்கு அவனது மூன்றாவது கண்ணின் துடிப்பு அடங்கியது. அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த அழல் அமைதியடைந்தது. அவனது புலன்கள் கூர்மையாகின. அவன் அந்த சூழலை உற்று கவனித்தான்.
அந்த இடம் முழுவதும் ஊமத்தைச் செடிகள் பூத்துக் குலுங்கின.
பலருக்கு அவை விஷச் செடிகள். உயிரினங்கள் அவற்றை ஒருபோதும் தீண்டத் துணியாது. ஆனால் அவை பூமியில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான உலோகத்தை தம்முள் இழுத்து வைத்து பூமியை தூய்மைப்படுத்துபவை.பிற்காலத்தைய அறிஞர்கள் இதை phytoremediation என்று அழைப்பார்கள்.
பலருக்கு பிடிக்காத ஊமத்தை சிவனுக்கு உகந்ததாக இருந்தது. அது அவனுக்கு புனிதமான ஒன்று.
"இவை விஷத்தை குடிக்கின்றன. இவை நிலத்தை தூய்மைப்படுத்துகின்றன,” என்று தனக்குள் அவன் கூறிக் கொண்டான் .
அந்தக் க்ஷணத்தில் அவனுக்கு இயற்கையின் ரகசியம் ஒன்று புலப்படத் தொடங்கியது. விஷம் என அழைக்கப்படுவது மருந்தாகலாம். மருந்தென அழைக்கப்படுவது விஷமாகலாம்.
விஷத்திற்கும் மருந்திற்கும் இடையேயான சமநிலைக் கோட்டை அவன் புரிந்து கொள்ளத் துவங்கினான். அழிவுக்கும் இணக்கத்திற்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அது என்று அவனுக்கு உணர்த்தப்பட்டது .
சிவனுக்கு தற்போது இரண்டு தேவைகள் இருந்தன ஒன்று வலிமையான உலோகம் மற்றொன்று அவனது நரம்பியல் அறிகுறிகளுக்கான மருந்து.
மின்னலென தோன்றி மறையும் பழைய நினைவுகளால் வழிநடத்தப்பட்ட அவன் உலைகளையும் ஊதுகுழல்களையும் உருவாக்கி பலவகை தாதுக்களை உருக்க ஆரம்பித்தான்.
அவன் அந்த நிலப்பரப்பு முழுவதும் தேடி அலைந்தும் செப்பின் தாதுக்கள் மட்டுமே அவனுக்கு கிட்டின. அதில் ஒரு தாதுவை கையில் எடுக்கும் போது அவனுக்கு சற்றே வித்தியாசமாக ஏதோ ஒன்று புலப்பட்டது.
அவன் கண்டெடுத்தது ஒரு விசித்திரமான கல். அது பச்சை கோடுகளுடன் இருந்தது. பாறைகளின் கீழ் உள்ள ஒரு ஓடையில் இருந்து அதை எடுத்திருந்தான், விளக்க முடியாத ஒரு உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்ட அவன் அதை உலையில் எறிந்தான்.நெருப்பு சீறியது. நாகங்கள் தப்பி ஓடுவது போல நெருப்புப் பொறிகள் நாற்புறமும் பறந்தன. கலவை உருகியபோது, அது இயல்புக்கு மாறாக உயிர்ப்புடன் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவன் அதை திரிசூல வடிவ அச்சில் ஊற்றியபோது, அது திரவ ஆவி போல ஓடியது.
அது குளிர்ந்தபோது, அவன் திகைத்தான். அவன் செய்த அந்தத் திரிசூலம் செம்பினைப் போல் சிவப்பாக இல்லை—அது வெள்ளி விளிம்புடன் ஒளிர்ந்தது, அவன் இதற்கு முன் உருவாக்கிய எதையும் விட கடினமாக, கூர்மையாக, துல்லியமாக இருந்தது.
அவன் ஆர்சனிக்கல் வெண்கலத்தை உருவாக்கியிருந்தான்.
அவன் அதை சோதித்தான். முழு பலத்துடன் வீசப்பட்ட அந்தத் திரிசூலம் ஒரு மென்மையான கல்லைப் பிளந்தது.
அதை பிரியத்துடன் தனது அருகிலேயே வைத்துக் கொண்டான். அதன் ஆற்றலில் குறை ஏதுமில்லை. ஆனால் அதை அருகில் வைத்திருக்கும் பொழுது அவனது இரவுகள் அமைதியின்மையால் நிறைந்தன. அவன் கனவுகளில் இருமினான். அவனது உறுப்புகள் நடுங்கின. அவனது இதயம் இயல்புக்கு மாறான தாளங்களுடன் துடித்தது. அவனுள் உள்ள நாடிகள் அவனை தெளிவாக எச்சரித்தன.
“இது சமநிலை இல்லை. இது ஒரு விஷம்.”
அர்சனிக் ஒரு விஷம். அது வாத நோயை உண்டாக்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் அறிவியல் அறிஞர்கள்; இந்த உலோகம் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் வாத அறிகுறிகளை 'ஆர்சனிக்கோசிஸ்' என்று அழைக்கப் போகின்றனர் .
உலகம் முழுவதும் கற்காலத்திற்கு அடுத்தபடியாக செம்பின் காலம் தொடங்கியது. உலகம் முழுவதும் செம்பு யுகத்தின் காலம் மிக நீண்டு காணப்பட்டது. இதற்கடுத்து துவங்கிய காலம் வெண்கல யுகத்தின் காலம் .செம்புடன் இயற்கையாக கிடைக்கும் ஆர்சனிக்கை செம்புடன் சேர்த்து உருக்கும்பொழுது அர்சனிக்கல் வெண்கலம் கிடைக்கும்.
ஆர்சனிக்கல் வெண்கலத்தை மக்கள் கண்டுபிடித்த பிறகு அதன் பாதிப்பை உணர்வதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.
கடவுளர்களின் கதைகள் என மக்களால் பேசப்படுபவை அனைத்தும் ஒரு காலத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மக்களின் கதைகளே.
நெருப்பு மற்றும் உலோகத்துடன் தொடர்புடைய மேலை நாடுகளின் கடவுள்களில், கிரேக்க கடவுள் ஹீஃபஸ்டஸ் மற்றும் ரோமன் கடவுள் வல்கன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் வாத அறிகுறியுடையவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். வானத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டதன் விளைவாக இப்படி ஆனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும், இவர்கள் கடவுள்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கவசங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவர்களாக விளங்கினர்.
பல நாகரீகங்களில் “வாத நோயுடன் இருக்கும் உலோகக் கலைஞன்” என்ற உருவம் ஏன் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு ஒரு சாத்தியமான விஞ்ஞான விளக்கம் ஆர்செனிக் நச்சுத்தன்மை (Arsenicosis) அல்லது உலோக நச்சுத்தன்மை என்பதாகும்.
பழமையான உலோக உருக்க நடவடிக்கைகளில் ஆர்செனிக், நாகம் (lead) போன்ற நச்சுக் கனிமங்கள் அதிகமாக இருந்தன. இவைகள் உடலில் தேங்கி, நரம்பியல் பாதிப்புகள், தசை சிதைவு, போன்ற உடல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பாதிப்புகள் நிறைந்த அந்தக் அந்த காலத்தைய உலோகக் கலைஞர்களைை புனிதப்படுத்தும் வகையில் புராணங்களில் வாத நோய் உடைய கடவுள்கள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் தென்னிந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த இந்தக் கடவுள் பிரபஞ்சத்துடன் பேசியவன். தனக்கு உள்ளே கடந்து சென்று தன் உயிருடன் பேசியவன். உலகத்தையும் உடலையும் மூன்றாம் கண் கொண்டு பார்த்தவன்.
அவனது பேராற்றலால் கற்காலத்திலிருந்து செம்பு காலத்தையும் வெண்கல காலத்தையும் விரல் விட்டு எண்ணுவதற்குள் தமிழகம் கடந்து விட்டது.
சிவன் என நாம் அழைக்கும் அவன் இன்னும் கடவுள் பதவியை அடையவில்லை. அதை அடையும் மட்டிலும் அவன் தனது அலைச்சலை நிறுத்தப் போவதில்லை.
அவன் மீண்டும் ஒரு வலிமையான உலோகத்தை தேடி அலைந்தான். இந்த முறை அவனது சாபத்தின் பரிசான மூன்றாம் கண்ணால் வழிநடத்தப்பட்டான். அவன் மனிதக் கண்களுக்கு கட்புலனாகும் ஒளி அலை வரிசைகளுக்கு உட்பட்ட வெளிச்சத்தைக் கொண்டு தேடவில்லை. உணர்வால், பூமிக்கு அடியில் உள்ள உலோகங்களின் காந்த ஓட்டத்தை பின்தொடர்ந்தான்.
அலைச்சலின் விளைவாக மழை ஆசிர்வதித்த மலைகளில், அவன் தகரத்தைக் கண்டான்.அதிலிருந்து, அவன் தகர வெண்கலத்தை உருவாக்கினான். ஆனால் அவன் ஆர்சனிக்கை முற்றிலும் கைவிடவில்லை. மாறாக, அதை ஆராய்ந்தான். சமநிலைப்படுத்தினான். மாற்றினான். சிறிய அளவுகளில் அவற்றை விஷச் செடிகள் என அழைக்கப்படும் ஊமத்தை எருக்கம் செடி போன்றவற்றின் இலையுடன் தேய்த்து, புனித சாம்பலுடன் கலந்து—அவன் மாத்திரைகளை உருவாக்கினான்.
அர்சனிக் எனப்படும் வெண் பாசானம் வாதத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் வெண் பாஷாணத்தைக் கொண்டு அவனது வாத அறிகுறிகளை மட்டுப்படுத்திக் கொண்டான்.
முள்ளை முள்ளால் எடுத்தான்.
அவனிடம் தற்பொழுது வாதத்தை மட்டுப்படுத்தக்கூடிய மருந்தும் இருக்கிறது, ஆற்றல்மிகு உலோக ஆயுதமும் இருக்கிறது.
யாராலும் எதிர்க்க முடியாத ஒரு சூலத்தை உருவாக்கிய பெருமிதத்தில் சிவன் தனது பசுக் கூட்டத்திற்கு அருகில் அவற்றை கண்காணித்தபடியே உலவி வரத் தொடங்கினான். அவனைப் போலவே பேராற்றலுடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த வெள்ளைக் காளை சிவனை இன்னும் நம்பியது போலத் தெரியவில்லை. சிவனை ஒரு சந்தேக கண்ணுடனே அது பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் சிறிய கன்று ஒன்று அரவம் தீண்டி வாயில் நுரை தள்ள துடிதுடித்துக் கொண்டிருந்தது . அதன் உறுப்புகள் இறுகின. அதன் மூச்சு மெலிந்தது.
சிவா அமைதியாக மண்டியிட்டான். அவன் ஒரு கருப்பு மாத்திரையை நசுக்கி, கன்றின் நாக்கின் கீழ் வைத்தான்.
சிவன் நஞ்சுக்களின் கடவுள். நஞ்சுக்கள் அவனது பேச்சிற்கு கட்டுப்பட்டு நின்றன. நஞ்சினை அமுதமாக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.
சிவனின் கரம் பட்ட அந்த கன்று அசைந்தது. பின்னர் மூச்சு விட்டது. எழுந்து நின்று அசைந்து சென்று தனது தாயின் மடியில் பாலைக் குடித்தது.
இவை அனைத்தையும் தூரத்திலிருந்து அந்த வெள்ளை நிறக் காளை பார்த்துக் கொண்டே இருந்தது.
இந்நிகழ்விற்கு பிறகு சிவனை அது சந்தேகத்துடன் பார்க்கவில்லை.
ஆண்டுகள் செல்லச் செல்ல, சிவனின் கண்டுபிடிப்புகள் மேலும் அதிகரித்தன. அவன் ஈயத்தைக் கண்டறிந்தான்.
அதைத் தொட்ட பொழுது அவனது புலன்கள் பின்வாங்கின. அதுவும் ஒரு விஷம். ஆனால் பல்வகை உலோகங்களை சேர்த்து செய்யப்படும் கலவைகளில் அதன் விஷம் மட்டுப் பட்டது.
அவன் தங்கத்தைக் கண்டான். ஒளிரும் இயல்புடைய, என்றுமே மங்காத அந்த உலோகம் கட்டமைப்பில் வலிமையற்றது, ஆனால் ஆன்மீகமாக ரீதியில் ஆற்றல் உடைய உலோகம் அது என்று உணர்ந்து கொண்டான். அது அதிர்வுகளை அமைதிப்படுத்தியது. உலோக கலவைகளை உறுதிப்படுத்தியது. ஆன்மாவை மயக்கியது.
ஒரு நாள், அவன் இன்னும் பெரிய ஏதோ ஒன்றினை கால்களுக்கு கீழ் உணர்ந்தான். அது அவனது நரம்புகளை எல்லாவற்றையும் தூண்டியது, பூமிக்கு அடியில் மின்னல் ஊர்வது போல அவனுக்குத் தோன்றியது .
முல்லை நிலத்திற்கு அப்பால் இருந்த மனித குடியிருப்புகள் நிறைந்த மருத நிலத்தில் அந்த உணர்வு மையம் கொண்டது.
அந்த உலோகத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் அவன் தயாராகவில்லை. அந்த உலோகத்தை உருக்குவதற்கு முன் அவன் சில புயல்களை சந்திக்க வேண்டி இருந்தது.
சிவன் உலோகவியலை வெறும் ஆற்றலுக்கு பயன்படும் கருவிகளை உருவாக்க மட்டும் பயன்படுத்தவில்லை. அவனுக்கு, அது ஒரு சடங்கு, மருந்து.
சமநிலை பேண உதவும் ஒரு அற்புதக் கலையாக உலோகவியல் அவனுக்கு இருந்தது.
அவனைப் பொறுத்தவரையில் உலை ஒரு கோயில். பட்டறை, ஒரு பலிபீடம்.நெருப்பு, ஒரு தூய்மைப்படுத்தி.
அவனது கலவைகள் வெறும் போர்க் கருவிகள் இல்லை. அவை எதிர்காலத்தின் மருந்துகள்.
அவனது சின்னங்களான திரிசூலம், பாம்பு, பிழம்பு போன்றவை வெறும் புராணக் கதைகளில் வரும் குறியீடுகள் அல்ல. அவைகளே தமிழக நாகரிகத்தின் ஆணிவேர்.
இந்த புனித நெருப்பின் கரங்களில் இருந்து தான் தமிழகம் முன்னேறியது. மற்ற நாகரீக மக்கள் இருளில் தடுமாறும்போது, அவனது மக்கள் உடலையும் உள்ளத்தையும் இயற்கையையும் அவனது வழிகாட்டுதல்களால் சமநிலைப்படுத்தினர். மூலிகைகளாலும் பஸ்பங்களாலும் நோய்களை குணப்படுத்தினர், அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒரே தராசில் நிறுத்தினர் .
இதன் விளைவாக தமிழகம் உலகுக்கே வழிகாட்டியாக விளங்கியது.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அவனை வானுறையும் தெய்வத்துக்குச் சமமாய் வைத்துத் தொழுதது தமிழகம்.
---------
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தே னடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
----
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...