Sunday, August 31, 2025

அருள்வல்லான்



சிவன் அன்பே உருவானவன், மௌனத்தை விட மென்மையானவன். எனினும் தன்னை அண்டியவர்களை பாதுகாப்பதில் உக்கிரமானவன்.
 அவனது வலிமை ஆவேசத்தினால் தூண்டப்பட்டதல்ல, தன்னை சரணடைந்தவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அவனது வலிமை தூண்டப்பட்டது. 

  உடலளவிலும் மனதளவிலும் அவன் அவனது தந்தையைப் போலவே பெருவீரன். இந்த வனத்தில் அவன் எதைக் கண்டும் அச்சப்பட்டதில்லை. அந்தப் பெருவீரனுக்கு இப்பொழுது நந்தனும் துணை இருந்தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எந்த வேட்டையாடியும் அவர்களை அண்டியவர்களை தீண்டத் துணியவில்லை. அவர்கள் இருந்த சூழலில் அமைதி நிலவியது.

ஆனால், அமைதி என்பது ஓய்வு அல்ல.

 அவனது மாபெரும் படைப்பாகிய வெண்கல சூலம் உடைந்து கிடந்தது. இப்போது அவனுக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ஆயுதம் என்பது அவனைப் பொருத்தமட்டில் அழிப்பதற்கான கருவி அல்ல. அது காப்பதற்கான கருவி. அந்த ஆயுதம் வளையக்கூடிய செம்பாகவோ நொறுங்கக்கூடிய வெண்கலமாகவோ இருப்பதை அவன் விரும்பவில்லை. அவன் தன்னைப் போலவே வலிமையான ஒரு உலோகத்தை தேடினான். இதுவரை அவனிடம் இருந்த உலோகங்கள் அவனது ஆற்றலை தாங்கும் திறனை பெற்றிருக்கவில்லை. ஒன்று அவை வளைந்தன அல்லது கண்ணாடித் துண்டை போல் அதிக ஆற்றல் கொண்டு தாக்கும் பொழுது உடைந்தன. 

 உடைந்து கிடந்த அவனது சூலத்தை நோக்கும் பொழுதெல்லாம் அவனுக்குள் ஆற்றாமை பொங்கி எழுந்தது. வலிமையான உலோகம் ஏதும் கிட்டாதா என்று அவன் தேடத் துவங்கினான்.
 அப்படிப்பட்ட உலோகத்தின் இருப்பை அவன் அருகில் உள்ள ஒரு நிலப்பரப்பில் உணர்ந்தான்.

 முல்லை வனத்திற்கு அப்பால் பரந்த சமவெளிகளில் இருந்து ஒரு காந்தப்புலன் அவனை ஈர்த்துக் கொண்டே இருந்தது. நோயின் தாக்கத்தாலும் தனக்குத் தானே பயிற்றுவித்துக் கொண்ட ஆன்ம பயிற்சிகளாலும் உயிர் பெற்றிருந்த அவனது நாடிகள் அவனுக்கு அந்த உலோகத்தின் இருப்பிடத்தை குறிப்பால் அறிவித்தபடி இருந்தன.

அவன் அந்த மின்காந்தத் துடிப்பை பின் தொடர்ந்து அந்த உலோகத்தை கண்டறிய ஆவல் கொண்டான். சிவன் அந்த இடத்தை நோக்கிச் செல்ல முடிவெடுத்தான். சிவன் நந்தனின் திமிளைப் பற்றி நந்தனின் மீது ஏறினான். இப்பொழுது நந்தன் சிவனின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தான். 

சிவன் நந்தன் மீது அமர்ந்து செல்லும்போது, நந்தனை வழி நடத்துவதற்கு சிவனுக்கு வார்த்தைகளோ கடிவாளமோ தேவைப்படவில்லை. சிவனின் ஒவ்வொரு நுட்பமான அசைவும், எடையின் லேசான மாற்றமும், காலின் மென்மையான தொடுதலும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன் மூலம் அவனது விருப்பம் நந்தனுக்கு உடனடியாக கடத்தப்பட்டு விடும் . அவர்கள் இருவரது ஆன்மாவும் ஒரு புலப்படாத கயிற்றினால் இணைக்கப்பட்டிருந்தது போல தோன்றியது. அது ஓட்டுபவனுக்கும் வாகனத்திற்கும் இடையிலான பிணைப்பு மட்டுமல்ல , மாறாக அன்பினால் இணைந்த இரு ஆன்மாக்களின் பரிபூரண ஒத்திசைவு இணக்கம்.

சிவன் மென்மையாக நந்தனின் தோலைத் தீண்டிய உடனேயே, நந்தனுக்கு எந்தப் புறம் செல்ல வேண்டும் என்பது விளங்கியது.

அவர்கள் காட்டை விட்டு வெளியேறி, வளமான மருத நிலங்களை நோக்கி பயணிக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் வேகத்தை அதிகரித்து, அடர்ந்த, நிழல் படர்ந்த காடுகளின் வழியாகச் சென்றனர். அந்த அடர்ந்த காடு நெருக்கமான புதர்களாலும் முள்மரங்களாலும் அடைபட்டிருந்தது, ஆனால் அவற்றால் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க இயலவில்லை. சிவன் தனது சூலத்தைக் கொண்டு புதர்களை விலக்கினான்.காட்டின் எல்லையில் பெரும் மதில் சுவரென அமையப்பெற்ற விழுந்து கிடந்த பெரிய மரங்களை நந்தன் தனது கொம்புகளால் முட்டித் தூக்கி எறிந்து வழி ஏற்படுத்தி புயலைப் போல் விரைந்து சென்றான் . இறுதியாக அவர்கள் இருவரும் பொருநை நதியின் கரையினை அடைந்தனர்.

 அது சற்றே மேடான நிலப்பரப்பு அங்கே இருந்து பார்க்கும் பொழுது பல மைல்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

அங்கே, உலகம் வேறுவிதமாக காட்சியளித்தது .

 அங்கே காற்றின் மணம் வேறுவிதமாக இருந்தது.

 அந்த நிலம், மக்களால் நிறைந்திருந்தது. அவர்களின் ஆடைகளும் அணிகலன்களும் வித்தியாசமாக இருந்தன. அவனது திசை காட்டியான மூன்றாம் கண்ணும் நாடிகளும் அவனை அந்த கிராமத்திற்கு அப்பால் உள்ள ஒரு பரந்த நிலப்பரப்பினை நோக்கி ஈர்த்தன.

  மனித நடமாட்டம் குறைவாக இருந்த கிராமத்தின் எல்லைப் பகுதி வழியாக அந்த கிராமத்தை கடக்க சிவனும் நந்தனும் எண்ணம் கொண்டனர்.

 காட்டினை ஒட்டி கிராம எல்லையில் யாரும் பார்த்து விடா வண்ணம் மரங்களுக்கு இடையிலேயே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
 அப்பொழுது அந்த இடத்தின் அமைதியை குலைப்பது போல திடீரென ஒரு பாடல் ஒலித்தது. அது சோகம் ததும்பும் பாடல். அது ஒரு ஒப்பாரி. அந்தப் பாடலினால் ஈர்க்கப்பட்ட சிவன் அங்கேயே நின்று அங்கு நடக்கும் செயல்களை கவனிக்க தொடங்கினான்.
 அவர்கள் நுழைந்திருந்த இடம் ஒரு இடுகாடு. பின் நாட்களில் இந்த உலகம் அந்த இடத்தை ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப் போகிறது.அந்த இடத்தில் காற்று ஈரமண்ணின் மணத்துடனும் காட்டு மல்லிகையின் நறுமணத்துடனும் கனத்திருந்தது. மருத நிலங்களின் வழியாக சிறு ஊர்வலம் அங்கே அமைதியாக நகர்ந்தது, மாலையின் தங்க ஒளி வளமான வயல்களின் மீது வெளிச்சத்தைப் பரப்பியது. 

அங்கிருந்த மக்கள் இறந்து பட்ட வீரன் ஒருவனை கௌரவிக்கக் கூடியிருந்தனர். அவன் தமிழ்பரணி ஆற்றின் கிழக்குக் கரையில் வாழ்ந்த ஒரு வீரன், தன் மக்களைக் காக்க போராடியவன். இப்போது அவன் தனது முன்னோர்களுடன் இணைய, பெரிய முதுமக்கள் தாழியில் இடம்பெறவிருந்தான்.இறந்துபட்ட அந்த மனிதனின் உடல் ஒரு பெரிய மண்பானையில் அமர வைக்கப்பட்டது. அந்த மண்பானை ஒரு முதுமக்கள் தாழி, மூத்தோரின் அடக்கப் பானை. அந்தத் தாழியானது ஒரு உயரமான மண் கலயம், அது மிகப் பெரியதாக இருந்தது, அந்தத் தாழியின் மேற்பரப்பு மினுமினுப்பாகப் பளபளத்தது. அது குயவர்களால் கவனமாக உருவாக்கப்பட்டது .

 அந்தப் பானையின் விளிம்புப் பகுதியில் வட்ட வடிவில் கைவிரல் பதித்த அச்சு முத்திரைகள் ஒரு வளையத்தை உருவாக்கி இருந்தன. அந்த முத்திரைகள் ஒரு வடிவத்தை உருவாக்கின. அது ஒரு யோனியைக் குறித்தது.

யோனி - பிறப்பின் புனித சின்னம்.

 கருப்பையில் இருந்து யோனி வழியாக இந்த உலகில் பிறந்தவன், திரும்பவும் இயற்கைத் தாயின் கருவறைக்குள் புக இருப்பதை, தாழியில் புதைக்கும் இந்த ஈமச்சடங்கு குறிப்பால் உணர்த்துகிறது . 
 
அவன் பயன்படுத்திய அரிய விலைமதிப்புமிக்க செம்புக் கணிச்சி, தெற்குக் கடற்கரையிலிருந்து வந்த முத்து வளையல்கள், ஆபரண மணிகள், தானியங்கள் நிரப்பப்பட்ட கருப்பு-சிவப்பு மண் பாண்டங்கள் போன்றவை தாழியில் வைக்கப்பட்டிருந்தன
அவனின் உடல் மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்ட துணியில் சுற்றப்பட்டு, முதுகு நிமிர்த்தப்பட்டு , தலை சற்று முன்னோக்கி வணங்கிய நிலையில் உட்கார வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் அவனது வீரத்தை சிறப்பிக்கும் நோக்கத்தில் அணிவிக்கப்பட்ட ஒரு மெல்லிய தங்கப் பட்டை இருந்தது. அது மட்டுமல்லாமல் அவனது மார்பை அலங்கரிக்கும் விதமாக முத்து மற்றும் கல் மணிகளின் மாலை காணப்பட்டது . 

பெண்கள் தங்கள் ஒப்பாரிப் பாடலைத் தொடங்கினர். அந்தப் பாடல் அவனது வீரத்தை பறைசாற்றுவதாக இருந்தது. ஒரு மூத்த பெண்; அரிசி நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டத்தை உள்ளே வைத்தார். அது அவனது ஆன்மாவை பசியாற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. 
 இறந்து பட்ட வீரனின் உற்ற நண்பன் ஒருவன் அவர்கள் இணைந்து வேட்டையாடிய ஒரு சிறுத்தையின் விரல் நகத்தால் செய்யப்பட்ட ஆபரண மணியை அவனுக்கு அருகில் மென்மையாக வைத்தான், அவன் பயணத்திற்கு ஒரு தோழனாக அது இருக்கும் என்று அவன் எண்ணி இருக்கக் கூடும்.

இரு ஆண்கள், பானையின் கழுத்தில் தடித்த மரக் கம்புகளைக் கட்டியிருந்தனர். ஒன்றாக, அவர்கள் அதை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் இறக்கினர். 
தாழியின் வாய்; கிண்ண வடிவில் இருந்த ஒரு மண் கலையத்தால் மூடப்பட்டது. தாழி இறக்கப்பட்ட குழி தற்போது மணலை கொண்டு மூடப்பட்டது. மேலே, ஒரு நடுகல் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நடுகல்லின் நிழல் மாலைச் சூரியனின் ஒளியில் நீண்டு காணப்பட்டது.

கிராம மூப்பர், வேம்பு மரத்தால் செதுக்கப்பட்ட கைத்தடியை ஊன்றி, சிவந்த அந்திவானத்தை நோக்கி தலையை உயர்த்தினார். 
“தமிழ்பரணியின் மகனே, நீ இந்த மண்ணின் காவலனாக திரும்பவும் இயற்கையின் கருவறைக்குள் திரும்புகிறாய். உன் ஆன்மா பழைய வேட்டையாடிகளும் வீரர்களும் உள்ள புலங்களில் நடக்கட்டும். பரணி கடலைச் சேரும் இடத்தில் வருடம் தோறும் உன் வழித்தோன்றல்களால் உனது புகழ் பாடப்படட்டும். உன் வழித்தோன்றல்களின் வாழ்வை முன்னோர்கள் ஆன்மாக்களுடன் இணைந்து நீ வழிநடத்துவாயாக ”.
அவரது குரல் வயது மூப்பின் நடுக்கத்திலும் உறுதியாக இருந்தது.
மக்கள் அவர் வார்த்தைகளை எதிரொலித்தனர், அவர்களின் வார்த்தைகள் அந்திக் காற்றின் சலசலப்புடன் கலந்தது. அந்த நடுகல் அமைதியாகவும், பெருமையுடனும் நின்றது, இந்த வீரன் மறக்கப்படமாட்டான் என அது உறுதியளித்தது. அந்த நடுகல்லின் கீழே, கருவறைக்குள் திரும்பிய அந்த வீரன் தன் மக்களின் அன்பளிப்புகளால் சூழப்பட்டு நித்திய விழிப்பில் அமர்ந்திருந்தான், அவனது ஆன்மா இறக்கவில்லை. அவனை நேசித்தவர்களின் நினைவுடன் பிணைந்திருந்தது.அது அவர்களின் வாழ்வினை வழி நடத்த உறுதி கொண்டது.

 அந்த வீரனின் ஆன்மா அழிவற்றது ... இறப்பு இல்லாதது....

 தமிழர்களை இறப்பு என்ற ஒன்றை நம்பவில்லை.

இறப்பு என்பது இல்லாமல் போவது.

 இயற்கையில் இருந்து உதித்த ஒரு உயிர் திரும்பவும் இயற்கையோடு கலந்து விட்டது என்பதே தமிழர்களின் நம்பிக்கை. 

 எனவேதான் தமிழர்கள் இறந்து விட்டான் என்று கூறுவதில்லை, இயற்கை எய்தினார் எனக் கூறுகிறார்கள்.
 
 அப்படி இயற்கையை எய்திய அந்த வீரனின் நினைவுகளோடு அவனது உற்றாரும் உறவினரும் இந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

 நடப்பவை அனைத்தையும் அடர்ந்த மரங்களுக்கு இடையில் நின்றிருந்த சிவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

 நடந்து கொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் அவனது மனதுக்குள் கலவையான எண்ணங்களை எழுப்பியபடி இருந்தன.
அவனது புலன்களும் மூன்றாம் கண்ணும் அவனை இந்த புனித நிலத்தைத் தாண்டி மேலும் தொலைவுக்குச் செல்லத் தூண்டின.
 
ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. 

 அந்த மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்தனர்.

அதனால் அவன் தனது காட்டை நோக்கி,, தனது தனிமையை நோக்கி.திரும்பினான்.

 அவன் காட்டை நோக்கி செல்ல முற்பட்ட அதே தருணத்தில் காட்டிற்குள் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

 அவள் தலையில் விறகுக்கட்டை சுமந்திருந்தாள். அவளது தோல் மழை பொழிந்த கரிசல் மண்ணைப் போல் இருந்தது. அந்தியின் கடைசி வெளிச்சத்தில் அந்தக் கருமை நிறத்தோல் மின்னியது.

அவள் நிலத்தின் தாளத்துடன் நகர்ந்தாள், அவளது மூச்சு, வெப்பத்தால் கனமாக இருந்தது.

 இருட்டுவதற்குள் அவள் வீடு திரும்ப வேண்டும். அவள் தனது நடையின் வேகத்தை அதிகரித்தாள். அப்போது வேகமாக கடந்து செல்லும் காளை ஒன்றின் குளம்பொலிச் சத்தத்தால் அவளது கவனம் திரும்பியது.
 சத்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்பினாள்.

 அவளுக்கு அருகில் ஒரு காளை வேகமாகக் கடந்து சென்றது. அதன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவனது மார்பு பாறையைப் போல அகலமாக இருந்தது, அவனது கைகால்கள் ஆவேசத்தையும் அழகையும் ஒருங்கே அறிந்த ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டவை போல இருந்தன. அவனது தோல் செம்மல் மலரின் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. ஒரு விசித்திரமான உலோக வளையம் , பாம்பு போல வடிவமைக்கப்பட்டு, அவனது கழுத்தைச் சுற்றியிருந்தது. ஒரு உடைந்த வெண்கல ஆயுதம் அவனது மடியில் கிடந்தது.

ஆனால் அவளை திகைப்பில் ஆழ்த்தியது அவனது கழுத்து.
 அந்தக் கழுத்து கருநீல வண்ணத்தைக் கொண்டிருந்தது.

அவனது கண்கள் பிறை வடிவில் தங்க நிறத்தில் ஜொலித்தன. அந்தக் கண்களில் அன்பும் அளப்பரியா தைரியமும் நிரம்பி இருந்தன .

  அந்த கண்களுக்கு மேல் உள்ள நெற்றியை அவள் பார்த்தாள். சேற்றுமண்ணை பூசி இருந்த நெற்றியில் புருவங்களுக்கு இடையே ஒரு மூன்றாவது கண் இருந்தது 

அது ஒருபோதும் நகராத கண்.
மற்ற கண்கள் மூடப்பட்டிருக்கும்போதும் பார்க்கக்கூடிய ஒரு கண்.

 சிவனும் அவளைப் பார்த்தான்!

அது ஒரு உவா நாள்— சூரியனும் சந்திரனும் ஒருங்கே காணப்படும் நாள்.

 காளையின் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் வலது புறத்தில் சூரியனும், இடது புறத்தில் சந்திரனும் 
காட்சியளித்தது.

 இந்தக் காட்சியினால் அவள் சற்று தடுமாறினாள்,   அவளது மூச்சு வியப்பில் நின்றது. அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் நிலம் அவனுக்காக நிறுத்தப்பட்டது போலிருந்தது, காற்று அமைதியானது, பறவைகள் தங்கள் பாடல்களை நிறுத்தின. அவள் ஒரு தெய்வீக அனுபவத்தால் சூழப்பட்டாள்.  அவளது கைகளில் இருந்து விறகு கட்டு நழுவியது.

 ஒரு இனம் புரியாத தெய்வீக உணர்வு உந்த; இரு கைகளையும் உயர்த்தி சிவனை அவள் வணங்கினாள். 

அந்த மனிதன் எதுவும் பேசவில்லை.
அவர்களது கண்கள் ஒரு கணம் சந்தித்தன.

 சிவனது கண்களில் அன்பு மட்டுமே ததும்பி இருந்தது 

 சிவன் நந்தனை கால்களால் மெலிதாகத் தீண்டினான். அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட நந்தன் அங்கிருந்து விரைவாக கிளம்பினான். அந்த கணத்தில் இந்த நிலத்தின் ஒரு புதிய அத்தியாயம் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.

அது நெருப்பிலும் மௌனத்திலும் பிறந்த உலோகத்தின் அத்தியாயம்.

 ரசவாதத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தப் போகும் அத்தியாயம் 

 அந்த அத்தியாயம் வெறும் வார்த்தைகளால் எழுதப்பட்டதல்ல,
 அது சிவனது துடிப்பறையின் புனித தாளத்தால் செதுக்கப்பட்டது,

 சிவன் இப்பொழுது இந்த உலகிற்கு போதிப்பதற்கு தயாராகி இருந்தான் . 
 அவரது போதனையால் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற பயன்கள் பற்பல

 தமிழர்கள் அவனிடமிருந்து...
 தமிழைக் கற்றனர்,
 மருத்துவத்தைக் கற்றனர்,
 வீரத்தைக் கற்றனர்,
 வாழும் முறையைக் கற்றனர்,
 அறிவியலைக் கற்றனர்,
 ஆன்மீகத்தைக் கற்றனர்,

 ஆனால் அதைவிட முக்கியமாக... அன்பையும் காதலையும் கற்றனர்.
 அது ஒன்றுதான் அவரது அனைத்து போதனைகளிலும் புனிதமான ஒன்று.

 அந்த மாசற்ற தூய அன்பின் விளைவால் தான் அவன் இறை நிலைக்கு உயர்ந்தான்.

 இறை நிலைக்கு உயர்ந்த அவரை மக்கள் இறைவனாக வழிபடத் தொடங்கினர். தான் இறைவனாக வழிபடப்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் இந்த உலகிற்கு தன்னை இறைவனாக முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அன்பின் சின்னமான ஆவுடையோடு கூடிய லிங்கத்தையே வழிபடக்கூடிய சின்னமாக அவர் முன்னிறுத்தினார். 

 யாராலும் காண இயலாத இறை நிலையை அன்பினால் மட்டுமே எளிதாக அடைய முடியும் என்பதே அவரது முக்கியமான போதனை.
--------

நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால், நல்ல சிவஞானத்தால் நான் அழிய- வல் அதனால், ஆரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படும் காண் ஆரேனும் காணாத அரன்

Friday, August 8, 2025

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் முறையாக, அவன் மீண்டும் பேசத் தொடங்கினான் — மனிதர்களுடன் அல்ல ஒரு காளையுடன்.

அவன் அதற்கு ‘நந்தன்’ என்று பெயர் வைத்தான். 

அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியது முதற்கொண்டு, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்தனர். மனிதனும் காளையும், காட்டின் பயணிகளாக, பசுக்களின் பாதுகாவலர்களாக இணைந்தே இருந்தனர்.

அவர்களுக்கு இடையே வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. பார்வைகள் மற்றும் அசைவுகள் மட்டுமே அவர்களுக்கு இடையில் தொடர்பு சாதனமாக இருந்தது. இருவரும் பார்வைகளால் பேசிக்கொண்டனர். இருவரும் கண் அசைவின் மூலமும் உடல் மொழியின் மூலமும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டனர். 

ஆனாலும் சிவனுக்கு ஏதோ ஒரு குறை இருந்தது. உடல் அசைவுகள் மூலம் அருகில் இருக்கும் பொழுது மட்டும்தான்  நந்தனுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.  சிவனால் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் வெறும் பார்வையாலும் அங்க அசைவுகளாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிவன் ஒலியின் மெல்லிய அதிர்வுகள் மூலம் தூரத்தில் இருக்கும் நந்தனுடன் தொடர்பு கொள்ள விரும்பினான். சிவன் நந்தனுடன் பேச விரும்பினான். ஆனால் இருவரின் பாஷைகளும் வேறு வேறாக இருந்தன.

 சிவன் எழுப்பிய வார்த்தைகள் வித்தியாசமானது, தனித்துவமானது. நந்தன் பேசிய மொழியோ வேறுவிதமானது. நந்தனின் மொழியும் சிவன் பேசிய தமிழைப் போல மிகப் பழமையானது.

 வராது வந்த மாமணி போல் சிவனின் வாழ்வில் வந்த இந்த நண்பனுடன் எப்படியேனும் பேசிவிட வேண்டும் என்று சிவன் விரும்பினான். 

 அது ஒரு வசந்த காலம். வனம் எங்கும் வசந்தம் நிலவியது. அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ்  சிவன் நந்தனுடன் அமர்ந்தான். 

 தூரத்தில் பசுக் கூட்டங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

 சிவன் நந்தனின் தோள்களில் சாய்ந்தவாறு படுத்திருந்தான்.

 

சிவனின் உதவியால் பிறந்த  சின்னஞ்சிறு கன்று; சிவனின் காலை நக்கியபடி அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பசி எடுத்தது போலும்... சிவனின் விரல்களை அது பால் குடிப்பது போல ஒலி எழுப்பிக் கொண்டே சப்ப ஆரம்பித்தது . 

தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, இந்த  சின்ன சப்தத்தை கேட்டு, தாயுணர்வால் தனது கன்றினை நோக்கி ஓடிவந்து பால் கொடுக்க ஆரம்பித்தது.

 இச்சிறிய ஓசை எப்படி அந்தத் தாயின்  ஆன்மாவை தொட்டது என்று சிவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

 சிந்தனையின் விளைவால்  சுற்றி இருந்த சூழலை அவன் உற்று கவனிக்க ஆரம்பித்தான். 

பசுக்களின் மெல்லிய நடை... 
மடியை முட்டி பால் குடிக்கும் கன்று... 
காற்றில் அசையும் இலைகள்...
பாறையில் மோதும் நதியலைகள்...

ஒவ்வொரு நகர்வும் காற்றில் அதிர்வலைகளை எழுப்பி, ஓசையை உற்பத்தி செய்தன.

சிவன் ஒவ்வொரு ஓசையையும் கூர்ந்து கவனித்தான்.

அவனுக்கு அருகிலேயே இருந்த நந்தனின் மூச்சுக்காற்றின் ஓசை, சீரிய தாள கதியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

மூக்குத் துவாரங்களை விரித்து நந்தன்  மூச்சு விடுவதை சிவா கவனிக்க ஆரம்பித்தான். சில புரிந்து கொள்ள முடியாத சப்தங்களையும் அந்தக் காளை அவ்வப்பொழுது எழுப்பி வந்தது.

அந்த புனிதமான அமைதியில், சிவனுக்கு ஒரு கேள்வி எழுந்தது.

"மொழி என்றால் என்ன?"

சிவா நந்தனின் சுவாசத்தை கவனித்தான். அவனது பெரிய வயிறு ஒவ்வொரு மூச்சிலும் ஆழமாகவும், மெதுவாகவும் உயர்ந்து தாழ்ந்தது. 

 ஓநாயைப் போன்ற  வேட்டையாடிகள் தங்கள் மார்பை அசைத்தே சுவாசத்தை மேற்கொண்டது; ஆனால் நந்தன் தன் வயிற்றை மட்டுமே அசைத்தான். 

 சிவன் தனது மூச்சை கவனிக்க ஆரம்பித்தான் . 

 சிவன் தன் மார்பை விரிய விட்டான்—அப்போது அவன் முக்கியமான ஒன்றை உணர்ந்தான். அவன் தனது மார்பை விரியவிட்ட பொழுது பிரபஞ்சத்தில் இருக்கும் காற்று அவனுக்குள் நுழைந்தது. அவன் நுரையீரல்களை நிரப்பியது. அது ஒரு மின்னோட்டம் போல அவனை உயிர்ப்பித்தது, 

"இது வெறும் காற்று அல்ல. இது உயிர்."

 பின்னர் சிவன் உள்ளே இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விட்டான்.

மூச்சு மென்மையாக, மலையிலிருந்து கடலுக்கு பாயும் ஆறு போல வெளியேறியது. அது அவனது முயற்சியின்றி தானாகவே நிகழ்ந்தது. 

சிவன் மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தான். பின்னர் வெளியிட முயன்றான்.  இப்பொழுது அவனை விட்டு வெளியேற முயன்ற மூச்சை நாசி வழியாக வெளியேற்றாமல், வாய் வழியாக வெளியேற்றினான். சுவாசக்காற்று  வாய் வழியாக வெளியேறும்  பொழுது; தனது தொண்டையில் அமையப்பெற்ற  குரல்வளை நாணை சிவன் அதிரவிட்டான்.

அவனது தொண்டை  தமருகம் போல செயல்பட்டது. 

 அவனது கழுத்தின் சிறிய மத்தளம் அதிரத்  தொடங்கியது.

 ஒலி பிறந்தது!

 பேச்சு என்பது கட்டுப்படுத்தப்பட்ட வெளி சுவாசம் என்பதை அறிந்து கொண்டான்.

இது இயல்பானது அல்ல. இது அவனது முயற்சியால் உருவாக்கப்பட்டது. 

இப்போது சிவன் திரும்பவும் நந்தனது சுவாசத்தை கவனித்தான்.

 நந்தன் தனது மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது அது முயற்சித்து உள்ளிழுத்தது. வெளியிடும் பொழுது முயற்சி இல்லாமல் வெளியே விட்டது.

 திடீரென்று நந்தன் மூக்கில் ஏதோ தூசி புகுந்தது போல அது தும்மியது.

 சிவன் சிந்தித்தான்...

 தும்மல் ஒரு வெளி சுவாசம்... இருமலைப் போலவே...

 ஒருமுறை தனக்குத் தானே இருமிப் பார்த்தான்...
 
எப்படி இருமல் என்பது வலுக்கட்டாய வெளி சுவாசமோ, அதேபோல் பேச்சு என்பதும் வலுக்கட்டாய வெளி சுவாசம் தான்.

 அப்போது, தொலைவில் ஒரு ஒலி - ஒரு ஓநாயின் ஊளைச் சத்தம், மரங்களுக்கு அப்பால்... மலைகளைத் தாண்டி தூரத்திலிருந்து கேட்டது.

சட்டென்று  நந்தனின் காதுகள் விரைத்துக் கொண்டன. அவனது உடல் இறுகியது. அவனது கண்கள் குறுகின.

 அந்த ஊளைச் சத்தத்திற்கு பதில் அளிப்பது போல்  நந்தன்  தனது இருப்பை நிறுவ ஒரு ஒலியை எழுப்பினான். அது ஒரு உரத்த ஊளைச் சத்தம் அல்ல. “ஹ்ர்ர்” என்ற குறுகிய ஒலி.

சிவா அந்த இரு உயிர்கள் ஏற்படுத்திய ஒலிகளைக் கவனித்தான்.

 ஊளைச் சத்தம் வலிமையானது. நீண்ட தூரத்திற்கு பயணிக்க கூடியது.

ஆனால் “ஹ்ர்ர்” என்ற ஒலி குறுகியது. அது ஒரு குறைந்த காற்று வெளியீடு. அதை வெளியிடுவதற்கு குறைந்த ஆற்றலே நந்தனால் செலவிடப்பட்டது . 

 சிவா புரிந்து கொள்ளத் தொடங்கினான்.

 நன்றாக வாயைக் குவித்து, குவிப்பிற்கு ஏற்றார் போல் நாக்கை இலேசாக உள் இழுத்து, காற்றைக் கொஞ்சம் வேகமாக சிவன்  வெளியேற்றினான். மிடற்றில் இருக்கும் நாண்கள் அதிந்தன. அதனால்  ‘ஊ’ என்கின்ற ஒலி எழுப்பப்பட்டது. அந்த ஓசையினூடே அவனது ஆற்றலும் வெளியேறுவதை சிவன் உணர்ந்தான். 

ஊளை விடும் பொழுது; மூச்சானது வாய் வழியாக வெளியேறியது. நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்று; பிற பேச்சு உறுப்புகளால் எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாமல்; சுதந்திரமாக வெளிவந்தது.

 மத்தளம் அடிக்கும் பொழுது; எவ்வாறு தோல் கருவியின் தோல் அதிர்ந்து ஒலியை எழுப்புகிறதோ; அதேபோல்  நுரையீரலில் இருந்து வெளிவரும் காற்றானது; குரல்வளை நாணை அதிரச்செய்து, அந்த அதிர்வு உதடு குவிப்பதால் குறுக்கப்பட்டு ஊளை சத்தமாகக் கேட்கிறது என சிவன் புரிந்து கொண்டான். 

 அப்போது அங்கே ஒரு செம்மார்பு குக்குருவான் பறவை  உயர்ந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டு 'டங்கு' 'டங்கு' என்று சம்மட்டியால் இரும்பை அடிப்பது போல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது . தொலைவிலிருந்து வேறொரு பறவை அதே போல் ஒலி எழுப்பி இந்தப் பறவையை தொடர்பு கொண்டது. இப்படியாக தொலைவில் இருக்கும் பறவைகளோடு குக்குருவான் ஒலியின் அதிர்வுகளால் தொடர்பு கொள்கின்றது என்று அறிந்து கொண்டான்.

அந்த டங்கு டங்கு ஒலியிலேயே 200க்கும் மேற்பட்ட மாற்றங்களை சிவன் கவனித்தான். இதே போல வெவ்வேறு அதிர்வலைகளைத் தான் தனது பறையும் எழுப்புகிறது என்பது அவனுக்கு விளங்கியது. 

 ஒவ்வொரு வகை அதிர்வும் ஒவ்வொரு வகை எழுத்து!!

 பிறகு ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கத் தொடங்கினான்.

சிவன் நேராக எழுந்து அமர்ந்தான். அவனது முதுகுத்தண்டு நேராக இருந்தது. பிறகு ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தான். சிவன் தனது வயிற்றை மேல்புறமாக உந்தித் தள்ளினான். உதரவிதானம் நுரையீரலை மேல்புறமாக அழுத்தி காற்றை வெளியேற்றியது.

வாயின் வழி வெளியேறும் காற்றினை; குரல்வளை நாணின் துணையால்  அதிரச் செய்து; ஓசை வெளிப்படும் பொழுது, வாயை அகலமாக்கினான் சிவன்.  

 ‘அ’ சப்தம் பிறந்தது!

 இதழ்களை விரித்தும் குவித்தும் குறுக்கியும் பல்வகை எழுத்துக்களை   உச்சரித்தான். 'அ இ உ எ ஒ' எனும் ஒலிகள் பிறந்தன.

 ‘அ இ உ எ ஒ’ எனும் குறுகிய ஒலிகளை நீட்டித்து ஒலித்துப் பார்த்தான் …
 ‘ஆ ஈ ஊ ஏ ஓ’ எனும் நெடில் ஓசைகள் ஒலித்தன. 

 இந்த உயிர் எழுத்துக்கள் நந்தனின் செவியைத் தீண்டின. அந்த அதிர்வு செவிப்பறை வழியாக நந்தனின் மூளைக்கு கடத்தப்பட்டது. இவன் ஏதோ பேச வருகிறான் என்பது போல காதுகளை சிவனை நோக்கித் திருப்பி நந்தன்  கவனித்தது.

 குரல் நாணால் உருவாக்கப்படும் அதிர்வலைகள்; காற்று ஊடகத்தால் கடத்தப் பட்டு;  செவிப்பறையை அதிரச் செய்து,  அந்த ஒலியை நந்தன் உணர்ந்து கொண்டதை சிவன் அறிந்தான்.
 
சுவாசத்தை குரல்வளையால் அதிர வைத்து, ஒரு ஆன்மாவின் எண்ணத்தை மற்றொரு ஆன்மாவுக்கு கடத்துவதே மொழி என்று அவன் உணர ஆரம்பித்தான்.

அதிகப்படியான ‘ஊளை’ போன்ற வெளி சுவாசத்தை ஏற்படுத்தும் பொழுது அவன் சிறிது  களைப்படைய தொடங்கினான், ஊளை சப்தம்,  மூளைக்கு செல்லும் பிராணனைக் குறைத்தது. 

‘ஊ’ நெடில், இதை உச்சரிக்க அதிக பிராணன் தேவை படுகிறது!

இவ்வகை எழுத்துக்களை சிவன் உச்சரித்த பொழுது, அவனது உயிராற்றல் அதிகப்படியாக செலவிடப்பட்டதை உணர்ந்தான்.

உயிராற்றலை அதிகம் வேண்டும் இவை உயிர் எழுத்துக்கள் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

 பின்னர் புலியைப் போல 'உர்' என்று உறுமிப் பார்த்தான்.

உறுமும் போது எழுப்பப்படும் ‘உ’ குறில், இது குறைந்த வளி செலவினால் எழுப்பப்படும் ஒலி. அதுவும் ‘ர்’ எனும் ஒலியைக் கொண்டு வெளிசுவாசத்தில் தடை ஏற்படுத்தும் போது, வளி செலவு இன்னும் மட்டுப்படுகிறது என்று சிவனுக்கு புரிந்தது .

நாக்கு, உதடு, அண்ணம், வாய் மற்றும் பற்கள் உதவியால் ஓசைக்கு தடை போட்டு க் ச் ப் போன்ற ஓசைகளை உருவாக்கினான்.

“ப்,” “ம்,” என்ற எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது, அந்த எழுத்துக்கள் ஆற்றலை உடலில் (மெய்யில்) இறுக்கி பிடித்து வைத்தன. அவை உயிர் செலவை கட்டுப்படுத்தின... ஆற்றலை உடலுக்குள் சேமித்தன. 

உயிராற்றலால் பிறந்தது உயிர் எழுத்து, உடல்(மெய்) என்னும் கருவியின் துணையால் உருவானது மெய்யெழுத்து என்று சிவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். 

பின்னர் உயிரை உடலோடு இணைத்தான். மொழி உயிர் பெற்றது.

 உயிரும் மெய்யும் சேர்ந்ததால் உருவானதே உயிர்மெய் எழுத்து என்று வகுத்துக்கொண்டான். 

 இவ்வாறு அவன் ஒவ்வொரு எழுத்தையும் நினைவு கூர்ந்தான், மறு கண்டுபிடிப்பு செய்து கொண்டிருந்தான்.

ஒவ்வொரு எழுத்து...
ஒவ்வொரு அதிர்வு...
மறந்துபோன மத்தளத்தின் ஒவ்வொரு துடிப்பு...

 இவ்வனைத்தும் சிவனின் பழைய புதைந்த நினைவுகளில் இருந்து வெளிவரத் துவங்கின. நீண்ட காலத்திற்கு முன்பு அவனது அன்னை அவனுக்கு பயிற்றுவித்தவற்றை ஒவ்வொன்றாக  அவன் நினைவு கூர்ந்தான். 

எழுத்து வாரியாக அவன் உச்சரிக்கத் தொடங்கினான்.

அவன் பல்வேறு எழுத்தின் கலவைகளை வெவ்வேறு வகையில் உச்சரித்து பார்க்கத் தொடங்கினான்... அவற்றை தனது உள்ளுணர்வால் ஆராய்ந்தான். 

 எழுத்துக்களை உச்சரிக்க செலவிடப்படும் மூச்சைக் கொண்டும், அவை உச்சரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் கொண்டும்  அவற்றை அவன் எடை போட்டான். பின்னர் அதை தனது மத்தளத்தில் ஒலித்துப் பார்த்தான்.

சேயோன் செப்பிட்ட தமிழ் மொழியை, சிவன் தன்னை அறியாமல் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

 அவன் மெருகேற்றிய தமிழ்; பிற்காலத்தில் அவனது சீடனின் சீடனால் இலக்கணமாக வகுக்கப்பட்டது. 
-----------
உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
 எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யா.
 - தொல்காப்பியர்.
-------
 நாட்கள் பல நகர்ந்தன. பின்னர் குளிர்காலம் தொடங்கியது. அப்படிப்பட்ட ஒரு குளிர் இரவில் தூரத்தில் இருந்த நந்தனின் சிறு உறுமல்  கூட சிவனுக்கு எளிதாகப் புலனாகியது.

 சிவன் தனது புலன்களை கூர்த்தீட்டினான். சூழலை காதுகளால் பார்க்க ஆரம்பித்தான்.

குளிர் இரவுகளில் நாகத்தின் மெல்லிய ஒலி கூட சிவனுக்கு எளிதாகக் கேட்டது.

 நாகம் ஏற்படுத்திய ஒலியை சிவனும் எழுப்பிப் பார்த்தான்.

அது வாயை அகலமாக்காத "ஸ்" என்ற ஒலி.

'ஸ்’ என்பது நாக்கை நீட்டி, பற்களால் தடை போட்டு, நாகம் போல் எழுப்பப்படும் ஒலி. 

ஸ் ஷ்... என்பன போன்ற எழுத்துக்கள் குளிர் பிரதேசத்திற்கான மெல்லிய ஒலிகள் என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

 தனது மத்தளத்தின் வலது பக்கம் 'ழ'கரத்தையும் இடது பக்கம் 'ஸ'கரத்தையும் ஒலித்துப் பார்த்து அவற்றை எடை போட்டான்.

 அவன் இடப்பக்கம் எழுப்பிய பறை ஒலிகள் வட இந்தியாவில் பாணினியால் பிற்காலத்தில் இலக்கணமாக வகுக்கப்பட்டன. 

 இப்பொழுது எழுத்துக்களை  அவன் பறையாலும் வாயாலும் உச்சரித்துப் பார்க்கத் தொடங்கினான்.

 நாவால் மேலண்ணத்தைத் தொட்டு 
' ஸ் ' என்ற ஒலியை உச்சரிக்க முயற்சித்தான்.

 சப்தம் எதுவும் எழவில்லை.

 ஆனால் மேலண்ணத்தை அவன் தொடும் போது புருவமத்தி குறுகுறுத்தது.

 அவனது தாய் கற்பித்த ழகரம் மனதில் மின்னலென பளிச்சிட்டது.

 ழகரத்தை உச்சரித்தான். 

பின்னர் புருவ மத்தியை கவனித்து ஒரு மோன நிலைக்குச் சென்றான்.

அவன் அந்த  நிலையில் இருக்கும் பொழுது, பிரபஞ்சத்துடன் ஒன்று கலந்தது போல் தோன்றியது.

 பிரபஞ்சம் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியது.

பின்னர் உள்ளுணர்வு உந்த, மெதுவாக, அவன் “அ…” என்று உச்சரித்தான்.

'அ' என்பது அடிப்பகுதியிலிருந்து எழுந்த ஒரு ஒலியின் அதிர்வு. அந்த அதிர்வு  ஒரு நாகம் போல மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறியது.

 அதைத்தொடர்ந்து “உ…”என்று உச்சரித்தான். அப்போது அதிர்வானது அவனது மார்பு வழியாக வளைந்து, நெருப்பு போல உயர்ந்தது.

இறுதியாக “ம்…” என்று முடித்தான்.

 அப்பொழுது எழுப்பப்பட்ட அந்த ஒலி சிவனின் கபாலத்தின் உச்சியில் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது .

 மூன்று ஒலிகளையும் ஒன்றிணைத்து   சிவன் உச்சரித்தான்  —ஓம்— என்னும் ஒலி பிறந்தது 

அ + உ+ ம் என்பதன் இணைப்பே 'ஓம்' எனும் ஒலி.

 அதை உச்சரித்துக் கொண்டே உச்சந்தலையின் அதிர்வுகளை  சிவன் கவனிக்க ஆரம்பித்தான்.

 அந்த அதிர்வு பிரபஞ்சத்தின் அதிர்வோடு இணைந்தது.

"எழுத்துக்கள் வெறும் ஓசைகள் அல்ல—அவை அதிர்வுகள், ஆன்மாவின் திறவுகோல்கள்."

 இப்பொழுது அவன் வெளிப்படுத்திய அதிர்வுகள்  புனிதத்தைக் கடத்தியபடி வனமெங்கும் படர்ந்து பரவியது.

 அந்த அதிர்வினை நோக்கி காட்டின் விலங்குகள் ஈர்க்கப்பட்டன.

 காட்டின் விளிம்பிலிருந்து மான்கள் தோன்றின. ஒரு மயில் சிவனை நோக்கி நெருங்கி வந்தது. பய உணர்ச்சி ஏதுமில்லாமல் ஆச்சரியத்தில் அது தன் தோகையை  விரித்தது. பறவைகள் அமைதியாயின. எங்கிருந்தோ பறந்து வந்த குருவிகளும், தாவிக் குதித்து  வந்த காட்டு முயல்களும் சிவனைச் சூழ்ந்தன. நாகம் ஒன்று சிவனது கழுத்தின் மீது படர்ந்தது.

 சிவன் சற்றும் அசையவில்லை. 

அவனது குரல்வளை அதிர்வுகளை எழுப்பியபடி இருந்து கொண்டிருந்தது.
வனத்தின் ஆன்மாக்கள் அனைத்தும்  அவனைச் சூழ்ந்து கொண்டன. 

 அவன் 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

  காடு அதை அமைதியாகக் கேட்டது.
-----------

 ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்

ங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை

ஓங்கார சீவ பரசிவ ரூபமே


Friday, August 1, 2025

மழவெள்ளை விடையான் (ஆதியோகி: அத்தியாயம் 8)

அது ஒரு கோடை மாலை. தொலைவில், யானைகள் அடர்ந்த காட்டில் சாம்பல் நிற ஆறு போல மெதுவாக நகர்ந்தன. முன்னால், கூட்டத்தைத் தலைமை தாங்கிய பெண் யானை; தன் துதிக்கையை உயர்த்தி, நீர் இருக்கும் திசையை முகர ஆரம்பித்தது. 

 நீர் இருக்கும் திசையை நோக்கி தனது கூட்டத்தை அது வழி நடத்திச் சென்றது.

அவை முன்னேறும்போது, முட்புதர்களையும் செடிகளையும் கிழித்து, பரந்த திறந்தவெளிகளை அந்த யானைகள் ஏற்படுத்திச் சென்றது. அவற்றின் பாதையில், யானையின் கழிவுகள் எரு வடிவில் வெதுவெதுப்பாக தரையெங்கும் விழுந்தன. 

 அந்த யானைகள் தாகமுள்ள மண்ணில் வளத்தை விதைத்தன.

காலப்போக்கில், அந்தப் பாதை ஒரு  புல்வெளியாக மாறியது.

 அப்படிப்பட்ட ஒரு புல்வெளியில் பசுக்கள், பசுமையையும் மணத்தையும் பின்தொடர்ந்து, யானை பாதையில் மேய்ந்து, மெதுவாக காட்டின் விளிம்பிற்குள் நுழைந்தன. அவற்றின் குளம்புகள் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை சந்திக்கும் இடத்தில் வந்து நின்றன. அந்த இடத்தில் முல்லை நிலம் குறிஞ்சி நிலத்தை ஆரத் தழுவியது  போலத் தோன்றியது.

 பசுக்கள் கூட்டத்துடன் சிவனும் நடந்தான். 

பசுக்கள் அவனது இருப்பை உணர்ந்தன.  அவை அதை வரவேற்றன. அவனது இருப்பு அவைகளுக்கு மிகவும் பாதுகாப்பு அளித்தது.

 மேய்ந்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு பசு மட்டும் திடீரென நகராமல் பின்தங்கத் தொடங்கியது. 

 அந்தப் பசுவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. அது சினையுற்றிருந்தது.

 அதன் கால்கள் தள்ளாடின , நடப்பதற்கு  தயங்கின. 

 சிறிது நேரத்தில் அந்த பசுவின் நீர்க் குடம் உடைந்து கீழே உள்ள மண்ணை நனைத்தது.

 அந்தப் பசு ஒரு முனகல் ஒலியை வெளிப்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் தலைவியாக இருந்த வயதான ஒரு பசு அவளை நோக்கி முன்னேறியது. கன்றை ஈனும் பசுவினை  அது சுற்றி வந்தது. நாவால் அதன் நெற்றியை வருடியது.

 மற்றேனைய பசுக்களும் அந்த பசுவிற்கு ஆதரவாக சூழ்ந்து கொண்டன.

பனிக்குடம் உடைந்ததும் பசுவின் வாலின் கீழ் இருந்து, ஒரு சிறிய கன்றினது முகம் தோன்றியது. ஆனால் கன்றின் உடல் பின்தொடரவில்லை.அது சிக்கியிருந்தது. 

 தாய்ப் பசு முடிந்த மட்டும் முக்கி கன்றினை வெளித்தள்ளப் பார்த்தாள்.

 அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது. அவள் பக்கவாட்டில் சரிந்தாள்.

அவளது மூச்சு வேகமாகவும் மெலிந்ததாகவும் வந்தது.

தலைவிப் பசு அவளருகில் இருந்தாள், இன்னும் நக்கிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.

சிவா அமைதியாக, உறுதியாக முன்னோக்கி நகர்ந்தான்.அவன் பசுவுக்கு அருகில் மண்டியிட்டு, அவளது அவளது அறைக்குள் கையை நுழைத்து பசுவின் பிஞ்சுக் கால்களை தேடத் துவங்கினான். 

அவன் தனது கைகளை உள்ளே நழுவவிட்டு, மடங்கி இருந்த கால்களை லாவகமாக நிமிர்த்தி வெளியே இழுக்கத் தொடங்கினான். இரத்தமும் பிரசவ திரவங்களும் அவனது கைகளை நினைத்தன.

 திடீரென்று காற்றில் மெல்லியதொரு சலனம்...

அவனது மூன்றாவது கண் துடித்தது...

 பசுக் கூட்டங்கள் பயத்தில் சிதறி ஓடத் துவங்கின.

 செந்நாய்கள் வித்தியாசமான ஒளியை எழுப்பிய படி அவர்களை சூழத் தொடங்கியது.

 அவற்றின் மணம் வலுவாக இருந்தது.

 அவற்றின் பசி இன்னும் வலுவாக இருந்தது.

 நிலைமையை கவலைக்கிடமாக்கும் வண்ணம் மற்றொரு  அழையா விருந்தாளியும் அந்த இடத்தில் நுழைந்தது.

தொலைவில் உள்ள  மூங்கில் நிழல்களால் மறைக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து ஒரு உருவம் தோன்றியது.

புலி!!!

சிவனின் பழைய எதிரி... காட்டின் புதிய அரசன்.

 இரத்த  வாடை அதை இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும்.

 அதன் கண்களின் முன்பு காட்டின் இதயத்தில் வெளிப்படையாக வைக்கப்பட்ட ஒரு உணவு தயாராக இருந்தது.

சிவா உறைந்தான்.

 தூரத்தில் பசுக்களின் அலறல்...

 அருகிலே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தள்ளாடும் ஒரு தாய்...

 அவனது சூலம் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  

அவனுக்கு முன்னால் புலி தாழ்ந்து குனிந்தது. பின்னங்கால்களை பாய்வதற்குத் தயாராக அழுத்தி ஊன்றியது.

காடு அமைதியாகியது. 

பறவைகள் கூட மௌனமாகின.

 ஜனனம் , மரணம்...

 வேட்டையாடிகள், பாதுகாவலன்...

 இவற்றிற்கு இடையே உள்ள நிச்சயமற்ற சுவாசம்  அங்கே அந்த இடத்தைச் சூழ்ந்தது.

 பசுக்களின் கூட்டம் எப்படியும் தப்பி விடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது.

 நிற்கதியாய் நிற்கும் இந்த பசுவிற்கு  அவனது துணை அவசியம் .

 அடர்ந்த மூங்கில் காடுகளுக்கு இடையில்  இருந்து, புலி திறந்தவெளியில் அடியெடுத்து வைத்தது. 

 சிவனின் தங்க நிறத்தில் ஒளிரும் கண்கள் அந்த புலியின் கண்களுடன் பொருந்தின.

சிவா அசையவில்லை. 

 அவனது திரிசூலம் கைக்கு எட்டும் தொலைவில் தான் இருந்தது. ஆனால் அதை எடுப்பதற்கு தற்பொழுது அவகாசம் இல்லை.

அவன் புலிக்கும் பிரசவிக்கும் பசுவுக்கும் இடையில் தன்னை நிறுத்தினான்.

சிவாவின் இதயம் உரத்துத் துடித்தது, ஆனால் அவன் உறுதியாக இருந்தான்.

காடு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

 உலர்ந்த காற்றில் மரணத்தின் ஏவலாள் போல புலி பாய்ந்தது.

சிவாவின் உடல் உள்ளுணர்வின் அறிவுறுத்தலில் விலகியது. விலகிய வேகத்தில் அவன் தனது முஷ்டியை புலியின் தாடையில் பதித்தான்  அவனது தந்தை அவன் வழியாக அந்தப் புலியை தாக்கியது போல இருந்தது அந்தத் தாக்குதல்.

 அந்த ஒரு தாக்குதல் புலியை சற்றே தள்ளி புழுதியிலும் உலர்ந்த இலைகளிலும் சறுக்கி விழச் செய்தது

அந்த கணம் மிக சுருக்கமாக இருந்தது.சிவா திரும்பி, திரிசூலத்தை நோக்கித் தாவினான்.

ஆனால் புலி அவனைவிட வேகமாக இருந்தது. அது மீண்டும் அவனை நோக்கிப் பாய்ந்தது, அவனது காலை பிடித்தது. அவனது காலில் புலியின் பற்கள் ஆழமாகப் பதிந்தன. 

அவன் விழுந்தான், அவனது இரத்தம் கீழே இருந்த சருகுகளை நனைத்தது.

 அவர்கள் மல்லுக்கட்டினர்.

 ஒளிரும் தெய்வீகக் கண்களைக் கொண்ட இளைஞன் ஒருவனும் காட்டின் அரசனும் கட்டி உருண்டனர்.

 நகங்கள் அவனது தோலைக் கிழித்தன. அவனது முஷ்டிகள் புலியின் எலும்பை பதம் பார்த்தன. 

 அங்கு நடந்த போராட்டம் இரு உயிர்களுக்கு இடையே ஆனது மட்டுமல்ல...

 இரு பழமையான உயிர்கள் நித்திய சோதனையில் ஒன்றிணைந்து துடித்தது போல இருந்தது அந்த காட்சி.

 சிவன் தனது பலம் கொண்ட மட்டும் கால்களால் உதைத்து புலியை வீசி எறிந்தான்.

 அவனது கைகள் திரிசூலத்தை கைப்பற்றின.

 அந்தத் திரிசூலம் அவனது உன்னத  கண்டுபிடிப்பு. 

அது அவனது பாதுகாவலன்.

 அவனது துணைவன்.

 எதிர்க்கவியலா மாபெரும் அஸ்திரம்.

 திரிசூலத்தை ஏந்திய தைரியத்தில் காட்டின் அரசனை எதிர்க்க அவன் தயாரானான்.

 புலி  கவ்விய கால்களில் இருந்து இன்னும் குருதி வழிந்து கொண்டிருந்தது. சதைத் துணுக்குகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு கால் கிட்டத்தட்ட பயனற்றதாக ஆகிவிட்டது.

 அவன் சூலத்தை ஊன்றி ஒற்றை காலை பூமியில் நன்றாக அழுத்தி மற்றொரு காலை சற்றே தொங்கவிட்டபடி உறுதியாக நின்றான்.

 பிறகு பாய்ந்து வரும் புலியின் முகத்தை   நோக்கி சூலத்தை விட்டெறிந்தான்

 பாய்ந்து வந்து கொண்டிருந்த புலி சற்றே தனது முகத்தை நகர்த்தியது.

 புலி முழுதாகத் தப்பவில்லை...

 முகத்தின் பக்கவாட்டில் விரைந்து சென்ற சூலமானது  அதன் ஒற்றைக் கண்ணை கிழிக்கத் தவிறவில்லை.

 பக்கவாட்டில் காற்றைக் கிழித்துச் சென்ற அந்த சூலம் பின்னால் இருந்த பாறையில் மோதியது. 

 சூலத்தின் ஒரு பல் கண்ணாடித் துண்டைப் போல்  நொறுங்கியது

 ஒரு காலத்தில் ஒளிர்ந்த ஆயுதம், இப்போது முனைகள்  உடைந்து கிடந்தது.

சிவா மூச்சு வாங்கினான்.அவனது மனம் தடுமாறியது.

 அந்த ஒரு தெய்வீக கணத்தில் அவனது தந்தையின் குரல் அவனுக்குள் ஒரு அசரீரி போல ஒலித்தது

“ வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல .”

சிவா எழுந்தான். தோள்பட்டை, கால்,  ஆகியவற்றில் இரத்தம் வடிந்தது.புலி, காயமடைந்து, ஒரு கண் குருடாகி, இப்போது ஆவேசத்துடன் உறுமியது.

அது மீண்டும் முன்பை விட பயங்கரமாகப் பாய்ந்தது.

 அப்பொழுது அங்கே இடி முழங்குவது போல  குளம்புகளின் ஒலி பூமியில் அதிர்ந்தது.

 சூலத்தின் முனைகளை விட கூர்மையான கொம்புகளை உடைய அந்த வெள்ளை நிறக்  காளை, கூற்றுவனைப் போல் பாய்ந்து வந்தது.

குளம்புகள் இடியாக ஒலித்தன. கொம்புகள் மின்னின.

 ஒரே பாய்ச்சலில் காளை புலியை குத்தித் தள்ளியது.

புலி தூக்கி வீசப்பட்டது, 

இந்த முறை கர்ஜனையின்றி அது விழுந்து. தோல்வியை ஒப்புக்கொண்டது போல தடுமாறி ஓடியது .

திறந்தவெளி மௌனமாகியது.

 ரத்தம் வழியும் தேகத்துடன் ஒரு இளைஞனும்... உக்கிரத்தின் உருவெடுத்த ஒரு காளையும் நேருக்கு நேர் நின்றனர்.

 தூரத்தில் செந்நாய்களின் கெக்களிப்பும் பசுக்களின் கதறலும் சன்னமாகக் கேட்டது

 பசுக்களுக்கு ஆபத்து!!!

 சிவா தாமதிக்கவில்லை சட்றென்று தனது திரிசூலத்தை எடுத்துக் கொண்டு பசுக்களை நோக்கி ஓடத் தொடங்கினான்.

 ஒவ்வொரு முறை அவன் பாதத்தை பூமியில் வைக்கும் பொழுது கிழிபட்ட அந்தக் காலின் சதைகளில் இருந்து குருதி வழிந்தது

 அவன் அதை பொருட்படுத்தாமல் விந்தி விந்தி ஓடினான்.

காளை அவன் தடுமாறுவதைப் பார்த்தது.

பின்னர், மௌனமாக, அது அவனை நோக்கித் திரும்பியது.தன் உடலைத் தாழ்த்தியது.தன் தலையைக் குனிந்தது.

 அது வார்த்தைகள் ஏதுமற்ற மௌனமான அழைப்பு.


சிவன் காளையின் கண்களைப் பார்த்தான்.

 அந்தப் பார்வையில்...

பயமில்லை...

சந்தேகமில்லை...

 பரஸ்பர நம்பிக்கை உணர்வு மட்டுமே அங்கே நிலவியது.

அவன் அந்தக் காளையின் மீது ஏறினான்.

 சிவனின் இரத்தம் தோய்ந்த கைகள் காளையின் பெரிய திமில் மேட்டைப் பற்றியது, 

 சிவன் உடைந்த திரிசூலத்தை கையில் உயர்த்தினான்

 இருவரும் பசுக்களின் கூச்சல் சத்தத்தை நோக்கி புயல் வேகத்தில் நகரத் தொடங்கினர்.

 கீழே இடியின் உருவில் காளை

 மேலே புயலின் உருவில் சிவன்

அவர்களது பயணம் அங்கு தொடங்கியது.

அது ஒரு முடிவற்ற பயணம்.

உலகம் அதை  என்றென்றும் நினைவு கூறும்.

 வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான பந்தமாக மட்டுமல்ல... ஆனால் ஏதோ நித்தியமான ஒன்றின் தொடக்கமாக.

அந்த நாளில், பசுக்கூட்டம் இரட்சிக்கப்பட்டது.  உலகைக் காண தவித்துக் கொண்டிருந்த கன்று  எந்தவித சேதாரமும் இன்றி வெளியே எடுக்கப்பட்டது, 

 அன்று பிறந்தது வெறும் பசுவின் கன்று மட்டுமல்ல, இந்த நிலத்தின் தெய்வீகக் கதையில் ஒரு புதிய அத்தியாயம். 


நெருப்பும் காற்றும்...

 சூரியனும் சந்திரனும்...

காளையும் கடவுளும்...

 ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பித்த ஒரு அத்தியாயம். 

 அது இந்த உலகத்தின்  பாதுகாவலர்களுடைய நித்தியப் பயணத்தின் தொடக்கம்.

----------

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச்சூழப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில் சூழ்பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனையல்லாது உறுதுணைமற்று அறியேனே.


----


Tuesday, July 29, 2025

நஞ்சேயமுதாய் நயந்தவன் (ஆதியோகி: அத்தியாயம் 7)

ஒரு அந்தி வேளையில், சிவன் பொருநையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த அந்த நிலம் செப்புத் தாதுக்கள் நிறைந்ததாக இருந்தது.அவனது நாடி, பதற்றமான பறவையின் இறக்கைகள் போல படபடத்தது. தரைக்கு கீழ் இருந்து ஒரு காந்தப்புலன் அவனைத் தூண்ட அவனது மூன்றாவது கண் துடித்தது.

 பூமியில் உள்ள காந்தப் புலனை உணரும் இந்த ஆற்றல் பலருக்கு தெய்வ சக்தியாக தோன்றலாம்.

 ஆனால் வில்சன் நோயுடன் பிறந்த சிவனுக்கு இது ஆபத்தின் எச்சரிக்கை.

 செம்பினை போர் கடவுளின் உலோகம் என்பார்கள். ஆனால் அது அவனுக்கு பித்தத்தை தூண்டியது, அவனது இரத்தத்தில் நெருப்பைப் போல பாய்ந்தது, நரம்புகளை எரியச் செய்தது.

  வயது அதிகமாக அதிகமாக, அவனுக்கு வில்சன் நோயின் நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் வேறு வெளிப்படத் தொடங்கின. அவனின் இந்த வாத  அறிகுறிகள் மிகவும் கொடுமையானவை.

 அவன் அந்த மணல் பரப்பு முழுவதும் அலைந்து திரிந்தான். கால் வைக்கும் இடமெங்கும் செம்பின் துடிப்பை உணர்ந்தான். நரம்புகளுக்குள் நெருப்பு படர்ந்தது போல் இருந்தது.

 ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவன் பேரமைதியை உணர்ந்தான். அந்த இடத்தில் தன் உள்ளங்கையை மண்ணில் பதித்தான். அங்கு அவனது மூன்றாவது கண்ணின் துடிப்பு அடங்கியது. அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த அழல் அமைதியடைந்தது. அவனது புலன்கள் கூர்மையாகின. அவன் அந்த சூழலை உற்று கவனித்தான்.
 அந்த இடம் முழுவதும் ஊமத்தைச் செடிகள் பூத்துக் குலுங்கின.

 பலருக்கு அவை விஷச் செடிகள். உயிரினங்கள் அவற்றை ஒருபோதும் தீண்டத் துணியாது. ஆனால் அவை பூமியில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான உலோகத்தை தம்முள் இழுத்து வைத்து பூமியை தூய்மைப்படுத்துபவை.பிற்காலத்தைய அறிஞர்கள் இதை phytoremediation என்று அழைப்பார்கள்.

பலருக்கு பிடிக்காத ஊமத்தை சிவனுக்கு உகந்ததாக இருந்தது. அது அவனுக்கு புனிதமான ஒன்று.

 "இவை விஷத்தை குடிக்கின்றன. இவை நிலத்தை தூய்மைப்படுத்துகின்றன,” என்று தனக்குள் அவன் கூறிக் கொண்டான் .
 அந்தக் க்ஷணத்தில் அவனுக்கு இயற்கையின் ரகசியம் ஒன்று புலப்படத் தொடங்கியது. விஷம் என அழைக்கப்படுவது மருந்தாகலாம். மருந்தென அழைக்கப்படுவது விஷமாகலாம். 

 விஷத்திற்கும் மருந்திற்கும் இடையேயான சமநிலைக் கோட்டை அவன் புரிந்து கொள்ளத் துவங்கினான். அழிவுக்கும் இணக்கத்திற்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அது என்று அவனுக்கு உணர்த்தப்பட்டது . 

 சிவனுக்கு தற்போது இரண்டு தேவைகள் இருந்தன ஒன்று வலிமையான உலோகம் மற்றொன்று அவனது நரம்பியல் அறிகுறிகளுக்கான மருந்து.

 மின்னலென தோன்றி மறையும் பழைய நினைவுகளால் வழிநடத்தப்பட்ட அவன் உலைகளையும் ஊதுகுழல்களையும் உருவாக்கி பலவகை தாதுக்களை உருக்க ஆரம்பித்தான்.

 அவன் அந்த நிலப்பரப்பு முழுவதும் தேடி அலைந்தும் செப்பின் தாதுக்கள் மட்டுமே அவனுக்கு கிட்டின. அதில் ஒரு தாதுவை கையில் எடுக்கும் போது அவனுக்கு சற்றே வித்தியாசமாக ஏதோ ஒன்று புலப்பட்டது.

 அவன் கண்டெடுத்தது ஒரு விசித்திரமான கல். அது பச்சை கோடுகளுடன் இருந்தது. பாறைகளின் கீழ் உள்ள ஒரு ஓடையில் இருந்து அதை எடுத்திருந்தான், விளக்க முடியாத ஒரு உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்ட அவன் அதை உலையில் எறிந்தான்.நெருப்பு சீறியது. நாகங்கள் தப்பி ஓடுவது போல நெருப்புப் பொறிகள் நாற்புறமும் பறந்தன. கலவை உருகியபோது, அது இயல்புக்கு மாறாக உயிர்ப்புடன் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அவன் அதை திரிசூல வடிவ அச்சில் ஊற்றியபோது, அது திரவ ஆவி போல ஓடியது.

 அது குளிர்ந்தபோது, அவன் திகைத்தான். அவன் செய்த அந்தத் திரிசூலம் செம்பினைப் போல் சிவப்பாக இல்லை—அது வெள்ளி விளிம்புடன் ஒளிர்ந்தது, அவன் இதற்கு முன் உருவாக்கிய எதையும் விட கடினமாக, கூர்மையாக, துல்லியமாக இருந்தது. 
அவன் ஆர்சனிக்கல் வெண்கலத்தை உருவாக்கியிருந்தான்.
 

அவன் அதை சோதித்தான். முழு பலத்துடன் வீசப்பட்ட அந்தத் திரிசூலம் ஒரு மென்மையான கல்லைப் பிளந்தது. 
 அதை பிரியத்துடன் தனது அருகிலேயே வைத்துக் கொண்டான். அதன் ஆற்றலில் குறை ஏதுமில்லை. ஆனால் அதை அருகில் வைத்திருக்கும் பொழுது அவனது இரவுகள் அமைதியின்மையால் நிறைந்தன. அவன் கனவுகளில் இருமினான். அவனது உறுப்புகள் நடுங்கின. அவனது இதயம் இயல்புக்கு மாறான தாளங்களுடன் துடித்தது. அவனுள் உள்ள நாடிகள் அவனை தெளிவாக எச்சரித்தன.

“இது சமநிலை இல்லை. இது ஒரு விஷம்.”

அர்சனிக் ஒரு விஷம். அது வாத நோயை உண்டாக்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் அறிவியல் அறிஞர்கள்; இந்த உலோகம் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் வாத அறிகுறிகளை 'ஆர்சனிக்கோசிஸ்' என்று அழைக்கப் போகின்றனர் . 

 உலகம் முழுவதும் கற்காலத்திற்கு அடுத்தபடியாக செம்பின் காலம் தொடங்கியது. உலகம் முழுவதும் செம்பு யுகத்தின் காலம் மிக நீண்டு காணப்பட்டது. இதற்கடுத்து துவங்கிய காலம் வெண்கல யுகத்தின் காலம் .செம்புடன் இயற்கையாக கிடைக்கும் ஆர்சனிக்கை செம்புடன் சேர்த்து உருக்கும்பொழுது அர்சனிக்கல் வெண்கலம் கிடைக்கும்.

 ஆர்சனிக்கல் வெண்கலத்தை மக்கள் கண்டுபிடித்த பிறகு அதன் பாதிப்பை உணர்வதற்கு அவர்களுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.

 கடவுளர்களின் கதைகள் என மக்களால் பேசப்படுபவை அனைத்தும் ஒரு காலத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மக்களின் கதைகளே.

  நெருப்பு மற்றும் உலோகத்துடன் தொடர்புடைய மேலை நாடுகளின் கடவுள்களில், கிரேக்க கடவுள் ஹீஃபஸ்டஸ் மற்றும் ரோமன் கடவுள் வல்கன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் வாத அறிகுறியுடையவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். வானத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டதன் விளைவாக இப்படி ஆனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும், இவர்கள் கடவுள்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கவசங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவர்களாக விளங்கினர். 

 பல நாகரீகங்களில்  “வாத நோயுடன் இருக்கும் உலோகக் கலைஞன்” என்ற உருவம் ஏன் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு ஒரு சாத்தியமான விஞ்ஞான விளக்கம் ஆர்செனிக் நச்சுத்தன்மை (Arsenicosis) அல்லது உலோக நச்சுத்தன்மை என்பதாகும்.

 பழமையான உலோக உருக்க நடவடிக்கைகளில் ஆர்செனிக், நாகம் (lead) போன்ற நச்சுக் கனிமங்கள் அதிகமாக இருந்தன. இவைகள் உடலில் தேங்கி, நரம்பியல் பாதிப்புகள், தசை சிதைவு, போன்ற உடல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பாதிப்புகள் நிறைந்த அந்தக் அந்த காலத்தைய உலோகக் கலைஞர்களைை  புனிதப்படுத்தும் வகையில் புராணங்களில் வாத நோய் உடைய கடவுள்கள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
 
ஆனால் தென்னிந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த இந்தக் கடவுள் பிரபஞ்சத்துடன் பேசியவன். தனக்கு உள்ளே கடந்து சென்று தன் உயிருடன் பேசியவன். உலகத்தையும் உடலையும் மூன்றாம் கண் கொண்டு பார்த்தவன்.
 அவனது பேராற்றலால் கற்காலத்திலிருந்து செம்பு காலத்தையும் வெண்கல காலத்தையும் விரல் விட்டு எண்ணுவதற்குள் தமிழகம் கடந்து விட்டது.

 சிவன் என நாம் அழைக்கும் அவன் இன்னும் கடவுள் பதவியை அடையவில்லை. அதை அடையும் மட்டிலும் அவன் தனது அலைச்சலை நிறுத்தப் போவதில்லை.

அவன் மீண்டும் ஒரு வலிமையான உலோகத்தை தேடி அலைந்தான். இந்த முறை அவனது சாபத்தின் பரிசான மூன்றாம் கண்ணால் வழிநடத்தப்பட்டான். அவன் மனிதக் கண்களுக்கு கட்புலனாகும் ஒளி அலை வரிசைகளுக்கு உட்பட்ட வெளிச்சத்தைக் கொண்டு தேடவில்லை. உணர்வால், பூமிக்கு அடியில் உள்ள உலோகங்களின் காந்த ஓட்டத்தை பின்தொடர்ந்தான்.

 அலைச்சலின் விளைவாக மழை ஆசிர்வதித்த மலைகளில், அவன் தகரத்தைக் கண்டான்.அதிலிருந்து, அவன் தகர வெண்கலத்தை உருவாக்கினான். ஆனால் அவன் ஆர்சனிக்கை முற்றிலும் கைவிடவில்லை. மாறாக, அதை ஆராய்ந்தான். சமநிலைப்படுத்தினான். மாற்றினான். சிறிய அளவுகளில் அவற்றை விஷச் செடிகள் என அழைக்கப்படும் ஊமத்தை எருக்கம் செடி போன்றவற்றின் இலையுடன் தேய்த்து, புனித சாம்பலுடன் கலந்து—அவன் மாத்திரைகளை உருவாக்கினான்.

 அர்சனிக் எனப்படும் வெண் பாசானம் வாதத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் வெண் பாஷாணத்தைக் கொண்டு அவனது வாத அறிகுறிகளை மட்டுப்படுத்திக் கொண்டான்.

 முள்ளை முள்ளால் எடுத்தான்.

 அவனிடம் தற்பொழுது வாதத்தை மட்டுப்படுத்தக்கூடிய மருந்தும் இருக்கிறது, ஆற்றல்மிகு  உலோக ஆயுதமும் இருக்கிறது.

 யாராலும் எதிர்க்க முடியாத ஒரு சூலத்தை உருவாக்கிய பெருமிதத்தில் சிவன் தனது பசுக் கூட்டத்திற்கு அருகில் அவற்றை கண்காணித்தபடியே உலவி வரத் தொடங்கினான். அவனைப் போலவே பேராற்றலுடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த வெள்ளைக் காளை சிவனை இன்னும் நம்பியது போலத் தெரியவில்லை. சிவனை ஒரு சந்தேக கண்ணுடனே அது பார்த்துக் கொண்டிருந்தது.

 ஒரு நாள் சிறிய கன்று ஒன்று அரவம் தீண்டி வாயில் நுரை தள்ள துடிதுடித்துக் கொண்டிருந்தது . அதன் உறுப்புகள் இறுகின. அதன் மூச்சு மெலிந்தது.
சிவா அமைதியாக மண்டியிட்டான். அவன் ஒரு கருப்பு மாத்திரையை நசுக்கி, கன்றின் நாக்கின் கீழ் வைத்தான்.

 சிவன் நஞ்சுக்களின் கடவுள். நஞ்சுக்கள் அவனது பேச்சிற்கு கட்டுப்பட்டு நின்றன. நஞ்சினை அமுதமாக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

 சிவனின் கரம் பட்ட அந்த கன்று அசைந்தது. பின்னர் மூச்சு விட்டது. எழுந்து நின்று அசைந்து சென்று தனது தாயின் மடியில் பாலைக் குடித்தது.

 இவை அனைத்தையும் தூரத்திலிருந்து அந்த வெள்ளை நிறக் காளை பார்த்துக் கொண்டே இருந்தது.

 இந்நிகழ்விற்கு பிறகு சிவனை அது சந்தேகத்துடன் பார்க்கவில்லை.

ஆண்டுகள் செல்லச் செல்ல, சிவனின் கண்டுபிடிப்புகள் மேலும் அதிகரித்தன. அவன் ஈயத்தைக் கண்டறிந்தான்.
 அதைத் தொட்ட பொழுது அவனது புலன்கள் பின்வாங்கின. அதுவும் ஒரு விஷம். ஆனால் பல்வகை உலோகங்களை சேர்த்து செய்யப்படும் கலவைகளில் அதன் விஷம் மட்டுப் பட்டது. 

அவன் தங்கத்தைக் கண்டான். ஒளிரும் இயல்புடைய, என்றுமே மங்காத அந்த உலோகம் கட்டமைப்பில் வலிமையற்றது, ஆனால் ஆன்மீகமாக ரீதியில் ஆற்றல் உடைய உலோகம் அது என்று உணர்ந்து கொண்டான்.  அது அதிர்வுகளை அமைதிப்படுத்தியது. உலோக கலவைகளை உறுதிப்படுத்தியது. ஆன்மாவை மயக்கியது.

ஒரு நாள், அவன் இன்னும் பெரிய ஏதோ ஒன்றினை கால்களுக்கு கீழ் உணர்ந்தான். அது அவனது நரம்புகளை எல்லாவற்றையும் தூண்டியது, பூமிக்கு அடியில் மின்னல் ஊர்வது போல அவனுக்குத் தோன்றியது . 

 முல்லை நிலத்திற்கு அப்பால் இருந்த மனித குடியிருப்புகள் நிறைந்த மருத நிலத்தில் அந்த உணர்வு மையம் கொண்டது.

 அந்த உலோகத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் அவன் தயாராகவில்லை. அந்த உலோகத்தை உருக்குவதற்கு முன் அவன் சில புயல்களை சந்திக்க வேண்டி இருந்தது.

 சிவன் உலோகவியலை வெறும் ஆற்றலுக்கு பயன்படும் கருவிகளை உருவாக்க மட்டும் பயன்படுத்தவில்லை. அவனுக்கு, அது ஒரு சடங்கு, மருந்து. 
சமநிலை பேண உதவும் ஒரு அற்புதக் கலையாக உலோகவியல் அவனுக்கு இருந்தது.

 அவனைப் பொறுத்தவரையில் உலை ஒரு கோயில். பட்டறை, ஒரு பலிபீடம்.நெருப்பு, ஒரு தூய்மைப்படுத்தி.

அவனது கலவைகள் வெறும் போர்க் கருவிகள் இல்லை. அவை எதிர்காலத்தின் மருந்துகள்.
அவனது சின்னங்களான திரிசூலம், பாம்பு, பிழம்பு போன்றவை வெறும் புராணக் கதைகளில் வரும் குறியீடுகள் அல்ல. அவைகளே தமிழக நாகரிகத்தின் ஆணிவேர்.

இந்த புனித நெருப்பின் கரங்களில் இருந்து தான் தமிழகம் முன்னேறியது. மற்ற நாகரீக மக்கள்  இருளில் தடுமாறும்போது, அவனது மக்கள் உடலையும் உள்ளத்தையும் இயற்கையையும் அவனது வழிகாட்டுதல்களால் சமநிலைப்படுத்தினர். மூலிகைகளாலும் பஸ்பங்களாலும் நோய்களை குணப்படுத்தினர், அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒரே தராசில் நிறுத்தினர் .

 இதன் விளைவாக தமிழகம் உலகுக்கே வழிகாட்டியாக விளங்கியது.

 வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அவனை வானுறையும் தெய்வத்துக்குச் சமமாய் வைத்துத் தொழுதது தமிழகம்.
---------

இருள்கெட அருளும் இறைவா போற்றி 
 தளர்ந்தே னடியேன் தமியேன் போற்றி 
களங்கொளக் கருத அருளாய் போற்றி 
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி 
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 

----

Friday, July 25, 2025

மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோன் (ஆதியோகி: அத்தியாயம் 6)

அது ஒரு சுட்டெரிக்கும் பகல் பொழுது. சுற்றிலும் புதியதோர் உலகம். 

சிவா எல்லாவற்றையும்  புதிதாகப் பிறந்த கன்றைப் போலப் பார்த்தான்.

ஒவ்வொரு ஒலியின் அதிர்வு, காற்றில் தவழ்ந்து வரும் மணம், ஒளியின் கீற்று, வெப்பத்தின் சூடு  ஆகியவை அவனுக்கு மிகவும் அந்நியமாகவும், புதியதாகவும் இருந்தன. 

அவனது கரம் தமருகப்பறை கட்டப்பட்டிருந்த திரிசூலத்தை இறுகப் பற்றியிருந்தது. அது அவனது மறந்துபோன வாழ்க்கையின் மிச்சமிருக்கும் ஒரே எச்சம்.

சூரியன் அவனது வெளிறிய தோலை எரித்தது.
 
பசியோ அவனது வயிற்றைக் கிள்ளியது. 

திடீரென, மங்கலான ஒரு உருவம் எரியும் நெருப்பின் நடுவில் இருந்து மகனே என்று கத்தியது போன்ற உணர்வு அவனுக்குள் எழுந்தது ... அதைத்தொடர்ந்து முகத்தை நோக்கி பாயும் ஒரு புலியின் உருவம்... 

அவன் தடுமாறிப் பின்வாங்கினான், மூச்சு அதிகரித்தது. திரிசூலத்தை இறுகப் பற்றினான். நதியின் அலைகள் அவனது கால்களை தீண்டியபடி இருந்தன. திடீரென்று மின்னலைப் போல் நீரிலிருந்து ஒரு மீன் தாவியது.

 கானகத்தின் பழம்பெரும் வேட்டையாடிகளின் வாரிசான அவன் உள்ளுணர்வு உந்துதலால் கையில் இருந்த சூலத்தை மீனை நோக்கி விட்டெறிந்தான்.

அதன் மழுங்கிய முனைகள் மீனைக் கொல்லத் தவறின. 

பசி நீடித்தது.

 அப்போது காற்றில் இருந்து சுகந்த மணம் ஒன்று அவனைச் சுண்டி இழுத்தது. அந்த மணம் அருகில் இருந்த மாமரம் ஒன்றிலிருந்து வந்தது. அவன் மாமரத்தை உற்று நோக்கினான். அந்த மரத்தில் இலைகளுக்கு நடுவில் பச்சை நிறத்தில் இலைகளைப் போலவே மாங்காய்கள் இருந்தன. அவை தன்னை யாரும் தீண்டக் கூடாது என்று உருமறைப்பில் இருந்தன. அவற்றை சிவன் புசித்த பொழுது புளிப்புச் சுவை நாவில் ஏறியது.  

 அவன் மாமரத்தை உற்றுப் பார்த்தான். தங்க நிறத்தில் சில பழங்கள் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு சுகந்த மணத்தால் அவனை ஈர்த்தது. கண்களால் பார்த்ததை கைகளால் பறித்தான். கண்களுக்கு கீழ் இருந்த நாசியினால் மாம்பழத்தை நுகர்ந்தான். தன்னை புசி என்று சுகந்த மணத்தால் மாம்பழம் அவனை அழைத்தது. வாயில் எச்சில் சுரந்தது. அதை ஆவலுடன் கடித்தான் மதுரம் நாவைத் தீண்டியது. வயிற்றில் எரிந்து கொண்டிருந்த அழலுக்கு அந்த மாம்பழம் உணவாக அமைந்தது. அவனது உடல் உயிர் பெற்றது.

  எது பாதுகாப்பானது, எது பாதுகாப்பற்றது என்று அவனுக்கு உள்ளுணர்வு அறிவுறுத்தியது. மனதில் ஆழத்தில் எங்கோ ஒரு மூளையிலிருந்து அந்த அறிவானது அவனுக்கு வெளிப்பட்டு தூண்டப்பட்டது. நினைவிலிருந்து அல்ல, சிந்தனையை விட பழமையான ஒரு இடத்திலிருந்து அது கிளர்ந்து எழுந்தது .

  பழைய நினைவுகள் அவனை முற்றிலுமாக கைவிடவில்லை. அவ்வப்போது ஏதோ ஒன்று அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. இருப்பினும் அவன் உலகை புதிதாக படிக்கத் தொடங்கினான்.

 அவன் அந்தச் சூழலை உற்று கவனித்தான். அந்த முல்லைவனம் பல்வகை உயிரினங்களால் நிரம்பி இருந்தது. அந்த விலங்குகள் ஒவ்வொன்றையும் அவன் உற்று நோக்கினான்.

 குரங்குகளுக்கு அவனைப் போல் கைகள் இருந்தன. பறவைகளுக்கு கைகளுக்கு பதில் இறக்கைகள் இருந்தன.

 மரங்களும் செடிகளும் தங்கள் நுனியில் தருவதை  இவ்விரு வகை உயிர்களும் உண்டன. மேய்வன எல்லாம் இலைகளை உண்டன. கொல்லுண்ணி விலங்குகள் இவை அனைத்தையும் வேட்டையாடி உண்டது.

 வயதான மரங்களும் செடிகளும் பறவைகளும் விலங்குகளும் மடிந்து பூமியில் விழுந்தன.

 உயிரிழந்த அனைத்தையும் பூமி உண்டது. அந்த பூமியில் இருந்து மீண்டும் உயிர்கள் ஜனித்தன. 

இந்த சுழற்சி புனிதமானது. இதுவே இந்த உலகை நிலையாக சுழல வைக்கிறது என்பதை சிவன் புரிந்து கொண்டான்.

ஒவ்வொரு காலையும் சிவனுக்கு ஒரு புதிய பிறப்பாக இருந்தது. அங்கே அவனுடன் பேசுவோர் யாரும் இல்லை, வழிநடத்துவாரும் யாருமில்லை. அவன் தன்னிடமே பேசிக் கொண்டான். தன்னைத்தானே வழிநடத்திக் கொண்டான். தனக்குத்தானே கற்பித்துக் கொண்டான்.

சிவன் அந்த காட்டில் வெறுமனே உயிர் பிழைத்திருப்பவனாக இருந்திருக்கவில்லை. மனிதர்கள் காண மறந்த புதியதொரு பரிணாமத்தின் வழி அவன் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவன் கற்கத் தொடங்கினான். அவனுக்கு அவனே கற்பித்துக் கொள்ளவும் தொடங்கினான்.

 அவனது கற்பிதங்கள் புதிதானவை. அவனது கற்பிதங்கள் புரட்சிகரமானவை. 

 அவன் கற்ற அந்தக் கற்பிதங்கள் இந்த உலகை வழி நடத்தப் போகிறது . அந்த கற்பித்தங்கள் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் வாழ்வில் எதிரொலிக்கப் போகிறது .

ஆனால் இப்போதைக்கு, அவன் உடலிடமும் இந்த பிரபஞ்சத்திடமும் பாடங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல, அவன் உள்நோக்கி திரும்பினான்—அவனது உடலை கவனித்தான்: அதன் நடுக்கங்கள், துடிப்புகள், தாளங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு புரிபடத் தொடங்கியது.

அவன் உண்ட பழங்கள்தான் அவனுக்கு உயிர் ஊட்டின. அந்த உணவே அவனது உடலின் எரிபொருளாக இருந்தது. அதிலிருந்து அவனுக்கு அழல் என்னும் ஆற்றல் கிடைத்தது. ஆனால் அந்த அழல் சூரியனிடமிருந்து வந்தது. பூமி நீர் காற்று இவை அனைத்தும் ஒன்றிணைந்து உணவை உருவாக்கின. உணவானது சூரியனின் பிழம்பை அதற்குள் பிடித்து வைத்திருந்தது.

 வானில் எரியும் அதே பிழம்பு தனக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிவதை அவன் உணர்ந்தான்.

 பிரபஞ்சத்தால் அவன் வாழ்ந்தான் . அவனால் பிரபஞ்சமும் வாழ்ந்தது .

 அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருக்கிறது பிண்டத்தில் இருப்பது தான் அண்டத்திலும் இருக்கிறது என்ற பேருண்மையை அவன் உணர்ந்தான்.

அவன் ஓடும்போது, வெப்பம் உருவாகியது.அவனது மூச்சு அதிகரித்தது. அழல் அவனது மார்பில் பாய்ந்தது. இந்த நெருப்புக்கு பித்தம் என பெயர் வைத்தான் அந்த பித்தன்.

 அந்தப் பித்தமானது சூரியன் உச்சிக்கு வரும் பொழுது உடலில் உச்சம் கண்டது. அவன் போராடும் பொழுதும், அவன் ஆவேசம் கொள்ளும் பொழுதும் அது தூண்டப்பட்டது. இரவின் பொழுதும், தூக்கத்தின் பொழுதும், மௌனத்தின் பின்பும் அது மட்டுப்பட்டது. 

பருவங்கள் மாறும்போது, அவனது உடலில் சமநிலையும் மாறியது.உணவு, இயக்கம், உணர்ச்சி— அனைத்தையும் அவன் தனது உடலின் அழலைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினான்.

 அந்த அழலை குளிர்விக்க, அவன் ஆற்று சேற்றை நெற்றியில், மார்பில், தோள்களில் முழுவதும் பூசினான்.

 அப்பொழுது எழுந்த உணர்வு அவனுக்கு பழக்கப்பட்ட உணர்வாக இருந்தது.
 "சேற்றுடலோன்... மாயாவி... " என்ற சிறுவர்களின் கெக்களிப்பு அவனது கபாலத்திற்குள் ஒலித்தது. அவனது விலாக்கள் நினைவில் இறுகின. முகங்கள், குரல்கள், நிழல்கள் அவனது மனதில் அலையாடின.  அவனது கடந்த காலம் இலைகளின் வழியாக உடைந்த ஒளி போல மின்னியது.ஆனால் எதுவும் அவனுக்கு தெளிவாக நினைவில்லை. 

 ஏதோ ஒரு இனம் புரியாத வலி அவனுக்குள் எழுந்தது.
இருப்பினும், அவன் முன்னோக்கி நடந்தான். ஆனால் இந்த முறை, அவன் தெளிவாக இருந்தான். அவனது நடையில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.

வெளியே உள்ள வெப்பமும், உள்ளே உள்ள அழலும் —எதிரிகள் இல்லை. அவை தான் உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன எனும் உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.

 கற்களை எடுத்து காய்ந்த கருக்குகளை குவித்து நெருப்பினை மூட்டினான்.

தோலை சுட்டெரிக்கும் அதே நெருப்பு உணவை சமைத்தது, உலோகத்தை வடிவமைத்தது, நட்சத்திரங்களை ஒளிரச் செய்தது.அவனது கடந்த காலத்தை எரித்த அதே பிழம்பு இப்போது அவனது பாதையை ஒளிரச் செய்தது.

இவை தான் இந்த உடலின் விதிகள் என அவனுக்கு புரிந்தது. இந்த விதிகள் கல்லில் செதுக்கப்படவில்லை, ஆனால் அவனது சதையில் மூச்சில் குருதியில் பிரித்தறிய முடியாதபடி கலந்து அந்த விதிகள் அவனை வழி நடத்தியபடி இருந்தன.

அவன் மூச்சை ஆராய்ந்தான். அது நெருப்புக்கு எரிபொருளாக இருந்தது. அந்த எரிபொருள் உடலில் அதிகமாக எரியும் பொழுது அவனது கை மணிக்கட்டில் உள்ள தமணி வித்தியாசமாக துடித்தது. அதன் துடிப்பு அவனது தமருகப்பறையின் தாளத்துடன் பொருந்தியது. அவன் தனது பறையை இசைக்க ஆரம்பித்தான்.

அவன் அதை வாசிக்கும்போது, எழுத்துக்கள் அவனது கண்ணில் மின்னின. அந்த எழுத்துக்கள் அவனுக்கு மிகவும் பழக்கமானவை... அவை மிகவும் பழமையானவை.

ஒரு நாள், வியர்வை அவனது செப்புக் காப்புடன் கலந்தது. செம்பு அவனது உடலுக்குள் தோல் வழி ஊடுருவியது.
ஒரு விசித்திரமான வெப்பம் அவனது கையில் ஒரு உயிருள்ள புழு போல ஊர்ந்தது. அதை நாடி என்று அவன் அழைத்தான்.
 
சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி துடித்தது. சிலவற்றை உண்ணும் பொழுது அந்த நாடி தணிந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அவன் ஆராய முற்பட்டான்.

 செம்புக் காப்பு வியர்வையில் நனையும் பொழுதெல்லாம் அவனுக்கு பித்தம் அதிகரித்தது.அந்த செம்பை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு பிம்பம் அவனது மனதில் நிழலாடியது —அவனது தந்தை அதை உருக்குவது, சுத்தியால் அடிப்பது, வடிவமைப்பது....

 பதறிய அவன், காப்பை கழற்றினான். ஒரு காலத்தில் பாதுகாப்பின் சின்னமாக இருந்த செப்பு, இப்போது உள்ளே எரியும் நெருப்பை தூண்டியது. அது இனி அவனுக்கு உதவப் போவதில்லை —அது அவனை பலவீனப்படுத்தியது.

ஆனால் அவன் இன்னுமொரு உலோகத்தை அணிந்திருந்தான்.  நாகத்தின் உருவத்தை கொண்ட ஒரு வெள்ளி வளையம் அவனது கழுத்தை சுற்றியிருந்தது. அவனது தந்தை அவனுக்கு அணிவித்த அன்பின் அடையாளம்.

 அது அவனை குளிர்விக்கத் தவறவில்லை. ஆனால் அவனது வெளிறிய தோலில், விசித்திரமான மாற்றத்தை அது ஏற்படுத்தியிருந்தது.

 அவன் செப்புக்காப்பை அணிந்திருந்த கையில் பச்சை நிற கறை ஒன்று தோலின் மேல் படிந்திருந்தது
, காலப்போக்கில் அந்தக் கறை மெதுவாக மறைந்தது. 

ஆனால் வெள்ளியினால் ஏற்படுத்தப்பட்ட கறை ஆழமானது. ஒரு நுட்பமான நீல நிறம் அவனது தோலில் படிய ஆரம்பித்தது.

 எவ்வளவு கழுவினாலும் தோலை விட்டு நீங்காத நீல நிறக் கறை அது.

 இதை தற்போதைய மருத்துவர்கள் கண்டால் localized argyria என்று அழைப்பார்கள். அது தீங்கற்ற ஒரு தழும்பு என்று கூறி விடுவார்கள்.

 ஆனால் அக்காலத்தைய மனிதர்களுக்கு நீல நிறம் என்பது மிகவும் அரிதான ஒன்று.

 கழுத்தில் இருக்கும் இந்த நீலக்கரையின் காரணமாக நீலகண்டன், மணிமிடற்றோன், மிடற்றண்ணல் என்று பல்வகை பெயர்களால் அவனை  அழைக்க போகிறார்கள்.

 உலோகங்களுக்கும் அவனுக்கும் இடையிலான தொடர்பை பக்கங்களால் விளக்கி விட முடியாது.

 செம்பு காப்பினை அவன் தவிர்த்து விட்டான் ஆனாலும் அவன் கையில் ஏந்தி இருந்த திரிசூலமும் செம்பால் ஆனது. 
  அது தணிக்க வேண்டிய பிழம்பை அவனுள் தூண்டியது. மேலும் அது வளைந்து காணப்பட்டது. அது..
அவனது பழைய வாழ்வில் நேர்ந்த  துன்பத்தின் அடையாளமும் கூட.

 அதை இனிமேலும் சுமக்க அவன் தயாராக இல்லை. அவனுக்கு இன்னும் உறுதியான உலோகம் தேவைப்பட்டது.

 செம்பு மட்டும் அவனுக்குள் இருந்த பித்தத்தைத் தூண்டவில்லை. சிலவகை உணவுகளும் அவனது பித்தத்தைத் தூண்டின.

புளிப்பு, உப்பு, மிகுந்த உணவுகளை அவன் சுவைக்கும்போதெல்லாம், அவனது நாடி எச்சரிக்கை முரசு போல துடித்தது. அதிக மூத்திரம் சயம் முதலியவன் உண்டானது.
அவனது வெளிரிய தோல் மஞ்சள் நிறமாக மாறியது.அவனது கண்கள் மங்கின. தூக்கம் மெல்லியதாகவும் அமைதியற்றதாகவும் ஆனது. தினவெடுத்த அவனது தோள்களில் இருந்து வலிமை நழுவியது.
அவனது வாய் புளித்தது. அவனது புலன்கள் இருளாக மங்கின.
அவன் அறிகுறிகளை அடையாளம் கண்டான்: அவை சமநிலையின்மையின் குறியீடுகள்.

 அவனை இந்த அறிகுறிகள் அச்சப்படுத்தவில்லை.
 அவனது உடல் இந்த அறிகுறிகளால் தோல்வி அடையவில்லை.  

அவன் கேட்கத் தொடங்கினான். அவன் சமநிலையை பாவிக்கத் தொடங்கினான்.

தசைகள் மூச்சுக்காற்றை கொண்டு உணவை எரித்த பொழுது உடலில் அழல் உயர்ந்தது எனவே, அவன் தனது வழக்கங்களை மாற்றிக்கொண்டான்.
சூரியனின் கீழ் அவன் தனது உணவுகளை உண்டு விட்டு பகலில் இளைப்பாறினான். 

அவன் நிலவின் கீழ் நகர்ந்தான்—குளிர்ந்த, அமைதியான, இரவினையே அவன் மிகவும் விரும்பினான்.
 அவன் ஒரு இரவாடியாக மாறினான்.
 இரவு அவனது எரியும் தோலை ஆற்றியது.காற்று ஒரு புதிய மொழியில் பேசியது.நட்சத்திரங்கள் ரகசியங்களுடன் மின்னின.மௌனம் குரல்களை விட உரத்து பாடியது.

 காரிருளில் அவன் கண்களால் பார்ப்பதை விட புலன்களால் அந்த வனத்தை  அறிய முற்பட்டான்.

 வௌவால்களைப் போல, அவன் காதுகளால் உலகைப் பார்த்தான்.

பாம்புகளைப் போல, அவன் அதிர்வுகளை உணர்ந்தான்.

யானைகளைப் போல, அவன் தொலைவில் உள்ள நீரை முகர்ந்தான்.

அவனது புருவங்களுக்கு இடையே உள்ள காயம் இப்பொழுது குணமாகிவிட்டது. அது மூடி இருக்கும் ஒரு கண்ணைப் போல் தோற்றம் அளித்தது. இதன் காரணமாக நெற்றிக்கண்ணன்,
நுதற்கண்ணன், கண்ணுதல் என மக்கள் அவனை அழைக்கப் போகின்றனர்.

 மற்ற புலன்களால் அவன் பார்க்கும் பொழுது அவனது மூன்றாவது கண் மெல்லிதாக அதிர ஆரம்பித்தது.
 தமருகப்பறையின் அதிர்வினை அது வெளிப்படுத்தியது. 

 அப்பொழுது அவனது மனதில் ஒரு எழுத்து எதிரொலித்தது: 
 
அது ழகரம்.

 "மகனே நாவால் மேல் அண்ணத்தைத் தொட்டு இந்த எழுத்தை உச்சரி." மூளைக்குள் அவனது அன்னையின் குரல் ஒரு அசரீரி போல ஒலித்தது...

அவன் ழகரத்தை உச்சரித்தான் .உள்ளே ஏதோ மின்னல் போன்ற ஒன்று துடித்தது. அது அவனை வழிநடத்தியது.

அவன் இந்தப் பிரபஞ்சத்தை மூன்றாவது கண்ணால் பார்க்க ஆரம்பித்தான்.

 பூமியின் கீழ் இருக்கும் உலோகங்கள்; அதிர்வுகள் மூலம் அவனுக்கு தங்களது இருப்பிடத்தை அறிவித்தன . 

 அவனது கண்கள் வலசைப்பறவைகளைப்போல காந்தப்புலனை காணத்தொடங்கியது. அதிலும் அவனது மூன்றாவது கண் கிட்டத்தட்ட  மடகாஸ்கர் ஸ்விஃப்ட் உயிரினத்தின் மூன்றாவது கண்ணைப் போல இயங்கியது. 

 அந்த மூன்றாம் கண்ணானது அவனுக்கு ஒரு திசைகாட்டி, ஒரு கடிகாரம், ஒரு நாட்காட்டி, ஒரு மாய உணர்கருவி. 

அவனது மூன்றாவது கண்ணில் உடலின் அழலானது மையம் கொண்டு ஜோதி போல எரியத்துவங்கியது.

 நெருப்பு அவனது உடலுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை.

நெருப்பு அவனது வெளி உலகையும் ஆட்சி செய்தது.

அது அவனது நாட்களை வடிவமைத்தது, அவனது வலிமையைச் சோதித்தது, எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடவுளைப் போல மீண்டும் மீண்டும் அவனது வாழ்வில் எதிர்பட்டது.

ஒரு நாள், புதர்களில் கோபமான கடவுள்களின் மூச்சு போல ஒரு காட்டுத் தீ பரவியது.

 அந்த நெருப்பைக் கண்டதும் அவனது மனதில் மறைந்திருந்த நினைவுகள் மின்னின. அவனது அன்னையின் கூச்சல்... துடியர்களின் குடியிருப்பில் படர்ந்த அக்கினி...

ஆனால் இந்த முறை, அவன் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை. நெருப்புக்குள் ஓடினான்.

 உள்ளே ஒரு கன்று சிக்கியிருந்தது.

அவன் அதை விடுவித்தான்.

 அந்தக் கன்று ஒரு பசுவை நோக்கி ஓடியது.

பசு நன்றியின் மிகுதியால்  அவனது முகத்தை நக்கியது. அவன் அதன் அருகில் படுத்தான்—அந்த வெப்பத்தில், அவன் தனது தாயின் கதகதப்பை  மீண்டும் உணர்ந்தான். இப்பொழுது கன்று பசுவிடமிருந்து பாலைக் குடித்தது. இதைக் கண்ணுற்ற அவனும் அந்த பசுவிடமிருந்து பாலைக் குடித்தான் 

இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளின் புனித ஒன்றிணைப்பாக அந்தப் பால் விளங்கியது . 

அவன் அந்தப் பசுக்களின் சுவாசத்தின் கீழ் தூங்கினான்,

 பசுக்கள் பகலில் மேய்ந்து இரவில் அசை போட்டன. அவனைப் போலவே இரவு முழுவதும் அவை விழித்திருந்தன.

 அவை அவனுக்கு இரவுத் தோழனாக விளங்கின.

கூட்டம் அவனை ஏற்றுக்கொண்டது.வார்த்தைகள் இல்லை. கேள்விகள் இல்லை. வெறும் தொடுதலும் நம்பிக்கையும் மட்டுமே அங்கே நிலவி வந்தது.

கூட்டத்தை ஒரு மூத்த பெண் பசு வழிநடத்தியது—அதன் கண்கள் காலத்தால் ஆழமானவை, அதன் இருப்பு நிலவைப் போல அமைதியானது.

அது அவனுக்கு கொடிச்சியையும் அவனது அன்னையையும் நினைவூட்டியது, ஒரு மின்னல் வடிவ பிம்பமாக...

அந்த மின்னல்கள் கனவுகளைப் போல அவனது மனதில் அடிக்கடி தோன்றின,

அது ஒரு தரிசனமா? 
மற்றொரு வாழ்க்கையா?
 பூர்வ ஜென்ம நினைவுகளா?

அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்த பிம்பம் மேலெழும்போதெல்லாம், அவன் மனதில் அமைதி திரும்பியது.

ஆனால், இந்தக் காட்டில் அமைதி நீண்ட நேரம் தங்குவதில்லை.

காட்டின் நிழல்களில் இருந்து ஒரு பெரிய காளை வந்தது—அது பெண் பசுக்களைச் சுற்றி பாதுகாப்பது போல அலைந்தது...

 அது தனது கண்களில் புயல்களின் பாரத்தைச் சுமந்தது.
அதன் கோபம் பழமையானது. 
அதன் பாதங்கள் இடியாக ஒலித்தன.
 அது ஒரு  இயற்கையின் சக்தி.

 சிவனோ பித்தத்தின் மறு உருவம் 

 ஆனால் அந்தக் காளையோ  வாதத்தின் பிரதிநிதியைப் போல தோற்றமளித்தது.

  சிவன் அந்த கூட்டத்தில் இருப்பதை அது விரும்பவில்லை.

 வாதமும் பித்தமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

காளை  மணலின் ஆழம் வரை  கொம்புகளைப் பதித்து,  நெம்பி எடுத்து மணலை  நாற்புறமும் விசிறி அடித்தது, கோபத்துடன் அவனைப் பார்த்து உறுமியது.

சிவன் ஓடவில்லை. 

மிருகம் கர்ஜித்து முன்னேறியது.சிவா பாய்ந்தான், கொம்புகளுக்குள் சிக்கி விடாமல்  காளையின் திமிலைப் பிடித்தான்.அது அவனைப் புழுதியிலும் முள் செடிகளிலும்  இழுத்துச் சென்றது.அவனது பிடி இறுகியது. 

 இரு வீரர்களும் சமமானவர்கள் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டனர்.

 காளையின் வேகம் குறைந்தது .

 சிவனின் பிடியும் தளர்ந்தது.
 
காளை திரும்பி சிவனை உற்று நோக்கியது.

 இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

அவர்களுக்கு இடையில் ஏதோ கடந்தது.

 அது பயம் அல்ல.

சவாலும் அல்ல.

 ஒரு அங்கீகாரம்.

 உயிர்களை நேசிப்பவனான சிவன் அந்த விலங்குக்கு எந்த தீங்கினையும் செய்ய விரும்பவில்லை.

அவன் மீண்டும் தனிமையைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தை விட்டு வெளியேறினான். அங்கே மீண்டும் அமைதி திரும்பியது.

 ஆனால் அவனது உடலின் வெப்பம் தணிவதாகத் தெரியவில்லை. அவன் உடல் சுடும்போதெல்லாம் உடலை குளிரச் செய்யும் வெள்ளி வளையத்தை கைகளால் தொட்டுப் பார்ப்பான்.

 செம்பினால் தூண்டப்பட்ட அழலை வெள்ளி தணித்துக் கொண்டிருந்தது. 

 வெள்ளியைப் போல்  வேறொரு உலோகம் அவனது சமநிலையின்மைக்கு தீர்வு அளிக்கக்கூடும் என்ற எண்ணம் சிவனுக்கு  மேலோங்கியது. மேலும் அவனுக்கு பாதுகாப்பளிக்கக் கூடிய ஆயுதமாகவும் ஒரு புது உலோகம்  அவனுக்குத் தேவைப்பட்டது.

அவனது மூன்றாவது கண் மீண்டும் அவனை வழிநடத்தியது.

 அது துடித்தது. 

அவன் தேடினான்.
வளையாத உலோகத்திற்காக.
உடையாத ஆயுதத்திற்காக.
 சமநிலையை மீட்டெடுக்கும் மருந்திற்காக.
ஆன்மாவை தாங்கக்கூடிய உடலுக்காக.

அவன் இனியும் சிறுவன் அல்ல. அந்தப் பிறைசேர் சடையான் ஒரு சரித்திரமாக மாறிக் கொண்டிருந்தான். அந்த மாற்றத்தை அவனது சடைக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.


**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.

5


Wednesday, July 23, 2025

அந்தம் நடுவாகி அல்லான் (ஆதியோகி: அத்தியாயம் 5)

அந்த ஆண்டு கோடை கொடூரமாக இருந்தது. மழை பெரிதாக இல்லை.

சில நாட்களுக்கு முன் வரை நிறைசூல் கொண்டிருந்த பொருநை ஆறு இப்போது அபலைப் பெண் போல காட்சி அளித்தாள்.

பொருநையின் நீர் களைப்புடன் மந்தமாக ஓடியது. வெளியில் பரவி இருந்த வெப்பம் சிவனுக்குள் இருந்த அழலை அதிகரித்தது. அவனது வில்சனின் நோய் அவனுக்குள் மெளனமாக கொதித்துக் கொண்டிருந்தது .

அந்தக் காலை அமைதியாக இருந்தது—வினோதமான அமைதி. சூரியன் உயிரற்ற பூமியின் மீது உதித்தது.

 காற்று வெப்பத்துடன் கனமாக வீசியது.பறவைகள் மௌனமாகின.
 வெளியே நடந்து கொண்டிருந்த சிவனின் கால்களுக்குக் கீழ் உலர்ந்த இலைகள்  நொறுங்கின. 

 பணம் இழந்தவனை நண்பர்கள் கைவிட்டு நீங்குவது   போல, விலங்குகள் காட்டின் தொலைவில் உள்ள நீரை நோக்கிச் சென்று விட்டன . 

 நண்பர்களின் நினைவுகளிலிருந்து நாம் நீங்கினாலும் பகைவர்கள் நம்மை எப்போதும்  மறப்பதில்லை. அவர்கள் நம்மைத் தேடி எப்படியும் வந்து விடுவார்கள்... பழைய பகையை முடிக்க.

 அனல் தகிக்கும் அந்தக் காட்டிலே பகை விலங்கு ஒன்று மெல்ல இவர்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்து வந்தது. 

அது ஒரு வரிப்புலி. 

பசி மற்றும் வெப்பத்தால் அதன் குரூரம் அதிகரித்திருந்தது. அதன் விலா எலும்புகள் தோலில் தெரிந்தன, அதன் மூச்சு சூடாகவும் கரடுமுரடாகவும் இருந்தது. ஒவ்வொரு  புற்றையும், கைவிடப்பட்ட பாதையையும் அது முகர்ந்தது.
 
 இறுதியாக தான் தேடியதை அது கண்டடைந்தது. 

 தனியாக சிவா, வழக்கம்போல, வனத்தை வலம் வரத் தொடங்கினான். அவனது பெருமைமிக்க கண்டுபிடிப்பான செப்புப் பற்களைக் கொண்டிருந்த பலமுனை சூலத்தை அவனது கை அலட்சியமாக பற்றி இருந்தது. அதில் தமருகப்பறை கட்டப்பட்டிருந்தது.
அவனது பாதங்கள் கவலையற்றவை, அவனது இதயம் நேற்றைய மகிழ்ச்சியின் நினைவில்  இன்னும் நடனமாடியது. ஆனால் அவனுக்கு பின்னால், இறந்து போன புதர்களுக்கு இடையே, புலி மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தது .

தொலைவில், அவனது தந்தை அவரை விதைகளை சேகரித்த படி நின்றிருந்தார். 

 திடீரென்று ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அந்தச் செயலை அப்படியே நிறுத்தினார்.

 வழமைக்கு மாறான அமைதி. 

 அவருக்கு மிகவும் பழக்கமான அரிதான ஒரு மணம் காற்றில் வீசியது.

 அவர் திரும்பி, கற்கள் மீது வெறுங்காலுடன் ஓடினார், “சிவா!” என்று கூவினார்.

ஆனால் புலி ஏற்கனவே பாய்ந்து விட்டது.

 சிவன் சடாரென்று திரும்பினான்.

 அவன் கண்கள் விரிந்தன.

 விலங்குகளின் அரசன் முன்னங்கால்களை விரித்தபடி, நகங்கள் சூரிய ஒளியில் மின்ன, அவனை நோக்கி காற்றில் மிதந்து வந்தது.

 அனிச்சையாக அவன் தனது ஈட்டியை உயர்த்தினான்.

 நிச்சயம் அது அந்தப் புலியின் மீது பட்டது.

 ஆனால் அந்தக் கொடிய விலங்கினை அத்தாக்குதல்  பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை 

சிவன் தப்பிவிட்டான்... ஆனால் இம்முறை அது தனது இலக்கை துல்லியமாகக் குறி வைத்து பாயத் தயாரானது 

 சிவன் தனது ஈட்டியை பார்த்தான். அதன் முனைகள் சில வளைந்து ஒடிந்து விட்டன. வெறும் மும்முனை கொண்ட சூலமாக அது காட்சியளித்தது.

 மூன்று கூர்மையான பற்கள், அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 

செப்பு ஆயுதம் புலிக்கு ஈடாகவில்லை...

புலி மீண்டும் பாய்ந்தபோது, அவனது தந்தையின் குரல் நினைவுக்கு வந்தது: “தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல...”

அந்த கணத்தில், அவர்களது மூதாதையரின் தைரியம் அவனுள் பாய்ந்தது. அவன் தனது திரிசூலத்தை உறுதியாகக் கையில் ஏந்தினான். அங்கே திரிசூலத்துடன் நின்றிருந்தது ஒரு சிறுவன் அல்ல. புலிகளை கைகளால் சமர் செய்தவர்களின் வழிவந்த ஒரு தேர்ந்த வனவாசி.

 புலியும் சிவனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். இம்முறை அதன் பாய்ச்சலில் துல்லியமும் வேகமும் அதிகரித்திருந்தன. சிவன் தனது சூலத்தை அதன் பஞ்சு போன்ற குரல்வளைக்கு அருகே சொருகி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.

 ஆனால் அவனது தந்தை அங்கே சரியான நேரத்தில் வந்தார். வனத்தின் மௌனத்தை உடைப்பது போல மிருகத்திற்கும் சிறுவனுக்கும் இடையில் பாய்ந்தார். காட்டைப் பிளப்பது போல ஒரு கர்ஜனையுடன், அவர் புலியின் முகத்தில் நேராக முஷ்டியால் குத்தினார் . 
 புலியின் தாடையில் முஷ்டியானது பட்டவுடன் கற்கள் நொறுங்குவது போன்ற ஒரு சத்தம் எழுந்தது.

 புலி தடுமாறி விழுந்தது.

“ஓடு!” என்று அவனது தந்தை கத்தினார்.
 சிவா ஓடவில்லை. அவனது கால்கள் நகர மறுத்தன. அவன் உறைந்து நின்றான், திரிசூலம் அவன் பிடியில் நடுங்கியது, இதயம் அவனது விலாக்களுக்கு எதிராக ஒரு முரசு போல அதிர்ந்தது.

 சிவனின் தந்தை அவனை ஆழமாக கண்களுக்குள் ஊடுருவி பார்த்தார். 
 அந்தக் கண்களில் பெருமிதம் மின்னியது. 

 "இன்று நீ வெளிப்படுத்திய துணிச்சல் அசாதாரணமானது. உன்னை எண்ணி பெருமை கொள்கிறேன் மகனே."
 என்று அவர் உறுதியான குரலில் கூறினார். 

 பின்னர் அவர் மிருகத்தை நோக்கி திரும்பினார், அவரது உடல் எங்கும் இரத்தம் கசிந்தாலும் அவரது கண்களில் தைரியம் பிரகாசித்தது.

 இரு புலிகளை ஏற்கனவே கைகளால் கொன்ற பெருவீரன் அவர். 

 அந்தப் பெருவீரனும், பசியால் ஆவேசம் கொண்ட புலியும் இறுதி யுத்தத்திற்கு தயாரானார்கள்.

 இதை கண்ணுற்ற சிவனின் உடல் நடுங்கின. நடுங்கும் கைகளால் கற்களை உரசி அவனது இடுப்பில் கட்டப்பட்ட உலர்ந்த மாவளிக் கருக்கை பற்ற வைத்தான். 

 அவன் அதை ஆவேசமாக சுழற்றியபடி புலியை நோக்கி ஓடினான் , காற்றுக்கு எதிராக தீப்பிழம்பு எரிந்தது.
ஆனால் காற்று அவனுக்கு எதிராகத் திரும்பியது.

மாவளியில் இருந்து; சிறு சிறு பொறிகள்  ஒரு  விடுவிக்கப்பட்ட சாபம் போலப் பறந்தன. பொறிகள் ஆவிகளைப் போல உலர்ந்த வனம் முழுவதும் பரவியது.

 கூச்சலைக் கேட்டு ஓடி வந்த அவளது அன்னை அந்த நெருப்பின் கரங்களுக்குள் அடைபட்டுக் கொண்டாள். 

 அவளைச் சுற்றிய உலர்ந்த செடிகள் தீப்பற்றின. தரையில் இருந்து ஒரு நெருப்பு சுவர் எழுந்து, அவளை ஒரு தீக் கூண்டாக சூழ்ந்தது.
அவள் அவனை அடைய முயன்றாள், வெப்பத்தின் வழியாக கைகளை நீட்டினாள். அவளது ஆடை தீப்பற்றியது. இருப்பினும், அவள் புகையால் குருடாகி, அன்பால் உந்தப்பட்டு முன்னோக்கி வர தடுமாறினாள். அவளது குரல் உடைந்தது. அது சன்னமான ஒரு இறுதி பிரார்த்தனையைப் போல சிவனின் பெயரை உச்சரித்தது. 

 பின்னர் நெருப்பு அவளை எடுத்துக் கொண்டது.

 இக்காட்சியினால் கவனம் சிதைந்த சிவனின் தந்தை இவர்களை நோக்கி பார்வையை திருப்பிய அதே வேளையில். புலியின் நகங்கள் அவரது நெஞ்சிலே ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

 அவரது இரத்தம் வானில் இருந்து உதிர்ந்த நட்சத்திரங்களைப் போல பூமியில் பரவியது. 

 ஆனால் அவனது தந்தை எதிர்த்து போராடினார்.

“ஓடு!” என்று அவர் கடைசியாகக் கத்தினார்.

 சிவனின் கண்களை அவர் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.

அவர்களது கண்கள் சந்தித்துக் கொண்டன .

 அந்தத் தந்தையின் இறுதிப் பார்வையில், பயமோ வலியோ இல்லை. பெருமையும் அன்பும் மட்டுமே நிரம்பி இருந்தது.

பின்னர் தனது வலு அனைத்தையும் ஒன்று திரட்டி, அவர் புலியின் மீது பாய்ந்தார் .

 புலியும் அவரும் ஒன்றாக,  பாறை விளிம்புக்கு அப்பால் விழுந்தனர். 

 ஒரு பெரும் மௌனம் அங்கே சூழ்ந்தது.

 காட்டின் நெருப்பில் சுள்ளிகள் எரியும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
 மரங்கள் நொறுங்கின. வானமே பின்வாங்குவது போலத் தோன்றியது. காடு அழுதது.

 சிவன் நெருப்புக்கு மத்தியில் நின்றிருந்தான் . அவனது  திரிசூலம் ரத்தத்தால் நனைந்திருந்தது . அவனது கைகள் நடுங்கின . அவனது ஆன்மா உடைந்து சிதறியது.

 அவனது தாய் நெருப்பினால் விழுங்கப்பட்டு விட்டாள். அவனது தந்தை ஆழமான பள்ளத்தாக்கில் கரைந்து விட்டார்.

 சிவாவின் உலகம் நொடிப் பொழுதில் உடைந்து விட்டது. அவனது உடல் நடுங்கியது. வில்சனின் நோய் அதன் அடுத்த கொடூர கட்டத்திற்கு உயர்ந்தது. அவனது உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் துடித்தன. அவனது தொண்டையில் இருந்து யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு கூச்சல் எழுந்தது. 

 அவன் தனது திரிசூலத்தை இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு நெருப்புக்கு மத்தியில் கூச்சலிட்டுக்கொண்டு அரற்றினான். தமருகப்பறையின் ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது.  

 சேயோன் அவன் மீது இறங்கியது போல நெருப்புக்கு மத்தியில் நடனம் ஆடினான்.
 அப்படியே அவன் நிலை தடுமாறி பொருநை நதியில் விழுந்தான். அவனது நெற்றி நதியில் இருந்த ஒரு கூர்மையான பாறையில் மோதியது. நெற்றிக்கு நடுவில் இருந்து குருதி கொப்பளித்தது. நதி அவனை கீழ்பள்ளத்தாக்கிற்கு உருட்டிச் சென்றது.
 

மயக்கத்தில், அவன் மிதந்தான்.
நீரோட்டம் அவனை மலைகளில் இருந்து சமவெளிகளில் பரவி இருந்த ஒரு முல்லைக் காட்டின் ஆற்றுப் படுகைக்கு அருகே ஒதுக்கி தள்ளியது.  

 அவன் முல்லை நிலத்தை அடைந்தான்—புல்வெளிகளின் அடர்ந்த காடுகள் புனித ஆற்றங்கரையைச் சந்திக்கும் இடம் அது.
அவன் நீரருகில் உடைந்து கிடந்தான். திரிசூலம் அவனருகில் மின்னியது. அதில் கட்டப்பட்டிருந்த பறையின் மீது நீரின் அலைகள் மோதி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. 

 அவனுக்கு மேலே, பாருக்கழுகுகள் வட்டமிட்டன. அவனது நெற்றியின் மையத்தில் இருந்து இரத்தம் மெதுவாக வடிந்து கொண்டிருந்தது. அது அவனது மூன்றாம் கண் அழுவது போல காட்சியளித்தது.

 அசைவற்றுக் கிடந்த அந்த உடலின் மீது ஒரு நாகம் படர்ந்தது. மெதுவாக அவனது கழுத்தைச் சுற்றி படம் எடுத்து நின்றது.

 அந்த நாகம் மெதுவாக சீரியது.

 சட்டென்று அவன் கண் விழித்தான்.

  இங்கே வெயில் காய்ந்தது. அவனது 
  தோல் எரிந்தது. 

 அவன் கண் விழித்தான்.

 சுற்றி இருந்த உலகம் அவனுக்கு புதிதாக இருந்தது.

 பலவீனமான குரலில் "நான் எங்கே இருக்கிறேன்?” என்று மெதுவாகக் கேட்டான். 

“நான்… யார்?”

அவனுக்கு எதுவும் நினைவில்லை.

நெருப்பு இல்லை. புலி இல்லை. தந்தையோ தாயோ இல்லை. அவன் யார் என்றே அவனுக்கு நினைவில் இல்லை.

 சுத்தமாக துடைக்கப்பட்ட ஒரு பலகையைப் போல... புதிதாக பூத்த புது மலரைப் போல அவன் காட்சியளித்தான்.

 அவன் புயல்களால் வீசி எறியப்பட்டவன். நெருப்பின் சாம்பலில் இருந்து உதித்தவன் 

 அவனைச் சுற்றி காடு உயிர்ப்புடன் இருந்தது. அவன் தன்னை புதியவனாக உணர்ந்தான்.

 இந்த உலகம் இனி அவனை சுயம்பு என்றே அழைக்கப் போகிறது. 

அவனது வாழ்க்கையின் தொடக்கம் எது என்று யாருக்குமே தெரியாது. 

அது ஒரு மறக்கப்பட்ட கதை. 

 அவனுக்கு ஆதி என்பதே இல்லை. அதேபோல் அவனுக்கு அந்தமும் இல்லை.

 அவன் முதலும் அற்றவன்.

 முடிவும் அற்றவன். 

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரென முல்லைக் காட்டின் மத்தியில்  நின்றிருக்கும் இந்தச் சிறுவனுக்கென்று இப்போது யாரும் இல்லை. அவனுக்கு போக்கிடமும் ஏதுமில்லை. அந்த சிறுவனிடம் பாசம் காட்டுவார்  என்று யாரும் இல்லை. அந்தச் சிறுவனுக்கு எவரிடமும் எந்த பற்றும் இல்லை.

 உறுதி இழந்த உடலோடும், நினைவுகள் இழந்த உயிரோடும், சூரியக் கதிர்களால் பொசுக்கப்பட்ட தோலோடும், நடுங்கும் நரம்புகளோடும், முனை மழுங்கிய பயனற்ற ஆயுதத்தோடும் நடுக்காட்டில் நிற்கதியாய் நின்றிருந்தான் அந்தச் சிறுவன். 

அவனுக்கு முன்னே உள்ள பாதைகள் வலி நிரம்பியவை. கடவுள்கள் அவனை மென்மேலும் சோதிப்பார்கள். அச்சோதனைகளைத் தாண்டி பெருஞ்சோதியாய் உருவெடுத்து,   அனைவரையும் ஆட்கொள்ளும் அன்பின் பேரூற்றாய் அவன் நிச்சயம் விளங்குவான்.
------

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.





 

Sunday, July 20, 2025

அன்பினில் விளைந்த ஆரமுது (ஆதியோகி: அத்தியாயம் 4)

 பொதிகையில் சிவாவின் நாட்கள் அமைதியாலும் மகிழ்ச்சியாலும்  நிரம்பியிருந்தன. அவனது தோலில் இருந்த காயங்கள் மெல்ல மெல்ல ஆறத் துவங்கி இருந்தன. அவனது தோல் இப்பொழுது சுட்டெரிக்கும் சூரியனால்   வெந்து போகவில்லை, அவனது காதுகள் கொடூரமான வார்த்தைகளைக் கேட்கவில்லை, எந்தக் கண்களும் அவனை வஞ்சத்துடனும் ஏளனத்துடனும்  பின்தொடரவில்லை. 

 பனி போர்த்திய பொதிகை மலை சிகரத்தின் உச்சியில்  வாழ்ந்து வந்த அவனது குடும்பம், ஒரு மென்மையான வாழ்க்கையை அவனுக்கு உருவாக்கித் தந்தது. 

 அவர்களது வாழ்வு மிக எளிமையானதாக இருந்தது. அவர்கள் குளிர்ந்த பொருநை நீரில் மீன்பிடித்து, ஈரமான மண்ணில் தினை வளர்த்து, பழங்களை சேகரித்து எளிய வாழ்வு  வாழ்ந்தனர். 

 சிவாவின் இயல்பு அவர்களின் உலகத்தை மேலும் மென்மையாக்கியது. விலங்குகள் மீதான அன்பு, நட்சத்திரங்களின் மீதான ஆச்சரியம், தாயின் கதகதப்பு, தந்தையின் அரவணைப்பு, சிவனின் செல்ல குறும்புகள் இவற்றினால் ஆன ஒரு அழகிய உலகம் அன்பினை அச்சாகக்   கொண்டு அங்கே சுழன்று வந்தது. அங்கு எந்தக் குழந்தையும் அவனைப் பரிகசிக்கவில்லை. அந்த புனிதமான இடத்தில், அவன் தன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக  உணர்ந்தான்.

 இருப்பினும் கோடைகாலத்தில், பொதிகையின் மென்மையான வெப்பம் கூட அவனது அறிகுறிகளை மோசமாக்கியது. கையில் அணிந்திருந்த செம்புக் காப்பு அவனது வேர்வையோடு வேதிவினை புரிந்து உடலுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கியது. அது அவனுக்குள் உறங்கிக் கிடந்த அழலைத் தூண்டியது. அவனது இரத்தத்தில் உள்ள தாமிரம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப் போல அதிகம் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்தது . 

 வனவாசிகளுக்கு காடு எப்பொழுதும் தனது ரகசியங்களை எளிதில் வெளிப்படுத்தி விடும். காட்டின் ரகசியங்களை அறிந்த சிவனது அன்னை  சில மூலிகை இலைகளை நசுக்கி, அதன் சாற்றை அவனுக்கு அளித்து, அவனது உடலை குளிர்வித்தார். அது அவனது நோயை மட்டுப்படுத்த  உதவியது. 

 துன்பத்தின் முக்கியமான நன்மை யாதெனில் அது தன்னை அனுபவிப்பவருக்கு பாடங்கள் பல கற்றுக் கொடுக்கும். சிலசமயம் பரிசுகள் கூட வழங்கும்.

சிவனுக்கு நேர்ந்த துன்பங்கள் உடல் ரீதியிலானவை. அதன் காரணமாக அவன் தனது உடலை படிக்கத் தொடங்கினான். அவன் படித்தது உடலின் இயக்கத்தையும் அதன் மாறுதல்களையும். 

 சிவன்  புரிந்துகொள்ளத் தொடங்கினான்: பருவங்கள் மாறுவதையும் அந்த பருவங்களுக்கு ஏற்ப அவன் உடல் மாறுவதையும் அவன் உடலைப் போல நிலமும் பருவத்திற்கு ஏற்ப மாறுதல்கள் கொள்வதையும் அவன் ஆழ்ந்து அனுமானிக்கத் தொடங்கினான்.

காற்றின் வடிவங்கள், மழைக்கு முன் பறவைகளின் நடத்தை, வனத்தின் சமிக்கைகள், பறவைகளின் இடப்பெயர்ச்சி, ஆற்றின் வெள்ளப்பெருக்கு, கூதல் காற்றின் வேகம், நட்சத்திரங்களின் நகர்வு, பருவத்தின் மாறுதல்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில் நடப்பது அவனுக்கு புரிய வந்தது.  வெளியில் நிகழும் இது போன்ற மாற்றங்கள்  அவனுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினான். 

 இப்பொழுதோ  சிவனின் தந்தைக்கு ஒரு பெரும் கூட்டத்தை நடத்த வேண்டிய தலைமை பொறுப்பு ஏதுமில்லை. சிவனின் ஆர்வமும் கூர்ந்து கவனிக்கும் திறனும் அவன் தந்தையையும் தொற்றிக் கொண்டது.

 அவர்கள் இருவரும் பூமியுடன் பேசத் தொடங்கினர். பூமி தனது ரகசியத்தை ஒவ்வொன்றாக அவர்களுக்கு வெளிகாட்டியது. அதில் முக்கியமானது செம்பு தாதுக்கள்.

மலைப் பாறைகளில் மறைந்திருந்த செம்பின்  தாதினை அவர்கள் சேகரிக்கத் தொடங்கினர். 

அவர்கள் ஒரு எளிய குழி உலையை அமைத்தனர், வெப்பத்தைப் பிடித்து வைக்க களிமண்ணால் அதைப் பூசினர். உலர்ந்த கிளைகளை எரித்து கரி தயாரித்தனர், இது கிளைகளையும் எருவையும்   விட அதிக வெப்பத்தை அளித்தது.நெருப்பினை தீவிரப்படுத்த  ஊதுகுழல்களை உருவாக்கினர்.  ஊதுகுழல்களால், அவர்கள் நெருப்பை உக்கிரமாக எரியச் செய்தனர். பலவித முயற்சிகளுக்கும் பிழைகளுக்கும் பிறகு அவர்களுக்கு அது கைவந்தது.

 பல்வேறு முயற்சிகளின் முடிவில் சிவப்பு கல் ஒளிர்ந்து அதிலிருந்து செம்பு இரத்தம் போல் வழிந்தது . சிவா, கண்கள் பிரகாசிக்க பார்த்தான்.

“இது என்ன  அப்பா?”

" இது மற்ற கற்களைப் போல அல்ல மகனே. இது ஒரு உலோகம். உன் கையில் இருக்கும் காப்பு இந்த உலோகத்தால் தான் செய்யப்பட்டது மகனே".

 "இதன் பெயர் என்ன அப்பா ?"

"இதை நான் தாமிரம் என்று அழைப்போமா?" என்றார் அத்தன்.

" நிச்சயமாக அப்பா... அப்போ தாமிரத்தைத் தந்த இந்த ஆறும் தாமிரபரணி ஆகட்டும்,” என்று சிவா அறிவித்தான்.

அவனது தந்தை சிரித்தார். 

 ஓரு நாள் அவன் ஒரு சதுரத்திற்குள் ஒரு சதுரத்தை மணலில் வரைந்து கொண்டிருந்தான் .




“இது என்ன?” என்று அவனது தந்தை கேட்டார்.

“பெரிய சதுரம் நம் வீடு. சிறிய சதுரம்… அது நீங்கள் தான் அப்பா, நீங்கள் இந்த வீட்டின் கோன் . " என்றான்.

சிவா தனது தந்தையின் ஈட்டி அவரிடம் இல்லாததைக் கவனித்தான்.

“நீங்கள் ஏன் உங்கள் ஈட்டியை கோடனுக்கு கொடுத்தீர்கள்?”

“அது குலத்தின் தலைவனுக்கு சொந்தமானது. நான் இனி குலத்தின் கோன் இல்லை.”

“நீங்கள் நம் இல்லத்தின் கோன்." என்றான் சற்றும் தாமதிக்காமல்.

அவனது தந்தை புன்னகைத்தார். “ஆம், என் மகனே. நான் இல்லத்தரசன்.”

சிவா அவருக்கு ஒரு  வலிமையான ஈட்டியை  உருவாக்குவதாக உறுதியளித்தான். 

 அவன் மலை எங்கும் அலைந்து  பலவகை தாமிர தாதுக் கற்களை கண்டெடுத்தான். தந்தையின் உதவியுடன் அவற்றை உருக்கி பலமுனை கொண்ட ஈட்டி ஒன்றை அவன் உருவாக்கினான்.

  அது ஒற்றை-முனை ஈட்டியை விட மீன்களை சிறப்பாகப் பிடித்தது.

ஒற்றை முனை ஈட்டியானது வேகத்திற்கு ஈடு கொடுத்தது. ஆனால் அதன் தாக்குதலில் இருந்து மீன்கள் நழுவின. இந்தப் பலமுனை ஈட்டியில் மீன்கள்  தப்புவதற்கு வழி ஏதுமில்லை.

 பலமுனை ஈட்டியை இலாவகமாக எறிந்து அவன் மீன்பிடித்த வேகத்தை பார்த்த அவனது தந்தை, அவனுக்கு  கொம்பு மகுடத்தை அணிவித்தார்.

“நீதான் உண்மையான வேட்டைக்காரன்,” என்றார். “ இனி இங்கே நீ தான் தலைவன்.

 கொம்பு கிரீடம் அணிந்து பலமுனை ஈட்டியை கையில் ஏந்திய அந்த உருவம் வரலாற்றில் நிலைத்தது.

 பின் நாட்களில் ஹரப்பர்கள் அவர்களின்  கடவுளாக இந்த உருவத்தை நினைவு கூர்ந்தனர். அவர்களின் சித்திர  எழுத்துக்களில் இந்த உருவம் அடிக்கடி இடம் பெற்றது.

                              


 பிரிதொரு நாள் தந்தை வைத்திருந்த துடிப்பறை பயன்படுத்தப்படாமலேயே இருப்பதை கண்ட அவன் தனக்கென ஒரு சிறிய துடிப்பறையை உருவாக்கினான்.  

 அந்த சிறிய துடிப்பறை அவனால் மேலும் மேம்படுத்தப்பட்டது. காட்டு விதைகளை மணிகளைப் போல் கயிற்றில் கோர்த்து பறையின் இடுப்பில்  கட்டினான்.  மணிக்கட்டை அசைப்பதன் மூலம் அதில் ஒலி எழும்புமாறு  மாறுதல்களை செய்தான். அந்தத் துடிப்பறையை தமருகப் பறை என்று அவன் அழைத்தான்.   




அந்த தமருகப் பறையை  தனது பலபல் ஈட்டியில் பொருத்தினான். ஈட்டியை லாவகமாக அசைக்கும் பொழுது அந்த தமிருகப்பறை விரைவாக பேசத் தொடங்கியது. அது அவனது சொந்த கண்டுபிடிப்பு.

 பகலில் சூரியனின் கோபக் கண்கள்  அவன் மீது வெப்பத்தை மட்டுமே உமிழ்ந்தது . ஆனால் இரவின் கண்ணான சந்திரனோ அவனுக்கு குளிர்மையை காட்டியது.

 இரவு நிலவுக்கு தலை காட்டும் வழக்கமுடைய சிவன் அந்தப் பழக்கத்தை பொதிகையிலும்  மாற்றிக் கொள்ளவே இல்லை. இரவின் மீது இப்பொழுது அவனுக்கு துளியும் பயம் இல்லை. ஏனெனில் அவன் கொம்பு அணிந்த காட்டின் தலைவன். கையில் ஆயுதம் ஏந்தியவன். அவனைக் காட்டிலும் அவன் கையில் இருக்கும்  ஆயுதத்தின் மீது அவனுக்கு மிகவும் நம்பிக்கை அதிகம்.

 இரவில் பிறை நிலா ஒரு படகைப் போல் பொருநை ஆற்றில் மிதப்பதை அவன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பான். இரவின் கண்ணான நிலவைத் தான் அவன் அதிகம் விரும்பினான். பகலில் வானில் தெரிந்தது ஒரே ஒரு கண்தான். ஆனால் இரவுக்கு ஆயிரம் கண்கள் இருந்தது அவனுக்கு வியப்பைத் தூண்டியது.

ஆற்றிலும் சரி வானத்திலும் சரி...இரண்டிலும் மீன்கள் இருந்தன. "நீரில் உள்ள மீனை 'நீர் மீன்' என்றழைக்கிறோம் அப்பொழுது வானத்தில் உள்ள மீனை 'விண்மீன்' என்று அழைப்போமா? " என்றான் சிவன்.

 அன்னையும் சரி, தந்தையும் சரி, அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் கூறுவதில்லை. அன்றிலிருந்து அவர்கள் விண்மீனை ரசிக்கத் தொடங்கினர்.

 அவன்  கற்களை வட்டமான வடிவங்களில் அடுக்கத் தொடங்கினான், நட்சத்திரங்களின் இயக்கங்களையும், சூரியனின் பாதைகளையும் அவன் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினான்.

 இதுபோல நட்சத்திரத்தையும் நிலவையும் சேர்த்தே அவதானிக்கத் தொடங்கிய பொழுது அவனுக்கு முக்கியமான ஒன்று புலனாகியது.

நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் நிலவானது, சில சமயம்  கடலில் விளையாடும் சிறுபறவை போன்ற தோற்றம் கொண்ட ‘எழுமீன்’ (stars of Ursa major Charles wain) நட்சத்திரக்கூட்டத்திற்கு அருகில் இருந்தது. 

 ஏழு மீன்கள் இருந்தால் எழுமின் ஆறு மீன்கள் இருந்தால் அறுமீன் என்று அழைக்க தொடங்கினான் சிவன்.


“அம்மா,” என்றான், “நம் மக்கள் சூரியனை மட்டுமே பார்த்தனர். ஆனால் இரவும் கற்பிக்கிறது.

 சில சமயம் அறுமீன் கூட்டத்திற்கு அருகில் முழு நிலவு தோன்றியது. அப்போது சொல்லிவைத்தாற்போல் ஒவ்வொரு வருடமும், மழை முடியும் சமயமாக இருந்தது.

   மேகங்கள் கூடி, கொண்டல் மேகம் வானத்தை உடைக்க, மழை பெய்தது. மழையின் சமயம்  தும்பிகள் தாழப்பறந்தன , உலகம் உயிர் கொண்டது —தவளைகள் கத்தின, பாம்புகள் நெளிந்தன, மயில்கள் நடனமாடின. அவன் பூமியின் தாளத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்தான் .

 அந்த மழையின் சமயம் காற்று ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே நகர்வதையும் அவன் அவதானிக்க தவறவில்லை. 

தெற்கில் இருந்து வீசிய மென்மையான காற்று தென்றல் போல தாலாட்டியது . 

 மேற்குத் திசையிலிருந்து காற்று வீசிய பொழுது அவனது உடல் அனலாகத் தகித்தது.  குடக்குக்  காற்று பொதுவாக வெப்பமாக இருந்ததை அவன் உணர்ந்து கொண்டான் .

வானின் இரண்டு கண்களாகிய சூரியனும் சந்திரனும் சில முழுநிலவு நாட்களில் ஒன்றாகத்  தெரிவதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.

 அப்படிப்பட்ட ஒரு நாளில் அவனது இடது கண் சந்திரனை பார்க்க ஆவல் கொண்டு திரும்பியது, ஆனால் வலது புறமும் சூரியன் இருந்ததால்  வலது கண் சூரியனைப் பார்க்க ஆவல் கொண்டது.

அவனது கண்களில் பிரகாசமாக தாமிர வளையம் உருவாகி இருந்தது அந்த சூரிய சந்திர வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. 

பருவங்கள் மாறி மாறி வந்தன. பகல் நீண்டது. பகலோடு சேர்ந்து அவனது உடலின் அழலும் அதிகரித்தது. பின்னர் பகல் சுருங்கி இரவு நீண்டது. அவனது உடலின் அழலும்  குறையத் தொடங்கியது.

 அவன் தனது உடலை பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்து கவனிக்க ஆரம்பித்தான்.

கொண்டலின் வருகையை ஒட்டி வனம் செழித்தபின், கொண்டல் மேகங்கள் வானில் வலம் வந்தது போலவே, கருப்புநிற பேருயிர்கள் அந்த வனம்வழியே வலம் வருவதைக் கண்டான். பழமையான பாதைகளில் மலைகளில் இருந்து இறங்கி, மெதுவாக நகரும் மலைகளைப் போல அவை காட்டைக் கிழித்துப் பாதைகளை ஏற்படுத்தி நகர்ந்து கொண்டிருந்தன . 

 அந்தப் பேருயிர்களின் ஆகிருதி  அவனுக்கு அச்சமூட்டியது. அவற்றை விரட்ட எண்ணிய சிவன் காய்ந்த கருக்குகளை பிணைத்து கயிற்றினால் கட்டி; தழல் மூட்டி  எரிய வைத்து, அவற்றை சிலம்பு போல் சுழற்றிக் கொண்டே அந்தப் பேருயிர்களுக்கு பயம் காட்டினான். அவன் சுழற்றிய வேகத்தில்  சிறு சிறு பொறிகளும் வட்ட வடிவில் பெரிதாகத் தோன்றின. அந்தப் பெரிய ஒளியை மாவளி என்று அவன் அழைத்தான்.

படம் : மாவளி சுற்றும் மனிதன்
நன்றி:திரு.சுகவன முருகன், திரு பாலபாரதி.

" அவற்றை அச்சப்படுத்தாதே சிவா...

 யானைகள் வனத்தின் சமநிலையை பாதுகாக்கும் தெய்வக் குழந்தைகள் அவை ஒருபோதும் உனக்கு தீங்கு செய்யாது ,” என்று ஆயி மென்மையாகக் கூறினார். “அவை காட்டைப் பாதுகாக்கின்றன.”

ஆனால் சிவாவின் பயம் நீடித்தது, இருளில் ஒரு வேட்டையாடிக்கு பலியாகிய  கொடிச்சியின் முகம் அவ்வப்பொழுது  அவன் மனதில் நிழலாடியது  . 

" சரி அம்மா நான் யானைகளை ஒருபோதும் பயமுறுத்த மாட்டேன். நாம் மா ஒளியை புலிகளை பயமுறுத்த பயன்படுத்துவோம்.”

 அறுமீன் வானில் தோன்றும் சமயம்; காடே செழிப்பில் இருக்கையில்; யானைகள் காட்டின்வழி வலசை செல்லத் துவங்க, பெருவேட்டையை எதிர் நோக்கி வரிப்புலிகளும் விழிப்புடன் அங்கே உலாவின.

 "கவலைப்படாதே,” என்று ஆயி புன்னகைத்தார். “உன் தந்தை இங்கு இருக்கும்போது, பயப்பட ஒன்றுமில்லை.”சிவா தனது தந்தையிடம் பலமுனை  ஈட்டியைக் கொடுத்தான். “அப்பா, இது உங்களுக்கு புலியைக் கொல்ல உதவும்.”

ஆனால் அவனது தந்தை அவனது தோளில் கை வைத்தார். “ஆயுதங்கள் கருவிகள், சிவா. ஆனால் ஒரு தேர்ந்த வீரன் தன் பலத்தை மட்டுமே நம்புவான் ஆயுதங்களை அல்ல. அதை ஒருபோதும் மறக்காதே.”

சிவா அந்த வார்த்தைகளை இதயத்துக்கு அருகில் வைத்தான்.

  தந்தையைப் போலவே ஒரு திறன் மிகுந்த வீரனாக புலியை ஈட்டியை கொண்டு எதிர்ப்பதாக அவன் கற்பனை செய்தான். அவன் கற்பனைக்கு உருவம் கொடுத்தது போல் வானில் ஒரு காட்சி தோன்றியது.

   ஒரு வேட்டைக்காரனைப் போல தோற்றமளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம்.

 ஒரு தேர்ந்த வீரன் மானை வேட்டையாடுவது போல அது தோன்றுகிறது என்றார் அப்பா. 

 ஆயி புன்னகைத்து, கேட்டுக்கொண்டிருந்தார். “ஆனால் எனக்கு,” என்று அவர் மென்மையாகக் கூறினார், “அந்த நட்சத்திரங்கள் நமது சிவன்  நடனமாடுவது போலத் தோன்றுகிறது."


 அதைக் கேட்டதும் சிவன் மகிழ்ச்சியுடன் நடனமாடினான், அது பிரபஞ்சத்தின் நடனம் போல இருந்தது.

 பொருநை  பெருக்கெடுக்கும் பொழுது அவர்கள் விளைவித்திருந்த பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிரமமாக இருந்தது. 

சிவா பொருநையின் கரைகளில்  ஒரு புத்திசாலித்தனமான எல்-வடிவ பாதையை செதுக்கினான். அது  ஆற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி விரைந்து ஓடிய தண்ணீரை செடிகளுக்கு இடையே நடை பயில வைத்தது. இதன் முன்னேறிய வடிவம் தான் ஹரப்பர்களால் பயன்படுத்தப்பட்ட கபர் பந்து. அந்தக் கபர்பந்தின் நீட்சி தான் கல்லணை.

 படம்: gabarband மற்றும் கல்லணை.

ஒரு நாள், செப்பின் தாதுவை தேடிச் செல்லும் பொழுது , அவனும் அவனது தந்தையும் ஒரு விசித்திரமான தாது ஒன்றைக் கண்டனர். அது கனமானது. அதை அவர்கள் நெருப்பிலிட்டு உருக்கினர்.  உருக்கும் குழியின் நெருப்பு மெதுவாக அணைந்து,  குளிர்ந்தபோது,  மீதம் இருந்த  கசட்டில் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தார்கள். இருண்ட சாம்பலுக்கும் இணைந்த கல்லுக்கும் இடையில், ஒரு மங்கலான நிலவு வண்ண ஒளிர்வு காணப்பட்டது. அது செப்பின் சூடான ஆரஞ்சு ஒளிர்வு அல்ல, ஆனால் ஏதோ ஒன்று… பளிச்சிடும் நிலவொளி போல. 

அவனது தந்தை ஆர்வத்துடன் உற்று கவனித்தார் . “இது செப்பு இல்லை,”  என்று முணுமுணுத்தார். “இதற்குள் வேறு ஏதோ மறைந்திருக்கிறது…”தந்தை நெருங்கி, கண்களைச் சுருக்கி, ஒரு கட்டியை விரல்களால் எடுத்து, அதைச் சுத்தப்படுத்தினார். அது மென்மையாக இருந்தது… குளிர்ந்தது… அவர்கள் இதற்கு முன் வடிவமைத்த எதையும் விட வித்தியாசமாக இருந்தது, அது சிவாவின் சூடான உடலில் குளிர்ச்சியைப் பரப்பியது.

“ஆ… நிலவின் குளிர்ச்சி,” என்று அவர் மெதுவாக முணுமுணுத்தார். “ இவள் நிலவின் சகோதரி. அவள் செப்புக்கு பின்னால் மறைகிறாள், ஆனால் சில நேரங்களில் தன்னை வெளிப்படுத்துகிறாள்.”

அவர் அந்த வெள்ளிக் கட்டியை இரு கைகளிலும் பவித்திரமாக எடுத்தார் . “ இது ஆயுதங்களுக்கானது அல்ல சிவா... இது உனது ஆன்மாவிற்கானது, இது உன் அழலைத் தணிக்கும்".

 இரவு, மலைகளுக்கு மேல் நட்சத்திரங்கள் விழித்தெழுந்தபோது, தந்தை ஒரு சிறிய உருக்குழியில் அந்த சிறு வெள்ளிக் கட்டியை உருக்கினார். கொம்பு மற்றும் கல்லால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி, களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட ஒரு சுருள் பள்ளத்தில் அதை ஜாக்கிரதையாக ஊற்றினார்—ஒரு மெல்லிய வளையம், கழுத்தினை சுற்றி அணிவப்பதற்கு ஏற்ப பாம்பின் வடிவில் வடிவமைத்தார். 

அது குளிர்ந்தபோது, அவர் மென்மையான மரப்பட்டையாலும் ஆற்று மணலாலும் அதைப் பளபளப்பாக்கினார், அது நிலவின் துளி போல ஒளிர்ந்தது.அவர் சிவனை நெருங்கினார், அவன் நெருப்புக்கு அருகில் முழங்கால்களை அணைத்தவாறு, அவனது செப்பு ஈட்டியைப் பிடித்திருந்தான். தந்தை அவனுக்கு பின்னால் மண்டியிட்டு,  வெள்ளி வளையத்தை தனது மகனின் கழுத்தில் பொருத்தினார் .

 "இது இந்த மலையின் பரிசு என் மகனே. இந்த வளையமும் இந்த இன்பமான நாட்களும் என்றென்றும் உன் இதயத்திற்கு அருகிலேயே இருக்கட்டும் என் மகனே."

 சிவன் குளிர்ந்த வளையத்தைத் தொட்டான், அவனது விரல்கள் நடுங்கின.  அப்பொழுது வானம் அவனது இதயத்தில் கை வைத்தது போல இருந்தது.

 அவனது தந்தை  அதை ஒரு பாம்பு அதன் வாலை கடிப்பது போல ஒரு கழுத்து வளையமாக உருவாக்கி இருந்தார் 


 "ஏன் அப்பா இதை நாகத்தின் வடிவில் உருவாக்கினீர்கள் " என்றான் சிவன்.

" நாகங்கள் ஒருபோதும் இறப்பதில்லை,” என்று அப்பா மெதுவாகக் கூறினார். “அவை தோலை உரித்து மீண்டும் உயிர்த்து  எழுகின்றன.” அதனால்தான் நாம் அவற்றை தொழுகிறோம்.

 மேலும் சிறிய தோடு ஒன்றையும் செய்து சிவனின் காதில் மாட்டினார்.

 நாள், சிவா பொருநையின் கரையில் ஒரு காலி ஆமை ஓடு ஒன்றைக் கண்டான். ஆர்வமுள்ள அவன், அதை ஒரு  படகாக செதுக்கி, நீரில் மெதுவாக வைத்து, நீரோட்டத்துடன் அதில் பயணித்தான்.

  அவனது தந்தை எச்சரித்தார், அவரது குரல் உறுதியாகவும் ஆனால் மென்மையாகவும் இருந்தது. “ஆற்றின் கீழே நிறைய மக்கள் வசிக்கின்றனர்.  அவர்கள் உன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” என்றார் அவர்.

அவர் தவறியும் கூட தனது மகன் மக்களால் காயப்படுத்தி விடப் படக்கூடாது  என்பதில் உறுதியாய் இருந்தார்.

  அவனது தந்தை புயல்களால் செதுக்கப்பட்டவர் புலிகளுக்கு அஞ்சாதவர் கல்லை போல உறுதியானவர் ஆனால் இப்பொழுது அவரது உலகம் சிவனை மட்டுமே சுழன்று இருந்தது அவர் மென்மையாகி விட்டார் அவர் ஒருபோதும் தனது மகன் மனம் சுனங்குவதை சகிக்க தயாராக இல்லை. அவரது மகனின் கண்களில் இனி கண்ணீர் விழ அனுமதிக்க மாட்டார்.

 இருந்தபோதிலும் பழைய வாழ்க்கையின் வலிகள் சிவனை கனவில் தொடர்ந்தபடி இருந்தன.

 நெருப்பு மற்றும் இழப்பின் வலிகள் அவனுக்குள் ஆழமாக ஊடுருவி இருந்தன. சில நாட்கள் கனவில் அவன் அதை நினைத்து பிதற்றுவதுண்டு.

ஆயி அவனது நெற்றியில் முத்தமிட்டு மெதுவாக முணுமுணுப்பார், “அன்பு காலத்தையும் குணப்படுத்தும், சிவா.”

அந்த பேருண்மையை அவன் இருக பற்றிக் கொண்டான்.  தாயின் காதலுக்கும்  தந்தையின் தைரியத்திற்கும் இடையில், சிவனின் வாழ்க்கை ஒரு முழு நிலவாக வளர்ந்து பிரகாசித்து வந்தது. அவனது வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகள் நெருப்பு மற்றும் பயத்தால் நிழலிடப்பட்டிருந்தன, ஆனால் இப்போது, இந்த அமைதியான குளிர் மிகுந்த பொதிகை மலை உச்சியில் சிறு செடி என இருந்த சிவன்; வேர் விட்டு வளர தொடங்கினான்  

இது என்றென்றும் நீடிக்கும் என்று சிவன்  நம்பினான்.

ஆனால் கடவுள்கள் அமைதியில் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் புயல்களால் செதுக்கப்படுகிறார்கள். சிவனது வாழ்வில் பல புயல்கள் வீசியபடி இருந்தன  ஆனால் அவன் அதை  எதிர்த்து நின்று  பெரிய ஆலமரமென வளர்ந்து நிழல் பரப்பி நின்றான். 

 அப்படி அவன் நின்றபொழுது அவனது முழு ஆகிருதியையும்  காண மற்ற கடவுளர்களால் இயலவில்லை.

 --------

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 

எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்

உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ.


**************

இதன் முந்தைய பாகத்தை படிக்க

1.

2.

3.

4.





அருள்வல்லான்

சிவன் அன்பே உருவானவன், மௌனத்தை விட மென்மையானவன். எனினும் தன்னை அண்டியவர்களை பாதுகாப்பதில் உக்கிரமானவன்.  அவனது வலிமை ஆவேசத்தினால் தூண்டப்பட...